Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
கோபித்துக் கொண்டு சென்ற சேலம் மாரியம்மன்: அழைத்து வந்த பக்தர்கள்!
பிப்ரவரி 06,2013
அ-
+
Temple images

சேலம்: சேலம், அரிசிபாளையம் மாரியம்மன் கோபித்துக் கொண்டு, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றதால், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், சமயபுரம் சென்று, அம்மனை ஆறுதல்படுத்தி அழைத்து வந்தனர்.சேலம் மாநகரப் பகுதிகளில், எட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம் இக்கோவில்களில் திருவிழா வெகுசிறப்பாக நடத்தப்படும். அதேபோன்று, மாசி மாதத்தில், அரிசிபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடத்தப்படும். சில மாதங்களுக்கு முன், அரிசிபாளையம் பகுதியில், விபத்து, தற்கொலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.இந்நிலையில், மாரியம்மன் கோவிலுக்கு ஸ்வாமி கும்பிட சென்ற லோகநாயகி என்ற பெண்ணுக்கு திடீரென அருள் வந்தது. அப்போது, "எனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை; சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று விட்டேன் என, உரக்க கத்தியபடி அருள்வாக்கு கூறினார்.அவரைப் போன்று, ஸ்வாமி கும்பிட வந்த மேலும் சில பெண்களும், ஆண்களும், லோகநாயகி கூறியபடியே அருள்வாக்கு கூறினர்.அதைத்தொடர்ந்து, ஊர் நிர்வாகிகள், இது தொடர்பாக பேச்சு நடத்தினர். சமயபுரம் சென்று மாரியம்மனை மீண்டும் அழைத்து வருவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக, பல்வேறு தரப்பிலும் வாக்கு கேட்கப்பட்டது. நேற்று முன்தினம், பத்துக்கும் மேற்பட்ட பஸ், வேன்களில், ஆண், பெண் பக்தர்கள் திரண்டு, சமயபுரம் சென்றனர். கோவிலுக்கு செல்லும்போது, சக்தி குடம், பெரியமாலையையும் எடுத்து சென்றனர்.நேற்று அதிகாலை, 5.30 மணியளவில், மாலையை அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர். அப்போது, சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை சாத்தும்போது, அதை எடுத்து பூசாரி உங்கள் வசம் கொடுப்பார் என, அருள்வாக்கில் கூறப்பட்டது போல், அக்கோவிலில் நடந்தது. அதன்பின், அனைத்து பக்தர்களும், மாலையை எடுத்துக் கொண்டு, சேலம் வந்தனர். பின், அண்ணாபூங்கா அருகில் உள்ள கிணற்றில் தீர்த்தக்குடம் எடுத்து வந்து, அரிசிபாளையம் மாரியம்மனுக்கு மாலை சாத்தப்பட்டது. பெண் பக்தர்கள் அருள் வந்து ஆடினர்.இது குறித்து சூரமங்கலம் அ.தி.மு.க., பகுதி செயலாளர் நேதாஜி கூறியதாவது:சில மாதங்களுக்கு முன், தொடர்ச்சியாக பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டது. ஒரே நாளில், மூன்று பேர் தற்கொலை செய்யும் சம்பவங்களும் நடந்தது. மாரியம்மன் கோவிலில் ஏதேனும் குற்றம் நடந்து விட்டதோ என கருதினோம். இந்நிலையில், கோவிலுக்கு சென்ற பெண்களுக்கு அருள் வந்தது. அவர்கள், நான் இங்கு இல்லை, சமயபுரம் சென்று விட்டேன், என கூறினர். அதை அடிப்படையாகக் கொண்டு, சமயபுரம் கோவிலுக்கு சென்று மீண்டும் அம்மனை அழைத்து வந்தோம். இப்போது தான் எங்களுக்கு நிம்மதியாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.