Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குறிஞ்சிப்பாட்டு
முதல் பக்கம் » குறிஞ்சிப்பாட்டு
குறிஞ்சிப்பாட்டு நூலாசிரியர் வரலாறு
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 செப்
2012
02:09

பத்துப்பாட்டு எனும் சங்கத் தமிழ் நூல் தொகுப்பில் அடங்கியது குறிஞ்சிப் பாட்டு. கபிலர் என்னும் புலவர் பாடியது இப்பாடல். 261 அடிகளாலான இப் பாடல் அகப்பொருள் சார்ந்த பாடலாகும். தினைப்புலம் காக்கச் சென்ற தலைவி ஒரு ஆண் மகனிடம் மனதைப் பறி கொடுக்கிறாள். பல காரணங்களினால் அவனைச் சந்திக்க முடியாமல் தவிக்கும் தலைவியின் நிலையை, அவள் தாய்க்கு எடுத்து விளக்குகிறாள் அவள் தோழி. இதுவே குறிஞ்சிப் பாட்டின் உள்ளடக்கம்.

நூலாசிரியர் கபிலர் வரலாறு: ஆன்றோர் புகழ்ந்த அறிவினிற் றெரிந்து சான்றோர் உரைத்த தண்டமிழ்த் தெரியல் ஒருபது பாட்டினுள், எட்டாம் எண்ணுமுறைக்கண் நின்ற இக் குறிஞ்சிப்பாட்டை இயற்றியவர், கபிலர் என்னும் நல்லிசைப்புலவர் என்ப. இவர், செந்தமிழ்ப் பாண்டிநாட்டின்கண் உள்ள திருவாதவூர் என்னும் மூதூரிற் பிறந்தவர் என்று திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில்,

நீதிமா மதூக நீழல் நெட்டிலை இருப்பை என்றோர்
காதல்கூர் பனுவல் பாடும் கபிலனார் பிறந்த மூதூர்
சோதிசேர் வகுள நீழற் சிலம்பொலி துலங்கக் காட்டும்
வேதநா யகனார் வாழும் வியன்றிரு வாத வூரால்.

என்னும் செய்யுளில் கூறப்படுகிறார். இவர் அந்தணர் குலத்தவர் என்பதனை, அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே (புறம்-201) எனத் தம்மையே இவர் கூறிக்கொள்வதனானும், மாறோக்கத்து நப்பசலையார் இவரையே புலனழுக் கற்ற அந்தணாளன் (புறம்-129) எனப் போற்றிக் கூறுதலானும் உணரலாம். புலவர் பெருமானாகிய கபிலர் உயிர்வாழ்ந்திருந்த காலத்தே, பாரி பாரி என்று சான்றோர் ஏத்திப் புகழ்ந்த வள்ளற் பெருமானும் வாழ்ந்திருந்தான். அக்காலத்தே அவன் வழங்கிய கொடைச் செயலின் புகழ் அடுக்கிய மூன்றுலகும் கேட்கலாயிற்று. அப் புரவலன் அவைக்களத்தே, கபிலர் முதலிடம் பெற்றனர்; அவ் வள்ளற் பெருமானின் ஆருயிர் நண்பராகவும் இவர் விளக்குவாராயினர்.

குறுநில மன்னனாகிய பாரியின் பெரும்புகழ், உலகெலாம் பரவுதலறிந்து அக்காலத்தே அரசு வீற்றிருந்த முடிவேந்தராகிய, சேர சோழ பாண்டியர் மூவரும் அழுக்காறுற்றனர். கொடுப்ப தழுக்கறுக்கும் கொடிய வேந்தர் மூவரும், பாரியை வீழ்த்தும் கருத்தால் ஒன்றுபட்டு, மகட்கோடல் காரணமாக மாபெரும் படையுடன் திரண்டு வந்து, பாரியின் பறம்பினை முற்றுகையிட்டனர். அப்பொழுது, அஞ்சா நெஞ்சமுடைய நங்கபிலர் அம் மூவேந்தர் முன்னர்த் துணிந்து சென்று, அவர் நெஞ்சகத்தை ஊடுருவிச் செல்லும்படி தமது திண்ணிய சொல்லம்பைத் தொடுத்து அழுக்காறுற்ற அம் மன்னர்களின் சிறுமையையும், பறம்பின் வளத்தையும், பாரியின் மறச்சிறப்பையும் கொடை நலத்தையும் ஓதிய தீஞ்சுவை கெழுமிய வீரப் பாடல்கள் உள்ளம் உருக்கும் தன்மையன.

தமிழ்நாட்டு வேந்தீர்! நீவிர், இக் காட்டகத்தே நிற்கும் மரங்கள்தோறும் பிணிக்கத்தக்க எண்ணிறந்த யானைகளைக் கொடுவருவீரேனும், நிலப்பரப்பெல்லாம் அடைய நிறுத்தற்குரிய எண்ணிறந்த தேர்களைக் கொடுவருவீரேனும், நுங்கள் போர் முயற்சியால், பறம்பு கொள்ளற்குரிய எளிமைத் தன்றென எண்ணுமின்! அகலத்தானும், உயரத்தானும் அம்மலை விசும்பினை ஒக்கும். அம் மலைக்கண், விண்மீன் எத்துணையுள! அத்துணைத் தெண்ணீர்ச் சுனைகளும் உள்ளன. மேலும், மானிடர் உழுதொழில் முதலியவற்றால் வருந்திப் பெறவேண்டாமல் இயற்கையிலேயே அப் பறம்புமலை நால்வகை உணவுப் பொருளையும் அப் பாரிபோன்றே தன்கண் வாழ்வார்க்கு வழங்கும் வண்மையுடைத்து. அம் மலைக்கண் உள்ள மூங்கில் வேண்டுமளவு நெல்லினை ஈன்றளிக்கும்; பலாமரங்கள், எண்ணிறந்த தீஞ்சுளைக் கனிகளை ஈன்று வழங்கும்; கொழுவிய கொடிகளை யுடைய வள்ளி, பரிய பரிய கிழங்குகளை வீழ்த்தவும்; அக்குன்றம் தன்பாற் குரங்கு பாய்தலால், இடையறாது தீந்தேன் பொழிந்து நல்காநிற்கும்; இத்தன்மைத்தாகலின், நும்முயற்சியால் இம் மலை கொள்ளற்பாற்றன்று; நும் வாட்படையானும் கொள்ளற் கியலாது.

வேந்தீர்! பறம்பினை நீயிர் கைப்பற்றவே வேண்டும் என எண்ணுதிரேல், அதற்கு யான் மிக எளிதாகிய வழி கூறுவல் கேண்மின்! நும் வில், வேள், வாள் முதலியவற்றை விட்டெறிமின்! யாழ் பயிலுமின்! நும் மகளிர்க்குக் கூத்தியல் பயிற்றுமின்! அவரை நும் பின்னர் அழைத்துக்கொண்டு அம் மகளிரை ஆடவிடுத்து, நீயிரும் அவர் ஆடற்கியையப் பாடிச் செல்லுமின், அங்ஙனம் செல்வீராயின், அவ் வள்ளற்பெருமான் அவன் நாடுகளையும் பறம்பு மலையையும் ஒருசேர நுமக்கு வழங்குவன்! என்பது அக் கபிலர் கூறிய செய்யுளின் கருத்து. அடல்வேந்தர் மூவர் முன்னர் நின்று, அஞ்சாது இங்ஙனம் உரைத்த கபிலரின் மறம், சிறந்த போர்மறவரிடத்தும் காண்டல் அரிதேயாம். தம் நண்பனுக்கு உற்றுழி உதவும் இவர்தம் சால்புடைமையும், ஒப்பற்றதேயாம். கபிலருடைய வாழ்நாளில் முற்பகுதி ஒப்பற்ற இன்பமுடையதாக அவர்க்கு நிகழ்வதாயிற்று. அக் காலத்தே, இவர் தம் உளக்கோயிலில் வீற்றிருந்தருளிய தெய்வத் தீந்தமிழ் அன்னைக்குச் சிறந்த அணிகலன் பற்பல இயற்றி, அணிந்து அணிந்து மகிழ்வாராயினர். சங்கநூல்கள் என யாம் போற்றும் நம் இலக்கியச் செல்வங்களுள், பாட்டும், தொகையும். கீழ்க்கணக்கும் ஆகிய முத்திறத்து இலக்கியங்களுள்ளும் இப் புலவர் பெருமான் இயற்றிய தீஞ்சுவைச் செய்யுள்கள் திகழ்கின்றன. இம் முத்திறத்து நூலுள்ளும் இவர் இயற்றியனவாக இன்று நம் கைக்கெட்டிய செய்யுள்கள் 279 என்ப.

இருநூற்றெழுபத்தொன்பது செய்யுட்களில், தொண்ணூற்றொரு செய்யுள் குறிஞ்சித்திணை என்னும் அகப்பொருள் பற்றியன. அவையிற்றுள்ளும் அடியினால் நீளிதா யமைந்தது இக் குறிஞ்சிப்பாட்டாகும். குறிஞ்சி நிலத்திலே தோன்றிக் குறிஞ்சி நிலத்திலேயே பயின்று, அந்நிலத்தின் முதல் கருஉரி என்னும் முத்திறத்த பொருள்களையும், நுண்ணிதின் உணர்ந்து அவ்வுணர்ச்சி முதிர்வினால் இவர் யாத்த செய்யுள்கள் ஒப்பற்ற நலன் உடையனவாகத் திகழ்கின்றன.

தவமுண்மையால், செய்யுளின்பம் நுகரும் பேறு பெற்றான் ஒருவன், தான் பயிலும் செய்யுளின்கட் கிடந்து தனக்கு ஆராவின்பம் நல்கிய சுவைமிக்க அடியொன்றனைப் பயின்று, இன்புற்றதனைத் தன்னோடொத்த உணர்ச்சியுடைய தன் நண்பனுக்கேயும் இவ்வடி ஆற்றவும் இன்பமுடைத்தெனச் சுட்டிக் காட்டுதலொழிந்து, இவ்வாற்றான் இத்தகைய இன்பம் நல்கிற்று இவ் வடியெனக் கூறிக்காட்டுதல் இயலாதாம்; என யாரோ ஒரு மேலைநாட்டுப்புலவன் விளம்பிய மொழி என் நினைவில் வருகின்றது. கபிலருடைய செய்யுள் அனைத்தும், சொல் சொல்லாக ஓதுமிடத்தும், அடியடியாக ஓதுமிடத்தும், செய்யுள் செய்யுளாக ஓதுமிடத்தும் ஆற்றொணாத இன்பம் நல்கும் இயல்புடையன. அவற்றுள் ஓர் அடி இன்பமுடைத்து; ஒன்று, அத்துணை இன்பமுடையதன்றெனக் கூறுதலும் சாலாது. அவர்தம் செய்யுட் சிறப்பை இங்ஙனம் கூறிவிடுதலொழிந்து சொல்லானே அவைதரும் இன்பத்திற்குக் காரணங் கூறி விளக்குதல் எம்மனோர்க்கு இயலாதாம்.

கபிலர் காலத்தே இத் தமிழகம் மிகச் சிறந்த நிலையிற் றிகழ்ந்திருந்தது. கபிலர் போன்ற நல்லிசைப் புலவரும் பற்பலர் அக் காலத்தே திகழ்ந்திருந்து தமிழாக்கம் செய்து போந்தனர். மேலும், பாரியேபோன்று ஒப்பிலாப் புரவலரும் பலர் அக்காலத்தே திகழ்ந்து, கலைவாணரையும், நாட்டையும், நிரலே கொடையாலும், கோன்முறையாலும் புரந்து வந்தனர். அகுதை, இருங்கோவேள், ஓரி, சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன், நள்ளி, பாண்டியன், மலையமான் திருமுடிக்காரி, விச்சிக்கோ, வேள்பாரி, வையாவிக்கோப் பெரும்பேகன், மலையன் என்னும் புரவலர்களைக் கபிலர் பாடியுள்ளார். இவருள், ஓரி, நள்ளி, மலையமான் திருமுடிக்காரி, பாரி, வையாவிக்கோப் பெரும்பேகன் என்னும் ஐவரும் செந்தமிழ்நாட்டு வள்ளல் எழுவருடைய நிரலில் உள்ளவராதல் அறிக.

நக்கீரர் முதலிய பெரும்புலவர்களாலும் வியந்து புகழப்படும் சிறப்புடையர் இக் கபிலர்.

உலகுடன் றிரிதரும் பலர்புகழ் நல்லிசை
வாய் மொழிக் கபிலன்  (அகம்-78)

என நக்கீரனாரும்,

உவலைக் கூராக் கவலையி னெஞ்சின்
நனவிற் பாடிய நல்லிசைக்
கபிலன் பெற்ற ஊரினும் பலவே  (பதிற்-85)

எனப் பெருங்குன் றூர்க் கிழாரும்,

செறுத்த செய்யுள் செய்செந் நாவின்
வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்  (புறம்-53)

எனப் பொருந்திலிளங் கீரனாரும்,

புலனழுக் கற்ற அந்த ணாளன்
இரந்துசென் மாக்கட் கினியிட னின்றிப்
பரந்திசை நிற்கப் பாடினன்.  (புறம்-126)

என மாறோக்கத்து நப்பசலையாரும், நெஞ்சார இப்புலவர் பெருமானைப் போற்றிப் புகழுதலால் இவருடைய கீர்த்தியும், கல்வி நலனும், தூய்மையும், சான்றாண்மையும் உணரப்படும். இவர், செல்வக் கடுங்கோ வாழியாதனைச் சிறப்பித்துப் பாடிய செய்யுள்கள், பதிற்றுப்பத்தின் ஏழாம்பத்தாக நின்று திகழ்கின்றன. அவையிற்றின் அருமையுணர்ந்த அப்புரவலன், மனமகிழ்ந்து வழங்கிய பரிசில் சிறுபுறமென நூறாயிரங் காணங் கொடுத்து, நன்றா வென்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ என அவ்வேழாம்பத்தின் பதிகம் கூறுதலான் உணரலாம். அகங்கை புறங்கையானாற் போன்று, கபிலருடைய வாழ்நாளின் இறுதிநாட்கள் அவர்க்கு எல்லையற்ற இடர் தருவனவாக அமையலாயின. வேள்பாரியின்பாற் பொறாமை கொண்ட வேந்தர் பாரியைக் கொன்று தீர்த்தனர். உலகோம்பிய மாபெரும் வள்ளலாகிய பாரியின் மகளிர், ஆதரவற்று ஏழையாயினர். அந்நிலையிலே, செய்ந்நன்றிதேரும் சான்றோராகிய கபிலம் அம் மகளிர்க்குத் தந்தையாகி, அவரை அவர் தகுதிக்கேற்ற மன்னர்க்கு மணம் புரிவித்து வாழ்விக்கப்பட்ட பாட்டினை உள்ளுங்கால் உள்ளம் உருகும்.

பாரி மாய்ந்த பின்னர், அவ்வள்ளலின் மகளிர்க்கு ஏதம் நிகழாவாறு, அந்தணரில்லத்தே சேர்த்தற் பொருட்டு அவரை உடனழைத்துக் கொண்டு பறம்பு மலையை நீத்தகலும் கபிலர், அம்மலையை நோக்கிக் கூறிய கையறுநிலைச் செய்யுளைக் கேண்மின்;

மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும்
அட்டான் றானாக் கொழுந்துவை ஊன்சோறும்
பெட்டாங் கீயும் பெருவளம் பழுநி
நட்டனை மன்னோ முன்னே இனியே,
பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று
நீர்வார் கண்ணேந் தொழுது நிற்பழிச்சிச்
சேறும் வாழியோ பெரும்பெயர்ப் புறம்பே
கோறிரண் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறிரும் கூந்தற் கிழவரைப் படர்ந்தே 

என்பது. வரலாற்றுணர்ச்சியோடே இச் செய்யுளையும், பாரி மாய்ந்த பின்னர் இப் புலவர் பெருமான் பாரியையும், பறம்பையும் குறித்துப் பாடிய ஏனைச் செய்யுள்களையும் ஓதுவோர் இப் புலவர்பெருமானின் சான்றாண்மை, மெய்யன்பு, கலைத்திறம் முதலியவற்றை ஒருங்கே உணர்தலோடு, பாரிக்காக அழும் இவர் பொருட்டுக் கண்கலங்கி அழாமலிருத்தல் இயலாதாம்.

இனிப் பாரிமகளிரைப் பெரிதும் முயன்று மலையன் என்னும் மன்னனுக்கு மணம் புரிவித்தனர் என்றும், அதன் பின்னர் பாரியின் பிரிவாற்றாமையான் வடக்கிருந்து உயிர் நீத்தனர் என்றும் கூறுப. பெண்ணைப் பேரியாற்றங்கரையில் தீப்பாய்ந்தனர் என்றும், ஆண்டு அவர் நினைவின் பொருட்டு நடப்பட்ட கல் உளதென்றும் அதனைக் கபிலக்கல் என்று வழங்குகின்றனர் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுப. இனி விளங்கு புகழ்க் கபிலருடைய செய்யுட்களிற் கிடைக்கும் அகச் சான்றுகள் கொண்டு ஆராயுமிடத்து, சமயக் கோட்பாட்டில் இவர் திருவள்ளுவரும், இளங்கோவடிகளாரும் போன்று, எம்மதமும் சம்மதமே எனக் கொள்ளும் விரிந்த மனம் உடையவராகவே காணப்படுகின்றார். இவர் சிவன், திருமால், பலதேவர், பிரமன், முருகன் முதலிய கடவுளரைப் போற்றிப் பாடியுள்ளார்.

இப் புலவர்பெருமான் பாடிய செய்யுட்களால் அக்காலத்தே தமிழகம் எய்தியிருந்த நாகரிகச் சிறப்பும், அவர்களின் ஒழுகலாறுகளும், பற்பல புரவலர்கள், அரசர்கள் முதலியோர் வரலாறுகளும், அக்காலத்தே சிறந்து விளங்கிய நகரம், மூதூர் முதலியவற்றின் தன்மையும் நன்கு புலனாம். இவர் இக் குறிஞ்சிப்பாட்டை ஆரிய அரசன் பிரகத்தன் என்பானுக்குத் தமிழறிவுறுத்தற் பொருட்டு யாத்தனர் என ஒரு வரலாறு கேட்கப்படுகின்றது. இவர் செய்யுட்களில் அயிரைமலை கொல்லிமலை பறம்புமலை முள்ளூர்மலை முதலியனவும், பறம்புநாடு கிடங்கில் கொடுமணம் பந்தர் மதுரை முள்ளூர்க்கானம் முதலிய இடங்களும் குறிக்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய செய்யுள்கள், நற்றிணையினும், குறுந்தொகையினும், ஐங்குறுநூற்றினும், பதிற்றுப்பத்தினும், அகநானூற்றினும், புறநானூற்றினும், பத்துப்பாட்டினும் காணப்படுகின்றன. இன்னாநாற்பது இவர் இயற்றிய தனிநூல் ஆகும். இவர் பாடியனவாகக் கூறப்படும் வேறுசில பாடல்களும் உள்ளன.

அறிமுகம்

அன்பே கடவுள் : அவ்வன்பினைத் தம்முள்ளத்தே வளர்த்துக் கோடலே, மக்கள் வாழ்க்கையின் சீரிய குறிக்கோள் ஆதல் வேண்டும்; என்பது நம் பெரியோர் கொள்கையாம்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

என்னும் பொய்யாமொழியானும் இக்கருத்து வலியுறும். மக்கள் அகத்தின்கண் உறையும் இவ் வன்பினையே அகப்பொருள் என்று போற்றுவாராயினர் நம் முன்னோர். ஒரு விதையின்கண் அமைந்த முளைத்தற்குரிய ஆற்றல் போன்று, உயிரின்கண் உறைவது இவ்வன்பு. அவ்வாற்றல் தொழிற்பட்டுக் கன்றாகி மரமாகித் தழைத்து அரும்பி மலர்ந்து காய்த்துக் கனிதற்குத் துணையா யமைகின்ற, நிலனும் நீரும் காற்றும் ஒளியும் வெளியும் காலமும் எருவும் போல்வனவாய், அன்புதொழிற்பட்டு வளர்வதற்கு இன்றியமையாதனவாய் பொருள்கள் அனைத்தும் புறப்பொருள் எனப்பட்டன. அன்பென்னும் அக் கடவுட் பண்பு தடற்றுள் வாளும், குடத்துள் விளக்கும்போலப் புறத்தார்க்கும் புலனாகத் தந்து காட்டலாகா நுண்பொருளாம். அதன் உண்மை, அதன் தூண்டுதலாலே நிகழும் சொல்லானும், செயலானுமே உணரவும், உணர்த்தவும் படும்.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்

என்னுந் திருமறையானும் இக் கருத்துத் தெள்ளிதின் விளக்கமாம். அன்பெனினும் காதல் எனினும் ஒக்கும்; அன்பின் தூண்டுதலாலே நிகழும் ஒழுக்கம் அகத்திணை எனப்படும். திணை எனினும் ஒழுக்கம் எனினும் ஒக்கும்; இவ் வொழுக்கத்தை,

கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப

எனத் தொல்காப்பியனார் ஓதுவர்.

இவ் வெழுவகை ஒழுக்கங்களுள், முன்னின்ற கைக்கிளை காமஞ் சாலா இளமையோள்வயின் ஏமஞ் சாலா இடும்பை எய்திய, ஒருதலைக் காமம் ஆதலான் அக்கைக்கிளை ஒழுக்கமும், இறுதியினின்ற பெருந்திணை என்பது ஏறிய மடற்றிறம், இளமை தீர்திறம், தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம், மிக்க காமத்து மிடம் என்னும் நால்வகையானும், பிறவாற்றானும் அன்பொடு பொருந்தாக் காமம் ஆதலான் அதுவும் இழுக்குடையன எனப்படும். இவற்றிடை நின்ற ஐந்துவகை ஒழுக்கங்களையுமே, அன்பொடு மரீஇய அகனைந்திணை எனச் சான்றோர் போற்றுவர். அன்பொடு மரீஇய அகனைந்திணை குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்னும் குறியீடுகளால் ஓதப்படும். பாடல் சான்ற புலனெறி வழக்கில் இவை நிரலே, புணர்தல், இருத்தல், பிரிதல், ஊடல், இரங்கல் என்னும் பொருளவாம்.

இனி, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவுறுத்து முகத்தான், ஆற்றல்சால் கேள்வி அறம்பொருள் இன்பத்தைப் போற்றிப் புனைந்த பொருளிற்றாய், செறுத்த செய்யுள் செய்செந் நாவின், வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலர் என்னும் நல்லிசைப் புலவர் இயற்றியருளிய இத் தீம்பாடல், அகனைந்திணையுள் குறிஞ்சித் திணையை நுதலிய பொருளாகக் கொண்டெழுந்தமையால், குறிஞ்சிப்பாட் டென்று கூறப்பட்டது. இக் குறிஞ்சித் திணைபற்றி எழுந்த பாடல்களில் இது நீளிதாய், இருநூற்றறுபத் தோரடிகளைக் கொண்டியங்குதலாலே பெருங் குறிஞ்சி என்னும் பெயரும் உடையதாம்.

அயன்மொழியாளனாகிய ஆரிய மன்னனுக்குத் தெய்வத் தீந்தமிழின் சுவைநலனையும் அதன்கட் கிடந்த தமிழ்மக்களின் வாழ்க்கைக் குறிக்கோளையும், அதனை எய்திக்கோடற் கியன்ற அவர்தம் வாழ்க்கைநெறி, பண்பாடு முதலியவற்றையும், எஞ்சாது ஒருங்குணர்த்த, கபிலர் அவையிற்றிற்கு நிலைக்களனாகத் திகழும் புணர்தல் என்னும் இவ் வொழுக்கத்தைத் தம் செய்யுட்கு உயிராக அமைத்துக்கொண்டது சாலப் பொருந்துவதேயாம். பேரியாற்றின் இருமருங்கினும் மக்கள் வழங்கும் உண்டுறை பல அமைந்தாற் போன்று, இக் குறிஞ்சித் திணைக்கண் அமைந்த உட்பகுதிகளும் பற்பல; அவை துறையெனப்படும். அத்துறையுள்ளும் தம் கருத்திற்கேற்பத் தண்டமிழின் பண்பாட்டை விரித்தற்கேதுவாக அமைந்த அறத்தொடு நிலை என்னும் ஒரு சிறந்த துறையிலே கபிலர் தம் பனுவலை யாப்பாராயினர் என்க.

இனி, மக்கள் நுதலிய அகனைந்திணையும் சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர் என்னும் புலனெறி வழக்கிற் சிறந்த ஐந்திணைக்கென ஆணை கூறிய தொல்காப்பிய வரையறையின்படி, சுட்டி ஒருவர் பெயர் கொள்ளாது, செந்தமிழ் மாந்தர் அனைவர்க்கும் பொதுவுற ஆடவர், மகளிர் என்னும் இருபாலார் மாண்பிற்கும் இட்டதலை வரம்பாவார் இவர் எனக் கலைத்திறனாலே உருவாக்கித் திணைப்பெயரானே வழங்கப்படுபவராகிய கிழவன் கிழத்தியருள், கிழவிக்கு உயிராய் உசாத்துணையாய் அமைபவள் தோழி என்க. தலைமக்களிருவருடைய அகவாழ்வின்கண் இத்தோழியை மறைத்தொழுகற்பாலது யாதும் இல்லை; ஆதலின், அவர்தம் நெஞ்சந் திறந்து நோக்கும் தகுதியும், அவையிற்றைக் கூறும் உரிமையுமுடைய இத் தோழியின் கூற்றாக நிகழும், அறத்தொடு நிலை என்னும் இத்துறை வாயிலாய்க் கபிலர் பெருமான் ஆரிய மன்னனுக்கு,

சொல்லென்னும் பூம்போது தோற்றிப் பொருளென்னும்
நல்லிருந் தீந்தாது நாறுதலால் - மல்லிகையின்
வண்டார் கமழ்தாம மன்றே மலையாத
தண்டாரான் கூடற் றமிழ்

என்று புலவர் போற்றும் தண்டமிழ்த் தீஞ்சுவையை அறிவுறுப்பாராயினர் என்க.

நம் பண்டை நாள் தண்டமிழ்ப் பழம்பனுவ லின்பத்தை நுகர விரும்புவோர், அகம், புறமென்னும் இருவழியும், அவையிற்றின் திணை, துறை முதலிய இயல்களை நன்கு உணர்தல் வேண்டும். இவ்வியல்கள், அவ்விலக்கியச் செல்வமாகிய இன்ப நிறைந்த கருவூலங்களைத் திறந்து நுகர்தற்குரிய திறவுகோல்களாகத் திகழ்வன. ஆகலின், இவையிற்றை உணராதார், அவ்விலக்கியங்களையும் உணராதவரே ஆவர். இனி, இக் குறிஞ்சிப்பாட்டை இனிது உணர்ந்து கொள்வோர் இன்றியமையாதுணர வேண்டிய அறத்தொடு நிலை என்னும் துறைபற்றிச் சிறிது விளக்குவாம்.

பண்டும் பண்டும், பலப்பல பிறவிகளில் இன்றியமையாது உயிர் ஒன்றி, ஒருகாலைக் கொருகால் அன்பு முதலிய பண்புகள் சிறத்தற்கு ஏதுவாகிய ஊழ் என்னும், பால்வரை தெய்வத்தின் ஆணையாலே ஒரு பூம்பொழிலின்கண், பிறப்பு முதலிய பத்தும், ஒத்த தலைமகனும் தலைமகளும் தம்முள் தலைப்பெய்து கண்டனர். அக் காட்சிமாத்திரையானே, செம்புலப் பெய்நீர்போல அவர் தம் அன்புடை நெஞ்சம் கலந்தன; உளத்தானே இருவரும் ஒருவரேயாயினர். ஊழுண்மையான், இவ்வாறு ஒன்றுபடும் காதற்கேண்மையை இயற்கைப்புணர்ச்சி அல்லது தெய்வப் புணர்ச்சி என இயல்நூலோர் ஓதுப.

பால்வரை தெய்வத்தின் ஆணையால், இங்ஙனம் ஒன்றுபட்ட காதலிருவரும் குறியிடங்களிற் கூடியும், பிரிந்தும் வருங்கால், தலைவி தன் பெற்றோரால் இல்லத்தினின்றும் வெளியேறாதபடி காக்கப்பெற்று இல்லிலே தங்கிவிடுவாள். இந்நிலையில், தலைவன் அவளைக் காணாதமைகலனாய் இடையாமத்துப் பேரிருளில் எண்கும் வெண்கோட்டியானையும் அரவும் உருமும் புலியும் வரையரமகளிரும் வழங்கும் ஏதமிக்க மலை வழியில் தலைவியைக் காண்டற்கு வருகுவன். இவ்வுலகில் ஒவ்வொரு செயற்கும் பற்பல இடுக்கண் உளவாதல் கண்டாமன்றே! அங்ஙனமே, தலைவன் தலைவியைக் காண்டற்கும் பற்பல இடும்பைகள் உளவாம். அவன் நள்ளென் யாமத்து வருதலால், வள்ளுகிர்க் கடுங்கண் நாய்கள் குரைக்கும்; ஊர்காக்கும் தறுகட் காவலர் கடுகுவர்; நிலவு வெளிப்பட்டுப் பகல்போலக் காயும்; தாய் துஞ்சாள். இன்னோரன்ன இடையூறுகளான் தலைவன் தலைவியைக் காணப்பெறானாய் வருந்தித் தான் வந்தமை குறிக்க ஏதேனும் சில குறியீடுகள் செய்து வந்தவழி வறிதே மீள்வன்.

இனி, இவன் நிலை இன்னதாக; இற்செறிக்கப்பட்ட தலைவியும், தன்னுயிரன்ன கேளிரைக் காணப் பெறாளாய்க் கண்கள் விதுப்புற்று அவனைக் காட்டு காட்டெனத் தன்னைத் தின்னா நிற்பவும், நெஞ்சம், தலைவன் இருளிடை வரும் ஏதம் அஞ்சி, அவன் இட்டருங் கண்ண படுகுழி இயவின் இருளிடை மிதிப்புழி நோக்கித் தளரடி தாங்கும் பொருட்டுத் தனக்குத் துணையாதலொழிந்து அகலா நிற்பவும் கண்டுயில் பெறாது வருந்தி உடம்பு நனி சுருங்குவள். இவ்வாறு பிரிவாற்றாமையான் இருட்பக்கத்துத் திங்கள் போன்று நாடோறும் உடல் தேய்ந்து நலியும் தலைவியின் நிலை கண்டு, அவளன்றி ஆருயிர் தனக்கு வேறின்மையின் ஆற்றாளாய செவிலி, என்னை பாவம்! இவள் இவ்வாறு மெலிதற்குற்ற காரணந்தான் யாதோ? என ஆராய்ந்து அறியலுறுவாள், வேலன் கட்டுவித்தி முதலியோரை வினவ, அவர் கட்டினும், கழங்கினும் பார்த்து, இவள் தெய்வத்தாற் றீங்குற்றாள் என்பர். பின்னர்த் தலைவியின் நோய்த் தீர்வு கருதி வெறியாட்டெடுப்பாள் செவிலி.

தன் பொருட்டு இற்பிறந்தார்க் கேலாத வெறியாடல் தன்னிலத்தே நிகழ்தலைத் தலைவி பொறாதவளாய்ப் பெரிதும் நாணுவள்; மேலும் இரவின்கண் ஏதமிக்க இருள்நெறிப்படரும் தலைவனுக்குத் தீங்கு நேருமே என்றும் அஞ்சுவள். தானும் அவனைக் காணாது அமையலாகாமையான், இவற்றிற்கெல்லாம் தீர்வாக அமைதல் கருதித் தன் களவுமணச் செய்தியைத் தாய்க்கு அறிவிப்பேன் கொல்? அறிவியேன் கொல்? என மனஞ்சுழன்று நைவாள்; ஒருவாறு அறிவித்தலே நன்றெனத் தெளிந்து, இக் கருத்தைத் தோழிக்குக் கூற்றானாதல், குறிப்பானாதல் உணர்த்துவாள். தலைவி தோழிக் குணர்த்துமிதனை தலைவி யறத்தொடுநிலை என்ப.

இனி, தோழியும் தலைவியின் மெலிவு கண்டு இந்நிலை நீளுமாயின் இவட்கு இறந்துபாடு நேருமே என்று கவன்று மறைவெளிப்படுதலே இதற்குத் தீர்வாமென்று கருதித் தலைவியின் கருத்தினை எதிர்பார்த்திருப்பளன்றே! தலைவி மறை வெளிப்படுத்தக் கருதும் காலமே தோழி அறத்தொடு நிற்றற்குரிய காலமுமாகலின், தலைவியின் கருத்துணர்ந்த தோழி, இம் மறையினைச் செவிலிக்கு வெளிப்படுத்து அறத்தொடு நிற்பள். அறத்தொடு நிற்றற்கு, வேற்றுவரைவு நேர்தல் முதலிய பிறவேதுக்களும் உள. அவையிற்றை விரிவஞ்சி ஈண்டு விரித்திலம். இக் குறிஞ்சிப்பாட்டில் தோழியின் அறத்தொடு நிலைக்கு வெறியாட்டெடுத்தலே ஏதுவாகக் கூறப்பட்டது. தோழி, அறத்தொடு நிற்குங்காலம் பெற்று, அறத்தொடு நிற்புழித் தலைவியின் குடிப்பிறப்பிற்கும் கற்பு நாண் முதலியவற்றிற்கும், செவிலியின் அறிவிற்கும், தலைவன் பெருமைக்கும், தன் பாதுகாவலுக்கும் மாறுபடாதவாறு நிற்றல் வேண்டும், என்னும் நுணுக்கமான வரையறைகளும் உள்ளன. இவ் வரையறைகள் இந் நூலிற் பெரிதும் போற்றப்பட்டுள்ளன. இவை தமிழரின் சிறந்த நாகரிகத்தை விளக்கப் போதிய சான்றுகளாம் என்க.

ஊழினது ஆணையால், எதிர்ப்பட்டு ஒருவரை ஒருவர் பெரிதும் விரும்பி உள்ளம் ஒன்றும் காதல்மணமே நன்மணம் என்றல் தமிழ்ச்சான்றோர் உளத்தோடு பொருந்திய கொள்கையே காண்! அவ்வாறே என் தோழி தன் நல்வினை கூட்டலாலே சிறந்த தலைவனை எதிர்ப்பட்டு உள்ளத்தால் அவனை மணந்தாள். அச்செயல் அறத்தொடு பொருந்திய செயலே. இனி அவரை நாடறி நன்மணம் புணர்த்தலே நங்கடன் கண்டாய்! எனத் தோழி தலைவி அறத்தாற்றுப்பட்ட நிலையினைச் செவிலிக்கு அறிவுறுத்தலின், இத் துறையினை அறத்தொடுநிலை என்னும் பொருள் பொதிந்த பெயரான் நம் முன்னோர் வழங்குவராயினர்.

இனி, அறத்தொடு நிற்கும் தோழி, எளித்தன் முதலிய ஏழு திறத்தினுள் ஏற்பன கொண்டு நிற்றல் வேண்டும், எனத் தொல்காப்பியம் கூறும். அவையாவன,

எளித்தல் ஏத்தல் வேட்கை யுரைத்தல்
கூறுத லுசாதல் ஏதீடு தலைப்பாடு
உண்மை செப்பும் கிளவியொடு தொகைஇ
அவ்வெழு வகைய என்மனார் புலவர்  (தொல்.பொ.12)

என்பன.

1. எளித்தல் : தலைவன் பெருந்தகுதிப்பாடுடைய நம்பியாக இருந்தும் எம்பாற் பெரிதும் எளியனாய் ஒழுகும் இனிமையோன் என்றலும்,

2. ஏத்தல் : எவ்வாற்றானும் ஒப்பிலாதுயர்ந்தோன் தலைவன் என்று அவனை உயர்த்துக் கூறலும்,

3. வேட்கையுரைத்தல் : தலைவன் தலைவிபாற் கொண்டுள்ள வேட்கைப் பெருக்கம் விளம்பலும்,

4. கூறுத லுசாதல் : வெறியாடல் நிகழ்வுழி வேலன் முதலியோரை எதிர்மறுத்து வினாதலும்,

5. ஏதீடு : தலைவன் களிறு புலி நாய் போல்வன காத்துத் தலைவியைத் தலையளித்துக் கைக்கொண்டான், தழை தந்தான், பூத்தந்தான் என்றின்னோரன்ன காரணமிட்டுரைத்தலும்,

6. தலைப்பாடு : தலைவன், தலைவியர், தம்முள் தாமே தலைப்பட்டார்; யான் அறிந்திலேன் என்றலும்,

7. உண்மை செப்புங்கிளவி : இவ்வாற்றான் அறத்தொடு நிற்குங்கால் படைத்துமொழி கிளவாமற் பட்டாங்குக் கூறலும், என்னும் இவ்வேழுமாம்.

இவ்வேழு திறத்தினுள், கூறுதலுசாதல் என்னும் ஒன்றொழிய ஆறுவகையானும் தோழி அறத்தொடு நின்றாளாக, இக் குறிஞ்சிப்பாட்டிற் கூறப்பட்டது. அவையிற்றை வருமிடங்களிற் காட்டுதும்.

 
மேலும் குறிஞ்சிப்பாட்டு »

குறிஞ்சிப்பாட்டு செப்டம்பர் 27,2012

அன்னாய் வாழிவேண் டன்னை யொண்ணுதலொலிமென் கூந்தலென் றோழி மேனிவிறலிழை நெகிழ்த்த வீவருங் கடுநோயகலு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar