SS நாராயண ஸூக்தம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> நாராயண ஸூக்தம்
நாராயண ஸூக்தம்
நாராயண ஸூக்தம்

ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ
புனக்து ஸஹ வீர்யம் கரவாவஹை
தேஜஸ்விநாவதீதமஸ்து மா வித்விஷாவஹை
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

ஆச்சாரியர், சீடர் ஆகிய நம் இருவரையும் இறைவன் காப்பாராக! அறிவின் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக! நாம் இருவரும் ஈடுபாடுமிக்க ஆற்றலுடன் உழைப்போமாக! கற்றது நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும்! எதற்காகவும் நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக!

தியானம் என்பது இறைவனின் திரு சன்னிதியில் இருப்பது; ஒரு படத்தையோ உருவத்தையோ கற்பனை செய்து கொண்டிருப்பதோ, வெறித்துப்பார்த்துக் கொண்டிருப்பதோ அல்ல. அவரது திருசன்னிதியில் நாம் இருப்பதை உணர வேண்டும்; அவர் பேரொளியுடன் உண்வுடனும் திகழ்வதை மனத்தளவில் காண வேண்டும். இதற்காக முதலில் அந்த தெய்வத்தின் மகிமையை முதல் ஐந்து மந்திரங்கள் கூறுகின்றன.

ஓம் ஸஹஸ்ர சீர்ஷம் தேவம் விச்வாக்ஷம்
விச்வசம்புவம் விச்வம் நாராயணம் தேவமக்ஷரம்
பரமம் பதம் (1)

1. ஆயிரக்கணக்கான தலைகள் உடையவரும், ஒளிமிக்கவரும், எல்லாவற்றையும் பார்ப்பவரும், உலகிற்கெல்லாம் மங்கலத்தைச் செய்பவரும், உலகமாக இருப்பவரும், அழிவற்றவரும், மேலான நிலை ஆனவரும் ஆகிய நாராயணன் என்னும் தெய்வத்தை தியானம் செய்கிறேன்.

விச்வத: பரமான் நித்யம் விச்வம் நாராயணக்ம்
ஹரிம் விச்வமேவேதம் புருஷஸ்தத்விச்வ
முபஜீவதி (2)

2. இந்த உலகைவிட மேலானவரும், என்றும் உள்ள வரும், உலகமாக விளங்குபவரும், பக்தர்களின் துன்பங்களைப் போக்குபவருமாகிய நாராயணனை தியானம் செய்கிறேன்.

பதிம் விச்வஸ்யாத்மேச்வரக்ம் சாச்வதக்ம்
சிவமச்யுதம் நாராயணம் மஹாஜ்ஞேயம் விச்வாத்
மானம் பராயணம் (3)

3. உலகிற்கு நாயகரும், உயிர்களின் தலைவரும், என்றும் உள்ளவரும், மங்கல வடிவினரும், அழிவற்ற வரும், சிறப்பாக அறியத் தக்கவரும், எல்லாவற்றிற்கும் ஆன்மாவாக இருப்பவரும், சிறந்த புகலிடமாக இருப்பவருமான நாராயணனை தியானம் செய்கிறேன்.

நாராயண பரோ ஜ்யோதிராத்மா நாராயண:
பர: நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண:
பர: நாராயண பரோ த்யாதா த்யானம்
நாராயண: பர: (4)

4.  நாராயணனே சிறந்த ஒளி, நாராயணனே பரமாத்மா, நாராயணனே பரப்பிரம்மம், நாராயணனே மேலான உண்மை. நாராயணனே தியானம் செய்பவர்களுள் சிறந்தவர். நாராயணனே சிறந்த தியானம்.

இவ்வளவு மகிமைகளுடன் திகழ்கின்ற இறைவன் நம்முள்ளேயே இருக்கிறார் என்பதை அடுத்த மந்திரம் கூறுகிறது.

யச்ச கிஞ்சிஜ்ஜகத் ஸர்வம்  த்ருச்யதே
ச்ரூயதேஸபி வா அந்தர்பஹிச்ச தத் ஸர்வம்
வ்யாப்ய நாராயண: ஸ்தித: (5)

5. உலகம் முழுவதிலும் காணப்படுவது எதுவாயினும், கேட்கப்படுவது எதுவாயினும் அவை அனைத்தையும் உள்ளும் புறமும் வியாபித்தபடி நாராயணன் இருக்கிறார்.

இது தியானத்தின் அடுத்த படி. முதலில் மனம் எல்லையற்று பரந்த தெய்வத்தை நினைப்பதில் ஈடுபட்டது. இப்போது அதன் எல்லை சுருக்கப்படுகிறது. பரந்திருந்த மனம் நம்மில் ஒன்று சேர்க்கப்படுகிறது.

தியானத்தின் இறுதிப்படியாக, மனம் இதயத்தில் குவிக்கப்படுவதுபற்றி அடுத்த மந்திரம் கூறுகிறது.

அனந்தமவ்யயம் கவிக்ம் ஸமுத்ரேஸந்தம்
விச்வ சம்புவம் பத்மகோச ப்ரதீகாசக்ம்
ஹ்ருத்யம் சாப்யதோ முகம் (6)

6. முடிவற்றவரும், அழிவற்றவரும், அனைத்தும் அறிந்தவரும், சம்சாரப் பெருங்கடலின் இறுதியில் இருப்பவரும், உலகிற்கெல்லாம் மங்கலத்தைச் செய்பவரும் ஆகிய நாராயணனை கீழ்நோக்கிய தாமரை மொட்டு போல் இருக்கின்ற இதயத்தில் தியானம் செய்கிறேன்.

ஸமுத்ரே அந்தம் என்ற வார்த்தை இங்கே கவனிக்கத் தக்கது. சம்சாரப் பெருங்கடலின் இறுதியில் இருப்பவராக இறைவன் கூறப்படுகிறார். ஆசைகள், உணர்ச்சி வேகங்கள் போன்ற அலைகள் கொந்தளிக்கின்ற வாழ்க்கையே சம்சாரப் பெருங்கடல் என்று கூறப்படுகிறது. ஆசைகளும் உணர்ச்சிகளும் கொந்தளிக்கும் வரை தியானத்தின் மூலம் இறைவனை நெருங்க முடியாது. ஆசைகள் அடங்கி, மனம் அமைதியுற்றால்தான் தியானம் கைகூடும். இதயத்தின் இருப்பிடம் கூறப்படுகிறது.

அதோ நிஷ்ட்டயா விதஸ்த்யாந்தே
நாப்யாமுபரி திஷ்ட்டதி ஜ்வாலமாலாகுலம்
பாதீ விச்வஸ்யாயதனம் மஹத் (7)

7. குரல்வளைக்குக் கீழே தொப்புளுக்கு மேலே ஒரு சாண் தூரத்தில் இதயம் இருக்கிறது. உலகிற்கெல்லாம் சிறந்த அந்த உறைவிடம் சுடர் வரிசையால் சூழப்பட்டாற்போல் பிரகாசிக்கிறது.

இதயத்தைப்பற்றி பேசப்படுகிறது. லப்டப் என்று துடித்துக்கொண்டிருக்கின்ற பவுதீக இதயம் அல்ல இது. பவுதீக இதயம் என்றால் இடத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்க வேண்டிய தேவையில்லை, அது இருப்பது எல்லோருக்கும் தெரியும்.

இது ஆன்மீக இதயம். இதற்கு மூன்று அடையாளங்கள். ஒன்று, தொப்புளுக்கு மேலே ஒரு சாண் தூரத்தில் உள்ளது. பவுதீக இதயமும் அதே தூரத்தில்தான் உள்ளது, ஆனால் அது சற்று இடது புறம் உள்ளது. ஆனால் ஆன்மீக இதயம் நடுவில் உள்ளது. இரண்டு, சுடர் வரிசையால் சூழப்பட்டுள்ளது. மூன்று, அந்த இதயமும் பிரகாசிக்கிறது. இந்த மூன்று அடையாளங்களும் பவுதீக இதயத்திற்குப் பொருந்தாது. ஆனால் இதனை நாம் உணர்வதில்லையே! உணர்வதில்லை, ஆனாலும் அது அங்கே உள்ளது.

இதயத்தில் தியானிக்க வேண்டும் என்று தெரிந்ததும், இந்தத் தூல இதயம் இருக்கும் பகுதியில் மனத்தைக் குவிக்க முயற்சிக்கிறார்கள் பலர். ஆனால் இது கடைசிவரை வெறும் முயற்சியாக இருக்குமே தவிர தியானத்தில் வெற்றி கிடைக்காது. ஏனெனில் தியானம் மனம் சம்பந்தப்பட்டது. நாம் தியானிக்க வேண்டியது ஆன்மீக இதயத்தில் அல்லது இதயத் தாமரையில். அங்கு மட்டுமே உண்மையாக தியானிக்க முடியும். மிகப் பெரும்பாலோரிடம் இந்த ஆன்மீக இதயம் மலராமல் அரும்பாகவே உள்ளது. முதலில் அதை மலரச் செய்ய வேண்டும். அதற்கு ஜபம், பிரார்த்தனை, போன்ற சாதனைகள் தேவை. இந்த ஆன்மீக மையத்தைக் கண்டுபிடிக்கும் வரையில் தியான வேளையில் மனம் அலைந்து கொண்டுதான் இருக்கும், தியானம் என்பது வெறும் மனப் போராட்டமாகவே இருக்கும் என்று எழுதுகிறார் சுவாமி பஜனானந்தர்.

இந்த இதயத்தின் உள்ளே உள்ளது ஓர் ஆகாசம்

ஸந்ததக்ம் சிலாபிஸ்து லம்பத்யாகோச
ஸன்னிபம் தஸ்யாந்தே ஸுஷிரக்ம் ஸூக்ஷ்மம்
தஸ்மின் ஸர்வம் ப்ரதிஷ்ட்டிதம் (8)

(8) தாமரை மொட்டுப் போன்ற இதயம் நாற்புறங்களிலும் நாடிகளால் சூழப்பட்டு தொங்குகிறது. அதன் உள்ளே நுண்ணிய ஆகாசம் உள்ளது. அனைத்தும் அதில் நிலை பெற்றுள்ளன.

சாந்தோக்கிய உபநிஷதம் (8.11) இதனை மிக அழகாகக் கூறுகிறது: இந்த உடம்பினுள் தாமரை போன்ற சிறு மாளிகை உள்ளது. அதனுள் அக ஆகாசம் உள்ளது. அதில் இருப்பதைத் தேட வேண்டும்.

(புறத்தில் காணப்படுகின்ற) ஆகாசம் எவ்வளவு பெரியதோ இதயத்தின் உள்ளே உள்ள ஆகாசமும் அவ்வளவு பெரியது. வானுலகும் பூவுலகும் இதனுள் அடங்கும். அக்கினி, வாயு, சந்திரன், சூரியன், மின்னல், நட்சத்திரங்கள் என்று இந்த உலகில் என்னென்ன உண்டோ, என்னென்ன இல்லையோ அவையெல்லாம் இதனுள் உள்ளன என்று ஆகாசத்தைப்பற்றி சாந்தோக்கிய உபநிஷதம் (8.1.3) கூறுகிறது.

ஆகாசத்தினுள் பிராணன் அல்து உயிர் உறைகிறது.

தஸ்ய மத்யே மஹானக்னிர் விச்வார்ச்சிர்
விச்வதோமுக: ஸோக்ரபுக்விபஜன் திஷ்ட்டன்னா
ஹாரமஜர:  கவி: (9)

9. எங்கும் ஒளி வீசுவதாகவும், எல்லா திக்கிலும் செல்வதாகவும் உள்ள சிறந்த அக்கினி அந்த ஆகாசத்தின் நடுவில் உள்ளது. பிராணனாகிய அந்த அக்கினி முதலில் உண்பதாகவும், உணவைப் பிரித்துக் கொடுப்பதாகவும், நிலைத்து நிற்பதாகவும், தான் பழுதுபடாததாகவும், அனைத்தையும் காண்பதாகவும் உள்ளது.

படிப்படியாக நம்மை அகமுகமாக்கும் முயற்சியில் அடுத்தபடி இது. ஆகாசத்தினுள் அக்கினி. இதுவே உயிர் அல்லது பிராணன். இதுவே நம்மிலுள்ள இயங்கு சக்தி. உணவைச் சொரிப்பது, உணவிலிருந்து பெற்ற சக்தியை எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்வது, கழிவை வெளியேற்றுவது என்று உடம்பின் இயக்கத்திற்கான பல்வேறு வேலைகளைப் பிராணனே செய்கிறது. இதய ஆகாசத்தின் நடுவில் இந்தப் பிõணன் நிலைகொள்கிறது. உடம்பின் அனைத்துப் பகுதிகளிலும் பரவியுள்ளதால் அனைத்தையும் காண்பதாகக் கூறப்படுகிறது.

பிராணனின் சுடராக ஜீவான்மா உள்ளது.

திர்யகூர்த்வமத சாயீரச்மயஸ் தஸ்ய ஸந்ததா
ஸந்தாபயதி ஸ்வம் தேஹமாபாத தலமஸ்தக:
தஸ்ய மத்யே வஹ்னிசிகா அணீயோர்த்வா
வ்யவஸ்தித: (10)

10. அந்தப் பிராணனின் கிரணங்கள் குறுக்கிலும் மேலும் கீழும் பரவி எங்கும் வியாபித்திருக்கின்றன. இது உள்ளங்கால் முதல் உச்சந்தலைவரை பரவி உடலைச் சூடுள்ளதாகச் செய்கிறது. இதன் நடுவில் மெல்லியதான அக்கினிச் சுடர் மேல்நோக்கி அமைந்திருக்கிறது.

இந்தப் பிராணன் உடம்பை விட்டுப் பிரிவதே உயிர் பிரிவது அல்லது மரணம் எனப்படுகிறது. உடம்பின் சூடு நீங்கி, அது விறைப்பதை வைத்து ஒருவர் இறந்துவிட்டதை ஊர்ஜிதம் செய்துகொள்வதை வழக்கத்தில் காண முடியும். உடம்பிற்கு அந்தச் சூட்டை அளிப்பது இந்தப் பிராணன். அந்த அக்கினியின் நடுவில் அதன் சுடர் மேல் நோக்கி பிரகாசிக்கின்றது. இந்தச் சுடரே ஜீவான்மா.

நீல தோயத மத்யஸ்தாத்வித்யுல்லேகேவ
பாஸ்வரா நீவார சூகவத் தன்வீ பீதா
பாஸ்வத்யணூபமா (11)

11. கருமேகத்தின் நடுவிலிருந்து ஒளி வீசுகின்ற மின்னல்கொடி போலவும், நெல்லின் முளைபோல் மெல்லியதாகவும், பொன்னிறமாகவும், அணுவைப்போல் நுண்ணியதாகவும் அந்த ஆன்மா பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

ஜீவான்மா என்பது நுண்மையானது, ஒளிமிக்கது என்பதை உபநிஷதங்கள் பல்வேறு விதமாகப் பேசுகின்றன. நூற்றுக்கணக்காகப் பிளந்த முடியின் ஒரு பங்கு அளவினது ஜீவான்மா என்று அணு போன்றது என்று முண்டக உபநிஷதம் (3.1.9) கூறுகிறது. நுண்மையானது என்றாலே அது புலன்களுக்கும் மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாதது என்றுதானே பொருள்! அத்தகைய ஒன்றை விளக்குவதற்கான ரிஷிகளின் முயற்சிகள் இவை.

ஜீவான்மாவினுள் இறைவன் திகழ்கிறார்.

தஸ்யா: சிகாயா மத்யே பரமாத்மா
வ்யவஸ்தித: ஸ ப்ரஹ்ம ஸ சிவ: ஸ ஹரி:
ஸேந்த்ர: ஸோஸக்ஷர: பரம: ஸ்வராட் (12)

12. அந்தச் சுடரின் நடுவில் இறைவன் வீற்றிருக்கிறார். அவரே பிரம்மா, அவரே சிவன், அவரே விஷ்ணு, அவரே இந்திரன். அவர் அழிவற்றவர், சுய ஒளியுடன் பிரகாசிப்பவர், தனக்குமேல் யாரும் இல்லாதவர்.

அந்த இறைவனைப் போற்றுதல்

ரிதக்ம் ஸத்யம் பரம் ப்ரஹ்ம புருஷம்
க்ருஷ்ண பிங்கலம் ஊர்த்வரேதம் விரூபாக்ஷம்
விச்வரூபாய வை நமோ நம: (13)

13. காணும் பொருட்களின் அழகாகவும் காட்சிக்கு ஆதாரமாகவும் உள்ள பரம்பொருளை, உடல்தோறும் உறைபவனை, கருமேனித் திருமாலும் செம்மேனிச் சிவனும் ஒன்றாக இணைந்த வடிவை, முற்றிலும் தூயவனை, முக்கண்ணனை, எல்லாம் தன் வடிவாய்க் கொண்டவனை பலமுறை வணங்குகிறேன்.

இவ்வாறு நம்மை அகமுகமாக்கி இறைவனின் சன்னிதியில் விடுகிறது இந்த ஸூக்தம். இனி தொடர்ந்து அன்புடன் அவரது சன்னிதியில் இருப்பதே உண்மையான தியானம்.

இனி வருவது விஷ்ணு காயத்ரி. நாராயண ஸூக்தத்திற்குப் பிறகு இதை ஓதுவது வழக்கம்.

ஓம் நாராயணாய வித்மஹே வாஸுதேவாய
தீமஹி தன்னோ விஷ்ணு: ப்ரசோதயாத்
ஓம் ஸஹ நாவவது.

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

நாராயணனை அறிந்துகொள்வோம். அதற்காக அந்த வாசுதேவனை தியானிப்போம். அந்த விஷ்ணு நம்மை இந்த தியான முயற்சியில் தூண்டட்டும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar