SS தூங்க வருகவே! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> தூங்க வருகவே!
தூங்க வருகவே!
தூங்க வருகவே!

காளிக்கு அண்ணன் கார்முகில் வண்ணன்
காளிங்க நர்த்தனம் ஆடிக் களைத்தவன்
கோளரி மாதவன் கோவிந்தன் என்வீட்டுத்
தூளியில் ஆடித் தூங்க வருகவே....

வானிடை சூரியன் காய்கின்ற வேளையில்
ஆநிரை காத்து மேய்த்துக் களைத்தவன்
தூணிடை சிங்கன் எந்தன் துரும்பு
மேனியில் ஒளிந்து தூங்க வருகவே...

பாரதப் போரில் பார்த்தனின் தேரை
சாரத்யம் செய்து சோர்ந்து களைத்தவன்
நாரத மாமுனி நாவிருப்போன் என்
மாரதில் புரண்டு தூங்க வருகவே...

மாணிக்கக் குறளன் மாவலி ஈன்ற
காணிக்கை ஏற்றுக் கால்களை நீட்டி
வானுக்குத் தாவி களைத்தவன் எந்தன்
ஊனுக்குள் கலந்து தூங்க வருகவே...

மாம்பழக் கதுப்பு மருங்கில் கட்டிய
தாம்புக் கயிறால் உரலை இழுத்து
கூம்பிய ஆம்பலாய்க் களைத்தவன் ஐம்புலப்
பாம்பை அடக்கத் தூங்க வருகவே....

முடியில் கற்றை மயிற்பீலி புனைந்து
மடியில் பட்டுப் பீதாம்பரம் அணிந்து
நொடியில் ராதைக்காய் காத்துக் களைத்தவன்
அடியேன் என்னகத்தில் தூங்க வருகவே...

அன்னையர் துரத்த ஆயர் பாடியில்
வெண்ணெய் திருடி வீதியோடிக் களைத்தவன்
பின்னையின் பின்னல் நிறத்தன் என்மனத்
திண்ணையில் சாய்ந்து தூங்க வருகவே...

ஆசை கோபியர் அன்புக்கு அடிமையாய்
ராச லீலையில் மூழ்கிக் களைத்தவன்
வாச துளசி மாலை அணிந்தெனது
பூசை உள்ளில் தூங்க வருகவே...

பூதனை நச்சுப் பாலொடு அவளின்
வேதனை தீரக் குடித்துக் களைத்தவன்
சீதரன் கோமளன் ஸ்யாமளன் என்னுளத்
தீதினை விரட்டித் தூங்க வருகவே...

இத்தரை இன்னல்கள் களைந்து தர்மம்
புத்துயிர் பெற்றிடப் பற்பல யுகத்தில்
பத்தவதாரம் பூண்டுக் களைத்தவன்
புத்தியில் யோகமாய்த் தூங்க வருகவே...


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar