Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » அபிராமி பட்டர்
அபிராமி பட்டர்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 செப்
2012
04:09

பொன்னிநதி என்னும் காவிரி வளம் சேர்க்கும் தஞ்சைத் தரணியில் 300 ஆண்டுகளுக்கு முன் பிறந்த அருளாளர் அபிராமி பட்டர். காலனைச் சம்ஹாரம் செய்த சிவபெருமான் அருள்புரியும் திருக்கடையூர் என்னும் திருத்தலத்தில் இவர் அவதரித்தார். இசைத்துறையிலும் பாடல் புனைவதிலும் வல்லவராக இருந்தார். அம்பிகையை வழிபடும் சாக்த நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். ஒளி வடிவில் அம்பிகையைத் தரிசித்து பேரின்பம் கண்டார். ஆனால், இவரின் தெய்வீகநிலையை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பித்தன் என்று வசைபாடினர். அவர்களின் ஏச்சையும் பேச்சையும் அபிராமி பட்டர் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. அக்காலத்தில் தஞ்சையை தலைநகராகக் கொண்டு சரபோஜி மன்னர் ஆட்சி செய்து வந்தார். அம்மன்னர் மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்தவர். இறையுணர்வு, மத உணர்வில் இவருக்கு அதிக ஈடுபாடு உண்டு.  ஒரு தை அமாவாசை நாளில் சரபோஜி மன்னர் திருக்கடையூர் கோயிலுக்குத் தரிசனம் செய்ய வந்திருந்தார். கோயிலில் அபிராமி பட்டர் அம்பிகையின் முன்னர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.

மன்னரின் வருகையைக் கூட கவனிக்காமல் பட்டர் இருப்பதைக் கண்ட மன்னர் வியப்பில் ஆழ்ந்தார். ஆனால், சுற்றியிருந்தவர்கள் மன்னரிடம், மன்னா! தங்களுக்கு தர வேண்டிய மரியாதையை வழங்காமல் கண்மூடி இருக்கிறார் பட்டர். எந்நேரமும் இப்படித்தான் இருப்பார். இவர் ஒரு பித்தன், என்று பட்டரைப் பற்றி புகார் கூறினார் ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை. இருந்தாலும், பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய மன்னர், பட்டரே! இன்று என்ன திதி? என்று கேட்டார். அப்போது கண் திறந்த பட்டர், அபிராமி அம்பிகையை ஏறிட்டுப் பார்த்தார். அவளது முகம் பிரகாசித்தது. அந்த அருள் முகத்தில் லயித்தவராக, இன்று பவுர்ணமி என்றார். ஏதோ நினைவில் அப்படி சொல்கிறார் என நினைத்த மன்னர், இதே கேள்வியை மீண்டும் கேட்டார். அப்போதும் அதே பதில் வந்தது. பின்னர், சுதாரித்து பார்த்த போது மன்னர் கேள்வி கேட்டதும், அதற்கு சரியான பதில் சொல்லாததும் தெரியவந்தது. தன் வாக்கு பொய்த்துவிட்டதே என்று கதறி  அழுதார். அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று அரிகண்டம் பாடினார். அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டினார். விறகை அடுக்கி தீமூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டினார். அதில் ஏறி அமர்ந்து கொண்டார். உதிக்கின்ற செங்கதிர் என்று பாடத் தொடங்கினார்.

ஒவ்வொரு பாடல் முடிந்ததும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார். பட்டர் பல பாடல்கள் பாடியும் அம்பிகையின் அருள் கிட்டவில்லை.  அம்மா! உன் விழிக்கே அருள் பார்வையுண்டு. பழிபாவம் கொண்டு உழலும்  மாந்தருடன் இனி எனக்கு என்ன தொடர்புண்டு? என்ற பொருள்படும் வகையில்,விழிக்கே அருளுண்டு அபிராமிவல்லிக்கே என்ற பாடலைப் பாடி முடித்ததும், அன்னை அபிராமி அவருக்கு அருட்காட்சி கொடுத்தாள். தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வானவீதியில் தவழ விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்றுகூடினாற் போல் ஒளியைப் பொழிந்தது.  அவள் பட்டரிடம், நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய  சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு, என்றாள்.  அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு, தம் அனுபூதிநிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு  செய்தார். அபிராமிப்பட்டரின் உறுதியான பக்தி கண்டு சரபோஜி மன்னரும் அகமகிழ்ந்தார். மன்னரிடம் பட்டரைப் பற்றி பித்தன் என்றும் பேயன் என்றும் கூறியவர்கள் எல்லாம் பட்டரிடம் மன்னிப்பு கேட்டனர். மன்னரும் மனம் மகிழ்ந்து பட்டருக்கு  ஏராளமானமானியம்  அளித்தார். அபிராமி அந்தாதி ஒரு அற்புதமான தெய்வீக துதிநூலாக திகழ்கிறது. இந்நூலில் யாவரும் வணங்கும் தெய்வமே! என்னைப் பெற்ற தாயே! வேதமாகவும், உபநிடதங்களாகவும் திகழ்பவளே! அருட்செல்வத்தை அள்ளித்தருபவளே! தீவினையாகிய நரகத்தில்விழாதபடி அடியவர்களைக் காப்பவளே! அருள்நிறைந்த திருவடிகளால் அடைக்கலம் தருபவளே! மனிதர்கள்,தேவர்கள், முனிவர்கள் வணங்கும் பெருமை பெற்றவளே! உயிர்களின் ஆதாரமே!வஞ்சிக்கொடி போன்றவளே! மனோன்மணித்தாயே! என்று பல விதமாகப் போற்றியுள்ளார்.  அபிராமி அந்தாதியை பவுர்ணமி, வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்து வருபவர்களின் எண்ணங்கள் யாவும் நிறைவேறும் என்பது சக்தி உபாசகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் மாயவரம் அருகிலுள்ள திருக்கடையூர் என்ற புண்ணிய திருத்தலத்தில், அமிர்தலிங்க அய்யருக்குத் திருமகனாய் வந்துதித்தார் அபிராமி பட்டர் என்னும் சுப்ரமணியன். சிறு வயது முதலே அன்னை அபிராமியிடம், அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். அன்னையைத் தியானித்து யோகசித்தி அடைந்தார். கோயிலுக்கு வரும் அனைத்து பெண்களையுமே அபிராமியின் அம்சமாகவே எண்ணி வழிபடுவார். அர்ச்சனைக்காக கைகளில் கொண்டுவரும் மலர்களை அந்தப் பெண்கள் மேல் தூவி மகிழ்வார். அவரது ஞானக் கண்களுக்கு அந்தப் பெண்கள் அபிராமி அம்சமாகவே தோன்றியதில் வியப்பொன்றுமில்லை. ஆனால் மக்களோ,பித்தன் என்றே இவரைக் கூறி வந்தனர். இந்தப் பித்தனின் புகழை ஊரறிய, உலகறியச் செய்ய திருவுள்ளம் கொண்டாள் அன்னை அபிராமி!

அன்று தை அமாவாசை. அன்று காவிரியில் நீராடி, அமிர்தகடேசுவரரையும் அபிராமி அன்னையையும் தரிசிக்க வந்த பக்தர்களில், தஞ்தையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்துவந்த மராட்டிய மன்னர் சரபோஜியும் அடக்கம். புறநினைவு சற்றுமின்றி, தன்னுள்ளே அன்னையைக் கண்டு பரவச நிலையில் அமர்ந்திருந்த பட்டரைப் பார்த்து, அருகிலிருந்தவர் பக்தர் என்றனர்; பலர் பித்தர் என்று தூற்றினர். உண்மை அறியவேண்டி அரசர் பட்டரை நெருங்கி அவரிடம், இன்று என்ன சதி? என்று கேட்டார். கண் மூடிய நிலையில், கோடிசூர்யப் பிரகாசமாய் அன்னையைத் தன் மணக்கண்ணில் கண்டுகளித்திருந்த பட்டர் சற்றும் தாமதியாது, பௌர்ணமி என்றார். அவரா சொன்னார்? சொல்ல வைத்தவள் அவளல்லவா? அமாவாசை நாளை ஒளிவீசும் பௌர்ணமி நாள் என்று தன்னைக் கும்பிடும் அடியவனை அவள் சொல்லவைக்க என்ன காரணம்?

பூரணியின் திருவிளையாடலைப் பூரணமாகத் தெரிந்துகொள்வதற்கு முன்னால், நளாயினி எனும் உத்தம பத்தினியின் வரலாறையும் சற்று காண்போமே!

நளாயினி: மகாபாரதம் என்னும் இனிய இதிகாசத்தின் ஒரு கிளைக்கதைதான் நளாயினி வரலாறு. கணவனை கடவுளாகப் பார்க்கும் கற்புக்கரசி நளாயினி, மவுத்கல்யர் என்னும் முனிவரை மணந்து இல்லறம் கண்ட இனிய மகள். நான்கு வேதங்களை நன்கு கற்றறிந்திருந்தாலும் முன் கோபத்தை வெல்ல முடியாதவராயிருந்தார் மவுத்கல்யர். விதி வசத்தால் புத்தி பேதலிக்க, தன் மனைவியின் கற்பைச் சோதிக்க வேண்டி, தன் தவவலிமையைப் பயன்படுத்தி வயோதிகத் தோற்றத்தையும் குஷ்ட ரோகத்தையும் பெற்றார்.

ஆனால், பத்தரை மாற்றுத் தங்கமான நளாயினி சற்றும் முகம் சுழிக்காமல், அருவெறப்பு சிறிதுமின்றி, கணவனுக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளை எந்தக் குறையும் வைக்காமல் செவ்வனே செய்து வந்தாள்.

தொழுநோயின் தீவிரத்தால் முகம் விகாரமடைந்து, சதையெல்லாம் தோய்ந்துபோய், எலும்புகளே மீதமிருந்த அந்த அவல நிலையிலும் மவுத்கல்யரின் மனம் தாசியை நாடியது. மனைவியை அழைத்து தன்னை தாசி வீட்டுக்கு அழைத்துப்போகச் சொன்னார். வெறும் எலும்புகள் மட்டுமே கூட்டணி அமைத்து உயிரைச் சுமந்து நிற்கும் கணவனின் உடலை ஒரு கூடையிலிட்டாள் நளாயினி. காசில்லாமல் போகமுடியுமா? கழுத்தில் அணிந்திருந்த நகையைக் கழட்டிக் கொடுத்தாள் அந்தக் கள்ளமில்லா கற்பினுக்கு அணியானவள். காசுக்கு உடலை விற்கும் கணிகையின் வீட்டுக்கு, கணவனைச் சுமந்து சென்றாள்.

வேதனைகளும் சோதனைகளும் இன்றி சாதனைகள் கைகூடுமா? பொறுமையின் திலகமாய் திகழ்ந்த நளாயினிக்குச் சோதனை மாண்டவ்யர் என்ற முனிவர் வடிவத்தில் வந்ததென்றால், முப்பொழுதும் முக்கண்ணியைத் தொழும் பட்டருக்கு வேந்தன் ரூபத்தில் வந்தது.

பால்நிலவாய் பராசக்தி உள்ளத்தில் பிரகாசிக்கும்போது, பக்தனுக்கு எல்லா நாளுமே பழுதில்லா முழுநிலவு நாள்தானே! சோதிப்பதற்காக சரபோஜி மன்னர் கேட்ட அன்றைய திதி பற்றிய கேள்விக்கு, தவறான தகவலை மெய்மறந்த நிலையில் கூறி விடுகிறான் உன்னத பக்தன். அப்படியென்றால் இன்று இரவு நிலவு வருமா? மன்னர் வினவ, நிச்சயம் வரும்- கண்மூடிய மோன நிலையில் பக்தனின் விடை. வராவிட்டால் உனக்கு மரண தண்டனை. இது அரசகட்டளை என்று கூறி மன்னர் சென்று விடுகிறார். மெல்ல மெல்ல கண் விழித்து தன்னிலை அடைந்த பட்டர், நடந்ததை அறிந்து சூழ்நிலையில் தீவிரத்தைப் புரிந்து கொண்டு அன்னையிடம் ஓடினார். தாயே! உன்னையே எண்ணி எண்ணி பித்தாகிப் போன உன் மகனுக்கு நீ தரும் பரிசு இதுதானா? பிள்ளையைக் காக்க வேண்டியது தாயின் கடமை. இன்றிரவு வானில் முழுநிலவு வர வேண்டும். வராவிட்டால் என் உயிர் பிரியும் என்று கூறி, கோயில் திருச்சுற்றில் குழிவெட்டி நெருப்பு மூட்டினார். மேல் விட்டத்திலிருந்து நூறு ஆரங்கள் கொண்ட உறியைத் தொங்கவிட்டு, அதில் ஏறி அமர்ந்தார். அன்னையைத் தியானித்து அந்தாதி பாடத் தொடங்கினார். 

அபிராமி அந்தாதி மொத்தம் நூறு பாடல்கள். ஒவ்வொரு பாடல் முடிந்ததும் ஒவ்வொரு கயிறாக அறுத்துக்கொண்டே வந்தார். காலை போனது; நண்பகல் சென்றது; மாலையும் வந்தது... பொழுது சாய்ந்தது; பட்டரின் நம்பிக்கை சாயவில்லை! அமாவாசை வானம் இருண்டு கிடந்தது. ஆனால், அன்னையின் ஆசியால் நிலவு நிச்சயம் வரும் என்று பிள்ளை காத்து நின்றது. அந்தாதியின் எழுபத்து ஒன்பதாவது பாடல், விழிக்கே அருளுண்டு என்பதை பட்டர் பாடும்போது, அந்த அதிசயம் நிகழ்ந்தே விட்டது. ஆம்! தனயன் படும் துயரைத் தாய் பொறுப்பாளோ? படர் தரும் இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டும் அந்தக் கருணாகடாட்சி, தன் திருக்காதின் தாடங்கம் ஒன்றை எடுத்து வானில் எறிய... அதிசயம்! ஆயிரம் கோடி நிலவுகளின் சங்கமமாய் வானிலே ஒளிவெள்ளம். மக்களின் ஆரவாரம். மன்னரின் புகழாரம். மீதி இருபத்தொரு பாடலையும் பாடி அந்தாதியைப் பூர்த்தி செய்து அபிராமிபட்டர் என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார் திருக்கடையூர் பக்தர் சுப்பிரமணியர்.

இருண்ட வானத்தில் நிலவெழச் செய்தது பட்டரின் பக்தியென்றால், ஒளிரவேண்டிய காலைப் பொழுதை இருள்மயமாக்கியது நளாயினி என்ற பதிவிரதையின் சக்தி.

கணவனின் ஆசையை நிறைவேற்றிய திருப்தி நெஞ்சத்தை நிறைந்திருந்தாலும், உடல் சோர்வுற்றதால் தளர்ந்த நடையுடன், தலையில் கணவனின் பாரம் கனக்க, கூடையைச் சுமந்து வந்து கொண்டிருந்தாள் நளாயினி. அவள் தலைமேலிருந்த கூடை அரசனின் ஆணையால் கழுவேற்றப் பட்ட மாண்டவ்யர் என்ற முனிவரது காலில் அப்போது இடித்தது.

மாண்டவ்யர் சிறந்த தவசீலர். எப்போதும் யோக நிலையிலேயே இருப்பார். ஒருசமயம் திருடர்கள் சிலர் இவர் ஆசிரமத்தில் ஒளிந்து கொள்ள, திருடர்களைக் கண்டு பிடித்து கைது செய்த காவலர்கள் இந்த முனிவரையும் கூட்டுக் களவாணி என்று நினைத்து பிடித்துச் சென்று அரசன் முன் நிறுத்துகின்றனர். அந்தத் தேரா மன்னனும் ஆராயாமல், அனைவரையும் கழுவேற்றச் சொல்கிறான். அப்படி கழுமரத்தில் ஆணியடித்து தொங்கவிடப்பட்ட மாண்டவ்யரின் காலில்தான் கூடை இடித்தது.

வலி பொறுக்காமல் மாண்டவ்யர் சட்டென்று சாபம் அளித்தார்: நாளை சூரியன் உதிக்கும் வேளையில் நீ விதவையாகக் கடவாய் என்ற சாபம் ஈட்டியாய் பாய்ந்தது நளாயினி நெஞ்சில்! துடித்தாள்; துவண்டாள். தன் தவறை மன்னிக்கும்படி முனிவரிடம் மன்றாடினாள். ஆனால், முனிவர் மனம் இரங்கவில்லை. துக்கம் நெஞ்சையடைக்க கலங்கி நின்றாள்.  நிலைமையின் விபரீதம், ஆவேசமாய் வெடித்தது. வான்நோக்கி நிமிர்ந்தாள். பொங்கியெழுந்து பேசலுற்றாள்:

இந்திராதி தேவர்களே! நான் பதிவிரதை என்பதும், என் கணவருக்குச் செய்த பணிவிடைகளில் குறையேதும் இல்லை என்பதும் மெய்யானால், நாளை முதல் சூரியன் உதிக்காமல் போகட்டும். மறுநாள் காலை வந்தது; கதிரவன் வரவில்லை. எங்கும் இருள். இருண்டது பூலோகம். தேவரோடு அனைவரும் மாண்டவ்யரிடம் கெஞ்சிக்கூத்தாடி சாபத்தைத் திரும்பப்பெற செய்த பின், ஆயிரம் கரங்கள் நீட்டி அகிலத்தை அணைக்க வந்தான் ஆதவன். நோய் நீங்கி இளமை பெற்ற மவுத்கல்யர், மனைவியோடு பல்லாண்டு இன்பமாக வாழ்ந்திருந்தார்.

ஆலம் உண்ட நீலகண்டனை ஆபத்திலிருந்து காத்தது அன்னை உமையவள் தாடங்கம் என்பார் ஆதிசங்கரர் (சௌந்தர்யஹரி ஸ்லோகம் 28). அத்தகைய மகிமை வாய்ந்த தாடங்கத்தின் உதவியோடு காரிருளைப் பேரொளியாய் மாற்றிய அபிராமிபட்டர் புகழும், ஓடும் பொழுதை நில்! என்று சொன்ன கற்பரசி நளாயினி புகழும் காலங்காலமாய் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar