தினமலர் முதல் பக்கம்
| Get Font |  RSS Feed
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
 
 
 

முதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > சக்கரத்தாழ்வார் திருநட்சத்திரம்
சக்கரத்தாழ்வார் திருநட்சத்திரம்
சக்கரத்தின் அமைப்பு: ஸு=நல்ல, தர்சனம் = நல்ல காட்சி, காட்சிக்கு இனியவர். நல்வழி காட்டி உய்விப்பார். எல்லாக் கோயில்களிலும் இவர் அறுகோண சக்கரத்தில் நடுவில் மூன்று கண்களோடும், 16 கைகளோடும் இரண்டு சிம்மங்கள் இவரைத் தாங்கிய நிலையில் அருள் புரிவதைக் காணலாம். ஒரு நாணயத்தில் இரு புறங்கள் இருப்பதைப் போல, முன்புறத்தில் சக்கரத்தாழ்வாரும், பின்புறத்தில் நரசிம்ம மூர்த்தியும் இருக்கின்றனர். யோக நரசிம்மருக்கு கீழே ஐந்து தலை நாகங்கள் இவரைத் தாங்குதலையும் காணலாம். இவரை வணங்கினால் மனத்திலுள்ள மயம் நீங்கி, அனைத்து செயல்களிலும் வெற்றி உறுதி: உயர்ந்தவர்; ஒளி உடையவர்; அருள் நிறைந்தவர்; வெற்றி வீரர்; பகைமையை அழித்து பக்தர்களைக் காப்பவர்.

செடியாய வல்வினைகள் தீர்த்து செம்மை நலம் புரியும் திருமாலுக்குரிய படைக்கலன்கள் ஐந்து. சக்கரம், சங்கு, கதை, வாள், வில் என்ற இவ்வைந்தில் சக்கரமே தலையானது. இதுவே நாம் வணங்கும் சக்கரத்தாழ்வார். இவரையே தமிழில் திகிரி, நேமி, ஆழி என்றும், வடமொழியில் சுதர்ஸனம் என்றும் கருவியாகு பெயராக அழைக்கின்றோம். கண்ணனே சங்கு சக்ரத்தோடு தானே அவதரித்தான். இவர் புரிந்த தொண்டால் தான் ஆழ்வார் என்று சிறப்பிக்கின்றோம்.

அறுங்கோணம் எம்பெருமானின் ஆறு குணங்களை உணர்த்தும்.

1. வாத்சல்யம்: தாய் அன்பு; வத்சம் =கன்று, தாய் பசு எவ்வாறு தன் கன்றின் அழுக்கை நீக்கி, தூய்மைபடுத்துகின்றதோ, அதேபோல் குற்றங்களை நீக்கி குணமாகக் கொள்ளும் உயர்ந்த பண்பு.
2. சுவாமித்வம்: தலைமை உடைமை.
3. சௌசீல்யம்: வேற்றுமை பாராட்டாத உறவு. இராமன், வேட்டுவ மகனாகிய குகனை, ஏழை, ஏதலன், கீழ்மகன் என்னாது இரங்கி, வேற்றுமையின்றி இன்னருள் புரிந்தது.
4. சௌலப்யம்: எளிமை - இராம, கிருஷ்ண அவதாரங்கள்.
5. ஞானம்: அறிவு
6. சக்தி: உலகத்தைக் காப்பதற்குரிய ஆற்றல் அவர் தம் கைகளில் 16 படைக்கலன்களைத் தாங்குதல், பகைவர்களின் பகைமையை அழித்து 16 நலன்களைத் தருவது. நரசிம்மரோ, துஷ்டர்களை அழித்து அடியவர்களைக் காப்பது. உமது பொன்னிற ஜுவாலையோ வேள்வியாகி ஆணவத்தை அழிக்கும். ஒரு திருவடி முன்பும், மற்றொரு திருவடியை பின்பும் வைத்துக் கொண்டிருப்பது ஒரு திருவடியை நாம் முன் வைத்தால் நமக்காக நூறு திருவடி நடந்தருள் புரிவார். கவசமோ, கொடூர நோய்களை விரட்டும் மாமருந்து, அமர்ந்துள்ள சக்கரமோ உலகத்தைக் குறிப்பது.

கோயில்கள்:

உலகிலுள்ள எல்லாக் கோயில்களில் தனிச் சன்னதியாக அமர்ந்திருப்பினும் புகழ் பெற்ற கோயில்களில் சில. ஸ்ரீரங்கம்- தனிக்கோயில். கும்பகோணம் -சக்ரபாணிக் கோயில், திருக்கடை நல்லூர், தென்காசி, ஸ்ரீமயம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருமோகூர், திருமலைவையாவூர், காஞ்சி - வரதராஜபெருமாள், அஷ்ட புஜங்கரம்- சுதர்ஸன சொரூபம், சென்னையில் - வேதாந்த தேசிகர் கோயில்.

சங்க இலக்கியங்கள் போற்றும் சக்கரத்தாழ்வார்:

வேத முதல்வன் என்ப தீதற விளங்கிய திகிரியோனே -பரிபாடல்
நேமியும், வளையும் ஏந்திய கை -பரிபாடல்
பகை, அணங்காழியும், பால்வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையினேந்தி -சிலப்பதிகாரம்-
நனனந்தலை உலகம் வளைஇ நேமியோடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர் செல
நிமிர்ந்த மா அல்போல -முல்லைப்பாட்டு

ஆழ்வார்கள் போற்றும் ஆழியான்:

1. வடிவார்ச் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலா விய கைத்
தலங்கள் வந்து காணீரே -பெரியாழ்வார்.
2. செய்யச் சுடராழியான் அடிக்கே சொல்மாலை - பொய்கையாழ்வார்.
3.மகிழ்ந்தது அழல் ஆழி சங்கம் அவைபாடி - பூதத்தாழ்வார்.
4. திருக்கண்டேன் .... செருக்கிளறும் பொன்னாழி கண்டேன். -பேயாழ்வார்.
5. நம்மாழ்வார்:
அ. மங்காத வைந்நுதியச் சக்கரம் நல் வலத்தாய்
ஆ. கையார் சக்கரத் தேந்தும் கருமாணிக்கம்.
இ. அறவனை, ஆழிப்படை அந்தணனை மறவியின்றி மனத்து வைப்பாரே.
ஈ. வலந் தாங்கும் சக்கரத் தண்ணல் ஆள் என்று உள் கலந்தார் அடியார் அடியார் எம் அடிகளே.
உ. அன்றே நாம் காணும் ஆழியான் கார் உருவம்.

6. அன்பிலன்றி ஆழியானை யாவர் காண வல்லரே. -சக்கரத்தாழ்வார் அம்சமாகிய திருமழிசை ஆழ்வார்.
7. கை கழலா நேமியான் நம் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல் - திருமங்கை ஆழ்வார்.
8. சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் - ஆண்டாள்.
9. கையினார் சுரிசங்கு அனல் ஆழியான் - திருப்பாணாழ்வார். திருமங்கை ஆழ்வார்.
அ. வலக்கை ஆழி இடங்கைச் சங்கம் உடையான் ஊர்.
ஆ. சிங்க - அதுவாய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டுகந்த சங்கம் இடத்தானை தழல் ஆழி வலத்தானை.
(நரசிங்க அவதாரத்தில் நகமாக விளங்கியது)
இ. சொல்லாய் - பைங்கிளியே சுடர் ஆழிவலன் உயர்த்த மல்லார் தோள் வட வேங்கடவனை வர.
10. அடல் -ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை அரங்கத்தம்மா - பள்ளி எழுந்தருளாயே -தொண்டரடிப்பொடியாழ்வார்.
11. போர் -ஆழி அம்மானைக் கண்டு துள்ளி பூதலத்தில் என்று கொலோ புரளும் நாளே - குலசேகராழ்வார்.

ஆசார்யர்கள்: இராமாநுஜர் சுதர்ஸன ஆழ்வார்தான் நம் மனம் என்று பேசுவார். ஆகவே தான் அப்பனுக்கு மீண்டும் ஆழியைச் சேர்த்தார். வேதாந்த தேசிகர் காஞ்சியில் மக்கள் - மகமாரி அம்மை நோயால் அவதியுற்றபோது, நோய் நீங்க ஸுதர்ஸன அஷ்டகம் இயற்றி, நோயை போக்கினார்.

ப்ரதிபட ச்ரேணி பீஷண வரகுண ஸ்தோம பூஷண
ஐநி பயஸ்த்தாந தாரண ஜகத வஸ்தாந காரண
நிகில துஷ்கர்ம கர்சந நிகம ஸத் தர்ம தர்சந
ஜயஜய ஸ்ரீஸுதர்சன ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன - ஸ்ரீஸுதர்சனாஷ்டகம்.

ஸ்ரீஸுதர்சன காயத்ரி:

ஓம் சக்ர ராஜாய வித்மஹே!
சக்ர ஜ்வாலாய தீமஹி!
தந்நோ சக்ரப்ர சோதயாத்

சுதர்சன ஆழ்வாரின் செயல்கள்:

கோயில்களின் பிரம்மோத்ஸவத்தின், பொழுது சுவாமி வீதிப் புறப்பாட்டின் முன் உறுநோய், வினை கடியும் சுதர்சன ஆழ்வார் முதலில் புறப்பட்டு, தோஷங்களை நீக்கி தூய்மை செய்வார்.

அடியவர்க்கு அருளல்:

அடியார்க்கு அடியவனான அம்பரீஷ மன்னன் திருமாலின் பரம பக்தன். - தொண்டே செய்து என்றும் தொழும் பக்தனைப் பாதுகாக்கும் பொருட்டு தம்மிடம் உள்ள சுதர்சன சக்கரத்தை அவருக்கு அளித்தார். அவரும் அதை இல்லத்தில் வைத்து இறைஞ்சினார். ஏகாதசியின் பொருட்டு மூன்று நாள் விரதம் இருந்து, துவாதசியன்று உண்ணா நோன்பு முடிக்கும் தருவாயில் துர்வாச முனிவர் அங்கு வந்து சேர்ந்தார். முனிவரை வரவேற்று தன்னுடன் உணவருந்த வேண்டினார். முனிவரோ, நீராடி வருவதாகக் கூறி ஆற்றிற்கு சென்றார். உச்சி வேளை ஆகியும் வராததால், குருமார்கள் நீரை மட்டும் அருந்த விரதத்தை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்குமாறு வேண்டினார். ஆகவே அவரும் நீரை மட்டும் உட்கொண்டார். சற்று நேரத்திற்கு பின் புனலாடி வந்து துர்வாசர், தன்னை விட்டு நீர் அருந்தியதால், சினம் கொண்டு, அரசனை சபித்து தன் தலைமுடியிலிருந்து தன் தவ வலிமையால் ஒரு பூதத்தை எழுப்பி அரசனைக் கொன்று வருமாறு ஆணையிட்டார். அந்த அடாத செயலைக் கண்ட சக்கரம் தன்னை வணங்கியவனைக் காப்பாற்ற, பூதத்தையும் கொன்று துர்வாசரையும் துரத்தியது. தன் உயிருக்கு ஆபத்து என்றுணர்ந்து பிரம்மன். சிவன் உதவி தருமாறு வேண்ட திருமாலிடமே சரண் புகுந்தார். திருமாலோ அடியவனை அம்பரீஷனையே சரணடைய வேண்டினார். ஒரு வருடம் பட்டினிப் போட்ட அடியவனைக் காத்து, தனக்கு அபராதம் இழைத்தாலும் பகவான் பொறுத்துக் கொள்வார். ஆயின் தன் பாகவதர்களுக்கு அபராதம் இழைத்தால் அதைப் பொறுக்க மாட்டார்.

கஜேந்திராழ்வானைக் காப்பாற்றியது:

கஜேந்திரன் என்னும் யானை பெருமான் திருவடிகளில் நன்னீராட்டி மலர் வைத்து வணங்க, பொய்கையில் இறங்கும் போது, முதலை அதன் காலினைக் கவ்வ, ஆதிமுலமே, ஆதிமூலமே என்று பிளறியது. அவ்விலங்கு பெருமானுக்கு தான் கொணர்ந்த மலர் வாடிவிடுமே என்று அலறிதே அன்று கால்வலியால் கதற வில்லை. பின்பு, பெருமாள் கருடன் மீது வந்து திருவாழியை விடுத்து, முதலையைக் கொன்றான். ஆகவே தான், கஜேந்திர ஆழ்வான் என்று வைணவம் போற்றும்.

மீன் அமர் பொய்கை நாள் மலர் கொய்வான்
வேட்கையினோடு சென்று இழிந்த
கான் அமர் வேழம் கை எடுத்து அலற,
கரா அதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து
சென்று நின்று ஆழி தொட்டானை
தேன் அமர் சோலை மாட மா மயிலைத்
திருவல்லிக் கேணிக் கண்டேனே! - திருமங்கை ஆழ்வார்.

ஆழியால் அர்ஜுனனைக் காத்த மாயோன்:

பாரதப் போரில் அர்ஜுனன் அன்புக்குரிய மகன் அபிமன்யுவை துரியோதனன் மாமன் ஜெயத்ரதன் கொன்றான். அப்பிள்ளைக்கு பத்ம வியூகத்தில் புகவழி அறிந்தானன்றி, மீண்டு வர வழி அறியவில்லை. புத்ர சோகத்தில் தவித்த அர்ஜுணனோ, என் மகனைக் கொன்ற கொடியவனை நாளை மாலைக்குள் கொல்வேன். இல்லையேல் எரியூட்டி, அந்த நெருப்பிலே இறப்பேன் என்று சபதம் செய்தான். துரியோதனன் அவனை நிலவறைக்குள் பதுக்கி வைத்து விட்டான். எங்கு தேடியும் காணாது, மாலை வரவே, நெருப்பை வளர்த்து, உயிர் விட சுற்றி வந்தான். பார்த்தசாரதியான பரமன், மாயவன் தன்னிடமுள்ள ஆழியை வானத்தில் விட்டு சூரியனை மறைக்கச் செய்தான். ஆகவே மாலை போன்று சூரியன் மறைந்தான். இதையறி யாத துரியோதன், அர்ஜுனன் உயிர் விடுகின்ற காட்சியைக் காண ஜெயத்ரனையும் கூட்டி வந்து அமரச் செய்தான். உடனே மாயம் செய்யும் மாதவன் தன்னுடைய ஆழியை எடுத்து விட சூரியன். ஒளி இன்னும் நாழி இருந்தது. கண்ணன் தன் சீடனை, காண்டிபா! ஜெயத்ரதன் கதையை முடி என்று சொல்ல, அர்ஜுனனும் அவனைக் கொன்றான். ஆழியால் பகலை மறைத்து, பாகவதனின் உயிரைக் காத்தான்.

சக்ரத்தாழ்வாரை வணங்கி சகல நன்மையும் பெறுவோம்.
 
  தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
 
 
 
 
 
 
 
 
Copyright 2015 www.dinamalar.com. All rights reserved.