Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குறுந்தொகை - நூல் அறிமுகம்! குறுந்தொகை (பகுதி-2)
முதல் பக்கம் » குறுந்தொகை
குறுந்தொகை (பகுதி-1)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2013
12:03

குறுந்தொகை - கடவுள் வாழ்த்து

தாமரை புரையுங் காமர் சேவடிப்
பவழத் தன்ன மேனித் திகழொளிக்
குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற்
சேவலங் கொடியோன் காப்ப  5
ஏம வைகல் எய்தின்றால் உலகே.  
- பாரதம் பாடிய பெருந்தேவனார்.

குறுந்தொகை - 1. குறிஞ்சி - தோழி கூற்று

செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.  
- திப்புத் தோளார்.    

குறுந்தொகை - 2. குறிஞ்சி - தலைவன் கூற்று

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.  5
- இறையனார்.  

குறுந்தொகை - 3. குறிஞ்சி - தலைவி கூற்று

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.  
- தேவகுலத்தார்.  

குறுந்தொகை - 4. நெய்தல் - தலைமகள் கூற்று

நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்தநங் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே.  
- காமஞ்சேர் குளத்தார்.  

குறுந்தொகை - 5. நெய்தல் - தலைவி கூற்று

அதுகொல் தோழி காம நோயே
வதிகுரு குறங்கும் இன்னிழற் புன்னை
உடைதிரைத் திவலை அரும்புந் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே.  5
- நரிவெரூ உத்தலையார்.  

குறுந்தொகை - 6. நெய்தல் - தலைவி கூற்று

நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.  
- பதுமனார்.  

குறுந்தொகை - 7. பாலை - கண்டோர் கூற்று

வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற் றொலிக்கும்  5
வேய்பயில் அழுவம் முன்னி யோரே.  
- பெரும்பதுமனார்.

குறுந்தொகை - 8. மருதம் - காதற் பரத்தை கூற்று

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல  5
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.  
- ஆலங்குடி வங்கனார்.  

குறுந்தொகை - 9. மருதம் - தோழி கூற்று

யாயா கியளே மாஅ யோளே
மடைமாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய்சா யினளே
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீ னிருங்கழி யோத மல்குதொறும்  5
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணந் துறைவன் கொடுமை
நம்மு னாணிக் கரப்பா டும்மே.  
- கயமனார்.  

குறுந்தொகை - 10. பாலை - தோழி கூற்று

யாயா கியளே விழவுமுத லாட்டி
பயறுபோ லிணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்
காஞ்சி யூரன் கொடுமை
கரந்தன ளாகலின் நாணிய வருமே.  5
- ஓரம்போகியார்.    

குறுந்தொகை - 11. பாலை - தலைவி கூற்று

கோடீர் இலங்குவளை ஞெகிழ நாடொறும்
பாடில கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கே
எழுவினி வாழியென் னெஞ்சே முனாஅது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது  5
வல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே.  
- மாமூலனார்
 
குறுந்தொகை - 12. பாலை - தலைவி கூற்று

எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறிக்
கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத் தென்பவர் தேர் சென்ற ஆறே
அதுமற் றவலங் கொள்ளாது  5
நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே.  
- ஓதலாந்தையார்.  

குறுந்தொகை - 13. குறிஞ்சி - தலைவி கூற்று

மாசறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகற்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய்தந் தனனே தோழி
பயலை ஆர்ந்தன குவளையங் கண்ணே.  5
- கபிலர்.  
 
குறுந்தொகை - 14. குறிஞ்சி - தலைவன் கூற்று

அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்த
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம யானே பெற்றாங்
கறிகதில் அம்மவிவ் வூரே மறுகில்
நல்லோள் கணவன் இவனெனப்  5
பல்லோர் கூறயாம் நாணுகஞ் சிறிதே.  
- தொல்கபிலர்.  

குறுந்தொகை - 15. பாலை - செவிலி கூற்று

பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற்
சேயிலை வெள்வேல் விடலையொடு  5
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.  
- அவ்வையார்.  

குறுந்தொகை - 16. பாலை - தோழி கூற்று

உள்ளார் கொல்லோ தோழி கள்வர்
பொன்புனை பகழி செப்பங் கொண்மார்
உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்
செங்காற் பல்லி தன்றுணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடிறந் தாரே.  5
- பாலைபாடிய பெருங்கடுங்கோ.  

குறுந்தொகை - 17. குறிஞ்சி - தலைவன் கூற்று

மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ் கொளினே.  
- பேரெயின் முறுவலார்.  

குறுந்தொகை - 18. குறிஞ்சி - தோழி கூற்று

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யார தறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.  5
- கபிலர்.  

குறுந்தொகை - 19. மருதம் - தலைவன் கூற்று

எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்
பூவில் வறுந்தலை போலப் புல்லென்
றினைமதி வாழியர் நெஞ்சே மனைமரத்
தெல்லுறு மௌவல் நாறும்
பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே.  5
- பரணர்.  

குறுந்தொகை - 20. பாலை - தலைவி கூற்று

அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.  
- கோப்பெருஞ்சோழன்.  

குறுந்தொகை - 21. முல்லை - தலைவி கூற்று

வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றை
கானங் காரெனக் கூறினும்
யானோ தேரேன் அவர் பொய்வழங் கலரே.  5
- ஓதலாந்தையார்.  

குறுந்தொகை - 22. பாலை - தோழி கூற்று

நீர்வார் கண்ணை நீயிவண் ஒழிய
யாரோ பிரிகிற் பவரே சாரற்
சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து
வேனில் அஞ்சினை கமழும்
தேமூர் ஒண்ணுதல் நின்னொடுஞ் செலவே.  5
- சேரமானெந்தை.  

குறுந்தொகை - 23. குறிஞ்சி - தோழி கூற்று

அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டேஅவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.  5
- அவ்வையார்.  

குறுந்தொகை - 24. முல்லை - தலைவி கூற்று

கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
என்னை யின்றியுங் கழிவது கொல்லோ
ஆற்றயல் எழுந்த வெண்கோட் டதவத்
தெழுகுளிர் மிதித்த ஒருபழம் போலக்
குழையக் கொடியோர் நாவே  5
காதலர் அகலக் கல்லென் றவ்வே.  
- பரணர்.  

குறுந்தொகை - 25. குறிஞ்சி - தலைவி கூற்று

யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.  5
- கபிலர்.  

குறுந்தொகை - 26. குறிஞ்சி - தோழி கூற்று

அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேக்கெழு பெருஞ்சினை இருந்த தோகை
பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன்
தகாஅன் போலத் தான்றீது மொழியினும்
தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே  5
தேக்கொக் கருந்து முள்ளெயிற்றுத் துவர்வாய்
வரையாடு வன்பறழ்த் தந்தைக்
கடுவனும் அறியும்அக் கொடியோ னையே.  
- கொல்லனழிசி.  

குறுந்தொகை - 27. பாலை - தலைவி கூற்று

கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குலென் மாமைக் கவினே.  5
- வெள்ளிவீதியார்.  

குறுந்தொகை - 28. பாலை - தலைவி கூற்று

மூட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.  5
- அவ்வையார்.  

குறுந்தொகை - 29. குறிஞ்சி - தலைன் கூற்று

நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப்
பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி
அரிதவா உற்றனை நெஞ்சே நன்றும்
பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டு  5
மகவுடை மந்தி போல
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.  
- அவ்வையார்.  

குறுந்தொகை - 30. பாலை - தலைவி கூற்று

கேட்டிசின் வாழி தோழி அல்கற்
பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து
அமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்  5
தமியேன் மன்ற அளியேன் யானே.  
- கச்சிப்பேட்டு நன்னாகையார்.  

குறுந்தொகை - 31. மருதம் - தலைவி கூற்று

மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்தக் கோனை
யானுமோர் ஆடுகள மகளே என்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த  5
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே.  
- ஆதிமந்தியார்.  

குறுந்தொகை - 32. குறிஞ்சி - தலைவன் கூற்று

காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்
மாவென மடலோடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே  5
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே.  
- அள்ளூர் நன்முல்லையார்.  

குறுந்தொகை - 33. மருதம் - தலைவி கூற்று

அன்னாய் இவனோர் இளமா ணாக்கன்
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ
இரந்தூ ணிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே.  
- படுமரத்து மோசிகீரனார்.  

குறுந்தொகை - 34. மருதம் - தோழி கூற்று

ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர்
தமியர் உறங்கும் கௌவை யின்றாய்
இனியது கேட்டின் புறுகவிவ் வூரே
முனாஅ தியானையங் குருகின் கானலம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்  5
குட்டுவன் மாந்தை யன்னவெம்
குழைவிளங் காய்நுதற் கிழவனு மவனே.  
- கொல்லிக் கண்ணனார்.  

குறுந்தொகை - 35. மருதம் - தலைவி கூற்று

நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு
சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன
கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ
நுண்ணுறை யழிதுளி தலைஇய
தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே.  5
- கழார்க்கீரனெயிற்றி.  

குறுந்தொகை - 36. குறிஞ்சி - தலைவி கூற்று

துறுக லயலது மாணை மாக்கொடி
துஞ்சுகளி றிவரும் குன்ற நாடன்
நெஞ்சுகள னாக நீயலென் யானென
நற்றோள் மணந்த ஞான்றை மற்றவன்
தாவா வஞ்சின முரைத்தது  5
நோயோ தோழி நின்வயி னானே.  
- பரணர்.  

குறுந்தொகை - 37. பாலை - தோழி கூற்று

நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழியவர் சென்ற வாறே.  
- பாலைபாடிய பெருங்கடுங்கோ.  

குறுந்தொகை - 38. குறிஞ்சி - தலைவி கூற்று

கான மஞ்ஞை யறையீன் முட்டை
வெயிலாடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி உண்கண்
நீரொ டொராங்குத் தணப்ப  5
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே.  
- கபிலர்.  

குறுந்தொகை - 39. பாலை - தலைவி கூற்று

வெந்திறற் கடுவளி பொங்காப் போந்தென
நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ்சுரம் என்பநம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே.  
- அவ்வையார்.  

குறுந்தொகை - 40. குறிஞ்சி - தலைவன் கூற்று

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.  5
- செம்புலப் பெயனீரார்.  

குறுந்தொகை - 41. பாலை - தலைவி கூற்று

காதலர் உழைய ராகப் பெரிதுவந்து
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றிற்
புலம்பில் போலப் புல்லென்று  5
அலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே.  
- அணிலாடு முன்றிலார்.  

குறுந்தொகை - 42. குறிஞ்சி - தோழி கூற்று

காமம் ஒழிவ தாயினும் யாமத்துக்
கருவி மாமழை வீழ்ந்தென அருவி
விடரகத் தியம்பு நாடவெம்
தொடர்புந் தேயுமோ நின்வயி னானே.  
- கபிலர்.  

குறுந்தொகை - 43. பாலை - தலைவி கூற்று

செல்வார் அல்லரென் றியானிகழ்ந் தனனே
ஒல்வாள் அல்லளென் றவரிகழ்ந் தனரே
ஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல்
நல்லராக் கதுவி யாங்கென்
அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே.  5
- அவ்வையார்.  

குறுந்தொகை - 44. பாலை - செவிலித்தாய் கூற்று

காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.  
- வெள்ளிவீதியார்.

குறுந்தொகை - 45. மருதம் - தோழி கூற்று

காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி
வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்ல லூரன் எல்லினன் பெரிதென
மறுவருஞ் சிறுவன் தாயே
தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே.  5
- ஆலங்குடி வங்கனார்.  

குறுந்தொகை - 46. மருதம் - தலைவி கூற்று

ஆம்பற் பூவின் சாம்ப லன்ன
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து
எருவினுண் தாது குடைவன ஆடி
இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்  5
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே.  
- மாமலாடனார்.  

குறுந்தொகை - 47. குறிஞ்சி - தோழி கூற்று

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.  
- நெடுவெண்ணிலவினார்.  

குறுந்தொகை - 48. பாலை - தோழி கூற்று

தாதிற் செய்த தண்பனிப் பாவை
காலை வருந்துங் கையா றோம்பென
ஓரை யாயங் கூறக் கேட்டும்
இன்ன பண்பி னினைபெரி துழக்கும்
நன்னுதல் பசலை நீங்க வன்ன  5
நசையாகு பண்பின் ஒருசொல்
இசையாது கொல்லோ காதலர் தமக்கே.  
- பூங்கணுத்திரையார்.

குறுந்தொகை - 49. நெய்தல் - தலைவி கூற்று

அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே.  5
- அம்மூவனார்.  

குறுந்தொகை - 50. மருதம் - தலைவி கூற்று

ஐயவி அன்ன சிறுவீ ஞாழல்
செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த்
துறைஅணிந் தன்றவ ரூரே யிறையிறந்
திலங்குவளை ஞெகிழச் சாஅய்ப்
புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே.  5
- குன்றியனார்.  

 
மேலும் குறுந்தொகை »
temple news
குறைந்த அடிகளையுடைய பாட்டால் தொகுக்கப்பெற்ற நூல் ஆதலால் குறுந்தொகை எனப்பட்டது. இந்நூல் 400 பாடல்களைக் ... மேலும்
 
குறுந்தொகை - 51. நெய்தல் - தோழி கூற்று கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்நூலறு முத்திற் காலொடு ... மேலும்
 
குறுந்தொகை - 101. குறிஞ்சி - தலைவன் கூற்று விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்அரிதுபெறு சிறப்பிற் ... மேலும்
 
குறுந்தொகை - 151. பாலை - தலைவன் கூற்று வங்காக் கடந்த செங்காற் பேடைஎழாஅலுற வீழ்ந்தெனக் கணவற் ... மேலும்
 
குறுந்தொகை - 201. குறிஞ்சி - தலைவி கூற்று அமிழ்த முண்கநம் அயலி லாட்டிபால்கலப் பன்ன தேக்கொக் கருந்துபுநீல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar