Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வள்ளலார் பகுதி-1
முதல் பக்கம் » வள்ளலார்
வள்ளலார் பகுதி-2
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஏப்
2013
04:04

4. உத்தர ஞான சிதம்பரத்தில் (வடலூரில்) ஓங்கிய (அருட்) பெருஞ்ஜோதி(1867-1870)

பூர்வ ஞான சிதம்பரம் என்பது தில்லையும் அதன் சுற்றுப்புறமுள்ள பகுதிகளுமாகும். உத்தர ஞான சிதம்பரம் என்பது வடலூரையும் அதையொட்டிய பகுதிகளையும் குறிக்கும்.

இராமலிங்க அடிகள் தமது தலையாய கொள்கையான சீவகாருண்யத்தின் முக்கிய நோக்கமாகிய பசிக்கொடுமையை அகற்றும் பொருட்டு, பட்டினி கிடப்பாரின் பசியைத் தவிர்த்திட, சத்திய தருமச்சாலை ஒன்றை நிறுவ முனைந்தார். பலதரப்பட்ட மக்களின் ஒத்துழைப்பால் 2-2-1867இல், சுமார் 80 காணி நிலம் வாங்கப்பட்டு சாலைத் தொடக்க விழாவும் 25-3-1867 இல் நடைபெற்றது.

1.சத்திய தருமச்சாலை:
பசியின் கொடுமையைப் பற்றி சங்க காலத்திலிருந்து இந்தக் காலம் வரை பேசாத, பாடாத பெருமக்களே இல்லை. எனினும் பசிக் கொடுமையின் உள்ளீட்டையும் அதன் துன்பத்தையும் விரித்துரைத்து, அதைப் போக்குவதற்கு வழியைக் கண்டுபிடித்து செயல்படுத்தும் வழியை உலகோர்க்கு அறிமுகப்படுத்டயவர் நம் வள்ளல் பெருமான்தான். சமரச சுத்த சன்மார்க்க சத்திய நெறியைப் பின்பற்றுவோர் அனைவரையும் இணைத்து 1865 ஆம் ஆண்டு சமசர சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவிய வள்ளல் பெருமான், பசிப்பிணியை அகற்றும் வகையில் பிரபவ ஆண்டு வைகாசி 11-ஆம் நாள் (23-5-1867) சத்திய தருமச்சாலையைத் தொடங்கினார். வள்ளல் இரமாலிங்க அடிகளால் அன்று மூடப்பட்ட அடுப்பின் நெருப்பு இன்றைக்கும் அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டு, பசிப்பிணி என்னும் நெருப்பை அணைத்து வருகிறது. அறக்கூழ்சாலை யாக அன்னம் வழங்கி வரும் தருமச்சாலையைத் தொடங்கிய நாள், வைகாசி மாதம் 11 ஆம் நாள் சன்மார்க்க வருடப் பிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு தான் பெருமான் சீவகாருண்ய ஒழுக்கப் பிரகடனம் ஒன்றைத் தம் கைப்பட எழுதி வெளியிட்டார். சங்கம்-சாலை- சபை இவை ஏற்பட்ட வடலூரின் பெருமையை பெருமான் உத்தரஞான சிதம்பர மாலை என்று 11 பாடல்களில், பதிகம் பாடியுள்ளார். மற்றொரு பாடலில் (பிள்ளை சிறுவிண்ணம் 21)

தங்கமே அனையர் கூடிய ஞான சமரச சுத்தசன்மார்க்கச்
சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார்திருக் கோயில் கண்டிடவும்
துங்கமே பெறுஞ்சற் சங்கம்நீ டூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன்
அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சைகாண் எந்தாய்

வடலூரில் மக்கள் இறைவனை வழிபடவும், அருள் பெறவும், சங்கம், சாலை, சபை அமைக்க விருப்புற்றது குறித்துப் பாடியுள்ளார். அன்னதானத்தைத் தொடர்ந்து, சாலையைச் சார்ந்த வைத்தியசாலை, சாத்திர சாலை, உபகாரச் சாலை, விருத்தி சாலை, உபாசனா சாலை, யோக சாலை, விவகார சாலை போன்ற பல துணை அமைப்புகளும் உருவாக்கப்பட்டன. வள்ளலார் இங்கு மேலான நிலையில் அமர்ந்து பகற் பொழுதுகளில் உபதேசம் செய்வது வழக்கம். இத்தருமச் சாலையின் பெருமை பற்றி அருள்விளக்கமாலை (92) யில் பெருமான் பாடுவதாவது:

காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே
களிப்பே என் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்
சாலையிலே ஒரு பகலில் தந்தனிப் பதியே
சமரசசன் மார்க்க சங்கத் தலைஅமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்
மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் மருனே

தருமச்சாலையில் இன்று வழிபடும் இடத்தில் வள்ளல் பெருமானின் திருவுருவச்சிலை, வள்ளல் பெருமான் கைப்பட எழுதிய அருட்பெருஞ்சோதி அகவல் மூலகையெழுத்துப் பிரதி, வெல்வெட் துணியிலான திண்டும் தலையணையும் அமையப் பெற்றுள்ளது. இந்த ஆன்ம பீடத்திற்கு, ஞானசிங்காதன பீடம் என்ற பெயரும் உண்டு. அருட்பெருஞ்சோதி ஆண்டவர் இங்கிருந்து அருளாசி வழங்குவதாக அமைக்கப்பட்டுள்ளது நம் அடிகளாரால் புலால் உண்பவர்கள் சன்மார்க்க சங்கத்திற்குப் புறவினத்தார் என்ற போதிலும் அவர்கள் பசி என்று தருமச்சாலைக்கு வந்துவிட்டால் அவர்களுக்கும் உணவளிக்கத் திட்டம் இருந்தது. இதை வள்ளல் பெருமானே கூறுகிறார்.

உயிர்க் கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர்அவர் புற இனத்தார் அவர்க்குப்
பயிர்ப்புறும் ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
பரிந்துமற்றைப் புண்புரையேல் நண்புதவேல் இங்கே
நயப்புறுசன் மார்க்கம் அவர் அடையளவும் இதுதான்
நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே
மயர்பறுமெய்த் தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்
மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே (அருள்விளக்க மாலை 71) (ஆறாந்திருமுறை)

2)சன்மார்க்க போதினி பாடசாலை(1867)
தருமச்சாலையை நிறுவிய அதே ஆண்டிலேயே அடிகள் சன்மார்க்கபோதினி என்ற பாடசாலை ஒன்றினையும் நிறுவினார்கள். இது ஒரு முன்மொழிப் பாடசாலை ஆகும். இதில் தமிழ், வடமொழி, ஆங்கிலம் மூன்றும் கற்பிக்கப்பட்டது. இதில் வயது பாகுபாடின்றி, சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் கல்வி கற்பிக்கப்பட்டது. தொழுவூர் வேலாயுத முதலியார் இப்பாடசாலையின் ஆசிரியராக விளங்கினார்.

3) சன்மார்க்க விவேக விருத்தி:
சன்மார்க்க சங்கத்தார் சார்பில் மாத பத்திரிகை ஒன்று 1896 இல் தொடங்கப்பட்டது. சன்மார்க்க கொள்கைகளைப் பரப்புவதே இதன் நோக்கம். முதல்முதலில் 49 பேர் கையொப்பமிட்டு உதவி செய்யும் தொகையை குறிப்பிட்டிருந்தனர். இதில் முதலாவதாக பெருமானே தம்பெயரை எழுதி ரூ.1 தருவதாக எழுதப்பட்டுள்ளது.

4) அடிகளார் தருமச்சாலையில் உறைந்த பொழுது நிகழ்ந்த அற்புதங்கள் சில:
தருமச்சாலைத் திருப்பணிகள் நடந்து வரும் நாளில் ஒருநாள் அடிகளார் பின்னலூர் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, அம்பாள்புரத்தில் வசிக்கும் பாகவதர் வேம்பையர் அடிகளாரைப் பார்த்து போகிறது யார்? என்று கேட்க, அதற்கு நம் ஐயா நான்தான் நீலவியாபாரி என்று கூறினார். நீலம் என்றால்மாயை (அஞ்ஞானம்) அடிகளார் எப்பொருள் பட அவ்வாறு கூறி, அவ்வேம்பையர் கண்ணுக்குப்புலப்படாது மறைந்தார்கள் என்பது தெரியவில்லை.

(பின்னலூர், ராஜன் பெரியவாய்க்காலின் மேல்புறம், வள்ளல் பெருமான் சிதம்பரம் செல்லும் வழியில் வந்து தங்கி இளைப்பாறும் இடத்தில் எங்கள் தாத்தா துரியானந்தர் மடம் ஒன்றைக் கட்டி, தைப்பூசத்திற்குப் பாதயாத்திரையாக வரும் வள்ளலார் அன்பர்கள் சுமார் எழுபது முதல் தொண்ணூறு பேர்களுக்கு மதிய உணவும், எழுபது முதல் தொண்ணூறு பேர்களுக்கு மதிய உணவும், இரவு சிற்றுண்டியும் அளிப்பது வழக்கம். அப்பணி இன்றும் அவரது புதல்வர்கள் பின்னலூர் சிவானந்தர் நித்தியானந்தம் மூலம் தொடர்கிறது. துரியவெளி அருட்பெருஞ்ஜோதி ஆத்மஞானம் அடையும் வழி தெய்வஉணர்ச்சி ரமண மணிமாலை இரமலிங்க சுவாமிகள் நாடகம் போன்ற ஞான நூல்களை எழுதிய துரியானந்தரின் பூதவுடல் 15-12-1967 அன்று சமாதி வைக்கப்பட்டு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அமாவாசைக்குப் பின் வரும் உத்திராட நட்சத்திரத்தில் குருபூசை நடத்தப்படுகிறது.

1) வேம்பையரின் விஷப்பரிட்சை:
இராமலிங்க அடிகள் தருமச்சாலையில் இருந்த காலத்தில் அன்பர்களின் வேண்டுகோளுக்கிரங்கி, செம்பு, ஈயம், இரும்பு முதலிய உலோகங்களை பொன்னாக மாற்றிக் காட்டி (ரசவாதம்) அவற்றைப் பின் எவருக்கும் கிட்டாதபடி குளங்களிலும் கேணிகளிலும் எறிந்துவிடுவார். அம்பாள்புரம் வேம்பையர் தருமச்சாலையில் பாடகராகவும் இருந்தார். அவர் நம்பெருமானின் ரசவாதத்தைப் பார்த்தவர். அவர் நம்பெருமானைப் போல ரசவாதம் செய்ய முயன்று அப்பொருட்களை எடுத்துச் சென்று அவ்வாறே செய்யத் தொடங்கினார். துருத்தியில் வைத்து ஊதும் பொழுது எழுந்த புகை அவரது கண்களைக் குருடாக்கியது. அவர் எவ்வளவோ சிகிச்சை செய்து பார்த்தும் பயனில்லை. இறுதியில் அடிகளாரிடமே வந்து நடந்தவற்றைக் கூறி தம்மை மன்னித்தருள வேண்டினார். அடிகளார் எல்லாம் அறிந்தவராதலால் ஒரு புன்னகை புரிந்து தண்ணீரைக் கொண்டுவந்து அவருடைய கண்களைத் துடைக்க, சிறிது நேரத்தில் அவருடைய கண்களில் பார்வை மீண்டும் வந்தது.

2) அடிகளாரே அமுதசுரபி:
தம்முள் இருக்கும் உணவை எவ்வளவு எடுத்துக் கொண்டாலும், மீண்டும் உண்டாக்கிக் கொண்டு எப்பொழுதும் குறையாத நிலையிலிருக்கும். இப்படி அள்ள அள்ள குறையாமலிருப்பதற்கு அமுதசுரபி என்று பெயர். ஒருநாள் இரவு உணவு எல்லாம் சமைத்து உண்ணப் போகின்ற வேளையில் சுமார் நூறுபேர் திடீரென்று சத்திய தருமச்சாலைக்கு வந்துவிட்டனர். அவர்களைக் கண்டவுடனேயே அடியவர்கட்கெல்லாம் ஒரே கவலையும், பதைபதைப்பும் ஏற்பட்டது. அவ்வளவு பேருக்கும் இந்த இரவு வேளையில் சமைப்பது சாத்தியமில்லையே என்று வருந்தியதை அறிந்த அடிகளார். அவர்களை நோக்கி, பிச் இலைபோடுங்கள் எல்லாருக்கும் என்று கூறித் தாமே அந்த நூற்றுவர்க்கும் பரிமாறத் தொடங்கினார்கள். அங்கு ஓரளவே இருந்த உணவு அனைவருக்கும பரிமாறப்பட்டும் அவ்வளவிற் குறையாது அப்படியே யிருந்தது. அனைவரும் வயிராற உண்டு மகிழ்ந்தனராம்.

தருமச்சாலையில் ஒரு சமயம் அரிசி தட்டுப்பாடு ஏற்பட அதை அன்பர்கள் அடிகளாரிடம் கூறிட, அவர் சிறிதுநேரம் தியானம் செய்தார். பின் நாளைக்கு அரிசி வரும் என்று தியானம் செய்தார், பின் நாளைக்கு அரிசி வரும் என்று கூறினாராம். அவ்வாறே அடுத்த நாள் திருத்துறையூரிலிருந்து மூன்று வண்டி அரிசியும் பிற உணவுப் பொருட்களும் வந்து சேர்ந்தன. அப்பொருட்களைக் கொண்டு வந்த அன்பர், முதல் நாள் இரவு சுவாமிகள் கொண்டு வந்த அன்பர், முதல் நாள் இரவு சுவாமிகள் கனவில் தோன்றி எளியேற்குக் கட்டளையிட்டார்கள். அக்கட்டளையைச் சிரமேற்றாங்கியே யான் இப்பொருட்களைக் கொண்டு வந்தேன் என்று கூறினாராம்.

3) ஒரே நேரத்தில் அங்கும் இங்கும் காட்சியளித்தல்:
அ)இராமலிங்க அடிகளால் ஆட்கொள்ளப் பெற்ற கூடலூர் தேவநாயகம்பிள்ளையின் புதல்வர் நோய்வாய்ப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்ட நேரத்தில் அவ்வன்பரின் பிரார்த்தனையை ஏற்று அன்றிரவு 11 மணியளவில் அடிகளார் கூடலூர் சென்று தேவநாயகம் பிள்ளைக்கும். அவரது புதல்வருக்கும் திருநீறு வழங்கி, குணமடைய அருளாசி வழங்கிவந்தார்கள். ஆனால் அதே நேரத்தில் வடலூர் தருமச்சாலையிலும் அன்பர்களுக்கு உபந்நியாசம் செய்திருக்கிறார்கள். சாலையில் இருந்த அன்பர்களுக்கு தேவநாயகம்பிள்ளை மூலம் தகவல் தெரியவே பெரிதும் வியப்படைந்துள்ளனர்.

ஆ)வள்ளல் பெருமான் ஒருமுறை திருவதிகைக்கு வழிபடச் சென்றபோது கூட்டம் அதிகமாகி நெரிச்சல் ஏற்பட்டது. அப்போது பெருமான் பல இடங்களில் தோன்றி காட்சியளித்தார்கள்.

இ) நம் ஐயா, அன்பர்களுடன் உலாவப் போவது வழக்கம். அவ்வாறு ஒருநாள் சென்றபோது உடன் சென்ற அன்பர்கள் இருங்கள் என்று கூறி நடந்தனர். அதன் பின்னரும் அவர்கள் தொடரவே, அடிகள் வெகு தொலைவில் காணப்பட்டார். பின் தொடர்ந்தவர்கள் நெருங்க நெருங்க மேலும் தொலைவில் அடிகளார் காணப்பட்டார். இப்படிப்பட்ட நிகழ்வுகள்(அருகில் இருப்பதுபோல தெரிந்து, பின் மறைந்து. வெகு தொலைவில் காணப்படுவது) கருங்குழியிலும் நடைபெற்றுள்ளன.

ஈ) ஆறுமுக முதலியார் என்ற ஓர் அன்பர் மரம் வாங்குவதற்குச் சென்னை சென்றபோதும், வள்ளல் பெருமான் வடலூரில் இருந்தவாறே சென்னையிலும் உதவி செய்துள்ளார்.

