தினமலர் முதல் பக்கம்
| Get Font |  RSS Feed
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
 
 
 

முதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > மத்வ ஜெயந்தி
மத்வ ஜெயந்தி
விஜய தசமியன்று எந்த நல்ல காரியம் தொடங்கினாலும் அது அமோக வெற்றிபெறும் என்பது நிதர்சனம். அம்பிகையானவள் மகிஷா சுராதியர்களை அழித்து விஜயதசமியனறு வெற்றி முரசு கொட்டினாள். அந்த விஜயதசமி நாளில் அவதரித்தவரே மத்வாச்சாரியார். சமண பவுத்த மதங்கள் உன்னதமடைந்து, சனாதன மதக் கொள்கைகள் நசிந்தபோது, சிவபெருமானே காலடி தலத்தில் ஆதிசங்கரராக அவதரித்தார் ஞானமார்க்கத்தில் முக்தியடைய அத்வைதம் வகுத்து (அஹம் ப்ரம்மாஸ்மி, சிவோஹம், தத், த்வம் அஸி), பரமனும் ஜீவனும் ஒன்றே; அவகுணங்களை நீக்கினால் ஜீவன் பரமனுடன் கலந்து முக்தியடையும் என்றார். இந்த தத்துவத்துக்கு பல நூல்கள் எழுதினார்.

இதை அனைவராலும் கடைப்பிடிக்க முடியாதென்று, பக்தி மார்க்கத்தில் முக்திபெற அறுசமயங்களை நிறுவி, பல துதிகள் செய்தார். இந்தியாவெங்கும் ஐந்து மடங்களை ஸ்தாபித்து தனது கொள்கையைப் பரவச் செய்தார். அவர் வாழ்ந்தது 32 ஆண்டுகளே, அத்வைத மார்க்கத்தில் பிரம்மச்சாரிகளே சன்னியாசம் ஏற்பார்கள். விபூதி, குங்குமம் அணிவர். அடுத்து, ஆதிசேஷ, லட்சுமண, பலராம புனரவதாரமான ராமானுஜர் திருப்பெரும்புதூரில் அவதரித்தார். அவரது கொள்கை விசிஷ்டாத்வைதம் ஆகும். மேல்கோட்டையில் நாராயணரைப் பிரதிஷ்டை செய்தார். திருப்பதி, ஸ்ரீரங்கம் கோயில்களின் பூஜை, விழாக்களை நிர்ணயம் செய்தார். மகாவிஷ்ணு வழிபாட்டுக்கு, ஆழ்வார்களின் நாலாயிர திவ்யப் பிரபந்தங்களுக்கு திராவிட வேதம் என்று முக்கியத்துவம் கொடுத்தார். 71 சிம்மாசனாதிபதிகளை நியமித்தார். 120 வருடங்கள் வாழ்ந்து (1017-1037) ஸ்ரீரங்கத்தில் பரமபதம் சேர்ந்தார். அவரது ஆயிரமாவது ஜெயந்தி விழா நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விசிஷ்டாத்வைத்தினர் திருமண ஸ்ரீசூர்ணம் அணிவார்கள். இல்லறத்தார்களே சன்னியாசம் ஏற்று முப்புரி நூலும் அணிவார்கள்.

மத்வாச்சாரியார் த்வைதம் என்னும் தத்துவத்தை ஸ்தாபித்தார். இவரை வாயு பகவான், ஆஞ்சனேயர், பீமனின் புனரவதாரம் என்பர். இவரது காலம் கி.பி. 1238 முதல் 1317 வரை, எனவே அவர் மறைந்து 700 வருடங்கள் ஆகின்றன. மத்வருடன் இருந்த திரிவிக்ரம பண்டிதரின் மகன் நாராயண பண்டிதர், மத்வர் வாழ்ந்த காலத்திலேயே மத்வ விஜயம் என்று அவர் வரலாற்றை எழுதினார். எனவே மத்வர் வரலாற்றில் குழப்பமோ சந்தேகமோ இல்லை. மத்யகேஷ பட்டர்- வேதவதி தம்பதியர் கர்நாடக மாநிலத்தில் கடியாளி என்னுமிடத்தில் வசித்து வந்தனர். முதல் இரண்டு குழந்தைகளை இழந்ததால் உடுப்பி அருகே பாஜக க்ஷேத்திரத்துக்கு இடம் மாறி, பிள்ளை வரம்வேண்டி அனந்தேஸ்வரரை 12 ஆண்டுகள் வழிபட்டு வந்தனர். இறைவன் அருளால் 1238- ஆம் ஆண்டு விஜயதசமி நாளில் குழந்தை பிறந்தது. அதற்கு வாசுதேவன் என்று பெயர் சூட்டினர். வ என்றால் ஞானம்; அசுதேவர் என்றால் முக்கியப் பிராணன். எனவே ஞானத்திற்கு முக்கியப் பிராணனாக அவதாரம் செய்தார்.

ஆஞ்சனேய, பீம அவதாரம் என்பதால் சிறுவயதிலேயே உடல் திடம் அதிகம். ஞானமும் இயல்பாக இருந்தது. ஏழு வயதுவரை தந்தையிடமே கல்வி கற்றார்.

பால லீலைகள்: ஒரு முறை வாசுதேவனின் தாய், தன் தோழியிடம் பிள்ளையை விட்டுவிட்டு வேலை காரணமாக வெளியே சென்றார். பிள்ளை பசியில் அழுதது. எதுவும் இல்லாததால், குதிரைக்கு ஊறவைத்த கொள்ளுப்பயறில் சிறதளவு எடுத்துக் கொடுத்துவிட்டு வேலை செய்யப்போனாள் தோழி திரும்பி வந்து பார்த்தபோது ஒரு வயது குழந்தை மூன்று படி கொள்ளையும் தின்றுவிட்டதாம் பீம அவதாரமல்லவா! இன்னொரு சமயம் பட்டர் தன் மகன் வாசுதேவனுடன் உடுப்பி நோக்கி காட்டு வழியே சென்றார். அங்கிருந்த வனவிலங்குகள் சாந்தமாக வழிவிட்டனவாம்.

மற்றொரு சமயம் அருகிலுள்ள குஞ்சரு மலையிலிருந்த துர்க்கை கோவிலில் தியானத்தில் அமர்ந்திருந்தான் சிறுவனான வாசுதேவன். அப்போது தாயின் கூக்குரல் கேட்க தியானம் கலைந்து ஓடி வந்தான். வழியில் மணிவந்த சூரன் என்னும் அசுரன் பாம்பு வடிவில் வாசுதேவனை வளைத்துக்கொள்ள, சிறுவன் அதன் வாலைக் கடிக்க அதன் உயிர் போயிற்று. ஒருநாள் சிறுவன் புளியமரத்தடியில் புளியங்கொட்டைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு வியாபாரி சிறுவனின் தந்தையிடம் வந்து வாங்கிய பொருட்களுக்கான பணத்தைக் கேட்டான் அவர் வினயத்துடன், மன்னிக்க வேண்டும். இன்னும் சிறிது நாளில் தந்துவிடுகிறேன் என்றார் அதைக்கேட்ட சிறுவன் தான் விளையாடிக் கொண்டிருந்த புளியங்கொட்டைகளில் இரண்டை வியாபாரியிடம் தர, அது தங்கமாக மாறியது. அதிசயித்த வியாபாரி பணிந்து வணங்கினான். அவனது வியாபாரமும் பல மடங்கு பெருகியது. இப்படி பல அதிசயங்கள் நிகழ்ந்தனவாம்.

கல்வியும் சன்னியாசமும்: தில்லையா என்பவரிடம் வேதங்கள் உபநிடதங்கள் பயின்றான். அதேசமயம் விளையாட்டும் அதிகமாக இருந்தது. ஆசிரியர் கண்டிக்க, வாசுதேவன் ஆசிரியர் கற்பித்ததை ஒப்புவித்து, அதற்கு தன்னுடைய விளக்கங்களையும் சொன்னான். மகிழ்ந்த ஆசிரியர், உனக்குக் கற்பிக்க நான் தகுதியானவன் அல்ல என்றார். வாசுதேவனுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரித்தது. சன்னியாசம் பெற விழைந்து. அருகில் காரே என்னும் இடத்திலிருந்த பண்டார்கரே மட அச்யுதப்ரேக்ஷரை அணுகினான். இவன் தன்னிடம் படிக்க வருவான் என்று முன்னரே சூசகம் இருந்ததால் அவர் மகிழ்ந்தார். மகனைக் காணாமல் பெற்றோர் வருந்த, அவன் மடத்திலிருக்கும் செய்தியை ஒருவர் வந்து கூறினார். உடனே காரே மடம் சென்றனர். வாசுதேவனின் தாய், மகனே சன்னியாசம் ஏற்காதே எங்களுக்கு நீ ஒரே மகன் தவமிருந்து பெற்ற பிள்ளை என்று கையெழுத்துக் கும்பிட்டாள். அதற்கு வாசுதேவன், தாயே, சன்னியாசியானால்தான் ஒரு தாய் மகனை கையெடுத்து வணங்கலாம். நீங்கள் இப்போது என்னை வணங்கிவிட்டீர்களே என்றான்.

ஆனால் தாயார் மீண்டும் பணிந்து வேண்ட சரி இன்னும் ஒரு வருடத்தில் உங்களுக்கு இன்னொரு மகன் பிறப்பான். அதன்பிறகு நான் சன்னியாசம் ஏற்க நீங்கள் சம்மதிக்க வேண்டும் என்றான். அதன்படியே ஓராண்டில் குழந்தை பிறக்க, தாயின் மவுனத்தையே சம்மதமாக ஏற்று குருவை அணுகி சன்னியாசம் ஏற்றார். அவரது சன்னியாசப் பெயர் பூர்ணபோதர் - பூர்ண பிரக்ஞர் ஏனெனில் அனைத்தும் கற்றுணர்ந்திருந்தார். சன்னியாசம் ஏற்ற 41- ஆம் நாள் கங்கா ஸ்நானம் செய்ய விரும்பி கங்கையைத் துதித்து அனந்தேஸ்வரரை வணங்க. உடுப்பி குளத்திலேயே கங்கை பிரவகித்தாள். அது மத்வ சரோவர் ஆயிற்று அச்யுதப்ரேக்ஷர் அத்வைதவாதி எனவே அவரது வியாக்யானங்கள் பூரண போதர் கருத்துக்கு ஒத்துவரவில்லை. எனினும் சீடனின் மாற்று வியாக்யானத்துக்கு மகிழ்ந்து ஆனந்த தீர்த்தர் என்று பெயர் சூட்டினார். ஆனந்தம் என்பதற்கு வேதத்தில் மத்வ என்னும் பதம் உள்ளது. அதனால் மத்வாச்சாரியர் எனப்பட்டார். குருவுக்கும் மத்வருக்கும் வியாக்யான வேறுபாடு இருந்ததால், குருமீது கொண்ட மரியாதை காரணமாக, உத்ராதி மடம் என்று தனக்குத் தனி மடம் ஏற்படுத்திக் கொண்டார்.

விஜய யாத்திரைகள்: சன்னியாசிகள் நாடெங்கும் யாத்திரை செய்து ஆன்மிகத்தைப் பரப்ப வேண்டுமென்பது நியதி. எனவே திருவனந்தபுரம், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், காஞ்சி போன்ற தலங்களுக்குச் சென்று உரையாற்றினார். குருவின் சீடரான சத்யதீர்த்தருடன் காசி, பத்ரி சென்றார். அப்போது பத்ரிகாசிரமத்திலிருந்து வேதவியாசரின் சூட்சும அழைப்பு வர, அங்கு சென்று வியாச தரிசனம் பெற்று, பகவத் கீதை பிரம்ம சூத்திரத்திற்கு தான் எழுதிய உரையை சமர்ப்பிக்க வியாசர் மகிழ்ந்து பிரம்மஞானம் அருளினாராம். மத்வர் இருமுறை வியாச தரிசனம் பெற்றுள்ளாராம்.

காஞ்சியில் மத்வரின் த்வைத சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அத்வைத சித்தாந்தமும் ஒரு வகையில் சரியே என்று சொல்லி, வேத வாக்கியங்களுக்கு மூன்று வியாக்யானங்களும், விஷ்ணு சகஸ்ரநாம முதல் நாமாவளியான விஸ்வம் என்ற பதத்துக்கு நூறு வியாக்யானங்களும் கூறினாராம். அனைவரும் அவர் ஞானத்தைக் கண்டு வியந்தனர். ஸ்ரீமுஷ்ணம் சுயம்வியக்த க்ஷேத்திரம் என்பர். யாராலும் நிர்மானிக்கப்பட்டாதது. அங்கு பல தீர்த்தங்கள் உள்ளன அங்கு மத்வர் சென்றபோது ஒரு வயதான பெண்மணி நீராட அருகில் தீர்த்தமில்லை என்று வேண்டினாள். அவர் தனது தண்டத்தினால் நான்கு புறமும் கோடுபோட்டு நடுவில் குத்த குளம் உண்டானது. அவரும் அதில் நீராடி பூவராகரை வழிபட்டார். (அந்தக்குளம் வேணு தீர்த்தம் தண்ட தீர்த்தம் எனப்படுகிறது) கோவாவில் மத்வர் ஸ்தாபித்த மடம் உள்ளது. அங்கு அவர் சென்றபேது பக்தர்கள் அவர் சங்கீதக் கலையை ரசிக்க விரும்பினர். பசுபே என்ற இடத்தில் மழையின்றி பாக்கு மரங்கள் காய்ந்து கிடந்தன. அங்கு சென்று மத்வர் பாட, பட்டுப்போன மரங்கள் பூத்துக் காய்த்து மிளிர்ந்தன. அவர் குருக்ஷேத்திர பூமிக்குச் சென்றபோது ஓரிடத்தைத் தோண்டச் சொன்னாராம். அங்கே ஒரு கதாயுதம் கிடைத்தது. நான் பீமசேனனாக இருந்தபோது உபயோகித்தது இது என்றாராம்.

கோமதி நதிக்கரையில் ஒரு அரசன், சுவாமி யா ஒக்ஷதி பூர்வஜாதா! என்னும் வேதவாக்கியங்களைக் கூறினால் விதை உடனே முளைத்து செடியாகி மரமாகி காய்ந்துக் குலுங்கும் என்கிறார்களே, அது  உண்மையா? என்று கேட்க அது உண்மையே என்று சொல்லி முறைப்படி உச்சரித்து மெய்பித்துக் காட்டினாராம். புத்த, சாங்கிய மதவாதிகளைக் கண்டித்து த்வைத மதப் பிரச்சாரம் செய்துள்ளனர். பீஹார், வங்காளம், ஒடிசா, ஆந்திராப் பிரதேசங்களுக்குப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்துள்ளார். உடுப்பியிலுள்ள கிருஷ்ணர் கோயில் மத்வரால் ஸ்தாபிக்கப்பட்டது. அவர் மகாபாரதத்துக்கு வியாக்யானம், கிருஷ்ண ஜெயந்தி நிர்ணயம். கிருஷ்ணாம் ருத மகார்ணவம். ஸ்ரீமத் பாகவத தாத்பரியம் உள்ளிட்ட 17 கிரந்தங்கள், உரைகள் செய்துள்ளார். எனவே கிருஷ்ணர் வரவை எதிர்பார்த்திருந்தார்.

ஒரு சமயம் கடற்கரையில் அவர் தியானத்தில் இருந்தபோது, புயல்காற்றில் ஒரு சிறிய கப்பல் நிலைகுலைவதைக் கண்டார். தனது மேல்துண்டை கொடிபோல ஆட்டினார். காற்றின் வேகம் குறைந்து கப்பல் கரை சேர்ந்தது. கப்பலின் மாலுமி மத்வரின் பாதம் பணிந்து, கப்பலில் இருக்கிற எது வேண்டுமானாலும் சுவாமிக்கு அர்ப்பணம் என்றான் கப்பலுக்குள் சென்ற அவர் ஒரு மிகப்பெரிய கோபி சந்தன உருண்டையைத் தேர்ந்தெடுத்தார். அதைத்தூக்க ஆட்கள் சிரமப்பட, மத்வர் வெகு எளிதாக அதைத் தூக்கி, இது போதும் என்றார் அதை எடுத்துச் சென்று உடுப்பி மத்வசரோவக் குளத்தில் வைத்து, மேலிருந்த கோபி சந்தனத்தை நீக்க, உள்ளே கம்புக் கயிற்றுடன் நின்ற கோதலத்தில் கிருஷ்ணர் விக்ரகம் இருந்தது. அதை கோயில் கட்டி ஸ்தாபித்து பூஜை செய்தார்.

இந்த விக்ரகம் எப்படி வந்தது? கண்ணனின் பாலபருவத்தைக் காண ஆசைகொண்ட ருக்மணிக்கு, தான் வெண்ணெய்ப் பானையை உடைக்கும் கோலத்தை விஸ்வகர்மாவைக் கொண்டு சிலையாக வடிவத்துக் கொடுத்தார் கண்ண பரமாத்மா அதை ருக்மணி பூஜித்து வந்தாள். இறுதியில் கண்ணன் துவாரகையில் மறைய, அந்த விக்ரகம் துவாரகை கடல் நீரில் கோபி சந்தனத்தில் ஆழ்ந்தது. அந்த கோபி சந்தனக்கட்டியே மத்வர் காலத்தில் கப்பலில் வந்தவர்களுக்குக் கிட்டி, அது மத்வரிடம் சேர்ந்தது. உடுப்பி கிருஷ்ணருக்கு பூஜை செய்ய கோயிலைச் சுற்றி எட்டு மடங்களை அமைத்து, ஆச்சாரியர்களையும் வழிபாட்டு முறையையும் நிர்ணயித்தார் மத்வர். பாலமார் மடம், அத்மார் மடம், கிருஷ்ணாபூர் மடம் புட்டிக்கே மடம் சிரூர் மடம், ஸோதே மடம் காளியூர் மடம், பெஜாவர் மடம் என்னும் அந்த எட்டு மடங்களில் இரண்டு மாதங்களுக்கு ஒரு மடத்தினர் வீதம் பூஜை செய்ய வகுத்தார். பின்னர் வாதிராஜ சுவாமிகளால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று மாற்றப்பட்டது. அந்த மாறுதல் தினம் சங்கராந்தியன்று பர்யாய உற்சவம் என்று மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும்.

மத்வாச்சாரியாரின் முதன்மை சீடர்கள் பத்மநாப தீர்த்தர், நரஹரி, தீர்த்தர், மாதவ தீர்த்தர், அக்ஷ்யோப்ய தீர்த்தர் ஆகியோர் தாய் தந்தை மறைந்த பிறகு தனது பூஸ்வாசிரம தம்பிக்கு சன்னியாசம் தந்து, விஷ்ணு தீர்த்தர் என பெயர் சூட்டினார். அவரும் த்வைத மதம் பரப்பினர். பரமாத்மா வேறு; ஜீவாத்மா வேறு உலகம் மாயை அல்ல; சத்தியம் ஜீவன் பரமனை பக்தியுடன் துதித்தால் முக்தி அடையலாம் என்பதே த்வைத தத்துவம். மத்வர் இரண்டாவது முறை வியாச தரிசனம் பெற்றபோது எட்டு சாளக் கிரமங்களைப் பெற்றார். அவற்றுள் ஒன்று உடுப்பி கோயிலிலும், இன்னொன்று சுப்பிரமணிய க்ஷேத்திர மடத்திலும், மற்றொன்று ஸோதே மடத்திலும், ஏனையவை மத்வரின் உத்ராதி மடத்திலும் பூஜையில் உள்ளன. 1317-ம் ஆண்டு, தை மாத தசமி நாள், உடுப்பி அனந்தேஸ்வரர் கோயிலில் ஆத்ரேய உபநிடதத்துக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். மத்வாச்சாரியார். அப்போது தேவர்கள் தோன்றி மலர்மழை பொழிந்தனர். அவர் உடல் மூடப்பட்டது. அவ்வளவே அவரது பூதவுடல் மறைந்தது. வாயு அவதார மல்லவா! மத்வர் ஆதிபத்ரியில் வியாசருடன் உள்ளார் என்கின்றனர். அவர் மறைந்து தற்போது 700 வருடங்கள் ஆகின்றன. ஆழ்ந்த பக்தியால் பரமாத்மாவை அடையலாம் என்று போதித்த மத்வாச்சாரியாரைப் பணிந்து குருவருள் பெறுவோம்.
 
  தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
 
 
 
 
 
 
 
 
Copyright 2015 www.dinamalar.com. All rights reserved.