Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அகிலத்திரட்டு அம்மானை பகுதி-13 அகிலத்திரட்டு அம்மானை பகுதி-15
முதல் பக்கம் » அகிலத்திரட்டு அம்மானை!
அகிலத்திரட்டு அம்மானை பகுதி-14
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2012
05:06

அய்யாவை முட்டப்பதிக்கு அழைத்தல்

இந்தப் படியே இவர் வாழும் நாளையிலே
சொந்தத் திருமால்க்கு சுவாமி யுரைத்தபடி
ஆண்டாறு சென்று அதிகத் தவமதுதான்
கூண்டாய் முடித்துக் குருநாதக் கண்மணியும்
இனிநாம் செய்யும் இயல்பென்ன என்றுசொல்லி
மனிதவ தாரன் மனதில் நினைத்திருக்க
நன்றான முட்டப் பதிதலத்தில் நாரணரும்
மன்றாடும் நல்ல வாய்த்தபர மேசுரரும்
வேதப் பிரமன் விளங்கு மறையோனும்
நாத ரிஷிமாரும் நல்லசங்கத் தோர்களுமாய்ச்
சத்தி யுமையும் சரசு பதிமாதும்
வித்தை முகத்து வேழ முகத்தோனும்
எல்லோரும் வந்து இருந்தார் கடலருகே
அல்லோரும் வந்து அங்கே யிருந்துகொண்டு
ஏற்ற முனியில் இரண்டுபே ரைவருத்திச்
சித்த முடனே திடீரெனவே நீங்கள்சென்று
நம்முடைய பாலன் நல்லவை குண்டரையும்
எம்முடைய அருகில் இப்போ கொடுவரவே
சொல்லி யயைச்சார் சுவாமிதா னென்றுசொல்லி
நல்லியல்பாய்ச் சொல்லி நாரணனை யிங்கழையும் 20

வாருங்கோ முனியே வாய்த்த தவத்தோரே
சேருங்க ளங்கே திடீரெனவே யிப்போது
என்று விடைகள் இருவருக் குங்கொடுக்க
அன்று முனிகள் அவ்வாயு போல்விரைவாய்க்
கடிதாய் நடந்து கரியமால் நற்றவசு
முடிவாகச் செய்த முகுந்தன் பதியில்வந்தார்

வந்தனர் வைந்தர் பாத மலரிணை முனிமார் கண்டு
செந்தமிழ் ஆயன் பெற்றச் சேயிது கண்ணோ விண்ணோ
கந்தரக் கலியை வென்றுக் கனதர்மப் புவியை யாள
முந்தநல் தவங்கள் செய்து முடித்தவா பேற்றிப் பேற்றி

பொல்லாக் கலியில் வந்திருந்து பெண்ணோ டவனிப் பொன்னாசை
மண்ணோ டுண்ணு மதத்தாசை மாய்கை விழியார் மருட்டாசை
பண்ணோர் தவத்துள் ளணுகாமல் பவமே யறுத்துப் பார்வைவிழி
கண்ணோ ஞானக் கருவிருத்திக் கண்டாய்ப் பொருளைக் கண்டாயே

அய்யா வுமது தவமதுவால் அரம்பை மாத ரன்றுபெற்ற
மெய்யாஞ் சான்றோர் கெதிகள்பெற்றார் மேவலோரு மிகப் புகழ்ந்தார்
பொய்யாங் கலிய னுயிரிழந்து போனா னரக மீழாமல்
அய்யா முட்டப் பதிதனிலே அழைத்தா ருந்த னப்பனென்றார்

அழைத்தா ரெனவே சொன்னவுடன் ஆதி முனியை மிகநோக்கிப்
பிழைத்தார் போலே மனமகிழ்ந்து பின்னு முனியோ டுரைபகர்வார் 40
இழைத்த கலியி னுள்ளிருத்தி என்னைக் கலியன் செய்தவலு
சழத்த மறிந்து வந்தாரோ சமய மிதுவோ தானுரைப்பீர்

நல்ல முனியே நம்மைக் கலியதனுள்
செம்மைகெட்ட நீசத் தீபாவிக் கையதிலே
கண்ணியிட்டு வைத்துக் கடக்கே நகண்டிருந்த
புண்ணியவா னின்று பிழைத்துக் குதித்தாரோ
நான்பட்ட பாடு நாடுபதி னாலறியும்
ஏன்பட்டா யென்று இன்றுகேட்க வந்தாரோ
ஏதோ தெரியலையே என்னுடைய நாயகமே
பாதகன்தான் செய்த பாராத்தியங் களெல்லாம்
பார்க்கும் படியாய்ப் பாரிக்கி றேனெனவே
ஆர்க்க முடனே அந்நீசன் செய்தபடிக்
கட்டுங் கயிறும் கையில் விழுந்திடத்தில்
முட்டுக்கு மேலே ஊற்ற மிகநினைத்தார்
வெடிப்புடங்கு தன்னால் விலாவி லிடித்திடத்தில்
துடிப்புடனே ஊற்றம் தோன்றும் படியேவைத்தார்
மேலில் பிரம்பால் மிக்க அடித்திடத்தில்
சீல முடனே சிணந் தோணவைத்தனரே
கன்னமதில் கம்பால் கனக்க அடித்திடத்தில்
உன்னித மாக உடன்தோண வைத்தனரே 60

கூண்ட முடியைக் குலுக்கியசைத் திடத்தில்
வேண்டு முடியை மிகக்கழிய வைத்தனரே
இப்படியே நீசன் செய்த இடறதுபோல்
அப்படியே தோணவைத்து ஆங்காரங் கொண்டனரே
பால்மாட்டை நீசன் பற்றிக்கொண்டே யடைத்து
மால்பா லேற்கும் மாதிரியைப் பார்ப்போமென
இந்தநாள் வரைக்கும் இருந்ததொன் றானதுக்குள்
அந்தநீ சன்தான் அநியாய மாகவேதான்
கொண்டு அடைக்க கோவேங் கிரிநாதன்
அன்றுமுத லிருபத் தொருநாள துவரைக்கும்
கோல மெடுத்துக் குருச்சமைந்த நாரணரும்
பாலுமுதல் வேறு பண்டமொன் றேராமல்
இருக்குந் தறுவாய் இதுநல்ல தாகுமென
அருக்காக நீசன் அவன்செய்த வேதனைபோல்
எல்லா முறைபோல் எடுத்தார் சொரூபமது
நல்ல முனிமார் நாரணா என்றுநிற்க
கைக்குள்ளே நின்ற கரியசீ சன்மாரில்
மெய்க்குள் ளறிய விளம்பினா ரெம்பெருமாள்

அய்யா முட்டப்பதி ஏகல்

இன்றைத் திவசம் இசைந்தமுட் டப்பதியில்
நன்றிப்போ போக நல்மணிக ளாகுதெனச் 80
சொல்ல அறிந்து சீசன்மார் தாமகிழ்ந்து
நல்லதெனச் சொல்லி நாடி யவரிருக்க
அன்றிரா தன்னில் ஆரு மறியாமல்
நன்றினிய சீசன் நாலுபேர் தாமறிய
வந்த முனியும் வளர்ந்த இருமுனியும்
சொந்தமுடன் நாதன் தொட்டில் மிகஏறி
சீசன்மார் காவிச் சிணமாய் மிகநடக்க
வாசமுள்ள மாமுனிவர் வலமிடமுஞ் சூழ்ந்துவரத்
துடியாகத் தொட்டில் சுவாமி மிகஇருந்து
வடிவான முட்டப் பதிதலத்தில் வந்தனரே
முட்டப் பதியில் முகுந்த னரிநாதன்
கிட்ட வருகும் கிருஷ்ணர்வந்து சேர்ந்திடவே
மகனை மிகக்கண்டு மாவிருப்பத் தோடிளகி
உகமாள வந்த உடையமக னேயுனத
சடமெல்லாம் வாடி சடைப்பானே னென்மகனே
வடவெல்லா மென்னோடு வகுத்துரைநீ யென்மகனே
கண்ணே மணியே கருத்துள்ள நாயகமே
விண்ணே வொளியே வேதத் திருவிளக்கே
கலியில் மிஇருந்து கலக்க மிகஅடைந்த
மெலிவெல்லாஞ் சொல்லி விளம்புநீ யென்மகனே 100

அடித்ததா ருன்னை அவனிதனில் பேயனென்று
கடுத்தமது செய்தக் கலக்கமெல்லாஞ் சொல்லுவென்றார்
சொல்லென்று மாலும் சிவமு மெடுத்துரைக்க
வல்லபெல மான வைகுண்ட ரேதுரைப்பார்
செந்தூர்க் கடலில் செகலதுக்குள் ளென்னைவைத்து
முந்த எனக்கு மொழிந்த வுபதேசம்
கப்பாம லாறு வருசந் தவசாக
மெய்ப்பாவின் பாலருந்தி வீடுசொத் தெண்ணாமல்
கலிக்காசி யாசை கனாவில் நினையாமல்
அலிக்கியானப் பெண்ணின் ஆசை யணுகாமல்
பக்கக் கிளையாசை பாவித் தினிதாசை
அக்கத்தி னாசை அனுப்போல் நினையாமல்
நல்ல துணியாசை நளின மொழியாசை
சொல்லினிய ஆசை தீன்பண்டத் தினாசை
தேய்ப்புக் குளிப்புச் சிறந்த பொருளாசை
தாற்பரிய மானச் சந்தோசத் தினாசை
பூமியா சைமுதலாய்ப் பேராசை யும்வெறுத்துச்
சாமி யுமதருளால் தொல்புவியி லுள்ளோர்க்குத்
தண்ணீரா லெத்த சர்வ வியாதிமுதல்
மண்ணிலுள்ளோர் யார்க்கும் வாய்த்ததர்ம மாகவேதான் 120

நோய்தீர்த்து வைத்ததல்லால் நேட்டமொரு காசறியேன்
வாழ்வில்லாப் பேர்க்கு வாழ்வு மிகக்கொடுத்தேன்
தாழ்வடைந் தோர்க்குத் தாழ்வை விலக்கிவைத்தேன்
பிள்ளை யில்லார்க்குப் பிள்ளை மிகக்கொடுத்தேன்
கள்ளமெல்லாம் நீக்கிக் கழிவை வரத்தைவைத்தேன்
வரம்வேண்டி நம்மிடத்தில் வைத்தந்தப் பேய்களையும்
குரமாய் மலையில் கொண்டு எரியவைத்தேன்
ஆயிரத் தெட்டு ஆன திருப்பதியில்
வாயிதமாய் வாழும் வாய்த்ததே வர்தமக்கு
ஞாயமில்லை பூசை நல்லாடு தீபவெலி
தேயமதி லுங்களுக்குத் தேரோட்டமு முதலாய்
ஏற்கப் படாதினிமேல் இராச்சியத்தி லுள்ளவர்தாம்
மார்க்க வைகுண்ட வல்லாத்தான் வந்ததினால்
பூசை படைப்புப் பெலிதீப மேராமல்
வாச முடனே மறைந்திருங்கோ நீங்களெனச்
சட்டமிட்டு வைத்தேன் தரணிபுற் பூண்டுவரை
மட்டை மருந்திலையும் மலைகடலும் வாசுகியும்
வையகத்தை யாளும் மாநீச னுமறிய
மெய்யாய் விரித்து விளம்பிமிகச் சட்டமிட்டேன்
இத்தனை சட்டம் இட்டவர்த்த மானமெல்லாம் 140

மத்திய மாய்வைத்த மாமுனியோ டேகேளும்
அல்லாமற் பூமிதனில் அவர்களறி யாதபடி
வல்லாமை யாய்க்காசி வழங்குமிலை பாக்குவரை
நானாசை கொண்டு நருட்களிடம் வாங்கினதை
வானாசை யுள்ள மாமுனியோ டேகேளும்
சதுராய் நருளறிய நல்லவெகு அற்புதங்கள்
இதுக்காய் கிணற்றில் ஏகாச்சிலை யுங்காட்டி
இருந்தேன் தவசாய் என்னுடைய நாயகமே
பொருந்தாத காரியங்கள் புத்திக் குளறிமிகச்
செய்துமிகக் காணாது செய்ய மணிவிளக்கே
நிசமிதுவோ என்று நீரவரோ டேகேளும்
இத்தனையுந் தர்மமதாய் யான்செய் திருக்கையிலே
புத்திகெட்ட நீசன் பொல்லாதான் வந்தெனையும்
கட்டி யடித்துக் கைவெடி யாலிடித்து
இட்டிறுக்கி வைத்தான் இரும்பு விலங்கதிலே
நஞ்சிட்டுத் தந்தான் நாடுஞ்சா ராயமதில்
கொஞ்சுங் கடுவாய்க் கூட்டி லடைக்கவென்றான்
நீச னவன்சாதி நிசமாகத் தான்கூடி
ஏசி யெனைப்பழித்த இடறுசொல்லக் கூடாது
ஐயோ அவர்கள் அடித்த அடிகளெல்லாம் 160

வையம் பொறுக்காதே மாநீசன் செய்தவினை
மாந்திர தந்திரத்தால் வஞ்சனைகள் செய்தெனையும்
கோந்திர மாகக் கொல்லவகை செய்தார்கள்
பாவிகள் செய்த பலவினைகள் சொல்லவென்றால்
தாவு முலகில் தாலமதி லோலையில்லை
என்னைத் தவத்துக்(கு) இருத்தியிது நாள்வரையும்
இன்ன மிரங்கலையோ என்தவசு காணலையோ
அன்றருளித் தந்த ஆண்டு திகையலையோ
இன்று முதற்கலியில் யான்போக வில்லையையா
நம்மாற் கலியில் நனின்றிருக்கக் கூடாது
சும்மா எனைநீங்கள் சோலிபண்ணக் கூடாது
நன்றிசற்று மில்லா நாற வெறுங்கலியில்
கொண்டென்னை வைத்துக் கோலமது பாராதேயும்
இனியென்னாற் கூடாது இக்கலியி லேயிருக்கப்
பனிதவழு மாயவரே பகர்ந்தமொழி மாறாமல்
ஆறு வருசம் அவனித் தவசிருந்தேன்
தாறுமா றுண்டானால் சாட்சியோ டேகேளும்
என்று வைகுண்டர் இத்தனையுஞ் சொல்லிடவே
நன்றினிய மகனை நல்லமுகத் தோடணைத்து

கண்ணே மணியே கருவூலமே கனக மணியே ரத்தினமே 180
விண்ணே வொளியே கற்பகமே வேதச் சுடரே விளக்கொளியே
மண்ணே ழளந்த மலர்பதத்தில் வந்தே குதித்த மலர்க்கொழுந்தே
இண்ணே முதலா யுனக்குநல்ல இயல்பே யாகு தென்மகனே

மகனே தவத்துள் ளிருக்கையிலே வருமோ செல்வ மாரார்க்கும்
செகமே ழறியத் தவமுடித்துச் சென்றால் சிவனுக் ககமகிழ்ந்து
தவமே முடித்த நினைவதுபோல் சகல கருமங் கைகூடும்
அகமே யுனக்கு அருளினது அனுப்போல் தவறா தருள்மகனே

செல்ல மகனே சீமானே நீகேளு
நல்ல மகனே நாரணா நீகேளு
தவவேடம் பூண்டு தவமா யிருக்கையிலே
சிவஞான மல்லால் செல்வம்போல் காணாது
தவசு நிறைவேறித் தமோதரர்க் கேற்று
பவிசு மிகவேண்டிப் பலன்பெற்று வாழ்வார்கள்
மகனே நீயிருந்த மகாதவத் தின்பெருமை
செகமீதே சொல்லத் தொலையுமோ என்மகனே
கள்ள யுகத்தைக் காணாம லேயறுத்து
உள்ள நடுஞாயம் உகத்தீர்ப்புச் செய்துமிக
ஆகாத்த தெல்லாம் அழித்து நரகிலிட்டு
வாகாய்க் குழிமூடி வாசல் தனைப்பூட்டி
மாறிய தில்லாமல் வங்கிஷமுந் தானொழித்து 200

வேறுவகை செய்து மேலுமொரு நல்லுகமாய்த்
தரும யுகமாய்த் தாரணிக்க மாயருளிப்
பொறுமை மனுவாய்ப் பெரியசான் றோர்வழியை
அன்பாக வைத்து ஆள முடிசூடிப்
பண்பாக வேண்டும் பவிசு மிகவாகச்
சாகா வுலகத் தர்ம பதியாள
வாகாய்த் தவசு வகுத்து முடிக்கையிலே
ஆங்கார மாமோ ஆணுவங்க ளங்காமோ
ஓங்கார மாமோ உற்ற தவசதுக்கு
தவசு நிறைவேறி தான்வந்த தாலேயினி
பவிசு வுனக்குப் பகருகிறேன் கேளெனவே
அருகில்வைத்த மாமுனியை அழைத்தார் திருமாலும்
துரிதமுடன் மாமுனிகள் சுவாமி யெனத்தொழுதார்
இந்தநாள் வரைக்கும் இவரிருந்த நற்றவசு
சந்தமோ வீணோ தாமுரைப்பீர் மாமுனியே
அப்போ முனிகள் ஆதி யடிபணிந்து
தப்பெருநா ளில்லை தவத்துக் குறுதியுண்டு
நூலொழுக்க மல்லாமல் நுண்ணிமைகள் தப்பவில்லை
மாலொழுக்க மல்லாமல் மனதுவே றில்லையையா
தப்பாத தவத்தில் சண்டித் தடிநீசன் 220

சிப்பாயி விட்டுச் சுவாமி தனைப்பிடித்து
முடித்தலையைப் பின்னி முழுநீசப் பாவியவன்
அடித்து விலங்கில் அவன்கொண்டு வைத்தனனே
வைத்துப்பல வேதனைகள் மாநீசன் செய்ததல்லால்
மெய்த்தபுகழ் மாலே இவர்மேலே குற்றமில்லை
என்று முனிமார் இசையத் திருமாலும்
கொண்டுபோய் நீசன் கோட்டிசெய்த ஞாயமெல்லாமல்
இருக்கட்டு மந்த இழிநீசன் செய்ததெல்லாம்
குருக்கட்டு முறையின் குணத்தைமிகச் சொல்லுமென்றார்
உடனே முனிகள் உள்ள மிகமகிழ்ந்து
படபடென நின்று பணிந்து மிகப்போற்றித்
தப்பில்லை யையா தவத்தி லொருபங்கமில்லை
என்று முனிகள் இகபரத்துக் குத்தமமாய்
அன்று உரைக்க அதகத் திருநெடுமால்
நல்ல தெனவே நன்மகனைத் தானாவி
செல்ல மகனே செகலத்துகுள் வாநீயென
மகனை மிகக்கூட்டி வாரிக்குள் ளேநடக்கத்
தவமுனிவ ரெல்லாம் சங்கீதம் பாடிவர
பாவாணர் பாட பரமுனிவர் தாம்பாட 240

நாவாணர் போற்ற நாரா யணர்மகனை
பாற்கடலி லுள்ள பாலமிர்தந் தான்வருத்தி
ஆர்க்க முடனே அருமைமக னைமூழ்க்கி
அழுக்கைத் துடைத்து அஞ்சாட்சர மருளி
முழுக்காட்டி மகனை உகந்தமுகத் தோடணைத்து
வேதப் புரோகி விளங்கி மிகவாழ்த்த
நீதம் நிறைந்த நீலநிற மண்டபத்தில்
தங்க மணியரங்கில் சமையக் கொலுவதிலே
மங்காத ஈசுரரும் மாதவனுந் தேவர்களும்
சத்தி யுமையும் சரசு பதிமாதும்
முத்தியுள்ள தேவர் முனிமார் ரிஷிமாரும்
எல்லோரும் நன்றாய் இறைஞ்சி முறையுமிட
நால்லோர்க் ளெல்லாம் நாடி மிகஇருக்க

முட்டப்பதி விஞ்சை 2

வல்ல திருமால் மகனை முகம்நோக்கி
செல்ல மகனே சிறந்ததேதி வந்ததினால்
திருநாள் நடத்தித் தெருவீதி தான்வரவும்
ஒருவாரந் தன்னில் ஒருநா ளிடைவிடாமல்
நித்தந் திருநாள் நீநடத்தி யென்மகனே
சத்தகன்னி மாரைத் தான்வருத்தி மாலையிட்டுக்
கலியாண மங்களங்கள் காட்சித் திருநாளும் 260

சலியாமற் காசுத் தந்தவர்க ளுண்டானால்
வேண்டிநீ தர்மம் விரைவாய் நடத்தியிரு
ஆண்டத் திருநாள் அதுமுடக்கம் வராமல்
பிச்சிவெள்ளை பச்சரிசி மிளகிலை தேங்காயும்
மிச்சம்பழஞ் சந்தனமும் மிகுபன்னீர் வாடைகளும்
மேற்கட்டி கட்டி மிகுவா யலங்கரித்து
மாற்கட்டுச் செய்து மகிழ்ச்சை டம்மானமிட்டு
இந்தப் படியாய் ஏழுநாளுந் திருநாள்
அந்தப் படிசெய்து அவனியி லாடிக்களித்து
எல்லா முறையும் இயல்பாகக் கொண்டாடி
நல்லாண்டு தேதி நல்லதிவ சம்பார்த்துத்
தெய்வகன்னி மாரைத் தெய்வச்சான் றோரிடமே
மெய்வரம் பான மனுமுறைபோல் தான்பேசிக்
கொடுக்கல்வாங் கல்முறையும் கூறி மிகக்கேட்டுத்
துடுக்கான நல்ல தோகைக்குண மும்பார்த்து
பார்த்துன் னருகில் பணிவிடைகள் செய்யுகின்ற
தோற்றுகின்ற சீசனுடத் தொல்முறை யும்பார்த்து
பரிய முறையும் பாவையர்கள் தம்முறையும்
சரியா யுலகோர் சங்கை யதுபோலே
தங்க நிறமானத் தர்மத் தலைவாநீ  280

மங்கள மதாக மாலையிடு என்மகனே
என்னோடு கன்னி ஏலமே சொன்னபடி
தன்னோ டினங்கள் தலைவன்மா ரேழ்வரையும்
எடுத்துக் கொடுத்து இளமுலைப்பால் தானூட்டி
கொடுத்து இகனைக் கூறிக்கோ என்மகனே
இப்படியே பெண்கள் இன்னுஞ்சில பேர்களுண்டு
அப்படியே அவரவர்க்கு அந்தந்த வேடமிட்டு
வகைவகையாய் வேசம் மாறி யுருவெடுத்துத்
திகையாம லவர்க்குச் சொல்லு முறைபோலே
கலியாணக் காட்சி கணக்குத்தீர் வைமுறையும்
வலியானக் கலியில் வாழ்வைமிகக் கொண்டாடிச்
சாம்பசிவக் கோலம் சாருமஞ்ச ணைக்கோலம்
ஆம்பக் குறக்கோலம் ஆடிமிகக் கழித்து
முற்றுந் திருநாள் முழுது மிகநடத்திப்
பத்தும் பெரிய பாலர்தங்கள் வீடேகி
விருந்து மிகவும் விரைவாகத் தானருந்தி
திருந்து புகழ்கிளைபோல் சிலவீட் டமுதருந்தி
பிச்சைபோ லுமருந்தி பெண்வழிச்சோ றுமருந்தி
மிச்சமாய்ப் புவியில் வேண்டும் பவிசுடனே
வெற்றியி டம்மானம் விருதுக் கொடிகள்கட்டிப் 300

புத்திர ரானோர்க்குப் பிழைக்கும்வலு புத்திசொல்லிப்
பாடித்தீர் வைதீர்த்துப் பரசோ தனைபார்த்து
ஆடித்தீர் வைதீர்த்து ஆண்பெண் மிகவேகண்டு
நல்லாண்டு கண்டு நாடும் மங்கையரைச்
செல்லக் கலியாணம் செய்து சிறப்புடனே
செந்தா மரையா ளுடனே சிறப்பிருந்து
ஆனை கன்றீணி அதினா லுலகமெல்லாம்
தானாக நீயும் தலைவ னெனச்சமைந்து
முரணிக் கலியழிய முச்சுடரு மொன்றாவாய்த்
தரணி யீரேழும் தடதடெனத் தானசைத்து
நீயதின்மே லாளும் நிண்ணயத்தைக் கேள்மகனே
தங்க முடிசூடிச் சான்றோர்க்கு நால்வரமும்
அங்கவர்க்குத் தானருளி அழகு மிகக்கொடுத்து
நல்லதர்ம மாக நாடும் புவியதிலே
அல்லல்வினை யற்று அவனியதை நீயாள்வாய்
அப்போ நீயரசு ஆளுகின்ற நாளையிலே
செப்பொண்ணாச் செல்வம் சிறப்புமிக வுண்டாகும்
பூமடந்தை வீட்டில் புகுந்து கொலுவிருந்து
தாமுனிந்து நீயும் தரணிதனில் வந்தவுடன் 320

நான்வந்து உன்னை நாடி மிகஎடுத்துத்
தான்மகிழச் செல்வத் தலைவ னுனையாக்கிச்
சொல்ல வொண்ணாத சுகந்தருவே னென்மகனே
எல்லைக் கணக்கும் ஏழுயுகக் கணக்கும்
தீர்த்து உனக்குத் திருவம்ப லமருளித்
தோற்றும் பதிகள் துலங்கும்வெகு ரத்தினமாய்
எல்லா மருளி ஏழுமாதர் தாஞ்சூழ
வல்லோனாய் நீயும் வாழுவா யென்மகனே
மலங்காதே யென்மகனே மாதவங்கள் பெற்றவனே
கலங்காதே யென்மகனே கண்ணேயென் கற்பகமே
என்று மகனுக்கு ஈதுரைக்கு மிவ்வளவும்
மன்று குலுங்காது வாரி யலுங்காது
மேகங் குடைநிழற்ற மேவலர்கள் போற்றிநிற்க
யோக முனிமார் ஓதித் தமிழ்கூற
ஈசர் மகிழ்ந்து இரத்தின மதிலிருக்க
வாசவனுந் தேவர்களும் வாய்பொற்றித் தாழ்ந்துநிற்க
இப்படியே சங்கம் எல்லா மகிழ்ந்துநிற்க
அப்படியே விஞ்சை யருளினா ராதியுமே

விஞ்சையும் பெற்று வைந்தர் விரைவுடன் தகப்பன் பாதம்
அஞ்சையும் புணர்ந்த சோதி அரனையும் வணங்கிப் போற்றி 340
நெஞ்சையு மொன்றுள் ளாக்கி நிர்மலத் தாயைப் போற்றி
கொஞ்சையுங் குணத்தி னாதன் கூறுவார் குருவைப் பார்த்து

என்னையாட் கொண்ட நாதா எங்குமாய் நிறைந்த நீதா
உன்னையான் கண்டு போற்ற உன்னருள் கிருபை தந்தாய்
இன்னமுங் கலியில் போய்நான் இருந்திந்த முறைகள் செய்தால்
என்னையாட் கொண்டு ரத்தினக் கிரீட மெப்போ தீவீரோ

கிரீட மெப்போ தீவிரென் றெனக் கேட்ட மைந்தா
அரிவிரி கொண்டே சூடி அணியிடை மாரைத் தோய்ந்து
தரிவிதி யான போதும் தாமரைக் கைநிகழ்ந்த போதும்
பரிவலம் வந்த போதும் பார்மக ளடைந்தா யன்றே

உன்விதி யதனால் முன்னூல் ஊறிய அமிர்தந் தன்னால்
என்விதி தன்னால் வந்த இகபர முனக்குள் ளாகி
மன்முறை தெளிந்த தன்றும் மான்கன்று ஈன்ற தன்றும்
பொன்மக ளகன்ற தன்றும் பூமக ளடைந்தா யன்றே

பூமக ளுன்னைச் சேர்ந்து பின்னாறு வரைக்கு மேலே
நானுகந் தன்னாற் போக்கி நகரொரு பகற்குள் ளாக்கித்
தானுனைத் தங்க மானத் தயிலமாம் பதத்தில் மூழ்க்கி
வானுனை மகிழ ரத்தின மகிழ்கிரீட மருள்வே னென்றார்

மகனே யுனக்கு மகாசெல்வ மாகிவரும்
சுகமேபோ யிரெனவே சொல்லி யனுப்பலுற்றார் 360
அனுப்பத் திருமால் அமைமக வேதுரைக்கும்
மனுப்புகழப் பெற்ற வைகுண்ட மேதுரைக்கும்
பாவி வெறுநீசன் பண்ணிவைத்த பாட்டையெல்லாம்
ஆவியறிந் தென்னுடைய அங்கமெல்லாஞ் சோருதையா
என்று வைகுண்டர் இசையத் திருமாலும்
அன்று மகனுக்கு அருளினது கேள்மாதே
இந்நீசன் நமக்கு இந்த யுகம்வரையும்
மன்னீதங் கெட்ட மாற்றானாய் வந்ததினால்
செய்தா னதினால் திருமகனே யஞ்சாதே
மைதான மான வாக்குநமக் காச்சுதெனக்
கைவாய்த்து தென்மகனே கலிநீச னையறுக்க
மெய்வாய்த்து நம்முடைய மேன்மைக் குலத்தோர்க்கு
அன்பான் சீமை அரசாள நாளாச்சு
தன்பா லடைய சரியாச்சு தென்மகனே
மலங்காதே போநீ வாழுகின்ற நற்பதியில்
கலங்காதே போயிருநீ கண்ணே திருமகனே

முட்டப்பதியிலிருந்து அய்யா தோப்புப்பதி திரும்புதல்

என்று விடையருள ஏற்ற திருமாலும்
அன்றுதிரு மாலும் அன்பாய் விடைவேண்டி
அலைவாய்க் கரையில் ஆதி வருகுமுன்னே
நிலையான சான்றோர் நிரம்பவந்து கூடினரே 380

கண்டந்தச் சான்றோரைக் கரியமா லுமகிழ்ந்து
நன்றென்று சொல்லி நாராயணர் கூட்டிப்
பண்டிருந்த நல்லப் பதியில்வந்து சேர்ந்தனரே
கண்டெந்தப் பேரும் கனபிரிய மாய்மகிழ்ந்து
தாமோ தரனார் தலத்தில் மிகச்சேர்ந்து
நாமோ முனிகூட நாடி மிகஇருந்தார்
இருந்து மிகப்பாலும் ஏற்றநல்ல பச்சரிசி
திருந்து சிறுமணியும் தேங்காய்ப்பூ தன்னுடனே
கொல்ல மிளகு கூண்டப் பொடியுடனே
நல்லாக இவ்வகைகள் நாடியொரு நேரமதாய்
காவி மிகப்புரிந்து கனத்திருத்தி ராட்சமிட்டுத்
தாவமுடன் மாத்திரைக்கோல் தானிதுவோ டேயிருந்தார்
கொஞ்சநாள் கழித்துக் கூண்டதிவ சம்பார்த்துப்
பஞ்சகரு ணாதிகளைப் பண்பாகத் தானிறுத்திக்
கந்தை மிகச்சூடிக் காவித்தொட்டில் மீதிருந்து
விந்தை யுடனுகத்து விவரிப்பெல் லாமெடுத்துக்
கூறினா ரந்தக் கூண்டரியக் காரணத்தை
பேறிருக்கும் நல்லோர் பெரிய பெருமானும்
நாடழியப் போறதுவும் நன்னாடு தோன்றுவதும்
பாடழிய நீசன் படப்போற செய்தியதும் 400

நல்ல மனுவோர் நாடி முழிப்பதுவும்
வல்லபுவி தர்மம் வாழ்வதுவுஞ் சிறப்பும்
சொல்லி விரித்தார் சிறந்ததொட்டில் மீதிருந்து
எல்லோருங் கேட்டு இப்போதோர் காரணந்தான்
நடத்துகிறா ரென்று நல்லோர்கள் சொல்லிடுவார்
சடத்தமுள்ள நீசச் சண்டாளப் பாவியெல்லாம்
காசு மிகவேண்டக் கபடுசெய்கி றானெனவே
பேசி யிவனும் பிதற்றுகிறா னென்றுசொல்லி
நகைப்பார் சிரிப்பார் நன்றிகெட்ட நீசர்குலம்
சிக்ப்பா னதுவால் தெய்வகுலச் சான்றோர்கள்

சான்றோர் பக்தி

கூடிக் குவித்து குணமாக வேகூடித்
தேடிவைத்த பண்டம் சுவாமி தனக்கெனவே
நம்முடைய சஞ்சலங்கள் நாடும்பிணி தீர்த்தவர்க்குத்
தம்முடைய பாலு தாங்கொடுக்க வேணுமென்று
பசுவைக் கொடுப்பார் பாலாடு தான்கொடுப்பார்
கசுவிரக்க மாகக் காசு பணங்கொடுப்பார்
கஸ்தி மிகத்தீர்த்த காயாம்பு வண்ணரென்று
வஸ்திரங் கொடுப்பார் வழங்கு மிலைகொடுப்பார்
நெல்லு சிறுமணிகள் நெய்த்தேங் காய்கனிகள்
நல்லமைப்புச் சான்றோர் நாடி மிகக்கொடுத்தார் 420

கொடுக்க அன்பரெல்லாம் குணமாய் மிகவேண்டி
அடுக்க அவரருகில் அன்பாக நின்வரில்
பணிவிடைகள் செய்வோர்க்குப் பரிந்து மிகஈந்தார்
மணியாம் பரனும் மகிழ்ந்துபா லேற்றனரே
ஏற்று உகத்துக்கு உகத்தீர்ப் பும்புரிந்து
சாற்று மொழிகூறித் தானிருக்கு மப்பொழுது
மாயத் திருமால் மால்வேச மேயெடுத்துத்
தேயமதில் நம்முடைய தெய்வகுல மாதர்களை
வருவிக்க வென்று மாஞால வித்தையினால்
உருவிக்க வென்று உலகநரு னானதிலே
தாக்கி உடலுள் தமனிய மாய்ப்பொதிந்து
நோக்கு முறைகாண்டம் நேர்மை மொழிமொழிந்து
பெண்ணாண் வரைக்கும் பெருங்கிழவி தான்வரைக்கும்
கண்ணா னமதலை கைக்குழந்தை முதலாய்ப்
பாட்டு வித்தேசம் படிப்புவித் தேசமுதல்
ஆட்டுவித் தேசம் ஆட்டி மிகவருத்தி
முன்னமைத்த பெண்ணை எல்லா மிகப்பார்த்துச்
சொன்ன முறைபோல் சிணம்செய்ய லாமெனவே
இட்டா ரொருசூட்சம் ஈசர்முத லெல்லோரும்
மட்டாரும் சூட்சம் வையகத்தி லேயாவி 440

சாதிபதி னெட்டும் ஆராட்டுப் பார்த்தனரே
ஆதிச்சா திதனிலே அமைப்புபோ லுள்ளவர்கள்
தானிறைந் தாடித் தண்மை மிகக்கூறி
வானிறைச் சோதி மயமாய்க் குதித்தனரே
இப்படியே சான்றோரில் ஏற்றபெண் ணாண்வரையும்
அப்படியே நன்றாய் ஆராதனை யாகி
ஊருக்கூ ரேயிருந்து உற்ற நருட்களெல்லாம்
பாருகங் காணப் பண்பாகக் கொண்டாடி
உமைபார் வதியெனவும் உற்றமுத் தாரெனவும்
இமையோர் புகழும் இலட்சுமி நானெனவும்
சத்திகன்னி மாதரென்றும் தார்குழலார் தோழியென்றும்
பத்தியுள்ள நல்ல பரமே சொரியெனவும்
மண்டைக்காட் டாளெனவும் மாதுநல்லாள் தோழியென்றும்
பண்டையுள்ள ஈசொரியாள் பாக்கிய வாட்டியென்றும்
வள்ளிதெய் வானை வாய்த்தபக வதியெனவும்
பூம டந்தையென்றும் பெரிய பிராட்டியென்றும்
பார்ம டந்தையென்றும் பத்திரமா காளியென்றும்
நாகக் கன்னியென்றும் நல்லதெய்வக் கன்னியென்றும்
பாகைக் கைகாட்டும் பைங்கிளிமார் நாங்களென்றும்
இப்படியே நல்ல ஏந்திழைமா ரெல்லோரும் 460

அப்படியே நல்ல அவனிப்பெண் ணார்பேரில்
ஆரா தனையாய் அங்கங்கு தான்கூடி
சீராகக் கூடிச் சேர்ந்துவரு வார்தினமே
ஆண்பிள்ளை கள்பேரில் ஆனசிவன் மாலெனவும்
நான்பிரமா வென்றும் நல்ல அனுமனென்றும்
காலனென்றும் ஏமனென்றும் கடியபெலக் கந்தனென்றும்
மாலவனின் மக்களென்றும் மாமுனிமார் நாங்களென்றும்
தேவ ரிஷியெனவும் சிமிள்கருட சேவனென்றும்
தாவமுள்ள நல்ல சன்னாசி மார்களென்றும்
ஆரா தனையாய் அவர்கள் மிகஆடிச்
சீராகக் காண்டம் செப்பிமிகப் படிப்பார்
வருவார் தினமே மாயோனிட மதிலே
கருவா யுதித்த காண்டம் மிகப்படிப்பார்
இப்படியே பெண்ணாணும் யாம முறைப்படியே
அப்படியே வந்து ஆடி மிகப்படிக்க
நல்லநா ராயணரும் நாட்ட மிகஅறிந்து
வல்லப் பொருளும் மனது ளறிந்திருப்பார்
அறிந்து சிலநாள் அகமகிழ்ந்து தான்பார்த்துச்
செறிந்த குணநாதன் தேதி கணக்கதிலே
இகனை நடத்த எண்ணமுற்றி ருக்கையிலே 480

உவமை பலசொல்லி உற்றதெய்வக் கன்னியர்கள்
அனைவோ ரும்புகழும் அரன்கயிலை வாழ்ந்ததுவும்
சுனையாடப் போனதுவும் தூயோ னடத்தினதும்
பிள்ளைதனைப் பெற்றதுவும் பெருவனத்தில் சென்றதுவும்
வள்ளல் சிவனை வருந்தித் தவம்புரிந்து
உலகில்மிகத் தோன்றும் உள்ளவர்த்த மானமெல்லாம்
சிலைநுதலிக் கன்னி சொல்லி மிகப்படிப்பார்
அப்போ திருமால் அடக்கி மிகமனதில்
செப்புவ தெல்லாம் சிந்தைதனில் கொண்டிருந்தார்
உமைமண்டைக் காட்டாள் உற்ற பகவதியாள்
இமையோர் புகழும் ஏற்றகுல பார்பதியாள்
சீதை மடந்தை சேயிழைமா ரெல்லோரும்
மாதவனை நோக்கி வளங்கூறி யேபடிப்பார்
பாவிக் கலியன் பழிநீசன் தோன்றினதால்
மேவிக் கலியில் மிகமூழ்கி மாயமதால்
மாயக் கலியை வதைக்குமந்த நாளையிலே
தேசமதி லெங்களையும் திருக்கல்யாண முகித்து
எங்களுட நாயகனார் இங்குவரு வோமெனவும்
எங்களையு மிங்கே இக்கோல மாய்வரவே
சொல்லி யயைச்ச சுவாமிநீர் வந்தீரோ 500

பல்லுயிரும் பணியும் பரமனேநீர் வந்தீரோ
என்று மடவார் இப்படி யேயிசையப்
பண்டு முறைபோல் பிரப்பிரம மாயிருக்கும்
எண்ணித் திருமால் இருதயத்தி லேயடக்கி
மண்ணி லுள்ளோர்கள் வந்துமிகக் கூடிநிற்க
மேலோகத் தார்கள் இறைஞ்சிமிகப் பார்த்துநிற்கப்
பூலோக மெல்லாம் புதுமையெனப் பார்த்துநிற்க
அப்போது மாயாதி ஆகமத் தின்படியே
செப்போடு வொத்த தேசத் திருப்பதியில்
வாழுகின்ற தேவரையும் வாகாய் வரவழைத்து
நாளுக்கு நான்சொன்ன ஞாய முறைப்படியே
நடத்தாம லிப்போ ஞாயமீறி நீங்கள்
அடத்தமாய்ச் செய்வதென்ன எல்லோருஞ் சொல்லுமென்றார்
உடனே யெல்லோரும் உள்ள மிகத்தளர்ந்து
திடமே குளறிச் சொல்லவா யில்லாமல்
புத்தி மயங்கிப் பொறியழிந்து தேவரெல்லாம்
சத்திகெட்டார் போலே தானே விறுவிறுத்து
நின்ற நிலையை நெடியதிரு மாலறிந்து
குன்றுதனில் கொண்டு கொழுவிலங்கில் தான்சேர்த்து
மன்று ஒருகுடைக்குள் வைகுண்டம் ஆளவரும் 520

இன்றுமுதல் லக்குவரை இருங்கோ பாராவதிலே
வைத்தாரே நல்ல வடவா முகமதிலே
செய்த்தான் விதியெனவே தேவரெல்லா மிருந்தார்
அந்த அவதாரம் அதிக முடனடத்திச்
சந்தான மான சப்தகன்னி மாரையினி
மாமணங்கள் செய்து மாதரேழு பேர்களுக்கும்
தாமதங்க ளின்றி சந்ததிகள் தாங்கொடுத்து
இராச்சிய முங்கொடுத்து ஏற்றபவி சுங்கொடுத்(து)
இராச்சிய மாளச் செய்யவே ணுமெனவே
நினைத்துத் திருமால் நின்றிதயத் தேயடக்கித்
தனத்தனங்கள் பாடித் தந்தனங்கள் போடலுற்றார்
தினத்தினங்கள் பாடித் திருவேடம் போடலுற்றார்

சத்தகன்னிமார் வருகை

முன்னே குருநா டைவருக்கு மீண்டு கொடுத்து மிகக்கலியால்
பொன்னோர் மானா யுருவெடுத்துப் பொருப்பே யேறி முனிகையினால்
சென்றோங் கூடு மிகப்போட்டு ஸ்ரீரங்க மேகச் செல்வழியில்
மின்னா ரிவர்க ளேழ்வரையும் மேவிப் புணர்ந்தோ மவ்வனத்தில்

வனத்தில் புணர்ந்து மாதர்களை மக்க ளேழும் பெறவருளிப்
புனத்தில் காளி தனைவருத்திப் பிள்ளை யேழு மிகஈந்து
இனத்தில் பிரிந்த மானதுபோல் இவர்க ளேழு மடவாரை
வனத்தில் தவசு மிகப்புரிய மனதைக் கொடுத்து மீண்டோமே 540

மீண்டோங் கயிலைக் கிருந்துபின்னும் மெல்லி யிவர்கள் தவம்பார்க்க
ஆண்டோர் சிவனா ருமையாளும் யாமுந் தவத்துக் கருள்புரிந்து
சான்றோரிடமே பிறவிசெய் தரணி தனிலே நாம்வருவோம்
என்றே விடைகள் கொடுத்தயைச்ச இளமா மாதர் வந்தனரே

முற்பிறவி செய்த மொய்குழலார் வந்தாரென
நற்பிறவி கொண்ட நாரா யணர்மகிழ்ந்து
ஆடரம்பை மாரை அருமைமணஞ் சூட்டவென்று
வேடம திட்டார் வீரநா ராயணராய்
நாரா யணராய் நல்லதிரு வேடமிட்டுச்
சீரான காவிச் சீலை மிகப்புரிந்து
ஒருதோளில் பொக்கணமும் உத்திராட்ச மாலைகளும்
துரித முடன்சிரசில் துளசிமா லைபுனைந்து
கையிற் பிரம்பும் கனத்தசுரைக் கூடுடனே
மெய்யில் வெண்பதமும் உத்திராட்ச மாயணிந்து
மாலு நிறமாய் வாய்த்ததொட்டில் மீதிருந்து
ஆகமத்தி லுள்ள அறிவுஞா னம்பேசிப்
பாகமதில் நிற்கும் பாலதியச் சான்றோரைப்
பார்த்து அருகழைத்துப் பச்சைமா லேதுரைப்பார்
நாற்றிசை யுமறிய நல்லகுலச் சான்றோரே 560

உங்களுட தாய்மார் உற்றகன்னி மார்களைநான்
எங்க ளுடவிதியால் இப்போமணஞ் சூட்டுதற்கு
விதிவந் திருக்குதுகாண் வேளையி தானதினால்
பெரியவுங்கள் தாய்மாரைப் பேயழைத்து வாருமென்றார்
நால்திசையும் நீங்கள் நடந்துமிக சத்தமிட்டு
மாலதியப் பெண்ணை வரவழைத்து வாருமென்றார்
சீரான நூல்முறைக்கு தேனெயெங்கள் தாய்மாரே
நாரா யணர்க்கு நல்லமணஞ் சூட்டுதற்கு
நாளான நாளிதுவாம் நன்னுதலே தாய்மாரே
தாழாமல் வாருமென்று சத்தமிட் டழையுமென்றார்
இப்படியே சொல்லி ஏற்றபுகழ்ச் சான்றோர்கள்
அப்படியே சொல்லி அழைத்தாரே சத்தமிட்டுப்
பாலருட சத்தம் பாவையர்கள் கேட்டுமிகச்
சீல முடனெழுந்து தெய்வமட மாதர்வந்தார்
வந்துமிக நாரணரை வாழ்த்தி மிகவணங்கி
சந்துஷ்டி யாகத் தங்கள்தங்கள் வாக்கில்நின்று
முன்முறைகள் சொல்லி மொழிந்துமிகப் படித்தார்
தென்பதிக ளான தெச்சணா பூமியிலே
நான்வந் திருந்து நானிலத் துள்ளவர்க்குத்
தீனம் பலதீர்த்து ஸ்ரீபண்டா ரமெனவே 580

நாம மிகக்கூறி நாட்டிலிருப் போமெனவே
சொல்லி யெங்கள்தம்மைத் தொல்புவியில் வாருமென்று
நல்லவராய்ச் சான்றோருள் நாடிப் பிறவிசெய்தீர்
பிறந்து வளர்ந்து என்பேரு கேட்டவுடன்
மறந்திடா வண்ணம் வாருங்கோ என்றுசொல்லிப்
பிறவிசெய்த நாயகரே பெரியவரே வந்தீரோ
கங்கை திரட்டி கறைகண்டர் தன்சிரசில்
பெண்க ளேழுபேரும் பிரியமுடன் வாழ்ந்திருந்து
எங்கள்கற் பெல்லாம் ஈடழிய வேதுணிந்து
சங்கை யழித்த தலைவனேநீர் வந்தீரோ
எங்களுட பிள்ளை ஏழு மினவழியும்
அங்கங் குறையாமல் அவ்வழிகள் தாமுழுதும்
கொத்தோ டேசேர்த்துக் குடும்பத்தோ டேயடக்கிப்
பெற்றோர்க்கு எல்லாம் பெருவாழ்வு தான்வகுத்து
எங்களையுஞ் சேர்த்து இரட்சிய முமருளி
மங்களமாய் வாழ்வோமென்ற மாதவரே வந்தீரோ
இனியிப்போ தேழ்வரையும் ஏற்ற மணம்புரிந்து
வனிதவழு மாயவரே வைத்தாளு மென்றுசொல்லிப்
பாடியே மாமடவார் பாதம் பணிந்துநிற்க
நாடியே யெம்பெருமாள் நல்லதா கட்டெனவே 600

அருகில் மிகநிற்கும் அன்பான சான்றோரை
வருக அழைத்து வார்த்தைமிகக் கூறலுற்றார்
எந்தனக்கு முன்னமைத்த இளங்குழலா ரேழ்பேரும்
வந்தன ரேயிவர்கள் வளப்பமென்ன சொல்லுமென்றார்
கன்னிதானோ யிவர்கள் கள்ளிகளோ பாருமென்று
உன்னி மனதுள் உபாயமாய்த் தானுரைத்தார்
நடையுடைகள் பேச்சு நாரியர்கள் தங்குணங்கள்
மடமயிலின் சாடை மாதிரியைப் பாருமென்றார்
அப்போது சான்றோர் எல்லோரு மேமகிழ்ந்து
இப்போது எங்களுக்கு ஏதுந் தெரியாது
படைத்தவர்க் கேதெரியும் பாவையரின் தங்குணங்கள்
செடத்தமெல்லா மெங்களுக்குத் தெரியா தெனவுரைத்தார்
மாயவர் தான்பார்த்து மாதுகளைத் தாநோக்கித்
தூயவர் தான்வார்த்தைச் சொல்லுவார் பெண்களுடன்
நானெப்போ துங்களையும் நடுவனத்தில் கண்டதுதான்
தானெப்போ வந்தேன் தார்குழலே நானறியேன்
காட்டிலே வந்ததெப்போ கற்பை யழித்ததெப்போ
பேட்டிசெய்து பிள்ளை பெற்றதெப்போ நானறியேன்
ஒன்றுந் தெரியாது உங்களைநான் கண்டதில்லை
பெண்டுகளே யிப்பேச்சுப் பேசாதே போய்விடுங்கோ 620

மாயமாய் நீங்கள் மருட்டி விழியாதுங்கோ
பாயமா யுங்கள் பகட்டி லடங்கேனான்
பண்டாரத் தோடே பழிமொழிகள் பேசாதே
அண்டாது உங்கள்மொழி அகலநின்று போய்விடுங்கோ
என்று அடாத்தியமாய் இவர்தான் மிகமொழிந்தார்
நின்று நினைத்து நேரிழைமா ரெல்லோரும்
அடந்து மடவார் ஆகத்திரண் டேகூடித்
தொடர்ந்து நெருங்கித் தொட்டுப் பிடிக்கவென்று
தார்குழலில் மூத்த சாத்திரத்தா ளேதுரைப்பாள்
வாரணியுங் கூந்தல் மடவா ரென்தங்கையரே
கள்ளக் கவுலாய்க் கண்மாயஞ் செய்துஅன்று
மெள்ள நெகிழ்ந்த மெக்குவாய்த் தாதனையம்
சென்று பிடித்துச் செய்தியென்ன கேளுமென்று
தன்றுபுகழ் சாத்திரத்தாள் தங்கையரைக் கண்காட்ட
மடவார்க் ளெல்லாம் மாகோப மாய்வெகுண்டு
அடவாக மாயவரை அடர்ந்து பிடிக்கலுற்றார்

தேன்மொழி மாரே யென்றன் சித்திரத் தங்கை மாரே
கான்வன மதிலே நம்மைக் கைகலந் திழிவு செய்த
மான்முனி தன்னைக் கண்டோம் வார்த்தையில் குழைக்கார் சோற்றை
வான்முனி தன்னை நீங்கள் வளையுங்கோ சிணமே யென்றாள் 640

செப்பிட மூத்த கன்னி தேவிய ராறு பேரும்
அப்படி ஒன்று போலே அவர்வளைந் தாதி தன்னை
முப்படி யெங்கள் தம்மை மொய்வன மதிலே வந்து
கற்பினை இகழச் செய்தக் கள்வரே யென்று சூழ்ந்தார்

சூழ்ந்தே நமது துகிலைமுன்னம் சுழியஞ் செய்த மாமுனியைப்
பூந்தே நெருங்கித் துகிலுரியப் பிடித்தே யிழுத்து நாமீன்ற
சாந்தோர் மக்க ளேழ்வரையும் தரவே யென்ன செய்தியென்று
ஓர்ந்தே கேட்போ மென்றுசொல்லி ஒன்றுபோலே வளைய லுற்றார்

வளைந்த போது மாயவரும் மனது ளுபாய மொன்றெடுத்து
இளந்த மொழிகள் சொன்னாக்கால் இளப்ப மிதுவே யாகுமென்று
குழைந்த வார்த்தை மிகக்கூறி குழந்தை யேழு மினவழியும்
நுழைந்தே யெடுத்து நொடிப்பொழுதில் நேரேகொண்டு தாறோ மென்றார்

தரு (பல்லவி)

பிள்ளையை நாம்தா றோம்-நீங்கள்பெற்ற
பிள்ளையை நாம்தா றோம்

அனுபல்லவி

பிள்ளையை நாம்தாறோம் கிள்ளை மடவாரே
கள்ள மொழியில்லை உள்ளதைச் சொல்லுகிறோம் (பிள்ளை)

சரணம்

காட்டு வனத்திலே கண்டுங்கள் தம்மையும்
லோட்டுகள் பார்த்துநீ ருடுகலை தோற்றதும்
மேட்டுக ளாயென்னை யெரிக்கத் துணிந்ததும்
பூட்டுகள் சொல்லாமல் பெண்ணேநீர் பெற்றிடும் (பிள்ளை) 660

அருவன மீதினி லமிர்தவாழ் கெங்கையில்
சொரூபமாய் நீங்கள் சுனையாடும் வேளையில்
வரும்வழி மீதுங்கள் வாய்மொழி மதங்கண்டு
கருவது கொண்டுநீர் காட்டினி லீன்றிடும் (பிள்ளை)

உறுவன மீதிலென் உபாயத்தை யறியாமல்
முறுவல்செய் தென்னைநீர் மொழிந்தது கண்டுநான்
இறுவான மேலோக எழுபுவி உயிரெனப்
பெறுகநான் செய்திடப் பேணியே நீர்பெற்றப் (பிள்ளை)

மடமயில் மாதே நீங்கள் வந்தென்னை நெருக்க வேண்டாம்
தொடவும்நீர் ஞாய மில்லை தூரவே யகல நின்று
அடவதில் பெற்ற பிள்ளைக்(கு) அடையாள மறியச் சொன்னால்
உடனிப்போ மதலை தந்து உலகமு மருள்வோ மென்றார்

அய்யனே குருவே யெங்கள் ஆதியே சோதி யான
மெய்யனே வொப்பில் லாத வேதநன் மணியே கேள்மோ
வெய்யநல் மதலை யீன்று வெட்கமு மிகவே யாகிக்
கையது தப்பி யோடக் கண்டமோ மதலை யென்றார்

தரு(பல்லவி)

மதலையைத் தாருமையா-நாங்கள் பெற்ற
மதலையைத் தாருமையா

அனுபல்லவி

மதலையைத் தாருமெங்கள் வயிறெல்லாங் கொதிக்குது
குதலைமொ ழிகள்கேட்டுக் கொஞ்சிக் குழைந்திருக்க (மதலை) 680

சரணம்

பெற்றநா ளின்றுவரைப் பிள்ளைதனைக் காணாமலே
மெத்தம னதுநொந்து மெய்யந்த ளருதையோ (மதலை)

வாலைப்ப ருவத்திலே வனத்தில்ம யக்கமிட்டுக்
கோலம ழித்தவேத கோலகால மாமுனியே (மதலை)

பாலர்பெற்ற நாள்முதலாய்ப் பன்னிரண்டு ஆண்டுவரைக்
காலதி ழகாமலே காட்டில்த வசிருந்தோம் (மதலை)

ஊணுஉ றக்கமில்லை ஒருவரின் தஞ்சமில்லை
மூணுநாலு காலம்வரை மூண்டத்த வசிருந்தோம் (மதலை)

சிங்கங்க ரடிபுலி திரியும்வ னத்தினூடே
நங்கைமா ரேழ்பேரும் நாடித்த வசிருந்தோம் (மதலை)

இத்தனைநா ளுந்தவ மிருந்துபின் னாங்களெல்லாம்
பெற்றநல் மனுவயிற்றில் பிறந்துவு தித்துவந்தோம் (மதலை)

முன்னிருந்த செல்வமென்ன மூதூர்சி றப்புமென்ன
மன்னுகந்த மாதுமையை மறந்துக லியில்வந்தோம் (மதலை)

ஆண்டச்சி றப்புமென்ன அருஞ்சுனை யாடலென்ன
காண்டம்நிறை வேறுதற்கோ கலியிலு தித்துவந்தோம் (மதலை)

உண்டிருந்த செல்வமென்ன உடுத்ததுகில் ஞாயமென்ன
கொண்டிருந்த விதிப்பயனோ கூறுகலி மீதில்வந்தோம் (மதலை)

பந்தடிக்கும் வீரமென்ன பூத்தொடுக்கும் சாரமென்ன
முன்னுரைத்து விட்டதுபோல் மூண்டகலி மிதில்வந்தோம் (மதலை) 700

கன்னிய ழியுமன்னே காதல்தனைப் பெற்றதினால்
நின்னுபிள்ளைப் பாராமலே நெடுகந டந்துவிட்டோம் (மதலை)

கண்டுபிள்ளைத் தானெடுத்துக் கமலமுகத் தோடணைத்துப்
பெண்டேழும் பால்கொடாமல் பெருகவ னத்தில்சென்றோம் (மதலை)

பாலிளகி நல்லமிர்தம் பாலாய்ச்சொ ரியுதையோ
மாலழகா எங்களுட மனக்கவ லையைத்தீர்க்க (மதலை)

வர்ணநி றமதுவும் மக்களுட சாயலதும்
கண்ணதிலே கண்டறியோம் கையதிலே தாருமையா (மதலை)

அங்கமெல்லாஞ் சோருதையோ ஆவிமெத்த வாடுதையோ
தங்கமணி நாங்கள்பெற்ற தவமணியை எங்கள்கையில் (மதலை)

மங்காத தெய்வகுல மக்களேழு மேழ்வழியும்
சிங்கார மாகஇப்போ சீக்கிரம்நீர் தாருமையா (மதலை)

மதலையுந் தந்து எங்கள் மனச்சட வெல்லா மாற்றிக்
குதலைகள் தமக்கு இந்தக் குருமுடி சூட்டித் தர்மப்
பதியுக மதிலே யெங்கள் பார்முடி மன்ன ராக
நிதமிருந் தரசே யாள நின்மக்கள் தருவீ ரென்றார்

தருவீ ரெனவுரைக்கு மடமாதே நீங்கள்
சந்ததியைப் பெற்றிடத்தில் தயவாய்ப் பாரும் 720
பெருகியே வாழ்ந்திருப்பா ரங்கே சென்று
பெற்றிடத்தைப் பார்க்குகையி லுண்டு மங்கே
மருவி யென்னைக் கேளாதே காட்டினூடே
வாழ்ந்திருப்பார் கண்டுகொள்வீர் திட்டஞ் சொன்னோம்
சருவியென்னை நெருங்காதே மடவீ ரெல்லாம்
சந்ததியைத் தேடிவனஞ் செல்லு வீரே

செல்லுவீ ரெனமொழிந்த தேனே கண்ணே
சீமானே நாமாது புரக்கு மாலே
பல்லுயிரு மிகப்படைத்தப் பாக்கிய வானே
பருவனத்தி லெங்களைநீர் பற்றி வந்து
தொல்லைவினை செய்துநாம் சுமந்து பெற்ற
சுத்தகுல மானதெய்வச் சான்றோர் தம்மை
இல்லிடத்தி லிப்போது தருகி லானால்
இழுத்து வும்மைச் சந்தியிலே ஏற்றுவோமே

சந்தியி லேற்றுவோ மென்ற மாதேகேளு
தருவதுண்டோ முன்கடன்கள் தந்த துண்டோ
பந்தியழித் துங்களுடப் பேச்சை நானும்
பகருவே னுங்களைப் பார்பழித்துப் பேச
முந்தியிதை யுரைத்திட்டே னோடிப் போங்கோ
உலகநருள் அறிந்தாக்கால் சிரிக்க லாகும்
சிந்தனைக்கே டாகும்வரை நிற்க வேண்டாம்
தேன்மொழியே மறுவிடம்போய்த் தேடு வீரே

தேடுவீ ரெனமொழிந்த இந்திர ஜாலம்
தெய்வமட மாதரொடு செலுத்த வேண்டாம்
நாடுபதி னாலறியு முமது கள்ள
ஞாயமது எங்களொடு நவில வேண்டாம்
வீடுவழி தோறும்விருந் துண்டு முன்னே
மெல்லிமட வார்சிலரைக் கொள்ளை கொண்டு
பாடுபட்ட பாட்டையினி நாங்கள் சொன்னால்
பாரிலுள்ளோ ருமைப்பேசிப் பழிப்பர் காணும்

பழிப்ப ரெனச்சொன்ன இளம்பாவை மாரே
பாரிலுள்ளோ ரறிவார்கள் பச்சை மாலின்
களிப்பதுவுங் காண்டமுறை நூல்கள் தோறும்
காரணத்தைச் சொல்வார்கள் கருதிக் கேளு
சுழிப்பதுவு மமைப்பதுவும் நமக்குள் ளாகும்
தோகையரே யிதுஎனக்குச் சொந்த வித்தை
குளிப்பதுவில் சுனையாடி மதலை யீன்றக்
கோலமதைச் சொன்னாக்கால் குறைவ தாமே

குறைவதா மெனச்சொன்னக் குறவா கேளும்
கோவேங் கிரிவாழுங் குலமா மாதர்
மறைமுதல்வ னானசிவ னார்க்கு நாங்கள்
வந்துசுனை யாடிகெங்கைத் திரட்டி யேகத் 740
துறையறியாக் களவாண்டுத் தேய்ந்த கள்வா
தொல்புவிக ளறியாதோவுன் சுத்தக் கள்ளம்
இறையளவு மெய்யில்லாப் பொய்யே சொல்லும்
ஏமாளிக் கள்ளரென எவருஞ் சொல்வார்

கள்ளரெனச் சொல்லிவந்த மாதே நீங்கள்
களவாண்டீர் கயிலையதி லீசர் முன்பில்
வெள்ளமது திரளாமல் கள்ளத் தாலே
வெம்மருண்டு நின்றவித வெட்கங் கண்டு
வள்ளல்சிவ னாரறிந்துக் கலியில் சான்றோர்
மேல்வழியில் பிறக்கவென்று சபித்தார் முன்னே
உள்ளதெல்லாஞ் சொல்லிடுவே னோடிப் போங்கோ
ஓகோகோ வெனச்சொல்லி யுறுக்கி னாரே

உறுக்கிநீ ருரைத்தசுணை யுமக்கே யல்லால்
ஓவியங்க ளேழ்பேர்க்கு முண்டோ சொல்லும்
இறுக்கிவைத்த நீரிளகச் சேய்த கள்ளம்
ஈசர்முத லெல்லோருஞ் சொல்லு வார்கள்
சிறுக்குமிடை மாதருட வீட்டில் வெண்ணெய்த்
திருடியுண்டக் கள்வரெனச் சொல்வா ரும்மை
பொறுக்கஇனி மாட்டோங்கா ணுமது ஞாயம்
புகன்றிடுவோ மினியண்டம் பொடியத் தானே

பிட்டுக்காய் மண்சுமந்து வைகை தன்னில்
பிரம்படிகள் பட்டதுவும் போதா தென்றோ
கெட்டுமிகப் பட்டீரே இடைச்சி கையால்
கேள்வியில்லா முப்பரத்தில் கிழவன் போலக்
குறுங்கண்ணி போட்டிழுத்துக் குனிய வைத்தப்
பொட்டதுவுங் குலைத்திடுவோம் நாங்கள் பெற்றப்
பிள்ளைதனை தந்துபுவி யான வைப்பீர்

ஆடெடுத்தக் கள்வரல்லோ வுமக்குச் சூடு
அணுவளவுந் தோற்றாம லலைந்து எந்த
நாடடுத்த இடமெல்லாம் வேசம் போட்டு
நாணமதொன் றில்லாமல் நாரி மார்தம்
வீடடுத்த மனைதோறு மிரட்டிக் கொஞ்சி
வேசியொடு கூடிவிளை யாடுங் கள்ளக்
கூடெடுத்த மறையல்லோ எங்கள் தம்மைக்
குவலயத்தில் கள்ளியெனக் கூறி னீரே

இன்னமுண்டு வுமக்குவெகு பங்கந் தானும்
எடுத்துரைத்தா லிப்போது இளப்ப மாகும்
முன்னமைத்தப் பாலரையு மினத்திற் சேர்க்கை
முழுவதையுந் தந்துபுவி யாள வைப்பீர் 760
இன்னிமிப்போ தாராம லிருந்தீ ரானால்
ஈரேழு யுகமறிய இழுத்து உம்மை
அன்னமது அருந்தாம லிழுத்துக் கொள்வோம்
அதுவறிந்து பாலரைத் தந்தாளு வீரே

பாலரைத்தந் தாளுவீ ரெனமொழிந்த பாவைமாரே
பகற்பொழுது கழித்துவெள்ளி யுதிக்கும் நாளை
காலமேநீ ரெல்லோரும் வந்தீ ரானால்
கதிரவனும் போயடைந்து கங்கு லாகும்
சீலமுடன் தென்றலுக்கு மழைக்கும் நானோர்
சீட்டெழுதித் தேவரையும் வருத்தி யிங்கே
கோலமண முங்களைநான் புரிந்து கொள்வேன்
குடிலதுக்குப் பேயமுது குடித்து வாரும்

 
மேலும் அகிலத்திரட்டு அம்மானை! »
temple news
அய்யா துணை காப்பு ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணிகாரணம்போல் செய்தகதை கட்டுரைக்க - ... மேலும்
 
temple news
அந்தூர்ப் பதியில் அலங்கரித்த நாட்கழித்துஆதி கயிலை அரனா ரிடத்தில்வந்துவேதியரும் நன்றாய் விளம்புவா ... மேலும்
 
temple news
கஞ்சனையு மற்றுமுள்ள காலவுணர் தங்களையும்வஞ்சகமா யுள்ள வாணநர பாலனையும்இம்முதலா யுள்ள ஏற்ற ... மேலும்
 
temple news
தண்டமிழுங் கன்னி சான்றோர்க ளானோர்க்குக்கோட்டையு மிட்டுக் குமாரரையும் பெண்ணதையும்தாட்டிமையாய்ச் ... மேலும்
 
temple news
பூலோக மெல்லாம் பொய்யான மாகலியன்மாலோ சனையிழந்து மாறியே மானிடவர்சாதி யினம்பிரித்துத் தடுமாறி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar