Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அகநானூறு (பகுதி-3) அகநானூறு (பகுதி-5)
முதல் பக்கம் » அகநானூறு
அகநானூறு (பகுதி-4)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2013
05:03

அகநானூறு - 121. பாலை

நாம் நகை உடையம் நெஞ்சே! கடுந் தெறல்
வேனில் நீடிய வான் உயர் வழிநாள்,
வறுமை கூரிய மண் நீர்ச் சிறு குளத்
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல்
கன்றுடை மடப் பிடிக் கயந்தலை மண்ணி,  5
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வயக் களிறு
செங் கோல் வால் இணர் தயங்கத் தீண்டி,
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து
அல்குறு வரி நிழல் அசைஇ, நம்மொடு
தான் வரும் என்ப, தட மென் தோளி  10
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை
கனை விசைக் கடு வளி எடுத்தலின், துணை செத்து
வெருள் ஏறு பயிரும் ஆங்கண்,
கரு முக முசுவின் கானத்தானே.  15

தோழியால் தலைமகளை உடன்வரும் எனக் கேட்ட தலைமகன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகன்

அகநானூறு - 122. குறிஞ்சி

இரும் பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர்
விழவு இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்;
மல்லல் ஆவண மறுகு உடன் மடியின்,
வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்;
பிணி கோள் அருஞ் சிறை அன்னை துஞ்சின்,  5
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்;
இலங்குவேல் இளையர் துஞ்சின், வை எயிற்று
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்;
அர வாய் ஞமலி மகிழாது மடியின்,
பகல் உரு உறழ நிலவுக் கான்று விசும்பின்  10
அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே;
திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்,
இல் எலி வல்சி வல் வாய்க் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்;
வளைக்கண் சேவல் வாளாது மடியின்,  15
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்;
எல்லாம் மடிந்தகாலை, ஒரு நாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே; அதனால்,
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து,
ஆதி போகிய பாய்பரி நன் மா  20
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல் முதிர் புறங்காட்டு அன்ன
பல் முட்டின்றால் தோழி! நம் களவே.  

தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகன் சொற்றது; தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - பரணர்

அகநானூறு - 123. பாலை

உண்ணாமையின் உயங்கிய மருங்கின்
ஆடாப் படிவத்து ஆன்றோர் போல,
வரை செறி சிறு நெறி நிரைபுடன் செல்லும்
கான யானை கவின் அழி குன்றம்
இறந்து, பொருள் தருதலும் ஆற்றாய்; சிறந்த  5
சில் ஐங் கூந்தல் நல் அகம் பொருந்தி
ஒழியின், வறுமை அஞ்சுதி; அழிதகவு
உடைமதி வாழிய, நெஞ்சே! நிலவு என
நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும்
மழை மருள் பல் தோல் மா வண் சோழர்  10
கழை மாய் காவிரிக் கடல் மண்டு பெருந் துறை,
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெருங் கடல் ஓதம் போல,
ஒன்றில் கொள்ளாய், சென்று தரு பொருட்கே.  

தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - காவிரிப்பூம்பட்டினத் துக் காரிக் கண்ணனார்

அகநானூறு - 124. முல்லை

நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி,
வந்து திறை கொடுத்து, வணங்கினர், வழிமொழிந்து
சென்றீக என்பஆயின், வேந்தனும்
நிலம் வகுந்துறாஅ ஈண்டிய தானையொடு
இன்றே புகுதல் வாய்வது; நன்றே.  5
மாட மாண் நகர்ப் பாடு அமை சேக்கைத்
துனி தீர் கொள்கை நம் காதலி இனிதுற,
பாசறை வருத்தம் வீட, நீயும்
மின்னு நிமிர்ந்தன்ன பொன் இயற் புனை படை,
கொய்சுவல், புரவி, கை கவர் வயங்கு பரி,  10
வண் பெயற்கு அவிழ்ந்த பைங் கொடி முல்லை
வீ கமழ் நெடு வழி ஊதுவண்டு இரிய,
காலை எய்த, கடவுமதி மாலை
அந்திக் கோவலர் அம் பணை இமிழ் இசை
அரமிய வியலகத்து இயம்பும்  15
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே.  

தலைமகன் தேர்ப்பாகற்கு உரைத்தது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

அகநானூறு - 125. பாலை

அரம் போழ் அவ் வளை தோள் நிலை நெகிழ,
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி
இரங் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை
ஆலி அன்ன வால் வீ தாஅய்,
வை வால் ஓதி மைஅணல் ஏய்ப்பத்  5
தாது உறு குவளைப்போது பிணி அவிழ,
படாஅப் பைங் கண் பா அடிக் கய வாய்க்
கடாஅம் மாறிய யானை போல,
பெய்து வறிது ஆகிய பொங்கு செலற் கொண்மூ
மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர,  10
பனி அடூஉ நின்ற பானாட் கங்குல்
தனியோர் மதுகை தூக்காய், தண்ணென,
முனிய அலைத்தி, முரண் இல் காலை;
கைதொழு மரபின் கடவுள் சான்ற
செய்வினை மருங்கின் சென்றோர் வல் வரின்  15
விரிஉளைப் பொலிந்த பரியுடை நல் மான்
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த
பெரு வளக் கரிகால் முன்னிலைச் செல்லார்,
சூடா வாகைப் பறந்தலை, ஆடு பெற
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த  20
பீடு இல் மன்னர் போல,
ஓடுவை மன்னால் வாடை! நீ எமக்கே.  

தலைமகன் வினை முற்றி மீண்டமை உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. -பரணர்

அகநானூறு - 126. மருதம்

நின் வாய் செத்து நீ பல உள்ளி,
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்,
மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக்
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று  5
அறல் வார் நெடுங் கயத்து அரு நிலை கலங்க,
மால் இருள் நடுநாட் போகி, தன் ஐயர்
காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு,
அவ் வாங்கு உந்தி, அம் சொல், பாண்மகள்,
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில்  10
பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள்,
கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
பயம் கெழு வைப்பிற் பல் வேல் எவ்வி
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்,
பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகி,  15
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவைகொல்லோ, நீயே கிளி எனச்
சிறிய மிழற்றும் செவ் வாய், பெரிய
கயல் என அமர்த்த உண்கண், புயல் எனப்
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்,  20
மின் நேர் மருங்குல், குறுமகள்
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே?  25

உணர்ப்புவயின் வாரா ஊடற்கண், தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பிட்டு அழிந்ததூஉம் ஆம்; தோழியைப் பின்னின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர்

அகநானூறு - 127. பாலை

இலங்கு வளை நெகிழச் சாஅய், அல்கலும்,
கலங்குஅஞர் உழந்து, நாம் இவண் ஒழிய
வலம் படு முரசிற் சேரலாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து, இமயத்து
முன்னோர் மருள வணங்குவில் பொறித்து,  5
நல் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்
பணி திறை தந்த பாடுசால் நன்கலம்
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய் நிறையக் குவைஇ, அன்று அவண்
நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன  10
ஒரு நாள் ஒரு பகற் பெறினும், வழிநாள்
தங்கலர் வாழி, தோழி! செங் கோற்
கருங் கால் மராத்து வாஅல் மெல் இணர்
சுரிந்து வணர் பித்தை பொலியச் சூடி,
கல்லா மழவர் வில் இடம் தழீஇ,  15
வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்,
பழி தீர் காதலர் சென்ற நாட்டே.  

பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார்

அகநானூறு - 128. குறிஞ்சி

மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே;
கொன்றோரன்ன கொடுமையோடு இன்றே
யாமம் கொள வரின் கனைஇ, காமம்
கடலினும் உரைஇ, கரை பொழியும்மே.
எவன்கொல் வாழி, தோழி! மயங்கி  5
இன்னம் ஆகவும், நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடும் சூழாது, கைம்மிக்கு,
இறும்பு பட்டு இருளிய இட்டு அருஞ் சிலம்பில்
குறுஞ் சுனைக் குவளை வண்டு படச் சூடி,
கான நாடன் வரூஉம், யானைக்  10
கயிற்றுப் புறத்தன்ன, கல்மிசைச் சிறு நெறி,
மாரி வானம் தலைஇ நீர் வார்பு,
இட்டு அருங் கண்ண படுகுழி இயவின்,
இருளிடை மிதிப்புழி நோக்கி, அவர்
தளர்அடி தாங்கிய சென்றது, இன்றே?  15

இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - கபிலர்

அகநானூறு - 129. பாலை

உள்ளல் வேண்டும் ஒழிந்த பின் என
நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர்
நின் மறந்து உறைதல் யாவது? புல் மறைந்து
அலங்கல் வான் கழை உதிர்நெல் நோக்கி,
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண்,  5
கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத்
தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்திப்
பொதி வயிற்று இளங் காய் பேடை ஊட்டி,
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ்
நல்கூர் பெண்டிர் அல்கற் கூட்டும்  10
கலங்குமுனைச் சீறூர் கை தலைவைப்ப,
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர்,
செருப்புடை அடியர், தெண் சுனை மண்டும்
அருஞ் சுரம் அரியஅல்ல; வார் கோல்
திருந்து இழைப் பணைத் தோள், தேன் நாறு கதுப்பின்,  15
குவளை உண்கண், இவளொடு செலற்கு என
நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர்
அம் சில் ஓதி ஆயிழை! நமக்கே.  

பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - குடவாயில் கீரத்தனார்

அகநானூறு - 130. நெய்தல்

அம்ம வாழி, கேளிர்! முன் நின்று
கண்டனிர்ஆயின், கழறலிர்மன்னோ
நுண் தாது பொதிந்த செங் காற் கொழு முகை
முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை,
பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை  5
எயிறுடை நெடுந் தோடு காப்ப, பல உடன்
வயிறுடைப் போது வாலிதின் விரீஇ,
புலவுப் பொருது அழித்த பூ நாறு பரப்பின்
இவர் திரை தந்த ஈர்ங் கதிர் முத்தம்
கவர் நடைப் புரவி கால் வடுத் தபுக்கும்  10
நல் தேர் வழுதி கொற்கை முன் துறை
வண்டு வாய் திறந்த வாங்குகழி நெய்தற்
போது புறங்கொடுத்த உண்கண்
மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே.  

கழறிய பாங்கற்குத் தலைமகன் கழற்றெதிர் மறுத்தது. - வெண்கண்ணனார்

அகநானூறு - 131. பாலை

விசும்பு உற நிவந்த மாத் தாள் இகணைப்
பசுங் கேழ் மெல் இலை அருகு நெறித்தன்ன,
வண்டு படுபு இருளிய, தாழ் இருங் கூந்தல்
சுரும்பு உண விரிந்த பெருந் தண் கோதை
இவளினும் சிறந்தன்று, ஈதல் நமக்கு என  5
வீளை அம்பின் விழுத் தொடை மழவர்
நாள் ஆ உய்த்த நாம வெஞ் சுரத்து
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின்
கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர்
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்  10
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
வெருவரு தகுந கானம், நம்மொடு
வருக என்னுதிஆயின்,
வாரேன்; நெஞ்சம்! வாய்க்க நின் வினையே.  15

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. மதுரை மருதன் இளநாகனார்

அகநானூறு - 132. குறிஞ்சி

ஏனலும் இறங்கு குரல் இறுத்தன; நோய் மலிந்து,
ஆய்கவின் தொலைந்த, இவள் நுதலும்; நோக்கி
ஏதில மொழியும், இவ் ஊரும்; ஆகலின்,
களிற்று முகம் திறந்த கவுளுடைப் பகழி,
வால் நிணப் புகவின், கானவர் தங்கை  5
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழைக் கண்
ஒல்கு இயற் கொடிச்சியை நல்கினைஆயின்,
கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப!
துளிதலைத் தலைஇய சாரல் நளி சுனைக்
கூம்பு முகை அவிழ்த்த குறுஞ் சிறைப் பறவை  10
வேங்கை விரி இணர் ஊதி, காந்தள்
தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை
இருங் கவுட் கடாஅம் கனவும்,
பெருங் கல் வேலி, நும் உறைவு இன் ஊர்க்கே.  

தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று,வரைவு கடாயது. - தாயங்கண்ணனார்

அகநானூறு - 133. பாலை

குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர்,
புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி,
நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப,
கார் தலைமணந்த பைம் புதற் புறவின்,  5
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும்
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில்,
கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு
எரி பரந்தன்ன இலமலர் விரைஇ,
பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று  10
வான் கொள் தூவல் வளி தர உண்கும்;
எம்மொடு வருதல் வல்லையோ மற்று? எனக்
கொன் ஒன்று வினவினர்மன்னே தோழி!
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி
கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம்  15
மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவற் கலித்த
வரி மரற் கறிக்கும் மடப் பிணைத்
திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே.  

பிரிவிடை ஆற்றாளாயினாள் எனக் கவன்ற தோழிக்கு, தலைமகள், ஆற்றுவல் என்பது பட, சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார்

அகநானூறு - 134. முல்லை

வானம் வாய்ப்பக் கவினி, கானம்
கமஞ் சூல் மா மழை கார் பயந்து இறுத்தென,
மணி மருள் பூவை அணி மலர் இடைஇடை,
செம் புற மூதாய் பரத்தலின், நன் பல
முல்லை வீ கழல் தாஅய், வல்லோன்  5
செய்கை அன்ன செந் நிலப் புறவின்;
வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத்
தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க,
இடி மறந்து, ஏமதி வலவ! குவிமுகை
வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த  10
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு
கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை
கடுமான் தேர் ஒலி கேட்பின்,
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே.  

வினை முற்றி மீண்ட தலைமகன் பாகற்கு உரைத்தது. - சீத்தலைச் சாத்தனார்

அகநானூறு - 135. பாலை

திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க,
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பப்
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி,
எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து,
ஆதிமந்தியின் அறிவு பிறிதுஆகி,  5
பேதுற்றிசினே காதல்அம் தோழி!
காய்கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி,
ஆடுதளிர் இருப்பைக் கூடு குவி வான் பூ,
கோடு கடை கழங்கின், அறைமிசைத் தாஅம்
காடு இறந்தனரே, காதலர்; அடுபோர்,  10
வீயா விழுப் புகழ், விண் தோய் வியன் குடை,
ஈர் எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த
கழுவுள் காமூர் போலக்
கலங்கின்றுமாது, அவர்த் தௌந்த என் நெஞ்சே.  

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றது. - பரணர்

அகநானூறு - 136. மருதம்

மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி,
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தௌ ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கட்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து,  5
கடி நகர் புனைந்து, கடவுட் பேணி,
படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ,
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று,
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய,
மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை,  10
பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்
தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி,
தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி,  15
மழை பட்டன்ன மணல் மலி பந்தர்,
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி,
தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி!
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ,  20
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென  25
நாணினள் இறைஞ்சியோளே பேணி,
பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி,
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.  

உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- விற்றூற்று மூதெயினனார்

அகநானூறு - 137. பாலை

ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட
சிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ,
களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம்
சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே
வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர்  5
இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்,
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்  10
தீ இல் அடுப்பின் அரங்கம் போல,
பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும்,
தோளா முத்தின் தெண் கடற் பொருநன்
திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன்
நல் எழில் நெடு வேய் புரையும்  15
தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.  

தலைமகன் பிரியும் எனக் கருதி வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- உறையூர் முதுகூத்தனார்

அகநானூறு - 138. குறிஞ்சி

இகுளை! கேட்டிசின், காதல் அம் தோழி!
குவளை உண்கண் தெண் பனி மல்க,
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை
பிறிது ஒன்று கடுத்தனள்ஆகி வேம்பின்
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி,  5
உடலுநர்க் கடந்த கடல் அம் தானை,
திருந்துஇலை நெடு வேற் தென்னவன் பொதியில்,
அருஞ் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின்
ததும்பு சீர் இன் இயம் கறங்க, கைதொழுது,
உரு கெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇ,  10
கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு
தோடும் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும்
ஆடினர் ஆதல் நன்றோ? நீடு
நின்னொடு தௌத்த நல் மலை நாடன்
குறி வரல் அரைநாட் குன்றத்து உச்சி,  15
நெறி கெட வீழ்ந்த துன் அருங் கூர் இருள்,
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தட்
கொழு மடற் புதுப் பூ ஊதும் தும்பி
நல் நிறம் மருளும் அரு விடர்
இன்னா நீள் இடை நினையும், என் நெஞ்சே.  20

தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.- எழூஉப் பன்றி நாகன் குமரனார்

அகநானூறு - 139. பாலை

துஞ்சுவது போல இருளி, விண் பக
இமைப்பது போல மின்னி, உறைக்கொண்டு
ஏறுவது போலப் பாடு சிறந்து உரைஇ,
நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு,
ஆர் தளி பொழிந்த வார் பெயற் கடை நாள்;  5
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை,
புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை,
தண் நறும் படுநீர் மாந்தி, பதவு அருந்து
வெண் புறக்கு உடைய திரிமருப்பு இரலை;  10
வார் மணல் ஒரு சிறைப் பிடவு அவிழ் கொழு நிழல்,
காமர் துணையொடு ஏமுற வதிய;
அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய்
பரப்பியவைபோற் பாஅய், பல உடன்
 நீர் வார் மருங்கின் ஈரணி திகழ;  15
இன்னும் வாரார் ஆயின் நன்னுதல்!
யாதுகொல் மற்றுஅவர் நிலையே? காதலர்
கருவிக் கார்இடி இரீஇய
பருவம் அன்று, அவர், வருதும் என்றதுவே.  

பிரிவிடை மெலிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - இடைக்காடனார்

அகநானூறு - 140. நெய்தல்

பெருங் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
இருங் கழிச் செறுவின் உழாஅது செய்த
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,
என்றூழ் விடர குன்றம் போகும்
கதழ் கோல் உமணர் காதல் மடமகள்  5
சில் கோல் எல் வளை தௌர்ப்ப வீசி,
நெல்லின் நேரே வெண் கல் உப்பு எனச்
சேரி விலைமாறு கூறலின், மனைய
விளி அறி ஞமலி குரைப்ப, வெரீஇய
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு,  10
இதை முயல் புனவன் புகைநிழல் கடுக்கும்
மா மூதள்ளல் அழுந்திய சாகாட்டு
எவ்வம் தீர வாங்கும் தந்தை
கை பூண் பகட்டின் வருந்தி,
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே.  15

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- அம்மூவனார்

அகநானூறு - 141. பாலை

அம்ம வாழி, தோழி! கைம்மிகக்
கனவும் கங்குல்தோறு இனிய; நனவும்
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின;
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது
உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி,  5
மழை கால்நீங்கிய மாக விசும்பில்
குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து,
அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்;
மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி,
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய  10
விழவு உடன் அயர, வருகதில் அம்ம!
துவரப் புலர்ந்து தூ மலர் கஞலி,
தகரம் நாறும் தண் நறுங் கதுப்பின்
புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப்
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ,  15
கூழைக் கூந்தற் குறுந் தொடி மகளிர்
பெருஞ் செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து,
பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக்
கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது;  20
நெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும்
செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால்
வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன
நல் இசை வெறுக்கை தருமார், பல் பொறிப்
புலிக் கேழ் உற்ற பூவிடைப் பெருஞ் சினை  
நரந்த நறும் பூ நாள் மலர் உதிர,
கலை பாய்ந்து உகளும், கல் சேர் வேங்கை,
தேம் கமழ் நெடு வரைப் பிறங்கிய
வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே.  

பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர்

அகநானூறு - 142. குறிஞ்சி

இலமலர் அன்ன அம் செந் நாவின்
புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த,
பலர் மேந் தோன்றிய கவி கை வள்ளல்
நிறைஅருந் தானை வெல்போர் மாந்தரம்
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற  5
குறையோர் கொள்கலம் போல, நன்றும்
உவ இனி வாழிய, நெஞ்சே! காதலி
முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற
கறை அடி யானை நன்னன் பாழி,
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க்  10
கூட்டு எதிர்கொண்ட வாய் மொழி மிஞிலி
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர்
வெள்ளத் தானை அதிகற் கொன்று, உவந்து
ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின்,
பலர் அறிவுறுதல் அஞ்சி, பைப்பய,  15
நீர்த் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளிச்
சூர்ப்புறு கோல் வளை செறித்த முன்கை
குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல்,
இடன் இல் சிறு புறத்து இழையொடு துயல்வர,
கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து,  20
உருவு கிளர் ஓவினைப் பொலிந்த பாவை
இயல் கற்றன்ன ஒதுக்கினள் வந்து,
பெயல் அலைக் கலங்கிய மலைப் பூங் கோதை
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப,
தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்;  25
வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே.  

இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்

அகநானூறு - 143. பாலை

செய்வினைப் பிரிதல் எண்ணி, கைம்மிகக்
காடு கவின் ஒழியக் கடுங் கதிர் தெறுதலின்,
நீடு சினை வறிய ஆக, ஒல்லென
வாடு பல் அகல்இலை கோடைக்கு ஒய்யும்
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு,  5
முளி அரிற் பிறந்த வளி வளர் கூர் எரிச்
சுடர் நிமிர் நெடுங் கொடி விடர் முகை முழங்கும்
வெம் மலை அருஞ் சுரம் நீந்தி ஐய!
சேறும் என்ற சிறு சொற்கு இவட்கே,
வசை இல் வெம் போர் வானவன் மறவன்  10
நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும்,
பொய்யா வாய்வாள், புனைகழல், பிட்டன்
மை தவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன்
அகல் அறை நெடுஞ் சுனை, துவலையின் மலர்ந்த
தண் கமழ் நீலம் போல,  15
கண் பனி கலுழ்ந்தன; நோகோ யானே.  

பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகனை, தோழி, தலைமகளது ஆற்றாமை கண்டு, செலவு அழுங்குவித்தது. - ஆலம்பேரி சாத்தனார்

அகநானூறு - 144. முல்லை

வருதும் என்ற நாளும் பொய்த்தன;
அரி ஏர் உண்கண் நீரும் நில்லா;
தண் கார்க்கு ஈன்ற பைங் கொடி முல்லை
வை வாய் வால் முகை அவிழ்ந்த கோதை
பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார்,  5
அருள் கண்மாறலோ மாறுக அந்தில்
அறன் அஞ்சலரே! ஆயிழை! நமர் எனச்
சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும்,
பனி படு நறுந் தார் குழைய, நம்மொடு,
துனி தீர் முயக்கம் பெற்றோள் போல  10
உவக்குநள் வாழிய, நெஞ்சே! விசும்பின்
ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும்
கடாஅ யானை கொட்கும் பாசறை,
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை
கூர் வாட் குவிமுகம் சிதைய நூறி,  15
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி
வான மீனின் வயின் வயின் இமைப்ப,
அமர் ஓர்த்து, அட்ட செல்வம்
தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே.  

வினை முற்றிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் உரைப்பானாய், பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்

அகநானூறு - 145. பாலை

வேர் முழுது உலறி நின்ற புழற்கால்,
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்,
வற்றல் மரத்த பொற் தலை ஓதி
வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள,
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு  5
ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு
வாள்வரி பொருத புண் கூர் யானை
புகர் சிதை முகத்த குருதி வார,
உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும்
அருஞ் சுரம் இறந்தனள் என்ப பெருஞ் சீர்  10
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய
நன்னர் மெல் இணர்ப் புன்னை போல,
கடு நவைப் படீஇயர்மாதோ களி மயில்
குஞ்சரக் குரல குருகோடு ஆலும்,  15
துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை,
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின்,
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பாற்
சிறு பல் கூந்தற் போது பிடித்து அருளாது,
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம்,  20
எனக்கு உரித்து என்னாள், நின்ற என்
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே!  

மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார்

அகநானூறு - 146. மருதம்

வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு
பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி,
மடக் கண் எருமை மாண் நாகு தழீஇ,
படப்பை நண்ணி, பழனத்து அல்கும்
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந் தேர்,  5
ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள்
இயங்கல் ஆனாதுஆயின்; வயங்கிழை
யார்கொல் அளியள்தானே எம் போல்
மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி,
வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின்  10
கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து,
ஆயமும் அயலும் மருள,
தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோளே?  

வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது.-உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்

அகநானூறு - 147. பாலை

ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
வேங்கை வெறித் தழை வேறு வகுத்தன்ன
ஊன் பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த,
துறுகல் விடர் அளைப் பிணவுப் பசி கூர்ந்தென,  5
பொறி கிளர் உழுவைப் போழ் வாய் ஏற்றை
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும்
நெறி படு கவலை நிரம்பா நீளிடை,
வெள்ளி வீதியைப் போல நன்றும்
செலவு அயர்ந்திசினால் யானே; பல புலந்து,  10
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்,
தோளும் தொல் கவின் தொலைய, நாளும்
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி,
மருந்து பிறிது இன்மையின், இருந்து வினைஇலனே!  

செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - அவ்வையார்

அகநானூறு - 148. குறிஞ்சி

பனைத் திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக் கை,
கொலைச் சினம் தவிரா மதனுடை முன்பின்,
வண்டு படு கடாஅத்து, உயர் மருப்பு, யானை
தண் கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி;
உறு புலி உரறக் குத்தி; விறல் கடிந்து;  5
சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட!
கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன்
நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம் பட்டென,
காணிய செல்லாக் கூகை நாணி,
கடும் பகல் வழங்காதாஅங்கு, இடும்பை  10
பெரிதால் அம்ம இவட்கே; அதனால்
மாலை, வருதல் வேண்டும் சோலை
முளை மேய் பெருங் களிறு வழங்கும்
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே.  

பகல் வருவானை இரவு வருக என்றது. - பரணர்

அகநானூறு - 149. பாலை

சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த
நெடுஞ் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின்,
புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூப்
பெருங் கை எண்கின் இருங் கிளை கவரும்
அத்த நீள் இடைப் போகி, நன்றும்  5
அரிது செய் விழுப் பொருள் எளிதினின் பெறினும்
வாரேன் வாழி, என் நெஞ்சே! சேரலர்
சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க,
யவனர் தந்த வினை மாண் நன் கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்  10
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ,
அருஞ் சமம் கடந்து, படிமம் வவ்விய
நெடு நல் யானை அடுபோர்ச் செழியன்
கொடி நுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய,  15
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே.  

தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது.-எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்

அகநானூறு - 150. நெய்தல்

பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென
ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்பு விடக்
கண் உருத்து எழுதரு முலையும், நோக்கி;
எல்லினை பெரிது எனப் பல் மாண் கூறி,
பெருந் தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து,  5
அருங் கடிப்படுத்தனள் யாயே; கடுஞ் செலல்
வாட் சுறா வழங்கும் வளை மேய் பெருந் துறை,
கனைத்த நெய்தற் கண் போல் மா மலர்
நனைத்த செருந்திப் போது வாய் அவிழ,
மாலை மணி இதழ் கூம்ப, காலைக்  10
கள் நாறு காவியொடு தண்ணென மலரும்
கழியும், கானலும், காண்தொறும் பல புலந்து;
வாரார்கொல்? எனப் பருவரும்
தாரார் மார்ப! நீ தணந்த ஞான்றே!  

பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி, தலைமகளை இடத்து உய்த்து வந்து, செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது. - குறுவழுதியார்

அகநானூறு - 151. பாலை

தம் நயந்து உறைவோர்த் தாங்கி, தாம் நயந்து
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ,
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்! என,
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது
ஆபமன் வாழி, தோழி! கால் விரிபு  5
உறுவளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக்
கலைமான் தலையின் முதல்முதற் கவர்த்த
கோடல்அம் கவட்ட குறுங் கால் உழுஞ்சில்
தாறு சினை விளைந்த நெற்றம், ஆடுமகள்
அரிக் கோற் பறையின், ஐயென ஒலிக்கும்  10
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்,
கள்ளி முள் அரைப் பொருந்தி, செல்லுநர்க்கு
உறுவது கூறும், சிறு செந் நாவின்
மணி ஓர்த்தன்ன தெண் குரல்
கணி வாய், பல்லிய காடு இறந்தோரே!  15

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-காவன்முல்லைப் பூதரத்தனார்

அகநானூறு - 152. குறிஞ்சி

நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து,
குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண்
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால்
நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசை,
5 சினம் கெழு தானை, தித்தன் வெளியன்,  5
இரங்குநீர்ப் பரப்பின் கானல்அம் பெருந் துறை,
தனம் தரு நன் கலம் சிதையத் தாக்கும்
சிறு வெள் இறவின் குப்பை அன்ன
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன்
முனை முரண் உடையக் கடந்த வென் வேல்,  10
இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ்,
பாரத்துத் தலைவன், ஆர நன்னன்;
ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில்
களி மயிற் கலாவத்தன்ன. தோளே
வல் வில் இளையர் பெருமகன்; நள்ளி  15
சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த
கடவுட் காந்தளுள்ளும், பல உடன்
இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி,
வல்லினும், வல்லார்ஆயினும், சென்றோர்க்குச்
சால் அவிழ் நெடுங் குழி நிறைய வீசும்,  20
மாஅல் யானை ஆஅய் கானத்துத்
தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல்
வேய் அமைக் கண் இடை புரைஇ,
சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே.  

இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர்

அகநானூறு - 153. பாலை

நோகோ யானே; நோதகும் உள்ளம்;
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ,
பந்துவழிப் படர்குவள் ஆயினும், நொந்து நனி,
வெம்பும்மன், அளியள்தானே இனியே,
வன்கணாளன் மார்புஉற வளைஇ,  5
இன் சொற் பிணிப்ப நம்பி, நம் கண்
உறுதரு விழுமம் உள்ளாள், ஒய்யெனத்
தெறு கதிர் உலைஇய வேனில் வெங் காட்டு,
உறு வளி ஒலி கழைக் கண் உறுபு தீண்டலின்,
பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரிப்  10
பைது அறு சிமையப் பயம் நீங்கு ஆர் இடை
நல் அடிக்கு அமைந்தஅல்ல; மெல் இயல்
வல்லுநள்கொல்லோ தானே எல்லி
ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி
மீனொடு பொலிந்த வானின் தோன்றி,  15
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர்க் கோங்கின்
கால் உறக் கழன்ற கள் கமழ் புது மலர்
கை விடு சுடரின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே?  

மகட் போக்கிய செவிலித்தாய் சொற்றது. - சேரமான் இளங்குட்டுவன்

அகநானூறு - 154. முல்லை

படு மழை பொழிந்த பயம் மிகு புறவின்
நெடு நீர் அவல பகுவாய்த் தேரை
சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க,
குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி
செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப,  5
வெஞ் சின அரவின் பை அணந்தன்ன
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ,
திரி மருப்பு இரலை தௌ அறல் பருகிக்
காமர் துணையொடு ஏமுற வதிய,
காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி;  10
ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித்
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப
ஊர்மதி வலவ! தேரே சீர் மிகுபு
நம் வயிற் புரிந்த கொள்கை
அம் மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே.  15

வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பொதும்பிற் புல்லாளங்கண்ணியார்

அகநானூறு - 155. பாலை

அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும்
பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும்
பொருளின் ஆகும், புனையிழை! என்று, நம்
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே
நோய் நாம் உழக்குவம்ஆயினும், தாம் தம்  5
செய் வினை முடிக்க; தோழி! பல்வயின்
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண்
நெடு விளிக் கோவலர் கூவல் தோண்டிய
கொடு வாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி,
நீர் காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது  10
பெருங் களிறு மிதித்த அடியகத்து, இரும் புலி
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி,
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை
மண் ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த
விரல் ஊன்று வடுவின் தோன்றும்  15
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே.  

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ

அகநானூறு - 156. மருதம்

முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும்
மூட்டுறு கவரி தூக்கியன்ன,
செழுஞ் செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர்
மூதா தின்றல் அஞ்சி, காவலர்
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ,  5
காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும்
தீம் புனல் ஊர! திறவதாகக்
குவளை உண்கண் இவளும் யானும்
கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை,
காயா ஞாயிற்றாக, தலைப்பெய,  10
பொய்தல் ஆடிப் பொலிக! என வந்து,
நின் நகாப் பிழைத்த தவறோ பெரும!
கள்ளும் கண்ணியும் கையுறையாக
நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய்
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி,  15
தணி மருங்கு அறியாள், யாய் அழ,
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே?  

தலைமகளை இடத்து உய்த்துவந்த தோழி தலைமகனை வரைவு கடாயது.-ஆவூர் மூலங்கிழார்


அகநானூறு - 157. பாலை

அரியற் பெண்டிர் அலகிற் கொண்ட
பகுவாய்ப் பாளைக் குவிமுலை சுரந்த
அரி நிறக் கலுழி ஆர மாந்தி,
செரு வேட்டு, சிலைக்கும் செங் கண் ஆடவர்,  5
5 வில் இட வீழ்ந்தோர் பதுக்கை, கோங்கின்
எல்லி மலர்ந்த பைங் கொடி அதிரல்
பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கி,
கான யானை கவளம் கொள்ளும்
அஞ்சு வரு நெறியிடைத் தமியர் செல்மார்
நெஞ்சு உண மொழிபமன்னே தோழி!  10
முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து,
பெயல் உற நெகிழ்ந்து, வெயில் உறச் சாஅய்,
வினை அழி பாவையின் உலறி,
மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே!  

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வேம்பற்றூர்க் குமரனார்

அகநானூறு - 158. குறிஞ்சி

உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ,
பெயல் ஆன்று அவிந்த தூங்குஇருள் நடுநாள்,
மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்ப,
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள்,
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி,  5
மிடை ஊர்பு இழிய, கண்டனென், இவள் என
அலையல் வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைச்
சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து
தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே;
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க்  10
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே; இவள்தான்
சுடர் இன்று தமியளும் பனிக்கும்; வெருவர
மன்ற மராஅத்த கூகை குழறினும்,
நெஞ்சு அழிந்து அரணம் சேரும்; அதன்தலைப்
புலிக் கணத்தன்ன நாய் தொடர்விட்டு,  15
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந் திறல்
எந்தையும் இல்லன் ஆக,
அஞ்சுவள் அல்லளோ, இவள் இது செயலே?  

தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி செவிலித்தாய்க்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது. - கபிலர்

அகநானூறு - 159. பாலை

தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின்
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை
உரனுடைச் சுவல பகடு பல பரப்பி
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்,
வடி உறு பகழிக் கொடு வில் ஆடவர்  5
அணங்குடை நோன் சிலை வணங்க வாங்கி,
பல் ஆன் நெடு நிரை தழீஇ, கல்லென
அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர்,
கனை குரற் கடுந் துடிப் பாணி தூங்கி,
உவலைக் கண்ணியர், ஊன் புழுக்கு அயரும்  10
கவலை, காதலர் இறந்தனர் என, நனி
அவலம் கொள்ளல்மா, காதல் அம் தோழி!
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை
நறும் பூஞ் சாரற் குறும் பொறைக் குணாஅது
வில் கெழு தடக் கை வெல் போர் வானவன்  15
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானைத்
தொடியுடைத் தட மருப்பு ஒடிய நூறி,
கொடுமுடி காக்கும் குரூஉகண் நெடு மதில்
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும்,
ஆண்டு அமைந்து உறையுநர்அல்லர், நின்  20
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே.  

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஆமூர்க் கவுதமன் சாதேவனார்

அகநானூறு - 160. நெய்தல்

ஒடுங்கு ஈர் ஓதி நினக்கும் அற்றோ?
நடுங்கின்று, அளித்து, என் நிறை இல் நெஞ்சம்.
அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக்
குப்பை வெண் மணற் பக்கம் சேர்த்தி,
5 நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த  5
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை
பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க்
கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்:
முள் உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல
வாவு உடைமையின் வள்பின் காட்டி,  10
ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி
செழு நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி
நுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல்,
பாம்பு உயர் தலையின், சாம்புவன நிவப்ப,
இர வந்தன்றால் திண் தேர்; கரவாது  15
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய்
அரவச் சீறூர் காண,
பகல் வந்தன்றால், பாய்பரி சிறந்தே.  

தோழி வரைவு மலிந்து சொல்லியது. குமுழிஞாழலார் நப்பசலையார்

 
மேலும் அகநானூறு »
temple news
அகப்பொருள் பற்றிய நானூறு பாக்களைக் கொண்டது. இந் நூலுக்கு நெடுந்தொகை என்று வேறு பெயரும் உண்டு. இந் ... மேலும்
 
அகநானூறு - பாயிரம்  நின்ற நீதி, வென்ற நேமி,பழுதில் கொள்கை, வழுதிய ரவைக்கண்,அறிவு வீற்றிருந்த செறிவுடை ... மேலும்
 
அகநானூறு - 41. பாலை வைகு புலர் விடியல், மை புலம் பரப்ப,கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்எரி மருள் பூஞ் சினை ... மேலும்
 
அகநானூறு - 81. பாலை நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின்,புல் அளைப் ... மேலும்
 
அகநானூறு - 161. பாலை வினைவயிற் பிரிதல் யாவது? வணர் சுரிவடியாப் பித்தை, வன்கண், ஆடவர்அடி அமை பகழி ஆர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar