Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » திருப்புகழ் சுப்ரமணியர்
திருப்புகழ் சுப்ரமணியர்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 மே
2013
04:05

1871 ஆம் ஆண்டில் ஒருநாள். கடலூர் மஞ்சக்குப்பம் மாவட்ட நீதிமன்றத்துக்கு, தில்லை நடராஜர் கோயில் வழக்கு ஒன்று வந்தது. ஹட்சன் துரை என்னும் ஆங்கிலேயர் அப்போது நீதிபதியாக இருந்தார். சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் தங்களுக்குள்ள பரம்பரை பூஜை செய்யும் உரிமையை நிலைநாட்ட பல்வேறு தரப்பு வாதங்களை முன் வைத்தனர். அதில், ஒரு பாடலையும் சாட்சியாகக் காட்டினர். வேதங்களில் சொல்லிய முறைப்படியே தவறுதல் இல்லாமல் நாள்தோறும் யாகங்களும் ஆராதனைகளும் செய்யும் அழகுடன் மூவாயிரவர் என்னும் பெருமைவாய்ந்த அந்தணர்களால் (தீட்சிர்களால்) பூஜை செய்யப்படும் தலைவனே என்பது பாடலின் பொருள்.

வேத நூன்முறை வழுவா மேதினம்
வேள்வி யால்எழில் புனை மூவாயிர
மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே!
இந்தப் பாடல் வரிகளில் உள்ள சந்த அழகும் பொருளழகும் அங்கு எழுத்தராகப் பணிபுரிந்த சுப்ரமணியம் எனும் அன்பரை மிகவும் ஈர்த்தது. இது என்ன பாடல் என்று அந்த தீட்சிதர்களை வினவினார். அருணகிரிநாத சுவாமிகள் சிதம்பரம் தலத்தில் பாடியுள்ள தாது மாமலர் முடியாலே... என்று தொடங்கும் திருப்புகழ் பாடல்தான் அது என்று அறிந்த சுப்ரமணியத்துக்கு, திருப்புகழ் பாடல்களைச் சேகரிக்க வேண்டும் என்னும் ஆர்வம் ஏற்பட்டது.

14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ்ப் பாடல்கள், ஏறக்குறைய 400 ஆண்டுகள் கழித்தே அச்சில் ஏறின. அதற்குக் காரணமானவர்தான் இந்த சுப்ரமணியர். அதனாலேயே திருப்புகழ் சுப்ரமணியர் ஆனார். திருத்தணிகை முருகனுக்கு வழிவழியாகத் தொண்டு செய்து வருபவர்கள் வடக்குப்பட்டு கற்பகப் பிள்ளை குடும்பத்தினர். ஒவ்வொரு மாதமும் கார்த்திகை அன்று திருத்தணிகை சென்று முருகனை தரிசித்த பின்பே உணவு உட்கொள்ளும் விரதத்தைக் கடைப்பிடித்து வந்தனர் இவர்கள். கற்பகப் பிள்ளையின் புதல்வர் வடக்குப்பட்டு தணிகாசலம். இவர். மனைவி லட்சுமி அம்மாளுடன் செங்கல்பட்டில் வாழ்ந்து வந்தார். முன்னோர் வழியில் இந்தத் தம்பதி தினமும் சிவபூஜையும் முருக வழிபாடும் செய்துவந்தனர். இவர்களது இறை வழிபாட்டில் பயனாக 1846-ஆம் ஆண்டு பிறந்தார் சுப்ரமணியர்.

சிறு வயதில் செங்கல்பட்டு மிஷன் கல்விக்கூடத்தில் பயின்ற சுப்ரமணியர். குடும்ப வறுமையின் காரணமாக மேற்கொண்டு கல்லூரியில் படிக்கமுடியாமல் சிரமப்பட்டார். அப்போது மில்லர்துரை என்பவரது நட்பின் மூலம் மாகின்டாஷ் ஸ்காலர்ஷிப் என்ற பரீட்சையில் முதலாவதாகத் தேறி மாதம் 8 ரூபாய் உபகாரச் சம்பளமாகப் பெற்றார். அதன் மூலம் எஃப்.ஏ பரீட்சை எழுதி, முதலாவதாகத் தேர்ச்சியடைந்தார். சைவத்திலும் தணிகை முருகனது பக்தியிலும் ஊறித் திளைத்த இவருக்கு வள்ளியம்மை என்ற பெண்மணி மனைவியாக அமைந்தார். அந்த அம்மையாரும் தணிகைவேலனிடம் அளவுகடந்த பக்தி கொண்டிருந்தார். தினமும் பூமாலை தொடுத்து, பூஜைக்குத் தேவையான பணிகளைக் குறைவில்லாமல் செய்து வந்தார் அவர். திருத்தணிகேசன் திருவருளால் சண்முகம், செங்கல்வராயன், ஆறுமுகம் என்னும் மூன்று குழந்தைகள் பிறந்தனர். இவர்களில் திருப்புகழ் முதலான அருணகிரிநாதரின் அனைத்து நூல்களுக்கும் உரை எழுதிப் புகழ்பெற்றவர் தணிகைமணி வ.சு. செங்கல்வராயபிள்ளை.

சுப்ரமணியர் என்னும் வடக்குப்பட்டு தணிகாசலம் சுப்ரமணிய பிள்ளையவர்கள் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் வல்லவராக இருந்தார். இவரது கையெழுத்து மிகவும் நேர்த்தியாக இருக்கும். இதைக் கண்ட கடலூர் மஞ்சக்குப்பம் நீதிபதி ஹட்சன் துரை, 1870 ல்இவரை எழுத்தர் வேலையில் அமர்த்தினர். அந்த நீதிமன்றத்தில் பணியாற்றிய போதுதான் தில்லை தீட்சிதர்களின் வழக்கு வந்தது. அதுவே, இவரது வாழ்க்கையில் அருணகிரிநாதரின் திருப்புகழ்ச் சுவடிகளைத் தேடும் பணியில் ஈடுபட வைத்தது. அருணகிரிநாதர் பாடிய சந்தத் திருப்புகழ்ப் பாடல்கள் அந்தக் காலத்தில் ஆங்காங்கே கவடி வடிவிலேயே இருந்தன. அது மக்களின் பார்வைக்கும் பாராயணத்துக்கும் வரவில்லை.

அருணகிரிநாதர் 16,000 திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியிருப்பார் என்று அக்காலத்தில் தமிழ் அறிஞர்களிடையே ஒரு கருத்து நிலவி வந்தது. அதில் ஓர் ஆயிரம் பாடல்களாவது தமக்குக் கிடைத்தது. அதனை அச்சிட்டால், தாம் எடுத்த பிறவிப்பயன் தீரும் என்று முருகனை வேண்டி இப்பணியில் ஈடுபட்டார் சுப்ரமணிய பிள்ளையவர்கள். இதற்காகத் திருப்புகழ்ச் சுவடிகளைத் தேடி பல இடங்களுக்கும் சென்றார். அவ்வாறு தமக்குக் கிடைத்த திருப்புகழ்ச் சுவடிகளை மஞ்சக்குப்பம் தமிழாசிரியர் சிவசிதம்பர முதலியார் என்பவரிடம் அளித்து, அவற்றில் பிழை திருத்தம் செய்ய ஏற்பாடு செய்தார். இந்த வகையில் காஞ்சிபுரம் அண்ணாமலைப் பிள்ளையிடம் 750 திருப்புகழ்ப் பாடல்கள் கொண்ட சுவடி கிடைத்தது. அதேபோல், பின்னத்தூர் சீனிவாசப் பிள்ளையிடம் 400 பாடல்களும், கருங்குழி ஆறுமுக ஐயரிடம் 900 பாடல்களும் கொண்ட ஓலைச் சுவடிகளைச் சேகரித்தார். இந்தப் பணியில் சேலம் சரவணப்பிள்ளை. அனந்தராம ஐயர் போன்ற புலவர்கள் சுப்ரமணியருக்குப் பெரிதும் உதவினர்.

இப்படியிருக்கையில், ஒருநாள் இரவு முருகப்பெருமான் மயில் வாகனத்தில், பொன்னிற ஜோதி பொலிய வீற்றிருந்ததைக் கனவில் கண்டு களித்தார் சுப்ரமணியபிள்ளை. அதன் தொடர்ச்சியாக இவரது முன்சீப் வேலையும் நிரந்தரமாயிற்று. திருப்புகழ்ச் சுவடிகளைப் பரிசோதிக்கும் போது, ஒரே பாடல் பல சுவடிகளில் காணப்பட்டதாலும், பாடபேதங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவிதமாக இருந்ததாலும் அதனை அச்சிடுவதில் பலவித சிரமங்கள் இவருக்கு ஏற்பட்டன. எனினும், முருகன் புகழ்பாடும் இந்த அற்புதப் பாடல்களை எப்படியும் அச்சிட்டுத் தமிழ் உலகுக்கு அளிக்க வேண்டும் ன்னும் விடாமுயற்சியுடன் தீவிரமாக உழைத்தார். பாடல்களை வரிசைப்படுத்துவதில் முதலில் ஆறுபடை வீடுகள், அடுத்து பஞ்சபூதத் தலங்கள், தொடர்ந்து மற்ற தலப் பாடல்கள் என வகைப்படுத்தினார். அக்காலத்தில் தேவாரப் பாடல்கள் அச்சிட்ட முறைப்படி தொண்டைநாடு, நடுநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்ற வரிசையில் 450 பாடல்கள் கொண்ட முதல் பாகத்தை 1895 ல் அச்சிட்டு வெளியிட்டார். இரண்டாவது தொகுதி 545 பாடல்களுடன் 1902 ல் வெளிவந்தது. தற்போது அச்சிடப் பட்டுள்ள பல்வேறு திருப்புகழ்ப் பதிப்புகளுக்கு வடக்குப்பட்டு த. சுப்ரமணிய பிள்ளையவர்களின் பதிப்பே மூலப்படியாகும்.

முன்சீப் வேலை பார்த்தபோது, சுப்ரமணியரின் தீர்மானங்கள் பல மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டன. சிறந்த ஒழுக்கம், இனிமையாகப் பேசும் சுபாவம், பக்திப் பெருக்கு ஆகியவை இவரது நற்குணங்களாகும். கும்பகோணம், திருத்தருப்பூண்டி, மதுரை, மானாமதுரை முதலிய ஊர்களில் முன்சீப் வேலை பார்த்துள்ளார். அப்போது பல தலங்களை வழிபட்டதுடன், பல நூல்களையும் அச்சிட்டார். திருத்தருப்பூண்டி ஸ்தல மான்மியம், திருவாரூர் புராணம், வேதாரண்ய புராணம், திருநீடுர்புராணம், பிரம்மோத்திர காண்ட வசனம். உத்தரகோசமங்கை பிள்ளைத்தமிழ் மானாமதுரை ஸ்தல மான்மியம் முதலான நூல்கள் குறிப்பிடத்தக்கவை. தேவாரப் பாடல்பெற்ற 274 தலங்களில் 176 தலங்களுக்கு நேரில் சென்று தரிசித்து. தலக் குறிப்புகளுடன் இவர் எழுதிய சிவஸ்தல மஞ்சரி சிவத்தல யாத்திரையில் வெளிவந்த முதல் நூல் எனக் கருதப்படுகிறது.

தமது ஆன்மிக சேவையின் தொடர்ச்சியாக திருத்தணிகையில் கருணீகர் மடம் ஒன்றைக் கட்டினார் சுப்ரமணிய பிள்ளை, மேலும் தணிகை சுப்ரமணிய ஸ்வாமி சன்னதானத்தில் தூங்காவிளக்கு இடைவிடாது எரிய நிலம் வாங்கி, அதனை ஸ்வாமியின் பெயரில் சாசனம் செய்து, அதன் வருவாயில் விளக்குகளுக்கு எண்ணெய் வாங்க ஏற்பாடு செய்தார். இதனைத் தமது நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார். ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலையில் அவர் காலத்தில் ஆலயம் இல்லாமல் இருந்ததை எண்ணி, அதனை மறுபடியும் ஸ்தாபிக்க முயற்சிகள் மேற்கொண்டார். தணிகேசன் திருவருளை முழுமையாகப் பெற்ற வடக்குப்பட்டு த.சுப்ரமணிய பிள்ளையவர்கள் 1909 ஆம் ஆண்டில் தணிகை முருகனைத் தரிசித்து வழிபாடு செய்து திரும்பினார். அன்றிலிருந்து ஆறாவது நாள், முருகன் திருவடிகளை அடைந்தார். அவரது விருப்பப்படி அவரது அஸ்தியானது தணிகை கோபுர வாயிலுக்கு எதிரில் சைவர்கள் சமாதி வைக்கும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு சிவலிங்க பிரதிஷ்டையும் செய்யப்பெற்றது.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar