Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நளனின் சரித்திரம்!
 
பக்தி கதைகள்
நளனின் சரித்திரம்!

நவக்கிரகங்களுள் வேறு எந்தக் கிரகத்துக்கும் பயப்படாமல் இருப்பவர்கள்கூட சனி என்றால் ஆடிப் போய்விடுவார்கள். சனி பிடித்ததோ, சளி பிடித்ததோ என்கிற ஒரு வழக்குகூட உண்டு. அதாவது சனி பிடித்தாலும், சளி பிடித்தாலும் அவ்வளவு எளிதில் நிவாரணம் கிடைக்காது. கொஞ்ச காலம் இருந்துவிட்டு, பிறகுதான் அகலும். எனவே சனி பகவான் என்றால் அவ்வளவு பயம்...! சனி பகவானின் அருளைப் பொழியும் பல்வேறு திருத்தலங்கள் நாடெங்கும் அமைந்திருக்கின்றன. கும்பகோணம் அருகிலுள்ள திருநறையூர் (நாச்சியார்கோவில்), தேனி அருகிலுள்ள குச்சனுார், திருநெல்வேலி அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டம் காசி விஸ்வநாதர் கோவில், ஆரணி அருகிலுள்ள ஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வரர், சென்னை பொழிச்சலுார், குத்தாலம் சோழீஸ்வரர் திருக்கோவில், விழுப்புரம் அருகில் உள்ள கோலியனுார், கல்பட்டு, திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருக்கொள்ளிக்காடு, மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள சனி சிங்கனாப்பூர்... இப்படி எண்ணற்ற திருத்தலங்கள் சனி பகவானின் அருள் பெற்றுத் திகழ்வதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.

இவருக்கு எத்தனையோ திருத்தலங்கள் இருந்தாலும், அவற்றில் வெகுவாகச் சிறப்பித்துச் சொல்லப்படும் திருத்தலம் திருநள்ளாறு. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சனீஸ்வரரை வணங்கிச் செல்கிறார்கள். காரைக்கால் அருகில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். கும்பகோணத்தில் இருந்து 52 கி.மீ., காரைக்காலில் இருந்து ஆறு கி.மீ. தொலைவு. பூமத்திய ரேகை பகுதியில் சூரியனுடைய கதிர்வீச்சு எப்படி அதிகமாக அருகில் இருக்கிறதோ, அதுபோல் சனி கிரகத்தின் நீள்வட்டப் பாதையில் அதிகபட்சமான சனி கிரகத்தின் கதிர் வீச்சு திருநள்ளாற்றில் கிடைக்கிறது என்பது அறிவியல் உண்மை. வானவெளியில் சஞ்சரித்து வரும் சனி பகவான், தனக்கு உகந்த தலமான திருநள்ளாற்றில் தினமும் ஒவ்வொரு நேரத்தில் தன் கதிர்களை வாரி இறைக்கிறார். இதனால்கூட, இந்தத் திருத்தலத்தில் நம் முன்னோர் சனி பகவானுக்கு விசேஷமான ஆலயம் எழுப்பி இருக்கக்கூடும் என்கிற ஒரு கருத்து உண்டு. சனி பகவான் வழங்கும் கொடுமையான பலன்களில் இருந்து மீள்வது என்பது பெரும்பாடாக இருக்கும். இதுபோன்ற வேளைகளில் சனி பகவானை ஸ்தோத்திரம் பாடித் துதித்தால், அவர் நமக்கு அருள்வார்.

ஸ்தோத்திரப் பிரியன் என்று இவரைச் சொல்வதுண்டு. சனைச்சர அஷ்டோத்திர மந்திரத்தைத் துதித்து, சனி பகவானை வணங்கிய பின் தான், இழந்த ராஜ்யத்தைத் திரும்பப் பெற்றனர் பாண்டவர்கள். ஜாதகத்தில் கோசாரப்படி அஷ்டமத்தில் சனி இருக்கும்போது உலகை ஆளும் அந்த சர்வேஸ்வரனே பிட்சை எடுக்கவேண்டிய நிலை வந்தது. இரண்டாம் இடத்தில் சனி வீற்றிருந்து ஏழரைச் சனி காலத்தை அனுபவித்த நேரத்தில்தான், அசுர குருவான சுக்கிரனுக்கு ஒரு கண் பார்வை பறி போனது. சீதைக்கு ஜன்மத்தில் சனி இருந்த போதுதான், ராவணன் அவளை லங்காபுரிக்குக் கவர்ந்து சென்றான். ஏராளமான இன்னல்களுக்குப் பின் சனைச்சர ஸ்தவராஜ ஸ்தோத்திரம் உச்சரித்த பின் தான், தனது தேசத்தைத் திரும்பப் பெற்றான் நளன். சனி பகவான் சந்தோஷம் அடைந்தால், அதிகமாகக் கொடுப்பார். கோபம் அடைந்தால் அடியோடு அழித்து விடுவார். கொட்டிக் கொடுக்கும் குணத்தில் சனி பகவானுக்கு எந்த ஒரு பாரபட்சமும் இல்லை. கொட்டிக் கொடுக்க வேண்டும் என்று அவர் விரும்பினால், போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு செல்வ வளத்தை வாரி வழங்கிவிடுவார். இதனால்தான் சனியைப்போல் கொடுப்பவனும் இல்லை; அவரைப்போல் கெடுப்பவனும் இல்லை என்று சொல்லப்படுகிறது. நள மகராஜனுக்கு நல்ல வழியை இந்தத் திருத்தலம் கொடுத்தமையால் நல்+ஆறு என வழங்கப்பட்டு, பின்னாளில் இதுவே நள்ளாறு என ஆனதாகச் சொல்கிறார்கள்.

நளனும் ஆறும் சேர்ந்ததாலும் நள்ளாறு ஆனதாகவும் ஒரு தகவல் உண்டு. நளமகராஜனின் வேண்டுகோளின்படி சனி பகவான் இங்கே எழுந்தருளி ஏவல், திருஷ்டி, கிரக தோஷம் போன்றவை அகல அருள்கிறார். சனி பகவானை வணங்கச் செல்லும் பக்தர்கள், அவசரம் அவசரமாக அவரை மட்டும் வணங்கி விட்டுச் செல்லக் கூடாது. இங்குள்ள தர்ப்பாரண்யேஸ்வரரை அவசியம் தரிசிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு சந்நிதியையும் வணங்கவேண்டும். இங்கு  மூல மூர்த்தியாக  அமைந்துள்ள தர்ப்பாரண்யேஸ்வரர், சிறந்த வரப்ரசாதி. இங்குள்ள அம்மைக்கு போகமார்த்த பூண்முலையாள் என்று பெயர். கோவிலின் கிழக்குப் பகுதியில், உட்கோபுரத்தின் வட பகுதியில் சனி பகவான் சன்னிதி அமைந்துள்ளது. நவக்கிரக மண்டபத்தில் சனி பகவான் மேற்கு நோக்கித்தான் காணப்படுவார். இங்கே கிழக்கு நோக்கி அபய முத்திரையோடு அனுக்ரஹ மூர்த்தியாக விளங்குகிறார். இதனால், சனி பகவானுக்கு அர்ச்சிக்கப்படும் பூஜை பிரசாதங்களை வீட்டுக்கு எடுத்து செல்லலாம். சனி பகவானுக்கு தினமும் ஐந்து கால பூஜை நடக்கும். விசேஷ அபிஷேகங்கள், அலங்காரங்கள் என்று எந்நேரமும் பிஸியாகக் காணப்படுகிறார்.

சனி பகவானே இங்கு பிரதானம் என்பதால், நவக்கிரக சந்நிதி இங்கு இல்லை. சனி பகவானின் ஆட்சியினால் எத்தகைய துன்பம் நமக்கு வந்தாலும், அந்தக் காலத்தில் பொறுமையுடன் இருந்து, அவரது நாமத்தையே ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும். மன உறுதியை இழக்கவே கூடாது. நளனை விட்டு சனி பகவான் விலகும் முன் அவனுக்குத் தந்த வரம் இதுதான்: அரசர்களுள் தனித் தன்மை கொண்டவனே... வெற்றியை விரும்புபவனே... பூர்வ ஜன்ம வினை காரணமாக இத்தனை காலம் உன்னிடம் வசித்து வந்தேன். உன் உடலுக்குள் இருந்த கார்க்கோடகனின் விஷம் என்னைப் பாதித்துக் கொண்டே இருந்தது. மிகுந்த துன்பத்துடன்தான், உன் உடலில் இருந்து வந்தேன். உன் பொறுமை எனக்குப் பிடித்திருக்கிறது. இந்த உலகில் எந்த மனிதர் கொஞ்சமும் அலுத்துக் கொள்ளாமல் உன் சரித்திரத்தைச் சொல்கிறார்களோ, அல்லது உன் புகழ் பாடுகிறார்களோ, அவர்களுக்கு என்னால் எந்தக் காலத்திலும் துன்பம் வராது. இது நிச்சயம், என்றார். ஆக, நளனின் சரித்திரத்தைக் கேட்டாலோ, படித்தாலோ சனி பகவானின் ஆசி நமக்குக் கிட்டும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.