Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குறுந்தொகை (பகுதி-3) குறுந்தொகை (பகுதி-5)
முதல் பக்கம் » குறுந்தொகை
குறுந்தொகை (பகுதி-4)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2013
12:03

குறுந்தொகை - 151. பாலை - தலைவன் கூற்று

வங்காக் கடந்த செங்காற் பேடை
எழாஅலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது
குழலிசைக் குரல் குறும்பல அகவும்
குன்றுகெழு சிறுநெறி அரிய என்னாது
மறப்பருங் காதலி யொழிய  5
இறப்ப லென்பதீண் டிளமைக்கு முடிவே.  
- தூங்கலோரியார்.  

குறுந்தொகை - 152. குறிஞ்சி - தலைவி கூற்று

யாவதும் அறிகிலர் கழறு வோரே
தாயின் முட்டை போலவுட் கிடந்து
சாயின் அல்லது பிறிதெவ னுடைத்தே
யாமைப் பார்ப்பி னன்ன
காமங் காதலர் கையற விடினே.  5
- கிளிமங்கலங்கிழார்.    

குறுந்தொகை - 153. குறிஞ்சி - தலைவி கூற்று

குன்றக் கூகை குழறினும் முன்றிற்
பலவி னிருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும்
அஞ்சுமன் அளித்தெ னெஞ்ச மினியே
ஆரிருட் கங்குல் அவர்வயிற்
சாரல் நீளிடைச் செலவா னாதே. 5
- கபிலர்.  

குறுந்தொகை - 154. பாலை - தலைவி கூற்று

யாங்கறிந் தனர்கொல் தோழி பாம்பின்
உரிநிமிர்ந் தன்ன உருப்பவி ரமையத்
திரைவேட் டெழுந்த சேவல் உள்ளிப்
பொறிமயிர் எருத்திற் குறுநடைப் பேடை
பொறிகாற் கள்ளி விரிகா யங்கவட்டுத்  5
தயங்க விருந்து புலம்பக் கூஉம்
அருஞ்சுர வைப்பிற் கானம்
பிரிந்துசே ணுறைதல் வல்லு வோரே.  
- மதுரைச் சீத்தலைச் சாத்தனார்.  

குறுந்தொகை - 155. முல்லை - தலைவி கூற்று

முதைப்புனங் கொன்ற ஆர்கலி உழவர்
விதைக்குறு வட்டி போதொடு பொதுளப்
பொழுதோ தான்வந் தன்றே மெழுகான்
றூதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி
மரம்பயில் இறும்பி னார்ப்பச் சுரனிழிபு  5
மாலை நனிவிருந் தயர்மார்
தேர்வரும் என்னும் உரைவா ராதே.  
- உரோடகத்துக் காரத்தனார்.  

குறுந்தொகை - 156. குறிஞ்சி - தலைவன் கூற்று

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பி னின்சொல் உள்ளும்
 5
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ விதுவே.  
- பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்.  

குறுந்தொகை - 157. மருதம் - தலைவி கூற்று

குக்கூ வென்றது கோழி அதன்எதிர்
துட்கென் றன்றென் தூய நெஞ்சம்
தோடோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே.  
- அள்ளூர் நன்முல்லையார்.  

குறுந்தொகை - 158. குறிஞ்சி - தலைவி கூற்று

நெடுவரை மருங்கிற் பாம்புபட இடிக்கும்
கடுவிசை உருமின் கழறுகுரல் அளைஇக்
காலொடு வந்த கமஞ்சூல் மாமழை
ஆரளி யிலையோ நீயே பேரிசை
இமயமும் துளக்கும் பண்பினை  5
துணையிலர் அளியர் பெண்டிர் இதெவனோ.  
- அவ்வையார்.   

குறுந்தொகை - 159. குறிஞ்சி - தோழி கூற்று

தழையணி அல்குல் தாங்கல் செல்லா
நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக
அம்மெல் ஆக நிறைய வீங்கிக்
கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின
யாங்கா குவள்கொல் பூங்குழை என்னும்  5
அவல நெஞ்சமொ டுசாவாக்
கவலை மாக்கட்டிப் பேதை யூரே.  
- வடம வண்ணக்கண் பேரிசாத்தனார்.

குறுந்தொகை - 160. குறிஞ்சி - தலைவி கூற்று

நெருப்பி னன்ன செந்தலை யன்றில்
இறவி னன்ன கொடுவாய்ப் பேடையொடு
தடவின் ஓங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர்
கையற நரலு நள்ளென் யாமத்துப்
பெருந்தண் வாடையும் வாரார்  5
இதோ தோழிநங் காதலர் வரவே.  
- மதுரை மருதனிள நாகனார்.  

குறுந்தொகை - 161. குறிஞ்சி - தலைவி கூற்று

பொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது
கழுதுகண் பனிப்ப வீசும் அதன்றலைப்
புலிப்பல் தாலிப் புதல்வர்ப் புல்லி
அன்னா வென்னும் அன்னையு மன்னோ
என்மலைந் தனன்கொல் தானே தன்மலை  5
ஆரம் நாறு மார்பினன்
மாரி யானையின் வந்துநின் றனனே.  
- நக்கீரனார்.  

குறுந்தொகை - 162. முல்லை - தலைவன் கூற்று

கார்புறத் தந்த நீருடை வியன்புலத்துப்
பலர்புகு தரூஉம் புல்லென் மாலை
முல்லை வாழியோ முல்லை நீநின்
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை
நகுவை போலக் காட்டல்  5
தகுமோ மற்றிது தமியோர் மாட்டே.  
- கருவூர்ப் பவுத்திரனார்.  

குறுந்தொகை - 163. நெய்தல் - தலைவி கூற்று

யாரணங் குற்றனை கடலே பூழியர்
சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன
மீனார் குருகின் கானலம் பெருந்துறை
வெள்வீத் தாழை திரையலை
நள்ளென் கங்குலுங் கேட்குநின் குரலே.  5
- அம்மூவனார்.  

குறுந்தொகை - 164. மருதம் - காதற்பரத்தை கூற்று

கணைக்கோட்டு வாளை கமஞ்சூல் மடநாகு
துணர்த்தேக் கொக்கின் தீம்பழம் கதூஉம்
தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது
தண்பெரும் பவ்வம் அணங்குக தோழி
மனையோள் மடமையிற் புலக்கும்  5
அனையே மகிழ்நற்கியா மாயினம் எனினே.  
- மாங்குடி மருதனார்.
 
குறுந்தொகை - 165. குறிஞ்சி - தலைவன் கூற்று

மகிழ்ந்ததன் றலையும் நறவுண் டாங்கு
விழைந்ததன் றலையும் நீவெய் துற்றனை
அருங்கரை நின்ற உப்பொய் சகடம்
பெரும்பெய றலையவீந் தாங்கியவள்
இரும்பல் கூந்தல் இயலணி கண்டே.  5
- பரணர்.

குறுந்தொகை - 166. நெய்தல் - தோழி கூற்று

தண்கடற் படுதிரை பெயர்த்தலின் வெண்பறை
நாரை நிரைபெயர்ந் தயிரை யாரும்
ஊரோ நன்றுமன் மரந்தை
ஒருதனி வைகிற் புலம்பா கின்றே.  
- கூடலூர் கிழார்.  

குறுந்தொகை - 167. முல்லை - செவிலித்தாய் கூற்று

முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்  5
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே.  
- கூடலூர் கிழார்.  

குறுந்தொகை - 168. பாலை - தலைவன் கூற்று

மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை
இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து
பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன
நறுந்தண் ணியளே நன்மா மேனி
புனற்புணை யன்ன சாயிறைப் பணைத்தோள்  5
மணத்தலுந் தணத்தலு மிலமே
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே.  
- சிறைக்குடி யாந்தையார்.  
 
குறுந்தொகை - 169. மருதம் - தலைவி கூற்று

சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டிற்
றெற்றென இறீஇயரோ ஐய மற்றியாம்
நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே
பாணர், பசுமீன் சொரிந்த மண்டைபோல
எமக்கும் பெரும்புல வாகி  5
நும்மும் பெறேஎம் இறீஇயரெம் முயிரே.  
- வெள்ளிவீதியார்.  

குறுந்தொகை - 170. குறிஞ்சி - தலைவி கூற்று

பலவும் கூறுகவ தறியா தோரே
அருவி தந்த நாட்குர லெருவை
கயனா டியானை கவள மாந்தும்
மலைகெழு நாடன் கேண்மை
தலைபோ காமைநற் கறிந்தனென் யானே.  5
- கருவூர்கிழார்.  

குறுந்தொகை - 171. மருதம் - தலைவி கூற்று

காணினி வாழி தோழி யாணர்க்
கடும்புன லடைகரை நெடுங்கயத் திட்ட
மீன்வலை மாப்பட் டாஅங்
கிதுமற் றெவனோ நொதுமலர் தலையே.  
- பூங்கணுத்திரையார்.  

குறுந்தொகை - 172. நெய்தல் - தலைவி கூற்று

தாஅ வலஞ்சிறை நொப்பறை வாவல்
பழுமரம் படரும் பையுன் மாலை
எமிய மாக ஈங்குத் துறந்தோர்
தமிய ராக இனியர் கொல்லோ
ஏழூர்ப் பொதுவினைக் கோரூர் யாத்த  5
உலைவாங்கு மிதிதோல் போலத்
தலைவரம் பறியாது வருந்துமென் னெஞ்சே.  
- கச்சிப்பேட்டு நன்னாகையார்.  

குறுந்தொகை - 173. குறிஞ்சி - தலைவன் கூற்று

பொன்னேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
பன்னூல் மாலைப் பனைபடு கலிமாப்
பூண்மணி கறங்க வேறி நாணட்
டழிபடர் உண்ணோய் வழிவழி சிறப்ப
இன்னள் செய்த திதுவென முன்னின்  5
றவள் பழி நுவலு மிவ்வூர்
ஆங்குணர்ந் தமையினீங் கேகுமா றுளெனே.  
- மதுரைக் காஞ்சிப்புலவன்.  

குறுந்தொகை - 174. பாலை - தலைவி கூற்று

பெயன்மழை துறந்த புலம்புறு கடத்துக்
கவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி
துதைமென் தூவித் துணைப்புற விரிக்கும்
அத்தம் அரிய என்னார் நத்துறந்து
பொருள்வயிற் பிரிவா ராயினிவ் வுலகத்துப்  5
பொருளே மன்ற பொருளே
அருளே மன்ற ஆருமில் லதுவே.  
- வெண்பூதியார்.

குறுந்தொகை - 175. நெய்தல் - தலைவி கூற்று

பருவத் தேனசைஇப் பல்பறைத் தொழுதி
உரவுத்திரை பொருத திணிமணல் அடைகரை
நனைந்த புன்னை மாச்சினை தொகூஉம்
மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற்
கிரங்கேன் தோழியீங் கென்கொ லென்று  5
பிறர்பிறர் அறியக் கூறல்
அமைந்தாங் கமைக அம்பல தெவனே.  
- உலோச்சனார்.  

குறுந்தொகை - 176. குறிஞ்சி - தோழி கூற்று

ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன்
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென்
நன்னர் நெஞ்ச நெகிழ்த்த பின்றை
வரைமுதிர் தேனிற் போகி யோனே
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ  5
வேறுபுல னன்னாட்டுப் பெய்த
ஏறுடை மழையிற் கலிழும்என் னெஞ்சே.  
- வருமுலையாரித்தியார்.  

குறுந்தொகை - 177. நெய்தல் - தோழி கூற்று

கடல்பா டவிந்து கானல் மயங்கித்
துறைநீர் இருங்கழி புல்லென் றன்றே
மன்றவம் பெண்ணை மடல்சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும் இன்றவர்
வருவர்கொல் வாழி தோழி நாந்தப்  5
புலப்பினும் பிரிவாங் கஞ்சித்
தணப்பருங் காமம் தண்டி யோரே.  
- உலோச்சனார்.   

குறுந்தொகை - 178. மருதம் - தோழி கூற்று

அயிரை பரந்த அந்தண் பழனத்
தேந்தெழின் மலர தூம்புடைத் திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள்
இடைமுலைக் கிடந்து நடுங்க லானீர்
தொழுதுகாண் பிறையிற் றோன்றி யாநுமக்  5
கரிய மாகிய காலைப்
பெரிய தோன்றினிர் நோகோ யானே.  
- நெடும்பல்லியத்தையார்.  

குறுந்தொகை - 179. குறிஞ்சி - தோழி கூற்று

கல்லென் கானத்துக் கடமா வாட்டி
எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன
செல்லல் ஐஇய உதுவெம் மூரே
ஓங்குவரை யடுக்கத்துத் தீந்தேன் கிழித்த
குவையுடைப் பசுங்கழை தின்ற கயவாய்ப்  5
பேதை யானை சுவைத்த
கூழை மூங்கிற் குவட்டிடை யதுவே.  
- குட்டுவன் கண்ணனார்.  

குறுந்தொகை - 180. பாலை - தோழி கூற்று

பழூஉப்பல் அன்ன பருவுகிர்ப் பாவடி
இருங்களிற் றினநிரை யேந்தல் வரின்மாய்ந்
தறைமடி கரும்பின் கண்ணிடை யன்ன
பைத லொருகழை நீடிய சுரனிறந்து
எய்தினர் கொல்லோ பொருளே யல்குல்  5
அவ்வரி வாடத் துறந்தோர்
வன்ப ராகத்தாஞ் சென்ற நாட்டே.  
- கச்சிப்பேட்டு நன்னாகையார்.  

குறுந்தொகை - 181. மருதம் - தலைவி கூற்று

இதுமற் றெவனோ தோழி துனியிடை
இன்னர் என்னும் இன்னாக் கிளவி
இருமருப் பெருமை ஈன்றணிக் காரான்
உழவன் யாத்த குழவியி னகலாது
பாஅற் பைம்பயிர் ஆரு மூரன்  5
திருமனைப் பலகடம் பூண்ட
பெருமுது பெண்டிரேம் ஆகிய நமக்கே.  
- கிளிமங்கலங் கிழார்.  

குறுந்தொகை - 182. குறிஞ்சி - தலைவன் கூற்று

விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடல்
மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி
வெள்ளென் பணிந்துபிறர் எள்ளத் தோன்றி
ஒருநாண் மருங்கிற் பெருநா ணீக்கித்
தெருவின் இயலவும் தருவது கொல்லோ  5
கலிந்தவிர் அசைநடைப் பேதை
மெலிந்தில ணாம்விடற் கமைந்த தூதே.  
- மடல் பாடிய மாதங்கீரனார்.  

குறுந்தொகை - 183. முல்லை - தலைவி கூற்று

சென்ற நாட்ட கொன்றையம் பசுவீ
நம்போற் பசக்குங் காலைத் தம்போற்
சிறுதலைப் பிணையிற் றீர்த்த நெறிகோட்
டிரலை மானையுங் காண்பர்கொல் நமரே
புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை  5
மென்மயில் எருத்தில் தோன்றும்
கான வைப்பிற் புன்புலத் தானே.  
- அவ்வையார்.  

குறுந்தொகை - 184. நெய்தல் - தலைவன் கூற்று

அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க் கில்லை
குறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே
இதற்கிது மாண்ட தென்னா ததற்பட்
டாண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்சம்
மயிற்கண் அன்ன மாண்முடிப் பாவை  5
நுண்வலைப் பரதவர் மடமகள்
கண்வலைப் படுஉம் கான லானே.  
- ஆரிய வரசன் யாழ்ப்பிரமதத்தன்.

குறுந்தொகை - 185. குறிஞ்சி - தலைவி கூற்று

நுதல்பசப் பிவர்ந்து திதலை வாடி
நெடுமென் பணைத்தோள் சாஅய்த் தொடி நெகிழ்ந்
தின்ன ளாகுத னும்மி னாகுமெனச்
சொல்லி னெவனாந் தோழி பல்வரிப்
பாம்புபை அவிழ்ந்தது போலக் கூம்பிக்  5
கொண்டலிற் றொலைந்த வொண்செங் காந்தள்
கன்மிசைக் கவியு நாடற்கென்
நன்மா மேனி யழிபடர் நிலையே.  
- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்.  

குறுந்தொகை - 186. முல்லை - தலைவி கூற்று

ஆர்கலி யேற்றொடு கார்தலை மணந்த
கொல்லைப் புனத்த முல்லை மென்கொடி
எயிறென முகையும் நாடற்குத்
துயிறுறந் தனவால் தோழியென் கண்ணே.  
- ஒக்கூர் மாசாத்தியார்.

குறுந்தொகை - 187. குறிஞ்சி - தலைவி கூற்று

செவ்வரைச் சேக்கை வருடை மான்மறி
சுரைபொழி தீம்பால் ஆர மாந்திப்
பெருவரை நீழ லுகளு நாடன்
கல்லினும் வலியன் தோழி
வலிய னென்னாது மெலியுமென் னெஞ்சே.  5
- கபிலர்.  

குறுந்தொகை - 188. முல்லை - தலைவி கூற்று

முகைமுற் றினவே முல்லை முல்லையொடு
தகைமுற் றினவே தண்கார் வியன்புனம்
வாலிழை நெகிழ்த்தோர் வாரார்
மாலை வந்தன்றென் மாணலங் குறித்தே.  
- மதுரை அளக்கர் ஞாழர் மகனார் மள்ளனார்.   

குறுந்தொகை - 189. பாலை - தலைவன் கூற்று

இன்றே சென்று வருவது நாளைக்
குன்றிழி அருவியின் வெண்டேர் முடுக
இளம்பிறை யன்ன விளங்குசுடர் நேமி
விசும்புவீழ் கொள்ளியிற் பைம்பயிர் துமிப்பக்
காலியற் செலவின் மாலை எய்திச்  5
சின்னிரை வால்வளைக் குறுமகள்
பன்மா ணாக மணந்துவக் கும்மே.  
- மதுரை ஈழத்துப் பூதன்தேவனார்.

குறுந்தொகை - 190. முல்லை - தலைவி கூற்று

நெறியிருங் கதுப்பொடு பெருந்தோ ணீவிச்
செறிவளை நெகிழச் செய்பொருட் ககன்றோர்
அறிவர்கொல் வாழி தோழி பொறிவரி
வெஞ்சின அரவின் பைந்தலை துமிய
உரவுரும் உரறும் அரையிருள் நடுநாள்  5
நல்லே றியங்குதோ றியம்பும்
பல்லான் தொழுவத் தொருமணிக் குரலே.  
- பூதம் புலவனார்.  

குறுந்தொகை - 191. முல்லை - தலைவி கூற்று

உதுக்கா ணதுவே யிதுவென் மொழிகோ
நோன்சினை யிருந்த இருந்தோட்டுப் புள்ளினம்
தாம்புணர்ந் தமையிற் பிரிந்தோ ருள்ளத்
தீங்குரல் அகவக் கேட்டு நீங்கிய
ஏதி லாள ரிவண்வரிற் போதிற்  5
பொம்ம லோதியும் புனையல்
எம்முந் தொடாஅ லென்குவே மன்னே.  
- ..........  

குறுந்தொகை - 192. பாலை - தலைவி கூற்று

ஈங்கே வருவர் இனையல் அவர்என
அழாஅற்கோ இனியே நோய்நொந் துறைவி
மின்னின் றூவி இருங்குயில் பொன்னின்
உரைதிகழ் கட்டளை கடுப்ப மாச்சினை
நறுந்தாது கொழுதும் பொழுதும்  5
வறுங்குரற் கூந்தல் தைவரு வேனே.  
- கச்சிப்பேட்டு நன்னாகையார்.  
 
குறுந்தொகை - 193. முல்லை - தலைவி கூற்று

மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன
இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரை
தட்டைப் பறையிற் கறங்கு நாடன்
தொல்லைத் திங்கள் நெடுவெண் ணிலவின்
மணந்தனன் மன்னெடுந் தோளே  5
இன்று முல்லை முகைநாறும்மே.  
- அரிசில் கிழார்.  
 
குறுந்தொகை - 194. முல்லை - தலைவி கூற்று

என்னெனப் படுங்கொல் தோழி மின்னுவர
வானோர் பிரங்கும் ஒன்றோ அதனெதிர்
கான மஞ்ஞை கடிய ஏங்கும்
ஏதில கலந்த இரண்டற்கென்
பேதை நெஞ்சம் பெருமலக் குறுமே.  5
- கோவர்த்தனார்.

குறுந்தொகை - 195. நெய்தல் - தலைவி கூற்று

சுடர்சினந் தணிந்து குன்றஞ் சேரப்
படர்சுமந் தெழுதரு பையுள் மாலை
யாண்டுளர் கொல்லோ வேண்டுவினை முடிநர்
இன்னா திரங்கும் என்னார் அன்னோ
தைவரல் அசைவளி மெய்பாய்ந் தூர்தரச்  5
செய்வுறு பாவை யன்னவென்
மெய்பிறி தாகுதல் அறியா தோரே.  
- தேரதரனார்.  
 
குறுந்தொகை - 196. மருதம் - தோழி கூற்று

வேம்பின் பைங்காயென் தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்  5
ஐய அற்றால் அன்பின் பாலே.  
- மிளைக் கந்தனார்.  

குறுந்தொகை - 197. நெய்தல் - தலைவி கூற்று

யாதுசெய் வாங்கொல் தோழி நோதக
நீரெதிர் கருவிய காரெதிர் கிளைமழை
ஊதையங் குளிரொடு பேதுற்று மயங்கிய
கூதிர் உருவிற் கூற்றம்
காதலர்ப் பிரிந்த எற்குறித்து வருமே.  5
- கச்சிப்பேட்டு நன்னாகையார்.  

குறுந்தொகை - 198. குறிஞ்சி - தோழி கூற்று

யாஅங் கொன்ற மரஞ்சுட் டியவிற்
கரும்புமருண் முதல பைந்தாட் செந்தினை
மடப்பிடித் தடக்கை யன்னபால் வார்பு
கரிக்குறட் டிறைஞ்சிய செறிகோட் பைங்குரற்
படுகிளி கடிகஞ் சேறும் அடுபோர்  5
எகுவிளங்கு தடக்கை மலையன் கானத்
தார நாறு மார்பினை
வாரற்க தில்ல வருகுவள் யாயே.  
- கபிலர்.  

குறுந்தொகை - 199. குறிஞ்சி - தலைவன் கூற்று

பெறுவ தியையா தாயினும் உறுவதொன்
றுண்டுமன் வாழிய நெஞ்சே திண்டேர்க்
கைவள் ளோரி கானந் தீண்டி
எறிவளி கமழு நெறிபடு கூந்தல்
மையீ ரோதி மாஅ யோள்வயின்  5
இன்றை யன்ன நட்பி னிந்நோய்
இறுமுறை எனவொன் றின்றி
மறுமை யுலகத்து மன்னுதல் பெறுமே.  
- பரணர்.  

குறுந்தொகை - 200. முல்லை - தலைவி கூற்று

பெய்த குன்றத்துப் பூநாறு தண்கலுழ்
மீமிசைச் தாஅய வீஇ சுமந்துவந்
திழிதரும் புனலும் வாரார் தோழி
மறந்தோர் மன்ற மறவா நாமே
கால மாரி மாலை மாமழை  5
இன்னிசை யுருமின முரலும்
முன்வரல் ஏமம் செய்தகன் றோரே.  
- அவ்வையார்.  

 
மேலும் குறுந்தொகை »
temple news
குறைந்த அடிகளையுடைய பாட்டால் தொகுக்கப்பெற்ற நூல் ஆதலால் குறுந்தொகை எனப்பட்டது. இந்நூல் 400 பாடல்களைக் ... மேலும்
 
குறுந்தொகை - கடவுள் வாழ்த்து தாமரை புரையுங் காமர் சேவடிப்பவழத் தன்ன மேனித் திகழொளிக்குன்றி ... மேலும்
 
குறுந்தொகை - 51. நெய்தல் - தோழி கூற்று கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்நூலறு முத்திற் காலொடு ... மேலும்
 
குறுந்தொகை - 101. குறிஞ்சி - தலைவன் கூற்று விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்அரிதுபெறு சிறப்பிற் ... மேலும்
 
குறுந்தொகை - 201. குறிஞ்சி - தலைவி கூற்று அமிழ்த முண்கநம் அயலி லாட்டிபால்கலப் பன்ன தேக்கொக் கருந்துபுநீல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar