Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கந்தபுராணம் பகுதி-2 கந்தபுராணம் பகுதி-4 கந்தபுராணம் பகுதி-4
முதல் பக்கம் » கந்த புராணம்
கந்தபுராணம் பகுதி-3
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 மே
2012
03:05

வீரபாகு, தாரகன் வதம்: வீரபாகுவின் படைகள் கோட்டைக்குள் சென்று விட்டன. தடுத்த வாயிற் காவலர்களை தவிடு பொடியாக்கி விட்டன வீரபாகுவின் படைகள். கோட்டைக்குள் முருகனின் படை நுழைந்து விட்டது யென்ற தகவல், தாரகனுக்கு பறந்தது. உடனடியாக அவன் போர் முரசறைந்தான். கையில் பல்வேறு ஆயுதங்களைச் சுமந்து கொண்டு, தாரகனின் படைகள் தேவ படைகளுடன் மோதின. இருதரப்பிலும் பயங்கர சேதம். இருதரப்புமே சமநிலையில் தான் போரிட்டன. வீரபாகுவை ஒழித்துக் கட்ட தாரகனே நேரில் போர்களத்துக்கு வந்து விட்டான். அவனை துணைத்தளபதி வீரகேசரி எதிர்த்தான். இருவரும் அம்பு மழை பொழிந்தனர். தாரகன் விடுத்த அம்புகளை வீரகேசரி தன் அம்புகளால் அடித்து நொறுக்க, பதிலுக்கு வீரகேசரி விடுத்த அம்புகளை, தாரகன் தன் கதாயுதத்தால் அடித்து நொறுக்கி விட்டான். ஒரு கட்டத்தில், வீரகேசரி மீது அதிபயங்கர அம்புகளை ஏவினான். அவற்றை தடுக்க முடியாத கேசரி மயக்கமடைந்து கீழே விழுந்தான். நிலைமையைப் புரிந்துகொண்ட வீரபாகு, தாரகனின் முன்னால் வந்தான். தாரகா ! மரியாதையாக சரணடைந்து விடு. என் கண்ணில் பட்ட எதிரிகள் உயிர் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. என் காலில் விழு என எச்சரித்தான். தாரகன் நகைத்தான்.

ஏ பொடிப்பயலே ! உன் தலைவன் முருகனே எனக்கு தூசு. அப்படியிருக்க, நீயெல்லாம் ஒரு ஆளா! நீ அனுப்பிய உன் துணைப்படைத்தளபதி, என் அம்புகளின் தாக்கத்தால் மயங்கிக்கிடப்பதைப் பார்த்துமா, உனக்கு புத்தி வரவில்லை. உன்னை என் ஒரே அம்பில் மாய்த்து விடுவேன். சிறுவன் என்பதால் விடுகிறேன். ஓடி விடு என எச்சரித்தான். வீரபாகு பயங்கரமாக சிரித்தான். அம்பு மழை பெய்யச் செய்தான். எதற்கும் கலங்காத தாரகன், தன் தும்பிக்கையாலேயே அத்தனையையும் நொறுக்கிவிட்டான். கோபத்தில் தன் கதாயுதத்தால், பூமியின் மீது ஓங்கி அடித்தான். அதன் பலம் தாங்காத பூமி, இரண்டாகப் பிளந்துவிட்டது. தாரகன் வீரபாகு மீது ஆக்னேயம் என்ற அஸ்திரத்தை எய்தான். இந்த அம்பு எய்யப்பட்டால், அந்த இடம் தீப்பிடித்து நாசமாகி விடும். பதிலுக்கு வீரபாகுவும் அதை விட சக்தி வாய்ந்த ஆக்னேய அஸ்திரத்தை எய்தான். தாரகன் விடுத்த அம்பால் எரிந்த தீயை, வீரபாகுவின் அம்பு உருவாக்கிய தீ அணைத்து விட்டது. திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழித்த பிறகும், கோபம் தணியாமல் நிற்க, சிவபெருமான் நரசிம்மத்தை விட அதிக கடுமை கொண்ட சரபேஸ்வர வடிவம் எடுத்து, நரசிம்மரின் கோபத்தை அடக்கியது போன்ற நிலைமை இங்கே இருந்தது. இப்படியாக வாருணம், ஸெளரம், நாராயணாஸ்திரம் உள்ளிட்ட பல அஸ்திரங்களால் இருவரும் போரிட்டனர்.

வீரபாகுவை சிறைவைத்த தாரகன்

எதற்கும் பணியாத தாரகனை நோக்கி, தன்னிடமிருந்து கடைசி அஸ்திரமும், எப்பேர்ப்பட்ட இடத்தையும் பொடிப்பொடியாக்கும் வீரபத்திரம் என்ற அஸ்திரத்தை வீரபாகு எய்தான். நெருப்பு ஜூவாலையைக் கக்கிக் கொண்டு, அது தாரகனை நோக்கிப் பாய்ந்தது. அதன் உக்கிரத்தை தாரகனால் தாங்க முடியவில்லை. வீரபத்திர அஸ்திரத்தைக் கண்டு நடுங்கிய தாரகன், அங்கிருந்து தப்பித்தால் போது மென ஓட்டம் பிடித்தான். கிரவுஞ்சமலைக்குள் அவன் புகுந்து தன் வடிவத்தை சுருக்கிக் கொண்டு, ஒரு குகையில் ஒளிந்திருந்தான். தேவப்படைகள் ஆராவாரம் செய்தன. இருப்பினும், அவனைக் கொன்றாக வேண்டும் என்ற முருகனின் கட்டளை வீரபாகுவை உந்தித்தள்ளவே, அவன் கிரவுஞ்ச மலைக்குள் நுழைந்தான். உள்ளே சென்றானோ இல்லையோ, பொறியில் சிக்கிய எலி போல மாட்டிக் கொண்டான். இவனுடைய வருகைக்காகவே காத்திருந்த கிரவுஞ்சமலை தன் வாசலை மூடிக் கொண்டது. அது தாரகனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு அவ்வாறு நடந்து கொண்டது.

ஒரே இருள்... கண் தெரியாமல் திண்டாடினான் வீரபாகு. இருப்பினும், தட்டுத்தடுமாறி எங்காவது தாரகன் ஒளிந்திருக்கிறானா என தடவித்தடவி பார்த்தான். அங்கிருந்து வெளியே செல்லவும் முடியவில்லை. முருகா ! இதென்ன சோதனை. வீரபாகு என்ற சொல் கேட்டால் உலகமே நடுங்கிய காலம் முடிந்து விட்டதா ? என் வீரச்சரிதம் அவ்வளவு தானா ? உன் கட்டளையை நிறைவேற்றாமல் தோற்று விடுவேனா ? உமா தேவியின் புத்திரனே ! என்ன செய்வது என புரியவில்லையே, என முருகனைத் தியானித்தான். உள்ளே சென்ற வீரபாகு வெளியே வராதது கண்டு தேவப்படைகள் வெளியே வருந்தி நின்றனர். உடனே வீரகேசரியும், லட்சம் பூதகணங்களும் குகைக்குள் புகுந்து, வீரபாகுவை மீட்கச் சென்றனர். படைகள் தன்னருகே வந்ததும், கிரவுஞ்ச மலை தன் வாசலை மிகப்பெரிய அளவில் திறந்தது. அவர்கள் காற்றினும் வேகமாக உள்ளே புகுந்தனர். அவ்வளவு தான். லட்சம் பேரையும் உள்ளடக்கி வாயை மூடிவிட்டது. எங்கும் இருள். படைகள் திணறின. இதுதான் சமயமென வெளியே நின்ற தேவப் படைகளை அசுரர்கள் துவம்சம் செய்தனர். அவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். தாரகன் வேறொரு வாசல் வழியாக வெளியேறி விட்டான். அட்டகாசமாக சிரித்தான்.

வீரபாகுவாம் வீரபாகு... அவனை ஒழித்து விட்டேன், என ஆர்பரித்து சிரித்தான். அசுரப்படைகள் ஹோவென  எழுப்பிய கூச்சல் அந்தப் பகுதியை நிலநடுக்கம் ஏற்பட்டால் போல் நடுங்கச் செய்தது. அப்போது நாரதர் அங்கு வந்தார். சிதறி ஓடிய படையைக் கண்டார். உடனடியாக முருகப்பெருமானைத் தஞ்சமடைந்தார். முருகா ! நீ இருந்தும் இப்படி நடக்கலாமா ? தாரகன் உன் தம்பி வீரபாகு, வீரகேசரி ஆகியோரை கிரவுஞ்சனிடம் ஒப்படைத்து விட்டான். இப்போது அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா ? இல்லையா என்பதே தெரியவில்லை. இன்னும், நீ அமைதியாய் இருந்தால், தேவர்களின் இனமே அழிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. உன்னையே எந்நாளும் வணங்கும் உன் தொண்டர்களைக் கைவிடலாமா ? என்றார். முருகன் ஆவேசப்பட்டார். வாயுவை அழைத்தார்.

கிரவுஞ்ச-தாரகாசுர வதம்

வாயு பகவானே ! நீர் உடனடியாக தேரில் குதிரைகளைப் பூட்டு, தேர் கிரவுஞ்ச மலைக்கு செல்லட்டும், என்றார். நாரதர் மகிழ்ந்தார். கிரவுஞ்சமலை அடிவாரத்தில் அசுரப்படைகள் ஆர்பரித்துக் கொண்டிருந்தன. ஒளிந்திருந்த தேவர் படை முருகனின் தேரைக் கண்டதும் ஆரவாரம் செய்து வெளிப்பட்டனர். அவர்கள் மனதில் நம்பிக்கை பிறந்தது. தாரகன் ஒழிந்தான் என கூச்சலிட்டனர். தேவர் திடீரென வெளிப்பட்டதையும், சூரியனையும் மிஞ்சும் ஒளியையும், இதுவரை கண்டிராத சுந்தர வதனமும் கொண்ட இளைஞன் ஒருவன் தேரில் ஒய்யாரமாக அமர்ந்திருப்பதை தாரகனும் கவனித்தான். அந்த இளைஞனைப் பார்த்ததும். அவன் மனதில் தானாகவே ஒரு மரியாதை பிறந்தது. ஏனோ அவன் அருகில் சென்று அவனை பார்க்க வேண்டும் என தோன்றியது. அவன் தன் தூதனை அழைத்தான்.

தூதனே ! அந்த தேரில் நிற்கும் இளைஞன், இவ்வளவு தேஜசுடன் திகழ்கிறானே ! இதுபோன்ற அழகுள்ளவனை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லையே, சிவபெருமானின் நெற்றியிலிருந்து கிளம்பும் தீப்பொறிகளை விட அதிக பிரகாசமாக இவன் முகம் விளங்குகிறதே ! இவனைப் பார்த்தால், கையெடுத்து வணங்க வேண்டும் போல் இருக்கிறதே ! அழகில் மன்மதன் கூட இவன் அருகே நிற்க முடியாது போல் தோன்றுகிறதே ! என்றான். தூதன் அவனிடம், எங்கள் மாமன்னரே ! தாங்கள் சொல்வது அனைத்தும் நிஜமே. இவ்வுலகில் இவரை யாரோ என நினைத்துவிடாதீர்கள். ஆலகால விஷத்தை உண்டவரும், யாராலும் அணுக முடியாதவரும், மன்மதனை எரித்தவரும், எமனையே உதைத் தவருமான பரமேஸ்வரனின் இளைய புத்திரன். அவரது நெற்றிக் கண்ணில் இருந்து அவதாரம் செய்தவன். அவனை வடிவேலன் என்றும், முருகன் என்றும், குமரன் என்றும், கந்தன் என்றும், கடம்பன் என்றும், கார்த்திகேயன் என்றும் இன்னும் பல திருநாமங்களாலும் புகழ்வர் அவனது பக்தர்கள். இவனை எதிர்க்க இவரது தந்தை பரமேஸ்வரனால் கூட முடியாது, என்றான். உடனே தனது தேரை முருகனின் தேர் அருகில் கொண்டு நிறுத்தும்படி சாரதிக்கு உத்தரவிட்டான். முருகனைக் கண்கொட்டாமல் பார்த்தான். ஆறு முகங்கள், 12 கரங்கள், அனைத்திலும் ஒளிரும் ஆயுதங்கள், கமலம் போல் முகம்... இத்தனையும் தாரகனைக் கவர்ந்தன. மெய்மறந்து அப்படியே நின்றான்.

வடிவேலனைப் பார்த்து அதிசயித்து மெய்மறந்த தாரகன், அவரிடம் பேசினான். முருகா ! உன்னைப் பெற்றதால் அந்த பரமசிவனார் பாக்கியசாலி ஆகிறார் அன்பனே ! எங்கள் அசுர வம்சத்திற்கும், தேவ வம்சத்திற்கும் காலம் காலமாக தீராப்பகை இருந்து வருகிறது. அதை நான் தீர்த்துக் கொண்டிருக்கிறேன். உன் தந்தை பரமேஸ்வரனே எனக்கும், என் சகோதரர்களுக்கும் சகல சக்தியையும் அருளியிருக்கிறார். அவ்வகையில், உன்னையும் அவரைப் போலவே வழிபட காத்திருக்கிறேன். அதனால், எங்கள் விஷயத்தில் நீ தலையிடாதே, என்றான் பணிவான வார்த்தைகளால். வடிவேலன் இடிஇடியென சிரித்தான்.

தாரகனை வதம் செய்த கந்தன்

தாரகா ! நன்றாக இருக்கிறது உன் பேச்சு. உலகத்தை சிருஷ்டிக்கும் பரமசிவனாரின் கருணையே உன்னை அழிக்க வேண்டும் என்பது தான். ஏனெனில், பரமசிவானார் உனக்கு வரமளிக்கும் போது என்ன சொன்னாரோ அதை மீறி விட்டாய். இறைவன் வரம் தருவது உலகத்திற்கு நன்மை செய்வதற்காக, நீயோ, உலகத்தையே அழித்துக் கொண்டிருக்கிறாய். பிற உயிர்களைத் துன்புறுத்துகிறாய். பிறரை மதிக்காதவனுக்கும் கொடுமைப் படுத்துபவனுக்கும் இறைவன் கொடுத்த வரங்கள் பலிப்பதில்லை. சிவனார் இட்ட கட்டளைப்படி உன்னை ஒழிக்கவே வந்திருக்கிறேன். உன் மரண ஓலையைப் பிடி, என்றார் கம்பீரமான குரலில். அவ்வளவு தான் ! தாரகனுக்கு பொறுமை போய், அசுரகுணம் தலைக்கேறி விட்டது. சிறுவனே ! இங்கே நின்று என்ன உளறிக் கொண்டிருக்கிறாய் ! நான் விஷ்ணுவையும், பிரம்மனையும், இந்திரனையும் வென்றவன். விஷ்ணு அவரது சக்கரத்தை என் மீது ஏவியபோது, அது என் நெஞ்சில் பட்டு பதக்கமாக ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார். அத்தகைய தைரியம் படைத்த என்னை ஒழித்து விடுவேன் என சாதாரணமாகச் சொல்கிறாயா ? என் முன் நிற்கும் தகுதி கூட உனக்கு இல்லை. ஓடி விடு. போய், தாய், தந்தையுடன் சுகமாக இரு, என்றான் ஆணவத்துடன்.

கர்வம் பிடித்தவனே ! தன் சுயபலத்தை தம்பட்டம் அடிப்பவன் வீரனே அல்ல ! தைரியசாலிகள் செயலில் தான் எதையும் காட்டுவார்கள். அதை மற்றவர்கள் பார்த்து புரிந்து கொள்வார்கள்; புகழ்ந்து தள்ளுவார்கள். உன்னை நீயே புகழ்ந்ததன் மூலம் இறைவனிடம் பெற்ற வரத்தை இழந்து விட்டாய். வா போருக்கு, என்று அறைகூவல் விடுத்தார் முருகன். பொறுமையிழந்த தாரகன், முருகனின் மீது அம்பு மழை பொழிய, அவற்றையெல்லாம் அடித்து நொறுக்கினார் கந்தப்பெருமான். அதிபயங்கர யுத்தம் நடந்தது. எல்லா அஸ்திரங்களையும் அடித்து நொறுக்கி, தாரகனின் தும்பிக்கையை துண்டு துண்டாக்கினார் வடிவேலன். ஆனால், அது மீண்டும் முளைத்தது. பல மாயங்கள் செய்து மீண்டும் மீண்டும் பிழைத்த அவன் ஒரு கட்டத்தில் கிரவுஞ்ச மலைக்குள் சென்று ஒளிந்து கொண்டான். கந்தன் கிரவுஞ்ச மலை மீது தன் வேலை எறிந்தார். அதன் சக்தி தாளாமல் மலையாய் நின்ற கிரவுஞ்சன் என்ற அந்த அசுரன். தன் உயிரை விட்டான். உயிரற்று சாய்ந்த மலையை வேலால் கிழித்த வேலவன். உள்ளிருந்த வீரபாகு மற்றும் வீரர்களை மீட்டார். அவர்கள் ஆரவாரத்துடன் வெளியே வந்தனர். மறைந்திருந்த தாரகன் வித்யுன்மாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்ற பெயர்களில் மூன்று வடிவங்களை எடுத்தான். மூன்று நகரங்களை அமைத்து அதில் ஒளிந்து கொண்டான். முருகப்பெருமான், பரமசிவனார் போல் உருமாறி, அந்த நகரங்களை எரித்தே அழித்தார். அங்கிருந்து தப்பிய தாரகனை வேலெறிந்து வீழ்த்தினார். சற்றும் எதிர்பாராத விதமாக தாரகன் போர்களத்தில் வீழ்ந்து மாண்டான்.

வானவர்கள் மலர் மாரி பொழிந்தனர். தாரகனின் படை சிதறியது. அவர்களை வீரபாகு தலைமையிலான தேவர் படைதுவம்சம் செய்தது, போர்களத்தில் ஒரு அசுர உயிர் கூட மிஞ்சவில்லை தாரகன் மடிந்தான் என்ற செய்தியறிந்து அவனது மனைவி கவுரியும், மற்ற ஆசைநாயகியரும் ஓடோடி வந்தனர். அன்பரே ! விஷ்ணுவாலும், தேவவேந்திரனாலும் வெல்ல முடியாதவரும், பரமசிவானாரிடம் சாகாவரம் பெற்றவருமான உங்களுக்கா இந்தக்கதி நேர்ந்தது ! இனி நீங்கள் சென்றுள்ள  உலகத்திற்கே வருவோம். ஒரு சிறுவனிடம் உங்கள் கணவன் தோற்றான் என்று பிறர் பேசுவது எங்கள் காதில் விழும்முன் உங்களை நாடி வந்து விடுகிறோம், என்று கதறினர்.

தாரகன் மகன் அசுரேந்திரன்

தன் தந்தை இறந்த செய்தியறிந்து, தாரகனின் மகன் அசுரேந்திரன் ஓடிவந்தான். அவன், தந்தையின் உடலின் மீது விழுந்து கதறினான். அப்பா ! ஒரு சிறுவனிடம் தோற்று அசுர குலத்திற்கு தீராக்களங்கத்தை ஏற்படுத்தி விட்டீர்களே ! இது எப்படி சாத்தியமாயிற்று ? ஆயினும், உங்களுக்கு நேர்ந்த இழுக்கிற்கு பிராயச்சித்தம் செய்வேன், எந்த சிறுவன் உங்களைத் தோற்கடித்தானோ, அந்த சிறுவனுக்கு பாடம் புகட்டுவேன், இது சத்தியம், என்று சபதம் செய்தான். பின்னர் அகில், சந்தனக்கட்டைகளை அடுக்கி, அதன் மீது தந்தையின் உடலை வைத்து, சகல மரியாதைகளுடன் தகனம் செய்யச் சென்றான். அவனது தாய்மார்கள் தங்களையும் சிதையில் வைத்தும் தகனம் செய்யும்படி அடம்பிடிக்கவே. அவர்களையும் சிதையில் அமர வைத்து தீமூட்டினான். இறுதிக்கிரியைகளை முடித்த பின் கோபமும் வருத்தமும் பொங்க தன் பெரியப்பா, சூரபத்மனின் நகரான வீரமகேந்திர பட்டணத்தை வந்தடைந்தான்.

அசுரேந்திரன் அரண்மனைக்குள் ஓடிச் சென்று பெரியப்பாவின் காலில் விழுந்தான். சூரபத்மனுக்கு அவனது கலவரத்திற்கான காரணம் புரியவில்லை. மேலும், முன்னறிவிப்பின்றி தம்பி மகன் இப்போது ஏன் இங்கு வந்தான் என்றும் ஆச்சரியப்பட்டான். அவனது பரபரப்பு கண்டு, நடக்ககூடாத ஏதோ நடந்து விட்டதை உணர்ந்து கொண்டான். விக்கி விக்கி அழுத அசுரேந்திரன், வார்த்தைகள் வெளியே வராமல் தத்தளித்தான். தரையில் விழுந்த மீன்போல், அவன் துடிப்பது கண்டு, சூரபத்மன் கலங்கி, மகனே ! எந்தச் சூழலிலும் நாம் பதட்டம் கொள்ளக்கூடாது. மேலும், நாம் அசுரர்கள் நமக்கு தேவர்களிடம் பயமில்லை. சிவனின் பேரருள் பெற்ற நாம்... யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. மேலும், எதையும் நம்மிடமிருந்து பறிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் இந்த அண்டத்தில் இல்லை என பெருமை பொங்க கூறினான். பறித்து விட்டார்கள் பெரியப்பா ! பறித்து விட்டார்கள். ஆம்... என் தந்தை... உங்கள் தம்பி... இப்போது இந்த பூமியில் இல்லை. ஒரு சிறுவன் அவரைக் கொன்று விட்டான். என் தாய்மார்கள் தந்தையோடு உடன்கட்டை ஏறி விட்டார்கள். இப்போது நான் அனாதை. எனக்கு என் நாட்டில் எந்த பாதுகாப்பும் இல்லை. அந்தச் சிறுவனைக் கண்டால் உள்ளம் நடுங்குகிறேன். அவனுக்கு பயந்து ஓடி வந்து விட்டேன், என்று நடுக்கத்துடன் சொன்னால் அசுரேந்திரன். சூரபத்மன் இடிஇடியென நகைத்தான்.

சூரபத்மன், சிங்கமுகன் ஆவேசம்

குழந்தாய் ! நீ எதைப் பார்த்து பயந்தாய். யாரைப் பார்த்து பயந்தாய். தந்தை இறந்தான் என்கிறாய். தாய்மார்கள் உடன்கட்டை ஏறினார்கள் என்கிறாய். என்ன உளறல் இது ? ஏதேனும் கனவு கண்டு வந்தாயோ ? கனவுகள் கூட நம் அனுமதி பெற்று தான் நம் கண்களில் தெரிய முடியும். அந்தளவு செல்வாக்கு பெற்றது நம் குலப்பெருமை. மகனே ! அழாதே. உள்ளே உன் பெரியம்மாக்கள் இருக்கிறார்கள். அங்கே செல். வேண்டியதை சாப்பிடு. அழகுக்கன்னியர் உனக்காக காத்துக் கிடக்கிறார்கள். அவர்களோடு கூடி மகிழ். போதை பானங்கள் அருந்து. துன்பத்தை மறந்து. இன்ப லோகத்திற்கு செல், என்றான் பரிவோடு. பெரியப்பா, என் நிலைமை புரியாமல் பேசாதீர்கள். உங்கள் தம்பி மாண்டது உண்மை. அவருக்கு கொள்ளி வைத்த கையோடு இங்கே வந்திருக்கிறேன். அவரைக் கொன்றவன் முருகன். ஆம்... நம் குல தெய்வமான சிவபெருமானின் மைந்தன். நமக்கு அழிவு சிவனால் மட்டும் என்பதை நாம் அறிவோம். ஆனால், புது எதிரி ஒருவன்... அதிலும் சின்னஞ்சிறு பாலகன். அவன் திடீரென விஸ்வரூபம் எடுக்கிறான். திடீரென குழந்தையாகிறான். அவனது சக்திவேல் தந்தையை அழித்து விட்டது, என்றான் கண்ணீர் வழிய. சூரபத்மன் நிலைமையைப் புரிந்து கொண்டான்.

தம்பி ! போய் விட்டாயா ? இந்த சிறுவன் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லையே ! யாராலும் நம் வம்சத்தை அழிக்க முடியாது என்று இறுமாப்பு கொண்டிருந்தேனே ! ஐயோ ! நீ இல்லாமல் எனக்கேது வாழ்வு ? அசுரகுலத்தின் ஒளி விளக்கே ! நீயின்றி நான் இந்த உலகை எப்படி கண்காணிப்பேன். என் அன்பு இளவலே ! அந்த முருகன் யாருடைய மகனாயிருந்தால் எனக்கென்ன ? அவனைக் கொன்று கூறு போடுகிறேன். படை கிளம்பட்டும். முரசுகள் ஆர்ப்பரிக்கட்டும். உடனே செல்லுங்கள். அந்த முருகனை கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லுங்கள், என ஆர்ப்பரித்தான். கண்கள் ரத்தச் சிவப்பாயின. சபையிலே மன்னன் அழுது கொண்டிருக்கிறான் என்ற சேதியறிந்து, சூரபத்மனின் மனைவியர் ஓடிவந்தனர். அசுரேந்திரனுக்கு ஆறுதல் சொல்லி கண்ணீர் வடித்தனர். தாரகன் மீது அன்பு கொண்ட அசுர உள்ளங்கள் சோகமும், ஆத்திரமும் கொப்பளிக்க படையெடுப்புக்குத் தயாராயினர். சூரபத்மனின் இன்னொரு தம்பி சிங்கமுகன் தகவலறிந்து வந்தான். இடிதாக்கிய நாகம் போல் சோகத்தில் சுருண்டு போனான். பலமுறை மயக்கம் தெளிவித்தும் உணர்வற்று கிடந்தான்.

அமோகனின் ஆலோசனை

ஒரு வழியாக தன்னிலைக்கு திரும்பிய அசுரர்கள் தேரேறி மன்னா ! படையெடுப்பை நிறுத்துங்கள். ஒரு சிறுவனின் கையால் நம் மாமன்னர் மடிந்திருக்கிறார் என்றால், சற்று சிந்திக்க வேண்டும். தாரகனாரைக் கொன்றவன் சாதாரணமானவனாக இருக்க முடியாது, என்ற குரல் கேட்டு திரும்பினார்கள் சூரபத்மனும், சிங்கமுகனும். அவன் சூரபத்மனின் அமைச்சரான அமோகன். அவன் தொடர்ந்தான். அரசே ! அந்த முருகனை பற்றி நான் சொல்வதைக் கேளுங்கள். அவன் சிறந்த பராக்கிரமசாலி. சிவமைந்தன். சிவனோடு நமக்கு எந்த பகையும் இல்லை. அவர் உலகை ஆள்பவர். அந்த சர்வேஸ்வரனுக்கு கட்டுப்பட்டே நாம் இயங்குகிறோம். அது போல், அவருக்கு பிறந்த முருகனிடமும் நாம் பணிந்து தான் சென்றிருக்க வேண்டும். ஆனால், அறியாமை காரணமாக நம் தாரகனார், அவனோடு போரிட்டு இறந்து விட்டார். எதிரியின் வயது மட்டும் வெற்றிக்கு தகுதியானதாகி விடாது. அவனது பலத்தைப் பார்க்க வேண்டும். அவனுக்கு பக்கபலமாக இருப்பவர்கள் யார் யார் ? அவனுக்கு ஆலோசனை சொல்பவர்கள் யார் யார் ? எந்த தைரியத்தில் அவன் அசுரர்களோடு மோதுகிறான் ? என்ன காரணத்துக்காக மோதுகிறான். ஒருவேளை நம் நீண்ட கால ஆட்சி போதுமென கருதி, சிவபெருமானே அவனைத் தூண்டியுள்ளாரா ? அல்லது நம் குல எதிரிகளான தேவர்களின் உந்துதலால் இப்படி செய்கிறானா ? எங்கிருந்து அவன் உந்தப்படுகிறானோ, அவனை ஒழித்து விட்டால், வடிவேலன் நம்மை துன்புறுத்த மாட்டான், என்றான். அமோகனின் வார்த்தைக்கு மதிப்பளிப்பவன் சூரபத்மன். உடனடியாக கிளி, மயில், பருந்து ஆகிய வடிவங்களில் உருமாறும் அசுரர்களை அழைத்தான். நீங்கள் இதே உருவில் அலைந்து திரிந்து, அந்த முருகனைப் பற்றி ரகசியங்களை அறிந்து வாருங்கள், என கட்டளையிட்டான். அந்த பறவை அசுரர்கள் உயரப் பறந்தனர்.

முருகனின் மந்திர ஆலோசனை

சூரபத்மனின் தூதர்கள் பல்வேறு உருவங்களில் முருகனைப் பற்றிய ரகசியங்களை அறியப் புறப்பட்ட வேளையில், முருகப்பெருமானும் தன் தம்பியருடன் சூரனை அழிப்பதற்கான மந்திராலோசனையில் ஈடுபட்டார். அவர் பல சிவத்தலங்களை தரிசித்த பிறகு, செந்தூர் என்னும் தலத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கே ஒரு பெரிய கடல் இருந்தது. அங்கே தான் தங்குவதற்கு ஒரு இருப்பிடத்தை உருவாக்கினார். ஐந்து லிங்கங்களை அமைத்து தந்தையையும் வழிபட்டு வந்தார். சூரனை அழிப்பதற்குரிய வழிவகைகளை ஆய்வு செய்யவும், சூரனின் மகன் பானுகோபனால் பிடித்துச் செல்லப்பட்ட இந்திரனின் மகன் ஜெயந்தன் மற்றும் சூரனால் சிறையில் அடைக்கப்பட்ட தேவாதிதேவர்களையும் அழைத்து வர ஒரு தூதனை அனுப்ப ஏற்பாடு செய்தார்.

அந்தத் தூதன் வேறு யார் ? வீரபாகுதான். வீரபாகு ! நீ உடனே சூரன் தங்கியிருக்கும் வீரமகேந்திர பட்டணத்திற்குச் செல். சூரனின் படை பலத்தை அறிந்து கொள். சூரனால் பிடித்துச் செல்லப்பட்ட ஜெயந்தன் மற்றும் தேவர்களை மீட்டுவிடு. பின்னர் சூரனிடம், எங்கள் தலைவர் முருகனிடம் சரணடைந்து விடு. இல்லாவிட்டால் தலையை இழப்பாய், என எச்சரித்து விட்டு வா, என்றார். வீரபாகுவுக்கு ஏக சந்தோஷம். அவனைப் போல் வீரனை இனி புராண சரித்திரம் காணாது. வீரபாகு பறக்கும் தன்மை கொண்டவன். முருகனின் உத்தரவை கேட்ட மாத்திரத்தில், அவரை மனதார வணங்கி, விஸ்வரூபம் எடுத்தான். விண்ணில் பறந்தான். கந்தமான மலையில் வந்து இறங்கினான். அவன் வந்து இறங்கிய வேகத்தில் அந்த மலை பூமிக்குள் புதைந்து விட்டது. அந்த மலையில் தான் இறந்து போன தாரகாசுரனின் வீரர்கள் தங்கியிருந்தனர். அவர்கள் பூமியில் அழுந்தி இறந்து விட்டனர். மீண்டும் அவன் பறந்து போய் இலங்கை பட்டணத்தை அடைந்தான். அங்கே யாளிமுகன் என்ற அசுரன் ஆண்டு வந்தான்.

அசுரர்களைக் கொன்ற வீரபாகு

யாளிமுகனின் படைத்தளபதி வீரசிங்கன், பறந்து செல்லும் வீரபாகுவை பார்த்து விட்டான். டேய் ! நில், நீ யார் ? எங்கே போகிறாய் ? என்றான். வீரபாகு சற்றும் கலங்காமல், நான் வெற்றி வடிவேலனின் வீரத்தளபதி வீரபாகு. நான் சூரபத்மனின் அரண்மனை நோக்கி வடிவேலனின் தூதுவனாக சென்று கொண்டிருக்கிறேன். நீ உன் வழியில் போ, என்றான். வீரபாகுவை அவன் தடுத்தான். எங்கள் அசுரகுல தலைவரைப் பார்க்க கேவலம் நீ செல்வதா ?  உன்னை ஒழித்து விடுகிறேன், என பாணங்களைத் தொடுத்தான். அத்தனை அஸ்திரங்களையும் பொடிப்பொடியாக்கிய வீரபாகு, முதலில் வீரசிங்கனின் படைகளை ஒழித்தான். பின்னர் வீரசிங்கனின் இலங்கைப்பட்டிணத்தில் குதித்தான். அவன் குதித்த வேகத்தில் அந்த பட்டணமே பூமிக்குள் புதைந்து விட்டது. ஏராளமான அசுரர்கள் இறந்தனர். அங்கிருந்து தப்பித்த யாளிமுகனின் மகன் அதிவீரன் வீரபாகுவிடம் போர்புரிய ஓடி வந்தான். அவனது ஆயுதங்களையெல்லாம் சுக்குநூறாக்கிய வீரபாகு, அதிவீரனைக் கொன்றான். பின்னர் சூரபத்மன் வசித்த வீரமகேந்திரபட்டணத்தை வந்தடைந்தான். நகர எல்லைக்குள் நுழைந்த போது, நான்கு திசை வாசல்களிலும் பலத்த பாதுகாப்பு இருப்பதைப் பார்த்தான். இத்தனையையும் மீறி நகருக்குள் செல்லும் வழியை ஆலோசித்தான். அப்போது தெற்குவாசலைக் காவல் செய்த யானை முகம் கொண்ட கஜாமுகன் என்ற காவல்படை தலைவன் வீரபாகுவை பார்த்து விட்டான்.

ஏய் நீ யார் ? தேவர்களின் ஏவலாளி போல் தெரிகிறாயே ! பாதுகாப்பு மிக்க இந்த பட்டணத்துக்குள் எப்படி நுழைந்தாய் ? மாய வித்தைகளைக் கடைபிடித்து உள்ளே வந்தாயா ? என்று சொல்லிக் கொண்டே வீரபாகுவை நோக்கி ஒரு மலையைத் தூக்கி எறிந்தான். விஸ்வரூபம் எடுத்திருந்த வீரபாகுவின் மீது விழுந்த அந்த மலை நொறுங்கியது. பின்னர் அவன், ஆயிரம் ஆலமரங்களை பிடுங்கி மொத்தமாகச் சேர்த்து கட்டி, வீரபாகு மீது வீசினான். அவற்றை வீரபாகு ஒரு அஸ்திரத்தை வீசி தூள்தூளாக்கி விட்டான். கோபம் தாளாத கஜாமுகன், ஆயிரம் மலைகளைப் பிடுங்கி அவன் மீது விசினான். அதுவும் பலனளிக்கவில்லை. அவற்றைத் தூளாக்கிய வீரபாகு, வலிமை மிக்க அஸ்திரம் ஒன்றை எய்து, கஜாமுகனை காலால் எட்டி உதைத்தான். வலி தாங்காமல் புரண்ட கஜாமுகன் உயிரை இழந்தான். பின்னர் தனது உருவத்தை சுருக்கி நிஜஉருவம் எடுத்த வீரபாகு, ஒரு கோபுரத்தின் மீது ஏறி, மகேந்திரபுரியை நோட்டமிட்டான். மிக அற்புதமாக அமைக்கப்பட்டிருந்த அந்த நகரின் அழகு அவனைக் கவர்ந்தது. ஓரிடத்தில் இருந்த சிறைச்சாலையில் ஒரு அறையில் தேவர்களும், ஒரு அறையில் தேவமாதர்களும் அடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தான்.

ஜெயந்தனை சந்தித்த வீரபாகு

இவர்கள் சூரபத்மனால் தண்டிக்கப்பட்டவர்கள். தனக்கு பணியாத தேவர்களின் கைகளையும், கால்களையும் வெட்டினான் சூரபத்மன். அவை உடனே முளைத்து விட்டன. தேவர்கள் ஏற்கனவே அமிர்தம் பருகியவர்கள் என்பதால், இத்தகைய நிலை ஏற்பட்டது என்பதை புரிந்து கொண்ட சூரன், அங்கிருந்த சிறையில் அவர்களை அடைத்து விட்டான். அதுபோல், தன்னை மணக்க சம்மதித்த தேவமாதர்களைத் தவிர மற்றவர்களை சிறையில் அடைத்து வைத்திருந்தான். அவ்வூரில் குவியும் குப்பையையும், தூசையும் வாயுபகவான் காற்று வீசி ஒரே இடத்தில் கொண்டு சேர்க்கும் துப்புரவு பணியைச் செய்து கொண்டிருந்தான். ஜெயந்தனும், தேவர்களும் தங்கியிருந்த அறைக்குச் சென்ற சில அசுரர்கள், உங்கள் தலைவன் இந்திரனும், இந்திராணியும் எங்கிருக்கிறார்கள் ? சொல்லாவிட்டால் சித்ரவதை செய்வோம், என்று கூறி அவர்களைச் சித்ரவதை செய்தனர். அவர்கள் சென்றதும் ஜெயந்தன் வேதனை தாளாமல், லோக நாயகரான சிவபெருமானே ! எங்களை ஏன் இப்படி வதைக்கிறீர்கள் ? எங்களைக் காப்பாற்ற யாருமே இல்லையா ? என் தாயும், தந்தையும் எங்கிருக்கிறார்களோ ? அவர்கள் என்னவெல்லாம் துன்பம் அனுபவிக்கிறார்களோ என்று புலம்பினான்.

அன்றிரவில் ஜெயந்தனின் கனவில் தோன்றிய வடிவேலன், ஜெயந்தா ! நீயும் தேவர்களும் கவலை கொள்ளத் தேவையில்லை. நான் விரைவில் வந்து உன்னை மீட்டு உனக்கு பெருமையும் தேடி தரப்போகிறேன். என் தூதன் வீரபாகு இப்போது நீங்கள் தங்கியிருக்கும் நகரில் புகுந்து விட்டான். அவன் பராக்கிரமசாலி. சூரனை நிச்சயம் சந்தித்து, அவனை என்னிடம் சரணடையச் சொல்வான். அப்படி மறுத்தால் போர் பிரகடனம் செய்ய ஏற்பாடு செய்து விட்டேன். கொஞ்சம் பொறுத்திரு, என்றார். ஜெயந்தன் மகிழ்ந்தான். அந்நேரத்தில் வீரபாகு பல கட்டுக்காவல்களை மீறி, ஜெயந்தனும் தேவர்களும் அடைக்கப்பட்டிருந்த சிறைக்குள் வந்து குதித்தான். அங்கே பெரும் அதிர்வு ஏற்பட்டது. அவன் ஜெயந்தனிடம், இந்திரன் மகனே ! கவலைப்படாதே. நல்ல நேரம் பிறந்து விட்டது. மீண்டும் நீங்கள் அவரவருக்குரிய பதவியைப் பெற்று ஆட்சிக்கட்டிலில் அமரப் போகிறீர்கள். சூரனின் சாம்ராஜ்யம் அழியும், என்று ஆறுதல் கூறி விடை பெற்றான்.

பின்னர் வீரமகேந்திர பட்டணத்தின் தெருக்களில் மற்றவர் கண்ணுக்கு தெரியா வண்ணம் தன் உடலை மறைத்துக் கொண்டு நடந்தான். சூரபத்மனின் கம்பீரமான அரண்மனையை நோட்டமிட்டான். அவனது திறமையை மனதுக்குள் பாராட்டினான் எதிரிகளாக இருந்தாலும், அவனுடைய திறமையை பாராட்டுபவன் எவனோ, அவனே நீதிமான். மேலும், இப்படிப்பட்டவர்களே எதிரியின் பலத்தைப் புரிந்து கொண்டு வியூகம் வகுத்து வெற்றியும் பெற முடியும். புத்திசாலியும், நீதிமானுமான வீரபாகு எதிரியான சூரபத்மனின் திறமையை மனதுக்குள் பாராட்டியதில் வியப்பேதும் இல்லை.

சூரபத்மனிடம் உரையாடிய வீரபாகு

அரண்மனை வாசலில் கோரைப்பற்களும், பார்த்தாலே பயந்து நடுங்கும் விதத்திலும் கோரத் தோற்றமும் உடைய இரண்டு காவலர்கள் ஆயுதங்களுடன் அங்குமிங்கும் உலா வந்தனர். உக்ரன், மயூரன் என்ற அந்தக் காவலர்களின் கண்ணுக்கு வீரபாகு அங்கே நிற்பது தெரியவில்லை வீரபாகு இதைப் பயன்படுத்தி அரண்மனைக்குள் நுழைந்து சபாமண்டபத்தில் வந்து நின்றான். சூரபத்மன் மிக கம்பீரமாக ரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருந்தான். நெற்றியிலும், உடலிலும் மூன்று பட்டையாக திருநீறு, ஒளி வீசும் ஆபரணங்கள் அணிந்து, தலையில் கிரீடம் சூடி, ஆடம்பரமாகவும், அமர்க்களமாகவும் வீற்றிருந்தான். வீரபாகு யோசித்தான். இவ்வளவு அமர்க்களம் செய்யும் இவன் முன்னால் நின்று கொண்டு பேசினால் நமக்கு அவமானம் எனக் கருதிய வீரபாகு. முருகப்பெருமானை துதித்தான், உடனே சூரன் அமர்ந்திருந்த சிம்மாசனத்தை விட மிக அற்புதமான சிம்மாசனம் அந்து வந்து இறங்கியது. வீரபாகு மகிழ்ச்சியுடன் தன் உருவத்தை திடீரென வெளிப்படுத்தினான். சிம்மாசனத்தை இழுத்துப் போட்டான். சூரனின் முன்னால் கால் மேல் கால்போட்டு அமர்ந்தான். இதைக் கண்டு சூரபத்மனும், அவையில் இருந்த மற்ற அசுரர்களும் அதிர்ச்சியடைந்தனர். சூரன் அதட்டினான்.

யார் நீ ! என் இடத்துக்குள்ளேயே வந்து என் முன்னாலேயே கால் மேல் கால்போட்டு மரியாதையின்றி அமர்ந்திருக்கும் உன்னை எமலோகம் அனுப்பியிருப்பேன். இருப்பினும், இத்தனை கட்டுக்காவலையும் மீறி உள்ளே வந்த நீ மாயாஜாலத்தில் சிறந்தவன் என்பதை ஒப்புக்கொண்டு, நீ வந்த காரியம் பற்றி கேட்கிறேன் அதை விரைவாக என்னிடம் சொல், என்றான். வீரபாகு  தன்னைப் பற்றியும், தான் வந்த விஷயம் பற்றியும் தெளிவாகச் சொன்னான். சிவபெருமானின் உத்தரவுப்படி, முருகன் தோன்றியுள்ளதையும், ஏற்கனவே தாரகனைக் கொன்றதையும் சுட்டிக்காட்டி, திருச்செந்தூரில் தங்கியுள்ள முருகனிடம் சரணடையும்படியும் கூறினான்.  சூரபத்மனுக்கு மீசை துடித்தது. வீரபாகு தொடர்ந்தான். உனக்கு உயிர்ப்பிச்சை கொடுக்கவும் முருகப்பெருமான் தயாராக இருக்கிறார். நீ உடனடியாக தேவேந்திரனின் மகன் ஜெயந்தனையும், மற்ற தேவர்களையும் விடுதலை செய்தால் அது சாத்தியமாகும் உன் ராஜ்யத்தையும் நீ காப்பாற்றிக் கொள்ளலாம். மறுத்தால், உன் தலை போய் விடும் முருகனின் சார்பில் எச்சரிக்கிறேன், என்றான். சூரபத்மன் கோபம் கொப்பளிக்க இருக்கையில் இருந்து எழுந்தான்.

அடேய்! பொடியனுக்கு தூதுவனாய் வந்த பொடியனே ! நான் இருக்கையில் எழுந்த பிறகும், என் முன்னால் அமர்ந்திருக்கிறாயே ! திமிர் பிடித்தவனே ! நான் அந்த பொடியனிடம் சரணடைய வேண்டுமா ? என் தம்பியைக் கொன்ற அன்றைய தினமே அவனைக் கொல்ல முடிவெடுத்தேன். ஆனால், ஒரு குழந்தையைக் கொல்வது பாவம் என்பதால், கோபத்தை அடக்கிக் கொண்டேன். இப்போது அவன் என் ராஜாங்க காரியத்திலும் தலையிட ஆரம்பித்து விட்டான். சிவனிடம் பெற்ற வரத்தால், இந்த உலகையே என் பிடியில் வைத்துள்ள நான் ஒரு சிறுவனிடம் சரணடைவதா ? நாளையே என்படை அவனைச் சந்திக்கும். தூதராக வந்து என் முன்னால் சிம்மாசனத்தில் அமர்ந்த உன்னை சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன். யார் அங்கே அவனைப் பிடியுங்கள், என்றான் சூரபத்மன். வீரபாகு ஆவேசமானான், இருந்த இடத்தை விட்டு எழாமலேயே, ஏ சூரனே ! தூதுவனாக வந்த இடத்தில் உன்னை ஏதும் செய்யக்கூடாது என்பதால், உன்னை உயிரோடு விடுகிறேன். இல்லாவிட்டால், உன் தலையை இந்நேரம் நொறுக்கியிருப்பேன். என் தலைவன் முருகனை அவமானப்படுத்தும் வார்த்தைகளை இனியொரு முறை சொல்லாதே, என கர்ஜித்தான். இதைக் கேட்டதும் சூரபத்மன் கைகால்கள் நடுங்குமளவுக்கும், முகம் சிவக்குமளவுக்கும் ஆவேசமாகி, பிடியுங்கள் ! அவனைக் கட்டி வைத்து உதையுங்கள், என்றான்.

சூரபத்மனின் மகன் வஜ்ரபாகுவைக் கொன்ற வீரபாகு

வீரபாகு சூரனின் மிரட்டலை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. சூரபத்மா ! மீண்டும் எச்சரிக்கிறேன் ஜெயந்தனை விடுதலை செய்கிறாயா? அல்லது உன்னை நானே கொன்று போட்டு விடட்டுமா ? என்றான் ஆவேசமாக. சூரனை சுற்றி நின்ற அசுரர்களும் ஆவேசமானார்கள். வீரபாகுவை பிடிக்க அவர்கள் எத்தனித்தனர். பலமடங்கு கோபத்தில் என்ன செய்வதென தெரியாமல் திகைத்த சூரபத்மன் ஆயிரம் தலைகள், இரண்டாயிரம் கைகள் கொண்ட அசுரர்களை வீரபாகுவைப் பிடிக்க ஏவினான். வீரபாகு எழுந்தான். அவன் எழவும் ரத்தின சிம்மாசனம் தானாக மறைந்து விட்டது. வீரபாகு அரண்மனைக்கு வெளியே பாய்ந்து சென்று அதன் முகப்பில் இருந்த 20 ஆயிரம் கலசங்கள் பொருந்திய கோபுரத்தை பிடுங்கினான். அதை தூக்கி தன்னைத் தாக்க வந்த கொடிய அசுரர்கள் மீது வீசினான். அதன் அடியில் சிக்கி அவர்கள் மாண்டனர். பின்னர் அரண்மனைக்குள் வந்தான். சூரபத்மனின் ஆஸ்தான மண்டபத்தை தன் கையாலேயே இடித்து நொறுக்கி எக்காளமாய் சிரித்தான். சூரபத்மன் தன் மகன் வஜ்ரபாகுவை வரவழைத்தான். டேய் ! நீ அந்த பாதகனைக் கொல், என்றான். வஜ்ரபாகு பத்தாயிரம் குதிரை பூட்டிய தேரில் ஏறி வீரபாகு மீது ஏற்ற வந்தான். வீரபாகு தன் காலால் எட்டி உதைத்து தேரை நொறுக்கினான். பல மாளிகைகள் பிடுங்கி அவன் மீது வீசினான். ஆனால், சில பாணங்களின் தாக்குதல் தாங்காமல் அவ்வப்போது களைப்படையவும் செய்தான். பின்னர்,வஜ்ரபாகுவின் ஆயுதங்களை முழுமையாக அழித்து விட்டு, அவனைப் பிடித்து இழுத்தான். நெஞ்சில் ஓங்கி மிதித்தான். அலறியபடியே உயிர்விட்டான் வஜ்ரபாகு. அதன்பிறகும் கோபம் தணியாத வீரபாகு வீரமகேந்திர பட்டணத்தை சின்னாபின்னப்படுத்தினான். பின்னர் அங்கிருந்து திருச்செந்தூர் சென்று விட்டான். சூரபத்மனும் அவன் மனைவி பத்மகோமளையும் மகனின் பிரிவால் அழுதனர். அப்போது மந்திரி தாமகோபன் வந்தான்.

மகாராஜா ! துன்பங்கள் மிஞ்சும் நேரத்தில் அழுது கொண்டிருப்பது எந்த தீர்வையும் தராது. நம் இளவரசரின் ஆயுள் அவ்வளவு தான் ! அவருக்கு நிர்ணயிக்கப்பட்டதை மாற்ற யாராலும் இயலாது. துன்பத்தை விடுங்கள். நடக்கப் போவதை இனி கவனிப்போம். தங்களால் அனுப்பப்பட்ட ஒற்றர்கள் திருச்செந்தூரில் இருந்து திரும்பி விட்டனர். அவர்கள் சொன்ன தகவலின்படி நாம் போருக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். அசுரகுலத்திற்கு கெட்ட நேரம் வந்திருக்கிறது. அதில் இருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்குரிய ஆலோசனைகளை உடனடியாகச் செய்தாக வேண்டும் மந்திராலோசனை கூட்டத்தை உடனடியாக கூட்டுங்கள், என்றான். திருச்செந்தூரில் இருந்து திரும்பிய ஒற்றர்களிடம் சூரபத்மன் அங்கு நடந்தது பற்றி விசாரித்தான். அவர்கள் சூரனிடம், மகாபிரபு ! இளவரசர் வஜ்ரபாகுவைக் கொன்ற வீரபாகு மின்னலென பாய்ந்து திருச்செந்தூர் வந்தான். அவனை முருகன் ஆலிங்கனம் செய்து கொண்டார். இங்கு நடந்த விபரங்களை விளக்கமாகச் சொன்னான். முக்கியமாக நம் இளவரசர் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டதும் தேவர்களெல்லாம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். ஜெயந்தனையும், மற்றவர்களையும் நீங்கள் விடுதலை செய்ய மறுத்து விட்டதால், தங்களுடன் போரிடவும் அந்த முருகன் தயாராகி விட்டார். உங்கள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார், என்றனர். உடனே சூரன், அந்த பிரம்மாவைக் கூப்பிடு. வீரபாகுவால் சிதைக்கப்பட்ட நம் நகரத்தை முதலில் சரி செய்வோம். பின்னர் போருக்கு ஆயத்தமாவோம். என்றான். ஒற்றர்கள் தலை குனிந்தனர். பிரபு ! பிரம்மா இனி இங்கு வரமாட்டார். அவர் முருகன் இருக்கும் திருச்செந்தூரில் அவர் அருகிலேயே அமர்ந்து விட்டார். எனவே, நாம் மாற்று ஏற்பாடு தான் செய்ய வேண்டும், என்றனர். உடனே சூரன் மற்றொரு அண்டத்தின் பிரம்மாவை வரச்செய்து, அவரைக் கொண்டு நகரை மீண்டும் கட்டினான்.

சூரபத்மனின் மற்றொரு மகன் பானுகோபன்

இதன்பிறகு யாரை போருக்கு அனுப்புவதென்ற பேச்சுவார்த்தை நடந்தது. வீரம்மிக்க பல அசுரர்கள் முன்வந்தனர். சூரபத்மனின் புதல்வர்களான இரண்யன், சிங்கமுகன் ஆகியோர் போருக்கு செல்ல முன்வந்தனர். காலஜித், கண்டன், அனவன், சிங்கன் ஆகிய படைத்தலைவர்கள் போருக்கு முன்வந்தனர். அடுத்து வீரத்திலகனான பானுகோபன் எழுந்தான். இவன் சூரபத்மனின் வீரத்திருமகன், தந்தையே ! என் சகோதரன் வஜ்ரபாகுவைக் கொன்ற கூட்டத்தை என் கையால் அழித்தால் தான் எனக்கு தூக்கமே வரும். அந்த முருகனைப் பந்தாடிவிட்டு வருகிறேன். உத்தரவு கொடுங்கள், என்றான் இப்படியாக முருகனுடன் போருக்குச் செல்ல, பலர் ஆர்வமாக முன்வர, சூரபத்மன் மகிழ்ச்சியடைந்திருந்த வேளையில், யாரும் எதிர்பாராத விதமாக ஒரு கருத்தைச் சொன்னான் சூரபத்மனின் தம்பி சிங்கமுகன். அண்ணா ! நீங்கள் எல்லாரும் இப்படி பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமேயில்லை. படைத்தலைவர்கள் அவசரப்படுகிறார்களே ஒழிய சிந்திக்கவில்லை. உங்களில் யார் போருக்குச் சென்றாலும் உயிரிழப்பது உறுதி. யாரோ ஒரு வீரபாகு. அவன் முருகனுக்கு தூதுவன். ஒரு தூதுவனே நம் அருமை மைந்தன் வஜ்ரபாகுவைக் கொன்றிருக்கிறான் என்றால், அவனது தலைவனான முருகனின் ஆற்றலைக் கேட்கவும் வேண்டுமா ? வேண்டாம் அண்ணா ! நான் சொல்வதைக் கேளுங்கள். அந்த முருகனிடம் நாம் சரணடைந்து விடுவோம். தேவர்களை விடுதலை செய்து விடுவோம். பின்னர் நம் நாடு நகரத்தைக் காப்பாற்றிக் கொள்வோம். பராக்கிரமம் மிக்க அவனிடம் போரிட்டு நம் இனத்தையே அழிப்பதை விட இது நல்ல யோசனை தானே ! என்றான். இப்படி ஒரு ஆலோசனை தம்பி சிங்கமுகனிடம் இருந்து வருமென சூரபத்மன் எதிர்பார்க்கவில்லை. அசுர சபையும் முகம் சுளித்தது. சூரபத்மன் ஆவேசத்துடன், முட்டாளே ! உனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா ? என்று சீறினான்.

சிங்கமுகா ! அந்தச் சிறுவன் முருகனைக் கண்டா நடுங்குகிறாய் ? கேவலம். அசுர குலத்துக்கே கேவலம்... உன்னைத் தம்பியாக அடைந்ததற்காக வேதனைப்படுகிறேன், என்றான் சூரபத்மன். நல்லதை எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்ளாத அண்ணனிடம் வயதில் குறைந்த தம்பி என்ன செய்ய இயலும் ? இவனுக்கேற்ப பேசிவிட்டு போவதே நல்லது என எண்ணி, அப்படியே பேச்சைத் திருப்பினான். அண்ணா ! நீங்கள் சொல்வதும் சரிதான். உங்கள் பராக்கிரமம் பற்றி நான் அறிவேன். இருந்தாலும் ஒரு சிறுவனைக் கொன்ற பழி பாவம் உங்களை அடைந்து விடக்கூடாதே என்று தான் அப்படி சொன்னேன். நீங்கள் எங்கே... அந்த சிறுவன் எங்கே ? உங்கள் தகுதிக்கு நீங்கள் அவனுடன் போரிட செல்ல வேண்டாம். நானே போகிறேன். அவனை இழுத்து வருகிறேன் என்று சொல்லவும் சூரபத்மனுக்கு உள்ளம் குளிர்ந்து விட்டது. சிங்கமுகா ! என் உள்ளத்தின் உறுதியை அறிய நீ அப்படி பேசியிருப்பாய் என அறிந்தேன் நீ சுத்த வீரன். உன்னைப் போன்றவர்கள் அவனுடன் போருக்கு போகக்கூடாது. நம் குழந்தை பானுகோபனை அனுப்புவோம். அந்த சிறுவனுக்கு இந்த சிறுவன் தான் சரியான ஆள். சூரியனை வென்றதால் தானே இவனுக்கு பானுகோபன் என்று பெயர் வைத்தோம். அப்படிப்பட்ட திறமைசாலியின் முன் அந்த முருகனால் நிற்க முடியுமா ? நீ சென்று ஓய்வெடு, பிறகு பார்த்துக் கொள்ளலாம், என கொக்கரித்தான். அசுரகுலத்தின் அழிவு உறுதி என எண்ணி வருந்தியபடியே சிங்கமுகன் அங்கிருந்து போய்விட்டான்.

முருகனுக்கு வழிவிட்ட சமுத்திரராஜன்

இதனிடையே முருகப்பெருமான் படைகளுடன் வீரமகேந்திரபட்டணத்திற்கு கிளம்பினார். சூரபத்மனை அழித்தே தீருவது என்ற முடிவில் இருந்த அவர், கடல் கடந்து அவ்வூருக்குள் செல்ல வேண்டியிருப்பதை அறிந்தார். முருகன் தண்ணீரில் கால வைத்தாரோ என்னவோ, கடலரசன் பணிந்தான். தண்ணீர் அங்கே வற்றிப் போய்விட்டது. அதன் வழியே படைகள் வீரமகேந்திரபட்டணத்தை ஒட்டிய இடத்துக்கு சென்று விட்டன. விஸ்வகர்மாவை அழைத்த முருகன், அங்கே நானும் படைகளும் தங்குவதற்கு ஒரு பட்டணத்தை அமைக்க உத்தரவிட்டார். கணநேரத்தில் விஸ்வகர்மா ஒரு பட்டணத்தை அமைத்து விட்டார். அவ்வூருக்கு கந்தமாதனர் என பெயர் சூட்டப்பட்டது. முழுக்க முழுக்க தங்கத்தால் கட்டப்பட்ட அந்நகரம் ஜொலித்தது. படைகள் அங்கிருந்த வீடுகளில் சுகமாகத் தங்கினர். முருகப்பெருமான் கடல்கடந்து தன் பட்டணத்தருகே முகாமிட்டிருப்பதை தூதுவர்கள் மூலம் சூரபத்மன் அறிந்தான். கடலரசனான சமுத்திரராஜனை அழைத்தான். ஏய் சமுத்திரராஜா ! என்னைக் கேளாமல் எப்படி முருகனின் படைகளுக்கு வழிவிட்டாய். உன்னைத் தொலைத்து விடுகிறேன், என்றான். நடுநடுங்கிய சமுத்திரராஜன் மகாசூரரே ! நான் என்ன செய்வேன் ! முருகப்பெருமானும், அவரது பூதப்படைகளும் உள்ளே இறங்கியதுமே நான் சேறும் சகதியுமாகி விட்டேன். அவரது வேலாயுதம் சிந்திய ஒளியில் வற்றிப் போய் தூசியும் துகளுமாகி விட்டேன். மணல் மட்டுமே மிஞ்சியது. அதன்வழியே அவர்கள் நடந்து சென்று விட்டனர். நான் மீண்டும் குளிர்ந்த திரவநிலை அடைவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. என்னை மன்னித்து விடுங்கள் மகாபிரபு என்று சொன்னான். சூரன் அவனை விரட்டிவிட்டு, போருக்கான ஆயத்தத்தில் இறங்கினான். மகன் பானுகோபனை அழைத்து, அந்த முருகனை கட்டி இழுத்து வா. அசுரகுல பெருமையைக் காப்பாற்று, என உத்தரவிட்டான்.

பானுகோபன் தோற்று ஓடல்

பானுகோபன் ஆர்ப்பரித்து எழுந்தான். பலலட்சம் படை வீரர்களை திரட்டிக் கொண்டு முருகன் தங்கியிருக்கும் இடம் வந்தான். முருகப்பெருமான் வீரபாகுவை அழைத்து, அந்த பானுகோபனைக் கொல்வது உன் வேலை, என உத்தரவிட்டார். வீரபாகுவுக்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை. முருகன் இட்ட கட்டளையில் வெற்றிபெற பல்வேறு வியூகங்களை வகுத்து பானுகோபனுடன் போராடினான். இருவருமே தீரர்கள் என்பதால் ஒருவர் மாறி ஒருவர் மயக்கநிலைக்குச் சென்று மீளுமளவு போராடினர். எத்தனை அஸ்திரங்களை மாறி மாறி எய்தாலும், அவர்களால் ஏதும் செய்ய முடிய வில்லை. கடைசியாக தன்னிடமிருந்த மோகாஸ்திரத்தை பானுகோபன் எய்தான். இது எப்பேர்ப்பட்டவரையும் கட்டி போட்டுவிடும். அவன் எதிர்பார்த்தபடியே வீரபாகுவும், பூதப்படைகளும் அந்த அஸ்திரத்துக்கு கட்டுப்பட்டனர். மயங்கிக் கிடந்த அவர்கள் மீது பாணங்களை எய்தான் பானுகோபன். ரத்த வெள்ளத்தில் பலர் மடிந்தனர். வீரபாகு போன்றவர்கள் எழ முடியாமல் மயங்கி விட்டனர். கருணைக்கடலான முருகப்பெருமான் இந்தக் காட்சியைக் கண்டார். தன்னிடமிருந்த அமோகாஸ்திரத்தை பானுகோபன் மீது எய்தார். அது மோகாஸ்திரத்தை அடித்து நொறுக்கியது. மோகாஸ்திரம் சக்தி இழந்ததும் மயங்கிக் கிடந்த பூதப்படைகள் எழுந்தன. இது முருகனின் கருணையால் நடந்தது என்பதையறிந்து அவரை போற்றிப் புகழ்ந்தனர். பின்னர் ஆக்ரோஷமாக சண்டையிட்டனர்.

வீரபாகு தன்னிடமிருந்த பாசுபதாஸ்திரத்தை எடுத்தான். பானுகோபன் மீது எய்யத் தயாரானான். இந்த அஸ்திரத்தை தடுக்கும் அஸ்திரத்தை பானுகோபன் கொண்டுவரவில்லை. அவனுக்கு என்ன செய்வதென தெரியவில்லை. பாசுபதாஸ்திரம் தன் மீது ஏவப்பட்டால், உயிர் போவது உறுதி என்பது தெரிந்து விட்டது. போரில் இருந்து பின் வாங்கினான் தேரை திருப்பினான். அரண்மனையை நோக்கி சென்றான். அவனை அவமானம் பிடுங்கித் தின்றது. மீண்டும் போர்க்களம் போவேன். அந்த வீரபாகுவை ஒரு நாழிகை (24 நிமிடம்) நேரத்தில் கொல்வேன் இல்லாவிட்டால், அக்னி வளர்த்து அதில் விழுந்து உயிரை விடுவேன், என்று சபதம் செய்தான். அந்த சபதம் அசுரகுலத்தை உலுக்கியது. தன் குமாரன் பானுகோபனின் தோல்வி சூரபத்மனை எரிச்சலடைய செய்தது. கடும் கோபமாக இருந்த அவன், இனி யாரையும் நம்பி பயனில்லை. நானே நேரில் யுத்தகளத்திற்கு செல்கிறேன். அந்தச்சிறுவன் முருகனை ஒரு கணத்தில் பிடித்து வருகிறேன். என்று தன் பங்கிற்கு சபதம் செய்துவிட்டு இரவு முழுவதும் தூங்காமல் இருந்தான். மறுநாள் லட்சக்கணக்கான படைகள் தயாராயின.

அதிசூரன், அசுரேந்திரன் வதம்

சூரபத்மன் தன் தம்பி மகன்களான அதிசூரன், அசுரேசன் ஆகியோர் தலைமையில் படைகளை அணிவகுக்கச் செய்தான். யுத்த தொடர்பான வாத்தியங்கள் எழுப்பிய சப்தம் விண்ணைப் பிளந்தது. ஆரவார ஓசைக் கிடையே சூரபத்மன் போர்களத்திற்கு  சென்றான். சூரபத்மன் போர்க்களத்திற்கு வந்த செய்தி அவர் தலைவன் இந்திரன் மூலமாக முருகனுக்கு தெரியவந்தது. உலகையே காக்கும் பெருமான் பூத படைகளுடன் போர்களத்தை சென்றடைந்தான். கடும் போர் நடந்தது. பாறைகளையும், மரங்களையும் பிடுங்கி அசுரர்கள் மீது வீசி ஏராளமானோரை முருகனின் படையினர் கொன்றனர். சிங்கமுகனின் மகனான அதிசூரன் இதுகண்டு திகைத்தான். இருந்தாலும் மனம் தளராமல் முருகனின் படையை நோக்கி தேரில் விரைந்து சென்றான். பூதங்களில் மிகவும் பலமிக்க உக்கிரன் என்பவன் அவனை தடுத்து நிறுத்தி தண்டாயுதத்தால் மார்பில் அடித்தான். இப்படியாக இருவரும் கடுமையாக போரிட்டனர். அதிசூரன் விடுத்த பாணங்களை எல்லாம் உக்கிரன் விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டான். இதனால் அதிசூரனுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் நாராயண அஸ்திரத்தை எடுத்து உக்கிரன் மீது எய்தான். தனது உயிர் போகப்போவது உறுதி என தெரிந்ததும் உக்கிரன் தன் மனதில் முருகப்பெருமானை நினைத்துக்கொண்டான். தன் நாக்கை வெளியே நீட்டினான். நாராயண அஸ்திரம் அவனது நாக்கில் வந்து தங்கியது. அதை அப்படியே விழுங்கி ஏப்பம் விட்டான். தன்னிடமிருந்த வலிமைவாய்ந்த அஸ்திரத்தையே விழுங்கிவிட்ட உக்கிரனைப் பார்த்து அதிசூரன் ஆச்சரியப்பட்டான். அவன் மட்டுமல்ல, நாராயண அஸ்திரத்திற்கு மயங்காத உக்கிரனைப் பார்த்து வேதர்களும் ஆச்சரியமடைந்தனர்.

அங்கு நின்ற பிரம்மாவிடம், படைப்புக் கடவுளே ! நாராயண அஸ்திரம் என்பது மிகவும் சக்திவாய்ந்த ஒன்று. அது யாரையும் அழிக்காமல் விட்டதில்லை. அப்படியிருந்தும் உக்கிரன் எப்படி தப்பித்தான் ? என கேட்டனர். அதற்கு பிரம்மா, யார் ஒருவன் சிவபெருமானையும், முருகப்பெருமானையும் மனதார வணங்குகிறானோ அவனை எத்தகைய சக்தி உள்ளவர்களாலும் வதைக்க முடியாது. அதன்படியே இவன் தப்பித்தான். இதைத்தவிர வேறு எந்த ரகசியமும் இல்லை என்றார். இதன்பிறகு அதிசூரன் பாசுபதாஸ்திரத்தை பிரயோகித்தான். அதையும் தடுக்க இயலாமல் உக்கிரன் தலைகுனிந்து நின்றான். ஆனால் உள்ளத்திற்குள் சிவபெருமானை பக்தியோடு தியானித்துக் கொண்டிருந்தான். இதனால் அந்த அஸ்திரம் அவனை தாக்கவில்லை. சிவபெருமானையே சென்றடைந்தது. யார் ஒருவன் ஆயுதம் இல்லாமல் போர்க்களத்தில் நிற்கிறானோ, அவன் மீது பாசுபதாஸ்திரத்தை பிரயோகித்தால் அது இறைவனிடமே சென்றடைந்துவிடும் என்ற ரகசியத்தை அறிந்திருந்தும், அறிவில்லாமல் அதிசூரன் செய்த காரியத்தால் எந்த ஆயுதமும் இல்லாமல் அவனும் போர்க்களத்தில் நின்றான். இதன்பிறகு தண்டத்தை எடுத்துக்கொண்டு உக்கிரன்மீது அதிசூரன் பாய்ந்தான். அதை பிடுங்கிய உக்கிரன், அதிசூரனை அடித்தே கொன்றுவிட்டான். இது கண்டு முருகனின் படையினர் ஆரவாரம் செய்தனர்.

தன் பெரியப்பா சிங்கமுகனின் மகன் அதிசூரன் கொல்லப்பட்டது கண்டு தாரகனின் மகனான அசுரேந்திரன் உக்கிரன் மீது பாய்ந்தான். பல்லாயிரம் பூத வீரர்கள் அவனை சூழ்ந்தனர். இருந்தாலும் அவர்களையெல்லாம் தன் ஒற்றைக் கையினால் அடித்து விரட்டினான் அசுரேந்திரன். வீரபாகுவையும் அவன் விட்டுவைக்கவில்லை. அவனுடைய ரதத்தை உடைத்தெறிந்தான். அதிபயங்கர கோபத்துடன் வீரபாகு வானில் பறந்தான். முருகப்பெருமானை வணங்கியபடியே வாள் ஒன்றை எடுத்து அசுரேந்திரன் மீது பாய்ந்து அவனுடைய ஒரு கையை வெட்டினான். அசுரேந்திரன் கலங்கவில்லை. தன் மற்றொரு கையால் தண்டாயுதத்தை எடுத்து வீரபாகுவை அடித்தான். இருவரும் கடுமையாக போரிட்டனர். ஒரு வழியாக அசுரேந்திரனை வெட்டி வீழ்த்தினான் வீரபாகு. பயந்துபோன அசுர வீரர்கள் திசைக்கு ஒருவராக ஓடினர்.

 
மேலும் கந்த புராணம் »
temple news
முருகன் போற்றி: மூவிரு முகங்கள் போற்றி, முகம்பொழி கருணை போற்றி, ஏவருந்துதிக்க நின்ற ஈராறுதோள் போற்றி ... மேலும்
 
temple news
மகாவிஷ்ணுவின் அருள் பெற்ற அசுரர்கள்: அசுரன் தாரகனுக்கு ஸ்ரீமன் நாராயணன் பள்ளி கொண்டிருக்கும் வைகுண்ட ... மேலும்
 
temple news
போர்க்களத்தில் சூரபத்மன்! வேறு வழியே இல்லாததால் சூரபத்மன் களத்தில் இறங்கினான். அவன் இறங்கிய உடனேயே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar