Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இருபா இருபஃது பகுதி-2
முதல் பக்கம் » இருபா இருபஃது
இருபா இருபஃது பகுதி-1
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2013
12:06

மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கனுள் ஐந்தாவதாக வைத்துப் போற்றப்படுவது இருபா இருபஃது என்னும் இந்நூல். இதன் ஆசிரியர் புறச்சந்தான குரவர்களுள் இரண்டாமவராகிய அருள் நந்தி சிவாசாரியார் இவர் சிவஞான போதம் என்ற முதல் நூலை வழங்கியருளிய மெய்கண்ட தேவநாயனாரின் மாணவர்கள் நாற்பத்தொன்பதின்மருள் முதன்மையானவர் என்பர்

அருள்நந்தி சிவம் என்னும் திருப்பெயர் இவருக்கு இவருடைய ஞானாசிரியராகிய மெய்கண்ட தேவநாயனாரால் தீக்கைத் திருப் பெயராகச் சூட்டப்பட்டது என்பர். அதற்கு முன் இவர் சகல ஆகம பண்டிதர் என்னும் புகழ்ப் பெயர் தாங்கி இருந்தார் என்று கூறுவர். மெய்கண்ட தேவ நாயனாரின் ஆணையை ஏற்றுச் சிவஞான போதத்துக்குச் செய்யுள் நடையில் அமைந்த விளக்க உரை போன்ற சிவஞான சித்தியார் என்னும் அரிய நூலை ஆசிரியர் அருள் நந்தி சிவம் இயற்றினார். அந்நூல் பரபக்கம், சுபக்கம் என்னும் இரு பகுதிகளைக் கொண்டது. பரபக்கத்துள் பிறர் கூறும் கொள்கைகள் மறுக்கப்பட்டும் சுபக்கத்துள் சைவ சித்தாந்தச் செம்பொருள் நிலை நாட்டப்பெற்றும் உள்ளன.

இருபா இருபஃது இந்நூலாசிரியரின் இரண்டாவது நூலாகும். இந்நூல் பத்துத் திருவெண்பாக்களையும் பத்துத் திருவாகிரியங்களையும் கொண்டது. எனவே யாப்பின் அடிப்படையிலும் பாடலின் எண்ணிக்கை அடிப்படையிலும் இந்நூலுக்குப் பெயர் வழங்குவதாயிற்று. இது அந்தாதித் தொடையில் மண்டலித்து முடியும் வகையில் அமைந்துள்ளது.

நூலாசிரியராகிய அருள்நந்தி சிவம் தமக்கு ஏற்பட்ட ஐயங்களை தமக்கு ஞானாசிரியராக எழுந்தருளி உபதேசம் செய்த மெய்கண்ட தேவ நாயனாரிடம் வினாவி அறிவது போல் இந்நூலின்  போக்கு அமைந்துள்ளது. எழுப்பப்படும் வினாக்கள் யாவும் மிகவும் நுட்பமானவை. வினாக்கள் யாவற்றுக்கும் நேரடியான விடைகள் தரப்படவில்லை. எனினும் வினாக்கள் அமைந்திருக்கும் விதத்தில் விடைகள் சுட்டப்படுகின்றன.

சிவஞான போதத்தையும் அதன் வழி நூலாகிய சிவஞான சித்தியாரையும் கற்கின்ற நுட்ப அறிவுடையாருக்கு எழுகின்ற ஐயங்களே இந்த நூலில் தொடுக்கப்படும் வினாக்களாக அமைந்துள்ளன. எனவே இவற்றின் விடை முற்கூறிய இரண்டு நூல்களுளிலும் காணக்கிடைப்பன. ஆதலால் இந்நூலின் பயிற்சி சிவஞானபோதம், சிவஞான சித்தியார் ஆகிய நூற்களுக்குத் தெளிவான பொருள்விளக்கம் காண்பதற்கு உதவும். ஆசிரியரின் திருவுள்ளமும் அதுவே என்று கொண்டால் மிகையன்று.

1 கண்நுதலும் கண்டக் கறையும் கரந்து அருளி
மண் இடையில் மாக்கள் மலம் அகற்றும் வெண்ணெய்நல்லூர்
மெய்கண்டான் என்று ஒரு கால் மேவுவரால் வேறுஇன்மை
கைகண்டார் உள்ளத்துக் கண்.

சிவபெருமான் தமது நெற்றிக் கண்ணையும் தம் திருக்கழுத்தில் உள்ள கறையையும் வெளித் தோன்றா வண்ணம் மறைத்துக் கொண்டு இவ்வுலகில் உள்ள உயிர்களின் மும்மலங்களையும் அகற்றும் பொருட்டுத் திருவெண்ணெய்நல்லூரில் மெய்கண்ட தேவ நாயனார் என்ற திருப்பெயர் தாங்கி ஞானாசிரியப் பெருந்தகையாக எழுந்தருளியுள்ளார் என்று ஒரு முறை நினைந்து வாழ்த்துகின்றவர்கள் தம் உள்ளத்தில் அப்பெருமான் ஒன்றாகி நிற்கும் தன்மையைக் கண்டவர் ஆவர்.

நெற்றித் திருவிழியும், ஆலகால நஞ்சு தங்கிய மணிமிடறும் சிவ பெருமான் ஒப்பற்றவன் என்பதனையும் அவன் சிற்றுயிர்களுக்கு இரங்கி அருள் பாலிப்பவன் என்பதனையும் காட்டுகின்ற அடையாளங்கள். திருவெண்ணெய்நல்லூரில் மெய்கண்ட தேவ நாயனார் என்ற திருப்பெயர் தாங்கி ஞானாசிரியராக அப்பெருமான் எழுந்தருளியபோது இத் திரு அடையாளங்களை மறைத்துக் கொண்டு மானுடச் சட்டை தாங்கி எழுந்தருளினான் என்று ஆசிரியர் கூறுகிறார்.

இறைவனே குருவடிவாக எழுந்தருளினான் என்பதை உணர்ந்து அவன் திருவடியை  ஒரு முறை நினைந்தாஞம்  அவ்வாறு நினைபவர்களுக்குச் சிவத்தோடு  ஒன்றுகின்ற பெரும் பேறு வாயக்கும் என்று பெருமானின் கருணைப் பெருக்கை உணர்த்தினார்

2 கண்அகல் ஞாலத்துக் கதிரவன் தான் என
வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்டதேவ
காரா கிரகக் கலக கலி ஆழ் வேனை நின்
பேரா இன்பத்து இருந்திய பெரும!
வினவல் ஆனாது உடையேன். எனது உளம்                         

நீங்கா நிலைமை ஊங்கும் உளையால்
அறிவின்மை மலம் பிரிவு இன்மை  எனின்
ஒராலினை உணர்த்தும் விராய் நின்றனையேல்
திப்பியம் அந்தோ பொய்ப்பகை ஆகாய்.
சுத்தன் அமலன் சோதி நாயகன்

முத்தன் பரம்பரன் எனும் பெயர் முடியா
வேறுநின்று உணர்த்தின் வியாபகம் இன்றாய்ப்
பேறும் இன்றாகும் எமக்குளம் பெரும!
இருநீலம் தீகிரி  இயமானன் கால் எனும்
பெருநிலைத் தாண்டவம்  பெருமாற்கு இலாதலின்

வேறோ உடனோ விளம்பல் வேண்டு
சீறி அறுளல் சிறுமை உடையத்தால்
 அறியாது கூறினை அபக்குவ பக்குவக்
 குறிபார்த்தும் அருளினம் குருமுதலாய் எனின்
அபக்குவம் அருளினும் அறியேன்  மிகத்தரும்

பக்குவம் வேண்டில் பயன்இலை நின்னால்
பக்குவம் அதனால் பயன்நீ வரினே
நின்னைப் பருவம் நிகழ்த்தாது அன்னோ
தன் ஒப் பார்இலி என்பதும் தகுமே
மும்மலம் சடம் அணு மூப்பு  இளமையில் நீ

நின் மலன் பருவம் நிகழ்த்தியது யார்க்கோ !
உணர்வு எழும் நீக்கத்தை ஓதியது எனினே
இணை இலி ஆயினை என்பதை அறியேன்
யானே நீக்கினும் தானே நீங்கினும்
கோனே வேண்டா கூறல் வேண்டும்

காண்பார் யார் கொல் காட்டாக் கால்  எனும்
மாண்பு உரை உணர்ந்திலை மன்ற பாண்டியன்
கேட்பக் கிளக்கும் மெய்ஞ்ஞானத்தின்
 ஆட்பால் அவர்க்கு அருள்  என்பதை அறியே.

பரந்த இந்நிலவுலகத்தில் சூழ்ந்திருந்த புற இருளை நீக்குவதற்கு எழுந்த கதிரவனைப் போன்று உயிர்களின் அறியாமை ஆகிய இருளை அகற்றுவதற்காகத்  திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளிஇருக்கும் மெய்கண்ட தேவனே, அறியாமையாகிய சிறைச்சாலையில் துன்புற்றுக் கிடந்த எனக்கு உமது திருவருளை வழங்கி என்றும் மாறாத பேரின்பத்தில் மகிழ்ந்திருக்குமாறு பெருவாழ்வு அளித்த பெருமானே. எனக்கு உற்ற ஐயங்களை உம்மிடத்திலே வினவி நீர் தரும் விளக்கங்களால் ஐயத்தின் நீங்கித் தெளிய வேண்டும் என்ற அளவற்ற ஆசையுடையேன். அவ்வினாக்களைக் கேட்டு என் ஐயத்தைத் தீர்த்தருளுவீராக.

பதிப்பொருளாகிய நீர் எனது உள்ளத்தை விட்டு எப்போதும் நீங்காதிருக்கின்றீர் என்று அருள் நூல்கள் கூறும். அவ்வாறு இருந்தும் என்னிடத்தில் அறியாமை எப்படி வந்து பொருந்திற்று?

உயிர்களுக்கு அறியாமை என்பது ஆணவ மலத்தால் வந்தது. ஆணவமலம் உயிர்களைத் தோற்றமில் காலந்தொட்டே பற்றியுள்ளது. அது இடையில் வந்து பொருந்தின தன்று என்று நீர் விடையிறுத்தால், ஆணவமலம் என்னைப் பற்றுங்காலத்து நீர் என்னைவிட்டு விலகியிருந்தீர் என்று ஆகிறது. ஒருபோதும் நீங்கியதில்லை உயிரோடு எக்காலத்தும் விரவியே இருந்தோம் என்று கூறுவீராயின் நீர் என்னைவிட்டு விலகாதிருந்தபோதும் அறியாமை வந்து என்னைப் பற்றிக்கொண்டது என்றால் அது விந்தையிலும் விந்தை அன்றோ?

நீர் பொய்க்குப் பகைவன், வரம்பில் ஆற்றல் உடையவன், இயல் பாகவே பாசங்களில் நீங்கியவன், அறிவே வடிவாகிய பேரொளிப் பிழம்பாகியவன், கட்டற்றவன், யாவர்க்கும் தலைவன் என்றெல்லாம் உம்மைப்பற்றி உரைக்கப்படும் பெருமைகள் பொருந்தாதனவாய் முடியுமன்றோ?

உயிர்களுக்கு அருள் பாலிக்கும் போது அவற்றோடு இயைந்து நின்று அருளுவதில்லை வேறாய்நின்றே அருளுவோம் என நீர் விடை பகர்வீராயின் நீர் எங்கும் நிறைந்திருக்கிறீர் என்பதற்கு இழுக்கு நேரும் அன்றோ? இறைவனோடு ஒன்றித்து நிற்பதே வீடு பேறு என்பதனால் உம்மின் வேறாய எனக்கு வீடுபேறு என்ற ஒன்றே இல்லாது போகும்.

மேலும் பெருமானே, எங்களை விட்டு விலகி நின்றீர் என்று சொன்ன. அளவிலேயே உமக்கு எங்கும் எப்பொழுதும் நீக்கமற நிறைந்திருக்கும் வியாபகத்தன்மை இல்லாது ஆகுமன்றோ?

அப்பர் பெருமான் திருத்தாண்டகத்துள்  இருநிலனாய்த் தியாகி நீருமாகி இயமானனாய் எறியும் காற்றுமாகி என்று இவ்வாறு உமது சர்வ வியாபியாகும் தன்மையைப் பேசியுள்ளாரே அது பொருந்தாது போகுமோ? எனவே என்னைப்பற்றியிருக்கும் அறியாமையை என்னுடன் நின்று போக்குவீரோ? அல்லது என்னின் வேறாய் நின்று  போக்குவீரோ? என்பதை விளம்பி அருள வேண்டும். இவ்வாறு  எல்லாம் நான் கேட்பது என் அறிவால்  புரிந்துகொள்ள முடியாததனால் தான் என்பதன்றி வேறன்று எனவே என் மீது சினம் கொள்ளாது அருளுவீராக.

அறியாமல் கூறினாய், பக்குவமின்மையும் பக்குவம் உடைமையும் சீர்தூக்கிப் பார்த்து குரு முதல்வனாய் எழுந்தருளி வந்து அருளுவோம் என்று நீர் கூறினால் அப்போதும் எனக்குச் சில ஜயங்கள் எழுகின்றன, நான் பக்குவம் பெறாதவனாயின் நீர் அறிவித்தாலும் என்னால் எதனையும் அறிய இயலாது. நான் பக்குவம் உடையவனாயின் அந்த நிலையே உமது அருளுக்கு ஏற்ற முதிர்ச்சியை நான் எய்தியுள்ளேன் என்பதைக் காட்டும். எனவே நீர் எழுந்தருளி வந்து அருளுவதனால் பயனில்லை என்றாகும். மேலும் பக்குவம் என்பது தான் ஏது? அது ஒரு சடப்பொருள். அப்பொருள் ஒப்பற்றவராகிய உம்மை என்னிடத்து வருவிக்கும் ஆற்றல் அற்றது. அன்று உனக்குப் பக்குவம் வந்தால் தான் நாம் எழுந்தருளுவோம் என்னால், உம்மைக் கட்டுப்படுத்தும் முதன்மை பக்குவத்திற்கு உரியதாகி, நீர் ஒப்பற்றவர் உம்மை ஒப்பார் ஒருவருமிலர் என்ற உமது தன்மைக்கு இழுக்கு நேரிடும்.

பக்குவநிலை என்று சொல்லப்படுவது இறை உயிர் தளை என்ற முப்பொருள்களில் எதற்கு வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. மும்மலங்களும் சடம். சடப்பொருள்கள் கிடந்தபடியே கிடக்கும் என்பதன்றி அவற்றுக்குப் பக்குவம் வருவதில்லை. உயிர் சார்ந்ததன் வண்ணமாகிப் பிறவி தோறும் வேறு வேறு உடலில் பொருந்தி நீங்கி வருவது. உடலுக்குத்தான் இளமையும் மூப்பும் வருமேயன்றி   ஆன்மாவுக்கு இளமையும் இல்லை மூப்பும் இல்லை. எனவே உயிருக்குப் பக்குவம் என்பதும் பொருந்தாது. முதல் வனாகிய நீரோ இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர். நின்மலர். உமக்குப் பக்குவம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஆன்மாவின் அறிவு படிப்படியாக வளர்ந்து இருவினை ஒப்பும் மல பரிபாகமும் எய்துவதே பக்குவம் எனப்படுமாயின், பக்குவத்தைத் தானே தேடிக் கொண்ட உயிருக்கு நீர் வந்து வழங்குவதென்ன? உம்முடைய இணையற்ற அருளின் இயல்பினை நான் எவ்வாறு அறிவேன்? ஏனெனில் மும்மலங்களும் தானே நீங்கினாலும் அல்லது நானே நீக்கிக் கொண்டாலும் ஒப்பற்ற தலைவராகிய நீர் அங்கு வேண்டியதில்லையே? உம்மால்  ஆகும் பயன் ஏதும் இல்லாதவிடத்து உம்மை  ஒப்பற்றவன் என்று கொள்ளுவது எவ்வாறு ? இதற்கு விடை கூறி அருள வேண்டும்.

 இவற்றுக்கு விடை வேண்டுமெனில் திருநாவுக்கரசு நாயனார் அருளிச் செய்த  ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே  எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தின்  உட்பொருளையும் திருஞான சம்பந்த நாயனார் பாண்டிய  மன்னன் கேட்குமாறு பாடிய  ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் என்று தொடங்கும் திருப்பாடலின் மெய்ப்பொருளையும் உணர்தல் வேண்டும். இவற்றினின்றும் நீ எழுப்பிய வினாக்களுக்கான விடையை  அறிவாயாக.

இந்த முதற்பாடல் பதி இலக்கணத்தைப் பற்றிய விளக்கங்களைக் கேட்கின்ற பாடலாக அமைந்துள்ளது. முதலில் தமக்கு அருளுரை வழங்கிய மெய்கண்ட நாயனாரைப் போற்றிப் பாராட்டி ஆசிரியர் தம் வினாக்களைத் தொடுக்கிறார். அந்த வினாக்களைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

1) பெருமானே, நீ எங்கும் நிறைந்திருப்பவன். எனது உள்ளத்தில் நீங்காது கலந்திருக்கின்ற தன்மை உனக்கு உண்டு. அப்படி இருந்தும் என் உயிர் ஆணவ மலத்தினால் பற்றப்பட்டு அறியாமையே வடிவாய் நிற்கிறது. அவ்வாறாயின் என் உள்ளத்தை விட்டு நீ நீங்கி நின்றனையோ?

2) உன்னைவிட்டு ஒரு பொழுதும் நீங்கி நின்றதில்லை என்று நீ பதில் அளித்தால் பொய்யினைக் கடியும் வல்லவன் என்றும் தூய்மையானவன் என்றும் நின்மலன் என்றும் அறிவே பிழம்பாயவன் என்றும் வீடு பேறாய் நின்றவன் என்றும் எல்லாவற்றுக்கும் தலைவன் என்றும் புகழப் படும் உனக்கு அப்புகழ் மொழிகள் பொருந்தா ஏனெனில் உன்னையும் மீறி என்னை ஆணவ மலம் பற்றிக் கொண்டதன்றோ?

3)எனக்கு அறிவினை உணர்த்தி அறியாமையை நீக்கும் பொழுது என்னை விட்டு வேறாக நின்று நீ உணர்த்துவாய் என்னில் உனது வியாபகத் தன்மைக்கும் இழுக்காகும் அத்துடன் உன்னைப் பிரியாது நிற்கும் பெரும் பேறும் எனக்கு வாய்க்காது. அப்பரடிகளின் இருநில னாய்த் தீயாகி  என்ற திருத்தாண்டகத்தில் கூறப்படும் அனைத்துமாய் நின்ற நிலை உனக்கு இல்லாமல் போகும் . ஆதலால் நீ வேறு நிற்கின்றனையா? உடனாய் நின்கின்றனையா? கூறியருளுக.

4) உயிர்களின் பக்குவ நிலை அறிந்து யாம் அருள் பாலிப்போம் என்று கூறினால் கீழ்க்கண்ட ஐயங்கள் எழுகின்றன. என்னுடைய பக்குவ மற்ற நிலையில் நீ அருளினால் என் அறியாமையினால் அதனை அறிகின்ற அறிவு எனக்கு இல்லாமல் போகும். பக்குவம் உள்ள காலத்து உணர்த்துவேன் எனக் கூறினால் உன்னால் ஆகும் பயன் யாதுமில்லை. அதுவுமல்லாமல் பக்குவம் தலைமை நிலையை அடைந்து நீ அதன்வழிச் செயல்படுபவன் ஆவாய். எனவே உன்னை ஒப்பார் ஒருவரும் இலர் என்பது பொருந்தாது ஆகுமன்றோ?

5) பக்குவம் என்பது முப்பொருள்களுள் எதற்கு உரைக்கப்பட்டது? மலங்கள் சடம் எனவே அவற்றுக்குப் பக்குவம் விளையாது. உயிர் உடல்தோறும் தங்கிப் பல்வேறு பிறவிகளுக்கு ஆட்படுவதால் அதற்கு மூப்பும் இளமையும் இல்லையன்றோ? நீயோ மலங்களால் பற்றப் படாதவன். உயிரின் உணர்வு பக்குவப்பட்டு இருவினையொப்பும் மல பரிபாகமும் எய்துவதே பக்குவம் என்னால் நீ இணையற்றவன் என்று கூறுதல் எவ்வாறு பொருந்தும்? மலங்களை நானே நீக்கிக் கொண்டாலும் அல்லது அவை தாமே என்னை விட்டு நீங்கினாலும் தலைவனாகிய உன்னுடைய இடையீடு வேண்டாமன்றே?

மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்குக் குறிப்பால் விடை உணர்த்துவதாக இதன் பின்னர் வருகின்ற இப்பாடலின் இறுதி அடிகள் நான்கும் அமைந்துள்ளன அவற்றுள் திருமுறைகளிலிருந்து இரண்டு திருப்பாடல்கள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. ஒன்று  ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே  என்ற அப்பர் பெருமானின் திருத்தாண்டகம் மற்றொன்று  ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும்  என்று தொடங்குகின்ற திருஞான சம்பந்தரின் திருப்பாசுரப் பாடல் .

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே?
  அடங்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே?
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே?
  உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே?
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே?
  பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே?
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே?
  காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக் காலே?

இந்தத் திருப்பாடல் எளிய சொற்களால் அமைந்து ஆழ்ந்த கருத்துக்களை விளக்குவதாய் உள்ளது. இறைவன் உயிர்களுக்குக் காட்டும் உபகாரம், காணும் உபகாரம்  ஆகிய இரண்டும் புரிந்து வருகின்றான். இறைவன் காட்டி அருளுவதனாலேயே  உயிர்கள் கண்டு வருகின்றன. இறைவன் ஆட்டுவித்தால் யாரே ஆயினும் ஆடுவர்.  அடங்குவித்தால் அடங்குவர். இவ்வாறு பாடலின் நான்காவது வரியின் முதற்பகுதி வரைக்கும் இறைவன் திருக்குறிப்பின்படியே உயிர்கள் செயற்படுகின்றன என்பதை அப்பர் பெருமான் அறிவுறுத்துகின்றார் நான்காவது வரியின் முதற்பகுதி வரைக்கும் இறைவன் திருக்குறிப்பின்படியே உயிர்கள் செயற்படுகின்றன என்பதை அப்பர் பெருமான் அறிவுறுத்துகின்றார். நான்காவது வரியின் பிற்பகுதியில் எதிர்மறை முகத்தால் இறைவன் காட்டி அருளாதபோது காண்கின்ற ஆற்றல் யாருக்கு உண்டு என்ற கேள்வியை எழுப்பி யாருக்கும் இல்லை என்ற பொருளைப் பெற வைத்தனர்.

இதன் மூலம் பொருள்களை உள்ளபடி அறிவதற்கு இறைவனின் திருவருட்துணை உயிர்களுக்கு இன்றியமையாதது எனவே மலத்தால் மறைக்கப்பட்ட உயிர்களின் அறிவை மலத்தை நீக்கி அவற்றுக்கு அறிவிப்பவன் சிவபெருமானே என்பதனை விளக்கியருளினார். எனவே மலம் தானாக நீங்காது என்பதும் உயிர்கள் மலத்தை நீக்கும் ஆற்றல் அற்றன என்பதும் அறிவுறுத்தப்பட்டன

ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதி மாண்பும்
கேட்பான் புகில் அளவில்லை கிளக்க வேண்டா
கோட்பா லனவும் வினையும் குறுகாமை எந்தை
தாட்பால் வணங்கித் தலைநின்று இவை கேட்க தக்கார்

மதுரையில் சமணர்களோடு வாதம் புரிந்து சைவசமயத்தை நிலை நிறுத்திய திருஞான சம்பந்தப் பெருமான் , பாண்டிய மன்னன் கேட்டு உணருமாறு அருளிச் செய்த திருப்பாசுரத்தின் ஒரு திருப்பாடல் இது. சிவபெருமான் தனக்கு ஆட்பட்டவர்க்கு அருள் செய்யும் கருணையாளன். அவன் எவ்வாறு அருள் புரிகிறான் என்பதையும் எப்போது , எப்படி  அருள் புரிகிறாள் என்பதையும் அவனது அனாதி முறைமையான பழமையையும் பெருமையையும் கேட்க்ப் புகுந்தால் அதற்கு விடை எல்லையற்று நீளும். ஏனெனில் இவை யாவும் சொல்லுக்கும் மனதுக்கும் அடங்குவன அல்ல. எனவே அவற்றைச் சொல்லவும் கேட்கவும் முற்படுவது வறிதாய் முடியும் ஆதலால் உயிர்கள் துயரங்களை விட்டு நீங்கவும், வினைப் பயன்கள் உயிர்களைப் பற்றாதிருக்கவும் இறைவன் திருவடி மலர்களை வணங்கி அவனுக்கே ஆட்பட்டு நிற்பதன்றிச் செய்யத்தக்கது வேறு யாதும் இல்லை.

இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் என்பது உண்மையே. ஆயினும் அவன் எதிலும் தோய்வற்று நிற்கிறான். ஆதலினால் ஆணவ மலம் உயிர்களைப் பற்றும் போது அவன் உயிர்களை விட்டுவிலகி நிற்கிறான் என்பதில்லை. எல்லா உயிர்களுக்கும் அவ்வவற்றின் பக்குவம் அறிந்தே இறைவன் உணர்த்துகிறான் என்னும் போது பக்குவம் உயிர்களுக்கே உரியதாகிறது. எல்லோரிடத்திலும் இறைவனின் திருவருள் தோன்றாத் துணையாக விளங்கினும் உயிர்கள் தத்தம் அறிவுக்கேற்பவே அவனை உணரும் இயல்பினை உடையன. ஆதலால் உயிர்களுக்கு இறைவன்  எப்போது எவ்வாறு அருள் பாலிப்பான் என்பதை அளவிட்டு உரைக்க முடியாது . எனவே இறைவன் திருவடியை அடைக்கலமாகப் பற்றுவதைத் தவிர உயிர்களுக்கு உய்வுபெறும் நெறி வேறு எதுவும் இல்லை. இவ்வாறு மேலே எழுப்பப்பட்ட வினாக்களுக்குக் குறிப்பாக விடைகள் உணர்த்தப்பட்டன.

3) அறிவு அறியாமை இரண்டும் அடியேன்
  செறிதலான் மெய்கண்ட தேவே! அறிவோ
  அறியேனோ யாது என்று கூறுகேன் ஆய்ந்து
  குறிமாறு கொள்ளாமற் கூறு.

மெய்கண்ட தேவப்பெருமானே நான் ஒரு நிலையிலே அறிந்தும், மற்றொரு நிலையிலே அறியாதும் இருக்கிறேன் என்பதை என்னால் அறிய முடிகிறது. ஆதலால் உயிராகிய நான் அறிவுடைப் பொருளா? அல்லது அறிவற்ற பொருளா? என்ற ஐயம் எனக்கு எழுகிறது. இந்த நிலையை ஆராய்ந்து எனக்கு மயக்கம் தீருமாறு என்னுடைய உண்மையான நிலையை எனக்கு உணர்த்தியருளுமாறு வேண்டுகின்றேன்.

இந்தப்பாடல் பசு இலக்கணம் பற்றி வினவுகிற பாடல். உயிரின் அறிவு சில நேரங்களில் விளங்கித் தோன்றுகிறது. பல நேரங்களில் பலவற்றைப் பற்றி அறிந்து கொள்ள இயலாமல் தட்டழிகிறது ஊன்றிப் பார்த்தால் இந்த இரண்டு நிலைமைகளும் உயிரிடத்து உள்ளன என்பதை உணர முடியும், இரண்டில் எது உயிரின் உண்மையான பண்பு அறிவா? அறியாமையா? என்பது இங்கே எழுப்பப்படுகிற வினா?

உயிர் இறைவனைப் போல அறிவே வடிவானது அன்று. பாசத்தைப் போல முற்றிலும் அறிவற்றதும் அன்று. உயிர் உணர்த்த உணரும் சிற்றறிவுடையது. சார்ந்ததன் வண்ணமாம் தன்மை உடையது. அறிவுப் பொருளைச் சார்ந்து அறிவினால் அறிந்து அறிவின் கண் அழுந்தி அறிவுடைப்பொருளாய் விளங்கும் இயல்பு உயிருக்கு உண்டு. அவ்வாறே அறிவற்ற பொருள்களை, அறிவுற்ற புலன்களின் வழியாக அறிந்து அறியாமையின்கண் அழுத்துவதும் உயிரின் இயல்பாகும். சிவஞானபோதத்தில் இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா என  ஆசிரியர் மெய்கண்ட தேவர் அறிவுறுத்துகிறார். இவ்வாறு சத்தின் இயல்பும் அசத்தின் இயல்பும் ஒரு சேரப் பெற்றிருக்கும் உயிரை சதசத்து என்று வழங்குவர்.

4 கூறிய மூன்று மலத்தின் குணக்குறி
வேறு கிளக்கில் விகற்பம் கற்பம்
குரோதம் மோகம் கொலை அஞர் மதம் நகை
விராய் எண் குணனும் ஆணவம் என விளம்பினை
அஞ்ஞானம் பொய் அயர்வே மோகம்

பைசால சூனியம் மாச்சரியம் பயம்
ஆயஏழ் குணனும் மாயைக்கு அருளினை
இருத்தலும் கிடத்தலும் இருவினை இயற்றலும்
விடுத்தலும் பரநிந்தை மேவல் என்று எடுத்த
அறுவகைக் குணனும் கருமத்து அருளினை

ஆங்கு அவை தாமும் நீங்காது நின்று
தம்வழிச் செலுத்தித் தானே தானாய்
என்வழி என்பது ஒன்று  இன்றாம் ,மன்ன!
ஊரும் பேரும் உருவும் கொண்டு என்
ஊரும் பேரும் உருவும் கெடுத்த

பெண்ணை சூழ்ந்த வெண்ணெய் அம் பதியில்
சைவ சிகாமணி! மெய்யர் மெய்ய!
மும்மலம் சடம் என மொழிந்தனை அம்ம
மாறுகோள் கூறல் போலும் தேறும்
சடம் செயல் அதனைச் சார்ந்திடும் எனினே.

கடம்படம் அதனுள் கண்டிலம் விடப்படும்
ஊன்திரள் போன்றது ஆயில் தோன்றி
அணைந்து ஆங்கு அகறல் வேண்டும் குணங்களும்
பன்மை இன்று ஆகும் எம்மை வந்து அணையத்
தானோ மாட்டாது யானோ செய்கிலன்

நீயோ செய்யாய் நின்மலன் ஆயிட்டு
இயல்பு எனில் போகாது என்றும் மயல்கெடப்
பந்தம் வந்தவாறு இங்கு
அந்தம் ஆதி இல்லாய் ! அருளே.

சைவ சிகாமணியே, மெய்யர் மெய்யனே, தாங்கள் எனக்கு மும்மலங்களின் குணங்களையும் விளைவுகளையும் உணர்த்தி அருளினீர்கள் ஆணவ மலத்தின் காரியமாக விகற்பம் கற்பம் குரோதம் மோகம் கொலை அஞர் மதம் நகை ஆகிய எட்டும் உளவாகும் என்று கூறினீர். அவ்வாறே மாயையின் காரியங்கள் அஞ்ஞானம் பொய் அயர்வு மோகம் பைசா சூனியம் மாச்சரியம் பயம் என்ற ஏழு உள என்று அருளினீர்கள். கன்ம மலத்தைப் பற்றி விளக்கும் பொழுது அது இருத்தல் கிடத்தல் இருவினைகளையும் இயற்றல் பரநிந்தை விடுத்தல் மேவல் என்ற ஆறு விளைவுகளை உடையது என்றும் கூறினீர்கள் இம் மூன்று மலங்களும் என்னைவிட்டு நீங்காது நின்று என்னைத் தம் வழியிலே செலுத்தி அவையே நானுகும் வண்ணமும் என் வழி என்று ஒன்று இல்லாமல் போகுமாறும் செய்து என்னைத் துன்புறுத்தி வருகின்றன.

இவற்றிலிருந்து என்னைக் காத்தருளும் பொருட்டு ஊரும் பேரும் உருவமும்  இல்லாத தாங்கள் பெண்ணை ஆறு சூழ்ந்த திருவெண்ணெய் நல்லூரில் மெய்கண்ட தேவர் என்னும்  திருப்பெயர் தாங்கி ஞானாசிரியத் திருமேனி கொண்டு எழுந்தருளி எனது ஊரும் பேரும் உருவமும் என்னைவிட்டு நீங்கும் படி என்னை முத்தி நெறியில் செலுத்தி, என் பிறவியை வேரறுத்து என்னை ஆட்கொண்டு அருள் பாலிப்பதற்காக சைவத்தின் முடிமணியாகவும் மெய் உணர்வு கொண்டவர்களுக்கு எல்லாம் மெய்யனாகவும் விளங்குகின்ற பெருமானே!

மும்மலங்களும் சடம் என்று எனக்கு உணர்த்தி அருளினீர். அவ்வாறு உரைத்தது பொருத்தமற்ற கூற்றுப் போல எனக்குத் தோன்று கிறது. சடப்பொருளுக்குத் தனக்கென ஒரு செயலில்லையன்றோ? குடம் துணி போன்ற சடப் பொருள்கள் அறிவுடை ஒருவன் செயற்படுத்தினாலன்றித் தாமே செயற்படுவதை யாரும் கண்டதில்லை. அவ்வாறு அன்று நஞ்சு என்பது சடப்பொருளே ஆயினும் அறிவுடை ஒருவனால் உட்கொள்ளப்பட்ட போது அந்த நஞ்சு அவனை மயக்குவதனைக் கண்டதில்லையோ?அதுபோலேவே தான் மலங்களும் அறிவுடைப் பொருளைச் சாரும் பொழுது அதனை மயக்குகின்றது என்பீராயின், நஞ்சு மயக்குவது உண்மையே ஆயினும், உரிய பொழுது கழிந்தவுடன்  நஞ்சின்  வேகம் தணிந்து அதன் விளைவுகள் முற்றிலும் நீங்கிப் போவதைக் காண்கிறோம் அதுபோல மும்மலங்களும் காலப்போக்கில் தம் போவதைக் காண்கிறோம் அதுபோல மும்மலங்களும் காலப்போக்கில் தம் வலிமை கெட்டு நீங்க வேண்டும். அவ்வாறு நீங்குவதைக் காண்கிலம், அதனோடு அமையாது நஞ்சு உயிர்களைக் கொல்லுகின்ற ஒரு குணத்தையும் செயலையும் மட்டுமே  கொண்டுள்ளது . ஆனால் மும்மலங்களும் பல்வேறு வகைப்பட்ட இயல்புகளைக் கொண்டுள்ளன. எனவே மும்மலங்களும் விடத்தை உவமை கூறுவது பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை.

மும்மலங்களும் சடம் ஆயின் அவற்றுக்குச் செயலில்லை. எனவே அவை தாமே வந்து உயிர்களைச் சாரா. நானே விரும்பி மலத்தினைச் சென்று சேரமாட்டேன். நீர் அருள் வடிவு கொண்ட நின்மலன் ஆதலாலே மலங்களை என்னோடு சேர்த்திடமாட்டீர். மலங்கள் உயிர்க்கு இயல்பு என்றால் அவை உயிரை ஒரு போதும் விட்டு நீங்கமாட்டா. எனவே மலம் எனப்பட்ட பிணிப்பு எவ்வாறு வந்து உயிர்களைப் பற்றிக் கொண்டது என்பதை மயக்கம் தீர விளக்கியருள வேண்டுகிறேன்.

இந்தப் பாடல் பாசத்தின் இலக்கணம் பற்றி எழுகின்ற ஐயங்களைத் தீர்த்துக் கொள்ள வினாக்களை எழுப்புகிறது. முதலில் ஆணவ மலத்தின் காரியங்களாக எட்டினைக் குறிப்பிடுகின்றார். விகற்பம் என்பது மற்றப் பொருள்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டு தனக்கு ஒப்பார் யாருமில்லை என்று கருதும் இயல்பு கற்பம் என்பது  தன்னிடம் இல்லாத உயர்வுகளைத் தனக்கு உண்டு என்று கற்பனை செய்து கொள்ளல். குரோதம் என்பது பிறர் மீது சினம் கொள்ளுதல் மோகம் என்பது ஒரு பொருளின் மேல் எல்லையற்ற விருப்பம் காட்டுவது. கொலை பிற உயிர்களுக்கு ஊறு செய்வது. அஞர் என்பது சிறு துன்பம் நேரினும் அதுபற்றி எல்லையற்ற கவலைக்கு உள்ளாதல்,மதம் மனம் மொழி மெய்களால் செருக்கித் திரிதல், நகை என்பது பிறரை எள்ளி இகழ்தல். இங்கு ஆசிரியரால் ஆணவ மலத்தின் காரியங்கள் என எட்டு வகை கூறப்பட்டன. மாதவச் சிவஞான முனிவர் சிவஞான மாபாடியத்தில் ஆணவ மலத்தின் காரியங்களை ஏழு வகைப்படுத்திக் கூறியருளினார்.

மாயையின் காரியங்களாக ஏழு குணங்கள் இதனை அடுத்துக் கூறப்பட்டுள்ளன. அவை முறையே அஞ்ஞானம் பொய் அயர்வு மோகம் பைசா சூனியம் மாச்சரியம் பயம் என்பன. அஞ்ஞானம் என்பது பொருள் அல்லவற்றைப் பொருள் என்று கொள்ளுதல் பொய் உண்மைக்கு மாறானவற்றைப் பேசுதல். அயர்வு அறிந்ததை மறந்தும் மயங்கியும் வருந்துதல். மோகம் எல்லையற்ற வேட்கையினால் துன்புறுதல், பைசா சூனியம் என்பது தனக்குள் எழுந்த தீயவேட்கையை மற்றவர் அறியாமல் ஒளித்தல். மாச்சரியம் என்பது பிறரிடத்துப் பகைமை பாராட்டுதல். பயம் என்பது தம் உயிருக்கு ஊறு வரும் எனக் கருதி அச்சம் கொள்ளல்.

 இதனை அடுத்துக் கன்ம மலத்தின் காரியங்களாக ஆறினைக் கூறுகிறார். அவை இருத்தல், கிடத்தல் இருவினை இயற்றல் விடுத்தல், பரநிந்தை, மேவல் என்பன. இருத்தல் என்பது ஓர் இடத்தைப் பற்றி இருத்தல், கிடத்தல் செயலற்று இருத்தல். இருவினை இயற்றல் என்பது தனது செயலினால் அறம் பாவம் ஆகியவற்றை ஈட்டுதல், விடுத்தல் என்பது பற்றியிருந்த ஒன்றினை விட்டு நீங்குதல். பரநிந்தை மற்றவரை இகழ்தல் , மேவல் என்பது இழிந்தவற்றோடு பொருந்துதல்.

மும்மலங்களோடும் அவற்றின் விளைவுகளாக மேலே கூறப்பட்ட இருபத்தொரு வகையான காரியங்களோடும் பொருந்துவதனால் உயிர் தனக்கென ஒரு செயல் இன்றிப் பாசத்தினால் ஈர்க்கப்பட்டு, அவற்றின் வழியிலேயே குறிக்கோள் இன்றிச் செல்லுகிறது என்பதனை விரிவாகக் கூறினார்.

இதனை அடுத்த பகுதி ஞானா சிரியராகிய மெய்கண்ட தேவ நாயனாரைப் போற்றி விளிப்பதாக அமைந்துள்ளது. இறைவனே குருவடிவம் கொண்டு எழுந்தருளி வருகிறான். ஆதலால் ஊரும் பேரும் உருவமும் அற்ற சிவபெருமான், பெண்ணை ஆறு சூழ்ந்த திருவெண்ணெய் நல்லூரைத் தன் ஊராகக் கொண்டும் மெய்கண்டதேவநாயனார் என்று திருப்பெயர் தாங்கியும் திருமேனி கொண்டும் சைவ நெறியின் முடிமணியாகவும் மெய்யர்களுக்கும் மெய்யனாகவும் எழுந்தருளி, மீள மீளப் பிறப்புட்பட்டு ஊரும் பேரும் உருவும் கொள்ளுகின்ற என்னைப் பிறவா நெறிக்கண் செலுத்திய பெருமானே என்று ஞானாசிரியரின் பெருமையைப் போற்றி, ஆசிரியர் அவரிடம் விண்ணப்பித்துக்கொள்கிறார். அவ்விண்ணப்பம் வினாக்களாகவடிவம் கொள்ளுகிறது.

மும்மலங்களும் சடப்பொருள் என்று கூறினீர். அவ்வுரை மாறு கோள் உரை போலும் ஏனெனில் சடத்துக்குச் செயல் இல்லை. ஆயினும் மும்மலங்களும் என்னைத் தம்வழிச் செலுத்தி நடத்துதலால் அவற்றுக்குச் செயல் உள்ளது என்பது தெளிவாகிறது அன்றோ? அவ்வாறு அன்று. சடத்துக்குச் செயல்இல்லை. ஆனால் சடப்பொருள் உயிரைச் சாரும் பொழுது அது செயல்படும் என்று உரைப்பீராயின், குடமும் துணியும் இன்னும் இதுபோன்ற பிற பொருள்களும் உயிராகிய என்னைச் சாரும் பொழுது அவற்றுக்கு என்று ஒரு செயல் காணப்படவில்லையே எவ்வாறு ?

சடப்பொருள் தாமே செயல்படமாட்டா. ஆயினும் உயிரோடு சேரும் பொழுது அவற்றால் விளைவுகள் உண்டாகின்றன. எடுத்துக்காட்டாக நஞ்சு ஒரு சடப்பொருள். ஒருவன் நஞ்சினை உண்டான் என்றால் அந்த நஞ்சு அவனுடைய ஊனில் கலந்து அவனுக்குக் கேடு செய்யும் அதுபோலவே மலங்களும் என்று கூறினால் அப்போதும் எனது ஐயம் தீர்ந்தபாடில்லை.

நஞ்சு ஒருவனது உடலில் சேர்ந்து கேடு செய்கிறது? அதன் பின்னர் உரிய காலம் கடந்த பிறகு நஞ்சின் தீமை குறைந்து ஆற்றல் அழிந்து தானாக விலகி விடுகிறது. ஆனால் மும்மலங்களும் ஆற்றல் அழிவதில்லை. தாமாக விலகுவதுமில்லை அதுமட்டும் அல்லாமல் நஞ்சு உயிர்களைக் கொல்லுவதாகிய ஒரு செயலினையே உடையது மலமோ மேலே கூறப்பட்டபடி, பல்வேறு வகைப்பட்ட ஆற்றல்களைக் கொண்டிருக்கின்றது, எனவே நஞ்சு போன்றது மலம் என்ற உவமை பொருத்தமற்றது என்பது புலனாகின்றது.

மேலும் மலம் என்பது சடம் ஆதலின் அது தானாக வந்து என்னைப் பற்ற இயலாது. மலத்தின் கொடுமையை நானாகக் தேடிக்கொள்ளமாட்டேன். பெருமானாகிய நீரோ மலங்களைக் கடந்து நிற்கும் நின்மலன். ஆதலால் நீர் அதனை என்னிடத்துச் சேர்த்திருக்கமாட்டீர்.மலம் என்பது ஆன்மாவின் குணம் என்னால் பொருளின் குணம் அழியும் போது பொருளே அழிந்துபோகும், ஆதலால் மலம் என்பது உயிரின் இயல்பு அன்று ; உயிரைப் பிணித்திருக்கும் குற்றம் என்பது தெளிவாகிறது. அந்தமும் ஆதியும் அற்ற பெருமானே, இந்தத் தளை என்னை எவ்வாறு பற்றிற்று என்று என்னுடைய மயக்கம் தீருமாறு அருளிச் செய்ய வேண்டும்.

இங்கே கேட்கப்படுகிற கேள்விகள்; மூன்று மலங்களும் சடம் எனக் கூறப்படுகின்றன. சடத்துக்கு ஒரு இயல்புதான் இருத்தல் கூடும் ஆணவ மலத்திற்கு எட்டு இயல்புகளும் மாயா மலத்திற்கு ஏழு இயல்புகளும், கன்ம மலத்திற்கு ஆறு இயல்புகளும் கூறப்படுகின்றனவே. அக்கூற்றுப் பொருந்துமா? சடப்பொருளுக்குத் தானாகக் செயல்படும் ஆற்றல் இல்லை மும்மலங்களும் சடமாயின் அவற்றுக்குச் செயல் முதன்மை எவ்வாறு வந்தது? நஞ்சு போன்றது மலம் என்று சொன்னால் நஞ்சு காலப் போக்கில் தன் ஆற்றலை இழந்து போவது போல மலங்களும் தம் ஆற்றலை இழத்தல் வேண்டும் அல்லவா? அவ்வாறு நிகழாதது ஏன்? மலத்தை உயிருடன் சேர்த்தது யார்? மலம் தானாக வந்து உயிரைச் சார்ந்ததா? உயிர் மலத்தைப் போய்த் தானாகப் பற்றிக் கொண்டதா? அல்லது இறைவனாகிய நீர் மலத்தையும் ஆன்மாவையும் சேர்த்து வைத்தீரா?

இந்தக் கேள்விகளுக்கான விடை சிவஞான போதத்திலும் சிவஞான சித்தியாரிலும் காணக்கிடைக்கின்றன. மலம் என்பது உயிர்கள் என்று உள்ளனவோ அன்றே அவற்றோடு சேர்ந்திருப்பது. எனவே மலம் வந்து உயிரைப் பற்றவில்லை. உயிர் சென்று மலத்தைப் பற்றவில்லை. இறைவனும் இரண்டையும் சேர்த்து வைக்கவில்லை, நெல்லிற்கு உமியும் நிகழ் செம்பினில் களிம்பும் சொல்லில் புதிதன்று தொன்மையே  எ ன்பது சிவஞான போதத்தின் இரண்டாம் நூற்பாவில் இரண்டாம் அதிகரணத்தில் மூன்றாவது எடுத்துக் காட்டு வெண்பா, அவ்வாறே மலம் ஒன்றே எனினும் அதனுடைய ஆற்றல்கள் பல என்பது சிவஞான சித்தியாரின் ஒன்றதாய் அநேக சக்தி உடைய தாய் உடனாய் ஆதி அன்றதாய்  என்ற திருப்பாடலில் விளக்கப்பட்டது உயிர்கள் பல ஆதலின் ஆவற்றின் நிலை வேறுபாட்டிற்கு ஏற்ப மலத்தின் ஆற்றலும் வேறுபாடும் என்பது குறிப்பாக உணர்த்தப்பட்டது.

5 அருள் முன்பு நில்லாது அடியேற்குக் கண்ணின்று
இருள் கொண்டவாறு என் கொல் எந்தாய் மருள் கொண்ட
மாலையாய் வெண்ணெய்வாழ் மன்னவா! என்னுடைய
 மால்ஐயா மாற்ற மதி.

எந்தையே மருள் என்னும் குறிஞ்சி யாழின் திறமாகிய பண்ணினை இசைக்கும் வண்டுகள் மொய்க்கின்ற மாலையை அணிந்தவரே, திருவெண்ணெய்நல்லூரிலே வாழும் மன்னவரே, முற்கூறப் பட்ட மலங்கள் இருள் ஆதலால் அறிவே பிழம்பாக விளங்கும் உம்முடைய திருமுன்பு நிற்கமாட்டா. அடியேனுக்கு நீர் காட்டினா லன்றிக் காணுகின்ற இயல்பு இல்லை. அவ்வாறு இருக்க நான் எவ்வாறு மலமாகிய இருளினை அறிவேன் என்னுடைய மயக்கம் தீருமாறு அருள் கூர்ந்து உணர்த்தி அருள வேண்டுகிறேன்.

இங்கே கேட்கப்படும் கேள்வி; உயிர் ஆணவமாகிய இருள் மலத்தை எவ்வாறு அறிந்துகொள்ளும் என்பதாகும். அந்த வினாவை எழுப்புவதற்கு முன் அதற்கு அடிப்படையாகச் சில கருத்துக்களை ஆசிரியர் எடுத்துரைக்கிறார். உயிர் அறிவுடைப் பொருளாயினும் அதற்குத் தானாக அறியும் அறிவில்லை, இறைவன் அறிவிக்கவே உயிர்கள் அறிகின்றன. இறைவனோ அறிவுப் பிழம்பானவன். அவன் திருமுன்னிலையில் இருள்மலம் நில்லாது. உயிரோ கட்டு நிலையில் திருவருளை அறியாமல் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் எப்படிப் பார்த்தாலும் மலம் என்ற ஒன்று உளது என்று உயிரால் அறியப்பட இயலாததாய் உள்ளது. எனவே உயிர் எவ்வாறு இருள் மலத்தை அறிந்து கொள்ள இயலும்?

ஆணவமலம் என்ற ஒன்று உள்ளது என்பது சைவ சித்தாந்தத்தின் சிறப்புக் கொள்கைகளில் ஒன்று. ஆணவ மல உண்மையை உயிரே உணர்ந்து கொள்ளும் என்பதற்கு இடமில்லை ஏனெனில் உயிரின் அறிவை முற்றிலும் மறைத்து உயிரை அறியாமையில்  அமிழ்த்தி விடுகிறது ஆணவ மலம்.

இறைவன் தனது திருவருளால் ஆணவ மலத்தை, அதன் உண்மையை உயிருக்கு அறிவிப்பான் என்னில் ஆணவ மலத்தில் அழுத்திய உயிர்கள் திருவருளை அறிய இயலா. அத்துடன் நில்லாமல் திருவருளின் முன்னிலையில் ஆணவ மலம் ஒளியின் முன் இருள் போலத் தொலைந்து போகும்.

இதற்கு விடை: வீட்டு நிலை எய்திய உயிர் எல்லை இல்லாத பேரின்பத்தைத் திருவருளின் துணையால் நுகரும் பொழுது இதுவரை பெற்றிராத பேரின்பத்தை அனுபவித்து மகிழும் அப்போது கருதல் அளவையால் இப்பேரின்பத்தைத் தடை செய்து வந்தது ஆணவ மலம் என்பதை உயிர் உணரும் என்பதாகும்.

இந்த நூலுக்குக் காலத்தால் பிற்பட்ட சிவப்பிரகாசத்தில் (36) ஆசிரியர் உமாபதிசிவம் இவ்வினாவிற்கு விடையிறுப்பார் போல  உன்னரிய திருவருளை ஒழிய மலம் உளது என்று, உணர்வு அரிதால் அதன் உண்மை தெரிவு அரிதாம் உனக்கே  என்று அருளிச் செய்கிறார்.

இந்தப்பாடலில் மருள் என்பது குறிஞ்சி யாழ்த்திறத்தின் பண்ணினைக் குறித்து முதலில் வருகிற மாலையா என்பது மாலையை அணிந்தவரே என்ற பொருள் தந்தது. இரண்டாவது வருகின்ற மாலையா என்பது மால் + ஐயா எனப் பிரிந்து ஐயா என் மயக்கத்தினை மாற்றியருளுக என்ற பொருள் தந்து நின்றது.

6 மதி நுதல் பாகன் ஆகிக் கதிதர
வெண்ணெய்த் தோன்றி நண்ணிஉள் புகுந்து என்
உளம்வெளி செய்து உன் அளவில் காட்சி
காட்டி என் காட்டினை எனினும் நாட்டி என்
உண்மையும் பெருமையும் நுவலில் அண்ணல்

பாதாள சத்தி பரியந்தம் ஆக
ஓதி உணர்ந்த யானே ஏக
முழுதும் நின்றனனே, முதல்வ! முழுதும்
புலன் கடைப் பூழை நுழைந்தனன் கலங்கி
ஆங்கு ஐந்து அவத்தையும் அடைந்தனன் நீங்கிப்

போக்கு வரவு புரிந்தனன் தூக்கி
 எவ்விடத்து உண்மையும் இவ்விடத்து ஆதலும்
சொல் இடத்து எய்தலும் தெரித்த மூன்றினும்
ஒன்று எனக்கு அருளல் வேண்டும் என்றும்
இல்லது இலதாய் உள்ளது உளது எனும்

சொல்லே சொல்லாய்ச் சொல்லும் காலைச்
சிறுத்தலும் பெருத்தலும் இலவே  நிறுத்தி
யானை எறும்பின் ஆனது போல் எனில்
ஞானம் அன்று அவைகாய வாழ்க்கை
மற்றவை அடைந்தன உளவெனின் அற்றன்று

விட்ட குறையின் அறிந்து தொன்று
தொட்டு வந்தன என வேண்டும் நட்ட
பெரியதில் பெருமையும் சிறியதில்  சிறுமையும்
உரியது நினக்கே உண்மை, பெரியோய்!
எனக்கு இன்று ஆகும் என்றும்
மனக்குஇனி யாய் ! இனி மற்று அது மொழியே.

பிறைத் திங்களைப் போன்ற நெற்றியை உடைய உமை அம்மையாரை ஒரு பாகத்தில் கொண்டவரே, எனக்கு உய்வினைத் தருவ தற்காகத் திருவெண்ணெய்நல்லூரில் அவதரித்து என் உள்ளத்திலே வந்து புகுந்து அறியாமையாகிய இருள் நிறைந்த  என் உள்ளத்தில் சிவஞானமாகிய பேர் ஒளி நிறையுமாறு அருளியவரே. அளவுக்கு உட்படாத சிவபரம்பொருளின் ஒப்பற்ற இயல்பினை எனக்குக் காட்டி அருளி அதன்வழி உயிராகிய எனது இயல்பினையும் நான் உள்ளபடி  உணர்ந்து கொள்வதற்கு எனக்குத் துணை செய்த பெருமானே. விண்ணப்பம்.

எனது நுண்மையையும் பெருமையையும் எடுத்துரைக்குமிடத்து. பாதாளம் தொடங்கி திருவருளின் எல்லைவரை நூல்களைக் கற்றறிந்த நான் எனது அறிவு சென்று அறிந்த இடங்களில் எல்லாம் முழுமையாக நிற்கின்றேன். ஆயினும் எவற்றையும் அறிகின்ற போது ஐம்பொறிகளாகிய இழிவான துளைகளின் வழிச் சென்றே நுகர்கின்ற இழிதகைமை உடையேன். அதுமட்டும் அன்றி எல்லாவற்றையும், எப்போதும் ஒரு தன்மையாக அறிகின்ற அறிவு எனக்கு இல்லை. நனவு கனவு உறக்கம் பேர் உறக்கம் உயிர்ப்பு அடங்கல் என்னும் ஐவகைநிலைகட்கும் ஆட்பட்டு அறிவு கூடியும் குறைந்தும் வருகின்றேன். அல்லாமலும் இறப்புக்கும்  பிறப்புக்கும் ஆட்படுகின்றேன், எனவே எங்கும் நிறைந்திருக்கும் நிலை ஒன்று ; இப்போது இவ்வுடலோடு கூடி இவ்வுலக வாழ்க்கையில் ஈடுபடுகிற நிலை மற்றொன்று ; இதனை விட்டு நான் செய்த அறம் பாவங்களுக்கு ஏற்பத் துறக்க நிரயங்களிலே சென்று இன்பமும் துன்பமும் துய்ப்பது வேறொன்று. இந்த மூன்று வகை நிலைகளிலும்  உயிருக்கு இயல்பான நிலை எது என்பதைக் கருணை கூர்ந்து அருளிச் செய்ய வேண்டும்.

இதில் மூன்று வகை கூறப்பட்டதே அவை யாவும் உயிருக்கு உரியது அன்றோ? அவற்றுள் ஒன்றனைத் தனித்துக் கூறுவானேன் என்று தாங்கள் சொல்வீர்கள் ஆனால் அப்போதும் எனக்குச் சில ஐயங்கள் எழுகின்றன. இல்லாத பொருள் என்றும் இல்லாததே. உள்ள பொருள் என்றும் உள்ளதே. இல்லாதது உள்ளது ஆகாது உள்ளது இல்லாதது ஆகாது என்பது சற்காரியவாதம். இதற்கேற்ப உயிர் ஒரு பொழுது சிறுத்தும் மற்றொரு பொழுது மிகவும் பெருத்தும் மாறி மாறி வரும் அளவுகளைக் கொண்டிருக்கும் என்ற கொள்கை பொருத்தமற்றது.

இன்னொரு வகையாக உயிர் உடலோடு கலந்தும் விரவியும் இருப்பதாகிய தன்மை மாறுபடுவதில்லை. யானையின் உடலில் உள்ள உயிர் அதன் அளவுக்கு நிறைந்து பெருத்தும், எறும்பின் உடலில் உள்ள உயிர் அதன் அளவே குறைந்து சிறுத்தும் நிற்கும் என்று கூறினால், அது உயிரின் ஞானத்தைக் குறிக்காமல் உடம்போடு கூடிய வாழ்க்கையைக் குறித்ததாகும்.

அப்படியில்லை, உயிர்களின் வினைக்கேற்ற உடலையே இறைவன் வழங்குகிறான் ஆதலால் அந்த உடலுக்கேற்ப உயிர் தனது அறிவோடு கூடத் தொழிற்பட்டு நிற்கும் என்று கூறினீராயின், முற்பிறவிகளில் இவ்வுயிர் எவ்வாறு பிறந்து வளர்ந்தது என்பதை அது அறிதல் வேண்டும். பெரியவற்றுள் எல்லாம் பெரிதாம் தன்மையும் சிறியவற்றுள் எல்லாம் நுட்பமாம் தன்மையும் உமக்கே உரியது அன்றி எனக்கு உரியது ஆகாது. எனவே என் மனத்துக்கினிய பெருமானே, இவற்றின் உண்மையை எல்லாம் எனக்குத் தெளிவாக மொழிந்தருள வேண்டும்.

உயிருக்கு உண்மையான நிலை எது என்பது இங்கே எழுப்பப்படுகிற கேள்வி. உடலோடு கூடி உயிர் வாழுகின்ற காலத்து அது வரை யறைக்குள் அகப்பட்டுக் கட்டுநிலையில் உழல்கிறது. அப்போது பொறி களின் துணையின்றி உயிரால் எதனையும் அறிய முடிவதில்லை. இந்நிலையில் அது ஐந்து அவத்தைகளுக்கு உட்படுகிறது. இத்தகைய கட்டுக்களிலிருந்து இறைவன் திருவருளால் விடுதலை, பெற்று என்றென்றும் திருவருளில் அழுந்துதலே உயிரின் உண்மையான நிலையாகும் என்பதே முதலில் எழுப்பப்பட்ட வினாவிற்கு விடையாகும்.

சார்ந்ததன் வண்ணமாகிய உயிர் தனக்கு வினைக்கீடாகக் கிடைத்த உடலுள் நிறைந்து அதன் அளவிற்கு ஏற்ற அறிவோடு தொழிற்படும் இக்கருத்து சிவஞான சித்தியாரில்.

அசித்து அரு வியாபகம் போல் வியாபகம் அருவம் இன்றாய்
வசித்திட வரும் வியாபி எனும் வழக்கு உடையன் ஆகி
நசித்திடா ஞானச்செய்தி அநாதியே மறைந்து நிற்கும்
பசுத்துவம் உடையன் ஆகிப் பசு என நிற்கும் ஆன்மா
 என்ற உரைக்கப்படுகிறது.

7 மொழிந்த அவத்தை முதல் அடியேன் நின்றாங்கு
ஒழிந்தன நான்கும் உணர இழிந்து அறிந்து
எறிற்று இங்கு இல்லை எழில் வெண்ணெய் மெய்த்தேவே!
தேறிற்று என் கொண்டு தெரித்து.

திருவெண்ணெய் நல்லூரில் எழுந்தருளியுள்ள மெய்கண்ட தேவனே, நனவு கனவு உறக்கம் பேருறக்கம் உயிர்ப்பு அடங்கல் என்றஐந்து நிலைகளில் உயிராகிய நான் பொருந்தியும் நீங்கியும் வருகின்றேன். இதனால் எனது அறிவு கூடியும் குறைந்தும் வருகின்றது. ஆயினும் நனவு நிலையில் என் அறிவு தொழிற்படுவதை என்னால் உணர முடிகின்றதே  அன்றி மற்றைய நான்கு நிலைகளையும் நான் உணர்ந்து கொள்ள முடிவதில்லை. ஆதலின் நனவு தவிர நான்கு அவத்தைகள் உள்ளன என்பதையும் அவற்றில் கருவிகள் முறையே குறைந்து வருகின்றன என்பதையும் நான் எவ்வாறு அறிந்து கொள்வேன் அருள் கூர்த்து தெரிவிக்க வேண்டுகின்றேன். 

இங்கே கேட்கப்படுகிற ஒரே வினா உயிர்கள் ஐந்து அவத்தைப் படும் என்று அருள் நூல்கள் கூறுகின்றன. ஆயினும் நனவு நிலை தவிர மற்றைய நான்கு நிலைகளும் உள்ளன என்பதை நான் எவ்வாறு அறிவேன் என்பதாகும்.

நனவு நிலையில் அறிவுப் பொறிகள் ஐந்தும் செயற்பொறிகள் ஐந்தும் ஓசை முதலிய ஐந்தும் வாக்கு முதலிய ஐந்தும் பிராணவாயு முதலான காற்றுக்கள் பத்தும் அந்தக்கரணங்கள் நான்கும் புருடன் என்னும் தத்துவத்துடன் கூடி மொத்தம் முப்பத்து ஐந்து கருவிகள் தொழிற்படுகின்றன. இவை சாக்கிர நிலையில் தொழிற்படுகின்றன, கனவு நிலையில் இருபத்து ஐந்து கருவிகள் உறக்கத்தில் மூன்று கருவிகள் பேருறக்கத்தில் இரண்டு, உயிர்ப்பு அடங்கலில் ஒன்றும் தொழிற்படுவன என்று அருள் நூல்கள் கூறும்.

இவற்றை நனவில் அறிவது போல உயிரால் நேரடியாக அறிந்து கொள்ள முடியாது, கருதல் அளவை மூலமாகவே இவற்றை அறிய இயலும் என்பது இவ்வினாவிற்கு உரிய விடையாகும்  கனவுநிலை, நீங்கிய போது கனவு கண்டேன் என்ற உணர்வும் உறங்கி விழித்த போது நன்றாக உறங்கினேன்  என்ற உணர்வும் ,  எழுவதைக் கொண்டு கனவு.உறக்கம்  ஆகிய இரு நிலைகளை அறிதல் கூடும் மற்றைய இரண்டு நிலை களான பேருறக்கம் உயிர்ப்பு அடங்கல் ஆகிய இரண்டும் அனுமானித்தே அறிந்து கொள்ளத் தக்கவை

தெரித்ததுஎன் கொண்டுஎனை உருத்திர பசுபதி!
செடிய னேனையும் அடிமை செய்யப்
படிவம் கொண்டு வடிவுகாட்டு இல்லாப்
பெண்ணை ஆளும் வெண்ணெய் மெய்ய!
அவத்தையில் தெரித்தனன் ஆயின் அவத்தை

தெரித்தாங்கு இருத்தலும் இலனே திருத்தும்
காலம் முதலிய கருவி ஆயின்
மாலும் பிரமனும் வந்து எனை அடையார்
ஓதும் காலை ஒன்றை ஒன்று உணரா
சேதனம் அன்று அவை பேதைச் செயலும் இச்

சேதன ஆனால் செயல் கொள வேண்டும்
போதம் அவற்றைப் புணர்வதை அறியேன்
கருவித் திரளினும் காண்பதுஓர் ஒன்றாய்
ஒருவுதல் அறியேன் உணர்வுஇலன் ஆதலின்
நிற்கொடு கண்டனன் ஆயின் எற்குக்

கருவி ஆயினை பெருமையும் இலவே
யானே பிரமம் கோனே வேண்டா
இன்னும் கேண்மோ, மன்ன! நின்னின்
முன்னம் என்றன் உணர்வுஇலன் ஆதலின்
என்னைக் காண்பினும் காண்பல காணாது

உன்னைக் காண்பினும் காண்பல உன்னோடு
ஒருங்கு காண்பினும் காண்பல அரும்துணை
கண்டவாறு ஏது எனது கண்ணே!
அண்டவாண! அருட்பெரும் கடலே!

சங்கார காரணராக உள்ளவரே, பசுக்களாகிய உயிர்களுக்குத் தலைவனே , குற்றங்கள் நிறைந்த அடியேனை ஆண்டு கொண்டு அருளுவதற்காக ஞான ஆசிரியராய்த் திருமேனி தாங்கித் தங்களது உண்மை வடிவை மறைத்துக் கொண்டு பெண்ணை யாற்றங்கரையிலே விளங்குகின்ற திருவெண்ணெய் நல்லூரிலே எழுந்தருளியிருக்கும் மெய்கண்ட தேவரே, ஆன்மா என்ற பொருள் உள்ளது என்பதை நான் எவ்வாறு விளங்கிக் கொள்வேன்?

உயிர் ஐந்து அவத்தைப் பட்டு வருவதனால் அவ்வாறு அவத்தைகளுக்கு உட்படுவது உயிர் என்று அறியலாம் என்பீர்களாயின் நான் அவற்றை இன்னது என்று அறிந்து கொண்டதுமில்லை. அவற்றினின்று நீங்கிக் கெண்டதும் இல்லை.

ஐந்து அவத்தைகளை விட்டு உன்னால் நீங்கிக் கொள்ள முடியும். அவ்வாறு உன்னை நீக்குவது காலம் நியதி முதலிய கருவிகள் தாம் என்று பதில் கூறுவீர்களாயின் என்னைப் படைத்தற்கு அயனும் காத்தலுக்குத்  திருமாலும்  என்ற தலைவர்கள் தங்கள் கட்டளைப்படி செயல்பட வேண்டாமன்றோ? காலம் முதலியன மட்டுமே போதுமன்றோ? அன்றியும் முற்கூறப்பட்ட காலம் முதலியன அறிவற்றவை ஆதலால் ஒன்றை ஒன்று அறியாது அன்றோ?

அவை அறிவுடைப் பொருள்கள் அல்ல. உயிராகிய அறிவுடைப் பொருளோடு அவை சேரும் போது அவற்றுக்குச் செயல் உண்டாகின்றன என்றால் ஆன்ம அறிவின் துணை கொண்டு அக்கருவிகளுக்குத் தொழில் நிகழ்வதாகத் தெரியவில்லையே. இன்னும் கருவிகள் யாவும் கூடிய இடத்தில், நனவு நிலையிலும் ஓசை ஊறு உருவம் சுவை மணம், இவற்றை ஒன்றொன்றாக நுகர்வதன்றி ஒருங்கே உயிர் நுகர்வதில்லையே. அவற்றிலிருந்து நீங்கும் போதும் அதை நான் அறிகின்றேன் இல்லையே.

இந்த வினாக்களுக்கு,உயிர் தனித்து இருக்கும் நிலையில் எதனையும் அறியாது. பதிப் பொருளாகிய நாம் அறிவித்தாலே உயிர்கள் அறிய வல்லன என்று தாங்கள் விடையிறுத்தால் பதிப்பொருள் உயிருக்கு அறிவிக்கின்ற கருவியாய் முடியும். அந்தக் கருவியைக் கொண்டு பயன் பெறுகின்ற முதன்மை உயிருக்கு உண்டாகும் அதனால் தங்களுக்குப் பெருமையும் இல்லையாகும் நானே பிரமப் பொருளாயின் எனக்கு ஒரு தலைவன் வேண்டாமன்றோ?

இன்னமும் வினாவுவது உடையேன் மன்னனே, இறைவன் அறிவிக்க ஆன்மா அறியும் என்றது பதிப் பொருளை நேருக்கு நேர் கண்டு இதுவே எனக்கு அறிவிக்கின்ற இறைவன் என்று அறிகின்ற ஆற்றல் ஆன்மாவுக்கு இல்லை. இறைவனின் முன்னால் ஆன்மாவின் அறிவு விளங்கித் தோன்றுவதில்லை. இவற்றிலிருந்து ஆன்மா தன்னையும் அறிய வல்லது அன்று தலைவனையும் அறியவல்லது அன்று. தலைவனோடு சென்று கூடியும் அறியவல்லது அன்று என்பது புலனாகின்றது. என் கண் போன்றவனே, எனக்கு அரிய துணையானவனே உலகங்களுக்கு எல்லாம் தலைவனே, அருட்கடலே , நான்  என்னை எவ்வாறு கண்டேன் என்பதை எனக்கு அருள் கூர்ந்து தெரிவிக்க வேண்டும்.

ஆன்மா தன்னை எவ்வாறு அறிந்துகொள்ளும் என்பது இங்கு எழுப்பப்படும் வினா. அதனைத் தொடர்ந்து துணை வினாக்களாகச் சிலதொடுக்கப்படுகின்றன. ஐந்து அவத்தைப்படுவதால் ஆன்மா என்ற ஒரு பொருள் உண்டு என்று அறியலாம் என்ற விடைக்கு அவத்தைப்பட்டு வதையும் உயிர் அறிந்து கொள்ள இயலவில்லையே பின் எவ்வாறு அறியும் என்று வினவப்படுகிறது.

காலம் நியதி முதலியன அவத்தையினால் ஏற்படும் மறைப்பை நீக்கும் என்ற விடையில் நிறைவு பெறாது, மேலும் சில வினாக்கள் எழுப்பப்படுகின்றன. கருவிகள் அறிவற்றனவாய் இருக்க அவை எவ்வாறு அறியாமையை நீக்குதல் கூடும். மேலும் அக்கருவிகளே ஒன்றை ஒன்று அறியாதே! கருவிகளோடு கூடி நின்கின்ற  நனவு நிலையிலும் உயிர் புலன்களை ஒன்றொன்றாக அறியுமே அன்றி ஒருங்கே அறிவதில்லையே என்று மேலும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

உயிர்களுக்கு அறிவிப்பவன் இறைவனே. அவை தாமாக அறியமாட்டா என்று விடை தரப்படுகிறது. இப்போதும் சில ஐயங்கள் கேட்கப்படுகின்ற. உயிர்களுக்கு அறிவிப்பன் இறைவன் என்னால் இறைவன் கருவியாகவும் உயிர் அக்கருவியால் பயன் பெறும் முதன்மைப் பொருளாகவும் ஆகாதோ? உயிருக்கு முதன்மை வந்தால் அதுவே பிரமப்பொருள் அதற்கு ஒரு தலைவன் இல்லை என்றாகாதோ என்று வினாக்கள் எழுகின்றன. அதனோடு கூடவே, உயிர்கள் இறைவனை அறிவதில்லை. உயிரின் அறிவு இறைவனின் முன் முனைத்துத் தோன்றுவதில்லை ; இறைவனும் உயிரும் கூடிப் பொருள்களை அறிவதும் இல்லை. இவ்வாறு இருப்ப ஆன்மா தன்னை எவ்வாறு அறியும் என்று வினாக்கள் தொடுக்கப்பட்டன.

 இவ்வினாக்களுக்கு விடைகள் முறையே பின்வருமாறு அமையும். உடலோடு  கூடி வாழ்கிற உயிர் ஐந்து  அவத்தைகட்கு உட்படுவதனால் நனவு நிலையில் மற்றைய நான்கு நிலைகளையும் கருதல் அளவையின் மூலம் அறிந்து கொள்ள இயலும். சுத்த தத்துவங்கள் செலுத்துவதனால் காலம் நியதி முதலிய கருவிகள் செயல்பட்டு உயிருக்குப் பக்குவம் விளைகின்றது. உயிர்களுக்கு எப்பொருளையும் தானாக அறியும் அறிவில்லை. ஆதலாலே இறைவன் அறிவிக்கவே அறியும். அவ்வாறு அறிவிக்கும் காலத்து இறைவனுக்கு முதன்மை உண்டே தவிர உயிர்களுக்கு முதன்மை இல்லை. பதிப்பொருளாகிய இறைவன் தனது எல்லையற்ற திருவருள் காரணமாக ஞானாசிரியத் திருமேனி கொண்டு பக்குவ மடைந்த உயிர்களுக்கு அறிவிப்பான். அப்போது உயிர் இறைவனின் தலைமையையும் தான் அவனது அடிமை என்பதையும் உணர்ந்து தன் முனைப்புக் கெட்டுத் திருவருளில் அடங்கும் போது தன்னையே தான் உணரும் இயல்பினைப் பெறுகிறது. இறைவன் அறிவித்தாலன்றி உயிர்  எதனையும் அறியமாட்டாது.

9 கடல் அமுதே! வெண்ணெய்க் கரும்பே! என் கண்ணே!
உடலகத்து மூலத்து ஒடுங்கச் சடலக்
கருவியாது ஆங்கு உணர்த்தக் காண்பது தான் என்னை
மருவியாது என்று உரைக்க மன்.

கடலில் விளைந்த அமுதம் போன்றவரே, திருவெண்ணெய் நல்லூõரில் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள் பாலிக்கும் கரும்பினும் இனியவரே, அடியேனுக்குக் கண் போன்றவரே ஆன்மா உடலில் மூலாதாரத்தில் ஒடுங்கிக் கிடக்கும் போது அதற்குத் துணையாய் நிற்கும் கருவிகள் யாவை ? அந்நிலையில் ஆன்மா எதனை அறிகின்றது என்பதை எனக்கு அறிவித்து அருள வேண்டும்.

மூலாதாரத்தில் உயிர் புருடன் என்னும் பெயர் கொண்டு தனித்து நிற்கும், அப்போது அதற்கு அறிவும் செயலும் உளவாகா இறைவன் திருவருளால் உயிரைக் கருவிகளோடு சேர்க்கும் காலத்து உயிருக்குப் படிப்படியே அறிவும் தொழியும் நிகழ்கின்றன என்பது இவ்வினாவிற்குரிய விடையாகும். மூலாதாரத்தில் பிரகிருதி தத்துவம் என்ற ஒன்றே உண்டு. இதுபற்றிப் போற்றிப் பஃறொடையில்.

மூல அரும் கட்டில் உயிர் மூடமாய் உள்கிடப்பக்
காலம் நியதி அது காட்டி மேலோங்கும்
முந்திவியன் கட்டில் உயிர் சேர்த்துக் கலைவித்தை
அந்த அராகம் அவை முன்பு தந்த
தொழில் அறிவு இச்சை துணையாக மானின்
எழில் உடைய முக்குணமும் எய்தி மருளோடு
மன்னும் இதயத்தில் சித்தத்தால் கண்ட பொருள்
இன்ன பொருள் என்று இயம்ப ஒண்ணு அந்நிலைபோய்க்
கண்டவியன் கட்டில் கருவிகள் ஈர்ஐந்து ஒழியக்
கொண்டு நியமித்து அற்றை நாள் கொடுப்பப் பண்டை
இருவினையால் முன்புள்ள இன்பத்துன் பங்கள்
மருவும் வகை அங்கே மருவி உருவுடன் நின்று
ஒங்கு நுதலாய ஒலக்க மண்டபத்தில்
போம் கருவி எல்லாம் புகுந்து ஈண்டி
என்று விளக்கப்பட்டுள்ளமை காணலாம்.

10மன்னிய கன்மச் சமத்திடை மலங்களை
அன்னியம் ஆக்கி அருள்வழி அதனால்
என்னுள் புகுந்தனை எனினே முன்னைத்
திரிமலம் தீர்த்த தேசிக நின்னோடு
ஒருவுதல் இன்றி உடந்தையே ஆகும்

பெருநிலை ஆகல் வேண்டும் மருவிடும்
மும்மலம் அதனால் எம்முள் நின்றிலை எனில்
அம்மலத்திரிவும் செம்மலர்த் தாள் நிழல்
சேர்தலும் இலவாய்ச் சார்பவை பற்றிப்
பெயர்வுஇலன் ஆகும் பெரும! தீர்வு இன்று

அமைந்த கருமத்து இயைந்ததை அல்லது
சமைந்தன இலஎனச் சாற்றில் அமைந்த
மாயேயம் கன்மம் மாமலம் மூன்றும்
மாயாது ஆகவே ஆர்ச்சன மாயையின்
உற்பவம் தீராது ஒழுகும் ஒன்று ஒன்று

நிற்சமம் ஆயின் அல்லது நிற்பெறல்
இல்என மொழிந்த தொல் அறம் தனக்கும்
ஏயாது ஆகும் நாயேன் உளத்து
நின்றனை என்பனோ நின்றிலை என்பனோ
பொன்றிய பொன்றிற்றில மலம் என்பனோ

ஒன்றினை உரைத்து அருள்  மன்ற குன்றாப்
பெண்ணைப் புனல் வயல் வெண்ணெய்க்கு அதிபதி
கைகண் தலையாய் கால்செவி மூக்குஉயர்
மெய்கொண்டு என் வினை வேர் அறப் பறித்த
மெய்கண்ட தேவ வினையிலி!
மைகொண்ட கண்ட ! வழுவில் என் மதியே!

பெண்ணையாற்றின் நீர்பாய்ந்து வளம் மிகுந்திருக்கும் வயல்களை உடைய திருவெண்ணெய் நல்லூருக்குத் தலைவரே, கையும் கண்ணும் பிற உறுப்புக்களும் கொண்ட திருமேனி கொண்டு என் வினையினை வேரறப் பறித்த மெய்கண்ட தேவரே , வினையால் பற்றப்படாதவரே திருக்கழுத்தில் மை போன்று விளங்கும் கறையினை உடையவரே இரு வினைகளும் தமக்குள் ஒத்து இருவினை ஒப்பு எய்திய நிலையில் தாங்கள் எனது மலங்களைப் போக்கி உமது திருவருளால் எனது உள்ளத்தின் உள்ளே புகுந்தீர் என்பதானால் தாங்கள் என்னோடு ஒன்றுபட்டுக் கலந்து நிற்கும் பேரின்பப் பெருநிலை எனக்கு வாய்த்திருக்க வேண்டும். அப்படியெனின், தங்கள் அருளுக்கு இலக்காவதற்கு முன் என்னிடத்து ஒற்றித்து நில்லாது தாங்கள் விலகி இருந்தீர்கள் என்று பொருளாகும்.  மும்மலங்களும் என்னோடு சேர்ந்து இருந்ததால் நீர் என்னுள் நின்றீலீர் எனின் அம்மலங்களிலிருந்து நீங்கவும் உம்முடைய செந்தாமரை மலர் போலும் திருவடிகளில் சேர்தலும் இல்லாமல் நான் மலத்தைச் சார்ந்தே இருத்தல் வேண்டும் அதனால் பிறப்பு இறப்புக்களில் பட்டு உழல்வதிலிருந்து விடுதலை பெற முடியாது துயருறுவேன்.

பெருமானே, பிறந்த பிறப்பில் புசிப்பதற்கு என்று எடுத்துக் கொண்ட பிராரத்தவினையே அனுபவித்துக் கழிக்கப்படுமேயன்றி, ஏறுவினையாகிய ஆகாமிய கன்மம் வளராது என்று தாங்கள் விடை யருளிச் செய்தால் அப்போதும் என்னுடைய ஐயத்திற்குத் தீர்வு இல்லை, ஏனெனில் நுகர்வினைக்கு ஏற்ற உடல் உள்ளளவும்  உடலுக்குக் காரணமாகிய மாயை என்னை விட்டு நீங்காது மாயை நீங்காத வரையிலும் வினையும் நீங்காது. மாயையும் வினையும் உள்ளளவும் ஆணவ மலமும் உளதாகும்.

இவ்வாறு மும்மலங்களும் என்னைவிட்டு நீங்காதிருப்ப ஏறு வினையும் அதனோடு கூடிய மாயையின் விளைவாக உள்ள உடலும், அதனால் புறப் பொருள்களின் மேல் பற்றும் ஒன்று ஒன்றைத் தொடர்ந்து மேன்மேலும் வளரும். தவிரவும் இருவினை ஒப்பு ஏற்பட்டாலன்றி உம்மை அடைதல் இயலாது என்று மொழிந்த தொன்மையான அறமும் பொருந்தாது ஆகும். ஆதலால் எனது உள்ளத்துத் தாங்கள் கூடி நின்கின்றீர் என்பேனா அல்லது கூடி நின்றிலீர் என்பேனோ? என்னுடைய மலங்கள் அழிந்தன என்பேனோ அல்லது அழியவில்லை என்பேனோ? இவற்றை ஐயம் எழாதவண்ணம் தெளிவுபடுத்தி உரைத்தருள வேண்டுகிறேன்.

இப்பாடலில் எழுப்பப்படுகின்ற வினா, உயிர்களின் வினை இறைவனால் நீக்கப்படுகின்றது என்பது பற்றிய தாகும். கன்ம சமம் என்னும் இருவினையொப்பு ஆன்மாவுக்கு ஏற்படுகின்ற பொழுது இறைவன் குருவடிவாக வந்து உயிரின் மலங்களைப் போக்கி திருவருளையே வழியாகக் கொண்டு உயிர்களை விட்டு நீங்கி இருந்தான் என்றாக வேண்டும் அல்லவா? மும்மலங்கள் உயிரைப் பற்றி இருப்பதால் இறைவன்  உயிரை விட்டு நீங்கி இருந்தான் எனில் உயிரின் மும்மலங்களம் எவ்வாறு நீங்கும்? உயிர்கள் இறைவன் திருவடி நிழலைச் சேருவதுதான் எப்போது? இறைவனைச் சேராத உயிர் மும்மலங்களையும் விட்டு ஒரு போதும் விடுபடுவது இயலாதல்லவா? இறைவனின் திருவருள் நோக்கம் பெற்ற பிறகு பிராரத்தவினை மட்டிலுமே உயிர்களால் நுகர்ந்து கழிக்கப்படும். ஆகாமிய வினை ஏறாது என்று கூறின், உயிர்  உலகத்தில் வாழும் காலத்து உடலைப் பற்றிக் கொண்டு நிற்றலால் மாயையின் தொடர்பு அறுவதில்லை மாயைத் தொடர்பு அறாதானால் வினைத் தொடர்பும் அறாது. மாயையும் வினையும் நீங்காத போது ஆணவமும் நீங்காது. எனவே மும்மலத் தொடக்கினால் பிறப்பும் இறப்பும் தொடர்ந்தே வரும். ஆதலால் இறைவன் உயிருட் புகுந்து நின்றனன் என்பது பொருந்துமா? நின்றிலன் என்பது பொருந்துமா? மலங்கள் அழிந்தன என்பது பொருந்துமா? அல்லது அழிந்தில என்பது பொருந்துமா?

இவ்வினாக்களுக்கு விடையாக உய்த்துணர வைக்கப் பட்ட கருத்துக்கள் பின்வருவன. இறைவன் உயிர்க்கு உயிராக என்றென்றும் அதனுடனேயே நிற்கின்றான். ஆயினும் ஆணவமலப் பிணிப்பில் அழுந்திக் கிடக்கின்ற உயிர் அவனை அறிவதில்லை. உயிர்கள் பக்குவ நிலை எய்தி இருவினையொப்பும் மலபரிபாகமும் சத்திநிபாதமும் நிகழும் போது, இறைவன் குருவடிவாக உயிர்களுக்குத் திருவருள் பாலிக்கிறான். அப்பொழுது தீக்கையினால் சஞ்சிதம் என்னும் பழவினை முற்றிலும் அழிக்கப்படுகிறது திருவருள் வயப்பட்டு நிற்கும் உயிருக்குத் துன்பத்தில் வெறுப்பும் இன்பத்தில் விருப்பும் இல்லையாதலால் ஏறும் வினை எனப்படும் ஆகாமியம் பொருந்துவதில்லை, அவ்வாறே நுகர்வினை என்னும் பிராரத்தவினையும் உயிரை வருத்துதல் இல்லை. அது உடல் ஊழாய்க் கழியும்.

இறைவன் உயிரை விட்டு ஒரு போதும் நீங்குவதில்லை, ஆயினும் கட்டுநிலையில் உயிர் இறைவனை அறிவதில்லை. உயிர் மலங்களை விட்டு நீங்குவதற்கும், வினைத்தொடக்கை அறுப்பதற்கும் இறைவனே துணையாகின்றான். ஆதலால் இறைவன் உயிரோடு கூடியே நிற்கின்றான் என்பது மேலே எழுப்பப்பட்ட வினாக்களுக்கு விடையாயிற்று.

 
மேலும் இருபா இருபஃது »
11 மதிநின்பால் இந்த மலத்தின் பால்நிற்கவிதிஎன்கொல் வெண்ணெய் வாழ்மெய்ய! பதிநின்பால்வந்தால் இதில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar