Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுபாணாற்றுப்படை- வரலாறு
முதல் பக்கம் » சிறுபாணாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2012
03:09

வேனிற்காலம்

மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை
யணிமுலைத் துயல்வரூஉ மாரம் போலச்
செல்புன லுழந்த சேய்வரற் கான்யாற்றுக்
கொல்கரை நறும்பொழிற் குயில்குடைந் துதிர்த்த
புதுப்பூஞ் செம்மல் சூடிப் புடைநெறித்துக்  5

கதுப்புவிரித் தன்ன காழக நுணங்கற
லயிலுருப் பனைய வாகி யைதுநடந்து
வெயிலுருப் புற்ற வெம்பரல் கிழிப்ப
வேனி னின்ற வெம்பத வழிநாட்
காலைஞா யிற்றுக் கதிர்கடா வுறுப்பப்  10

பாலை நின்ற பாலை நெடுவழிச்
சுரன்முதன் மராஅத்த வரிநிழ லசைஇ  
யைதுவீ ழிகுபெய லழகுகொண் டருளி
நெய்கனிந் திருளிய கதுப்பிற் கதுப்பென
மணிவயின் கலாபம் பரப்பிப் பலவுடன்  15

மயின்மயிற் குளிக்குஞ் சாயற் சாஅ
யுயங்குநாய் நாவி னல்லெழி லசைஇ
வயங்கிழை யுலறிய அடியி னடிதொடர்ந்
தீர்ந்துநிலந் தோயு மிரும்பிடித் தடக்கையிற்
சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென  20

மால்வரை யொழுகிய வாழை வாழைப்
பூவெனப் பொலிந்த ஓதி ஓதி
நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிக்
களிச்சுரும் பரற்றுஞ் சுணங்கிற் சுணங்குபிதிர்ந்
தியாணர்க் கோங்கி னவிர்முகை யெள்ளிப்  25

பூணகத் தொடுங்கிய வெம்முலை முலையென
வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கி
னின்சே றிகுதரு மெயிற்றி னெயிறெனக்
குல்லையம் புறவிற் குவிமுகை யவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின் மெல்லியல்  30

மடமா னோக்கின் வாணுதல் விறலியர்
நடைமெலிந் தசைஇய நன்மென் சீறடி
கல்லா விளையர் மெல்லத் தைவரப்
பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பி
னின்குரற் சீறியா ழிடவயிற் றழீஇ  35

நைவளம் பழுநிய நயந்தெரி பாலை
கைவல் பாண்மகன் கடனறிந் தியக்க
வியங்கா வையத்து வள்ளியோர் நசைஇத்
துனிகூ ரெவ்வமொடு துயராற்றுப் படுப்ப
முனிவிகந் திருந்த முதுவா யிரவல!  40

கொழுமீன் குறைய வொதுங்கி வள்ளிதழ்க்
கழுநீர் மேய்ந்த கயவா யெருமை
பைங்கறி நிவந்த பலவி னீழல்
மஞ்சண் மெல்லிலை மயிர்ப்புறந் தைவர
விளையா விளங்க ணாற மெல்குபு பெயராக்  45

குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளுங்
குடபுலங் காவலர் மருமா னொன்னார்
வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த
எழுவுறழ் திணிதோ ளியறேர்க் குட்டுவண்
வருபுனல்வாயில் வஞ்சியும் வறிதே யதாஅன்று  50

நறவுவா யுறைக்கும் நாகுமுதிர் நுணவத்
தறைவாய்த் குறுந்துணி யயிலுளி பொருத
கைபுனை செப்பங் கடைந்த மார்பிற்
செய்பூங் கண்ணி செவிமுத றிருத்தி
நோன்பகட் டுமண ரொழுகையொடு வந்த  55

மகாஅ ரன்ன மந்தி மடவோர்
நகாஅ ரன்ன நளிநீர் முத்தம்
வாள்வா யெருந்தின் வயிற்றகத் தடக்கித்
தோள்புற மறைக்கும் நல்கூர் நுசுப்பி
னுளரிய லைம்பா லுமட்டிய ரீன்ற  60

கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலி யாடுந்
தத்துநீர் வரைப்பிற் கொற்கைக் கோமான்
தென்புலங் காவலர் மருமா னொன்னார்
மண்மாறு கொண்ட மாலை வெண்குடைக்
கண்ணார் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன்  65

தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனைமறுகின் மதுரையும் வறிதே யுதாஅன்று  
நறுநீர்ப் பொய்கை யடைகரை நிவந்த
துறுநீர்க் கடம்பின் றுணையார் கோதை
ஓவத் தன்ன வுண்டுறை மருங்கிற்  70

கோவத் தன்ன கொங்குசேர் புறைத்தலின்
வருமுலை யன்ன வண்முகை யுடைந்து
திருமுக மவிழ்ந்த தெய்வத் தாமரை
யாசி லங்கை யரக்குத்தோய்ந் தன்ன
சேயிதழ் பொதிந்த செம்பொற் கொட்டை  75

யேம வின்றுணை தழீஇ யிறகுளர்ந்து
காமரு தும்பி காமரஞ் செப்புந்
தண்பணை தழீஇய தளரா இருக்கைக்
குணபுலங் காவலர் மருமா னொன்னா
ரோங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியுந்.  80

தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பிய
னோடாப் பூட்கை யுறந்தையும் வறிதே யதாஅன்று  
வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்
கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய  85

அருந்திற லணங்கி னாவியர் பெருமகன்
பெருங்க னாடன் பேகனுஞ் சுரும்புண
நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரல்.  90

பறம்பிற் கோமான் பாரியுங் கறங்குமணி
வாலுளைப் புரவியொடு வையக மருள
வீர நன்மொழி யிரவலர்க் கீந்த
வழறிகழ்ந் திமைக்கு மஞ்சுவரு நெடுவேற்
கழறொடித் தடக்கைக் காரியு நிழறிகழ்  95

நீல நாக நல்கிய கலிங்க
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த
சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோ
ளார்வ நன்மொழி யாயு மால்வரைக்
கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்ல  100

யமிழ்துவிளை தீங்கனி யெளவைக் கீந்த
வுரவுச்சினங் கனலுமொளிதிகழ் நெடுவே
லரவக்கடற் றானை யதிகனுங் கரவாது
நட்டோ ருவப்ப நடைப்பரி கார
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்  105

துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாட னள்ளியு நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகக்துக்
குறும்பொறை நன்னாடு கோடியர்க் கீந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த  110

வோரிக் குதிரை யோரியு மெனவாங்
கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோ
ளெழுவர் பூண்ட வீகைச் செந்நுகம்  
விரிகடல் வேலி வியலகம் விளங்க
வொருதான் றாங்கிய வுரனுடைய நோன்றா  115

ணறுவீ நாககு மகிலு மாரமுந்
துறையாடு மகளிர்க்குத் தோட்புணை யாகிய
பொருபுன றரூஉம் போக்கரு மரபிற்
றொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய
நன்மா விலங்கை மன்ன ருள்ளும்  120

மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வா
ளுறுபுலித் துப்பி னோவியர் பெருமகன்
களிற்றுத்தழும் பிருந்த கழறயங்கு திருந்தடிப்
பிடிக்கணஞ் சிதறும் பெயல்மழைத் தடக்கைப்
பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை  125

நல்லியக் கோடனை நயந்த கொள்கையொடு  
தாங்கரு மரபிற் றன்னுந் தந்தை
வான்பொரு நெடுவரை வளனும் பாடி
முன்நாள் சென்றன மாக விந்நா
டிறவாக் கண்ண சாய்செவிக் குருளை  130

கறவாக் பால்முலை கவர்த னோனாது
புனிற்றுநாய் குரைக்கும் புல்லெ னட்டில்
காழ்சோர் முதுசுவர்க் கணச்சித லரித்த
பூழி பூத்த புழற்கா ளாம்பி
யொல்குபசி யுழந்த வொடுங்குநுண் மருங்குல்  135

வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை யுப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்
திருக்பே ரொக்கலொ டொருங்குடன் மிசையு
மழிபசி வருத்தம் வீடப் பொழிகவுட்  140

டறுகட் பூட்கைத் தயங்குமணி மருங்கிற்
சிறுகண் யானையொடு பெருந்தே ரெய்தி
யாமவ ணின்றும் வருதும்நீயிரு
மிவணயந் திருந்த விரும்பே ரொக்கற்
செம்ம லூள்ளமொடு செல்குவி ராயி  145

னலைநீர்த் தாழை யன்னம் பூப்பவுந்
தலைநாட் செருந்தி தமனியம் மருட்டவுங்
கடுஞ்சூன் முண்டகங் கதிர்மணி கழாஅலவும்
நெடுங்காற் புன்னை நித்திலம் வைப்பவும்
கானல் வெண்மணல் கடலுலாய் நிமிர்தரப்  150

பாடல் சான்ற நெய்த னெடுவழி
மணிநீர்ப் வைப்பு மதிலொடு பெயரிய
பனிநீர்ப் படுவின் பட்டினம் படரி
னோங்குநிலை யொட்டகந் துயுன்மடிந் தன்ன
வீங்குதிரை கொணர்ந்த விரைமர விறகிற்  155

கரும்புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோண்
மதியேக் கறூஉம் மாசறு திருமுகத்து
நுதிவே னோக்கி னுளைமக ளரித்த
பழம்படு தேறல் பரதவர் மடுப்பக்
கிளைமலர்ப் படப்பைக் கிடங்கிற் கோமான்.  160

தளையவிழ் தெரியற் றகையோற் பாடி
யறற்குழற் பாணி தூங்கி யவரொடு
வறற்குழற் சூட்டின் வயின்வயிற் பெறுகுவிர்  
பைந்நனை யவரை பவழங் கோப்பவுங்
கருநனைக் காயாக் கணமயி லவிழவுங்  165

கொழுங்கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவுஞ்
செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவுங்
கொல்லை நெடுவழிக் கோப மூரவு
முல்லை சான்ற முல்லையம் புறவின்
விடர்கா லருவி வியன்மலை மூழ்கிச்  170

சுடர்கான் மாறிய செவ்வி நோக்கித்
திறல்வே னுதியிற் பூத்த கேணி
விறல்வேல் வென்றி வேலூ ரெய்தி
னுறுவெயிற் குலைஇய வுருப்பவிர் குரம்பை
யெயிற்றிய ரட்ட இன்புளி வெஞ்சோறு  175

தேமா மேனிச் சில்வளை யாயமொ
டாமான் சூட்டி னமைவரப் பெறுகுவிர்  
நறும்பூங் கோதை தொடுத்த நாட்சினைக்
குறுங்காற் காஞ்சிக் கொம்ப ரேறி
நிலையருங் குட்ட நோக்கி நெடிதிருந்து  180

புலவுக்கய லெடுத்த பொன்வாய் மணிச்சிரல்
வள்ளுகிர் கிழித்த வடுவாழ் பாசடை
முள்ளரைத் தாமரை முகிழ்விரி நாட்போது
கொங்குகவர் நீலச் செங்கட் சேவல்
மதிசே ரரவின் மானத் தோன்று  185

மருதஞ் சான்ற மருதத் தண்பணை
யந்தண ரருகா வருங்கடி வியனக
ரந்தண் கிடங்கினவ னாமூ ரெய்தின்
வலம்பட நடக்கும் வலிபுண ரெருத்தி
னுரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கை  190

பிடிக்கை யன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத்
தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப
விருங்கா ழுலக்கை யிரும்புமுகந் தேய்த்த
அவைப்புமா ணரிசி யமலைவெண் சோறு
கவைத்தா ளலவன் கலவையொடு பெறுகுவி  195

ரெரிமறிந் தன்ன நாவி னிலங்கெயிற்றுக்
கருமறிக் காதிற் கவையடிப் பேய்மக
ணிணனுண்டு சிரித்த தோற்றம் போலப்
பிணனுகைத்துச் சிவந்த பேருகிர்ப் பணைத்தா
ளண்ணல் யானை யருவிதுக ளவிப்ப  200

நீறடங்கு தெருவினவன் சாறயர் மூதூர்
சேய்த்து மன்று சிறிதுநணி யதுவே  
பொருநர்க் காயினும் புலவர்க் காயினு
மருமறை நாவி னந்தணர்க் காயினுங்
கடவுண் மால்வரை கண்விடுத் தன்ன  205

அடையா வாயிலவ னருங்கடை குறுகிச்
செய்ந்நன்றி யறிதலுஞ் சிற்றின மின்மையு
மின்முக முடையையு மினிய னாதலுஞ்
செறிந்துவிளங்கு சிறப்பி னறிந்தோ ரேத்த
அஞ்சினர்க் களித்தலும் வெஞ்சின மின்மையு  210

மாணணி புகுதலு மழிபடை தாங்கலும்
வாண்மீக் கூற்றத்த்து வயவ ரேத்தக்
கருதியது முடித்தலுங் காமுறப் படுதலு
மொருவழிப் படாமையு மோடிய துணர்தலு
மரியே ருண்க ணரிவைய ரேத்த  215

அறிவுமடம் படுதலு மறிவுநன் குடைமையும்
வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும்
பரிசில் வாழ்க்கைப் பரிசில ரேத்தப்
பன்மீ னடுவட் பான்மதி போல
இன்னகை யாயமோ டிருந்தோற் குறுகிப்  220

பைங்க ணூகம் பாம்புபிடித் தன்ன
வங்கோட்டுச் செறிந்த வவிழ்ந்துவீங்கு திவவின்
மணிநிரைத் தன்ன வனப்பின் வாயமைத்து
வயிறுசேர் பொழுகிய வகையமை யகளத்துக்
கானக் குமிழின் கனிநிறங் கடுப்பப்  225

புகழ்வினைப் பொலிந்த பச்சையொடு தேம்பெய்
தமிழ்துபொதிந் திலிற்று மடங்குபுரி நரம்பிற்
பாடுதுறை முற்றிய பயன்றெரி கேள்விக்
கூடுகொ ளின்னியங் குரல்குர லாக
நூனெறி மரபிற் பண்ணி யானாது  230

முதுவோர்க்கு முகிழ்த்த கையினை யெனவு
மிளையோர்க்கு மலர்ந்த மார்பினை யெனவு
மேரோர்க்கு நிழன்ற கோலினை யெனவுந்
தேரோர்க் கழன்ற வேலினை யெனவு
நீசில மொழியா வளவை மாசில் 235

காம்புசொலித் தன்ன வறுவை யுடீஇப்
பாம்புவெகுண் டன்ன தேற னல்கிக்
காவெரி யூட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரி கச்சைப் புகழோன் றன்முன்
பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட்  240

பனுவலின் வழாஅப் பல்வே றடிசில்
வாணிற விசும்பிற் கோண்மீன் சூழ்த்த
விளங்கதிர் ஞாயி றெள்ளூந் தோற்றத்து
விளங்குபொற் கலத்தில் விரும்புவன பேணி
யானா விருப்பிற் றனின் றூட்டித்  245

திறல்சால் வென்றியொடு தெவ்வுப்புல மகற்றி
விறல்வேன் மன்னர் மன்னெயின் முருக்கி
நயவர் பாணர் புன்கண் டீர்த்தபின்
வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு
பருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி  250

யுருவ வான்மதி யூர்கொண் டாங்குக்
கூருளி பொருத வடுவாழ் நோன்குறட்
டாரஞ் சூழ்ந்த வயில்வாய் நேமியொடு
சிதர்நனை முருக்கின் சேணோங்கு நெடுஞ்சினைத்
ததர்பிணி யவிழ்ந்த தோற்றம் போல  255

வுள்ளரக் கெறிந்த வுருக்குறு போர்வைக்
கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி
யூர்ந்துபெயர் பெற்ற வெழினடைப் பாகரொடு
மாசெல வொழிக்கு மதனுடை நோன்றாள்
வாண்முகப் பாண்டில் வலவனொடு தரீஇ  260

யன்றே விடுக்குமவன் பரிசின் மென்றேட்
டுகிலணி யல்குற் றுளங்கியன் மகளி
ரகிலுண விரித்த வம்மென் கூந்தலின்
மணிமயிற் கலாப மஞ்சிடைப் பரப்பித்
துணிமழை தவழுந் துயல்கழை நெடுங்கோட்  265

டெறிந்துரு மிறந்த வேற்றருஞ் சென்னிக்
குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச்
செல்லிசை நிலைஇய பண்பி
நல்லியக் கோடனை நயந்தனிர் செலினே.  

உரை

திணை-பாடாண் திணை.

துறை-ஆற்றுப்படை

1 - மணிமலை என்பது தொடங்கி, 40-இரவல என்னுந் துணையும் ஒரு தொடர். இத்தொடரின்கண், பரிசில் பெற்று வரும் பாணன் பரிசில் விரும்பித் தன் எதிர்வரும் பாணனை விளிக்குமாற்றால் அப் பாணன் வருகின்ற வழியின் கொடுமை, காலத்தின் நிலை, அப்பாணனோடே வருகின்ற மகளிரின் நிலை முதலியனவும் பிறவும் கூறப்படும்.

1-12 : மணிமலை ............... அசைஇ

பொருள் : பணைத்தோள் - மூங்கிலாகிய தோள்களையுடைய, மாநில மடந்தை - பெரிய நிலமகளின், மணிமலை அணிமுலை - மணிகளையுடைய மலையாகிய அழகிய முலையின்கட்கிடந்து, துயல்வரூஉம் - அசையாநின்ற, ஆரம்போல - முத்து மாலை போல செல்புனல் உழந்த - ஓடுதலையுடைய நீராலே வருந்தினதும், சேய்வரல் கான்யாற்று - தொலைவினின்றும் வருகின்ற காட்டாற்றின், கொல்கரை - இடிகரையின்கண் உள்ளதுமாகிய, நறும்பொழில்-நறிய மணமிக்க பொழிலிடத்தே, குயில் குடைந்து உதிர்த்த - குயில்கள் அலகாலே குடைந்து உதிர்த்த, புதுப்பூச் செம்மல் சூடி - புதிய பூக்களாகிய வாடலைச் சூடி, புடை நெறித்து - தம்மிடமெல்லாம் அறல்பட்டு, கதுப்பு விரித்தன்ன - மயிரை விரித்தாலொத்த, காழ் அகம் நுணங்கு அறல் -கருநிறத்தைத் தம்மிடதேகொண்ட நுண்ணிய கருமணல், அயில் உருப்பு அனையவாகி - கரும்பொன் வெப்பமேற்ற தன்மைத்தாக, ஐது நடந்து - அம்மணலின்மேல் மெல்ல நடந்து சென்று, வெயில் உருப்பு உற்ற வெம்பரல் - வெயிலின் வெப்பம் ஏறிய வெவ்விய பரல்கள், கிழிப்ப - கால்களைக் கிழியாநிற்ப, வேனில் நின்ற - இளவேனிற்பருவம் நிலைபெற்ற, வெம்பதம் - வெவ்விய செவ்வியையுடைய காலத்திற்கு, வழிநாள் - பின்னாகிய முதுவேனிற்பருவத்தின்கண், காலை - நாட்காலத்தே, ஞாயிற்றுக்கதிர் - ஞாயிற்றினுடைய கதிர், கடாவுறுப்ப - வெம்மையைச் செலுத்துதலாலே, பாலைநின்ற - பாலைத்தன்மை நிலைபெற்றமையாற் றோன்றிய, பாலை நெடுவழிச் சுரன்முதல் - பாலையாகிய நீண்ட வழியையுடைய சுரத்தின்கண்ணுள்ள, மராஅத்த - கடப்ப மரத்தினுடைய, வரிநிழல் - கோடுகளாகிய நிழலிடத்தே, அசைஇ - தங்கி,

கருத்துரை : மூங்கிற் றோளையுடைய நிலமடந்தையின் மணிமலையாகிய முலையின்மேற் கிடந்தசையும் முத்துமாலைபோன்று, ஓடாநின்ற நீரானே வருந்தியதும், சேய்மைக்கண்ணின்று வருதலையுடைய கான்யாற்றினது இடிகரையின்கண் உள்ளதுமாகிய, நறுமணங்கமழும் பூம்பொழிலிடத்தே, குயில் அலகாற் குடைந் துதிர்த்த பூவின் வாடலைச் சூடி, அறல்பட்டு அந்நிலமகளின் கூந்தல் விரிந்து கிடந்தாற்போன்று தோன்றும், கரிய மணல் கரும்பொன் வெப்பம் ஏற்ற தன்மையவாய் வெப்பமுற, அம் மணற்பரப்பிலே மெல்ல நடந்து, மேலும் வெயிலாலே வெப்ப மேற்றப்பட்ட கூரிய பரல்களும் கால்களைக் கிழித்து வருத்தாநிற்ப இளவேனில் நிலைபெற்று வெம்மைசெய்த பருவத்தின் வழித்தாகிய முதுவேனில் நாட்கள் நிகழும் பருவத்தே, ஞாயிற்றினது கதிர்கள் நாட்காலத்திலேயே வெப்பத்தை மிக்குச் செலுத்துகையாலே பாலைத்தன்மை நிலைபெற்ற பாலையாகிய நீண்ட சுரன்வழியிடத்தே நின்ற கடப்பமரத்தின் வரிநிழலிலே தங்கி என்பதாம்.

அகலவுரை : இந்நூல் தொடக்கத்தே மங்கலச்சொற் பெய்யக்கருதிய ஆசிரியர் பணைத்தோள் மாநிலமடந்தை மணிமலை அணிமுலை என நிற்கவேண்டிய தொடரின்கண் உள்ள மணிமலை என்னும் தொடரைப் பிரித்து முன்னிறுத்துவாராயினர். இனி ஆசிரியர் நிறுத்தியவாறே நிறுத்தி, மணிமலையாகிய, பணைத்தோள் மாநில மடந்தையின் அணிமுலைத் துயல்வரும் ஆரம்போல என யாம் பொருள் கூறுமிடத்தும் பக்கு நில்லாது மணிமலையாகிய அணிமுலை என இயைந்து அழகுறுதலும் காண்க. மலையும், கான்யாறும், பொழிலும் கூறினமையின் இப்பாலை, குறிஞ்சி திரிந்த பாலை என்க : என்னை?

முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவங் கொள்ளும்  (சிலப்.காடு: 64-6)

என இளங்கோவடிகள் கூறுமாற்றானும், இப்பகுதிக்கு அடியார்க்கு நல்லார் பாலைக்கு நிலமின்மையும், முல்லையும் குறிஞ்சியும் பின்பு பாலையாதலும் ........... அன்றியும் வானமூர்ந்த வயங்கொளி மண்டிலம் நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டு, இலையில மலர்ந்த முகையில் இலவம் என முல்லை திரிந்து பாலையாயினவாறும், வரைபிளந் தியங்குநர் ஆறுகெட விலங்கிய அழலவிர் ஆரிடை எனக் குறிஞ்சி திரிந்து பாலையாயினவாறும் காண்க என்று விரித்தோதியவாற்றானும் உணர்க. மலையினின்றும் பண்டு வீழ்ந்த அருவிநீர் வருத்த, வருந்திய பொழில் என்றற்கு. உழந்த என இறந்தகாலத்தானே கூறினார். இனி, புனல் உழந்த கான்யாறு என யாற்றிற் கேற்றிப் பண்டு புனலால் வருத்தப்பட்ட யாறு எனினுமாம். யாறு வருத்தப்படுதலாவது அந்நீரானே தன்கரை இடிக்கப்பெறுதல் என்க. மணிமலையாகிய முலையும், பணையாகிய தோளையுமுடைய நிலமகள் என்றமையான், கதுப்பினையும் நிலமகட்கேற்றி அந்நில மகளின் கூந்தல் விரித்தாலொத்த எனப் பொருள் கூறினாம். காழ் - கருநிறம். நுணங்கு அறல் - நுண்மையான மணல். செல்புனல் : வினைத்தொகை இவ்வாறு பண்டு நீர்புக்குழக்கப் பட்டமையான் மலர்ந்த நறும்பொழில் என்க. வரல் கான்யாறு : இரண்டாவதன் உருபு தொக்கது. சேய், சேய்மை - தொலை; (தூரம்.) செம்மல் - வாடற்பூ. அயில்-இரும்பு, அறலுக்கு வண்ண உவமை. இரும்பு வெப்பத்தை மிகுதியாக ஏற்கும் தன்மையுடையதாகலின் முதுவேனிலின் வெப்பத்தை மிகுதியாக ஏற்றுக்கொண்டுள்ள அறலினை அயிலுருப்பு அனையவாகி என்றார். இங்ஙனம் சொற்கிடந்தவாறு பொருள் காணமாட்டாது ஆசிரியர் நச்சினார்க்கினியர் இத்தொடரைப் பிரித்துக் கூட்டினர். ஐது நடந்து என்றார் அவ்வெப்பம் பொறாது அஞ்சி அஞ்சி அடியிட்டு நடத்தலை ஆகி என்னும் எச்சத்தை ஆக எனத் திரித்துக்கொள்க. தொடக்கத்தே கான்யாற்றின் அறல்வழி வந்தவர்கள், கதிர்கடாவுறுத்தலின் அறலின் வெம்மை பொறாராய்ச் சுரநெறிப் படருங்கால், ஆண்டு வெயில் உருப்புற்ற வெம்பரல் கிழித்த என்க. வெயில் உருப்புற்ற - வெயிலாலே வெப்பமுற்ற என விரித்திடுக. வேனில் நின்ற - இளவேனில் நிலைத்து நிற்றலால் என ஏதுவாக்குக. வெம்பதம்-வெப்பமிக்க தன்மை. காலைஞாயிறு கதிர் கடாவுறுப்ப என்றது, ஏனைப்பருவம் போலாது நாட் காலையிலேயே ஞாயிற்றின் கதிர்கள் வெப்பத்தைச் செலுத்துதலாலே என்றவாறு. பாலை- பாலைத்தன்மை; அஃதாவது; காலையும் மாலையும் நண்பக லன்ன கடுமை கூரச் சோலை தேம்பிக் கூவல் மாறி நீரும் நிழலுமின்றி நிலம் பயந்துறந்து புள்ளும் மாவும் புலம்புற்று இன்பமின்றித் துன்பம் பெறுவது என்பர் நச்சினார்க்கினியர். பாலைக் கடுஞ்சுரத்தின் இத்தகைய கொடுமை குறித்துச் சிந்தாமணியினும்,

ஆன்ற வெம்பாலை அழன்மிதித் தன்ன அருஞ்சுரம்
சுடற்மறை பொழுதின் ஊன்றினார்.... சந்தனம்
ஒருங்குமெய் புதைத்தே   (சிந்தா : 2106)

என்றும்,

நுதிகொண்டன வெம்பரல் நுண்ணிலைவேல்
பதிகொண்டு பரந்தன போன்றுளவால்
விதிகண்டவர் அல்லது மீதுசெலார்
வதிகொண்டதோர் வெவ்வழல் வாய்சொலின்வேம்  (சிந்தா : 1186)

என்றும் தேவரும் கூறுனாராயினர்.

இனி ஈண்டு இவ்வாசிரியர் கூறியதுபோன்றே,

செய்யவள் அணி அகலத்து ஆரமொடு அணிகொள்பு
வையை வாரவிர் அறல்இடை போழும்  (28:5-7)

எனக் கலியினும்,
இலங்கு நீண்முடி இந்திரன் மார்பின்மேல்
விலங்கி வீழ்ந்த முத்தாரமும் போன்று  (சீவக: 35)

எனச் சிந்தாமணியினும்,

அலைநீ ராடை மலைமுலை யாகத்
தாரப் பேரியாற்று மாரிக் கூந்தல்
கண்ணகன் பரப்பின் மண்ணக மடந்தை  (சிலப்: 5:-13)

எனச் சிலப்பதிகாரத்தினும்,
......................................... காவிரி
மாதர்மண் மடந்தைபொன் மார்பிற் றாழ்ந்ததோர்
ஓதநீர் நித்திலத் தாமம் ஒக்குமால்  (திருநாட்டுச் : 2)

எனத் திருத்தொண்டர் வரலாற்றினும் கூறுதல் காண்க. வரிநிழல் - என்றது இலைகள் உதிர்ந்துவிட்டமையால் கடப்பமரத்தின் எஞ்சிய கொம்புகளால் உண்டாகிய வரிவரியாக அமைந்த நிரம்பா நிழல் என்றபடி. நறுநீழலரிதாகலின் வரிநிழல் வதிந்தனர் என்க. வல்லியல் ஆடவரினும் மெல்லியல் மடந்தையரே இத்தகைய சுரஞ்செல் வருத்தம் மிகுதியும் உறுவாராதலின் மாதரின் வருத்தத்தையே விரித்தோதினர் என்க. இனி 13- ஐதுவீழ் என்பது தொடங்கி, 33 - தைவர என்னுந் துணையும் அவ்வாறு பாலைவழி வருத்தமுற்ற விறலியரின் மென்மைமிக்க இயல்பினை எடுத்தோதி நடந்து வருந்திய அம்மகளிர் அடிகளை இளைஞர் வருடுதலையும் கூறுகின்றார்.

13-33 : ஐதுவீழ் ..................... தைவர

பொருள் : ஐதுவீழ் இகுபெயல் - மெல்லிதாய் வீழ்ந்து தாழ்கின்ற மழையினது, அழகு கொண்டருளி - எழிலினை ஏற்றுக்கொண்டு காட்சிக்கு விருந்தாக அருளுதலைச் செய்து, நெய்கனிந்து - மேலும் எண்ணெயிலே முற்றுப்பெற்று, இருளிய - இருண்ட கதுப்பின் - கூந்தலினையும், கதுப்பென - கூந்தலைப் போன்ற மணிவயின் கலாபம் - நீலமணிபோலும் கண்ணினை யுடைய தோகைகளை, பரப்பி - விரித்து, பலஉடன் - பலவும் ஒரு சேர, மயில்-ஆண் மயில்கள், மயில் குளிக்கும் யாம் இவர் சாயலை ஒவ்வேமென நாணியும் எம்தோகை இவர் கூந்தலை ஒவ்வா என நாணியும் தம் பெடைகட்குள்ளே மறைதற்குக் காரணமான, சாயல் - மென்மையினையும், சாஅய் - ஓடியிளைத்து, உயங்கு - வருந்தாநின்ற, நாய் நாவின் - நாயினது நாக்கினுடைய, நல் எழில்-நல்ல அழகினை, அசைஇ - வருத்தி, வயங்கு இழை உலறிய - விளங்குகின்ற அணிகலன்கள் வறுமையால் அணியப்பெறாமையானே பொலிவழிந்த, அடியின் - அடியினையும், அடி தொடர்ந்து-அடியினோடே தொடர்புடைத்தாய், ஈர்ந்து நிலம் தோயும் - இழுக்கப்பட்டு நிலத்திலே பொருந்துதலுடைய, இரும்பிடி தடக்கையின் - கரிய பெண்யானையினது பெரிய கையைப்போலத் தாமும் அடியோடே தொடர்புபட்டு நிலத்தே பொருந்திப் பருத்து, சேர்ந்து - திரண்டு, உடன் செறிந்த - ஒருங்கே நெருங்கி இணைந்த, குறங்கின் - தொடைகளையும், குறங்கென மகளிர் தொடைபோலத் திரண்டு, மால்வரை - பெருமையுடைய மலையிடத்தே, ஒழுகிய வாழ்ஐ - இடையறவுபடாத வாழ்வினையுடைய அழகிய, வாழைப்பூ என - வாழையினது பூவினை ஒத்து, பொலிந்த ஓதி, பொலிவு பெற்ற பனிச்சையினையும், ஓதி - அந்தப் பனிச்சையிடத்தே சூடுகின்ற, நளிசினை வேங்கை - செறிந்த கிளைகளையுடைய வேங்கைமரத்தினது, நாள் மலர் நச்சி - நாட்காலத்து மலர் என்று விரும்பி, களிசுரும்பு அரற்றும் சுணங்கின் - கள்ளுண்டு களித்த வண்டுகள் ஆரவாரித்தற்குக் காரணமான சுணங்குகளையும், சுணங்கு பிதிர்ந்து - தம்மிடத்தே பொருந்திய சுணங்குகள் சிதறிக் கிடக்கப்பெற்று, யாணர் கோங்கின் - புதிதாகப் பூத்தலையுடைய கோங்கினது, அவிர்முகை - விளங்குகின்ற மொட்டுக்களை, எள்ளி - இகழ்ந்து, பூணகத்து ஒடுங்கிய - அணிகலன்களினகத்தே கிடக்கின்ற, வெம்முலை - விருப்பந்தருகின்ற முலையினையும், முலையென - மகளிர் முலைகளைப்போன்று, வண்கோள் பெண்ணை வளர்த்த - பெரிய குலையினையுடைய பனை வளர்த்த, நுங்கின் - நுங்கின்கண் உள்ள, இன்சேறு இகுதரும் -இனிய சுனைநீர் தன்னீர்மையாற் றாழ்கின்ற, எயிற்றின் - ஊறலையுடைய பற்களையும், எயிறென - மகளிர் பற்களை ஒப்ப, குல்லை அம் புறவில் - கஞ்சங்குல்லையை உடைய அழகிய காட்டின் கண்ணே, குவிமுகை - குவிந்த அரும்புகள், அவிழ்ந்த - மலர்ந்த, முல்லை சான்ற - முல்லை சூடுதற் கமைந்த, கற்பின் - கற்புடைமையையும், மெல்லியல் - மெல்லிய இயல்பினையும், மடம் - மடப்பத்தினையும், மான் நோக்கின் - மான்போலும் பார்வையினையும், ஒள் நுதல் - ஒளியுடைத்தாகிய நுதலினையும் உடைய, விறலியர் - விறல்பட ஆடும் மகளிர்களின், நடை மெலிந்து அசைஇய - நடையால் இளைத்து ஓய்ந்த, நன்மென் சீறடி - நன்மையையுடைய மெல்லிய சிறிய அடியினை, கல்லா இளைஞர் - கல்வி நிரம்பாத இளைஞர், மெல்ல-மெத்தென்று, தைவர - வருடா நிற்ப,

கருத்துரை : மெல்லிதாய் வீழ்கின்ற மழையின் அழகினைக்கொண்ட கூந்தலினையும், ஆண் மயில்கள் சாயற்கொவ்வேமென நாணித் தம் பெடையினூடே சென்று மறைதற்குக் காரணமான சாயலினையும், ஓடியிளைத்த நாயினது நாவினை ஒத்து அணிகலனின்மையாற் பொலிவிழந்த அடியினையும், பிடியின் கையெனத்திரண்டு செறிந்த தொடையினையும், வாழைப்பூப் போன்ற பனிச்சையினையும், வேங்கை மலர் போன்ற சுணங்கினையும், கோங்கரும்பொத்து அணிகலனகத்தே அடங்கிய முலையினையும், நுங்கின் இனிய நீரினை ஒத்த ஊறலுடைய எயிற்றினையும், முல்லை சூடுதற்கமைந்த கற்பினையும், மெல்லியல்பினையும், மான் நோக்கினையும், ஒளிபொருந்திய நுதலினையும் உடைய விறலியரின் நடந்திளைத்து ஓய்ந்த அடியினைக் கல்வி நிரம்பாத இளைஞர் மெத்தென வருடாநிற்ப, என்பதாம்.

அகலவுரை : சேய்மைக்கண் முகில் காலூன்றி மழை பொழியும் தோற்றம் தூங்கும் நெடிய கூந்தல் போறலின், அதனைக் கூந்தலுக்கு உவமை கூறினார். ஐதுஈண்டு மெல்லிது என்னும் பொருட்டு.

நெய்யோ டையவி அப்பி ஐதுரைத்து

என்னும் திருமுருகாற்றுப்படையினும் ஐது இப்பொருட்டாதல் காண்க. இகுபெயல்: வினைத்தொகை, இகுதல்-தாழ்தல். கொண்டருளி என்பதன்கண், அருளி ; பகுதிப்பொருளது எனினுமாம். பெயலினது அழகைத்தான் ஏற்று அதனைக் காண்போர் கட்புலனுக்கு விருந்தாக அருளுதலைச் செய்து எனினுமாம். நெய் - எண்ணெய். கனிதல் - முற்றுப் பெறுதல்.

எண்ணெயும் நானமும் இவைமூழ்கி இருள் திருக்கிட்டு (164) என்றார் சிந்தாமணியினும். மணி வயின் கலாபம் என்றது மயிலினது தோகையை மணி அத்தோகையின்கண் அமைந்த நீல நிறமான கண்கட்கு உவமை. வயின் - இடம். இவ்விறலியரின் சாயலைக்கண்ட மயில்கள் தம் தோகைகளை விரித்துப் பார்த்து, இவர்கட்கு யாம் ஒவ்வோம் என நாணித் தம்பெடைக் குழுவிற்குட் சென்று மறைந்தன என்க. இனிச்சாயல் என்பதனோடு சாஅய் என்பதனைச் சேர்த்து ஆறுசெல் வருத்தத்தால் சாயல் அழிந்து எனினுமாம். ஓடிக் களைத்தநாய் நாவினைத் தூங்கவிட்டு ஓடுதலியல்பாகலின், சாஅய் உயங்குநாய் நாவின் என்றார்; இந்நாய் நாக்கு விறலியரின் உள்ளடியின் நிறம் மென்மைகட்கு உவமை.

கிண்கிணியும் சிலம்பும் நாய்நாச் சீறடி
மேற்பகைக் கொண்டாற்போற் சுமாஅய்  (2994)

எனச் சிந்தாமணியினும்,

வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி

எனப் பொருநராற்றுப்படையினும்,

மதந்தபு ஞமலி நாவி னன்ன
துளங்கியன் மெலிந்த கல்பொரு சீறடி

என மலைபடுகடாத்தினும், மகளிர் அடிக்கு நாயின் நாவினை உவமை கூறியிருத்தல் காண்க. உலறுதல் - வற்றிப்போதல். வயங்கிழை உலறிய என்றது, விளங்குகின்ற அணிகலன்கள் இல்லையாகிய என்றபடி. சேர்ந்து - திரண்டு சேர் என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த எச்சம். என்னை? சேரே திரட்சி என்பது ஒத்தாகலின் என்க.

குறங்கு - தொடை. யானையின்கை விறலியர் தொடைக்கு உவமை. ஒழுகிய வாழை என்பதன்கண் வாழை என்பதனை வாழ்-ஐ எனக் கண்ணழித்து வாழ்தலையுடைய அழகிய எனப் பொருள் கொண்டு அடுத்து வரும் வாழைக்கு அடையாக்குக. ஒழுகிய வாழ்தலையுடைய வாழை என்றது இடையறவுபடாது ஒன்றன்பின் ஒன்றாய்க் கிளைத்து வாழும் இயல்பினையுடைய வாழை மரம் என்றவாறு. வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம்  (திருவருட்பா) என்றார் பிறரும். குறங்கென ஒழுகிய வாழை வாழை என்க. குறங்கு - வாழைக்குவமை. வாழைப்பூ விறலியின் மயிர்முடிப்பிற்கு உவமை. இம் முடிப்பினைப் பனிச்சை என்ப.

வாழை யீன்ற வையேந்து கொழுமுகை
மெல்லியன் மகளிர் ஓதி யன்ன
பூவொடு துயல்வரும் மால்வரை நாடனை  (225, 3-5)

என்னும் நற்றிணையினும் வாழைப்பூ ஓதிக்கு உவமையாக வருதல் காண்க. ஓதியின்கண் அணியும் இயல்பிற்றாய வேங்கை நாண்மலர் என இயைத்துக் கொள்க. சுணங்கு - தேமல். பொன்னிறமான சுணங்குகளை வேங்கை மலர் என்று கருதி வண்டுகள் ஆரவாரித்தன என்றவாறு. சுணங்கினை மலர் எனக் கருதின என்பதற்குக் களிச்சுரும்பு என்றது கள்ளுண்டு களித்த மயக்கமுண்மையால் எனக் குறிப்பேதுவாய் நிற்றல் காண்க. பிதிர்தல் - சிதறிக்கிடத்தல். யாணர் - புதிதாகத் தோன்றுதல்; புதிதாகப் பூத்துள்ள கோங்கென்றவாறு.

புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி

என்பர் தொல்காப்பியனார். எள்ளி - இகழ்ந்து. கோங்கின் முகையினை எம்மை அழகானொவ்வாய் என முலைகள் இகழ்ந்தன என்க. வெம்முலை - விருப்பமுண்டாதற்குக் காரணமான முலை, கொடிய முலையுமாம். என்னை?

வேளை வென்ற முகத்தியர் வெம்முலை
ஆளை நின்று முனியும்  (கம்பரா-நாட்டுப்:24)

என்பவாகலின், வெப்பமுடைய முலை எனினும் ஆம், என்னை?

மைம்மலர் உண்கண் மடந்தையர் அடங்காக்
கொம்மை வரிமுலை வெம்மை வேதுறீஇ  (சிலப் : 28: 15-6)

என்பவாகலின் என்க. வண்கோள் - பெரிய குலை. பெண்ணை - பனை. நுங்கிற்கு முலை உவமை. நுங்கின் இன்சேறு, எயிற்றின் ஊறலுக்குவமை.

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்  (குறள் : 1121)

என்றார் திருவள்ளுவனாரும். குல்லை - கஞ்சங்குல்லை என்னும் செடி. இதனைக் கஞ்சா என்று கூறுப. எயிறு முல்லையரும்பிற்குவமை. கற்புடைமைக்கு அறிகுறியாக முல்லைத் தொடையல் சூடுதல் மரபு. இதனை,

முல்லை சான்ற கற்பின் மெல்லியற் குறுமகள் (நற்றிணை : 142)
என்னும் நற்றிணையானும், தேவி முல்லை வளர்த்தற்குக் காரணம் கற்புடைமை என வுணர்க, எனக் கூறி,

முல்லை சான்ற கற்பின் மெல்லியல்  (75)

இது சிறுபாணாற்றுப்படை எனத் தக்கயாகப் பரணியிற் கூறுதலானும் உணர்க. பண்டைநாள் கூத்தியல் வல்ல மகளிர்கள் சிறந்த கற்புடையராகவும் திகழ்ந்தார் என்பதற்கு. இவ்வடி சான்றாதலும் அறிக. ஆடல், பாடல், அழகு என்னும் மூன்றானும் சிறப்புற்றிருத்தல் விறலியர்க்கின்றியமையாமையின் அவரை இங்ஙனம் விரிவாகப் புனைந்துரைத்தார் என்க. விறலியர் - விறல்பட ஆடும் மகளிர். அஃதாவது, மெய்ப்பாடுதோன்ற ஆடும் மகளிர் என்றபடி. ஈண்டு நன்மென் சீறடி என்றது, நடைமெலிந் தசைஇய என்றதனை யாப்புறுத்துக் குறிப்பேதுவாய் நின்றது.

விறலியர் அடி தைவர என்றமையானே கல்லா இளைஞர் என்றது ஈண்டு ஆணொழித்து நின்றது. கல்வி நிரம்பப்பெறாத மாணவிகளாகிய சிறுமியர் என்க. ஆடல் பயிலும் மாணவியர்தம் ஆசிரியையின் அடியினை வருடுதல் ஆசிரியையின்பால் அவர்க்கு உள்ள அன்பை வெளிப்படுத்தும். இனி இங்ஙனம் நிரலாக உவமை வருதலை மாலையுவமை என்பர் அணி நூலோர்.

அடியின் அடிதொடர்ந்து, குறங்கிற் குறங்கென
ஓதி ஓதி, சுணங்கிற் சுணங்கென

என, ஒன்றைக்கூறி முடித்த பின்னர் அதன்கண் அமைந்த பொருளையே மீண்டும் உவமையாக எடுத்து நிரல்படக் கூறுதலை ஒற்றைமணிமாலை அணியென்றோதுப. இனி இங்ஙனம் கூறுதல்,

அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே

என்னும் விதியொடு முரணிக் குற்றமாம் என ஐயுறுவார் ஐயுறாமைப் பொருட்டுப் பேராசிரியர் :

ஈர்ந்து நிலந்தோயும் இரும்பிடித் தடக்கையிற்
சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென
மால்வரை ஒழுகிய வாழை வாழைப்
பூவெனப் பொலிந்த வோதி வோதி  (16-22)

.................. வளர்த்த நுங்கின்
இன்சேறு இகுதரு மெயிற்றின்  (27-28)

என்பதூஉம் அடுக்கிய தோற்றம் எனப்படாதோ எனின், படாதன்றே; யானைக்கை போலும் குறங்கு, குறங்குபோலும் வாழை என அடுக்கிச் சொல்லாது, குறங்கினை உடையாள் என்று துணித்துக் கூறிய பின்னர்க் குறங்கென மால்வரை ஒழுகிய வாழை என்றானாதலின் என்பது என்றும், அடுக்கிய தோற்றம் என்னும் குற்றமாவது;

மதியத் தன்ன வாண்முகம் போலும்
பொதியவிழ் தாமரைப் புதுப்பூம் பொய்கை

என மதியத்தன்ன வாண்முகத்தினைத் தாமரை என்றமையின் அவை ஒன்றனோடு ஒன்று பொருந்தாவென்பது கருத்து என்றெடுத்துக் காட்டியும் போந்தமை யறிக. இங்குப் பேராசிரியர், குறங்கென மால்வரை ஒழுகிய வாழை எனச் சொற்கிடந்தவாறே குறங்கை உவமமாகவும், வாழையைப் பொருளாகவும் கொண்டோதுதலும், ஆசிரியர் நச்சினார்க்கினியர் அங்ஙனம் கொள்ளாது மால்வரை ஒழுகிய வாழை எனக் குறங்குடன் செறிந்த குறங்கெனச் சொற்களைத் தலைதடுமாறப் பிரித்திணைத்து நூலாசிரியர் உவமையாகப் பெய்த சொல்லைப் பொருளாக்கியும், பொருளாகப் பெய்த சொல்லை உவமமாக்கியும் கூறுமாறறிக. இவ்வுவமைகளை, மலைபடுகடாத்தில்,

கணங்கொள் தோகையிற் கதுப்பிகுத் தசைஇ  (44)

என்றும்,

அணிகிளர் கலாவம் ஐதுவிரித் தியலும்
மணிபுரை எருத்தின் மஞ்ஞை போல  (264)

என நற்றிணையினும்,

மயிலன்னாய் சாயலே

என ஏலாதியினும்,

வேங்கைவீ முற்றெழில் கொண்ட சுணங்கணி பூணாகம்

எனக் கலியினும் நல்லிசைப் புலவர் பயின்றுள்ளமை காண்க.

34-40 : பொன் .............. இரவல

பொருள் : பொன்வார்ந்து அன்ன - பொற்கம்பியினை ஒத்த, புரி அடங்கு நரம்பின் - முறுக்கடங்கின நரம்பினது, இன்குரல் - இனிய ஓசையையுடைய, சீறியாழ் - சிறிய யாழை, இடவயின் - தழீஇ - இடப்பக்கத்தே தழுவி, நைவளம் பழுநிய - நட்டபாடை என்னும் பண் முற்றுப்பெற்ற, நயம்தெரி பாலை - இனிமை தெரிகின்ற பாலை என்னும் பண்ணை, கைவல் பாண்மகன் - இயக்குதல் வல்ல பாணனாகிய மகன், கடன் அறிந்து - முறைமையை அறிந்து, இயக்க-இயக்காநிற்ப, இயங்கா வையத்து - வள்ளியோரின்மையின் பரிசிலர் செல்லாத உலகத்தே, வள்ளியோர் நசைஇ - பரிசில் தருவாரை விரும்பி, துனிகூர் எவ்வமொடு - தன்னை வெறுத்தன் மிக்க வருத்தத்தோடே கூடின, துயர் ஆற்றுப் படுப்ப- வறுமை நின்னைக்கொண்டு போகையாலே, முனிவு இகந்து இருந்த - வழி வருத்தம் தீர்ந்திருந்த முதுவாய் இரவல - பேரறிவு வாய்த்தற்றொழிலை யுடையாயாய இரவல!

கருத்துரை : பொற்கம்பிபோன்ற முறுக்கடங்கிய நரம்பினது இனிய ஓசையை உடைய சிறிய யாழை இடப்பக்கத்தே தழுவி, நட்ட பாடை என்னும் பண் முற்றுப் பெற்ற இனிய பாலைப்பண்ணை இயக்குதல் வல்ல பாணன் முறையறிந்து இயக்காநிற்ப, வள்ளியோரின்மையாற் பரிசிலர் இயங்காத இவ்வுலகத்தே பரிசில் தருவாரை விரும்பி வறுமை ஆற்றுப்படுத்தலாலே வழிநடந்த வருத்தந் தீர்ந்திருந்த அறிவு வளர்தற்குரிய தொழிலையுடைய இரவலனே! என்பதாம்.

அகலவுரை : யாழின் நரம்பிற்குப் பொற்கம்பி உவமை,

பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
தொடையமை கேள்வி இடவயிற் றழீஇ  (15-6)

எனவரும் பெரும்பாணாற்றுப்படை அடியினை இதனோடு ஒப்பு நோக்குக.

பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
மின்னேர் பச்சை மிஞிற்றுக்குரற் சீறியாழ்  (348)

என்றார் புறத்தினும். இன்குரல் என்றது யாழிசைக்கோதிய செம்பகை. ஆர்ப்பு, கூடம், அதிர்வு என்னும் நால்வகைக் குற்றமும் இல்லாத இன்னிசை என்றவாறு. சீறியாழ் - சிறிய யாழ்; யாழ்களில் பேரியாழ் என்றும் சீறியாழ் என்றும் இருவகை உண்டு. சீறியாழினைச் செங்கோட்டியாழ் என்றும் கூறுப. செங்கோட்டியாழ் ஏழு நரம்புகளான் இயன்றதென்ப. நைவளம் - ஒரு பண். இதனை நட்டராகம் என்றும், நட்டபாடை என்றும் கூறுப. குறிஞ்சி - யாழ்த்திறம் என நிகண்டிற் கூறப்பட்டுள்ளது. பழுநிய-நிறைந்த. நயம் -இசை இன்பம். இசையின்பந் தெரிதற்கிடமான பாலை என்றவாறு. பாலை-ஒருபண். இஃது ஐந்து வகைப்படும். அவையாவன : தக்கராகம், நோதிறம், காந்தார பஞ்சமம், சோமராகம், காந்தாரம் என்னும் ஐந்துமாம். கைவல் பாண்மகன் என்றது யாழியக்ஞம் தொழிலிலே வல்லவனான பாணன் என்றவாறு. கடன் - யாழியக்கும்முறை. அவையாவன : பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ் நண்ணிய குறும்போக்கென்று நாட்டிய எண்வகையால் இசை எழுப்புதலும், வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல் உருட்டல் தெருட்டல் அள்ளல் பட்டடை என்னும் எட்டுவகை இசைக்கரணத்தானும் இசையினை ஓர்தலும், பண்வகைகளின் குற்றந்தீர இயக்கலும், செம்பகை முதலிய இசைக் குற்றமில்லாதியக்கலும், பதுமுகம் முதலிய எண்வகையிருக்கை யறிந்திருத்தலும், பிறவுமாம் என்க. இடப்பக்கத்தே யாழைத் தழுவி இயக்குதல் மரபு. சீறியாழ் இடவயிற்றழீஇ என இந்நூலிற் கூறினாற்போன்றே பெரும்பாணாற்றுப்படையினும் பேரியாழ் இடவயிற்றழீஇ என வருதல் காண்க.

நல்லிசை மடந்தை நல்லெழில் காட்டி
அல்லியம் பயங்கயத் தயனினிது படைத்த
தெய்வஞ் சான்ற தீஞ்சுவை நல்யாழ்
மெய்பெற வணங்கி மேலொடு கீழ்ப்புணர்த்து
இருகையின் வாங்கி இடவயின் இரீஇ

என்பதனானும் யாழியக்கும் கடனை உணர்க.

நைவளம் பழுநிய நயந்தெரி பாலை
கைவல் பாண்மகன் கடனறிந் தியக்க

என்னும் இத்தொடரோடே குறிஞ்சிப்பாட்டின்கண்,

நைவளம் பழுநிய பாலை வல்லோன்
கைகவர் நரம்பின் இம்மென இவரும்

என்றுவரும் அடிகளை ஒப்புக்காண்க இயங்காவையம் என்றது. பாயா வேங்கை, பறவாக் கொக்கு என்றாற்போன்று வெளிப்படை கூறியதுமாம். என்னை? வையம், வண்டி, உலகம் என்னும் பல பொருள் உணர்த்தும் ஒரு சொல்லாகலின் என்க. துனிகூர் எவ்வமென்றது உலக வாழ்க்கையினை வெறுத்தற்குக் காரணமான வறுமையின்னல் என்றவாறு. என்னை?

நெருப்பினுட் டுஞ்சலு மாகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பா டரிது  (குறள் : 1049)

என்பவாகலின், மாபெருந் துன்பமாகிய வறுமையைத் துனிகூர் எவ்வம் என்றார். இனி யாண்டேனும் சென்று பரிசில் தருவாரைத் தலைப்பட்டுப் பரிசில் பெறாதவழி இவ்வுலகில் வாழவியலாதென்னும்படி நல்குரவு நெருக்கி எழுப்புதலால், எழுந்து வழிச்செல்வார் என்பார் துயர் ஆற்றுப்படுப்ப என்றார். முனிவு - ஈண்டு வழிநடையான் உண்டாய வருத்தம். இனி இத்துணை வறுமைக்கும் காரணமாகிய தன் கலைத் தொழிலிடத்தே வெறுப்புறாது இவ் வல்லற்காலத்தும் இவ்வருஞ்சுரத்துள்ள வரி நீழலிருந்து யாழின்பமே துய்த்திருந்தான் ஆகலின், அதன்கண் உள்ள விருப்பமிகுதி கூறுவான் முனிவிகந்திருந்த முதுவாயிரவல என அவனைப் பாராட்டி விளித்தான் எனினுமாம். முதுவாய் - மூதறிவு வாய்த்தல். இரவலன் - பரிசிலன்.

1-மணிமலை என்பது தொடங்கி, 40-முதுவாயிரவல, என்னுந் துணையும், தொடர்ந்த இத் தொடரின் பொருள் இயைபு வருமாறு: மாநில மடந்தையின் முலை துயல் வரும் ஆரம்போன்ற புனல் உழந்த, கான்யாற்றுக் கொல்கரையிடத்துப் பூம்பொழிலின் கண், கதுப்பன்ன அறல் வெப்பமேறலின், ஐதுநடந்து, வெம்பரல் கிழிப்ப, பாலைநின்ற பாலைவழியில், மராத்த வரிநிழலிற்றங்கியும், கதுப்பு முதல் நுதல் ஈறாகவுடைய விறலியரின், அசைஇய அடியினை இளைஞர் வருடவும் சீறியாழைப் பாண்மகன் இயக்கவும் முனிவிகந்திருந்த இரவல! என்பதாம்.

41-50 : கொழுமீன் ............... வஞ்சியும் வறிதே, என்னுந் துணையும் ஒருதொடர். சேரர், பாண்டியர், சோழர் என்னும் மூன்று வேந்தரானும் ஆளப்படும் மூன்று தமிழ் நாட்டினும், இற்றை நாள் உள்ள வள்ளியோர் நல்கும் பரிசில்கள் சாலச்சிறிதென்னும்படி மிகுதியாகக் பரிசில் நல்குவான் நல்லியக்கோடன் எனக் கூறுமாற்றான் அந்நாட்டின் வளமும் சிறப்பும் கூறுவான் தொடங்கி முதலில் இத்தொடரின்கண் சேர நாட்டியல்பினைப் பாணன் கூறுகின்றான் என்க.

41-50 : கொழுமீன் ..................... வஞ்சியும் வறிதே

பொருள் : கொழுமீன் குறைய ஒதுங்கி - கொழுவிய மீன் துணிபடும்படி நடந்து, வள்இதழ் கழுநீர் - வளவிய இதழையுடைய செங்கழுநீர்ப் பூவை, மேய்ந்த-தின்ற, கயவாய் எருமை - பெரிய வாயையுடைய எருமை, பைங்கறி நிவந்த பசிய மிளகுக் கொடி படர்ந்த பலவின் நீழல் - பலாமரத்தின் நீழலிலே, மஞ்சள் மெல்இலை - மஞ்சளின் மெல்லிய இலை, மயிர்ப்புறம் தைவர - தனது மயிரையுடைய முதுகினைத் தடவாநிற்ப, விளையா இளங்கள் - நாற - முற்றாத இளைய தேன் மணக்கும்படி, மெல்குபு பெயரா - மென்று அசையிட்டு, குளவிப்பள்ளி - காட்டுமல்லிகையாகிய படுக்கையிலே, பாயல்கொள்ளும் -துயில்கொள்ளும், குடபுலம் - மேற்றிசைக்கணுள்ள நிலத்தைக் காக்கும், காவலர் மருமான் - மன்னராகிய சேரர் குடியிலுள்ளோன், ஒன்னார் - பகைவருடைய, வடபுலம் இமயத்து - வடக்கின்கண்ணுள்ளதாகிய நிலத்தின்கண்ணிற்கும் இமயமலையின்மிசை, வாங்கு வில் பொறித்த - வளையும் வில்லை எழுதிய, எழுஉறழ் - கணையத்தை மாறுபட்ட, திணிதோள் - திணிந்த தோளினையும், இயல் தேர் நடக்கின்ற தேரினையும் உடைய, குட்டுவன் -குட்டநாட்டை யுடையோனது, வருபுனல் வாயில் - பெருகிவருதலையுடைய நீரினையும், கோபுரவாயிலினையுமுடைய; வஞ்சியும் - வஞ்சி என்னும் ஊரும், வறிதே - தரும் பரிசில் சிறிதாயிருக்கும்.

கருத்துரை : கொழுவிய மீன்கள் துணிபடும்படி நடந்து, வளவிய இதழையுடைய செங்கழுநீர் மலரை மேய்ந்த எருமை, பசிய மிளகுக்கொடி படர்ந்த பலாமரத்தினது நீழலிலே, மஞ்சள்இலை தன் முதுகைத் தடவாநிற்பக் காட்டுமல்லிகைக் கொடியாகிய படுக்கையின் மேல், கள்மணங்கமழ அசையிட்டுத் துயில்கொள்ளாநின்ற, மேற்றிசைக்கண் உள்ள சேரநாட்டின் அரசர்குடிப் பிறந்தவனும், கணைய மரத்தை ஒத்த திண்ணிய தோளையுடையவனும், வடவிமயத்தே தன் வில்லிலச்சினை யிட்டவனும், குட்டநாட்டுக்குத் தலைவனுமாகிய மன்னன் உறையும் வஞ்சி என்னும் நகரும், இக்காலத்தே பரிசிலர்க்கு நல்கும் பரிசில் சிறிதாயிருக்கும் என்பதாம்.

அகலவுரை : கொழுமீன் என்றது, கொழுத்த மீன் எனநீர்வள மிக்க நாடு என்றதற்குக் குறிப்பேதுவாய் நின்றது. குறைதல்-எருமையின் குளம்பிற் பட்டுத் துண்டாதல், செங்கழுநீர் மேய்ந்தென்றது அந்நாட்டின் வளமிகுதியைக் குறிப்பாகக் காட்டிற்று. கயவாய் - பெரியவாய்.

தடவும் கயவும் நளியும் பெருமை

என்பது தொல்காப்பியம். பைங்கறி - பசிய மிளகுக்கொடி. சேரர் நாட்டின் செல்வங்களிற் றலைசிறந்தது மிளகு ஆகலின், அதனை எடுத்துக் காட்டினார். கழுநீர்மலரை மேய்ந்து எருமைமிளகுபடர்ந்த பலாநீழலிலே காட்டுமல்லிகைப் படுக்கையில் மஞ்சள் இலை முதுகு தைவரத் துயிலும் என்றது, சேரநாட்டின் நீர்வளம், நிலவளம், கூழின் பெருக்கம், அந்நாட்டில் வாழுமுயிர் எய்தும் இன்பம், இவையிற்றிற்கெல்லாம் காரணமான அரசியல் அறமுண்மை ஆகியவற்றை அறிதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் நின்றதென்க. என்னை?

இயல்புளிக் கோலோச்சு மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு  (திருக்குறள் : 545)

என்பவாகலின், உயிர்கள் அந்நாட்டின்கண் சென்றவழி நிரம்பிய உணவு கிடைக்கப்பெற்று, அமைதியுடையவாய் இன்புற்று உறங்கும் என்றற்கு எடுத்துக்காட்டாய் எருமை துயில்கோடலை உரைத்தார். இங்ஙனமே கம்பநாடரும்,

நீரிடை உறங்குஞ் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி
தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள்
தூரிடை உறங்கும் ஆமை துறையிடை உறங்கும் இப்பி
போரிடை உறங்கும் அன்னம் பொழிலிடை உறங்குத் தோகை

எனக் கோசலநாட்டின்கண் உயிர்கள் இன்புற்று வாழுந்தன்மையை அவை கவலாது உறங்குநிலை கூறிப் பெறவைத்தமை அறிக. எருமையின் முதுகினை மஞ்சள் தைவர என்றது, அந்நாட்டின்கண் ஓருயிர் மற்றோர் உயிர்க்கு இனிய செய்யுமல்லது இன்னா செய்தலில்லை என்னும் கருத்துடையது. குடபுலம் காவலர் என்றது அந்நாட்டரசரின் அருளுடைமை கூறியவாறு. என்னை? அரசரைக் குறிக்கும் சொற்களில், மன்னர், அரசர், வேந்தர், இறைவர், காவலர் என்ற சொற்கள் ஒவ்வொன்றும் மன்னரின் ஒவ்வொரு சிறப்பைக் குறித்து நிற்கும். அவற்றுள் காவலர் என்றது.

மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத்
தானதனுக் கிடையூறு தன்னாற்றன் பரிசனத்தால்
ஊனமிகு பகைதிறத்தாற் கள்வரா லுயிர்தம்மால்
ஆனபய மைந்துந்தீர்ந்து அறங்காப்பான் அல்லனோ.  (பெரிய.மநு:39)

என்றாங்கு மன்னுயிரின் அச்சந்தீர்த்துக் காக்குந் தொழிலைக் குறித்து நிற்றலான் என்க. கொழுமீன் என்பது தொடங்கி மருமான் என்னுந் துணையும் சேரநாட்டின் வளம் அரசியல், காத்தற்சிறப்பு முதலியன கூறிற்றாக. ஒன்னார் என்பது தொடங்கி, குட்டுவன் என்னுந் துணையும் சேரர்களின் வெற்றிச் சிறப்போதியவாறு. வடவிமயந் துணையும் பரவிக்கிடந்த பற்பல நாட்டினும் உள்ள பகைவரை அடர்த்துத் தம் வெற்றிக் கறிகுறியாக இமயக்கல்லில் தம் வில்லிலச்சினையைப் பொறித்த வீரவேந்தர் என்க. எழுவுநழ் திணிதோள், இயல்தேர் என்பன அவ்வெற்றி யுடைமைக்கு ஏற்ற அடைமொழிகளாதலறிக. பகை அடர்த்தலும், தம் நாட்டை அருள்வைத்து ஓம்பலுமே இறைவற்குச் சிறத்தலின், இச்சிறு தொடருள் இவ்விரண்டு தன்மையும் விளங்கக் கூறிய வித்தகம் உணர்க. இருபுனலும் வாய்ந்தமலையும் வருபுனலும் வாயில் வஞ்சி என்றார். வஞ்சியும் வறிதே என்றது, அத்தகைய வஞ்சியார் தரும் பரிசிலும் சிறிதென்னுமாறு நிரம்பப் பரிசில் தருவான் நல்லியக்கோடன் என்றவாறு.

மழை வெளுக்கக் கருகுமேனிக் கண்ணன் என்றாற்போல். வறிது-சிறிது. என்னை?

வறிது சிறிதாகும்

என்பது தொல்காப்பியம். முன்னர் வரும்,

மதுரையும் வறிதே, உறந்தையும் வறிதே

என்பனவற்றிற்கும் இவ்வாறு உரைத்துக் கொள்க.

குமரி யொடு வடவிமயத்து
ஒருமொழிவைத் துலகாண்ட
சேரலாதன்

என்னும் சிலப்பதிகாரத்தானும்,

வடதிசை எல்லை இமய மாகத்
தென்னங் குமரியோ டாயிடை அரசர்
முரசுடைப் பெருஞ்சமந் ததைய ஆர்ப்பெழ
........................... குட்டுவ!

என்னும் பதிற்றுப்பத்தானும், சேரர் ஆணை இமயம்வரை சென்றமை உணர்க. சேரர்தரும் பரிசிலைக்காட்டினும், பெரிதாக இருக்கும் நல்லியக்கோடன் நல்கும் பரிசில் என்றாராகக் கூறி நத்தத்தனார் மூன்று தமிழ் நாட்டினுள்ளும் சேரநாட்டினை மிக்குப் புகழ்ந்தவாறுணர்க. இனி, கழுநீர் மேய்ந்த எருமை நீழலிற்றுயிலும் குடபுலங்காவலர் மருமான் வஞ்சிதரும் பரிசிலும் சிறிதாம் எனப் பொருளியையு செய்க. இனி, இங்ஙனம் கூற அறியார், வஞ்சியிற் செல்லுதலிற் பயனில்லை என்கின்றான் என்றாரும் உளர். 50-அதா அன்று என்பது தொடங்கி, 67 - மதுரையும் வறிதே என்னுந் துணையும் ஒருதொடர். இதன்கண், மதுரையார் தரும் பரிசிலினும் நல்லியக்கோடன் நல்கும் பரிசில் பெரிது என்று கூறுமாற்றால் தமிழ்நிலை பெற்ற தாங்கரும் மகிழ்நனை மதுரையை உடைய பாண்டியநாட்டின் சிறப்பினைக் கூறுகின்றார் என்க.

50-67 : அதாஅன்று ................ மதுரையும் வறிதே

பொருள் : அதாஅன்று - அவ்வஞ்சியென்னும் ஊரன்றியும், நறவுவாய் உறைக்கும் - தேனைப் பூக்கள் தம்மிடத்திருந்து துளியாநிற்கும், நாகுமுதிர் நுணவத்து - இளமைமுதிர்ந்த நுணாமரத்தினது, அறைவாய்க் குறுந்துணி - வெட்டின வாயையுடைய குறிய மரக்கட்டையை, அயில்உளி பொருந - கூர்மையுடைய உளிகள் உள்ளேசென்று குடைந்த, கைபுனை செப்பங்கடைந்த - கைத்தொழிற்றிறத்தாற் செம்மை செய்து கடைந்த மாலையினை யுடையதும், செய்பூ கண்ணி - நெட்டியாற்செய்த பூவினையுடைய மாலையை, செவிமுதல் திருத்தி - செவியடியிலே நெற்றிமாலை யாகச் சூட்டப்பட்டதும், நோன்பகட்டு உமணர் - வலியினையுடைத்தாகிய எருத்தினையுடைய உப்பு வாணிகருடைய, ஒழுகையொடு வந்த - வண்டி ஒழுங்கோடே வந்ததும், மகாஅர் அன்ன மந்தி-அவர்கள் வளர்த்தலால் அவர்கள் பிள்ளைகளைப் போன்றதுமாகிய மந்தி, மடவோர் - மடப்பத்தையுடைய மகளிரின் நகாஅர் அன்ன-எயிற்றை ஒத்த, நளிநீர் முத்தம்-செறிந்த நீர்மையுடைய முத்தினை, வாள்வாய் எருந்தின் - வாளின் வாய் போலும் வாயையுடைய கிளிஞ்சிலின், வயிற்றகத்து அடக்கி-வயிற்றிடத்தே இட்டுப்பொதிந்து, நல்கூர் நுசுப்பின் - நல்கூர்ந்த இடையினையுடைய, தோள் புறமறைக்கும் - தோளையும் முதுகையும் மறைக்கின்ற, உளர் இயல் ஐம்பால் - அசைகின்ற இயல்பினையுடைய ஐந்து பகுதியாய கூந்தலினையுடைய, உமட்டியர் - உப்பு வாணிகத்தியர், ஈன்ற - பெற்ற, கிளர்பூண் புதல்வரொடு - விளங்குகின்ற அணிகலன்களையுடைய பிள்ளைகளுடனே, கிலுகிலி ஆடும் - கிலுகிலுப்பையாகக்கொண்டு விளையாடும், தத்துநீர் வரைப்பின் - முரிகின்ற நீரைத் தனக்கு எல்லையாகவுடைய, கொற்கைக் கோமான் - கொற்கை என்னும் ஊர்க்கு அரசனும், தென்புலம் காவலர் - தெற்கின் கண்ணதாகிய நிலத்தினைக் காத்தற் றொழிலுடையார், மருமான் - குடியிலுள்ளானும், ஒன்னார்- பகைவருடைய, மண்மாறுகொண்ட - நிலத்தை மாறுபாட்டாலே கைக்கொண்ட. மாலை வெண்குடை -  முத்தமாலை யணிந்த வெண்கொற்றக் குடையினையும், கண் ஆர் கண்ணி - கண்ணுக்கு அழகுநிறைந்த கண்ணியினையும் உடையானுமாகிய, கடுந்தேர்ச்செழியன் - கடிய தேரினை உடைய பாண்டியனுடைய, தமிழ் நிலைபெற்ற - தமிழ் வீற்றிருந்த, தாங்கரும் மரபின் - பொறுத்தற்கரிய முறைமையினை யுடைய, மகிழ்நனை - மன மகிழ்ச்சியைத் தோற்றாநின்ற, மறுகின் தெருவினையுடைய, மதுரையும் வறிதே - மதுரை தரும் பரிசிலும் சிறிதாயிருக்கும்.

கருத்துரை : அவ்வஞ்சியே அன்றி, நுணாமரத்தாலே செய்த குறுந்துணி மணிமாலையினையுடைய மார்பினையும் செய்பூங்கண்ணி சுற்றிய நெற்றியினையும் உடையதாய், உப்புவாணிகர் வண்டியோடே வந்த அவர் தம் மக்களை ஒத்த மந்தி, வாள்போலும் வாயையுடைய கிளிஞ்சிலின் வயிற்றிலே எயிற்றை ஒத்த முத்துக்களைப் பெய்துமூடிக் கிலுகிலுப்பையாகக் கொண்டு நுசுப்பையும் தோள்புற மறைக்கும் ஐம்பாலையும் உடைய உப்பு வாணிகத்தியர் ஈன்ற பிள்ளைகளோடே கூடி விளையாடுகின்ற கடற்கரைப் பட்டினமாகிய கொற்கைக்கு வேந்தனும், தெற்கிலுள்ள பாண்டி நாட்டை முழுதும் காவல்செய்யும் பாண்டியர்மரபிற்றோன்றியவனும், பகைவர் நிலத்தைக் கைக்கொண்டவனும், முத்தணிந்த கொற்ற வெண்குடையானும், கண்ணியுடையானும், கடிய தேரினையுடையானும் ஆகிய செழியனின், தமிழ் வீற்றிருந்தமையானே பொறுத்தற்கரிய மனமகிழ்ச்சியைத் தோற்றுகின்ற தெருவினையுடைய மதுரையிற் பெறும் பரிசிலும் சிறிதாயிருக்கும் என்பதாம்.

அகலவுரை : அது அன்று என்பன,

அன்று வருகாலை ஆவா குதலும்
ஐவரு காலை மெய்வரைந்து கெடுதலும்
செய்யுள் மருங்கின் உரிததென மொழிப  (தொல்.எழுத்ததிகாரம் : 258)

என்னும் விதியானே அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதா அன்று என்றாராயிற்று. அதாஅன்று - அஃதன்றியும் என்னும் பொருட்டு. அது என்னும் சுட்டுவஞ்சியைச் சுட்டி நின்றது. நறா

குறியதன் கீழாக் குறுகலும்  (நன்னூல் : 172)

என்னும் விதியால் நற என்றாகி உகரம் ஏற்றது. நறவு - தேன். உறைத்தல்-துளித்தல். தேனைத் துளைத்தலையுடைய மலர் பொருந்திய நுணா என்றவாறு. நுணா - நுணவு என்றாகி அத்துச்சாரியை பெற்று நுணவத்து என நின்றது. இதற்கும் நறவிற்குரைத்த விதியே கொள்க. அறைவாய் - அற்ற இடம். வெட்டுண்ட இடம் என்றவாறு. நுணா மரத்தின் கட்டையிலே மணிகள் கடைந்து மாலைபுனைதல் வழக்கம். உப்பு வாணிகர் தாம் வளர்த்த மந்தியின் மார்பில் நுணா மணிமாலையாற் கோலஞ் செய்துள்ளாராகலின் அங்ஙனம் கூறினர். செப்பம்-செம்மை செய்தல். ஆசிரியர் நச்சினார்க்கினியர் சாதிலிங்கம் பூசிச் செம்மை நிறமாக்கப்பட்ட என்பர். குறுந்துணி -சிறிய கட்டைத்துண்டு. ஆயில்-கூர்மை. கூரிய உளியால் அந்த மணிகள் துளைக்கப்படுதலால் அயில்உளி பொருத என்றார். கடைந்த : பலவறி சொல்: கடையப்பட்ட மாலை என்பதாம். கடைந்தவற்றையுடைய மார்பென்க. செய்பூ-நெட்டியாற் செய்த செயற்கைப்பூ. இதனை,

கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்
பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களும்  (இந்திரவி : 334)

என்ற சிலப்பதிகாரத்தானும், இப்பகுதிக்கு, கிழிகிடை என்பவற்றாற் புட்பம் வாடாமாலை பொய்க்கொண்டை முதலிய உருப்பிறக்கும் தொழில்களை மிகுத்துக்காட்டி குற்றமற்ற கைத்தொழிலால் வேறுபட்ட இயல்புடையோரும் என அடியார்க்கு நல்லார் வரைந்த உரையானும் உணர்க. நோன்பகடு - வலியுடைய எருது. உமணர் - உப்புவிற்கும் வணிகர். ஒழுகை - ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து செல்லும் வண்டியின் ஒழுங்கு. உப்பு வாணிகர் வண்டிகளில் உப்பு மூட்டை ஏற்றிக்கொண்டு விற்கச் செல்லும்போது தம் மனைவி மக்களுடன் போதல் வழக்கமாதலின் அவருடன் அவர் பிள்ளைபோல் வளர்க்கப்பட்ட பந்தியும் வந்ததென்க. மகார் - மக்கள். இனி மந்தியும் மகப்போறலின் அங்ஙனம் கூறினார் எனலும் ஆம்.

கடும்பறைக் கோடியர் மகாஅ ரன்ன
நெடுங்கழைக் கொம்பர்க் கடுவன்  (236)

என்றார் மலைபடுகடாத்தினும்.

உச்சிக் கிவரும் கட்கின் கடுவன்
வீழ்ந்த திங்களை விசும்புகொண் டேறும்
தெய்வ மகாரின் ஐயுறத் தோன்றி  (1-40)

என்பது பெருங்கதை. நகார் - சிரிப்பு; ஈண்டு எயிற்றுக்கு ஆகுபெயர் என்க.

பறிமுறை நேர்ந்த நகாராகக் கண்டோர்க்கு  (13-18)

என்றார் கலியினும். நளிநீர் முத்தம் - கடலிற் றோன்றிய முத்தம் எனினுமாம். முத்துக்களிற் கொற்கையின்கட் கிடைக்கும் முத்துத் தலை சிறந்தது என்ப. இதனை,

விளைந்து முதிர்ந்த விழுமுத்தின்
இலங்குவளை இருஞ்சேரிக்
கட்கொண்டிக் குடிப்பாக்கத்து
நற்கொற்கையோர் நசைப்பொருந (135-8)

என்னும் மதுரைக் காஞ்சியானும் உணர்க; அல்லதூஉம்,

பல்லரண் கடந்த பசும்பூட் பாண்டியன்
மல்குநீர் வரைப்பிற் கொற்கை முன்றுறை
ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரை
ஓத வெண்டிரை உதைத்த முத்தம்  (தொல்.களவு, 11.ந.மேற்.கண்ணே)

என்பதனானும் அறிக. பாண்டிநாட்டிற் கிடைக்கும் பொருள்களிற் றலைசிறந்தன முத்தும் முத்தமிழுமே ஆகலின், இந்த இரண்டு சிறப்புடைமையுமே தேர்ந்தெடுத்துப் புகழ்வாராயினர் என்க. இவ்வாறே நல்லிசைப் புலவரான் கம்பநாடரும், தமது இராமாயணத்து, நாடவிட்ட படலத்தின்கண் (31),

தென்றமிழ்நாட் டகன்பொதியிற் றிருமுனிவன்
தமிழ்ச்சங்கம் சேர்கிற் றீரேல்
என்றுமவண் உறைவிடமாம் ஆதலான்
அம்மலையை இடத்திட் டேகி

எனத் தமிழினைப் பாராட்டியும், மீண்டும் ஆறுசெல்படலத்தும், பாண்டிநாட்டினைப் புகழ்வார், அந்நாட்டின் சிறப்பிற்கு,

அத்தி ருத்தகு நாட்டினை அண்டர்நா
டொத்தி ருக்கும்என் றால்உரை ஒக்குமோ
எத்த லத்தினும் ஏழுல கும்புகழ்
முத்தும் முத்தமி ழும்தந்து முற்றுமோ  (கம்ப,ஆறுசெல்:53)

என, முத்தையும் முத்தமிழினையும் விதந்தெடுத்தோதுதல் காண்க.

தத்துநீர் வரைப்பின் கொற்கை என்றது, துறைமுகப்பட்டினமாகிய கொற்கை என்றபடி. வெண்குடை - பாண்டியமன்னர்களின் குடியோம்பற் சிறப்பையும், கடுந்தேர் வெற்றிச் சிறப்பையும் உணர்த்தி நின்றன. தமிழ் நிலைபெற்ற என்றது, இரண்டாம் ஊழியதாகிய இடைச்சங்கத்துத் தொல்காப்பியம் புலப்படுத்திய, மாகீர்த்தியாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் அவைக்களத்தே, அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் என்றித் தொடக்கத்தார் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தமையானும் அவ்வாறே கடைச்சங்கத்தே சிறு மேதாவியார் முதலிய நல்லிசைப்புலவர் பலர் சங்க மிருந்து தமிழ் ஆராய்ந்தமையானும் நிலந்தரு திருவிற்பாண்டியன் முதலிய மன்னர்களும் அச்சங்கங்களின் வளர்ச்சிக்காவன செய்து செந்தமிழை வளர்த்தமையானும், தமிழ் வளம்பெற்று அழியாது நிலவுவதற்கு இடமாக அமைந்த (மதுரை) என்றவாறு. தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகு என்றது, ஏனைநாட்டினின்றும் செந்தமிழ் இன்பம் நுகர வரும் புலமையாளர், மதுரையின் மறுகினை எய்தியவுடனேயே அம் மறுகிடத்தே வழங்கும் மக்கள் பேசும் வீறுடைய தமிழ்ச்சொல்லைக் கேட்பரன்றே! அங்ஙனம் கேட்குந்தோறும் அவருள்ளத்தே பொறுத்தற்கரிய மகிழ்ச்சியைத் தோற்றுதற்குக் காரணமான மறுகு என்றவாறு. இனி, மகிழ்நனை மறுகு என்றற்கு மகிழ மரங்கள் மலரும்மறுகு என்றுங் கூறலாம். மகிழ்-மகிழ்ச்சி, மகிழமரம். நனை-தோன்றுதல்; அரும்புதல். இவ்வாற்றால் நல்லிசைப் புலவரான நத்தத்தனார் தமிழ் தந்த மதுரையைப் போற்றித் தம் மொழியன்பைப் புலப்படுத்தினாராதல் காண்க.

உமணர் ஒழுகையொடு வந்த மந்தி, உமட்டியர் புதல்வரோடே கிலுகிலியாடும் கொற்கைக் கோமானும், தென்புலங் காவலர் மருமானும் ஆகிய செழியனுடைய மதுரை தரும் பரிசிலும் சிறிதாகும் என்று இயைத்துக் கொள்க. இனி, 67-அதாஅன்று என்பது தொடங்கி, 83 - உறந்தையும் வறிதே என்னுந் துணையும் ஒருதொடர்; இதன் கண், உறந்தையிற் சென்று பெறும் பரிசிலும் சிறிதென்னும் படி நல்லியக்கோடன் நிரம்பப் பரிசில் நல்குவான் என்னுமுகத்தானே முத்தமிழ் நாட்டில் எஞ்சிய சோழநாட்டின் சிறப்பினைத் தெரித்தோதுகின்றார் என்க.

67-83 : அதாஅன்று ............... உறந்தையும் வறிதே

பொருள் : அதாஅன்று - அம்மதுரையே அன்றியும், நறுநீர்ப் பொய்கை அடைகரை நிவந்த துறுநீர்க் கடம்பின் - நறிய நீரையுடைய பொய்கையினது அடைகரையிலே நின்று வளர்ந்த செறிந்த நீர்மையையுடைய கடம்பினுடைய, துணையார் கோதை - இணைதல் நிறைந்த மாலை, ஓவத்தன்ன உண்டுறை மருங்கின் - ஓவியம் வரைந்தாற்போன்ற அழகுடைய நீர் உண்ணும் துறையின் பக்கத்தே, கோவத்தன்ன கொங்குசேர்பு உறைத்தலின் - இந்திரகோபத்தை ஒத்த தாதை உதிர்த்தலாலே, வருமுலையன்ன வண்முகை உடைந்து - எழுகின்ற பெரிய முலையையொத்த பெரிய முகை நெகிழ்ந்து திருமுகம் அவிழ்ந்த தெய்வத்தாமரை - அழகினையுடைய முகம்போல மலர்ந்த தெய்வத்தன்மையுடைய தாமரையிடத்து, ஆகில் அங்கை அரக்குத் தோய்ந்தன்ன - குற்றமில்லாத அங்கையைச் சாதிலிங்கம் தோய்ந்தாலொத்த, சேயிதழ் பொதிந்த - சிவந்த இதழ்சூழ்ந்த, செம்பொன் கொட்டை - செம்பொன்னாற் செய்தாலொத்த பொகுட்டின்மிசை, ஏம இன்றுணை தழீஇ இறகுளர்ந்து - தன் உயிர்க்குப் காவலாகிய இனிய பெடையைத் தழீஇச் சிறகுகளை அசைத்துக்கொண்டு, காமருதுமபி காமரம் செப்பும் - விருப்பம் மருவின் துமபி சீகாமரம் என்னும் பண்ணை இசைக்கும், தண்பணை தழீஇய தளரா இருக்கை-மருதநிலம் சூழ்ந்த அசையாத குடியிருப்பினையுடைய, குணபுலம் காவலர் மருமான் - கிழக்கின் கண்ணதாகிய நிலத்தைக் காத்தற் றொழிலையுடையார் குடியிலுள்ளான், ஓங்கு எயிற்கதவம் உருமுச்சுவல் சொறியும் - ஓங்கி நிற்றலையுடைய மதிலினது கதவத்தில் உருமேறு தன் கழுத்தைத்தினவாற் றேய்க்கும், ஒன்னார் தூங்கு எயில் எறிந்த தொடிவிளங்கு தடக்கை - பகைவர் தூங்கெயிலை அழித்த தொடி விளங்கும் பெருமையை உடைய கையினையும், நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன் - ஐயுற்று ஆராயப்படாத உலகறிந்த நல்ல புகழினையும் நல்ல தேரினையுமுடைய சோழனது, ஓடாப் பூட்கை உறந்தையும் வறிதே - தனபால் வாழ்வோர் ஓடாமைக்குக் காரணமான மேற்கோளினையுடைய உறந்தையென்னும் ஊர்தரும் பரிசிலும் சிறிதாயிருக்கும்.

கருத்துரை : அந்த மதுரையேயன்றி, நறிய நீர்நிரம்பிய அடைகரையிலே நின்று வளர்ந்த, செறிவுடைய கடம்பினுடைய மாலைபோன்ற மலர்கள் இந்திரகோபம் போன்ற தாதினை உதிர்த்தலாலே, ஓவியம் வரைந்தாலொத்த எழின்மிக்க நீருண் துறையின் மருங்கே மலர்ந்துள்ள தாமரை மலரினது அரக்கூட்டினாற்போன்று சிவந்துள்ள அகவிதழாற் சூழப்பட்ட, பொன்னிறப் பொகுட்டின்மேலே தும்பிதன் பெடையைத் தழுவிக்கொண்டு இறகினை அசைத்துச் சீகாமரம் என்னும் பண்ணை எழீஇப் பாடாநின்ற மருதநிலம் சூழ்ந்த கிழக்கின் கண்ணுள்ள நிலத்தை ஓம்பும், சோழமன்னர்களின் தொல்குடியில் தோன்றியவனும், பகைவருடைய தூங்கெயிலை அழித்தவனும், தொடிதிகழும், கையையுடையோனும், சீர்த்தி மிக்கவனும், நல்ல தேரினை உடையோனுமாகிய செம்பியனது, தன்பால் வாழும் குடிகள் ஓடாமைக்குக் காரணமான மேற்கோளுடைய உறந்தை யென்னும் ஊர் நல்கும் பரிசிலும் சிறிதாயிருக்கும் என்பதாம்.

அகலவுரை : பொய்கை - மனிதரால் ஆக்கப்படாத இயற்கை நீர் நிலை அடைகரை : வினைத்தொகை; நீரின் அடைத்து நிற்கும் கரை என்க. நீருண்டற்குப் பலரும் அடையும் கரையுமாம் நிவத்தல் - உயர்தல். துறுநீர் -செறிந்த தன்மை. துணையார்கோதை - இணைக்கப்பட்ட மாலை: கடம்பின் பூ, புனைந்த மாலை போறலின், துணையார் கோதை என்றார். கோதை: உவம ஆகுபெயர். ஓவம்-ஓவியம்; சித்திரம்; நீருண்துறை பொழில் சூழ்ந்து அழகிதாயிருத்தல் ஓவியம் வரைந்தாற் போன்றிருந்த தென்றபடி. துணையார் கோதை தாதுறைத்தலால் ஆசிலங்கை அரக்குத் தோய்ந்தன்ன சேயிதழ் என்றியைத்தலே நூலாசிரியர் கருத்தென்க. இயற்கையிலே சிவந்த மகளிரின் அகங்கை அரக்கூட்டியக்கால் மிக்குச் சிவத்தல்போன்று, செந்தாமரையின் அகவிதழின்கண் கடப்பமலரின் செந்நிறத்தாதுதிர்ந்து மிகச்சேந்த என்றவாறு, இதனை ஆசிரியர் நச்சினார்க்கினியர், (60) துணையார் கோதை (71) கொங்கு உறைத்தலின் (70) ஓவத்தன்ன உண்டுறை. எனக்கொண்டு கூட்டி தாதை உதிர்த்தலின் சித்திரத்தை ஒத்த உண்டுறை, என உண்டுறை சித்திரத்தை ஒத்தற்கு ஏதுவாக்கி உரைத்தனர்.

இனி, செந்தொடையஞ் செய்யுட் பொலிவு செய்யுங்காற்கொன்றையும், கடம்பும் போல நின்றவாறே நின்று தொடைப்பொலிவு செய்யும் என்பதாம், எனப் பேராசிரியர் இயற்கையின் மாலைபோன்ற கடம்பினைச் செந்தொடைக்கு உவமை கூறுதலும் காண்க (தொல் செய் 94). வருமுலை; வினைத்தொகை. முலை. தாமரைமுகைக்கும், திருமுகம் தாமரை மலர்க்கும் உவமை;

பொருளே உவமம் செய்தனர் மொழியினும்
மருளறு சிறப்பினஃ துவம மாகும்

என்னும் தொல்காப்பிய விதியால் இங்ஙனம் பொருளை உவமமாக்குதல் அமையும் என்க. இந்நூற்பாவிற்குப் பேராசிரியரும்,

வருமுலை யன்ன வண்முகை உடைந்து
திருமுக மவிழ்ந்த தெய்வத் தாமரை  (72-3)

என்றவழி, வருமுலையும், திருமுகமும் ஈண்டு உவமையாகி முகையும், பூவும் பொருளாயின; ஆண்டு முலையும் முகமும் உயர்ந்தவாகச் செய்தமையின் அவையே உவமம் ஆயின என்று, இவ்வின்பம் நிறைந்த அடிகளையே எடுத்துக் காட்டாக்கிப் பாராட்டிப் போந்தமை அறிக. வண்முகை - பெரிய மொட்டு. திரு - அழகு. தெய்வத்தாமரை என்றது, தெய்வக்காட்சி போன்ற காட்சியின்பம் நல்கும் தாமரை என்றவாறு; இனித் திருமகள் உறைதற்கிடமாகலின் தெய்வத்தாமரை என்றார் எனலுமாம். ஆசு-குற்றம். அங்கை - அகங்கை; உள்ளங்கை.

அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே
முதனிலை ஒழிய முன்னவை கெடுதலும்
வரைநிலை இன்றே ஆசிரி யற்க
மெல்லெழுத்து மிகுதல் ஆவயி னான   (தொல்.எழு:315)

என்னும் விதியால் அகங்கை-அங்கை எனப் புணர்ந்தது. செம்பொன் கொட்டை-செவ்விய பொன்னிறமைந்த பொகுட்டு. ஏம இன்றுணை - என்றது பெடைவண்டினை. தன் காதல் ஆண் வண்டின் உயிர்க்கும் காவலாய் அமைந்து இன்பஞ் செய்யும் துணை என்றவாறு. மருதநிலம் காதலர் ஊடியுங் கூடியும் இன்ப நுகர்தற்குரிய இடமாகலான் அந்நிகழ்ச்சியினை வண்டின் மேலேற்றிக் கூறினார். எனவே, தாமரைப் பூம்பொகுட்டின் வண்டுகள் மகிழ்தல்போல மாந்தர் தம் ஏம இன்றுணையொடு கூடிக் களித்து வாழும் சோழநாடென நாட்டினைப் புகழ்ந்தபடியாம் என்க. காமர் -விருப்பம்; அழகுமாம். தண்பணை குளிர்ந்த வயலையுடைய மருதநிலம். தளரா இருக்கை என்றது, சோழநாட்டின் சிறப்பியல்பினை விதந்தெடுத்து ஓதியவாறு. என்னை?

பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர் பழவிற லூர்கள்  (சிலப்.நாடு)

மலிந்து கம்பமில்லாக் கழிபெருஞ் செல்வர் மிக்கு ஆற்றாமாக்கட்கு ஆற்றுந்துணையாவார் அல்லது உண்டி முதலியவற்றை நாடித் தன்கண் உறைவோர் அயல்நாடுசெல்ல வேண்டாச் செல்வச் சிறப்புடைய நாடென்பார், தளரா இருக்கைக் குணபுலம் என்றார் என்க. சோணாடு சோறுடைத் தென்றுலும் அறிக. தளரா இருக்கை என்றதற்குத் தம் அறவொழுக்கத்தே தளராத குடிகள் என்றுலுமாம். இதுகாறும் சோணாட்டின் பெருமைகூறி அத்தகைய பெருமையுடையதாகத் திகழுமாறு முறைசெய்து காக்கும் குணபுலங் காவலர் எனச் செங்கோன்மைச் சிறப்போதி இனி அச் சோழவேந்தரின் வெற்றிச் சிறப்போதுகின்றார் என்க. சோழ மன்னர் வெற்றியைப் புகழும்போது நல்லிசைப் புலவர் பலர் எடுத்தோதும் வரலாற்றினையே இவ்வாசிரியரும் எடுத்தோதுகின்றார் என்க. அது வருமாறு :

முப்புரத்து அசுரர்போன்று, பண்டொருகாலத்தே ஒருசில அசுரர் வானத்தே இயங்குதலும், வதிதலுமுடைய மூன்று மதில்களமைந்த அரண்மனையைத் தெய்வத்தின்பால் வரமாகப் பெற்றனர் என்றும், அவர் அவ்வரணகத்தே உறைந்து, நினைத்த இடத்திற்கு அவ்வரணோடே சென்று, அந்தணர், அறவோர் முதலிய நன்மக்களைப் பெரிதும் நலிவாராயினர் என்றும், அவ்வசுரர்களைச் சோழமன்னன் ஒருவன் எதிர்ந்து, அவர்தம் மாயக்கோட்டையையும் அழித்து, மண்ணுலகுற்ற இடுக்கண் களைந்தான் என்றும், அச்சிறப்பால் அம் மன்னன் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் எனச் சான்றோராற் போற்றப்பட்டான் என்றும் கூறுப; இதனை,

வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப
எயில்மூன் றெறிந்த இகல்வேற் கொற்றமும்  (சிலப்:27-164)

என்றும்,

தூங்கெயின் மூன்றெறிந்த சோழன் (சிலப்: 5-29)
என்றும், வரும் சிலப்பதிகாரத்தானும்,

தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்  (மணி: 1:4)
என்று வரும் மணிமேகலையானும்,

ஒன்னார் உட்கும் துன்னருங் கடுந்திறல்
தூங்கெயில் எறிந்தநின் னூங்கணோர்  (புறம்:39)

என்னும் புறத்தானும்,

வீங்குதோட் செம்பியன் சீற்றம் விறல்விசும்பிற்
றூங்கு மெயிலும் தொலைத்தலால்  (பழமொழி:49)

என்னும் பழமொழியானும்,

தேங்கு தூங்கெயில் எறிந்த அவனும்  (கலிங்.இராச: 17)

என்னும் கலிங்கத்துப் பரணியானும்,

கூடார்தம் தூங்கும் எயிலெறிந்த சோழனும்

என்னும் விக்கிரமசோழன் உலாவானும், பண்டைநாட் புலவரும் பிற்றைநாட் புலவரும் போற்றிக் கூறுதல் உணர்க. ஓடாப் பூட்கை உறந்தை யென்றது அந்நிலத்துக் கோழி அயல் நிலத்து யானையைப் போரிடத்தே ஓடச் செய்துதான் ஓடாமைக்குக் காரணமான மறப்பண்புடைய உறந்தை என்றற்கு. இதனை,

முறஞ்செவி வாரணம் முன்சம முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்தென்  (சிலப்.10: 247-8)

என்னும் சிலப்பதிகாரத்தானும் உணர்க.

இனி 41ஆம் அடி தொடங்கி 83ஆம் அடிகாறும் செந்தமிழ் நாட்டு மூவேந்தரையும் சமநிலையில் வைத்து இப்புலவர் பெருமான் சிலப்பதிகாரத்தே இளங்கோவடிகளார் போன்று புகழ்ந்த நயமும், ஒவ்வொருவர்க்கும் அருளுடைமை, ஆற்றலுடைமை என்னும் இரு பெருஞ் சிறப்பையும் எடுத்தோதிப் போதலும், இவர்க்குச் செந்தமிழரசரிடத்தும் நாட்டினிடத்தும் உள்ள பேரன்பைப் புலப்படுத்துதல் அறிக. அடைகரை நிவந்த கடம்பின் கோதை உண்டுறை மருங்கின் கொங்கு உறைத்தலின், அரக்குத் தோய்ந்தன்ன இதழ் பொதிந்த கொட்டையின்மேல், துணைதழீஇ, வண்டு சீகாமரம் செப்பும், தண்பணை தழீஇய குணபுலம் காவலர் மருமான் செம்பியன், உறந்தையும் வறிதே என இயைத்துக் கொள்க. இனி, 83-அதா அன்று என்பது தொடங்கி, 129 சென்றனமாக என்னுந் துணையும் ஒருதொடர். இதன்கண், பேகன் முதலிய தமிழ்வள்ளல் எழுவர் பூண்டு நடத்திய ஈகைச் செந்நுகமும் இந்நாள் நல்லியக்கோடன் ஒருவனே தாங்குகின்றான் என, அவனைப் புகழ்ந்துரைக்குமுகத்தானே அவ்வேழு வள்ளல்களின் சிறப்பும், நல்லியக்கோடன் பெருமையும் கூறுகின்றார் என்க.

1. பேகன்

83-87 : அதாஅன்று ........................ பேகனும்

பொருள் : அதாஅன்று - அவ்வுறந்தையே அன்றியும், வானம் வாய்த்த வளமலைக்கவான் - மழை பருவம் பொய்யாமல் பெய்கையினாலே உண்டான செல்வத்தையுடைய மலைப்பக்கத்து; கானம் மஞ்ஞைக்கு - காட்டிடத்தே திரியும் மயில் அகவியதனைக் குளிரால் வருந்தி அகவியதென்று கருதி அருண் மிகுதியாலே, கலிங்கம் நல்கிய அருந்திறல் அணங்கின ஆவியர் பெருமகன் - தன் போர்வையைத் தந்த அரிய வலிமையுடைய வடிவமுள்ள ஆவியர் குடியிற்பிறந்த பெரிய மகன், பெருங்கல் நாடன் பேகனும் - பெரிய மலைநாட்டையுடைய பேகன் என்னும் வள்ளலும்,

கருத்துரை : அவ்வுறந்தையும் தரும் பரிசில் சிறிதாகுமாகுதலால் அதனையும் ஒழித்துத், தகுந்த பரிசில் தரும் இடம் பிறவின்மையான் பருவமழை பொய்யாது பெய்தலால் வளமிக்க மலைப்பக்கத்துக் காட்டிற்றிரிந்த மயில் அகவியதனைக் கேட்டு அதுகுளிரால் வருந்தி அகவிற்றாகக் கருதிப் பேரருள் உண்மையால் தனது போர்வையைக் கொடுத்த வலிகெழுமிய வடிவமுடைய ஆவியர் குடியிற்றோன்றிய பெருந்தகையாகிய பெரிய மலை நாட்டையுடைய பேகன் என்னும் வள்ளலும், என்பதாம்,

அகலவுரை : வானம் - மழைக்கு ஆகுபெயர். வானம் வாய்த்தலாவது வேண்டுங்காலத்தே பொய்யாது மழை பெய்தல். வானம் வாய்த்தலாலே வளமுடைத்தாகிய மலை என்றவாறு. இது பேகனின் செங்கோன்மைச் சிறப்பைக் குறிப்பான் விளக்கி நின்றது; என்னை?

கோனிலை திரிந்திடிற் கோணிலை திரியும்
கோணிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்
மாரிவறங் கூரின் மன்னுயிர் இல்லை
மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்
தன்னுயிர் என்னுந் தகுதியின் றாகும்  (மணி.துயிலெ:8)

என்பவாகலான், கோள் நன்னிலை நின்று மாரி வளங்கூர்தல் கோன் நிலை திரியாது அறத்தின் நிலைத்து நின்றவழியே நிகழும் என்பது போதருதலானும், அல்லதூஉம்,

மழை தொழிலுதவ மாதிரங் கொழுக்கத்
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய
நிலனும் மரனும் பயனெதிர்பு நந்த
...............................................
உலக மாண்ட உயர்ந்தோர் மருக  (மதுரைக்: 10-12.23)

என்னும் மதுரைக் காஞ்சியில், வானம் வாய்த்தற்குச் செங்கோன்மையை ஏதுவாக்கிக் கூறுதலானும், வள்ளுவப் பெருந்தகையாரும்,

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு  (திருக்குறள்:545)

என்று கூறுதலானும் இக்கருத்து வலியுறுதலுணர்க. மயிலினை வீட்டில் வளர்த்தலும் உண்மையான் வாளா மயிற்குக் கலிங்கம் நல்கிய என்றவழி, பேகன் தன் அரண்மனையிடத்தே தன்னால் வளர்க்கப்பட்ட மயிலுக்குக் கலிங்கம் நல்கினான் போலும் எனக் கருதப்பட்டு அவனது அருளுடைமை சிறவாதொழியும் என்று கருதிக் காட்டிடத்தே திரியும் மயிலுக்கு என்பார் கானமஞ்ஞைக்கு என இயம்பினார் என்க. கலிங்கம்-ஆடை; ஈண்டுப் போர்வை. இது கலிங்க நாட்டின்கண் நெய்யப்படுதலானே அவ்வாடைக்கு ஆகுபெயராய் நின்றதென்க : இவ்வாடை உயர்ந்த ஆடை என்பது,

நுரையென விரிந்த நுண்பூங் கலிங்கம் (சிலப்.22:21)

எனச் சிலப்பதிகாரத்தினும்,

நுரைபுரை கலிங்கம்

எனக் கதையினும் பிறாண்டும் கூறுமாற்றான் அறியலாம். மயில் அகவியதைக் கேட்டவுடன் அது வருந்தியது என்று நினைத்துத் தனது போர்வையை அதற்கீந்தான். இங்ஙனம் உடுக்கையிழந்தவன் கைபோலப் பிறர் இடுக்கண் களைய விரைதற்குக் காரணமாவது அவனது அருளுடைமையேயாகும். மயில் போர்வையைப் பயன்படுத்திக் கொள்ளுமா? கொள்ளாதா? என்னும் பகுத்தறிவைக் கீழ்ப்படுத்தி அருளுணர்ச்சி அவனகத்தே கடல்போற் பெருகி நிற்றலால் இத்தகைய செயல் செய்ய நேர்ந்தது. இத்தகைய நிகழ்ச்சிகளைக் கொடைமடம் என்று சான்றோர் போற்றிக் கூறுப. இக்கொடைமடச் சிறப்பையே இப்பேகவள்ளலைப் பாடிய நல்லிசைப் புலவராகிய பரணரும்,

அறுகுளத் துகுத்தும் அகல்வயற் பொழிந்தும்
உறுமிடத் துதவாது உவர்நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழற்காற் பேகன்
கொடைமடம் படுத லல்லது
படைமடம் படான்பிறர் படைமயக் குறினே  (புறம்: 142)

உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்
படாஅ மஞ்ஞைக் கீத்த எங்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்துணை யாயினும் ஈத்தல் நன்றென
மறுமை நோக்கின்றோ வன்றே
பிறர், வறுமைநோக் கின்றவன் கைவண் மையே  (புறம். 141)

என அருமையாகப் பாடிப் பரவுவாராயினர்.

அருந்திறல் அணங்கு என்றது, அவ்வள்ளலின் ஆற்றலுடைமையும் உருவுடைமையும் கூறியவாறு. அணங்கு-அழகு; ஈண்டு அதனையுடைய உருவினைக் குறித்து நின்றது. பண்டைத் தமிழகத்துச் சிறந்தோங்கிய குடிகளுள் வைத்து, ஆவியர்குடி என்பது ஒன்று. (அதியர்குடி, எவ்வியர்குடி எனப் பிறகுடிகள் உண்மையும் உணர்க.) பேகன் ஆவியர்குடிப் பிறந்தோன் ஆதலின் ஆவியர் பெருமகன் என்றார். ஆவியர் குடியின் புகழ் உலகம் உள்ளவரை நிலைநிற்குமாறு செய்தவன் அக்குடிப் பிறந்தார் பலருள்ளும் இவன் ஒருவனே ஆதலின், பெருமகன் என்றார். என்னை?

நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்  (திருக்குறள் : 1026)

என்பவாகலின் என்க. இவ்வள்ளலை வையாவிக் கோப்பெரும் பேகன் என்றும் கூறுப. இவன் பொதினி (பழனி) மலைத் தலைவனாகலின், பெருங்கல் நாடன் பேகன் என்றார்.

2. பாரி

87-91 : சுரும்புண ................ பாரியும்

பொருள் : சுரும்பு உணநறு வீ உறைக்கும் நாக நெடு வழி - வண்டுகள் உண்ணும்படி நறிய பூக்கள் தேனைத் துளிக்கும் சுரபுன்னையை உடைத்தாகிய நெடிய வழியினின்ற, சிறு வீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய-சிறிய பூக்களையுடைய முல்லைக் கொடி தன் தேரைத் தடுத்ததாக அது வேண்டிற்றாகக் கருதித் தனது பெரிய தேரினைக் கொடுத்த, பிறங்கு வெள் அருவி வீழும் சாரல்-மிகுகின்ற வெள்ளிய அருவி குதிக்கும் பக்கத்தினையுடைய, பறம்பிற் கோமான் பாரியும் - பறம்பென்னும் மலைக்கரசனாகிய பாரி என்னும் வள்ளலும்,

கருத்துரை : சுரும்புகள் உண்ணும்படி தேன் வழங்கும் சுரபுன்னை மிக்க நெடிய வழியின் கண்ணே, தன் தேரைத் தடுத்த முல்லைக்கொடி அதனை விரும்பிற்றாகக் கருதி, அதற்குத் தனது பெரிய தேரினை அளித்தவனும், அருவிமிக்க பறம்புமலைக்கு அரசனுமாகிய பாரி என்னும் வள்ளலும், என்பதாம்.

அகலவுரை : சுரும்பு-வண்டு. வீ-மலர். நாகம் - சுரபுன்னை. நாக நெடுவழி: இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் தொக்க தொகை. சுரும்புண நறுவீ உறைக்கும் என்றமையால் தேன் தகுதிநோக்கி வருவித் துரைக்கப்பட்டது. என்னை? சுரும்பு உண்டற்கும் பூக்கள் துளித்தற்கும் தகுதியாயது அதுவேயாகலின் என்க. நெடுவழி என்றது தேரீந்த பின்னர் தான் நடந்து சேறற்குரிய வழி நெடிதாக இருந்தமையும் எண்ணாது ஈந்த அருட்பெருமை தோன்றக் கருத்துடை அடைகொளியாய் நின்றது. சிறுவீ, பெருந்தேர் என்றதன்கண் முரண்அணி தோன்றிச் செய்யுளின்பம் மிகுதல் உணர்க. சிறுவீ முல்லை என்றதும் பெருந்தேர் என்றதும் ஏற்றற்கும் ஈதற்கும் தகுதியில்லாத சிறுமை பெருமைகளை யாப்புறுத்திக் குறிப்பேதுவாய் நிற்றலும் உணர்க. பறம்பு நாட்டின் வழியினின்ற சுரபுன்னை பாடிவரும் வண்டுகள் பருகி இன்புறத் தேன் நல்கும் வள்ளன்மை உடைத்தெனக் கூறிப் பாரியின் வள்ளன்மைச் சிறப்பை விளக்குவார் சுரும்புண நறுவீ உறைக்கும் நாக நெடுவழி என்றார் என்க. சுரும்புண்ணும் நாக நெடுவழி என்னாது, உண நல்கும் நாக நெடு வழி என்றது, குறிப்பறிந்து ஊட்டும் வள்ளற் பண்பை விளக்குதல் அறிக. பிறங்கு வெள்ளருவி வீழல் சாரல் என்பதும், இரவலர்பால் அளவிகந்து அருள்பொழியும் பாரியின் வள்ளன்மையைக் குறிப்பாற் சிறப்பித்து நின்றதென்க. இப்பெருமையுண்மையா னன்றோ வேண்டுதல் வேண்டாமையிலாப் பெருநிலை எய்திய சுந்தரமூர்த்திப் பெருந்தகையாரும் தம் மலர்வாயானே,

கொடுக்கிலா தானைப் பாரியே
என்று கூறினும் கொடுப்பாரிலை  (தே.சுந்.புகலூர்)

என்று பாரியைக் கிளந்தெடுத்து ஓதியதூஉம் என்க. அல்லதூஉம் கபிலர் முதலிய பண்டைநாள் நல்லிசைப் புலவர்களும்,

பாரி பாரி என்றுபல வேத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டீண் டுலகுபுரப் பதுவே  (புறம்: 107)

என்றும்,

மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கைவண் மையே  (புறம்: 106)

என்றும்,

முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு
முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர்  (புறம் 110)

என்றும் பலபடப் பாராட்டிப் புகழ்ந்து பாடி மகிழ்ந்தனர் என்க.

3. காரி

91-95 : கறங்குமணி ................. காரியும்

பொருள் : கறங்கும் மணி வால் உளைப் புரவியொடு - ஒலிக்கும் மணியினையும் வெள்ளிய தலையாட்டத்தினையுமுடைய குதிரையோடே, வையகம் - தனது நாட்டையும், மருள-ஏனையோர் கேட்டு வியக்கும்படி, ஈர நன்மொழி - அருளினையுடைய நன்றாகிய மொழியினையும், இரவலர்க் கீந்த - இரவலர்க்குக் கொடுத்தருளியவனும், அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல் - தன்னிடத்துறையும் கொற்றவையுடைய சினத்தின் மிகுதியாலே தான் விளங்கும் அச்சந்தோன்றும் நெடிய வேலினையும், கழல் தொடித் தடக்கைக் காரியும் - உழல்கின்ற தொடியினை யணிந்த பெருமை மிக்க கையினையும் உடையனுமாகிய காரி என்னும் வள்ளலும்,

கருத்துரை : மணியையும் தலையாட்டத்தையும் உடைய குதிரையோடே தனது நாட்டையும் அருள் மொழியையும் ஏனையோர் கேட்டு வியக்குமாறு இரவலர்க்குக் கொடுத்த வேலையும் தொடியினையுடைய கையினையும் உடைய காரி என்னும் வள்ளலும், என்பதாம்.

அகலவுரை : கறங்குதல் - ஒலித்தல்.

மன்றங் கறங்க மணப்பறை யாயின (நாலடி:23)

என்ற நாலடியினும் கறங்குதல் இப்பொருட்டாதல் காண்க. வால்-வெண்மை. உளை-தலையாட்டம் என்னும் ஒருவகைக் குதிரை அணிகலன்; பிடரிமயிருமாம். வையகம் - நிலம்: ஈண்டுத் தன் ஆட்சியினமைந்த நாடு என்றவாறு. இனி வையகம் மருள எனக்கொண்டு உலகத்துச் சான்றோர் வியப்ப எனினுமாம். மருள்தல்-வியத்தல், அஃதாவது : இங்ஙனம் வழங்குவாரும் உளரோ என அவ்வள்ளலின் கொடைச் சிறப்பைக் கேட்டோர் வியத்தல். ஈர நன்மொழி என்பது அருள் கெழுமிய படிறில்லாத இனிய மொழி என்க. இதனை,

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்  (திருக்குறள் : 91)

என்னும் திருக்குறளானும் உணர்க. புரவலர்க்கு இன்றியமையாதாகலின் ஈரநன் மொழியையும் ஈந்தென்றார். இவ்வீர நன்மொழியின் சிறப்பை,

அகனமர்ந்து ஈதலி னன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்  (குறள் : 92)

என்னும் பொய்யில்புலவன் பொருண்மொழியானும் உணர்க. கறங்குமணி என்பது தொடங்கி ஈந்த என்னும் துணையும் காரி வள்ளலின் வள்ளன்மைச் சிறப்போதிப் பின்னிரண்டடிகளில், அவ்வள்ளலின் வீரச்சிறப்பு விளம்புகின்றார் என்க. அழல்-ஈண்டு வெற்றித் தெய்வமாகிய கொற்றவைக்கு ஆகுபெயராய் நின்றது; அழல் திகழ்ந்து இமைக்கும்வேல் என்றது, வெற்றித்திருவாகிய கொற்றவை வீற்றிருத்தலானே விளக்கமிக்க வேல் என்றவாறு. மறமன்னர் படையிடத்தும், படைக்கலன்களிடத்தும் கொற்றவை வீற்றிருக்கும் என்பதை,

கள்விலையாட்டி மறுப்பப் பொறாமறவன் கைவி லேந்திப்
புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகும் போலும்
புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகுங்காலைக்
கொள்ளுங் கொடியெடுத்துக் கொற்றவையுங் கொடுமரமுன் செல்லும் போலும்  (சிலப்.வேட்டுவரி : 13)

என்னும் இளங்கோவடிகள் கூற்றானும்,

வென்றி மங்கை வேடர் வில்லின் மீதுமேவு பாதமுன்
சென்றுமீளு மாறு போல்வ  (பெரியபு.கண்:68)

என்னும் சேக்கிழார் திருமொழியானும் உணர்க. அஞ்சுவரு - பகைவர்க்கு அஞ்சுதலை வரச்செய்யும், கழல் தொடி: வினைத்தொகை. இனிக் கழலும், தொடிவிளங்கு தடக்கையும் என உம்மை தொக்கதாகக் கொண்டு, வீரக்கழல் அணிந்த அடியினையும், தொடிவிளங்கு தடக்கையினையும் உடைய காரி என்றலும் ஒன்று. இவ் வள்ளற் பெருமானை, மலையமான் திருமுடிக்காரி என்றும், மலையமான் என்றும், காரி என்றும் வழங்குப. இவனது கொடைச்சிறப்பைச்,

செறுத்த செய்யுள் செய்செந் நாவின்
வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலர்

அருமையாகப் பாடியுள்ளார்; அவர் பாடிய பாடலிற் சில அடிகள் வருமாறு :

வடமீன் புரையும் கற்பின் மடமொழி
அரிவை தோளளவு அல்லதை
நினதென இலைநீ பெருமிதத் தையே  (புறம் : 122)

என்றும்,

நாட்கள் உண்டு நாண்மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேரீ தல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழா தீத்த இழையணி நெடுந்தேர்
பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே  (புறம் : 123)

என்றும் வரும் இன்னோரன்னவற்றால் அவன் வள்ளன்மையையும்,

குன்றத் தன்ன களிறு பெயரக்
கடந்தட்டு வென்றோனும் நிற்கூ றும்மே
வெலீஇயோ னிவனெனக்
கழலணிப் பொலிந்த சேவடி நிலங்கவர்பு
விரைந்து வந்து சமந்தாங்கிய
வல்வேன் மலையன் அல்ல னாயின்
நல்லமர் கடத்தல் எளிதுமன் நமக்கெனத்
தோற்றோன் றானும் நிற்கூ றும்மே  (புறம் : 125)

என்று வரும் இன்னோரன்னவற்றால் அவன் வெற்றியினையும் புகழ்ந்து பாராட்டுதல் காண்க.

4. ஆய்

95-99 : நிழறிகழ் ..................... ஆயும்

பொருள் : நிழல் திகழ் நீலம் - ஒளி விளங்கும் நீலமணியினையும், நாகம் நல்கிய கலிங்கம் - தனக்கு நாகங் கொடுத்த ஆடையினையும், ஆலமர் செல்வற்கு - ஆலின்கீழ் இருந்த இறைவனுக்கு, அமர்ந்தனன் - விரும்பியவனாய், கொடுத்த - கொடுத்தவனும், சாவந் தாங்கிய சாந்து புலர்திணிதோள் - வில்லை எடுத்த சந்தனம் பூசிப் புலரும் திண்ணிய தோளினையும், ஆர்வ நன்மொழி -விருப்பத்தைச் செய்கின்ற நன்றாகிய சொல்லினையும் உடையவனுமாகிய, ஆயுள் - ஆய் என்னும் வள்ளலும்,

கருத்துரை : ஒளிமிக்க நீலமணியினையும் நாகம் கொடுத்த கலிங்கத்தையும் விருப்பத்தோடே ஆலின் கீழிருந்த இறைவனுக்குக் கொடுத்தவனும், வில்லேந்திய சந்தனம் பூசிப்புலர்ந்த தோளையுடையவனும், ஆர்வம் மிக்க மொழிகளைப் பேசுவானும் ஆகிய ஆய் என்னும் வள்ளலும், என்பதாம்.

அகலவுரை : நிழல்-ஒளி. நீலம்-நீலமணி. ஆலமர் செல்வன் - சிவபெருமான். அமர்தல்-விரும்புதல். அமர்ந்தனன்: முற்றெச்சம். சாவம்-வில்; வடசொல். பெறுதற்கரிய சிறந்த மணியையும் ஆடையையும் பெற்றிருந்த ஆய் இறைவன்பால் தனக்கிருந்த பேரன் பால் அவையிற்றை அவ்விறைவனுக்குக் கொடுத்து மகிழ்ந்தான் என்க. நாகம் நல்கிய கலிங்கம் என்றதன்கண் உள்ள வரலாறு விளக்கமாகத் தோன்றவில்லை. ஆசிரியர் நச்சினார்க்கினியர், நிழல் திகழ் நீல நாகம் நல்கிய கலிங்கம் என்னுந் தொடரின்கண் உள்ள சொற்களை நாகம் நல்கிய, நிழல் திகழ் நீலக் கலிங்கம் எனக் கொண்டுகூட்டி, பாம்பு ஈன்று கொடுத்த ஒளிவிளங்கும் நீல நிறத்தையுடைய உடையினை எனப் பொருள் கூறியுள்ளார். நாகம் என்பவனாற் கொடுக்கப்பட்ட கலிங்கத்தை என்று பொருள் கொள்ளின் இயற்கைக்குப் பொருந்துவதாகும். இவ்வள்ளற் பெருமானை ஆய் எனவும், வேள் ஆய் எனவும், ஆய் அண்டிரன் எனவும் வழங்குப. இவ்வள்ளலைச் சிறப்பாகப் பலபடப் பாராட்டிப் பாடிய நல்லிசைப் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆவர். மேலும், துறையூர் ஓடைகிழார் குட்டுவன் கீரனார், உமட்டுக்கிழார் மகனார் பரங்கொற்றனார், பரணர், காரிக்கண்ணார் முதலிய பல நல்லிசைப் புலவரும் பாடியுள்ளனர். இவன் கொடைச்சிறப்பினையும், பிற சிறப்புகளையும் அவையிற்றை ஓதி உணர்க. இவன் பொதியின் மலைச்சார்பிலுள்ள ஆய் குடியைத் தலை நகராகக்கொண்டு அரசியற்றியவன் ஆகலின் ஆய் என வழங்கப்பட்டான். அல்லது, ஆய்குடி என்னும் குடியிற்றோன்றியமையால் ஆய் எனப்பட்டான் எனினுமாம். இவன் பல்வேறு பகைவருடன் போர் ஆற்றி வெற்றிபெற்றான் என்ப. இம் மறச்சிறப்பையே சாவந்தாங்கிய சாந்துபுலர் திணிதோள் என்னுந் தொடராற் குறிக்கின்றார். ஆர்வ நன்மொழி என்றதற்கு, முன்னர் ஈரநன்மொழிக்கு உரைத்தாங்கு உரைத்துக்கொள்க. இவனது வெற்றிச்சிறப்பை,

கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில்
ஆடுமகள் குறுகி னல்லது
பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே  (புறம் : 128)

என்றும்,

அண்ணல் யானை எண்ணில் கொங்கர்க்
குடகட லோட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே  (புறம் : 130)

என்றும்,

அவன் வண்மையின் பெருமையை,

விளங்குமணிக் கொடும்பூ ணாஅய் நின்னாட்
டிளம்பிடி ஒருசூல் பத்தீ னும்மோ  (புறம் : 130)

என்றும்,

மழைக்கணஞ் சேக்கும் மாமலைக் கிழவன்
வழைப்பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன்
குன்றம் பாடின கொல்லோ
களிறுமிக உடையவிக் கவின்பெறு காடே  (புறம் : 131)

என்றும்,

வடதிசை யதுவே வான்றோய் இமயம்
தென்றிசை ஆஅய்குடி இன்றாயில்
பிறழ்வது மன்னோஇம் மலர்தலை உலகே  (புறம் : 132)

என்றும்,

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் கூறும் அருமையான தொடரானும், பிற சான்றோர் செய்யுளானும் உணர்க. உடாஅ போரா வாயினும் படாஅம் மஞ்ஞைக் கீத்த பேகனைப் போன்று, ஆயும் உடாஅன் போரான் ஆகுதல் அறிந்தும் படாஅம் பரமற்கீத்த கொடை மடம் குறித்தற்குப் போலும் நல்லூர் நத்தத்தனார் அவனுடைய ஏனைக் கொடைச்சிறப்புக்களுள் வைத்து இச்சிறப்பொன்றனையே விதந்தெடுத்து ஓதினர்.

5. அதிகன்

99-103 : மால்வரை .................. அதிகனும்

பொருள் : மால் வரை கமழ் பூஞ்சாரல் கவினிய - பெருமையுடைய மலையிற் கமழும் பூக்களையுடைய பக்கமலையிலே  நின்று அழகுபெற்ற, நெல்லி அமிழ்துவிளை தீங்கனி அவ்வைக் கீந்த - நெல்லியினது அமிழ்தின்தன்மை தன்னிடத்தே உண்டான இனிய பழத்தை அவ்வைக்குக் கொடுத்தவனும், உரவுச் சினம் கனலும் - தன்னிடத்துறையும் கொற்றவையின் வலியினையுடைய சினம் நின்றெரியும், ஒளி திகழ் நெடுவேல் - ஒளியால் விளங்கும் நெடிய வேலினையும், அரவக் கடற்றானை அதிகனும் - ஆரவாரத்தையுடைய கடல்போலும் படையினையும் உடையவனும் ஆகிய அதிகமான் என்னும் வள்ளலும்,

கருத்துரை : பெரிய மலையினது சாரலிலே நின்று அழகுபெற்ற நெல்லியினது அமிழ்தத் தன்மையுடைய கனியைத் தான் நுகர்ந்து தன் உடம்பிற்கு ஆக்கம் செய்துகொள்ளாமல், அவ்வைக்குக்கொடுத்தவனும், கொற்றவையின் சினந்திகழும் ஒளிவேலையும், கடல்போன்ற ஒலிமிக்க படையினையும் உடையவனுமாகிய அதிகமான் என்னும் வள்ளலும், என்பதாம்.

அகலவுரை : மால்வரை - கரிய மலையுமாம். கவினிய - அழகுடைய. நுகர்ந்தார் நரை திரைமூப்புச் சாக்காடுகளின் நீங்குதலின் அமிழ்து விளை தீங்கனி என்றார். அமிழ்து விளைதலாவது - அமிழ்தத்தின் தன்மையைத் தானுடைத்தாதல் தீங்கனி என்றது நுகர்தற்குச் சுவைமிக்க கனி என்றவாறு. அதிகமான் அமிழ்துவிளை நெல்லித் தீங்கனியை அவ்வைக் கீத்த வரலாறு வருமாறு:

அவ் வள்ளற்பெருமான் ஒருகால் வேட்டைமேற் காட்டிற் சென்ற பொழுது ஆண்டுள்ள மலைச்சாரலில் நின்ற ஒரு தெய்வத்தன்மையுடைய நெல்லிமரத்தின் கண் ஓரோ ஒரு பழம் கனிந்து தூங்குவதனைக் கண்டான். அக்கனியைப் பறித்துக் கொண்டு வந்தபின்னர், அதனை நுகர்ந்தோர் நரைதிரை மூப்பின்றி நெடிது உடலுரம்பெற்று வாழ்வர் என்னும் செய்தியைச் சான்றோர்கூறக் கேட்டறிந்தான். அறிந்தவன் அதனைத் தானுண்ணக் கருதாமல் வைத்திருந்து, பின் ஒருநாள் தன்னைக் காணவந்த அவ்வை என்னும் புலமைப் பெரியாரிடம் அதன் வரலாறும், தன்மையும் ஓதாதே கொடுத்து அதனை உண்ணும்படி செய்தான். அதனை உண்ட அவ்வையார் அதன் சிறப்பான சுவை முதலியவற்றால் ஐயுற்று அதன் தன்மை வினாய்ப் பிறர்கூற அறிந்தார்.

சுவைக்கினி தாகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கீ வின்றித் தம்வயி றருத்தி
உரைசால் ஓங்குபுகழ் ஒரீஇய
முரைசு கெழு செல்வரே

மிக்குள இவ்வுலகத்தே, நரைதிரை தவிர்த்து நீண்ட வாணாளும் நல்கும் அமிழ்தக்கனியை அறிந்தே தனக்கீந்த அவ்வள்ளலின் பெருமையை உள்ளி உள்ளி உவப்பும் இறும்பூதும் எய்தி அந்நல்லிசைப் புலமைப் பெருமாட்டியார்,

வலம்படு வாய்வா ளேந்தி ஒன்னார்
களம்படக் கடந்த கழறொடித் தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி
பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
நீல மணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா
தாதல் நின்னகத் தடக்கிச்
சாதல் நீங்க எமக்கீத் தனையே  (புறம் : 91)

என இவ்வமிழ்துவிளை தீஞ்சுவைச் செய்யுட்கனியை, அற்றைநாளே அதிகமானுக்கீத்தனர். அமிழ்துவிளை நெல்லித் தீங்கனிபெற்று நுகர்ந்த அவ்வையார், அதன்பயனானே பின்னும் நீண்டநாள் இவ்வுலகத்தே உடல் வளம்பெற்று வாழ்ந்தனர் என்ப. அந்நெல்லிக்கனிக்கு மாறாக இச் செய்யுள் தீங்கனிபெற்று அதிகமானோ நீலமணி மிடற்றொருவன்போல என்றும் நின்று நிலவும் புகழுடலிலே இவ்வுலகில் நிலைபெறுவான் ஆயினன்.

இனி நல்லூர் நத்தத்தனாராகிய நல்லிசைப்புலவரும் அளவிலாப் புகழ்பூண்ட அதிகமானின் எண்ணிறந்த வண்மைச் செயல்களிலே இ செயலே தலைசிறந்ததெனக் கொண்டு அதனை விதந்தெடுத்து ஓதினார் என்க. இனிப் பின்னிரண்டடிகளில் அவனுடைய வெற்றிச் சிறப்பை விளம்புகின்றார். நெடுவேலுக்குச் சினம் அதன்கண் உறையும் கொற்றவையின் சினமேயாகலின், அதனை அவ்வேலிற்கேற்றி உரைத்தார். உரவுச் சினங்கனலும் என்றதற்கு முன்னர் (94) அழல் திகழ்ந்திமைக்கும் அஞ்சு வருநெடுவேல் என்ற அடிக்கு உரைத்தன எல்லாம் உரைத்துக் கொள்க. அரவம் - ஒலி. கடற்றானை : உவமத்தொகை. இவ்வள்ளலின் வெற்றிச் சிறப்பை,

களம்புகல் ஓம்புமின் தெவ்விர் போரெதிர்ந்து
எம்முளும் உளன்ஒரு பொருநன் வைகல்
எண்டேர் செய்யுந் தச்சன்
திங்கள் வலித்த காலன் னோனே  (புறம் : 87)

என்றற்றொடக்கத்துச் சான்றோர் செய்யுட்களான் நன்குணர்க. அதிகன் - அதியர் குடியிற் பிறந்தோன் என்ப. அதிகன், அதியன், அதிகமான் அதியமான், நெடுமான் அஞ்சி, அஞ்சி என்னும் பெயர்களானே சான்றோர் இவ்வள்ளற்பெருமானைக் குறிப்படுவர்.

6. நள்ளி

103-107 : கரவாது ............... நள்ளியும்

பொருள் : கரவாது நட்டோர் உவப்ப - தன் மனத்தே நிகழ்கின்றனவற்றை மறையாமற் கூறி நட்புச் செய்தோர் மன மகிழும்படி, நடைப்பரிகாரம் முட்டாது கொடுத்த - அவர்கள் இல்லறம் நடத்துதற்கு வேண்டும் பொருளை நாடோறும் கொடுத்தவனும், முனை விளங்கு தடக்கை - பகைப்புறத்தே கொலைத்தொழிலான் விளங்கும் பெருமையுடைய கையினையும், துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங் கோட்டு நளிமலை நாடன் நள்ளியும் - துளியையுடைய மழை பருவம் பொய்யாது பெய்யும் உயர்ச்சியாற் காற்றுத் தங்கும் நெடிய கொடுமுடிகளை யுடைய செறிந்த மலைநாட்டையும் உடையவனும் ஆகிய நள்ளி என்னும் வள்ளலும்,

கருத்துரை : தன் மனத்து நிகழ்கின்றவற்றை மறையாமற்கூறித் தன்னை நட்டோர் மனமகிழ அவர் இல்லறத்திற் கியன்ற பொருள்களைக் குறிப்பறிந்து வழங்கியவனும், மழைவளமிக்க நெடிய கோடுகளையுடைய மலைநாட்டையுடையவனும், போர்த்தொழில் வல்லானுமாகிய நள்ளி என்னும் வள்ளலும் என்பதாம்.

அகலவுரை : உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதலும் அகத்தின்கண் அருள் பிறவாதே ஈதலும், வண்மைக் காகாமையின் கரவாது என்று கூறினார். கரவாது உவந்தீயும் கண்ணன்னார் என்றார் திருவள்ளுவனாரும், நட்டோர் என்றது தன்னை நணுகியோர் என்றவாறு. உவப்ப என்றது, நள்ளி இரவலரை நன்கு மதித்தலும் இனியவை கூறலும் குறிப்புணர்ந்து இறப்ப ஈதலும் உடையான் என்பதனைக் குறிப்பான் உணர்த்தியது. என்னை?

இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்உள் உவப்பது உடைத்து  (குறள் : 1057)

எனத் தேவர் மொழிந்தவாறு, இரவலர் உவப்பது ஈவார்கண் அவை உண்டாயவழியே ஆகலின் என்க. நடைப்பரிகாரம், நடத்தற்குள்ள இடையூற்றை நீக்கும்பொருள் என விரியும். அஃதாவது அறமுதலியன செய்து வாழ்தற்கிடையூறாகிய வறுமையை அகற்றும் பொருள்கள் என்றவாறு. அவை, நெல்மணி, உடை. உறையுள் முதலிய வாழ்தற்குரிய பொருள்கள் என்க. நடை, ஈண்டு இல்லறத்தின்மேற்று. பரிகாரம் : வடசொல் : கழுவாய் என்பது பொருள். உவப்ப என்றது உள்ளுள் உவப்ப என்றவாறு. அஃதாவது : நிரப்பிடும்பை தீர்தலேயன்றி ஐம்புலன்களானும் பேரின்பமெய்தினாராகக்கருதல் என்னும் (குறள் 1057) பரிமேலழகர் கூற்றானும் உணர்க. முட்டாது கொடுத்தல் என்றது, தன்பால் எய்தியோர் பின்னர் நல்குரவான் நலியாவாறும் வேறொருவர்பாற் சென்றிரவாவாறும் நிரம்ப நல்குதல் என்றவாறு, என்னை?

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள.  (குறள் : 223)

என்பவாகலின் என்க.

கரவாது என்பது தொடங்கி, கொடுத்த என்னுந் துணையும் நள்ளியின் கொடைச் சிறப்புணர்த்தி, இனி அவன் வெற்றிச்சிறப்புக் கூறுகின்றார். முனை விளங்கு தடக்கை என்றது கொடைச்செயலிலே விளங்குதலே யன்றியும், போர்ச்செயலிலேயும் விளங்கும் தடக்கை என்றவாறு. துளி மழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோடு என்றது, நள்ளியின் செங்கோன்மையைச் சிறப்பித்து நிற்றலை (84) வானம் வாய்த்த வளமலை என்ற அடிக்குக் கூறிய விளக்கங் கொண்டு உணர்க. நள்ளியின் நாடு மலை செறிந்த கண்டீர நாடாகலின் நளிமலைநாடன் என்றார். இவ்வாறே பெருஞ்சித்திரனாரும்,

ஆர்வமுற்று
உள்ளி வருநர் உலைவுநனி தீரத்
தள்ளா தீயும் தகைசால் வண்மைக்
கொள்ளார் ஓட்டிய நள்ளி  (புறம் : 158)

என இவ்வள்ளற் பெருமானின் கொடைத்திறத்தினையும், வெற்றிச் சிறப்பையும் விதந்தோதினர். கரவாது நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம் முட்டாது கொடுத்த என்ற பொருளையே பெருஞ்சித்திரனாரும் வேறோராற்றான் விளக்கியிருத்தல் உணர்க. இவ்வள்ளலை வன்பரணர் என்னும் நல்லிசைப்புலவர் பெரிதும் புகழ்ந்து பாடியுள்ளார்.

செய்யா கூறிக் கிளத்தல்
எய்யா தாகின்று எஞ்சிறுசெந் நாவே

எனத் தம் நாவின் அடக்கமும், பெருமையும் ஒருங்கே தோன்ற உரைத்த இச்செந்நாப்புலவர் கூறிய ஒருசெய்யுளே இவ்வள்ளலின் சிறப்புணர்த்தப் போதியதாகலின் அதனை ஈண்டுத் தருகின்றாம்.

கூதிர்ப் பருந்தின் இருஞ்சிற கன்ன
பாறிய சிதாரேன் பலவுமுதற் பொருந்தித்
தன்னு முள்ளேன் பிறிதுபுலம் படர்ந்தவென்
உயங்குபடர் வருத்தமும் உலைவு நோக்கி
மான்கணந் தொலைச்சிய குருதியங் கழற்கால்
வான்கதிர்த் திருமணி விளங்கும் சென்னிச்
செல்வத் தோன்றலோர் வல்வில் வேட்டுவன்
தொழுதனன் எழுவேற் கைகவித் திரீஇ
இழுதி னன்ன வானிணக் கொழுங்குறை
கானதர் மயங்கிய இளையர் வல்லே
தாம்வந் தெய்தா அளவை ஒய்யெனத்
தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டுநின்
இரும்பேர் ஒக்கலொடு தின்மெனத் தருதலின்
அமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி
நன்மர னளிய நறுந்தண் சாரல்
கன்மிசை அருவி தண்ணெனப் பருகி
விடுத்தல் தொடங்கினே னாக வல்லே
பெறுதற் கரிய வீறுசொ னன்கலம்
பிறிதொன் றில்லைக் காட்டுநாட் டேமென
மார்பிற் பூண்ட வயங்குகா ழாரம்
மடைசெறி முன்கைக் கடகமோ டீத்தனன்
எந்நா டோஎன நாடும் சொல்லான்
யாரீ ரோஎனப் பெயரும் சொல்லான்
பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே
இரும்புபுனைந் தியற்றாப் பெரும்பெயர்த் தோட்டி
அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றிற்
பளிங்குவகுத் தன்ன தீநீர்
நளிமலை நாடன் நள்ளியவன் எனவே  (புறம் : 150)

வலக்கையானே அளிப்பதனை இடக்கை அறியாதே வழங்குதி என்றார் மேலைநாட்டு முழுக்காட்சியாளராகிய இயேசுகிருத்து. அவர் தோன்றுமுன் தோன்றிய நள்ளியின்பால் இப்பண்புணமை கண்டு புலவர் பெருமான் வன்பரணர் எந்நாடோ என நாடும் சொல்லான், யாரீரோ எனப் பெயரும் சொல்லான் என்னும் அடிகளால் அழகுற எடுத்துப் போற்றுதல் காண்க.

7. ஓரி

107-111 : நளிசினை .................. ஓரியும்

பொருள் : நளிசினை நறும்போது கஞலிய - செறிந்த கொம்புகளிடத்தே நறிய பூக்கள் நெருங்கின, நாகுமுதிர் நாகத்துக் குறும்பொறை நன்னாடு - இளமை முதிர்ந்த சுரபுன்னையையும் குறிய மலைகளையும் உடைய நல்ல நாடுகளை, கோடியர்க்கு ஈந்த - கூத்தாடுவோர்க்குக் கொடுத்தவனும், காரிக்குதிரைக் காரியொடு மலைந்த - காரியென்னும் பெயரையுடைத்தாகிய குதிரையை உடைய காரியென்னும் பெயரையுடையவனுடனே போர் செய்தவனும் ஆகிய, ஓரிக் குதிரை ஓரியும் - ஓரியென்னும் பெயரை உடைத்தாகிய குதிரையை உடைய ஓரியென்னும் வள்ளலும்,

கருத்துரை : செறிந்த கொம்புகளில் நறிய பூக்கள்மிக்க சுரபுன்னைகளையும் குறும்பொறைகளையுமுடைய நல்ல நாடுகளைக் கூத்தர்க்கு வழங்கியவனும், காரி என்னும் குதிரையையுடைய காரி என்பானோடு போர் ஆற்றியவனும், ஓரியென்னும் குதிரையை உடையவனுமாகிய ஓரி என்னும் வள்ளலும், என்பதாம்.

அகலவுரை : நளிசினை - செறிந்த கிளை : பெரிய கிளையுமாம். என்னை?

தடவும் கயவும் நளியும் பெருமை  (தொல் : 320)
என்றும்,

நளியென் கிளவி செறிவும் ஆகும் (தொல். 323)
என்றும்,

இருவகைப் பண்பும் தொல்காப்பியத்தே அச்சொற்கு ஓதுதல் காண்க. நாகு-இளமை. கஞலிய -நெருங்கிய. கஞலல் - பொலிவு எனப் பிங்கலநிகண்டிற் கூறப்படுகின்றது. எனவே பொலிவுற்ற எனினுமாம். குறும்பொறை - சிறியமலை. நன்னாடு என்றது நாடா வளத்தையுடைய நாடு என்றவாறு. என்னை?

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரும் நாடு  (குறள் : 739)

என்பவாகலின். கோடியர் - கூத்தாடுவோர். கோடியர் முழவு மருள் திருமணி மிடைந்ததோள் (புறம். 368) என்னும் புறப்பாட்டினும் அஃதிப்பொருட்டாதல் காண்க. காரிக் குதிரை - கரிய குதிரையுமாம். ஓரிக்குதிரை - பிடரிமயிரையுடைய குதிரையுமாம். இனி, காரியொடு ஓரி மலைந்த வரலாறு வருமாறு: ஓரிக்குரிய கொல்லிமலையைத் தமதாக்கிக்கொள்ள விரும்பிய சேரமன்னர், முள்ளூர் மன்னன் காரி என்பானுக்கும், ஓரி வள்ளலுக்கும் இகல் தோற்றுவித்தனராக அவ்வழி, காரி கொல்லியைக் கைப்பற்றிச் சேரர்க்கு அளிப்பதாக உறுதிகூறிச் செவ்விபார்த்திருந்தான். இதனை, ஒற்றரால் உணர்ந்த ஓரி, காரியுடன் போர் தொடுத்தான். ஓரியின் போரில், காரி பன்முறை தோற்றானேனும், சேரர் துணைபெற்று இறுதியில் ஓரியைக் கொன்றான் என்பதாம். இதனை,

..................... செவ்வேள்
முள்ளூர் மன்னன் கழறொடிக் காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று சேரர்க் கீத்த
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி  (அகம்:209)

எனக் கல்லாடனார் அகத்திற் கூறுமாற்றானும், கபிலர்,

பழவிறல், ஓரிக்கொன்றவொரு பெருந்திருவிற்காரி (நற்: 320) என நற்றிணையிற் கூறுமாற்றானும் உணர்க. இவ்வள்ளற் பெருமானை, நல்லிசைப் புலவர் பலர் புகழ்ந்து பாடியுள்ளனர். வில் வித்தையில் மிகவும் வல்லவன் ஆதலின், இவனை வல்விலோரி என்றும் சான்றோர் வழங்குப. இவன் விற்றிறத்தை,

வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறி துறீஇப்
புழற்றலைப் புகர்க்கலை உருட்டி உரற்றலைக்
கேழற் பன்றி வீழ வயல
தாழற் புற்றத் துடும்பிற் செற்றும்
வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்  (புறம் : 152)

என்னும் புறப்பாட்டின்கண், வல்விலோரி ஒரு யானையின்மேற் கடுங்கணை விட்டானாக அக்கணை அவ்வியானையை ஊடுருவிச் சென்று, முன்னரே அவ்வியானைமேற் பாய அற்றம்பார்த்துப் பதுங்கிக் கிடந்த புலியினைக் கொன்று, அப்பால் நின்ற மான்கலையை மாய்த்துப் பின்னரும், சென்று பன்றி ஒன்றனைப் படுத்து, இறுதியில் புற்றிற் கிடந்த உடும்பினை உருட்டி வீழ்ந்தது என, வன்பரணர் கூறுமாற்றான் உணர்க. இனி, இச் செந்தமிழ்நாட்டின் சிறப்பிற்கும், கலைநலப் பேற்றிற்கும் காரணமாகப் பண்டைநாள் விளங்கிய வள்ளற் பெருமக்கள்பால் நன்கு மதிப்புடையராய் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் நல்லிசைப் புலவர், இவ்வாறு அவர்களின் பெயர்களைத் தொகுத்து, அவர் தம் வெற்றியையும், வண்மையையும் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தன ராதல் காண்க. இப்புலவர் பெருமான் போன்றே பெருஞ்சித்திரனார் என்னும் புலவரும் குமணவள்ளலைப் பாடுமுகத்தானே இவ்வள்ளல் எழுவரையும் ஒருங்கே தொகுத்துக் கூறியுள்ள செய்யுள், ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது; அது,

முரசுகடிப் பிகுப்பவும் வாள்வலை துவைப்பவும்
அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்
கறங்குவெள் ளருவி கல்லலைத் தொழுகும்
பறம்பிற் கோமான் பாரியும் பிறங்குமிசைக்
கொல்லி யாண்ட வல்வில் ஓரியும்
காரி யூர்ந்து பேரமர்க் கடந்த
மாரி யீகை மறப்போர் மலையனும்
ஊரா தேந்திய குதிரைக் கூர்வேற்
கூவிளங் கண்ணிக் கொடும்பூண் எழினியும்
ஈர்ந்தண் சிலம்பி னிருள்தூங்கு நளிமுழை
அருந்திறற் கடவுள் காக்கு முயர்சிமைப்
பெருங்க னாடன் பேகனுந் திருந்துமொழி
மோசி பாடிய ஆயும் ஆர்வமுற்று
உள்ளி வருநர் உலைவுநனி தீரத்
தள்ளா தீயும் தகைசால் வண்மைக்
கொள்ளா ரோட்டிய நள்ளியும் எனவாங்கு
எழுவர் .......................    (புறம் : 158)

என்பதாம்.

இனி, 83-அதாஅன்று என்பது தொடங்கி, 111 - ஓரியும் என்னும் துணையும் அகன்று கிடந்த பொருளைப் பின்வருமாறு இயைத்துக் கொள்க. மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய ஆவியர் பெருமகன் பேகனும், முல்லைக்குத் தேர் நல்கிய பறம்பிற்கோமான் பாரியும், புரவியொடு நன்மொழி இரவலர்க் கீத்த காரியும், நீலம் கலிங்கம் செல்வற்குக் கொடுத்த ஆயும் கனி அவ்வைக் கீந்த அதிகனும், நடைப்பரிகாரம் கொடுத்த மலைநாடன் நள்ளியும், நன்னாடு கோடியர்க்கீந்த காரியொடு மலைந்த ஓரியும் என, எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம் (113) என்பதாம்.

111-126 : எனவாங்கு ................. நல்லியக்கோடனை

பொருள் : என ஆங்கு எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் எழுவர் என்று கூறப்பட்ட அக்காலத்தே தம் மேலே வருகின்ற போர்களைக் கடந்த கணையத்தோடு மாறுபடுகின்ற திணிந்த தோளினையுடைய எழுவரும், பூண்ட ஈகைச் செந்நுகம் - மேற்கொண்ட கொடையாகிய செவ்விய பாரத்தை, விரிகடல் வேலி வியலகம் விளங்க - பரந்த கடலாகிய வேலியை உடைய உலகம் எல்லாம் விளங்கும்படி ஒருதான் தாங்கிய உரனுடை நோன்தாள் - ஒருவனாகிய தானே பொறுத்த வலியையுடைய முயற்சியினையுடையவனும், நறு வீ நாகமும் அகிலும் ஆரமும் - நறிய பூக்களையுடைய சுரபுன்னையையும் அகிலையும் சந்தனத்தையும், துறையாடும் மகளிர்க்குத் தோள் புணையாகிய - நீராடும் துறையிலே குளிக்கும் மகளிருடைய தோள்களுக்குத் தெப்பமாகும்படி, பொருபுனல் தரும் - கரையைக் குத்துகின்ற நீர் கொணர்ந்து தருகின்ற, போக்கரு மரபின் தொல் மா இலங்கை - அழித்தற்கரிய முறைமையினையுடைய பழையதாகிய பெருமை மிக்க இலங்கையினது பெயரை, கருவொடு பெயரிய நன்மா இலங்கை - கருப்பதித்த முழுத்தத்திலேயே தனக்கும் பெயராகவுடைய நன்றாகிய பெருமையை உடைய இலங்கையை ஆண்ட மன்னருள்ளும் - சிறந்த அரசர் பலருள்ளும், மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள் உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமான் - குற்றமின்றி விளங்கிய பழியில்லாது வாய்த்த வாளினை யுடைய மிக்க புலிபோலும் வலியினையும் உடைய ஓவியர் குடியிற்றோன்றியவனும், களிற்றுத் தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்தடி - யானையைச் செலுத்துதலால் உண்டாகிய தழும்பு கிடந்த வீரக் கழல் கிடந்து அசையும் பிறக்கிடாத அடியினையும், பிடிக்கணம் சிதறும் பெயன்மழைத் தடக்கை - பிடியானையின் திரளினைப் பலர்க்கும் வழங்கும் பெய்தற் றொழிலையுடைய மழைபோன்ற கையினையும் உடையவனும், பல்லியக் கோடியர் புரவலன் - பல்வேறு இசைக்கருவிகளையுடைய கூத்தரைப் புரத்தல் வல்லவனும் ஆகிய, பேரிசை நல்லியக் கோடனை - பெரிய புகழையுடைய நல்லியக்கோடன் என்னும் வள்ளற் பெருமானை,

கருத்துரை : என்று புகழ்ந்து கூறப்பட்ட போர்கடந்த தோளையுடைய வள்ளல் எழுவரும் மேற்கொண்டு நடத்திய கொடையாகிய பாரத்தை உலகம் விளங்கும்படி தான் ஒருவனே மேற்கொண்டு தாங்கிய வலிமை மிக்க முயற்சியையுடையவனும், சுரபுன்னையையும் அகிலையும் சந்தனத்தையும் நீராடு மகளிர்க்குத் தெப்பமாக நீர்கொணர்ந்து தருகின்ற அழிதலில்லாத முறைமையினையுடைய பழம் புகழுடைய பெரிய இலங்கையின் பெயரைத் தன் பெயராகத் தான் தோன்றிய பொழுதே பெற்ற நல்ல இலங்கை என்னும் நகரை ஆண்ட மன்னர் பலருள்ளும் சிறந்தவரும், வாள்வென்றி வாய்க்கப்பெற்றோரும், புலி போல்வோரும் ஆகிய ஓவியருடைய குடியிற்றோன்றியவனும், திருந்தடியையும், பிடிக்கணம் வழங்கும் மழைபோன்ற தடக்கையையும் உடையவனும், கூத்தரைப் புரத்தல் வல்லானும், பேரிசையாளனும் ஆகிய நல்லியக்கோடன் என்னும் வள்ளற் பெருமானை (நயந்த கொள்கையொடு (126) பாடிச் சென்றனமாக (129) என இயையும்) என்பதாம்.

அகலவுரை : வள்ளன்மையுடையார்க்குத் தோள்வலியும் ஆற்றலும் இன்றியமையாவென்பார் அவர்தம் ஆற்றலையே ஈண்டு எழுசமங் கடந்த எழுவுறழ் திணிதோள் எழுவர் என எடுத்தோதினார். ஈகையையே குறிக்கோளாகக்கொண்டு போற்றினர் என்பார் பூண்ட என்றார். ஈகைச் செந்நுகம் : பண்புத்தொகை; ஈகையும் புகழ் பொருள் துணைக்கோடல் முதலிய தன்னலங்கருதிச் செய்தலுண்மையின் இவர் ஈகை அத்தன்மைத்தன்று செவ்வியது என்பார் செந்நுகம் என்றார். என்னை?

இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
அறவிலை வணிகன்  (புறம் : 134)

என்றும்,

ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர். (மணி.11:92)
என்றும்,

வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து  (குறள் : 221)

என்றும் ஆன்றோர் செவ்விய ஈகையல்லாத ஈகையுண்மையும் கூறினர் ஆகலானும், செவ்விய ஈகையாவது, ஆற்றாமாக்கள் இடுக்கண்கண்டு அருள்கூர்ந்து குறிப்புணர்ந்து கைம்மாறு வேண்டாது ஈதலே என்க. ஈவாரின் புகழ் மண்ணுலகம் கொள்ளாப் பெருமைத்தாகலின் அதன் பெருமை தோன்ற விரிகடல்வேலி வியலகம் விளங்க என்றார், இதனை,

கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
கொடுத்தா ரெனப்படுஞ் சொல்  (நாலடி : 100)

என்னும் நாலடியானும் அறிக. அல்லதூஉம், விரிகடல்வேலிவியலகம் உளதாய் நின்று விளங்குமாறு எனினும் பொருந்தும். என்னை? இத்தகைய சான்றோர் உண்மையானே உலகம் உளதாயிற்று என, உலகுண்மைக்குத் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர் உண்மையைச் சான்றோர் ஏதுவாகக் கூறலான் என்க, இதனை,

உண்டால் அம்மஇவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவ தஞ்சிப்
புகழெனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே  (புறம் : 182)

என்னும் புறத்தானும் உணர்க. இனி வண்மையாலுண்டாய புகழினைப்பெற்று விளங்குவார் புரவலர் ஆகவும், வியலகம் விளங்க என விளங்குதற்கு வினைமுதல் உலகாக வைத்தோதினார், இசையுடையோரைப் பொறுத்த நிலம் மழையும் விளையுளும் பெற்று விளங்குதலுண்மையின், இக்கருத்தானன்றே திருவள்ளுவனாரும்,

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்  (குறள் : 239)

என நிலத்தினை வினைமுதலாக்கிக் கூறியதூஉம் என்க.

எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம் ஒருதான் றாங்கிய உரனுடை நோன்றாள் என இயைத்து அவ்வேழு வள்ளலார்க்கும் நல்லியக் கோடன் ஒருவனே சமம் என்னும் பொருள் தோற்றுவித்தமை காண்க. உரனுடை நோன்றாள் என்றதும், தாங்குதற்கு ஏதுவாய் நின்றது. தனக்கென முயலாது பிறர்க்கென முயலுதல் செயற்கருஞ்செயல் ஆகலின் அவ்வருமை தோன்ற உரனுடைய நோன்றாள் என்றார். வலிமைமிக்காரும், பொறைமிக்காருமே முயல்தற்கியன்ற முயற்சி என்றவாறு. தமக்கென முயலா நோன்றாள் என்ற புறத்தினும், இம்முயற்சியை இவ்வாறே நோன்றாள் என்றல் அறிக. ஆகிய : செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். மகளிர் நீர்விளையாட்டின் பொருட்டுப் புனல் நாகமும், அகிலும், சந்தனமும் கொணர்ந்தளிக்கும் என்க. இஃது நல்லியக்கோடனின் குறிப்பறிந்தீயும் வண்மைச்சிறப்பைப் புனலிற்கியைத்து ஓதியவாறென்க. நறுவீ மரபின் நன்மா விலங்கை; தொன்மாவிலங்கைக் கருவொடு பெயரிய நன்மாவிலங்கை என அகன்று கிடந்த அடைமொழிகளை அணுகத் தனித்தனி இயைத்துக்கொள்க. போக்கறு-போக்குதல் இல்லாத - அஃதாவது அழித்தற்கியலாத என்றவாறு. தொன்மாவிலங்கை என்றது, இராவணன் ஆண்ட வளமிக்க பழைய இலங்கை என்றவாறு. கரு-அந்நகர் தோன்றிய தொடக்கம். தொடக்கத்தே இலங்கையின் பெயரையிட்டு நகர்தோற்றுவித்தார் என்றவாறு. தொன்மாவிலங்கை அரக்கருடைத்தாகலின் அத்தீமையிலது இவ் விலங்கை என்பார், நன்மாவிலங்கை என்றார். இம் மாவிலங்கையின் கண் மரபுளிக் கோலோச்சிய மன்னர் பலருள்ளும் ஓவியர் குடிப்பிறந்த மன்னர் சிறப்புடையர்; அவருள்ளும் சாலச்சிறப்புடையன் நல்லியக்கோடன் என, அவ்வள்ளலின் புகழை மும்மடி உயர்த்துவார், நன்மா விலங்கை மன்னருள்ளும் ஓவியர் பெருமகன் என்றார். ஓவியர்குடி எனப் பண்டு தமிழகத்தே சிறந்து விளங்கிய குடி ஒன்றுளது என்பதும் இதனாற் பெற்றாம். எவ்விகுடி, அதியர்குடி, ஆவியர்குடி எனப் பிற குடிகள் உண்மையும் முன்னர்க் கூறினாம். மறுவின்றி விளங்கிய பெருமகன் என்றும், வடுவில் வாய்வாள் பெருமகன் என்றும், உறுபுலித்துப்பின் பெருமகன் என்றும் தனித்தனி இவ்வடைமொழிகளைப் பெருமகனோடியைப்பினுமாம். மறுவின்றி விளங்கிய என்றது, ஏகாச்சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடிப் பிறப்பையும், வடுவில் வாய்வாள் என்றது, பகைவரை மார்பினும் முகத்தினும் வெட்டி வெல்லும் மறச்சிறப்பையும், உறுபுலித் துப்பின் என்றது அஞ்சாமையையும் உணர்த்தி நின்றன என்க. களிற்றின் எருத்திற் கிடக்கும் புரைசைக் கயிற்றை மிதித்துத் தழும்பேறிய அடியென்றது, நல்லியக்கோடனுடைய போர்ப்பயிற்சியைக் குறித்து நின்றதென்க. பிடிக்கணம் சிதறும் என்றது, வரையாது அள்ளி வழங்கும் கொடைச் சிறப்பையும், பெயன் மழைத்தடக்கை என்றது, தன் கொடைக்குக் கைம்மாறு வேண்டாப் பெருமிதத்தையும் விளக்கின என்க. பல்லியக் கோடியர் புரவலன் என்றது, நல்லியக்கோடன் கொடையால் தமிழகத்தே இயலிசை நாடகம் என்னும் முத்திறத்த கலைகளும் உரம் பெற்று வளர்ந்தன என்றதை இனம்பற்றி உணர்த்தியதாம். பல்லியக் கோடியர், நல்லியக்கோடன் என்பதில் விளைந்த செய்யுளின்பம் உணர்க.

எழுவர் பூண்ட நுகம் ஒருதான் தாங்கிய தாள், நன்மா விலங்கை ஓவியர் பெருமகன், திருந்தடித் தடக்கை நல்லியக்கோடனை என இயைத்துக் கொள்க.

126-129 : நயந்த கொள்கை ....................... சென்றனமாக

பொருள் : நயந்த கொள்கையொடு - காண்டற்கு விரும்பிய கோட்பாட்டுடனே, தாங்கரு மரபில் தன்னும் - பிறரால் பொறுத்தற்கரிய குடிப்பிறந்தோர்க்குரிய முறைமைகளையுடைய தன்னையும், தந்தை வான்பொரு நெடுவரை வளனும்பாடி - அவன் தந்தையுடைய தேவருலகத்தைத் தீண்டும் நெடிய மலையின்கண் உள்ள செல்வத்தையும் பாடி, முன்னாள் சென்றனமாக - சில நாட்களுக்கு முன்னே யாம் சென்றேமாக.

கருத்துரை : காண்டற்கு விரும்பிய நெஞ்சத்தோடே உயர்குடிப் பிறப்பிற்குரிய முறைமையினையுடைய அந் நல்லியக் கோடனையும் அவன் தந்தையினுடைய செல்வத்தையும் பாடிக்கொண்டு அவ்வள்ளற் பெருமான்பால் ஒரு சில நாட்களின் முன்னர் யாம் சென்றேம். அங்ஙனம் சென்ற பின்னர் என்பதாம்.

அகலவுரை : நயத்தல்-விரும்புதல். ஒழுக்கம் வாய்மை, நாண், நகை முகம், ஈகை, இன்சொல்லுடைமை, எள்ளிப் பிறரையிகழாமை, பண்பிற்றலைப் பிரியாமை, சலம்பற்றிச் சால்பில செய்யாமை, உடுக்கை உலறி உடம்பு அழிந்தக்கண்ணும் தங்கொள்கையிற்குன்றாமை முதலிய நலன் அனைத்தும் உயர்குடிப் பிறந்தார்க்கு இயற்கைக் குணமாம். இத்தகைய பெருங்குணங்களை இடையறவு படாமே மேற்கோடல் அரிதென்பார் தாங்கரு மரபில் என்றார். தன்னும்-தன்னையும் (நல்லியக் கோடனையும்) நல்லியக்கோடனின் அரசுரிமை தாயத்தின் வந்ததென்பார் தந்தை நெடுவரைவளன் என்றார். நெடுவரைவளன் பாடுதலாவது அவன் மலைநாட்டின் சிறப்பினைப் புகழ்ந்து பாடுதல் என்க. முன்னாள்-ஒருசில நாட்களின் முன்னர் தானும் விறலியர் முதலிய சுற்றத்தோடே சென்றான் ஆகலின் அவரை உளப்படுத்திச் சென்றனம் எனப் பன்மையாற் கூறினான் என்க.

பேகன் முதல் ஓரி இறுதியாகக் கூறப்பட்ட எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம் ஒருதான் தாங்கிய ஓவியர் பெருமகன் நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு தன்னும் தந்தை வளனும் பாடி முன்னாட் சென்றனமாக என இயைபு காண்க. இனி, 129 இந்நாள் என்பது தொடங்கி 143 வருதும் என்னுந் துணையும் ஒரு தொடர். இதன்கண், ஆற்றுப்படுத்தும் பாணன் நல்லியக்கோடன்பாற் சென்று பரிசில் பெறுதற்கு முன்னர் இருந்த தனது நல்கூர் நிலையும், நல்லியக்கோடனை எய்தித் தான்பெற்ற சிறப்பும் பரிசில் வேட்டுச்சென்ற பாணனுக்கு இயம்புகின்றான்.

129-143 : இந்நாள் ............... வருதும்

பொருள் : இந்நாள் - இற்றைநாள், திறவாக் கண்ண சாய்செவிக் குருளை - விழியாத கண்ணையுடையவாகிய வளைந்த செவியினையுடைய குட்டி, கறவாப் பால்முலை கவர்தல் நோனாது - பிறராற் கறக்கப்படாத பாலினையுடைய முலையை உண்ணுதலைத் தன் பசி மிகுதியாற் பொறுத்தலாற்றாது, புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் - ஈன்றணிமையையுடைய நாய் கூப்பிடும் புன்மையுடைய அடுக்களையில், காழ் சோர் முதுசுவர் - கழிகள் ஆக்கையற்று விழுகின்ற பழைய சுவரிடத்தெழுந்த, கணச் சிதல் அரித்த - திரளாகிய கரையான் அரித்துக் குவித்த, பூழி - புழுதியின் கண்ணே, புழற் காளாம்பி பூத்த - உட்பொய்யாகிய காளான் பூத்தனவாக, ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல் வளைக்கைக் கிணைமகள் - வருந்துதற்குக் காரணமான பசியாலே ஒடுங்கிய நுண்ணிய இடையினையும் வளையலை அணிந்த கையினையும் உடைய கிணைவனுடைய மகள், வள்உகிர்க் குறைத்த குப்பை வேளை-பெரிய உகிராற் கிள்ளின் குப்பையிற் றோன்றிய வேளை, உப்பிலி வெந்ததை - உப்பின்றாய் வெந்ததனை, மடவோர் காட்சி நாணி - வறுமை உறுதலும் இயல்பென்றறியாது புறங் கூறுவோர் காண்டற்கு நாணி, கடை அடைத்து இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும் - தலைவாயிலை அடைத்து வறுமையினாற் கரிய பெரிய சுற்றத்தோடே கூட விருந்து முழுதும் தின்னும், அழிபசி வருத்தம் வீட- அறிவு முதலியன அழிதற்குக் காரணமான பசியாலுளவாகிய வருத்தங்கள் கெடுமாறு, பொழிவுகள் தறுகண் பூட்கை தயங்குமணி மருங்கின் சிறுகண் யானையொடு - மதம் வீழ்கின்ற கதுப்பினையும் கடுகக் கொல்லுதலாகிய மேற்கோளினையும் அசையும் மணியை உடைய பக்கத்தினையும் சிறிய கண்ணையும் உடைய யானையுடனே, பெருங்தேர் எய்தி பெரிய தேரையும் பெற்று, யாம் அவணின்றும் வருதும் - யாம் அவ்விடத்து நின்றும் வாரா நின்றேம்.

கருத்துரை : இற்றைநாள்; விழிக்காத கண்ணையும் சாய்ந்த செவிகளையுமுடைய குட்டிகள் பிறராற் கறக்கப்படாத பாலினையுடைய முலையை உண்ணுதலைத் தன் பசிமிகுதியாலே பொறுத்தலாற்றாது, அண்மையில் ஈன்ற நாய் குரைக்கின்ற புன்மையை உடைய அடுக்களையின் கண்ணே கட்டற்றுக் கழிகள் வீழ்ந்துவிட்ட பழையதாகிய சுவரிற்றோன்றிய சிதல் அரித்துச் சேர்த்த புழுதியினிடத்தே காளான் பூத்தனவாக இத்தகைய நல்குரவுண்மையின் பசியாலே இளைத்த உடலாயுடைய நுண்மருங்குற் கிணைமகள் உகிராற் கிள்ளிக் கொணர்ந்த குப்பையினின்ற வேளைக்கீரை உப்புமின்றி வெந்ததனைப் புறங்கூறுவோர் காணுதலை நாணித் தலைவாயிலை அடைத்து எம் சுற்றத்தோடே முழுதும் தின்றேம். அங்ஙனம் தின்றற்குக் காரணமான அறிவு முதலியவற்றை அழிக்கும் பசிவருத்தம் எஞ்சாதே கெட்டொழியுமாறு மதம் பொழிகின்ற கதுப்பினையுடைய கொலைத்தொழிலின் மிக்க சிறுகண் யானையோடே பெரிய தேரினையும் பெற்று யாம் அந் நல்லியக் கோடன் அரண்மனையினின்றும் வருகின்றேம் என்பதாம்.

அகலவுரை : இந்நாள் அழிபசி வருத்தம்வீட யானையோடே தேரெய்தி யாம் அவணின்றும் வருகின்றோம் என இயைத்துக் கொள்க: திறவாக் கண்ண சாய்செவிக் குருளை என்னும் எழுத்தோவியத்தின் அழகினை உணர்க. குருளை - குட்டி;

நாயே பன்றி புலிமுயல் நான்கும்
ஆயுங் காலைக் குருளை என்ப  (தொல்.மர:9)

என்னும் விதியானே நாய்க்குட்டியைக் குருளை என்னும் மரபுண்மை உணர்க. கறவாப் பான்முலை என்றது கறத்தலால் குறையாதிருந்தும் தன் குட்டிகளை ஊட்டப் போதாப் பால் என்றவாறு. புனிற்றுநாய் - ஈன்றணிமையுடைய நாய்;

புனிறென் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்.உரி:77)

என்பது தொல்காப்பியம். புனிற்றுநாய் தன் குட்டிகளிடத்துப்பெரிதும் அன்புடையதாயிருந்தும், திறவாக் கண்ண சாய்செவிக் குருளை பால் மிகுதியாக உண்ணுவனவாகா திருந்தும் அவையிற்றிற்கும் பாலூட்டப் போதா வறுமுலைநாய் என்னுமாற்றால் நல்குரவின் நிலையை உணர இவ்வாறு கூறினான் என்க. புல்லென் அட்டில் என்றது அடுக்களையின் கண் இருத்தற்குரிய அரிசி முதலிய பண்டங்களும் கருவிகளும் இன்றிப் பொலிவிழந்து கிடக்கும் அட்டில் என்றவாறு. அட்டில் - அடுதல் தொழில் செய்யும் இல். அடுதல் - சமைத்தல். காழ் - கழி.

கானப் படமும் காழ்ஊன்று கடிகையும்  (சிலப்.14:173)

என்னும் சிலப்பதிகாரத்தும் காழ் இப் பொருட்டாதலறிக. கழிகள் கட்டற்று வீழ்ந்தன என்க. முதுசுவர் - பழைய சுவர். பழைய சுவரிற் சிதல்புற்றெடுத்தல் இயல்பு. சிதல் அரித்த புழுதியில் காளான் பூத்தன. காளான் தட்பமிக்க காலத்தே தோன்றும் ஒரு பூடு. அடுக்களை இடையறாது தீயுடைமையின் ஆண்டுக் காளான் தோன்றமாட்டாது. ஆகலின், அடுக்களை ஆம்பி பூத்ததென்பது அடுதல்தொழில் நிகழப்பெறாத நல்குரவைக் குறிப்பாலுணர்த்துவதாயிற்றென்க.

ஆடு நனிமறந்த கோடுயர் அடுப்பின்
ஆம்பி பூப்ப  (புறம்:194)

என்ற பெருந்தலைச் சாத்தனார் செய்யுளில், அடுப்பில் ஆம்பி பூத்தற்கு ஏது ஆடுநனி மறத்தலாதலைத் தெரித்தோதியவாறு காண்க.

சாம்பல் கண்டறியா ஆம்பி பூத்த
எலிதுயில் அடுப்பு  (காசிக் கலம்பகம்:58)

என்றார் பிறரும். ஒல்கு பசியுழந்த ஒடுங்கு கிணைமகள் நுண்மருங்குல் வளைக்கைக் கிணைமகள் எனத் தனித்தனி கூட்டுக. ஒல்குதல்-தளர்தல். ஐம்பொறிகளும் தளர்தற்குக் காரணமான பசி என்பார் ஒல்குபசி என்றார். கிணைமகள் - கிணைப்பறை கொட்டுவோன் மனைவி. மனைவியை மகள் என்னும் வழக்குண்மையை,

நினக்கிவன் மகனாய்த் தோன்றிய தூஉம்
மனக்கினி யாற்குநீ மகளாய தூஉம் (மணி.21:30)

எனவரும் மணிமேகலையானும் உணர்க. ஒடுங்குதல்-உடல்வற்றுதல். உகிர்-நகம். குப்பையின்கட் கிடக்கும் வேளைக்கீரையை விரும்புவார் பிறரின்மையின் அது தானும் கிடைத்தது என்றவாறு. அங்ஙனம் எளிதிற்கிடைத்த கீரைக்கு உப்பிடுதற்கும் இயலாத நல்குரவுண்மையின் உப்பிலி வெந்ததை என்றார். உப்பு இலி - உப்பிடப்பெறாதது குப்பை வேளை உப்பிலி வெந்ததை என்றது, உப்பில்லாமல் வேகவைத்த குப்பைக் கீரையை என்றவாறு. மடவோர் என்றது, புறங்கூறித்திரியும் அறிவிலிகள் என்றவாறு. வறுமையுறுதல் இயல்பென அறியாது இவர் வறுமையான் உண்ணும் உணவின் சிறுமையை ஊரறியத் தூற்றுவது அவர் இயல்பாகலின் அவர் காணாதபடி கதவடைத்து என்றார். இரும்பே ரொக்கலொடு என்றது நல்கூர் நிலையினும் இல்லறத்திற்கியன்ற கடமையின் வழுவாத சால்புடைமை கூறியவாறு. என்னை?

குடநீர் அட்டுண்ணும் இடுக்கட் பொழுதுங்
கடனீர் அறவுண்ணுங் கேளிர் வரினும்
கடனீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி
மாதர் மனைமாட்சி யாள்  (நாலடி:382)

என்று சான்றோர் ஓதியாங்குக் கிணைமகள் இரும்பேரொக்கலை அவ்விடுக்கட்பொழுதும் ஊட்டினமை கூறியமையான் என்க. இருமை-கருமை, அஃது ஈண்டு வறுமையைக் குறிப்பான் உணர்த்திற்று. இரும்பே ரொக்கல் என்றது நல்கூர்ந்த பெரிய சுற்றத்தார் என்றவாறு. ஒருங்குடன் என்றது, அக்கீரையை எஞ்சாது என்றபடி. எனவே, பசி மிகுதி கூறியவாறு. என்னை? உப்பும் இன்றி வெந்த வேளைக் கீரையை முழுதும் உண்ணல் மிக்க பசிகூர்வார்க்கன்றி ஏலாமையின் என்க.

அழி பசி வருத்தம் என்றது,

மானம் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்  (நல்வழி : 26)

என்று சான்றோர் கூறியாங்குக் கொடை முதலிய எல்லா நலனையும் அழித்துவிடும் ஆற்றலுடைய பசியின் துன்பம் என்றவாறு.

இப்பசியால் வருங் கேட்டினை,

குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி  (மணி.11:79)

எனவரும் மணிமேகலையானும் உணர்க.

பொழிகவுள்
தறுகண் பூட்கைத் தயங்குமணி மருங்கின்
சிறுகண் யானையொடு பெருந்தேர்

என்னும் துணையும், நல்லியக்கோடன் நல்கிய யானையும் தேரும் இத்தகையன எனச் சிறப்பிக்குமாற்றால் நல்லியக்கோடனின் கொடைச்சிறப்பைக் கூறுதலே பாணன் கருத்தாகக் கொள்க. என்னை? வழங்குவார் பலரும் தமக்குப் பயன்படாத பொருளையே வழங்கல் உலகியற்கையாகவும், இவ்வள்ளல் யானை தேர் வழங்கினான் எனவும், அவையும் சிறந்தன எனவும் கூறுதல் அவன் கருத்தாகலான் என்க. 143 நீயிரும் என்பது தொடங்கி 163 பெறுகுவிர் என்னுந் துணையும் ஒருதொடர். இனி இவ்வாறு தான் பெற்ற பெருவளனைப் பெறாதார்க்கு அறிவுறுத்திய பாணன், அவ்வள்ளல் பால் நீயிரும் சென்மின்; செல்வீராயின் நீயிர் செல்லும் வழியிடத்தும் இன்னின்ன நன்மைகள் பெறுகுவிர் எனக் கூறுவான் தொடங்கி, முதற்கண் அவன் நாட்டின் நெய்தனிலத்துள்ள எயிற்பட்டினத்தை எய்துங்கால் உளவாம் நன்மையை இயம்புகின்றான் என்க.

143-145 : நீயிரும் ..................... செல்குவிராயின்

பொருள் : நீயிரும் - நீங்களும், இவண் நயந்து இருந்த இரும்பே ரொக்கல் செம்மல் உள்ளமொடு செல்குவிராயின் - இவ் விடத்தே நும்மை விரும்பி இராநின்ற கரிய பெரிய சுற்றத்தோடேயும், தலைமையுடைத்தாகிய நெஞ்சோடேயும் அவ்வள்ளல்பால் செல்குவீராயின்,

கருத்துரை : இங்ஙனம் ஆகலின் நீயிரும் ஈண்டு நும்மை விரும்பியிருந்த சுற்றத்தோடே ஐயுறாது அவ்வள்ளல்பாற் செல்க. அங்ஙனம் செல்குவீராயின் என்பதாம்.

அகலவுரை : நீயிரும் என்றது, அவ்வள்ளலைக் காணாமுன்னர்யானிருந்த நிலையில் இப்போதுள்ள நீங்களும் என்றவாறு. இரும்பே ரொக்கல் என்றதற்கு முன் (141) உரைத்தாங்கு உரைத்துக்கொள்க. செம்மல் உள்ளம் என்றது தலைமையுடைய நெஞ்சம் என்றவாறு. அஃதாவது, அவ்வள்ளல்பால் யாம் சென்றால் பரிசில் கிடைக்குமோ? கிடைக்காதோ? என்னும் ஐயுறவானே அலைவுறாது கிடைத்தல் திண்ணம் என்னும் நம்பிக்கையானே பரிவுதீர்ந்து மகிழ்ந்த நெஞ்சோடே என்றவாறு. இங்ஙனம் கூறாது ஆசிரியர் நச்சினார்க்கினியர் சுற்றத்தினது தலைமையை உடைத்தாகிய நெஞ்சுடனே என்று கூறுவர். ஒக்கல் என்பதன் இறுதியினின்ற ஒடுவும் எண்ணும்மையும் செய்யுள் விகாரத்தாற்றொக்கன. ஒக்கலொடும் உள்ளமொடும் என்க. செம்மல் உள்ளமொடு செல்க என்றான், அவர்கள் பரிவு தீர்ந்து பரிசில்பெற்றாங்கு மகிழ்ச்சியோடே செல்லும்பொருட்டு இரும்பேரொக்கலொடு என்றான், நல்லியக்கோடன் எத்தனைபேர் இரவலரைக் கண்டாலும் வெறாது மகிழ்ந்து போற்றுவன் என்றறிவித்தற் பொருட்டு.

எயிற்பட்டினத்தில் எய்தும் பேறுகள்

146-163 : அலைநீர்த்தாழை ............. பெறுகுவிர்

பொருள் : அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும் - அலையும் நீரையுடைய கடற்கரையினின்ற தாழை அன்னம்போலே பூத்தலானும், தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும் - இளவேனிற் காலம் தொடங்குகின்ற நாளிலே செருந்தி தன்னைக் கண்டாரைப் பொன்னென்று மருளப் பண்ணுதலானும், கடுஞ்சூல் முண்டகம் கதிர்மணி கழாஅலவும் - முதற்சூலையுடைய கழிமுள்ளி ஒளியையுடைய நீலமணிபோலப் பூத்தலானும், நெடுங்கால் புன்னை நித்திலம் போல் அரும்புதலானும், கானல் வெண்மணல் கடல் உலாய் நிமிர்தர -கரையிடத்துள்ள வெள்ளிய மணற்பரப்பிலே கடல் பரந்து ஏறுதலானும், பாடல் சான்ற நெய்தல் நெடுவழி - நல்லிசைப் புலவர் இனிது பாடுதற்கு அமைந்த நெய்தனிலத்தே கிடந்த நீண்ட நெறிமிசை, மணிநீர் வைப்பு மதிலொடு பெயரிய - நீலமணி போலும் கழி சூழ்ந்த ஊர்களை உடையதும் மதில் எய்திய எயில் என்னும் பெயரை அதனோடே தானும் எய்தியதுமாகிய, பனிநீர்ப் படுவின் பட்டினம் படரின் - குளிர்ந்த நீர்மிக்க குளங்களை உடைத்தாகிய எயிற்பட்டினத்தே செல்வீராயின், ஓங்குநிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன - உயர்ந்த தன்மையை உடைய ஒட்டகம் உறங்கிக் கிடந்தாலொத்த, வீங்கு திரை கொணர்ந்த விரைமா விறகின் - மிகுகின்ற அலைகொண்டு வந்த மணத்தையுடைய அகிலாகிய விறகினாலே, கரும்புகைச் செந்தீ மாட்டி - கரிய புகையை உடைய சிவந்த நெருப்பை எரித்து, பெருந்தோள் மதி ஏக்கறூஉம் மாசு அறு திருமுகத்து நுதிவேல் நோக்கின் நுளைமகள் அரித்த  -பெரிய தோளினையும் திங்கள் இத்தன்மை பெற்றிலமே என்று விரும்புதற்குக் காரணமான களங்கமற்ற அமைதியினையுடைய முகத்தினையும் முனையினை உடைத்தாகிய வேல்போலும் பார்வையினையும் உடைய நுளையர் வகுப்பிற் பிறந்த மகளாலே அரிக்கப்பட்ட, பழம்படு தேறல் பரதவர் மடுப்ப-பழையதாகிய களிப்பு மிகுகின்ற கள்ளினது தெளிவினைப் பரதவர் கொணர்ந்து நும்மை ஊட்ட, கிளைமலர்ப் படப்பைக் கிடங்கிற் கோமான் - கொத்திலெழுந்த பூக்களையுடையவாகிய தோட்டங்களையுடைய கிடங்கில் என்னும் ஊர்க்கு அரசனாகிய, தளை அவிழ் தெரியல் தகையோற்பாடி - அரும்பு அவிழ்ந்த மாலையினையுடைய அழகுடையோனைப் பாடி, அறற் குழல் பாணி தூங்கியவரொடு - தாள்வறுதியை உடைய குழலோசையின் தாளத்திற்கேற்ப ஆடின மகளிரோடே, வறல்குழல் சூட்டின் - உலர்ந்த குழன்மீனைச் சுட்டதனோடே, வயின் வயின் பெறுகுவிர் - மனைதொறும் பெறுகுவீர்.

கருத்துரை : கடற்கரையின் கண் தாழை அன்னம்போன்று மலரா நிற்றலானும் செருந்தி பொன்போற் பூத்தலானும், கழிமுள்ளி நீலமணி போல் பூத்தலானும், புன்னை மரங்கள் முத்துக்கள் போன்று அரும்பெடுத்தலானும், கடல் அலை மணற்பரப்பின்கண் பரவி நிமிர்தலானும், நல்லிசைப்புலவர் பாடுதற்கு மிகவும் பொருந்திய நெய்தனிலத்தின் வழியே, நீலமணி போலும் நிறமுடைய உப்பங்கழிகள் சூழ்ந்த ஊர்களையுடைய எயிற்பட்டினத்தை எய்துவீர்; அங்குச் செல்லின், ஒட்டகம் உறங்கிக் கிடந்தாற்போன்ற, கடல் கொணர்ந்து ஒதுக்கிய அகில்மர விறகாலே தீயினை எரித்துப் பெருந்தோளையும், மதிமுகத்தையும், வேல் நோக்கையுமுடைய நுளைமகள் காய்ச்சி அரித்த தேறலைப் பரதவர் நும்வாயிலே ஊட்ட, நீயிரும் மகிழ்ந்து கிடங்கிற் கோமானைப் பாடி, குழலோசையின் தாளத்திற்கேற்ப ஆடிய நும் விறலியரோடே, உலர்ந்த குழல்மீன் சூட்டையும் பெற்று உண்டு மகிழ்வீர் என்பதாம்.

அகலவுரை : அலைநீர்த் தாழை - அசைகின்ற இயல்பினையுடைய தாழை என்றுமாம். அன்னம்போலப் பூப்பவும், தமனியம்போல மருட்டவும், கதிர்மணிபோலக் கழாஅலவும், நித்திலம் ஒப்ப வைப்பவும் என நான்கிற்கும் உவமவுருபுகள் பெய்துரைத்துக் கொள்க. அன்னம் வெண்டாழை மலர்க்கு உவமம். தமனியம் - பொன் கதிர் மணி. ஈண்டு நீலமணி. கடுஞ்சூல் என்பதற்குத் தலைச்சூல் என நச்சினார்க்கினியர் பொருள் கூறினர். முண்டகம் - ஈண்டுக் கதிர்மணி போற் பூத்தது என்ற குறிப்பால் முள்ளிக்காயிற்று. நித்திலம் - முத்து; புன்னையரும்பிற்குவமை. இவ்வாறே,

செருந்தி பொன் சொரிதருந் திருநெல் வேலியுறை செல்வர் (தே.திருஞா)

என்றும்,

மணிப்பூ முண்ட கத்து மணன்மலி கானல்  (மதுரைக்காஞ்சி : 96)

என்றும்,

மணிமருள் மலர முள்ளி (அகம் : 234)

என்றும்,

மண்ணாப் பசுமுத் தேய்ப்பக் குவியிணர்ப்
புன்னை அரும்பிய புலவுநீர்ச் சேர்ப்ப  (நற்:96)

என்றும்,

மண்ணா முத்தம் அரும்பிய புன்னை  (அகம் : 30)

என்றும் பிறரும் கூறுதல் காண்க. பாடல்சான்ற நெய்தல் என்றது, தாழை முதலியன பூத்தலானும், கடல்அலை பரத்தலானும், காட்சிக் கின்பம் நல்கி இனிய பாடல் யாத்தற் கியைந்த உணர்ச்சியைக் கிளர்விக்கும் நெய்தனிலத்தின்கட் கிடந்தவழி என்றவாறு. எனவே, அவ்வழிச் செல்வோர்க்குக் காட்சி இன்பமே மிக்கு மகிழ்ச்சி தருதலன்றி ஆறுசெல் வருத்தம் தோன்றாதென, ஆற்றின் நன்மை கூறியவாறாயிற்று. வைப்பு - ஊர். மதிலொடு பெயரிய என்றது, மதிலின் பெயரைப் பெற்றுள்ள என்றவாறு. அஃதாவது எயிற்பட்டினம் என்பதாம். எயில் மதிலாகலான் அவ்வாறு கூறினார். நல்லியக்கோடன் என்னும் வள்ளல் ஆட்சி செய்த ஓய்மாநாட்டின்கண் எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் என்னும் ஊர்கள், அக்காலத்தே சிறப்பாக விளங்கின என்ப. இவையிற்றை இந்நூலில் நிரலே காணலாம். பனிநீர்ப்படு-குளிர்ந்த நீரையுடைய குளம். பட்டினம் - கடற்கரையிற் றுறையின் அருகே உள்ள ஊர். படர்தல்-செல்லுதல். கடனீர் அலைகளாலே கொணர்ந்தொதுக்கிய அகின்மரம் கிடத்தல் ஒட்டகம் உறங்கிக் கிடப்பதைப்போன்று தோன்றுதலான் ஒட்டகம் துயின் மடிந்தன்ன விரைமரவிறகு என்றார். விரை-மணம். விரைமரத்தாலே தீ எரித்துக் காய்ச்சிய. தேறல் அம் மரத்தினாலுண்டான மணப்புகை கதுவித்தானும் மணம்பெறும் ஆதலின், விரைமர விறகின் செந்தீ மாட்டி என்றார். மதி ஏக்கறுதற்கு ஏது, தன்பாற் களங்கமுண்மையும், இந் நுளைச்சியர் முகத்து அஃதின்மையும் என்க. நுளைமகள் - நுளையன் மனைவி எனினுமாம். நுளையர்-நெய்தனில மாக்கள். பழம்படு தேறல் - பழைமைப்பட்டிருந்த கள்ளினது தெளிவு. பழைய கட்டெளிவு பெரிதும் களிப்புடையதாக இருக்குமென்ப.

தேட்கடுப் பன்ன நாட்படு தேறல்
கோண்மீ னன்ன பொலங்கலத் தளைஇ
ஊண்முறை ஈத்த லன்றியும்  (புறம் : 392)

என்றார் பிறரும். கரும்புகைச் செந்தீ என்றவிடத்து முரண் அணி தோன்றிச் செய்யுளின்பம் நல்குதலறிக. பரதவர் மடுப்ப என்றது பரதவர் நும்மை உவந்து நும்வாயின் ஊட்ட என்றவாறு. கிளைமலர்ப் படப்பை - பூம்பொழில். பூம்பொழில்கள் மிக்க கிடங்கில் என்க. கிடங்கில் நல்லியக்கோடன் தலைநகரம். அஃது இன்றும் கிடங்கில் என்றே வழங்கப்படுகின்றதென்றும், அதன்கண் பண்டு தலைநகராயிருந்தமைக்குரிய இடிந்த அரண் முதலியன உள என்றும் கூறுப. தளையவிழ்தல் - கட்டுவிடுதல்; மலர்தல் என்றவாறு. தெரியல்-மாலை; தகை-அழகு, அறல் - தாள அறுதி. குழல் (162) - வேய்ங்குழல். (163) குழல் - ஒருவகைமீன். சூடு - சுட்டமீன். வயின் - இடம்: ஈண்டு மனைக்கு ஆகுபெயர்.

பூப்பவும், மருட்டவும், கழாஅலவும், வைப்பவும், நிமிர்தரவும் பாடல் சான்றவழி, பட்டினம் படரின் விறகில் தீமாட்டி. நுளைமகள் அரித்ததேறல், பரதவர் மடுப்பப் பாடிப் பாணி தூங்கியவரொடு சூட்டோடே மனைதொறும் பெறுகுவீர் என இயைத்துக்கொள்க. இனி, எயிற்பட்டினம் கடந்து முல்லைநிலத்தின் கண்ணதாகிய வேலூரை எய்துமின் என்று இயம்புகின்றான்.

வேலூரிற் பெறுவன

164-177 : பைந்நனைஅவரை ............. பெறுகுவீர்

பொருள் : பை நனை அவரை பவழம் கோப்பவும் - பசிய அரும்புகளையுடைய அவரை பவழம்போலப் பூக்களை முறையே தொடுப்பவும், கருநனைக் காயா கணமயில் அவிழவும்-கரிய அரும்பினையுடைய காயாக்கள் திரண்ட மயிலின் கழுத்துப் போலப் பூப்பவும், கொழுங்கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும் - கொழுவிய கொடியினையுடைய முசுட்டை கொட்டம்போலும் பூவைத் தன்னிடத்தே கொள்ளவும், செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும் - வளவிய குலையினையுடைய காந்தள் கைவிரல் போலப் பூவா நிற்பவும், கொல்லை நெடுவழிக் கோபம் ஊரவும்-கொல்லையிடத்தே கிடந்த நெடிய வழிகளிலே இந்திரகோபம் ஊரா நிற்பவும், முல்லை சான்ற முல்லையம் புறவின் - முல்லை யொழுக்கம் பொருந்திய முல்லைக்கொடி படர்ந்த அழகினையுடைய காட்டிடத்தே, விடர்காலருவி வியன் மலை மூழ்கி சுடர்கான் மாறிய செவ்வி நோக்கி-முலைஞ்சுகளிலே குதிக்கும் அருவியினையுடைய பெரிய மறைவுமலையிலே மறைந்து ஞாயிற்றின் ஒளிச்சுடர்கள் மாறிப்போன அந்திக்காலத்தைப் பார்த்து, திறல் வேல் நுதியிற் பூத்த கேணி - வலமிக்க வேலினது நுனி போலப் பூத்த கேணியை உடைய, விறல்வேல் வென்றி வேலூர் எய்தின் - வெற்றியையுடைய, வேலாலே வெற்றிபொருந்திய வேலூரைச் சேரின்; உறு வெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை - மிகுகின்ற வெயிலுக்கு உள் உறைவோர் வருந்தப் பட்ட வெப்பம் விளங்குகின்ற குடிலில் இருக்கின்ற, எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு - எயினக்குலத்தின் மகளிராலே அடப்பட்ட இனிய புளிங்கறியிடப்பட்ட வெவ்விய சோற்றை, தேமா மேனிச் சில்வளை ஆயமொடு - தேமாவின் தளிர்போலும் மேனியையும் சிலவாகிய வளையினையும் உடைய நும் மகளிருடைய திரளுடனே, ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவீர் - ஆமானினது சூட்டிறைச்சியோடே நும்பசி கெடுமாறு பெறுவீர்.

கருத்துரை : அவரை பவழம் கோத்தாற்போன்று பூப்பவும், காயா குழாங்கொண்ட மயில்களின் கழுத்துப்போன்று மலரவும் கொழுவிய கொடியை உடைய முசுட்டை கொட்டம்போன்ற பூக்களைத் தம்பாற் கொண்டிருப்பவும், செழித்த காந்தள் கைவிரல் போன்று பூப்பவும், கொல்லை நிலத்தே கிடந்த நெடிய வழிகளிலே இந்திரகோபம் ஊராநிற்பவும், இவ்வாற்றான் முல்லை ஒழுக்கத்திற்கியன்றதாகிய முல்லைக் கொடிபடர்ந்த அழகிய காட்டிடத்தே, மறைமலையின்கண் ஞாயிறு மறைந்து அதன் சுடரும் மாறிப்போன அந்திப்பொழுதினை நோக்கி, வேலினது நுனிபோன்று அரும்பிய கேணிகளையுடைய வேலாலே வென்றிமிக்க வேலூரினை நீயிர் அடைவீராயின், ஆண்டு உள்ளுறைவோர் வருந்துதற்குக் காரணமான வெப்பமிக்க குடிலின்கண் உறையும் எயினர் குலத்திற் பிறந்த மகளிர் சமைத்த இனிய புளிங்கறியிட்ட சோற்றினை ஆமானினது சூட்டிறைச்சியோடே நும்பசி தணியுமாறு நிரம்பப் பெறுகுவீர் என்பதாம்.

அகலவுரை : பசுமை நனை - பைந்நனை எனப் புணர்ந்தது. ஈறுபோதல் (நன்-136) என்று தொடங்கும் நூற்பா விதிப்படி பசுமையின் மை விகுதியும் நடுநின்ற உயிர்மெய்யுங் கெட்டு முதனின்ற அகரம் ஐ ஆகிப் பை என நின்று வருமொழியாகிய நனை என்பதன் முன்னின்ற நகரம் அல்வழியில் தனி ஐ முன் மிக்குப் புணர்ந்தது. பவழம் என்றமையால் அதற்கியைந்த சொல்லால் கோப்பவும், என்றார். அவரை பவழமாலைபோலப் பூத்தன என்றவாறு. நனை - அரும்பு.

வேப்பு நனையன்ன நெடுங்கட் கள்வன்  (ஐங்குறு : 30)

என்றார் பிறரும். காயாவின் அரும்பு கருநிறமுடைத்தாகலின் கருநனைக் காயா என்றார். காயாம் பூங்கொத்துக்கட்கு மயிற்கழுத்து உரு உவமை. மிகுதியாக மலர்ந்துள்ளமையின் கணமயில் என்றார். கணம்-கூட்டம். அவிழ்தல் - மலர்தல்.

புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை
மென்மயில் எருத்திற் றோன்றும்  (குறுந்:183)

எனக் குறுந்தொகையினும், மயிலெருத் துறழணி மணிநிலத்துப் பிறழ என்னும் கலிக்கு, மயிலினது கழுத்தை மாறுபடுகின்ற அணியப்பட்ட காயாம் பூவாற் செய்த கண்ணிகள், (103) என நச்சினார்க்கினியர் உரை வகுத்தனர்.

கலவ மாமயில் எருத்திற் கடிமல ரவிழ்ந்தன காயா  (சீவகசிந்:1558)

எனச் சீவக சிந்தாமணியினும் கூறுதல் காண்க. முசுண்டை - முசுட்டைக் கொடி. கொட்டம்-பனை ஈந்து முதலியவற்றின் ஓலையாற் பின்னப்படும் சிறு பெட்டி. முசுட்டை மலர் கொத்தாக இருக்கும். தோற்றத்திற்கு உவமை. கொட்டங் கொள்ளவும் - கொட்டத்தைத் தம்பாற் கொண்டுள்ளன போன்று பூப்பவும் என்றவாறு. கொல்லை நெடுவழி - முல்லை நிலப்பரப்பின்கண் மக்கள் நடத்தலால் உண்டாகிய நெறி. கோபம்-இந்திர கோபப் புழு. முல்லைசான்ற என்றது முல்லை ஒழுக்கமாகிய ஆற்றி யிருத்தற்குப் பொருந்திய பருவ வாய்ப்பினையுடைய என்றபடி. அவரை முதலியன மலரும் பருவம் கூறலின், அப்பருவத்திற்கியன்ற ஒழுக்கமும் கூறுவாராயினர். அப்பருவம் கார்ப்பருவம். என்னை?

காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்

என்பதோத்தாகலின் என்க. இச் சிறுபாணாற்றுப்படை புறப்பொருள் பற்றியதாயினும் முல்லைநிலங் கூறத்தொடங்கிய ஆசிரியர் நத்தத்தனார் உள்ளம் அந்நிலத்திற்குரிய அகப்பொருளை நினைவு கூர்தலின் அவ்வாறு கூறினர் என்க. பைந்நனை அவரை என்பது தொடங்கிக் கோபம் ஊரவும் என்னுந் துணையும் முல்லை நிலத்தின்கண் கார்ப்பருவக் காட்சியையே கருதிக் கூறிவந்தவர் முல்லைசான்ற என அப்பருவத்தே நிகழ்தற்கியன்ற ஒழுக்கத்தையும் நினைவுகூர்ந்து கூறுவாராயினர். பின்னரும்,

விடர்கா லருவி வியன்மலை மூழ்கிச்
சுடர்கான் மாறிய செவ்வி நோக்கி

என அம் முல்லைக்குரிய மாலைப்போதினையும் நினைவுகூர்ந்துரைக்கின்ற அழகினை அறிந்தின்புறுக. முல்லைக்குச் சிறுபொழுது மாலையாதலைக் காரும் மாலையும் முல்லை என்றமையாலறிக. விடர் - மலை முழைஞ்சு. விடர்கால் அருவி என்றது மலை முழைஞ்சுகளின் நின்றும் வீழ்கின்ற அருவி என்றவாறு. வியல் - அகலம்.

வியல் என்கிளவி அகலப் பொருட்டே  (தொல்.உரி:66)

என்பது தொல்காப்பியம். மலை மூழ்குதல்-மலையின்கண் மறைதல். சுடர்கால் மாறிய செவ்வி - அந்திப்பொழுது. கேணி - அகழி; ஊற்று நீர்க்கூவல் அல்லது சிறு குளமுமாம். எனவே அனைத்து நீர்நிலைகளையும் கொள்க. வேல் நுதியிற் பூத்த கேணி என்றது வேலினது நுனிபோன்ற நுனியினையுடைய ஆம்பல் தாமரை முதலிய நீர்ப்பூவின் அரும்புகளைப் பூத்துள்ள கேணி என்றவாறு.

திறல் வேல்நுதியிற் பூத்தகேணி என்னுந் தொடரைத் திறல் வேல் நுதியின் கேணிபூத்த என மாறி ஆசிரியர் நச்சினார்க்கினியர் வேறு பொருளும் வரலாறும் கூறியுள்ளார். அவை வருமாறு :

முருகன் கையில் வலியினை உடைத்தாகிய வேலின் நுதிபோலே கேணி பூக்கப்பட்ட, வெற்றியையுடைய வேலாலே வெற்றியை உடைய வேலூரைச் சேரின் என்றது; நல்லியக்கோடன் தன் பகை மிகுதிக்கு அஞ்சி முருகனை வழிபட்டவழி அவன் இக்கேணியிற் பூவை வாங்கிப் பகைவரை எறியென்று கனவிற்கூறி அதிற் பூவைத் தன் வேலாக நிருமித்ததொரு கதை கூறிற்று. இதனானே வேலூர் என்று பெயராயிற்று என்பதாம். நல்லியக்கோடன் காலத்திலேயே இந்நிகழ்ச்சி நிகழ்ந்துளதாயின் ஆசிரியர் நத்தத்தனார் அவ்வள்ளலின் பெருமைகளில் தலைசிறந்த இந்நிகழ்ச்சியை நன்கு விரித்தோதியிருப்பரன்றே. நல்லியக் கோடன் காலத்தே நிகழ்ந்த நிகழ்ச்சியாலே அவ்வூர் வேலூர் எனப்பட்ட தென்றலும் ஆராய்தற்குரித்தாம். இத்தகைய சிறந்த நிகழ்ச்சியை இவ்வள்ளலைப் பாடிய சான்றோர் பிறரும் யாண்டும் கூறியதாகவும் தெரிந்திலது.

உறுவெயில் - மிக்க வெயில்.

உறுதவ நனியென வரூஉம் மூன்றும்
மிகுதி செய்யும் பொருள என்ப  (தொல்.உரி.3)

என்பது தொல்காப்பியம். உலைஇய - வருந்தப்பட்ட, உருப்பு - வெப்பம். அவிர்தல் - விளங்குதல். உறுவெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை என்றது, மிக்க வெயிலால் உள்ளுறைவோர் வருந்துதற்கியன்ற வெப்பமிக்குடைய சிறுகுடில் என்றவாறு. எயிற்றியர் - எயினர் என்பதன் பெண்பால். எயினர் - பாலைநில மாக்கள்.

முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்  (சிலப்.11:64-6)

என்பவாகலின், முல்லையில் பாலைத்திணைக்குரிய எயினர் வாழ்வாராயினர் என்க. தேமா - மேனி -தேமாவின் தளிர்போன்ற நிறத்தையுடைய மேனி என்க. தேமா: தளிர்க்கு ஆகுபெயர். ஆயம் - மகளிர் கூட்டம். ஈண்டு விறலியர் கூட்டம் என்க. இன்புளி வெஞ்சோறு ஆமான் சூட்டின் பெறுகுவீர் என இயைத்துக் கொள்க. சூடு-சூட்டிறைச்சி. இனி, அவரை பவழம் கோப்பவும், காயா மயில் அவிழவும், முசுண்டை கொட்டம் கொள்ளவும், காந்தள்கைவிரல் பூப்பவும், முல்லை ஒழுக்கத்திற்குப் பொருந்திய முல்லைநிலத்தே ஞாயிறுபட்ட அந்திப்போதில் வேலூர் எய்தின் எயிற்றியர் அட்டசோறு சூட்டோடே பெறுகுவீர் என, இத்தொடரின்கட் பொருளை இயைத்துக் கொள்க.  இனி மருத நிலத்தின் கண்ணுள்ள ஆமூர்க்குச் செல்லுக என்கின்றான். 178 முதல் 195 வரை ஒருதொடர். இதன்கண் மருதநிலச் சிறப்பும் ஆமூரில் பெறற்பாலதும் கூறப்படும்.

ஆமூரிற் பெறுவன

178-195 : நறும்பூங்கோதை ............... பெறுகுவீர்

பொருள் : நறும்பூங்கோதை தொடுத்த நாள்சினை - நறிய பூக்களை மாலைதொடுத்தாற்போன்று மலர்ந்துள்ள பருவம் வாய்ந்த கொம்புகளையும், குறுங்கால் காஞ்சிக் கொம்பர் ஏறி - குறிய தாளினையுமுடைய காஞ்சிமரத்தின் கொம்பிலே ஏறி, நிலையருங் குட்டம் நோக்கி நெடிதிருந்து - ஒருகாலத்தும் நிலைப்படுதல் அரிதாகிய குளத்தின்கண் கூர்ந்து - பார்த்து மீன்களை எடுக்கும் காலத்தைக் கருதி நெடும்பொழுதிருந்து, புலவுக் கயல் எடுத்த பொன்வாய் மணிச்சிரல் - புலானாற்றத்தையுடைய கயலை முழுகி எடுத்த பொன்னிறம் போலும் வாயையுடைய நீலமணி போன்ற சிச்சிலியினது, வள்ளுகிர் கிழித்த வடுஆழ் பாசடை-பெரிய நகங் கிழித்த வடு அழுந்தின பசிய இலையினையுடைய, முள்ளரைத் தாமரை முகிழ்விரி நாட்போது - முள்ளையுடைத்தாகிய தண்டினையுடைய வெண்டாமரையினது அரும்பு விரிந்தநாட் காலத்துப் பூவின்கண், கொங்கு கவர் நீலச் செங்கட் சேவல் - தேனை நுகர்கின்ற நீல நிறத்தினையும் சிவந்த கண்ணினையுமுடைய வண்டொழுங்கு, மதிசேர் அரவின் மானத் தோன்றும் - திங்களைச் சேர்கின்ற கரும்பாம்பை ஒப்பத் தோன்றும், மருதம் சான்ற மருதத் தண்பணை- மருதவொழுக்கம் நிலைபெறுதற்கமைந்த மருதநிலத்திற் குளிர்ந்த வயலினையுடையதும், அந்தணர் அருகா அருங்கடி வியல் நகர் - சான்றோருடைமையிற் குறைதலில்லாததும் அரிய காவலினையுடையதும் அகன்ற மனையை உடையதும், அந்தண் கிடங்கின் - அழகிய குளிர்ந்த அகழியை உடையதுமாகிய, அவன் ஆமூர் எய்தின் - அவ்வள்ளலின் ஆமூரைச் சேர்திராயின், வலம்பட நடக்கும் வலி புணர் எருத்தின் - இழுத்தற்குரிய வலிபொருந்திய கழுத்தினாலே, உரன்கெழு நோன் பகட்டு உழவர் தங்கை - வெற்றியுண்டாக நடக்கும் மெய்வலியினை உடைத்தாகிய எருத்தினை உடைய உழவருடைய தங்கையாகிய, பிடிக்கை அன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத் தொடிக்கை மகடூஉ - பிடியினது கையை ஒத்த பின்னின மயிர் வீழ்ந்து கிடக்கின்ற சிறிய முதுகினையும் தொடியணிந்த கையினையுமுடைய மகள், மகமுறை தடுப்ப - தன் மக்களைக் கொண்டு நும்மை முறைமையோடே போகாது விலக்குகையினாலே, இருங்காழ் உலக்கை இரும்புமுகம் தேய்த்த - கரிய வயிரத்தையுடைய உலக்கையினது பூணினையுடைய முகத்தைத் தேயப் பண்ணின, அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு - குற்றுதல் மாட்சிமைப்பட்ட அரிசியாலாக்கின கட்டியாகிய வெள்ளிய சோற்றை, கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர் - கவைத்த காலினையுடைய நண்டினது கலவையோடே பெறுவீர்.

கருத்துரை : நறிய பூமாலை தொடுத்தாற்போன்று மலர்ந்துள்ள பருவம் வாய்ந்த கொம்பினையும், குறிய தாளினையுமுடைய காஞ்சி மரத்தினது கிளையிலே ஏறியிருந்து, நிலைத்தலரிய குளத்தினைக் கூர்ந்து நோக்கி உறுமீன் வருந்துணையும் காத்திருந்து, கயல்மீனை வீழ்ந்தெடுத்த சிரலின் நகங்கிழித்த வடு ஆழ்ந்துள்ள பசிய இலையினையும், முட்பொருந்திய நாளத்தையும் உடைய வெண்டாமரையின்கண் தேனைக் கவர்கின்ற கரிய வண்டொழுங்கு திங்களைக் கவரும் கரும் பாம்புபோலத் தோன்றா நின்ற மருதவொழுக்கமைந்த மருதநிலத்தே குளிர்ந்த வயல்களை உடையதும், சான்றோரை உடையதும், அரிய காவலையுடையதும், அகன்ற வீடுகளையுடையதும், அகழியையுடையதும் ஆகிய நல்லியக்கோடனுடைய ஆமூரை அடைவீராயின், ஆண்டு வலம்பட நடக்கும் உரன் உடைய எருதுகளை உடைய உழவருடைய தங்கையாகிய பிடியினது கையை ஒத்த பின்னல் கிடக்கும் சிறிய முதுகினையும் தொடிக்கையினையும் உடைய மகள், தன் மக்களாலே நும்மை முறையாகத் தடுத்து, மாண்பமைந்த வெள்ளிய அரிசியாலாக்கிய சோற்றினை நண்டினது கலவையோடே தருதலாலே நீயிர் பெறுகுவீர் என்பதாம்.

அகலவுரை : காஞ்சிமரத்தின் கொம்பர்களில் மலர் நிரல்நிரலாகப் பூத்துள்ளமையின், நறும்பூங்கோதை தொடுத்த நாட்சினை என்றார். நாள்-பருவநாள்; பூக்கும் பருவமெய்திய சினை என்க. இதனை, கோதைக்கு அடையாக்கி நாட்காலத்தே மாலைகட்டினாற்போல என்றார் ஆசிரியர் நச்சினார்க்கினியர். சினை-கொம்பு. குறுங்கால்-குறுகிய அடிமரம். கால் போறலின் கால் என்றார். காஞ்சி - மருதநிலத்திற்குரிய ஒருவகை மரம். கொம்பர் - கொம்பு: அர் விகுதிபெற்று நின்றது. நிலையருங்குட்டம் என்றது அந்நிலத்தின் நீர்வளம் குறித்து நின்றது. நீர்வறந்த முதுவேனிற்காலத்தும் நிலைத்தற்கரிய குளம் என்றவாறு. நோக்குதல், மீனினது வருகையோர்ந்து கூர்தல் நோக்குதல். நெடிது இருத்தல், ஓடுமின் ஓட உறுமீன் வருமளவும் காத்திருத்தல்.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து  (திருக் : 490)

என்னும் திருக்குறட்கு மீன்கோடற்கிருக்கும் வழி அது வந்தெய்தும் துணையும் முன்னறிந்து தப்பாமற் பொருட்டு உயிரில்லதுபோன்றிருக்கு மாகலானும் எனப் பரிமேலழகர் உரை விரித்தவாற்றானும் உணர்க. புலவுக்கயல் - புலாலினையுடைய கயல்மீன். பொன்வாய் மணிச்சிரல் என்னுந் தொடர் சிரலின் எழுத்தோவியமாய்நின் றின்பம் நல்குதலறிக.

நீர்நணிப் படிகோ டேறிச்................
நிலையருங் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து  (புறம் : 243)

என்றார் பிறரும். சிரல்மீனெறிவதனை,

செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண்டாங்கு
எறிந்தது பொறாஅது இரையிழந்து வருந்தி
மறிந்து நீங்கு மணிச்சிரல்  (மணி: 4: 22)

என மணிமேகலை கூறுதலானும் உணர்க. வள்உகிர் - பெரிய நகம். மீனெறிதற்கு விரைந்து வீழ்ந்த சிரலின் உகிர்பட்டு வடுவேற்பட்ட பசிய தாமரையிலை என்க. பாசடை - பசிய இலை. முள்ளரைத் தாமரை - முள்ளுடைய தாளையுடைய தாமரை.

முட்டாட் டாமரை (முருகு : 73)

முட்டாள சுடர்த்தாமரை  (மதுரைக் : 249)

என்றார் பிறரும். தாமரைக்கு மதியை உவமை கூறுதலானே வெண்டாமரை என்பது போந்தது. நாட்போது - அன்றலர்ந்த மலர். கொங்கு - தேன். நீலமணிபோலும் நிறத்தையும், சிவந்த கண்ணையுமுடைய வண்டென்க. சேவல்-ஆண்பால் குறித்த சொல். எனவே கொங்கு கவர் ஆண்வண்டுகள் என்றபடியாம்.

சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவணும்
மாயிருந் தூவி மயிலலங் கடையே  (தொல்.மர: 48)

என்பது தொல்காப்பியம். இவ்விதிப்படி வண்டில்ஆண் சேவல் எனப்பட்டது. தலைமைபற்றிச் சேவல் என்றாரேனும் பொதுவில் வண்டென்றலே கருத்தாகக் கொள்க. கரிய வண்டுகள் நிரலாகப் பறந்து வெண்டாமரை மலரை அடையும் தோற்றம் நீண்ட கரும்பாம்பு திங்கள் மண்டிலத்தைக் கவ்வியது போன்றிருந்ததென்றவாறுமான : உவமஉருபு. மருதஞ் சான்ற என்றது, ஊடியும் கூடியும் இன்புறுதற்கமைந்த என்றபடி. மருதம்சான்ற மருதம் என்றதன்கண் முன்னையது கைகோள்; பின்னையது நிலம். இது முன்னர் முல்லை சான்ற முல்லையம் புறவின் சுடர்கான் மாறிய செவ்வி நோக்கி எய்தின் எனப் பொழுது கூறியவர் ஈண்டு மருதத்திற்கியன்ற பொழுது கூறிற்றிலரால் எனின், அறியாது கூறினாய். முதனாள் அந்தியில் வேலூர் புக்கார் இரவு ஆண்டிருந்து அடுத்தநாள் வைகறையிலே புறப்பட்டுச் செல்வர் என்பது கூறவும் வேண்டுமோ? மேலும், முள்ளரைத் தாமரை முகிழ் விரி நாட்போது என்ற குறிப்பானே தாமரைமுகிழ் விரிதலும், அதன்கண் வண்டுகள் தேன் கவர்தலும், விடியற்காலத்தே நிகழும் நிகழ்ச்சிகளே ஆதலின், இவ்வாற்றால் குறிப்பால் மருதத்திற்குரிய வைகுறு விடியலும் விளம்பினார் என்க. நாட்போது என்பதும் காலையில் மலர்ந்த புதியமலர் என்னும் பொருட்டாம்.

இனி மருதஞ்சான்ற, மருதத்தண்பணை சூழ்ந்த ஆமூரின் மாபெருஞ் சிறப்பினை விளக்கத்தகுந்த சொற்களைத் தேர்ந்தே கூறுகின்றாராதலின் ஆமூரின் பெருஞ் சிறப்பை அந்தணர் அருகா ஆமூர் என்றார். என்னை?

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்  (குறள்:30)

என்பவாகலின், ஆமூரின்கண் எல்லா வுயிர்களிடத்தும் பரந்துபட்டுச் செல்லும் அருட்குணஞ்சான்ற அந்தணர் எப்போதும் அருகுதலின்றிமிக்கு வாழ்வார் என்னுமாற்றால், ஒப்பிலாப் பெருமையுடைய ஊர் ஆமூர் என உணர்த்தினாராயிற்றென்க. ஆசிரியர் இளங்கோவடிகளாரும், பூம்புகாரின் சிறப்புணர்த்துவார் அதன்கண் உயர்ந்தோருண்மையையே தேர்ந்தெடுத்துக் கூறினர்; இதனை,

பொதியி லாயினும் இமய மாயினும்
பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய
பொதுவறு சிறப்பிற் புகாரே யாயினும்
நடுக்கின்று நிலைஇய என்ப தல்லதை
ஒடுக்கங் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே  (சிலப்.மங்கல: 14-9)

எனவரும் சிலப்பதிகாரத்தான் உணர்க. அல்லதூஉம்,

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே  (புறம் : 178)

என அவ்வையாரும் சிறப்புடைய நிலம் எனப்படுவது சான்றோர் உள்வழியே என ஓதியவாற்றானும் உணர்க.

இனித் தெண்ணீர் வயற்றொண்டை நன்னாடு சான்றோருடைத்து எனப் பிறருங் கூறியதற்கேற்பவே அந்தணர் அருகா ஆமூர் என்றது அமைதலும் அறிக. அருங்கடி கள்வர் பகைவர் முதலியோராற் புகுதற்கரிய காவல் என்க. வியனகர் - அகன்ற இல்லங்கள்; இனி வியனகராகிய ஆமூர் எனினுமாம். அந்தண் கிடங்கு என்றது, நீரற வில்லா ஆழமுடைய அகழியுடைமை கூறிற்று. அவன் என்றது, பண்டறிசுட்டு. நல்லியக்கோடனின் ஆட்சியினமைந்த ஆமூர் என்றபடி. இனிச் சுருங்கிய இச்சொற்றொடரால் பிற்றைநாட் புலவர், நாட்டுப் படலம், நகரப்படலம் என, இரண்டு படலவாயிலாய்ப் பல படப் பாரித்துரைக்கும் சிறப்பெல்லாம் போதரக்கூறிப் பின்னும், மருதநிலத்தின் சிறப்பிற்கு ஏரின் உழூஉம் உழவருண்மையே ஏதுவாகலான், அவர் பெருமையை விதந்து விளக்குகின்றார்.

வலம்பட நடக்கும் வலிபுணர் எருத்தின்
உரன்கெடு நோன்றாள் உழவர்

என்னும் அளவானே, அவ்வுழவர் சிறப்பு முற்ற ஓதினாராயிற்று. என்னை? உழுதுண்பார் வளம் மிகுதற்கு அவருடைய எருத்தின் சிறப்பே காரணமாம். ஆதலான், அவ்வாமூர் வாழ்வோர் தம் எருதுகளை நன்கு போற்றுதலால் அவை வலம்பட நடக்கும் வலிபுணர் கழுத்துக்களை உடையவாயின; மற்று, அவ்வுழவர் தாமும் அவ்வலிபுணர் எருதுகளைக் கொண்டு ஆழவுழுவார் என்பதும் போதந்தது. ஆழஉழும் என்ற துணையானே,

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு  (குறள் : 1038)

எனத் தேவர் ஓதியாங்கு உழுதல், எருப்பெய்தல், களைகட்டல், நீர்கால் யாத்தல், காத்தல் என்ற இவ்வைந்து வகையினும் அவ்வுழவர் வல்லுநர் ஆதலும் கூறாமலே அமையும் என்க. இவ்வாற்றால் அவ்வூர் தொழில் வளமுற்றுப் பசிநீங்கி இன்புறுதற்கு இயன்ற தென்பதனை இவையிற்றிற் கெல்லாம் முதலாக அமைந்த எருதின்வலி கூறுமாற்றானே விளக்கிய இவ்வாசிரியர் பெருமையை என்னென்பதாம். இங்ஙனம் இரப்போர் சுற்றமும், புரப்போர் கொற்றமும் உழவிடை விளைக்கும் வேளாண் மாந்தர் மிக்க அவ் வாமூரில், வருந்தி வந்தவர்க் கீதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன இன்மையின், இல்லின் கண்ணிருந்து அவ்வுழவன் மனைவி செய்யும் இல்லறச் சிறப்பினை இனிக் கூறுகின்றார் என்க. உழவர் தங்கை என்றது, உழவர் இல்லத்துள்ள பெண் என்றவாறு. இங்ஙனம் கூறுதல் சிறந்த நாகரிகமான முறையாதல் ஓர்க.

வல்விற் கானவர் தங்கை
சிறுதினைத்,
துளரெறி நுண்டுகட் களைஞர் தங்கை  (குறுந். 335 : 6,392: 4-5)
கொலைவில் எயினர் தங்கை  (ஐங். 363 : 2)
கானவர் தங்கை  (அகம். 132 : 5)

எனப் பிற சான்றோரும் இங்ஙனம் கூறுதல் காண்க. உழவர் தங்கையை ஆசிரியர் தம் எழுத்தோவியத்தில் சுருங்கிய சொற்களால் முழுதுறத் தீட்டிக் காட்டுதலை உணர்வுடையோர் உன்னி மகிழ்க.

பிடிக்கை யன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத்
தொடிக்கை மகடூஉ

என்பது அவ்வோவியமாம். மருதநிலமாகலான் அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு என்றார். அமலை - கட்டி.

இத்தொடரிற் போந்தவற்றைக் காஞ்சிக் கொம்பர் ஏறி, நோக்கி, இருந்து கயல் எடுத்த சிரல், உகிர் கிழித்த வடுஆழ் பாசடைத் தாமரைப் போது கவர் சேவல், மதிசேர் அரவிற்றோன்றும் மருதத் தண்பணை அந்தணர் அருகா வியனகர் ஆமூர் எய்தின், உழவர் தங்கை, தடுப்பச் சோறு கலவையொடு பெறுகுவீர் என, இயைத்துக் காண்க. 196 எரி மறிந்தன்ன என்பது தொடங்கி, 202 நணி யதுவே என்னுந் துணையும் ஒரு தொடர். இதன்கண், ஆற்றுப்படுத்தும் பாணன் ஆமூர் எய்திய பின்னர், நல்லியக்கோடன் என்னும் வள்ளலின் இருக்கை சேய்த்தன்று நணித்தே என எதிர்வந்த பாணனுக்கு இயம்புகின்றான்.

196-202 : எரிமறிந்தன்ன ............... நணியதுவே

பொருள் : எரி மறிந்தன்ன நாவின்- தீயினது பிழம்பு சாய்ந்தாலொத்த நாவினையும், இலங்கு எயிற்று - விளங்குகின்ற எயிற்றையும், கரு மறிக்காதின் - வெள்யாட்டு மறிகளை அணிந்த செவியினையும், கவையடிப் பேய்மகள் - கவைத்த அடியினையும் உடைய பேய்மகள், நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல - நிணத்தைத் தின்று சிரிக்கும்பொழுது தோன்றும் தோற்றத்தைப் போன்று, பிணன் உகைத்துச் சிவந்த பேருகிர்ப் பணைத்தாள் அண்ணல் யானை தாம் போரின்கட் கொன்று குவித்த பிணங்களைக் காலாலே இடறிச் சிவந்த பெரிய நகங்களையும் பெருமையுடைய கால்களையும் உடைய தலைமை பொருந்திய யானைகளின், அருவி துகள் அவிப்ப நீறடங்கு தெருவின் - மதவருவி எழுந்த துகளை அவிக்கையினாலே புழுதி அடங்கின தெருவினையுடைய, சாறு அயர் அவன் மூதூர் - விழா நடக்கின்ற அவ்வள்ளலின் பழைய ஊர்தானும், சேய்த்தும் அன்று சிறிது நணியதுவே - தூரிய இடத்தது மன்று சிறிதாக அண்ணிய இடத்தின் கண்ணதேயாகும்.

கருத்துரை : நீயிர் ஆமூரை எய்தியபின்னர், தீப்பிழம்பு, சாய்ந்தாற் போன்ற நாவினையும், விளங்கும் பற்களையும் உடைய வெள்யாட்டுக் குட்டிகளை அணிகலனாக அணிந்துள்ள செவியினையும், பிளவுபட்ட அடியினையுமுடைய பெண்பேய் சிரித்தால் தோன்றுமாறுபோலே, போர்க்களத்தே தாம் கொன்ற பிணங்களை இடறுதலானே குருதி தோய்ந்து சிவந்து தோன்றும் பெரிய நகங்களையுடைய, பெரிய கால்களையுடையனவும் தலைமைசான்றனவும் ஆகிய யானைகளின் மதம் அருவிபோல மிக்குச் சொரிதலான், துகளவிந்து புழுதியடங்கியதும், விழா நிகழ்வதும் ஆகிய தெருவினையுடைய அவ்வள்ளலின் பழைய ஊர் அவ்வாமூரினின்றும் சேய்மைக்கண் உளதும் அன்று அண்மையிலேயே உளது என்பதாம்.

அகலவுரை : நல்லியக்கோடனின் நட்டவர் குடியுயர்க்கும் வண்மைச் சிறப்பைப் பின்னர் விரித்துக்கூற எண்ணிய பாணன், முன்னர் அவ்வள்ளலின் செற்றவர் அரசுபெயர்க்கும் மறச்சிறப்பை இவ்வடிகளார் கூறுகின்றான் என்க.

கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில்
ஆடுமகள் குறுகி னல்லது
பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே  (புறம் : 128)

என்றார் பிறரும். நெருப்பு எரியுங்கால் மேனோக்கி எரியும் இயல்புடையதாதலின் அத்தீயின் பிழம்பு சாய்ந்தாற்போன்ற நாக்கு என்றார். கருமறி - கரிய யாட்டின் குட்டி; கரிய யாட்டை வெள்ளாடென்றல் மங்கலவழக்கென்க. பேயின் கால்விரல் பெரிதும் பிளவுபட்டிருக்குமென்பார் கவையடிப்பேய் மகள் என்றார்.

இரும்பே ருவகையின் எழுந்தோர் பேய்மகள்
.................................................
கண் தொட்டுண்டு கவையடி பெயர்த்து  (மணி.6.125)

என்றார் மணிமேகலையினும், இத்தகைய பேய் உண்மையைச்

சுடுகாட்டுக் கோட்டத்து இடுபிணந் தின்னும்
இடாகினிப் பேய்  (சிலப்.9: 16-22 உரை)

என அடியார்க்குநல்லார் உரைக்குமாற்றானும் உணர்க. பேய்மகள் பிணத்தையுண்ட களிப்பாற் சிரிக்கும்பொழுது அவள் எயிறு குருதி தோய்ந்து தோன்றுமாறுபோலப் பிணத்தை உகைத்தமையால் சிவந்த யானையின் நகம் தோன்றும் என்க. இதனால் நல்லியக்கோடனின் போராற்றல் கூறப்பட்டது. அவ்வியானைகளின் மதவருவியால் தெருக்கள் புழுதியடங்கு மென்றலின், அவன் படைப்பெருக்கம் கூறினாராயிற்று. சாறு - விழா. விழாவறாத ஊர் என்றலின் அவன் செல்வப் பெருக்கம் போந்தது. எனவே, 146 ஆம் அடிமுதல் இதுகாறும் நல்லியக்கோடனின் படைகுடி கூழ் அரண் என்னும் நான்கு அரசுறுப்பும் ஒருவாற்றாற் போதரக் கூறியவாறுணர்க. எஞ்சிய நட்பும் அமைச்சும் முன்னர்க் காட்டுதும். என்னை?

படைகுடி கூழ்அமைச்சு நட்புஅர ணாறும்
உடையான் அரசருள் ஏறு  (குறள் : 381)

என்பவாகலின் என்க.

நிணம், நிணன் எனவும், பிணம், பிணன் எனவும், மகரத்திற்கு னகரம் போலியாய் வந்தன. சேய்த்து, நணியது என்பன ஒன்றறி சொற்கள்; சேய்மையில் உள்ளது, அண்மையில் உள்ளது என்னும் பொருள். சிறிது நணியது-சிறிதாக நணியது என ஆக்கச்சொல் விரித்துக் கொள்க. பேய்மகள் நிணனுண்டு சிரித்த தோற்றம்போலத் தோன்றும் பேருகிருடைய யானை மத அருவியால் நீறு அடங்கும் அவன் சாறயர் மூதூர் சேய்த்தும் அன்று நணியது என இயைத்துக் கொள்க.

இனி 203 பொருநர்க்காயினும் என்பது தொடங்கி, 235 சில மொழியா அளவை என்னுந் துணையும் ஒரு தொடர்; இதன்கண் ஆற்றுப்படுத்துவோனால் எதிர்வந்தோற்கு நல்லியக் கோடனின் அரண்மனை எய்திப் பின்னர் அவனை எய்தும் வகையும் எய்திய பின்னர்ச் செய்யற்பாலனவும் கூறு முகத்தானே, அரண்மனைச் சிறப்பும், அதன்கண் நல்லியக்கோடன் அரசு வீற்றிருத்தற் சிறப்பும், அவனைக் கண்டுழிச் செய்யற்பாலனவும் கூறப்படும்.

நல்லியக்கோடனின் அரண்மனைச்சிறப்பு

203-206 : பொருநர்க்காயினும் .............. கடைகுறுகி

பொருள் : பொருநர்க்காயினும் - கிணைப்பொருநர் புகும் பொருட்டாதல், புலவர்க்காயினும் - இயற்புலமையோர் புகும் பொருட்டாதல், அருமறை நாவின் அந்தணர்க்காயினும் - அரிய மறை கற்றுணர்ந்த நாவினையுடைய அறிவுடையோர் புகும் பொருட்டாதல், கடவுள் மால்வரை கண் விடுத்தன்ன அடையா வாயில் - தெய்வங்கள் உறைகின்ற பெருமையுடைய மேருமலை ஒரு கண்ணை விழித்துப் பார்த்தாலொத்த அடைக்கப்படாத வாயிலையுடைய, அவன் அருங்கடை குறுகி - அந் நல்லியக் கோடனின் ஏனையோர் புகுதற்கியலாத தலைவாயிலை அணுகி;

கருத்துரை : பொருநர், புலவர், அருமறை அந்தணர் முதலியோர் புகுதற்பொருட்டு எப்பொழுதும் அடைக்கப்படாது மேரு கண்ணைத் திறந்து பார்த்தாலொத்த வாயிலையுடைய அவனுடைய ஏனையோர் புகுதற் கரிய தலைவாயிலை நீயிர் அணுகி என்பதாம்.

அகலவுரை : பொருநர் வைகறைப்போதில் கிணைப்பறை கொட்டுவோர். இதனை,

கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும்  (சிலப். 13 : 148)

என்னும் சிலப்பதிகாரத்தானும்,

கைக்கச டிருந்தவென் கண்ணகன் றடாரி
இருஞ்சீர்ப் பாணிக் கேற்ப விரிகதிர்
வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல்
ஒன்றியான் பெட்டா அளவையின்  (பொருநர் : 70)

என்னும் பொருநராற்றுப்படையானும் உணர்க. புலவர், தலைமை பற்றி இயலுணர்ந்த நல்லிசைப்புலவர் மேற்று. அருமறை - உணர்தற்கரிய மெய்ந்நூல். அந்தணர் - அருள் நிரம்பிய சான்றோர். மெய்ந்நூலோதுதலே சான்றோர் இடையறாது செய்தலின் அருமறைநாவின் அந்தணர் என்றார். கல்லாக் கழிப்பர் தலையாயார் என்றார் பிறரும்.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்  (குறள் : 30)

என்பது பொய்யில்புலவன் பொருளுரை. மேரு கண்ணைத் திறந்தாலொத்த என்றது பெருமித உவமை. மேருமலையின்கண் தெய்வங்கள் உறையும் என்பது மரபு. இனிச் செஞ்சடைக்கடவுள் வீற்றிருந்த பெரியமலை எனினுமாம். கண்விடுத்தல்-கண்ணைத் திறத்தல் என்க. மாபெருந் தோற்றமுடைய நல்லியக்கோடனின் அரண்மனை மேரு மலையைப் போன்று உயர்ந்து விளங்கும் என்றும், அதன் வாயில் திறந்து கிடத்தல் அம்மால்வரை விழித்துப் பார்த்தாற் போன்றிருக்கும் என்றும் கொள்க. பொருநர் முதலியோர் பொருட்டு அடையாது எப்போதும் திறந்தே கிடப்பினும் பகைவர் முதலாயினார் புகுதற்கரிய தென்பார், அடையா வாயில் அவன் அருங்கடை குறுகி என்றார்.

கழறொடி ஆஅய் மழைதவழ் பொதியில்
ஆடுமகள் குறிகி னல்லது
பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே  (புறம் ; 128)

என்றாற்போன்று, நல்லியக் கோடனின் அளியும் தெறலும் ஒருங்கே இத்தொடரின்கண் உணர்த்தியவாறுணர்க. இனி நல்லியக் கோடனின் சிறப்புணர்த்துவான் தொடங்கிய பாணன் அவ்வள்ளலைச் சான்றோர் புகழுமாறிதுவென இயம்புகின்றான் என்க.

நல்லியக்கோடனைச் சான்றோரேத்தும் முறை

207-209 : செய்ந்நன்றி .................... அறிந்தோர் ஏத்த

பொருள் : செய்ந்நன்றி அறிதலும் - பிறர் தனக்குச் செய்த நன்றியை மறவாமே போற்றித் தானும் அவர்க்கு நன்மை செய்தலையும், சிற்றினம் இன்மையும் - அறிவும் ஒழுக்கமும் இல்லாத மாக்கள் கூட்டம் தனக்கு இல்லாமையும், இன்முகம் உடைமையும் - நோக்கினார்க்கு இனிய முகத்தை எக்காலமும் உடையனாதலையும், இனியன ஆதலும் - அகமும் புறமும் ஒரு படித்தாய் இனியனாதலையும், செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த - எக்காலமும் தன்னுடனே செறிந்து விளங்குகின்ற தலைமையினை உடைய பல கலைகளையும் உணர்ந்த சான்றோர் புகழாநிற்ப;

கருத்துரை : அவ்வள்ளலின் செய்ந்நன்றியறிதற் சிறப்பையும், சிற்றினஞ் சேராச் சிறப்பையும், இன்முகமுடையனாதற் சிறப்பையும், அகம் புறம் இரண்டானும் இனியனாம் சிறப்பையும் அவனை விரும்பி ஒருவாதுறையும் சான்றோர் புகழா நிற்ப என்பதாம்.

அகலவுரை : செய்ந்நன்றியறிதல் அறங்களுள் தலைசிறந்த அறமாகலின் அவ்வள்ளலின் புகழுக்கு அதனை முடிமணியாக முன்வைத்தார். வேறு அறத்தின் வழுவினார்க்குக் கழுவாயுண்டென்றும் செய்ந்நன்றி அறிதலிற்றிறம்பினார்க்குக் கழுவாயே கிடையாதென்றும் தமிழ்ச்சான்றோர் கூறுப. இதனை,

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

என வள்ளுவனார் கூறுமாற்றானும்,

ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயும் உளவென
நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க் குய்தி இல்லென
அறம்பா டிற்றே ஆயிழை கணவ  (புறம் : 34)

எனப் புலவர் பெருமான், ஆலத்தூர் கிழார் கூறுமாற்றானும் உணர்க. இனி இரண்டாவதாக உயரிய அறம் சிற்றினம் சேராமையாம் என்னை? நல்லத னலனும் தீயதன் றீமையும் இல்லை என்போரும் விடரும் தூர்த்தரும் நடரும் உள்ளிட்ட சிற்றினமாக்கள் தம்மொடு கெழுமி நட்டாரின் இருமையும் கெடுத்துத் தீநரகிற் சேர்ப்பாராகலானும் அவர் கூட்டமுண்மை எத்தகைய பெருமையையும் அழித்தே விடுமாகலானும், அக் குற்றமில்லாமை நல்லியக்கோடனின் சிறப்பென்பார் சிற்றினம் இன்மையும் என்றார்.

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்  (குறள் : 451)

என்பவாகலான், சிற்றினமின்மை கூறவே அவன் பெருமையையும் விளக்குவதாயிற்று என்க.

இனத்தானாம் இன்னான் எனப்படும் சொல்  (குறள் : 453)

என்பவாகலின், நல்லியக்கோடன் இன்னதன்மையன் என அறிவிக்கப்புக்க பாணன் அதற்கின்றியமையா இனநன்மையை எடுத்தோதினான் என்க. இனி இராமாயணமே பாரதமே முதலிய கதைகளினும் முறையே இராவணன், துரியோதனன் முதலியோர், மகோதரன், சகுனி முதலிய சிற்றினமுண்மையானே உய்தியில்லாத் தீங்கியற்றிக் கெட்டமையும் கூறப்படுதல் உணர்க. இன்முகமுடைமை வேந்தர்க்கும் வள்ளலார்க்கும் இன்றியமையாச் சிறப்புடையதொரு பண்பென்க. என்னை?

முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்  (குறள் : 64)

என்னும் திருக்குறளானே அறம் இன்முகம் அமையாதவழி இன்றெனத் தேவரும் தெரித்தோதுதல் காண்க. இன்முகமாவது நட்டோர் விருந்தினர் முதலியோரைக் கண்டவழி அகத்தே தோன்றும் உவகை முகத்தின்கண் வெளிப்பட்டுத் தோன்றுதல் ஆம். இவ் வின்முக மில்வழிவண்மை கூடாதாகலின், அவன் வண்மைச்சிறப்பை இதனால் எடுத்தோதினார் என்க. இனி மன்னர்க்கும் இவ் வின்முகம் இன்றியமையாச் சிறப்பிற்று. என்னை?

காட்சிக் கெளியன் இன்சொலால் ஈத்தளிக்க வல்லான் என வேந்தர்க்குரிய சிறப்பினை வள்ளுவர் கூறுமிடத்தும் இவற்றிற்குக் காரணமான இன்முகம் கூறினாராதல் காண்க. இனியனாதல் என்றது முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னாவஞ்சரும் இவ்வுலகத்தினுளரன்றே! அங்ஙனம் ஆகலின் நல்லியக்கோடன் அகத்தும் புறத்தும் ஒரு தன்மையனாய் இனியன் என்பார் இன்முகமுடைமை கூறிய பின்னரும் இனியன் என விதந்தோதினார், அகத்தின்கண் இனிமையில்வழி இன்முகமுடைமை வஞ்சம் எனப்படுதலான் என்க. செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் என்றதனைக் கல்வி கேள்விகளானும் நல்லொழுக்கத்தானும், நிறைவுடையராய்த் திகழ்ந்த சிறப்பினையுடைய சான்றோர் எனவும், நல்லியக்கோடன் அவைக்களத்தே எப்பொழுதும் வதிந்து விளங்கும் சான்றோர் எனவும் இரட்டுற மொழிந்துகொள்க. இங்ஙனம் கொள்ளுமாற்றால் முன்னர், சிற்றினமின்மை கூறியவர் பெரியாரைத் துணைக்கோடல் என்னும் சிறப்புங் கூறினராதல் உணர்க. இதன்கண் அமைச்சும் நட்பும் இயம்பினாராயிற்று.

இனி உலகத்துப் பலர் புகழுங்கால் தன்னலங்கருதிப் புகழ்க்கேலாத கயவரையும் புகழக் காண்கின்றோமன்றே! மிடுக்கிலாதானை வீமனே விறல் விசயனே வில்லுக்கிவனென்றும், கொடுக்கிலாதானைப் பாரியே என்றும் கூறிப் புகழ்வாரும் உளராதலின் அவர் புகழ்தல் மெய்ப்புகழ் ஆகாமையின், இல்லது புகழ்தல் வைதலோடொக்கும் எனும் கொள்கையுடையராய், வழுக்கியும் வாயாற் பொய்கூறாச் சான்றோர் புகழ்தலே மெய்ப்புகழ் என்பார், செறிந்து விளங்குசிறப்பின் அறிந்தோர் ஏத்த என்றார். அறிந்தோர் புகழ்தற்குரிய அருங்குணங்களையே ஈண்டுக் கூறியதூஉம் காண்க. இதனை,

அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
மிகைமக்க ளான்மதிக்கற் பால - நயமுணராக்
கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
வையார் வடித்த நூ லார்  (நாலடி - 163)

என்பதனானும் தெளிக.

நல்லியக்கோடனைப் போர்மறவர் புகழும் முறை

210-212 : அஞ்சினர்க்கு ................ வயவரேத்த

பொருள் : அஞ்சினர்க்கு அளித்தலும் - தன் வீரத்தைக் கண்டு அஞ்சிவந்து அடிவீழ்ந்தார்க்கு அருள்செய்தலையும், வெஞ்சினம் இன்மையும் - கொடிய வெகுளி இல்லாமையையும், ஆண் அணி புகுதலும் - மறவர் நின்ற அணியிலே புகுந்து அதனைக் குலைத்தலையும், அழிபடை தாங்கலும் - கெட்ட படையிடத்தே தான் சென்று பகைவரைப் பொறுத்தலையும், வாள் மீக்கூற்றத்து வயவர் ஏத்த-வாள் வலியாலே மேலாகிய சொல்லையுடைய மறவர் புகழாநிற்ப;

கருத்துரை : அவ்வள்ளலின், அஞ்சி அடிவீழ்ந்த பகைவர்க்கு அருள் செய்யும் பெருமையையும், வெகுளாமையையும் பகைப்படையின் அணியிலே அஞ்சாது புக்குக் கெடுக்கும் ஆண்மையினையும், கெட்ட படையிடத்தே சென்று பகைவரைப் பொறுக்கும் ஆற்றலையும் போர் மறவர் வியந்து புகழாநிற்ப என்பதாம்.

அகலவுரை : வீரரின் பெருமையை அவ்வீரரே அறிந்து புகழும் தகுதியுடையராதலின் நல்லியக்கோடனின் மறச்சிறப்பை வாண்மீக் கூற்றத்து வயவர் ஏத்த என்றார். அஞ்சினர்க் களித்தலே மறப்பெருமை பலவற்றுள்ளும் தலைசிறந்த பெருமையாகலின் அதனை முன் வைத்தார். என்னை?

பேராண்மை யென்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு  (குறள் : 773)

என்னும் அருமைத் திருக்குறளின்கண் வள்ளுவனாரும், ஆண்டன்மைக்கு (அஞ்சினர்க்களித்தல்) ஊராண்மையைக் கூர் எனக் கூறிப்போந்தமையானும், அதற்குப் பரிமேலழகர் ஊராண்மை - உபகாரியாந் தன்மை; அஃதாவது : இலங்கையர் வேந்தன் போரிடைத் தன் றானை முழுவதும் படத் தமியனாய் அகப்பட்டானது நிலைமை நோக்கி, அயோத்தியரிறை மேற்செல்லாது இன்றுபோய் நாளை நின் றானையோடு வா என விட்டாற்போல்வது என அழகுற விரித்துரைத்தமையானும், அஞ்சினர்க் களித்தல் மறச்சிறப்பினுட் டலைசிறந்ததாகும் என்பதனை நன்கு உணர்க. அல்லதூஉம்,

மெல்ல வந்தென் னல்லடி பொருந்தி
ஈயென இரக்குவ ராயிற் சீருடை
முரசுகெழு தாயத் தரசோ தஞ்சம்
இன்னுயி ராயினும் கொடுக்குவன்  (புறம் : 73)

எனச் சோழன் நலங்கிள்ளி என்னும் மறமன்னன் கூறிய வஞ்சினத்தானும்,

வந்தடி பொருந்தி முந்தை நிற்பின்
தண்டமும் தணிதிநீ பண்டையிற் பெரிதே  (புறம் : 10)

என ஊன்பொதி பசுங்குடையார், சோழன் இளஞ்சேட் சென்னியைப் புகழ்தலானும் அறிக. இவ்வூராண்மையைத் தழிஞ்சி என்னும் புறத்துறைப் படுப்பர் சான்றோர்.

இனி,

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்  (குறள் : 906)

என்பவாகலின் ஏனை நலனெல்லாம் எய்திய வழியும் பெருஞ்சினம் நின்ற வழி அஞ்சி யாரும் அவனை நட்டலும் நயத்தலும் இலராகலின் சினமின்மையை இரண்டாவதாக வைத்துக் கூறினார்.

ஆண்-ஈண்டு அணிபுகுதலும் என்றமையால் வீரர்க்கே ஆயிற்று. ஆணணி புகுதல் என்ற குறிப்பால் பகைமறவர் பல்லாயிரவர் அணிவகுத்து நின்றவிடத்துத் தான் தமியனாய வழியும் அவ்வணியிற் புகுந்து அடுபோர் செய்து குலைக்கும் ஆற்றலும் எனக்கொள்க. அழிபடை தாங்கல் என்றது தன் மறவர் பகைப்படைக்கு ஆற்றாது தளர்ந்து கேடெய்தியவிடத்தே தான் ஒருவனே சென்று பெரும் போருழக்கி அப்பகைப்படை முழுதையும் கொன்று குவித்தல் என்றவாறு. இதனை,

உடைபடை ஒருவன் புக்கு ஒருவனைக்
கூழை தாங்கிய எருமையும்

எனத் தொல்காப்பியனார் கூறுவர்.

சீற்றங் கனற்றச் சிறக்கணித்துச் செல்லுங்கால்
ஏற்றெருமை போன்றான் இகல்வெய்யோன் - மாற்றான்
படைவரவு காத்துத்தன் பல்படையைப் பின்காத்
திடைவருங்காற் பின்வருவார் யார்  (தொல்.புற. 17: மேற்கோள்)

என்பதனானும் இம் மறச்சிறப்புணர்க. வாண்மீக் கூற்றத்து வயவர் என்றது புகழ்தற்குரியராய மிகை மக்களாகிய மறவர் என்றவாறு. வாள் வலியாலே ஒப்பிலா மறவர் எனத் தம்மை உலகம் புகழ்தற்குரிய மறவர் என்க. மீக்கூற்றம் - மேலாகிய சொல்; அஃதாவது : புகழ். வயவர் - வீரர். வய என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பலரறிசொல் என்க. என்னை?

வய வலியாகும்  (தொல்.உரி: 68)

என்பதோத்தாகலின் என்க. வயவர் - வலியுடையார்.

அவ்வள்ளலை அரிவையர் புகழும் முறை

213-215 : கருதியது ............................ அரிவையர் ஏத்த

பொருள் : கருதியது முடித்தலும் - தன்னெஞ்சு கருதிய புணர்ச்சியைக் குறைகிடவாமல் முடிக்கவல்ல தன்மையும், காமுறப் படுதலும், வீழும் மகளிர் தன்னைப் பெரிதும் விரும்பப்பட்டிருத்தலும், ஒருவழிப்படாமையும் - அங்ஙனம் விரும்பியவழியும் அம் மகளிர் வயத்தனாகாதே தன்வயத்தனே ஆதலும், ஓடியது உணர்தலும் - அவர் வருந்திய தன்மையை உணர்ந்து அவர்க்கருளிப் பாதுகாத்தலும் ஆகிய சிறப்புக்களை, அரியேர் உண்கண் அரிவையர் ஏத்த-செவ்வரி பொருந்தின அழகிய மையுண்ட கண்ணினையுடைய மகளிர் புகழாநிற்ப;

கருத்துரை : அவ்வள்ளலின், தன்னெஞ்சு கருதிய புணர்ச்சியை முடிக்கவல்ல தன்மையையும், மகளிரால் பெரிதும் விரும்பப்படும் தன்மையையும், மகளிர் வயத்தனாகாத் தன்மையையும், செவ்விதேர்ந்து மகளிரைத் தலையளித்துப் பாதுகாத்தற் றன்மையையும் அரியேருண் கண் அரிவையர் புகழாநிற்ப என்பதாம்.

அகலவுரை : கருதியது முடித்தலாவது - தன்பால் ஊடல்கொண்ட மகளிரின் ஊடலை எளிதே தீர்த்து அவரைத் தான் எண்ணியாங்கு எண்ணியபொழுதே புணர்ந்து மகிழும் ஒரு பண்புடைமை. நல்லியக்கோடனைக் காணாதபொழுதெல்லாம் அவன் தமக்கியற்றும் தவறுகளையே எண்ணி அவன் வருக! வந்துழி எளிதில் யாம் ஊடல்தீர்வே மல்லேம் எனத் தம் நெஞ்சை வலித்திருந்த மகளிர் அவன் வந்துழித் தம் நிறையும் நெஞ்சும் தம் வழிப்பட்டு ஊடற்கண்ணில்லாது அவன் வழிப்பட்டுக் கூடற்கண் விரைதல் காண்பர் ஆகலின், அப்பண்புடைமையை அவன் வெற்றிச் சிறப்பாக மகளிர் ஏத்தினர் என்க. இங்ஙனம் மகளிரை மயக்கற்கு நல்லியக்கோடனின் உருவச்சிறப்பும் பணிமொழி பேசுந்திறனும் பிறவும் ஏதுக்களாம். இதனை,

நாணென வொன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்  (குறள் : 1257)

பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
பெண்மை உடைக்கும் படை  (குறள் : 1258)

என்னும் நுணுக்கமிக்க திருக்குறளான் உணர்க. இங்ஙனம் கூறாது ஆசிரியர் நச்சினார்க்கினியர் நுகர்தற்குரிய மகளிரை நுகர்ந்து பற்றறாக்காற் பிறப்பறாமையின் கருதியது முடிக்க வேண்டும் என்றார் என்று பொருள்கூறிப் போந்தார். காமுறப்படுதல், மகளிராற் பெரிதும் விரும்பப்படும் தன்மையுடையனாதல். இதனை,

அவனுந்தான்,
மண்டேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம்
பண்டேய்த்த மொழியினா ராயத்துப் பாராட்டிக்
கண்டேத்துஞ் செவ்வேளென் றிசைபோக்கிக் காதலால்
கொண்டேத்தும் கிழமையான்  (சிலப்.மங்கல: 35-9)

எனக் கோவலனை இளங்கோவடிகள் பாராட்டுதலானும்,

கலையின தகலமும் காட்சிக் கின்பமும்
சிலையின தகலமும் வீணைச் செல்வமும்
மலையினி னகலிய மார்ப னல்லதிவ்
வுலகினில் இலையென ஒருவ னாயினான்  (சீவக : 411)

எனச் சீவகனை மகளிர் காமுற்றுத் தாமரைக் கண்ணாற் பருகினர் எனத் தேவர் கூறுமாற்றானும் உணர்க. ஒருவழிப்படாமை என்றது அங்ஙனம் நல்லியக்கோடன் தன் மனங்கவரும் மாண்பினனாய வழியும் தாம் அவன் வழிப்படுதலன்றிச் சச்சந்தனைப்போன்று அவன் தம் வழிப்படாமையை அவனுடைய சிறப்பாக அரிவையர் ஏத்தினர் என்றவாறு. பெண்வழிச்சேறல் ஆடவர்க்கு இழுக்காதலும் சச்சந்தன் கழிபெருங்காமத்தால் மகளிர் பாற் கிடந்து எய்திய கேடும் உணர்க. ஓடியது உணர்தலும் என்றது - அக் காதன் மகளிர்களின் வயப்படாது தன்னிலை நின்றானேனும் அவர் காமவின்பம் பதனழிந்து கெடாதவாறு அவர் உள்ளம் காமவின்பத்தே ஓடி வருந்தும் தன்மையை இங்கிதங்களானே உணர்ந்து அவரைத் தலையளித்தல் என்றவாறு. என்னை,

உப்பமைந் தற்றாற் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்  (குறள் . 1302)

என்றும்,

நோத லெவன்மற்று நொந்தாரென் றஃதறியும்
காதல ரில்லா வழி  (குறள் : 1308)

என்றும் எழுந்த மெய்ம்மொழிகளான் மகளிர் உள்ளம் ஓடிய வழி அது சுவைகெடாத செவ்வியறிந்து தலையளித்தல் வேண்டும் என்பதும், அங்ஙனம் பதனறியாத ஆடவர் மகளிரின் புகழ்க் குரியாரல்லர் என்பதும் பெற்றாமாகலின் என்க. முன்னர், செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் என்றும், வாண்மீக்கூற்றத்து வயவர் என்றுங் கூறிப் புகழ்தற்குரிய தகுதி தோற்றுவித்தாற்போன்றே ஈண்டும் அரியேர் உண்கண் அரிவையர் என்று புகழும் மாதரின் உயர்வினை விளக்குவாராயினர்.

நல்லியக்கோடனைப் பரிசிலர் புகழும் முறை

216-218 : அறிவுமடம்படுதலும் ................. பரிசிலரேத்த

பொருள் : அறிவு மடம்படுதலும் - தான் கூறுகின்றவற்றை உணரும் அறிவில்லாதார் மாட்டுத் தான் அறியாமைப்பட்டிருத்தலையும், அறிவு நன்குடைமையும் - தன்னை ஒத்த அறிஞர் மாட்டு நன்றாக அறிவுடையனாய்த் திகழ்ந்திருத்தலையும், வரிசையறிதலும் - பரிசிலரின் சிறப்பறிந்து அச் சிறப்பிற்குத்தக வழங்கு தலையும், வரையாது கொடுத்தலும்-சிறப்பில்லாப் பரிசிலர்க்குக் கொடேன் என வரைந்து கொள்ளாது அவர்க்கும் தக ஈதலையும், பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த - பிறரிடத்தேற்கும் பொருளானே இல்வாழ்க்கை நடத்தும் பரிசிலர் புகழ்ந்து ஏத்தா நிற்ப.

கருத்துரை : நல்லியக்கோடன் வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொண்டிருத்தலையும், அறிஞர்மாட்டு அறிவிற்றிகழ்ந்து விளங்குதலையும் பரிசிலரின் சிறப்பிற்கேற்கப் பரிசில் நல்குதலையும் மாட்டார்க்கும் வழங்குதலையும் சிறந்த பரிசிலர் புகழாநிற்ப என்பதாம்.

அகலவுரை : அறிவுமடம்படுதலாவது - தன்பால் அறிவு நிரம்பப் பெறாத கலைஞர் வந்து தவறாயவற்றைக் கூறியவழி, அவர்க்கு அத்தவற்றை எடுத்துக்காட்டாமல் அறியாதான்போன்று அவையிற்றையும் விரும்பிக் கேட்டல்: என்னை? வள்ளலாரிடத்து வித்தையில் வல்லுநரும் அல்லாதாரும் பரிசில் வேட்டு வருவரன்றே, வித்தையில் வல்லுநர் அல்லார் வந்த வழி அவர்பாற் குற்றங்கண்டு கூறத் தொடங்கின் அவர் பல்லார்முன் நாணி வருந்துவர் என அவர்க்குப் பரிந்து தான் அறிவு மடம்பட்டிருத்தல் என்க. இதனை,

புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி
நல்லார் வருந்தியும் கேட்பரே மற்றவன்
பல்லாருள் நாணல் பரிந்து  (நாலடி : 155)

என்னும் நாலடியானும் உணர்க. இனி,

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல்  (குறள் : 714)

என வள்ளுவர் வகுத்த அவையளவறிந்தொழுகும் திறத்தை எனினுமாம். அறிவு நன்குடைமை என்றது, புகழும் பரிசிலர்க்கேற்பக் கலையினது நுணுக்கங்களை உணர்ந்து மகிழும் சிறப்பினை எனக் கொள்க. என்னை? பரிசிலர் தமது கலைச்சிறப்பை உணராதார் இறப்ப நல்கிய வழியும் அதனை ஏற்றல் செய்யார் ஆதலின் என்க. வரிசை அறிதல் - பரிசிலரின் உயர்வு இழிவுக்கேற்ப மதித்தல். இதனை,

ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசில் மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே பெரிதும்
ஈதல் எளிதே மாவண் தோன்றல்
அதுநற் கறிந்தனை ஆயிற்
பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே  (புறம் : 121)

என்னும் கபிலர் செய்யுளானும் உணர்க. இனி,

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்  (குறள் : 528)

என வள்ளுவரும் கூறலின், பொதுநோக்கே உள்வழி உயர்ந்தோர் நீங்குவராகலானும், வரிசையான் நோக்குழி எல்லாரும் விடாது சூழ்வாராகலானும் அங்ஙனம் வரிசையா நோக்குதலை என மன்னறத்திற் கேற்றினுமாம். வரையாது கொடுத்தல் என்றது, வல்லார்க்கன்றி மாட்டார்க்கும் வழங்குதற் சிறப்பு என்றவாறு. இனித் தனக்கு வேண்டும் எனப் பொருளை வரைந்து வைத்துக்கொள்ளாது வேண்டுவார்க்கு வேண்டுவன நல்கும் சிறப்பை எனினுமாம்.

பரிசிலர் வாழ்க்கைப் பரிசிலர் என்றது, பரிசிலருள்ளும் சிறப்புடைய பரிசிலர் என்றவாறு. என்னை?

பீடின் மன்னர் புகழ்ச்சி வேண்டி
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யா தாகின்றெஞ் சிறுசெந் நாவே  (புறம் : 148)

என வன்பரணர் கூறுமாற்றால், பீடில்லாத மன்னரை அவர் செய்யா கூறிக் கிளத்தல் கலையுணர்வு சான்ற பரிசிலாக் கேலாமையானும் மெய்ப் புகழாளனையே புகழும் செம்மலுமுடையர் பரிசிலர் வாழ்க்கைப் பரிசிலர் ஆகையானும் அத்தகைய சிறப்புடைய பரிசிலராலும் புகழப்படுவான் என்பார் பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் என்றார் என்க. இதனை,

...................... திறப்பட
நண்ணார் நாண அண்ணாந் தேகி
ஆங்கினி தொழுகி னல்லது ஓங்குபுகழ்
மண்ணாள் செல்வம் எய்திய
நும்மோ ரன்ன செம்மலு முடைத்தே  (புறம் : 47)

வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை எனப் பிறர் கூறுமாற்றானும் உணர்க.

அவ்வள்ளலின் இருத்தற் சிறப்பு

219-220 : பன்மீன் .............. குறுகி

பொருள் : பன்மீன் நடுவண் பால்மதி போல - பல விண்மீன்களுக்கும் நடுவிலிருந்த பால்போலும் ஒளியை உடைய முழு வெண்டிங்கள் போன்று, இன் நகை ஆயமொடு இருந்தோற் குறுகி - இயலிசை நாடகங்களானும் இனிய மொழிகளானும் இனிய மகிழ்ச்சியைச் செய்யும் திரளோடே இருந்தவனை அணுகி;

கருத்துரை : விண்ணிடத்தே மீன்களின் இடையே திகழும் திங்கள் மண்டிலம்போலே இனிய மகிழ்ச்சியைச் செய்யும் அறிஞர் வயவர் அரிவையர் பரிசிலர் ஆகிய குழாத்தின் இடையே அரசுவீற்றிருக்கும் நல்லியக்கோடனை நீயிர் அணுகி என்பதாம்.

அகலவுரை : பன்மீன் நடுவட் பால்மதி போல என்னும் உவமை சிறப்புநிலைக்களனாகத் தோன்றிய உவமை என்க. என்னை? வினைபயன் மெய் உருவென்னும் நால்வகையுவமையும் தோன்றுதற்கு,

சிறப்பே நலனே காதல் வலியொடு
அந்நாற் பண்பும் நிலைக்கள மென்ப  (தொல்.உவம.4)

என்பவாகலின், ஈண்டு நல்லியக்கோடன் அரசுவீற்றிருக்கும் சிறப்பே நிலைக்களனாக இவ்வுவமை தோன்றிற்றாகலின் என்க. வானத்தின்கண் விளங்கும் மீன் பல்வேறு வகையனவும், எண்ணிறந்தனவும் ஆதல் போன்று, அவ்வள்ளலின் அவைக்களத்தே பல்வேறுவகை அறிஞரும், வீரரும், பரிசிலரும், அரிவையரும் உளராகலின், பன்மீன் நடுவண் என்றார். அரசரை ஞாயிறு அனையை என உவமித்தல் அவர்தம் தெறல் பற்றி ஆதலின், ஈண்டு நல்லியக்கோடனின் அளிபற்றி உவமை கூறலின் பால்மதி என்றார். பால் மதி என்றது பால்போலும் தண்ணொளி பரப்பும் மதி. எனவே அவ்வள்ளலின் அருளுடைமையைத் தண்ணொளியோடும், அவ்வருள் பரப்பி வீற்றிருக்கும் வள்ளலை அம்மதி மண்டிலத்தோடும் உவமித்தாராயிற்று. விண்மீன் எல்லாம் விளக்கமுடைமையின், அவன் அவைக்களம் தெளிந்த அறிஞராலே நிறைந்துள்ளதென்றாராயிற்று. அச்சுவினி முதலிய இருபான் ஏழ் விண்மீனும், திங்களின் காதற்கிழத்தியர் என்பவாகலின், இவ்வள்ளலும், கற்பொளி மருவிய மனைவியரோடும் அரசு வீற்றிருத்தல் கூறினாரும் ஆயிற்று. வெள்ளியும் வியாழனும் ஆகிய விண்மீன்கள் தேவர் அசுரர் குரு என்னும் வழக்கமுண்மையின், நல்லியக்கோடனும், தன் நல்லாசிரியர் சூழ விளங்குவானாயினன் என்பதும் கொள்க. இன்னகை - ஈண்டு ஆகுபெயராய் மகிழ்ச்சியைக் குறித்து நின்றது. ஆயம் - கூட்டம். எனவே, எவ்வாற்றானும் மகிழ்ச்சியே விளைவிக்கும் அறவோரவைக்களம் அஃது என்றவாறு.

220 - பைங்க ணூகம் என்பது தொடங்கி 225 - அளவை என்னுந் துணையும்; அங்ஙனம் மாபெருஞ் சிறப்புடன் அரசுவீற்றிருக்கும் நல்லியக்கோடனை நீயிர் அணுகியவுடன் இன்னின்ன முறையால் நீயிரும் அவனைப் புகழ்க எனப் பாணன் கூறுகின்றான் என்க.

யாழின் தன்மை

221-235 : பைங்கணூகம் ..................... அளவை

பொருள் : பைங்கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன - பசிய கண்களையுடைய கரிய குரங்கு பாம்பின் தலையைப் பிடித்தகாலத்து அப்பாம்பு ஒருகாலிறுகவும் ஒருகால் நெகிழவும் அதன் கையைச் சுற்றுமாறு போன்ற, அங்கோட்டுச் செறிந்த அவிழ்ந்து வீங்கு திவ்வின் - அழகினையுடைய தண்டினிடத்தே செறியச் சுற்றின நெகிழ வேண்டிய இடத்தே நெகிழ்ந்தும் இறுக வேண்டுமிடத்தே இறுகியும் நரம்பு துவக்கும் வார்க்கட்டினையும், மணி நிரைத்தன்ன வனப்பின் வாயமைத்து - இரண்டு விளிம்பும் சேரத் தைத்து முடுக்கின ஆணிகளாலே மணியை நிரைத்து வைத்தாலொத்த அழகினையும் பொருந்தச்செய்து, வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து-வயிறு சேர்ந்து ஒழுங்குபட்ட தொழில்வகை அமைந்த பத்தரினையும், கானக் குமிழின் கனி நிறம் கடுப்ப - காட்டிடத்துக் குமிழினுடைய பழத்தினது நிறத்தை ஒப்ப, புகழ்வினைப் பொலிந்த பச்சையொடு - துவரூட்டின கைத்தொழிலாற் பொலிவு பெற்ற போர்வையோடே, தேம்பெய்து அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்குபுரி நரம்பின் - தேனொழுகுகின்ற தன்மையைத் தன்னிடத்தே பெய்துகொண்டு அமிழ்தத்தைத் தன்னிடத்தே பொதிந்து துளிக்கும் நரம்பினையுடைய, பாடுதுறை முற்றிய - நீவிர் பாடுந் துறைகளெல்லாம் முடியப் பாடுதற்கு, பயன் தெரி கேள்விக் கூடுகொள் இன் இயம் - தனது பயன் விளங்குகின்ற இசைகளைத் தான் கூடுதல் கொண்ட இனிய யாழை, குரல் குரலாக நூல்நெறி மரபிற் பண்ணி - செம்பாலையாக இசைநூல் கூறுகின்ற முறையாலே இயக்கி, ஆனாது - பலகாலும், முதுவோர்க்கு - ஐம்பெருங் குரவர் முதலியோர்க்கு, முகிழ்த்த கையினை எனவும் - குவித்த கைகளையுடையோய் என்றும், இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும் - வீரர் எறிதற்கு மனமகிழ்ந்து கொடுத்த மார்பினையுடையோய் என்றும், ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும் - ஏரினையுடைய குடிமக்கட்கு நிழல்செய்த செங்கோலை உடையோய் என்றும், தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் - தேரினை உடைய அரசர்க்கு வெம்மை செய்த வேலினை உடையோய் என்றும், நீ சில மொழியா அளவை - நீ சில புகழினைக் கூறுதற்கு முன்னே,

கருத்துரை : பசிய கண்களையுடைய குரங்கு பாம்பின் தலையைப் பிடித்தபோது அப்பாம்பு அதன் கையை ஒருகாலிறுகவும் ஒருகால் நெகிழவும் சுற்றுமாறு போன்று அழகிய தண்டின்கண் வேண்டுமிடத்தே நெகிழவும் இறுகவும் நரம்பினைத் துவக்கும் வார்க்கட்டினையும், மணிகளை நிரலாக வைத்தாற்போன்று இரண்டு விளிம்பையும் சேரத் தைத்து முடுக்கின ஆணிகளின் அழகையும், பொருந்தச்செய்து வயிறு சேர்ந்து ஒழுங்குபட்ட தொழில்வகை அமைந்த பத்தரினையும், குமிழம்பழத்தின் நிறமமைந்த துவரூட்டின கைத்தொழிலாற் பொழிவு பெற்ற போர்வையோடே, தேன் ஒழுகுகின்ற தன்மையைத் தன்னிடத்தே பெய்துகொண்டு அமிழ்தத்தைத் தன்னிடத்தே பொதிந்து துளிக்கின்ற முறுக்கடங்கின நரம்பையுமுடைய நீயிர்பாடுந் துறைகளெல்லாம் முற்றப் பாடுதற்குப் பயன் விளங்குகின்ற இசைகளைத் தான் கூடுதல் கொண்ட இனிய யாழை, இசைநூல் கூறுகின்ற முறைமையாலே செம்பாலையாக இயக்கி, ஐம்பெருங்குரவர்க்கும் எப்பொழுதும் குவித்த கையை உடையோய் என்றும், வீரர் எறிதற்கு மனமகிழ்ந்து கொடுத்த மார்பினை உடையோய் என்றும், ஏரினையுடைய குடிமக்கட்கு நிழல்செய்த செங்கோலை உடையோய் என்றும், தேரினை உடைய அரசர்க்கு வெம்மை செய்த வேலினை உடையோய் என்றும் நீ சில புகழ்மொழிகளைக் கூறுதற்கு முன்பு என்பதாம்.

அகலவுரை : ஊகம் - கருங்குரங்கு.

கருவிர லூகம் பார்ப்போ டிரிய

என்று மலைபடுகடாத்தினும் வருதல் காண்க. குரங்கு பாம்பின் தலையைப் பிடித்துக்கொள்ளுதலும் அப்பாம்பு குரங்கின் கையினைச் சுற்றிக்கொள்ளுதலும் இயல்பு. குரங்கின் கையைப் பாம்பு சுற்றிய தனை யாழினது கரிய தண்டினிடத்துச் சுற்றப்பட்ட வார்க்கட்டிற்கு உவமை கூறினார். அங்கோடு - அழகிய தண்டு. அவிழ்ந்து வீங்கு திவவு - என்றது, அவிழவேண்டுமிடத்து அவிழ்ந்தும் இறுக வேண்டுமிடத்து இறுகியும் உள்ள வார்க்கட்டு. வீங்குதல்-இறுகுதல். திலவு - வார்க்கட்டு. இரண்டு விளிம்பினையும் சேரத் தைத்து முடுக்கிய ஆணிகளின் குமிழ் நிரலாக அமைந்திருத்தலை மணிகளை நிரலாக வைத்ததனோடு உவமித்தார். அகளம் - தாழி. யாழின் பத்தருக்கு உவம ஆகுபெயர். வயிறு - பத்தரின் நடுவிடம். கானக்குமிழ் - காட்டிலுள்ள குமிழம்பழம். குமிழம்பழம் - யாழின் மேல் விசித்த தோலுக்கு நிறவுவமை. கடுப்ப : உவமவுருபு. புகழ்விணை - அறிஞர்களால் புகழப்பட்ட தொழில் நுணுக்கம். பச்சை - மேற்போர்த்த தோல். தேன் ஒழுகினாற்போன்ற தன்மையுடைய நரம்பு என்க.

தீந்தேன் அணிபெற ஒழுகி யன்ன
அமிழ்துறழ் நரம்பி னல்யாழ்  (சீவக : 772)

என்றார் பிறரும். அமிழ்து - இனிமைக்கு உவமை. நரம்பினைத் தெறித்தவுடன் எழுந்து இன்பஞ்செய்யும் ஒலிக்கு அமிழ்தின் துளி உவமை என்க. இலிற்றல் - துளித்தல். பாடுதுறை - பாடுதற்குரிய துறை. அவை, அகத்திணை, புறத்திணைபற்றிய துறைகள். இனி - தேவபாணி முதலாக அரங்கொழி செய்யுள் ஈறாகவுள்ள செந்துறை விகற்பங்களுமாம். இசைத்தமிழும் இத்துறைபற்றியே இயங்குதல் மரபென்க. முற்றிய - முற்றுமாறு. செய்யிய என்னும் வினையெச்சம். பயன் - இனிமை. கேள்வி-இசை. இசை கேட்கப்படுதல்பற்றிக் கேள்வி என்றார். கூடுகொள் இன்னியம் - இசை கூடுதலைக்கொண்ட இனிய யாழ். கூடுதல் - சுதிசேர்தல் என்க.

கூடிய குயிலுவக் கருவிக ளெல்லாம்
குழல்வழி நின்ற தியாழே யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே முழவொடு
கூடிநின் றிசைத்த தாமந் திரிகை  (சிலப். அரங் : 138-42)

என இளங்கோவடிகள் உரைத்தாங்கு குயிலுவக்கருவிகள் அனைத்தும் பருந்தும் நிழலும்போல ஒன்றாய்க் கூடுதலாற் கூடுகொள் இன்னியம் என்றார் எனினுமாம். குரல் ஏழிசையின் ஒன்று. இசை ஏழாவன: குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன. குரல் குரலாகப் பாடும் பண்ணினை அரும்பாலை எனச் சிலப்பதிகார உரையாசிரியர் கூறுவர். நச்சினார்க்கினியர் செம்பாலை என்றே ஈண்டும் சிந்தாமணியினும் உரை கூறியுள்ளார். சிலப்பதிகார உரையாசிரியர், உழை முதற் கைக்கிளை இறுதியாக மெலிவு நான்கும் சமம் ஏழும் வலிவு மூன்றுமாய் உழை முதலாகச் செம்பாலை யாயது என்பர். நூல்-இசைநூல். இதனை,

இனி, இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும் பிறவும் தேவவிருடி நாரதன் செய்த பஞ்சபாரதீய முதலாவுள்ள தொன்னூல்கள் இறந்தன (இவை நத்தத்தனார் காலத்துள்ளனபோலும்). நாடகத்தமிழ் நூலாகிய, பரதம் அகத்தியம் முதலாவுள்ள தொன்னூல்களும் இறந்தன. பின்னும், முறுவல் சயந்தம் குணநூல் செயிற்றியம் என்பனவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முதல் நடு இறுதிகாணாமையின் அவையும் இறந்தனபோலும். ............... சாரகுமாரன் என அப்பெயர் பெற்ற குமரன் இசையறிதற்குச் செய்த இசை நுணுக்கமும், பாரசவ முனிவரில், யாமளேந்திரர் செய்த இந்திரகாளியமும், அறிவனார் செய்த பஞ்சமரபும், ஆதி வாயிலார் செய்த பரத சேனாபதீயமும் கடைச் சங்கமிரீ இய பாண்டியருட் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனார் செய்த ........... மதிவாணனார் நாடகத் தமிழ்நூலும் என இவ்வைந்தும், என, சிலப் - உரைச்சிறப்புப் பாயிரத்தே அடியார்க்கு நல்லார் கூறுமாற்றான் உணர்க. ஆனாது என்றது, முதுவோரைக் காணநேர்ந்த பொழுதெல்லாம் ஒழிவின்றி என்றபடி. முதுவோர் - ஐம்பெருங்குரவரும் சான்றோரும் என்க. என்னை?

அரசன் உவாத்தி யாயன் தாய்தந்தை தம்முன்
நிகரில் குரவ ரிவரிவரைத்
தேவரைப் போலத் தொழுதெழுக என்பதே
யாவரும் கண்ட நெறி  (ஆசாரக்கோவை : 16)

என்பவாகலின்,

இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை யெதிரே  (புறம் : 6)

என்பவாகலின், ஐம்பெருங் குரவரோடே அந்தணர் அறவோர் துறவோர் முதலியவரையும் முதுவோர் என்றதனால் கொள்க. இளையோர்க்கு மலர்ந்த மார்பினை என்றதற்கு இளையராகிய காதன் மகளிர்க்கு மலர்ந்த மார்பினையுடைய எனவும் இரட்டற மொழிந்து கொள்க. என்னை?

விருந்தாயினை எறிநீயென விரைமார்பகம் கொடுத்தாற்
கரும்பூணற வெறிந்தாங்கவ னினதூழினி யெனவே
எரிந்தாரயி லிடைபோழ்ந்தமை உணராதவ னின்றான்
சொரிந்தார்மலர் அரமங்கையர் தொழுதார் விசும்படைந்தான்  (சீவக : 2265)

என்னும் தேவர் கூற்றால் வீரர் எறிதற்கு மார்பளிக்கும் சிறப்பையும்,

வணங்குசிலை பொருதநின் மணங்கம ழகல
மகளிர்க் கல்லது மலர்ப்பறி யலையே  (பதிற்றுப் : 63)

மகளிர் மலைத்த லல்லது மள்ளர்
மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப  (புறம் : 10)

எனப் பிறர் கூறுமாற்றால் மகளிர்க்கு மார்பளித்தற் சிறப்பையும் உணர்க. ஏரோர்க்கு நிழன்ற கோலினை என்றது அரசர்க்குரிய கொற்றமும் பிறவும் நிலைபெறுதல்; ஏரோர் இடையூறின்றித் தொழில் நிகழ்த்துழியல்லது இன்மையின் தலைமைபற்றிக் கூறப்பட்ட தென்க. என்னை?

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்  (திருக் : 1034)

என்புழி வள்ளுவனாரும், மன்னவன் வெற்றிக்கு ஏர் உழுவோரே காரணமாதல் கூறிப் போந்தமையும், அத்திருக்குறளுக்கு உரை வரைந்த பரிமேலழகரும் ஒற்றுமைபற்றித் தங்குடை என்றார் என அரசர்க்கும் ஏரோர்க்கும் உள்ள இயைபினை நுண்ணிதின் எடுத்தோதி மேலும் தம் அரசனுக்குக் கொற்றம்பெருக்கி மண்முழுதும் அவனதாகக் கண்டிருப்பார் என்பதாம் எனக் கூறியமையும் உணர்க.

கோல்நிழற்றலாவது : கொடை அளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையனாய்த் தான் பெறற்குரிய ஆறிலொன்றாய பொருளையும் வறுமை நீங்கியவழிக் கொள்ளல் வேண்டின் அவ்வாறு கோடலும், இழத்தல் வேண்டின் இழத்தலும், தளர்ந்த குடிகளைப்பேணலும், யாவர்க்கும் தலையளி செய்தலும், குடிகளைப் பிறர் நலியாது காத்துத் தானும் நலியாது பேணுதலும், பிறவுமாய அரசியலறத்தை வழுவாது மேற்கோடல். அத்தகைய அரசன் நாட்டிலுள்ளோர் வெம்மையுறாது எப்போதும் தண்ணென மகிழ்ந்திருத்தலின் நிழற்ற என்றார். கோல் என்றது அரசனாற் செய்யப்படும் முறையினை. அது செவ்விய கோல் போறலின் கோல் எனப்பட்டது. தேரோர், ஈண்டுப் பகைமன்னர் மேற்று, அழலுதல், அவர் உள்ளத்தே எப்போதும் வெம்மை செய்தல். இது நல்லியக்கோடனின் தெறற்சிறப்புக் கூறியவாறு.

நீ சில மொழியா அளவை என்றது, அவன் புகழை முடிவுறப் புகழ்தல் ஏலாமையான் என்பதுதோன்ற நின்றது. இனித் தன்னைப் புகழ்தலைக் கேட்டலையும் விரும்பானாகலின், சில மொழியா அளவையானே பரிசில் நல்கற்கு அவன் முந்தும் என்றாருமாம். இனி, இதுகாறும் கூறிய 203-முதல், 245-வரையுள்ள தொடர்ப் பொருளை, பொருநர் முதலியோர்க்கு அடைக்கப்படாத மேரு கண்விடுத்தா லொத்த, அவன் அருங்கடைகுறுகி, அறிந்தோர் ஏத்த, வயவர் ஏத்த, அரிவையர் ஏத்த, பரிசிலர் ஏத்த, மதிபோல, ஆயமொடு இருந்தோற் குறுகி, இன்னியம் குரல்குரலாகப் பண்ணி, கையினை எனவும், மார்பினை எனவும், கோலினை எனவும், நீ சில மொழியா அளவை அணுகக் கொண்டு காண்க. 245-மாசில் என்பது தொடங்கி, 269-செலினே என நூன் முடியும் துணையும் ஒரு தொடர். இதன்கண் அந்நல்லியக்கோடன் பரிசில் தந்து போற்றுஞ் சிறப்பும் பிறவும் கூறப்படும்.

அவ்வள்ளல் பரிசிலரை ஊட்டும் சிறப்பு

235-245 : மாசில் ..................... ஊட்டி

பொருள் : மாசு இல் காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ - மாசில்லாததும் மூங்கில் ஆடையை உரித்தாற்போன்றதும் ஆகிய உடையினை உடுக்கச்செய்து, பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி - பாம்பினது நஞ்சேறி மயக்கினாற்போன்று மயக்கும் கள்ளினது தெளிவைப் பருகும்படி தந்து, கா எரியூட்டிய கவர்கணைத் தூணிப் பூவிரி கச்சைப் புகழோன் தன்முன் - காண்டவ வனத்தை நெருப்புண்ணும்படி எய்த கணையை உள்ளடக்கிய ஆவநாழிகையினையும் பூத்தொல் பரந்த கச்சையினையுமுடைய அருச்சுனன் அண்ணனும், பனிவரை மார்பன் பயந்த - இமயம்போன்ற மார்பையுடையவனுமாகிய வீமசேனன் எழுதிய, நுண்பொருள் பனுவலின் வழாஅப் பல்வேறு அடிசில் - நுணுகிய பொருளையுடைய மடைநூல் நெறியிற் றப்பாத பல வேறு பாட்டையுடைய அடிசிலை, வாள்நிற விசும்பில் கோண்மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு எள்ளுந் தோற்றத்து விளங்கு பொற்கலத்தில் - ஒளியுடைய நீனிறவானத்தின்கண் கோளாகிய மீன்கள் சூழ்ந்த இளமையுடைய ஒளிக்கதிருடைய ஞாயிற்று மண்டிலத்தை இகழுந் தோற்றமுடைய விளங்குகின்ற பொன்னாற் செய்த உண்கலத்திடத்தே, விரும்புவன பேணி - நீ விரும்பி உண்பவற்றை விரும்பி உட்கொண்டு, ஆனா விருப்பில் தான் நின்று ஊட்டி - நும்மிடத்தே மிகுகின்ற விருப்பத்தாலே தானே நின்று உண்ணச்செய்து,

கருத்துரை : (நீ சில மொழியுமுன்னரே) அவ்வள்ளல் நும்மை எதிர் கொண்டு நுமக்கு மூங்கிலின் உட்பட்டையை உரித்தாலொத்த தூய ஆடையினை உடுக்கச் செய்து, பாம்பின் நஞ்சேறி மயக்கினாற் போன்று களிப்பு நல்கும் தேறல் பருகத்தந்து அருச்சுனன் தமையனாகிய வீமன் எழுதியருளிய மடைநூனெறியிற் றப்பாதவாறு சமைத்த பல்வேறு சுவையுடைய அடிசிலைக் கோள்கள் சூழ இருந்த இள ஞாயிற்றை இகழும் தோற்றமுடைய பொன்னாலியன்ற உண்கலத்திடத்தே நீயிர் விரும்பி உண்ணும் சுவையினையும் அறிந்து அமையாத விருப்பத்தோடே தானே நின்று நும்மை உண்ணச்செய்து என்பதாம்.

அகலவுரை : நீ சில சொல்லுமுன்னர் நின் புகழுரை கேட்குந் துணையும் ஆற்றியிராதே நினது வறுமை தீர்க்க விரைவான் அவ்வள்ளல் என்றவன் இனி அவன் ஆர்வத்தோடே பரிசிலரைப் போற்றும் முறையினை இயம்புகின்றான் என்க. நல்கூர்ந்தான் ஒருவன் மானமுடையானாய வழிப் பசியால் உடல்வற்றிக் காயினும்,

நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
செல்வர் சிறுநோக்கு நோக்குங்குகால் - கொல்லன்
உலையூதுந் தீயேபோல் உள்கனலும் கொல்லோ
தலையாய சான்றோர் மனம்  (நாலடி : 298)

என்றாங்குத் தன் நல்கூர்நிலையைப் பிறர் அறியாவாறு மறைத்துக் கொண்டு இன்னா இயைக இனிய ஒழிக என்று தன்னையே தானிரநீ தொழுகுவான் அங்ஙனம் அவன் நல்கூர்நிலையினைப் பிறர் அறியாவாறு மறைத்தொழுகியவழியும் அவன் கருத்துக்கு மாறாகப் பிறரறியத் தூற்றுவது அவன் உடுத்திய கந்தல் ஆடையேயாம். ஆகலான், மானவுணர்ச்சிமிக்க பரிசிலன் மனத்தை மகிழ்விக்க முன்னர் அவன் நிலையை அயலார்க்குத் தூற்றும் ஆடையை அகற்றி அவனுக்குச் செல்வச்சிறப்புடைய ஆடை அணிவித்தலையே வள்ளல்கள் முதன்முதலாகச் செய்யும் கடமையாகக் கொள்கின்றனர் போலும். பீறற்கந்தையை அகற்றிப் பட்டுடை உடுத்தப்பட்டவுடனே இரவலனுடைய நல்குரவுத் தோற்றம் ஞெரேலென மாறிவிடுதல் இயல்பேயாம். அங்ஙனம் மாறியவுடன் அவ்வள்ளலின் கேளிருள் ஒருவன் போலவே இரவலன் மாறி அவருடன் நாணாது அளவளாவும் தகுதியுடையவனாகின்றான். கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி யே வள்ளல்கள் அவ்வாறு செய்கின்றனர் என ஒரு புலவர் கூறுகின்றனர். வள்ளல்கள் முதல் முதல் கந்தலகற்றி நல்லாடை அணிவித்தலை,

ஒன்றியான் பெட்டா அளவையின் .............
............. வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த
துன்னல் சிதாஅர் துவர நீக்கி
நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவுரி யன்ன அறுவை நல்கி  (பொருநர் : 73-83)

எனவும்,

நும், கையது கேளா அளவை ஒய்யெனப்
பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னல் சிதாஅர் நீக்கித் தூய
கொட்டைக் கரைய பட்டுடை நல்கி  (பொருநர் : 152-5)

எனவும் பொருநராற்றுப்படையினும்,

அந்நிலை அணுகல் வேண்டி நின்னரைப்
பாசி அன்ன சிதர்வை நீக்கி
ஆவி யன்ன அவிர்நூற் கலிங்கம்
இரும்பே ரொக்கலொடு ஒருங்குடன் உடீஇ  (பெரும்பாண் : 467-70)

எனப் பெரும்பாணாற்றுப்படையினும்,

உவந்த உள்ளமோ டமர்ந்தினிது நோக்கி
இழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம்
எள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ  (மலைபடு : 560-62)

எனக் கூத்தராற்றுப்படையினும் காண்க. மாசில் என்னும் அடைமொழியை உவமைக்கும் பொருளுக்கும் கூட்டிக் கொள்க. சொலித்தல் - உரித்தல். காம்பு-மூங்கில். மூங்கிலைப் பிளந்து நோக்குழி உட்புறத்தே வெள்ளிதாய்த் தூய பட்டை ஒட்டிக் கொண்டிருத்தலைக் காணலாம். அப்பட்டை, தூய்மையானும் நிறத்தானும் வெண்மையானும் ஆடைக்குவமை. அறுவை - ஆடை. அறுக்கப்படுதலால், அறுவை என்பது ஆடைக்குக் காரணப்பெயர் என்க.

தேறல் - கள்ளின்தெளிவு. அதன் களிப்பு நல்கும் தன்மைக்கு அரவு வெகுளுந்தன்மை உவமை எனினுமாம். என்னை? அடங்கிக் கிடக்கும் அரவு ஞெரேலெனச் சீறி எழுவதுபோன்று உண்ணுமுன்னர் வாளாவிருந்த தேறல் உண்டவுடன் உண்டார் உள்ளத்தே ஞெரேலென வெறித்தெழுதலான் என்க. கள்ளின் தெளிவு நாட்பட இருந்து புளிப்பேறலான் இத்தகைய களிப்பு நல்கும் தன்மையை அடையும் என்ப.

பாப்புக் கடுப்பன்ன தோப்பி  (அகம் : 378)
அரவு வெகுண்டன்ன தேறல்  (புறம் : 376)

எனப் பிறரும் ஓதுதல் அறிக. கா-காடு, அஃதாவது : காண்டவம் என்னும் காடு; பண்டொரு கால் நெருப்புக்கடவுள் தனக்குற்ற நோய்தீர்வின் பொருட்டுக் காண்டவம் என்னும் காட்டை உண்ணப்புகுந்தான் என்றும், அக்காடு இந்திரனுடையதாகலான் அவன் முகில்களை ஏவி அத்தீயை அவித்து விட்டான் என்றும், நெருப்புக்கடவுள் இவ்வாறு பன்முறை முயன்றும் இந்திரன் தடைசெய்துவிடவே, பாண்டவருள் ஒருவனாகிய அருச்சுனனிடம் சென்று அக்காட்டை உண்ணும்படி தனக்கு உதவிபுரிய வேண்டினான் என்றும், விற்றிறம் வல்ல அருச்சுனன் தனது தீக்கணையின் வாயிலாய் அக்காட்டை உண்ணும்படி நெருப்புக்கடவுளை ஏவ அவன் புகுந்து உண்ணத் தொடங்கியவுடன் இந்திரன் முகில்களை ஏவி மழை பெய்விக்க, அருச்சுனன் கணைகளாலேயே பந்தரிட்டு அந்நெருப்பினை அவியாதே காத்தனன் என்றும், இந்திரன் பின்னர்ப் பெரிதும் முயன்றும் பயன்பெறாது போயினன் என்றும், பாரதத்தே கூறப்பட்ட கதையினை, ஈண்டு,

காவெரி யூட்டிய கவர்தணைத் தூணிப்
பூவிரி கச்சைப் புகழோன்

என்னுந் தொடராற் குறித்தனர் என்க. காண்டவக்காட்டை நெருப்புக் கடவுளுக்கீந்து உண்ணச்செய்த புகழோன், கவர்கணைத் தூணிப்புகழோன், பூவிரிகச்சைப் புகழோன் எனத் தனித்தனி இயைத்துக் கொள்க. இவற்றால் அருச்சுனனுடைய ஆற்றல், விற்றிறம், அழகு என்னும் மூன்று சிறப்பும் விளக்கப்பட்டமை காண்க. கவர்கணை-பகைவருயிரைக் கவரும் கணை என்க. பூவிரிகச்சை என்றது; பூத்தொழில் விரிந்த ஆடை. பாண்டவருள் அருச்சுனன் ஏனைய நால்வரினும் மிக்க புகழுடையோன் ஆதல்பற்றிப் புகழோன் என்றார். புகழோன் தன்முன் - அவன்றமையன். அருச்சுனன் தமையன் வீமசேனன் என்க. அருச்சுனன் தமையன்மார் வீமசேனன் உதிட்டிரன் என இருவராவார்; அவ்விருவருள்ளும், வீமசேனன் என்பார், பனி வரை மார்பன் என்றார். என்னை? வீமசேனன் பரிய உடல் படைத்தவன் என்பதனை இந்நாட்டுக் கல்லாரும் கேள்விவாயிலாய் அறிவராகலான் என்க. காவேரி என்பது தொடங்கி மார்பன் என்னுந்துணையும் வீமசேனன் என்னும் பெயர்மாத்திரையான் நின்றதென்க. இதனையே காவெரி.... முன் என வீமசேனற்குப் பெயராயிற் றெனவுணர்க. இது சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை என, தக்கயாகப் பரணி உரையாசிரியர் குறித்துரைத்தமையும் உணர்க. அருச்சுனன் காவெரியூட்டிய வரலாற்றினை,

உரக்குரங் குயர்த்த வொண்சிலை உரவோன்
காவெரி யூட்டிய நாள்போற் கலங்க
அறவோர் மருங்கின் அழற்கொடி விடாது
மறவோர் சேரி மயங்கெரி மண்ட  (அழற்படுகாதை : 111-14)

என இளங்கோவடிகளார் சிலப்பதிகாரத்தில் கூறுதலும்,

தீவயி றார்த்திய திறலோன் போல  (1:46:91)

எனப் பெருங்கதையிற் கூறுதலும் காண்க. புகழோன்றன்முன் பனிவரைமார்பன் பயந்த நுண்பொருட்பனுவல் என்றது, வீமசேனன் இயற்றிய செய்யுள் உருவமான அடிசில் நூலினை, காவெரி என்றது தொடங்கி நுண்பொருட்பனுவல், என்னுந் துணையும் அம்மடை நூற்கொரு பாயிரங் கூறிச் சிறப்பித்தவாறுணர்க. வீமசேனன் அடிசிற்றொழிலில் மிக வல்லவன் என்ப. துரியோதனன் பாற்சூது பொருது தோற்றகாலத்தே உடன்பட்டபடி பதின்மூன்றாம் யாண்டு பாண்டவர் விராடநாட்டிற் கரந்துறைந்தனர் என்றும் அப்பொழுது வீமசேனன் பலாயனன் என்னும் மடைத்தொழில் வல்லோனாக உருக்கொண்டு விராடன் அரண்மனையில் மடைத்தொழிலாளர் தலைவனாக வதிந்தனன் என்றும் பாரதம் கூறும். வீமன் மடைத்தொழில் வல்லுநன் என்பதனை அரசவேள்வி செய்துழி உதிட்டிரன் வீமனை நோக்கி முந்நீர் வேலையின் மணலிற் சாலும் மிகுசனம் அருந்தத் தேவர் ஆலயத் தமுத மன்ன அடிசில் நீ அளித்தி எனக் கட்டளை யிட்டமையானும், சிந்தாமணியில்,

நெய்வளங் கனிந்து வாச நிறைந்துவான் வறைக ளார்ந்து
குய்வளம் கழுமி வெம்மைத் தீஞ்சுவை குன்ற லின்றி
ஐவருள் ஒருவன் அன்ன அடிசினூன் மடையன் ஏந்த
மைவரை மாலை மார்பன் வான்சுவை அமிர்தம் உண்டான்  (சிந்தா:2735)

என்று தேவர் வீமனை உவமையாக்குதலானும் உணர்க. நுண்பொருட்பனுவல் - நுணுக்கமான பொருளை விளக்கும் செய்யுள். அக்காலத்தே அத்தகைய மடைநூல் ஒன்று இருந்தது போலும். இப்பொழுதும், சுவையுடை அடிசிலை, வீமபாகம், நளபாகம் என வியக்கும் வழக்கமுளது. பல்வேறு அடிசில் - சுவை முதலியவற்றால் பலவாகிய உண்டி. வாள்-நிறம்; ஈண்டு நீலநிறம். வானம் நீலநிறமாகத் தோன்றுதலின் வாணிறவிசும்பென்றார். கோள் மீன்: உம்மைத் தொகை. கோள்களும் மீன்களும் என்க. இளங்கதிர் ஞாயிறு பொன்னாற் செய்த உண்கலத்திற்கும் கோள்களும் மீன்களும் அவ்வுண்கலத்தைச் சூழப் பல்வேறு அடிசில் வைக்கப்பட்ட சிறியவும் பெரியவுமாகிய வெண்பொன்னாலாய கருனைக்கலங்களுக்கும் உவமை என்க.

விரும்புவன - உண்ணும் விருந்தினர் விரும்பி உண்ணும் பொருள்கள். உண்பாருள்ளும் ஒருசுவை ஒருவர்க்கு விருப்பமுடைத்தாயும் அச்சுவையே வேறொருவர்க்கு விருப்பமில்லாதாகவும் இருத்தல் இயல்பாகலின், அவ்வவர் விரும்பும் சுவை இற்றென அறிந்து அச்சுவையுடைய அடிசிலை உண்பித்து என்க. விருப்பம் - ஈத்துவக்கும் இன்ப நுகர்ச்சியின்கண் எழும் அவா. வள்ளல்கட்கு ஈத்தலால் வருமின்பம் ஏனைய இன்பங்களினும் பெரிதாகலான் அவ்வின்பத்தை விரும்பி என்க. இதனை,

வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தவர்
திருந்துமுகங் காட்டும்என் தெய்வக் கடிஞை
உண்டி கொல்லோ உடுப்பின் கொல்லோ
யாவைஈங் களிப்பன தேவர்கோன் என்றலும்  (மணி.14:44-8)

என ஆபுத்திரன் இரவலர்க் கூட்டும் உண்கலம், ஊட்டும் வள்ளலுக்கு அளிக்கும் இன்பம், தேவர் நாடும் தரவல்லதன்று எனக் கூறுமாற்றான் உணர்க. தானே விருந்தினரைப் போற்றி அவ்வின்ப நுகர்ச்சியைப் பெறும் பொருட்டும் விருந்தினர் உண்ணும்போது இடையிடையே இன்சொல் அவர்தம் செவியிலூட்டி மகிழ்வித்தற் பொருட்டும் தானே நின்று ஊட்டுவான் என்றவாறு.

உடீஇ, நல்கிப் பல்வேறு அடிசில் பொற்கலத்தில் விரும்புவன தான் நின்று ஊட்டி என்றியைத்துக் கொள்க.

நல்லியக்கோடன் பரிசில்நல்கும் சிறப்பு

246-261 : திறல் ............... பரிசில்

பொருள் : திறல் சால் வென்றியொடு தெவ்வுப்புலம் அகற்றி - வலியமைந்த வெற்றியோடே பகையைத் தத்தம் நிலத்தைக் கைவிட்டுப் போகப் பண்ணி, விறல் வேல் மன்னர் மன்எயில் முருக்கி - வெற்றியை உடைத்தாகிய வேலினையுடைய முடிவேந்தர் உறையும் அரண்களை அழித்து, நயவர் பாணர் புன்கண் தீர்த்தபின்-அவ்விடங்களிற் பெற்ற பொருளாலே விரும்பி வந்தவர் புன்கண்மையையும் பாணர் புன்கண்மையையும் போக்கிய பின்னர், வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு - தன் படைத்தலைவர் மிக்கனவாய்க் கொண்டுவந்து தந்த நன்றாகிய திறத்தினையுடைய பொருட் குவியலோடே, பருவ வானத்துப் பாற் கதிர் பரப்பி உருவ வான்மதி ஊர் கொண்டாங்கு - கூதிர்க் காலத்தையுடைய வானிடத்தே பால்போலும் ஒளியைப் பரப்பி வடிவு நிறைதலையுடைய வெண்டிங்கள் பரத்தலைக் கொண்டாற் போல, கூர் உளி பொருத வடு ஆழ்நோன் குறட்டு ஆரம் சூழ்ந்த அயில்வாய் நேமியோடு - கூரிய சிற்றுளிகள் சென்று செத்தின உருக்கள் அழுந்தின வலியினையுடைய குறட்டிடத்தே தைத்த ஆர்களைச்சூழ்ந்த சூட்டினையுடைய உருளையோடே, சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடுஞ்சினை ததர் பிணி அவிழ்ந்த தோற்றம்போல - சிந்துகின்ற அரும்பினையுடைய முருக்கினுடைய விசும்பிலே செல்ல வளர்ந்த நெடிய கொம்பின்கண்ணே பூங்கொத்து முறுக்கு நெகிழ்ந்த தோற்றரவுபோல, உள்ளரக்கு எறிந்த உருக்குறு போர்வை - உள்ளே சாதிலிங்கம் வழித்த உருக்கமைந்த பலகையினையும், கருந்தொழில் வினைஞர் கைவினைமுற்றி ஊர்ந்து பெயர்பெற்ற பாகரொடு - வலிய தொழிலைச் செய்யும் தச்சருடைய கையாற்செய்யும் தொழில் எல்லாம் முற்றுப்பெற்ற பின்னர் ஏறிப்பார்த்து உண்மையாக ஓட்டமுண்டென்று பெயர்பெற்ற அழகினையுடைத்தாகிய நடையை உடைய தேரோடே, மா செலவொழிக்கும் மதனுடை நோன்தாள் - குதிரையின் செலவினைப் பின்னே நிறுத்தும் வலியுடைய தாளினையும், வாண்முகப்பாண்டில் வலவனொடு பரிசில் தரீஇ - ஒளியினை உடைத்தாகிய முகத்தினையுமுடைய நரை எருதையும் அதனைச் செலுத்தும் பாகனோடு யானை குதிரை அணிகலம் முதலிய பரிசில்களையும் கொடுத்து, அன்றே விடுக்கும் அவன் - அன்றே விடுப்பான் அவ்வள்ளல்.

கருத்துரை : வலியும் வெற்றியும் உடைய பகைவரைத் தத்தம் நிலத்தைக் கைவிட்டுப் போகச்செய்து வெற்றியுடைய வேலுடைய முடிவேந்தரின் அரண்களையும் அழித்துத் தன்னை விரும்பிவந்தோர் பரிசிலர் முதலியோருடைய வறுமையை வழங்கித் தீர்த்து எஞ்சியதாகத் தன் படைத்தலைவர் கொணர்ந்த பொருட் குவியலுடனே கூதிர்க்காலத்தே வானிடைப் பால் ஒளிபரப்பி வடிவு நிறைந்த வெண்டிங்கள் பரந்தாற்போன்ற கூரிய சிற்றுளிகள் செதுக்கிய உருவமைந்த வலிய குறட்டிற்றைத்த ஆர் சூழ்ந்த சூட்டினையுடைய உருளையோடே முருக்கமரம் மலர்ந்த தோற்றம்போன்று சாதிலிங்கம் வழித்த போர்வையினையும் தச்சா தொழில் முற்றுப்பெற்றபின்னர் ஏறிப்பார்த்து நல்ல ஓட்டம் உண்டென்று புகழப்பட்ட அழகினையுடைய நடையையும் உடைய தேரோடே குதிரையைப் பின்னிடச் செய்யும் ஓட்டமுடைய வெள்ளை எருதையும் அதனை ஊரும் பாகனோடே யானை குதிரை அணிகலன் முதலிய ஏனைப் பரிசில்களையும் வழங்கி அன்றே செல்கென விடுப்பன் அவ்வள்ளல் என்பதாம்.

அகலவுரை : வஞ்சகவழியானும் பகைவெல்வார் உண்மையின் திறல் சால் வென்றி யென்றார்.  திறல் - வலிமை. தெவ்வு - பகைவர். புலம் - அப்பகைவர்க்குரிய நாடு. எனவே தன் ஆற்றலாலே பகைவர்களை அவ்வவர்க்குரிய நாட்டைக் கைவிட்டு ஓடும்படி செய்து என்றவாறு. பின்னர் விறல்வேன் மன்னர் மன்னெயின் முருக்கி என்றது, சேர சோழ பாண்டியர் போன்ற பேரரசர்களை என்க. விறல்வேல் மன்னர் என்ற குறிப்பால் கோன்முறையின் வழுவிய கொடுங்கோன் மன்னரை முற்றி அழித்தென்க. என்னை?

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடா தெனின்  (குறள் : 546)

என்றபடி, கோல்செவ்வியதாய வழியே வேல்வாய்ப்ப தென்னும் மன்னறம் பேணாது தம்வேலினையே பற்றுக்கோடாகக்கொண்டு வெருவந்த செய்யும் மன்னரின் மன்னெயிலை வலிந்து சென்று முற்றுதல் சிறந்த அரசர் கடனாகலின், நல்லியக்கோடன் அவ்வாறு கொடுங்கோன் மன்னரை வலிந்து முற்றி அழித்தான் என்பார். விறல்வேல் மன்னர் என்றார். மன் எயில் - நிலைபேறுடைய மதில். எனவே பிறரால் முருக்குதல் இயலாத வலிய அரண்களையும் அழித்து என்றபடி. நயவர் - விரும்பி வந்தவர். அவராவார் : நட்டார் உறவோர் துவ்வாதார் முதலியோர்; பாணர் என்றதனால் எடுத்த மொழியின் இனம் செப்பிக் கூந்தர் விறலியர் பொருநர் புலவர் முதலியோரையும் கொள்க. புன்கண்-வறுமை. வறுமைத்துயர் உள்வழி கண் பொலி விழந்து புற்கென்றிருத்தலின் அதனைப் புன்கண் எனக் காரிய ஆகுபெயராற் கூறினர். புன்கண் தீர்த்தபின் என்றது அத்தகையோர் கேட்குமுன்னர் அவர்தம் நிலையினை அவர் கண்களானே தான் அறிந்து அத்துன்பம் பின்னர் அவர்க்கு ஒருகாலும் வாராதபடி நிரம்ப நல்கி என்னும் பொருளை யாப்புறுத்து நின்றதென்க. வயவர் - போர்மறவர் வயவர்தந்த என்றது, தன் ஏவலாலே சென்று மன்னெயின் முருக்கி அங்கிருந்து கொணர்ந்த பொருளை, சிறந்த வேந்தர் பகைவரை அழித்து அவர்பாற்பெற்ற பொருளை இங்ஙனம் நயவர் பாணர் முதலியோர்க்கு வழங்கும் வழக்க முண்மையை,

ஒன்னாத் தெவ்வர் உலைவிடத் தொழித்த
விசும்புசெல் இவுளியொடு பசும்படை தரீஇ  (491-2)

எனப் பெரும்பாணாற்றுப்படையினும்,

பலர்புறங் கண்டவர் அருங்கலந் தரீஇப்
புலவோர்க்குச் சுரக்குமவன் ஈகை மாரியும்  (71-2)

என மலைபடுகடாத்தினும்,

செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி அடர்ப்புகர்ச்
சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்
பாசவற் படப்பை யாரெயில் பலதந்து
அவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம்
பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கி  (புறம். 6: 11-6)

எனப் புறத்தினும் சான்றோர் கூறுமாற்றான் உணர்க. வான்கேழ் - உயர்ந்த நிறம், பொன் மணி முதலிய நிதியம் என்பார் வான்கேழ் நிதியம் என்றார். பருவம் - ஈண்டுக் கூதிர்ப்பருவம்; கார்ப்பருவம் என்பாருமுளர். கூதிர், அல்லது கார்ப்பருவத்து முழுத் திங்கள் ஒளிமிக்கு விளங்குதலின், பருவவானத்து வான்மதி என்றார். பான்மதி உருளுக்கு உவமை. உருவம் - ஈண்டு நிறைந்த வடிவம்; நிறை வெண்டிங்கள் வான் மதி - வெண்டிங்கள். கூருளிபொருத வடு என்றது, சிற்றுளிகளால் செதுக்கி இயற்றப்பட்ட சித்திரத்தொழிலமைந்த வடிவங்களை.

குறடு - ஆரங்களைத் தைத்தற்குரியதாய் உருளையின் நடுவிடத்துள்ள தோர் உறுப்பு; இதனை இக்காலத்தார், குடம் என்று வழங்குப. நேமி - உருளை; வடசொல் மலரான் நிறைந்து விளங்கும் முருக்கமரம் செவேலெனத் தோன்றுதல்போன்று அரக்கூட்டப்பெற்றுச் செவேலெனத் திகழும் போர்வை என்க. போர்வை ஈண்டுத் தேர்த்தட்டின் மேற் பரப்பிய பலகை. கருந்தொழில் வினைஞர் என்றது, தச்சர் கொல்லர் முதலியோரை: ஊர்ந்து பெயர்பெற்ற என்றது தச்சர் கொல்லர் முதலியோரின் தொழில் முற்றுப்பெற்றபின் தேர்வலவர் அதனைப்பூட்டி இயக்கிப்பார்த்து இது மெத்தென நன்கு ஓடுகின்றது என்று புகழப்பட்டதை. இதனை வெள்ளோட்டம் விடுதல் என இக்காலத்தார் விளம்புவர். பாகா - தேர்; ஆகுபெயர். மா-குதிரை. செலவொழித்தல்-பின்னிடச் செய்தல். குதிரையினும் விரைந்தோடும் பாண்டில் என்க. பாண்டில் - வெள்ளை எருது. அன்றே விடுக்கும் என்றது, பரிசில் நீட்டியான் என்றவாறு. இனி அத்தகைய பரிசில் நல்குவான் யாரெனின் கூறுவல் எனப் பாணன் இயம்புகின்றான்.

261-169 : மென்றோள் ...................... செலினே

பொருள் : மென்தோள் துகில் அணி அல்குல் துளங்கு இயல் மகளிர் - மெல்லிய தோளினையும் துகில் சூழ்ந்த அல்குலினையும் அசைந்த சாயலினையும் உடைய மகளிர்கள், அகிலுண விரித்த அம்மென் கூந்தலின் - அகிற்புகையை ஊட்டுதற்கு விரித்த அழகும் மென்மையுமுடைய கூந்தல்போலே, மணி மயில் கலாபம் மஞ்சிடை பரப்பி - நீலமணிபோலும் நிறமுடைய மயிலினது தோகையை வெண்மஞ்சின் இடையே அணையாக விரித்து, துணி மழை தவழும் துயல்கழை நெடுங்கோட்டு - தெளிந்த முகில் தவழாநின்ற அசைகின்ற மூங்கிலையுடைய நெடிய மலையின் சிகரத்தே, எறிந்து உரும் இறந்து ஏற்று அருஞ்சென்னி - உரும்தான் சேறற்கு இடித்துச் சென்ற பிறர்ஏறுதற்கு அரிதாகிய உச்சியை உடைய, குறிஞ்சிக்கோமான் - மலைகள் மிக்க நிலத்திற்குத் தலைவனாகியவனும், கொய்தளிர்க்கண்ணி - கொய்யப்பட்ட தளிர் விரவின மாலையினையும், செல்இசை நிலைஇய பண்பின்- பிறர்பால் நில்லாதே போகின்ற இயல்புடைய புகழ் தன்னிடத்தே நிற்றற்குக் காரணமான குணத்தையும் உடையவனும் ஆகிய, நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே - நல்லியக்கோடன் என்னும் வள்ளலை நீயிர் விரும்பிச் செல்வீராயின்.

கருத்துரை : மென்றோளும், துகிலணிந்த அல்குலும், ஆடிய சாயலும் உடைய மகளிர் அகிலூட்டற் பொருட்டு விரித்த கூந்தலைப் போன்ற மயிலின் கலாபத்தை வெண்மேகமாகிய மஞ்சின் இடையிடையே விரித்துத் தெளிந்தமேகம் தவழா நின்றதும், அசையும் மூங்கில் நிறைந்ததும், இடியேறு தான் அப்பாற்செல்லத் தடையாதல் கருதி இடித்துச் செல்லப்பெற்றதும், யாரானும் ஏறுதற்கரியதும் ஆகிய முடியை உடைய மலை சூழ்ந்த நிலத்திற்குத் தலைவனும், தளிர் மாலை அணிந்தவனும், புகழ்நிலைத்து நிற்றற்குரிய வண்மை முதலிய குணம் நிறைந்தவனும் ஆகிய வள்ளல் நல்லியக்கோடனை விரும்பி நீயிர் செல்குவிராயின் என்பதாம். நல்லியக்கோடனை விரும்பிச் செல்குவிராயின், அவன் அன்றே பரிசில் தரீஇ விடுக்கும் என, இயைத்துக்கொள்க.

அகலவுரை : இதன்கண் துளிமழை தவழும் துயல்கழை நெடுங்கோடு என்றதனால், பொருள் கூறியவாறாயிற்று. என்னை? மழைவள மிக்க நாட்டில் நென் முதலிய எப்பொருளும் மிகுதல் இயல்பாகலின் என்க. செல்லிசை நிலைஇய பண்பின் என்றமையால், அறங் கூறியவாறாயிற்று. என்னை?

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மே னிற்கும் புகழ்  (குறள் : 23.2)

என்பவாகலானும் ஈதலாகிய அறமுள்வழியன்றி அதன் காரியமாகிய இசைநிலைத்தல் இன்மையானும், நிலைத்த புகழுடைமை கூறல் அறமுண்மை கூறலே என்க. இனிக் குறிஞ்சிக்கோமான் என்னும் குறிப்பானே, இன்பமும் கூறியவாறு என்னை? குறிஞ்சி என்னும் சொற்குப் புணர்தல் என்பது பொருளாகலான் என்க. இவ்வாற்றான் இவ்விறுதிப் பகுதியில், அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றும் உடைய நல்லிசைக்கோடன் என அவ்வள்ளற் பெருமானைச் சிறப்பித்தோதியவாறுணர்க.

மென்றோள்
துகிலணி அல்குல் துலங்கியன் மகளிர்
அகிலுண விரித்த அம்மென் கூந்தல்

என உவமை எடுத்தோதிய குறிப்பும், குறிஞ்சித்தலைவன் என்ற குறிப்பும், அந்நாடு அகத்துறை இன்பம் கெழுமிய நாடென்னும் பொருளை யாப்புறுத்தி நின்றன. மயிலினது கலாபத்தை வெண்மேகமாகிய மஞ்சினிடையே அணையாக விரித்துக் கருமுகில் தவழும் நெடுங்கோடு என்க. தவழும் என்ற வினைக்கேற்பக் கலாபத்தை விரித்து என்றார். மயில் தோகை விரித்தாடுதற்குக் கருமுகில் காரணமாதல்பற்றித், தோகையைப்பரப்புதற்கும் முகிலை வினைமுதலாக்கி விளம்பினார். இவ்வாறு கூறாது, ஆசிரியர் நச்சினார்க்கினியர் துணி மழை மணி மயில் கலாபம் இடை மஞ்சு பரப்பித் தவழும் கோடு எனச் சொற்களைப் பிரித்தியைத்துத் தெளிந்த மேகம் நீலமணி போலும் மயிலினுடைய விரிந்த தோகைக்கு நடுவே தனது மஞ்சைப் பரப்பித் தவழு மலை என்று பொருள்கூறிப் போந்தார். துணி - தெளிவு. துணிமழை - தெளிந்த மேகம். மழை, முகிலுக்கு ஆகுபெயர். இம்முகில் இனி மழை பொழியும் எனப் பிறர் துணிதற்குக் காரணமாகச் சூன் முதிர்ந்து நின்ற முகில்.

கொய்தளிர்க்கண்ணி என்றது, தாமரைக் கொழுமுறியனையும், அதன் மலரினையும், குவளையையும், கழுநீர் மலரினையும், பச்சிலையுடனே கலந்து தொடுத்த படலை மாலையை. என்னை?

தாமரைக் கொழுமுறித் தாதுபடு செழுமலர்க்
காமரு குவளைக் கழுநீர் மாமலர்ப்
பைந்தளிர் படலை மாலை  (சிலப்.அந்தி:39-41)

என்பவாகலின் என்க. இசை நிறுவுதல் அரிதாகலின், செல்லிசை என்றார். இசைநிலைஇய பண்பு என்றது, வண்மைக்குணத்தை. என்னை?

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்  (குறள் : 242)

எனத் தேவரும் புகழ்நிற்றற்குக் காரணம் வண்மையென்றே கூறலான் என்க.

இனி, மானிடவாழ்க்கையின் பயன்,

ஈத லிசைபட வாழ்த லதுவல்ல
தூதியம் இல்லை உயிர்க்கு  (குறள் : 234)

என்னும் அருமைத் திருக்குறளாற் பெறுதுமன்றே? ஆசிரியர் நல்லூர் நத்தத்தனார் செல்லிசை நிலைஇய பண்பின் நல்லியக்கோடனை என இந்நூல் இறுதியிற் கூறுமாற்றான் அவ்வள்ளலே இவ்வுலகின்கண் வாழ்தலின் ஊதியம்பட வாழ்ந்தவன் எனக்கூறி இதனால் இந்நூல் கற்போர்க்கும் வாழ்க்கைப்பயன் கூறினராதல் அறிக. இதுகாறும் கூறியவாற்றால் இச் சிறப்புடைய சிறுபாணாற்றுப்படையின்கண், ஆசிரியர் நத்தத்தனார் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பொருளும் தெரித்தோதியவாறும் உணர்க.

இனி, 235-மாசில் என்பது தொடங்கி, 269-செலினே, என்னும் துணையும் அகன்று கிடந்த பொருளை : நீ சில மொழியா அளவை, அறுவை உடீஇத் தேறல் நல்கி, அடிசில் பொற்கலத்தில் விரும்புவன பேணி ஊட்டி, தெவ்வுப் புலம் அகற்றி, எயின் முருக்கி, நயவர் பாணர் புன்கண் தீர்த்த பின் வயவர் தந்த நிதியமொடு, பாகரொடு, பாண்டில் வலவனோடு, பரிசில் தரீஇ அன்றே விடுக்கும் அவன், யாரிடத்துச் செல்லின் எனின், மகளிர் கூந்தல்போன்ற தோகையை மஞ்சிடைப் பரப்பி மழை தவழும் நெடுங்கோட்டு எறிந்து உரும் இறந்த சென்னிக் குறிஞ்சிக் கோமான்கண்ணி, இசைநிலை இய பண்பின் நல்லியக் கோடனை நயந்தனிர் செலின், என அணுகக்கொண்டு காண்க.

இனி மணிமலை என்று தொடங்கி, செலினே என்று இந்நூல் முடியும் துணையும் கிடந்த பொருளியைபு வருமாறு:

முதுவாய் இரவல! வஞ்சியும் வறிது; அதாஅன்று, மதுரையும் வறிது; அதாஅன்று உறந்தையும் வறிது; அதாஅன்று, பேகனும், பாரியும், காரியும், ஆயும், அதிகனும், நள்ளியும், ஓரியும் என எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம், ஒருதான் தாங்கிய நோன்றாள், ஓவியர் பெருமகன், புரவலன், நல்லியக்கோடனை நயந்த உள்ளமொடு தன்னும் தந்தையும் பாடி முன்னாள் சென்றனமாக; இந்நாள் அழிபசி வருத்தம் விட, யானையொடு தேரெய்தி யாம் அவணின்றும் வருதும்; நீயிரும் செல்குவிராயின் மதிலொடு பெயரிய பட்டினம்படரின், தேறல் குழற் சூட்டின் வயின்வயிற் பெறுகுவிர்; வேலூர் எய்தின், சோறு ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர்; அவன் ஆமூர் எய்தின், சோறு கலவையோடு பெறுகுவிர்; அவன் மூதூர் நணியது, அவன்நடை குறுகி, அறிந்தோர் ஏத்த, வயவர் ஏத்த, அரிவையர் ஏத்த, பரிசிலர் ஏத்த இருந்தோற்குறுகி, இன்னியம் பண்ணி கையினை எனவும் மார்பினை எனவும் கோலினை எனவும் வேலினை எனவும் நீ சிலமொழியா அளவை, உடீஇ, நல்கி, ஊட்டி, பரிசில் தரீஇ அவன் அன்றே விடுக்கும், குறிஞ்சிக் கோமான் நல்லியக்கோடனை நயந்தனிர் செலின் என்பதாம்.

வெண்பா

அணி இழையார்க்கு ஆர் அணங்கு ஆகி, மற்று அந் நோய்
தணி மருந்தும் தாமே ஆம் என்பமணி மிடை பூண்
இம்மென் முழவின் எயிற்பட்டின நாடன்
செம்மல் சிலை பொருத தோள்.   1

நெடு வரைச் சந்தனம் நெஞ்சம் குளிர்ப்பப்
படும், அடும் பாம்பு ஏர் மருங்குல்இடு கொடி
ஓடிய மார்பன் உயர் நல்லியக்கோடன்
சூடிய கண்ணி சுடும்.   2

சிறுபாணாற்றுப்படை முற்றிற்று.

 
மேலும் சிறுபாணாற்றுப்படை »
temple news
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது சிறுபாணாற்றுப்படை எனும் இந்நூல். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar