Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
சதுரகிரியில் நாளை ஆடி அமாவாசை: குவிய துவங்கினர் பக்தர்கள்!
ஜூலை 17,2012
அ-
+
Temple images

வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் ஆடி அமாவசை விழா பிரதோஷத்துடன் நேற்று துவங்கியது.இதை தொடர்ந்து, பக்தர்கள் கூட்டம் மலையை நோக்கி செல்ல துவங்கியுள்ளனர். விருதுநகர், மதுரை மாவட்டங்களை இணைத்து அமைந்துள்ளது சதுரகிரி மலை. இதன் உச்சியில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சுவாமி கோயில்கள் உள்ளன. இம்மலையில், அகத்தியர் முதலான 18 சித்தர்கள் வாழ்ந்து இறைவனை வழிபட்டதாக கருதப்படுகிறது. இங்கு ஆடி அமாவாசை நாளில் இறைவனை வழிபட்டால், சகல பாவ தோஷங்கள் நீங்கி, சித்தர்களுக்கு கிடைத்த பலன்கள் அனைத்தும் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். ஒருவாரம் நடைபெறும் விழாவைக்காண, தமிழகம் மட்டுமல்லாது , வட மாநில பக்தர்கள் மலையில் கூடுவர். மலைக்கு செல்லமுடியாத பக்தர்கள், மலை அடிவாரத்தில் முகாமிட்டு, மலைக்குச் சென்றுவரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி, ஊர் திரும்புவர். வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோயில் விழா ,நேற்று பிரதோஷத்துடன் துவங்கியது. இதையொட்டி நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், தீபராதனை , வில்வ அர்ச்சனை வழிபாடும் நடந்தது. இன்று சிவராத்திரி பூஜைகள் நடக்கின்றன. நாளை அமாவாசை பூஜைகள் நடக்கின்றன. விழாவை காண சில தினங்களுக்கு முன்பிருந்தே பக்தர்கள் கூட்டம் மலையை நோக்கி செல்லத் துவங்கி உள்ளது. பல்வேறு இடங்களிலிருந்து மலையடிவாரம் வரை சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. மலை உச்சி, அடிவாரங்களில் மருத்துவத்துறையினரால் அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக மலையில் உள்ள காளிமுத்து சவாமி அன்னதான மடத்தில் 24 மணிநேர அன்னதானம் செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை தக்கார் செந்தில்வேலவன் செய்து வருகிறார்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.