Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரும்பாணாற்றுப்படை
முதல் பக்கம் » பெரும்பாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை - வரலாறு
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 செப்
2012
04:09

500 அடிகளைக் கொண்டு அமைந்தது பெரும்பாணாற்றுப்படை. பேரியாழ் வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனைத் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது இந்த ஆற்றுப்படை நூல். இதை ஆக்கியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர்.

நூலாசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் வரலாறு

இற்றைநாட் போந்த முற்றுதமிழ் பரவுள், முருகு முதனிறுத்த அரியன் பத்தும், வரம்பிட லாகாப் பெருஞ்சிறப்பினவே எனச் சான்றோராற் புகழ்ந்தோதப்பட்ட பத்துப் பாட்டினுள் நான்காம் பாட்டாகத் திகழ்கின்ற இப் பெரும் பாணாற்றுப்படை என்னுந் தீந்தமிழ்ப் பனுவல் உருத்திரங் கண்ணனார் என்னும் உயர்மொழிப் புலவரானே ஓதப்பட்டதாம். இப்புலவர் பெருமான் பத்துப் பாட்டின்கண் ஒன்பதாம் பாட்டாக நிற்கும் பட்டினப்பாலையையும் பாடியவராவார்.

இவர் பெயர்முன் கடியலூர் என்னும் அடைமொழி நிற்றலால், இவர் கடியலூர் என்னும் ஊரிற் பிறந்தவர் என்பது உணரப்படும். இக்கடியலூர் எந்நாட்டகத்துள்ளது என்பது இன்னும் அறியப்படவில்லை. உருத்திரங் கண்ணனார் என்பதனை, உருத்திரனுக்குக் கண்போன்று சிறந்த முருகனின் பெயராகக் கொண்டு உருத்திரங் கண்ணனார் என்பது இப் புலவர் பெயரென்பாரும், தந்தையின் பெயரை மகன் பெயர்க்கு அடையாக்கி வழங்கும் முண்மையால் இவர் தந்தையின் பெயர் உருத்திரன் என்பதாம் என்றும், இவர் பெயர் கண்ணனார் என்பதாம் என்றும் கூறுகின்றவரான இருதிறத்தாரும் உள்ளனர்.

இனி தொல்காப்பியத்தில் ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவியும் யாரும் சார்த்தி யவையவை பெறுமே (மர- 74) என்னும் நூற்பாவிற்குப் பேராசிரியர் உறையூர் ஏணிச்சேரி முடமேரசி, பெருங்குன்றூர்ப் பெருங்கவுசிகன் கடியலூர் உருத்திரங் கண்ணன் என்பன, அந்தணர்க்குரியன என உரை கூறுதலானே இப்புலவர்பெருமான் அந்தணர் மரபினர் என்பது தெளியப்படும்.

இவர் பெரும்பாணாற்றுப்படையில் இருநிலங் கடந்த திருமறு மார்பின், முந்நீர் வண்ணன், என்றும், கரந்தளஞ் சிலம்பிற் களிறுபடிந் தாங்குப் பாம்பணைப் பள்ளி யமர்ந்தோன் ஆங்கண் என்றும் நீனிற வுருவி னெடியோன் கொப்பூழ் நானமுக வெரருவற் பயந்த பல்லிதழ்த் தாமரைப் பொகுட்டு என்றும், திருமாலையும், அவ்விறைவன் உறையும் திருவெஃகா வணையையும் அவனது திருவுந்தித் தாமரையையுபம் சிறப்பித்தோதுதலான், திருமாலிடத்தே அன்புடையார் என்பாரும் உளர். இவர் இங்ஙனம் கூறுதல், இப்பாட்டுடைத்தலைவனாகிய தொண்டைமான் இளந்திரையன் திருமால் மரபினன் எனப்படுதலானும் அம்மன்னன் திருமாலிடத்தே அன்பு கெழுமிய உள்ள முடையான் ஆதலானும், திருவெஃகாவணை அவன் நகரின் கண்ணதாகலானும், அவன்பாற் செல்லுக என ஆற்றுப்படுத்தும் பொருநன் ஆற்றுப்படுத்தப்படுவோனை அம் மன்னன் அன்புகொண்ட திருமாலை வணங்கிச் செல்க என்பான். திருமாலைப் புகழ்ந்தன னாகக் கூறினாரல்லது திருமாலிடத்து அன்புடைய வைணவர் இவர் எனக் கொள்ளற்பாற்றன்று. இவர் பாடிய பட்டினப்பாலையில் ஓரிடத்தும் திருமால் ஓதப்படாமையுங் காண்க

இனி, உருத்திரங் கண்ணனார் என்னும் பெயர் சைவசமயத்தினரே இட்டு வழங்குதற் குரித்தாம் தன்மையுடையதாதல் பற்றி, இவர் சைவசமயத்தினர் என்பது ஒரோவழிப் பொருந்தினும் பொருந்தும். இனி, இப்புலவர் பெருமான் பாடியருளிய இப்பெரும் பாணாற்றுப்படையானும் பட்டினப்பாலையானும், பண்டைநள் தமிழகத்தின், பண்பாடுகள் வெளியாகின்றன. இவர் பல்வேறு வகுப்பினராக தமிழ்மக்களுடைய ஒழுகலாற்றினையும் நன்கு தெரித்தோதுகின்றார். உமணர், எயிற்றியர், எயினர், ஆயர், ஆயச்சியர், உழவர், வலைஞர், அந்தணர், மகளிர் முதலியோருடைய செயல்களும் அவர்தம் இயல்புகளும் கற்போர்க்குக் கண்கூடாக விளங்கும்படி விரித்தோதுகின்றனர். இப்பெரும்பாணாற்றுப்படையில் நீர்ப்பெயற்று என்னும் ஒரு வங்கத்துறையையும் பட்டினப்பாலையில் காவிரிப்பூம்பட்டினத்து வங்கத்துறையையும், அத்துறைகளிடத்தே பல்வேறு நாட்டுப் பொருள்களும் வங்கங்களிலே கொணரப்படுதலையும், உள்நாட்டுப் பொருள்கள் ஏற்றப்படுதலையும், சுங்கம் வாங்கப் படுதலையும், மாந்தரின் தொழிற்றுறை, உண்டி, உறையுள், ஆடை முதலியவற்றின் இயல்பையும் அழகுற ஓதுகின்றார்.

இவர் வடநாட்டின்கண், கங்கையாற்றின் கரையிலே அவ்வியாற்றைக் கடத்தற்பொருட்டுத் தோணித்துறையிலே மாந்தர் காத்துக் கிடத்தலையும் இமயம் முதலியவற்றின் இயல்பையும். ஓதுதலைக் கூர்ந்து நோக்குவார்க்கு. இப்புலவர் அந்நாடுகளிற் சுற்றி ஆண்டுள்ள இயல்புகளை நன்கு நேரில் அறிந்தே கூறுகின்றனர் என்பது விளங்கும். பாழ்பட்ட நகரங்கள், மன்றங்கள், ஊர்கள் முதலியவற்றின் இயல்பை, இவர் ஓதுவோர் உளமுருகும்படி ஓதுகின்றனர். மேலும் பண்டைக்கால அரசியல், நாட்டின் தன்மை, நகரத்தின் இயல்பு மன்னறம், மாந்தர் ஒழுக்கம், விளைபொருள், வாணிகம், போர், காடுகளின் இயல்பு முதலியவற்றின் நன்கு விளக்கிக் காட்டும் வரலாற்று நூல்களாகவும் இவர் பாடல்கள் திகழ்கின்றன. பண்டைகால இசைக்கலைகளில் குறிப்புகள் பல, இவர் பாட்டிலுள்ளன. இவர், இவ்விரண்டு பால்களுமன்றிக் குறுந்தொகையில் 352 ஆம் செய்யுளையும், அகநானூற்றில் 167 ஆம் செய்யுளையும் இயற்றியவர் ஆவர். இவர் தொண்டைமான் இளந்திரையன் சோழன் கரிகாற் பெருவளத்தான் என்னும் இருபேரரசர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டவர். இவர் பாடிய பட்டினப்பாலைக்குக் கரிகால் வளவன் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் வழங்கினான் என்பர். இதனை

தழுவு செந்தமிழிப் பரிசில் வாணர்பொன்
பத்தோ டாறுநூ றாயிரம் பெறப்
பண்டு பட்டினப் பாலை கொண்டதும்

எனவரும் கலிங்கத்துப் பரணியாற் காணலாம்.

பாட்டுடைத் தலைவன் வரலாறு

தொண்டைமான் இளந்திரையன்

கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் நல்லிசைப் புலவராற் பாடப்பட்ட இப் பெரும்பாணாற்றுப் படையென்னும் செந்தமிழ்மாலை புனைந்து கொண்டவன் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னன் ஆவன். காஞ்சிபுரத்தைத் தலை நகராகக்கொண்ட தொண்டைநாட்டை ஆண்ட மன்னர்கள் தொண்டைமான் என்று சொல்லப்படுவர். தொண்டையர் என்னும் மரபினர் ஆண்டமையாலே அந்நாடு தொண்டை நாடெனப் பட்டது. தொண்டை என்பது ஒரு மன்னர் குடியின் பெயர் என்பாரும் உளர். இத் தொண்டையரைப் பல்லவ மன்னராகக் கருதுவாரும் உளர். தொல்காப்பிய மரபியலில் 83 ஆம் நூற்பாவின் உரையிற் பேராசிரியர் மன்பெறு மரபின் ஏனோர் எனப் படுவார் அரசு பெறுமரபிற் குறுநில மன்னர் எனக் கொள்க; அவை பெரும்பாணாற்றுள்ளும், பிறவற்றுள்ளும் காணப்படும் என எழுதியுள்ளமையால் தொண்டையோரை நம் பண்டையோர் குறுநிலமன்னர் எனக் கொண்ட கொள்கை புலனாம். ஆய்குடி வேளிர்குடி, எவ்விகுடி, அதியர்குடி என்று பற்பல மன்னர் குடிகளிருந்தாற் போன்று தொண்டையர் குடி என, ஒரு மன்னர் குடி இருந்ததென்று நினைதல் தவறன்று.

இத் தொண்டையர் குடிப்பிறந்த மன்னர்கள் உரவு வாட்டடக்கைக் கொண்டி யுண்டித் தொண்டையோர் என்றும் பொருவார் மண்ணெடுத் துண்ணும் அண்ணல் யானை வண்டேர்த் தொண்டையர் என்றும் வினைநவில்யானை விறற்போர்க் கொண்டையர் என்றும், நல்லிசைப் புலவர்களால் கூறப்படுகின்றனர் இம் மன்னர்கள், தமிழகத்தின் வடவெல்லையாகத் திகழும் திருவேங்கடத்தைச் சார்ந்த பகுதிகளை உடையர் என்பதனை

இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு
ஓங்குவெள் ளருவி வேங்கடத் தும்பர் (அக நா- 213)

எனவரும் அகப்பாட்டானும்

கின்னர முரலும் அணங்குடைச் சாரல்
மஞ்ஞை யாலும் மரம்பயில் இறும்பிற்
கலைபாய்ந் துதிர்த்த மலர்வீழ் புறவின்
மந்தி சீக்கு மாதுஞ்சு முன்றிற்
செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக்
களிறுதரு விறகின் வேட்கும்
ஒளிறிலங் கருவிய மலைகிழ வோனே (494-500)

எனவரும் பெரும்பாணாற்றுப் படையானும் உணரலாம். இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியர் அந்நீர்த் திரைதரு மரபின் உரவோ னும்பல் என்னும் அடிக்கு விளக்கங் கூறுவார். நாகப்பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நரகலோகத்தே சென்று நாககன்னியைப் புணர்ந்த காலத்து அவள் யான்பெற்ற புதல்வனை என்செய்வேன் என்ற பொழுது தொண்டையை அடையாளமாகக் கட்டிக் கடலிலே விட, அவன் வந்து கரையேறின். அவற்கு யான் அரசுரிமையை எய்துவித்து நரடாட்சி கொடுப்பலென்று அவன் கூற, அவளும் அவள் புதல்வனை அங்ஙனம் வரவிடத் திரை தருதலின். திரையன் என்று பெயர்பெற்ற கதை கூறினார் என்று குறித்துள்ளார் எனவே, இவ்வரலாற்றானே, திரையர், தொண்டையர் என்னும் பெயர்களானே வழங்கப்படும் அரசர்கள் சோழனாகிய தந்தைக்கும் நாககன்னி யொருத்திக்கும் பிறந்து, கடல் வழியாக வந்து அச்சோழன்பாற் சோழநாட்டின் ஒரு பகுதியாகிய நாட்டைப் பெற்று ஆண்டுவந்த குறுநில மன்னன் மரபினர் ஆவர் என்று கோடல் பொருந்துவதாம்.

இனி, மணிமேகலையில் நெடுமுடிக்கிள்ளி என்பான் ஒரு சோழமன்னன், இளவேனிற் காலத்தே இறும்பூது சான்ற பூநாறு சோலைக்கண் இருந்துழி, அவ்விடத்தே அழகிய பெண்ணொருத்தி காணப்பப்பட்டாள் என்றும், அவளுடைய அழகானே மயங்கி அம்மன்னன் அவளை நயந்து புணர்ந்தான் என்றும் அவள் அம்மன்னனோடே சில பகலிருந்தும், தன்னை யார் என உணர்த்தாமலே அவனறியாவண்ணம் மறைந்து போயினள் என்றும், அவளைக் காணாமையாலே வருந்திய மன்னனை ஒரு சாரணன் கண்டு, அவள் நாகநாட்டரசன் மகள் என்றும், அவள் பெயர் பீலிவளை என்றும் அவள் பிறந்த நாளிலே சோழ மன்னனை மணப்பாள் என ஒரு கணி கூறியிருந்தனன் என்றும் அவள் இனி உன்பால் வரமாட்டாள், உன் மகன் உன்பால் சேர்ப்பிக்கப்படுவன் என்றும், கூறித் தேற்றினானாகக் கூறப் பட்டுள்ள வரலாறு, இத்தொண்டையர் வரலாறே எனக் கோடற் கிழுக்கில்லை.

ஆசிரியர் நச்சினார்க்கினியர் திரைதரு மரபின் உரவோன் உம்பல் என்னும் அடிக்குத் திரைதரு மரபென்றற்கும் தொண்டையோர் என, அம்மரபினர் வழங்கப்படுதற்கும் காரணங் காட்டுதற்கே இக்கதை கூறினர். இஃது இளந்திரையன் முன்னோரில் எந்த மன்னன் திரையன் என்னும் தொண்டைமான் என்றும் பெயர் பெற்றானோ அவன் வரலாறாகவே கூறியிருப்பவும் ரா. இராகவையங்கார் அவர்கள் ஈண்டு நச்சினார்க்கினியர் கூறுவது இப் பாட்டுடைத் தலைவனையே சுட்டுவதாக மயங்கி, இது முரணுடைத்தென்று கூறுகின்றனர். மேலும் தொண்டையோர் குடிக்குரிய வடநாட்டின்கண் வாழ்ந்த துரோணமரபினர் என்று காட்டுதற்கு அவர் பெரிதும் முயல்கின்றார். தண்டமிழ் நாட்டிற்றண்டமிழ்க்குடியாய்ப் பண்டைநாள் தொட்டுக் கண்டிருந்த இத்தொண்டையோர் குடியைத் தமிழ்க்குடியல்லா அயற்குடியினராக்க இம்மறையோர் பெரிதும் முயல்வதை அவர் ஆராய்ச்சி நூல் கண்டு தெளிக.

இனி, பெரும்பாணாற்றுப்படைக்குத் தலைவனாகிய இத்தொண்டைமானிளந்திரையன், மன்னன், வள்ளல் என்னும் சிறப்புக்கள் மட்டுமன்றி, தெள்ளிய நல்லிசைப் புலவனாகவும் திகழந்தான் என்பதனை அவன் பாடிய நற்றிணையில் மூன்றும் புறத்தில் ஒன்றுமாயமைந்த இன்னோசைத் தீம்பாடல்கள் நமக்குத் தெரியக்காட்டுகின்றன. அம் மன்னாகிய நல்லிசைப் புலவன் தன்னனைய பிறமன்னர்க்கு அரசியல் நுணுக்கமொன்றனைச் செவியறிவுறுக்கப் புகுந்து யாத்த புறப்பாட்டைக் கேண்மின்

கால்பார் கோத்து ஞாலத் தியக்கும்
காவற் சாகா டுகைப்போன் மாணின்
ஊறின் றாகி யாறினிது படுமே
உய்த்தல் தேற்றா னாயின் வைகலும்
பகைக்கூ ழள்ளற் பட்டு
மிகப்பஃ றீநோய் தலைத்தலைத் தருமே (புறம் 185)

என்பதாம் இப்பாட்டு எத்துணை அழகிது! எத்துணை இனிது! எத்துணைத் தெளிவுடைத்து! எத்துணை ஆழ்ந்தது! இத்தகைய தீம்பாடலைத் தமிழனத்தே பிறந்து தமிழ்நாட்டிலே வளர்ந்து, தமிழாலே பண்பட்ட தமிழ்மக்களை யல்லால் வடநாட்டிலிருந்து குடியேறிய ஆரிய வகுப்பினர். அவர் எத்தனை தலைமுறை ஈண்டு வாழ்ந்தவரேனும் பாடவல்லுநர் ஆவாரோ உரைமின்!

இம்மன்னன் சோழர் குலத்தினன் ஆதலான் அன்றே அச்சோழர் குலத்துப் பிறமன்னரினும் ஏனைய இரண்டு தமிழ் மன்னரினும் இவன் சிறந்தோன் என்பார்.

மலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கும்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்
இலங்குநீர்ப் பரப்பின் வளைமீக் கூறும்
வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பின்
அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்
பல்வேற் றிரையன்

எனப் புலவர் உருத்திரங்கண்ணனார் தமிழ்வேந்தர் முக்குடியுள் தோன்றியோருள்ளும் இவன் பெருமை சான்றோன் எனப் புகழ்வாராயினர். இனி, இப்பெரும்பாணாற்றுப்படையில் தமிழ் மூவேந்தருள்ளும் இவன் சிறந்தவன் என்றும், அறம்புரி செங்கோலின் தொண்டையோர் மருகன் என்றும், பகைப்புலத்துக் கொண்டியுண்டியை உடையோர் குலத்தினன் என்றும், காஞ்சியிலிருப்போன் என்றும், கைவண்தோன்றல் என்றும், திருவேங்கடம் உடையான் என்றும். இவனை நயந்தோர் நாடு பொன் பூத்தன என்றும், பகைத்தோர் மன்றம் பாழ்பட்டன என்றும், நயந்தோரும் துப்புக்கொள்ள வேண்டினோரும் அவன் திருமுற்றத்தே செவ்விபெறாதே காத்துக்கிடப்பர் என்றும், இவன் பரிசிலரைக் கண்டவுடன் பரிந்து உடை நல்கி, உண்டி நல்கி, உறையுள் நல்கி, பொற்றாமரை முதலியன சூட்டிப் போற்றி, யானை, தேர், புரவி, அணிகலன் முதலிய சிறந்த பரிசில் நல்குவன் என்றும் நன்கு போற்றப்பட்டுள்ளன. இவனது வேங்கடத்தைப் புலவர் புகழும் முறை மிகவும் இனியதாகும்.

உரைப்பாயிரம்

பண்டைநாள் தமிழ் இலக்கியங்களிலே தலைசிறந்து விளங்குவது பத்துப் பாட்டாகும். இப் பத்துப் பாட்டினுள் நான்காம் பாட்டாக விளங்குவது பெரும்பாணாற்றுப்படை. இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் நல்லிசைப் புலவராவார். இப்பாட்டிற்குத் தலைவனாவான் தொண்டைமான் இளந்திரையன் என்னும் வேந்தன். இவ்வேந்தன், சிறந்த நல்லிசைப் புலவனுமாவன். எனவே இப்பனுவல் ஒரு நல்லிசைப் புலவன். மற்றொரு நல்லிசைப் புலவனுக்கு உவந்து சூட்டிய செய்யுண் மணிமாலையாகின்றது.

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி- மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து

என்னும் பழைய வெண்பாவால் பத்துப்பாட்டுக்கள் இவை என்பதும், அவையிற்றின் எண்ணுமுறையும் உணரலாம். இப்பத்தும் பாட்டினுள் முருகு, பொருநூறு, பாணிரண்டு, கடாம், என்னும் ஐந்து பாடல்களும் ஆற்றுப்படை என்னும் புறத்திணைத் துறைப்பற்றி எழுந்தவை. அவை அக்காலத்தே வாழ்ந்திருந்த பாவலக்களைப் புகழ்ந்து கூறுவன. அப்புரவலரைப் புகழுமாற்றானே அவர் காலத்து நட்டினியல்பு, மாந்தரியல்பு முதலிய பிறவற்றையும் நன்கு விளக்குபவை செந்தமிழ்ப்பாவின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாக இவை இலங்குகின்றன.

அன்பே சிவம். இவ்வன்பு நிறையப் பெற்ற உள்ளமுடையோரே வள்ளல்கள்; தாய்மை உள்ளம் படைத்த இவர் வறுமை முதலியவற்றால் பிறர் வருந்துவதைக் காணப் பெற்றார்! கண்ட வழித் தம்பால் உள்ள பொருளை உள்ளி உள்ளி, அள்ளி அள்ளி வழங்குவர். இப் பண்பு இவர்க்கு இயல்பு. இனி அறிவே கடவுள். இவ்வறிவு நிறைந்த உள்ளமுடையோரே நல்லிசைப் புலவர். இப் புலவர்கள் ஏனையோர்க்கு அறிவுப் பொருளை வழங்குவதனையே தங்கடனாகக் கொள்வர். இவருடைய செயலுண்மையாலே தான் மக்கள் உலகம் மாண்புறுகின்றது. புலவர் இல்லை எனில் இவ்வுலகம் விலங்ககுள் நிறைந்த காடாகவே மாண்பின்றக் கிடக்கும். அறிவு நாட்டமுடையோர் பொருளீட்டுதலில் மனம் பொருந்தி முயலுதலிலர். ஆதலின் புலவர்கள் பெரும் பாலும் நல்கூர்தல் இயல்பாயிற்று. நல்குரவாளரைப் போற்றும் பண்புடைய புரவலர்கள், நல்குரவுடைய புலவரைப் போற்றுவதிற் சிறந்த ஆர்வமுடையராவர். இப்புரவலராற் புலவர்கள் நன்கு போற்றப்படுவர். தம்மைப் போற்றிய புரவலர் தம் புகழுடலைச் செய்ந்நன்றி மறவாத புலவர்கள் தம்முடைய அழியாத இலக்கிய உலகத்தே அழியாத புகழுடலில் நிலைபெற்று வாழும்படி செய்வர். புரவலர்களுக்குப் புகழுடல் படைத்தளிக்கும் துறையே ஆற்றுப்படை என்று கூறப்படும். இத்துறைக்கு ஆசிரியர் தொல்காப்பியனார் தம் தொல்காப்பியப் பெருநூலின் கண் புறப்பொருட் பாடாண்திணை உட்பகுதியில், தாவினல்லிசை என்று தொடங்கும் நூற்பாவில்,

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும்

என இலக்கணம் வகுத்தோதினர். கூத்தராதல், பாணராதல், பொருநராதல், விறலியாதல், ஒரு வள்ளல்பாற் பரிசில் பெற்று வருவாராக, அவர் வருகின்ற வழியில், தம்போற் பரிசிலர் பரிசில் நாடி வருவாரை எதிர்ப்பட்டு இன்ன வள்ளல்பால் யாம் சென்று இத்தகைய சிறந்த பரிசில்பெற்று வருகின்றேம். அவன் இத்தகைய வண்மையுடையோன்; இன்ன ஊரினன்; அவன் இன்னின்ன சிறப்புடையன். அவன்பால் நீயிரும் சென்மின்! சென்று யாம் பெற்ற பேறு பெறுமின்! என்ன, எதிர்வந்தோரை ஆற்றுப் படுத்துவதாகப் பனுவல் இயற்றுதலே ஆற்றுப்படை எனப்படும்.

இவ்வகை யாற்றுப்படையுள், இது பாணன் எதிர்வந்த பாணனை ஆற்றுப்படுத்துவதாக அமைந்திருத்தலின் பாணாற்றுப்படை எனப்பட்டது. இப் பத்துப்பாட்டுள், பாணாற்றுப் படை இரண்டுண்மையால், அவையிற்றை, இடைதெரிந்துணரும் பொருட்டுச் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை எனச் சிறுமை, பெருமை என்னும் அடைமொழிகளானே வேறுபடுத்து வழங்கினர் நம் சான்றோர். இனி இச் சிறுமை பெருமைகட்கு ஏது பாணர்களிற் சிறுபாணர், பெரும்பாணர் என்னும் வேற்றுமையுடையராதல் என்க. சிறுபாணாற்றுப்படையில் சிறுபாணரும் பெரும்பாணாற்றுப்படையில் பெரும்பாணரும் ஆற்றுப்படுத்தப் படுகின்றனர். சிறுபாணர் என்போர் சிறிய யாழையுடைய பாணர்; பெருபாணர் பேரியாழ் உடையராவார்; இதனை,

இன்குரற் சீறியாழ் இடவயிற் றழீஇ

எனச் சிறுபாணாற்றுப்படையினும்,

இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பி

எனப் பெரும்பாணாற்றுப்படையினும் வருதலாலுணரலாம்.

இனி, சிறுபாணாற்றுப்படை இருநூற்றறுபத் தொன்பது அடிகள் உடைத்தாதலும் பெரும்பாணாற்றுப்படை ஐந்நூறடிகள் உடைத்தாதலும் கண்டுமன்றே! இவ்வடிச் சிறுமை பெருமை ஏதுவாக இவை இங்ஙனம் வழங்கப்பட்டன எனக் கோடலும் பொருந்து மென்க. இப் பெரும்பாணாற்றுப் படையில், யாழின் இயல்பும், இளந்திரையன் செங்கோற் சிறப்பும், உமணர் இயல்பும், எயிற்றியர் இயல்பும், கானவர் தொழிலும், எயினக் குறும்பன் இயல்பும், மறக்குடி மகளர் மாண்பும், ஆயர் ஊரின் இயல்பும், ஆய்மகள் தொழிலும், ஆயர் செயலும், உழுவோர் செயலும், மருதநில மாண்பும், வஞைரிருக்கையும், அந்தணர் சேரியின் இயல்பும், இம் மாந்தர்களின் உணவியல்பும், நீர்ப் பெயர் றென்னும் துறைமுகப்பட்டினத்தின் தன்மையும், கலங்கரை விளக்கச் சிறப்பும், திருமாலின் பெருமையும், திருவெஃகாவின் இயல்பும், காஞ்சியின் மாண்பும், இளந்திரையனின் பெருமையும், அவன் தரும் பரிசிற் சிறப்பும். திருவேங்கடமலையின் கடவுட் பண்பும், பிறவும் கற்போர்க்குக் கண்கூடாகப் பொருள் தோன்றுமாறு அழகாக விரித்து ஓதப்பட்டுள்ளன.

 
மேலும் பெரும்பாணாற்றுப்படை »

பெரும்பாணாற்றுப்படை செப்டம்பர் 26,2012

அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப்பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதிகாய்சினந் திருகிய கடுந்திறல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar