SS ஜோதிர்லிங்க தரிசன ஸ்லோகம்! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ஜோதிர்லிங்க தரிசன ஸ்லோகம்!
ஜோதிர்லிங்க தரிசன ஸ்லோகம்!
ஜோதிர்லிங்க தரிசன ஸ்லோகம்!

பன்னிரண்டு ஜோதிர்லிங்க மூர்த்திகளாக அவதரித்திருக்கும் சிவபிரானைப் போற்றும் இந்தத் தோத்திரங்களை தினமும் பாராயணம்செய்து வந்தால் சகல மங்கலங்களும் ஏற்படும்.

சோமநாதம்: குஜராத் மாநிலத்தில் கடற்கரையோரப் பகுதியில் மணிபர்வதத்தில் இந்த கோயில் உள்ளது. சிவபெருமானுக்கு ஸ்படிகம் போன்ற திருமேனி. கஜினி முகம்மது இக்கோயிலை 17 முறை முற்றுகையிட்டுத் தாக்கியதால் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்தக் கோயில், சர்தார் வல்லப பாய்படேலின் முயற்சியால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.

ஸௌராஷ்ட்ர தேசே விசதே (அ) திரம்யே
ஜ்யோதிர் மயம் சந்த்ர கலாவதம்ஸம்
பக்திப்ரதானாய க்ருபாவதீர்ணம்
தம் ஸோமநாதம் சரணம் ப்ரபத்யே.

கருத்து: சிவபக்தர்களுக்கு அருள்பாலிக்க, புனிதமான சௌராஷ்டிர பிரதேசத்தில் (காட்டியாவாட் பகுதியில்) கோயில்கொண்டுள்ள சந்திரசூடேசுவரரான சோமநாதரைச் சரணடைந்து வழிபடுகிறேன்.

ஸ்ரீசைலம்: ஆந்திராவில் நந்தியால் என்ற இடத்திலிருந்து 100 கி.மீ தூரத்தில் மலைமீது உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது.

ஸ்ரீசைல ச்ருங்கே விபுதாதி ஸங்கே துலாத்ரிதுங்கே (அ)பி முதா வஸந்தம்.
தமர்ஜுனம் மல்லிகபூர்வமேகம் நமாமி ஸம்ஸார ஸமுத்ர ஸேதும்.

கருத்து: மகோன்னதமான ஸ்ரீசைல மலையில், தேவதைகள் விரும்பி வாசம் செய்யும் புனிதமான பகுதியில் கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீ மல்லிகார்ஜுனரை வணங்குகிறேன். இத்திருத்தலம் சம்சார சாகரத்தைக் கடக்கப் பாலமாக அமைந்திருக்கிறது.

மகாகாளர்: மத்தியப்பிரதேச மாநிலம், உஜ்ஜயினி நகரத்தில் சிப்ரா நதி தீரத்தில் உள்ளது இந்தத் தலம்.

அவந்திகாயாம் விஜிதாவதாரம் முக்திப்ரதானாய ச ஸஜ்ஜனானாம்
அகால ம்ருத்யோ: பரிரக்ஷணார்த்தம் வந்தே மஹாகால மஹாஸுரேசம்.

கருத்து: ஞானிகளுக்கும் மகான்களுக்கும் மோக்ஷ பதவியை அளிக்க அவந்தி மாநகரில் (உஜ்ஜயினி) சிவபெருமான் அவதாரம் செய்திருக்கிறார். அங்கு அவருக்கு மஹாகாளர் என்று திருநாமம் அகாலமிருத்யு முதலான கேடுகளைப் போக்கிக் கொள்ள அந்த மகாதேவனை வணங்குகிறேன்.

ஓம்காரர்: மத்தியபிரதேசத்தில், நர்மதா-காவேரிகா கலக்கும் இடத்தில் ஓம்கார வடிவாய் அமைந்துள்ளது இந்தத் தலம்.

காவேரிகா- நர்மதயோ : பவித்ரே ஸமாகமே ஸஜ்ஜன தாரணாய,
ஸதைவ மாந்தாத்ரு புரே வஸந்தம் ஓங்காரமீசம் சிவமேகமீடே.

கருத்து: உத்தமர்களைப் பிறவிப் பெருங்கடலிலிருந்து மீட்க வேண்டி, காவேரிகாவுக்கும் நர்மதைக்கும் இடைப்பட்ட மாந்தாதாபுரியில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீஓங்காரேஸ்வரரை துதித்து வழிபடுகிறேன்.

வைத்தியநாதம்: பாட்னாவில் வைத்தியநாதம் என்ற ஊரில் இத் தலம் உள்ளது. இலங்கையிலிருந்து ராவணனால் இம் மூர்த்தி கொண்டுவரப்பட்டது.

பூர்வோத்தரே ப்ரஜ்வலிகா நிதானே ஸதா வஸந்தம் கிரிஜா ஸமேதம்,
ஸுரா ஸுராராதித பாதபத்மம் ஸ்ரீவைத்யநாதம் தமஹம் நமாமி.

கருத்து: வடகிழக்குத் திசையிலுள்ள புனிதத்தலமான மயான பூமியில் (வைத்திய நாதக்ஷேத்திரம்) பார்வதி தேவியுடன் காட்சி அளிக்கும் ஸ்ரீவைத்தியநாத சுவாமியை வணங்குகிறேன். தேவர்களும் அசுரர்களும்கூட இந்த மூர்த்தியை ஆராதித்து நலம் பெறுகிறார்கள்.

நாகநாதர்: சோண்டிக்கு அருகில் நாகேசன் என்ற இடத்தில் இக்கோயில் உள்ளது. தாருகாவனம் என்ற பெயரும் இதற்கு உண்டு. சிவனார், தாருகாவன முனிவர்களின் செருக்கை அடக்கிய இடம் இது.

யாம்யே ஸதங்கே நகரே (அ)தி ரம்யே
விபூஷிதாங்கம விவிதைஸ் ச போகை:

ஸத்பக்தி முக்திப்ரதம் ஈசமேகம் ஸ்ரீநாகநாதம் சரணம் ப்ரபத்யே.

கருத்து: தென்பாகத்தில் மிக அழகிய நகரமான சதங்க க்ஷேத்திரத்தில் எல்லா வைபவங்களையும் அருளும் ஸ்ரீநாகநாத ஸ்வாமி கோயில் கொண்டிருக்கிறார். ஜகஜ்ஜோதியாகத் திகழும் இப்பெருமான் பக்தியையும் முக்தியையும் அளித்து சிவனடியார்களை ஆட்கொள்பவர்.

கேதாரம்: இமாலயத்தில் வடகோடியில் உள்ளது, இத் திருக்கோயில், ஆறு மாதங்கள் பனியால் மூடிக்கிடக்கும்.

மஹாத்ரி பார்ச்வே ம தடே ரமந்தம்
ஸம்பூஜ்யமானம் ஸததம் முனீந்த்ரை:
ஸுராஸுரை: யக்ஷ மஹோரகாட்யை:
கேதாரமீசம் சிவமேக மீடே

கருத்து: இமயமலை-கேதார சிகரத்தில் நித்தியவாசம் புரியும் கேதாரநாதப் பெருமானை முனிவர்களும், தேவர்களும், அசுரர்களும், யக்ஷர்களும், சர்ப்பங்களும் பூஜித்து வருகிறார்கள். மங்கலங்களை அளிக்க வல்ல அப்பெருமானை போற்றுகிறேன்.

திரியம்பகம்: மகாராஷ்டிரப் பிரதேசத்தில் நாசிக் அருகில் சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ளது. திருமா<லும், நான்முகனும் தாமே பெரியவர்கள் என்று தருக்கி நின்றபோது, சிவபெருமான் ஜோதி வடிவமாகத் தோன்றி அவர்களுடைய செருக்கை அடக்கிய நிகழ்ச்சி இங்கு நடந்ததாக தல புராணம் கூறுகிறது.

ஸஹ்யாத்ரி சீர்ஷே விமலே வஸந்தம்
கோதாவரீ தீர பவித்ர தேசே
யத் தர்சனாத் பாதகமாசு நாசம்
ப்ரயாதிதம் த்ரயம்பகமீச மீடே.

கருத்து: கோதாவரி நதிக்கரையில், ஸஹ்ய பர்வதத்தின் சிகரத்தில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீத்ரயம்பகேசுவரரை பயங்கள் நீங்கி, நலன்கள் பெருக தினமும் ஆராதிக்கிறேன்.

ராமேஸ்வரம்: தீர்த்தப்பெருமையுடன் பாடல் பெற்ற இத்தலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.

ஸுதாம்பர பர்ணீ ஜலராசி யோகே
நிபத்ய ஸேதும் விசிகை ரஸங்க்யை:
ஸ்ரீராம சந்த்ரேண ஸமர்ப்பிதம் தம்
ராமேச்வராக்யம் நியதம் நமாமி.

கருத்து: ஸ்ரீராமரால் பூஜிக்கப்பட்ட சேதுக்கரை ஸ்ரீராமேசுவரரை தினமும் வணங்குகிறேன்.

பீமசங்கரம்: பூனாவிலிருந்து 75 கி.மீ தூரத்தில் மாஞ்சார் என்ற ஊரில் மலைமீது உள்ளது. பீமன் (மகாபாரத பீமன் அல்ல) எனும் அசுரனை வதைத்த தலம்.

யம் டாகிணீ சாகினிகா ஸமாஜே
நிஷேவ்யமாணம் பிசிதாசனனஸ்ச
ஸதைவ பீமாதிபத ப்ரஸித்தே
தம் சங்கரம் பக்தஹிதம் நமாமி.

கருத்து: டாகினி, சாகினீ முதலான பூத கணங்களால் பூஜிக்கப்படும் பகவான் பீம சங்கர மூர்த்தியை வணங்குகிறேன்.

விசுவேசம்: ஸ்ரீகாசியின் கோயில். முக்தி தலங்கள் ஏழினுள் ஒன்று.

ஸானந்தமானந்தவனே வஸந்தம்
ஆனந்த கந்தம் ஸதபாப வ்ருந்தம்
வாராணசீநாதம் அநாதநாதம்
ஸ்ரீவிச்வநாதம் சரணம் ப்ரபத்யே.

கருத்து: பரமானந்த சொரூபியான பரமேசுவரன் ஆனந்த வனம் எனும் காசியில் கோயில் கொண்டு பக்தர்களின் பாபங்களைப் போக்கி வருகிறார். அகில உலகுக்கும் நாதனான அவரின் திருப்பாதங்களைச் சரணடைகிறேன்.

கிருஷ்ணேஸ்வர்: மகாராஷ்டிராவில் அவுரங்காபாத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்தோர் மகாராணியால் கட்டப்பட்டது. இந்த மூர்த்தியை அம்பாள் குங்குமப் பூவால் அர்ச்சித்து வழிபட்டாராம்.

இலாபுரே ரம்யவிசாலகே (அ)ஸ்மின்
ஸமுல்லஸந்தம் ச ஜகத்வ ரேண்யம்
வந்தே மஹோதாரதர ஸ்வபாவம்
கிருஷ்ணே சுவராக்யம் சரணம் ப்ரபத்யே

கருத்து: புனிதமான இலாக்ஷேத்திரத்தில் கோயில் கொண்டிருக்கும், பக்தர்களுக்கு நலன்களை அளித்துவரும் ஜோதிஸ்வரூபியான ஸ்ரீகிருஷ்ணேஸ்வரரை நான் சரணடைகிறேன்.

ஜ்யோதிர்மய த்வாச லிங்ககானாம்
சிவாத்மனாம் ப்ரோக்தமிதம் க்ரமேண
ஸ்தோத்ரம் படித்வா மநுஜோ (அ)தி பக்த்யா
ப்பலம் ததாலோக்ய நிஜல் பஜேச்சு.

இந்தத் துதியை பக்தியுடன் தினமும் பாராயணம் செய்யும் பக்தர்களுக்கு சிவ தரிசனத்தால் ஏற்படும் நற்பயன் கிடைக்கும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar