வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் உயர்ந்து சிறந்து விளங்குகிறது. மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வேன் என்பது திருமால் வாக்கு. இதனால் இவ்விரதம் மகிமை வாய்ந்ததாகிறது. ஆண், பெண் அனைவரும் பின்பற்ற வேண்டிய பெருமைமிக்க விரதமானது வைகுண்ட ஏகாதசி விரதம். பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியை பட்சம் என்கிறோம். கிருஷ்ண பட்சம் (தேய்பிறை), சுக்லபட்சம் (வளர்பிறை) ஆகிய இவற்றின் 11வது நாள் (திதி) வருவது ஏகாதசி.
இதில் மார்கழி வளர்பிறை ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி. பல வகையிலும் நாம் அறிந்தும் அறியாமலும் செய்யும் தீவினைகள், ஏகாதசி விரதம் இருந்தால் அழியும்.. காயத்ரியை காட்டிலும் சிறந்த மந்திரம் இல்லை. தாயை மிஞ்சிய தெய்வம் இல்லை. காசியை விஞ்சிய புண்ணிய தீர்த்தம் இல்லை. ஏகாதசியை விஞ்சிய விரதம் இல்லை என்பர். அந்தளவிற்கு ஏகாதசி மகத்துவம் வாய்ந்தது.