4) தருமச்சாலையில் தில்லை தரிசனம்:
ஒவ்வொரு ஆண்டும் ஆனித்திருமஞ்சனத்திருவிழாவிற்கும், திருவாதிரைத் திருவிழாவிற்கும் அன்பர்கள் வந்து நம் அடிகளாரை அழைத்துக் கொண்டு சிதம்பரத்திற்குச் செல்வது வழக்கம். ஓராண்டு அவ்வாறு புறப்பட்டுச் செல்ல முடியாமல் போனது. அடியார்களின் வருத்தத்தை உணர்ந்த அடிகள், தருமச்சாலையின் ஒரு பகுதியில் திரையிடச் செய்து அத்திரையினுள் சென்று பார்க்கக் கூறினார். உள்ளே சென்ற அன்பர்கள், சிதம்பரத்தில் அம்பலவாணரின் திருவிழாக் காட்சி எப்படியிருக்குமோ அவ்வாறே அங்கு தோன்றவே, அடி பணிந்து வணங்கி, திரைப் புறத்திலிருக்கும் அடிகளின் திருவடிகளிலும் விழுந்து வணங்கி அருள்பெற்றுச் சென்றனர்.

5) கோடையில் மழை:
கோடைக்காலத்தில் தருமச்சாலைக்கு வந்தவர்கள் வெயில் கொடுமை தாங்க முடியாமல் அவதியுற்றதைக் கண்ட அடிகளார் ஒரு செம்பு நீரைத் தம் காலில் ஊற்றும்படி செய்தார். அவ்வாறு செய்ததும் சிறிது நேரத்தில் பெருமழை பொழிந்தது. புதுப்பேட்டை கிராம மக்கள் வந்து அடிகளாரிடம் தங்கள் பகுதியில் உள்ள இரண்டு கிணறுகளில் நீர் இல்லை என்றும், இருக்கும் சிறிது நீரும் கைப்பு கலந்திருப்பதாகவும் கூறி தங்கள் ஊருக்கு வருமாறு அழைத்துச் சென்றனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று அங்கு சென்ற அடிகள். அக்கிணறுகளில் நீர்ப்பெருக்கமும், மதுரமும் உண்டாகத் திருவருள் புரிந்தார்கள். அக்கிணறுகளில் அன்று முதல் இன்று வரை எப்பொழுதும் நீர் குறையவேயில்லை. மேலும் அந்நீர் மிகவும் சுவையுடனும் விளங்குகின்றது.

6) தீ விபத்து நேராது தடுத்தல்:
புதுப்பேட்டை கிராமத்திலேயே ஒரு வீடு தீப்பற்றிக் கொண்டு எவராலும் அணைக்க முடியாதபடி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அடிகள் தாம் இருந்த இடத்திலிருந்தே தம்முடைய மேலாடையை வீசி எரிய தீ அணைந்தது. பெரும் தீவிபத்து தடுக்கப்பட்டது.

7) புன்செய் நிலம் நன்செய் நிலமாதல்:
வட்டாட்சியர் முருகேசம்பிள்ளையின் மாமனார் மிராசுதார் மணலூர் நடராஜம் பிள்ளை நம் அடிகளாரால் ஆட்கொள்ளப்பட்டார். அவர் தமது புன்செய் நிலங்களை நன்செய் நிலங்களாக்க பலமுறை விண்ணப்பித்தும் பயனில்லை. அவர்நம் அடிகளாரிடம் முறையிடவே அவை நன்செய் நிலங்களாகத் திருவருள் புரிந்தார்கள். நன்செய் நிலங்களாக ஆக்கிய நம்பெருமானின் ஆணையின்படி அந்நிலங்களிலிருந்து வரும் தானியங்கள் ஏழைகளின் பசிபோக்க பரிவுடன் வழங்கப்பட்டது.

8) ஆணவம் அடங்கியது:
ஆணவத்தின் மற்றொரு வடிவம்தான் அகங்காரம். அத்தகைய அகந்தை கொண்ட ஒரு மனிதர். புதுச்சேரி தந்தி நிலைய மேலாளர். அவர் பல மொழிகளில் பயிற்சி உடையவர். ஒரு சமயம் அவர் அடிகளாரைக் காண வடலூர் வந்தார். அவர் வருவதற்கு முன்னரே நம் அடிகள் ஒருவர் புத்தி சொல்ல வருகிறார் என்றார். வந்தவர் பல மொழிகள் அறிந்தவர். அப்போது அங்கே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனை அழைத்து அவர் முன் நிறுத்தி, எந்த மொழியில் எப்பொருளை வேண்டுமானாலும் இப்பிள்ளையைக் கேளுங்கள் என்று அடிகள் கூற, வந்தவருக்கு பேச நாவெழாமல் அரைமணி நேரம் தவித்தார். அவருடைய செருக்கு அடங்கியது. நம் பெருமானிடம் வணங்கி மனதுக்குள் மன்னிப்புக் கேட்க பின் பேச்சுவரப் பெற்றார்.

9) கள்வர்களிடமும் கருணை காட்டுதல்:
அ) ஒருநாள் மஞ்சகுப்பம் நீதிமன்ற அலுவலர் ஒருவரும் அடிகளாரும் வண்டியில் மஞ்சகுப்பம் நோக்கி வந்து கொண்டிருந்தபொழுது வழியில் திருடர்கள் இருவர் வண்டியை மறித்து நிறுத்தினர். முதலில் இறங்கிய நீதிமன்ற அலுவலரைக் கையிலிருந்த வைர மோதிரத்தைக் கழற்றித் தரும்படி அத்திருடர்கள் அதட்டினர். அதைக் கேட்ட அடிகளார் அவசரமோ என்று கேட்க, அக்கள்வர்கள் அடிகளாரை அடிப்பதற்காகத் தடியை உயர்த்தினார்கள் உயர்த்திய கைகள் உயர்த்தியபடியே நின்றன. கண் பார்வையும் செயலிழந்தது. கள்வர்கள் இருவரும் தங்கள் செயலுக்கு வருந்தினர். அடிகள் அருளால் கைகளும், கண்களும் செயற்பட்டன. அக்கள்வர்கள் இருவரும் வண்டியைச் சுற்றி வணங்கி இனி இத்தொழிலை விட்டுவிட்டு உழைத்து உண்பதாக உறுதி கூறிச் சென்றனர்.

ஆ) இராமலிங்க அடிகள் சென்னையில் வாழ்ந்த காலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. திருவொற்றியூரில் அடிகள் ஒரு சத்திரத்தில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது ஒரு கள்வன் அவர் காதில் அணிந்திருந்த கடுக்கண் ஒன்றை கழற்றினான். உறங்குவது போலிருந்த அடிகளார் மற்றொரு கடுக்கணைக் கழற்றுவதற்கும் இடம் கொடுத்தார். கடுக்கண்களைத் திருடு கொடுத்த அடிகளார் அதற்குப் பின் காதணி அணிவதைத் தவிர்த்துவிட்டார்.

10) அசைவர் சைவரானது(அகவினத்தாராய் மாறிய புறவினத்தார்)
வடலூரில், அமாவாசை என்ற ஆதிதிராவிடர்களின் தலைவன் இறந்த மாடுகளைத் தின்னும் பழக்கமுடையவன். அவனை அழைத்து இறந்த மாடுகளை தின்னாமல் புதைக்க வேண்டும். புலாலையும் உண்ணக்கூடாது என்று அடிகளார் கட்டளையிட்டார். சேரியில் தன் பங்கிற்கு வரும் மாமிசத்தையும் விட்டுவிடாமல் என்ன செய்வது, நாள்தோறும் செலவுக்கு அரை ரூபாய் வேண்டுமே என்று கூற, அடிகளார் மஞ்சள் துணியில் அரை ரூபாய் நாணயத்தை முடித்து கொடுத்து, இதனைப் பெட்டியில் வைத்துக் கொள் நாள்தோறும் எட்டணா வருமானம் கிடைக்கும். என்று அருளினார். அங்ஙனமே கிடைக்கவே, அவனும் புலாலை அறவே நீக்கி சைவ உணவை மேற்கொண்டான்.

இதுபோன்ற பல நிகழ்ச்சிகளில் புலால் உண்பவர்களையும், உயிர்ப்பலி கொடுப்பவர்களையும் திருத்தி அவர்களையெல்லாம் உயிர் இரக்கம் காட்டும் தம்நெறிக்கு உட்படுத்தினார் வள்ளல் பெருமான்.

11) இலக்கண இலக்கிய நயமிகு கடிதம்:
ஒருநாள் கருங்குழியில் குடும்பத்தார் மீது சினங்கொண்ட சிறுவன் ஒருவன் எங்கோ ஓடிவிட்டான். போன இடம் தெரியாமலிருந்தது. பிறகு விசாரிக்கையில் மதுரையில் அவன் இருப்பதாக அவனுக்கு உரியார் கேள்விப்பட்டனர். அதனை அறிந்த பெருமானார், மதுரையில் ஒரு மடத்திலிருந்து திருச்சிற்றம்பல ஞானியார்க்கு அந்தச் சிறுவனின் தகவல் அறிந்து தெரிவிக்கும்படி ஓர் எளிய நடையில் கடிதம் ஒன்று வரைந்தார். இந்தக் கடிதம் ஞானியார் கைக்குக் கிடைக்கும்போது அவருடன் உரையாடிக் கொண்டிருந்த கணக்கிலவதானி தேவிபட்டணம் முத்துசாமிபிள்ளை அந்தக் கடிதத்தைக் கண்ணுற்று இவ்வளவு மேதாவி எழுதின கடிதத்தில் இலக்கண இலக்கிய விசேடம் ஒன்றுமில்லையே என்று ஏளனமாகக் கூறினார். அதற்கு ஞானியார், வள்ளலார் வார்த்தையாடிக் கொண்டிருக்கும்போது சிந்திய இலக்கணம்தான் இந்த உலகில் பரவி இருக்கிறது என்றனர். அங்ஙனமாயின் ஓர் இலக்கண அருமை நிரம்பிய கடிதம் வரவழையுங்கள் என்று அவதானியார் சொன்னார். உடனே ஞானியார் வள்ளலாருக்கு இத்தகைய கடிதம் வேறு வரையும்படி ஒரு கடிதம் எழுதினார். இதனைக் கண்ணுற்ற பெருமான் பிச் சென்று கூறி அடிகடிதத்தை எறிந்தார். அங்குள்ளோர் அக்கடிதத்தைப் பார்த்து தொழுவூர் வேலாயுத முதலியாரைக் கொண்டு இலக்கணப் பத்திரிகை எழுதியனுப்பினார் அப்பத்தரிக்கை வருமாறு:

அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை இலக்கண வியனடை வழங்கப்பாடுறுத்துவிக்கும் பத்திரிகை

உணர்ந்தோரானியல் வகையவின்ன வென்ற வற்றிற் பின் மொழி மதிக்கு முன்மொழி மறைக்கு முதலீறு விளங்க முடிப்பதாய பின்மொழியடைசார் முன்மொழி ஞாங்கர் விளங்கிய ஞானிகட்கு, பொய்யற் கெதிர்சார்புற்ற மூலியொன்று வளைத்து வணக்கஞ் செய்த ககனநீரெழிலென்னும் வான் வழங்கு பண்ணிகாரமென்றும் நாகச்சுட்டு மீனென்றும் வேறு குறிப்பதொன்று. அண்மைச் சுட்டடுத்த வேழாவதன் பொருண்மையும் மையடுத்த பல்லோர் வினாப் பெயர் பொருள் குறிஞ்சி யிறைஞ்சிப் பொருளொன்றனோடு புணர்ப

சேய்மைச் சுட்டடுத் தவத்திறத்தியல் யாது
இரண்டனுருபொடு புணர்ந்த தன்மைப் பன்மையாளுவதன்
பொருட்டாக்கினார்க்குய்த்த கற்பியலதிகரிப்பின்

வருத்தலை மகட் பெயரவிரண்டனோ டிரண் டிரண்டூகக் கழினிலைப் பெயரவு மகாரவீற்று முதனிலைத் தனிவினைச் செய்வென் வாய்ப்பாட்டு வினையெச்சத் தனவாகக் கலம்பகச் செய்யுறுப் பாற் சிறத்தும்.

இருவகை முதற்பொருளொன்றன் பாகுபாட்டுறுப்பிற் குறித்தவைம் பெரும் பூதத்தோர் விசேடனத் தெதிர் மறை நடுக்குறையியற் சொற்பெயரவுயிர்ப் பெயராக வெதிர்காலம் குறித்து நின்றது.

சிலவினைச் சார்பான் விலங்கு சூடிய வரையில் வெளியாம்.

இதனோடீரிரு வகைப்பட்டவோர் புதுநிலஞ் செலவுய்த்தனம்.

வேண்டுழி வேண்டியாங்குய்க்க மற்றைய பின்னர் வரைதும்

இற்றே விசும்பிற் கணைச்சலம்

பார்வதிபுரம்
சுக்கில வருடம்
துலா ரவி 27ம் தேதி 

இங்ஙனம்
நங்கோச் சோழன் வீரமணிச் சூடியார் திருவானைப் படிக்கு அடிமை
தொழுவூர்-வேலாயுதம்.

இவ்வாறு வரைந்த பத்திரிகையை ஞானியார் கண்ணுற்று அவதானியாரிடம் கொடுத்தார். இதற்குப் பொருள் விளங்காததோடு வேண்டுமென்று ஒரு வித்வான் பூட்டு போட்டால் அந்த வித்வான் தான் திறக்க வேண்டும் என்று அவதானியார் கூறினார். இதற்கு ஞானியார் நீர் ஒரு பூட்டுப்போடும் என்றார். அதற்கு அவதானியார் பின்வரும் பாட்டைப் பாடி விடுத்தனர்.

தகரவரிக் கூந்தலர்கா மாதிமுந்நீர் தாழும்
தகரவரி நாலைந்து சாடும்-தகரவரி
மூவொற்றியூர் பொருளை மூன்று மங்கை யேந்துமொரு
சேவெற்றி யூரானைச் செப்பு

இப்பாடலுக்குப் பொருள் பெருமான் பின்வருமாறு விவரித்துரைத்தார்.

தகரவரி- மைச்சாந்தணிந்த
கூந்தலர்- மயிரையுடைய பெண்கள்
காமாதி முந்நீர்- காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குணத்தில் மூழ்கும்படியான
தகரவரி நாலைந்து- த எனும் எழுத்துவர்க்கத்தில் நாலாவது ஐந்தாவது எழுத்துக்களை (தீது)
சாடும்- ஒழிக்கும்
தகரவரி மூவொற்று- த், க், ர்- இ- இகர எழுத்து ஊர்பொருளை மூன்றும்- சேர்ந்த பொருள் மூன்றும் திகிரி(த்+இ, க்+இ, ர்+இ, தி, கி, ரி) திகிரி என்னும் சொற்பொருள் மூன்று அவை மலை, சக்கரம், மூங்கில் இங்கு மலை என்பது கோவர்த்தன கிரியைத் தாங்கியது சக்கரம்-கையில் ஏந்தியுள்ளது மூங்கில்- புல்லாங்குழல்.

அம்கை ஏந்தும்- அழகிய கையில் ஏந்தும் ஒரு விசேஷமான
சே- விஷ்ணுமூர்த்தியான ரிஷபத்தை

ஒற்றியூரனை செப்பு- திருவொற்றியூர் தியாகேசரைத் துதி. திருவொற்றியூரைத் துதித்தால் காமம், வெகுளி, மயக்கம் நீங்கும் என்றவாறு இவ்வுரையால் முத்துசாமிப்பிள்ளை கொண்ட கருத்தை வெளியிட்டார். இதனை அறிந்த அவதானியார் கருங்குழி வந்து தெருவின் முனையிலேயே இறங்கி, வணங்கிக் கொண்டே வந்து வள்ளலார் முன் மன்னிக்க வேண்டும், வித்வான் என மதித்தேன். பரிபூரண ஞானி என உணர்ந்திலேன் என்று கூறினார். பெருமானும் இவரை ஏற்றருளினார். (பக்-7982 வே. திருவேங்கடம் எழுதிய வள்ளற் பெருமான் வரலாறு)

5) வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் சந்திப்பு:
திருநெல்வேலியில், சைவ வேளாண் மரபில் அவதரித்தவரும், ஒன்பது பிராயந்தொடங்கி ஒண்கடலமிழ்தெனத் தீஞ்சுவைக் கவிகளால் சிவகுமரனை வழுத்தும் சீரிய ஒழுக்கமுடையவருமாகிய தண்டபாணி சுவாமிகள் என்னும் முருகதாசர் வள்ளல் பெருமானின் பெருமைகளை அறிந்து வள்ளல் பெருமானை வந்து சந்தித்தார். முருகதாசர் தாம் இயற்றிய வண்ணத்திலக்கணம் என்ற நூலை பெருமானிடம் காட்டினார். அவற்றுள் சில பாக்களைப் படித்து மகிழ்ந்த நம்பெருமான் முருகதாசர் அருணகிரிதாசரே என்று வியந்து கூறினார். முருகதாசரும் பெருமானை நோக்கி தாங்கள் முற்பிறப்பில் தாயுமானவர் என்று போற்றினாராம். பின்நாளில் பெருமான் மீது அனுபவப் பதிகமும் வினாப் பதிகமும் பாடியுள்ளனர் முருகதாசர்.

முருகதாசர் எழுதியுள்ள புலவர் புராணம் என்னும் நூலில் கண் கண்ட புலவர் சருக்கம் பகுதியில் வள்ளல் பெருமானைப் பற்றி பத்து பாடல்கள் எழுதியுள்ளார் அதில் ஒரு பாடல்:

தண்டமிழ் வடலூரான்முன் தாயுமா னவனே என்று
மண்டலூர் மலர்கொன் டுற்ற அஞ்சுகம் அடியேன் என்றும்
விண்டதே ஒருவ னுள்ளான் வெறும்பொயான் விளம்பி வென்மெய்த்
தொண்டர் தான் துகளு மாயாச் சூரியா தியரும் சான்றே

6) மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை சந்திப்பு:
கவிபுனைவதில் கம்பரென்ப பெயரும் புகழும் வாய்ந்தவரும் திருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வானாக இருந்தவரும், ஆகிய மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் தம்முடைய மாணவராகிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை இயற்றிய நூல்களுக்குச் சாற்று கவி வாங்குவதற் பொருட்டாக வள்ளலாரிடம் வந்து வணங்கி ஒரு சாற்றுக் கவியும்பெற்றுக் கொண்டார். பின்னர் வள்ளல் பெருமானிடம் இங்கிதமாலையைப் பற்றி சுமார் நான்கு மணி நேரம் விளக்கம் பெற்றார். வள்ளல் பெருமானின் ஞான அமுதத்தை உண்ட களப்பில் பேரானந்தம் பெற்று வள்ளலாருடைய அன்பரானார்.

7) பதிற்றுப்பத்தந்தாதிக்குச் சாற்று கவி:
திருப்பாதிரிப்புலியூர் இயற்றமிழாசிரியர் சிவசிதம்பர முதலியார் தாம்பாடிய பதிற்றுப் பத்தந்தாதியைப் பார்வையிட்டு அதற்கோர் சாற்று கவி வழங்குமாறு வள்ளல் பெருமானை வேண்டினார். அதைப் பார்வையிட்ட வள்ளலார் அதில் ஒரு சில திருத்தங்களைச் செய்யுமாறு பணித்து, திருத்தத்திற்குப் பின் அந்நூலுக்குச் சாற்று கவி அளித்தார்.

8) வழக்கு மன்றத்தில் வள்ளல் பெருமான்:
உறுதியைக் குலைக்க வல்ல தொல்லைகள் இடையிடையே நிகழ்வதும் உண்டு. அத்தொல்லைகள் பெத்த நிலையில் மட்டும் அல்ல, சீவன் முத்த நிலையிலும் புகுந்து துன்புறுத்தி மகனைத் தங்கள் வயப்படுத்த முயலும், அவ்வேளைகளில் அன்பன் மிக எச்சரிக்கையாயிருத்தல் வேண்டும். சோதனைகட்கு இரையாகாது மகன் தன்னைக் காக்கப் புகுவதே அறிவுடைமை. இடையிடையே விழநேரினும் மீண்டும் எழுந்து இறைவனடியைப் பற்றிக் கொள்ளல் வேண்டும் என்று திரு.வி.க கொள்கைப் பிடிப்புள்ளோர் வாழ்க்கையில் எந்நிலையிலும் சோதனை உண்டு என்பதையும் அதைப் போக்கிக் கொள்ளும் வழியையும் கூறியுள்ளது நம் வள்ளல் பெருமானிடம் கொண்ட ஈடுபாடும் ஒரு காரணமாகும். ஞானம் முற்றிய நிலையில் நம் பெருமானுக்கு இப்படிப்பட்ட பெரும் சோதனை ஒன்று ஏற்பட்டது.

வள்ளல் பெருமானுடைய புகழ் பரவுவதைக் கண்டு வெகுண்ட சிலர் அவரை மறைமுகமாகத் தாக்கத் தொடங்கினார்கள், விவாத மேடைகளில் வழக்காடி வெற்றி பெற்ற வள்ளலாரை ஏதாவது ஒரு வழக்கில் மாட்டி அவரைக் களங்கப்படுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தரிந்தனர் சிலர். அதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பமும் அவர்கள் திட்டமிட்டபடி அமைந்தது.

1867 ஆம் ஆண்டு திருவருட்பாவின் முதல் 4 திருமுறைகள் (மொத்தம் ஆறு திருமுறைகள்) அச்சிடப்பெற்று வெளியாயின, இவற்றை தொழுவூர் வேலாயுத முதலியார் சென்னையில் வெளியிட்டார். இந்நூலில் உள்ள ஆசிரியர் பெயர், நூற்பெயர், நூல் பதிப்பின் பெயர் இவை முறையே திருவருட்பிரகாச வள்ளலார் திருவருட்பா திருமுறை என்பவை கண்டனத்துக்குரியது என்பது அக்காலத்தில் வாழ்ந்த யாழ்ப்பாணம் ச. ஆறுமுக நாவலரின் கருத்தாகும். நாவலர் என்றும் வசனநடை கைவந்த வல்லாளர் என்றும் போற்றப்பட்ட ஆறுமுக நாவலர் சைவத்திற்கும் தமிழுக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பேரறிஞர். அவருக்கு வள்ளலார் திருவருட்பாவினை திருமுறை எனப் பெயரிட்டதும் அடிகளைத் திருவருட்பிரகாச வள்ளலார் என வழங்கியதிலும் உடன்பாடில்லை. இன்னும் சொல்லப்போனால் சமகாலப் புலவர்களுக்கு உரிய காழ்ப்புணர்வு ஆறுமுகநாவலரிடம் மேலோங்கியிருந்தது என்றுகூட கூறலாம்.

இராமலிங்க அடிகளது பாடல்கள் அருட்பாக்கள் அன்றென்பதும் அவை மருட்பாக்கள் என்பது ஆதலின் திருவருட்பா என்னும் பெயர் பாடல் தொகுதிக்குப் பொருந்தாது என்பது நாவலரின் வாதம். பட்டினத்தார் பாடற்றிரட்டு, குமரகுருபரர் பிரபந்தத்திரட்டு, சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தத் திரட்டு, தாயுமானவர் பாடற்றிரட்டு, மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு என்பவைபோல் அடிகளது பாடல் தொகுதியும், இராமலிங்க பிள்ளை பாடல் திரட்டு என்றோ இராமலிங்க பிள்ளை பிரபந்தத் திரட்டு என்றோ வழங்கப்பட வேண்டும் என்பது நாவலர் கருத்து. திருமுறை என வழங்கத் தக்கவை பன்னிரு திருமுறைகளே என்பதும் வேறு எவற்றையும் திருமுறை என்னும் பேரால் வழங்கக்கூடாது என்பதும் நாவலர் கொள்கை (ஊரன் அடிகள்- இராமலிங்க அடிகள் வரலாறு)

தமிழ்நாட்டில் உள்ள சில சைவ மடாதிபதிகளும், மகாவித்வான்களும் ஆறுமுக நாவலருக்கு பக்க பலமாக இருந்தார்கள். இராமலிங்க அடிகளாருக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும், எதிர்ப்பாக ஆறுமுக நாவலர் அணியில் ஒருபிரிவினரும் மாறி மாறி கண்டனங்களை எழுப்பி அருட்பா மருட்பா வாதம் பேருரு எடுத்தது. வாதத்தில் வெல்ல முடியாமல் போன ஆறுமுக நாவலர் 1869 ஆம் ஆண்டு மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வள்ளலார் மீது அவதூறு வழக்கு ஒன்றைத் தொடுத்தார். நீதிமன்ற கட்டளைப்படி வழக்கு நடந்த நாளில் வள்ளலார் மன்றத்துள் புக, வாதி உட்பட அனைவரும் எழுந்து நின்றனர். வாதியாகிய ஆறுமுக நாவலர் பிரதிவாதிக்கு மரியாதை செலுத்தியதைக்  கண்டு நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்தார். (அருட்பா  மருட்பா என்ற நூலில் ப. சரவணன் என்பவர் இவ்வழக்கு குறித்து விரிவாக ஆய்ந்து எழுதியுள்ளார். அதன் சுருக்கம் ஆறுமுக நாவலர் அறுவர் மீது வழக்குத் தொடுத்தார். முதல் எதிரி சபா நடேச தீட்சிதர். இவர் மீது மான நட்டமும் பயமுறுத்தலும், அடுத்த நான்கு எதிரிகளான தீட்சிதர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பயமுறுத்தல்; ஆறாம் எதிரியாக இராமலிங்கர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு மானநட்டமாகும். நாவலர் என்ற சொல்லுக்கு விகற்பான பத்து அர்த்தங்கள் கூறி அவதூறு செய்ததாக வள்ளலார் மீது வழக்கு. இதில் 2,3,4,5 ஆகிய நான்கு எதிரிகள் விடுவிக்கப்பட்டு, முதல் எதிரி மற்றும் ஆறாம் எதிரி அடிகளார் ஆகிய இருவர் மட்டுமே விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். நீதிபதி ரொபேர்ட்ஸ் தமது தீர்ப்புரையில் முதல் எதிரிக்கு ரூ 50 அபராதம் அல்லது தவறினால் ஒரு மாதம் சாதரான மறியல், ஆறாம் எதிரி இராமலிங்கம் விடுவிக்கப்பட்டார்)

இவ்வழக்கு குறித்த ஆவணங்கள் கடலூர் நீதிமன்றத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வள்ளல் பெருமானை உலகுக்கு உயர்த்திக் காட்டிய பெருமை மறைமலை அடிகளாருக்கும், சதாவதனி செய்குதம்பிப் பாவலருக்கும் உண்டு. தொடக்கத்தில் யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை அவர்களின் மாணக்கர் என்ற முறையில் வள்ளல் பெருமானை எதிர்த்த தமிழ்த் தென்றல் திரு. வி. கலியாண சுந்தரம் அவர்கள் திரு.ம.ரா. குருசாமிப்பிள்ளை போன்றவர்களின் கருத்துக்களால் உண்மை உணர்ந்து வள்ளல் பெருமானை வழிபடத் தொடங்கியதோடு, தமிழ் மக்களிடையே வள்ளல் பெருமானின் கருத்துக்களைப் பரப்பினார்கள். இராமலிங்கம் சுவாமிகள் திருவுள்ளம் என்ற நூலினையும் எழுதி வெளியிட்டார்கள்.

5. சித்திவளாகத்தில் சுத்த சன்மார்க்க ஜோதி (1870-1875) (அகவை 47-51)

வடலூருக்கு (பார்வதிபுரம்) தெற்கே ஐந்துகிலோமீட்டர் தொலைவில் (அதாவது வடலூர்-நெய்வேலி நெடுஞ்சாலையில், வடலூரிலிருந்து 2 கி.மீ தொலைவு சென்று, தெற்கே செல்லும் பாதையில் 3 கி.மீ தொலைவில் உள்ளது) மேட்டுக்குப்பம் உள்ளது. மேட்டுக்குப்பத்தின் மேற்குப்புறம் அக்காலத்தில் வைணவ குருமார்கள் வந்து உபதேசம் செய்யும் திருமாளிகை என்னும் குடிசை வீட்டில், மேட்டுக்குப்பத்தில் வாழும் மக்களின் வேண்டுகோளினை ஏற்று சன்மார்க்க நெறியைப் போதிக்கச் சென்ற பெருமான் தம்முடைய அருள் வாழ்க்கையினை முற்றிலுமாக அங்கேயே வாழ்ந்து வையத்தில் பெருநெறியைப் பரப்பினார்கள்.

தேர்ந்தேன் தெளிந்தேன் சிவமே பொருள் என உள்
ஓர்ந்தேன் அருளுமுதம் உண்கின்றேன்.

என்று தாம்பெற்ற அனுபவங்களைப் பாடிய அடிகளார், என்று தாம்பெற்ற வாழ்க்கையில் தேர்ந்ததும், கருங்குழி, வடலூர் வாழ்க்கையில் தெளிந்ததும் பின் ஞான வாழ்க்கையில் அருநிலை பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு பெற்றதும் இச்சித்திவளாகத் திருமாளிகையில்தான்.

சித்திவளாகம் என்பது அடிகளார் இட்டபெயர்; சித்தி-வீடுபேறு; வளாகம்-இடம்; வீடுபேற்றை நல்கும் இடம் என்பதாகும். சமயவாதிகள் முத்தியே முடிவான பேறு என்பது. அத்தகைய முத்தியை அடைய வேண்டுமானால் அதற்கு முன் உறும் சாதனம் சித்தி என்றும் பெருமான் கூறியுள்ளார்.

முக்திஎன் பதுநிலை முன்னுறு சாதனம்
அத்தக வென்றஎன் அருட்பெருஞ் சோதி
சித்திஎன் பதுநிலை சேர்ந்த அநுபவம்
அத்திறல் என்ற என் அருட்பெருஞ் சோதி (அருட்பெருஞ்சோதி அகவல் 249-252)

ஆகவே, சித்தி என்பது சிவப்பேறு, வீடுபேறு ஆகிய நிலைசேர்ந்த அனுபவம் பெறும் இடம் என்பதால் சித்தி வளாகமாயிற்று.

பிரம்ம தண்டியோகம்:
சித்தி வளாகத்தில் அடிகள் தமது திருவறையில் தீச்சட்டிகளுக்கு முன் அமர்ந்து யோகஞ் செய்வார். இருபக்க்திலும் இருப்புச் சட்டியில் சீமைக்கரி எரிந்து கொண்டிருப்பது வழக்கம். உலோகத் துண்டு ஒன்றையோ வெள்ளி நாணயம் ஒன்றையோ உள்ளங்கையில் வைத்து மூடித்திறந்தால் அவை உருகி ஓடும் அளவுக்கு அகச்சூடு உடையவர் அடிகள், தீச்சட்டியினின்றும் நெருப்புத் துண்டுகள் சிதறி அடிகளின் மீது விழுந்த போதும் அடிகளின் திருமேனிக்கு ஊறு நேரிடுவதில்லை. ஞானக் கனல் நிறைந்த அத்திருமேனிக்கு ஊரு நேரிடுவதில்லை. ஞானக் கனல் நிறைந்த அத்திருமேனியை ஐம்பூதங்களில் ஒன்றாகிய தீக்கனல் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்பர் பெருமானை நீற்றறை ஒன்றும் செய்யாதிருத்தலுக்கு இதுவே காரணம் (இராமலிங்க அடிகள்-டாக்டர் ந. சுப்புரெட்டியார்)

வள்ளல் பெருமான் ஜீவகாருண்ய ஒழுக்கம் உரைநடைப் பகுதியில், பேரின்ப லாபம் அடைந்தவர் வெம்மையால் சுடப்படார்கள். புறத்தே நெருப்பிற் சுடினும் அவர் தேகத்தில் சூடும் வடுவும் தோன்றுவனவல்ல என்று சொல்லுகிறார்.

வள்ளல் பெருமான் சித்தி வளாகத்தில் இருந்தபோது அவருடைய மேனி முழுவதும் கற்பூர மணம் கமழ்ந்தது. அது எல்லாம் வல்ல இறைவன் திருமேனியில் கலந்த மணமாகவே இருக்கிறது. சுத்த துரியநிலை நின்று வீசும் மணமாகவே இருக்கிறது. சுத்த துரியநிலை நின்று வீசும் மணமாகவே இருந்தது என்பதை பெருமான் தலைவி நிலையில் நின்று பராசக்தியாகிய தோழியிடம் கூறும்போது.

கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும்
கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான்
இப்பூத மணம் போலே மறைவதன்று கண்டாய்
இயற்கை மணம் துரியநிறை இறைவடிவத் துளதே
பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர்
புண்ணியனார் திருவடிவில் நண்ணிய வாறதுவே

என்று பாடுகிறார்.

கற்பூர மணம் கமழும் திருமேனி கொண்ட வள்ளல் பெருமான், நன்றாகக் காய்ச்சிய வெந்நீரை(வெந்நீர் உள்ள பாத்திரத்தைக் கொறடாவினால் பிடித்துக் கொண்டுபோய் சுவாமிகளிடம் கொடுப்பர். அந்த அளவுக்கு சூடாகியிருக்கும்) சுவாமிகள் கையில் வாங்கிக் குடிப்பார். அதில் சிறிது சர்க்கரையும் கலந்து இருக்கும். சூடானது சுவாமிகளை ஒன்றும் செய்யாது. கடைசி காலங்களில் பசியினை முற்றிலுமாக போக்கி, தாகத்தை அறவே நீக்கி, பிணியையும் மூப்பையும் நெருங்கவிடாமல் நின்மல தேகியாய், மரணத்தை வென்று விளங்கினார்கள்.

கற்பூர மணம் கமழும் மேனி ஆயினும் வெந்நீராலும் வெந்திடாமல், நெருப்பாலும் அழியாமல் நிலைபெற்று விளங்குவதை அடிகளாரின் பாடலே நன்றாக எடுத்து உரைக்கிறது.

காற்றாலே புவியாலே ககனமத னாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிறவியற்றும் கொடுஞ்செயல்க ளாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
எந்தை அருட் பெருஞ்சோதி இறைவனச் சார் வீரே

1) திருவுருவின் அருமை: ஒரு சமயம் நல்ல வெயிலில் கூடலூர் அன்பர் ஒருவருடன் சென்றபோது, நமது பெருமான் அவரை நோக்கி, சுத்த ஞானிக்கு எண்ணங்காணும் அடையாளம் என்று வினவினார்கள். அதற்கு அவர் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தார். உடனே, அடிகளார், நிழற்சாயை இருக்கக்கூடாது என்று அந்த அன்பருக்கு உணர்த்தினார்கள். உடனே அந்த அன்பர். அடிகளாரை நோக்கி உற்றுப் பார்த்தார் வள்ளல் பெருமானுடைய நிழற்சாயை பூமியில் விழவில்லை. அன்பர் ஆச்சர்யப்பட்டதோடு அடிகளாரின் பெருமையை மற்றவர்கட்கும் புலப்படுத்தினார்.

திருப்பாபுலியூர் ரத்தினம் பிள்ளை என்பவரும் (23-9-1928 இல்) இந்து அறநிலைத்துறை ஆய்வாளரிடம் கொடுத்தவாக்கு மூலத்தில் அய்யா அவர்கள் சரீரமானது சந்திர சூரிய கிரணங்களுக்குத் தடையாக இருப்பதில்லை அதாவது சுவாமிகள் தேகத்திற்கு எப்போதும் நிழல் கிடையாது என்று அறிவித்துள்ளார்.

வள்ளல் பெருமானின் திருவுருவத்தைப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று விரும்பி, சென்னையில் அப்போது பிரபலமாய் இருந்த மாசிலமணி என்பவரைக் கொண்டு புகைப்படம் எடுத்தனர். சுமார் எட்டுமுறை முயன்றும் திருவுருவம் விழவில்லை.

ஒரு போட்டோ (புகைப்படம்) வில் மட்டும் வெள்ளைத் துணி மட்டும் விழுந்தது. அந்தப் படத்தின் நகல் ஒன்று இன்றும் கடலூர் அப்பாசாமிச் செட்டியார் வீட்டில் பூசையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

திருவொற்றியூர் சுவாமிகள் மடத்தில் ஆயில் பெயிண்ட் செய்த படம் ஒன்று இருந்தது. அதிலிருந்து அடிகளார் அமர்ந்திருப்பது போல ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டது. அதுவும் பலரிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பண்ணுருட்டி குயவர் ஒருவர் நம் பெருமானிடம் பெரும் பக்தி கொண்டவர். ஆர்வத்தின் காரணமாக வள்ளல் பெருமானின் திருவுருவத்தை அப்படியே மண்ணால் செய்து வண்ணமிட்டு அதைக் கொண்டு வந்து வள்ளல் பெருமானிடம் கொடுத்தார். அதைக் கையில் வாங்கிய பெருமான், பொன்னான மேனி மண்ணாயிற்றே என்று கூறி கைவிட்டார்கள். பிறகு அந்தக் குயவர் மண்ணால் மற்றொரு திருவுரு அமைத்தார். அதன் புகைப்பட நகல்தான் நடைமுறையில் உள்ளது என்பாரும் உண்டு.

சாலை சம்பந்திகளுக்கு சமாதிக் கட்டளை
30-3-1871-ல் சாலையில் உள்ள சங்க அன்பர்களுக்கு எழுதியருளிய மகாபத்திரிகை
திருச்சிற்றம்பலம்

அன்புள்ள நீங்கள் சமரசவேத சன்மார்க்க சங்கத் தருமச்சாலைக்கு மிகவும் உரிமையுடையவர்களாயின் உங்களுக்கு உண்மையுடன் அறிவிப்பது:
நீங்களும் உங்களை அடுத்தவர்களும் சிற்றம்பலத் தந்தையார் திருவருளால் சுகமாக வாழ்வீர்களாக.

கர்ம கால முதலிய பேதங்களால் யாருக்காயினும் தேக ஆனி நேரிட்டால் தகனம் செய்யாமல் சமாதியில் வைக்க வேண்டும்.

இறந்தவர்கள் திரும்பவும் எழுந்து நம்முடன் இருக்கப் பார்ப்போமென்கிற மூட நம்பிக்கையைக் கொண்டு எவ்வளவு துயரப்படாமலும், அழுகுரல் செய்யாமலும் சிற்றம்பலக் கடவுள் சிந்தனையுடனிருக்க வேண்டும். புருடனிறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம். (பிறதோரிடத்தில் பாடலில் கைம்மையைத் தவிர்த்து மங்கலம் அளித்த கருணையே) மனைவி இறந்தால், புருடன் வேறு கல்யாணப் பிரயத்தனம் செய்ய வேண்டாம். பிள்ளைகளிறந்தால் சஞ்சலிக்க வேண்டாம். கர்ம காரியங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். தெரிவிக்கத் தக்கவர்களுக்குத் தெரிவித்து ஒரு தினத்தில் நேரிட்டவர்களுக்கு நேரிட்ட மட்டில் அன்ன விரயம் செய்ய வேண்டும். இவ்வாறு உண்மையாக நம்பிச் செய்யுங்கள். செய்திருந்தால் சமரச வேத சன்மார்க்க சங்கமும் மேற்படி தருமச் சாலையும் நிலைபெற விளக்கஞ் செயும் பொருட்டாகவும் கருணை கூர்ந்து நமது தந்தையாராகிய எல்லாம் வல்ல திருச்சிற்றம்பலக் கடவுள் பார்வதிபுரம் சமரச வேத சன்மார்க்கத் தருமச்சாலைக்கு எழுந்தருளிக் காட்சி கொடுக்குந் தருணம் மிகவும் அடுத்த சமீபமாக இருக்கிறது. அந்தத் தருணத்தில் சாலைக்கு உரியவர்களாக இருந்து இறந்தவர்களையெல்லாம் எழுப்பிக் கொடுத்தருளுவார். இது சத்தியம், சத்தியம்.

இந்தக் கடிதம் வெளிப்பட்டறிந்து  கொள்ளும்முன் இறந்து தகனமானவர்களையும் எழுப்பியருள்வார். இது வெளிப்பட்டறிந்தபின் தகனம் செய்யக் கூடாது. அது சன்மார்க்க சங்கத்திற்குத் தக்கதல்ல. ஆதலின் மேற்கண்டபடி உண்மையாக நம்பிக்கையுடன் வாழ்வீர்களாக.

எனக்கு உலக அறிவு தெரிந்தது தொட்டு, எனது தந்தையார் திருவருளை நான் அடையும் வரையில், என்னுடன் பழகியும், என்னை நம்பியடுத்தும், என்னைக் கேள்வியால் விரும்பியும், எனக்குரிமைப் பட்டும் இருந்து இறந்தவர்களையெல்லாம் எழுப்பிக் கொடுத்து சமரச சன்மார்க்க சங்கத்தை விருத்தி செய்விக்க திருவுளத்துக் கருதிய, பெருங்கருணை வள்ளல் சாலைக்கு உரியவர்களாகிய இருந்தும் அவநம்பிக்கையுடனிருக்கின்றவர்கள் விஷயத்திலும், இந்த உபகாரச் செய்தேயருளுவார்.

ஆனால் அவர்கள் சன்மார்க்க சங்கத்திற்கு மாத்திரம் அருகராகார்கள், ஆகலின், நம்பிக்கையுடனிருங்கள்.

பெரிய களிப்பை அடைவீர்கள். இது சத்தியம், சத்தியம்.

சாலை சம்பந்தமில்லாதவர்களுக்கு இந்தக் கடிதத்தைத் தெரிவிக்க வேண்டாம்.

பிரமோ தூது வருடம்
பங்குனி 18ந் தேதி
பார்வதிபுரம்

இப்படிக்கு
சிதம்பரம் இராமலிங்கம்

வள்ளல் பெருமான் சித்தவளாகம் வந்து முற்றிலுமாக அருள் வாழ்க்கையை மேற்கொண்டார். வேதங்களையும் ஆகமங்களையும், புராணங்களையும், இதிகாசங்களையும் இன்னும் பல நூல்களையும் பொய் என்று உணர்ந்தார். அவையெல்லாம் சமயத்தின் அடிப்படையிலேயே, அமைந்துள்ளன என்றார். கருணையின் வடிவமாக விளங்கிய வள்ளல் பெருமான் நோயாளிகளின் நோயைப் போக்கி இருக்கின்றார். பசித்தவர்களின் பசியைப் போக்கி இருக்கின்றார். உயிர் இரக்கம் பற்றிய பல உபதேசங்களைச் செய்து இறுதியில் மரணமில்லாப் பெருவாழ்வினை அடைவதற்கு பெருமுயற்சி எடுத்துக் கொண்டார்.

சரியை நிலை நான்கினையும், கிரியை நிலை நான்கினையும், யோக நிலை நான்கினையும், ஞானநிலை நான்கினையும் கடந்தார். அழியாத தத்துவங்களாகவே என்றும் திகழ்கின்ற சிற்பர தத்துவத்தையும், தற்பர தத்துவத்தையும் கடந்து, மதங்கள் போதித்த மார்க்கங்களைக் கடந்து ஒரு புதிய சமரச சுத்த சன்மார்க்க நெறியைக் கண்டுபிடித்தார்.

சரியைநிலை நான்கும் ஒரு கிரியைநிலை நான்கும்
தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்
உரியசிவ ஞானநிலை நான்கும் அருள் ஒளியால்
ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்

என்று பாடிப் பரசவமடைந்த பெருமான் 25-1-1872-ல் எழுதிய சபை விளம்பரத்தில்

உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே!.... எனத் தொடங்கி இறுதியாக,

இனி இச்சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண் போகாமல் உண்மையறிவு, உண்மையன்பு, உண்மையிரக்க முதலிய சுப குணங்களைப் பெற்று, நற்செய்கை யுடையராய், எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்குஞ் சுத்த சன்மார்க்கத்தைப் பெருஞ் சுகத்தையும் பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு, மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருவுள்ளங் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞான சபையை இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து, இக்காலந் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகளெல்லாம் விளங்கயாமே அமர்ந்து விளையாடுகின்றாம் என்னுந் திருக்குறிப்பை வெளிப்படுத்தி, அருட்பெருஞ் ஜோதியாய் வீற்றிருக்கின்றார் (வள்ளலார் உரைநடைநூல் வர்த்தமானன் பதிப்பக வெளியீடு)

இறைவன் இப்படித் தனக்கு அறிவித்ததும் அடிகளார் உடல், உயிர், அறிவு, சுத்த ஆன்மா இவற்றையெல்லாம் கடந்து, சுத்த ஞானாகாசத்தை அனுபவித்தார். அதனையே சத்திய ஞான சபையாய் கண்டறிந்தார். இதனை உண்மை கூறல் என்ற பதிகத்தில், ஏழாவது பாட்டில் திருந்துமென்னுள்ளத் திருக்கோயில் ஞானசித்தி புரமெனச் சத்தியங் கண்டேன் என்று பாடுகிறார். அற்புதம் என்ற பாடலில், சத்திய ஞானசபை என்னுட் கண்டனன், சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன் என்றும் பாடுகின்றார்.

சித்தி வளாகத்தில் வாழ்ந்தபோது அடிகளார் தன்னுடைய உள்ளத்தில் கண்ட சத்திய ஞான சபையானது மிகவும் அற்புதமாகவும், புதுமையாகவும் இருந்தது. ஆகையால் சத்திய ஞானசபையைப் புறத்தில் ஓர் அற்புதத் திருவுருவுடன் விளங்க, உள்ளகத்தே ஒத்தெழுந்த அருள் விருப்பின்படி, தமது திருவருட் கரங்களால் ஒரு நிர்மாணப்படம் வரைந்து, சன்மார்க்க சங்கத்தினரிடம் கொடுத்து, சத்திய ஞான சபை கட்டட வேலையை பிரஜோற்பத்தி 1871-ஆம் ஆண்டு ஆனித் திங்களில் தொடங்கிடச் செய்தார்கள். ஞான சபையில் முதல் ஜோதி தரிசனத்தை 25-1-1875 இல், சித்தி வளாகத்தில் இருந்தபடியே காட்டுவித்தார்கள். வள்ளல் பெருமான் சித்தி வளாகத்தில் இருந்து கொண்டு, 9-3-1873 இல் சத்திய தருமச்சாலையில் உள்ளவர்களுக்கு ஒழுக்கக் கட்டளை ஒன்று வரைந்து விடுத்தார். அருட்பெருஞ்ஜோதி அகவல் என்னும் ஒப்பு உயர்வு அற்ற ஞானப் பொக்கிஷத்தைச் சித்தி வளாகத் திருமாளிகையில் திருவறையிலிருந்து, தன்னுடைய தெய்வீகத் திருக்கரத்தால், 18-4-1872 ல், ஆங்கிரச ஆண்டு, சித்திரை மாதம் 8 ஆம் நாள், ஒரே இரவில் 1596 அடிகளை எழுதி அருளினார். இந்த சித்திவளாகத் திருமாளிகையில் இருந்துதான் சத்திய ஞான சபையிலே அமைக்கப்பட்டிருக்கும் அகண்ட தீபத்தையும், கண்ணாடியையும் வைத்து ஒரு மண்டலம் அந்தக் கண்ணாடிக்கும் மகத்துவத்தினை உண்டாக்கி சத்திய ஞான சபையில் பொருத்தி வைத்தார்கள். சத்திய ஞான சபையில் உள்ள சிற்சபையிலும் பொற்சபையிலும் திகழ்கின்ற அற்புதங்களையுடைய உள்ளார்கள். பற்பல கட்டளைகள், விண்ணப்பங்கள் உபதேசங்கள் யாவும் சித்தி வளாகத்திலிருந்துதான் அடிகளார் அருளியிருக்கிறார்.

2) சத்திய ஞான சபை:
இந்தக் கலியுகத்தில் யோகம் முதலிய சாதனங்கள் அனுசரிப்பது இயலாத காரியம். ஆகவே தோத்திரம் செய்யுங்கள் என்று வள்ளல் பெருமான் அடிக்கடி உபதேசம் செய்வதுண்டு. தோத்திரம் செய்ய ஓர் இடம் தேவைபட்டது.

சத்திய ஞான சபை என்னுட் கண்டனன்
சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன்
நித்திய ஞான நிறையமு துண்டனன்
நிந்தை உலகியற் சந்ததையை விண்டனன்

என்ற வள்ளலார் சன்மார்க்க அன்பர்கள் எல்லாம் கூடி வழிபாடு நடத்தும் வகையில் கோயில் ஒன்றை அமைக்க விரும்பினார். அதற்கு ஞான சபை என்று பெயரிட்டு அது அமைய வேண்டிய முறையினை ஓர் படமாக வரைந்து கொடுத்தார். வள்ளல் பெருமான் உருவாக்கிய உத்தர ஞான சபை, பூர்வ ஞான சபையினின்றும் வேறுபட்ட தத்துவத்தை உள்ளடக்கிய தாகும். வள்ளல் பெருமான் அருட்பெருஞ்சோதி அகவலில் சிற்சபை, பொற்சபை, ஞான சபை குறித்த தத்துவங்களையும் அருள்வெளியை சிற்றம்பலம் என்றும் அது சன்மார்க்க வெளி, தூய சன்மார்க்க வெளி, சுகவெளி, தனிவெளி, அத்தகைய சிற்சபை என்றும் விளக்கமளித்துள்ளார்.

சுத்தசன் மார்க்கச் சுகத்தனி வெளியெனும்
அத்தகைச் சிற்சபை அருட்பெருஞ்சோதி
எனப் பல்வேறு விளக்கங்கள் தந்து.

ஓதிநின் நுணர்ந்துணர்ந் துணர்தற் கரிதாற்
ஆதிசிற் சபையில் அருட்பெருஞ் சோதி
என்றும்,

வாரமும் அழியா வரமும் தரும்திரு
ஆரமு தாம்சபை அருட்பெருஞ்சோதி

என்றும் மூவகைச் சபைத் திளைப்புகளையும் பக்குவத்தையும் பெருமான் விளக்கியுள்ளார்.

சிதம்பர இரகசியம் என்பதற்கு தத்துவ விளக்கம் பின்வருமாறு கூறப்படுவதுண்டு.

பொற்சபை, சிற்சபை, ஞான சபை என்னும் மூன்று சபைகளும் திளைப்புப் படிகளால் வேறு வேறு போலத் தோன்றினாலும் எல்லாம் ஆன்ம உள்ளத்தில் திகழும் ஒரே ஞான சபைதாம். உருவப் பொன்னுடம்பால் (ஒளியுடம்பு, சுவர்ண தேகம்-அன்புருவம்) நுகரும் ஞான சபை பொற்சபை எனவும், அருவுருவமாகிய நுண்ணுடம்பால் (ஒலியுடம்பு, பிரணவதேகம்- அருளுருவம்) நுகரும் ஞானசபை சிற்சபை எனவும், அருவமான காரண உடம்பால் (வானுடம்பு- ஞானதேகம்-இன்புருவம்) நுகரும் ஞான சபை எனவுமே பெயர் பெற்றன. ஒளி, ஒலி இரண்டும் வானில் எழுந்து வானில் ஒடுங்குவது போலப் பொற்சபையும், சிற்சபையும் எல்லாம் உயிருள்ளத்தில் இரண்டற அமைந்த சிற்றம் பலமே. அதாவது பக்குவ உயிரின் மெய்யுணர்வே, நுகர்வு, உரிமையும் பொதுமையும் ஒருமையுமாயிருத்தலின், இத்திளைப்புகள் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையாய்ச் சிறப்பதாயிற்று. இந்நிலையை எய்தியவர்கள், உருவ, அருவுருவ, அருவங்களாகிய உருவ பேதங்கள் மூன்றையும் அதாவது அன்புருவ, அருளுருவ, இன்புருவங்களாகிய, சுவர்ண, பிரணவ, ஞான தேகங்களையும் கடந்து இன்னதென்று சொல்லொணாத பெருநிலையை எய்துகின்றனர். அதுவே, சிதம்பர இரகசியம் என்பது (இராமலிங்க அடிகளாரின் அருட்பெருஞ்சோதி அகவல்-விளக்கவுரை சித்திரு அழகரடிகள்)

சிதம்பர தலத்தில் பொற்சபை முன் மண்டபமாக உள்ளது. திருவைத்தெழுத்தின் ஐந்து படி வகைகளும் நுகர்ந்து ஏறி, அச்சபையை அடையலாம். அம்பலவாணர் ஐந்தொழில் ஆனந்த நடனம் நிகழும் உட்சபை. சிற்சபையாகத் திகழ்கிறது. அதனோடு ஒன்றியதாகவே ஞானசபையும் கொள்ளப்படும். காரணம் அது அருவமானது. மேலும் உயிரறிவிற் பதிந்த சிவபோதத்தோடு சிவத்தின் தனித்த மெய்ஞ்ஞானமும் ஒன்றியிருக்கும் அருமையை அது புலப்படுத்துகிறது. சிதம்பர இரகசியம் என்பது இதனின் வேறு.

வடலூரில் அமைந்திருக்கும் ஞான சபையில் பொற்சபையும் சிற்சபையும் ஒன்றை ஒன்று எதிர்நோக்கியபடி முன் மண்டபமாக உள்ளன. ஞான சபையே இவை கடந்த பின் மண்டபமாய் நாற்கால் சோதி பீடமாய் அமைந்துள்ளது. திரைகளால் மூடிய சோதி அங்கு அம்பலவாணரின் நினைவாக ஒளிர்கிறது. திரைகளை ஒன்றன் பின் ஒன்றாக நீக்கி சோதிக் காட்சி காணலாம். சிதம்பரத்தில் திரை நீக்குவது சிதம்பர இரகசிய வெளியில்; அது பெருவெளித் திளைப்புக்குரியது; சிற்சபை அம்பலவாணர் அங்கு இல்லை.

தாய்முதலா ரொடுசிறிய பருவத்தில் தில்லைத்
தலத்திடையே திரைதூக்கித் தரிசித்த போது
வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
வெளியாகக் காட்டியஎன் மெய்யுறவாம் பொருளே (அருள்விளக்கமாலை 44)

என்னும் வள்ளலார் திருமொழியில் திரை தூக்கத் தரிசித்தது வெளி என வருகின்றது. மேலும், மூடிய வகையாகப் புறநிலையிற் காணாமல், இரகசிய தரிசனத்தை வெளிப்படையாகக் கண்டுகொண்ட குறிப்புத் தெரிகிறது. வடலூர் ஞானசபை மாந்தர் இதயம் போல ஒரு தாமரை மலர் வடிவில் அமைந்துள்ளது. சிதம்பரத் தலம் அவ்வாறன்றிச் சதுர வடிவிற் காணப்படுகிறது. பக்குவ ஆன்மாவின் திருவுள்ளமே ஞான சபை யாதலின், வள்ளற் பெருமான் இதயத் தாமரை வடிவில் புற அடையாளமும் தோன்ற வடலூர்ச் சபைக்கு வடிவு தந்தார் இமைப் பொழுதும் என் நெஞ்சின் நீங்காதான் தாள் வாழ்க என்று மாணிவாசகர் வழுத்துதலின், நெஞ்சம் இறைவனுக்கு இடமாதல் தெளியப்படும். ஊனுடம்பாகிய பரு உடலில் இந்நெஞ்சம் மார்பில் இருக்கின்றது என்று சொல்லப்படும். அதனால் அம்பலவாணரின் இருப்பிடம் நெஞ்சில்; புருவ நடுவிலன்று; சிதம்பரத்தலம் நெஞ்சம் எனப்படும்; அங்கே ஆண்டவன் திருநடம் வடலூரிற் போல ஞானசபையிலா அல்லது சிதம்பரத்தலத்திற்போல இதயச் சபையிலா என்பதும், சிற்றம்பலம் என்பது சிற்சபையா, இதயச் சபையா, வேறா என்பதும் சிற்சபை புருவநடுவாயின் இதயச் சபைக்குப் பெயரென்ன என்பதும், இதயச்சபை போல அமைந்த வடலூர் ஞானசபையில், சிற்றம்பலம் எது என்பதுமெல்லாம் முரண் நீக்கித் தெளிதற்குரியன. வள்ளல் பெருமான் சிதம்பரத்தைப் புதுக்க விரும்பினார். அதனால் வடலூரில் ஞானசபை அமைக்க நேர்ந்தது.

திருவளர் திருச்சிற் றம்பலம் ஓங்கும்
சிதம்ப ரம்என் னும்பெருங் கோயில்
உருவளர் மறையும் ஆகமக் கலையும்
உரைத்த வாறுஇயல் பெறப்புதுக்கி
மருவளர் மலரின் விளக்கிநின் மேனி
வண்ணங் கண் டுளங் களித் திடவும்
கருவளர் உலகில் திருவிழாக் காட்சி
காண வும்இச் சைகாண் எந்தாய் (பிள்ளைச் சிறு விண்ணப்பம் 20)

அருள்நெறிக் கருத்துக்களைத் திட்டமாய் தெளிந்து கொள்வதற்கு திருமூலர் திருமந்திரம் தக்க சாத்திரமாக அமைந்திருக்கிறது.

நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி
உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்
பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம்
சிற்றம் பலமென்று தெரிந்து கொண்டேனே

என்பது திருமந்திரம். திருச்சிற்றம்பலம் நெற்றிப் புருவ நடுவை இடமாகக் கொண்டது எனவும். அந்த அம்பலந்தான் இறைவனுக்கு இடம் எனவும் திருமூலர் தெளிவிக்கிறார். (அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம் சிவத்திரு அழகரடிகள்)

வடலூர் திருப்பணி புதிய தொன்றாதலின், அம்பலவாணரின் ஆடுந்தலமாக இதயத் தாமரையே என எண்கோணமாய் அமைய வாய்ப்பாயிற்று. மறையும் ஆகமமும் உரைத்தவாறு புதுக்கி மலர்போல விளக்கி, வடலூர்ச் சபை புறத்திலும் வடிவம் ஒக்க அமைக்கப்பட்டது. மறையும் ஆகமமும் தகராகாயம் என்னும் இதயத் தாமரையின் இயல்பை இன்னபடி என்று உரைத்தன. சிதம்பரத்தலம் மிகப் பழையது. அதை இப்போது புற அமைப்பும் பொருந்தப் புதுக்குவது எளிதன்று. மேலும் சிதம்பரத்தலம் இதயக் குகையின் உள்வெளிபோல அமைப்பு முறை பெற்றது. சிதம்பரம் என்பது நுண்ணிய தலமாதலின் நுண்வெளி இயல்பு தோன்ற அமைந்தது. வள்ளலார் அகத்தும் புறத்தும் பொருத்தந் தோன்றப் புதுக்கக் கருதினாராதலின், இரண்டும் கருத்தால் ஒன்றே; வள்ளலார் பாடலில் புதுக்கி என வரும் சொல்லுக்கு வடலூரில் புதிதாக அமைத்து என்பது பொருள். சிதம்பரக் கோயிலை வடலூரில் புதுக்கக் கருதினார். அதனால் வடலூர் உத்தர ஞான சிதம்பரம் என்று பெயர் பெற்றது. (அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம் சிவத்திரு அழகரடிகள்)

அண்டபிண்டங்கள் யாவும் புறப்புறம், புறம் அகப்புறம் அகம் என நான்காக அறியப்படும். அவை அண்டத்தில் நால்வகையும் பிண்டத்தில் நால்வகையும் ஆக எட்டு வகைகளாக நிற்றலை அறியலாம். அண்டபிண்டம் யாவும் இங்ஙனம் எண்கோணத்தில் அடங்கிய தன்னில் ஒருமைப்படுதலால் ஞானசபை என்னும் அருள்வெளி எண்கோண வடிவில் அமைவதாயிற்று என்பது ஆய்வாளர்கள் கருத்தாகும்.

எண் கோணமாக அமையப்பெற்ற இச்சபையின் கோபுரம் ஆரியக் கலையையும் திராவிடக் கலையையும் சாராமல் பொதுவாக விளங்குகிறது. கோபுரம் தாமரை மலரைக் கவிழ்த்து வைத்தாற்போல் விளங்குகிறது. மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் சோதியாக ஆண்டவர் தரிசனம் காட்டப்படுகிறது. தை மாதம் பூசத்தன்று சிறப்பு சோதி தரிசனமாகும்.

சென்னையிலிருந்து ஒரு பெரிய உயரமான சீமைக் கண்ணாடியை வாங்கி வரச் செய்து சித்திவளாகத்திருமாளிகையில் (மேட்டுக் குப்பத்தில்) அடிகளார் ஒரு மண்டலம் பூசையில் வைத்துப் பின்னர் சத்தியஞான சபையில் வைக்கப்பட்டது. இக்கண்ணாடிக்குப் பின்புறம் ஜோதியாக எரிந்து கொண்டிருக்கும் திருவிளக்கும் அவ்விதமே பொருத்தப்பட்டது. இந்தக் கண்ணாடிக்கு முன்பாக 7 திரைகள் உள்ளன. திரை விளக்கம் குறித்து வள்ளல் பெருமான் அகவலில் பின் வருமாறு குறிப்பிடுகின்றன.

கரைவின் மாமாயைக் கரும்பெருந் திரையில்
அரைசது மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
பேருறு நீலப் பெருந்திரை அதனால்
ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
பச்சைத் திரையால் பரவெளி அதனை
அச்சுற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
செம்மைத் திரையால் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
பொன்மைத் திரையால் பொருளுறு வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
கலப்புத் திரையால் கருதனு பவங்களை
அலப்புற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி

(அருட்பெருஞ்ஜோதி அகவல்- வரிகள் 812-826)

முதல் திரை-   கறுப்பு - மாமாயை- மாயாசத்தி
இரண்டாம் திரை-  நீலம் - கிரியாசத்தி
மூன்றாம் திரை-   பச்சை - பராசத்தி
நான்காம் திரை-   சிவப்பு-  இச்சாசத்தி
ஐந்தாம் திரை-   பொன்-  ஞான சத்தி
ஆறாம் திரை-   வெண்மை-  ஆதி சத்தி
ஏழாம் திரை-   கலப்பு-   சிற்சத்தி

தைப் பூசத்தன்று இந்த ஏழு திரைகளும் நீக்கப்பட்டு கண்ணாடி வழியாக ஜோதி தரிசனம் காண்பிக்கப் பெறுகிறது. இந்த சோதியை அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் ஜோதி உருக் காட்சி, சிற்றம்பலம் எனப்படும். இதற்கு முன்னர் இரு பக்கமும் இரு பெட்டிகள் உள்ளன. ஒன்று வெள்ளியம்பலம் மற்றும் பொன்னம்பலம். இவ்விரு பெட்டிகளில் உள்ளவை. இரகசியமாக உள்ளன. நுழைவாயிலில் 5 படிகள் உள்ளன. இவை பஞ்சாட்சரப் பிரணவ படிகளாகும். இதற்கு முன்பு ஒரு மண்டபம் உள்ளது. இதற்கு அருட்பெருஞ் சோதி அகவல் மண்டபம் எனப் பெயர். ஜோதி விளக்கு எரியும் இடத்திற்குக் கீழே சுரங்கமாகச் செல்லும் வெற்றிடம் உள்ளது. சபையைச் சுற்றி இரு சங்கிலித் தொடர் உள்ளது. இரும்பாலான இவை இன்னும் துருப்பிடிக்காமல் பல முட்டுத் தம்பங்களின் ஊடே செல்லும் வகையில் அமைக்கப் பெற்றுள்ளது. முட்டுத் தம்பமும் ஆணவம், மாயை, கன்மம் என்கிற மும்மலங்களைக் குறிக்கும். சபையின் வெளிச்சுற்றின் தென்கீழ் பக்கமாகக் கொடி மரம் உள்ளது. இக்கொடியின் மேல்புறம் மஞ்சளும் கீழ்புறம் வெள்ளை நிறமும் கொண்டது. இதுவே சுத்த சன்மார்க்க கொடியாகும். கொடிக்குப் பக்கமாக ஒரு கிணறு உள்ளது. சபைக்கு தென்கிழக்குத் திசையில் ஒரு குளம் உள்ளது. இந்தச் சபையானது 1871 ஆம் ஆண்டு சூன் 15 முதல் தொடங்கி 1872 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிறைவுபெறத் திட்டம் வகுக்கப்பட்டு அதன்படி 1872 ஆம் ஆண்டு தை மாத பூசத்தன்று முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது.

சபை வழிபாட்டு முறை: பொதுவாக மடம், சங்கம், கோயில், ஆதீனம் என்றெல்லாம் தாம் நிறுவிய நிலையங்களுக்கு பெயரிடமல், எல்லா இனத்தவரும், மதத்தவரும், ஒருமைப்பட்டு உணர்வோடு வழிபடும் வகையில், உத்திர ஞான சிதம்பரத்தில் அமைக்கப் பெற்ற இவ்வழிபாட்டுத் தலத்திற்கு சத்திய ஞான சபை என்று பெயரிட்டார். வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை என்பதே இதன் முழுப் பெயராகும். பெயரில் புதுமையைப் புகுத்திய அடிகளார் வழிபாட்டு முறைகளிலும் புதுமையைச் செய்தார்.

வழிபாட்டுக்கு உருவோர் அனைவரும் சபைக்குப் புறத்தே. வாயிலருகில் நின்று மெல்லெனத் துதித்திடல் வேண்டும். புலால் உண்போர் புறவினத்தார் என்பதால் சபைக்குப் புறத்தே நின்று வழிபட வேண்டும். சிற்சபை பொற்சபையுள்ள முன் மண்டபத்தில் அவர்கள் புகலாகாது (இராமலிங்க அடிகளார் மீது பெருமதிப்பு வைத்திருந்த தந்தை பெரியார், சத்திய ஞான சபைக்குச் சென்றும், தாம் புலால் உண்பவர் என்பதால் வள்ளலாரின் கட்டளைப்படி, உள்ளே செல்லாமல் வெளியில் இருந்தே கண்டு இன்புற்ற பண்பு நினைவு கூறத்தக்கது) இதுவே சபைக்குரிய வழிபாட்டு முறை. சபையினுள் உள்ள அகண்டத்திற்குத் திரி முதலியன இடுதற்காகவும், சபையின் உட்புறத்தைத் தூய்மைப்படுத்துவதற்கும் மூவாசைகளில் பற்றில்லாதவராயும் , உள்ள ஒருவர், வேண்டும் போது சபையினுள் புகலாம். அங்ஙனம் உட்புகுதற்கும் புறத்தே இருந்து வழிபடுதற்கும் சாதி முதலிய வேறுபாடு இல்லை. இசைக் கருவிகள், பிரசாத வகைகள், தீப, தூப ஆராதனைகள் திருநீறு முதலிய பிரசாதங்கள் இவ்வாறு சமயக் கோயில்களில் அனுட்டிக்கப் பெறுபவையாவும் ஞானசபை வழிபாட்டிற்குப் புறம்பானவைகளாகும்.

ஒவ்வொரு மாதமும் பூசத்தன்று இரவு எட்டு மணிக்கு ஜோதி தரிசனமும், ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ஆறுகாலம் ஜோதி தரிசனமும் தவறாமல் காட்டப் பெற்று வருகிறது.

சபை வழிபாட்டு விதி 18-7-1872
வள்ளல் பெருமான் எழுதிய ஞானசபை விளக்க விபவ பத்திரிகை

அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம்,
இன்று தொடங்கி சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை யென்றும், சாலைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை யென்றும், சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம் என்றும் திருப்பெயர் வழங்குதல் வேண்டும்.

இன்று தொடங்கி அருட்பெருஞ்சோதி ஆண்டவரது அருட்பெருஞ்சித்தி வெளிப்படும் வரைக்கும் ஞான சபைக்குள்ளே தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும். பித்தளை முதலியவற்றாற் செய்த குத்து விளக்கு வேண்டாம். மேலேற்றுகிற குளோப்பு முதலிய விளக்குகளும் வேண்டாம். தகரக் கண்ணாடி விளக்கு வைக்குங் காலத்தில், தகுதியுள்ள நம்மவர்கள் தேகசுத்தி கரண சுத்தி யுடைவயர்களாய திருவாயிற்படிப் புறத்திலிருந்து கொண்டு விளக்கேற்றி பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட சிறுவர் கையிற் கொடுத்தாவது எழுபத்திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியர் கையிற் கொடுத்தாவது உட்புற வாயில்களுக்குச் சமீபங்களில் வைத்து வரச் செய்விக்க வேண்டும். நாலு நாளைக்கு ஒரு விசை காலையில் மேற்குறித்த சிறியரைக் கொண்டாயினும் பெரியரைக் கொண்டாயினும் உள்ளே தூசு துடைப்பிக்க வேண்டும். தூசு துடைக்கப் புகும்போது நீராடி சுத்த தேகத்தோடு கால்களில் வத்திரம் சுற்றிக் கொண்டு புகுந்து முட்டிக்கால் இட்டுக் கொண்டு தூசு துடைக்கச் செய்விக்க வேண்டும். விளக்கு வைக்கின்ற போதும் இங்ஙனமே செய்விக்க வேண்டும். விளக்கு வைத்தற்கும் தூசு துடைத்தற்கும் தொடங்குகின்ற பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட சிறுவரும், எழுபத்திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியரும் பொருள், இடம், போகம் தெய்வ நினைப்புள்ளவர்களாய் அன்புடையவர்களாய் இருத்தல் வேண்டும். விளக்கு வைக்கும் போது தூசு துடைக்கும் போதும் நம்மவர்களில் நேர்ந்தவர்கள் புறத்தில் நின்று பரிசுத்தராய் மெல்லெனத் துதி செய்தல் வேண்டும். யாரும் யாதொரு காரியம் குறித்தும் தற்காலம் உள்ளே போதல் கூடாது. திறவுகோலை வேறொரு பெட்டிக்குள் வைத்து அப்பெட்டியைப் பூட்டி அப்பெட்டியைப் பொற்சபைக்குள் வைத்து அப்பெட்டித் திறவுகோலை அஸ்தான காவல் உத்திரவாதி யாயிருக்கின்றவர் கையில் ஒப்புவித்தல் வேண்டும்.

தொடர்ச்சி காலம் நேர்ந்த தருணம் எழுதுகிறேன்.

ஆங்கிரச வருடம் ஆடி மாதம் 5 ஆம் நாள்

இங்ஙனம்
சிதம்பரம் இராமலிங்கம்

3) சத்திய ஞான தீபம்:
வள்ளல் பெருமான் தன்னுடைய திருவறையில் தடைபடாது விளங்கிய தீபம் சத்திய ஞானத்தை வழங்கியது போல் உலக மக்களும் சத்திய ஞானத்தைப் பெற வேண்டும், மரணமில்லாப் பெருவாழ்வில் வாழ வேண்டும் என்பதற்காகவே, தன்னுடைய திருவறையிலிருந்து அத்தீபத்தை எடுத்து, 1873 ஸ்ரீ முக ஆண்டு, கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று சித்தி வளாகத் திருமாளிகையின் வாயில் புறத்தில் வைத்தருளி, திருவாயில் கதவைச் சாத்தி தாளிட்டு, அனைவரையும் நோக்கி, ஆண்டவர் இப்பொழுது தீப முன்னிலையில் விளங்குகிறபடியால் உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல், நீங்கள் எல்லோரும், நினைந்து நினைந்து என்றும் தொடக்கமுடைய 28 பாசுரங்கள் அடங்கிய ஞானசரியை என்ற பதிகத்தில் கண்டபடி, தெய்வபாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள் என்று திருவாய் மலர்ந்தருளினார்கள். அந்த முதல் பாடல் வருமாறு:

நினைந்து நினைந் துணைர்ந்துணர்ந்து நெகிழந்து நெகிழ் தன்யே
நிறைந்து நிறைந்து ஊற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்நிதியே ஞான
நடந்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந் தேத்துதும்நாம் வம்மின் உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையின் சிற்சபையில் புகுந் தருணம் இதுவே

நமது வள்ளல் பெருமான் பூர்வ ஞான சிதம்பரத்தின் காட்சியினையும், உத்தர ஞான சிதம்பரத்தின் காட்சியினையும் சித்தி வளாகத்திலிருந்தே கண்டு வியக்கின்றனர். கடவுளின் தன்மைகளை, ஏகன்- அனேகன், இயற்கை-செயற்கை, பொது- சிறப்பு, ஆண்-பெண், யோகம்- பிரிவு, அருள்ஒளி-அருள்வெளி என விளித்து அவற்றை இரண்டு ஞான சிதம்பரத்தோடும் அனுபவிக்கும் அடிகளார்,

ஏகமோ வன்றி யனேகமோ வென்றும்
இயற்கையோ செயற்கையோ சித்தோ
தேகமோ பொதுவோ சிறப்பதோ பெண்ணோ
திகழ்ந்திடு மாணதோ வதுவோ
யோகமே பிரிவோ வொளியதோ வெளியோ
உரைப்பதெற்றோ வென வுணர்ந்தோர்
ஆகமோ டுரைத்து வழுத்த நின்றோங்கும்
அருட்பெருஞ் ஜோதியென் னரசே

என்று நிறைவான பேற்றை அனுபவிக்கின்ற இடமே சித்தி வளாகமெனப் பாடியுள்ளார்.

மகா காரணமும் மஹா சந்நிதானமும்
இந்த உலகத்தில் எத்தனையோ  புண்ணிய பூமி இருக்கின்றன. இருந்தாலும் காரிய பாடுடைய புண்ணிய பூமி எது? மதுரை திருத்தலம். அதனால் இறைவன் அந்தப் புண்ணிய பூமியில் தோன்றி, அறுபத்து நான்கு திருவிளையாடலைப் புரிந்து இருக்கிறார். காரியகாரண முடைய புண்ணிய பூமி எது? தில்லைச் சிதம்பரம். அதனால் எல்லாம் வல்ல அம்பலக் கூத்தன் அந்தப் புண்ணிய பூமியில் தோன்றி, இன்ப நடம் புரிந்து இருக்கிறார். காரணமுடைய புண்ணிய பூமி எது? வடலூர் உத்தர ஞான சிதம்பரம். அதனால் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அந்தப் புண்ணிய பூமியின் தோன்றி, அருள் நடனம் புரிந்து வருகிறார். மகா காரணமுடைய புண்ணிய பூமி எது? சித்தவளாகம்! ஆகையால், இந்தப் புண்ணிய பூமி திருவடியைக் காட்டுகிறது. திருவருட் சமூக வண்ணத்தைக் காட்டுகிறது. இயற்கைத் திருவண்ணத்தைக் காட்டுகிறது. இருந்தாலும் இந்த இடத்தில் மகா உபதேசம் எழுந்து இருப்பதனாலும், மகா மந்திரம் ஒலித்து இருப்பதனாலும், இந்த புண்ணிய பூமி எவ்வுலகத்துக்கும் மகா சந்நிதானமாய்த் திகழ்கிறது.

4) ஒரு சில அற்புத நிகழ்வுகள்:
வள்ளல் பெருமானின் இலக்கியத்திறம் குறித்து யாருக்கும் ஐயம் எழ வாய்ப்பில்லை. அத்திறங் கொண்டு அவரது நுண்ணறிவை அறிய ஒரு சில நிகழ்வுகளைக் கூறலாம்.

அ) மூட முண்ட வித்வான்:
வடலூரில் சன்மார்க்கப் பாடசாலை ஏற்பட எண்ணிய அடிகளார் தொழுவூர் வேலாயுத முதலியாரைக் கொண்டு படித்தவர்களுக்குத் திருக்குறள் பாடம் நடத்தக் கூறினார். மூன்று மாதமாகியும் குறளில் மூன்று அதிகாரங்கள் கூட முற்றுப் பெறவில்லை. இதை அடிகளாரிடம் அன்பர்கள் முறையிடவே மூடமுண்ட வித்வானைக் கூப்பிடும் என்று அடிகளார் கூற, வேலாயுதனார் பயந்தபடியே பெருமான் முன் வந்து நின்றார், பிச்சு மூன்று மாதமாகியும் மூன்று அதிகாரங்கள் கூட முடியவில்லையாமே. சரி, இத்துடன் பாடத்தை நிறுத்தும், உங்கள் யாவருக்கும் தானாகவே கல்வி வரும் என்று அடிகளார் கூறினார். மூடமுண்ட என்பது அறியாமையை விழுங்கியது என்பதாகும். உண்மைப் பொருள் அறிந்த பின்னே அவர்கள் ஆறுதலடைந்தார்கள்.

ஆ) மனம் கட்ட இயலாது:
சூரிய உபாசனை வல்ல இரு பிராமணர்கள் அடிகளாரிடம் வந்தார்கள். அபர மார்க்கத்தில் இரும்பு, பொன் முதலியவை கையில் வைத்தால் உருகும் என்றும் பரமார்க்கத்தில் சூரியனைப் போலவே வெளியில் உலாவலாம். என்று சாத்திரம் கூறியபடி உபாசித்தும் சித்தியாகவில்லை என்றனர். அடிகளார் ஒரு ரூபாயை தன் கையில் சில நிமிடம் வைத்திருந்து காட்ட அது உருகிக் கீழே விழுந்தது. அவர்கள் வியந்தனர். பின்பு பிரமாணர்கள் ரசம் கட்ட முடியாது. மனம் கட்டலாம் என்றனர். அதற்குப் பெருமான் மனம் கட்ட முடியாது. ரசத்தைக் கட்டலாம் என்றனர்.

இ) குடும்பகோரம்:
இராமலிங்க அடிகள் சென்னையில் ஏழுகிணறு பகுதியில் உள்ள வீராசாமிப் பிள்ளைத் தெருவில் 33 ஆண்டுகள் வாழ்ந்தார். அப்போது அதே தெருவில் வாழ்ந்த திருமழிசை முத்துச்சாமி முதலியார் என்பவர் அவருக்கு நண்பனாகவும் சீடனாகவும் பழகி வந்தார். அப்போது அவர் பாடிய சில தோத்திரப் பாடல்களை அடிகளாரிடம் காட்டி சற்றுக் கவி பெற்றுள்ளார். அந்தச் சாற்றுக் கவியில் வள்ளலார் இவரை முத்துச்சாமிக் கவிக் குரிசில் என்று குறிப்பிடுகிறார்.

சிறிது காலம் சென்று அடிகளார் வடலூர் சென்றபிறகு முத்துசாமிக்குத் திருமணம் நிச்சயமாகிறது. அதற்கு அடிகளார் வரவேண்டும் என்று பெரிதும் விழைகிறார். ஆனால் அடிகளாரோ திருமணம் போன்ற விழாக்களில் கலந்து கொள்ளும் நிலையில் அப்போது இல்லை. தன்னால் வர இயலவில்லை என்ற செய்தியினை தனது நண்பர் கொந்தமூர் சீனிவாச வரதாச்சாரியார் மூலமாக, நேரில் கொடுக்குமாறு அனுப்புகிறார். இதில் முத்துச்சாமியை மூதறிவாளன் முத்துசாமி என்று குறிப்பிட்டு, இதனை இராமலிங்கம் எழுதிவிடுத்த மயலுரு சோபான வாசகம் என்று கூறுகிறார். இப்பாடல் திருஅருட்பா ஆறாந்திரு முறை ஊரன் அடிகள் பதிப்பில் காணப்படுகிறது.

குடும்ப கோரம் என்ற அடிகளாரின் தனிப்பாடல், சைவசித்தாந்தக் கருத்துக்கள் நிரம்பிய உருவகக் கதையாக உள்ளது. அதன் சுருக்கம் வருமாறு:

என் பெயர் ஏழை என்னுடைய முதல் மனைவி ஆணவம் அவளது மகன் அஞ்ஞாமை இரண்டாவது மனைவி மாயை இவள் பெற்ற பிள்ளைகள் நால்வர். முறையே மனம், புத்தி, சித்தம் அகங்காரம் என்பது அவர்கள் பெயர். மூன்றாவது மனைவி காமியம் அவளுக்கு மூன்று பிள்ளைகள். அவர்கள் பெயர் சத்துவம், இராசசம், தாமசம் என்பது. இந்த மூன்று மனைவிகளோடும் எட்டுப் பிள்ளைகளோடு ஏழையாகிய நான், ஒன்பது ஓட்டைகள் உள்ள ஒரு வாடகை வீட்டில் வாழ்கிறேன். இந்த வீட்டின் உரிமையாளர்கள் மூவர், வாதம், பித்தம், கபம் என்னும் பெயர் கொண்ட அவர்களுக்கு நான் தினந்தோறும் மூன்று முறை வாடகை கொடுக்க வேண்டும். சற்றே தவறினால் அவர்கள் துன்புறுத்துவர், நித்திரைப் பரத்தையோடு நேர்ந்து கூடவும் பொழுது சரியாய்ப் போகின்றது. எனவே, என்னால் திருமணத்திற்கு வர இயலவில்லை என்ற அடிகளாரின் 412 வரிகள் கொண்ட பாடலின் கடைசி 5 வரிகள்.

ஊன் பிண் டத்திற் குரு பிண்ட மீந்து
குடிக் கூலிக் கடன் குறையறத் தீர்த்துப்
பகல் வேடத்தால் பலரை விரட்டி
நித்திரைப் பரத்தையே நேர்ந்து கூடவும்
பொழுதும் சரியாய்ப் போகின்றதுவே (குடும்பகோரம்- வரிகள் 408-412)

உருவகக் கதையை வள்ளல் பெருமான் கவிதை வாயிலாக எழுதுவதிலும் வல்லமை பெற்றிருந்தார் என்பதற்கு இது எடுத்துகாட்டாகும்.

ஈ) முட ஆட்டுக்குட்டி
சித்தி வளாகத்தில் வள்ளல் பெருமான் உபதேசம் செய்யும் காலங்களில் முட ஆட்டுக்குட்டி ஒன்று அன்பர்களது கூட்டத்தில் தொலைவில் நின்று கண் இசையாது காதைச் சாய்த்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்கும். கூட்டம் முடிந்து அன்பர்கள் சித்தி வளாகத்தை வலம் வருவார்கள். அவர்களுடன் முட ஆட்டுக் குட்டியும் முடக்காலோடு வலம் வரும். தமக்காக வரும் உணவை அடிகள் நொண்டி ஆட்டுக் குட்டிக்கும், முடவராகிய ஆசிரியர் ஒருவர்க்கும் அளிப்பது வழக்கம். அடிகளாரிடம் அன்புகொண்ட அந்த ஆட்டுக்குட்டி அடிகளாரின் திருவுருவப் படத்தில் பின்னணியாக அமைந்திருக்கும் சாலை, சபை, சித்தி வளாகம் ஆகியவற்றுடன் ஆட்டுக்குட்டியையும் காணலாம். அந்த முட ஆட்டுக்குட்டி மீது பெருமான் செலுத்திய பார்வையினால் அதற்கு புண்ணியம் கிடைத்தது.

உ) அம்மையப்பராய் அருளுதல்:
ஒருநாள் இறைவன் அம்மையோடும் இரட்டைக் குதிரை வண்டியில் அடிகள் இருக்கும் இடம் தேடி வந்தான். அப்போது அடிகள் திருவறையின் உள்ளே இருக்கிறார். வெளியில் யாரோ வருவதைக் காதில் கேட்ட வள்ளல் பெருமான் யாரோ எவரோ என்று உள்வாயில் தாழ்ப்பாளைப் பற்றிக் கொண்டு பயத்தோடு திருவறையில் நிற்கிறார். அப்போது, குதிரை வண்டியில் அம்மையோடு வந்த அருட்பெருஞ்சோதி ஆண்டவர்ங தன்னுடைய திருக்கரங்களை அசைத்து வா என்று அழைத்து அருள் செய்தார் என்னும் இவ்வற்புத நிகழ்ச்சியை (ஆறாம் திருமுறை திருநடப்பு நிகழ்ச்சி 4) அகச்சான்றாகக் குறிப்பிட்டுள்ளார்.

எருதின் உழைத்திருந்தேனுக் கிரங்கி அடிச் சிறியேன்
இருந்த இடந் தனைத்தேடி இணைப்பரிமான் ஈர்க்கும்
ஒருதிருத் தேர் ஊர்ந்தென்னை உடையவளோடு அடைந்தே
உள்வாயில் தாழ்பிடித்துப் பயத்தொடுநின் றேனை
வருதிஎனத் திருக்கரங்கள் அசைத்தழைத்த பதியே
மணியேஎன் மருந்தேஎன் வாழ்வேஎன் வரமே
சுருதிமுடி அடிக்கணிந்த துரையே என்உளத்தே
சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே

ஊ) எனது குலத்து முதல் மகனே!

இராமலிங்க அடிகளார் பல பாடல்களில் அருட்பெருஞ்சோதி ஆண்டவரே தமது தந்தை என்றும், பரவசமடைந்த பரம்பொருள் நம் அடிகளாரை மெய்ப் பிள்ளையாக ஏற்றுக் கொண்டார் எனவும் பாடிப் பரவசமடைந்துள்ளார். திருவறையில் இருந்த பெருமானுக்குச் சித்தி யெல்லாம் கொடுத்து முதல்பிள்ளை என்று பெயரிட்டார் என்பதை.

கொள்ளைஎன இன்பங் கொடுத்தாய் நினது செல்வப்
பிள்ளைஎன எற்குப் பெயரிட்டாய்-தெள்ளமுதம்
தந்தாய் சமரசசன் மார்க்கசங்கத் தேவைத்தாய்
எந்தாய் கருணை இது( ஆனந்த அனுபவம்- பாடல் 4)

ஆனந்த அனுபவத்திலும், சிற்சபை உடையான் செல்ல மெய்ப்பிள்ளை என்றொரு பேர்ப்பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும் பண்ணியதவம் பலித்ததுவே என்று சிவ புண்ணியப் பேறு பதிகத்திலும் பாடிய நம்பெருமான்.

கொலை புரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது
குலத்தாரே நீ எனது குலத்துமுதல் மகனே
மறைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம்
வளரவளர்ந் திருக்கான வாழ்த்தியஎன் குருவே

என அருள் விளக்க மாலையில் (70) பாடியுள்ளார்.

எ) முத்தேக சித்தி பெற்று விளங்குதல்:
சித்தி வளாகத் திருமாளிகையில் நம் இராமலிங்க அடிகளார் யாருமே பெற முடியாத சுத்த, பிரணவ, ஞான வடிவமென்னும் முத்திறல் வடிவத்தைப் பெற்று அருட் பக்குவத்தில் விளங்கினார். சுகவடிவம் (பிரணவ தேகம்) முக வடிவம்(சுத்த தேகம்) அக வடிவம்(ஞானதேகம்) என்னும் முத்திறல் வடிவம் பெற்றதற்கு மகிழ்ந்து,

முத்திறல் வடிவமும் முன்னி அங்கு எய்துறும்
அத்திறல் எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி

என்று அகவலில் பாடிய பெருமான்,

சுத்த வடிவம் சுகவடிவாம் ஓங்கார
நித்த வடிவம் நிறைந் தோங்கு- சித்தெனும் ஓர்
ஞான வடிவுமிங்கே நான்பெற்றேன் எங்கெங்கும்
தானவிளை யாட்டியற்றத் தான்
என்று சுத்த சன்மார்க்க சுகநிலை பெற்றமையைப் போற்றுகின்றார்.

ஏ) ஆண்டவர் சூட்டிய அருளாட்சி முடி:
சித்திவளாகத் திருவறையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எழுந்தருளி, தன்னுடைய அருளாட்சியை வள்ளல் பெருமானிடம் அளித்தார் என்பதை,

ஆணை ஆணைநீ அஞ்சலை அஞ்சலை
அருள்ஒளி தருகின்றாம்
கோணை மாநிலத் தவரெல்லாம் நின்னையே
குறிக்கொள்வர் நினக்கே எம்
ஆணை அம்பலத் தரசையும் அளித்தனம்
வாழ்கநீ மகனே என்
றேனை பெற்றிட எனக்கருள் புரிந்தநின்
இணைமலர்ப் பதம் போற்றி

என்று பாடிய நம் பெருமான் அருளாட்சியை அளித்து அதற்கு அடையாளமாக அருளாட்சி முடியைச் சூட்டிகிறார். இதனை,

தன்அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும்
தனித்னி என் வசமாகித் தாழ்ந்தேவல் இயற்ற
முன் அரசும் பின்அரசும் நடுஅரசும் போற்ற
முன்னும் அண்ட பிண்டங்கள் எவற்றினும் எப் பாலும்
என்அரசே என்றுரைக்க எனக்குமுடி சூட்டி
இன்பவடி வாக்கி என்றும் இலங்க வைத்த சிவமே

என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனக்கு அருளாட்சியை அளித்து முடி சூட்டியதை,

அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு
அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு

என்று முரசு முழங்க அறிவிக்கின்றார் நம் அடிகளார்.

5) சன்மார்க்க கொடி ஏற்றி பேருபதேசம்:
1873 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்(ஸ்ரீமுக ஆண்டு ஐப்பசி 7 ஆம் நாள், புதவாரம், பகல் 8 மணிக்கு) மேட்டுக்குப்பம் என்னும் சித்திவளாகத் திருமாளிகையில் சுத்த சன்மார்க்க கொடியேற்றி வள்ளல் பெருமான் தன் அன்பர்களுக்கு வழங்கிய பேருபதேசத்தின் முக்கிய பகுதிகள் சில வருமாறு:

இங்குள்ள நீங்கள் எல்லோரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக் கொண்டிராதீர்கள். இது முதல் சாலைக்கு ஆண்டவர் போகிற-பத்துத் தினமாகிய கொஞ்ச காலம் வரையில் நீங்கள் எல்லாரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எதுவென்றால் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது......

நாம், நாமும் முன் பார்த்ததும் கேட்கும் லட்சியம் வைத்து கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்துவிட்டார்கள். அணுமாத்திரமேனும் தெரிவிக்காமல், பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில் கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாபதி யென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பது போல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். தெய்வத்துக்குக் கைகால் முதலயன இருக்குமா? என்று கேட்பவர்க்குப் பதில் இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக் கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன், அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்ட பாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை. அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்குப் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால் அற்ப சித்திகளை அடையலாம்.....

... இதுபோல், சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும் வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில் அவைகளிலும் அவ்வச் சமய மதங்களிலும்-அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக் கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கெல்லாம் சாட்சி நானேயிருக்கின்றேன்...

இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலை மேலேற்றியிருக்கின்றனர். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டுவிட்டீர்களானால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்......

........ மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில், கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக என்றதுதான், (கருணையும் சிவமே பொருள் எனக் காணும்.... திருஅருட்பா 3505) என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு, தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கிவிட்டது. அந்தத் தயவுக்கு ஒருமை வரவேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம். இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப் போல் ஒருமையுடன் இருங்கள்.

என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத்தனம் எப்படியிருந்தாலும், அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன், மிரட்டிச் சொல்லுவேன், தெண்டன் விழுந்து சொல்லுவேன். அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன், அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன். இப்படி எந்தவிதத்திலேயாவது நல்வழிக்கு வரச் செய்துவிடுவேன். நீங்கள் எல்லாரும் இப்படியே செய்தல் வேண்டும்.

........தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்! என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன். இருக்கின்றேன், இருப்பேன். தெய்வத்தை ஏன் தெரிந்து கொள்ளவில்லையென்றால் ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல் தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தால் அல்லது தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது. ஆதலால் தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லட்சியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்து கொண்டிருங்கள்....

... இவ்விசாரஞ் செய்து கொண்டிருந்தால், ஆண்டவர் வந்தவுடனே கண்டமாக உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவிப்பார். மறுபடியும் உங்களுக்கும் உரிமை வந்தவுடனே அகண்டமாகத் தெரிவிப்பார். ஆதலால் நீங்கள் இந்த முயற்சியிலிருங்கள். இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சிலநாள் தடைப்பட்டிருப்பார்கள். இனி நீங்கள் இதுவரைக்கும் இருந்தது போல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை. இது முதல் கொஞ்ச காலம் சாலைக்குப் போகின்ற வரைக்கும். ஜாக்கிரதையாக மேற்சொன்ன பிரகாரம் விசாரஞ் செய்து கொண்டிருங்கள்.

....... இத்தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை - தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகா மந்திரவாக்கியத்தை- எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம், எனது மெய்யறிவின் கண் அனுபவித்தெழுந்த உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லாரும் என் போல் ஐயம், திரிபு, மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றி குறிப்பித்தேன். குறிப்பிக்கின்றேன். குறிப்பிப்பேன், நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில் நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந்தயவுடைய பேரறிவே யாம்.

.... மேலும் இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரியவொட்டாது. அசுத்த மாயாகாரியாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்த மாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால் கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே ஆதலால் இத்தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.

இதற்குச் சாட்சியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. அக்கொடி இப்போதுதான் கட்டிக் கொண்டது. அக்கொடி உண்மையில் யாதெனில் நமது நாபி முதல் புருவ மத்தியின் உட்புறத்தில் ஒரு சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வண்ணம்; அச்சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது. இக்கொடி நம் அனுபவத்தின் கண் விளங்கும். இவ்வடையாளக்குறிப்பாகவே இன்றைய தினம் வெளி முகத்தில் அடையாள வர்ணமாக கொடி கட்டியது. இனி எல்லார்க்கும் நல்ல அனுபவம் அறிவின் கண் தோன்றும்.

இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன், உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால், ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையும் பெற்று கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம், இது ஆண்டவர் கட்டளை.
எல்லோருக்கும் தாய், தந்தை, அண்ணன், தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதற்கு கோடி கோடிப்பங்கு அதிகமான உதவி கொடுக்கும் படியான இடம் இந்த இடம். இது ஆண்டவர் கட்டளை.

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

திருக்காப்பிட்டுக்கொள்ளுதல்:
ராமலிங்க அடிகளார் பிரணவ தேக சித்தியிலிருந்து ஞான ;தேக சித்திக்கு-(உடம்பு கண்ணுக்கு தெரியாது) வரும் தருணம் வந்து விட்டது. இந்த நிலைதான் கடவுள் நிலையறிந்து அம்மயமாதல். இந்தச் சித்தியை அடையும் முன் வள்ளல் பெருமானது செயற்பாடுகளை தொ. வேலாயுத முதலியாள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
திருவருட்பிரகாச வள்ளலார் அவருடைய 50வது வயதை (1873) அடைந்த போது இந்த உலகத்திலிருந்து அவர் பிரிந்து செல்வதற்கான ஏற்பாடுகளால், அவர் தன் சீடர்களை ஆயத்தப்படுத்த தொடங்கினார். சமாதிக்குச் செல்ல வேண்டும் என்ற அவரது ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தினார்.
1873ஆம் ஆண்டின் முற்பகுதியில் மனித சகோதர அறம் பற்றிய அவருடைய நோக்கங்களை மிகவும் வலிந்து அவர் அறிவுரை ஆற்றினார்.
1873ம் ஆண்டின் கடைசி கால் பகுதியில், அசைக்க முடியாத மவுனத்தை அவர் அனுசரித்ததுடன் முழுவதுமாக சொற்பொழிவாற்றுவதை விட்டு விட்டார்.
1874ம் ஆண்டு சனவரித்திங்கள் இறுதியில் அவருடைய கொள்கைகளைத் திரும்பவும் எடுத்து கூறுவதற்காக அவர் மீண்டும் பேசத் தொடங்கினார்.
இந்து சாத்திரங்களில்  அடங்கியுள்ள தூய ஒழுக்கத்தையும் தத்துவங்களையும் எடுத்து போதிப்பதே அவர் முழு நேரப்பணியாக இருந்ததுடன், அறத்தையும், பிற உயிர்க்கிரங்குதலையும், உலக சகோதர அறத்தையும் மக்கள் மத்தியில் நிலை நாட்டுவதையும் பணியாக கொண்டிருந்தார். ஆனால் அவருடைய பெருத்த கூட்டத்தாரிடம் அவர் அதிருப்தி அடைந்தார். ஒரு சிலரே அவருடைய உன்னதமான ஒழுக்க விதிமுறைகளைப்பாராட்டினர். அவர் இந்த மண்ணில் உலவிய பிற்காலப் பகுதியில், இந்த வருத்தம் தரும் விஷயத்தில் அவருடைய கசப்பான துயரத்தை அடிக்கடி வெளிப்படுத்தினார்.
சன்மார்க்கிகள் என்று கூறிக்கொண்டு துன்மார்க்கிகளாய் இருந்தவர்களைக் கொண்டு ராமலிங்க அடிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளார் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. இதன் காரணமாகவே அவர் தம் மாணாக்கரிடையே கடையை விரித்தோம் கொள்வாரில்லை கட்டிக்கொண்டோம் என்று கூறியதாக கூறப்படுகிறது. எனினும் வள்ளல் பெருமான்  கடையை விரித்தோம் கொள்வாரில்லை கட்டிக்கொண்டோம் என்று கூறியதாக அவரது பாடல்களிலோ, உரையிலோ நேரடி ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை.

காற்றாலே புவியாலே ககனமத னாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணி யாலே கொலைக்கருவியாலே
கோளாலே பிறவியற்றுங் கொடுஞ் செயல்க ளாலே
வேற்றாலே யெஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய்யளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே
ஏற்றாலே யிழிவெனநீர் நினையாதீர் உலகீர்
எந்தை அருட் பெருஞ்ஜோதி யிறைவனைச் சார் வீரே

என்று பாடிய வள்ளல் பெருமான்,

நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவாவரம் எனைப் போற் சார்ந்தவரும் - தேவா
நின் பேரருளை யென்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யாருளர் நீ சற்றே அறை

சாகாவரம் பெற்ற தன்மையை சகலருக்கும் உணர்த்தும் வøயில் பல அற்புதஞ் செய்து வந்த வள்ளல் பெருமான், சித்தி வளாகத்ததிருமாளிகையில்,சில நாள் கதவை மூடிக்கொண்டு வெளிவராதிருத்தலும், பின்னர் வெளி வருதலும்-வெளி வந்த நாட்களில் உபதேசம் செய்வதுமாக சில நாட்களைக் கழித்தார்கள்.

வள்ளல் பெருமான்(1873) ஸ்ரீமுக வருடம் கார்த்திகை மாதத்தில்,திருவறையின் உள்ளிருந்த விளக்கைத் திருமாளிகைப்புறத்தில் வைத்து, இதை தடைபடாது ஆராதியுங்கள். இந்த கதவை சாத்தி விடப் போகிறேன். இனி கொஞ்ச காலம் எல்லோரும்-ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகிற படியால்- உங்களுடைய காலத்தை வீணிற் கழியாமல்,நினைந்து நினைந்து எனும் தொடக்கமுடைய 28 பாசுரமடங்கிய-

(ஆறாந்திருமுறை-ஞானசரியை-நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே எனத் தொடங்கி (பாடல் 1530 முதல்) சார் உலக வாதனையைத் தவிர்த்தவர் உள்ளகத்தே சத்தியமாய் அமர்ந்தருளும்  உத்தம சற்குருவை...எனத்தொடங்கும் இறுதிப்பாசுரம்-(பாடல் 1557 ஈறாக 28 பாடல்கள்)

-பாடலிற் கண்டபடி தெய்வ பாவனையை இந்தத் தீபத்திற் செய்யுங்கள். நான் இப்போது இந்த உடம்பிலிருக்கின்றேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் என்று திருவாய் மலர்ந்தருளினார்கள்.

30.1.1874 ஸ்ரீமுக ஆண்டு தைமாதம் 19 ஆம் நாள், புனர்பூசமும், பூசமும் கூடும் சமயம் வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு, கடகத்தில் சந்திரனும் சூரியனும் பூரணமாக விளங்கும் ஞான நிறைவை குறிக்கும் நன்னாளில், பின்வருமாறு சன்மார்க்க சங்கத்தாருக்கு இட்ட கட்டளையாவது:

நான் உள்ளே பத்து பதினைந்து தினமிருக்கப் போகிறேன். பார்த்து
அவநம்பிக்கை யடையாதீர்கள். ஒரு கால் பார்க்க நேர்ந்து
பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தா னிருக்கும்படி
ஆண்டவர் செய்விப்பார். என்னை காட்டிக்கொடார்.

வள்ளல் பெருமானின் கட்டளைப்படி கதவானது பூட்டப்பட்டது.

பிச்சுலகர் மெச்சுப் பிதற்றிநின்ற பேதையனேன்
இச்சைஎலாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே
அச்சமெலாம் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்
நிச்சலும்பே ரானந்த நித்திரை செய்  கின்றே÷னூ
என்று திருவாய் மலர்ந்தருளிய நம்பெருமான், அருட்ஜோதி ஆண்டவராகி, அருட்பிரகாச வள்ளலாய் எங்கும் நிறைந்த உன்னத நிலை எய்தினார்.

ஆங்கிலேய அதிகாரிகள் காணிக்கை:
வள்ளல் பெருமான் திருக்காப்பிட்டுக் கொண்டதற்குப்பின் சில நாட்கள் கழித்து அரசாங்க ஆணைப்படி, தென்னாற்காடு மாவட்ட கலெக்டர் கார்ஸ்டின் ரெவின்யு போர்டு உறுப்பினர் ஜார்ஜ் பென்பூரி, தாசில்தார் வேங்கடராமய்யர் ஆகியோர் மருத்துவர் ஒருவருடன் வந்து காவல் துறையினருடன், சேர்ந்து ஒரு விரிவான விசாரணையை மேற்கொண்டனர். தாசில்தார் வேங்கடராமய்யர் மட்டும் தமது அதிகாரத்தை காட்டும் வகையில் அங்கிருந்து அன்பர்களை அதட்டி, மிரட்டி பலவகையான இழிமொழிகளை கூறி கதவைத்திறக்கச் சொன்னார். ஆங்கிலேயர்களான அந்த இரு அதிகாரிகளும் குதிரையை விட்டு கீழே இறங்கி, சுவாமிகள் திருக்காப்பிட்டுக் கொண்டு மறைந்த அந்தக் குடிலை சுற்றிச்சுற்றி வந்து பார்த்து விட்டு, பெரியோர்களைப்பற்றி நாம் ஒன்றும் குறை கூறுதல் கூடாது, என்ற உயரிய நோக்கில், ஐயத்திற்குரிய  வகையில் ஆதாரம் ஒன்றுமில்லை, என்று உணர்ந்த வள்ளல் பெருமானைப் போற்றும் வகையில், அன்னதானச் செலவுக்காக, அன்பர்களிடம் ரூ 20/- ஐ காணிக்கையாக வழங்கி சென்றனர். முணுமுணுத்துக்கொண்டே அவர்கள் பின் குதிரை மீதேறிச் சென்ற வேங்கடராமய்யர் சிறிது தூரம் சென்றதும், குதிரையின் மிரட்சியால் முட்புதரில் விழுந்து கிடந்தார். தாசில்தார் பின்தொடர்ந்து வாராமை கண்ட அதிகாரிகள் கொஞ்ச தூரம் பின் வந்து பார்க்க அய்யர் முட்புதரில் விழுந்து விட்டதை அறிந்து இதுவும் அவர் பேசிய இழிமொழிகளுக்கு கிடைத்த பலன் தான் என்று கூறி, தாசில்தாரை வெளியேற்றிக்கட்டை வண்டியில் அழைத்து சென்றனர்.
மரணமில்லாப் பெருவாழ்வு பெற்று திருமேனியைத் திருமாளிகையில் மறைத்து கொண்ட சித்திவளாகமும் (மேட்டுக்குப்பம்), அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராய்க் காட்சி தரும் உத்திர ஞான சிதம்பரமும் (வடலூர்) வள்ளல் பெருமானின் பெருமைகளைப் பறைசாற்றும் புண்ணிய பூமிகளாக விளங்குகின்றன.

அருட்பெருஞ்சோதி   அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை  அருட்பெருஞ்சோதி

-திருச்சிற்றம்பலம்-

வள்ளல் பெருமானின் சன்மார்க்க பெருநெறிகள்

1. கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
2. எல்லா உயிர்களும் நமக்குச் சகோதரர்களே என்று உணர்க.
3. சாதி, சமய, மத இன வேறுபாடுகளைத் தவிர்த்தல்.
4. சிறு தெய்வ வழிபாட்டினையும், பலியிடுவதையும் விலக்குக.
5. புலால் உண்ணற்க; எவ்வுயிரையும் கொலை செய்யற்க.
6. ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.
7. இறந்தவர்களை எரிக்காது சமாதி வைக்க வேண்டும். கருமாதி, திதி, சடங்குகளை தவிர்த்தல் வேண்டும்.
8. ஜீவ காருண்ய, இந்திரிய, கரண ஜீவ, ஆன்ம ஒழுக்கங்களைப் பின்பற்ற வேண்டும்.
9. உண்மை அன்பால் அருட்பெருஞ்ஜோதியை வழிபாடு செய்து அருள் ஒளியை நமக்குள் காண வேண்டும்.
10.உயிர்க்குலமே கடவுள் விளங்கும் ஆலயமாக கருதி உயிர்கட்டு தொண்டு செய்ய வேண்டும்.
11.என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம்-சாகாதவனே சன்மார்க்கி.

திருஅருட்பிரகாச வள்ளலார் (இராமலிங்க அடிகள்) வரலாற்றுக் காலக் குறிப்புகள்

திருஅவதாரம்: சுபானு, புரட்டாசி 21 (ஞாயிறு) சித்திரை நட்சத்திரம் 5.10.1823 மருதூர்-சிதம்பரம் வட்டம்-கடலூர் மாவட்டம்

பெற்றோர்:     இராமையா-சின்னம்மை

இயற்பெயர்:    இராமலிங்கம்

சிறப்புப் பெயர்:    திரு அருட் பிரகாச வள்ளலார்

குடும்பம் சென்னைக்குச் சென்றது:    1824

தொழுவூர் வேலாயுதனார், அடிகளாரின் மாணவரானது:  1849

ஒழிவிலொடுக்கம் பதிப்பித்தது:   1851

மனுமுறை கண்ட வாசகம் வெளிவந்தது:   1854

தொண்ட மண்டல சதகம் பதிப்பித்தது:  1855

சின்மய தீபிகை பதிப்பித்தது:   1857

கருங்குழியில் உறையத் தொடங்கியது:   1858

சன்மார்க்க சங்கம் நிறுவியது:   1865

திரு அருட்பா (முதல் நான்கு திருமுறைகள்) வெளியீடு:  1867

சத்திய தருமச்சாலை தொடங்கியது (பிரபவ, வைகாசி, 11):  23.5.1867

மேட்டுக் குப்பத்தில் உறையத் தொடங்கியது:   1870

சத்திய ஞானசபை அமைத்தது:    1871

சத்திய ஞானசபையில் முதல் தைப்பூசம் (பிரஜோத்பத்தி-தை 13):  25.1.1872

அருட்பெருஞ்ஜோதி அகவல் எழுதியது(ஆங்கிரச, சித்திரை 8):  18.4.1872

சங்கம், சாலை, சபை பெயர் மாற்றம்-ஞான சபை வழிபாடுமுறை வகுத்தது: 18.7.1872

சன்மார்க்கக் கொடி கட்டி, பேருபதேசம்(ஸ்ரீமுக, ஐப்பசி 7):  22.10.1873

சித்திவளாகத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராய் நிறைந்தது (ஸ்ரீமுக தை 19, இரவு 12 மணி) 30.1.1874

வாழையடி வாழை

வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட
மரபினில்யான் ஒருவன் அன்றோ! வகை அறியேன் இந்த
ஏழைபடும் பாடு உனக்குத் திருவுளச் சம்மதமோ!
இதுதகுமோ இதுமுறையோ? இது தருமந்தானோ?
மாழை மணிப் பொது நடஞ்செய் வள்ளால் !யான் உனக்கு
மகன் அலனோ! நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ?
கோழை உலகு உயிர்த்துயரம் இனிப்  பொறுக்க மாட்டேன்
கொடுத்தருள் நின் அருள் ஒளியைக் கொடுத்தருள் இப்பொழுதே
                                                (-3803-6-32- பிரியேன் என்றல்-4)

நமது தெய்வத் தமிழ்நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் சித்தர்கள் பரம்பரையில் திருவருட் பிரகாச வள்ளலார் என்று புகழ் பெற்ற இராமலிங்க அடிகள் ஆன்ம நேய ஒருமைப்பாட்டையும், ஆன்மிக அருள் நெறி அனுபவத்தையும் இசைத்தமிழ் ஞானத்தோடு ஆறாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியருளிய ஞானி ஆவார்.

திருக்குறள் என்னும் உலகப் பொது மறையை வழங்கிய தெய்வப் புலவர் திருவள்ளுவர் முதல் நூற்றாண்டிலும்,,  திருவாசகம்  என்னும் அருள்வாசகம் அருளிய மாணிக்கவாசகர் என்னும் அருள்பாசகம் அருளிய மாணிக்கவாசகர் மூன்றாம் நூற்றாண்டிலும் திருமந்திரம் அருளிய திருமூலர் ஐந்தாம் நூற்றாண்டு, ஏழாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை தோன்றி  தேவாரமும் நாலாயிர திவ்ய பிரபந்தமும் அருளிய நாயன்மார்களும் ஆழ்வார்களும், அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் தோன்றிய பட்டினத்தாரும், மெய்கண்டாரும், அருணகிரிநாதரும், தாயுமானவர், குமரகுருபரர், சிவப்பிரகாச சுவாமிகள் இப்படி வாழையடி வாழையாக வந்த சித்தர்களும், ஞானிகளும் தாங்கள் ஆற்றிய பணிகளை, அனுபவங்களைத் தமிழுக்குக் கருவூலங்களாக வழங்கிச் சென்றுள்ளனார். இப்படி எழுத்துமூலம் வழங்கியச் சிலரைத்தான் நாம் அறிவோம். காட்டிலும் மலையிலும், குகைகளிலும் கோயில்களிலும் கடுந்தவமியற்றி மக்கள் கூட்டத்துள் கலவாமல் காலவெள்ளத்தில் கரைந்து பெருவெளியில் ஒளிப்பிழம்பானவர்கள் எண்ணில் அடங்கா.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்தன நேரம், இந்தியா முழுமையிலும் ஒரு ஆன்மிக எழுச்சி வெடித்துக் கிளம்பியது. அதன் விளைவாக கிழக்கில் இராமகிருஷ்ண பரமஹம்சரும், விவேகானந்தரும் மேற்கில் தயானந்த சரஸ்வதியும், வடக்கில் குருநானக் , கபீர்தாசரும் தெற்கில் இராமலிங்க அடிகளும், நாராயண குருவும் தோன்றினார்கள்.

உள்ளத்தில் கறுத்தவர்கள் கறை படிந்தவர்கள் குற்றங்கள் நிறைந்தவர்கள், வெளியில் மட்டும் வெள்ளை சள்ளையாகக் காட்சி அளிக்கும் வேடதாரிகள் இத்தகைய போலிகளைத் திருத்தி சன்மார்க்க சங்கத்தில் சேர்ப்பிப்பதற்கென்றே இவ்வுலகத்தில் பிறந்திருக்கின்றேன். இதற்காகவே என்னை இந்த யுகத்திலே இறைவன் படைத்திருக்கிறான் அவன் அருளோடுதான் நான் செயலாற்றி வருகின்றறேன் என்று தாம் பிறந்த காரணத்தைப் பின்வரும் பாடல் மூலம்,

அகத்தே கறுத்து புறத்து வெளுத்
திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க
சங்கத்து அடைவித் திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்
திடுதற்கு என்றே, எனை, இந்த
யுகத்தே இறைவன் வருவிக்க
உற்றேன், அருளைப் பெற்றேனே!
(5485-6- 128-உற்றது உரைத்தல் -9)
என வள்ளலார் இயம்பியுள்ளார்.

 
மேலும் வள்ளலார் »
temple news

வள்ளலார் பகுதி-1 பிப்ரவரி 08,2011

வள்ளலார் தோற்றம்: கலியுகாதி 4925 ஆம் ஆண்டு, சுபானு ஆண்டு, புரட்டாசித் திங்கள் 21 ஆம் நாள்(5.10.1823) ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar