Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
அரசுக்கு வருவாய் தருவதில் பழநி கோவில் முதலிடம்
ஆகஸ்ட் 08,2012
அ-
+
Temple images
தமிழகத்தில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 189 கோவில்கள், ஆண்டுக்கு பல கோடி ரூபாயை, அரசுக்கு வருமானம் ஈட்டி தருகின்றன. இதில், பழநி தண்டாயுதபாணி முருகன் கோவில் முதலிடம் பிடித்துள்ளது.

மாநிலம் முழுவதும், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ், 38,481 கோவில்கள் உள்ளன. பக்தர்களின் வருகை, கோவில் வசூல் ஆகியவற்றுக்கு ஏற்ப, அறநிலையத் துறையின் கீழ் உள்ள ஒவ்வொரு கோவில்களிலும், மூன்று முதல், 10 உண்டியல் வரை வைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் வரும் காணிக்கை பணத்தை, அன்னதானம், கோவில் மேம்பாடு, பக்தர்கள் வசதிகள் ஆகியவற்றை, அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், கோவில் நிலங்களை வாடகைக்கு விடுதல், தரிசன கட்டணம், வாகன காப்பகம் வசூல், பிரசாதம் உட்பட பல வழிகளில், தமிழக கோவில்கள், அரசுக்கு வருமானம் ஈட்டித் தருகின்றன. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், ஆண்டுக்கு 10 ஆயிரம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை, 4,033 கோவில்களும், 189 கோவில்கள், கோடிக்கணக்கிலும் வருமானம் ஈட்டித் தருகின்றன. வருமானம் ஈட்டித் தருவதில், முதல், 10 இடத்தை பிடித்த கோவில்களில் நான்கு, முருகன் கோவில்கள்.

இதுகுறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள் கூறிய தகவல்: கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும், 189 கோவில்களில், ஆண்டுக்கு சராசரியாக, 72.12 கோடி ரூபாய் வருமானம் ஈட்டித் தந்து, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில், முதல் இடத்தை பிடித்துள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோவில், 33.52 கோடி ரூபாய் வருமானம் கொடுத்து, இரண்டாம் இடத்தில் உள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவில், 19.80 கோடி ரூபாயும்; திருத்தணி சுப்பிரமணிய ஸ்வாமி கோவில், 16.09 கோடி; திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், 13.54 கோடி; ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், 12.21 கோடி ரூபாயும் வருமானம் தருகின்றன. அதேபோல், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், 11.65 கோடி; ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோவில், 9.89 கோடி; சுசீந்திரம் தாணுமாலயன் கோவில், 5.87 கோடி; திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், 5.62 கோடி ரூபாய், அரசுக்கு வருவாய் ஈட்டித் தருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.