Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
விநாயகரை கரைப்பது ஏன்? விநாயகரை கரைப்பது ஏன்?
முதல் பக்கம் » விநாயகர் சதுர்த்தி வழிபாடு!
விநாயகரின் வெவ்வேறு வடிவமும் அதன் சிறப்பும்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 செப்
2012
15:29

உருவாய் அருவாய் திருவாய் விளங்குபவன் இறைவன். அனைத்துயிர்களிலும் அவனே குடிகொண்டுள்ளான். எனவே அவனது திருக்கோலங்களை எண்ணுவது சாத்தியமற்றது. இருந்தபோதும் மனிதன் இறைவனை மூர்த்தங்களில் வடித்து வணங்குவதில் பெரிதும் நிறைவடைகிறான். அந்த விதத்தில் விநாயகரும், அஷ்ட(8) கணபதி, ÷ஷாடச கணபதி, 21 கணபதி, 51 கணபதி, 108 கணபதி என பல கோலங்களில் வழிபடப்படுகிறார். இத்தகைய சில ஆலயங்கள் குறித்துக் காண்போம்.

விநாயகரின் 32 வடிவங்கள்: 1. பால கணபதி, 2. தருண கணபதி, 3. பக்தி கணபதி, 4. வீர கணபதி, 5. சக்தி கணபதி, 6. துவிஜ கணபதி, 7. சித்தி கணபதி, 8. உச்சிஷ்ட கணபதி, 9. விக்ன கணபதி, 10. க்ஷிப்ர கணபதி, 11. ஹேரம்ப கணபதி, 12. லட்சுமி கணபதி, 13. மகா கணபதி, 14. விஜய கணபதி, 15. நிருத்த கணபதி, 16. ஊர்த்துவ கணபதி, 17. ஏகாட்சர கணபதி, 18. வர கணபதி, 19. த்ரயக்ஷர கணபதி, 20. சிப்ரப்ரசாத கணபதி, 21. ஹரித்ரா கணபதி, 22. ஏகதந்த கணபதி, 23. சிருஷ்டி கணபதி, 24. உத்தண்ட கணபதி, 25. ருணமோசன கணபதி, 26. துண்டி கணபதி, 27. துவிமுக கணபதி, 28. மும்முக கணபதி, 29. சிங்க கணபதி, 30. யோக கணபதி, 31. துர்க்கா கணபதி, 32. சங்கடஹர கணபதி.

இந்த 32 வடிவங்களில், முக்கியமானவர் ருண மோசன கணபதி. இவரின் மற்றொரு பெயர், ரண மோசனர் அல்லது ரிண மோசனர். நான்கு கரங்களுடன் வெள்ளை நிறத்தினைக் கொண்ட இவரைத் தொழுது வர, கடன் தொல்லைகளிலிருந்தும், இதர துன்பங்களிலிருந்தும் நம்மைக் காத்தருள்வார்.

பிள்ளையார்பட்டி ஹீரோ: விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவறைக்கோயில் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில். 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இங்கு விநாயகர் சதுர்த்தியன்று 18படி அளவில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை நைவேத்யம் செய்யப்படுகிறது. விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒருசில இடங்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று. விநாயகருக்கும், சண்டிகேசுவரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படும். கற்பகவிநாயகரின் கையில் சிவலிங்கம் உள்ளது. தியானநிலையில் இவர் வீற்றிருக்கிறார்.
திறக்கும் நேரம்: காலை 6 - 12, மாலை 4 -இரவு 8.
இருப்பிடம்: மதுரையில் இருந்து 70 கி.மீ.,
போன் : 04577 264240, 264241

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார்: திருச்சி என்றாலே மலைக்கோட்டை தான். இந்தக்கோட்டை 6ம் நூற்றாண்டைச்சேர்ந்த குணபரன் என்ற மகேந்திர பல்லவர் ஆட்சியில் கட்டப்பட்டதாக தகவல் உள்ளது. உயரம் 275 அடி. மலைக்கோயிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன. மலை உச்சி மேல் அமைந்துள்ள விநாயகரை உச்சிப்பிள்ளையார் என்கின்றனர். ராமாயண காலத்தில் விபீஷணனுக்காக மலை மேல் இந்த விநாயகர் அமர்ந்ததாக புராணங்கள் கூறுகிறது
திறக்கும் நேரம்: காலை 6- இரவு 8.
போன்: 0431 270 4621, 270 0971, 271 0484.

உடுமலைப்பேட்டை பிரசன்ன விநாயகர் கோயில்: சக்கர வடிவில் ஊரைக்காக்கும் அரணாக மலை அமைந்திருந்ததால் சக்கரகிரி என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் உடும்புமலை என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர், பின் உடுமலைப்பேட்டை என்றானது. இங்குள்ள பிரசன்ன விநாயகர் கோயிலில் காசிவிஸ்வநாதர், பிரம்மன், சவுரிராஜப்பெருமாள் ஆகிய மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கின்றனர். இத்தல விநாயகர் ஆறடி உயரத்தில், ராஜகம்பீர கோலத்தில், ஏகதள விமானத்தின் கீழ் அமர்ந்துள்ளார். மூஷிக வாகனம் பெரிய அளவில் உள்ளது. முன் மண்டபத்தின் மேற்கூரையில் 12 ராசிகளைக் குறிக்கும் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. தேவ விருட்சங்களான வன்னி, வில்வம், அரசு ஆகியன இங்குள்ளன. கிருத்திகையில் வெள்ளித்தேரில் விநாயகர் ஊர்வலமாக வருவது சிறப்பு.
திறக்கும் நேரம்: காலை 6 - 12, மாலை 4.30 - இரவு 9. இருப்பிடம்: உடுமலைப்பேட்டை நகரின்மத்தியில் கோயில் அமைந்துள்ளது.
போன் : 04252 221 048

தஞ்சாவூர் வெள்ளை விநாயகர் கோயில்: தஞ்சாவூரிலுள்ள வல்லப விநாயகர் கோயில் பேச்சுவழக்கில் வெள்ளை விநாயகர் கோயில் எனப்படுகிறது. வல்லபை என்பவள், ஒரு சாபத்தால் அரக்கியாக மாறி, முனிவர்களையும் தேவர்களையும் அச்சுறுத்தி வந்தாள். அனைவரும் சிவனிடம் முறையிட்டனர். மனித உடலும், மிருகமுகமும் கொண்ட ஒருவரால் தான் தன் சாபம் நீங்கும் என்று அவளுக்கு சாபவிமோசனம் அளிக்கப்பட்டது. அவள் பல அசுரக்குழந்தைகளைப் பெற்றுத் தள்ளினாள். விநாயகர் அவளை அடக்கி மடியில் இருத்திக்கொண்டார். அவளது கோரிக்கைக்கு இணங்க வல்லப விநாயகர் என்ற பெயரும் பெற்றார். இந்தக் கோயிலில் விநாயகருக்குள் (மூலவர்) வல்லபா தேவி இல்லாவிட்டாலும், அவருக்குள் ஐக்கியமாகி, அரூபமாகக் காட்சி தருவதாக ஐதீகம். ஆனால், உற்சவ விநாயகர் வல்லபை சகிதமாகக் காட்சி தருவது சிறப்பு.
இருப்பிடம்: தஞ்சாவூர் கீழவாசல்.
திறக்கும் நேரம்: காலை 6 -10, மாலை 5 - இரவு 8.
 போன்:96459 59997

சேலம் ராஜகணபதி: 400 ஆண்டுகளுக்கு ¬முன் ஸ்தாபனம் செய்யப்பட்டது சேலம் ராஜகணபதி கோயில். கலியுகக் கண்கண்ட தெய்வமாக ராஜகணபதி விளங்கியதால் மன்னர் காலத்தில் சிறப்பு பெற்றது. ராஜகணபதியை வழிபடும் பக்தர்களுக்கு மக்கள் செல்வம் கிடைக்கும். பொருட்செல்வம் சேரும். தீராத நோய் தீரும். இவர் தினமும் ராஜ அலங்காரத்தில் தரிசனம் தருவதால் ராஜ கணபதி என அழைக்கப்படுகிறார்.
திறக்கும் நேரம்: காலை 6 - 11, மாலை 4 - இரவு 8. இருப்பிடம்: சேலம் நகரின் மையத்தில் முதல் அக்ரஹாரம், தேரடி சந்திப்பில் உள்ளது.

லிங்க வடிவில் 11 விநாயகர் கோயில்: வேலூர் சேண்பாக்கம் செல்வவிநாயகர் கோயிலில், விநாயகர் 11 சுயம்பு மூர்த்திகளாக (சிற்பியால் செதுக்கப்படாமல் தானாக தோன்றியது) அருள்பாலிக்கிறார். ஆதிசங்கரருக்கு சுயம்புமூர்த்தி தரிசனம் செய்வதில் மிகவும் விருப்பம். இங்கு 11 சுயம்பு மூர்த்திகள் இருப்பதை அறிந்து வந்தார். 11 சுயம்புமூர்த்திகளும் லிங்க வடிவில் இருப்பதைக் கண்டார். பின் தன் ஞான திருஷ்டியால் அனைத்து லிங்கங்களும் விநாயகரே என்பதை அறிந்தார். சுயம்பு மூர்த்திகளுக்கு எதிரில் ஈசான்ய மூலையில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்தார். ஆதிசங்கரரின் வழிபாடு செய்ததில் இருந்து, இந்த கோயிலின் பழமையும் சிறப்பும் விளங்குகிறது. ஸ்ரீசக்ரத்தின் அருகே நவக்கிரக மேடை அமைத்துள்ளனர். இதிலிருக்கும் சனிபகவான் தனக்கு அதிபதியான விநாயகரை பார்த்திருப்பது தனி சிறப்பு. பொதுவாக விநாயகரின் எதிரே மூஷிக வாகனம் இருப்பதே இயல்பு. ஆனால், செல்வவிநாயகர் எதிரில் யானை வாகனம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
திறக்கும் நேரம்: காலை 6 - 11.30, மாலை 4.30 - இரவு 8.
இருப்பிடம்: வேலூரில் இருந்து பெங்களூரு செல்லும் வழியில் 3 கி.மீ., தூரத்தில் சேண்பாக்கம். பஸ் எண் 3.
போன் : 0416 - 229 0182, 94434 19001.

முதுகைக் காட்டி தோப்புக்கரணம் போடுங்க: உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் கோயில் திருநெல்வேலியில் இருக்கிறது. விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்று உச்சிஷ்ட கணபதி. அவர் பிரம்மச்சாரி என்று ஒரு தகவல் இருக்க, ஒரு பெண்ணை ஆலிங்கனம் செய்தபடி உள்ள கோலம் அபூர்வமானது. இதுவே உச்சிஷ்ட கணபதி வடிவம். இவரை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.

தல வரலாறு:  உச்சிஷ்டகணபதி என்பதற்கு எச்சில் பட்ட விநாயகர் என்பது பொருள். தூய்மையே தெய்வம் என்பது நம் கோட்பாடு. ஒருநாள் குளிக்காவிட்டாலும் வழிபாட்டுக்கு தகுதியற்றவர்களாக நம்மை எண்ணுகிறோம். தீட்டுப்பட்டவர் நம்மைத் தொட்டால் தற்காலிகமாக கெட்டு விட்டதாக நம்மை நாமே புறக்கணிக்கிறோம். தூய்மையாக இருப்பது அவசியம் என்றாலும் அசுசியான பொருட்களைக் கண்டு அருவருப்பது கூடாது. சுத்தம், அசுத்தம் இரண்டையும் கடந்து செல்வதே பக்குவநிலை. பரந்த மனம் ஒருவனிடம் இருந்துவிட்டால் எங்கும் அழுக்கு இல்லை என்பதை உணரலாம். செடிக்கு மாட்டின் சாணம், மனித மலம் என அழுக்கே உணவாகிறது. அதுவே நம்மிடம் விளைபொருளாகத் திரும்பி வருகிறது. இயற்கை முழுவதும் இந்த நிகழ்வைக் காணலாம். அழுக்கை அழுக்காக கருதக் கூடாது என்பதை உச்சிஷ்ட கணபதி நமக்கு உணர்த்துகிறார்.  உணவு உண்டபின் எச்சில் இலையைத் தூர எறிகிறோம். அதை அழுக்காகப் பார்க்காமல் உச்சிஷ்ட கணபதியே எழுந்தருளியிருப்பதாக எண்ண வேண்டும். அழுக்கையும் இறைவனாகப் பார்க்கும் தகுதியுடையவர்களுக்காக எழுப்பப்பட்டது உச்சிஷ்ட விநாயகர் கோயில்.

யோகாவில் ஆர்வமுள்ளவரா? கோவை யோக விநாயகரை வணங்குங்க: முழுமுதற்கடவுளான விநாயகர் கோவை குனியமுத்தூரில் யோக நிஷ்டையில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். யோகா பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் இவரை வணங்கி வரலாம்.

தல வரலாறு: யோக வளம், தியானசக்தி, ஆன்மிக அறிவு ஆகியவற்றைப் பெறவும். நாடு நலம் பெறவும் வேண்டி யோக நிஷ்டை விநாயகரை பிரதிஷ்டை செய்ய இப்பகுதி மக்கள் நினைத்தனர். மகான்களின் அறிவுரைப்படியும், சிற்ப வல்லுனர்களின் யோசனைப்படியும் சிலையை உருவாக்கினர். அமைதியான சூழலில் கோயில் அமைக்கப்பட்டது.

தல சிறப்பு: சபரிமலை ஐயப்பன் போன்று யோகநிலையில் இவர் காட்சியளிக்கிறார். இளஞ்சூரியனின் நிறத்தோடு, வலது முன்கையில் அட்சமாலையும், பின்கையில் கரும்பும், இடது முன் கையில் யோக தண்டமும், பின் கையில் பாŒக்கயிறும் ஏந்தியுள்ளார். தன்னை நாடி வருவோருக்கு அஷ்ட யோகங்களையும் அருள்பாலிப்பவர்.
கோயில் அமைப்பு: நுழைவுவாயிலில் வடக்கு நோக்கி விஷ்ணு துர்க்கை சந்நிதியும், உள்ளே புற்று, ராகு சிலையும் உள்ளது. உட்பிரகாரத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை இறைவன் செய்கிறான் என்பதற்கேற்ப, பிரம்மா, விஷ்ணு, தட்சிணாமூர்த்தி கோலத்தில் சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:விநாயகர் சதுர்த்தி, சங்கடஹரசதுர்த்தி, அமாவாசை,பவுர்ணமி, வெள்ளிக்கிழமை ராகுகால பூஜை.

திறக்கும் நேரம் : காலை 6 -10, (வெள்ளியன்று பகல் 12),மாலை 5.30 - இரவு 8.30.
இருப்பிடம்: உக்கடத்தில் இருந்து (4.5 கி.மீ) பாலக்காடு சாலை வழியாக சுந்தராபுரம் செல்லும் மினி பஸ்சில் நிர்மலா மாதா பள்ளியில் இறங்கி கோயிலை அடையலாம்.
போன் : 0422 2675 220, 97904 19288.

தலை ஆட்டினா போதும்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ளது தலையாட்டி விநாயகர் கோயில். கெட்டி முதலி என்னும் குறுநிலமன்னன் இக்கோயிலை கட்டும் முன்பு விநாயகரிடம் உத்தரவு கேட்டுவிட்டு அதன்பின்பு, பணியைத் துவங்கினான். கோயில் வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு இவரிடம் வந்து பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா? என்று கேட்டான். அதற்கு இவர், நன்றாகவே கட்டியிருக்கிறாய் என சொல்லும்விதமாக தனது தலையை ஆட்டினார். எனவே இவருக்கு தலையாட்டி பிள்ளையார் என்ற பெயர் வந்தது. தற்போதும் இவர் தனது தலையை இடப்புறமாக சற்று சாய்த்தபடி இருப்பதை காணலாம். தொழில், கட்டடப்பணிகளைத் தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக் கொண்டால் அச்செயல் முடியும் வரையில் பாதுகாப்பாக இருந்து அதனை சிறப்புற முடித்து தருவார் என்பதால், இவரைக் காவல் கணபதி என்றும் அழைக்கின்றனர்.
திறக்கும் நேரம்: காலை 6 - 12, மாலை 4 - இரவு 8.30.
இருப்பிடம்: ஆத்தூர் பஸ்ஸ்டாண்டிலிருந்து நடந்து செல்லும் தூரம்.
போன்: 04282 320 607

மொட்டை விநாயகர்: மதுரையில் உள்ளது மொட்டை விநாயகர் கோயில். தனது காவலுக்காக பார்வதி தேவியால் படைக்கப்பட்டவர் கணபதி. பார்வதி தேவியை பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சிவன், கணபதியின் தலையை வெட்டினார். இதை உணர்த்தும் விதமாக இங்குள்ள விநாயகர், தலையில்லாமல் மொட்டை கணபதியாக அருள்பாலிக்கிறார். டாக்டர்கள் சிலர், ஆபரேஷன் செய்யும் முன்பு இவருக்கு தேங்காய் காணிக்கை செலுத்திவிட்டு பணியைத் துவக்குகின்றனர். புதிதாக ஏதேனும் செயலைத்தொடங்கும்போது சீட்டு மூலம் உத்தரவு கேட்கும் முறையும் இங்குள்ளது. வியாபாரிகள் தினமும் கடைதிறக்கும்  முன்பு சாவியை இவரிடம் வைத்து பூஜை செய்து விட்டு செல்கின்றனர்.
தரிசன நேரம்: காலை 6 - இரவு 10.
இருப்பிடம்: மதுரை கீழமாசிவீதி, தேர்நிலை அருகில்.
போன்: 0452 4380144

கும்பகோணம் கரும்பாயிரம் பிள்ளையார்: வணிகர் ஒருவர் மாட்டு வண்டியில் கரும்புக்கட்டு ஏற்றி வந்தார். அவரிடம் சிறுவன் உருவில் வந்த விநாயகர் கரும்பு கேட்டார். வணிகர் தர மறுத்தார். எனவே கரும்புகளை நாணல் குச்சிகளாக மாற்றி திருவிளையாடல் புரிந்தார். கலங்கி நின்ற வணிகரிடம் தர்மசிந்தனை பற்றி அறிவுறுத்தினார். வணிகர் விநாயகரிடம் மன்னிப்புக்கேட்டார். பின் நாணல் குச்சிகளை மறுபடியும் கரும்பாக மாற்றி அதிசயம் நிகழ்த்தினார். இதன் காரணமாக இவர் கரும்பாயிரம் பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். கும்பகோணம் நகரத்தின் மூத்த பிள்ளையான இவர் பக்தர்களின் வாழ்வை இனிப்பாக மாற்றிடுவார்.
இருப்பிடம்: கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் அருகில்.
திறக்கும் நேரம்: காலை 5 - 10 , மாலை 3 - இரவு மணி 7.

புதுச்சேரி மணக்குள விநாயகர்: அகில இந்திய அளவில் விநாயகர் கோயிலின் விமானம் முழுவதும் தங்கத்தால் வேயப்பட்ட கோயில் இது. விநாயகர் கோயில்களில் வேறு எங்குமே இல்லாத வகையில் பள்ளியறையும் இங்குள்ளது. தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வார். பள்ளியறைக்கு பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ விக்ரகம் கொண்டு செல்லப்படுகிறது. விநாயகருக்கு இத்தலத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது. சித்தி புத்தி அம்மைகள் துணைவியராக உள்ளனர். மூலவரான மணக்குளத்து விநாயகரின் பீடம், கிணறு அல்லது குளத்தின் மீது இருப்பதாகச் சொல்கின்றனர். பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு மிக அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்லுகிறது. அதில் தீர்த்தம் உள்ளது. இதன் ஆழத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் வற்றாத நீர் எப்போதும் உள்ளது.
திறக்கும் நேரம்: காலை 6 - 1, மாலை 4 - இரவு 10.
போன் : 0413-233 6544.

காரணம் என்ன தெரியலியே: கோயம்புத்தூர் மாவட்டம் மத்தம் பாளையத்தில் உள்ளது காரணவிநாயகர் கோயில். ஏதோ ஒரு காரணத்தால் விநாயகர் இந்த இடத்தில் அமர்ந்ததால் காரண விநாயகர் என அழைக்கப்படுகிறார். கருவறையில் விநாயகரின் அருகில் அவரது தந்தை சிவனின் வாகனமான நந்தி இருப்பது விசேஷ அம்சம். காரண விநாயகரின் சந்நிதி அருகில் அவரது தம்பியான காரண முருகனும், மாமாவான பெருமாளும், ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இத்தலத்தில், கால்நடைகளின் விருத்திக்காகவும், நோயற்ற வாழ்க்கை வாழவும் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
திறக்கும் நேரம்: காலை 8 - மாலை 6.
இருப்பிடம்: கோயம்புத்தூரில் இருந்து காரமடை சென்று அங்கிருந்து 15 கி.மீ.,
தூரத்தில் மத்தம்பாளையம்.
போன் : 04254 272 900

பொல்லாப் பிள்ளையார்: அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்களைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. இவரது தந்தை திருநாரையூர் (கடலூர் மாவட்டம்) சிவன் கோயிலில் உள்ள பிள்ளையாருக்கு தினமும் நைவேத்யம் செய்வார். ஒருமுறை, தந்தை வெளியூர் சென்று விட்டதால், நம்பி கோயிலுக்கு பூஜைக்கு கிளம்பினார். பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்த பின், அவரைச் சாப்பிடும்படி வற்புறுத்தினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி, பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார். உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் அவர் கொண்டு வந்த சர்க்கரைப் பொங்கலை திருப்தியாகச் சாப்பிட்டார். இந்த தகவலைக் கேள்விப்பட்ட மன்னன் ராஜராஜசோழன் இதை நம்பவில்லை. இருப்பினும், நம்பியின் பேச்சை ஏற்று, பலவகையான பலகாரங்களுடன் கோயிலுக்கு வந்து, பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்யச் சொன்னான். பிள்ளையார் சாப்பிடவில்லை. உடனே நம்பி பக்தியுடன் அவர் மீது பாடல்களைப் பாடினார். இதுவே இரட்டை மணிமாலை என்று பெயர் பெற்றது. பாடல் கேட்டு மகிழ்ந்த பிள்ளையார், தன் பக்தன் கேலிப்பேச்சுக்கு ஆளாகக் கூடாதே என்பதற்காக நைவேத்யத்தை அனைவர் முன்னிலையிலும் சாப்பிட்டார். இந்த பிள்ளையார் சிலை உளியால் செதுக்கப்படாத சுயம்பு விநாயகர் என்பதால் பொள்ளாப் பிள்ளையார் எனப்பட்டார். பொள்ளா என்றால் செதுக்கப்படாத என்பது பொருள். காலப்போக்கில் இது பொல்லாப்பிள்ளையார் ஆகி விட்டது.
இருப்பிடம்: சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார் கோயில் செல்லும் வழியில் 18 கி.மீ. தூரத்தில், திருநாரையூர் உள்ளது.

ஆதிசங்கரர் வணங்கிய ஆறுமுகமங்கலம்: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் விநாயகருக்கென தனிக்கோயில் உள்ளது. இவர் ஆயிரத்தெண் விநாயகர் எனப்படுகிறார். விநாயகர் கோயில்களில் கொடிமரம் உள்ள கோயில் இது. தேர்த்திருவிழாவும் நடத்தப்படும். கி.மு. 4ம் நூற்றாண்டில் சோமார வல்லபன் என்ற மன்னன் நர்மதை நதிக்கரையிலிருந்து 1008 அந்தணர்களை வரவழைத்து பெரிய யாகம் நடத்த முடிவெடுத்தான். அதில் ஒருவர் மட்டும் குறைய அந்தணர் வடிவில் ஆயிரத்தெட்டாவது நபராக வந்து யாகத்தை பூர்த்தி செய்தார் விநாயகர். இதன் காரணமாக இந்த விநாயகர் ஆயிரத்தெண் விநாயகர் எனப்படுகிறார். ஆதிசங்கரர்  இத்தலத்து விநாயகரை வணங்கிய பின் திருச்செந்தூர் சென்று சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரம் பாடி தனது வியாதி நீங்கப் பெற்றார்.
திறக்கும் நேரம்:  காலை 6 - 11, மாலை 5 முதல் இரவு 8.
இருப்பிடம்: திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் ஏரல். அங்கிருந்து 7 கி.மீ., தூரத்தில் ஆறுமுகமங்கலம்.
 போன்:0461 232 1486.

இசைக்கலைஞர்களே! இந்த ஏழையை வணங்குங்க: திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை வழிபட்டுவிட்டு கிரிவலம் வரும் பக்தர்கள், உச்சிப் பிள்ளையாரையும் சேர்த்து 12 விநாயகர்களைத் தரிசிக்கலாம். இதில் ஏழாவதாகத் திகழும் பிள்ளையார் ஏழாம் பிள்ளையார் என அழைக்கப்பட்டு அது மருவி ஏழைப் பிள்ளையார் என மாறிவிட்டார். தெற்கு நோக்கி அருள்புரிவதால், இவரை வழிபடுபவர்களுக்கு எமபயம் கிடையாது. சப்தஸ்வர தேவதைகளுக்குத் தங்களால்தான் மக்களின் மனதைக் கவரும் இனிமையான இசையை எழுப்ப முடிகிறது என்ற கர்வம் உண்டாயிற்று. ஆணவத்தால் அவை இறைவனைத் துதிப்பதை மறந்தன. இதனைக் கவனித்த கலைவாணி சப்தஸ்வர தேவதைகளை, இனி உங்கள் இசையால் யாரையும் கவர முடியாது. ஸ்வரங்கள் பயனற்றுப் போகட்டும் என்று சபித்துவிட்டாள். அதன்பின் அவை, விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தங்களது சாபம் நீங்கப்பெற்றன. இந்த விநாயகர் சன்னதியில் இசைக்கலைஞர்கள் வணங்கினால் குரல் வளம் நீடித்திருக்கும் என்பது ஐதீகம்.
திறக்கும் நேரம்: காலை 6 - 10, மாலை 5 - இரவு 8.
இருப்பிடம்: திருச்சி சிந்தாமணி பஸ் ஸ்டாப்பிலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள வடக்கு ஆண்டார் வீதி.
போன்: 85262 77480

சூரியன் வழிபட்ட உப்பூர் விநாயகர்: பாண்டிய மன்னர்கள் காலத்திற்கு பிறகு ராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதி மன்னர்கள் அமைத்த உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்தக்கோயிலைக் கட்டியவர் ராமநாதபுரம் மன்னரான பாஸ்கரசேதுபதி ஆவார். விநாயகர் பெருமான் மீது தட்சிணாயன காலங்களில் (ஆடி- மார்கழி) தெற்கு பகுதியிலும், உத்தராயண காலங்களில் (தை-ஆனி) வடக்கு பக்கமாகவும் சூரியஒளி படுகிறது. சூரியன் இங்கே தவம்புரிந்து, சித்தி பெற்று பாவ விமோசனம் பெற்றதால் சூரியபுரி, தவசித்திபுரி, பாவ விமோசனபுரம் ஆகிய பெயர்கள் இந்த ஊருக்கு உள்ளன.
திறக்கும் நேரம்: காலை 6 -11, மாலை 4 - இரவு 8 .
இருப்பிடம்: மதுரை அல்லது ராமநாதபுரத்தில் இருந்து தொண்டி சென்று அங்கிருந்து 15 கி.மீ., சேதுகடற்கரை சாலையில் சென்றால் உப்பூர்.

பிளாக் அன்ட் ஒயிட் விநாயகர்: ராமநாதபுரம் அக்னி தீர்த்தக்கடலில் நீராடிக் கொண்டிருந்த போது கிடைத்த கல்லை, திருவிதாங்கூர் மன்னர் வீரகேரளவர்மா கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில் ஒரு அரசமரத்தடியில் பிரதிஷ்டை செய்தார். தற்போது ஒன்றரை அடி உயரமுள்ள இந்த விநாயகர், ஆரம்பத்தில் அரை அடி அளவே இருந்ததாகச் சொல்கிறார்கள். இவரை நிறம் மாறும் விநாயகர் என்கின்றனர். தை முதல் ஆனி வரை உத்தராயண காலத்தில் வெள்ளை நிறமாகவும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாய காலத்தில் கருப்பு நிறமாகவும் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். வெள்ளை நிறமாக இருக்கும் விநாயகர் திருமேனியில் ஆடி மாத ஆரம்பத்தில் கருப்புப் புள்ளிகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து சிறிது சிறிதாக நிறம் மாறி முழுமையாகக் கருப்பாகிறது. இந்த அதிசய விநாயகரை ஆய்வு செய்த புவியியல் துறை நிபுணர்கள், திருமேனி (சிலை) உருவாக்கப்பட்ட கல் சந்திர காந்தம் என்னும் அபூர்வ வகையைச் சார்ந்தது என்கிறார்கள்.
திறக்கும் நேரம்: காலை 6 - 10, மாலை 4 - இரவு 7.
இருப்பிடம்: நாகர்கோவிலிலிருந்து 18 கி.மீ. , தக்கலை மகாதேவர் கோயில் அருகில்.

விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் உள்ளது நெற்குத்தி விநாயகர் கோயில். ஆடுமேய்க்கும் சிறுவர்கள் நெல் குத்த கல் தேடிய போது, யானைத்தலை வடிவில் ஒரு கல் கிடைத்தது. அது விநாயகரின் உருவம் போல் தெரியவே, அதை விநாயகராகக் கருதி பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர். இந்த விநாயகர் லிங்க வடிவில் இருக்கிறார். பால் அபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் படிந்திருக்கும் விநாயக வடிவைத் தரிசிக்கலாம். இவர் பொய்யாமொழி விநாயகர் எனவும் அழைக்கப்படுகிறார். விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி, மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன. இவற்றை பிரம்மா, விஷ்ணு, சிவன் என கூறுகின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த மரங்களைச் சுற்றி வருகின்றனர். இவற்றிற்கு தினமும் பூஜை செய்யப்படுகிறது.
திறக்கும் நேரம்: காலை 6 - இரவு 7.
இருப்பிடம்: திண்டிவனத்திலிருந்து செஞ்சி செல்லும் வழியில்13 கி.மீ. தூரத்தில் தீவனூர்.
போன்: 94427 80813

லிங்கவடிவ பிள்ளையார்: விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் உள்ளது நெற்குத்தி விநாயகர் கோயில். ஆடுமேய்க்கும் சிறுவர்கள் நெல் குத்த கல் தேடிய போது, யானைத்தலை வடிவில் ஒரு கல் கிடைத்தது. அது விநாயகரின் உருவம் போல் தெரியவே, அதை விநாயகராகக் கருதி பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர். இந்த விநாயகர் லிங்க வடிவில் இருக்கிறார். பால் அபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் படிந்திருக்கும் விநாயக வடிவைத் தரிசிக்கலாம். இவர் பொய்யாமொழி விநாயகர் எனவும் அழைக்கப்படுகிறார். விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி, மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன. இவற்றை பிரம்மா, விஷ்ணு, சிவன் என கூறுகின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த மரங்களைச் சுற்றி வருகின்றனர். இவற்றிற்கு தினமும் பூஜை செய்யப்படுகிறது.
திறக்கும் நேரம்: காலை 6 - இரவு 7.
இருப்பிடம்: திண்டிவனத்திலிருந்து செஞ்சி செல்லும் வழியில்13 கி.மீ. தூரத்தில் தீவனூர்.
போன்: 94427 80813

கோயம்புத்தூர் ஈச்சனாரி விநாயகர்: பேரூர் பட்டீஸ்வர சுவாமி கோயிலில் பிரதிஷ்டை செய்ய 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்ரகத்தை மதுரையில் இருந்து வண்டியில் எடுத்துச் சென்றனர். வழியில் வண்டியின் அச்சு ஒடிந்தது. அதன்பிறகு சிலையை நகர்த்த முடியவில்லை. இதையடுத்து காஞ்சி மகாப்பெரியவர் அருள்வாக்குப்படி இச்சிலை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் ஈச்சனாரி விநாயகர் எனப்பெயர் பெற்றார். இக்கோயிலில் அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திர நாட்களில் ஒவ்வொருவிதமான அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்படும். இதை நட்சத்திர அலங்கார பூஜை என்பர்.
திறக்கும் நேரம்: காலை 6 - 11, மாலை 4 - இரவு 8 .
இருப்பிடம்: கோயம்புத்தூர் - பொள்ளாச்சி செல்லும் வழியில் 9கி.மீ., தூரத்தில் ஈச்சனாரி.
போன் : 0422 267 2000, 267 7700.

நவக்கிரக விநாயகர்: கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள ஸ்ரீபகவத் விநாயகர் கோயிலில் நவக்கிரக விநாயகர் அருள்கிறார். இவர் சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக் கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க் கையிலும், வியாழனை சிரசிலும், வெள்ளியை இடது கீழ்க் கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சி தருகிறார். இவரை வழிபட்டால் நவக்கிரக தோஷம் தீரும் என்பர்.
56, 11, 6

காசியைச் சுற்றி ஏழு பிரகாரத்தில் 56 கணபதிகள் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயிலில் ஒரே இடத்தில் சிறு மண்டபத்தின் கீழ் 11 விநாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். நாகப்பட்டினம் கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோயிலில் ஒரே மூலஸ்தானத்தில் 6 விநாயகர்கள் அமர்ந்து விநாயகர் சபையாக அருள்பாலிக்கிறார்கள்.

மனிதமுக விநாயகர்: திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 22 கி.மீ., தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் செதலபதி முக்தீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள விநாயகர், மனித முகத்துடன் மேற்கு பார்த்து தனிச்சந்நிதியில் இருக்கிறார். பார்வதியின் மூலம் பிறந்த விநாயகர், அவளது சக்திலோகத்திற்குள் சிவனையே அனுமதிக்க மறுத்தார். அப்போது கடும் போர் மூண்டதில் விநாயகரின் மனிதத்தலை துண்டிக்கப்பட்டது. பார்வதி இதனை ஆட்சேபிக்கவே, அவருக்கு யானைத்தலை கொடுத்து உயிர்ப்பித்தார் சிவன். எனவே, இந்த விநாயகரை ஆதி விநாயகர் என்கின்றனர். இவரது சந்நிதியில் மட்டைத்தேங்காய் கட்டி வேண்டினால் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறுவதாக நம்பிக்கை.

செல்வ கணபதி: கோவை பாலக்காடு சாலையில் மரப்பாலம் எனும் இடத்தில் உள்ள தர்மலிங்கேசர் மலையின் அடிவாரத்தில் உள்ள செல்வ விநாயகர் இவர். பதினாறு பேறும் தருபவர் என்பதால் இப்பெயர் வந்ததாகச் சொல்கின்றனர்.

அங்கும் நானே! இங்கும் நானே: பெங்களூரில் இருந்து 374 கி.மீயில் உள்ள பனவாசி எனும் ஊரில் உள்ள மதுகேஸ்வரர் எனும் சிவாலயத்தில் அர்த்த விநாயகர் என்ற திருநாமத்துடன் விநாயகர் அமைந்துள்ளார். காசிக்கு நிகராக போற்றப்படும் இத்தலத்தில் இருப்பதா, அல்லது காசியில் இருப்பதா என விநாயகருக்கே குழப்பம் வந்துவிட்டதாம். இதனால் தன்னுடைய அம்சத்தை இரண்டாக்கி ஒரு வடிவாக கர்நாடகாவிலும் மீதி வடிவாக காசியிலும் இருப்பதாக கூறுகிறார்கள்.

ஈரோடு வரசித்திவிநாயகர்: தமிழகத்தில் ஆற்றங்கரையில் வீற்றிருக்கும் விநாயகர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஆற்றில் நீராடி ஆனை முகனை வணங்கிடும் ஆனந்தமே தனி. உடலும் உள்ளமும் குளிரும் அற்புத அனுபவம் அது. அத்தகைய திருக்கோயில்களுள் ஒன்று, ஈரோடு மாவட்டம் பவானி நதிக்கரையில் உள்ள வரசித்திவிநாயகர் ஆலயம். மிகுந்த வரப்பிரசாதியான இவரை அனுதினமும் ஆராதிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். சுமார் ஐந்தடி உயரமுள்ள திருமேனியராக கம்பீரமாகக் காட்சிதரும் கணபதியே பார்க்கப் பார்க்க பரவசமும் தடைகள் எல்லாம் அப்போதே நீங்கி விட்ட ஆனந்தமும் ஒரு சேரக் கிடைக்கிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றின் கரையில் வீற்றிருக்கிறார் இந்த வரசித்திவிநாயகர்.

கற்பக விநாயகர்: ஈரோடு ரயில்வே காலனி அருகே கற்பக விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலய வளாகத்திற்குள்ளே பெரிய அரச மரத்தடியில் ராகு, கேது கூடிய வலம்புரி விநாயகர் எழுந்தருளியுள்ளார். இந்த ஆலய விநாயகர்களை வணங்கினால் புத்திர தோஷம், திருமணத் தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

வெள்ளை விநாயகர்: திருச்சி மாவட்டம் லால்குடியிலிருந்து 3 கி.மீ தொலைவிலும் உள்ளது பூவாளூர் என்ற கிராமம். இங்குள்ள திருமூல சுவாமி ஆலயத்தின் மேற்குத் திருச்சுற்றில் அருள்பாலிக்கிறார் வெள்ளை விநாயகர். பெயருக்கு ஏற்றபடி வெண்மை நிறத்துடன் காட்சி தரும் இவர், வேண்டியவை யாவும் அருள்வதில் வல்லவர்.

அனுக்ஞை விநாயகர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணியிலிருந்து 8. கி.மீ தொலைவில் உள்ள மருங்கபள்ளம் என்ற கிராமத்தில் உள்ள மருந்தீஸ்வரர் ஆலயத்தின் மகா மண்டபத்தில் அருள்பாலிக்கிறார், இவர். வேண்டியதை ஈடேற்றுபவர், தடைகளைத் தகர்ப்பவர் என்பதால் வந்த பெயர், அனுக்ஞை விநாயகர்.

நர்த்தன விநாயகர், ஆதி விநாயகர்: திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது மன்னார்புரம். இங்குள்ளது நர்த்தன விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்தின் மேற்கு திருச்சுற்றில் அருள்பாலிக்கிறார் ஆதிவிநாயகர். நர்த்தன கணபதியும் ஆதி விநாயகரும் இணைந்து அனைத்து நலமும் வளமும் அருள்வதாகச் சொல்கின்றனர் பக்தர்கள்.

காளி விநாயகர்: நாகை மாவட்டம் சீர்காழியில் தேர் கீழ வீதியில் தனி ஆலயத்தில் மூலவராக அருள்பாலிக்கிறார் காளி விநாயகர்.

சர்வ சித்தி விநாயகர்: திருமுல்லைவாயில் சீர்காழி பேருந்து சாலையில் சீர்காழியிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது வரிசைப்பத்து ஆமப்பள்ளம் என்ற ஊர். இங்குள்ள பழனியாண்டீஸ்வரர் ஆலயத் திருச்சுற்றில் அருள்பாலிக்கிறார் சர்வ சித்தி விநாயகர். கேட்ட வரம் அருளும் சிவமைந்தன் இவர்.

பால விநாயகர்: திருச்சி- சமயபுரம் நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள பனமங்கலம் என்ற கிராமத்தில் உள்ளது வாரணபுரீஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலின் திருச்சுற்றில்தான் அருள்பாலிக்கிறார் பால விநாயகர். இவர் குழந்தைகளின் திருஷ்டி தோஷங்களைப் போக்குபவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நாகர் விநாயகர்: சீர்காழி- திருமுல்லைவாயில் பேருந்து தடத்தில் சீர்காழியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள வடகால் என்ற கிராமத்தில் உள்ள தான்தோன்றி முருகன் ஆலய மகா மண்டபத்தில் வலதுபுறம் அமர்ந்து அருள்பாலிக்கிறார், நாகர் விநாயகர். தம்மை வணங்குவோர் வாழ்வில் ராகு-கேது கிரக தோஷங்கள் அண்டாது காப்பவர் இவர்.

கல்யாண விநாயகர்: சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ள கைவிளாஞ்சேரியில் உள்ளது. காசி விசுவநாதர் ஆலயம், இந்த ஆலயத்தின் முகப்பில் அருள்பாலிக்கிறார் கல்யாணவிநாயகர். திருமணத் தடைகள் நீங்கி, மங்களங்கள் அருள்பவர் இவர் என்பது கண்கூடு.

நாகாபரண விநாயகர்: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் கீழரண் சாலையில் உள்ளது. பூலோகநாத சுவாமி ஆலயம். இந்த ஆலயத்தின் மேற்கு திருச்சுற்றில் அருள்பாலிக்கிறார் நாகாபரண விநாயகர். இவரை வேண்டி வழிபடுவோர் நாக தோஷம் உள்ளிட்ட சகலதோஷங்களில் இருந்தும் விடுபடுவர் என்பது நம்பிக்கை.

சோலை விநாயகர்: புதுக்கோட்டை- திருச்சி பேருந்து சாலையில் திருச்சியிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள மண்டையூரில் உள்ள பாலதண்டாயுதபாணி ஆலயத்தின் வடக்குத் திருச்சுற்றில் அருள்பாலிக்கிறார் சோலை விநாயகர். இவரை வழிபடுவோர் வாழ்வு பசுமையாகும் என்பது ஐதிகம்.

விஜய விநாயகர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணியிலிருந்து 5 கி.மீ தொலைவில் விளாங்குளம் என்ற ஊரில் உள்ளது அட்சயபுரீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் எதிரே தனி ஆலயத்தில் மூலவராய் அருள் பாலிக்கிறார் விஜய விநாயகர், அர்ஜுனனுக்கு அருளிய கண்ணன் போல பக்தர்களுக்கு வெற்றி கிட்ட அருள்பவர் இவர் என்பதால் இப்பெயர் வந்ததாகச் சொல்கின்றனர்.

காட்டு விநாயகர்: கோவையிலிருந்து மருதமலை செல்லும் பாதையில் உள்ள ஊர் வடவள்ளி. ஒரு காலத்தில் அடர்த்தியான காடாக இருந்த பகுதி இது. கோடங்கிகள் என்ற இனத்தவர் ஊர் விட்டு ஊர் சென்று தொழில் செய்து வந்தவர்கள், இரவு நேரத்தில் இக் காட்டில் இருந்த வேப்ப மரத்தடியில் தங்குவர். மேலும் வழிபோக்கர்களும் அவர்களுடன் தங்குவர். அம் மரத்தடியில் ஒரு விநாயகர் சிலை இருந்தது. காலையில் எழுந்து செல்லும்போது இவ்விநாயகருக்கு தீபமேற்றி, பூக்கள் வைத்து வழிபாடு செய்த பின் புறப்படுவார்கள். இன்று காடுகள் அழிந்து நகரமாகி ஏராளமான வீடுகளும் உருவாகிவிட்டன. இவ்விநாயகருக்கும் அழகிய கோயில் எழும்பிவிட்டது. புதிதாக ஒரு விநாயகரும் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டுவிட்டார். காட்டுவிநாயகர் எனும் திருநாமத்தில் கணபதி இங்கே அருள்பாலித்து வருகிறார். வேப்ப மரத்தடியில் இரட்டை விநாயகர் அருள்பாலிப்பது சிறப்புக்குரியது.

விக்னேஸ்வரை வழிபடும் வெளிநாட்டவர்: இலங்கையில் மிகுந்தலேயுக்கு அருகில் கண்டக செட்டிங்க ஸ்தூபத்தில் விநாயகர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இலங்கை தூணில், ஓர் அழகிய விநாயகரின் திருவுருவம் மாடத்தில் அமர்ந்த நிலையில் நான்கு கைகளுடன் செதுக்கப் பெற்றுள்ளது. கதிர்காமம் முருகன் கோயிலில் விநாயகர் தனிச் சன்னதி பெற்று விளங்குகின்றார்.

அசோக சக்ரவர்த்தியின் புதல்வியாகிய சாருமதி என்பவள் நேபாள நாட்டில் விநாயகருக்கு ஒரு கோயில் கட்டினாள் என்று கூறப்படுகிறது. பவுத்தர்கள் சித்தி நாதா (வெற்றி தருபவர்) என விநாயகரை வணங்கி மகிழ்ந்தனர். புத்தர் பெருமான் ராஜக்கிருகம் என்னுமிடத்தில் தமது மாணவராகிய ஆனந்தர் என்பவருக்கு கணபதி ஹ்ருதயம் என்னும் மந்திரத்தை உபதேசித்ததாக நேபாள நாட்டு ஐதிகம் கூறுகின்றது.

ஆப்கானிஸ்தானத்தில் கார்டெஸ் என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் திருவுருவம், காபூலில் தர்க்காபீர் ரச்சந்நாத் என்னும் கோயிலில் வைத்து அங்குள்ள இந்துக்களால் பூஜிக்கப்பட்டு வருகிறது. அதன் பீடத்திலுள்ள பழைய கல்வெட்டுகளால் அது கி.பி 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. இதன் சிற்ப அமைப்புக் கூறுகள், இது மகத நாட்டில் தோன்றியதென உணர்த்துகின்றன.

சம்பா தேசத்தில் மைகோன் நகரத்து சிவன் கோயிலில் ஓர் அழகிய விநாயகர் படிமம் உள்ளது. அவர் முழங்கால் வரையில் சம்போத் என்னும் ஆடை தரித்து, அதன்மீது கடிசூத்திரம் என்னும் அரைப்பட்டிகை அணிந்துள்ளார்.

திபெத்-மங்கோலியா- ஜாவா இந்தோனேஷியா ஆகிய நாடுககளில் விநாயகர் சிவபெருமானைப் போல திரிசூலம் ஏந்தியவராகவும், கபால மாலை அணிந்தவராகவும் காணப்படுகின்றனர். திபெத்திய கோயில்களில் தலைவாயிலின் முகப்பில் விநாயகர் திருவுருவம் காவல் தெய்வ நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் முன்- உவாங் குங்-ஷ்சீன் முதலிய நகரங்களில் விநாயகர் உருவங்கள் உள்ளன. குங்-ஷ்சீன் உருவம் கி.பி 931 ஆம் ஆண்டிற்குரியதென்று கல்வெட்டுச் சான்றால் அறியப்பெறுகின்றது. இவரது கையில் தாமரைப் பூவும் மற்றொரு கையில் சிந்தாமணி என்னும் அணிகலனும் திகழ்கின்றன.

தாய்லாந்து நாட்டில் பாங்காக்கில் உள்ள இந்துக் கோயிலில் விநாயகர் நாக யக்ஞோபவீதத்துடன் சுகாசன நிலையில் ஒரு கையில் எழுத்தாணியுடனும் மற்றொரு கையில் சுவடியுடனும் காணப்படுகின்றார்.

கம்போடியாவில் கணேசர் ப்ராகேனஸ் என வழங்கப்படுகின்றார். பிரசாத்பாக் என்னுமிடத்தில் கி.பி 10 ஆம் நூற்றாண்டுக் கோயில் ஒன்று உள்ளது. விநாயகருக்காகவே அமைந்துள்ளது. முதலாம் யகோவர்மன் (கி.பி 890-910) நியுக்புவோஸ் என்னுமிடத்தில் சந்தனகிரி கணேசருக்காக ஒரு ஆசிரமம் நிறுவினான். சந்தனகிரி இந்நாளில் சொக்குங்ப்ரே என வழங்குகின்றது.

ஜாவாவில் டையஸ் பீடபூமியில் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் உருவமே ஜாவாவில் கிடைத்துள்ள விநாயகர் படிமங்களுள் மிகப் பழமையானது என்று நம்பப்படுகின்றது.

குகைக்குள் கணேசரின் தரிசனம்: இந்தோனேஷியாவின் பாலியில் உபுத் என்ற இடத்தில் ஒரு குகைக்குள் விநாயகருக்கு ஒரு கோயில் உள்ளது. இந்த இடத்தை கோகஜா என அழைக்கின்றனர். அதாவது யானை குகை எனப் பொருள். 700 வருடங்களுக்கு மேலாக இந்த குகை உள்ளதற்கு ஆதாரம் 1365ல் பிரபல சம்ஸ்கிருத இலக்கிய மாமனிதர், ஓலைச்சுவடிகளில் லவ் குஜா என ஒரு படைப்பை எழுதினார். அதிலேயே கோகுஜா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அருகில் பேட்டானு என ஒரு நதி ஓடுகிறது. 1995ல் இந்த இடம் யூனெஸ்கோ பாரம்பரிய இருப்பிடங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டது. கணேஷ் உள்ள குகையின் வாசலைப் பார்த்தால் பயமாக இருக்கும். ஜாவா மொழி தெய்வீகக் கதைகளில் குழந்தைகளை விழுங்கும் ரங்கடா என்ற பெண் மந்திரவாதி ஒருத்தி உண்டு. குகையின் துவக்கத்தில் உள்ள அமைப்பு அவள் வாயைத் திறந்த நிலையில் இருப்பது போல் உள்ளது என சிலரும், இல்லை இது பூமாதேவியின் உருவம் என வேறு சிலரும் கூறுகின்றனர். இருட்டு நிறைந்த குறுகிய குகைக்குள் நடந்து சென்றால் ஒரு இடத்தில் தான் கணேசர் உள்ளார். இவரைப் பார்க்க பக்தர்களும் உல்லாசப் பயணிகளும் வருகின்றனர். கணேசருடன் இங்கு கருங்கல்லால் ஆன சிவ லிங்கங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மிகச் சிறிய பாரம்பரிய இடம் இது.

கண் திருஷ்டி கணபதி: கண் திருஷ்டி தோஷம் களைவதற்கான பரிகாரங்கள் மனிதர்களின் அன்றாட வாழ்விலேயே கலந்துவிட்டது. கண் திருஷ்டியிலிருந்து விடுபடவே சுப திருஷ்டி கணபதி எனும் மகாசக்தி வடிவை அகத்தியர் தோற்றுவித்தார். இது கணபதியின் 33-ஆவது மூர்த்தமாகும். 51 கண்கள் கொண்டவர் இவர். விஷ்ணு அம்சமாக சங்கு, சக்கரம்; சிவ அம்சமாக மூன்று கண்கள்; சக்தி அம்சமாக சூலம் ஆகியவற்றைக் கொண்டவர். சிங்க வாகனத்துடன், செந்தாமரை மலர்மீது நின்றபடி போர்க்கோலத்துடன் காட்சி தருபவர் இவர். இந்த விநாயகரின் வடிவத்தை வீடு, வியாபாரத்தலங்கள் போன்ற இடங்களில் வடக்கு திசை நோக்கி வைத்து வழிபட்டால் திருஷ்டி தோஷங்கள் அகலும். புதன்கிழமை வழிபடுவது மேலும் சிறப்பு வாய்ந்தது.

காந்தி, நேருவுடன் விநாயகர்: சில சமயங்களில் தேசத் தலைவர்கள் ஆலயங்களுக்கு வருகை தரும்போது, அந்த ஆலயத்து இறைவனின் பெயரோடு தலைவர்களின் பெயர்களும் இணைந்துவிடுகின்றன. சுதந்திர போராட்ட கால கட்டத்தில் தூத்துக்குடி சிவந்தைக் குளப்பகுதிக்கு வந்த மகாத்மா காந்தி, அங்கிருந்த விநாயகர் கோயிலுக்கருகில் உரையாற்றினார். அது முதல் அத்தல விநாயகர் காந்தி விநாயகரானார். மதுரை மேலமாசி வீதியும் வடக்கு வீதியும் சந்திக்கும் இடத்திலுள்ள ஆலமரத்தடி விநாயகரை. தனது மதுரை விஜயத்தின்போது வழிபட்டுச் சென்றார் ஜவஹர்லால் நேரு. அது முதல் இந்த விநாயகர் நேரு ஆலால சுந்தர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

அரசு கெஜட்டில் விநாயகர் வழிபாடு: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி மிளகு பிள்ளையார் கோயிலில், சுவாமியின் உடலில் மிளகு அரைத்து தடவி, அருகிலுள்ள கன்னடியன் கால்வாயில் விழச்செய்தால் மழை பெய்யும் என்ற ஐதீகம் இருக்கிறது. இந்தக் கால்வாய் தாமிரபரணி பாசனத்திற்கு உட்பட்டது. காஞ்சிப்பெரியவர் தன் தெய்வத்தின் குரல் நூலில், ப்ராசீன லேகமாலா என்ற பழைய சிலாசனம், தாமிர சாசனம் முதலானவைகளைத் தொகுத்து மும்பையிலுள்ள நிர்ணயஸாகர் அச்சுக்கூடத்தார் தங்களுடைய காவ்யமாலா என்ற தொகுப்பில் இந்த கால்வாய் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளனர் என சொல்லி உள்ளார். 1916ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசு கெஜட்டின், 367 வது பக்கத்தில் மிளகு பிள்ளையாருக்கு மிளகு அரைத்துப் பூசி மழை வந்த விபரம் மற்றும் வழிபாடு பற்றி சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கோயிலுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து, அரசு சார்பில் பூஜை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். பருவமழை பொய்த்துவிட்ட இந்தக்காலத்தில் இந்த வழிபாடு மிகவும் அவசியம்.

ஒன்று திரட்டிய கணேஷ்: விநாயகர் வழிபாடு மகாராஷ்டிர மாநிலத்தில் மிக பிரசித்தம். விநாயகரின் அவதார நாளை கணேஷ் சதுர்த்தியாக இங்கு கொண்டாடுகின்றனர்.
ஆங்கிலேயர் காலத்தில் மக்களை ஒன்று திரட்டி தேசிய உணர்வை ஊட்ட பாலகங்காதர திலகர் இந்த விழாவைப் பயன்படுத்திக் கொண்டார். இதன் பின் பெரிய விநாயகர் சிலைகளை பலவித வண்ணங்களில் உருவாக்கி வழிபடும் வழக்கம் உண்டானது. வழிபாட்டுக்காக ஒன்று கூடிய மக்களிடம் தெய்வ பக்தியோடு தேச பக்தியும் வளர்ந்தது. அந்நியர் ஆதிக்கத்திலிருந்து நாடு விடுதலை பெற விநாயகரும் துணை செய்திருக்கிறார். இந்ததேசம் ஊழல் அரசியல்வாதிகளிடம்இருந்து மீளவும் அவரே அருள் செய்ய வேண்டும். இதற்குத் தேவை கூட்டுப் பிரார்த்தனை தான்!

35அடி பள்ளத்தில் விநாயகர்: மகாராஷ்டிரா, திருச்சி போன்ற இடங்களில், மலைமீது விநாயகர் இருப்பது போல, சில தலங்களில் பாதாளத்திலும் அருள்புரிகிறார். காளஹஸ்தி காளத்தீஸ்வரர் கோயிலில் 35 அடி பள்ளத்தில் பாதாளவிநாயகர் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். வளைந்து நெளிந்து குறுகலான படிகளில் இறங்கிச் சென்றால் இவரைத் தரிசிக்கலாம். இவர் அருகே நீர் சுரந்து கொண்டே இருக்கும். கோயிலருகே பொன்முகலி ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. இதேபோன்று, சிவத்தலமான விருத்தாசலம் பழமறைநாதர் கோயிலில் 18அடி ஆழத்தில் இவருக்கு சந்நிதி உள்ளது. இவருக்கு ஆழத்து விநாயகர் என்று பெயர். இவருக் கென்று தனி கொடிமரமும், திருவிழாவும் நடத்துவது சிறப்பு.

ஆற்றுவெள்ள விநாயகர்: தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கோபுரம் முன்பு திருப்பணி விநாயகர் சந்நிதி உள்ளது. இக்கோயிலில் ஏதேனும் பணியைத் துவங்கும்முன்பாக, திருப்பணி விநாயகரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இங்குள்ள சிற்றாற்றங்கரையில் ஆற்று வெள்ள விநாயகர் இருக்கிறார். குற்றாலம் அருவியில் வெள்ளம் கொட்டும்போது, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில், இவரைச் சுற்றியிருக்கும் பகுதிகள் சேதமடைந்தாலும், இவர் மட்டும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதில்லை. இதனால் இவருக்கு இப்பெயர். அருகில், காவிரியம்மன் சந்நிதி இருக்கிறது.

உழைக்கும் கைகள்: மதுரை மாவட்டம் பேரையூர் அருகிலுள்ள பூலாம்பட்டி மத்தங்கரையில் உள்ள விநாயகர் கோடரி ஏந்திய நிலையில் உள்ளார். உழைப்பின் அவசியத்தை உணர்த்தும்வகையில் இவர் கோடரி ஏந்தி உள்ளார். ஒரு மரத்தையே கோடரி சுள்ளிகளாக நொறுக்குவது போல், இவர் பக்தர்களின் குறைகளை அடித்து நொறுக்குபவராக உள்ளதால், இந்த ஆயுதம் வழங்கப்பட்டுள்ளது.

நீதிக்குப்பின் பாசம், பிரேக்டவுன் ஆன லாரி: 1963ல், ராமேஸ்வரத்தில் சங்கரமடம் கட்டப்பட்டது. அங்கு ஆதிசங்கரர் மற்றும் அவரது நான்கு சீடர்களின் சிலைகளை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. ஜெய்ப்பூரில் இருந்து சலவைக்கல்லில் செய்யப்பட்ட சிலைகள் லாரியில் ஏற்றப்பட்டு வந்து கொண்டிருந்தன. திண்டிவனத்துக்கும் செங்கல் பட்டுக்கும் இடையிலுள்ள அச்சரப்பாக்கம் வந்த போது, லாரி பிரேக்டவுன் ஆகிவிட்டது. புராணத்தில், முப்புரத்தை எரிக்க சிவன் தேரில் புறப்பட்ட போது, பிள்ளையாரை பூஜிக்காமல் புறப்பட்டார். எச்செயலையும் பிள்ளையாரை வணங்கியே துவங்க வேண்டும் என்று உத்தரவிட்ட சிவனே அதை மீறியதால், தன் தந்தையும் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர், நீதிக்குப்பின்பே பாசம் என்ற அடிப்படையில், அவரது தேரின் அச்சை முறித்தார் விநாயகர். அந்த இடம் அச்சிறுப்பாக்கம் எனப்பட்டு, தற்போது அச்சரப் பாக்கமாக திரிந்துள்ளது. அந்த ஊரில் லாரி நின்றுபோனதற்கான காரணத்தை ஆய்வு செய்தனர். ஜெய்ப்பூரில் லாரி கிளம்பும் போது, விநாயகர் பூஜை செய்யாமல் கிளம்பியது என்ற தகவலின் அடிப்படையில், அச்சரப்பாக்கம் விநாயகருக்கு 108 தேங்காய் உடைத்தனர். அதன்பிறகு லாரி கிளம்பியது. பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நல்லபடியாக நடந்து முடிந்தது.

கள்ளவாரணப் பிள்ளையார்: நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் கள்ளவாரணப் பிள்ளையார் அருள்பாலிக்கிறார். இவரை சமஸ்கிருதத்தில் சோர கணபதி என்பார்கள். பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபின், மகாவிஷ்ணு, விநாயகர் பூஜை செய்யும் முன்பாகவே அதைப் பங்கிட்டுக் கொடுத்தார். இதனால் விநாயகப் பெருமான் அமிர்த குடத்தை எடுத்து இத்தலத்தில் ஒளித்து வைத்தார். எனவே இத்தலத்து விநாயகர் கள்ள வாரண பிள்ளையார் எனப்படுகிறார். அந்த குடம் லிங்கமாக மாறி அமிர்தகடேஸ்வரர் ஆனது. இதனால் தான் ஆயுள்விருத்தி தொடர்பான யாகங்கள், பூஜைகள் இங்கு செய்வது சிறப்பாகும்.

வேண்டுதலை நிறைவேற்று வண்ணம் பூசுகிறோம்!

கர்நாடகத்தில் பீஜப்பூர் அருகிலுள்ள பங்கூர் கிராம மலைப்பகுதியில் 12 அடி உயர விநாயகர் சிலை உள்ளது. இங்குள்ள கிராம மக்கள் செய்து கொள்ளும் வேண்டுதல் வித்தியாசமானது. இங்குள்ள கிராம மக்கள், அப்பனே! விநாயகா! எங்கள் விருப்பத்தை நிறைவேற்று. உன் நிறத்தை மாற்றி வேறு கலர் அடிக்கிறோம், என்று வேண்டிக் கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறப் பெற்றவர்கள் பிள்ளையாருக்கு விருப்பப்பட்ட வண்ணத்தை அடிக்கின்றனர். ஒரேநாளில் இரண்டிலிருந்து நான்குமுறை கூட இவ்விநாயகர் வண்ணம் மாறிவிடுகிறார்.

இவர் தான் நிஜமான பொதுவுடைமைவாதி: சாமர்த்தியமாகப் பேசி ஏமாற்றுவதை அகடவிகடம் என்பர். இதில் கைதேர்ந்தவர் விநாயகர். உலகாளும் உமையவளும், சிவனும் ஊடல் கொண்டு ஒருவருக்கொருவர் கோபம் கொண்டால் குறும்பு செய்து இருவரையும் ஒன்று சேர்ப்பவர் விநாயகர். காகமாக வந்து அகத்தியரின் கமண்டலத்தை தட்டி காவிரி நதியை ஓடச்செய்த பெருமைக்குரியவர். பிரம்மச்சாரி சிறுவனாக வந்து விபீஷணனை ஏமாற்றி ரங்கநாதரை காவிரிக்கரையில் பிரதிஷ்டை செய்தவர். திருக்கோகர்ணத்தில் ராவணனிடம் சாதுர்யமாகப் பேசி சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். இவர் செய்த எல்லா விளையாட்டுக்களும் சமூகநலனுக்காகத் தான். தனி உடைமையாக இருந்ததை அனைவருக்கும் உரியதாக்கி பொதுவுடைமையை உண்மையிலேயே செயல்படுத்தியது விநாயகர் மட்டுமே.

பெற்றவர்களுக்கு பெருமை: அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற அடிப்படையில் சிவபார்வதியை வலம் வந்து வணங்கி மாங்கனியைப் பெற்றவர் விநாயகர். பெற்றோருக்குப் பெருமைசேர்ப்பது போல ஹேரம்பர் (ஐந்து முகம்) கோலத்தில், சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கிறார். இவரது ஐந்து முகங்கள் சிவனின் ஐந்து முகங்களை ஞாபகப்படுத்துகிறது. வாகனம் சிங்கம் அம்பிகைக்கு உரியதாகும். ஆக, சிவசக்தி இணைந்த வடிவம் விநாயகர் என்பது உறுதியாகிறது. நாகப்பட்டினம் நீலாயதாட்சி கோயிலில், செம்பால் உருவாக்கப்பட்ட ஹேரம்ப கணபதி இருக்கிறார். இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட புண்ணியம் உண்டாகும்.

வாழ்வு தரும் வல்லப கணபதி: விநாயகரை வழிபட்டு துவங்கும் செயல்கள் இடையூறு இல்லாமல் வெற்றி உண்டாகும். வழிபடமறந்தால், தடை ஏற்படும். அவரை வணங்காமல் திரிபுர சம்ஹாரத்திற்குப் புறப்பட்ட சிவனின் தேர் அச்சு முறிந்தது. இதை உணர்ந்த சிவன், விநாயகரை தியானித்தார். இவ்வாறு அவரை தியானித்த கோலத்திற்கு வல்லபகணபதி என்று பெயர் ஏற்பட்டது. யானைமுகமும், செங்கதிர் நிறமும், சர்ப்ப ஆபரணம், மகுடம், கேயூரம் முதலிய அணிகலன்களும், மாதுளம்பழம், கதை, கரும்புவில், சக்கரம், சங்கு, பாசம்,நீலோற்பலம், நெற்கதிர், தந்தம் முதலியவற்றை கைகளில் தாங்கியும் இவர் காட்சியளிப்பார். இவரை வழிபட்டால் தடங்கல்கள் விலகி செயல்கள் வெற்றியாகும். திருமணத்தடை, வேலையின்மை, குழந்தை இல்லாமை போன்றவை நீங்கி நற்பலன் உண்டாகும். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சந்நிதி தெருவில் வல்லபகணபதிக்கு கோயில் உள்ளது.  போன்: 99942 93391

விகட சக்கர விநாயகர்: தட்சயாகத்தின் போது, வீரபத்திரர் மீது திருமால் சக்கரத்தை ஏவினார். வீரபத்திரர் அணிந்திருந்த கபால மாலையில் இருந்த கபாலம் அதை விழுங்கி விட்டது. சக்ராயுதத்தை மீட்டு வரும்படி, விஷ்வக்சேனரை திருமால் அனுப்பி வைத்தார். முனிவர் ஒருவரின் அறிவுரைப்படி விஷ்வக்சேனர், பூலோகத்தில் காஞ்சியில் சிவனை வழிபட்டு வீரபத்திரரின் காட்சி பெற்றார். ஆனால், அவர் சக்ராயுதத்தை கபாலத்திடமே கேட்டுப் பெறும்படி கூறினார். இந்நிலையில் விஷ்வக்சேனர் தன் கை,கால்களை கோணலாக்கித் தள்ளாடி நடந்தார். அதைக் கண்டு அனைவரும் சிரிக்க, கபாலமும் சிரித்தது. அப்போது வாயிலிருந்து சக்ராயுதம் நழுவி விழுந்தது. விஷ்வக்சேனர் எடுக்கும் முன், அதை விநாயகர் எடுத்துக் கொண்டு, தனக்காகவும் ஒருமுறை விகடக்கூத்தாடினால் சக்ராயுதத்தை தருவதாகக் கூறினார். அதன்படி, விஷ்வக்சேனரும் கூத்தாடி சக்கரத்தைப் பெற்றார். சக்ராயுதத்தை வழங்கிய இந்த விநாயகர், விகடச் சக்கரவிநாயகர் என்ற பெயருடன் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் அருள்பாலிக்கிறார்.

இவரும் கிராமணி தான்: கிராமத்தில் தலையாரியாக இருப்பவரை அந்தக் காலத்தில் கிராமணி என்பர். கிராமணி என்றால் கிராமத்தலைவர். கிராமணியில் பரம்பரையில் பிறந்தவர்கள் தங்கள் பெயரோடு கிராமணியைச் சேர்த்துக் கொள்வர். இதுவே பிற்காலத்தில் ஜாதிப்பெயராகவும் மாறி விட்டது. விநாயகருக்கும் கிராமணி என்ற பெயர் இருக்கிறது. ராகவ சைதன்யர் எழுதிய மகாகணபதி ஸ்தோத்திரம் நூலில் கண க்ராமணீ என்று குறிப்பிடுகிறார். சிவகணங்களின் தலைவராக இருப்பதால் விநாயகர் இப்பெயரால் குறிப்பிடப்படுகிறார்.

மருமகன் மடியில் மாமன்: கேரளம், கோட்டயம் மள்ளியூர் மகாகணபதி கோயிலில் கணபதியின் மடியில், கண்ணன் அமர்ந்திருக்கிறார். மருமகன்
மடியில் மாமன் அமர்ந்து விளையாடிக் கொண்டிருப்பதாகச் சொல்வர்.

தேன் உறிஞ்சும் விநாயகர்: தஞ்சாவூர் திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயிலிலுள்ள, பிரளயங்காத்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியன்று தேன் அபிஷேகம் செய்யப்படும். அபிஷேகம் செய்யப்படும் தேனை சிலை அப்படியே உறிஞ்சி விடும். மற்ற நாள்களில் இந்த அபிஷேகம் கிடையாது.

பஞ்சவிருட்ச விநாயகர்: மருதமலை முருகன் கோயில் பஞ்சவிருட்சத்தின் கீழ், பஞ்சமுக விநாயகர் உள்ளார். இவரது ஐந்து முகங்கள் ஒரே வரிசையில் உள்ளன, வலம்புரி, இடம்புரி என இரண்டு வகை துதிக்கைகளுடன் இருக்கிறார்.

குனிந்தால் கும்பிடலாம்: திருவாரூர் வன்மீகநாதர் கோயிலில், தாழ்வான பகுதியில் அமர்ந்திருக்கும் விநாயகரை, பக்தர்கள் குனிந்து கும்பிட்டால் தான் முழு உருவத்தையும் வழிபட முடியும். இவரை குனிந்து கும்பிடும் விநாயகர் என அழைக்கிறார்கள்.

உழக்கரிசி பிள்ளையார்: மதுரை முக்குறுணி பிள்ளையார், பிள்ளையார்பட்டி பிள்ளையார் ஆகியோருக்கு பெரிய அளவிலான மோதகம் படைப்பார்கள். திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்திலுள்ள உழக்கரிசி பிள்ளையாருக்கு ஒரு உழக்கு அரிசியில் செய்த சிறிய மோதகம் படைக்கின்றனர்.

குதிரையில் விநாயகர்:  கர்நாடகா மைசூரு வைத்தியநாதர் கோயில் விநாயகர் குதிரை வாகனத்தின் மீது விஜயகணபதி ஒரு போர்வீரனைப் போல வீற்றிருக்கிறார். மகாராஷ்டிராவில் உள்ள மோர்காம் விநாயகர் கோயிலில் மயில் மீது உள்ள விநாயகரைக் காணலாம். சிவகங்கை இடைக்காட்டூர் ஆழிகண்டீஸ்வரர் கோயிலில் விநாயகர் எதிரே யானை இருப்பது விசேஷமான அமைப்பு.

பாம்பு, மூஞ்சூறு மீது நடனம்: திருவாரூரில் மூலாதார கணபதி அருள்பாலிக்கிறார். ஐந்து தலைப் பாம்பு சுருண்டு கிடக்க, அதன் மத்தியிலுள்ள விரிந்த தாமரையின் மேல், நடனம் ஆடும் நிலையில் காட்சி தருகிறார். கோவை அமணேஸ்வரர் கோயிலில், மூஞ்சூறு மீது நடனமிடும் கோலத்தில் அருள்கிறார்.

இவருக்கு மூன்று கண்: பிள்ளையாரின் தந்தையான சிவனுக்குத் தான் மூன்று கண் இருக்கும். சுவாமிமலை முருகன் சந்நிதி நுழைவாயிலில் உள்ள விநாயகருக்கும் முக்கண் உள்ளது. இவரை நேத்திர விநாயகர் என்பர். நேத்திரம் என்றால் கண்.பார்வை பிரச்னை உள்ளவர்கள் இவருக்கு பூஜை செய்தால் நிவாரணம் கிடைக்குமென நம்புகின்றனர்.

கனி வாங்கிய பிள்ளையார்: வேலூர் மாவட்டம் திருவல்லம் வில்வநாதேஸ்வரர் கோயில் விநாயகர் துதிக்கையில் மாங்கனியுடன் வடக்கு நோக்கி உள்ளார். இவரை கனிவாங்கிய பிள்ளையார் என்கின்றனர்.

குட்டி மூஞ்சூறுகள்: சேலம் ஆத்தூர் வாகனப்பிள்ளையார் கோயிலில் இரண்டு குட்டி மூஞ்சூறுகளுடன் ஒரு பெரியமூஞ்சுறு ஆக மூன்று மூஞ்சூறுகள் உள்ளன.

தலை சாய்த்த விநாயகர்: தஞ்சாவூர் திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோயிலில் பிள்ளையார் ஒருபுறமாக தலையைச் சாய்த்து அருள்பாலிக்கிறார். இவரை வேத பிள்ளையார் என்கின்றனர்

அப்படி ஆறு இப்படி ஆறு: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரம் விநாயகர் ஆறுமாதம் வெள்ளை நிறத்திலும், ஆறு மாதம் கறுப்பு நிறத்திலும் மாறி மாறி காட்சியளிப்பது தனிச்சிறப்பு.

நாமம் போட்ட கணபதி: கர்நாடகா உடுப்பி ஆனேகுட்டே விநாயகர் 12 அடி உயரம் உடையவர். ஒரே கல்லில் யானை ரூபத்தில் உள்ளார். திருநீறுக்கு பதிலாக நெற்றியில் நாமம் அணியப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் ஆனைமுகன்: ராஜஸ்தான் மாநிலம் ரண்தம்பூர் கோட்டையில் சுயம்பு வரசித்தி விநாயகர் தனது மனைவி, மகன்கள் என குடும்பத்துடன் உள்ளார்.

இடதுகையில் தந்தம்: விநாயகர் வலதுகையில் தந்தம் இருக்கும். ஆனால், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் முக்குறுணி விநாயகர், வலது கையில் மோதகம், இடது கையில் தந்தம் என மாற்றி வைத்திருப்பது வித்தியாசமான அம்சம்.

ஐந்துகரத்தானுக்கு ஐந்து முகம்: ஐந்து முகங்கள் கொண்ட பிள்ளையார் ஹேரம்ப கணபதி என்று அழைக்கப்படுகிறார். புதுக்கோட்டை ராஜராஜேஸ்வரி கோயிலிலும், சேலம் அருகிலுள்ள கந்தகிரியிலும், திருச்சி திருவானைக்காவலிலும் இவரது தரிசனம் காணலாம். சிவகாசி பத்ரகாளியம்மன், திருவொற்றியூர் தியாகராஜர் கோயில்களில் ஐந்து முகங்களும் வரிசையாக அமைந்த பிள்ளையாரை வழிபடலாம்.

சிங்க விநாயகர்: ஐந்து முகங்கள் கொண்ட விநாயகர் சிங்க வாகனத்தில் அமர்ந்துள்ள திருக்கோலத்தில் திருவொற்றியூர் திருத்தலத்தில் காணலாம்.

மும்மூர்த்தி அம்ச விநாயகர்: சென்னை, வேளச்சேரியில் உள்ளது சிதம்பரம் சுவாமிகள் ஜீவசமாதி ஆலயம். இதன் நுழைவாயிலில் நான்கு திருமுகங்கள் கொண்ட மூன்றடி உயர விநாயகர் காணப்படுகிறார். முன்முகம் யானை முகத்துடன் தும்பிக்கையோடு காணப்படுகிறது. வலப்புறம் ஈசனின் திருமுகமும், இடப்புறம் விஷ்ணுவின் திருமுகமும், பின்புறம் பிரம்மாவின் திருமுகமும் அமைந்துள்ளது. எனவே இவர் மும்மூர்த்தி கணபதி எனப்படுகிறார்.

ஷட்வாலா விநாயகர்: மும்பையில் புகழ்பெற்ற ஷட்வாலா விநாயகர் மிகுந்த வரப்பிரசாதி. இவரது கண்களிலும் நாபியிலும் வைரக்கற்கள் பளபளக்கின்றன. அதனால் மிகுந்த உயிரோட்டத்துடன் காணப்படுகிறார் இவர். துஷ்யந்தன்-சகுந்தலை திருமணம் இவர் முன்னிலையில்தான் நடந்ததாம். சகுந்தலை இந்த விநாயகரை இடைவிடாமல் வழிபட்டதாலேயே பிரிந்த கணவனை மீண்டும் அடைந்தாளாம். எனவே திருமணம் நிறைவேற இளைஞர்களும் இளம்பெண்களும் இவரை வழிபடுகின்றனர். பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும் இவரை பிரார்த்தித்துக் கொள்கின்றனர்.

வியாக்ரசக்தி விநாயகர்: மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் முன் மண்டபத்தில் யானை முகம், இடைவரை பெண் உருவம், இடைக்கு கீழ் புலி உருவத்துடன் எழுந்தருளியுள்ளார் விநாயகர். இவருக்கு வியாக்ரசக்தி விநாயகர் என்று பெயர்.

வியாக்ரபாத விநாயகி: நாகர்கோயில் வடிவீஸ்வரத்தில் உள்ள அழகம்மன் கோயிலில் புலிக்காலுடனும் பெண்ணுருவுடனும் வீணை வாசிக்கும் கோலத்தில் காட்சி தருகிறார். இவரது நாமம் வியாக்ரபாத விநாயகி என்பதாகும்.

போர்க்கோல விநாயகர்: நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் இடுப்புக்குக் கீழ் யாளி உருவத்துடன் ஆயுதங்கள் தாங்கி போர்க்கோலத்தில் விநாயகர் காட்சி தருகிறார்.

எல்லாம் இவரே: பொதுவாக விநாயகருக்கு திருநீறு அணிவிப்பது வழக்கம். திருநகரியிலுள்ள விநாயகருக்கு திருமண் புனைகிறார்கள். திருவரங்கத்திலுள்ள விநாயகருக்கோ திருநீறு, திருமண் ஆகிய இரண்டையுமே ஒருங்கே அணிவிக்கிறார்கள். இது இத்தலத்தில் மட்டுமேயுள்ள சிறப்பு.

ஐராவத விநாயகர்: மதுரையில் ஐராவதம் வழிபட்ட லிங்கமும் தீர்த்தமும் அதன் பெயரால் முறையே ஐராவத லிங்கம், ஐராவத தீர்த்தம் என வழங்கப்படுகின்றன. ஆனையூரணி தீர்த்தத்தில் விநாயகரை ஐராவதம் அமைத்து வழிபட்டதால் ஐராவத விநாயகர் என்றும், விநாயகர் கோயிலுள்ள இடம் ஐராவதநல்லூர் எனவும் அழைக்கப்படுகின்றன.

திருப்பனந்தாளிலும் ஐராவதம், ஐராவத விநாயகர் என்னும் பெயரில் விநாயகரை அமைத்து வழிபட்டதுடன் ஐராவத தீர்த்தத்தையும் அமைத்தது. திருப்பனந்தாளில் இறைவனை இந்திரனின் வாகனமான ஐராவதம் பூஜித்தது போல் அவரது கற்பகமரம், சிந்தாமணி, காமதேனு ஆகியனவும் விநாயகரைப் பூஜித்துப் பேறு பெற்றன. அவற்றின் பெயரால் சிந்தாமணி விநாயகர், தேனு விநாயகர் எனும் பெயர்களைப் பெறுகிறார்.

வந்தவாசிக்கு அருகிலுள்ள தலம் வழுவூர். வழுவை என்றால் யானை. இத்தலத்திலுள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்துள் பெரிய சன்னதியில் ஐராவத விநாயகர் உள்ளார்.

கோபுர கணபதி: கோயில்களின் கோபுர வாயிலில் கணபதிக்குத் தனிச்சன்னதி அமைக்கப்படும். அவரைக் கோபுரக் கணபதி என்று கூறுவர். அவ்வாறு இல்லாதபோது கோபுர கோஷ்டத்தில் இவரை அமைப்பர். இவரை வணங்கிய பிறகே, பக்தர்கள் ஆலய தரிசனத்தைத் தொடங்குவர். சில ஆலயங்களில் கோபுரக் குடைவரை எனப்படும் கோபுரத்தின் உட்புறம் அமைந்த மேடைகளிலும் விநாயகரைக் காணலாம். இவரைக் குடைவரைப் பிள்ளையார் என்பர். ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் கோபுரக் குடைவரையில் கலங்காமல் காத்த விநாயகர் என்ற பெயரில் குடைவரைப் பிள்ளையார் வீற்றிருக்கிறார்.

எதிர்நோக்கும் கணபதி: சில ஆலயங்களில் இறைவன் கிழக்கு நோக்கியிருக்க ராஜ கோபுரம் அல்லது தலைவாசல் தெற்கு நோக்கி இருக்கும். இத்தகைய கோயில்களில் கோயிலுக்குள் நுழைந்ததும் வழிபடத்தக்க வகையில் உள்மதில் ஓரமாக வாயிலை நோக்கியவாறு ஒரு கணபதியைச் சிறிய சன்னதியில் எழுந்தருள வைத்துள்ளனர். இவரை எதிர்கொள் கணபதி என்பர். மேற்கு நோக்கிய திருமயிலை கபாலீசுவரர் ஆலயத்தில் கிழக்கு வாயிலுக்கு நேராகவுள்ள நர்த்தன கணபதி, திருமழிசை ஒத்தாண்டேசுவரர் ஆலயத்தின் தேவராஜகணபதி, திருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் ஆலயத்தின் முல்லைவன கணபதி முதலான கணபதியர் எதிர்கொள் கணபதியராக விளங்குகின்றனர்.

கொடிமர கணபதி : கோயிலில் நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. கொடிமரத்திற்கு முன்பாகவோ, அவற்றின் பீடத்தின் அடியிலோ சிறிய மாடத்துள் இருப்பவரைக் கொடிமரக் கணபதி என்றும், கம்பத்தடி கணபதி என்றும் கூறுவர். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் கொடிமரக் கணபதியாகப் படித்துறை விநாயகர் அமைந்துள்ளார். இந்த ஆலயம் செப்பு ஓடு வேய்ந்து மூன்று கலசங்களுடன் அழகிய சபையாக உள்ளது. தனிச் சன்னதியாக அமைக்க முடியாதபோது பலிபீடத்தின் கிழக்கு அடிப்பட்டைப் பகுதியில் சிறிய மாடம் அமைத்து அங்கு விநாயகரை அமைப்பர். இப்படிச் சிறிய மாடத்துள் இருந்தாலும் பெரும் புகழ் பெற்ற விநாயகரைப் பல இடங்களில் காணலாம். திருவலஞ்சுழியில் மூலஸ்தானத்தில் கடல் நுரையால் ஆன வடிவில் விநாயகர் ஸ்வேத (வெள்ளை) விநாயகர் என்ற பெயரில் விளங்குகிறார். பலிபீடத்தில் அமைக்கப்பட்டுள்ள கணபதிக்குச் சிறப்பளித்து முகமண்டபம், மகாமண்டபம் முதலியவற்றை அமைத்துத் தனி ஆலயமாக ஆக்கியுள்ளனர். இவருக்குக் கொடியேற்றி விழா நடத்துகின்றனர். பலிபீடத்திற்கு முன்பாக அமையும் கணபதிக்குச் சங்கல்ப கணபதி என்று பெயர். முன்னாளில் இவருக்கு முன்பாகச் சங்கல்பம் செய்து கொண்டு, அன்றைய பஞ்சாங்கத்தைப் படித்த பின்னரே ஆலயத்தில் பூசைகளை மேற்கொள்வர்.

கன்னிமூலை கணபதி: பிராகாரங்களில் கன்னிமூலை எனப்படும் தென்மேற்குமுனையில் விநாயகர் சன்னதி அமைப்பது வழக்கம். அனைத்துப் பிரகாரங்களிலும் கன்னிமூலையில் கணபதி ஆலயம் அமைகிறது என்றாலும் முதல் பிரகாரத்தில் அமையும் கன்னிமூலை கணபதியே பிரதான கணபதியாகப் போற்றப்படுகிறார். இவரைத் தல விநாயகர் என்று கொண்டாடுகின்றனர். சபரிமலையில் கன்னிமூலை கணபதி மிகவும் விசேஷமானவர்.

துவார கணபதி: ஆலயத்தின் ஒவ்வொரு வாயிலிலும் வலப்புறம் விநாயகரும் இடப்புறம் முருகனும் அமைக்கப்படுகின்றனர். இவர்களை முறையே துவார கணபதி, துவார சுப்பிரமணியர் என்று அழைப்பர். தத்துவவாதிகள் இவர்களை உலக உற்பத்திக்கு ஆதாரமான பிந்து நாதங்களின் வடிவம் என்கின்றனர். மேலும், விநாயகர் கல்யாண கணபதி, பந்தக்கால் கணபதி, நந்தவனப் பிள்ளையார், வசந்த மண்டப கணபதி, தேரடிமண்டப கணபதி என்று பல்வேறு பெயர்களில் ஆலயத்தில் பல இடங்களில் வீற்றிருந்து அருள்புரிகிறார்.

விமான கணபதி: ஸ்ரீவிமானத்தில் அமையும் பஞ்ச கோட்டங்களில் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள கோட்டத்தில் நர்த்தன விநாயகரைக் காணலாம். இவர் கோஷ்ட கணபதி. சில விமானங்களில் மேற்பகுதியில் விநாயகரை அமைத்துள்ளனர். மயிலாடுதுறை மயூரநாத சுவாமி ஆலயத்தில் ஸ்ரீவிமானத்தின் அருகில் சிறிய சன்னிதியில் ஸ்ரீவிமான கணபதி எழுந்தருளியுள்ளார். அகத்தியர் மணலைத் திரட்டி இவரது திருமேனியை அமைத்து வழிபட்டார் என்று தலபுராணம் கூறுகிறது.

பிரளயம் காத்த விநாயகர்: திருப்புறம்பியம் காசிநாதர் ஆலயத்தில் பிரளயம் காத்த விநாயகர் எழுந்தருளியுள்ளார். விநாயகர் சிவபெருமானைப் பூசித்த தலங்களில் அவர் வடக்கு நோக்கியவாறு எழுந்தருளியுள்ளார். திருவிடைமருதூர், பிள்ளையார்பட்டி முதலிய தலங்களில் அவர் வடக்கு நோக்கி அமர்ந்து சிவ பூசை செய்து கொண்டிருப்பவராக உள்ளார்.

விநாயகரும் அனுமனும்: விநாயகர் முழு முதற் கடவுள்; அனுமான் தொண்டர். முதலில் விநாயகர் திருவிழாவுடன் தொடங்கி, ஆஞ்சநேயர் விழாவுடன் நிறைவு செய்வது ஒரு மரபு. ஆதலால் கணபதியை ஆதிமூர்த்தியாகவும் அனுமனை அந்தமூர்த்தியாகவும் கொண்டனர். இருவரும் சரிபாதியாக இணைந்த கோலத்தில் உருவான மூர்த்தமே ஆத்யந்தமூர்த்தம். ஒருபுறம் யானை முகமும், மறுபுறம் அனுமன் முகமும் கொண்டு காட்சியளிக்கிறார். அனுமன், கணபதி இருவரும் விலங்கு முகம் உடையவர்கள். இருவரும் பிரம்மசாரிகள். பிள்ளையார் சுழியுடன் எழுதத் தொடங்குகிறோம். இலக்கணப் புலமை பெற்ற அனுமார், நல்ல பேச்சாற்றலை அருளுபவர். இருவரும் உடல் நலத்தை அருளுபவர்கள். கணபதியை வணங்கினால் மேனி நுடங்காது என்பது அவ்வையார் வாக்கு. அனுமனைப் பணிந்தால் நோயில்லாமல் வாழலாம். இருவரும் எளிய வழிபாடுகளால் மகிழ்பவர்கள். விநாயகர், இடையூறுகளை நீக்கிக் காப்பவர். அனுமன் செயல்களை வெற்றியுடன் நிறைவேற்றிக் கொடுப்பவர்.

வெல்லப் பிள்ளையார்: மஞ்சள் பிள்ளையார், மண் பிள்ளையாரைப் போன்று வெல்லப் பிள்ளையாரும் அருள்பாலிக்கிறார். வெல்லத்தைப் பிடித்து வைத்து அதில் பிள்ளையாரை நிலைப்படுத்தி வணங்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. அச்சு வெல்லக்கட்டிகளையும் பிள்ளையாராக வைத்து வழிபடுவர். விநாயகர் கருப்பஞ்சாற்றுக் கடல் நடுவேயுள்ள ஆனந்த பவனத்தில் வசித்து வருகிறார். கருப்பஞ் சாறு திரண்டெழுந்த கட்டியாக அவர் விளங்குகிறார். அதைக் குறிப்பதாக ஆனந்த கணபதியாக வெல்லப்பிள்ளையாரை வழிபடுகின்றனர் என்பர். வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி அவருக்கே நிவேதனம் செய்தது போல என்பர். ஒருவன் வெல்லத்தால் பிள்ளையாரைச் செய்து வழிப்பட்டான். பூசையின் முடிவில் நிவேதனம் செய்ய எதுவும் இல்லாததால் பிள்ளையாராகப் பிடித்த வெல்லத்தைச் சிறிது கிள்ளி நிவேதனம் செய்தானாம். ஒருவனுக்குரிய பொருளை எடுத்து அவனுக்கே கொடுத்து அவனை மகிழ்வடையச் செய்வதைக் குறிக்க இந்தப் பழமொழி வழங்குகிறது. திருவாவடுதுறை ஆதீனத்தில் 20-வது குரு மகா சன்னிதானமாக வீற்றிருந்தவர் மேலகரம் சுப்பிரமணிய தேசிகர். இவரது ஆட்சிக் காலத்தில் ஒரு சிவராத்திரிக்கு முன்பாக திருமடத்திற்கு அவரைக் காண வந்த குடியானவர் ஒருவர் வெல்லத்தாலான பிள்ளையாரைக் கொண்டு வந்தார். அந்த வடிவம் மிக அழகாக அமைந்திருந்தது. குரு மகா சன்னிதானம் விநாயகரைக் கண்டு மகிழ்ந்தார். பிறகு தம்மைக் காண வந்த தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதஐயருக்கு அதை அளித்தார். அந்த ஆண்டில் சிவராத்திரியன்று ஐயரவர்கள் அந்த வெல்லப் பிள்ளையாருக்குப் பூஜை செய்து மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியை ஐயரவர்கள் என் சரித்திரம் என்ற நூலில் குறித்துள்ளார். பூஜைக்குப் பின் வெல்லப்பிள்ளையார் உருவைப் பாயசத்துள் இடுவர். அவர் அதில் கரைந்து நம்முள் நிறைந்து மகிழ்ச்சியைத் தருவார்.

கூக்குரல் விநாயகர்: மதுரை கோச்சடை அருகேயுள்ள விநாயகருக்கு கூக்குரல் விநாயகர் என்ற திருநாமம் உண்டு. மின் விளக்குகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில், மதுரை மாநகருக்கு, அதன் சுற்றுப் புறங்களிலுள்ள விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்வதற்காகச் செல்லும்போது, அவ்விவசாயிகளை கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றிட கூக்குரல் எழுப்புவாராம். இதனாலேயே, இவர் கூக்குரல் விநாயகர் ஆனார். இப்பகுதி வாழ் மக்கள், வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளும் சமயம், கூக்குரல் விநாயகர் ஆலயம் வந்து, தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காப்பாற்ற வேண்டியும், தங்களது உடமைகளுக்கும், உயிருக்கும் எந்த வித பங்கமும் வராது, தங்களது பயணம் சிறக்க வேண்டியும் இன்றும் வழிபாடு நடத்திச் செல்கின்றனர்.

பஞ்சமுக கணபதி: மகா கணபதி, சித்தி கணபதி, சக்தி கணபதி, வித்யா கணபதி, மோட்ச கணபதி  என்ற ஐந்து மூர்த்தங்களைக் கொண்ட விநாயகப் பெருமானின் திருவுருவமே பஞ்சமுக கணபதி. சிம்ம வாகனத்திற்கு அதிபதியான பஞ்சமுக விநாயகரை திருவானைக் காவல், புதுக்கோட்டை (ராஜராஜேஸ்வரி கோயில்), கந்தகிரி, சிவகாசி (பத்ரகாளியம்மன் கோயில்), சென்னை திருவொற்றியூர் தியாகராஜர் போன்ற தலங்களில் தரிசிக்கலாம்.

 
மேலும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு! »
temple

விநாயகர் சதுர்த்தியன்று பூஜை செய்ய நல்ல நேரம் காலை 9 மணி முதல் 11 மணி வரை.

கணபதியின் ... மேலும்

 
temple

கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து ... மேலும்

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.