Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமானுஜர் சிம்ம வாகனத்தில் உலா வீரபாண்டி திருவிழாவில் நெரிசல் 4 கி.மீ., தூரம் நேர்த்திக்கடன்! வீரபாண்டி திருவிழாவில் நெரிசல் 4 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று சிறுத்தொண்ட நாயனார் குரு பூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 மே
2013
10:05

திருச்செங்காட்டங்குடி நீர் வளமும், நில வளமும் நிறைந்த ஒரு சிறந்த நகரம். அந்நகரிலே எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் கோவிலுக்கு கணபதீச்சுரம் என்று பெயர். அந்நகரிலே மாமாத்திரர் என்னும் குலம் உயர்ந்து விளங்கியது. அக்குலத்தைச் சேர்ந்தவர்கள் அரசர் குலத்திற்குப் படைத்தளபதியாகவும், அமைச்சராகவும் பணியாற்றி வந்தனர். இப்பேர்ப்பட்ட உயர்ந்த பெருங்குடியில் பரஞ்சோதியார் என்னும் நாமமுடைய தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பல்லவ மன்னனிடம் படைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். வாள் வலிமையும், தோள் வலிமையும் கொண்டிருந்த அவர் படைக்கல பயிற்சியில் பேராற்றல் பெற்று விளங்கினார். எண்ணற்ற போர்களில் மன்னனுக்கு ஈடில்லா மாபெரும் வெற்றியை வாங்கிக் கொடுத்தார். இவ்வாறு வீரமிக்கவராய் வாழ்ந்த பரஞ்சோதியார் பக்தி மிக்கவராகவும் இருந்தார். எந்நேரமும் சிவ நாமத்தைச் சிந்தையிலே கொண்டு ஒழுகி வந்தார். அத்தோடு இவர் சிவனடியார்களைச் சிரம்தாழ்த்தி வரவேற்று உபசரித்து உண்பிக்கும் உயர்ந்த பண்பினையும் பெற்றிருந்தார். அடியவர் முன்பு அன்பின் மிகுதியால் தம்மைச் சிறியவராக்கிக்கொண்டு அடக்க ஒடுக்கத்துடன் உள்ளம் உருக உயர் தொண்டாற்றுவதால் இவரைச் சிறுத் தொண்டர் என்று அனைவரும் அழைக்கலாயினர். ஒருமுறை பரஞ்சோதியார் பெரும்படையைத் திரட்டிக் கொண்டு வடநாடு சென்றார். வாதாபியை வென்றார். பாரெல்லாம் பல்லவன் புகழ் பேச வெற்றி முரசம் திக்கெட்டும் முழங்க தென்புலம் திரும்பி வந்தார். பரஞ்சோதியாரின் வீரத்தைப் பார்த்த பல்லவன் பெருமகிழ்ச்சிப் பூண்டான். அவையறிய அவரது வீரத்தையும், தீரத்தையும் வானளாவப் போற்றிப் புகழ்ந்தான். விருதுகள் பல வழங்கினான் மன்னன். ஒருநாள் அமைச்சர்கள் பரஞ்சோதியாரின் வெற்றிக்கான முக்கிய காரணத்தை விளக்கும் பொருட்டு மன்னனிடம் சென்றனர். மன்னவா! பரஞ்சோதியார் இறைவனின் திருவடிக் கமலங்களிலே நிறைந்த பக்தியுடையவர். இறைவனின் சக்திக்கும் பரஞ்சோதியாரின் பக்தியுமே இவரது வெற்றிக்குக் காரணம்! இத்தகைய சிவத்தொண்டு மிக்க நம் தளபதியை பகையரசர்கள் வெல்வது என்பது எவ்வாறு சாத்தியமாகும் என்று கூறினார். அமைச்சர்கள் கூறியதைக் கேட்ட மன்னவன் திகைப்படைந்தான். பரஞ்சோதியாரின் சிவபக்தியை எண்ணி எண்ணி சிந்தை குளிர்ந்தான். அதே சமயத்தில் வேதனையும் அடைந்தான். தான் அறியாமல், கடவுளுக்கு ஏதோ பெரும் பிழை செய்துவிட்டதாக எண்ணி மனம் வாடினான் மன்னன். தெய்வத்தைப் போல் போற்றி வழிபடுவதற்குரிய திருத்தொண்டரை போர்முனைக்கு அனுப்பியது மிகப்பெரிய தவறு என்பதையும் உணர்ந்தான். தனக்குள் கலக்கமுற்றான். மன்னன் சித்தம் தடுமாறினான். போர்க்களத்தில் எதிர்பாராமல் இச்சிவனடியார்க்கு ஏதாகிலும் தீங்கு ஏறபட்டிருந்தால் அஃது தமக்கு எத்ததைய பெரும் பழியை ஏற்படுத்தியிருக்கும் என்பதை எண்ணி எண்ணிப் புலம்பினான். மன்னன் ஒரு முடிவிற்கு வந்தான். பரஞ்சோதியாரைத் தளபதி என்று எண்ணவில்லை. தொழுதற்குரிய பெரும் பேறு பெற்ற மகான் என்றே கருதினான். அரசன் அவசர அவசரமாக பரஞ்சோதியாரை வரவழைத்தான். பரஞ்சோதியார் அரசரின் கட்டளை கேட்டு அரண்மனைக்கு வந்தார். அரசன் பணிவுடன் அருந்தவத்தினரே! தங்களது மகிமையை உணராமல் தங்களைப் போருக்கு அனுப்பி பல தொல்லைகள் கொடுத்ததற்குப் பொறுத்தருள வேண்டும். இந்த எளியேனுக்காக தாங்கள் எல்லையில்லா இன்னல்களைப் பல காலம் அனுபவித்தீர்கள். இனியும் தாங்கள் எமக்கு ஏவல் புரிதல் ஆகாது. அருள் புரிதல் வேண்டும். தாங்கள் சித்தம் போல் சிவனார் அடிபோற்றி தாங்கள் விரும்பியவாறு சிவநெறியில் சிவத்தொண்டுகள் பல புரிந்து ஒழுகுவீர்களாக என்று இறைஞ்சி நின்றான். மன்னனின் மொழி கேட்ட பரஞ்சோதியார் திடுக்கிட்டார். செய்வதறியாது சிலையாக நின்றார். அவருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. முடிவில் மன்னனின் ஆணையை சிரமேற்கொண்டார். நடப்பது யாவும் இறைவனின் அருட் செயலே என்று மனதிலே உறுதி பூண்டார். மன்னன் பரஞ்சோதியாருக்கு நிறையப் பொன்னும் பொருளும் வழங்கினான். பரஞ்சோதியார் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். மன்னன் அவரை ராஜ மரியாதையுடன் ஊருக்கு அனுப்பி வைத்தான். பல்லவ மன்னனிடமிருந்து பொன்னும் பொருளும் பெற்ற பரஞ்சோதியார் அவற்றை ஆலய திருப்பணிக்கும், அடியார்களைப் பேணுவதற்கும் செலவு செய்து வரலானார். அல்லும் பகலும் பக்தி மார்க்கத்தில் வாழத் தொடங்கிய பரஞ்சோதியார் நற்குடியிற் பிறந்த திருவெண்காட்டு நங்கை என்னும் பெயருடைய மங்கை நல்லாளை மணம் புரிந்துகொண்டார்.


அவரது மனைவியாரும் அவரைப் போலவே சிவனாரிடத்தும், அவரது அடியார்களிடத்தும் நல்ல பக்தியும், அன்புடையவராகவும் இருந்தார். பரஞ்சோதியார் அவ்வம்மையாரோடு இல்லறத்தை முறைப்படி நடத்தத் தொடங்கினார். குறள்வழி வாழும் இவ்வில்லறத்தார் இன்பத்தின் முழுப் பயனையும் பெற்றுக் கருத்தொருமித்த காதலர்களாக வாழ்ந்து வந்தனர். பரஞ்சோதியாரும் அவரது மனைவியாரும் தொண்டர்களை அன்போடு வரவேற்று அமுதளித்து விருந்தினர் முன்னுண்டு தாங்கள் பின் உண்ணும் முறை அறிந்து ஒழுகினர். சிவத்தொண்டர்கள் மனங்குளிர அவர்கள் விரும்பியவாறே எது கேட்டாலும் இல்லையெனாது அளித்து அமுதூட்டி மகிழ்ந்தனர். இத்தகைய நல்ல இல்லத்தாருக்கு சிவபெருமானின் அருளாள் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்குச் சீராளன் எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர்கள். இவ்வாறு வாழ்ந்து வந்த சிறுத்தொண்டரின் பெருமையையும், பக்தியையும் உலகோர்க்கு உணர்த்தத் திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான். அன்று ஒருநாள் சீராளன் பள்ளிக்கச் சென்றிருந்தான். பெற்றோர்கள் விருந்தினரை எதிர்பார்த்து வாயிலிலே நின்றுகொண்டிருந்தனர். நெடுநேரமாகியும் விருந்துண்ண ஒரு சிவனடியார் கூட வராதது கண்டு கவலை மிகக்கொண்ட சிறுத்தொண்டர் விருந்தினரைத்  தேடி வெளியே சென்றார். சிறுத்தொண்டரின் மனைவி கவலையோடு  உள்ளே சென்று சிவநாமத்தை ஜபிக்கத் தொடங்கினாள். அதுசமயம் சிவபெருமான் பைரவ சந்நியாசியாக வேடம் பூண்டு பரஞ்சோதியார் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். எம்பெருமான் வெளியே நின்றபடியே சிவனடியார்களுக்குத் திருவமுது செய்விக்கும் சிறுத்தொண்டர் வீட்டில் இருக்கிறாரா? என்று கேட்டார்.அடியாரின் குரலைக் கேட்டு மனைக்குள் இருந்த சந்தன நங்கை என்னும் பணிப்பெண் வெளியே ஓடிவந்து, சிறுத்தொண்டர் எங்கு போயிருக்கிறார் என்பதை விளக்கி விட்டு அகத்து வந்து அமருமாறு பணிவன்போடு கேட்டுக் கொண்டாள். பணிப்பெண் மொழிந்ததைக் கேட்ட இறைவன் அப்படியாயின் பெண்கள் தனித்து இருக்கும் இடத்தில் யாம் தங்குவதில்லை என்று கூறினார். இறைவன் மொழிந்ததைக் கேட்டு உள்ளிருந்து ஓடிவந்த சிறத்தொண்டரின் மனைவி  சுவாமி! சற்று பொறுங்கள். என் நாதன் எப்படியும் இப்பொழுது வருவார் என்று கூறினாள். அதற்கும் அவ்வடியார் இயைந்து கொடுக்கவில்லை. அதுகண்டு அம்மையார் மீண்டும் சுவாமி ! தொண்டர்களுக்கு அமுது செய்விக்காமல் நாங்கள் உண்பதில்லை. நாடோறும் ஆயிரக்கணக்கான அடியார்கள் அமுதுண்ணும் மனையில் இன்று இதுவரைத் திருத்தொண்டர் ஒருவர் கூட வந்தாரில்லை. அது கருதியே என் நாயகன் அடியார்களைத் தேடிச் சென்றுள்ளார். அவர் எப்படியும் இப்பொழுது வந்துவிடுவார். என் ஐயன் வந்ததும் தங்களது அருட் தோற்றத்தைக் கண்டால் மட்டில்லா மகிழ்ச்சி கொள்வார். அதனால் சுவாமி எங்ஙனமாகிலும் அருள்கூர்ந்து மனைக்குள் எழுந்தருளல் வேண்டும் என்று விண்ணப்பித்தாள். அம்மையார் விண்ணப்பத்தை பைரவர் ஏற்றுக்கொள்ளவில்லை. வடபுலத்திலிருந்து யாம் புறப்பட்டு வந்தது தொண்டரைக் காண்பதற்காகத்தான். அவரின்றி யாம் மனைக்குள் தங்குவதாக இல்லை. எதற்கும் யாம் கோயிலுள்ள ஆத்தி மரத்தின் கீழே காத்திருக்கிறோம். அவர் வந்தால் எம் அடையாளங்களைக் கூறி அனுப்பி வையுங்கள் என்று சொல்லிவிட்டு வேகமாகச் சென்றார் சிவபெருமான்! சிவத்தொண்டரின் மனைவியோ வேதனையோடு உள்ளே சென்றாள். பைரவர் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் சிவனடியார்கள் யாரையும் காணாமல், வாட்டத்தோடு மனையிற் புகுந்தார் சிறுத்தொண்டர். கணவரின் கவலை தோய்ந்த முகத்தைக் கண்டு மனைவியார் பைரவரின் திருக்கோலத்தைக் கணவருக்கு நன்றாக விளக்கிக் கூறி அன்னார் ஆத்தி மரத்தடியே அமர்ந்திருப்பார் என்பதையும் இயம்பினாள். அதுகேட்டு சிறுத்தொண்டர் உள்ளமும் உடலும் பூரித்துப் போனார். உயர்ந்தேன் என்று மகிழ்ச்சிப் பெருக்கோடு சற்றும் தாமதியாமல் ஆலயத்திற்கு விரைந்தார். ஆத்தி மரத்தடியே வீற்றிருக்கும் அருள் வடிவான பற்றற்ற துறவியின் ஒப்பற்ற அடிதனைப் போற்றி வணங்கி நின்றார். சிறுத்தொண்டரை ஏற இறங்கப் பார்த்த பைரவர் - நீ தான் பெருமை பெற்ற சிறுத்தொண்டரோ என்று கேட்டார். சிறுத்தொண்டர் முகம் மலர, தொண்டரைக் காக்க வந்த  தவமிக்க எந்தையே! உலகில் எதற்கும் எத்தகைய தகுதியும் இல்லாத இச்சிறியோனை அந்தி வண்ணர் அடிபோற்றும் அன்பர்கள் இப்பெயரால் அழைப்பதுண்டு. இவ்வடியேனுக்கு அத்தகுதியிருப்பதாகத் தெரியவில்லை. சுவாமி! இனிமேல் சற்றும் தாமதியாமல் இந்த ஏழையின் இல்லத்திற்கு எழுந்தருளி அமுது செய்து அருள வேண்டும் என்று மிக்க பணிவன்போடு வேண்டி நின்றார். அருந் தவத்தீர்! ஐயம் ஒன்றுமில்லை. எமக்குத் தேவையான உணவை வழங்குதல் என்பது உம்மால் ஆகாத காரியம் ஆயிற்றே. ஐயன் இங்ஙனம் எண்ணுதல் ஆகாது. சுவாமி! திருவாய் மலர்ந்து அருளுங்கள். திருவாக்கின்படியே, அமுது செய்விக்கின்றேன். அப்படியா சிறுதொண்டரே! மிக்க மகிழ்ச்சி. நாம் ஆறு மாதத்திற்கு ஒருமுறைதான் உண்போம். பசுவை வதைத்துதான் உண்பது வழக்கம். அக்காலம் இன்றுதான் வந்தது. உம்மால் அத்தகைய பசுவின் மாமிச உணவைச் சமைத்து அமுது செய்ய முடியுமா என்றுதான் சிந்திக்கிறேன். சுவாமி! சாலவும் நன்று! இந்த எளியேனுக்கு இதுவா ஒரு பெரிய காரியம். என்னிடம் மூவகை ஆநிரைகள் உண்டு. ஐயன் எழுந்தருளி எத்தகைய ஆநிரை வேண்டுமென்று பணிகின்றீர்களோ, அதனையே பக்குவமாகச் சமைத்து அளிக்கத் தவறேன். பசுவென்றால், நீர் எண்ணுவதுபோல் விலங்கினத்தைப் பற்றி நாம் கூறவில்லை. யாம் குறிப்பிடுவது பசு, ஐந்தாண்டு பிராயமுள்ள இளம் ஆண் பிள்ளையைத்தான்! அந்த ஆண் பிள்ளைக்கு அங்கங்களில் எவ்வித பழுதும் இருக்கக்கூடாது ! அந்த ஆண் பிள்ளையையும், யாம் கூறுவது போன்ற பக்குவத்தில் கறி சமைத்தல் வேண்டும். ஒரு குடிக்கு ஒரு மகனாய்ப் பிறந்துள்ள அப்பாலகனின் உடலைத் தாயார் பிடிக்கத் தந்தையார் அரிந்து, அதனைச் சமைத்தல் வேண்டும். அப்பொழுது மனையிலுள்ளோர் எவரும் வருந்தக்கூடாது. ஒரேபோல் அனைவருமே சந்தோஷத்துடனேயே இருத்தல் வேண்டும். ஐயனின் ஆணை இதுவாயின் அங்ஙனமே அமுது அளிக்கிறோம். நன்று! நீவிர் உடனே சென்று விருந்திற்கான ஏற்பாட்டை முடித்துவிட்டு அமுதுண்ண வேண்டிய தருணத்திற்கு அழைத்துச் செல்லும். அதுவரை யாம் இங்கேயே காத்திருப்போம்! சீக்கிரம் ஆகட்டும். நான் மிகவும் பசித்திருக்கிறேன் என்று பைரவர் கூறினார். சிறுத்தொண்டர் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு தமது மாளிகையை விரைவாக வந்து அடைந்தார். பெருமனைக் கிழத்தியிடம் பைரவர் பகர்ந்ததை அப்படியே ஒன்றுவிடாமல் விவரமாகக் கூறினார். அவர் மொழிந்தது கேட்டு மனைவியார் எம்பெருமான் அருளியவாறு ஒரு குடிக்கு ஒரு மகனை எங்கு சென்று தேடுவோம் என்றாள். சிறுத்தொண்டர் நற்குண நங்கையே ! நாம் பெற்ற அருந்தவப் புதல்வனையே அதன் பொருட்டு அழைப்போம் என்றார்.


அம்மையாரும், அவரது மொழிக்கு இயைந்தாள். ஆசானிடம் கல்வி பயிலச் சென்றிருக்கும் நமது அன்புச் செல்வனை அழைத்து வாருங்கள் என்று கூறினாள். சிறுத்தொண்டர் பெருமகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் சென்று மகனை அழைத்துக்கொண்டு மனைக்கு மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார். எம்பெருமான் உண்மையான சீராளனை மறைத்து மாயச் சீராளனை அவர்களிடம் அனுப்பியதனை அவர்கள் எங்ஙனம் அறிய இயலும். சீராளனை எதிர்பார்த்து, வீட்டுத் திண்ணையோரமாக நின்று கொண்டிருந்த திருவெண்காட்டு நங்கையார், எதிர் சென்று பொன்னிற வண்ணப் பெருமேனியனாகிய மகனை வாரி அணைத்து உச்சி மோந்தவாறு உள்ளே அழைத்துச் சென்றாள். ஒன்றுபட்ட மனமுடைய கணவனும், மனைவியும் சேர்ந்து தெய்வத் தன்மை பொருந்திய சீராளப் பெருமானைச் சீரோடு அரிந்து, பாலோடு, பசுந்தேனோடு, பச்சைக் காய்கறிகளோடு சேர்த்து பக்குவமாகச் சமைப்பதில் முனைந்தனர். உடனே அடிகளார் பைரவச் சங்கரரை அழைத்துவர ஆத்தி மரத்தடிக்குப் புறப்பட்டார். திருவெண்காட்டு நங்கையாரும், சந்தான தாதியாரும் வீட்டைத் தூப தீபத்தாலும் நிறை குடங்களாலும் அலங்காரம் செய்தனர். நன்றாக வீட்டை கோமய நீரால் மெழுகினர். மாக்கோலமிட்டனர். வண்ண மலர்களைப் பரப்பினர். ஆங்காங்கே மலர் மாலைகளும், முத்து மாலைகளும் தோரணங்களும் அழகுறத் தொங்க விட்டனர். விருந்தினரைப் பேணும் பேராற்றல் பெற்ற அடியார் ஆராக் காதலுடன் நமச்சிவாய மந்திரத்தை நினைத்தவாறு பக்திப் பெருக்குடன் ஆத்தி மரத்திற்கு வந்து பைரவரை அழைத்துக்கொண்டு தமது திருமனையை அடைந்தார். பைரவரை வரவேற்று உபசரிக்க ஆவலோடு நின்று கொண்டிருந்த திருவெண்காட்டு நங்கையார், பைரவரது திருவடிக் கமலங்களில் நறு மலரைக் கொட்டிக் குவித்து கும்பிட்டு அழைத்துக்கொண்டு மனையுள் புகுந்தார்.மலர் பரப்பிய ஆசனத்தில் அவரை அமரச் செய்தார். அம்மையார் நீர்வார்க்க, அடிகளார் பாதத்தை விளக்கினார். திருவடிகளுக்குச் சந்தனம் தடவி மலரால் அர்ச்சித்து, தூப தீபம் காட்டிப் பாத பூஜை செய்த நன்னீரைச் சென்னி மீதும் மனைவியார் சிர மீதும் வீடு முழுவதும் தெளித்தார். இருவரும் அமுது படைக்க ஐயனின் கட்டளையை எதிர்பார்த்து நின்றனர். அதற்கு ஏற்ப அடிகளார் திருவாய் மலர்ந்து, எல்லாக் காய்கறிகளையும் ஒருங்கே படைத்தாக வேண்டும் என்றார். அடியாரின் விருப்பப்படியே அமுது படைத்தனர். அப்பொழுது பைரவர், எல்லா உறுப்புக்களையும் படைத்தீர்களோ? என்று கேட்க, திருவெண்காட்டு நங்கையார், தலை இறைச்சியை மட்டும் அமுதுக்கு உதவாதென்று சமைக்கவில்லை என்று கூறினாள். அதற்கும் இறைவன் அதனையே யாம் உண்போம் என்றார். சந்தன நங்கையார், நான் அதனைச் சமைத்துப் பக்குவம் செய்து வைத்துள்ளேன் என்றவாறு உள்ளே சென்று தலையிறைச்சியைக் கொண்டு வந்தாள். அம்மையாரும், நாயனாரும் சந்தன தாதியாரின் திறத்தினையும்,பேராற்றலையும், தக்க சமயத்தில் தங்களைக் காத்த நிலையையும் எண்ணி உள்ளுக்குள் மகிழ்ந்தனர். அம்மையார் அவ்விறைச்சியையும் அடியவருக்கு படைத்தாள். சிறுத்தொண்டர், அன்போடு அடியாரை நோக்கி சுவாமி! அமுது செய்து அருளலாமே! என்று வணங்கி நின்றார். இறைவன் மேலும் சோதிக்கலானார். அடியார்கள் எவரையாவது அழைத்து வாரும். யாம், தனித்து உண்பதில்லை என்றார். அடியவரின் இம்மொழி கேட்டு சிறுத்தொண்டர் மனம் வருந்தினார். வேதனை மேலிட அடியார்களை எங்ஙனம் தேடி பிடிப்பது ? என்ற கலக்கத்துடன் வெளியே சென்றார். இருமருங்கும் நோக்கி அடியார்கள் எவரையும் காணாமல் மனச்சோர்வுடன், பைரவர் முன் ஏக்கமுடன் வந்து நின்றார். சுவாமி! எம்மைப் பொறுத்தருள்க. சிவனடியார்களை எங்கு தேடியும் காணவில்லை. அடியவர்களை போலவே அடியேனும் திருவெண்ணீறு அணிந்துள்ளேன் என்று பணிவன்போடு பகர்ந்தார் திருத்தொண்டர். அப்படியா? நன்று! வருந்தாதீர். நீரும் ஒரு சிவனடியார்தானே! தாராளமாக நீரே எம்முடன் இருந்து உண்ணலாம் என்று ஆணையிட்டார் பைரவர். அம்மையாரை நோக்கி, இருவருக்கும் பக்கத்தில் ஓர் இலை இட்டு, எமக்குப் படைத்தாற் போலவே இறைச்சியும், அன்னமும் படையும் என்று மொழிந்தார். திருவெண்காட்டம்மையாரும், பரமன் பணித்த படியே படைத்தாள். சிறுத்தொண்டர் அமுதுண்ண அமர்ந்தார். தாம் உணவு உண்டபின் தான் அடியார் உண்ணுவார் என்னும் கருத்திற்கு ஏற்ப சிறுத்தொண்டர் உணவில் கையை வைத்தவாறு உண்ண புகுந்தார். பைரவருக்கு கோபம் மேலிட்டது. அவரைத் தடுத்தார். உண்பதற்கு உமக்கு என்ன அவசரம் ; ஆறு மாத காலமாக பட்டினியாக இருக்கிறேன் நான். தினந் தவறாமல் உண்ணும் உமக்குப் பசி அதிகமோ? நன்று! நன்று! உம்முடன் யாம் உண்பதாக இல்லை. நம்முடன் உண்ண உமக்கு மகனிருந்தால் அழைத்து வாரும்! என்று ஆணையிட்டார். எம்பெருமான் மொழிந்தது கேட்ட நாயனார் இடியேறுண்ட நாகம்போல் நடுங்கினார். ஐயனே! அவன் இப்பொழுது உதவான் என்றார். சிறுத்தொண்டரே! அவன் வந்தால்தான் நாம் உண்போம். அவனைப் போய் எப்படியாவது தேடி அழைத்து வாரும் என்று திருவாய் மலர்ந்தருளினார். சிறுத்தொண்டர், சிவபெருமானை மனதில் எண்ணியபடியே தமது அன்பிற்கினிய மனைவியாருடன் வெளியே வந்தார். இருவரும் செய்வதறியாது திகைத்தனர். அடியவருக்கு அமுது அளிக்க தங்களுக்கு ஏற்பட்ட பெரும் தடையை எண்ணிக் கலங்கினர். சிறுத்தொண்டர் நமச்சிவாய மந்திரச் சக்தியால் வாய்விட்டு, சீராளா! வருக!! என்று அழைத்து விட்டார். அம்மையாரும், கண்ணே! மணியே ! சீராளா வாராய்! சிவனடியார் நாம் உய்யும் நிலைபெற உடன் இருந்து திருவமுது செய்ய உன்னையும் அழைக்கின்றார் வா மகனே! வா! என்று உரக்க அழைத்தாள். அப்பொழுது எல்லாம் வல்ல இறைவனின் திருவருளால் சீராளன் பள்ளிச் சென்று திரும்பி வரும் பிள்ளையைப்போல் சதங்கை ஒலிக்க ஓடிவந்தான். பெற்றோர்கள் ஒன்றும் புரியாமல் திகைத்தனர். எம்பெருமான் பைரவராக வந்து மாயம் புரிவதை அவர்கள் எவ்வாறு அறிய இயலும்! அம்மையார் மகனை வாரித் தழுவி மகிழ்ந்து உச்சிமோந்து கணவரிடம் கொடுத்தாள். சிறுத்தொண்டரும் அழகு மைந்தனை அன்போடு அணைத்துப் பேருவகை பூண்டார். சிறுத்தொண்டருக்கும், அவரது மனைவியாருக்கும் ஏற்பட்ட வியப்பிற்கு எல்லையே இல்லை. சீராளனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு பைரவரைக் காணோம். உணவை நோக்கினார். கலத்தில் கறிகளில்லை. இல்லத்தில் பேரொளி பிறந்தது. கயிலை மலை மீது களிநடனம் புரியும் மாதொரு பங்கன் மலைமகளுடன் வெள்ளி விடையின்மேல் அருட்காட்சி தந்தார். பூதகணங்களும், தேவர்களும், முனிவர்களும், விஞ்சையர்கள் முதலியோர்களும் புடைசூழ்ந்து வேதகானம் எழுப்பினர். சிறுத்தொண்ட நாயனாரும் திருவெண்காட்டு நங்கையும், சீராளனும், சந்தன தாதியும் சிரமீது கரம் உயர்த்தி சிவநாம மந்திரத்தை ஓதினர்; நிலத்தில் வீழ்ந்து வணங்கினர். ஆனந்தக் கண்ணீர் வடித்து நின்றனர். தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். அன்பே சிவம் என்று கருத்தில் கொண்டு, சிவபோதை நிலையில் நின்று, அருந்தவப் புதல்வனையே, அடியார் மனதிற்கேற்ப அரிந்து விருந்து செய்ய இயைந்த சிறுத்தொண்ட நாயனாருக்கும், திருவெண்காட்டு நங்கையாருக்கும், சந்தனத் தாதியாருக்கும், தம்மை அரியும்போது சிவநாமத்தை நினைத்து புன்முறுவல் பூத்த சீராளத் தேவனுக்கும், எவருக்குமே கிட்டாத பெரும் பேற்றை அளித்தார் எம்பெருமான். திருசடைநாதரின் பொற்கழல் பாதத்தின் கீழ் சிறுத்தொண்டரும், உமையம்மையார் திருவடியின் கீழ் திருவெண்காட்டு நங்கையும், சந்தனத் தாதியும், வெற்றிவேல் முருகனின் செஞ்சேவடியின்  கீழ் சீராளத் தேவனும் அமர்ந்து இன்புற்றிருக்கும் சிவலோகப் பிராப்தியை அந்நால்வர்க்கும் அளித்து அருள் செய்தார் அம்பலத்திலே ஆடுகின்ற ஆனந்தக் கூத்தன்.


குருபூஜை: சிறுத்தொண்டர் நாயனாரின் குருபூஜை சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.


செங்காட்டங்குடி மெய் சிறுத்தொண்டர்க்கு அடியேன்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயில் ஸ்ரீராமநவமி ஆஸ்தான விழாவில் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடைபெற உள்ளது.கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீராம நவமியை ... மேலும்
 
temple news
அயோத்தி; தெய்வீக மற்றும் அற்புதமான ராமர் கோவிலில் ராம் லல்லா பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு இது முதல் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் சாமியார்புதூர் ஸ்ரீஷீரடி சாய்பாபா கோயிலில் ராம நவமி விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar