Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அகிலத்திரட்டு அம்மானை பகுதி-1 அகிலத்திரட்டு அம்மானை பகுதி-3 அகிலத்திரட்டு அம்மானை பகுதி-3
முதல் பக்கம் » அகிலத்திரட்டு அம்மானை!
அகிலத்திரட்டு அம்மானை பகுதி-2
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2012
05:06

அந்தூர்ப் பதியில் அலங்கரித்த நாட்கழித்து
ஆதி கயிலை அரனா ரிடத்தில்வந்து
வேதியரும் நன்றாய் விளம்புவா ரம்மானை
சூரபற்ப னென்ற சூரக்குலங் களைத்துணித்து
வீரம் பறைந்ததினால் மேலுமந்த அவ்வுகத்தில்
இரணியனாய்த் தோன்றி நின்றஇ ராச்சதனைக்
கொன்னு கிரேதா குவலயமும் நானழித்து
முன்னு கரந்திருந்த ஆறு முகவேசம்
செந்தூரு வாரி திரைமடக்கில் வாழ்ந்திரென்று
வந்தோங் காணய்யா மலர்ப்பாதந் தெண்டனிட
என்றேதா னாதி ஈசுரரோ டேதுரைப்பார்
அன்றேதா னீசர் அருளுவா ராயருக்கு

திரேதா யுகம் - இராவணன் பாடு

முன்னே குறோணி முடிந்ததுண் டாறதிலே
இன்னமூணு துண்டம் இருக்குதுகாண் மாயவரே
என்றீசர் சொல்ல எல்லோருந் தான்கூடி
அன்றிருந்த துண்டம் அதிலேயொரு துண்டமதை
உருவாய்ப் படைத்து உயிர்க்கொடுக்கு மவ்வளவில்
அருகே யிருந்த அச்சுதரு மேதுரைப்பார்
முன்னே இவனும் முற்பிறப் பானதிலே
என்னோடே பேசி எதிர்த்தான் காணீசுரரே 20
 
ஆனதா லிப்பிறப்பு அரக்க னிவன்றனக்கு
ஈனமில்லாச் சிரசு ஈரஞ் சாய்ப்படையும்
பத்துச் சிரசும் பத்துரண்டு கண்காதும்
தத்துவங் களோடே தான்படையு மென்றுரைத்தார்
மாய னுரைக்க மறையோ னகமகிழ்ந்து
வாய்சிரசு பத்தாய் வகுத்தார்கா ணம்மானை
கூடப் பிறக்கக் குண்டிலிட்ட ரத்தமதை
வாட அரக்கர் குலமாய்ப் பிறவிசெய்தார்
அப்போ படைக்கும் அவ்வளவில் மாயவனார்
மெய்ப்பான மேனிதனில் வியர்வை தனையுருட்டி
விபீஷண னென்று மெய்யுருவந் தானாக்கிக்
கவுசலமா யரக்கன் தம்பியெனக் கருத்தாய்க்
கூடி யிருந்து அரக்கன் குறியறிந்து
வேடிக்கை யாக வீற்றிரென்று தானுரைத்தார்

இராவணன் வரம் வேண்டல்

பத்துத் தலையான பாவி அரக்கனவன்
மற்று நிகரொவ்வா வாய்த்தபர மேசுரரை
வணங்கி வரம்வேண்ட மனதிற் பிரியமுற்று
இணங்கியே ஈசர்பதம் இறைஞ்சிநின்றா னம்மானை
தவத்தருமை கண்டு தலைபத் தரக்கனுக்குச்
சிவத்தலைவ ரானோர் செப்புவா ரம்மானை 40

காதுரண்டு பத்து கண்ணிருப துள்ளோனே
ஏது வரம்வேணும் இப்போது சொல்லுமென்றார்
அப்போது ஈசுரரை அரக்க னவன்வணங்கி
இப்போது ஈசுரரே யான்கேட்கு மவ்வரங்கள்
தருவோ மெனவே தந்தி முகன்பேரில்
உருவா யெனக்கு உறுதிசெப்பு மென்றுரைத்தான்
அப்படியே ஈசர் ஆணையிட்டுத் தான்கொடுக்க
சொற்படிகேட் டேயரக்கன் சொல்லுவா னப்போது
மூன்றுலோ கத்திலுள்ள முனிவர்தே வாதிகளும்
வேண்டும்பல ஆயுதமும் விதம்விதமா யம்புகளும்
வீரியமாய் நானிருக்கும் விண்தோயுங் கோட்டைசுற்றிச்
சூரியனுஞ் சந்திரனும் சுற்றியது போய்விடவும்
சிவனா ரொருகோடி செய்ய வரந்தரவும்
புவனம் படைக்கும் பிரம்மா வொருகோடி
உமையா ளொருகோடி உற்ற வரந்தரவும்
இமையோ ரரைக்கோடி இப்படியே உள்ளவரம்
மூணரைக் கோடி உள்ளவர மத்தனையும்
கொடுக்கு மளவில் குன்றெடுத்தோன் தன்தேவி 60

அலைமேல் துயிலும் அச்சுதனார் தன்தேவி
சிலைவே லெடுத்துச் செயிக்கவல்லான் தன்தேவி
அலங்கா ரமாகி அன்னைப் பொழுததிலே
கலங்கா தான்தேவி கயிலைஉமை யாளருகே
மணிமேடை தன்னில் மகிழ்ந்திருக்கு மவ்வளவில்
கெணியா மலேயரக்கன் கெடுவ தறியாமல்
அம்மை தனைக்கண்டு அயர்ந்து முகஞ்சோர்ந்து
கர்ம விதியால் கைமறந்து நின்றனனே
நின்ற உணர்வை நெடிய சிவமறிந்து
அன்றந்த அரக்கனுக்கு ஆதிவரங் கொடுத்து
கேட்ட வரங்கள் கெட்டியாய்த் தான்கொடுத்து
நாட்ட முடன்சீதை நகையா லழிவையென்று
இரக்கமில் லான்கேட்ட ஏற்றவரங்க ளெல்லாம்
அரக்க னவன்றனக்கு ஆதிமிகக் கொடுத்தார்
ஆதிகொடுத்த அவ்வரங்க ளத்தனையும்
நீதியில் லான்வேண்டி நெடியோன் தனைவணங்கிக்
கொண்டுபோ கும்போது குன்றெடுத்த மாயவனார்
கண்டு மறித்துக் கௌசலமிட் டேமாயன்
அரைக்கோடி வரமாய் ஆக்கிவிட்டார் மாயவரும்
சரக்கோடி மூணும் தான்தோற்றுப் போயினனே 80

ஆதியைத் தொழுது போற்றி அரக்கனும் வரமும் வேண்டி
சீரிய சீதை யாலே சீவனுக் கிடறும் பெற்று
வாரிய மூணு கோடி வரமது தோற்றுப் பின்னும்
மூரியன் மூணு லோகம் முழுதுமே யடக்கி யாண்டான்

இராவணன் கொடுமை

முக்கோடி வரத்தை உச்சிக்கொண்டார் மாயவரும்
அக்கரைக் கோடி அரக்கன்வரம் கொண்டேகித்
தேவரையும் மூவரையும் தேவேந் திரன்வரையும்
நால்வரையும் வேலைகொண்டு நாடாண்டா னம்மானை
வாசு அரக்கன் மணிமேடை தூராட்டால்
வீசுவேன் வாளாலே வெட்டுவேன் பாருவென்பான்
வருண னவன்மேடை வந்துத்தொளி யாதிருந்தால்
மரணம்வரும் வரையும் வலுவிலங்கில் வைப்பேனென்பான்
சந்திரருஞ் சூரியரும் சாய்ந்துமிகப் போகாட்டால்
சந்து சந்தாகச் சரத்தாலறுப் பேனென்பான்
தெய்வ மடவார்கள் திருக்கவரி வீசாட்டால்
கைவரைந்து கட்டிக் கடுவிலங்கில் வைப்பேனென்பான்
நாலு மறையும் நல்லாறு சாஸ்திரமும்
பாலு குடஞ்சுமந்து பணிந்துமுன்னே நில்லாட்டால்
அஸ்திரத்தால் வாந்து அம்மிதனில் வைத்தரைத்து
நெற்றிதனில் பொட்டிடுவேன் நிச்சயமென் பானரக்கன்        100

வானவர்க ளெல்லாம் மலரெடுத்து என்காலில்
தானமது பண்ணித் தாழ்ந்துநில்லா தேயிருந்தால்
சாகும் வரைக்கும் தடியிரும்பி லிட்டவரை
வேகும் படிக்கு வேள்வியதி லிட்டிடுவேன்
மாமறலி மூவர் வந்தென்சொல் கேளாட்டால்
காமனையும் ஈசன் கண்ணா லெரித்ததுபோல்
என்னுடைய கண்ணால் இயமனையுங் காலனையும்
துன்னுடைய வல்லத் தூதனையும் நானெரிப்பேன்
இவ்வுகத்தி லுள்ள இராசாதி ராசரெல்லாம்
முவ்வுகமுங் கப்பமிங்கே முன்னாடி தாராட்டால்
நெருப்பெடுத் திட்டிடுவேன் நேரேகொண்டு வாராட்டால்
எரிப்பே னொருஅம்பால் இராசாதி ராசரையும்
இப்படியே பாவி இந்திரலோ கம்வரையும்
அப்படியே அரக்கன் அடக்கியர சாண்டிருந்தான்

தேவர்கள் முறையம்

அப்படியே அரக்கன் ஆண்டிருக்கு மந்நாளில்
முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே
தேவாதி தேவர் தினமேவல் செய்திடவே
மூவாதி மூவர் ஊழியங்கள் செய்திடவே
முறுக்கம தால்பாவி ஊழியங்கள் கொண்டதினால்
பொறுக்க முகியாமல் பூலோகத் தார்களெல்லாம் 120

தெய்வ ஸ்திரீயும் தேவாதி தேவர்களும்
அய்யா திருமாலுக்(கு) அபயம் முறையமென
அபயமிடு மொலியை அச்சுதருந் தானமர்த்திக்
கபயமிடும் வேதன் கயிலையது தானேகி
ஆதி பரமன் அடியைமிகப் போற்றி
சோதித் திருமால் சொல்லுவா ரம்மானை
பத்துத் தலையுடைய பாவி யரக்கனுக்கு
மற்றும் பலகோடி வரங்கள்மிக ஈந்ததினால்
தேவரையும் மூவரையும் தேவேந்தி ரன்வரையும்
நால்வரையும் வேலைகொண்டு நாடாண்டா னம்மானை
ஆனதால் தேவர் அரிக்கே முறையமிட
ஈனமாய்க் கேட்டு இருக்க முடியுதில்லை
பள்ளி யுறக்கம் பரிவாய் வருகுதில்லை
தள்ளினால் தேவரையும் தற்காப்பா ராருமில்லை
என்ன வசமாய் எடுப்போஞ் சொரூபமது
தன்னிகரில் லாதவனே சாற்றுவீ ரென்றனராம்
மாய னுரைக்க மறையோ னகமகிழ்ந்து
தூயவரு மங்கே சொல்லுவா ரம்மானை
பாவி யரக்கனுக்குப் பண்டுநா மீந்தவரம்
தாவிப் பறிக்கத் தானாகா தென்னாலே 140

இராமாவதாரம்

என்றரனார் சொல்ல எம்பெருமா ளச்சுதரும்
அன்றெம் பெருமாள் ஆலோ சனையாகி
என்னை மகவாய் எடுக்கத் தசரதரும்
முன்னே வரங்கேட்டு உலகி லவரிருக்க
அன்னுகத்தி லுள்ள அரசன் தினகரனும்
பொன்னு திருவைப் பிள்ளையென வந்தெடுக்க
நெட்டையா யரசர் நெடுநாள் தவசிருக்க
சட்டமதைப் பார்த்துத் தானனுப்பு மீசுரரே
பின்னும் பெருமாள் பெரியோனைப் பார்த்துரைப்பார்
முன்னு முறையாய் முறைப்படியே தேவரையும்
வானரமாய்ப் பூமியிலே வந்து பிறந்திருக்கத்
தானவரே யிப்போ தான்படைக்க வேணுமென்றார்
ஏவலா யென்றனுக்கு இப்பிறப் பானதிலே
காவலா யென்றனுக்குக் கைக்குள்ளே நிற்பதற்குப்
பள்ளிகொண்டு நானிருந்த பாம்புரா சன்தனையும்
வெள்ளிமணி மெத்தையையும் வீற்றிருக்கு மாசனமும்
இம்மூணு வேரும் என்னோ டுடன்பிறக்கச்
சம்மூலப் பொருளே தான்படையு மென்றுரைத்தார்
மாய னுரைக்க மறையோ னகமகிழ்ந்து
தூயவரு மந்தப் படியே தெளிந்திருக்கப் 160

படைக்கும் பொழுதில் பரதேவ ரெல்லோரும்
அடைக்கலமே மாயன் அடியெனத் தெண்டனிட்டார்
தெண்டனிட்டுத் தேவரெல்லாம் செப்புவா ரம்மானை
மண்டல மெங்கும் மயமாய் நிறைந்தோனே
எங்களை லோகமதில் இப்போ படைப்பீரால்
மங்களமா யுள்ள வலுவும் பெலமதுவும்
ஆயனுக்கு நாங்கள் அடிபணிந் தேவல்செய்ய
நேயனே நீரும் நெறியாய்ப் படையுமென்றார்
ஈசர் மகிழ்ந்து இப்படியே தான்படைக்க
வாசத் தசரதரும் வந்து தினகரரும்
மகவாசை யுற்று மகாபரனைத் தானோக்கி
அகப்பாச மற்று அதிகத் தவமிருந்து
நாத னறிந்து நன்மறையைத் தான்பார்த்து
பாத னரக்கன் பத்துச் சிரத்தானைத்
தேவர் துயரமறத் திருமால் தசரதற்கு
மூவ ருடன்கூடி உலகமதி லேபிறக்க
அரக்கர் குலமறவே அம்மைசீதா லட்சுமியை
இரக்கம்போ லுள்ள ஏற்ற தினகரற்கு
மகவாய்ப் பிறக்க மறைதான் விதித்தபடி
செகமீதில் ஞான சிருஷ்டி சிவமயமாய் 180

இப்படியே வேதத்(து) எழுத்தின் படியாலே
அப்படியே ஈசர் அமைக்கத் துணிந்தனராம்
உடனே தசரதற்கு உற்றதிரு மாலைத்
திடமாய்ப் பிறவி செய்ய எனத்துணிந்தார்
அப்போது ராமர் அய்யா திருமாலை
இப்போ துபடைக்க ஈசுரனார் சம்மதிக்கப்
படைக்கும் பொழுது பரமசிவ னாரை
நடக்குந் திருமால் நாதனைப்பார்த் தேதுரைப்பார்
அவ்வுலகி லென்னை அதிகத் தசரதற்கு
இவ்வுலகு விட்டங்(கு) என்னைப் பிறவிசெய்ய
வந்த விபரம் வகைவகையா யீசுரரே
என்றனக்குத் தானமைத்து என்னை யனுப்புமென்றார்
மாய னிதுகேட்க மறையோ னகமகிழ்ந்து
தூயவரு மங்கே சொல்லுகிறா ரம்மானை
பரலோ கமென்ற பைம்பொன் கயிலையதில்
சாலோ கந்தன்னில் தானிருந்த மாமுனிவர்
துசுவீசு மாமுனியும் சுகசீல மாமுனியும்
விசுவாச மாயிருந்து விசாரம திட்டனராம்
வாருந் துசுவீசு மாமுனியே நீர்கேளும்
நீரும் நாமுங்கூடி நீணிலத்தில் போயிருந்து 200

நானுமொரு பெண்மதலை நல்ல மகவாகத்
தானுமோ ராண்மதலை தலைவன் தனைவாங்கிச்
சம்மந் தமாகித் தானிருந்து நாடாண்டு
உம்மந் தமான உதவிபெற வேணுமென்று
இருபேரு மிருந்து எனைநினைந்து மாமுனிவர்
உருவேற்றி வேள்வி ஓம மதுவளர்க்க
இந்தப் படியே இவர்களிரு மாமுனியும்
எந்தன் தனைநோக்கி இருந்தார் தவசுகண்டீர்

குறு முனி சாபம்

அல்லாமற் பின்னும் அரக்கன்ரா வணன்தனக்குக்
கொல்லாமற் கொல்லவொரு குறுமுனிவன் சாபமுண்டு
அரக்கன் வரம்வேண்டி அவன்போகு மவ்வளவில்
இரக்கமாய் மாமுனியும் இருந்தான் தவசதிலே
தவசுநிலை பாராமல் தலைபத் தரக்கனுந்தான்
பவிசு மதமாய்ப் படுவ தறியாமல்
முனியையவன் காலால் ஒத்தினான் மாபாவி
அநியாயப் பாவி அரக்க னவன்றனக்குக்
கூறினான் மாமுனியும் கொள்ளைகொண்டச் சாபமது
தூறின சாபத் துல்லியத்தை நீர்கேளும்
மாலை மிகப்போற்றி வாய்த்ததவம் நிற்கையிலே
காலெடுத்து ஒத்தினையே கள்ளாவுன் றனக்கு 220

இந்தத் தவசுதனில் ஈசுரரைத் தானினைந்து
உந்தன் தனையறுக்க ஒருராம பாணமது
வந்து பிறந்திடவும் மாய னதைத்தானெடுத்து
உந்தனுட மார்பில் ஊடுரு வவிடவும்
துசுவீசு மாமுனிவன் தசரதராய்ப் பூமிதனில்
பிறந்து இருந்திடவும் பின்னுஞ் சுகசீல
மாமுனியும் தினகரராய் வந்து பிறந்திடவும்
ஓமுனிக்கு லட்சமியும் வில்லோ டுதித்திடவும்
இராமபா ணத்தோடே இராமர் தசரதற்கு
முராகமத் தின்படியே உலகி லுதித்திடவும்
பாணமது தன்னாலும் பத்தினிதன் கற்பாலும்
நாணங்கெட் டரக்காவுன் நல்லதலைப் பத்திழந்து
சேனைத் தளமிழந்து சிரசிழந்து வாழ்விழந்து
வானரங்கள் வந்துன் வையகத்தைச் சுட்டழித்து
உன்சடல மெல்லாம் உழுத்துப் புழுப்புழுத்துத்
தன்சடலப் பட்டுச் சண்டாளா நீ மடிவாய்
வேண்டுவேன் தவசு விமலன் தனைநோக்கி
ஆண்டுபன்னி ரண்டாய் அவன்றவசு நின்றனனே
நின்ற தவத்தின் நிலைமையறிந் துமையாள்
அன்றைக்கு வந்து அருளினா ளாயிழையும் 240

உரைத்த மொழிகேட்டு உற்ற முனிதனக்குத்
துரைத்தனமா யித்தனையும் சொல்லி விடைகொடுத்தேன்
இப்படியே மாமுனிக்கு ஈந்திருக்கு மிவ்வரங்கள்
அப்படியே துசுவீசு மாமுனியுஞ் சுகசீல
மாமுனியும் நம்மை வருந்திநிஷ்டை செய்யுகிறார்
ஓமுனிக்கு நல்ல ஒழுங்குசெய்ய வேணுமல்லோ
அல்லாமல் தேவாதி அபயம் பொறுக்கரிது
எல்லா மிதுகண்டு இப்பிறவி செய்யுமென்றார்
நல்லதுகா ணென்று நல்லதிரு லட்சுமியை
வல்லமுள்ள பெட்டகத்தில் வைத்தார்கா ணீசுரரும்
இராமபா ணமதையும் நன்றாய்ப் பிறவிசெய்ய
சீராமஸ்ரீ யம்பகனும் சிவனு மகமகிழ்ந்து
என்ன விதமாய் இதுபிறவி செய்வோமென்று
பொன்னம் பலத்தோர் புத்திநொந்து தாமிருந்தார்
ஈசுரரு மப்போ இரத்தின கிரிதனிலே
வீசு பரனும் வேள்வி யதுவளர்க்க
வேள்வி வளர்த்து விமல னுருவேற்றத்
தாழ்வில்லா ஆயன் தற்சொரூபந் தானாகித்
திருக்கணைக் காலில் செய்ய நரம்புருவி
கருக்கணமாய் ராம பாணக் கணையெனவே 260

உறுதிகொண்டு வேள்விதனில் விட்டெறிந்தா ரம்மானை
பிறிதிகொண்டு லட்சுமியும் பிலத்த திருக்கரத்தில்
தூண்டு விரலில் துய்ய நரம்புருவி
வேண்டும் பெரிய வீரவில் லீதெனவே
ஆராரு மிந்தவில்லை அம்பேற்றக் கூடாமல்
சீரா மரேற்ற சிந்தித்தா ளம்மானை
உடனேயது வில்லாய் ஓம மதில்பிறக்கத்
திடமாக ராமர் திருக்கணைக்கா லுள்நரம்பு
பாணமதாய் வேள்விதனில் பரிவாயப் பிறந்திடவே
தாணரும் வானோரும் சங்கத்தோ ருங்காண
எல்லோருங் கண்டு இதுகண் மாயமெனவே
வல்லோர்க ளான வாய்த்ததே வாதியெல்லாம்
சங்கடங்கள் தீர்ந்ததென்று சந்தோசங் கொண்டாட
அங்கணங்க ளான அலகைமிகக் கூத்தாட
இராமபா ணத்தாலே இராவண சூரனையும்
ஸ்ரீராமர் சென்று தென்னிலங்கை தன்னிலுள்ள
அரக்கர்குல மறுப்பார் அச்சுதனா ரென்றுசொல்லி
இரக்கமுள்ள தேவரெல்லாம் இரங்கிமிகக் கொண்டாட
வில்லோ டுடன்பிறந்த வீரலட்சு மியெனவே
வல்லோர்க ளாராலும் வந்திந்த வில்லதையும் 280

வளைத்தோர்க்கு நல்ல மாலைசூட்ட லாமெனவே
தழைத்த சுகசீல தாட்டீக மாமுனியைத்
தினகரராய்ப் பூமிதனில் செய்துவைத்து லட்சமியை
மனோகரமாய்ப் பூமியிலே வைத்தபெட்ட கத்தோடே
வில்லோ டேபிறக்க விமல னருளினராம்
நல்ல துசுவீசு மாமுனியை நாடதிலே
தசரதராய்த் தோன்றவைத்துத் தேசாதி ராசனுக்கு
விசமாலை ராமருமாய் வீரக் கணையோடே
கூடப் பிறக்கக் குன்றெடுத்தார் தான்துயிலும்
நீட அரவணையை நீதலட்சு மணராக்கித்
தலையணை மெத்தையையும் சத்துரு பரதனுமாய்
நிலைவரமாய் ஈசன் நெறியாய்ப் பிறவிசெய்யத்
தேவரையும் வானரமாய்ச் சிவனார் பிறவிசெய்ய
மூவரை யும்பிறவி உள்ளதெல்லாஞ் செய்திடவே
கொடுமுடியாய்ப் பிறந்த கோளிலங்கைப் பாவிகளை
முடியடிவே ரில்லாமல் முழுது மறுப்பதற்கு
வேண்டும் பிறவியெல்லாம் விமல னருளிமிகத்
தாண்டவ சங்காரம் தானிதென்றா ரம்மானை
இராவணன் தன்னைக் கொல்ல இராம பாணங்க ளோடே
சிராம ராய்மாயன் தானும் தசரதன் தனக்குத் தோன்ற        300

விராகன மாது சீதை வில்லுட னுதிக்கத் தேவர்
மராம ரக்குலங் களாகி வந்தனர் புவியின் மீதே
சிராமருந்தான் ராவணனைச் செயிக்க ஒருவிதமாய்
இராமபா ணத்தோடே நாட்டில் பிறந்தனராம்
தென்னிலங்கை தான்முடிய சீதை சிறையிருக்கப்
பொன்னரிய வில்லோ(டு) உடன்பிறந்தாள் பொன்மாது
தேவரெல்லாம் வானரமாய்த் தென்னிலங்கை சுட்டழிக்கப்
பூவர் சுகுமுனிவர் போர்விசுவ கன்மனெனும்
வானரத்துக் கேற்ற மந்திரி தானாகித்
தானவரையு மனுப்பித் தரணிதனி லெம்பெருமாள்
லட்சும ணரெனவே ஏற்றசத்து ருபரதன்
கட்சியுடன் மாயன் கணையோ டுடன்பிறந்தார்
இப்படியே ராவணற்கு எல்லோ ரும்பகையாய்
முப்படியே உள்ள முறைநூற் படியாலே
வந்து பிறந்தார்காண் மாயவரு மம்மானை
இப்படியே ராமர் ஏற்ற தசரதற்கு
அப்படியே பிறந்து அங்கிருந்தா ரம்மானை

சீதா கல்யாணம்

சீதை வளர திருவில்லுந் தான்வளர
கோதைக் குழல்சீதைக் கோமான் மிகவளர
சிராமர் பிறப்போர் சிறப்பாய் வளர்ந்திடவே 320

இராமர் குலங்கள் இரகசிய மாய்வளர
அரக்கன் கொடுமை அண்டமள வேவளர
சீதை வளர்ந்து சிறந்த வயதானதிலே
மாதை மணமிடவே மாதா மனதிலுற்றுத்
தன்புரு சனோடே தையல்நின் றேதுசொல்வாள்
அம்பும்வில் லும்வளர ஆயிழையுந் தான்வளர்ந்து
பக்குவங்க ளாச்சே பைங்கிளிக்கு மாலையிட
ஒக்குவ தென்ன உரைப்பீரென் னுத்தமரே
என்று மடமாது ஏற்ற தினகரரை
நின்று வணங்கி நேரிழையுஞ் சொல்கையிலே
வில்லை வளைத்தல்லவோ மெல்லிமணஞ் சூடுவது
வல்ல கலைக்கோட்டு மாமுனியைத் தான்வருத்தி
இன்னபடி யீதென்று எடுத்துரைக்க மாமுனியும்
அன்னப் பொழுதில் அருளுவான் மாமுனியும்
பூரா சமான புவியைம்பத் தாறிலுள்ள
இராசாதி ராசரெல்லாம் இப்போ வரவழைத்து
வில்லை வளைத்தவர்க்கு மெல்லிமணஞ் சூட்டுமென்று
சொல்லியே மாமுனியும் தசரதனார் கண்மணியைக்
கண்டுநின்று மாமுனியும் கண்ணனார்க் கேதுரைப்பான்
பண்டு உனக்குப் பரம சிவனாரும்           340

வில்வளைத்து மாலையிட விதியில் விதித்திருக்குச்
செல்லந்த மன்னன் தினகரானர் தன்மகட்கு
இன்று கலியாணம் இப்போது அங்குசென்றால்
பண்டு அமைத்த பலனுனக்குக் கிட்டுமிப்போ
என்று கலைக்கோட்டு மாமுனியுந் தானேகி
சென்றான் தினகரரின் செல்வி மணந்தனிலே
அன்றைம் பத்தாறு அரசருக்கு மாளனுப்பி
தேசாதி தேசர் திசைவென்ற மன்னரெல்லாம்
மேசாதி யானோரும் மேவுந்தெய் வேந்திரனும்
இராவண சூரன் இராமர்முத லானவரும்
இராமர்குல ராசாதி நல்லமன்னர் வந்தனராம்
வில்லை வளைத்து வில்லில் நாண்பூட்டாமல்
முல்லைமன்ன ரெல்லாம் முகம்வாடிப் போயிருந்தார்
இராம ரெடுத்து இராம சரமேற்றி
சிராமர் மணஞ்செய்தார் சீதைத் திருமாதை
மணம் முகித்துவானோர் மங்களகீ தத்தோடே
துணைவர் தலைவரொடு சென்றா ரயோத்தியிலே
அயோத்தியா புரியில் ஆனதம்பி மாரோடும்
கையேற்று வந்த கன்னி திருவோடும்

ஸ்ரீராமர் வனவாசம்

வாழ்ந்திருக்கும் நாளில் மாதா கைகேசியம்மை 360
தாழ்ந்தமொழி சொன்னதினால் தம்பி பரதனையும்
நாடாள வைத்து நல்லஸ்ரீ ராமருந்தான்
கூடவொரு தம்பியோடும் குழல்சீதை மாதோடும்
நாடி நடந்தார் நல்லவன வாசமதில்
வாடிவந்து கானகத்தில் வாழ்ந்திருக்கும் நாளையிலே
லட்சுமண ருமங்கே ஏற்றகனி தான்பறிக்கக்
கட்சியுடன் நடந்து காட்டில் மிகப்போகச்
சூர்ப்பநகை தன்மகனும் துய்ய தவசுநிற்க
ஆர்ப்பரவா யீசர் ஆகாசத் தேவழியே
வாளை அயச்சார் வாய்த்தபர மேசுரரும்
தாழ வரும்போது தாமனந்த லட்சுமணர்
கண்டந்த வாளைக் கைநீட்டித் தான்பிடித்துத்
துண்டம் விழஆலைத் துஞ்சிவிழ வெட்டினர்காண்
பட்டந்த ஆலும் படபடெனச் சாய்ந்திடவே
வெட்டந்து வீழ்ந்தான் மீண்டுதிரம் பாய்ந்ததுவே
அரக்கன்தாய் கண்டு அலறி வெகுண்டெழுந்து
இரக்கமில்லாச் சூர்ப்பநகை இலட்சுமண ரைத்தேடி
தேடி ஸ்ரீராமர் சீர்பாதங் கண்டணுகி
நாடியெனைத் தாவுமென்று நாணமில்லா தேயுரைத்தாள்
என்பாரி யிங்கே இருக்கவே வேறொருவர் 380

தன்பாரி தன்னைத் தான்விரும்பேன் போடியென்றார்
போடிநீ யென்ற புத்திதனைக் கேட்டரக்கி
தேடியே லட்சுமணரைச் சேரவுற வாடிநின்றாள்
உறவாடி நின்ற ஒயிலை யவரறிந்து
பறபோடி யென்று பம்பத்தன மூக்கரிந்தார்
மூக்கு முலையும் முகமும் வடிவிழந்து
நாக்குரைக்க வாடி நாணங்கெட்டத் தீயரக்கி
தன்னுடனே கூடித் தமய னெனப்பிறந்த
மன்னன்ரா வணன்தமக்கு வகையா யுரைக்கலுற்றாள்
காட்டி லொருபெண் கமலத் திருமகள்போல்
நாட்டிலொவ்வாக் கன்னி நான்கண்ட தில்லையண்ணே
உன்றனக்கு ஆகுமென்று உற்றவளை நான்பிடித்தேன்
என்றனுட மூக்கரிந்தோர் இருவருண் டல்லாது
மற்றொருவ ரங்கே வாழ்ந்திருக்கக் கண்டதில்லை
கற்றொ ருவர் காணாது கையிலம்பு காணாது
மருவனைய அண்ணேவுன் வாய்த்த விரலதிலே
ஒருயிறைக்கே வுண்டு உற்றஅவர் தன்னுயரம்
என்றந்த அரக்கி ஈனம்பல துரைக்க
அன்றந்த ராவணனும் ஆகாசத் தேரேறிப்
பிச்சைக் கெனவே புறப்பட்டான் காடதிலே 400

அச்சமில்லா லட்சுமணர் ஆனஸ்ரீ ராமருமாய்
மானின் பிறகே மனம்வைத்து நின்றிடவே
வானின் செயலால் வானவர்கள் பார்த்திருக்க
நாரா யணர்தேவி நல்லதிரு லெட்சுமியை
ஏராத பாவி இலச்சைகெட்டத் தீயரக்கன்
தேரிலே அம்மைதனைத் திருடிக்கொண் டேகினனாம்
பாரிலே வுள்ள பட்சி பறவைகளும்
கண்டு பதறிக் கதறிமிக அழவே
அண்டர் முனிதேவர் எல்லோருந் தாமழவே
மான்வேட்டையாடி மாரீசனை யறுத்துத்
தான்வேட் டையாடும் தகையாலே தம்பியுடன்
வந்தார்காண் லட்சுமியும் வாழ்ந்திருக்கு மண்டபத்தில்
பந்தார் குழலனைய பாவையரைக் காணாமல்
கலங்கி மிகவாடி கண்ணீர் மிகச்சொரிய
மலங்கியே லட்சுமணர் மண்ணிற் புரண்டழுதார்
என்னே மணியே எனைப்பெற்ற மாதாவே
பொன்னே யமுதே பெற்றவளே யென்றழுதார்
இராமர் முகம்வாடி நாயகியைத் தான்தேடி
ஸ்ரீரா மர்கலங்கி சினேக முடனழுதார்
மனுவாய்ப் பிறக்க மனுவுடம்பு கொண்டதினால் 420

தனுவா னதையடக்கித் தானே புலம்பலுற்றார்
அன்ன மயிலோடும் அன்றில் குயிலோடும்
புன்னை மலரோடும் புலம்பி மிகவழுதார்
வன்னமுள்ள யானை வாய்த்தசிங் கத்தோடும்
பெண்ணமுதைக் கண்டீரோ என்று புலம்பலுற்றார்
இப்படியே ராமர் இளைய பெருமாளும்
அப்படியே சொல்லி அழுதழுது தான்வாடிச்
சோலை மரத்தின்கீழ்ச் சோர்ந்து முகம்வாடி
மாலவருந் தம்பி மடிமேல் துயின்றிருக்க
அஞ்சனை யாள்பெற்ற அனுமனதில் வந்தடைய
சஞ்சல மேதென்று சாரதியுங் தெண்டனிட
மின்செறியு மாயன் விழித்தவனைத் தானோக்கிக்
கவசகுண்ட லமணிந்த கார்குத்தா யாரெனவே
உபசரித்துச் சொன்ன உச்சிதத்தைத் தானறிந்து
அய்யரே யென்னை ஆட்கொண்ட நாயகமே
மெய்யரே நீங்கள் மெலிந்திருப்ப தேதெனவே
கேட்க அனுமன் கிருபைகூர்ந் தெம்பெருமாள்
சேர்க்கையுடன் சொன்னார் சீதையுட தன்வளமை
ஏற்கை யாகக்கேட்டு இயலுனுமன் ஏதுசொல்வான்
நல்லது அடியேன் கேட்டேன் நானினி வுரைக்கும் வாறு   440

சொல்லவுங் கேட்பீ ரெந்தன் திருவடை யாளஞ் சொன்னீர்
வல்லவர் தகப்ப னானீர் வரந்தர வேணு மிப்போ
புல்லர்வா ழிலங்கை சுட்டு அம்மையைக் கூட்டி வாறேன்
என்தாய் மொழிந்த இயலடையா ளத்தாலே
முன்தானே பெற்ற முதல்வர்தா னென்றனக்கு
அய்யா தானாகும் அடைக்கலமே யாமடியார்
பொய்யாம லென்றன் பேரனுமன் கண்டீரே
இலங்கை தனைச்சுட்டு அம்மையைக் கூட்டிவர
மலங்காதே போவென்று வாக்கருள வேணுமையா
சுக்ரீவன் சாம்புவனும் சுத்தமுள்ள வீரர்களும்
ஒக்கவொரு முகமாய் உடையோன் பதமடைய
கெருடன் மிகமறித்துக் கேலியிட்ட ஞாயமதும்
திருடன் கொடிய தீபாவி ராவணனும்
அம்மை தனைக்கொண்டு அவன்கோட்டை யானதிலே
செம்மையில்லாப் பாவி சிறையில்வைத்த ஞாயமதும்
எல்லா மறிந்து எம்பெருமாள் கோபமுற்று
வெல்லத் துணிந்தார் மிகுபடைகள் தான்திரட்டி
எழுபது வெள்ளம் ஏற்றவா னரங்களையும்
முழுதும் வருத்தி ஒப்பமிட் டெம்பெருமாள்
விசுவகம் மாளனையும் விரைவா யருகழைத்து 460

வசுவாசு மைந்தன் வாய்த்த அனுமனையும்
அனுமன் தனையேவி ஆன மலையெடுத்துத்
துனும னுடனே தோயக் கடலதுக்குள்
கோட்டைய திட்டுக் குக்குளித் தங்கேகி
ஓட்டனாய் விட்டார் உற்ற அனுமனையும்

அனுமன் தூது

பூட்டமுடன் வாயு புத்திரனுந் தான்மகிழ்ந்து
நாட்ட முடனிலங்கை நாடாளும் பாதகனைக்
கண்டு முடுகிக் கருத்தழியத் தான்பேசி
கொண்டு இலங்கை குப்பையிடத் தீக்கொளுத்தி
மால்கொடுத்த வாளி மாதுகையி லேகொடுத்து
வால்கொண்டு வீசி வனங்காவு தானழித்துக்
கேதார மாமலையும் கீர்த்தியுட னேகுதித்துப்
பாதார மென்று பணிந்தானே ராமரையும்

இராவணன் பாடு

அரக்க னவன்பேசும் அநியாயந் தான்கேட்டு
இரக்கமுள்ள எம்பெருமாள் எழுந்தார் படைக்கெனவே
படைக்கு இவர்நடக்க பார்த்துவி பீஷணனும்
அடைக்கல மென்று அவர்பாதஞ் சேர்ந்தான்காண்
சேர்ந்த வுடனே திருமால் மனமகிழ்ந்து
ஓர்ந்த படையோடே உடன்யுத்தஞ் செய்திடவே
அரக்கன் படையும் அச்சுதனார் தன்படையும் 480

இரக்க மில்லாமல் இருபேருஞ் சண்டையிட்டார்
படைபொருது வெல்லாமல் பத்துத்தலை யுள்ளோனும்
கடகரியுந் தோற்றுக் கையிழந்தா னம்மானை
பத்துத் தலையும் பார்மீதி லற்றுவிழ
மற்று நிகரொவ்வா மாயத் திருநெடுமால்
அரக்க னுயிரு அங்குமிங்கும் நிற்கையிலே
இரக்கமுடன் நின்றங்(கு) ஏதுரைப்பா ரம்மானை
கேளாய்நீ ராவணா கிரேதா யுகந்தனிலே
பாழாய் இரணியனாய்ப் பாரில் பிறந்திருந்தாய்
உன்னிடுக்கங் கண்டு உன்புதல்வ னானாகி
தன்னடுக்கல் வந்துவுன்னைச் சங்காரஞ் செய்தேனான்
மகனாய்ப் பிறந்து வதைத்தேனான் பாரறிய
பகை நானென்று பண்பு மிகக்கூற
அப்போது நீயும் அன்றுரைத்த வார்த்தையினால்
இப்போது உன்குலங்கள் எல்லாங் கருவறுத்து
நாணமில்லா துன்னிலங்கை நகரிதீ யாலழித்துப்
பாணமொன்றா லுன்னைப் படஎய்தேன் கண்டாயே
அல்லாம லுன்றனக்கு அங்கமொரு நூறு
எல்லாரும் வெல்லா ஈசன் கயிலையதும்
எடுத்த பெலமுமுண்டே ஈரஞ்சு சென்னியுண்டே 500

கடுத்த பெலமுள்ள காலாட்டுகள் பொரவுண்டே
இந்திரனை வென்ற ஏற்ற புதல்வருண்டே
சந்திரனுஞ் சூரியனும் தன்னிடத்தி லுண்டல்லவோ
மூணுலோ கத்தாரும் உன்னிடத்தி லுண்டல்லவோ
ஆணுவங்கள் பேசினையே அம்பொன்றில் மாண்டாயே
கோலுபோ லேயுயர்ந்த கொடும்பாவி நீகேளு
நாலு முழமல்லவோ நல்லதலை ஒன்றல்லவோ
என்கை வாளி எடுத்துவிடத் தாங்காமல்
உன்கை காலுமற்று உயிரழிந்து மாண்டாயே
பத்து மலைபோலே பருந்தலைகள் பெற்றதெல்லாம்
இத்தலத்தில் கண்டிலனே என்கையால் மாண்டாயே
மாண்டாய்நீ யென்று வசைகூறக் கேட்டரக்கன்
ஏண்டா மழுப்புகிறாய் இராமனோ கொல்லுவது
தம்பி யெனப்பிறந்து சத்துருப்போல் தான்சமைந்து
என்பெலங்க ளெல்லாம் எடுத்துரைத்தா னுன்றனுக்கு
ஆனதா லென்னுயிரு அடையாளம் பார்த்துலக்காய்
ஊனமுற எய்தாய் உயிரழிந்தே னல்லாது
நீயோடா என்பெலங்கள் நிலைபார்த்துக் கொல்லுவது
பேயா நீபோடா புலம்பாதே யென்னிடத்தில்
அப்போது மாயன் அதிகசீற் றத்துடனே 520

ஒப்பொன் றில்லாதார் உரைப்பார்கா ணம்மானை
உன்னுட தம்பி யாலே உயிர்நிலை யறிந்து யானும்
என்னுட சரத்தால் கொன்றேன் என்றியம்பிய அரக்கா வுன்னைப்
பின்னுகப் பிறப்பு தன்னில் பிறப்புநூ றோடுங் கூடி
அன்னுகந் தன்னில் தோன்ற அருளுவே னுன்னை நானே

என்னொரு தம்பி யாலே என்னையுங் கொன்றா யென்று
தன்னொரு மதத்தால் நீயும் சாற்றிய அரக்கா வுன்னைப்
பின்னொரு யுகத்தில் நூறு பிறப்புடன் பிறவி செய்து
இன்னொரு ஆளின் கையால் இறந்திடச் செய்வே னுன்னை

என்னுடைய தம்பி யாலேதா னென்னுயிரை
உன்னுடைய அம்பால் உயிரழிந்தே னல்லாது
என்னைநீ கொல்ல ஏலாது என்றுரைத்தாய்
உன்னை நானிப்போ ஒருபிறவி செய்யுகிறேன்
என்றுசொல்லி மாயன் எண்ணவொண்ணாக் கோபமுடன்
அன்று கயிலை அரனிடத்தில் சென்றிருந்து
முன்னேயுள்ள துண்டம் ஓரிரண்டு உள்ளதிலே
ஒன்னேயொரு துண்டம் ஒருநூறு பங்குவைத்துத்
துவாபர யுகம்வகுத்துத் துரியோதன னெனவே
கிரேதா யுகமழித்துக் கீழுலகில் தோணவைத்தார்

துவாபர யுகம்

பாவி பிறக்க பச்சைமால் தான்கூடத் 540
தாவிப் பிறந்த தம்பியர் மூவரையும்
விபீஷணனும் நல்ல வெற்றிச்சாம் புவனையும்
அபூருவமாய்க் குந்தியர்க்கு ஐவரையும் பிறவிசெய்தார்
ஐவரையும் பூமி அதிலே பிறவிசெய்து
மொய்குழ லான மெல்லி திரௌபதியாய்
அம்மை திருக்குழலில் அமர்ந்திருந்த பொற்சடையை
நம்மை விபீஷணற்கு நல்மக ளாக்கிவைத்து
அரக்கர் குலமறுக்க அம்மை யெழுந்தருளி
இரக்கர் புரமேகி இருக்குமந்த நாளையிலே
தோழியாய் முன்னிருந்த துய்யத் திரிசடையை
நாழிகை தன்னில் நாதன் பிறவிசெய்தார்
பின்னுமந்த மாயன் பெரியோ னடிவணங்கி
நின்னுகரங் குவித்து நெடியோ னுரைத்தனராம்
எழுபது வெள்ளம் ஏற்றவா னரங்களுடன்
முழுது மிலங்கை முடித்துநான் நிற்கையிலே
என்படைக ளான எழுபதுவெள் ளமதிலும்
உன்படைக ளெல்லாம் உயிரழிந் தாரெனவே
ஆராய்ந்து என்படையை அளவிட்டு நிற்கையிலே
தோராத மன்னன் துடியானச் சேவகன்தான்
ஒருவன் தனைக்காணேன் உடனே மறலிதனை 560

வருக அழைத்து வகையே தெனக்கேட்க
நானில்லை யென்றே நமன்தான் மிகவுரைக்க
ஏனில்லை யென்று இறுக்கிநான் கேட்கையிலே
அய்யாவே வும்முடைய ஆளான வீரனைத்தான்
கையால முள்ள கும்பகர்ண னொருசமரில்
பிடித்து நசுக்கிப் பிசைந்து திலதமிட்டான்
அடுத்துநின்று பார்த்து அரக்க னவனுயிரைக்
கொண்டேகி நானும் கொடுநரகில் வைத்திருக்கேன்
என்றே தான்மறலி இத்தனையுஞ் சொன்னான்காண்
ஆனதால் கும்ப கர்ண னவன்தனையும்
ஈனமில்லாக் கஞ்சன் எனப்படையு மிவ்வுகத்தில்
என்றே தான்மாயன் இதுவுரைக்க ஈசுரரும்
அன்றே தான்கும்பனையும் அப்படியே தான்படைத்தார்
படைத்த சடமதுக்குப் பரம னுயிர்கொடுக்கச்
சடத்தை மிகயெழுப்பித் தானனுப்ப ஈசுரரும்
துவாபர யுகமெனவே தொன்முறையைத் தான்பார்த்துத்
தவறாத வண்ணம் தான்படைத்தா ரெல்லோரும்
அப்படியே ஈசர் அன்று படைத்தபடி
இப்படியே வந்து இவர்கள் பிறந்தனராம்
முன்னுள்ள பீடத்து உதிரமெல்லாந் தானெழுந்து 580

அன்றுள்ள பாவி அவன்கூடத் தானிருக்க
அரக்க னிராவணனும் அதிகத்துரி யோதனனாய்
மூர்க்கன் பிறப்போர் ஒருநூறு பேரோடு
வந்து பிறந்தான்காண் வையகத்தி லம்மானை
சந்துபயில் மாயன் தன்னோ டுடன்பிறந்த
தம்பி பரதன் சத்ருக்கன் லட்சுமணன்
நம்பி விபீஷணனும் நல்லதொரு சாம்புவனும்
ஐவரும் பூமிதனில் அப்போது தோன்றினராம்
தெய்வத் திரிசடையும் தேவி துரோபதையாய்
மெய்வரம்பா யுள்ள மேன்மை யதின்படியே
ஐவருட தேவியென்று ஆயிழையுந் தோன்றினளாம்
கும்பகர்ண னென்ற கொடும்பாவி கஞ்சனுமாய்
வம்பகனாய் வந்து மதுரை தனில்பிறந்தான்
இப்படியே ஐபேரும் ஏற்றரிய நூற்றுவரும்
அப்படியே பங்கு வகைபாதி யாய்ப்பிறந்தார்
இராச்சியத்தி லுள்ள இறைதான முள்ளதெல்லாம்
தராச்சியமாய்ப் பாதியெனத் தங்கள்சில நாடாண்டார்
கஞ்ச னவன்பிறந்து கடிய கொடியவனாய்
வஞ்சனையும் பெற்ற மாதா பிதாக்களையும்
சிறையதிலே வைத்துத் தேசமதைத் தானாண்டு 600

இறைமிகுதி வேண்டி இராச்சியத்தை யாண்டனனே
ஆனதா லவனுடைய அம்புவியி லுள்ளோர்கள்
ஈனதுன்ப மாகி இருந்தார் பயமடைந்து
தேவரையும் வானவரைத் தேவேந்தி ரன்வரையும்
மூவரையுஞ் சற்றும் முனியாமல் மாபாவி
தெய்வ மடவாரைத் திருக்கவரி வீசிடவே
வைவ னவன்பிடித்து வாவெனவே ஆள்விடுவான்
வருணனொடு வாயுவையும் வலுவிலங்கில் தான்போட்டு
அருணன் முதலாய் அந்தி வரும்வரையும்
வேலை யவன்கொண்டு விடுவா னவன்தொழிலாய்
மாலை நினையான் மறையைமிக நினையான்
ஆலயங்கள் கோயில் அழிந்த மடங்கள்வையான்
சாலயங்கள் செய்யான் தர்மசிந்த னைகள்செய்யான்
அந்தணர்க்கு மீயான் அன்னதா னங்களிடான்
பந்தலிட்டுத் தண்ணீர் பக்தர்தமக் களியான்
ஆவு தனையடைத்து அதுக்கிரைகள் போடாமல்
கோவுகளைக் கொல்வான் கொடும்பாவி நெட்டூரன்
கண்ட வழக்குரையான் கைக்கூலி கேட்டடிப்பான்
சண்டனைக்கண் டாருவென்பான் தன்னைப்பா வித்திருப்பான்
எம்மைப் படைக்க ஏலுமோ மற்றொருவர் 620

நம்மைப் படைத்ததுவும் நான்தா னெனவுரைப்பான்
இப்படியே கஞ்சன் எதிரியில்லை யென்றுசொல்லி
அப்படியே மீறி ஆண்டான்கா ணம்புவியை
மேலோகந் தன்னில் மிகுத்ததெய்வக் கன்னியரில்
வாலோக மான வாய்த்தகன்னி தேவகியும்
உரோகணியா ளென்னும் நுதல்மடவா ரண்டுபேரும்
புரோகணிய மான பொய்கைநீர் தானாடி
அக்காளுந் தங்கையுமாய் அவர்கள்ரண்டு மாமயிலும்
மிக்கான பட்டுடுத்து மேவிவழி தான்வரவே
மாயன் சிறுமதலை வடிவெடுத்துத் தானழவே
ஆயனுட கோலம் அறியாமல் மங்கையர்கள்
தெய்வகியும் பார்த்துச் சொல்லுவாள் தங்கையிடம்
நெய்நிதியக் கன்னி நெடியவிழி ரோகணியே
இன்னா அழுது இதில்கிடக்கும் ஆண்மதலை
பொன்னான பூமியிலும் பெண்ணே நான்கண்டதில்லை
காலில்சிவ சக்கரமும் கையில்மால் சக்கரமும்
மேலில்சத்தி சக்கரமும் விழிசரசு சக்கரமும்
வாயு பகவான் வடிவுமிகப் போலே
ஆயும் பலகல்வி ஆராய்ந்த அச்சுதர்போல்
கண்கொள்ளாக் காட்சி கைமதலை தன்னழகு 640

விண்கொள்ளாக் காட்சி மெல்லியரே யிம்மதலை
இம்மதலை தன்னை எடுத்துநாம் தாலாட்டி
பொன்மதலை தன்னைப் போட்டுவைத்துப் போவோம்நாம்
என்றுசொல்லி மாதர் இருபேருஞ் சம்மதித்து
வண்டுசுற்று மெல்லி வந்தெடுத்தா ரம்மானை
மதலை தனையெடுத்து மார்போடு தானணைத்து
குதலை மொழியமர்த்திக் கோதைரண்டு மாமயிலும்
கயிலை யதுக்கேகி கறைக்கண்டர் பாதமதில்
மயிலனைய மாமயிலார் வந்தார்கா ணம்மானை
வந்த மாடவர்கள் மார்பி லமுதிளகி
அந்தப் பரமே சுரனா ரவரறிந்து
கன்னியரே உங்கள் கற்பு அகன்றதென்ன
மின்னித் தனங்கள் மெல்லியுட லானதென்ன
பச்ச நிறமேனி பால்வீச்சு வீசுதென்ன
அச்சமில்லாக் கொங்கை அயர்ந்துஉடல் வாடினதேன்
ஏதெனவே சொல்லுமென்று ஈசுரனார் தான்கேட்க
சூதகமாய் நின்ற தோகைபோல் வாடிநின்றார்
வாடியே மடவார் தாமும்
மார்பதில் துகிலை மூடி
கோடியே அயர்ந்து ஏங்கிக்
குருவதைப் பாரா வண்ணம்
நாடியே தாழ்ந்து பெண்கள் 660

நாணியே நின்ற தன்மை
தேடியே மாயன் செய்தச்
செயலென அறிந்தா ரீசர்
அறிந்தார் மாயன் சேயாகி
அழுதே இரங்குங் குரலதினால்
செறிந்தார் குழலார் இவர்கள் சென்று
சேர்த்தே யெடுத்து அணைத்ததுவும்
பறிந்தே யிவர்கள் நாணினதும்
பால்தான் தனத்தில் பாய்ந்ததுவும்
அறிந்தே கன்னி யிருவரையும்
அழித்தே பிறவி செய்தனராம்
பிறவி யதுதான் செய்யவென்று
பெரியோ னுரைக்கப் பெண்ணார்கள்
அறவி யழுது முகம்வாடி
அரனா ரடியை மிகப்போற்றித்
திறவி முதலே திரவியமே
சிவமே உமது செயலைவிட்டு
இறவி யானா லெங்களுக்கு
இனிமேல் பிறவி வேண்டாமே
வேண்டா மெனவே மெல்லியர்கள்
விமல னடியை மிகப்போற்றி
மாண்டா ரெலும்பை மார்பணியும்
மறையோன் பின்னு மகிழ்ந்துரைப்பார்
தூண்டாச் சுடரோன் திருமாலைச்
சேயென் றெடுத்தச் செய்கையினால்
ஆண்டா ருமக்கு மகனாகி
அதின்மேல் பதவி உங்களுக்கே

மெல்லியரே உங்களுட மெய்வரம்பு தப்பினதால்
செல்ல ஏதுவாச்சு சீமையிலே யம்மானை
என்றே அரனார் இருகன்னி யோடுரைக்க
அன்றே மடவார் ஆதிதனை நோக்கி
ஆதியே நாதி ஆனந்த மெய்ப்பொருளே
சோதியே நாதி சொரூபத் திருவிளக்கே
அல்லாய்ப் பகலாய் ஆரிருளாய் நிற்போனே 680

வல்லாய்ப் புவியை வார்த்தையொன் றாற்படைத்த
ஆதிப் பொருளே அனாதித் திருவுளமே
சோதிப் பொருளே சொல்லொணா தோவியமே
எட்டாப் பொருளே எளியோர்க் கெளியோனே
முட்டாத செல்வ முதலே முழுமணியே
கண்ணுள் மணியே கருத்தினுள் ளானவனே
பெண்ணு மாணாகிப் பிறப்பில்லா நின்றோனே
இறப்புப் பிறப்பில்லாத எளியோர்க் கெளியோனே
பிறப்பு இறப்பில்லாத பேசமுடி யாதவனே
கருவிதொண்ணூற் றாறும் காவலைந்து பேருடனே
உருவு பிடித்து உயிர்ப்பிறவி செய்வோனே
மூவரு முன்றன் முடிகாண மாட்டாமல்
தேவருந் தேடித் திரிந்தலைய வைத்தோனே
மவ்வவ் வாகி வருந்தியவ்வும் ஒவ்வாகி
செவ்வவ் வாய்நின்ற சிவனே சிவமணியே
மாய னெடுத்த மகவான கோலமதை
நேய மறியாமல் நெறிதவறிப் போனதினால்
பின்னேநீ ரெங்களையும் பிறவிசெய்ய வேண்டாங்காண்
எந்நேரங் கயிலை இப்பூமி யானதிலே
தெய்வப் பசுப்போல் தேவரீ ரெங்களையும் 700

மெய்யறிவு கூடி மிகப்புடையு மேலோனே
அல்லாதே போனால் அடியார்க ளெங்களையும்
இல்லாதே செய்யும் இனிப்பிறவி வேண்டாங்காண்
அம்மை உமையாள் அருகே மிகஇருந்து
உம்மையும் போற்றி உம்மூழி யங்கள்செய்து
பூவுலகில் நாங்கள் பெண்ணாய்ப் பிறந்ததுண்டால்
பாவிகட்கு வேலைப் பண்ணி முடியாதே
பூவு முடித்துப் பூமேடை யும்பெருக்கி
நாவுலகு மெய்க்க நல்லகவி தான்பாடி
தம்புரு வீணை சப்தக் குழலுடனே
இன்புருக ராகம் இசைந்தமுறை தானிகழ்த்தி
நரசென்மம் வாழும் நசுரக் குலங்களிலே
அரசேநீ ரெங்களையும் அழுந்தப் படையாதேயும்
இப்படியே கன்னி இரங்கி யழுதிடவே
அப்படியே கன்னி அவர்களுக் காதியுந்தான்
சொல்லுவார் வேதச் சுடரோ னதிசயித்து
நல்லதுகாண் பெண்ணே நம்மைரண்டுஞ் சொல்லாதே
மாயன் துவாபர வையகத்தில் போய்ப்பிறக்க
வாயமிட்டா ருங்களையும் மாதா வெனவாக்க
நாமென்ன செய்வோம் நவ்விமால் செய்ததற்குப் 720

போமென் னஈசர் பிறவிசெய்தா ரம்மானை
வாயு மகாதேவன் வடிவென்ற இச்சையினால்
ஆசையா லுங்களுக்கு அவனே புருஷனென்றார்
சங்கு சரங்கொண்ட தம்பியென்ற இச்சையினால்
அங்குப் பகவதியும் அச்சுதரு முங்களுக்கு
மதலையென வந்துதிப்பார் வையமது கொண்டாட
குதலை மொழியாரே கொம்பே றிடையாரே
விலங்குச் சிறையும் மிகுசிறையு முங்களுக்கு
மலங்குவது மெத்த மாய்ச்சலுண் டாகியபின்
ஸ்ரீகிருஷ்ண னாகத் திருமா லுதித்தபின்பு
குறுக்கிட்ட தோசம் கொடுமை மிகத்தீர்ந்து
பின்னே பதவிப் பேறுண்டு முங்களுக்கு
மின்னே ரொளியை விமலன் பிறவிசெய்தார்
பிறவியரன் செய்யப் பிறந்தார்கள் பூமியிலே
திறவியது விட்டுத் தேவகியும் ரோகணியும்
மதுரைதனில் வந்து மாபாவிக் கஞ்சனுக்கு
இருதையல் மாமயிலார் ஏற்ற பிறப்பெனவே
கூடப் பிறந்தால் கொடியதோ சமெனவே
தேட வொருராசன் சிறுவி யெனப்பிறந்தார்
பிறந்தே தான்கஞ்சனுக்குப் பிறப்பெனவே பேசும்வளம்       740

சிறந்தே யிவர்கள் திருத்தமாய் வாழுகையில்
இப்படியே கஞ்சன் இவர்களிரு தங்கையையும்
அப்படியே கூட்டி அவன்வேட்டை யாடிவர
மாமுனிவன் தனக்கு வாய்த்திருந்த மாம்பழத்தைத்
தாமுனிந்து கஞ்சன் தானக்கனி பறித்துத்
தங்கையர்க்குத் தானீந்தான் சயோகமுனி யறிந்து
மங்கையர்க்கு வந்த மகனா லழிவையென்று
மாயனுட ஏவலினால் மாமுனியு மப்போது
பாயமுள்ள கஞ்சனுக்குப் படுசாப மிட்டனனே
சாபமது கஞ்சன் தானறியா வண்ணமுந்தான்
பாவமிக தான்வருத்தி மிகுத்தகே டுள்ளகஞ்சன்
சோதிரியங் கேட்கத் தொடர்ந்தான்கா ணம்மானை
அப்போது சோதிரிஷி அந்தமுனி சாபமதால்
எப்போது ஆகிடினும் இடுக்கம்வரு மென்றுரைத்தான்
சோதிரியங் கேட்டுத் துக்கமுற்றுக் கஞ்சனுந்தான்
வேதி யனையனுப்பி மிகுத்தகே டுள்ளகஞ்சன்
கலியாணஞ் செய்யக் கருத்தல்ல வென்றுசொல்லி
வலியான கஞ்சன் வைத்திருந்தா னம்மானை
அந்தநல்ல செய்தி அறிந்தந்த நாரதரும் 760

வந்துகஞ் சன்தனக்கு வளப்பமெல்லாஞ் சொல்லலுற்றார்
கேளாய் நீகஞ்சா கீர்த்தியுள்ள சாஸ்திரங்கள்
வாழாத மங்கையரை வைத்திருந்தால் ராச்சியத்தில்
தர்மந் தலைகெடுங்காண் சாஸ்திரத்துக் கேராது
வற்மம் வந்துசிக்கும் மாரியது பெய்யாது
கோத்திரத்துக் கேராது குடும்பந் தழையாது
சூத்திர நோய்கள் சுற்றுமடா அக்குடும்பம்
மானம் வரம்புகெட்டு மனுநீதி தானழிந்து
ஊனமடா அக்குடும்பம் உலகத்துக் கேராது
கோட்டை யழியும் குளங்கரைகள் தானிடியும்
நாட்டை முடிக்குமடா நல்லகன்னி காவல்வைத்தால்
பொன்னான சீதை பிலத்தகற் பானதிலே
கண்ணான இலங்கை கரிந்ததுவுங் கண்டிலையோ
இப்படியே வேதம் இயம்பி யிருப்பதினால்
அப்படியே பெண்ணார் அவர்கள்ரண்டு பேரையுந்தான்
காவலிட்டு வைத்தால் கற்பதினா லுன்றனக்குப்
பாவம்வந்து சுற்றும் பலிக்குமடா வேதமது
ஆனதால் பெண்கள் அவர்கள்ரண்டு பேரையுந்தாம்
மானமுள்ள மன்னனுக்கு மணஞ்செய்து தான்கொடுத்துக்
கெற்பமது உண்டாகிக் கீழே பிறக்கையிலே 780

அப்போநீ கொன்றாலும் ஆனாலும் பாரமில்லை
என்றுஅந்த நாரதரும் இத்தனையும் தான்கூற
நன்று மொழியெனவே நவ்வியே கஞ்சனுந்தான்
எனக்குப் படிப்புரைத்த ஏற்றவசு தேவன்
தனக்கு இவர்களையும் தான்சூட்ட வேணுமென்று
வேணுமென்று சீட்டோ விரும்பிவசு தேவனுந்தான்
வாணுவங்க ளோடே வந்தான் மதுரையிலே
தேவகியை ரோகணியைச் சிறப்பா யலங்கரித்து
வைபோக முள்ளவசு தேவனையு மொப்பிவித்துச்
சங்கீதத் தோடே தையல்ரண்டு பெண்களையும்
மங்களத் தோடே வசுதேவன் தாலிவைத்துக்
கட்டிக் கைபிடித்துக் கனசீ தனத்தோடே
கொட்டித் திமிர்த்தூதும் குழலோடே வீற்றிருந்தான்
வாழ்ந்திருந்து பெண்கள் வயிறு வளருகையில்
ஆய்ந்தறிந்து கஞ்சன் அருவிலங்கில் வைத்தனனே
தெய்வகியாளு மழுது சிந்தைமுகம் வாடிருப்பாள்
மெய்யன் வசுதேவன் மிகக்கலங்கி தானிருப்பான்
மங்கைநல்லாள் ரோகணியும் வாடி யழுதிருப்பாள்
சங்கையுள்ள தேவர்களும் தையல்தெய்வக் கன்னியரும்    800

எல்லோருங் கஞ்சனுட இடுக்கமது தன்னாலே
அல்லோரு மெத்த அறமெலிந்தா ரம்மானை
இப்படியே செய்யும் இடுக்கமதுக் காற்றாமல்
அப்படியே மாயனுக்கு அபயம் அமரரிட

தேவர் முறையம்

நிலந்தேவி ஆகாய நீர்தேவி யார்கூடி
தலந்தேவி மன்னன் தனக்கே யபயமிட
தேவாதி தேவர் தேவிமுறை யாற்றாமல்
மூவாதி முத்தன் முழித்தார்காண் பள்ளியது
கண்டுதே வாதிகளும் கன்னி புவிமகளும்
விண்டுரைக்கக் கூடாத விமல னடிபோற்றி
ஆதியே நாதி அய்யாநா ராயணரே
சோதியே வேதச் சுடரே சுடரொளியே
பத்தர்க்கு நித்தா பரனேற்றார்க் கேற்றோனே
மூவர்க்கு மாதி முழுமணியாய் நின்றோனே
தேவர்க்கும் நல்ல சிநேகமாய் நின்றோனே
கிட்டவரார்க் கெட்டாத கிருஷ்ணாவுன் நற்பதத்தைக்
கட்டவரு மட்டான கருணா கரக்கடலே
உச்சிச் சுழியே உம்மென் றெழுத்தோனே
அச்சிச் சுழியே அம்மென் றெழுத்தோனே
அஞ்செழுத்து மூன்றெழுத்தும் ஆதிஅ வென்றெழுத்தும்    820

நெஞ்செழுத்து மெட்டெழுத்தும் நீயாகி நின்றோனே
எண்ணொருபத் தெண்ணிரண்டும் இவ்வே நடுவாக
ஒண்ணெழுத்தாய் நின்ற உடைய பெருமாளே
தண்டரளத் தூணாகித் தருவைந்து பேராகி
மண்டலத்துள் ளூறலுமாய் மயமுமாய் நின்றோனே
போக்கு வரத்துப் புகுந்துரண்டு கால்வீட்டில்
நாக்குரண் டுபேசி நடுநின்ற நாரணரே
அல்லாய்ப் பகலாய் ஆணாகிப் பெண்ணாகி
எல்லார்க்குஞ் சீவன் ஈயுகின்ற பெம்மானே
பட்சிப் பறவை பலசீவ செந்துமுதல்
இச்சையுடன் செய்நடப்பு இயல்கணக்குச் சேர்ப்போனே
ஒருபிறப்பி லும்மை உட்கொள்ளாப் பேர்களையும்
கருவினமா யேழு பிறப்பிலுங் கைகேட்போனே
ஆறு பிறப்பில் அரியேவுன்னைப் போற்றாமல்
தூறு மிகப்பேசித் தொழாதபே ரானாலும்
ஏழாம் பிறப்பிலும்மை எள்ளளவுதா னினைத்தால்
வாழலா மென்றவர்க்கு வைகுண்ட மீந்தோனே
இப்படியே ஏழு பிறப்பதிலும் உம்மையுந்தான்
அப்படியே ஓரணுவும் அவர்நினையா தேயிருந்தால்
குட்டங் குறைநோய் கொடியகன்னப் புற்றுடனே 840

கட்டம் வந்து சாக கழுத்திற்கண்ட மாலையுடன்
தீராக் கருவங்கும் தீன்செல்லா வாய்வுகளும்
காதா னதுகேளார் கண்ணே குருடாகும்
புத்தியற்று வித்தையற்றுப் பேருறுப்பு மில்லாமல்
முத்திகெட்ட புத்தி முழுக்கிரிகை தான்பிடித்துப்
பிள்ளையற்று வாழ்வுமற்றுப் பெண்சாதி தானுமற்றுத்
தள்ளையற்று வீடுமற்று சப்பாணி போலாகி
மாநிலத்தோ ரெல்லாம் மாபாவி யென்றுசொல்லி
வானிழுத்து மாண்டு மறலியுயிர் கொள்கையிலே
நாய்நரிகள் சென்று நாதியற்றான் தன்னுடலைத்
தேயமது காணத் திசைநாலும் பிச்செறிந்து
காக்கை விடக்கைக் கண்டவிடங் கொண்டுதின்னப்
போக்கடித்துப் பின்னும் பொல்லாதான் தன்னுயிரை
மறலி கொடுவரச்சே வலியதண் டாலடித்துக்
குறளி மிகக்காட்டிக் கொடும்பாவி தன்னுயிரை
நரகக் குழிதனிலே நல்மறலி தள்ளிடவே
இரைநமக் கென்று எட்டிப் புழுப்பிடித்து
அச்சுத ரைநினையான் அய்யாவைத் தானினையான்
கச்சி மனதுடைய காமாட்சியை நினையான்
வள்ளிக்குந் தேவ மாலவருக் காகாமல் 860

கொள்ளிக்குப் பிள்ளையில்லாக் கொடும்பாவி யென்றுசொல்லி
எவ்வியே அட்டை எழுவாய் முதலைகளும்
கவ்வியே சென்று கடித்துப் புழுப்பொசிக்கும்
என்றுநீ ரேழு இராச்சியமுந் தானறிய
அன்று பறைசாற்றி அருளிவைத்த அச்சுதரே
வானமது பூமியிலே மடமடென வீழாமல்
தானவனே உன்விரலால் தாங்கிவைத்த பெம்மானே
வாரி வரம்பைவிட்டு வையகத்திற் செல்லாமல்
காரியமாய்ப் பள்ளி கடலில் துயின்றோனே
மானம் வரம்பு மகிமைகெட்டுப் போகாமல்
ஊன மில்லாதே உறும்பொருளாய் நின்றோனே
சீவனுள்ள செந்துகட்குத் தினந்தோறு மேபொசிப்புத்
தாவமுட னீயுகின்ற தர்மத் திறவோனே
வலியோ ரெளியோர்க்கும் மண்ணூருஞ் செந்துகட்கும்
கலிதீர ஞாயம் கண்டுரைக்கும் பெம்மானே
சிவசெந்துக் கெல்லாம் சீவனுமாய் நின்றோனே
பாவமும் புண்ணியமாய்ப் பாராகி நின்றோனே
கண்ணாகி மூக்குக் கருணா கரராகி
மண்ணாகி வேத மறையாகி நின்றோனே
சாத்திரமும் நீயாய் சந்திரனும் நீயாகிச் 880

சூத்திரமும் நீயாய் சுழியாகி நின்றோனே
நட்சேத்தி ரமாகி நாட்கிரகம் நீயாகி
இச்சேத்தி ரமாய் இருக்குகின்ற பெம்மானே
மெய்யனுக்கு மெய்யாய் மேவி யிருப்போனே
பொய்யனுக்குப் பொய்யாய்ப் பொருந்தி யிருப்போனே
இமசூட் சமாகி ஏகம் நிறைந்தோனே
நமசூட் சமான நாரா யணப்பொருளே
கல்வித் தமிழாய் கனகப் பொருளாகிச்
செல்வித் திதுவாய்ச் செவ்வாகி நின்றோனே
அண்ட பிண்டமாகி அநேகமாய் நின்றோனே
கண்ட இடமும் கண்ணுக்குள் ளானோனே
ஈசர் கொடுத்த ஏதுவர மானாலும்
வேசமிட்டு வெல்ல மிகுபொருளாய் நின்றோனே
நடக்க இருக்க நடத்துவதும் நீயல்லவோ
திடக்க மயக்கம் செய்வதும் நீயல்லவோ
ஆரு மொருவர் அளவிடக் கூடாமல்
மேரு போலாகி விண்வளர்ந்து நிற்போனே
எண்ணத் தொலையாத ஏது சொரூபமதும்
கண்ணிமைக்கு முன்னே கனகோடி செய்வோனே
மூவரா லுன்சொரூபம் உள்ளறியக் கூடாது 900

தேவரா லுந்தெரியாத் திருவுருவங் கொள்வோனே
ஆயனே யெங்கள் ஆதிநா ராயணரே
மாயனே கஞ்சன் வலிமைதனை மாற்றுமையா
பாவமாய்க் கஞ்சன் பலநாளா யெங்களையும்
ஏவல்தான் கொண்ட இடுக்கமதை மாற்றுமையா
ஊழியங்கள் செய்து உடலெல்லாம் நோகுதையா
ஆழி யடைத்த அச்சுதரே யென்றுரைத்தார்
வாண னென்றகஞ்சன் மாபாவி யேதுவினால்
நாணமது கெட்டு நாடுவிட்டுப் போறோங்காண்
நரபால னென்ற நன்றிகெட்ட கஞ்சனினால்
வரம்பா னதுகுளறி மானிபங்கள் கெட்டோமே
இத்தனையுங் காத்து இரட்சிக்க வேணுமையா
முத்தியுள்ள தேவர் முறையம் அபயமிட
பூமா தேவி புலம்பி முறையமிட
நாமாது லட்சுமியும் நன்றா யபயமிட
நாரா யணர்பதத்தை நாயகியுந் தெண்டனிட்டுச்
சீரான லட்சுமியும் செப்பினள்கா ணம்மானை
என்னைப்போல் பெண்ணல்லவோ இவள்தா னிடுமுறையம்
வன்னமுள்ள மாலே மனதிரங்கிக் காருமையா
உடனேதா னாதி ஓலமிட்டுத் தேவருக்கும் 920
திடமான பூமா தேவிக்குஞ் சொல்லலுற்றார்

தேவர் வேண்டுதலுக்கு இரங்கல்

வந்து பிறப்போங்காண் மாபாரத முடிக்க
நந்தி குலம்வளர நாம்பிறப்போங் கண்டீரே
சாரமில்லாக் கஞ்சன் தனைவதைத்துப் பூமியுட
பாரமது தீர்ப்போம் பாரத முடித்துவைப்போம்
துவாபர யுகத்தில் துரியோ தனன்முதலாய்த்
தவறாத வம்பன் சராசந் தன்வரையும்
அவ்வுகத் திலுள்ள அநியாயமு மடக்கிச்
செவ்வுகத்த மன்னவர்க்குச் சிநேகமது செய்வதற்கும்
உங்களுக்கும் நல்ல உதவிமிகச் செய்வதற்கும்
அங்குவந்து தோன்றி ஆய ருடன்வளர்வோன்
போங்களென்று பூமா தேவியையுந் தேவரையும்
சங்குவண்ண மாலோன் தானே விடைகொடுத்தார்

கண்ணன் அவதாரம்

விடைவேண்டித் தேவர் மேதினியில் தாம்போகப்
படைவீர ரான பச்சைமால் தானெழுந்து
ஆதி கயிலை அரனிடத்தில் வந்திருந்து
சோதி மணிநாதன் சொல்லுவா ரம்மானை
வாணநர பாலனென்ற மாபாவிக் கஞ்சனினால்
நாணமது கெட்டோமென நாடிமிகத் தேவரெல்லாம்
பூமா தேவிமுதல் பொறுக்கமிகக் கூடாமல் 940

ஆமா அரியே ஆதி முறையமென்றார்
முறையம் பொறுக்காமல் முடுகியிங்கே வந்தேனென்று
மறைவேத மாமணியும் மகிழ்ந்துரைத்தா ரம்மானை
அதுகேட்டு ஈசர் அச்சுதருக் கேதுரைப்பார்
இதுநானுங் கேட்டு இருக்குதுகா ணிம்முறையம்
ஆனதால் கஞ்சன் அவனைமுதல் கொல்வதற்கு
ஏனமது பாருமென்று எடுத்துரைத்தா ரீசுரரும்
பாருமென்று ஈசர் பச்சைமா லோடுரைக்க
ஆருமிக வொவ்வாத அச்சுதரு மேதுரைப்பார்
மேருதனில் முன்னாள் வியாசர் மொழிந்தபடி
பாருபா ரதமுதலாய்ப் பாரதப்போர் தான்வரையும்
நாரா யணராய் நாட்டில் மிகப்பிறந்து
வீரான பார்த்தன் மிகுதேரை ஓட்டுவித்துச்
சத்தபல முள்ள சராசந் தன்வரையும்
மற்றவ னோராறு வலியபலக் காரரையும்
கொல்லவகை கூறி குருநிலையைத் தான்பார்த்து
வெல்லப்பிறப் பாரெனவே வியாசர் மொழிந்தபடி
அல்லாமற் பின்னும் ஆனதெய்வ ரோகணியும்
நல்ல மகவான நாரா யணர்நமக்கு
மகவா யுதிப்பாரென மகாபரனார் சொன்னபடி 960

தவமா யிருந்து தவிக்கிறாள் தேவகியும்
இப்படியே யுள்ள எழுத்தின் படியாலே
அப்படியே யென்னை அனுப்புமென்றா ரம்மானை

முன்னே வியாசர் மொழிந்தபடி முறைநூல் தவறிப் போகாமல்
தன்னை மதலை யெனஎடுக்கத் தவமா யிருந்த தெய்வகிக்குச்
சொன்ன மொழியுந் தவறாமல் துயர மறவே தேவருக்கும்
என்னைப் பிறவி செய்தனுப்பும் இறவா திருக்கும் பெம்மானே

முன்னே வியாசர் மொழிந்தமொழி மாறாமல்
என்னையந்தப் பூமியிலே இப்போ பிறவிசெய்யும்
செந்தமிழ்சேர் மாயன் சிவனாரை யும்பணிந்து
எந்தனக்கு ஏற்ற ஈரஞ்சாயிர மடவை
கன்னியரா யென்றனக்கு கவரியிட நீர்படையும்
பன்னீர்க் குணம்போல் பைம்பொன் னிறத்தவராய்
ஆயர் குலத்தில் அநேக மடவாரை
பாயமுற வாடிருக்கப் படைப்பீர்கா ணீசுரரே
உருப்பிணியாய் இலட்சுமியை உலகிற்பிறவி செய்யும்
கரும்பினிய தெய்வக் கயிலாச மாமணியே
சத்தபெல முள்ள தத்துவத்தார் தங்களையும்
மெத்தவரம் பெற்ற மிகுவசுரர் தங்களையும்
எல்லோரையு மிப்பிறவி இதிலே வதைத்திடவே 980

அல்லோரை யும்பிறவி ஆக்கிவைய்யு மென்றுரைத்தார்
என்றனக்கு நல்ல ஏற்ற கிளைபோலே
விந்து வழிக்குலம்போல் மிகுவாய்ப் படையுமென்றார்
இப்படியே மாயன் இசையஅந்த ஈசுரரும்
அப்படியே பிறவி அமைக்கத் துணிந்தனராம்
துணிந்தாரே மாயன் தொகுத்ததெல்லா மாராய்ந்து
வணிந்தார மார்பன் வகைப்படியே செய்யலுற்றார்
தெய்வகியாள் வயிற்றில் திருமால் பிறந்திடவே
ஐவர்க் குறுதியிட அச்சுதருந் தோன்றுவாராம்
கலக்கமுடன் விலங்கில் கவிழ்ந்திருந்த மாதுவுட
மலக்கமது தீர மலரோன் பிறக்கலுற்றார்
ஐவர்க் குபகாரம் அன்பாகச் செய்திடவும்
தெய்வகிக்கும் ரோகணிக்கும் சிவகெதிக ளீவதற்கும்
கஞ்சனுட வலுமை கட்டழித்துக் கொல்வதற்கும்
விஞ்சவரம் பெற்று வீறுசெய்யும் பேர்களையும்
சத்த பெலமுள்ள தத்துவங்க ளுள்ளோரைத்
தத்தியுள்ள விமனையும் தன்னா ளாக்கிவிட்டுக்
கொல்வதற்கும் தேவருட கூர்முறையந் தீர்ப்பதற்கும்
வெல்வதற்கும் பூமியுட விதனமதை மாற்றுதற்கும்
முன்னே வியாசர் மொழிந்த முறைப்படியே 1000

தன்னிக ரில்லாத தையல்தெய்வ கிவயிற்றில்
பிறக்கிறா ரென்று பெரியோர்கள் கொண்டாட
இறக்கிறார் பொல்லாதார் என்றுமிகக் கொண்டாட
முன்பெற்ற பிள்ளை முழுதுமவன் கொன்றதினால்
வன்பற்ற மாது மங்கையந்தத் தெய்வகியும்
மெத்த மயங்கி முன்னம்விதி தன்னைநொந்து
கர்த்தன் செயலோ கரியமால் தன்செயலோ
என்றுஅந்தக் கன்னி இருபேருந் தான்புலம்பி
விண்டு சொல்லாத விதன மிகவடைந்து
அழுது கரைந்து அவளிருக்கும் வேளையிலே
பழுதில்லா தாயன் பாவை வயிற்றிலுற்றார்
பகவதியு மங்கே பாவையசோ தைவயிற்றில்
சுகபதியு மங்கே தோன்றினள்கா ணம்மானை
மாயனந்தத் தெய்வகியாள் வயிற்றிலுற்ற தவ்வளவில்
தேசமெல்லாம் நன்றாய்ச் செழித்ததுகா ணம்மானை
கெற்பமுற்ற தெய்வகியாள் கெஞ்சுகவா யஞ்சுகமும்
நற்பதமாய்த் தேகம் நாட்டமுடன் கோட்டியுமாய்
பத்துமாதந் திகைந்து பாலன் பிறந்திடவே
சுற்றுமதிற் காவல்வைத்த துடியோர் வலுவிழந்து
வசுதேவன் காலிலிட்ட வாய்த்த விலங்குமற்று 1020

விசுவாச மாதருட விலங்கது தானுமற்றுத்
தாள்திறந்து நேரம் தான்விடியு முன்னாகக்
கண்டாளே தெய்வகியும் கனத்த மதலைதனை
கொண்டாடித் தானெடுத்துக் கூறுவா ளம்மானை
கண்ணணோ சீவகனோ கரியமுகில் மாயவனோ
வண்ணனோ தெய்வேந்திரனோ மறையவனோ தூயவனோ
அய்யோமுன் பெற்ற அதிக மதலையெல்லாம்
மெய்யோதா னிம்மதலைக்(கு) ஒவ்வாது மேதினியே
என்று பிரியமுற்று ஏற்ற மதலைதனை
அன்று கொடுத்து அனுப்பினா ளயோதையிடம்
கொண்டு வசுதேவன் அயோதைக் குடிலேகிக்
கண்டு அயோதை கன்னியங்கே பெற்றிருந்த
பெண்மதலை தன்னைப் பூராயமா யெடுத்து
ஆண்மதலை தன்னை அயோதை யிடமிருத்தி
வந்து வசுதேவன் மங்கைகை யில்கொடுத்துப்
புந்திமிக நொந்து போயிருந்தா னம்மானை
அந்த யிராவிடிந்து அலைகதிரோன் தோன்றினபின்
கந்த மனசுள்ள கஞ்ச னவன்தனக்கு
ஒற்றாளாய்த் தூதன் ஒருவன் மிகஓடி
பெற்றா ளுன்தங்கை பிள்ளை யெனவுரைத்தான் 1040

கேட்டானே கஞ்சன் கெருவிதமாய்த் தானெழுந்து
பூட்டான நெஞ்சன் பிள்ளைதனை வந்தெடுத்துத்
தூக்கி நிலத்தில் துண்ணெனவே தானடிக்க
ஆக்கிரமத் தாலே அவன்தூக்க ஏலாமல்
சோர்வுறவே கஞ்சன் துடியிழந்து நிற்கையிலே
பாரளந்தோன் தங்கை பகவதியு மேதுசொல்வாள்
என்னை யெடுத்து ஈடுசெய்யா தேகெடுவாய்
உன்னை வதைக்க உற்றயெங்க ளச்சுதரும்
ஆயர்பா டிதன்னில் அண்ணர் வளருகிறார்
போய்ப்பா ரெனவே போனாள் பகவதியும்
கேட்டந்தக் கஞ்சன் கிலேச மிகவாகி
வீட்டுக்குள் போயிருந்து விசாரமுற்றா னம்மானை

அய்யோ முனிதான் சபித்தபடி ஆயர் பதியில் போகறியேன்
மெய்யோ தளரு துடல்மெலியு மெல்லி மொழிந்த விசளமதால்
கையோ சலித்துக் காலயர்ந்து கால விதியாற் கருத்தயர்ந்து
பையோ ராளைத் தானழைத்துப் பார்க்க விடுத்தான் கஞ்சனுமே

கஞ்சன் பாடு

அய்யோ மறையோன் அன்று சபிபத்தபடி
சையோ இடையர் தம்பதியில் போகறியேன்
தங்கை வயிற்றில் செனித்தபிள்ளை யானதுண்டால்
பங்கம்வரு மென்றனக்குப் பதறுதடா என்னுடம்பு 1060

என்று மனங்கருகி இயலழிந்த கஞ்சனுந்தான்
அன்றுஒரு தூதனையும் அனுப்பினன்கா ணம்மானை
வாராய்நீ தூதா மற்றோ ரறியாமல்
பாராய்நீ தூதா அயோதைப் பதியேகி
என்றுஅந்தத் தூதனையும் ஏகவிட்டான் கஞ்சனுமே
நன்றுநன்று என்று நடந்தானே தூதனுந்தான்
தூதன் மிகநடந்து தோகைஅயோ தைமனையில்
புகுந்தந்தப் பிள்ளை பொன்தொட்டிலி லேகிடக்கக்
கண்டுஅந்தத் தூதன் கஞ்சனுக்கு நஞ்செனவே
விண்டு பறையாமல் விரைவாகப் போயினனே
போயந்தத் தூதன் பொறையுள்ள கஞ்சனுக்கு
வாயயர்ந்து சிந்தை மறுகியே சொல்லலுற்றான்
காமனோ சீவகனோ கண்ணனோ சந்திரனோ
மாமதனோ சூரியனோ மறையவனோ இறையவனோ
நாமத் திறவானோ நாரா யணன்தானோ
சோமத் திருவுளமோ தெய்வேந் திரன்தானோ
ஈசனோ வாசவனோ இந்திரனோ சந்திரனோ
மாயனோ வுன்னை வதைக்கவந்த மாற்றானோ
ஆரோ எனக்கு அளவிடவுங் கூடுதில்லை
பேரோ அயோதைப் புதல்வனெனக் காணுதில்லை 1080

தெய்வகியாள் தேகத் திருச்சுவடு தோணுகொஞ்சம்
மெய்யதிப னான விட்டிணுபோல் முச்சுவடு
என்றந்தக் கஞ்சனுக்கு இத்தூதன் சொல்லிடவே
அன்றவன் கேட்டு அயர்ந்திருந்தா னம்மானை
என்செய்வோ மென்று இருக்குமந்த நாளையிலே
முன்செறியும் பூத மூரிதனை யேவியவன்
கொல்லவென்று விட்டான் குழந்தைதனை யம்மானை
வல்ல பெலமுள்ள மாபூதம் பட்டபின்பு
பின்னுமே தானும் பிலஅரக்கரை யேவிக்
கொன்றுவா வென்றான் குழந்தைதனை யம்மானை
கொல்லவந்த பேரையெல்லாம் கொன்றதுகா ணக்குழந்தை
வெல்லவிட்டப் பேரிழந்து மெலிந்திருந்தான் கஞ்சனுமே
ஆயர் குடியில் அரியோன் மிகவளர்ந்து
மாயன் விளையாடி மடந்தையோடுங் கூடி
வென்றுபால் வெண்ணெய் மிகப்பொசித்துக் காடதிலே
கன்றாவு மேய்த்துக் காளியன் தனைவதைத்துக்
கஞ்சனுட ஏவலினால் காட்டில்வந்த சூரரையும்
துஞ்சிவிடக் கொன்று தொலைத்தனர்கா ணம்மானை
ஆயருக்கு வந்த ஆபத்து அத்தனையும்
போயகற்றி நந்தன் பிள்ளையெனவே வளர்ந்தார் 1100

மதுரைதனில் வாழும் மாபாவிக் கஞ்சனுக்கு
இறுதிவரும் போது ஏதுசெய்தான் கஞ்சனுமே
நந்திடையன் பாலன் நல்லஸ்ரீ கிட்டிணனை
இந்திடத்தில் கொண்டுவர ஏவிவிட்டான் ஓராளை
கஞ்சனுட ஆளும் கண்ணர்ஸ்ரீ கிட்டிணரை
அஞ்சலென்று கண்டு அழைத்தாருமைக் கஞ்சனென்றான்
அந்தவிச ளமறிந்து அரியோ னகமகிழ்ந்து
வந்த விசளம் வாச்சுதென் றெம்பெருமாள்
கூடச் சிலபேரைக் குக்குளிக்கத் தான்கூட்டி
ஈடவி யென்ற எக்காள சத்தமுடன்
குஞ்சரமும் பரியும் குரவைத் தொனியுடனே
கஞ்ச னரசாளும் கனமதுரை சென்றனரே
நாட்டமுட னயோதை நல்லமகன் வந்தானென்று
கேட்ட விசளம் கெட்டியெனக் கஞ்சனுந்தான்
இங்கேநான் சென்று ஏற்றவனைக் கொல்லவென்று
சங்கையற்றக் கோடி தத்திப் படையுடனே
கொல்லவிட்டக் கஞ்சன் குதிரைத் தளம்படையும்
எல்லாந் திருமால் இறக்கவைத்தா ரம்மானை
கஞ்சன் படைகள் கட்டழிந்து போனவுடன்
வஞ்சகனும் வந்து மாயனு டனெதிர்த்தான் 1120

மாயனுட போரும் வஞ்சகக்கஞ் சன்போரும்
தேசமெல்லா மதிரச் சென்றெதிர்த்தா ரம்மானை
மாயனுக்குக் கஞ்சன் மாட்டாமல் கீழ்விழவே
வாயமிட்டுக் கஞ்சன் மார்பிலே தானிருந்து
கஞ்சன் குடலைக் கண்ணியறத் தான்பிடுங்கி
வெஞ்சினத்தால் மாயன் விட்டெறிந்தார் திக்கதிலே
கஞ்சனையுங் கொன்று கர்மமது செய்தவரும்
தஞ்சமிட்டத் தேவருட தன்னிடுக்கமு மாற்றி
மாதாபிதா வுடைய வன்சிறையுந் தான்மாற்றி
சீதான உக்கிர சேனனையு மாளவைத்து
அவரவர்க்கு நல்ல ஆனபுத்தி சொல்லிமிக
எவரெவர்க்கும் நல்லாய் இருமென்று சொல்லியவர்
திரும்பிவரும் வேளையிலே தீரன்சரா சந்தனவன்
எந்தன் மருமகனை இவனோதான் கொன்றதென்று
வந்தனனே மாயனுடன் வாதாடி யுத்தமிட
அப்போது மாயன் ஆராய்ந்து தான்பார்த்து
இப்போ திவனை ஈடுசெய்யக் கூடாது
சத்தபெல மல்லோ சராசந்த வேந்தனுக்குக்
கொற்றவ வீமனல்லோ கொல்லவகை யுண்டுமென்று
இதுவேளை தப்பவென்று எம்பெருமாள் தானடந்து    1140

செதுவோடு கூடிச் செகலதுக்குள் ளேகினரே
கடலதுக்குள் வந்து கனத்தமதி லிட்டவரும்
திடமுடனே மாயன் துவரம் பதியிருந்தார்
பூதனைச் சகட னோடு பின்னுள்ள அரக்கர் தம்மைச்
சூதனை யெல்லாங் கொன்று சுத்தமாய் மதுரை புக்கி
நீதமே யில்லாக் கஞ்சன் நெஞ்சையும் பிளந்து கொன்று
கூதவன் துவா ரகையில் குணமுட னிருந்தா ரன்றே 1147

 
மேலும் அகிலத்திரட்டு அம்மானை! »
temple news
அய்யா துணை காப்பு ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணிகாரணம்போல் செய்தகதை கட்டுரைக்க - ... மேலும்
 
temple news
கஞ்சனையு மற்றுமுள்ள காலவுணர் தங்களையும்வஞ்சகமா யுள்ள வாணநர பாலனையும்இம்முதலா யுள்ள ஏற்ற ... மேலும்
 
temple news
தண்டமிழுங் கன்னி சான்றோர்க ளானோர்க்குக்கோட்டையு மிட்டுக் குமாரரையும் பெண்ணதையும்தாட்டிமையாய்ச் ... மேலும்
 
temple news
பூலோக மெல்லாம் பொய்யான மாகலியன்மாலோ சனையிழந்து மாறியே மானிடவர்சாதி யினம்பிரித்துத் தடுமாறி ... மேலும்
 
temple news
திருச்செந்தூர் தன்னில் திருமா லங்கேயிருக்கவிருச்சமுள்ள நீசன் வேசைநசு ராணியவன்வையங்க ளெல்லாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar