Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கந்தபுராணம் பகுதி-2 கந்தபுராணம் பகுதி-2
முதல் பக்கம் » கந்த புராணம்
கந்தபுராணம் பகுதி-1
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 மே
2012
03:05

முருகன் போற்றி: மூவிரு முகங்கள் போற்றி, முகம்பொழி கருணை போற்றி, ஏவருந்துதிக்க நின்ற ஈராறுதோள் போற்றி காஞ்சி,மாவடி வைகுஞ்செல்வேள் மலரடி போற்றி அன்னான், சேவலும் மயிலும் போற்றி, திருக்கைவேல் போற்றி, போற்றி

பகைவருடைய ஆற்றலை வற்றச் செய்பவன் கந்தன். ஆறு திருமேனிகளும் சேர்ந்து ஓருருவானவன் அவன். அத்தகைய கந்தப்பெருமான் ஆன்மாக்களுக்குப் பற்றுக்கோடாக இருப்பவன். கந்தபுராணத்தை வடமொழி, தென்மொழி என இரு மொழிகளிலும் வல்லவராக இருந்த கச்சியப்ப சிவாச்சாரியார், முருகன் கனவில் தோன்றி ஆணையிட்டபடி தமிழில் இயற்றி காஞ்சி கந்த கோட்டத்தில் அரங்கேற்றினர். வேதங்களை வகுத்து அருளிய வியாச மாமுனிவர் பதினெண் புராணங்களை வடமொழியில் இயற்றி அருளினார். அவற்றுள் சிவபுராணங்கள் பத்து, விஷ்ணு புராணங்கள் நான்கு, பிரம்ம புராணங்கள் இரண்டு, அக்னி புராணம் ஒன்று, பிரமகைவர்த்தம் என்னும் சூரிய புராணம் ஒன்று.

சிவபுராணங்கள் பத்தும் சாத்துவிகங்கள். விஷ்ணு புராணங்கள் தாமசங்கள். பிரம புராணங்கள் இரண்டும் இராசசங்களாகும். அக்கினி புராணமும், சூரிய புராணமும் முக்குணச்சேர்க்கை கொண்டவை என்பர். கந்த புராணம் புராணநாயகம் எனப்படுகிறது. இது முதல்வன் புராணம் என்றும் வழங்கப்படும். 18 புராணங்களில் இப்புராணத்தில் தான் 1,81,000 ஸ்லோகங்கள் உள்ளன. இப்புராணத்தில் ஞான வாசனை வீசுகின்றது. இதில் வரும் சூரபன்மன்-ஆணவ மலம்; சிங்கமுகன் கன்ம மலம், தாரகன்-மாயா மலம். கந்தன் திருக்கைவேல்-ஞானம் ஆகும். ஞானப் பண்டிதனாகிய கந்தவேள் மும்மலங்களை அறுத்து ஆன்மாக்களாகிய தேவர்களைப் பந்தத்தினின்றும் விடுவித்தார் என்பதே இப்புராணத்தின் உட்பொருள். முருகப்பெருமான் அசரீரியாக திகட சக்கரம் என்று அடி எடுத்துக் கொடுக்க, கச்சியப்பர் அதனை வைத்தே விநாயகர் காப்பு எழுதி நூலைத் தொடங்கியுள்ளார். அதில் ஓர் இலக்கணப் பிழை கண்ட புலவர் முன், முருகனே புலவர் வடிவில் தோன்றி அதற்கான விளக்கத்தை வீரசோழியம் என்ற இலக்கண நூலின் அடிப்படையில் விளக்கி மறைந்தார்.

1. புராணத்தோற்றம்

எல்லாம் அறிந்த பரமேசுவரன் கூற்றுப்படி திருமால் தனது ஒரு கலையினால் பிரம்மனின் வம்சத்தைச் சார்ந்த பராசர முனிவர்க்கும் மச்சகந்தி என்ற பெண்ணிற்கும் கங்கை ஆற்றின் நடுவில் தோன்றி வாத நாராயணன் என்ற பெயரில் வதருக வனத்தில் இருந்தபோது, எம்பிரான் ஆணையால் வேதங்களை நான்காகப் பிரித்து அதன் மூலம் வேத வியாசர் எனப்பெயர் பெற்றார். அவர் ரிக் வேதத்தைப் பைல முனிவர்க்கும், யஜுர் வேதத்தை வைசம்பாயனர்க்கும், சாம வேதத்தை ஜைமினீ முனிவர்க்கும், அதர்வண வேதத்தை சுமந்து முனிவருக்கும் உபதேசித்தார். அவர் தான் இயற்றிய பதினெண் புராணங்களையும் தன் மகன் சுகப்பிரம்மத்திற்கும் மற்ற சீடர்களுக்கும் போதித்தார்.

நைமிசாரணியத்தில் சனகாதி முனிவர்கள் சத்ர யாகம் புரிந்து வந்தனர். அங்கு சூதமுனிவர் வந்தடைந்தார். வியாசரின் சீடரான அவரிடம் முனிவர்கள் புராண கதைகளை விவரிக்க வேண்டினர். சூதரும் அவர்களுக்குக் கூற ஆரம்பித்தார். கந்தபுராணமும் அவற்றில் ஒன்று. கந்தபுராணத்தில் கீழ்க்கண்டவாறு ஆறு சங்கிதைகள் உள்ளன. 1. சனற்குமார சங்கிதை, 2. சூத சங்கிதை, 3. பிரம சங்கிதை, 4. விஷ்ணு சங்கிதை, 5. சங்கர சங்கிதை, 6. ஆர சங்கிதை ஆகும். அவற்றுள் சங்கர சங்கிதை 7 காண்டங்களை உடையது. அவை 1. சம்பவ காண்டம், 2. அசுர காண்டம், 3. மகேந்திர காண்டம், 4. யுத்த காண்டம், 5. தேவ காண்டம், 6. தட்ச காண்டம், 7. உபதேச காண்டம் என்பவை அவை. இவற்றுள் முதல் ஆறு காண்டங்கள் காசியப சிவாசாரியாரின் கந்த புராணத்தில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு காண்டமும் பல படலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழில் மூன்று புராணங்கள் சிவபெருமானின் மூன்று கண்களாகக் கருதப்பட்டு வருகின்றன. திருத்தொண்டர் புராணம் (வலது கண்ணாகவும்) திருவிளையாடற்புராணம் (இடது கண்ணாகவும்) கந்த புராணம், (நெற்றிக் கண்ணாகவும்) கருதப்படுகின்றன. இந்தக் கந்தபுராணம் இலங்கையில் அதிகமாகப் பயிலப்பட்டு வருகிறதாக தமிழறிந்த பெரியோர்களால் கூறப்படுகிறது.

2. பார்வதியின் தோற்றமும் தவமும்

ஒருநாள் திருக்கைலாயத்தில் எம்பெருமான் இடபாகத்தில் அமர்ந்திருந்த அம்பிகை திடீரென அவரது அணையிலிருந்து இறங்கி அவரை வணங்கிக் கீழ்கண்டவாறு கூறினாள் : தான் முன்பு ஒருகால் தக்ஷனின் மகளாகத் தோன்றி வளர்ந்து வருகையில் தக்ஷன் அம்பிகையைப் பரமனுக்குத் திருமணம் செய்து வைத்ததையும், ஆனால் தக்ஷன் தான் செய்த வேள்வியில் சிவபெருமானுக்கு அவிர்ப்பாகம் கொடுக்காமலிருந்ததும், மேலும் சிவநிந்தனை செய்ததாலும், வேள்வி வீரபத்திரனால் அழிக்கப்பட்டது; தக்ஷனும் அழிந்தான். இதனால் தான் பெற்றிருந்த தாக்ஷõயணி என்ற பெயரைக் குறித்து விசனமுற்று அது நீங்கிட மறுபிறவி எடுப்பதற்காக அருள்புரிய வேண்டினாள்.  இவ்வார்த்தைகளைக் கேட்டு மன மகிழ்வுற்றார் பரமன். (தாக்ஷõயணி என்றால் சிவநிந்தகன் என்று பொருள்) எம்பெருமான் தேவியிடம், இமவான் வேண்டிய வரத்தின்படி நீ அவனுக்குத் திருமகளாகத் தோன்றி ஐந்து ஆண்டுகள் வளர்ந்து தவம் இருப்பாயாக. அப்போது உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று திருவாய் மலர்ந்தருளினார். இமயமலையில் இமவான் அம்பிகை தனக்கு மகளாக வேண்டித் தவம் கொண்டிருந்தான். அங்குள்ள தடாகத்தில் ஆயிரத்தெட்டு இதழ்களுடைய தாமரை மலரில் அம்பிகை குழந்தையாகத் தோன்றினாள். அதுகண்டு வியப்படைந்த இமவான் யாவும் இறைவன் செயல் என்று எண்ணி குழந்தையை எடுத்துத் தன் மனைவியிடம் கொடுக்க, அவளும் தாய்மை அடைந்தவருக்கான அறிகுறிகளுடன் குழந்தையை வாரி அணைத்து பார்வதி என்ற பெயரில் வளர்த்து வந்தாள்.

குழந்தைக்கு ஐந்து வயது ஆனவுடன், தாயாகிய மேனையிடம் அம்பிகை தான் சிவபெருமானைக் குறித்து தவம் செய்ய வேண்டுவதாகவும் அதற்கான அனுமதியும் வேண்டினார். மேலும் தந்தையிடம் தன் எண்ணத்தைக் குறிப்பிட்டு வேண்டிட இமவான் அம்பிகை தவம் ஆற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தாள். தாயின் மனம் இதற்கு இடம் கொடுக்காததால் அவள் அம்பிகை தவமிருப்பதை ஏற்காமல் தடுக்க முயற்சித்தாள். இதனால் அம்பிகைக்கு உமா என்ற திருநாமம் ஏற்பட்டது. (தவம் வேண்டாம் என்ற பொருளைத் தரும் உமா என்னும் சொல் மேலும் அந்தச் சொல்லை தேவி பிரணவம் என்றும் கூறுவர்) (குறிப்பு : ஓம் என்ற பிரணவத்தில் அகார, உகார மகாரங்கள் உள்ளது. உமாவில் உகார, மகாரங்கள் முதலினும் அகாரம் இறுதியிலும் உள்ளது. எனவே அது தேவி பிரணவம் எனப்படுகிறது.)

3. காமதகனம்

திருக்கைலாயத்தில் சிவபெருமான் தக்ஷிணாமூர்த்தி கோலத்தில் மோன நிலையில் இருந்து சனகாதி முனிவர்களுக்குச் சின் முத்திரையால் சிவஞானம் அருளினார். சிவபெருமான் மவுன யோகத் தோற்றத்தால் அண்டமனைத்திலும் எல்லா உயிர்களுக்கும் காமம் தோன்றாமல் இயக்கம் தடைபட்டது. சூரபன்மன் என்னும் அரக்கன் சகல வரங்களையும் பெற்று இந்திராதி தேவர்களைக் கொடுமைப்படுத்தி வந்தான். இதனால் மிகவும் வருந்திய தேவராஜன் மேருமலையை அடைந்து சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்ய, ஈசன் அவன் குறையைக் கேட்டு, விரைவில் குமரன் தோன்றி அரக்கர்களை அழித்து உங்களை எல்லாம் காப்பாற்றுவான் என்று கூறி மறைந்தார். சிவபெருமான் மோன நிலையும், அம்பிகையின் தவமும் நடைபெறுவதால் குமரன் விரைவில் தோன்ற ஆவன குறித்து ஆலோசனை செய்து, இறுதியில் மன்மதன் என்னும் காமனை ரதியுடன் அனுப்பி ஈசனின் மோன நிலை நீங்கி, அம்பிகையுடன் சேர்ந்திட, அவர் மனதில் விரகதாபம் ஏற்படுத்த வேண்டினர். அதனால் தனக்கேற்பட உள்ள ஆபத்தைக் கூறி மன்மதன் இசையவில்லை. ஆனால், இறுதியில் பிரம்மனின் சாபத்துக்குப் பயந்து சிவபெருமான் மீது மலர்க்கணை செலுத்த இசைந்தான்.

திருக்கைலாயம் அடைந்தான் மன்மதன். ஏற்கனவே, மன்மதனை அனுமதிக்க வேண்டாம் என்று ஈசன் கூறியிருந்ததால் நந்திதேவர் அவனைத் தடுத்தார். ஆனால், பின்னர் தான் தேவகாரியமாக வந்திருப்பதை உணர்த்திட நந்தி வழி விலகினார். இதற்குள் பிரமாதி தேவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். மன்மதன் ஈசனை அணுகி தனது மணம் மிக்க மலர்க்கணைகள் ஐந்தையும் சிவபெருமான் மீது பிரயோகிக்க, ஈசன் அதனை அறிந்து தனது நெற்றிக்கண்ணைத் திறந்து மன்மதனை எரித்திட அவன் சாம்பலானான். அதுகண்ட தேவர்கள் மேலும் இறைவனைப் பிரார்த்தித்து தங்கள் துயரத்தைக் கூறி முறையிட்டதோடு காமனையும் உயிர்ப்பிக்க வேண்டினர். கருணைக் கடலாகிய சிவபெருமான் இமயமலை சென்று பார்வதியைத் திருமணம் கொள்வதாகக் கூறித் தேவர்களை அனுப்பிவிட்டார். அப்போது காமனை இழந்த அவன் மனைவி ரதிதேவி, தேவர்களுக்காக அவர்கள் ஏவலினால் தனது பதி செய்த தவறை மன்னித்து, உயிர்ப்பித்து அருள வேண்டி பிரார்த்திருக்க, ஈசனும் கவுரி கல்யாணத்தின்போது மன்மதனை அளிப்பதாகக் கூறிட அவளும் இறைவன் கருணையைப் போற்றிச் சென்றாள். பின்னர் சிவபெருமான் சனகாதி முனிவர்களிடம் மோனமே ஞானநிலை, எம்மை மனத்தில் இருத்தி ஒருமையுடன் நினைப்பதே சாந்தி அளிக்கும் என்று கூறி அவர்களுக்கும் விடைகொடுத்து அனுப்பினார்.

4. அம்பிகையின் தவமும், ஐயன் தரிசனமும்

அம்பிகையின் தவத்தைக் கண்டு அருள்புரிய எண்ணிய சிவபெருமான் வயது முதிர்ந்த வேதியர் உருவில் அம்பிகையின் தவச்சாலையை அடைந்தார். அம்பிகையின் தோழியர்கள் அவரைத் தக்க உபசாரங்களுடன் அழைத்துச் சென்று அம்பிகையின் முன் நிறுத்தினார். அம்பாளின் தவக்கோலம் கண்ட ஈசன் அவளிடம் அவன் ஏன் உடலை வாட்டிக் கொள்கிறாள் என்றும், யாரை மணக்க விரும்புகிறாள் என்றும் அந்தப் பாக்கியசாலி யார் என்றும் வினவ, பார்வதியின் தோழிகள் அவள் குறிப்பறிந்து அம்பிகையின் தவத்தின் குறிக்கோளை எடுத்துரைத்தனர். அதுகேட்ட கிழ வேதியர் எள்ளி நகையாடி கீழ்க்கண்டவாறு எடுத்துரைத்தார். சிவபெருமான் உடை தோல், வாகனம் எருது, ஆபரணங்கள் பாம்பு, எலும்பு; தலைமாலை பன்றிக்கொம்பு, உண்கலம் மண்டையோடு, உண்பது நஞ்சு, நடமாடுவது மயானம் என்றெல்லாம் கூறி, பார்வதியை அவ்வெண்ணத்தை விட்டுத் தன்னை மணம் புரிந்து கொள்ளுமாறு கூறினார். மிகவும் சினமுற்ற உமாதேவியார் கிழ வேதியரை அவ்விடம் விட்டு அகலுமாறு ஆத்திரத்துடன் கூற, மேலும் சில வார்த்தைகளால் உமாவிடம் விளையாடிய சிவபெருமான் இறுதியில் ஈசனாகக் காட்சி தந்தார். எம்பெருமான் தரிசனம் கண்ட உமாதேவியார் தன் குற்றத்தை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டிட, சிவபெருமானும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என்று கூறி திருக்கயிலாயம் திரும்பினார். செய்தியறிந்த பார்வதியின் பெற்றோர்கள் மகிழ்ச்சியுற்று அம்பிகையைத் தவச்சாலையிலிருந்து தமது அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர்.

5. பார்வதி பரிணயம்

கைலையை அடைந்த ஈசன் சப்த ரிஷிகளை நினைத்தார். அவர்கள் ஈசனின் எதிரில் வந்து தமக்குரிய ஆணை என்ன? என்று வினவ பரமேசுவரன், பர்வதராஜன் மகள் பார்வதியை மணக்க விரும்புகிறேன். ஆதிபராசக்தியான அவளே இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தியாவாள். அவள் என்னையே கணவனாக அடைய தவம் செய்து வருகிறாள். நீங்கள் உங்கள் பத்தினிகளுடன் சென்று திருமணம் பேசி முடித்து வரவேண்டும். மற்றும் அவளுடைய தாய் மேனையையும் மனப்பூர்வமாக சம்மதிக்கச் செய்வீராக என்று கட்டளை இட்டார். சப்தரிஷிகளும் ஈசனை வலம் வந்து வணங்கிப் புறப்பட்டு இமயத்தை அடைந்தனர். இமவான் இச்செய்தி அறிந்து வெளிப்போந்து அவர்களை வரவேற்று உபசரித்தான். அவர்கள் பர்வதராஜனிடம் உன் மகள் பார்வதியை எம்பெருமானுக்கு மணம் பேச வந்துள்ளோம். என்று தமது விசயத்தின் காரணத்தைக் கூறினார். உடனே இமவான் தனது சம்மதத்தைத் தெரிவித்திட, இமவானின் மனைவி மேனை ஓர் ஐயப்பாட்டை எழுப்பினாள். ஈசன் தாக்ஷõயாணியை மணந்து, பின்னர் மாமனாராகிய தக்ஷனின் தலையை அறுத்து விட்டார். அது குறித்து அச்சப்படுகிறேன் என்றாள்.

முனிவர்களும் தக்க சமாதானம் தந்தனர். ஆங்கீரசர் கூறினார் தக்ஷன் தனக்கு ஈசன் அளித்த சகல ஐசுவரியங்களையும், பட்டத்தையும் மறந்து ஈசனை ஒதுக்கி வைத்து, மேலும் பரமனைப் பலவிதமாக ஏசினான். தாட்சாயினியும் வர அனுமதிக்கப்படவில்லை. இந்த அலட்சியமும், கர்வமும் தான் அவன் அழிவிற்குக் காரணம். இருப்பினும் மறுபடியும் அவனை உயிர்ப்பித்தருளினார் என்று கூறிட மேனையும் ஐயம் நீங்கினாள். சம்மதம் அளித்தாள். சப்த ரிஷிகளும் மனம் மகிழ்ந்தனர். இமவானையும், மேனையையும் ஆசிர்வதித்து, திருமணத்திற்கான நன்னாளை நிச்சயித்து விடை பெற்றுச் சென்று, கயிலை அடைந்து, எம்பெருமானிடம் நிகழ்ந்ததைக் கூறி தம் இருப்பிடம் சென்றனர். பர்வதராஜன் அம்பிகையின் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யலானான். அப்போது இமவானின் மகன் மைனாகன் தன்னுடைய தந்தையாரிடம் தேவதச்சனான விசுவகர்மாவை வரவழைத்துச் சொன்னால் அவர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடிப்பார் என்று கூறினான். விசுவகர்மாவும் இது கேட்டு மனமகிழ்ந்து எல்லா ஏற்பாடுகளையும் செவ்வனே செய்து முடித்தார்.

பர்வதராஜன் அனைவர்க்கும் மணஓலை அனுப்பி வைத்தான். கைலைக்குச் சென்று, இறைவனைத் தரிசித்து வணங்கி, என் தவப் பெண்ணை தங்களுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன். நாளையே சிறந்த நாள் என்று சப்தரிஷிகள் லக்னம் குறிப்பிட்டுள்ளனர். தேவரீர் தங்கள் பரிவாரங்களுடன் எழுந்தருளி எனது மகளை ஏற்று எங்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்று வேண்டினான். ஈசனும் அவ்வாறே அருள்பாலித்தார். பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இசைந்த பரமேசுவரன் சர்வாபரணங்களையும் அணிந்தவாறு தோன்றினார். பூதகணங்கள் புடைசூழ, மங்கலவாத்தியங்கள் முழங்க, தேவாதி தேவர்களுடன் இமயமலையை வந்தடைந்தார் சிவபெருமான் அழகிய மணமகனாக. அவர் இமவானின் நகரமாகிய ஓஷதி பிரஸ்தத்தில் நகர்வலமாக வந்தபோது ஐயனின் திருமேனி அழகு கண்டு அனைவரும் மயங்கி நின்றனர். சிவபெருமான் மணமகனாக திருமண மண்டபத்தை அடைந்தபோது இமவானின் மனைவி மேனை மகளிர் பலர் சூழ அவரை வணங்கி திருவடிகளைப் பாலால் கழுவி பக்திப் பெருக்குடன் விளங்கினாள்.

பிரம்மனும், திருமாலும் இருபுரம் கரம் தந்திட ஈசன் மண்டபத்தில் பிரவேசித்து சீரிய சிங்காதனத்தில் அமர்ந்தார். எம்பெருமான், அம்பிகை திருமணம் காணப் பெரும்கூட்டம் கூடியதால் இமயம் உள்ள வடபால் கீழே அழுந்தி, தென்திசை உயர ஆரம்பித்தது. அப்போது ஈசன் அகத்தியரை அருகழைத்து தென்திசை சென்று பொதிகையில் தங்கி, அங்கிருந்தவாறே திருமணத்தைக் காணுமாறு அருள்பாலித்தோம் என்று கூறிட, அகத்தியரும் பொதியமலை சென்றடைய பூமி சமமாகியது. பார்வதி தேவியார் திருமகளின் கரத்தைப் பற்றிக்கொண்டு கலைமகள் துதி பாடிட திருமண மண்டபம் அடைந்து சிவபெருமானை வணங்கி நிற்க, ஈசனும் தேவியை ஆசனத்தில் இருக்குமாறு பணித்தார். மணமண்டபத்தில் இவ்வாறு ஈசனும் தேவியும் வீற்றிருக்க, பர்வதராஜன், தன் மனைவி மேனை நீர் வார்த்திட சிவனாரின் திருவடிகளை விளக்கி சந்தனம், மலர் சார்த்தி உபசரித்தான். பின்னர் பார்வதியின் கரத்தை, எம்பிரான் கரத்துள் வைத்து வேத கோஷங்களுடன் தாரை நீர் வார்த்து கன்னிகாதானம் செய்வித்தான். பெண்டிர் எல்லோரும் கவுரி கல்யாணம் வைபோகமே என்று கோஷமிட்டார். மங்கல வாத்தியங்கள் முழங்கின.

அடுத்து இமவான் பால், பழம் போன்ற பலவற்றை ஈசனுக்கு அமுதெனப் படைக்க, இறைவன் நன்று எனக்கூறி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அவற்றை எடுத்துக்கொள்ளுமாறு இமவானைப் பணித்தார். அடுத்து திருமண நிகழ்ச்சிகள் யாவும் முறைப்படி நடந்தேற எல்லோரும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர். அதுவே தக்க தருணம் என்று ரதிதேவி சிவபெருமானிடம் தனது கணவரைத் தனக்கு அருள வேண்டும் என்று பிரார்த்தித்தாள். எம்பெருமானும் கருணை கொண்டு மன்மதனை மன்னித்து ரதிதேவியின் வேண்டுகோளின்படி உனக்கு உயிர் பிச்சை அருளினோம். ஆனால் நீ அவளுக்கு கணவனாக, அவளுக்கு மட்டும் உருவம் கொண்டு விளங்குவாய். மற்றவர்களுக்கு நீ உரு வெளிப்படாமல் அதாவது அனங்கனாக இருப்பாய். உன் ஆட்சி இனி வழக்கம் போல் தொடரும் என்று அருளினார். கல்யாணத்துக்கு வந்திருந்தோருக்கு விருந்தளித்து, தக்க சன்மானங்கள் தந்திட்டான் இமவான். அனைவரும் பார்வதி, பரமேசுவரர்களிடமும், இமவான் மேனையிடமும் விடைபெற்றுத் தம் இருப்பிடம் சென்றனர். சிவபெருமானும் பார்வதி தேவியுடன் ரிஷபம் ஏறி திருக்கைலாயம் அடைந்தார்.

அசுரர்கள் தோற்றம்: இதனை அடுத்து சிவன் பார்வதி திருமணத்திற்கு வந்திருந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் அவர்களது இருப்பிடமான தேவலோகம் சென்றனர். இதனையெல்லாம் பார்த்து கொண்டிருந்த அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். இந்த அசுரர் குலத்தை என்ன முயற்சி செய்தாலும், தேவர்களின் புகழ் நிலைக்கு உயர்த்த முடியவில்லை. ஆனால், இப்போது அசுரர்களுக்கு நேரம் நன்றாக இருக்கிறது. தட்சனின் யாகத்தில், சிவன் பங்கேற்காத போது, அவரது அனுமதியின்றி, யாகத்தில் கலந்து கொண்ட தேவர்களை சிவனின் காவலரான நந்திதேவர் கண்டித்திருப்பதுடன் அவர்களின் சக்தியையும் இழக்கச் செய்திருக்கிறார். தேவர்கள் சக்தி இழந்துள்ள இந்த நல்ல சமயத்தில், அசுரர்களை வெற்றிக் கொடி நாட்டச் செய்யலாம். தட்சனின் மகளும், சிவனின் பத்தினியுமான தாட்சாயணி, தன் தந்தையை அசுரனாகும்படி சபித்திருக்கிறாள். அந்த தட்சனை இப்பிறவியில் நம் குடும்பத்தில் ஒருவனாக்கி விட்டால், இதைச் சாதித்து விடலாம். இந்த சிந்தனை ஓட்டத்தை செயல்வடிவாக்க எண்ணினார் சுக்ராச்சாரியார். பிரம்மாவின் புத்திரரான காஷ்யபருக்கும், அவரது தர்மபத்தனி அதிதிக்கும் பிறந்த அசுரக்குழந்தைகளை 66கோடி பேரின் எதிர்காலம் சிறப்பாக இருக்க அவர் திட்டமிட்டார்.

திட்டத்தைச் செயல்படுத்த அசுரக்குழந்தைகளில் முதலாமவன் அசுரேந்திரன் - மங்களகேசினி தம்பதியரின் புதல்வி சுரஸையைத் தேர்ந்தெடுத்தார். இவள் சுக்கிராச்சாரியாருக்கு முகமலர்ச்சியுடன் பணி விடை செய்து வந்தவள். அவளுக்கு பல கலைகளைக் கற்றுக் கொடுத்து, பெயரையும் மாயா என மாற்றிவிட்டார்.
அவளிடம், மாயா ! நம் குலம் தழைத்தோங்க வேண்டும் என்பது உன் தந்தை அசுரேந்திரனின் விருப்பம். அவர்கள் தேவர்களால் தொடர்ந்து அழிக்கப்படுகிறார்கள். இந்த அழிவைத்தடுக்க உன்னால் தான் இயலும். நாம் தேவர்களை அடக்கி, நமது சாம்ராஜ்யத்தை ஈரேழு உலகிலும் நிலைநாட்ட வேண்டும். அது உன்னால் முடியும் என்றார். வியப்படைந்த மாயாவிடம், தன் திட்டத்தையும் விளக்கினார். குருநாதரின் கட்டளையை ஏற்ற மாயா, தன் தந்தை அசுரேந்திரனிடம் இதுபற்றி சொல்ல, அவனும் அகமகிழ்ந்து, மகளை வாழ்த்தி அனுப்பினான். சுக்ராச்சாரியாரின் திட்டம் இதுதான். அசுரர்களின் தந்தையான காஷ்யபரை மாயா மயக்க வேண்டும். இன்னும் மிகச்சிறந்த அசுரர்கள் பலரை அவர் மூலமாக பெற வேண்டும் என்பதே அவரது திட்டம். மாயாவும் காஷ்யபர் இருந்த கானகத்திற்கு சென்றாள். தன் மாயசக்தியால், புதிய மாளிகைகளை அந்த கானகத்தில் எழுப்பினாள். அழகிய நந்தவனத்தை உருவாக்கினாள். மணம் பொங்கும் மலர்கள் அதில் பூத்தன. அந்த கானகத்தின் ஒருபகுதி அடையாளம் தெரியாமல் போனது. அந்த மாளிகையிலேயே தங்கியிருந்தாள் மாயா.

அவள் எதிர்பார்த்தபடியே, காஷ்யபர் அங்கு வந்தார். இந்த இடம் எப்படி இவ்வளவு அழகாக மாறியது. விஷ்ணு இங்கு வந்திருப்பாரோ ? அந்த மாயவன் தான் இப்படி மாயச்செயல்கள் செய்திருப்பானோ ? பிரம்மா தன் பிரம்மலோகத்தை இந்த பூமிக்கு மாற்றி விட்டாரோ ? என்று மனதில் கேள்விகள் எழ, ஆச்சரியத்துடன் மாளிகைக்குள் பார்த்தார். அங்கே ஒரு அழகுசுந்தரி நடமாடிக் கொண்டிருந்தாள். பூக்களில் அமரும் பட்டாம்பூச்சிகளை அவளது பட்டுக்கரங்களின் பிஞ்சு விரல்கள் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தன. அவள் மான்போல் துள்ளித்துள்ளி, விளையாடுவதைக் கண்ட காஷ்யபர், ஆஹா... உலகில் இப்படி ஒரு அழகியா ? இவளைப் போன்ற பேரழகியை இதுவரை பார்த்ததில்லை, இனிமேலும் காண்போமா என்பது சந்தேகம் தான். இனி இப்பூமியில் ஒருநாள் வாழ்ந்தால் கூட போதும். ஆனால், இவளோடு வாழ்ந்து விட வேண்டும், என எண்ணியவராய் மாளிகைக்குள் சென்றாள்.

அழகுப்பெண்ணே ! நீ யார் ? இந்த கானகத்தில் உனக்கென்ன வேலை ? இந்த மாளிகையை எப்படி உருவாக்கினாய் ? உன் அங்கங்கள் என் மனதைக் குலைக்கிறதே ! ஏற்கனவே திருமணமானவன். தவசீலன். அப்படியிருந்தும் என் மனம் உன்னைக் கண்டு அலை பாய்கிறதே, என்று புலம்ப ஆரம்பித்து விட்டார். அவள் காஷ்யபரிடம் நல்லவள் போல் நடித்தாள். தவசீலரே ! இந்த மலைப்பகுதியில் நீண்டகாலமாக வசிப்பவள். எனக்கு இந்த மாளிகைகள் எப்படி வந்தன எனத் தெரியாது. ஆனால், யாரும் இல்லாததால், இங்கே புகுந்தேன். வேண்டுமானால், இந்த மாளிகையை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் முனிவராக இருந்தும், என் அழகை வர்ணிப்பதில் நியாயமில்லை. நான் இளங்கன்னி. நீங்களோ முதியவர். வயதிற்காவது மரியாதை கொடுங்கள் சுவாமி ! என்றவளை காஷ்யபர் மீண்டும் வற்புறுத்தினார். அவள் மாயா அல்லவா ? அங்கிருந்து மறைந்து விட்டாள். காஷ்யபர் அடைந்த துன்பத்துக்கு அளவே இல்லை. அழகே ! எங்கே போனாய். நீ இல்லாமல் எனக்கு இனி வாழ்வில்லை. எங்கு மறைந்திருந்தாலும் வந்துவிடு. என்னை ஏற்றுக்கொள். நீ என்ன சொன்னாலும் கட்டுப்படுகிறேன், என நாள்கணக்கில் புலம்பிக் கொண்டு, அங்கேயே பசி பட்டினியுடன் கிடந்தார். மன்மதனின் வலைக்குள் சிக்கிய பிறகு தவசீலனாயின் என்ன ! சாதாரண மனிதனாயின் என்ன ! எல்லாரும் ஒன்றும் தான். காஷ்யபர் மயக்க நிலையில் கிடந்தார். அப்போது அவர் முன் மீண்டும் தோன்றினாள் அப்பெண். காஷ்யபர் அடைந்த ஆனந்தத்துக்கு அளவில்லை. அவர் பரவசத்துடன் அவளை நோக்கி ஓடினார். தான் ஒரு முனிவர் என்பதையும், பிரம்மாவின் புதல்வன் என்பதையும் மறந்து அவளது காலிலேயே விழுந்து விட்டார். தன் காலில் கிடந்த காஷ்யபரை நோக்கி புன்முறுவல் பூத்தாள் மாயா.

முனிவரே ! தாங்கள் என் காலிலேயே சரணடைந்து விட்டதால், உமது ஆசைக்கு இணங்குகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை, நான் பேரழகி. உம்மைப் போன்ற கிழவருடன் உறவு கொள்வதை என் மனம் ஏற்காது. எனவே, உம் தவ வலிமையால் நீர் இளைஞனாக மாறும் பிற உருவங்களை எடுத்துக் கொள்ளும் நானும் பல உருவங்களை எடுக்கும் சக்தி படைத்தவள். அதற்கேற்ப நீரும் மாறிக் கொள்ள வேண்டும், என்றாள். காஷ்யபர் அதற்கும், சம்மதித்து, பேரழகு மிக்க இளைஞனாக வடிவெடுத்தார். அந்த சுந்தர அழகன் மாயாவை அடைந்தான். அந்த முதல் இரவிலேயே அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் தாமரை போன்ற மலர்ந்த முகம் உடையவனாக இருந்ததால், பத்மாசுரன் என பெரியரிட்டனர். பத்மம் என்றால் தாமரை எனப் பொருள். இவனே சூரபத்மன் என்றும் அழைக்கப்பட்டான். அவர்கள் கூடிக்களித்த போது ஏற்பட்ட வியர்வையில் இருந்து மேலும் முப்பதாயிரம் அசுரர்கள் வெளிப்பட்டனர். இரண்டாம் ஜாமத்தில் இருவரும் இளஞ்சிங்கங்களாக உருமாறி கூடிக்களித்தனர். அப்போது, ஆயிரம் முகம் கொண்டவனும், இரண்டாயிரம் கைகள் உள்ளவனுமான ஒரு மகன் பிறந்தான். இவனது பெயரே சிங்கமுகன் அப்போது ஏற்பட்ட வியர்வையில் இருந்து நாற்பதாயிரம் சிங்கமுக அசுரர்கள் உற்பத்தியானார்கள். மூன்றாம் ஜாமத்தில் யானையாக அவர்கள் வடிவெடுத்து களித்திருந்த போது, யானை முகம் கொண்ட தாரகாசுரனும், அவனோடு நாற்பதாயிரம் யானை முக சூரர்களும் பிறந்தனர். நான்காம் ஜாமத்தில் ஆடுகளாக மாறி கூடினர். அப்போது ஆட்டு முகம் கொண்ட அஜாமுகி என்ற மகள் பிறந்தாள். அவளோடு ஆட்டுமுகம் கொண்ட முப்பதாயிரம் அசுரர்கள் உருவாயினர்.

மறுநாள் பகலிலும் காஷ்யபரின் ஆசைக்கடல் வற்றவில்லை. அவர்கள் காட்டெருமை, பன்றி, கரடி, புலி, குதிரை, மான், காண்டாமிருகம், கழுதை என பல மிருகங்களின் வடிவை அடைந்து கூடி, மொத்தத்தில் இரண்டுலட்சம் பேரை பெற்றெடுத்து விட்டனர். இவர்கள் யாரும் குழந்தை வடிவினராகப் பிறக்கவில்லை. காஷ்யபரின் நவசக்தி, மாயாவின் மாயாஜாலம் ஆகியவற்றால் இளைஞர்களாக பிறந்தனர். இவர்களின் முதல் மகனான சூரபத்மன் பெற்றோர் முன்வந்து வணங்கினான். தாயே தந்தையாரே ! லட்சக்கணக்கில் சகோதரர்கள் எனக்கு இருக்கிறார்கள். நாங்கள் ஏன் பிறந்தோம் ? எங்களால் உங்களுக்கு ஆக வேண்டியதென்ன ? சொல்லுங்கள். தங்கள் கட்டளைக்கு காத்திருக்கிறோம், என்றான். காஷ்யபர் தன் மக்களுக்கு நல்லுபதேசம் செய்தார். மக்களே ! இவ்வுலகில் தர்மமே என்றும் வெல்லும். நீங்கள் தர்மத்தின் வயப்பட்டு இருங்கள். தர்ம காரியங்கள் பல செய்யுங்கள். சிவபெருமானைக் குறித்து நீங்கள் தவம் செய்யுங்கள். ஆன்மிக சாதனைகளே உங்களுக்கு நிரந்தர இன்பம் தருபவை. குத்ஸர் என்ற முனிவர் இறந்த ஒருத்தியைக் கூட தன் தவ வலிமை மூலம் பிழைக்க வைத்தார். மிருகண்டு முனிவரின் புதல்வன் மார்க்கண்டேயன். சிவனின் திருவருளால் எமனையே வென்று என்றுமே இளைஞனாக இருக்க வரம் பெற்றான். சிவன் தான் இவ்வுலகமே. அவரை வணங்கி தர்மத்தை நிலை நாட்டுங்கள். இதன் மூலம் என்றும் அழியா தேவலோக வாழ்வைப் பெறலாம் என்றார். இப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவர் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி விட்டார். தன் மக்களை தாய் மாயா அழைத்தாள்.

என் அன்புக் குழந்தைகளே ! பெற்ற தாய் சொல்வதைக் கேட்பதே பிள்ளைகளுக்கு அழகு. உங்கள தந்தை சொல்வதில் கருத்தும் இல்லை, இன்பமும் இல்லை, சாரமும் இல்லை. இதற்காகவா நான் உங்களைப் பெற்றேன். அவர் சொல்லும் வாழ்க்கை துறவறம் போல் அமையும். முனிவர்களுக்கும், யோகிகளுக்குமே அது பொருந்தும். என் ஆசை அதுவல்ல. நீங்கள் இந்த ஜகத்தையே வெல்ல வேண்டும். எல்லா லோகங்களும் உங்கள் கட்டுப்பாட்டில் வர வேண்டும். தேவலோகமும் உங்களுக்கு அடங்கியதாக இருக்க வேண்டும். தேவர்கள் உங்களுக்கு பணியாளர்களாக இருக்க வேண்டும். ஆனால், இதை அடைவது எளிதல்ல. பரமேஸ்வரனே இந்த தகுதியை உங்களுக்குத் தர முடியும். ஆனால், அவரை வரவழைப்பது அவ்வளவு எளிதல்ல. நீங்கள் வீரத்தையும், தீரத்தையும் பெற பிரமாண்ட யாகம் செய்ய வேண்டும். வடக்கே வடத்வீபம் என்ற இடம் இருக்கிறது. அது யாகம் செய்வதற்கு ஏற்ற இடம். அங்கே செல்லுங்கள். யாகத்தை துவங்குங்கள். யாகத்திற்கு தேவையான பொருட்களை யாகம் துவங்கும் வேளையில், நானே கொண்டு வந்து தருவேன், என்றாள். தாயின் மொழி கேட்டு சூரர்கள் ஆர்ப்பரித்தனர். அன்னையை வாழ்த்தினர். அவளிடம் விடை பெற்று வடத்வீபம் புறப்பட்டனர். கண்விழித்த காஷ்யபர், அங்கு தன் மக்கள் இல்லாதது கண்டு மாயாவிடம் காரணம் கேட்டார்.

தவசீலரே ! அவர்கள் மட்டுமல்ல, நானும் இப்போதே புறப்படுகிறேன். நான் அசுரகுரு சுக்ராச்சாரியாரால் அனுப்பப்பட்டவள். எங்கள் அசுரகுலத்தை தழைக்க வைக்க, வேண்டுமென்றே உம்மை மயக்கி கூடினேன். அதையறியாத நீரும் என்னோடு மகிழ்ந்து இரண்டு லட்சம் அசுரர்களை உருவாக்கினீர். என் பணி முடிந்தது. நானும் செல்கிறேன், என்றவள் மாயமாய் மறைந்து விட்டாள். அவள் மட்டுமல்ல ! அவள் எழுப்பிய மாட, மாளிகை, கூட கோபுரங்களும் மறைந்தன. காஷ்யபர் தான் செய்த தவறை நினைத்து அழுதார். அப்போது அவரது முதுகை வருடிக் கொடுத்து, காஷ்யபா, என் அன்பு மகனே, என அழைத்தது ஒரு குரல். அந்த அன்பான வருடலில் ஆறுதல் பெற்று திரும்பினார் காஷ்யபர். அங்கே அவரது தந்தை பிரம்மா நின்று கொண்டிருந்தார்.

சூரபதுமன், சிங்கமுகன், தாரகாசூரன்-மூவர் தவமும், சிவபெருமான் அளித்த வரமும்: காஷ்யபா ! இதென்ன கோலம் ? மன்மதனின் இலக்குக்கு தப்பியவர்கள் யாருமுண்டோ? நீயும் அவ்வாறே சிக்கினாய். நடந்ததைப் பற்றி கவலைப்படுவதில் என்றுமே பயனில்லை. இனி நடக்க வேண்டியதைக் கேள். இந்த தந்தையின் சொல்லை மதித்து நட. நீ காமவயப்பட்டு உலகத்திற்கே கேடு இழைத்து விட்டாய். உன்னால் அசுரகுலம் தழைத்து விட்டது. இந்தப் பாவத்தைப் போக்க சிவபெருமானால் தான் முடியும். இந்த பாவ விமோசனத்திற்காக, அவரைக் குறித்து கடும் தவம் செய், புறப்படு, என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். காஷ்யபரும் ஒருவாறாக தன்னைத் தேற்றிக் கொண்டு தன்னுடைய ஆஸ்ரமத்திற்கு போய் விட்டார். மாயையால் தூண்டிவிடப்பட்ட பத்மாசுரன் உள்ளிட்ட இரண்டு லட்சம் அரக்கர்களும் ஆராவாரக்குரல் எழுப்பியபடி, அன்னை குறிப்பிட்ட இடத்திற்கு சென்று கொண்டிருந்தனர். எதிரே சுக்ராச்சாரியார் வந்து கொண்டிருந்தார். அசுரர்களின் குருவாயினும் கூட, இப்படி சிங்கம், ஆடு, யானைத் தலைகளைக் கொண்ட அசுரர்களை அவர் இதற்கு முன் பார்த்ததே இல்லை. இவ்வளவு கொடூரமான குரல்களையும் கேட்டதில்லை. அவரே சற்று ஆடிப்போய் விலகி நின்றார். அப்போது, பத்மாசுரன், அவரிடம், நீர் யார் ? எங்களைக் கண்டு ஏன் ஒதுங்கி நின்றீர் ? என்றான் உறுமல் குரலுடன்.

சுக்ராச்சாரியார் நடுங்கியபடியே, அடேய்! நீங்கள் யார் ? அசுர சிங்கங்களா ? என்றார். ஆம்... நாங்கள் அசுரர்கள் தான். ஏன் எங்களைப் பற்றி விசாரித்தீர் ? என்ற சூரபத்மனிடம், பிழைத்தேன், நான் அடேய் ! சீடர்களே! நான் தான் உங்கள் குலத்திற்கே குரு அசுரேந்திரனின் மகள் மாயாவின் பிள்ளைகள் தானே நீங்கள் ? என்றார் சந்தேகத்துடன். பத்மாசுரன் ஆம் என்றான். குருவே ! தங்களைக் கண்டது எங்கள் பாக்கியம். எங்களை ஆசிர்வதியுங்கள் என்றான். இரண்டு லட்சம் சூராதி சூரர்களும் அசுர குருவிடம் ஆசிபெற்றனர். பின்னர் சில மந்திரங்களை சூரபத்மனுக்கு உபதேசித்தார். அவை அவர்களுக்கு பலமளிக்கும் மந்திரங்கள் பின்னர், அவர்களிடம் விடை பெற்று புறப்பட்டார். புதிய சக்தி பெற்ற சூரர்கள் இன்னும் வேகமாக நடந்து, வடத்வீபம் என்ற இடத்தை அடைந்தனர். அங்கே யாகசாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சாதராண யாகசாலையா அது ? பத்தாயிரம் யோஜனை பரப்பில் யாகசாலை அமைக்கப் பட்டது. இக்கால அளவுப்படி ஒரு யோஜனை என்றால் 8 மைல் (12.8 கி.மீ). அதாவது ஒரு லட்சத்து 28 ஆயிரம் கி.மீ பரப்பில் இதை அமைத்திருக்கிறான். யாகசாலையின் நடுவில் ஆயிரம் யோஜனை சதுரமும் ஆழமும் கொண்ட யாக குண்டத்தை அமைத்தான். அதைச் சுற்றி இதே அளவில் 108 அக்னி குண்டங்களையும் அதையும் சுற்றி ஓரளவு சிறிய அளவில் 1008 குண்டங்களையும் நிர்மாணித்தார்.

இப்பணி முடியுவும் இவர்களின் தாய் மாயா யாகத்திற்கு தேவையான பொருட்களைக் கொண்டு வந்தாள். அதில் கற்பூரத்தில் குருந்து எருமைகள், ஆடுகள், லட்சம் பசுக்கள் உள்ளிட்ட அனைத்தும் அடக்கம் இந்த பொருட்கள் இருந்த தூரம் மட்டும் 3 ஆயிரம் யோஜனை பரப்பு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த பொருட்களெல்லாம் அக்னி குண்டத்தில் ஹோமப் பொருட்களாக போடப்பட்டன. யாகம் என்றால் அப்படி ஒரு யாகம்... உண்ணாமல் உறங்காமல் பத்தாயிரம் வருஷங்கள், சிங்கமுகன் 108 குண்டங்களிலும், தாரகாசுரன் 1008 குண்டங்களிலும் யாகத்தை நடத்தினர். அந்த பரமேஸ்வரன் இதற்கெல்லாம் மசியவே இல்லை. பத்தாயிரம் ஆண்டும் கடந்து விட்டது. பத்மாசுரன் எழுந்தான். தன்னைத் தானே வெட்டிக் கொண்டு அந்த ரத்தத்தை அக்னி குண்டத்தில் பொழிந்தான். அதைப் பார்த்த தாரகாசூரனும், சிங்கமுகனும் அவ்வாறே செய்தனர். சிங்கமுகன் ஒரு படி மேலே போய் தன் தலையை அறுத்து குண்டத்தில் போட்டான். தேவர்கள் மகிழ்ந்தார்கள். சிங்கமுகன் தொலைந்தான் என்று. ஆனால், புதுப்புது தலைகள் முளைத்தன. அவற்றைத் தொடர்ந்து வெட்டி அக்னி குண்டத்தில் அவன் போட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். எதற்கும் பரமேஸ்வரன் அசைந்து கொடுக்காதைதைக் கண்டு கோபித்த சூரன், சிவபெருமானே ! என் பக்தி நிஜமானதெண்றால் என்னையே ஏற்றுக் கொள்ளுங்கள் எனக்கூறி, யாக குண்டத்திற்குள்ளேயே குதித்து உயிர்விட்டான். அண்ணனின் துயர முடிவு கண்டு ஏராளமான அசுரர்களும் ஆங்காங்கே இருந்த குண்டங்களில் குதித்தனர். சிங்கமுகன் அக்னி குண்டத்தில் குதிக்கப் போன வேளையில் ஒரு முதியவர் அங்கே வந்தார்.

மக்களே ! நீங்களெல்லாம் யார் ? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? என்றார். சிங்கமுகன் அவரை வணங்கி, தங்களைப் பார்த்தால் அந்த சிவனே வந்து விட்டதாகத் தோன்றுகிறது. முதியவரே ! நாங்கள் காஷ்யபரின் புதல்வர்கள். அசுர சகோதரர்கள் பரமேஸ்வரனிடம் வரங்கள் பெற இங்கே யாகம் நடத்திக் கொண்டிருக்கிறோம். பல்லாண்டுகள் கடந்தும் அவர் வரவில்லை. நானும் சாகப் போகிறேன். என்றான், கவலை வேண்டாம் மகனே ! நீங்கள் நினைத்தது இப்போதே நடக்கப் போகிறது. பரமசிவன் வரும் காலம் நெருங்கி விட்டது, என்றவர் சற்றே தலை குனிந்தார். அவரது தலையில் இருந்து ஒரு நதி பெருக்கெடுத்து ஓடி அத்தனை குண்டங்களில் இருந்த நெருப்பையும் அணைத்தது. அப்போது ஒரு பேரதிசயம் நிகழ்ந்தது. முதியவராய் வந்தவர், வானத்ததில் எழுந்தருள ரிஷப வாகனம் ஓடோடி வந்து அவரைத் தாங்கியது. ஆம்... முதியவராக வந்து கங்கையைச் சிந்தி, யாக குண்டத்தை அணைத்தது சிவபெருமான் தான். அங்கே உமையவளும் வந்து சேர, இருவரும் ரிஷபத்தில் அமர்ந்து அசுரர்களுக்கு காட்சி தந்தனர். அசுரக்குழந்தைகளே என்னைக் குறித்த உங்களது யாகத்தின் மதிப்பு அளவிட முடியாதது. நீங்கள் கேட்கும் வரங்களைத் தர நான் காத்திருக்கிறேன், என்றார் சிவன். அசுரத்தலைவன் பத்மாசுரன் சிவனிடம், கருணைக்கடவுளே ! தங்கள் தரிசனம் கண்டு அகம் மகிழ்ந்தோம். எங்களது பக்தி உண்மையானதென்றால், ஆயிரத்து எட்டு அண்டங்களையும் எங்களுக்குத் தர வேண்டும். அவற்றை நாங்களே அரசாள வேண்டும். மேலும் எங்களுக்கு திருமால், பிரம்மா உள்ளிட்ட எந்த தேவராலும் அழிவு ஏற்படக்கூடாது. தேவர்கள் தங்கள் ஆயுதங்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் எங்களைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும். எல்லா அண்டங்களுக்கும் சென்று வரும் ஆற்றலை தாங்கள் தர வேண்டும், என்றான்.

சிவன் அவன் கேட்டதையெல்லாம் மட்டுமல்ல, கேட்காததையும் கொடுத்தார். சூரபத்மனே ! இந்த அண்டங்களை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். அவற்றை மேற்பார்வை செய்ய இப்போது உன்னிடமிருக்கும் பலம் போதாது. எனவே உன் சகோதரர்களுக்கும், சகல அண்டங்களுக்கு செல்லும் வரம் தருகிறேன். இன்னும் பல கோடி பேர் அடங்கிய நான்கு வகை சேனைகளையும் தருகிறேன். இந்திர விமானம், சிங்க வாகனம், பாசுபதாஸ்திரம் போன்றவற்றையும் தருகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை நீ 108 யுககாலம் தான் ஆட்சி செய்ய முடியும், அதன் இறுதியில் மரணமடைவாய், என்றார். மிக மிக நீண்ட காலம் இந்த பூமியில் வாழப்போவது பற்றி சூரபத்மன் மகிழ்ந்தாலும், தன் மரண எச்சரிக்கையைக் கேட்டு வருந்தி, ஈசனே ! தங்கைளத் தவிர வேறு யாராலும் எங்களுக்கு மரணம் நேரக்கூடாது என்ற தங்கள் வரம் நிலைத்தாலே போதும். இந்த அண்டங்கள் உள்ளளவும் நாங்கள் வாழ்வோம், என்றான் சூரபத்மன். அசுரத்தலைவனே ! என்னாலோ, என் சக்தியாலோ தவிர வேறு எதனாலும் உனக்கு மரணமில்லை, என்றார் சிவன். சூரபத்மன் இது கேட்டு மகிழ்ச்சி கூத்தாடினான். இதற்குள் சிவன் மறைந்து விட்டார். அசுரக்கூட்டம் ஆரவாரத்துடன் சிவனால் தங்களுக்கு அருளப்பட்ட படைகளுடன் கிளம்பியது. கிட்டத்தட்ட ஐம்பது கோடி அசுரர்களுடன் புறப்பட்ட அப்படை நேராக காஷ்யபரிடம் சென்றது.

தந்தையே ! நாங்கள் பல்லாண்டுகளாக தவமிருந்து 1008 அண்டங்களையும் ஆளும் சக்தியைப் சிவபெருமான் மூலம் பெற்றோம். இனி தங்கள் வழிகாட்டுதல் படி நடப்போம் என்றான் சூரபத்மன். நல்ல பிள்ளைகளைப் பெற்றவர்களைப் பற்றி பெற்றவர்கள் பெருமைப்படுவார்கள் இங்கோ அரக்கி மீது ஆசைப்பட்டு, அசுரப் பிள்ளைகளைப் பெற்ற இந்த தந்தையோ மனம் வருந்தினார். சிவனாரே வரம் கொடுத்த பிள்ளைகளை தன்னால் எப்படி கட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணத்துடன் மகனே ! நீ இந்த வீரர்களுடன் குலகுரு சுக்ராச்சாரியாரை போய்ப்பார். அவரது வழிகாட்டுதல் படி நடந்து கொள் என்று சொல்லி அனுப்பி விட்டார். அனைவரும் சுக்ராச்சாரியாரைச் சென்று சந்தித்தனர். சுக்கிராச்சாரியார் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. என் அன்பு சீடர்களே ! இந்த உலகம் சிவனுக்கு கட்டுப்பட்டது. உலகில் வாழும் ஒவ்வொரு ஜீவனும், பாவம் செய்தாலும், புண்ணியம் செய்தாலும் இறுதியில் பரமாத்மாவான அந்த சிவனின் உடலில் தான் கலக்கிறது. எனவே, பாவ, புண்ணியம் பற்றி நீங்கள் யாரும் கவலைப்படக்கூடாது. உங்களைக் கண்டு எல்லாரும் நடுங்க வேண்டும். அப்படியானால் தான் அசுர ராஜ்யம் பல்லாண்டு வாழும், நீங்கள் அந்த சிவனை மறக்காமல் தினமும் பூஜிக்க வேண்டும். அதே நேரம் எல்லா லோக அதிபதிகளையும் ஓடஓட விரட்டி அண்டங்களை உங்கள் பிடிக்குள் கொண்டு வர வேண்டும்.கொலை செய்யுங்கள்; தேவப் பெண்ணிடம் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளுங்கள். கொள்ளையடியுங்கள்; போரிடுங்கள்; இப்படி செய்ய உங்களுக்கு சிவனே அதிகாரம் கொடுத்திருக்கிறார். அண்டமெல்லாம் உங்களுக்கு என வாக்களித்த பிறகு யாரோ ஒருவன் அதில் இருந்து ஆள என்ன தகுதி இருக்கிறது ? இவற்றைச் செய்யத் தயங்கினால், உங்களை எவனும் மதிக்கமாட்டான். புறப்படுங்கள் இப்போதே, என்றார். சூரபத்மன் அவரது காலில் விழுந்து பணிந்து புறப்பட்டான். அவர்களின் வாகனம் வித்தியாசமாக இருந்தது.

சூரனின் திக்விஜயம் முடிசூட்டு விழா

சிவனால் சூரபத்மனுக்கு அருளப்பட்ட இந்திர விமானம் பறக்கும் சக்தியுடையது. அதை கோடி குதிரைகள் இழுத்துச் சென்றன. கோடி சூரியன்களின் பிரகாசத்தைக் கொண்டதாக அது விளங்கியது. சிங்கமுகன் ஏறிச் சென்ற தேரை பத்து லட்சம் யானைகள், பத்துலட்சம் குதிரைகள், பல பூதங்கள் இழுத்துச் சென்றன என்றால், அந்த ரதத்தின் வேகத்தைக் கேட்கவா வேண்டும். தாரகாசுரன் பத்தாயிரம் குதிரைகள் பூட்டப் பட்ட மற்றொரு பறக்கும் விமானத்தில் ஏறிச் சென்றான். இதர படையினர் கோவேறு கழுதை, ஒட்டகம், யானை, குதிரை என பல மிருகங்களை வாகனமாக்கி ஏறிச் சென்றனர். இந்த படைகள் பறந்து சென்ற தூரம் மட்டும் மூன்றுகோடி யோஜனை அளவுக்கு இருந்ததாம். (அதாவது கிட்டத்தட்ட 40 கோடி கிலோ மீட்டர் தூரம்.) அந்தளவுக்கு பரந்திருந்தது இந்த உலகம். ஒருவனுக்கு முதல் தேவை செல்வம். அது இருந்தால் தான் எவ்வளவு மக்கள் இருந்தாலும் வயிறார சாப்பிட முடியும். இந்த செல்வத்தைச் சம்பாதிப்பதில் முதலில் அக்கறை காட்டியது அசுரப்படை. எனவே அவர்கள் செல்வத்தை முழுமையாகக் கொள்ளையடிக்க சென்ற இடம் அளகாபுரி. இந்த பட்டணத்தின் தலைவன் தான் குபேரன். குபேரனின் ஊருக்குள் அத்துமீறி புகுந்தது ராட்சதப் படை. அழகாபுரி அரசன் குபேரன் அசுரப்படையின் அத்துமீறல் கண்டு அதிர்ந்து போனான். அவனுக்கு அசுரர்கள் சிவபெருமானிடம் வரம் பெற்ற வரலாறு முழுமையாகத் தெரியும். சூரபத்மனை வெல்ல இயலாது என்பதைப் புரிந்து கொண்ட அவன் பொன்னோடும் மணியோடும் சூரபத்மனைச் சரணடைந்து, பத்மாசுரனே ! நான் இன்று முதல் உங்கள் அடிமை. நீங்கள் விரும்பும் போதெல்லாம் பொருளைக் கொண்டு வந்து கொட்ட வேண்டியது என் கடமை. நான் தங்களைச் சரணடைகிறேன், என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அந்த செல்வபுரியின் வனப்பைக் கண்ட அசுரப்படையினர் ஊருக்குள் புகுந்து அத்தனை செல்வத்தையும் கொள்ளையடித்தனர். தன் நாடு அலங்கோலமானது கண்டு குபேரன் பெரிதும் வருந்தினான். சூரபத்மன் அவனது பேச்சை பொருட்படுத்தவே இல்லை. அனைத்துச் செல்வத்துடனும் படைகள் புறப்படட்டும் என ஆணையிட்டான்.

குபேரபுரியை அடுத்து அவன் வடகிழக்கு திசை நோக்கிச் சென்றான். அந்த திசைக்கு அதிபதி ஈசானன். இவனை பார்த்த சூரன். அப்படியே ஒதுங்கிக் கொண்டான். அசுரர்களிடம், வேண்டாம், இவனை வெல்ல நம்மால் இயலும் என எனக்குத் தெரியவில்லை. இவனை உற்று நோக்குங்கள். இவனுக்கு மூன்று கண்கள் இருக்கின்றன. நமக்கு வரமளித்த சிவனும் முக்கண்ணன். ஒருவேளை அவர் தான் இவனோ என எண்ணத் தோன்றுகிறது, வம்பை விலைக்கு வாங்க வேண்டாம், எனப் படைகளை கட்டுப்படுத்தி விட்டு கிழக்கு நோக்கி திரும்பினான். கிழக்கு திசையில் தான் தேவர்களின் தலைமை இடமான இந்திரலோகம் இருந்தது. அசுரப்படை அகோரமாய் கத்திக் கொண்டு அங்கு புகுந்ததோ இல்லையோ, எல்லாரையும் விட்டு விட்டு, இந்திரன் ஓடோடிச் சென்று ஆகாய மேகக் கூட்டங்களிடையே தலை மறைவாகி விட்டான். தேவலோகத் தலைநகரான அமராவதி பட்டணத்தை சூறையாடினார்கள் அசுரர்கள். ஒரு அறையில் பதுங்கியிருந்த  நூற்றுக்கும் மேற்பட்ட தேவமாதர்கள் அசுரர்கள் கண்ணில் பட, அவர்களை சிறைபிடித்து இழுத்துச் சென்றனர். ஒளிந்திருந்த தேவர்களை கைது செய்து, அவர்களின் தலையில் அமராவதி பட்டணத்து செல்வங்களை ஏற்றி, சுமந்து வரச்செய்தார்கள். இதையடுத்து அக்னியின் கோட்டைக்குள் புகுந்தன அசுரப்படை. அக்னி சாதாரணமானவனா ? தைரியசாலியான அவன் அசுரர்களை நோக்கி தன் ஜ்வாலையை வீசி அருகில் நெருங்க விடாமல் செய்தான். ஆனால், சூரபத்மனின் தம்பி தாரகன் அக்னியின் மீது பாசுபதாஸ்திரத்தை எய்தான். இது அவனுக்கு சிவபெருமான் கொடுத்த பரிசு. சிவனின் அஸ்திரத்துக்கு கட்டுப்பட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானான் அக்னி. காரணம், அந்த அஸ்திரம் நெருப்புக்கே நெருப்பு வைக்கக்கூடியது. தன் அக்னிலோகம் மட்டுமின்றி சர்வலோகங்களும் அந்த அஸ்திரத்தால் அழித்து போய்விடும் என்பதால். அக்னி வேறு வழியின்றி சூரனிடம் சரண்புகுந்தான். தாரகன் அவன் மீது இரக்கப்பட்டான்.

அக்னியே நீ குபேரனைப் போலவோ, இந்திரனைப் போலவோ பயந்து ஓடவில்லை. உன்னால் முடிந்தளவு என்னிடம் போராடினாய். எனவே, இந்த பட்டணத்துக்கு நீயே ராஜாவாக தொடர்ந்து இரு. ஆனால், எங்களைப் பொறுத்தவறை நீ பணியாளன். நாங்கள் வரச்சொல்லும் இடத்துக்கு வர வேண்டும், என்று ஆறுதல் சொன்னான். ஆனாலும், இந்த சமாதான பேச்சுவார்த்தை முடிவதற்குள், அசுரப்படைகள் அக்னி பட்டணத்தை அழித்து, அங்கிருந்த பொருட்களையும் கொள்ளையடித்தனர். இதையடுத்து தென்திசை நோக்கி திரும்பியது அசுரப்படை தெற்கே இருப்பது எமலோகம் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இங்கு வர வேண்டியவர்கள் இதோ ! இப்போது வந்து விட்டார்கள். எமன் சாதாரணமான ஆசாமியா ! அவனை எமகாதகன் என்றல்லவா சொல்வார்கள். அந்த அதிபுத்திசாலி, தன் லோகத்தில் விளைந்த அரிசி, பயிறு வகை உளுந்து சகிதமான படை ஊருக்குள்,வருவதற்கு முன்பே நுழைவிடத்தில் போய் நின்றுவிட்டான். முதலில் வந்த தாரகனின் தாழ் பணிந்து, ஐயனே ! நான் நீங்கள் சொல்லும் நபரை மட்டும் தான் பிடிப்பேன். யாருக்காவது விதி முடிந்தால் கூட நீங்கள் கட்டளையிட்டால், அவரை பிடிக்க மாட்டேன், என் பட்டணத்தை மட்டும் ஏதும் செய்து விடாதீர்கள், என்றான். எமன் மீதும் இரக்கம் கொண்ட தாரகன், படைகளை ஊருக்குள் போகக்கூடாது என சொல்லி விட்டான். இப்படியாக நிருதி, வாயு, வருண லோகங்களுக்கும் சென்று வெற்றிக்கொடி நாட்டினர் அசுரப்படையினர்.

 
மேலும் கந்த புராணம் »
temple news
மகாவிஷ்ணுவின் அருள் பெற்ற அசுரர்கள்: அசுரன் தாரகனுக்கு ஸ்ரீமன் நாராயணன் பள்ளி கொண்டிருக்கும் வைகுண்ட ... மேலும்
 
temple news
வீரபாகு, தாரகன் வதம்: வீரபாகுவின் படைகள் கோட்டைக்குள் சென்று விட்டன. தடுத்த வாயிற் காவலர்களை தவிடு ... மேலும்
 
temple news
போர்க்களத்தில் சூரபத்மன்! வேறு வழியே இல்லாததால் சூரபத்மன் களத்தில் இறங்கினான். அவன் இறங்கிய உடனேயே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar