Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அகநானூறு (பகுதி-2) அகநானூறு (பகுதி-4)
முதல் பக்கம் » அகநானூறு
அகநானூறு (பகுதி-3)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2013
05:03

அகநானூறு - 81. பாலை

நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்
ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின்,
புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடுங் கோடு,
இரும்பு ஊது குருகின், இடந்து, இரை தேரும்  5
மண் பக வறந்த ஆங்கண், கண் பொரக்
கதிர் தெற, கவிழ்ந்த உலறுதலை நோன் சினை
நெறி அயல் மராஅம் ஏறி, புலம்பு கொள
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி சிறந்த  10
செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர்
ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும்
மா வண் கடலன் விளங்கில் அன்ன, எம்
மை எழில் உண்கண் கலுழ
ஐய! சேறிரோ, அகன்று செய் பொருட்கே?  15

பிரிவுணர்த்திய தலைமகற்கு, தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார்

அகநானூறு - 82. குறிஞ்சி

ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்
கோடை அவ் வளி குழலிசை ஆக,
பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை
தோடு அமை முழவின் துதை குரல் ஆக,
கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு,  5
மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக,
இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து,
மந்தி நல் அவை மருள்வன நோக்க,
கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில்
நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன்  10
உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து,
செருச் செய் யானை செல் நெறி வினாஅய்,
புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை,
மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர்
பலர்தில், வாழி தோழி! அவருள்,  15
ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி,
ஓர் யான் ஆகுவது எவன்கொல்,
நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே?  

தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றது. - கபிலர்

அகநானூறு - 83. பாலை

வலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச்
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி,
கறை அடி மடப் பிடி கானத்து அலற,
களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலி சிறந்து,
கருங் கால் மராஅத்துக் கொழுங் கொம்பு பிளந்து,  5
பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி,
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்,
நறவு நொடை நல் இல் புதவுமுதற் பிணிக்கும்
கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும்,  10
சேயர் என்னாது, அன்பு மிகக் கடைஇ,
எய்த வந்தனவால்தாமே நெய்தல்
கூம்பு விடு நிகர் மலர் அன்ன
ஏந்து எழில் மழைக் கண் எம் காதலி குணனே.  

தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - கல்லாடனார்

அகநானூறு - 84. முல்லை

மலைமிசைக் குலைஇய உரு கெழு திருவில்
பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி,
தாழ் பெயற் பெரு நீர், வலன் ஏர்பு, வளைஇ,
மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர
இரு நிலம் கவினிய ஏமுறுகாலை
 5
நெருப்பின் அன்ன சிறு கட் பன்றி,
அயிர்க்கட் படாஅர்த் துஞ்சு, புறம் புதைய,
நறு வீ முல்லை நாள் மலர் உதிரும்
புறவு அடைந்திருந்த அரு முனை இயவின்
சீறூரோளே, ஒண்ணுதல்! யாமே,  10
எரி புரை பல் மலர் பிறழ வாங்கி,
அரிஞர் யாத்த அலங்கு தலைப் பெருஞ் சூடு
கள் ஆர் வினைஞர் களம்தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில்
அருந் திறை கொடுப்பவும் கொள்ளான், சினம் சிறந்து,  15
வினைவயின் பெயர்க்கும் தானை,
புனைதார், வேந்தன் பாசறையேமே!  

தலைமகன் பாசறையிலிருந்து சொல்லியது. - மதுரை எழுத்தாளன்

அகநானூறு - 85 . பாலை

நல் நுதல் பசப்பவும், பெருந் தோள் நெகிழவும்,
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்,
இன்னம் ஆகவும், இங்கு நத் துறந்தோர்
அறவர்அல்லர் அவர் எனப் பல புலந்து,
ஆழல் வாழி, தோழி! சாரல்,
 5
ஈன்று நாள் உலந்த மெல் நடை மடப் பிடி,
கன்று, பசி களைஇய, பைங் கண் யானை
முற்றா மூங்கில் முளை தருபு. ஊட்டும்
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை,
நல் நாள் பூத்த நாகு இள வேங்கை  10
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை
நனைப் பசுங் குருந்தின் நாறு சினை இருந்து,
துணைப் பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார்,
வருதும், யாம் எனத் தேற்றிய
பருவம்காண் அது; பாயின்றால் மழையே.  15

தலைமகன் பிரிய, வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.- காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்

அகநானூறு - 86. மருதம்

உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை
பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி
மனை விளக்குறுத்து, மாலை தொடரி,
கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;
 5
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,
உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர,  10
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி,
கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக! என,
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி  15
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,
வதுவை நல் மணம் கழிந்த பின்றை,
கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து,
பேர் இற்கிழத்தி ஆக எனத் தமர் தர,
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்,  20
கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ,
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப,
அஞ்சினள் உயிர்த்தகாலை, யாழ நின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை என,  25
இன் நகை இருக்கை, பின் யான் வினவலின்,
செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர,
அகம் மலி உவகையள்ஆகி, முகன் இகுத்து,
ஒய்யென இறைஞ்சியோளே மாவின்
மடம் கொள் மதைஇய நோக்கின்,  30
ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே.  

வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது. தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று இன்புற்றிருந்ததூஉமாம்,- நல்லாவூர் கிழார்

அகநானூறு - 87. பாலை

தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம்,
கன்று வாய் சுவைப்ப, முன்றில் தூங்கும்
படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை,
நல்கூர் சீறூர் எல்லித் தங்கி,
குடுமி நெற்றி நெடு மரச் சேவல்  5
தலைக் குரல் விடியற் போகி, முனாஅது,
கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின்
எழுந்த தண்ணுமை இடங் கட் பாணி,
அருஞ் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென,
குன்று சேர் கவலை, இசைக்கும் அத்தம்,  10

நனி நீடு உழந்தனைமன்னே! அதனால்
உவ இனி வாழிய, நெஞ்சே! மை அற
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர்ச்
சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி,
தாழ் இருங் கூந்தல் நம் காதலி
 15
நீள் அமை வனப்பின் தோளுமார் அணைந்தே.  

வினை முற்றி மீளும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- மதுரைப் பேராலவாயார்

அகநானூறு - 88. குறிஞ்சி

முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை
ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய, பாங்கர்ப்
பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும்
புருவைப் பன்றி வரு திறம் நோக்கி,
கடுங் கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய  5
நெடுஞ் சுடர் விளக்கம் நோக்கி, வந்து, நம்
நடுங்கு துயர் களைந்த நன்னராளன்
சென்றனன்கொல்லோ தானே குன்றத்து
இரும் புலி தொலைத்த பெருங் கை யானைக்
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம்  10
இருஞ் சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ் செத்து,
இருங் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும்
காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றி,
கொடு விரல் உளியம் கெண்டும்
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே?  15

இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.- ஈழத்துப் பூதன் தேவனார்

அகநானூறு - 89. பாலை

தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின்,
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந் தலை,
உருத்து எழு குரல குடிஞைச் சேவல்,
புல் சாய் விடரகம் புலம்ப, வரைய
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண்,  5
சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து
ஊழுறு விளைநெற்று உதிர, காழியர்
கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழிய,
களரி பரந்த கல் நெடு மருங்கின்,
விளர் ஊன் தின்ற வீங்குசிலை மறவர்  10
மை படு திண் தோள் மலிர வாட்டி,
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய
திருந்து வாள் வயவர் அருந் தலை துமித்த
படு புலாக் கமழும் ஞாட்பில், துடி இகுத்து,
அருங் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர்,  15
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது,
மெல்லென் சேவடி மெலிய ஏக
வல்லுநள்கொல்லோ தானே தேம் பெய்து
அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள்,  20
இடு மணற் பந்தருள் இயலும்,
நெடு மென் பணைத் தோள், மாஅயோளே?  

மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மதுரைக்காஞ்சிப் புலவர்

அகநானூறு - 90. நெய்தல்

மூத்தோர் அன்ன வெண் தலைப் புணரி
இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்
தளை அவிழ் தாழைக் கானல் அம் பெருந் துறை,
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ,
இல்வயிற் செறித்தமை அறியாய்; பல் நாள்  5
வரு முலை வருத்தா, அம் பகட்டு மார்பின்,
தெருமரல் உள்ளமொடு வருந்தும், நின்வயின்,
நீங்குக என்று, யான் யாங்ஙனம் மொழிகோ?
அருந் திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது
பெருங் கடல் முழக்கிற்று ஆகி, யாணர்,  10
இரும்பு இடம் படுத்த வடுவுடை முகத்தர்,
கருங் கட் கோசர் நியமம் ஆயினும்,
உறும் எனக் கொள்குநர்அல்லர்
நறு நுதல் அரிவை பாசிழை விலையே.  

பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு நின்று, இற்செறிப்பு அறிவுறீஇயது. - மதுரை மருதன் இளநாகனார்

அகநானூறு - 91. பாலை

விளங்குபகல் உதவிய பல் கதிர் ஞாயிறு
வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின்,
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில்
சூர்ச் சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது,
பாசி தின்ற பைங் கண் யானை  5
ஓய் பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க,
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும்,
பெரும் பேர் அன்பினர் தோழி!-இருங் கேழ்
இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக்  10
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்,
விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப,
பசி என அறியாப் பணை பயில் இருக்கை,
தட மருப்பு எருமை தாமரை முனையின்,  15
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும்,
குடநாடு பெறினும் தவிரலர்
மடமான் நோக்கி! நின் மாண் நலம் மறந்தே.  

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார்

அகநானூறு - 92. குறிஞ்சி

நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி,
படு மழை பொழிந்த பானாட் கங்குல்,
குஞ்சரம் நடுங்கத் தாக்கி, கொடு வரிச்
செங் கண் இரும் புலி குழுமும் சாரல்
வாரல் வாழியர், ஐய! நேர் இறை  5
நெடு மென் பணைத் தோன் இவளும் யானும்
காவல் கண்ணினம் தினையே; நாளை
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின்
ஒண் செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண்,
தண் பல் அருவித் தாழ்நீர் ஒரு சிறை,  10
உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின்
திருமணி விளக்கின் பெறுகுவை
இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே.

இரவுக்குறிச் சென்று தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தோழி வரைவு கடாயது.- மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்

அகநானூறு - 93. பாலை

கேள் கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும்,
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்,
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து;
ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர்
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன  5
பெறல் அரு நன் கலம் எய்தி, நாடும்
செயல் அருஞ் செய்வினை முற்றினம் ஆயின்;
அரண் பல கடந்த, முரண் கொள் தானை,
வாடா வேம்பின், வழுதி கூடல்
நாள் அங்காடி நாறும் நறு நுதல்  10
நீள் இருங் கூந்தல் மாஅயோளொடு,
வரை குயின்றன்ன வான் தோய் நெடு நகர்,
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை
நிவந்த பள்ளி, நெடுஞ் சுடர் விளக்கத்து,
நலம் கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப,  15
முயங்குகம் சென்மோ நெஞ்சே! வரி நுதல்
வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து,
மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி,
ஆள் கோள் பிழையா, அஞ்சுவரு தடக் கை,
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் கோதை  20
திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை.
தெண் நீர் உயர் கரைக் குவைஇய
தண் ஆன்பொருநை மணலினும் பலவே.  

வினை முற்றி மீளலுறும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - கணக்காயனார் மகனார் நக்கீரனார்

அகநானூறு - 94. முல்லை

தேம் படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
குவை இலை முசுண்டை வெண் பூக் குழைய,
வான் எனப் பூத்த பானாட் கங்குல்,
மறித் துரூஉத் தொகுத்த பறிப் புற இடையன்
தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ,  5
வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன்,
ஐது படு கொள்ளி அங்கை காய,
குறு நரி உளம்பும் கூர் இருள் நெடு விளி
சிறு கட் பன்றிப் பெரு நிரை கடிய,
முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும்  10
கருங் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும்
வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து
ஆர்வம் சிறந்த சாயல்,
இரும் பல் கூந்தல், திருந்திழை ஊரே!  

வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது; தலைமகன் பாங்கற்குச் சொற்றதூஉம் ஆம். - நன்பலூர்ச் சிறு மேதாவியார்

அகநானூறு - 95 . பாலை

பைபயப் பசந்தன்று நுதலும்; சாஅய்,
ஐது ஆகின்று, என் தளிர் புரை மேனியும்;
பலரும் அறியத் திகழ்தரும், அவலமும்;
உயிர் கொடு கழியின் அல்லதை, நினையின்
எவனோ? வாழி, தோழி! பொரிகால்
 5

பொகுட்டு அரை இருப்பைக் குவிகுலைக் கழன்ற
ஆலி ஒப்பின் தூம்புடைத் திரள் வீ,
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க,
ஈனல் எண்கின் இருங் கிளை கவரும்
சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார்,
 10
கௌவை மேவலர்ஆகி, இவ் ஊர்
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ
புரையஅல்ல, என் மகட்கு எனப் பரைஇ,
நம் உணர்ந்து ஆறிய கொள்கை
அன்னை முன்னர், யாம் என், இதற் படலே?  15

போக்கு உடன்பட்ட தலைமகள் தோழிக்குத் சொல்லியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார்

அகநானூறு - 96. மருதம்

நறவு உண் மண்டை நுடக்கலின், இறவுக் கலித்து,
பூட்டு அறு வில்லின் கூட்டுமுதல் தெறிக்கும்
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்
அர வாய் அன்ன அம் முள் நெடுங் கொடி
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி,  5
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை
விசை வாங்கு தோலின், வீங்குபு ஞெகிழும்
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர!
ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து
கொண்டனை என்ப ஓர் குறுமகள் அதுவே  10
செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின்,
அம் கலுழ் மாமை, அஃதை தந்தை,
அண்ணல் யானை அடு போர்ச் சோழர்,
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை,
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய,  15
ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை,
களிறு கவர் கம்பலை போல,
அலர் ஆகின்றது, பலர் வாய்ப் பட்டே  

தோழி வாயில் மறுத்தது. மருதம் பாடிய இளங்கடுங்கோ

அகநானூறு - 97. பாலை

கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை
வறன் உறல் அம் கோடு உதிர, வலம் கடந்து,
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
இரவுக் குறும்பு அலற நூறி, நிரை பகுத்து,
இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்
 5
கொலை வில் ஆடவர் போல, பலவுடன்
பெருந் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும்
அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும்,
இருங் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
நுணங்கு கண் சிறு கோல் வணங்குஇறை மகளிரொடு  10
அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி,
நறவு மகிழ் இருக்கை, நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர் அன்ன, நின்
அலர்முலை ஆகம் புலம்ப, பல நினைந்து,
ஆழல் என்றி தோழி! யாழ என்  15
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து,
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில்
அறல் அவிர் வார் மணல் அகல்யாற்று அடைகரை,
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி,
கலிழ் தளிர் அணிந்த இருஞ் சினை மாஅத்து  20
இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர்,
புகை புரை அம் மஞ்சு ஊர,
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே?  

வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்

அகநானூறு - 98. குறிஞ்சி

பனி வரை நிவந்த பயம் கெழு கவாஅன்,
துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த
இனிய உள்ளம் இன்னாஆக,
முனிதக நிறுத்த நல்கல் எவ்வம்
சூர் உறை வெற்பன் மார்பு உறத் தணிதல்  5
அறிநதனள் அல்லள், அன்னை; வார்கோல்
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கி,
கையறு நெஞ்சினள் வினவலின், முதுவாய்ப்
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ,
முருகன் ஆர் அணங்கு என்றலின், அது செத்து,  10
ஓவத்தன்ன வினை புனை நல் இல்,
பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின்
பண்டையின் சிறக்க, என் மகட்கு எனப் பரைஇ,
கூடு கொள் இன் இயம் கறங்க, களன் இழைத்து,
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர்,  15
வெண் போழ் கடம்பொடு சூடி, இன் சீர்
ஐது அமை பாணி இரீஇ, கைபெயரா,
செல்வன் பெரும் பெயர் ஏத்தி, வேலன்
வெறி அயர் வியன் களம் பொற்ப, வல்லோன்
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின்,  20
என் ஆம்கொல்லோ? தோழி! மயங்கிய
மையற் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக
ஆடிய பின்னும், வாடிய மேனி
பண்டையின் சிறவாதுஆயின், இம் மறை
அலர் ஆகாமையோ அரிதே, அஃதான்று,  25
அறிவர் உறுவிய அல்லல் கண்டருளி,
வெறி கமழ் நெடு வேள் நல்குவனெனினே,
செறிதொடி உற்ற செல்லலும் பிறிது எனக்
கான் கெழு நாடன் கேட்பின்,
யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே.  30

தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளைச் சொல்லியது; தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - வெறிபாடிய காமக்கண்ணியார்

அகநானூறு - 99. பாலை

வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன
செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின்
சிதரல் செம்மல் தாஅய், மதர் எழில்
மாண் இழை மகளிர் பூணுடை முலையின்
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை  5
அதிரல் பரந்த அம் தண் பாதிரி
உதிர்வீ அம் சினை தாஅய், எதிர் வீ
மராஅ மலரொடு விராஅய், பராஅம்
அணங்குடை நகரின் மணந்த பூவின்
நன்றே, கானம்; நயவரும் அம்ம;  10
கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை
அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின்,
பிடி மிடை, களிற்றின் தோன்றும்
குறு நெடுந் துணைய குன்றமும் உடைத்தே!  

உடன்போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ

அகநானூறு - 100. நெய்தல்

அரையுற்று அமைந்த ஆரம் நீவி,
புரையப் பூண்ட கோதை மார்பினை,
நல் அகம் வடுக் கொள முயங்கி, நீ வந்து,
எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே.
பெருந் திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த  5
கொண்டல் இரவின் இருங் கடல் மடுத்த
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர்
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை,
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த
ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும்  10
பாடுநர்த் தொடுத்த கை வண் கோமான்,
பரியுடை நல் தேர்ப் பெரியன், விரிஇணர்ப்
புன்னைஅம் கானல் புறந்தை முன்துறை
வம்ப நாரைஇனன் ஒலித்தன்ன
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர்  15
வைகுறு விடியல் போகிய எருமை
நெய்தல் அம் புது மலர் மாந்தும்
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே!  

தோழி வரைவு கடாயது. - உலோச்சனார்

அகநானூறு - 101. பாலை

அம்ம வாழி, தோழி! இம்மை
நன்று செய் மருங்கில் தீது இல் என்னும்
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்றுகொல்?
தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த
சுவல் மாய் பித்தை, செங் கண், மழவர்  5
வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந் திறல்
தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி,
நுரை தெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து
அடி புதை தொடுதோல் பறைய ஏகி,
கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்,  10
இனம் தலைபெயர்க்கும் நனந்தலைப் பெருங் காட்டு,
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல,
பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று
உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை,
புன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர்,  15
தண் கார் ஆலியின், தாவன உதிரும்
பனி படு பல் மலை இறந்தோர்க்கு
முனிதகு பண்பு யாம் செய்தன்றோஇலமே!  

பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது; தோழி கிழத்திக்குச் சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார்

அகநானூறு - 102. குறிஞ்சி

உளைமான் துப்பின், ஓங்கு தினைப் பெரும் புனத்துக்
கழுதில், கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென;
உரைத்த சந்தின் ஊரல் இருங் கதுப்பு
ஐது வரல் அசைவளி ஆற்ற, கை பெயரா,
ஒலியல் வார் மயிர் உளரினள், கொடிச்சி  5
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட;
குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது,
படாஅப் பைங் கண் பாடு பெற்று, ஒய்யென
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்;
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப,  10
தாரன், கண்ணியன், எஃகுடை வலத்தன்,
காவலர் அறிதல் ஓம்பி, பையென
வீழாக் கதவம் அசையினன் புகுதந்து,
உயங்கு படர் அகலம் முயங்கி, தோள் மணந்து,
இன் சொல் அளைஇ, பெயர்ந்தனன் தோழி!  15

இரவுக்குறிக்கண் சிறைப்புறமாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது. - மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தன்

அகநானூறு - 103. பாலை

நிழல் அறு நனந்தலை, எழால் ஏறு குறித்த
கதிர்த்த சென்னி, நுணங்கு செந் நாவின்,
விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி,
காமர் சேவல் ஏமம் சேப்ப;
முளி அரில் புலம்பப் போகி, முனாஅது  5
முரம்பு அடைந்திருந்த மூரி மன்றத்து,
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி,
உறையுநர் போகிய ஓங்கு நிலை வியல் மனை,
இறை நிழல் ஒரு சிறைப் புலம்பு அயா உயிர்க்கும்
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி; தம்வயின்  10
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்மன் என,
நள்ளென் யாமத்து உயவுத்துணை ஆக
நம்மொடு பசலை நோன்று, தம்மொடு
தானே சென்ற நலனும்
நல்கார்கொல்லோ, நாம் நயந்திசினோரே?  15

தலைமகன் பிரிவின்கண், தலைமகள் தோழிக்குச் சொற்றது.- காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்

அகநானூறு - 104. முல்லை

வேந்து வினை முடித்தகாலை, தேம் பாய்ந்து
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின்
வென் வேல் இளையர் இன்புற, வலவன்
வள்பு வலித்து ஊரின் அல்லது, முள் உறின்
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா  5
நல் நால்கு பூண்ட கடும் பரி நெடுந் தேர்,
வாங்குசினை பொலிய ஏறி; புதல
பூங் கொடி அவரைப் பொய் அதள் அன்ன
உள் இல் வயிற்ற, வெள்ளை வெண் மறி,
மாழ்கியன்ன தாழ் பெருஞ் செவிய,  10
புன் தலைச் சிறாரோடு உகளி, மன்றுழைக்
கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும்
சீறூர் பல பிறக்கு ஒழிய, மாலை
இனிது செய்தனையால் எந்தை! வாழிய!
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும்  15
ஆய் தொடி அரிவை கூந்தற்
போது குரல் அணிய வேய்தந்தோயே!  

வினை முற்றி மீளும் தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை மருதன் இளநாகனார்

அகநானூறு - 105 . பாலை

அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை
ஒள் இலைத் தொடலை தைஇ, மெல்லென
நல் வரை நாடன் தற்பாராட்ட
யாங்கு வல்லுநள்கொல் தானே தேம் பெய்து,
மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி,  5
ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள்,
நிழற் கயத்தன்ன நீள் நகர் வரைப்பின்
எம்முடைச் செல்வமும் உள்ளாள், பொய்ம் மருண்டு,
பந்து புடைப்பன்ன பாணிப் பல் அடிச்
சில் பரிக் குதிரை, பல் வேல் எழினி  10
கெடல் அருந் துப்பின் விடுதொழில் முடிமார்,
கனை எரி நடந்த கல் காய் கானத்து
வினை வல் அம்பின் விழுத் தொடை மறவர்
தேம் பிழி நறுங் கள் மகிழின், முனை கடந்து,
வீங்கு மென் சுரைய ஏற்றினம் தரூஉம்  15
முகை தலை திறந்த வேனிற்
பகை தலைமணந்த பல் அதர்ச் செலவே?  

மகட் போக்கிய தாய் சொல்லியது. - தாயங்கண்ணனார்

அகநானூறு - 106. மருதம்

எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்து,
பொரி அகைந்தன்ன பொங்கு பல் சிறு மீன்,
வெறி கொள் பாசடை, உணீஇயர், பைப்பயப்
பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும்
துறைகேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை  5
நம்மொடு புலக்கும் என்ப நாம் அது
செய்யாம்ஆயினும், உய்யாமையின்,
செறிதொடி தௌர்ப்ப வீசி, சிறிது அவண்
உலமந்து வருகம் சென்மோ தோழி!
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன்  10
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும்
களிறு பெறு வல்சிப் பாணன் எறியும்
தண்ணுமைக் கண்ணின் அலைஇயர், தன் வயிறே.  

தலைமகள் தன்னைப் புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - ஆலங்குடி வங்கனார்

அகநானூறு - 107. பாலை

நீ செலவு அயரக் கேட்டொறும், பல நினைந்து,
அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறை மெலிந்த
என் அகத்து இடும்பை களைமார், நின்னொடு
கருங் கல் வியல் அறைக் கிடப்பி, வயிறு தின்று
இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல்,  5
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்,
ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு
ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு
புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும்  10
கல்லா நீள் மொழிக் கத நாய் வடுகர்
வல் ஆண் அரு முனை நீந்தி, அல்லாந்து,
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு காற் பட்டத்து
இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து,
 ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு  15
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல்
புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி,
மரை கடிந்து ஊட்டும் வரைஅகச் சீறூர்
மாலை இன் துணைஆகி, காலைப்
பசு நனை நறு வீப் பரூஉப் பரல் உறைப்ப,  20
மண மனை கமழும் கானம்
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே.  

தோழி தலைமகள் குறிப்பு அறிந்து வந்து, தலைமகற்குச் சொல்லியது.- காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

அகநானூறு - 108. குறிஞ்சி

புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு
ஒத்தன்றுமன்னால்! எவன்கொல்? முத்தம்
வரைமுதல் சிதறிய வை போல், யானைப்
புகர் முகம் பொருத புது நீர் ஆலி
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப,  5
கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின்
விடுபொறி ஞெகிழியின் கொடி பட மின்னி,
படு மழை பொழிந்த பானாட் கங்குல்,
ஆர் உயிர்த் துப்பின் கோள் மா வழங்கும்
இருளிடைத் தமியன் வருதல் யாவதும்  10
அருளான் வாழி, தோழி! அல்கல்
விரவுப் பொறி மஞ்ஞை வெரீஇ, அரவின்
அணங்குடை அருந் தலை பை விரிப்பவைபோல்,
காயா மென் சினை தோய நீடிப்
 பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள்  15
அணி மலர் நறுந் தாது ஊதும் தும்பி
கை ஆடு வட்டின் தோன்றும்
மை ஆடு சென்னிய மலைகிழவோனே.  

தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - தங்கால் பொற்கொல்லனார்

அகநானூறு - 109. பாலை

பல் இதழ் மென் மலர் உண்கண், நல் யாழ்
நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி,
நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிக்
காடு கால்யாத்த நீடு மரச் சோலை  5
விழை வெளில் ஆடும் கழை வளர் நனந்தலை,
வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர்
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கைச்
சுரம் கெழு கவலை கோட்பால் பட்டென,
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர்,  10
கைப்பொருள் இல்லைஆயினும், மெய்க் கொண்டு
இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்குப்
பெருங் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும்
அறன் இல் வேந்தன் ஆளும்
 வறன் உறு குன்றம் பல விலங்கினவே.  15

இடைச் சுரத்துத் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- கடுந்தொடைக் காவினார்

அகநானூறு - 110. நெய்தல்

அன்னை அறியினும் அறிக; அலர்வாய்
அம் மென் சேரி கேட்பினும் கேட்க;
பிறிது ஒன்று இன்மை அறியக் கூறி,
கொடுஞ் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கி,
கடுஞ் சூள் தருகுவன், நினக்கே; கானல்  5
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும்,
சிற்றில் இழைத்தும், சிறு சோறு குவைஇயும்,
வருந்திய வருத்தம் தீர, யாம் சிறிது
இருந்தனமாக, எய்த வந்து,
தட மென் பணைத் தோள் மட நல்லீரே!  10
எல்லும் எல்லின்று; அசைவு மிக உடையேன்;
மெல் இலைப் பரப்பின் விருந்து உண்டு, யானும் இக்
கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ?
என மொழிந்தனனே, ஒருவன். அவற் கண்டு,
 இறைஞ்சிய முகத்தெம் புறம் சேர்பு பொருந்தி,  15
இவை நுமக்கு உரிய அல்ல; இழிந்த
கொழு மீன் வல்சி என்றனம், இழுமென.
நெடுங் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
காணாமோ? எனக் காலின் சிதையா,
நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும்  20
என்னே குறித்த நோக்கமொடு, நன்னுதால்!
ஒழிகோ யான்? என அழிதகக் கூறி,
யான் பெயர்க என்ன, நோக்கி, தான் தன்
நெடுந் தேர்க் கொடிஞ்சி பற்றி
நின்றோன் போலும் என்றும் என் மகட்கே.  25

தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது. - போந்தைப் பசலையார்

அகநானூறு - 111. பாலை

உள் ஆங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர்
எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி
வருவர் வாழி, தோழி! அரச
யானை கொண்ட துகிற் கொடி போல,
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி  5
ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர,
மழை என மருண்ட மம்மர் பல உடன்
ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங் கை
தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும்
அத்தக் கேழல் அட்ட நற் கோள்  10
செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப,
குருதி ஆரும் எருவைச் செஞ் செவி,
மண்டு அமர் அழுவத்து எல்லிக் கொண்ட
புண் தேர் விளக்கின், தோன்றும்
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே.  15

தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ

அகநானூறு - 112. குறிஞ்சி

கூனல் எண்கின் குறு நடைத் தொழுதி
சிதலை செய்த செந் நிலைப் புற்றின்
மண் புனை நெடுங் கோடு உடைய வாங்கி,
இரை நசைஇப் பரிக்கும் அரைநாட் கங்குல்
ஈன்று அணி வயவுப் பிணப் பசித்தென, மறப் புலி  5
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும்
பனி இருஞ் சோலை, எமியம் என்னாய்,
தீங்கு செய்தனையே, ஈங்கு வந்தோயே;
நாள் இடைப்படின், என் தோழி வாழாள்;
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை;  10
கழியக் காதலர்ஆயினும், சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்;
வரையின் எவனோ? வான் தோய் வெற்ப!
கணக் கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்
மணப்பு அருங் காமம் புணர்ந்தமை அறியார்,  15
தொன்று இயல் மரபின் மன்றல் அயர,
பெண் கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி,
நொதுமல் விருந்தினம் போல, இவள்
புது நாண் ஒடுக்கமும் காண்குவம், யாமே.  

இரவுக்குறி வந்த தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லி, வரைவு கடாயது. - நெய்தற்சாய்த்துய்த்த ஆவூர் கிழார்

அகநானூறு - 113. பாலை

நன்று அல் காலையும் நட்பின் கோடார்,
சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின்,
புன் தலை மடப் பிடி அகவுநர் பெருமகன்
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி,
காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர்  5
இளங் கள் கமழும் நெய்தல்அம் செறுவின்
வளம் கெழு நல் நாடு அன்ன என் தோள் மணந்து,
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற,
நல்காது துறந்த காதலர், என்றும்
கல் பொரூஉ மெலியாப் பரட்டின் நோன் அடி  10
அகல்சூல் அம் சுரைப் பெய்த வல்சியர்
இகந்தனர்ஆயினும், இடம் பார்த்துப் பகைவர்
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில்
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும்
கனை இருஞ் சுருணைக் கனி காழ் நெடு வேல்  15
விழவு அயர்ந்தன்ன கொழும் பல் திற்றி
எழாஅப் பாணன் நல் நாட்டு உம்பர்,
நெறி செல் வம்பலர்க் கொன்ற தெவ்வர்
எறிபடை கழீஇய சேயரிச் சில் நீர்
அறுதுறை அயிர் மணற் படுகரைப் போகி,  20
சேயர் என்றலின், சிறுமை உற்ற என்
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க,
அழாஅம் உறைதலும் உரியம் பராரை
அலங்கல் அம் சினைக் குடம்பை புல்லெனப்
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு,  25
மெய் இவண் ஒழியப் போகி, அவர்
செய்வினை மருங்கில் செலீஇயர், என் உயிரே!  

தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கல்லாடனார்

அகநானூறு - 114. முல்லை

கேளாய், எல்ல! தோழி! வேலன்
வெறி அயர் களத்துச் சிறு பல தாஅய
விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின்,
உரவுக் கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு,
அரவு நுங்கு மதியின், ஐயென மறையும்
 5
சிறு புன் மாலையும் உள்ளார் அவர் என,
நப் புலந்து உறையும் எவ்வம் நீங்க,
நூல் அறி வலவ! கடவுமதி, உவக்காண்
நெடுங் கொடி நுடங்கும் வான் தோய் புரிசை,
யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர்  10
வானக மீனின் விளங்கித் தோன்றும்,
அருங் கடிக் காப்பின், அஞ்சு வரு, மூதூர்த்
திருநகர் அடங்கிய மாசு இல் கற்பின்,
அரி மதர் மழைக் கண், அமை புரை பணைத் தோள்,
அணங்கு சால், அரிவையைக் காண்குவம்  15
பொலம்படைக் கலி மாப் பூண்ட தேரே.  

வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - .......

அகநானூறு - 115. பாலை

அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப்
பழி இலர்ஆயினும், பலர் புறங்கூறும்
அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல்
சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக;
நுண் பூண் எருமை குட நாட்டன்ன என்  5
ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும்
நோய் இலராக, நம் காதலர் வாய் வாள்
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய
வள் உயிர் வணர் மருப்பு அன்ன, ஒள் இணர்ச்  10
சுடர்ப் பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று
அறைமிசைத் தாஅம் அத்த நீளிடை,
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை,
சினம் மிகு முன்பின், வாம் மான், அஞ்சி
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை,  15
நன்னர் ஆய்கவின் தொலைய, சேய் நாட்டு,
நம் நீத்து உறையும் பொருட்பிணிக்
கூடாமையின், நீடியோரே.  

பிரிவிடை வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்

அகநானூறு - 116. மருதம்

எரி அகைந்தன்ன தாமரை இடை இடை
அரிந்து கால் குவித்த செந் நெல் வினைஞர்
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின்,
ஆய் கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர!
5 பெரிய நாண் இலைமன்ற; பொரி எனப்  5
புன்கு அவிழ் அகன்துறைப் பொலிய, ஒள் நுதல்,
நறு மலர்க்காண் வரும் குறும் பல் கூந்தல்,
மாழை நோக்கின், காழ் இயல் வன முலை,
எஃகுடை எழில் நலத்து, ஒருத்தியொடு நெருநை
வைகுபுனல் அயர்ந்தனை என்ப; அதுவே,  10
பொய் புறம் பொதிந்து, யாம் கரப்பவும், கையிகந்து
அலர் ஆகின்றால் தானே; மலர்தார்,
மை அணி யானை, மறப் போர்ச் செழியன்
பொய்யா விழவின் கூடற் பறந்தலை,
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர்  15
கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி,
இரங்குஇசை முரசம் ஒழிய, பரந்து அவர்
ஓடுபுறம் கண்ட ஞான்றை,
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே.  

தோழி தலைமகனை வாயில் மறுத்தது. - பரணர்

அகநானூறு - 117. பாலை

மௌவலொடு மலர்ந்த மாக் குரல் நொச்சியும்,
அவ் வரி அல்குல் ஆயமும், உள்ளாள்,
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர் வினை
வளம் கெழு திரு நகர் புலம்பப் போகி,
வெருவரு கவலை ஆங்கண், அருள்வர,
 5
கருங் கால் ஓமை ஏறி, வெண் தலைப்
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண்,
பொலந்தொடி தௌர்ப்ப வீசி; சேவடிச்
சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே
சாந்து உளர் வணர் குரல் வாரி, வகைவகுத்து;  10
யான் போது துணைப்ப, தகரம் மண்ணாள்,
தன் ஓரன்ன தகை வெங் காதலன்
வெறி கமழ் பல் மலர் புனையப் பின்னுவிட,
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல்
நெடுங் கால் மாஅத்து ஊழுறு வெண் பழம்  15
கொடுந் தாள் யாமை பார்ப்பொடு கவரும்
பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர்,
வாணன் சிறுகுடி வடாஅது
தீம் நீர்க் கான்யாற்று அவிர்அறல் போன்றே?  

மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - .........

அகநானூறு - 118. குறிஞ்சி

கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன்,
தேம் கமழ் இணர வேங்கை சூடி,
தொண்டகப் பறைச் சீர் பெண்டிரொடு விரைஇ,
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து,
இயல் முருகு ஒப்பினை, வய நாய் பிற்பட,  5
பகல் வரின், கவ்வை அஞ்சுதும்; இகல் கொள,
இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்ப்
பெருங் கை யானைக் கோள் பிழைத்து, இரீஇய
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடு நாள்
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும்.  10
என் ஆகுவள்கொல்தானே? பல் நாள்
புணர் குறி செய்த புலர்குரல் ஏனல்
கிளி கடி பாடலும் ஒழிந்தனள்;
அளியள்தான், நின் அளி அலது இலளே!  

செறிப்பு அறிவுறீஇ, இரவும் பகலும் வாரல் என்று வரைவு கடாஅயது.- கபிலர்

அகநானூறு - 119. பாலை

நுதலும் தோளும், திதலை அல்குலும்,
வண்ணமும், வனப்பும், வரியும், வாட
வருந்துவள், இவள் எனத் திருந்துபு நோக்கி,
வரைவு நன்று என்னாது அகலினும், அவர் வறிது,
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை,  5
ஏறு பெறு பாம்பின் பைந் துணி கடுப்ப,
நெறி அயல் திரங்கும் அத்தம், வெறி கொள,
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில்
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும்
சுரன் வழக்கு அற்றது என்னாது, உரம் சிறந்து,  10
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை,
தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை,
மடை அமை திண் சுரை, மாக் காழ் வேலொடு
தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப,
துணிகுவர்கொல்லோ தாமே துணிகொள  15
மறப் புலி உழந்த வசி படு சென்னி
உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டி,
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை
கை தோய்த்து உயிர்க்கும் வறுஞ் சுனை,
மை தோய் சிமைய, மலைமுதல் ஆறே?  20

செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொற்றது; தோழி தலைமகட்குச் சொற்றதூஉம் ஆம். - குடவாயிற் கீரத்தனார்

அகநானூறு - 120. நெய்தல்

நெடு வேள் மார்பின் ஆரம் போல,
செவ் வாய் வானம் தீண்டி, மீன் அருந்தும்
பைங் காற் கொக்கினம் நிரை பறை உகப்ப,
எல்லை பைப்பயக் கழிப்பி, குடவயின்
கல் சேர்ந்தன்றே, பல் கதிர் ஞாயிறு  5
மதர் எழில் மழைக் கண் கலுழ, இவளே
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல்
மாண் நலம் சிதைய ஏங்கி, ஆனாது,
அழல் தொடங்கினளே பெரும! அதனால்
கழிச் சுறா எறிந்த புண் தாள் அத்திரி  10
நெடு நீர் இருங் கழிப் பரி மெலிந்து, அசைஇ,
வல் வில் இளையரொடு எல்லிச் செல்லாது,
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை
அன்றில் அகவும் ஆங்கண்,  15
சிறு குரல் நெய்தல் எம் பெருங் கழி நாட்டே?  

தோழி, பகற்குறிக்கண் தலைமகனை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று சொல்லியது. - நக்கீரனார்

 
மேலும் அகநானூறு »
temple news
அகப்பொருள் பற்றிய நானூறு பாக்களைக் கொண்டது. இந் நூலுக்கு நெடுந்தொகை என்று வேறு பெயரும் உண்டு. இந் ... மேலும்
 
அகநானூறு - பாயிரம்  நின்ற நீதி, வென்ற நேமி,பழுதில் கொள்கை, வழுதிய ரவைக்கண்,அறிவு வீற்றிருந்த செறிவுடை ... மேலும்
 
அகநானூறு - 41. பாலை வைகு புலர் விடியல், மை புலம் பரப்ப,கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்எரி மருள் பூஞ் சினை ... மேலும்
 
அகநானூறு - 121. பாலை நாம் நகை உடையம் நெஞ்சே! கடுந் தெறல்வேனில் நீடிய வான் உயர் வழிநாள்,வறுமை கூரிய மண் ... மேலும்
 
அகநானூறு - 161. பாலை வினைவயிற் பிரிதல் யாவது? வணர் சுரிவடியாப் பித்தை, வன்கண், ஆடவர்அடி அமை பகழி ஆர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar