கும்பகோணத்திற்கு காவிரி வர காரணமாக இருந்தவரின் வரலாறு!

பிப்ரவரி 11,2016 IST
எழுத்தின் அளவு:

கும்பகோணத்திற்கு காவிரி நதி வருவதற்கு காரணமாக இருந் தவர் யார் தெரியுமா? ஹேரண் டகர் என்னும் மகரிஷி தான். ஹேரண்டம் என்றால் ஆமணக்கு எனப் பொருள். ஹேரண்டகர் பிறந்த ஊர், அவரது இயற்பெயர், பெற்றோர் பற்றிய விபரங்கள் தெரியவில்லை. சந்நியாசியான இவர் கும்பகோணம் அருகிலுள்ள கொட்டையூர் என்ற ஊருக்கு வந்தார். கும்பகோணம்- சுவாமிமலை வழியில் உள்ளது இவ்வூர். இங்கு கோடீஸ்வரர் கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலில் அமர்ந்து தியானத்தில் இருப்பார் ஹேரண்டகர். ஆமணக்கு காட்டிலுள்ள கோயிலில் தியானம் செய்த ரிஷியை ஹேரண்டகர் என அழைக்க ஆரம்பித்தனர். இந்தப் பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. அப்போதெல்லாம் காவிரி என்ற நதியே தமிழகத்தில் கிடையாது. தலைக்காவிரியில் பிறந்து, சிறிது துõரமே ஓடி மேற்கு கடலில் கலந்து விட்டதாம்.  அப்போது கும்பகோணத்தை உள்ளடக்கிய பகுதியை ஆண்ட மன்னன் ஒருவன், காவிரியின் பெருமையைப் பற்றி அறிந்தான். பகீரதன் எப்படி ஆகாயத்தில் இருந்த கங்கையை பூமிக்கு பகீரதப் பிரயத்தனம் செய்தானோ, அது போல நாமும் காவிரியை தலைக்காவரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தால் என்ன என்று யோசித்தான்.
தலைக்காவிரிக்கே போய் விட்டார். அங்கே அகத்திய மகரிஷி தவம் செய்து கொண்டிருந்தார்.

ஹே மகரிஷி! தங்களுக்கு தொண்டு செய்வதற்காக வந்திருக்கிறேன். என்னைச் சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள், என்றான். அகத்தியர்  அவனை சீடனாக ஏற்றார். எல்லா வேலைகளையும் விழுந்து விழுந்து செய்தான் மன்னன். நாட்டு மக்கள் நன்மை பெற வேண்டுமானால், அரசப் பொறுப்பில் இருப்பவர்கள் தன் அந்தஸ்து, புகழ், கவுரவத்தை எல்லாம் பார்க்கக்கூடாது. காரியமாகும் வழியை பார்க்க வேண்டும். அதைத்தான் மன்னன் செய்தான். அகத்திய மகரிஷி ரொம்பவே குளிர்ந்து போனார். அவனது சேவையைப் பாராட்டினார். ஒருநாள் அவர் மிகவும் மகிழ்ந்திருந்த வேளையில், சுவாமி! நான் தங்களிடம் ஒன்று கேட்கலாமா? மன்னன் சமயம் பார்த்து கோரிக்கையைச் வைத்தான்.  சொல்லப்பா? மகரிஷி! தாங்கள் உருவாக்கிய இந்த அழகிய காவிரியை எங்கள் ஊருக்கும் அனுப்புங்கள். எங்கள் மக்கள் விவசாயம் செய்து பிழைத்துக் கொள்வார்கள். சுவையான இந்த தண்ணீரை குடித்து மகிழ்வார்கள். தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பதை விட இவ்வுலகில் சிறந்த புண்ணியம் ஏதுமில்லையே, தாங்கள் உதவுவீர்களா? அகத்தியருக்கு என்ன செய்வதென புரியவில்லை. சீடனே! என்னால் நீ கேட்பதை தரவும் முடியவில்லை. தராமல் இருக்கவும் முடியவில்லை. இதோ, இங்கே ஓடுகிறாளே காவிரி, இங்கே ஓடும் காவிரி தேவதா அம்சமான  லோபமுத்திரா. ஒரு பிறவியில் என் மனைவியாக இருந்தவள். என் மீது கொண்ட பாசத்தால், என் கமண்டலத்துக்குள் தீர்த்தமாக அடங்கிக் கிடந்தாள். விநாயகப் பெருமான் “அதைத் தட்டி விட்டதால், காவிரி என்னும் நதியாக உருவெடுத்தாள். என்னைப் பிரிய மனமின்றி, குறுகிய துõரத்துக்குள் ஓடிக் கொண்டிருக்கிறாள். நீயோ தஞ்சை மண்ணில் பிறந்தவன். உன் ஊர் நீண்ட துõரத்தில் உள்ளதே. சரி...மக்களுக்காக அவளைத் தியாகம் செய்கிறேன். அவளை கூட்டிச் செல், என்றார்.

மன்னன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  அவளை கொங்கு நாடு, திருச்சி வழியாக தஞ்சைக்கு அழைத்து வந்தான் மன்னன். கும்பகோணம் வரை வந்த காவிரிக்கு எங்கு சென்று கடலில் கலப்பதென தெரியவில்லை. ஏனெனில் கும்பகோணம் பக்கம் கடலே இல்லை. வேறு வழியின்றி காவிரித் தாய் ஒரு துவாரம் ஏற்படுத்தி அதில் மறைந்து விட்டாள். மன்னனுக்கு வருத்தம். ஐயோ!  காவிரி இந்த கும்பகோணத்தோடு நின்று விட்டாளே! என் நாடு இன்னும் ஐம்பது மைல் நீளமிருக்கிறதே! இவளை எப்படி துவாரத்திலிருந்து வெளியே வரவழைப்பது. இன்னும் 50மைல் போக வைக்க வேண்டுமே, என கலங்க ஆரம்பித்தார். கொட்டையூரில் ஹேரண்டக மகரிஷி என்பவர் தவம் இருப்பதாகவும், அவரிடம் கேட்டால் இதற்கான வழி சொல்வார் என்றும் சொன்னார் அøமைச்சர் ஒருவர்.   மன்னன் ஓடினான். மகரிஷியின் காலில் விழுந்தான். அகத்தியரைச் சந்தித்து காவிரியை தமிழகத்துக்கு அழைத்து வந்தும் தண்ணீர் கடைமடை வரை செல்லவில்லையே என வருத்தப்பட்டான். மகரிஷி சொன்னார். மன்னா! இதைத்தான் பாவத்தின் பலன் என்பார்கள். உலக மக்கள் “தவறு செய்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட இடத்தில் நதிகள் மறைந்து கொள்ளும். இதனால் தான் காவிரி பள்ளத்தில் மறைந்து கொண்டாள்.  இதற்கு ஒரு பரிகாரம் செய்ய வேண்டும். செய்தால், காவிரி வெளியே வருவாள், என்றார். என்ன பரிகாரம் வேண்டுமானாலும் செய்கிறேன் மகரிஷி, சொல்லுங்கள், என்றான் மன்னன். இதையடுத்து அவர் சொன்ன நிபந் தனை அதிர்ச்சி தருவதாக இருந்தது.

மக்கள் பாவம் செய்தாலும் மன்னனைத் தான் அது சேரும். ஏனெனில் குடிமக்களை நல்வழியில் கொண்டு செல்லும் பொறுப்பிலிருந்து தவறியவன் மன்னன்.  எனவே அவன் தான் அனைத்து பாவங்களுக்கும் பொறுப் பாவான். மக்கள் பணியிலிருந்து தவறிய ஆட்சியாளன் தன் உயிரைக் கொடுக்க வேண்டும். அல்லது அவனது அரசாட்சிக்குட்பட்ட பகுதியில்இருக்கும் மாஞானி ஒருவன் தன் உயிரை பலியிட வேண்டும். இந்த இருவரில் ஒருவர் உயிர்த்தியாகம் செய்தால் தான், காவிரி மீண்டும் மேலே வருவாள். இல்லாவிட்டால் இருப்பதைக் கொண்டு திருப்தி அடைய வேண்டியது தான்,.
மகரிஷி சொன்னதைக் கேட்ட மன்னன் சற்றுநேரம் சிந்தித்தான். சுவாமி! தாங்கள் சொல்வதை ஏற்கிறேன். என் மக்கள் பாவம் செய்வதற்கு காரணமாக அமைந்த நான், அதற்கு பிராயச்சித்தமாக என் உயிரை தியாகம் செய்கிறேன். நான் இறப்பதால், என் மக்களுக்கு நன்மை கிடைக்குமென்றால், உடனே சாகிறேன், என்றவனாய், காவிரி மறைந்திருந்த பள்ளத்திற்குள் குதிக்க ஓடினான். ஹேரம்ப மகரிஷி அவனைத் தடுத்தார். மன்னா! நீ வாழ வேண்டியவன். நீ இறந்தால், உன் மக்கள் ஒரு வழிகாட்டி இல்லாமல் தவித்து போவார் கள். ஆனால், உன் எல்லைக்குள் வசிக்கும் துறவியான நான் இறந்தால், யாருக்கும் பாதிப்பில்லை. நான் தனிக்கட்டை. நீயோ குடும்பஸ்தன். எனவே, மக்கள் நலன் கருதி நானே இறக்கிறேன். உயிர்த்தியாகம் செய்வதன் மூலம் பலருக்கு பலன் கிடைக்கிற சந்தோஷம் உலகில் மிகவும் மேலானது, என்றார். எப்படிப்பட்ட தியாகி நமது ஹேரண்டகர் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நம் துன்பங்களையே நம்மால் போக்கிக் கொள்ள இயலாமல் சிரமப்படும் இந்த கால கட்டத்தில், பிறர் துன்பத்திற்காக தங்கள் உயிரையே விடத்துணிந்த தியாகிகள் வாழ்ந்த நாடு இது. அந்த தெய்வப்பிறவிகளால் தான் நம்நாடு இன்றும் உலக அரங்கில் மிகுந்த மரியாதையைப் பெற்றிருக்கிறது.

சொன்னதுடன் நிற்கவில்லை மகரிஷி. அந்த பள்ளத்தில் இறங்கினார். பெரும் சுழலில் சிக்கி காணாமல் போனார்.  சற்று நேரத்தில் மறைந்திருந்த காவிரி பொல பொலவென பொங்கினாள். மீண்டும் ஓடினாள். காவிரிபூம்பட்டினம் வரை ஓடி கடலில் கலந்தாள்.  மகரிஷியை இறைவன் காப்பாற்றி, திருவலம்புரம் என்ற இடத்தில்  வெளியே வரச் செய்தார். தியாகிகளை இறைவன் என்றுமே கைவிடுவதில்லை. பின்னர் மகரிஷி ஹேரண்டகர், கொட்டையூருக்கே திரும்பி, மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார். காவிரித்தாய் தமிழகத்திற்கு வரக் காரணமாக இருந்த இவர்களை நாம் மகாமக காலத்தில்  நினைவு கூர வேண்டும். இப்போதும் காவிரி பிரச்னை இருக்கிறது. அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கும் வகையில், இரு தரப்பாரும் சில பிரச்னைகளில் தியாகம் செய்ய வேண்டும். காவிரியால் பலனடைந்து, கோயில் குத்தகை பாக்கி செலுத்தாமல் இருப்பவர்கள் உடனே அதை செலுத்தி, காவிரித்தாயின் சாபத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும். இப்படி செய்தால், காவிரி மீண்டும் பொங்கி வருவாள்.


வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Follow Dinamalar :