நடராஜர் கோவில்களில், ஆருத்ரா தரிசன விழா, சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவிலில், சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு, டிசம்பர் 28 காலை, 5:00 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. பகல், 1:30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் ராஜ வீதி புறப்பாடு நடந்தது. திரு ஆபரண அலங்காரத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் நடனம் ஆடியவாறு, மாலை, 3:45 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி, பஞ்சமூர்த்திகள் முன் தீர்த்தவாரி நடைபெற்று, மகா தரிசனம் காட்சியருளினர். அப்போது மழையை பொருட்படுத்தாது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், "ஓம் நமச்சிவாய... நடராஜா... என, கோஷமிட்டு, தரிசனம் செய்தனர்.திருவாரூர் தியாகராஜர் கோவிலில், டிசம்பர் 27 இரவு, 7:00 மணிக்கு சுவாமிக்கு முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனையும், இரவு, 10:00 மணிக்கு திருவாதிரை மகா அபிஷேகமும், டிசம்பர் 28 அதிகாலை, 4:00 மணிக்கு நடராஜருக்கு, சிறப்பு அபிஷேகமும் நடந்தது. காலை, 7:00 மணிக்கு நடந்த ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில், பக்தர்கள் கமலாயல குளத்தில் நீராடி, "ஆரூரா... தியாகேசா... என, பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நவ., 27ம் தேதி, மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் ஏற்ற பயன்படுத்திய திரியில் இருந்து தயாரிக்கப்படும் தீப மை பிரசாதம், ஆருத்ரா தரிசன விழாவில், நடராஜருக்கு சாத்தப்படும். நடராஜர், சிவகாமி அம்மையாருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் டிசம்பர் 28 நடந்தன. பின், ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு, சிறப்பு பூஜை செய்து, தீப மை, நடராஜர், சிவகாமி அம்மையாருக்கு சாத்தப்பட்டது.