Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரம்ஜான் ஸ்பெஷல்: உலகம் முழுவதும் ரம்ஜான் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஆக
2012
09:08

உண்ணல் பருகலை தவிர்த்திடுவது போன்று, பாவங்களையும் முற்றிலும் தவிர்ப்பது நோன்பில் கடைபிடித்தே ஆக வேண்டிய, அவசியமான ஒழுங்குமுறை. ஆச்சரியமாக இருக்கிறது! மக்கள், உண்ணல், பருகலையும், இல்லற உறவையும் விட்டுவிடுவதை அவசியமாகக் கருதுகின்றனர்; ஆனால், குற்றங்களை விடுவதை, அந்த அளவிற்கு அவசியமானதாகக் கருதுவதில்லை. உண்மை நிலை யாதெனில், அம்மூன்று செயல்களும், மற்ற நேரங்களில் செய்ய அனுமதிக்கப்பட்டவை. சொல்லப் போனால் ரமலானின் இரவுகளிலும், அவை ஆகுமானவை. நோன்பின் காரணத்தால் தான், அனுமதிக்கப்பட்ட சில செயல்களைச் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக எல்லா நிலைகளிலும், தடை விதிக்கப்பட்டுள்ள காரியங்களை, நோன்பு நிலையில் எவ்விதம் அனுமதிக்க முடியும்? அவற்றைச் செய்யாதிருப்பது மிக மிக அவசியமல்லவா?ஆக,நோன்பின் நிலையில் ஒருவர் புறம் பேசினால், தீய பார்வை பார்த்தால், அவரது நோன்பு கூடாது என்று சொல்ல முடியாது; மாறாக நோன்பின் வளம் குறைந்து விட்டது என்று சொல்ல முடியும்."எவரொருவர் அணு அளவு நன்மை செய்தாலும் அதனைக் காண்பார். எவரொருவர் அணு அளவு தீங்கு செய்தாலும் அதனைக் காண்பார். (அஸ்ஸில்ஸால்: 7,8)இதை விளக்க, இப்படியும் ஒரு உதாரணம் சொல்லலாம். ஒரு அதிகாரி, தன் கடமையான பணிகளைச் செய்கிறார்.

அதே நேரத்தில், கையூட்டும் பெறுகிறார் எனில், அது பற்றிய தகவல், அரசுக்கு கிடைக்கும் பட்சத்தில், அவர் லஞ்சம் வாங்கியதற்கான தண்டனையை அனுபவிக்க நேரிடும். எனினும் அவர் ஏற்கனவே செய்த பணிக்கான சம்பளமும், அவருக்கு கிடைக்கும்.பாவங்களால் நோன்பு முறியாது: அதை மீண்டும் நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்பதில், அனைவரும் கருத்தொற்றுமை கொண்டுள்ளனர். நன்மைகளுடன் செய்யும் வணக்கங்களினால் மனதில் உருவாகும் ஒளி, புத்துணர்ச்சி மற்றும் மகிழ்ச்சி, குற்றங்களுடன் செய்யும் வணக்கங்களால் உருவாவதில்லை. இதை விளக்க இப்படி ஒரு உதாரணம் கூறலாம். சுவையான உணவைத் தயாரித்த பிறகு, அதில் கொஞ்சம் சாம்பலைத் தூவினால், உணவின் சுவை முற்றிலும் குறைந்து போகும்.வணக்கங்களை நிறைவேற்றிக் கொண்டே, செய்யும் குற்றங்கள், இரு வகைப்படும். சில குற்றங்கள், நன்மைகளை முற்றிலும் அழித்துவிட வல்லவை; அவற்றின் காரணமாக, நற்செயல் நிறைவேறாது போகும். குற்றங்களுடன் நன்மைகள் ஏற்கப்படும் என்ற வாதம், அத்தகைய குற்றங்களுடன் தொடர்புடையதல்ல.

வணக்கத்தை அழித்திடாத வகையில் நிகழும் குற்றங்களே இங்கு நோக்கம். இத்தகு குற்றங்களினால் வணக்கங்கள் பாழாகாது; எனினும் அவற்றின் வளம் குறைந்து போகும். எனவே தான், "குற்றங்களிலிருந்து விடுபடா விட்டால் உண்ணல் பருகலை விட்டுவிடுவதில் என்ன பயன்? என நபிகளார் (ஸல்) இயம்பினார்.இப்போது இந்த நபிமொழியின் நோக்கத்தை, ஆழ்ந்து நோக்குவது அவசியம். அதாவது, பாவத்தை விட்டொழிப்பது, நோன்பின் போது இன்றியமையாத ஏற்பாடு. பாவம் தீயது என்பதை, முஸ்லிம்கள் அனைவரும் அறிந்துள்ளனர். குறைந்தது ஒரு மாதம் முழுவதும், அதை விட்டொழிக்க வேண்டும். அதே நேரத்தில், இம்மாதத்திற்குப் பிறகு பாவங்கள் செய்யலாம் என்று மாற்றுக் கருத்து கொள்ளக் கூடாது. ஏனெனில், மனதிடம் வாக்குறுதி வாங்குவது, கடினமான காரியம். எனவே தான் ஒரு மாதத்திற்குப் பாவம் செய்ய மாட்டேன் என உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறேன்; அது எளிது. மேலும் எப்போதும் அது ஒரு எச்சரிக்கை உணர்வாகவும் அமையும்.பெரியவர் ஒருவர், "நான் ஒரு மணி நேரம், இறைதியானம் செய்யப் போகிறேன் என தன் மனதுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். ஒரு மணி நேரம் கழிந்தும் தியானத்தில் மூழ்கியவராகவே இருந்தார். ஆக, ரமலான் வரை குற்றச் செயல்களில் ஈடுபடுவதில்லை என, மனதிடம் சொல்லிக் கொள்ளுங்கள். ஒரு மாதத்திற்காக மட்டும் உறுதிமொழி மேற்கொள்ளுங்கள்; பிறகு பாருங்கள்! உறுதியாகக் கூறுகிறேன்... ரமலான் இறையச்சத்துடன் கழியுமானால் அந்த இறையச்சம் விடாது தொடரும்.கடுஞ்சொல் கூறுவது, திட்டுவது, புறம் பேசுவது, குற்றங் குறை சொல்வது, படிக்க கூடாத விஷயங்களைப் படிப்பது போன்ற, நாவினால் செய்யும் பாவங்களை விட்டு விடுங்கள். தீய சொல் கேட்பது, பாட்டுக் கேட்பது போன்ற, செவிக் குற்றங்களை விட்டொழியுங்கள். நடன அரங்குகளுக்குச் செல்வது, பொய் சாட்சியம் அளிக்கச் செல்வதும், பொய் வழக்குகள் போடவும், பொய் வாதங்களைப் பின்பற்றவும் செல்வது போன்ற, கை கால் செய்யும் குற்றங்களையும் விட்டொழியுங்கள். எல்லாவற்றையும் விட, லஞ்சம், வட்டி மற்றும் அபகரிப்புப் பொருள்களைச் சாப்பிடுவது போன்ற, வயிற்றின் பாவங்களை முற்றிலும் விட்டொழியுங்கள். ரமலானின் அனைத்து வகையான குற்றங்களையும் முற்றிலும் விட்டொழியுங்கள். பிறகு பாருங்கள். இறைவனை நாடினால், அந்த நோன்பு அருள்வளம் நிறைந்த நோன்பாக அமையும்.

மேலும் அது உனக்காகப் பரிந்துரை செய்யும் நோன்பாக அமையும். நானே அதற்குரிய கூலியை வழங்குவேன் என, எது விஷயமாக, அல்லாஹ் கூறினானோ, அத்தகைய சிறப்பான நோன்பாக அது அமையும். குற்றங்களை விடாவிட்டால் நோன்பு ஆகும்; எனினும் எப்படி ஆகும் எனில், "நீங்கள் எங்களது நண்பர் ஒருவரிடம் ஒரு மனிதரைக் கொண்டு வாருங்கள்; அதுவும் இப்படிப்பட்ட ஒரு மனிதரை கொண்டு வாருங்கள்; அவருக்கு காது இருக்கக் கூடாது; கண்களும் இருக்கக் கூடாது; நொண்டியாகவும் இருக்க வேண்டும்; தலையில் முடியில்லாதவராகவும் இருக்க வேண்டும்; பேச முடியாதவராகவும் இருக்க வேண்டும் என்று கூறுவதைப் போன்றதாகும். இத்தகையவரும் மனிதர் தான் என்றாலும், பயனற்றவர். மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் காரணத்தால், அவரையும், பேசும் உயிரினம் என்போம். இத்தகையவர், மனிதரும், தான்; மனிதர் அல்லாதவரும் தான். அவ்விதமே இது நோன்பு தான்; இல்லையும்தான். இத்தகைய நோன்பு நல்லடக்கம் செய்வதற்குத் தகுதியானது. இறையருள் செழிக்கும் நோன்பாக, நம் நோன்பு அமைய வல்லவன் அருள்வானாக!

சென்று வா ரமலானே!

ரமலான், நோன்பின் மாதம் ரமலான், இரவு வணக்கத்தின் மாதம் ரமலான், "தவ்பாவின் (பாவ மன்னிப்பின்) மாதம் ரமலான், ரத்த உறவின் - சகோதரத்துவத்தின் மாதம் ரமலான், மறை ஞானம் இந்த மண்ணுக்கு அருளப்பட்ட மாதம்; அதாவது, "குர்ஆனின் மாதம். ரமலான், "குர்ஆனியக் கொள்கைகளுக்கு மகத்தான வெற்றிகள் கிடைத்த மாதம்.நபி(ஸல்) அவர்கள் உருவாக்கிய, "குர்ஆனிய சமூகம் வரலாறு காணாத வெற்றிகளை அள்ளிக் குவித்த மாதமாக ரமலான் திகழ்ந்தது. சத்தியத்தை வாழ வைத்து அசத்தியத்தை வீழ வைத்த மாதமாக, அது மாறியது. இஸ்லாம் எழுச்சி பெற்று, "ஜாஹிலிய்யத்தின் கோட்டைக் கொத்தளங்கள், சரிந்து வீழ்ந்த மாதமாக, அது காட்சியளித்தது.இன்றோ, அந்த உன்னத மாதம், நம்மைப் பார்த்துவிட்டுச் செல்கிறது. ஆண்டுதோறும் வந்து செல்கிறது.

இருப்பினும் என்ன!

களைகட்டி களைந்துவிட்ட ஒரு விழாவாகவே, அது முடிந்து வருகிறது. விழா முடிந்ததும், சோர்வும், அயர்வும், தூக்கமும் மிகைக்கின்றன. இன்றைய ரமலான் ஓய்வெடுத்துக் கொள்ளும் மனிதர்களை விட்டுச் செல்கிறது. வெறிச்சோடிய,"மஸ்ஜித்களை விட்டுச் செல்கிறது. சவால்களை எதிர்கொள்ளத் திராணியற்ற ஒரு சமுதாயத்தை விட்டுச் செல்கிறது.பண்படாத உள்ளங்களைப் பண்படுத்தாமலேயே, ரமலான் சென்று விடுகிறது. "உம்மத்தை, ஒரு சோதனைக்குப் பின்னால் மற்றொரு சோதனையிலும், ஒரு தோல்விக்குப் பின்னால் மற்றொரு தோல்வியிலும் விட்டுச் செல்கிறது."ஓ... ரமலானே, மகத்துவமிக்க, "குர்ஆனைச் சுமந்து வா... என, சப்தமிட்டு உன்னை அழைக்க, விழைகிறது என் மனம். எனினும் இயலாமைகளையும், தோல்விகளையும், பலவீனங்களையும், தோல்வி மனப்பான்மைகளையும் சுமந்து அடுத்த வருகைக்காக, உன்னை வழியனுப்பி வைத்து விடுவோமே என நினைக்கும் போது, அந்த அழைப்பின் குரல், நாணித்து நலிவடைகிறது.ரமலானே... சத்தியத்திற்கு உயிர் கொடுத்த மாதம் நீ... இஸ்லாமிய, "உம்மத் தின் இருப்பை... அதன் இலக்குகளோடு இணைத்து உறுதிப்படுத்திய மாதம் நீ...!"க அபத்துல்லாஹ்வின் திரையைப் பிடித்து பாவமன்னிப்புக் கோருவோரின் உள்ளங்கள் சிலபோது உயரலாம். எனினும் அதே மனிதர்கள் தாம் வாழும் வீட்டையும், தெருவையும், கிராமத்தையும், சமூகத்தையும், பாவமீட்சிக்குக் கொண்டுவருவதற்காக உழைக்கா விட்டால், அங்கு இஸ்லாத்துக்கு என்ன உயர்வு கிடைக்கப் போகிறது? விமானத்திலிருந்து பொதிகள் போடுவது போல, ரமலான், உயர்வுகளையும், வெற்றிகளையும், பொதிகளாகப் போட்டுச் செல்லுமா இவர்களுக்கு...?ரமலானே... உனது இந்தக் குரலை செவிமடுத்து கூறுகிறேன். உன்னை வரவேற்பதில், இந்த உம்மத்துக்கும் மகிழ்ச்சிதான். உன்னைச் சிறப்பிக்க வேண்டும் என்பதிலும் இவர்களுக்கு ஆர்வம்தான்...!என்றாலும் அது ஒரு மகா வெற்றிக்கல்ல. "காதிசியாவுக்காக அல்ல... "பைத்துல்முகத்தசின் விடுதலைக்காக அல்ல... குறைந்தபட்சம் ஒரு கிராமத்தில் இருக்கும் பிரச்னைகள் தீர்ந்து, பகைமைகள் அகன்று ஒற்றுமை மலர்ந்து, அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் மார்க்கத்தை, அடுத்த பதினோரு மாதங்களில் மேலோங்கச் செய்வதற்குமல்ல.உன்னை வரவேற்கும் ஆர்வம், வெறுமனே ஒரு சீசனல் ஆர்வம்தான். அது ரமலான் தலைப்பிறையில் ஆரவார்த்து நடுப்பிறையாகும்போது, நலிவடைந்து, 27 ஆகும்போது மீண்டும் கொதிநிலைக்கு வந்து, "ஷவ்வால் தலைப்பிறையோடு ஆறிப் போகிறது. இந்த சீசனல் ஆர்வத்தைப் பார்க்கதான், நீ வருகிறாய். அன்று வெற்றிகளைச் சுமந்து, உன்னை வரவேற்ற, "உம்மத் இன்று, தோல்விகளையும், தோல்வி மனப்பான்மையையும் சுமந்து கொண்டு உன்னை வரவேற்பதைப் பார்க்க என்னால் முடியாதிருக்கிறது.இருப்பினும் நீ ஒரு நாள் வருவாய். உனது வரலாற்றுப் பெருமையைக் காண வருவாய்; வெற்றிகளைக் காண வருவாய்.உமர்களும், தாரிக்களும் சலாஹீத்தீன் அய்யூபிகளும் தவழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்று அவர்கள் எழுந்து நடைபயின்று, சிறுபிராயம் தாண்டி, வாலிபம் அடைகிற போது, நீ உன் வரலாற்றுப் பெருமையை மீட்ட வருவாய். வெற்றிகளைக் காண வருவாய். அந்த நம்பிக்கையோடு உன்னை வரவேற்கிறேன். உமர்கள், தாரிக்கள், சலாஹீத்தின்களின் வாரிசுகளுக்கு, நீ சுமந்துவரும் அருள்களைப் பொழிந்து விட்டுப் போ. அவர்கள், செத்துப்போன இதயங்களைத் துடிக்க வைப்பர்.

ஈத் முபாரக்

உலக முஸ்லிம்கள் அனைவருக்கும், இரண்டு பண்டிகைகள் தான். ஒன்று: ரமலான், இன்னொன்று: பக்ரீத் எனும் தியாகத் திருநாள். இந்த ரம்ஜான் பண்டிகை, ரமலான் மாதம் முழுக்க நோன்பு வைத்த பிறகு, நோன்பு முடியும் கடைசி நாளின், மறு நாள் கொண்டாடப்படுகிறது.இதை, ஈகை பெருநாள் என்றும் அழைப்பர். ஏனெனில், இல்லாதவர்க்கு இயன்றதை செய்வோம் எனும், உன்னத லட்சியத்தை கொண்ட இஸ்லாம், அதை முழுக்க முழுக்க நடைமுறைப்படுத்துவது, ரமலான் மாதத்தில் தான்.இந்த நோன்பு காலத்தில் தான், செல்வந்தர்களின் செல்வங்கள் மீது, 2.5 சதவீதம் "ஜகாத் வரி கடமையாக்கப்பட்டிருக்கிறது. அதை அவர்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்கள், ஏன் அறிமுகமில்லாதவர்களில் கூட, வசதியில்லாமல் இருப்பவர்களுக்கு, உதவி செய்ய பயன்படுத்துவர்.காலையிலிருந்து மாலை வரை பசித்திருப்பது, ஏழையின் பசியை உணர்வதற்கு தான். ஏழை எப்போதும் பசியிலேயே இருக்கிறான். ஆனால், இறைவனுக்காக நோன்பு வைப்பது, அவனுக்கு கூடுதல் ஆன்ம பலம். பணக்காரர்கள் பசித்திருப்பது தான் சிறப்பு. அவர்கள் இந்த நோன்பின் மேன்மையை உணர்ந்து விட்டால், பசி என்ற வார்த்தையே உலகில் இருக்காது.ஒருவர் நோன்பு வைக்கிறார். அந்த நிலையில் வெளியே செல்கிறார். அவருக்கு கடுமையான பசியும், தாகமும் ஏற்படுகிறது; தாங்க முடியாத களைப்பும் உருவாகிறது. அவர் நினைத்தால் எதுவும் சாப்பிடலாம் அல்லது கொஞ்சம் தண்ணீராவது குடிக்கலாம். ஆனால், அப்படிச் செய்வதில்லை.ஏனென்றால், இறைவன் தன்னை பார்த்து கொண்டிருக்கிறான் என்ற இறையச்சம் (தக்வா). முஸ்லிம்களுக்கு எல்லா காலகட்டத்திலும் இந்த அச்சம் வந்து விட்டால், அவர்கள் வெற்றி பெற்ற சமுதாயமாக நிச்சயம் மாறி விடுவர்.ரம்ஜான் மாதம் என்றால், வெறும் நோன்பு வைப்பது மற்றும் "ஜகாத் கொடுப்பது என, பலரும் நினைக்கின்றனர். அது மட்டுமல்ல; அதை மீறிய பல வணக்க வழிபாடுகள், மிக முக்கியமானவையாக உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது, "இஹ்திகாப் எனும் செயல். "இஹ்திகாப் என்றால், மசூதியில் தங்குவது: இது ஒரு, நபி வழிசுன்னத்."இறைவனுக்காக, "இஹ்திகாப் இருக்கிறேன், நபி (ஸல்) முறைப்படி என்று எண்ணி, மசூதியில் தங்க வேண்டும். வீண் பேச்சு பேசக் கூடாது. அவசிய தேவை தவிர, மற்றவைக்காக மசூதியை விட்டு வெளியே வரக்கூடாது. தொழுகை, குர் - ஆன் ஓதுதல், இறைவனின் தியானம் என பொழுது கழிய வேண்டும். ஒரு நாள், இருநாள் கூட, சிலர், "இஹ்திகாப் இருப்பர். அதுவும் கூடலாம்; தவறு அல்ல. அவரவர் வசதிக்கேற்ப இருக்கலாம். ஆனால், நோன்பின் கடைசி, 10 நாள் முழுக்க இருக்கும் நோக்கம், உயரிய அந்த, "லைலத்துல் கதர் எனும் சிறப்பான இரவை அடைந்து விட வேண்டும் என்பதே. அந்த ஒரு இரவின் வழிபாடுகள், பிரார்த்தனைகள், நற்செயல்கள், ஆயிரம் இரவுகளுக்கான வழிபாட்டுக்களை விட மேலானது.முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் ஒரு நபராவது, கட்டாயமாக அந்த பகுதியில் இருக்கும் மசூதியில், "இஹ்திகாப் இருக்க வேண்டும்.அதைப் போல இந்த மகத்துவம் பொருந்திய ரமலான் மாதத்தில் தான், "லைலத்துல் கதர் என்கிற, அருள்வளம் பொருந்திய இரவு வருகிறது. இந்த இரவின் சிறப்பை விளக்கவே, "குர் ஆனில் இறைவன் தனியொரு அத்தியாயத்தை இறக்கியருளினான்.ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது "லைலத்துல் கதர்! அந்த இரவில், வானவர்களின் தலைவர், ஜீப்ரயிலும் பூமிக்கு இறங்கி வருகிறார். தங்கள் அதிபதியின் கட்டளைப்படி, நன்மையான விஷயங்களுடன் இந்தப் பூமியின் மீது, வானவர்கள் இறங்குகின்றனர். இந்த இரவு முழுவதும் சாந்தி நிறைந்ததாக இருக்கிறது. இந்த இரவு அத்துணை நன்மைகளுடன் அதிகாலை உதயமாகும் வரை... (திருக்குர் ஆன் 91: 1 - 5) என "லைலத்துல் கதர் இரவின் சிறப்பை, இறைவன் கூறுகிறான்.அந்த மகத்தான இரவு, ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில், ஒற்றைப் படை இரவுகளில் வருகிறதென, அண்ணல் நபி (ஸல்) சொல்லியுள்ளார். இந்த இரவில் தொழுது, பிரார்த்தனை செய்யும் இறையச்சமுடையவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும்!

மனித நாள்

பொய்யே பேசா புனிதநாள்! - சருகைப்
பூவாய் மாற்றும் இனியநாள்!
நொய்யே சோறாய் ஆனபோதும் - சிறிதும்
நினைத்தும் பார்க்கா மனிதநாள்!
நடுநிசி தோறும் விழித்தெழுந்து - இறை
நாமம் போற்றும் அரியநாள்!
கடும்பசி எழுந்தும் உணவுகள் இருந்தும்
கண்டு கொள்ளா பெரியநாள்!
பணக்காரனிடம் "ஜக்காத் வாங்க
பாமர ஏழைக்(கு) கதிகாரம்-
வழங்கும் திருநாள் வாழ்வில் ஒருநாள்
வந்தது; தந்தது சுவீகாரம்!
திருநாள் இதுபோல் ஒருநா ளில்லை
தேவை இந்தப் பெருநாளே!
அரிதின் அரிதாய் வந்தே எம்மை
ஆனாய் ஆக்கும் திருநாளே!

நோன்பின் மாண்பு

கெட்ட காட்சிகளை
பார்க்காமலிருப்பது
கண்களின் நோன்பு...
மற்றவர்களை பற்றி
அவதூறு பேசாமலிருப்பது
நாவின் நோன்பு...
இறைவனுக்கு அஞ்சி
என்றும் வாழ்வது
மனதின் நோன்பு...
வறுமையை உணர்ந்து விட்டால்
வசதியை உதறிவிட்டால்
அதுவே நோன்பின் மாண்பு...!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
பாலக்காடு : கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், 30 யானைகள் அணிவகுத்து நின்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த ஜெயந்தன் பூஜை விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar