தினமலர் முதல் பக்கம்
| Get Font |  RSS Feed
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
 
 
 

முதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > புரந்தரதாசர் ஜெயந்தி
புரந்தரதாசர் ஜெயந்தி
தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துஸ்வாமி தீட்சிதர் ஆகியோரை சங்கீத மும்மணிகள் என்போம். தியாகராஜர் ராமபக்தர் தெலுங்கில் பல கீர்த்தனைகள் பாடியுள்ளார். சியாமா சாஸ்திரிகள் அம்பாள் பக்தர்; ஸ்ரீவித்யா உபாஸகர் அம்பாள்மீது தெலுங்கில் பாடியுள்ளார்.  முத்துஸ்வாமி தீட்சிதர் முருகனருள் பெற்றவர்; ஸ்ரீவித்யா, உபாஸகர் தலம் தலமாக மூர்த்தி பேதம் பார்க்காமல் வடமொழியில் பாடியவர். இவர்களது சமகாலத்தவர் - திருவாங்கூர் அரசராக இருந்த ஸ்வாதித் திருநாள். சகலகலா வல்லவர். வடமொழியில் பல பாடல்கள் பாடியவர். இவர்களுக்கெல்லாம் முன்பிருந்தவர் - நவகோடி நாராயணர். சீனப்ப நாயக்கர் என்ற புரந்தரதாசர். இவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர். கன்னடத்தில் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியவர். பாடலின் இறுதி முத்திரை அடி ‘புரந்தர விட்டல ’ என்றே இருக்கும். இவரை நாரதரின் புனரவதாரம் என்பர். குடும்பஸ்தர் உஞ்சவிருத்தி தர்மம் (தியாகராஜரைப்போன்று) அனுஷ்டித்தவர் தை அமாவாசை நாளை தாசர் தினம் என்று கன்னடத்தவர் கொண்டாடுவது வழக்கம். சங்கீதப் பிதாமகர் என்று இவரைச் சொல்வார்கள். ஆனால் சங்கீத சபாக்களில், தியாகராஜர் சங்கீத விழா போன்று கொண்டாடுவது அரிதுதான். சங்கீதக் கச்சேரிகளில் ஒரிரு பாடல்கள் பாடினால் அதிசயம். பஜனை சம்பிரதாயத்தில் அவர் பாடல்களைப் பாடுவார்கள்.

மகாராஷ்டிரத்தில் என்றால் சமர்த்த ராமதாசரைக் குறிக்கும். கர்நாடகத்தில் தாசர் என்றால் புரந்தரதாசரைக் குறிக்கும். நாரத அவதார புரந்தரதாசரைப் பற்றி சிறிது சிந்திப்போமா. மகாராஷ்டிர மாநிலம், புனே அருகே புரந்தரகட் என்னும் வேமனபுரியில் ரத்தின வியாபாரி குடும்பம் இருந்தது. வியாபாரிக்கு மகப்பேறு கிட்டவில்லை. தன் வியாபாரம் பரம்பரையாய் செழித்தோங்க வேண்டுமே என்று திருப்பதி வேங்கடேசரைப் பிரார்த்திக்க. ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஸ்ரீனிவாசன் அருளால் பிறந்ததால் சீனப்ப நாயக்கர் என பெயர் விளங்கியது. இந்தக் கலியுகத்தில் ஆன்மிக, பக்தி, தர்ம காரியங்களைக் காண்கிறோம். திருடுதல், பொய்பேசல், கற்பழிப்பு, கருமித்தனம், அகங்காரம், பேராசை போன்ற துர்குணங்களையும், கோயில் சொத்துக்களைக் களவாடுதல் போன்றவற்றையும் காண்கிறோம். கண்ணன் கீதையில் ‘யதா யதாஹி தர்மஸ்ய க்லானி. பவதி பாரத ’ -தர்மத்திற்கு அழிவு நேரும்போது நானே அவதரித்து தர்மத்தை நிலைநாட்டுவேன் என்று கூறியபடி, சிவனே ஆதிசங்கரராயும், ஆதிசேடனே ராமானுஜராகவும். வாயு - ஆஞ்சனேயரே மத்வாச்சார்யாராகவும் அவதரித்தனர். அதுபோல, மகாவிஷ்ணுவின் பல அம்ச ஆயுதங்கள் ஆழ்வார்களாகவும் பக்தி சூத்திரம் எழுதிய நாரதரே சின்னப்ப நாயக்கராகவும் உதித்தார் என்பர்.

இவர் இளமைப்பருவம் அடைந்ததும் தந்தையுடன் ரத்தின வியாபாரம் செய்தார். நிறைய பணம் சம்பாதித்தார். ‘நவகோடி, தனகோடி நாராயணன் ’ என்ற பெயரும் பெற்றார். ஆனால் ‘எச்சில் கையால் காக்கை ஓட்டமாட்டான்’ என்று சொல்வார்களே - அதுபோல மகா கருமி. பணம் சேர்ப்பதே பிரதானம். தனக்குக்கூட அதிகம் செலவழிக்கமாட்டார். அவர் மனைவி லட்சுமியோ அவருக்கு நேரெதிர். ஆனால் பதிபக்தி கொண்டவள். கணவனுக்கு விரோதமாக யாதும் செய்வாள். தன் கணவன் மனம்மாறி தானதர்மம் செய்தல், சாதுக்களுக்கு அன்னமிடுதல் போன்ற நற்காரியங்கள் செய்யக்கூடாதா என்று இறைவனிடம் வேண்டினாள். அதை யேற்று பகவான் ஒரு நாடகம் நடத்தினார். வயதான கிழவர் ஒருவர் ஒரு சிறுபையனுடன் நாயக்கர் கடைக்கு வந்தார். “என் பையனுக்கு பூணூல், பெண்ணுக்குக் கல்யாணம் சிறிது பணம் கொடுங்கள் ” என்றார். “போ போ, தனம் தானம் செய்வது வழக்கமில்லை. நகை கொணர்ந்தால் அடகு வைத்துப் பணம் தரலாம் ” என்றார். “என்னிடம் யாதும் இல்லை. ஆகவே தான தர்மம் செய்ய வேண்டுகிறேன் ” என்றார் பெரியவர். மசியாத நாயக்கர், தொந்தரவு செய்த கிழவரின் முகத்தில் துப்பி, ‘போ போ ’ என்று தள்ளினார்.

கிழவர் தள்ளாடிக்கொண்டே அடுத்த தெருவிலுள்ள நாயக்கர் வீடு சென்றார். துளசி பூஜை செய்துகொண்டிருந்த நாயக்கரின் மனைவி லட்சுமியை ஆசிர்வதித்து, பசிக்கு அன்னம், பையன் உபநயனம், பெண் கல்யாணத்திற்கு தனம் தானம் கேட்டார். அவள் நெகிழந்து, “தனம் மிகுந்திருந்தும், தானம், அன்னமிட எனக்கு உரிமையில்லை. என் தகப்பனார் போட்ட இந்த மூக்குத்தியைத் தருகிறேன். வெளியூரில் இதனை அடகு வைத்துப் பணம் பெறுங்கள். ” என வேண்டினாள். கிழவர் நேரே நாயக்கர் கடைக்கு வந்து மூக்குத்தியைக் கொடுத்து, “பணம் தாரும் ” என்றார். தன் மனைவி அணியும் மூக்குத்தியை அறியாதவரா? அதனைப் பெட்டியில் வைத்துப்பூட்டி, “இரும், இதோ வருகிறேன் ” என்று வீடு வந்து மனைவியைக் கூப்பிட்டார். அவள் மூக்குத்தி இல்லாதிருக்க, “எங்கே உன் மூக்குத்தி?” என்றார். கதிகலங்கிய அவள், “இன்று வெள்ளிக்கிழமை ஸ்நானம் செய்யும்போது எடுத்து வைத்துள்ளேன் ” என்றாள். “அதைக் கொண்டுவா ” என்றார். உள்ளே வந்து, “துளசிதேவி, கண்ணா... கணவர் உத்தரவில்லாது மூக்குத்தியைக் கொடுத்ததற்கும் அவரிடம் பொய் கூறியதற்கும் தண்டனையாக என் உயிரை எடுத்துக்கொள் ” என வேண்டினாள்.

பகவான் பக்தருக்கு அடிமையாயிற்றே! ‘அயம் பக்த பராதீன? என்பர், வேண்டிய அவள் கையில் மூக்குத்தி தோன்றியது. மெய் சிலிர்த்து கண்துடைத்து, “இதோ மூக்குத்தி ” என்று கணவனிடம் கொடுத்தாள். அதைக்கண்டு திகைத்த நாயக்கர் கடை வந்து, பூட்டிய பெட்டியைத் திறந்தார். அங்கே அவர் பத்திரமாக வைத்த மூக்குத்தியைக் காணவில்லை. கிழவர் சிரித்தார். மாயமாய் மறைந்தார். பித்துப் பிடித்துபோல் வீடு வந்த நாயக்கர் மனைவியிடம், “நடந்த உண்மையைச் சொல் ” என்று அதட்டினார். கண்ணீர் ததும்ப அவள் அனைத்தும் கூறினாள். அவளது பக்தியில் மெய்சிலிர்த்து, இது பகவான் விளையாடல் என்றுணர்ந்தார். உயிர் பிரிந்தால் தான் ஈட்டிய தனம் கூடவருமா... தானம், புண்ணியம், நாமம்தானே வரும் என்று உணர்ந்தார். சூரியனைக் கண்டு இருள் அகன்றது போல மாயை, அகம்பாவம் நீங்கி, வீடு, செல்வம் யாவற்றையும் துறந்து, தானம் செய்து, மனைவி, ஒரு மகள், மகனுடன் உஞ்சவிருத்தி தர்மம் ஏற்று பகவன்நாம பக்தியில் ஆழ்ந்தார். பத்தினியின் பக்தியானது பணத்திமிர் பெற்ற கணவனுக்கு அறிவு, ஞானம், பக்தியைக் கொடுத்தது.

(உஞ்ச விருத்தி தர்மம், என்றால் என்ன? கையில், தம்புரா, சிப்ளாக்கட்டை தோளில் ஒரு கொம்பு, வாயில் பகவான் நாமம் சொல்லிய படி வீதியில் போக, குடும்பஸ்தர்கள் அரிசி போடுவார்கள். அன்றைய தினத்துக்குத் தேவையானது சேர்ந்ததும் வீடு திரும்பி விட வேண்டும். அடுத்த நாளுக்கென்று சேர்த்து வைக்கூடாது நாயக், புரந்தரதாசர், தியாகராஜர் இதை அனுஷ்டித்தனர்.) பக்தி சூத்திரம் எழுதிய நாரதராக இப்போது நாயக்கர் மனம். நடத்தை மாறியது எனலாம். அவரது திடீர் மாறுதலில் அக்கம் பக்கத்தவர் வியந்தனர். அவர்களும் பக்தி மார்க்கத்தில் ஆழ்ந்தனர். நாரத அவதார காரணமே அதுதானே!

‘கலியுகதலஹரி நாமவே நெனதரே
குலகோடிகளு உத்தரரைதவு’

எனப் பாடினார். கலியுகத்தில் ஹரியின் நாமத்தை நினைத்தால் கோடி குலங்கள் உன்னதமாகும் எனப்பொருள். ராஜஸ்தான் ராணி மீரா ஏன் அரண்மனையைத் துறந்து பிருந்தாவனம் ஏகினாள்? கண்ணன்மீது ஆழ்ந்த பக்தி! பாண்டிய மன்னனின் மந்திரி திருவாதவூரர் ஏன் மாணிக்கவாசகரானார்? திருச்சி மன்னரின் மந்திரி தாயுமானவர் ஏன் அனைத்தும் துறந்து கவுபீனதாரியானார்? ஆதிசங்கரர் சிவானந்தலகரியில் பக்தி ; கிம் ந கரோதி ’ - பக்தி எதைத்தான் செய்யாது என்பார். புரந்தரதாசர் வியாசராயர் என்னும் மாத்வகுருவைப் பணிந்து, தீட்சை பெற்று தியானித்து வாழ்ந்தார். குருவருளால் சங்கீதம், சரஹித்யம், பக்தி, ஞானம், வைராக்கியம் யாவும் பெற்றார். சங்கீதத்தில் சரளிவரிசை, ஜண்டைவரிசை, ஹெச்சுஸ்தாயி, தாட்டு வரிசை, கீதம், வர்ணம், கீர்த்தனம் என்று வரிசைப் படி செய்து ஸ்வரம், ராகம், தாளம், அமைத்து ‘சங்கீதப் பிதாமஹர் ’ ஆனார். கர்நாடக சங்கீத உலகம் அதனைத்தான் பின்பற்றுகிறது. ஆக கர்நாடக சங்கீத சபா ரசிகர்கள், தியாகராஜ ஆராதனை சங்கீத விழா போன்று புரந்தரதாச சங்கீத விழாக்களைக் கொண்டாட வேண்டியது அவசியம்.

தாசரின் மகள் திருமண வயதை எய்தினாள். தாசர் அதுபற்றி எதுவும் சிந்திக்கவில்லை. பக்தனின் தேவையைப் பூர்த்தி செய்வது பகவானின் கடமையாகிறது. பகவான் ஒரு பிராமண உருதாங்கி, தனக்குத் தெரிந்தவர் வீட்டுப் பையனுக்குத் தானே மணம் புரிவிப்பதாக வாக்கு தந்து, வேறொருவரை நாடிச் சென்று திருமணம் குறித்துப் பேசி, தாமே எல்லா சீர்வரிசைகளையும், சாஸ்திரிகளையும் ஏற்பாடு செய்து சிறப்பாக திருமணத்தை நடத்தி வைத்தார். அதன்பின்பு அவரைக் காணாமல் அனைவரும் திகைத்தனர். தாசர், அவரது மனைவி, மணப்பெண் உணர்ந்தனர்- இது பகவான் செயல் என்று. மணமான பெண் கர்ப்பமானாள். சீமந்தம், வளைகாப்பு போன்றவற்றைச் செய்யவேண்டுமே. அதையும் பகவானே தாசர் உருவில் செவ்வனே செய்தார்.

திருப்பதியில் புரந்தரி எனும் ஒரு தாசி இருந்தாள். கோயிலில் பாடி நடனமாடுபவள். அவள் தாசரின் பாடல்களில் மனதைப் பறிகொடுத்து, தாசரிடம் சிக்ஷை பெற்று  கோயிலில் பாடினாள். அவள் பக்தியில் பாடலில் நெகிழ்ந்த ஸ்ரீனிவாசன் அவள் பாட, ஆடுவான்; பகவான் பாட இவள் ஆடுவாள். இது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த பரமரகசியம். ஒருநாள் அவள் தவறிப்போய் இந்த விஷயத்தை தாசரிடம் சொல்லிவிட்டாள். பகவானை தரிசிக்க ஆசைகொண்ட தாசர், தான் மறைவிலிருந்து பகவானைப் பார்க்க அனுமதி கேட்டார். வேறுவழியின்றி அவளும் சம்மதித்தாள். அதன்படியே பாலாஜியின் பாடலுக்கு தாசி ஆடினாள். அதை மறைந்திருந்து பார்த்து நெகிழ்ந்தார். தாசர். அப்போது பகவான் திடீரென அபஸ்வரமாக - தாறுமாறாகப் பாட ஆரம்பித்தார். தன்னிலை மறந்த தாசர் மறைவிலிருந்து வெளிப்பட்டு, “நிறுத்துங்கள் பாடலை, இப்படியா பாடுவது?” என்றார். கோபமாக. “வாரும் தாசரே, உம்மை வெளிக்கொணரவே இப்படிப் பாடினேன்” என்றார். பகவான் புன்னகையுடன் தன்னிலைக்கு வந்த தாசர் பகவானைப் பணிந்தார்.

பண்டரிபுர பாண்டுரங்க விட்டலன் ஏகநாதர் என்ற பக்தருக்கு சேவை செய்தார் என்பர். அதுபோல புரந்தரதாசருக்கும் செய்தாராம். ஒருசமயம் அவர் பாகவதர்களை தனது இல்லத்துக்கு சாப்பிட அழைத்திருந்தார். வீட்டில் நெய் இல்லாததால், ஒரு சீடனை நெய் வாங்கிவரும்படி அனுப்பினார். கடைக்காரன் வேண்டுமளவு தரவில்லை. சீடன் கெஞ்சினான். இதற்கிடையில் பாகவதர்கள் சாப்பிட அமர்ந்துவிட்டனர். அப்போது விட்டலனே சீடன் வடிவில் நெய் கொணர்ந்து தந்தார். அனைவரும் சாப்பிட்டனர். தீர்த்தம் கொடுக்க வேண்டும் என்பதால் சீடனை (விட்டலன்) நீர் கொண்டுவர அனுப்பினார். சீடன் சற்று தாமதித்துவர, ‘ஏன் இவ்வளவு தாமதம்? என்று தலையில் குட்டினார். சீடனுக்கு கோபம்; சட்டென்று அகன்றுவிட்டான். அப்போது உண்மையான சீடன் அங்கு வந்து, “மன்னிக்க வேண்டும் குருநாதா, கடைக்காரர் நெய் தரவில்லை ” என்றான். அப்படியானால் இங்கு நெய் தந்து தலையில் குட்டு வாங்கியது யார்? பகவானே என்றுணர்ந்து நெருக்குருகி அழுதார் தாசர். அதன்பின்னர் பகவான் தாசர் உருவத்தில் ஒரு தாசி வீட்டுக்குச் சென்றார். அவரைக் கண்டு வியப்புற்ற தாசி வரவேற்று அமரச் செய்தாள். “உன்னை ரசிக்கவே வந்தேன். இதோ தங்கக் காப்பு ” என்றார். “தாங்கள் இங்கு வந்தது மகிழ்ச்சியே. ஆனால் உங்கள் ஆசை வினோதமாக உள்ளதே. இது அபச்சாரமல்லவா... ” என்று அவர் பாதம் பணிந்தாள் தாசி. “ஆகட்டும் இந்தக் காப்பையாவது வைத்துக்கொள்” என்று கொடுத்துவிட்டு வெளியேறினார் தாசர் உருவிலிருந்த பகவான்.

காலையில் கோயிலில் பரபரப்பு -பகவானின் தங்கக்காப்பு காணவில்லை என்று. ஊர் முழுக்க தண்டோரா போட்டார்கள். இதைக்கேட்ட தாசி, “புரந்தரதாசர் இரவு என் வீட்டுக்கு வந்து கொடுத்தார் ” என்று சொல்லி தங்கக் காப்பை ஒப்படைத்தாள். தாசர் கைது செய்யப்பட்டார். “கோயிலில் சொத்தைத் திருடியவனை தூணில் கட்டிவைத்து அடியுங்கள் ” என்றனர். அதன்படியே அவரை ஒரு தூணில் கட்டி வைத்து அடித்தனர். (அந்தத் தூணை  பண்டரிபுரம் கோயிலில் தற்போதும் காணலாம்.) “நான் திருடவில்லை. தாசி வீடு செல்லவில்லை. விட்டலா-விட்டலா!” என்று அலறினார். அப்போது கருவறையிலிருந்து ஒரு குரல், “நீர் கொண்டுவர தாமதமானதால் என் தலையில் குட்டினீரல்லவா? அதற்கான தண்டனைதான் இது. உன் உருவில் சென்று தங்கக்காப்பு கொடுத்தது நானே ” என்றது அனைவரும் வியந்து தாசரிடம் மன்னிப்பு கோரினர். தாசரோ பாண்டுரங்க விட்டலனின் லீலைகளில் மெய்சிலிர்த்து பாதம் பணிந்தார்.

ஒரு தை மாத அமாவாசையில் அவரது ஜீவன் பரமாத்மாவுடன் லயமாகியது.

‘பாக்யதா லக்ஷ்மி பாரம்மா - நம்மம்ம நீ
சௌபாக்யதா லக்ஷ்மி பாரம்மா’ என்பது தாசர் பாடிய பல்லவி. சவுபாக்கியம் தர மகாலட்சுமியே அம்மா என்று பொருள்.
 
  தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
 
 
 
 
 
 
 
 
Copyright 2015 www.dinamalar.com. All rights reserved.