Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
முல்லைப்பாட்டு- நூலாசிரியர் வரலாறு முல்லைப்பாட்டு- நூலாசிரியர் வரலாறு
முதல் பக்கம் » முல்லைப்பாட்டு
முல்லைப்பாட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2012
17:57

நனந் தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை
நீர் செல, நிமிர்ந்த மாஅல், போல,
பாடு இமிழ் பனிக் கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி  5

பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை,
அருங் கடி மூதூர் மருங்கில் போகி,
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு,
நாழி கொண்ட, நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது,  10

பெரு முது பெண்டிர், விரிச்சி நிற்ப  
சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறு துயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், கைய
கொடுங் கோற் கோவலர் பின் நின்று உய்த்தர,  15

இன்னே வருகுவர், தாயர் என்போள்
நன்னர் நல் மொழி கேட்டனம்; அதனால்,
நல்ல, நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
வருதல், தலைவர், வாய்வது; நீ நின்  20

பருவரல் எவ்வம் களை, மாயோய்! என,
காட்டவும் காட்டவும் காணாள், கலுழ் சிறந்து,
பூப் போல் உண் கண் புலம்பு முத்து உறைப்ப  
கான் யாறு தழீஇய அகல் நெடும் புறவில்,
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி,  25

வேட்டுப் புழை அருப்பம் மாட்டி, காட்ட
இடு முள் புரிசை ஏமுற வளைஇ,
படு நீர்ப் புணரியின் பரந்த பாடி  
உவலைக் கூரை ஒழுகிய தெருவில்,
கவலை முற்றம் காவல் நின்ற   30

தேம் படு கவுள சிறு கண் யானை
ஓங்கு நிலைக் கரும்பொடு, கதிர் மிடைந்து யாத்த,
வயல் விளை, இன் குளகு உண்ணாது, நுதல் துடைத்து,
அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென,
கவை முட் கருவியின், வடமொழி பயிற்றி,  35

கல்லா இளைஞர், கவளம் கைப்ப  
கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
முக் கோல் அசைநிலை கடுப்ப, நல் போர்
ஓடா வல் வில் தூணி நாற்றி
கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கை  40

பூந் தலைக் குந்தம் குத்தி, கிடுகு நிரைத்து,
வாங்கு வில் அரணம் அரணம் ஆக,  
வேறு பல் பெரும் படை நாப்பண், வேறு ஓர்,
நெடுங் காழ்க் கண்டம் கோலி, அகம் நேர்பு,  
குறுந்தொடி முன்கை, கூந்தல் அம் சிறு புறத்து,  45

இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரிவு வரிக் கச்சின் பூண்ட, மங்கையர்
நெய் உமிழ் சுரையர் நெடுந் திரிக் கொளீஇ,
கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட,  
நெடு நா ஒள் மணி நிழத்திய நடு நாள்,  50

அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர்
சிதர் வரல் அசைவளிக்கு அசைவந்தாங்கு,
துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப்
பெரு மூதாளர் ஏமம் சூழ  
பொழுது அளந்து அறியும், பொய்யா மாக்கள்,  55

தொழுது காண் கையர், தோன்ற வாழ்த்தி,
எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய்! நின்
குறு நீர்க் கன்னல் இனைத்து என்று இசைப்ப  
மத்திகை வளைஇய, மறிந்து வீங்கு செறிவு உடை,
மெய்ப்பை புக்க வெரு வரும் தோற்றத்து,  60

வலி புணர் யாக்கை, வன்கண் யவனர்
புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல்,
திரு மணி விளக்கம் காட்டி, திண் ஞாண்
எழினி வாங்கிய ஈர் அறைப் பள்ளியுள்
உடம்பின் உரைக்கும், உரையா நாவின்,  65

படம் புகு மிலேச்சர் உழையர் ஆக,
மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது,  
எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து,
பிடிக் கணம் மறந்த வேழம் வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக் கை துமிய,  70

தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி,
சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல் துமிபு
வைந் நுனைப் பகழி மூழ்கலின், செவி சாய்த்து,
உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்;
ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை  75

முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து  
பகைவர்ச் சுட்டிய படை கொள் நோன் விரல்,
நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி,
அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை  
இன் துயில் வதியுநன் காணாள். துயர் உழந்து,  80

நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு,
நீடு நினைந்து, தேற்றியும், ஓடு வளை திருத்தியும்,
மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்,
ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி, இழை நெகிழ்ந்து,
பாவை விளக்கில் பரூஉச் சுடர் அழல,  85

இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து,
முடங்கு இறைச் சொரிதரும் மாத் திரள் அருவி
இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள்
அஞ்செவி நிறைய ஆலின வென்று, பிறர்
வேண்டு புலம் கவர்ந்த, ஈண்டு பெருந் தானையொடு, 90

விசயம், வெல் கொடி உயரி, வலன் ஏர்பு,
வயிரும் வளையும் ஆர்ப்ப, அயிர
செறி இலைக் காயா அஞ்சனம் மலர,
முறி இணர்க் கொன்றை நன் பொன் கால,
கோடல் குவி முகை அங்கை அவிழ,  95

தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப,
கானம் நந்திய செந் நிலப் பெரு வழி,
வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்,
திரி மருப்பு இரலையொடு மட மான் உகள,
எதிர் செல் வெண் மழை பொழியும் திங்களில்,  100

முதிர் காய் வள்ளிஅம் காடு பிறக்கு ஒழிய,
துனை பரி துரக்கும் செலவினர்
வினை விளங்கு நெடுந் தேர் பூண்ட மாவே.  

உரை

1- நனந்தலை என்பது முதல் 23-முத்துறைப்ப என்னுந் துணையும் ஒரு தொடர்; இதன்கண், தன் மனைவியைப் பிரிந்து பகைவேந்தரோடு போர் செய்யப்போவான் ஒரு தலைமகன் கார் காலத் தொடக்கத்தில் வருவேன். அதுகாறும் நீ ஆற்றியிரு என்று அவளைத் தேற்றிச் சென்றானாக, கணவன் கூறியாங்கு அரிதின் ஆற்றியிருந்த தலைவி கார்ப்பருவந் தொடங்கி விட்டதாகவும், அவன் வாராமை கண்டு ஆற்றாமை மிக்கு வருந்துவாளுக்கு அவளுடைய செவிலித்தாயர், வாய்ப்புள் கேட்டு நின் தலைவர் இப்போதே வருவர். நங்காய்! நீ ஆற்றியிருத்தல் வேண்டும் எனத் தேற்றுதலும், தலைவிநிலையும் அவர் வாய்ப்புள் கேட்டலும் கார்ப்பருவத் தொடக்கமும் ஓர் ஆய்ச்சிறுமி ஆன்கன்றைத் தேற்றலும் பிறவும் கூறப்படும்.

கார்ப்பருவத்தின் வருகை

1-6 : நனந்தலை ................ மாலை

பொருள் : நனந்தலை உலகம் வளைஇ - அகன்ற இடத்தையுடைய உலகத்தை வளைத்து, நேமியொடு வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை - சக்கரத்தோடே வலம்புரியின் குறிகள் பொறிக்கப்பெற்ற திருமகளை அணைத்த கைகளையுடைய, நீர்செல நிமிர்ந்த மாஅல் போல - மாவலி வார்த்த நீர் தன் கையிலே சென்றதாக உயர்ந்த திருமாலைப் போல, பாடு இமிழ் பனிக்கடல் பருகி வலன் ஏர்பு கோடுகொண்டு - ஒலி முழங்குகின்ற குளிர்ச்சியை உடைய கடலைக் குடித்து வலமாக எழுந்து மலைகளை இருப்பிடமாகக் கொண்டு, எழுந்த கொடுஞ் செலவு எழிலி - பெய்யுங்காலத்தே உலகத்தை வளைத்தெழுந்த விரைந்த செலவினையுடைய முகில், பெரும் பெயல் பொழிந்த சிறுபுன் மாலை - பெரிய மழையைப் பெய்த சிறு பொழுதாகிய புல்லிய மாலைக் காலத்தே.

கருத்துரை : அகன்ற இடத்தையுடைய உலகத்தை வளைத்துச் சக்கரமும் சங்குமாகிய குறிகளையுடையனவும் திருமகளை அணைத்தனவுமாகிய வலிய கையினையுடையவனும், மாவலி வார்த்த நீர் தன் கையிலே சென்றவளவிலே விண்ணிடத்தே வளர்ந்தவனுமாகிய திருமால் போல, ஒலிமுழங்கும் கடலின்கண் நீரைக் குடித்து வலமாக எழுந்து மலைகளிடத்தே தங்கிப் பின்னர் உலகத்தை வளைத்தெழுந்த கடிய செலவினையுடைய முகில் பெரிய மழையைப் பெய்த சிறுபொழுதாகிய புல்லிய மாலைக்காலத்தே, என்பதாம்.

அகலவுரை : இப்பாட்டின் தொடக்கத்தே உலகம் என்னும் மங்கலச் சொல் அடையடுத்து வந்தமை காண்க. நனந்தலை - அகன்ற இடம்; நனவே களனும் அகலமுஞ் செய்யும் (உரி-78) என்பது தொல்காப்பியம். வளைஇ - வளைத்து. நேமி - சக்கரம்; வடசொல். வலம்புரி - வலப்பக்கமாகச் சுற்றுகள் அமைந்த சங்கு. பொறித்த : பொறித்தாற் போன்ற குறிகளையுடைய சங்குசக்கர ரேகைகள் அமைந்த என்றவாறு. இச் சங்குசக்கரக் குறிகள் உத்தம விலக்கணங்கள் என்பர் இறைவனாகிய திருமாலின் கைகளிடத்தும் கால்களிடத்தும் இக்குறிகள் உள என்பர். இதனை,

மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கு நிலாவிய
கைத்தலங்கள் வந்து காணீரே கனங்குழையீர் வந்து காணீரே

எனவரும் பெரியாழ்வார் திருமொழியானும், (1.ப.2.தி. சீதக். 12)

சங்கு சக்கரக் குறியுள தடக்கையிற் றாளில்
எங்கு மித்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை
செங்கண் விற்கரத் திராமனத் திருநெடு மாலே
இங்கு தித்தனன் ஈண்டற நிறுத்துதற் கின்னும் (கம்ப-நட்புக்-79)

எனவரும் கம்பராமாயணத்தானும் அறிக. இவை உத்தம விலக்கணங்கள் என்பதனை, வலம்புரி பொறித்த வண்கை மதவலி (204) எனச் சீவகசிந்தாமணியினும், சங்கலேகையும் சக்கர லேகையும் அங்கையுள்ளன வையற்கு (சூளா-குமார.45) எனச் சூளாமணியினும் பிறரும் கூறுமாற்றான் அறிக. நேமியோடு வலம்புரி தாங்கு தடக்கை, மா பொறித்த மால் எனச் சொற்களைப் பிரித்துக் கூட்டி, சக்கரத்தோடே வலம்புரியைத் தாங்கும் பெரிய கைகளையுடைய மால், என்றும், திருமார்பிடத்தே திருமகளை வைத்த மால் என்றும் உரை கூறுவர் நச்சினார்க்கினியர். தடக்கை என்பதன்கண் தட என்னும் உரிச்சொல் பெருமைப்பண்பு குறித்து நின்றது. தடவும் கயவும் நளியும் பெருமை (உரி.22) என்பர் தொல்காப்பியர்.

நீர்செல நிமிர்ந்த மாஅல் என்றது, திருமால் மாவலி என்னும் அசுரன்பால் குறளுருவங்கொண்டு சென்று மூவடி மண்ணிரந்தானாக, அம் மாவலி அங்ஙனமே மூவடிமண் நீர்வார்த்தளித்தபொழுது, அந்நீர் தன் கையிற் சென்ற அப்பொழுதே பேருருக் கொண்டெழுந்து இவ்வுலகத்தே ஓரடியானே அளந்து கொண்டனன் என்னும் கதைகுறித்து நின்றது.

மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி  (சிலப்.17-35)

என்றும்,

திரண்டமரர் தொழுதேத்துந் திருமால் நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே  (þ-34)

என்றும், இளங்கோவடிகளாருங் கூறுதல் காண்க. உலகத்தை ஓரடியாக அளத்தற்குரிய பேருருக் கொண்டானாகலின் நிமிர்ந்த மால் என்றார். வளைஇ என்னும் எச்சத்தைச் செய வென் எச்சப் பொருளாகத் திரித்துக்கொண்டு உலகத்தை வளைத்து அளத்தற் பொருட்டு நிமிர்ந்த திருமால் போல எனினுமாம். ஈண்டுப் பேருருக்கொண்ட திருமாலின் திருமேனி நிறத்தானும் பருமையானும் உலகினை வளைத்தற் றொழிலானும் முகிற்கு உவமை என்க. முல்லைத்திணைப் பொருள்பற்றி வந்த இப்பாட்டின் பொருளுக்கு ஏற்ப முல்லை நிலத்திற்குரிய தெய்வமாகிய திருமாலும், அத்திணைக்குரிய பெரும்பொழுதாகிய கார்ப்பருவமும், சிறு பொழுதாகிய மாலைப் பொழுதும் இவ்வடிகளிலே கூறப்பட்டமை உணர்க. அந்நிலத்திற்குரிய தெய்வம் திருமாலாதலை, மாயோன் மேய காடுறை யுலகமும் (அகத்.5) என்னும் தொல்காப்பிய நூற்பாவானும் அகத்திணைக்குரிய பெரும்பொழுது சிறுபொழுகள் காரும் மாலையும் ஆதலை, காரும் மாலையும் முல்லை (தொல்-அகத்-6) என்னும் நூற்பாவானும், அறிக.

பிரிவாற்றாமைத் துன்பம் மாலைப்பொழுதிலே பெரிதும் வருத்துதலின் புன்மாலை என்றார். சிறு மாலை என்றது, சிறுபொழுதாகிய மாலை என்றவாறு. மாலைப் பொழுதின்கண் பிரிவாற்றாமை மிகும் என்பதனை,

பனியரும்பிப் பைதல்கொண் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்  (திருக்குறள் - 1223)

என்றும்,

காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்  (குறள் - 1227)

என்றும், வரும் திருக்குறள்களானும் அறிக. பாடிமிழ் பனிக்கடல் ஒலி முழங்கும் குளிர்ந்த கடல். ஏர்பு - எழுந்து. கோடு -மலை. எழிலி-முகில். கொடுஞ்செலவு. விரைந்த ஓட்டம். பெரும் பெயல் - பெரிய மழை.

பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டல்

7-11 : அருங்கடி ........................ விரிச்சி நிற்ப

பொருள் : அருங்கடி மூதூர் மருங்கிற் போகி - அரிய காவலையுடைய பழைய ஊர்ப்பக்கத்தே போய், யாழிசை இன வண்டு ஆர்ப்ப நெல்லொடு நாழி கொண்ட நறுவீ முல்லை அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது - யாழினது ஓசையை உடைய இனமான வண்டுகள் ஆரவாரிக்கும்படி நெல்லினோடே நாழியினிடத்தே கொண்ட நறிய பூக்களையுடைய முல்லையின் அரும்புகளில் அப்பொழுது மலர்வனவாகிய புதிய பூக்களைச் சிதறித் தெய்வத்தைக் கையாலே தொழுது, பெருமுதுபெண்டிர் விரிச்சி நிற்ப - பெரிதும் முதிர்ந்த பெண்டிர் நற்சொற் கேட்டு நிற்ப.

கருத்துரை : அரிய காவலமைந்ததும், பழையதுமாகிய ஊரினது பக்கத்தே சென்று, ஆங்கே யாழ் போன்ற இன்னிசையையுடைய வண்டுகள் ஆராவாரிக்கும்படி நெல்லோடே நாழியின்கண் உள்ள முல்லை மலரைத் தூவித் தெய்வத்தைத் தொழுது யாண்டு பெரிதும் முதிர்ந்த பெண்டிர் நற்சொற் கேட்டு நிற்ப, என்பதாம்.

அகலவுரை : அரசன் வாழுந் தலைநகர் என்பது தோன்ற அருங்கடி மூதூர் என்றார். அருங்கடி - பகைவர் புகுதற்கரிய காவல். மூதூர் - பழையதாகிய ஊர். மருங்கு - பக்கம். ஊர்ப்புறத்தே சென்று என்க. இவ்வாறு சென்று நற்சொற் கேட்டல் பண்டைக்கால வழக்கம் என்க.

விரிச்சி - நற்சொல். அஃதாவது யாதானுமொரு காரிய நிகழ்ச்சியை இது நன்றாய் முடியுமோ? தீதாய் முடியுமோ? என்றையுற்றார், மக்கள் அருகி வழங்கும் ஊர்ப்புறத்தே சென்று தெய்வத்தைத் தொழுது ஆண்டு அயலிலுள்ளோர் அப்பொழுது பேசுகின்ற சொல்லைக் கூர்ந்து கேட்பர்; அங்ஙனம் கேட்புழி, ஆண்டு அயலார் மொழி நன்மொழியாகப் பிறக்குமேல் தம் காரியம் நன்மையாய் முடியும் என்றும், தீய மொழியாகப் பிறக்குமேல் தீமையாய் முடியும் என்றும் துணிவர். ஈண்டுக் கார்ப்பருவம் வந்தும் காதலன் வாராமைகண்டு பெரிதும் ஆற்றாமையுற்ற தலைமகள் துன்பங்கண்டு பெருமுது பெண்டிர், அந்தோ! இவள் பெரிதும் ஆற்றாளாயினள்! தலைமகள் வருகை அண்மையில் நிகழாதேல் இவள் இறந்துபடுதல் கூடும் என வருந்தித் தலைவன் விரைவில் வருவான்கொல்? வாரான்கொல்? என ஐயுற்று இரண்டினொன்று துணிதற்கு இவ்வாறு ஊர்ப்புறத்தே சென்று விரிச்சி கேட்டனர் என்க. இங்ஙனம் விரிச்சி கேட்டு நிற்கும் வழக்கத்தை,

படையியங் கரவம் பாக்கத்து விரிச்சி  (புறத்.3)

எனத் தொல்காப்பியனார் ஓதலானும் இப்பாட்டினானும் அறியலாம். இங்ஙனம் விரிச்சி கேட்கும் வழக்கம் படைஞர்க்கே உரியதென ஆசிரியர் நச்சினார்க்கினியர் பிறழ உணர்ந்தவராய் 18 ஆம் அடிக்கண் வருகின்ற நல்லோர் என்னும் சொல்லை 7 ஆம் அடிக்கண் வருகின்ற போகி என்னும் எச்சத்தின் முன்னாக இணைத்துப் படைத்தலைவர் ஏவலால் நற்சொற் கோடற் குரியார் போய் என வேண்டாதே பொருள் விரித்தார். மேலும், ஒரு வேந்தன் வேந்தனொடு இகல் கருதினாற் போர் செய்ய வேண்டுதலின், அவனாட்டந்தணர் முதலியோரைத் தன்னாட்டின் கண்ணே அழைத்தற்கும், அதனை அறியாத ஆவைக் கொண்டு போந்து தான் காத்தற்கும் ஆகத் தன் படைத்தலைவரை நோக்கி அரசன் நிரையடித்தற் கேவிய வழி, அவர் அவனூரினின்றும் போய் ஒரு பாக்கத்து விட்டிருந்து அரசனுக்கு மேல்வரும் ஆக்கத்தை யறிதற்கு விரிச்சியோர்த்தல் வேண்டுமென்று புறத்திணையியலுட் கூறினமையான், ஈண்டும் அவ்வாறே கூறினார்; அது வேந்துவிடு முனைஞர் வேற்றுபுலக் களவி, னாதந் தோம்பன் மேவற் றாகும், படையியங் கரவம் பாக்கத்து விரிச்சி, என்னும் சூத்திரங்களானும்,

திரைகவுள் வெள்வாய்த் திரிந்துவீழ் தாடி
நரைமுதியோ னின்றுரைத்த நற்சொல் - நிரையன்றி
எல்லைநீர் வையம் இறையோர்க் களிக்குமால்
வல்லையே சென்மின் வழி

என்னும் உதாரணத்தானும் உணர்க. இவர் இது கேட்டு நிரைகொண்டால் அரசன் வஞ்சி சூடி மண்ணசையால் மேற்செல்வன் என்பது, ஆண்டு எஞ்சா மண்ணசை என்னுஞ் சூத்திரத்திற் கூறியவாறே ஈண்டுக் கூறினார். அது மேல் முனைகவர்ந்து என்பதனான் உணர்க என விளக்கமும் வரைந்துள்ளார். இவ்விளக்கமும், அவர் விரிச்சி கேட்டல் படைஞர்க்கே உரியதென்னும் கொள்கை யுடையராதலை நமக்கு விளக்குதலறிக. முல்லை மலர் தூவுதல் வண்டார்த்தற்கு ஏதுவென்க. என்னை? மாலைப் பொழுதில் இதழ் விரிகின்ற முல்லைப்பூவைத் தூவுங்கால் அவற்றின் தேனை விரும்பி வண்டுகள் ஆரவாரித்து வந்து வீழ்ந்தன என்பது கருத்தாகலின். யாழ் இசையைப்போன்ற இசையினையுடைய வண்டென்க. பண்டைநாளில் தெய்வந் தொழுவோர் நெல்லும் மலருந் தூஉய்த் தொழும் வழக்கத்தை இதனானும் நெல்லும் மலரும் தூஉய்க்கை தொழுது (நெடுநல் 43) என்றும், அரும்பவிழ் முல்லை நிகர்மலர் நெல்லொடு தூஉய் (சிலப். 9: 1-2) என்றும் நென்னீ ரெறிந்து விரிச்சி யோர்க்குஞ் செம்முது பெண்டின் (புறம்.280.6-7) என்றும், பிற சான்றோர் கூறுமாற்றானும் உணர்க. விரிச்சி நிற்றல் - நற்சொல்லைச் செவியானோர்ந்து நிற்றல். இனி, அம் முதுமகளிர் கேட்ட நற்சொல் இது என்று கூறுகின்றார்.

நல்ல வாய்ப்புள்

12-17 : சிறுதாம்பு ................. கேட்டனம்

பொருள் : சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் - சிறிய தாம்பாலே கட்டப்பட்ட இளங்கன்றினுடைய, உறுதுயர் அலமரல் நோக்கி - பாலுண்ணாமையாலுற்ற துயராலே தாய் வருமென்று சுழல்கின்ற தன்மையைப் பார்த்து, ஆய்மகள் நடுங்குசுவல் அசைத்த கையள் - இடையர்குடியிற் பிறந்த மகள் குளிரால் நடுங்கும் தன் தோளின்மேலே கட்டிய கையை உடையளாய் நின்று, கைய கொடுங்கோல் கோவலர் பின்னின்று உயத்தர இன்னே வருகுவர் தாயர் என்போள் - கையிடத்தனவாகிய கொடிய கோலையுடைய இடையர் பின்னே நின்று செலுத்துதலானே இப்பொழுதே வந்துவிடுவர் நும்முடைய தாய்மார் என்கின்றவளுடைய, நன்னர் நன்மொழி கேட்டனம் - மிகவும் நன்றாகிய மொழியை யாங்கள் கேட்டேம்.

கருத்துரை : சிறிய தாம்பாலே கட்டப்பட்ட பச்சிளங் கன்று பாலுண்ணப்பெறாது பசியாலே வருந்திச் சுழலுவதைப் பார்த்துக் குளிராலே நடுங்கும் தன் தோள்களிலே கட்டிய கையை உடையளாய் நின்ற இடைமகள் ஒருத்தி நிரம்ப மேய்ந்து நுந் தாய்மார் இப்பொழுதே வந்துவிடுவர் வருந்தன்மின் என்போளுடைய மிகவும் நன்றாகிய மொழியை யாங்கள் கேட்டேம், என்பதாம்.

அகலவுரை : கன்றினைக் காலிலே கட்டுதல் வழக்கம் ஆதலின் சிறுதாம்பு தொடுத்த என்றார். சிறுதாம்பு தொடுத்த என்றதற்குச் சிறிய தாம்புகளிலே நிரலாகக் கட்டப்பட்ட (கன்றுகள்) என்றுமாம். பின்னர்த் தாயர் எனும் பன்மைக் கேற்பவே கன்றுகளும் பலவென்க. ஆயர்கள் இல்லத்தே ஆன்கன்றுகள் பல தாம்பிற் பிணித்தலுண்மையை,

தீம்பால் கறந்த கலமாற்றிக் கன்றெல்லாம்
தாம்பிற் பிணித்து மனை நிறீஇ

எனவரும் கலியானும் உணர்க.

பசலைக்கன்று - இளங்கன்று. பசுமை என்னும் பண்படியாகப் பிறந்த சொல்லென்று கொள்க. பசலை - வருத்தம் என்பர் நச்சினார்க்கினியர். பறித்து மென்றுவா யசைப்பன, பசலையான் கன்று (திருவிளை - திருநகரம். 33) என்புழி இளங்கன்றென்றன்றி வருந்துங் கன்றெனப் பொருள்படாமை யறிக. உறுதுயர் - பாலுண்ணாமை யானே உற்ற துன்பம். அலமரல் - சுழற்சி - அலமரல் தெருமரல் ஆயிரண்டுஞ் சுழற்சி (உரி - 13) என்பது தொல்காப்பியம். ஆய்மகள் - இடைச்சாதியிற் பிறந்த சிறுமி. பெருமழை பொழிந்த மாலைக் காலமாகலான் குளிரால் நடுங்கிய தோளையுடைய ஆய்மகள் என்றல் மிகவும் இனிதாதலுணர்க. மாலைக்காலத்தே தாயின் வருகையை நோக்கி ஆன்கன்றுகள் அலமருதலும் இயற்கையாதல் அறிக. கைய- கையின்கண் உள்ளனவாகிய கைய: பலவறிசொல் ஆன்களை அடித்து அச்சுறுத்துங் கோலாதலின் கொடுங்கோல் என்றார். கொடுமை செய்யும் கோல் என்க. ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர் (நெடுநல்-3) என்றும், கொடுங்கோற் கல்லாக் கோவலர் (அகம்.74) என்றும், பிறருங் கூறுதல் காண்க. உய்த்தல் - செலுத்துதல். இன்னே - இப்பொழுதே. தாயர் என்று உயர்திணைப் பலர்பால் விகுதியேற்ற சொல்லிற்கேற்ப வருகுவர் எனப் பலர்பால் வினைமுற்றால் கூறப்பட்டது.

உவப்பினும் உயர்வினும் சிறப்பினும் செறலினும்
இழிப்பினும் பால்திணை இழுக்கினும் இயல்பே  (நன். 379)

என்னும் திணைபால் வழுவமைதிவிதியால் அஃறிணை உயர்திணையாயிற்று.

எம்மனை மாரினி எங்ஙனம் வாழ்குவிர்
நும்மனை மார்களை நோவ வதுக்கி
வெம்முனை வேட்டுவ ருய்ந்தன ரோவெனத்
தம்மனைக் கன்றொடு தாம்புலம் புற்றார்

எனவரும் சிந்தாமணிச் செய்யுளை இவ்வடிகளோடே ஒப்புக்காண்க. என்போள் - என்று கூறுகின்றவளுடைய. நன்னர் நன்மொழி - மிகவும் நன்றாகிய மொழி என்க. மீமிசை ஞாயிறு என்றாற்போன்று சிறப்பானே ஒருபொருளின்மேல் இரண்டடுக்கி வந்தன.

பெருமுதுபெண்டிரின் தேற்றமொழிகள்

17-23 : அதனால் ................. துறைப்பக்

பொருள் : அதனால் நல்ல நல்லோர் வாய்ப்புள் - அதனானும் நின்தலைவன் பகைவர்மேற் செல்லுங்கால் நல்லோர் கேட்ட வாய்ப்புள்ளும் நல்லனவேயாதலானும், தெவ்வர் முனை கவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து வருதல் தலைவர் வாய்வது - பகைவர் மண்ணைக் கொண்டு பின்னர் அவரிடத்தே வாங்கிக் கொண்ட திறைப்பொருளையுடையராய் இவ்வாறு தாம் மேற்கொண்ட வினையை முடித்து இப்பொழுதே வருதல் நந்தலைவர்க்குப் பொருந்துதல் உறுதியேயாம், நீ நின் பருவரல் எவ்வம் களைமாயோய் என இவ்வாறாகலான் நீ உன்னுடைய மனத்தடு மாற்றத்தானே உளதான வருத்தத்தை அகற்றக்கடவாய் மாமை நிறத்தை யுடையோளே என்று, காட்டவுங் காட்டவும் காணாள் - ஆற்றியிருத்தற்குரிய ஏதுக்கள் பலவற்றைப் பன்முறையும் எடுத்துக்காட்டா நிற்பவும் காணமாட்டாதவளாய், கலுழ் சிறந்து பூப்போல உண்கண் புலம்பு முத்துறைப்ப - கலங்கிப் பூப்போலும் மையுண்கண்கள் தாரையாகச் சொரியாது தனித்து வீழ்கின்ற முத்துப் போலும் துளியைத் துளிப்ப,

கருத்துரை : அதனானும், தலைவன் போர்மேற் சென்றகாலத்தே நல்லோர் கேட்ட வாய்ப்புள்ளும் நல்லன ஆதலானும், தலைவர் பகைவரை வென்று அவர்பாற் பெற்ற திறைப்பொருளோடே இப்பொழுதே வந்துவிடுதல் உறுதி ஆதலால் மாயோய் நீ உன் மனத்தடுமாற்றத்தாலுற்ற வருத்தத்தைப் போக்கி ஆற்றியிருந்திடுக! எனப் பன்முறை ஏதுக்கள் காட்டித் தேற்றா நிற்பவும் காணமாட்டாதவளாய்க் கலங்கிப் பூப்போலுங் கண்கள் தனித்து விழுகின்ற முத்துப்போலுந் துளியைத் துளியா நிற்ப; என்பதாம்.

அகலவுரை : பெருமுதுபெண்டிர் யாங்கள் விரிச்சி நிற்ப இன்னே வருகுவர் தாயர் என்போள் நன்மொழி கேட்டனம் அதனானும், நல்லோர் வாய்ப்புள் நல்லன ஆதலானும் தலைவர் வினைமுடித்து வருதல் வாய்வது நீ எவ்வம் களையெனக் காட்டவும் காணாள், எனப் பொருளியைபு காண்க.

நல்லோர் வாய்ப்புள் நல்ல என மாறுக ; அதனானும் வாய்ப்புள்ளும் நல்ல ஆதலானும் என எண்ணும்மையும் ஆக்கச் சொல்லும் விரித்தோதுக. நல்லோர் - அரசன் போர்க்கெழுங்கால் வாய்ப்புள் ஓர்ந்து கூறும் நிமித்திகர். இதனை,

திரைகவுள் வெள்வாய்த் திரிந்துவீழ் தாடி
நரைமுதியோர் நின்றுரைத்த நற்சொல் - நிரையன்றி
எல்லைநீர் வையம் இறையோர்க் களிக்குமால்
வல்லைநீர் சென்மின் வழி  (பெரும்பொருள் - புறத்திரட்டு - 756)

என்பதனானும் அறிக. இங்ஙனம் வாய்ப்புட் கேட்டல் வெட்சித்திணைக்கண்ணே ஒரு துறையாக ஆசிரியர் தொல்காப்பியர் அமைத்தனர் ஆயினும், போர் மேற் செல்லுங்கால் வஞ்சித்திணை முதலியவற்றிற்கும் இத்துறை ஏற்புடைத்தாதலும் அறிக. வாய்ப்புள், விரிச்சி, நற்சொல் என்பன ஒருபொருட் கிளவிகள், தலைவன் பகைவரை வென்று மண்கோடல், அல்லது திறைகோடலாகிய வினைமுடித்தற்கு நல்லோர் வாய்ப்புள் ஏதுவாகவும், இன்னே தலைவர் வருவதற்கு இன்னே வருகுவர் தாயர் என்ற இடைமகள் நன்மொழி ஏதுவாகவும், எதிர்நிரனிறையாகக் கொள்க. கலுழ் - கலக்கம். உண்கண் - மையுண்ட கண். புலம்புமுத்து - தனித்தனி முத்துப்போன்ற கண்ணீர்த்துளி.

இனி, இவ்வாறு தலைவியது வருத்தங்கண்டு முதுபெண்டிர் விரிச்சி கேட்டு வந்து தலைவர் வருவாராதல் வாய்வது, நின் எவ்வங்களை என்று பல்காலும் ஆற்றுவிக்கவும், ஆற்றாளாய்த் துயருழந்து புலம்பு முத்துறைப்பக் கிடந்தாள் எனப் பொருள் கூறுதல் நெய்தற்குரிய இரங்கற் பொருட்டன்றி, முல்லைக்குரிய இருத்தற் பொருட்டாகாதென்பர், ஆசிரியர் நச்சினார்க்கினியர். இக்கருத்தானே சொற்கிடந்தவாறு பொருள் கூறாது தம் மனம்போனவாறெல்லாம் சொற்சிதைத்துப் பொருள் கூறுவாருமாயினர். இனி, இருத்தல் என்புழித் தலைவன் பிரிவாற்றாமைத்துயர் தன்னைப் பெரிதும் வருத்தாநிற்பவும் தலைவன் கட்டளையை மீறுதல் கூடாதென அப்பெருந்துயர் நிலையினையும் பொறுத்திருத்தல் என்பதே கருத்தாம். ஈண்டுத் தலைவன் வருவேன் என்று கூறிப்போன பருவங் கடந்தும் வாராமை கண்டு அதுகாறும் ஆற்றியிருந்தவள், ஆற்றாமையான் மேலும் வருந்துதலும், வருந்திய வழியும் மீண்டும் தலைவன் கட்டளையை நினைந்து ஒருவாறு தேறுதலுமே இயற்கையாம். ஆதலின், மனவியல் புணர்ந்த ஆசிரியர் நப்பூதனார் ஈண்டுத் தலைவி, தலைவன் வருகை நிலையிலே முது பெண்டிர் தேற்றினர் என்றும், அவள் கண்கள் முத்துதிர்த்தன என்றும், அங்ஙனம் துன்பம் மிக்குழியும் அவர் வருந்துணையும் நாம் ஆற்றுதலே செயற்பாலதென்று நீடு நினைந்து தேற்றியும், திருத்தியும், மனத்தை வேறு பொருளிற் றிருப்பி இன்பலிமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோள் என்றும், ஆற்றியிருத்தற்பொருளாகிய முல்லைப் பொருளையே நுண்ணிதிற் கூறியிருப்பவும், நச்சினார்க்கினியர் இங்ஙனம் கூறலாகாதென்பது பொருந்தாமை யுணர்க.

மேலும்,

நந்நோ யறியா அறனி லாளர்
இந்நிலை களைய வருகுவர் கொல்லென
நோனேன் றோழி என்றனிமை யானே  (அகம் - 294)

எனவரும் மணிமிடை பவளத்து முல்லையுள் பொறுத்தற் கரிதாகின்றது என் தனிமை எனத் தலைவி கூறுதல் காண்க. இங்ஙனம் கூறியவாற்றால் இது முல்லையாகாதொழியாமையும் உணர்க. இனி இத்தொடர்ப் பொருளை, பெருமுதுபெண்டிர், எழிலிபொழிந்த மாலைக் காலத்தே ஊர் மருங்கிற் போகித் தூஉய் யாங்கள் விரிச்சி நிற்ப நன்மொழி கேட்டனம் அதனானும், நல்ல நல்லோர் வாய்ப்புள் அதனானும், தலைவர் வருவது வாய்வது நீ நின் எவ்வம் களை மாயோய் எனக் காட்டவும் காணாள் கலுழ்சிறந்து கண் முத்துறைப்ப என இயைபு காண்க. முத்துறைப்ப என்பது 88 ஆம் அடிக்கண் கிடந்தோள் என்பதனைக் கொண்டு முடியும். இங்ஙனமாகத் தலைவியின் தன்மையைக் காட்டிய புலவர்பெருமான் இதனை இத்துணையின் விட்டு, இனி வினைமேற் சென்ற தலைவன் நிலையினை விரிக்கப் புகுகின்றார். புகுகின்றவர், இடைப்பிறவரலாக ஓதுவோருள்ளம் மேன்மேலும் ஊக்கமுடையத்தாம் பொருட்டுத் தலைவன் நிலையினை விரித்தோதி வதியுநற் காணாள் எனத் தலைவிக்கே இத்துணைப் பொருளையும் அடையாகப் புணர்த்து மீண்டும் ஈண்டு இடையறுந்து நின்ற செய்தியைத் தொடர்ந்து கூறிச் செல்லுதல் மிகவும் இன்பந் தருகின்றது. இனி 24-கான்யாறு என்பது தொடங்கி, 80 - வதியுநன் என்னுந் துணையும் ஒருதொடர். இதன்கண் தலைவன் பாசறை யிருக்கை பாரித்துக் கூறப்படும்.

பாசறை அமைப்பு

24-28 : கான்யாறு .............. பாடி

பொருள் : கான் யாறு தழுவிய அகல் நெடும் புறவில் - காட்டாறு சூழ்ந்த அகன்ற நெடிய காட்டிடத்தே, சேண் நாறு பிடவமொடு பைம்புதல் எருக்கி - சேய்மைக் கண்ணுஞ் சென்று மணக்கின்ற பிடவத்தோடே ஏனைப் பசிய தூறுகளையும் வெட்டி, வேட்டுப் புழை அருப்பம் மாட்டி - பகைப்புலத்திற்குக் காவலமாக விருக்கும் வேட்டுவச் சாதியினுடைய சிறுவாயில்களையுடைய அரண்களை அழித்து, காட்ட இடுமுள் புரிசை ஏமுற வளைஇ - காட்டின் கண்ணவாகிய முள்ளாலிடும் இடுமுள் வேலியாகிய மதிலைக் காவலுறும்படி வளைத்து அமைத்த, படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி - உண்டாகின்ற நீரானிறைந்த கடல் போன்று அகன்ற பாசறையிடத்தே,

கருத்துரை : காட்டாறு சூழ்ந்த அகன்ற நெடிய காட்டிடத்தே சேய்மைக்கண்ணும் மணக்கின்ற பிடவத்தோடே ஏனைப் பசிய தூறுகளையும் வெட்டி ஆண்டுள்ள பகைப்புலத்துக் காவலரான வேட்டுவரின் அரண்களையும் அழித்து இடுமுள்வேலியாகிய மதிலினை அமைத்து அதனகத்தே கடல் போன்ற பரப்புடையதாக அமைத்த பாசறையின் கண்ணே என்பதாம்.

அகலவுரை : கான் யாறு - காட்டாறு. அகன்நெடும் புறவு - அகன்ற நெடிய காடு. இக் காடு பகையரசன் அரண்மனைக்குரிய காட்டரண் என்க. பண்டைநாள் அரசர் அரண்மனைகட்கு நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் என நான்கு வகை அரண்கள் அமைத்தல் வழக்கம். அவற்றுள் இறுதியாகிய காட்டரணிடத்தே வஞ்சிப்போர் செய்யப் புக்க அரசர் பாசறை அமைத்துக் கொள்வர் என்க.

மணிநீரும் மண்ணு மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்  (குறள் . 742)

என்னுந் திருக்குறளானும் இவ்வரண்கள் உண்மை தெளிக. ஈண்டுக் கூறப்படும் பாசறையை வேனிற் பாசறை என்ப. இவ் வேனிற் பாசறையே யன்றிக் கூதிர்ப்பாசறையும் உண்டு; அது நெடுநல் வாடையிற் கூறப்படும் பாசறையாகும். இதனை,

கூதிர் வேனில் என்றிரு பாசறைக்
காதலி னொன்றிக் கண்ணிய மரபினும்  (தொல்-புறத்.21)

எனவரும் தொல்காப்பிய நூற்பாவான் அறிக. தண்மைக்கும் வெம்மைக்கும் தலைமை பெற்ற காலத்தே போகத்திற் பற்றற்று வேற்றுப் புலத்திற் போந்திருத்தலால், இதனை வென்றியென வாகைத்திணையின்பாற் படுத்தோதுப. இதனாற் பண்டைக்காலத்தே அரசர்கள் போர் செய்தற்குக் கூதிர்ப்பருவமும் வேனிற் பருவமுமே ஏற்றனவெனக் கொண்டு அப்பருவங்களிலே போர்மேற் சேறலும், எஞ்சிய பருவங்களில் போரொழிந் திருத்தலுமாகிய வழக்கமுடையர் என்பதறிக.

ஈண்டுக் கூறப்படும் காடு அரண் ஆதலால் அக்காட்டினூடே காவற் பொருட்டு வேடர்கள் படையை அமைத்திருத்தலும் அவ்வேடர்கள் அக்காட்டினூடே சிறு சிறு அரண்களை அமைத்துக்கொண்டு காவல் செய்வர் என்பதும், போர்மேற் சென்ற மன்னர்கள், முன்னர் அவ்வேட்டுவரை வென்று, அவர் அரண்களை அழித்து அக்காட்டிலே தம் பாசறையை அமைப்பர் என்பதும் வேட்டுப்புழை அருப்பம் மாட்டி, என்பதனான் அறிக. அருப்பம் - அரண். புழை - சிறுவாயில்.

பாசறையைச் சூழ முள்ளாலே வேலி சமைப்பர் என்பதும் அறிக. ஒரு முடிவேந்தன் படைமுழுதும் அடங்க வேண்டுதலின் கடல் போன்ற பரப்புடைய பாசறை என்றார். புரிசை - மதில். ஈண்டு வேலி. ஏம் - காவல்; ஏமம் என்பது கடை குறைந்து ஏம் என நின்றது. வளைஇ -வளைத்து. நீர்படு புணரி என்பது படுநீர்ப்புணரி என முன்பின் மாறி நின்றது. புணரி - கடல். பாடி - பாசறை.

பாசறையின் உள்ளமைப்பு - யானைப்பாகரின் செயல்

29-36 : உவலைக்கூரை ..................... கவளம் கைப்ப

பொருள் : உவலைக் கூரை ஒழுகிய தெருவில் - தழையாலே வேயப்பட்ட கூரை ஒழுங்குபட்ட தெருவிடத்தே, கவலைமுற்றம் காவல் நின்ற தேம்படு கவுள சிறுகண் யானை -நாற்சந்தியான முற்றத்தே காவலாக நின்ற மதம் பாய்கின்ற கதுப்பினையுடையவாகிய சிறிய கண்ணையுடைய யானை, ஓங்குநிலைக் கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த வயல்விளை இன் குளகு உண்ணாது - வளர்கின்ற தன்மையையுடைய கரும்புகளோடே வயலிலே விளைந்த நெற்கதிர்களை நெருங்கப் பொதிந்து கட்டிய சாவியையும், இனிய அதிமதுரத் தழையையுந் தின்னாமல், நுதல் துடைத்து அயில் நுனை மருப்பில் தம் கை இடைக் கொண்டென - அவற்றாலே தம் நெற்றியைத் துடைத்துக் கூரிய முனைகளையுடைய கொம்பினிடத்தே ஏறட்ட தம் கையிடத்தே கொண்டு நின்றனவாக, கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றி - கவைத்த முள்ளையுடைய பரிக்கோலாலே வடமொழிகளைப் பலகாற் சொல்லி, கல்லா இளைஞர் கவளம் கைப்ப - அவ்வியானைப் பேச்சன்றிப் பிற கற்றிலாத இளைஞர் கவளத்தைத் தின்னும்படி குத்த,

கருத்துரை : தழை வேய்ந்த கூரை ஒழுங்குபட்ட தெருவின்கண் நாற்சந்தியான முற்றத்தே காவலாக நின்ற மதம் பாய்கின்ற கதுப்பினையும் சிறிய கண்ணையுமுடைய யானை வளர்ந்த கரும்போடே வயலின்கண் விளைந்த கதிர்களை நெருங்கப் பொதிந்த சாவியையும் அதிமதுரத் தழையையும் தின்னாமல் அவற்றால் தம் நெற்றியைத் துடைத்துக் கூரிய நுனையையுடைய தம் கொம்பிலே ஏறட்ட தம் கைகளிடத்தே கொண்டு நின்றனவாக, கவைத்த முள்ளையுடைய பரிக் கோலாலே கல்லாத இளைஞர்கள் யானைப்பேச்சான வடமொழிகளைப் பலகாலும் சொல்லிக் கவளத்தைத் தின்னும்படி குத்தா நிற்ப; என்பதாம்.

அகலவுரை : உவலை - தழை. உவலைக் கண்ணி (311) என வரும் மதுரைக் காஞ்சியினும், அஃதப் பொருட்டாதலறிக. ஒழுகிய - ஒழுங்குபட அமைந்த. பாசறையின்கட் குடில்களைத் தழையால் வேய்ந்து கொள்ளும் வழக்க முண்மையுணர்க. கவலை - நாற்சந்தி; நான்கு தெருக்கள் கூடுமிடம். இக்கவலையிடத்தே காவலாக மதயானைகள் நிறுத்தப்பட்டன என்க. தேம்படு கவுள சிறுகண்யானை என்றது யானையின் உடல் வளங்காட்டும் குறிப்பேதுவாதல் அறிக.

இனி,

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை  (குறள் - 768)

எனப் பொருணூல் ஓதுமாகலின் இவ் வேந்தனின் வெல்படை நல்குர வறியாச் செல்வச் செழிப்புடைய படை என்று காட்டற்கு அப் படையின்கண் மதகளிறும் கவளமுண்ணாமையை விதந்து எடுத்து விளம்புகின்றார். அக்கவளந்தானும் யானை பெரிதும் விரும்பியுண்ணும், செழிப்புடைய தீங்கரும்பும் நெற்கதிர்க்கட்டும் அதிமதுரத் தழையு மாகவும் அவற்றையும் வேண்டாது நிற்கும் யானைகள் என்றதனால் அப்படையின் செல்வச் சிறப்பு விளங்குதல் காண்க. தேம்படு கவுள் - மதம்பாயும் கதுப்பு. ஓங்கு நிலைக்கரும்பு என்றது கவளத்தின் சிறப்போதியவாறு. வயல்விளைகதிர் என மாறுக. இன்குளகு - இனிய அதிமதுரத்தழை. அதிமதுரத்தழையை யானை மிகவும் விரும்பித் தின்னும் என்பதை,

நாறுமும் மதத்தி னாலே நாகத்தை யிரிக்கு நாகம்
ஆறிய சினத்த தன்றி அதிங்கத்தின் கவளங் கொண்டால்
வேறுநீர் நினைந்து காணீர் யாவர்க்கும் விடுக்க லாகா
தூறித்தே னொழுகுங் கோதை நம்பிக்கு மன்ன ளென்றான்  (சீவகசிந்:750)

எனவரும் சீவகசிந்தாமணியானும் உணர்க. நுதல்துடைத்தென்றது-அக்கரும்பு முதலியவற்றாலே நெற்றியைத் துடைத்து என்றவாறு. யானையின் நெற்றியில் வண்டுகள் மொய்த்தல் உண்மையின் நுதல் துடைத்தென்றார். யானை நுதல் துடைத்துக் கூரிய கொம்பில் தன் கையை ஏறட்டு நிற்கும் சொல்லோவியத்தை உணர்க. அயில் நுனை - கூர்த்த நுனி. மருப்பு - யானைக்கோடு. கொண்டென - கொண்டதாக. கவைமுட்கருவி என்றது பரிக்கோலை; இதனைக் குத்துக்கோல் என்றுங் கூறுப. கவைமுட் கருவியு மாகிக் கடிகொள (18: 164) என்பர் மணிமேகலையினும். வடமொழி யானையைப் பயிற்றுதற்குரிய வடமொழிச் சொற்கள். அவை, அப்புது அப்புது, ஆது ஆது, ஐ ஐ, என்பன. இதனை,

அங்கையந் தலத்தினால் அப்புது ஆது ஐ எனக்
கொங்கலர் கண்ணியான் கொம்மைதான் கொட்டலும்
பொங்கிய வுவகையிற் பொலிந்துமாக் களிறவன்
தங்கிய பயிர்த்தொழி றடக்கையாற் செய்ததே  (சீவக -1834)

எனவரும் சிந்தாமணியானும் உணர்க. பெருவெளில் பிணிமார் விரவுமொழி பயிற்றும் பாகர் என்பர் மலைபடு கடாத்தினும். கவளம் கைப்ப - கவளத்தை உண்ணும்படி குத்த என்க. வடமொழி பயிற்றுவாரேனும், அவ்வியானைப் பேச்சொழிய வேறு கல்லாத இளைஞர் என்பார், கல்லா இளைஞர் என்றார். இனி அப் பாசறையகத்தே பல்வேறு படைகளும் இருத்தற்குரிய அரண்களையும் அரசனுக்குரிய தனியரணையும் கூறுவான் றொடங்கி முதலில் மறவர் அரண்கள் கூறுகின்றார்.

பாசறையகத்தே மறவர்க்குரிய அரண்கள்

37-43 : கல் ....................... நாப்பண்

பொருள் : கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல் அசைநிலை கடுப்ப - துகிலைக் காவிக்கல்லைத் தோய்த்துடுத்த தவவேடத்தையுடைய முக்கோலந்தணன் அம் முக்கோலிலே அந்த உடையினை இட்டுவைத்த தன்மையை ஒக்க, நற்போர் ஓடா வல்வில் தூணி நாற்றி - அறத்தாற் பொருகின்ற போரின்கண் ஓடாமைக்குக் காரணமான வலிய வில்லைச் சேரவூன்றி அவற்றிலே தூணிகளைத் தூக்கி, கூடங் குத்திக் கயிறு வாங்கு இருக்கை - கூடமாக் கால்களை நட்டுக் கயிற்றை வலித்துக் கட்டின இருப்பிடத்திலே, பூந்தலைக் குந்தம் குத்திக் கோல்களையும் ஊன்றிக் கிடுகுகளை நிரலாகப் பிணைத்து இவ்வா றியற்றப்பட்ட, வாங்குவில் அரணம் அரணமாக -வளைந்த வில்லாகிய அரணே தங்களுக்கு அரணாக அமைந்த, வேறுபல் பெரும்படை நாப்பண் - வேறுவேறான பல பெரும் படைகளின் நடுவிடத்தே,

கருத்துரை : துகிலைக் காவிநிறந்தோய்த்து உடுத்த தவவேடமுடையவனும் முக்கோல் உடையவனும் ஆகிய அந்தணன் அம்முக்கோலை நட்டு அவ் வுடையினை அதன்மேலிட்டு வைத்த தன்மையைப் போல அறநெறியாலே தாம் செய்கின்ற போரிடத்தே முதுகிட்டு ஓடாமைக்குக் காரணமான வலிய வில்லைச் சேரஊன்றி அவற்றின் மேல் தூணிகளைத் தூங்கவிட்டு, கூடமாகக் கால்களை நட்டுக் கயிற்றாலே வலித்துக்கட்டின இருக்கைகளிலே, குந்தக்கோல்களை நட்டுக் கிடுகுப் படைகளை நிரலாகப் பிணைத்து இவ்வாறு இயற்றப்பட்ட பல வேறு படைஞர்களின் இருக்கைக்கு நடுவிடத்தே, என்பதாம்.

அகலவுரை : கல் - காவிக்கல்; கல்தோய்த்தென்றது - காவிக் கல்லின் காயத்தே ஆடையினைத் தோய்த்து என்றபடி. இதனால் பண்டைக்காலத்தே துறவிகள் காவியாடை உடுத்தும் வழக்கமுண்மையுணர்க. படிவம் - ஈண்டுத் தவவேடம். பல்புகழ் நிறுத்த படிமையோனே (தொல்-பாயிரம்) என்புழியும் அஃதப்பொருட்டாதல் காண்க. முக்கோல் - மூன்று கோல்கள் சேர இணைத்ததொரு கோல். இது துறவியர் கையிற் கொண்டுள்ள கோல் என்க. இதனைத் திரிதண்டம் என்ப. இம் முக்கோல் அந்தணர்க்குரியதாதலை

நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய  (தொல்-மர-20)

எனவரும் தொல்காப்பியத்தானும் அறிக.

எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழல்
உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்  (கலி-9)

என்றும்,

தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே  (குறுந்-156)

என்றும், பிற சான்றோரும் கூறுதலறிக. அசைநிலை - தங்கவைத்த தன்மை. நற்போர் என்றது அறநெறி பிறழாதே செய்யும் போர். அஃதாவது: யாம் போர்புரிய வருகின்றோம் என முன்னறிவித்துச் சேறலும், அழியுநர் புறக்கொடை அயில் வாளோச்சாமையும், படையொழிந்தாரோடும் ஆண்டிளையாரோடும் பொராமையும் பிறவுமாம். ஓடா - பிறக்கிட்டோடாத ; ஓடாமையை வில்லிற்கேற்றி யுரைத்தார். தூணி - அம்புக்கூடு, நாற்றி - தூங்கவிட்டு. வில்லிற்கு முக்கோலும், தூணிக்குக் காவித்துகிலும் உவமைகள். கூடம் - கூடாரம்; படங்கென்றுங் கூறுப. இவ்வாறு மறவர்கள் அரண்கோலும் வழக்கத்தை,

வைந்நுதி மழுங்கிய புலவுவாய் எஃகம்
வடிமணிப் பலகையொடு நிரைஇ முடிநாட்
சாபஞ் சார்த்திய கணைதுஞ்சு வியனகர்  (பெரும் - 119-20)

எனவும்,

கிடுகு நிரைத் தெஃகூன்றி
நடுகல்லின் அரண்போல  (பட்டினப் - 78-9)

எனவும் பிறசான்றோர் கூறுமாற்றானுமுணர்க. குந்தம் - எறிகோல். அது தலையின்கண் பூத்தொழில் செய்யப்பட்டதாகலின் பூந்தலைக்குந்தம் என்றார். கிடுகு - தோற்பரிசை. வில் - அரணம் என்றிதற்கொரு பெயர் கூறினார். யானைவீரர் குதிரை வீரர் தேர்வீரர் காலாள் எனப் பலவகைப் படைவீரர் என்பார் வேறு பல்படை என்றார். இனி பாடைவேறுபட்ட பலவாகிய பெரிய படை என்னும் நச்சினார்க்கினியர் உரையும் கொள்க. நாப்பண் - நடுவிடத்தே. இனி, இவ் வில்லரண்களுக்கு நடுவே அமைக்கப்பட்ட வேந்தன் உறைதற்குரிய தனியரணின் தன்மையை 43 முதல் 64 ஆம் அடிகாறும் கூறுகின்றார்.

பாசறைக்கண் அரசன் தனிஇருக்கையின் மாண்பு

43-49 : வேறோர் ............... மாட்ட

பொருள் : வேறு ஓர் நெடுங்காழ்க் கண்டம் கோலி அகம் நேர்பு - இவற்றின் வேறாக ஓரிடத்தின்கண் நெடிய குத்துக் கோலுடனே பண்ணின பலநிறத்தாற் கூறுபட்ட மதிட்டிரையை வளைத்து அரசனுக்குக் கோயிலாக எல்லோரும் உடம்பட்டு, குறுந்தொடி முன்கைக் கூந்தலம் சிறுபுறத்து - குறிய தொடியையுடைய முன்கையினையும் கூந்தலசைந்து கிடக்கின்ற அழகினையும் சிறிய முதுகினையும் உடைய, இரவு பகல் செய்யும் திண்பிடி ஒள்வாள் விரவு வரிக்கச்சிற் பூண்ட மங்கையர் - இராப்பொழுதைப் பகற்பொழுதாக்கும் திண்ணிய பிடியினையுடைய ஒள்ளிய வாளை விரவின கச்சிலே சேரக்கட்டின மகளிர்கள், நெய் உமிழ் சுரையர் - நெய்யைக் காலுகின்ற திரிக்குழாயை உடையராய், நெடுந்திரிக் கொளீஇக் கையமை விளக்கம் நந்து தொறும் மாட்ட - நெடிய திரியையிட்டுப் பாவை கையின் அமைந்த விளக்குகள் அவியுந்தோறும் கொளுத்தா நிற்ப;

கருத்துரை : இவ் வில்லரண்களின் வேறாக ஓரிடத்தே நெடிய குத்துக்கோலுடனே பண்ணின கண்டத்திரையை வளைத்து அரசனுக்குக் கோயிலமைத்து, அதன்கண் குறிய தொடியினையுடைய முன் கையினையும், கூந்தலசைந்து கிடக்கின்ற அழகினையும், சிறிய முதுகினையும் உடைய, இரவைப் பகலாக்கும் ஒளியுடைய வாளைக் கச்சோடு சேரக்கட்டின மகளிர்கள் நெய்காலும் திரிக்குழாயை உடையராய் நெடிய திரியை இட்டுப் பாவைவிளக்குகள் அவியுந்தோறும் கொழுத்தா நிற்ப, என்பதாம்.

அகலவுரை : காழ் - கழி. கண்டம் - கண்டத்திரைக்கு ஆகுபெயர். கண்டம் கூறு என்னும் பொருட்டாகலின் பலகூறுபட்ட நிறத்தினையுடைய திரைக்கு ஆகுபெயராயிற்று. இதனை மதிட்டிரை என்றுங் கூறுப. இத்திரை குத்துக்கோல்களுடனே இயற்றப்பட்டதாகலான் நெடுங்காழ்க்குண்டம் என்றார். இத் திரையை வளைத்து அதன் அகத்தே அரசனுக்கு இருக்கை அமைத்தனர் என்றவாறு. நெடுங்காழ்க் கண்டம் நிரல்பட நிரைத்த கொடும்பட நிரைமதில் (சிலப். 27: 151-2) எனச் சிலப்பதிகாரத்தும், காலொடு சேர்த்த கண்டப்பூந்திரை மண்டபத் திழைத்த நன்னகர் என்றும், கண்டப் பூந்திரை காழ்முதற் கொளீஇ (பெருங். 1. 42: 105 - 7,2. 4- 134) என்றும், கதையினும் வருதல் காண்க.

நேர்பு - உடம்பட்டு குறுந்தொடி - குறிய வளையல். கங்கணங் கைவளை ஒருபலந் தொடியே, என்பது பிங்கலந்தை. அம் -அழகு - சிறுபுறம் - சிறிய முதுகு. இரவைப் பகலாக்கும் ஒளியையுடைய வாள் என்க. பாசறையிற் பணி செய்யும் மகளிர் வாட்படையையுடையராதலும் அறிக. திண்பிடி - திண்ணிய கைப்பிடி. வரி விரவு கச்சு என மாறுக. இனி வாள் விரவிய கச்சு வரிக்கச்சு எனினுமாம். வாள் விரவுதலாவது வாளைச் சேரக்கட்டின என்றவாறு. வரிக்கச்சு வரிந்து கட்டின கச்சென்க. கச்சு - ஈண்டு மகளிரிடும் சட்டை. அதனை இக்காலத்தார் இரவிக்கை என்ப. மங்கையர் நெய்யுமிழ் சுரையை உடையராய்த் திரிக்கொளீஇ மாட்ட என்க. மங்கையர் என நிறுத்திச் சிற்றாட்கள் கொளுத்த என்றுவரும் நச்சினார்க்கினியர் உரையின்கண் மங்கையர் என்னும் எழுவாய் முடிக்குஞ் சொல்லின்றி நின்று வற்றுதல் காண்க.

திரிக் கொளீஇ என்றது, திரியை இட்டென்றவாறு. கைஅமை விளக்கம் - பாவை விளக்கு. பாவையின் கையின் ஏந்திய விளக்கென்பார் கைஅமை விளக்கம் என்றார். கையமை விளக்கம் என்றதற்குக் கையகத்ததாகிய பந்தம் என்பர் நச்சினார்க்கினியர். நெய்யுமிழ் சுரை என்றது, நெய்யற்ற விளக்கில் நெய் வார்த்தற்கமைந்த குழையோடு கூடிய கருவியை என்க. நந்துதல் - அவிதல். மாட்ட -கொளுத்த.

மெய் காப்பாளர்

50-54 : நெடுநா .................. சூழ

பொருள் : நெடு நா ஒண் மணி நிழத்திய நடு நாள் - நெடிய நாக்கினையுடைய ஒள்ளிய மணிகளின் ஓசை நுணுகிய நடு யாமத்தே, அதிரல் பூத்தல் ஆடுகொடிப்படா அர் சிதர் வரல் அசைவளிக்கு அசைவந்தாங்கு - புனலி பூத்த அசைகின்ற கொடியினையுடைய சிறு தூறுகள் துவலையோடே வருதலையுடைய அசைந்த காற்றிற்கு அசைந்தாற்போல, துகில் முடித்துப்போர்த்த தூங்கல் ஓங்குநடைப் பெருமூதாளர் ஏமம்சூழ - மயிர்க் கட்டுக்கட்டிச் சட்டையிட்ட அனந்தரினையும் பெரிய ஒழுக்கத்தினையும் உடைய மெய்காப்பாளர் காவலாகச் சூழ்ந்து நிற்ப.

கருத்துரை : நெடிய நாக்கினையுடைய ஒளி பொருந்திய மணியின் ஒலி அடங்கிய நள்ளிரவிலே புனலிபூத்த அசைகின்ற கொடியினையுடைய சிறுதூறுகள் துவலையோடே வருதலையுடைய காற்றிற்கு அசைந்தாற் போன்று, மயிர்க்கட்டுச் கட்டிச் சட்டையிட்ட துயில் மயக்கத்தையும், நல்லொழுக்கத்தையும் உடைய மெய்காப்பாளர் ஆடியசைந்து காவலாகச் சூழ்ந்து திரியா நிற்ப; என்பதாம்.

அகலவுரை : மணி, நவமணிகள் அன்றெனத் தெரித்தோதுவார் நெடுநா மணி எனறார். வெண் மணி என்றும் பாடம். இதற்கு, வெள்ளிய மணி என்க. யானை குதிரை முதலியனவுந் துயில்கோடலின் மணியோசை அடங்கிற் றென்க. ஒரோவழிச் சிலமணிகள் ஒலித்தல் உண்மையான் அவிய என்னாது நிழத்த என்றார். நிழத்தல் - நுணுகுதல் பேரொலியாகாமல் சிறிது ஒலிக்க என்றவாறு.

ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்  (தொல்.உரி.32)

என்பதனானும் நிழத்தல் நுணுகுதல் என்னும் பொருட்டாதலறிக. நிழத்திய என்பதற்கு எறிந்திட்ட என்பர் நச்சினார்க்கினியர். பாசறையில் படைஞர் இனித் துயில் கொள்க என்பதன் பொருட்டு மணி யொலிப்பர் என்பது அவர் கருத்து. இக்கருத்தும் இனிதாகலிற் கொள்க. நடுநாள் - நடுஇரவு. அதிரல் - புனலிக் கொடி; மோசி மல்லிகை. புனலிக் கொடி படர்ந்த சிறு தூறு காற்றானசைதல், அனந்தராலே ஆடும் மெய் காப்பாளர்க்கு உவமை என்க. படார் - சிறு தூறு. இம் மெய்காப்பாளர் வெண்டுகிலாற் போர்த்துள்ளார் ஆதலான் பூத்த சிறு தூறு நிறவுவமையாதலும் அறிக. மீப்பால் வெண்டுகில் போர்க்குநர் பூப்பால், வெண்டுகில் சூழ்ப்பக் குழன் முறுக்குநர், எனவரும் பரிபாடலானும் (10) வெண்டுகில் போர்த்தலுண்மையறிக. மன்னன் உறங்கும் போதும் இவர் அவன் திருமேனியைக் காத்தற் குரியராகலான், உயர்ந்த ஒழுக்கமுடையர் எனல் வேண்டிற்று. இங்ஙனம் மெய் காவல் செய்வோர் அரசன்பால் முன்னர்ப் பற்பல பணி செய்து அவன் நம்பிக்கைக்குரியராய வழியே அம் மெய் காவற் பணியில் அமைக்கப் படுவராகலின் அவர் பெருமூதாளராய் இருத்தல் இயல்பாயிற்று பெருமூதாளர் - ஆண்டானே பெரிதும் முதிர்ந்தோர். ஏமம் - பாதுகாவல். துகில் முடித்துப் போர்த்த என்றது தலையினும் துகிலானே மயிர்க்கட்டுக் கட்டி மெய்ப்பை புக்கோர் என்றவாறு.

நாழிகைக் கணக்கர்

55-58 : பொழுது .......... இசைப்ப

பொருள் : பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள் - நாழிகையை அளந்து இத்துணை யென்று அறியும் பொய்த்தலில்லாத நாழிகைக் கணக்கர், தொழுது காண் கையர் - மன்னனைத் தொழுதுகொண்டே காணும் கையினை உடையராய், தோன்ற வாழ்த்தி - விளங்க வாழ்த்தி, எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய் - திரைஎறிகின்ற கடல் சூழ்ந்த உலகத்தே பகைவரை வெல்லுதற்குச் செல்கின்றவனே, நின் குறுநீர்க் கன்னல் இனைத்து என்று இசைப்ப - நின்னுடைய குறிய நீரையுடைய நாழிகை வட்டிலிலே சென்ற நாழிகை இத்துணை என்று சொல்லா நிற்ப.

கருத்துரை : நாழிகையை அளந்து இத்துணை என்று அறியும் பொய்த்தலில்லாத நாழிகைக் கணக்கர்கள், மன்னனைக் கையாற் றொழுதபடியே கண்டு வாழ்த்திக் கடல் சூழ்ந்த உலகத்தே பகைவரை வெல்லச் செல்கின்றவனே உன்னுடைய நாழிகை வட்டிலிற் சென்ற நாழிகை இத்துணைகாண், என அறிவுறுப்ப என்பதாம்.

அகலவுரை : பொழுது ஈண்டுப் பெரும்பொழுது, சிறுபொழுது, நாள், நாழிகை என்னும் காலக் கூறுபாடுகள். இருள் நிறைந்த இரவினும் நன்கு அளந்து பொய்த்தலில்லாமற் கூறுவார் என்பார், பொய்யா மாக்கள் என்றார். இங்ஙனம் பொழுது அறிந்து நுவலும் கல்வியன்றிப் பிற கல்லாதார் என்பார் மாக்கள் என்றார்.

இவ்வாறு பொழுதறிந்து நுவலும் நாழிகைக் கணக்கரும் அதனை அறிகருவியாகிய நாழிகை வட்டிலும் பண்டைக்காலத் துண்மையை,

பூமென் கணையும் பொருசிலையுங் கைக்கொண்டு
காமன் திரியும் கருவூரா - யாமங்கள்
ஒன்றுபோ யொன்றுபோ யொன்றுபோய் நாழிகையும்
ஒன்றுபோ யொன்றுபோ யொன்று  (சிலப்.5 : 49. உரைமேற்.)

என்றும்,

குறுநீர்க் கன்னலின் யாமங் கொள்பவர்  (மணி - 7 : 64-5)

என்றும்,

குறுநீர்க் கன்னல் எண்ணுத லல்லது
கதிர்மருங் கறியா தஞ்சுவரப் பாஅய்  (அகம்.43: 6-7.)

என்றும்,

நாழிகைக் கணக்கர்  (சிலப். 5: 49.)

என்றும்,

ஐந்து கேள்வியு மமைந்தோ னெழுந்து
வெந்திறல் வேந்தே வாழ்கநின் கொற்றம்
இருநில மருங்கின் மன்னரெல் லாநின்
திருமலர்த் தாமரைச் சேவடி பணியு
முழுத்த மிங்கிது முன்னிய திசைமேல்
எழுச்சிப் பாலை யாகென் றேத்த  (சிலப். 26 : 26-31)

என்றும், பிறாண்டும் வருவனவற்றால் அறிக. இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியர் மாக்கள் பொழுது அளந்தறியும் பொய்யாக் காண்கையர் என மாறிக்கூட்டி, அறிவில்லாதோருடைய வாழ்நாளை இத்துணை என்று அளந்தறியும் பொய்யாத காட்சியை உடையோர் என வேண்டாதே பொருள் விரித்துள்ளார். காண்கையர் என்றதற்குக் காணுதலை யுடையோர் எனினுமாம். தோன்ற வாழ்த்துதலாவது - அம் மன்னன் புகழ்களை விளங்க விரித்தோதி வாழ்த்துதல், எறிநீர் - கடல். வெலீஇய - வெல்லும் பொருட்டு. நீரிட்டு ஒரு சிறு துளை வழியாக அந்நீரைச் சிறிது சிறிதாகக் கசிய விட்டு அந்நீரினை அளந்து காணும் கருவியாகலின் நாழிகை வட்டிலைக் குறுநீர்க் கன்னல் என்றார். கன்னல் - நாழிகை வட்டில். அஃதப் பொருட்டாதலை, கன்னலும் கிண்ணமும் நாழிகை வட்டில் என வரும் பிங்கலந்தைச் சூத்திரத்தானும் உணர்க.

வன்கண் யவனர்

59-66 : மத்திகை ..................... உழையராக

பொருள் : மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை - புரவியை அடிக்கின்ற சம்மட்டி வளைந்து கிடக்கின்ற மடங்கிப் புடைக்குமாறு நெருங்கக் கட்டின உடையினையும், மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து - சட்டையிட்ட அச்சந்தோன்றுதற்குக் காரணமான தோற்றத்தினையும், வலிபுணர் யாக்கை வன்கண் யவனர் - இயல்பான வலிகூடின யாக்கையையும் தறுகண்மையினையுமுடைய சோனகர், புலித் தொடர்விட்ட புனைமாண் நல்இல் - புலிச் சங்கிலி விடப்பட்ட கைசெய்த மாட்சிமையினையுடைய நன்றாகிய இல்லிலே, திருமணி விளக்கங் காட்டித் திண்ஞாண் எழினி வாங்கிய ஈரறைப் பள்ளியுள் - அழகினையுடைய மாணிக்கமாகிய விளக்கை எரிய வைத்துத் திண்ணிய கயிற்றாலே திரையை வளைத்த இரண்டாகிய அறையினுள்ளும் உள்ளுறையாகிய பள்ளியறையில், உடம்பின் உரைக்கும் நாவின் உரையாப் படம்புகு மிலேச்சர் உழையராக - கையாலும் முகத்தாலும் உரைப்பதன்றி நாவினாலே உரையாத சட்டையிட்ட ஊமை மிலேச்சர் காவலாக அருகிலிருக்க,

கருத்துரை : குதிரைச் சம்மட்டி வளைந்து கிடப்பதும் மடங்கிப் புடைக்கும்படி நெருங்கக் கட்டப்பட்டதுமாகிய உடையினையும் சட்டையிட்ட அச்சந்தரும் தோற்றரவினையும், வலிமைமிக்க உடலினையும் தறு கண்மையையும் உடைய சோனகராலே புலிச்சங்கிலி விடப்பட்டு ஒப்பனை மாண்புடைய நன்றாகிய இல்லிலே, மணிவிளக்கை எரிய வைத்து வலிய கயிற்றிற் றிரையிழுக்கப்பட்ட இரண்டாகிய அறையுள்ளே உள்ளறையாகிய பள்ளியறையின் கண்ணே ஊமை மிலேச்சர் பாதுகாவலின் பொருட்டு அருகேயிருப்ப, என்பதாம்.

அகலவுரை : யவனராலே எழினி வாங்கப்பட்ட பள்ளியுள் மிலேச்சர் உழையராக என்க. மத்திகை - குதிரைச் சவுக்கு. அச் சம்மட்டி உடைமேலே வளைந்து கிடத்தலின் மத்திகை வளைஇய உடை என்றார். மறிந்து வீங்கு செறிவுடை என்றது. மடங்கிப் புடைத்துத் தோன்றும் படி நெருங்குதலுறக் கட்டின வுடை என்றவாறு. அவ்வாறு உடுத்தல் யவனர் வழக்கம் போலும். மெய்ப்பை - சட்டை. காண்போர்க்கு அச்சம் வருதற்குக் காரணமான தோற்றம் என்க. யாக்கை - உடல். யவனர் - சோனகர்; கிரேக்கர். திருமணி விளக்கு - அழகிய மாணிக்க மணியாகிய விளக்கு; பளிங்குவிளக் கென்பாருமுளர். திண்ஞாண் - வலிய கயிறு. எழினி - திரை. ஈரறைப்பள்ளியுள் - முன் ஒன்றும் உள் ஒன்றுமாக இரண்டாக அமைக்கப்பட்ட அறைகளுள் உள்ளறையாகிய பள்ளியறை என்க. படம் - சட்டை. மிலேச்சர், துருக்கர். இவர் பெலுச்சித்தானத்தினின்றும் வந்தவர் என்றும் பெலுச்சர் என்பதே மிலேச்சர் எனத் திரிந்து வழங்கிற்றென்றும் கூறுப.

இதனால் பண்டைத் தமிழ் மன்னர்கள் யவனர் மிலேச்சர் முதலிய பிற நாட்டினரையும் தம் அரண்மனை அகப்பணி செய்தற்கு அமைத்துக் கொண்டிருந்தமை அறிக. பள்ளியறைக் காவலராதலின் வாய் பேசமாட்டாத ஊமையர் வேண்டப்பட்டனர் போலும். உழையர் - அருகிருப்போர், அருகிருத்தல்பற்றி அமைச்சரை உழையர் என்பதும் அறிக.

பாசறையின்கண் வேந்தன் மனநிலை

67-74 : மண்டமர் .................. மா சிந்தித்தும்

பொருள் : மண்டு அமர் நசையொடு கண்படைபெறாஅது - பகைவர்மேல் மிக்குச் செல்லும் போரினை விரும்புதலானே கண் உறக்கம் பெறாமல், எடுத்தெறி எஃகம் பாய்தலிற் புண் கூர்ந்து பிடிக்கணம் மறந்த வேழம் - முன்னாட்களிலே பகைவர் விசைத்தெறிந்த வேற்படை நுழைந்தமையால் புண்மிக்குப் பெண் யானைகளை மறந்த களிற்றியானைகளையும், வேழத்துப் பரூஉக்கை பாம்பு பதைப்பு அன்ன துமிய - யானைகளின் பரிய கை அடியுண்ட பாம்பு துடித்தாற்போன்று துடிப்பனவாய் அற்று வீழ, தேம்பாய் கண்ணி நல்வலந்திருத்தி - தாம் அணிந்த தேன் பரக்கும் வஞ்சிமாலைக்கு நன்றாகிய வெற்றியை உண்டாக்கி, சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும் - செஞ்சோற்றுக் கடன் இறுத்துப்பட்ட மறவரை நினைந்தும், தோல் துமிபு வை நுனைப் பகழி மூழ்கலின் செவி சாய்த்து உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும் - காவலாயிட்ட தோற்பரிசையினையும் அறுத்துக் கொண்டு கூரிய நுனையினையுடைய அம்புகள் வந்து அழுந்துகையினாலே தஞ்செவியைச் சாய்த்துக் கொண்டு புல்லுண்ணாமல் வருந்தும் குதிரைகளை நினைந்தும்,

கருத்துரை : பகைவர்மேல் மிக்குச் செல்லும் போர் விருப்பத்தாலே உறக்கங்கொள்ளாமல் முன்னாட்களிலே பகைவர் எறிந்த வேல் நுழைந்தமையால் புண்மிகுந்து தம் பிடியானைகளை மறந்தொழிந்த களிற்றியானைகளை நினைந்தும், அடியுண்ட பாம்பு துடிக்குமாறு போலத் துடித்து வீழும்படி யானைகளின் பரிய கைகளை வெட்டி வீழ்த்தித் தாம் அணிந்த வஞ்சிமாலைக்கு நல்ல வெற்றியை உண்டாக்கிப் பின்னர்ச் செஞ்சோற்றுக் கடன் கழித்துப் பட்டொழிந்த மறவரை நினைந்தும், காவலாயிட்ட தோற்பரிசையினையும் கிழித்துக்கொண்டு அம்புகள் புக்கழுந்தினமையாலே புல்லுண்ணாதனவாய்ச் செவிகளைச் சாய்த்து நிற்கும் குதிரைகளை நினைந்தும், என்பதாம்.

அகலவுரை : மண்டுதல்-மிக்குச் செல்லுதல். போர் உளது என்றறிந்தவுடன் மறவர்கள் அங்ஙனம் செல்லுதல் இயல்பு. இதனை,

நானில மதனி னுண்டு போரென நவிலின் அச்சொல்
தேனினும் களிப்புச் செய்யும் சிந்தையர் ................
என்னென்றார்க் கென்னெ னென்றார் எய்திய தறிந்தி லாதார்
முன்னின்றார் முதுகு தீயப் பின்னின்றார் முடுக்கு கின்றார்  (கம்ப-கிங்கர-4-9)

எனவரும் இராமாயணச் செய்யுட்களானும் அறிக.

செருவேட்டுச் சிலைக்கும் செங்கண் ஆடவர்  (அகம். 157-9)

என்றும்,

போரெனிற் புகழும் புனைகழன் மறவர்  (புறம், 31-9)

என்றும்,

பொதுவிற் றூங்கும் விசியுறு தண்ணுமை
வளிபொரு தெண்கண் கேட்பின்
அதுபோ ரென்னும் என்னையும் உளனே  (புறம் - 89: 7-9)

என்றும்,

வாள்வடு விளங்கிய சென்னிச் செருவெங் குரிசில்  (புறம் - 321 : 9-10)

என்றும் வரும் பிற சான்றோர் கூற்றுக்களானும் மறவர்க்குளதாம் அமர் நசையை அறிக. கண்படை - உறக்கம். உள்ளத்தே நினைவுமிக்க காலத்தே உறக்கம் ஒழிதல் இயல்பாத லறிக. எஃகம்-வேல். புண் கூர்ந்து - புண்மிகுந்து. கூர் - ஈண்டு மிகுதி குறித்து நின்றது. பிடிக்கணம் மறந்தென்றது புண்பட்ட களிற்றியானையின் உடல் வருத்தமிகுதியைக் காட்டும் குறிப்பேது வென்க. பிடிக்கணமும் என்பதன்கண் சிறப்பும்மை விகாரத்தாற் றொக்கது. பிடிக்கணம் மறந்த வேழம் என்றதனால் வேழம், பெண்ணொழித்துக் களிறு என்னும் பொருட்டாய் நின்றது. பருஉக் கை பாம்பு பதைப்பன்ன துமிய என மாறுக. பதைப்பன்ன - பதைத்தாற் போன்றனவாய்.

நிரைகதிர் நீளெஃக நீட்டி வயவர்
வரைபுரை யானைக்கைந் நூற - வரைமேல்
உருமெறி பாம்பிற் புரளுஞ் செருமொய்ம்பிற்
சேய்பொரு தட்ட களத்து  (களவழி - 13)

எனப் பிற சான்றோர் கூறுதலுங் காண்க. துமிய - வெட்டுண்டு வீழ, சோறு வாய்த்து - சோற்றுக் கடன் கழித்து; அஃதாவது: அரசன் சோற்றை இனிதுண்ட மறவர்கள் அவற்குற்றுழித் தம்முயிரைப் போர்க்களத்தே விடுதல். ஒழிந்தோர் - இறந்தோர். உள்ளியும் - நினைந்தும். தோல்- காவலாக இட்ட தோற்பரிசை. மா-புரவி. சிந்தித்தும் - நினைந்தும். பொருநல் யானை போர்க்களத் தொழிய, விழுமிய வீழ்ந்த குரிசிலர் (735-6) என்பர் மதுரைக் காஞ்சியினும்,

இதுவுமது

75-80 : ஒருகை ....................... காணாள்

பொருள் : ஒருகை பள்ளியொற்றி - ஒரு கையைப் படுக்கையின்மேலே வைத்து, ஒருகை முடியொடு கடகம் சேர்த்தி - மற்றொரு கையை முடியோடே கடகம் சேரும்படி வைத்து, நெடிது நினைந்து - இவ்வாறு அவ்விரவைக் கழித்து நீளச் சிந்தித்து, பகைவர்ச் சுட்டிய படைகொள் நோன் விரல் நகைதாழ் கண்ணி நல்வலந் திருத்தி - பின்னாளிலே பகைவரைக் குறித்துப் படைக்கலன்களைக் கொண்ட தன் வலிய விரலாலே தனக்கு எக்காலமும் விளக்கம் தங்கும் வஞ்சிமாலைக்கு நன்றாகிய வெற்றியை நிலை பெறுத்தி, அரசு இருந்து நடுங்குதற்குக் காரணமான வெற்றி முரசம் முழங்கா நின்ற பாசறையின் கண்ணே, இன் துயில் வதியுநன் காணாள் - இனிதே உறங்கும் அரசன் வருகையைக் காணாதவளாய்.

கருத்துரை : தனது ஒருகையினைப் படுக்கைமேலே வைத்து மற்றொரு கையானே தலையைத் தாங்கியவனாய், இவ்வாறெல்லாம் பலப்பல நீளநினைந்து அவ்விரவைப் போக்கி மற்றைநாட் போரிலே பகைவரைக் குறித்துப் போர்ப்படைக்கலன் பிடித்த தனது வலிய விரலாலே பகைவரை வென்று, தான் சூடிய வஞ்சிமாலைக்கு வெற்றியை நிலைபெறச் செய்து மற்றை நாளிலே வினைமுடித்தமையானே பகைமன்னர் நடுங்கும் படி வெற்றிமுரசம் முழங்கும் பாசறைக்கண்ணே இனிது துயில்கின்றவனாகிய தன் தலைவனுடைய வருகையைக் காணமாட்டாதவளாய், என்பதாம்.

அகலவுரை : ஒருகை பள்ளியொற்றி ஒருகை முடியொடு கடகஞ்சேர்த்தி நெடிது நினைந்து என்னுந் தொடர் பாசறைக்கண் பள்ளியிற் சிந்தித்துக் கிடக்கும் ஒரு மன்னனைக் கண்கூடாகக் காட்டும் சொல்லோவிய மாதலறிக. கடகம் - கங்கணம். பண்டைநாள் ஆடவர் இவ்வகைக் கடகம் அணிதலுண்டென்பதை,

கண்டீர் கருமம் விளைந்தவா றென்றாராய்
வண்டாரார் வண்கடகம் மின்னத்தம் கைம்மறித்து  (1809)

எனவரும் சீவகசிந்தாமணியானு மறிக.

யானை முதலிய தன் படைகளின் நிலைமையும், இனிப் போர் செய்யுமாறும் வெல்லுமாறும் பிறவுமாகிய பலப்பல நினைந்தென்பார், நெடிது நினைந்தென்றார். கையைத் தலைக்கு அணையாகக் கொடுத்துயர்த்தலால் ஒருகை முடியொடு கடகம் சேர்த்தி என்றார். முடிக்கலனும் கடகக் கலனும் ஒருசேரவைத்து என்றவாறு. சுட்டிய - குறித்த. படை - ஈண்டு வில் வேல் வாள் முதலிய போர்க்கருவிகள். நோன் விரல் - வலிய விரல்கள். நெகிழவிடலும் இறுகப்பற்றுதலும் விரல்களே ஆதலின் நோன்கை என்னாது நோன்மையை விரற்கேற்றிக் கூறினார். நோன்மை - வலிமை. நகை - விளக்கம். நகைதாழ் கண்ணி என்றது; தனக்கு விளக்கமாகிய புகழ் தங்குதற்கு அடையாளமாக இடப்படும் மாலை என்றவாறு. வலம் -வெற்றி. இனி, படை கொண்ட நோன் விரலே வென்று வாகைமாலையும் சூடின என்றுமாம். பகையரசர் தம்மிருக்கையிலிருந்தே நடுங்குதற்குக் காரணமான பாசறை என்க. பனிக்கும் - நடுங்குகின்ற. இன்றுயில் என்றார் வினைமுடித்துப் பின்னர்க் கொள்ளுந் துயிலாதல் அறிவித்தற்கு. கண்படைபெறாது விழிப்புடனிருந்து வலந்திருத்தி இன்றுயில் கொள்வோன் என அம் மன்னன் ஆள்வினையுடைமை தெரித்தோதியவாறு காண்க.

இனி, 24 முதல், 80 ஆம் அடிவரை தொடர்ந்த இத்தொடர்ப் பொருளை, புறவில் எருக்கி மாட்டி வளைஇப் பரந்த பாடியில் தெருவில் நின்ற யானை குளகுண்ணாது கையிடைக் கொண்டென, இளைஞர் கவளம் கைப்ப வில் தூணி நாற்றிக் கூடங்குத்திக் கயிறு வாங்கு இருக்கையாகிய வில் அரணத்தில் பெரும்படை நாப்பண் வேறோர் அகம் நேர்பு மங்கையர் விளக்கம் மாட்ட, மணி நிழத்திய நடுநாள் மூதாளர் ஏமஞ்சூழ, பொழுதளந்தறியும் மாக்கள் வாழ்த்தி இசைப்ப, யவனர் எழினி வாங்கிய பள்ளியுள் மிலேச்சர் உழையராகக் கண் படைபெறாது வேழம் உள்ளியும், ஒழிந்தோர் உள்ளியும், மா சிந்தித்தும் ஒருகை சேர்த்தி நெடிது நினைந்து நல்வலந்திருத்திப் பாசறைக்கண்ணே இன்றுயில் வதியுநன் என இயைபு காண்க. இனி, பூப்போலுண்கண் புலம்பு முத்துறைப்ப என 23 ஆம் அடிக்கண் இடையறுந்து நின்ற பொருளை, முத்துறைப்ப இன்றுயில் வதியுநற் காணாள் என 80 ஆம் அடியோடு இயைத்து மேலே செல்க. 24 ஆம் அடிமுதல் இடைப்பிற வரலாக 80 ஆம் அடிவரையில் பாசறையில் தலைமகன் நிலையினை விரித்தோதியவர் மீண்டும் தலைவியின் நிலையை 80 முதல் 88 வரை ஓதுகின்றார்.

தலைவியின் தன்மை

80-89 : துயருழந்து ...................... ஆலின

பொருள் : துயர் உழந்து நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறைதபு புலம்பொடு - துன்பமுற்று அவன்பால் தன் நெஞ்சைப் போக்கின நிறைகெட்ட தனிமையாலே வருந்துகின்றவள், நீடு நினைந்து தேற்றியும் - இங்ஙனம் பிரிந்தாலன்றி இவ்வரசியல் நிகழா தென்றும் இங்ஙனம் ஆற்றாதே வருந்தினால் எம்பெருமான் கற்பித்த சொல்லைத் தவறியதாம் என்றும் நீளநினைந்து பார்த்துத் தன்னைக் தேற்றிக் கொண்டும், ஓடுவளை திருத்தியும் - கழலுகின்ற வளையலைக் கழலாமல் திருத்தியும்,மையல் கொண்டும்-மீண்டும் மயங்கியும், ஒய்யென உயிர்த்தும் - விரைய நெட்டுயிர்ப்புக் கொண்டும், ஏவுறு மஞ்ஞையின் நடுங்கி இழை நெகிழ்ந்து - அம்பு தைத்த மயில்போலே நடுங்கி அணிகலன்கள் நெகிழப் பெற்றும், பாவை விளக்கிற் பரூஉச் சுடர் அழல - பொற்பாவை ஏந்திநின்ற தகளியிலே பரிய விளக்கு நின்றெரிய, இடஞ்சிறந்து உயரிய எழுநிலை மாடத்து - தனக்குரிய இடமெல்லாம் பொன்னாலும் மணியாலும் சிறப்புப்பெற்று உயர்ந்த ஏழடுக்கு மாளிகையின்கண், முடங்கு இறை சொரிதரும் மாத்திரள் அருவி - கூடல் வாய்களினின்றும் சொரிதலைச் செய்யும் பரியவாய்த் திரண்ட மழை நீராகிய அருவிகளுடைய, இன்பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள் - இனிய பலவாகிய முழங்குகின்ற ஓசையைத் தன் நெஞ்சினை மற்றொன்றில் வைத்து, ஆற்றியிருத்தற்பொருட்டுக் கருதியவளாய்க் கிடக்கின்றவளுடைய, அஞ்செவி நிறைய ஆலின - அகஞ்செவி நிரம்பும்படி ஆரவாரித்தன.

கருத்துரை : துன்பமுற்றுத் தன் நெஞ்சை அவன்பாற் போக்கின நிறையழிந்த தனிமையோடே வருந்துகின்றவள், இங்ஙனம் வருந்துதல் எம்பெருமான் சொல்லைத் தவறியதாம் என்று கருதித் தன்னைத் தேற்றிக் கொண்டும் கழலும் வளையல்களைக் கழலாமற் றிருத்தியும், மீண்டும் மயங்கியும், நெட்டுயிர்ப்புக்கொண்டும் அணிகலன்கள் நெகிழப் பெற்றும், பாவை விளக்கு எரியாநிற்ப ஏழடுக்கு மாளிகையின் கூடல் வாயிலிலே மழைநீர் அருவியாகத் திரண்டு விழுகின்றதனால் உண்டாகிய பலவேறுபட்ட இனிய ஓசையின்கண் ஆற்றியிருத்தற் பொருட்டுத் தன் நெஞ்சத்தைத் திருப்பிச் செவியால் ஓர்ந்தனளாய்க் கிடந்தவளுடைய அகஞ்செவி நிறையும்படி ஆரவாரித்தன; என்பதாம்.

அகலவுரை : ஆலின நெடுந்தேர்பூண்ட மா (103) எனச் சென்றியையும். பூப்போலுண்கண் புலம்புமுத்துறைப்ப இன்றுயில் வதியுநற் காணாளாய்த் துயருழந்து என 22 ஆம் அடிக்கண் இடையறுந்து நின்ற எச்சத்தோடே தொடர்புபடுத்திக் கொள்க.

இவ்வாறு முன்னர்த் தலைவியின் நிலைமைகூறி அதனை எஞ்சவிட்டு இடையே தலைவன் நிலையை விரித்தோதி முன்னர் விடப்பட்ட தலைவி நிலை, என்னாயிற்று என ஓதுவோர் அதனை அறிய அவாவும் வண்ணம் விட்ட எச்சத்தைப் பின்னர்த் தொடர்புபடுத்தி மீண்டும் தலைவி நிலையினை முற்ற வோதி அவள் அஞ்செவி நிறைய ஆலின என்னுமாற்றால் எவையாலின என அறிய அவாவும்படி செய்து, மேலும் தலைவன் வருகையைக் கூறி இச் செய்யுளை முடிக்கும் செய்கைத் திறம் மிகவும் இனிதாதல் அறிக.

துயருழந்து ........... கிடந்தோள் என்னுந் தொடர் ஆற்றாமையால் வருந்தியும் ஆற்றியும் மீண்டும் வருந்தியும் கிடக்கும் ஓர் அரசியின் ஓவியமாக அமைந்திருத்தல் அறிக. தான் ஆற்றியிருத்தற்கு ஆவன சூழுமாற்றால் தனக்குத் துணையாக அமையாமல், தனது ஆற்றாமைக் கேதுவாகத் தன்னெஞ்சம் நிறையழிந்து தலைவன்பாற் சென்று விடுதலாலே ஒன்றை நினைந்து ஆற்றியிருத்தற்கும் உரிய துணைபெறாளாய்த் தனித்த தனிமை என்பார், நெஞ்சாற்றுப்படுத்த நிறையழி புலம்பு என்றாள். தான் தன் நெஞ்சினைத் தன்பால் நிறுத்துதற்கு முயலாநிற்பவும் தன் விருப்பத்திற்கு மாறாக நெஞ்சு தலைவன்பாற் போய்விடுதலை,

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்  (குறள் - 1293)

என்னும் தமிழ்மறையானும் உணர்க. தன்னெஞ்சம் தனக்குத் துணையாகாதொழியின் ஆற்றியிருத்தல் அரிதென்பதனை,

துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி (குறள் - 1299)

என்றும்,

தஞ்சந் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சந் தமரல் வழி  (குறள் - 1300)

என்றும் எழுந்த அருமைத் திருக்குறள்களானே யறிக. கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை என்ப. கணவன் கற்பித்த வழி நிற்றலே கற்பாம். ஆகவே இங்ஙனம் ஆற்றாமையாலே வருந்துவது ஏன்? தலைவன் ஆற்றியிரு எனக் கற்பித்த சொல்லைக் கடப்பதாகின்றது; அது கற்பழிவாம்! என்பன போன்றவற்றை நினைந்தென் பார், நீடு நினைந்து என்றார். இங்ஙனம் ஆற்றாமை கற்பழிவாம் எனக் கருதுங் கருத்தாலே உள்ளம் ஒருவாறு தேறுவாளாயினள் என்பார், நினைந்து தேற்றியும் என்றார். தேறியிருக்க உறுதி கொண்டவுடன் ஆற்றாமையாலே உடல்மெலிந்து வளைகழலுதல் கண்டு அவற்றை ஏறச் செறித்தாள் என்பார், ஓடு வளை திருத்தியும் என்றார். பிரிவாற்றாமையாற் றுயருறும் மகளிர்க்குத் தோள் வாடுதலும் வளை நெகிழ்தலும் உண்மையை,

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்  (குறள் - 1234)

தொடியொடு தோள்நெகிழ நோவ லவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து  (குறள் - 1236)

என வருவனவற்றால் அறிக.

மையல் -மயக்கம். ஆற்றாமையுணர்வும் அதனைத் தேற்றும் உணர்வும் பொருதுழி உண்டாகும் அறிவு மயக்கம் என்க. அங்ஙனம் மயங்குழிப் பேருயிர்ப்புண்டாதல் இயல்பாகலின் ஒய்யென உயிர்த்தும் என்றார். ஏவு - அம்பு. மஞ்ஞை - மயில். இழை - ஆடை அணிகலன் கட்குப் பொதுவாய சொல் இரண்டும் நெகிழ்தலுண்மையால் அப்பொதுச்சொற் பெய்துரைத்தார். பாவை விளக்கு - பொற்பாவையின் கையிலமைத்த தகளி : ஆகுபெயர் பரூஉச்சுடர் - பரிய விளக்குச் சுடர். அழல - எரிய. எனவே இதனால் மாலைப்பொழுது முடிந்து இரவு வரும் அமயம் ஆதல் கூறினாராதல் அறிக.

இடஞ்சிறந்துயரிய எழுநிலைமாடம் என்றது அரண்மனையின்கண் மகளிர் உறையுளை. முடங்கிறை - கூரை கூடுமிடம் சொரிதரும் மாத்திரள் அருவி என்றார், கார்காலம் என்பதனை நினைவுறுத்தற்கு, கூரையருவி கூடல்வாயிலாலே உள்முற்றத்தே வீழுங்கால் அவை பல்வேறு இன்னிசை யெழுப்புதல் இயல்பு; அவ்வின்னிசையை ஓர்த்தனள் கிடந்தோள் என்றது, ஆற்றாதாளும் அல்லள், ஒருவாறு ஆற்றியே கிடந்தாள் எனக் காட்டற்கென்க. என்னை? ஆற்றியிருத்தலே முல்லையாகலான். அஞ்செவி - அகஞ்செவி. விளங்கக் கேட்டனள் என்பார் அஞ்செவிநிறைய ஆலின என்றார். ஆலின - ஆரவாரித்தன. இனி, ஆலின யாவை என்னும் அவாநிலைக்குரிய பொருள் கூறுகின்றார்.

தலைவன் வருகை

89-103 : வென்று .................. மாவே

பொருள் : வென்று பிறர் வேண்டுபுலம் கவர்ந்த ஈண்டு பெருந்தானையொடு - வெட்டி வென்று பகையரசர் எக்காலமும் விரும்புகின்ற நிலங்களைக் கைக்கொண்ட திரண்ட பெரிய படையோடே, விசயம் வெல்கொடி உயரி - வெற்றியாலே உயர்த்தப்படுகின்ற வெற்றிக்கொடியை எடுத்து, வலன் நேர்பு வயிரும் வளையும் ஆர்ப்ப - எய்திய வெற்றிக்குப் பொருந்தக் கொம்பும் சங்கும் முழங்காநிற்ப, அயிர செறிஇலைக் காயா அஞ்சனம் மலர - நுண்மணலிடத்தனவாகிய நெருங்கின இலையை உடைய காயா அஞ்சனம்போல மலரவும், முறிஇணர்க் கொன்றை நன்பொன் கால - தளிரினையும் கொத்தினையுமுடைய கொன்றை நன்றாகிய பொன்னை ஒத்த மலரினைச் சொரியவும், கோடல் குவிமுகை அங்கை அவிழ - வெண்காந்தளின் குவிந்த முகைகள் அகங் கைபோல விரியவும், தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப - இதழ்கள் நிறைந்த தோன்றி உதிரம்போலப் பூப்பவும், கானம் நந்திய செந்நிலப் பெருவழி - காடு செழித்த செவ்விய முல்லை நிலத்தின்கட் பெரிய வழியிலே, வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின் - வேண்டும் பருவத்தே மழை பெய்யப்பெற்ற வளைந்த கதிரினையுடைய வரகிடத்தே, திரிமருப்பு இரலையொடு மடமான் உகள - முறுக்குண்ட கொம்பினையுடைய புல்வாய்க் கலைகளோடே மடப்பத்தையுடைய மான்கள் துள்ளவும், எதிர்செல் வெண்மழை பொழியுந் திங்களில் - இனிமேற் பெய்தற்காகச் செல்லும் வெண்முகில் மழையைப் பொழிதற்குரிய கார்காலந் தொடங்கும் ஆவணித் திங்கள் முதலில், முதிர் காய் வள்ளியங் காடு பிறக்கு ஒழிய - முதிரங் காயையுடைய வள்ளியங்காடு பின்னாகும்படி, துனைபரி துரக்கும் செலவினர் - விரைந்து செல்லுங் குதிரையை மேலும் தூண்டிச் செலுத்தும் செலவினை யுடையராய் வந்தவருடைய, வினை விளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே - போர்வினைக்கண் தமது திறம் மிக்கு விளங்கும் நெடிதாகிய தேரைப்பூண்ட குதிரைகள்.

கருத்துரை : வெட்டி வென்று பகைவர் விரும்பும் நிலங்களைக் கவர்ந்த திரண்ட பெரிய படையோடே வெற்றி குறித் துயர்த்தும் கொடியை உயர்த்து, அவ் வெற்றிக்கேற்ப ஊதுகொம்பும் சங்கும் முழங்கவும் நுண்மணலிடத்தே காயா மலரவும், தளிரையும் கொத்துக்களையுமுடைய கொன்றை மலர் சொரியவும், காந்தள் மலரவும், இதழ் நிறைந்த பூப்பவும், காடு தழைத்த செவ்விய முல்லைநிலப் பெருவழியிலே, வரகினிடத்தே கலைகளும் மான்களும் துள்ளவும் கார்காலத் தொடக்கமாகிய ஆவணித் திங்கள் முதலில் வள்ளியங்காடு பின்னாகும்படி இயல்பிலேயே விரைந்து செல்லுங் குதிரைகளை மேலும் தூண்டிச் செலுத்துஞ் செலவினையுடையராய் வந்தவருடைய வினைத்திறம் விளங்கும் தேர்பூண்ட குதிரைகள் என்பதாம்.

அகலவுரை : கிடந்தோள் அஞ்செவி நிறைய ஆலின, செலவினர் தேர்பூண்ட மா என்று அணுக இயைத்துக் காண்க. வென்று - இவ்வாறு பாசறையிடத்தே தங்கிப் போர்செய்து வென்று என்றவாறு. பிறர் - பகைவர். வேண்டுபுலம் - விரும்பும் நிலம். இம் மன்னன் படை பகைவரானே அழிக்கப்படாமை தோன்ற ஈண்டுபெருந்தானை என்றார். ஈண்டுதல்-திரளுதல். தானை - படை. விசயம் - வெற்றி; வடமொழி. வெல்கொடி என்றது, வெற்றிக்கொடி என்னும் பெயர் மாத்திரையாய் நின்றது. வெற்றிகுறித் துயர்த்தும் வெற்றிக்கொடி என்றவாறு. உயரி - உயர்த்து, வலன் நேர்பு எனக் கண்ணழித்து அவ் வெற்றிக்குப் பொருந்துவதாக என்க. பொருந்துமாறு பெரிதும் முழங்கின என்பது கருத்து. அயிர - அயிரின் கண்ணவாகிய. அயிர் - நுண்மணல். நுண்மணலிடத்தே காயா செழித்து வளரும் இயல்புடையதாதலை நோக்கியறிக. செறியிலை - நெருங்கிய இலை. காயா - ஒருவகைச் செடி. அஞ்சனம் - மை. மைபோலப் பூப்ப என உவம உருபு விரித்தோதுக. முறி - தளிர். இணர் -கொத்து. கொன்றை மலர் உதிர்தல் பொன்சொரிவது போன்றிருந்ததென்க. பொன்-கொன்றை மலர்க்கு உருவுவமை. கால - சொரிய. கோடல் - வெண்காந்தள். குவிமுகை - குவிந்த அரும்பு. இதன் மலர் கைபோன்றிருத்தலின் கை அவிழ என்றார். அவிழ்தல் - மலர்தல். கைபோற் பூத்த கமழ்குலைக் காந்தள், (19-76) எனப் பரிபாடலினும் வருதல் காண்க. தோன்றிப் பூவிற்குக் குருதி உவமை. தோன்றி - செங்காந்தள். குருதிப் பூவின் குலைக்காந் தட்டே (குறுந். 1-4) என்றார் பிறரும்.

திரிமருப்பு - முறுக்குண்ட கொம்பு. இரலை - கருமான். இதனைப் புல்வாய் என்றுங் கூறுப இரும்புதிரித்தன்ன மாயிரு மருப்பின்... இரலை (அகம். 4: 3-4) என்றும், திரிமருப் பிரலைய காடிறந் தோரே (அகம். 133-18) என்றும், பிறசான்றோரும் கூறுதலறிக. மடமான் - மடப்பமுடைய கண்ணையுடைய மான். உகளுதல் - தாவிக் குதித்தல். பெருங்கவின் பெற்ற சிறுதலை நௌவி மடக்கட் பிணையொடு மறுகுவன உகள (275-6) என்று மதுரைக் காஞ்சியினும், அறுகோட் டிரலையொடு மான்பிணை யுகளவும் (275) எனப்பட்டினப்பாலையினும், வருதல் காண்க. இங்குக் கூறப்பட்ட காயா முதலியனவும் மான்களும் முல்லைநிலக் கருப்பொருள் என்க. செறியிலைக் காயா அஞ்சனம் மலர என்றற் றொடக்கத்து அடிகளோடே,

அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும்
தலைநாட் செருந்தி தமனிய மருட்டவும்
கடுஞ்சூன் முண்டகம் கதிர்மணி கழாலவும்
நெடுங்காற் புன்னை நித்திலம் வைப்பவும்
........            ...........           ........    ...........
பைந்நனை அவரை பவழங் கோப்பவும்
கருநனைக் காயா கணமயி லவிழவும்
கொழுங்கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவும்
செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும்  (146-167)

எனவரும் அமிழ்துவிளை தீஞ்சுவைச் சிறுபாணாற்றுப்படை யடிகளை ஒப்பு நோக்குக. எதிர்காலத்தே பெய்தற்குச் செல்லும் வெண்முகில் என்க. எதிர் காலம் ஈண்டுக் கார்காலம். துனைபுரி துரக்கும் செலவென்றது, இயல்பாகவே விரைந்துசெல்லும் இயல்புடைய குதிரைகளை மேலும் தூண்டிச் செலுத்தும் செலவு என்றவாறு. இது தலைவன் தலைவியைக் காண்டற்குப் பெரிதும் அவாவுற்ற தன்மையைக் காட்டும் குறிப்பேதுவாதலறிக. மனம் விரைந்து செல்லுமளவிற்குத் தேர் செல்லாமையின் மீண்டும் தூண்டினர் என்பது எத்துணை விரைந்து செல்லினும் மனவிரைவோடு இயைந்து செல்லாமையால் ஓடுகிற மேகங்காள் ஓடாத தேரில்வெறும் கூடு வருகுதென்று கூறுங்கோள் (நந்திக்கலம் பகம்) எனப் பிற்றைநாள் ஒரு தலைவன் கூறுவானாயினன். திங்கள் - ஆவணித் திங்கள்.

இனி, 80 - துயருழந்து என்பது தொடங்கி, 103 - தேர்பண்டமாவே என்னுந் துணையும் துயருழந்து புலம்பொடு தேற்றியும், திருத்தியும் உயிர்த்தும் நடுங்கி நெகிழ்ந்தும் விளக்கு அழல, எழுநிலைமாடத்து இறைச் சொரிதரும் அருவி இசை ஓர்ப்பனள் கிடந்தோள், அஞ்செவி நிறைய தானையொடு கொடியுயரி ஆர்ப்பக் கானம் நந்திய செந்நிலப் பெருவழியில் காடு பிறக்கொழியத் துரக்கும் செலவினர் நெடுந்தேர் பூண்டமா ஆலின என, இயைபு காண்க. இனி, இம் முல்லைப்பாட்டின்கண் வினைமுடிவை வருமாறு காண்க.

எழிலி பெரும்பெயல் பொழிந்த மாலைக்காலத்திலே பெருமுது பெண்டிர், யாம் ஊர் மருங்கிற் போகித் தொழுது விரிச்சி நிற்ப ஆய்மகள் கன்றின் அலமரல் நோக்கி நுந்தாயர் கோவலர் உய்த்தர இன்னே வருகுவர் என்போள் நன்மொழி கேட்டனம்; அதனானும், நல்லோர் வாய்ப்புள், நல்ல ஆதலானும் நின் தலைவர் வினைமுடித்து வருதல் வாய்வது; மாயோய் நின் எவ்வங் களையெனக் காட்டவும் காட்டவும் காணாள் கலுழ்ந்து கண்முத்து உறைப்பப் பாசறையில் இன்றுயில் வதியும் தலைவன் வருகையைக் காணாளாய்த் துயருழந்து புலம்பொடு நீடுநினைந்து தேற்றியும் திருத்தியும் உயிர்த்தும் இசை ஓர்ப்பனள் கிடந்தோளுடைய அஞ்செவி நிறைய துனைபரி துரக்கும் செலவினர் தேர்பூண்ட மா ஆலின என்க.

வெண்பா

வண்டு அடைந்த கண்ணி வளர் ஆய்ச்சி வால் நெடுங் கண்
சென்று அடைந்த நோக்கம் இனிப் பெறுவது  என்றுகொல்
கன்று எடுத்து ஓச்சி, கனி விளவின் காய் உகுத்து,
குன்று எடுத்து நின்ற நிலை?  1

புனையும் பொலம் படைப் பொங்கு உளை மான் திண் தேர்
துனையும் துனைபடைத் துன்னார்  முனையுள்
அடல் முகந்த தானை அவர் வாராமுன்னம்,
கடல் முகந்து வந்தன்று, கார்!  2

காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடிய முல்லைப்பாட்டும், பெருமழைப்புலவர், பொ.வே.சோமசுந்தரனார் எழுதிய உரையும் முற்றுற்றன.

 
மேலும் முல்லைப்பாட்டு »
temple

சங்கத் தமிழ் இலக்கியத்தில் பத்துப்பாட்டு என அழைக்கப்படும் தொகுதியின் ஒரு பகுதியே முல்லைப் பாட்டு. ... மேலும்

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.