Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவப்பிரகாசம் பகுதி -2 சிவப்பிரகாசம் பகுதி -4
முதல் பக்கம் » சிவப்பிரகாசம்
சிவப்பிரகாசம் பகுதி -3
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2013
12:06

அன்னியம்ஆனவை உணர்த்தி அனன்டயமாய் நிறைந்த
அறிவு அறியாமையினாலும் அருள்நிலவும் காலம்
தன்னில் அவனே யாவுமாய் நின்றதொன்மை
தாம்உணர்த லாலும்உயிர் தான்என ஒன்று இலதாய்
மன்னியிடும் மலம்மாயை கன்மங்கள் மாறி
வந்திடும்இங்கு இதுவழுவாது ஆதலினால் மனத்தால்
உன்னரிய திருவருளை ஒழியமலம் உளதுஎன்று
உணர்வு அரிதால் அதன்உண்மை தெரிவுஅரிதாம் உனக்கே

உயிர்கள் தம்மிலும் வேறாகிய, நிலை பேறற்ற உலகத்தை அறியுமாறு செய்தும், அதே நேரத்தில் உயிர்க்கு உயிராயும் உயிருள் நிறைந்தும் விளங்குகின்ற திருவருளை அறியவிடாமலும் செய்வது ஆணவ மலம், படிமுறையே திருவருளால் பக்குவப் படுத்தப்பட்டு நிறைந்த ஞானம் விளங்கும் நிலையை எய்தியவுடன் தோற்றமில் காலம் தொட்டே உயிர்க்கு உயிராகி, உயிரின் வேறின்றி விளங்குகின்ற இறைவனின் பேரருள் உயிர்களுக்கு விளங்கும். ஆதலால் திருவருள் தோன்றும் வரையும் உயிர் என ஒரு பொருள் இல்லை என்னுமாறு ஆணவ மலம் உயிரில் நிலை பெற்று இருக்கும். படைப்புக் காலத்தும் ஒடுங்கும் காலத்தும் மாயையின் காரியங்களும் கன்மத்தின் காரியங்களும் உயிரைப்பற்றியும் விட்டு நீங்கியும்வரும். ஆணவ மலமோ அவ்வாறு பற்றுவதும் நீங்குவதும் இல்லாது என்றும் உயிரோடு பொருந்தியிருக்கும். எனவே மனத்தால் நினைப்பதற்கும் அரிய திருவருளின் துணை கொண்டு அறிந்தால் அன்றி ஆணவமலம் என்ற ஒன்று உண்டு என்பதை அறிவது யாவர்க்கும் அரிதாம். திருவருளால் உணர்த்தப்பட்டால் அன்றி ஆணவமலத்துண்மைபே உனக்குத்தெரிதல் அரிதாம்.

அன்னியம்-வேற்றுப்பொருள். அனன்னியம்-தன்னில் வேறற நிற்கும் பொருள். கேவல நிலையிலும் சகல நிலையிலும் உயிர்க்கு உயிராக நிறைந்து நிற்பவன் இறைவன். திருவருள் வாய்க்கப்பெற்று உயிர் சுத்த நிலை எய்தும்போது, தொன்மைக்காலம் தொட்டே இறைவன் தன்னுள் வேறற நிறைந்து நிற்கும் பெருந்தகைமையை உணர்தல் கூடும்.

கேவல நிலையில் தான் என ஒன்று இல்லாததாகி ஆணவ மலமே வடிவாக உயிரின் அறிவை அது மறைத்து நிற்கும். ஒரு பொருளும் காட்டாது இருள் உருவம் காட்டும், இரு பொருளும் காட்டாது இது என்ற திருவருட்பயனும் (பாடல் 23)இதனை விளக்கும்.

கேவல நிலையில் உயிரை ஆணவம் மட்டிலுமே பற்றி இருக்கும். சகல நிலையில் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றும் பற்றியிருக்கும் தூய நிலையாகிய சுத்த நிலையில் இவை யாவும் அகன்றவிடத்தே உயிர் திருவருளால், தான் மலத்தால் பற்றப்பட்டிருந்ததையும் இறைவனின் பெருங்கருணையால் விடுதலை பெற்றதையும் அறிகின்ற அறிவைப்பெறும் என்பது இங்கு நிலை நிறுத்தப்பட்டது.

சகல நிலையில் மாயையின் காரியங்களும் கன்மத்தின் காரியங்களும் உயிரைப் பற்றி நின்றாலும் ஒடுக்கம் வரும் காலத்து அவை நீங்கி, மீண்டும் தோற்றுவிக்கும் காலத்து உயிரைப் பற்றும். பற்றியும் நீங்கியும் வருவது மாயா காரியங்கள்; கன்மத்தின் காரியங்கள். ஆணவ மலமோ அவ்வாறின்றி உயிரை வீடு பேறு அடையும் காலம் வரை பற்றியிருப்பது ஆதலால் இங்க இது வழுவாது என்று கூறினார்,

இத்தகைய ஆணவ மலத்தை உண்டு என்று உணர்வதற்கும். அதன் உண்மை தெரிவதற்கும் திருவருளின் துணை இன்றியமையாதது. உணர்வதென்பது அனுபூதி என்பதும் தெரிதல் என்பது ஆராய்ச்சி என்பதும் குறித்தன.

ஆணவ மலத்தின் உண்மை உணர்ந்து கொள்வதற்கே அரிது. அதனையும் திருவருளே அறிவிக்க வேண்டும் என்ற ஆசிரியர், ஆணவ மலத்தை நீக்குவதற்கும் திருவருளே துணையாக வேண்டும் என்பதனையும் இப்பாடலில் வலியுறுத்தினார்.

புகலும்மலம் ஒழித்தற்குக் கலாதிமுதல் மாயை
பொருந்தியிடும் அரன்அருளால் போதம் தீபம்
சகலம்எலாம் உடன்ஆய வாறு போலத்
தரும்அருளை மலம்உயிர்கள் சாராமல் மறைக்கும்
இகல்இவரும் இவைஉணரில் இருள்வெளியாம் தன்மை
எய்தும்இவை தன்செய்தி இலங்கும் விந்து
பகர்வுஅரிய உணர்வாகி ஒளியாய் உள்ளப்
பான்மையினால் ஒரு நாதம் படரும் தானே

இறைவன் திருவருளால் ஆணவமலத்தை அகற்றும் பொருட்டு கலை முதலாகிய மாயையின் காரியங்கள் உயிரின் அறிவைப் பொருந்தும். விளக்கு என்பது தகழி, திரி, நெய், சுடர் ஆகிய யாவற்றையும் கூட்டி ஒரு பொருளாகக் காணப்படுவது போல், இவ்வாறு கலை முதலியன உயிரின் அறிவைப் பொருந்துகின்றன. அந்த நிலையிலும் கூட உயிரின் அறிவை ஆணவமலம் மறைத்து நிற்கும். ஆணவமலம் இருள் போன்றது. மாயாமலம் ஒளி போன்றது. எனவே இரண்டும் ஒன்றற்கொன்று மாறுபட்டன. இந்நிலையில் விந்து தத்துவத்தினின்றும் சொல்லுதற்கரிய உணர்வாகவும் ஒளியாகவும் உயிர்களின் வினைக்கு ஈடாக ஒரு நாதம் மேல் நோக்கி எழுந்து படரும்.

இதற்கு முந்திய பாடல்களில் ஆணவமலம் என்ற ஒன்று உண்டு என்பதையும் அது உயிரைத் தோற்றமில் காலந் தொட்டே பற்றி நிற்கும். என்பதையும், அதுவும் உயிரின் இயல்பன்று உயிரின் குற்றமே என்பதையும், அதனை அறிந்து கொள்ளுவதும் அதனை நீக்குவதும் திருவருளின் துணையின்றி உயிர்களால் இயலாது என்றும் கூறிய ஆசிரியர் இந்தப் பாடலில் இறைவன் எவ்வாறு உயிர்களின் ஆணவத்தைப் படிமுறையே நீக்குகின்றான் என்பதனைச் சொல்லத் தொடங்குகிறார்.

ஆணவமலத்தை ஒழிப்பதற்காகக் கலை முதலிய மாயா காரியங்களை இறைவன் அருளால் உயிரின் அறிவு பொருந்தும், ஆணவம் இருள் போன்றது. மாயை ஒளி போன்றது. இந்த ஒளி பகற்காலத்தில் விளங்கும் கதிரவனது பேரொளி போல அல்லாமல் இருளைச் சற்றே நீக்கும் கைவிளக்கைப் போன்றது. விளக்கு என்பது கடரை மட்டும் குறியாமல் தகழி, திரி, நெய், சுடர் ஆகிய யாவும் சேர்ந்து அமைந்தது போல மாயையும் தூய மாயை, கலப்பு மாயை, தூவா மாயை ஆகியவற்றின் காரியங்களையும் ஒரு சேரக் குறித்தது. இவைகளை முறையே சுத்தமாயை, மிச்சிர மாயை, அசுத்த மாயை என்று குறிப்பர்.

சுடர் போன்ற மாயை உயிரின் அறிவை விளக்குகின்ற போது ஆணவம் என்ற இருள் தன் தொழிலாகிய அறிவை மறைத்தலையும், உயிர் சிவனருளைச் சாராமல் தடுத்தலையும் செய்துவரும் ஒன்றற் கொன்று முரண்பட்டு வரும் இவ்விரண்டையும் உணர்ந்தால் இவற்றின் இயல்புகள் விளங்கும்.

சிவஞான மாபாடியத்தில் நான்காம் நூற்பாவில் இரண்டாம் அதிகரணத்தில் மாயா தனு விளக்காய் என்ற பாடலுக்கு உரை வகுத்தருளிய மாதவச் சிவஞான முனிவர் காட்டாகி நின்று விடயங்களையறியுமாறு ஆன்ம ஞானத்தை விளக்குதல் மாயையின் செய்தி, அவ்வறிவைத் தடுத்து நிற்றல் மலத்தின் செய்தி இவையிரண்டும் இங்ஙனம் ஒளியும் இருளும் போல இகலி நிற்றலின், அத்தன்மைத்தாகிய மாயை இத்தன்மைத்தாகிய மலமாமாறு யாண்டையது என்று எழுதியுள்ளதும் இங்கு நினையத்தக்கது. சிவஞான சித்தியாரில் இக்கருத்து

போத காரியம் மறைத்து நின்றது புகல்மலம் காண்
ஓதலாம் குணமும் ஆக உயிரினுள் விரவலாலே
காதலால் அவித்தை சிந்தத் தரும்கலை ஆதி மாயை
ஆதலால் இரண்டும் சோதி இருள்என வேறாம் அன்றே(சித்தியார் 174)

என்னும் பாடலில் விளக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இறையருளால் உயிரின் அறிவில் கலை முதலியன பொருத்தப்பட்ட பிறகு அறிவும் விளக்கமுமாகிய விந்து சத்தி உயிர்களினிடத்திலே வாக்குகளைத் தோற்றுவிப்பதற்காக ஒரு நாதம் தோன்றும். இந்த வாக்கு சூக்குமை வாக்கு எனப்படும். இது நுண் ஒலி ஆகும்.

வந்துஅடைந்து பின்னமாய் வன்னங்கள் தோற்றம்
வரும்அடைவு படஒடுங்கி மயில்அண்ட சலம்நேர்
சிந்தைதனில் உணர்வாகும் பைசந்தி உயிரில்
சேர்ந்துவரும் அவைமருவும் உருஎவையும் தெரித்து
முந்தியிடும் செவியில்உறா உள்உணர்வாய் ஓசை
முழங்கியிடும் மத்திமைதான் வைகரியில் உதானன்
பந்தம்உறும் உயிர் அணைந்து வந்தமொழி செவியின்
பால்அணைய நினைந்தபொருள் பகரும்தானே

முந்தைய பாட்டில் கூறப்பட்ட அறிவே வடிவமாகிய நாதம் என்ற சூக்குமை வாக்கு உந்தியிலே வந்து பொருந்தி எழுத்துக்களின் வெவ்வேறான ஒலிகள் தெரியாதபடி நிற்கும். மயிலின் முட்டையை வெளிச்சத்தில் பார்க்கும்போது அதனுள் பல்வேறு நிறங்களாய்த் தோற்றம் காட்டி அம்முட்டையை உடைத்தால் அந்த நிறங்கள் மறைந்து போவதைப் போல உயிரின் சிந்தையில் பைசந்தி வாக்கு நினைவு மாத்திரையாய் நிற்கும். அடுத்ததாகிய மத்திமை வாக்கு எழுத்துக்களின் ஒலி வடிவங்களை பிராண வாயுவோடும் கூட்டி நிரல்படுத்தி செவிக்கும் கேளாது உயிரினிடத்தில் உள்ளறிவாய் ஓசையுமாய் முழங்கும். நான்காவதாகிய வைகரி வாக்கு உதானன் என்னும் காற்றுப் பிராணவாயுவோடும் கூடிச் செவிக்குக் கேட்கத் தக்கதாக நினைவில் எழுந்த ஒலிக்கூட்டத்தைச் சொல்லாக மாற்றி ஒலிக்கச் செய்யும்.

முந்திய பாடலில் நால்வகை வாக்குகளில் சூக்குமை வாக்குப் பற்றிக் கூறிய ஆசிரியர் இப்பாடலில் மற்றை மூன்று வாக்குகளும் ஆகிய பைசந்தி, மத்திமை, வைகரி ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறார்.

சூக்குமை வாக்கு நாதவடிவாக எழுந்து உந்தியை வந்து கூடி ஒலிக்கும் போது பைசந்தி வாக்காகிச் சொல்லுக்குரிய எழுத்துக்களை மயில் முட்டையின் உள்ளே தோன்றும் தெளிந்தும் தெளியாத நிற வேறுபாடுகளைப் போலாகி அதன் பின்னர்ப் பிராணவாயுவினோடும் கூடி மத்திமை வாக்காகி உள்ளாறு ஓசையாகி உரக்கச் சொல்லும்போது பிராணவாயுவும் உதான வாயும் கூடி நா உள்நாக்கு பல் உதடு இவற்றில் படிந்து தெறித்துச் செவிப்புலனுக்குக் கேட்பதாகும் வைகரி என்னும் வாக்காகும்.

சூக்குமை நுண்ஒலி என்றும் பைசந்தி நினைவு ஒலி என்றும் மத்திமை மிடற்றொலி என்றும் வைகரி செவி ஒலி என்றும் கூறப்படும். இவற்றுள் நுண்ஒலியாகிய சூக்குமை வாக்கு அழிவற்றது என்றும், மற்றவை அழியும் இயல்புடையவை என்றும் கொள்ளப்படும்.

இத்தகைமை இறைஅருளால் உயிர்அறியும் அறிவுக்கு
ஈடாக வாடாதே ஈர்இரண்டில் உரைத்த
வித்தைமுதல் ஐவரால் விளங்கும் ஞானம்
மேவியிடும் என உரைப்பர் அசுத்தமாயை

வைத்தகலை தான்மூல மலம் சிறிதே நீக்கி
மருவும்வகை தெரிவிக்கும் வாயில்களின் பயனைப்
புத்திதரவித்தை இடைநின்று அறிவை உயிர்க்குப்
பொருந்தியிடும் வகைபுணரும் புனிதசத்திபுணர்ந்தே

இந்த முறையிலே நிலை பெற்று வருகிற வாக்குக்கள் நான்கோடும் கூடி இறைவனின் பேரருளாலே உயிரின் அறிவுக்குத் தகுந்ததாக முன்னே கூறப்பட்ட சிவ தத்துவங்கள் ஐந்தினாலும் உயர்கின்ற அறிவு பொருந்தும் என்று பெரியோர்கள் கூறுவர். உயிரின் அறிவை மறைத்து நிற்கும் ஆணவ மலத்தை அசுத்தமாயை எனப்படும் தூவா மாயையில் தோன்றிய கலை, சத்தி தத்துவத்தின் துணையோடு சற்றே விளக்கம். அப்போது புலன்களின் வாயிலாகப் பொருள்களை உயிர் பொருந்தும், தூவாமாயையில் தோன்றியுள்ள லித்தை சுத்தவித்தையின் துணையைக் கொண்டு உயிருக்கும் பொருள்களுக்கும் இடை நின்று உயிர்களுக்கு அறிதல் விளைவிக்கும். இதனை இவ்வாறு செலுத்துவது சிவசத்தி ஆகும்.

மேலே இருபத்தோராவது பாடலில் எடுத்துரைக்கப்பட்ட சுத்த தத்துவங்கள் சிவசத்தியால் காரியப்படுத்தப்படும். அதன் பின்னர் அவற்றால் கலை முதலியன காரியப்படுத்தப்படும். கலை முதலியவற்றால் உயிர்களுக்கு அறிவு விளையும்.

அதன் முறைமையாவது, கிரியாசத்தி, சத்தி தத்துவத்தைத் தொழிற்படுத்த அது காலத்தையும் நியதியையும் கலையையும் எழுப்பும். சாம்பல் பூத்த தழலில் மேலே படிந்திருக்கின்ற பொடி நீக்குவது போல, கலை உயிரின் அறிவை மறைத்துள்ள ஆணவமலத்தைச் சற்றே நீக்கும். அப்போது அந்தக் கலையே வடிவாக ஆன்மாவுக்கு அறிவு சிறிது விளங்கும். ஞானசத்தி சுத்தவித்தை என்னும் தத்துவத்தைத் தொழிற்படுத்த, அது வித்தையைச் செயல்படுத்தி அதனால் உயிருக்கு அறிவு விளையும்.

நுண் ஒலி (சூக்குமை) சிவதத்துவத்திலும் பைசந்தி என்ற நினைவு ஒலி சத்தி தத்துவத்திலும் மிடற்று ஒலி (மத்திமை) சதாசிவதத்துவத்திலும், தன்னால் மட்டும் கேட்கப்படும் செவி ஒலி ஈசுவரதத்துவத்திலும், தனக்கும் பிறருக்கும் கேட்கும் செவி ஒலி(வைகரி) சுத்தவித்தையிலும் இடம் கொண்டிருக்கும். இறைவன், இச்சா ஞானக் கிரியா சத்திகள் சுத்தவித்தை முதலிய தத்துவத் தலைவர்களைச் செலுத்த அவர்கள் தத்தம் தத்துவங்களை வழி நடத்துவர்.

சத்தி தத்துவம் கலையை எழுப்பும். கலை ஆணவ மலத்தைச் சிறிதே நீக்கித் தொழிலாற்றலை விளக்கி வினைக்கு ஈடாக வரும் நுகர்வுகளைப் பொருந்துமாறு அவ்வுயிர்களைச் செலுத்தும். இவ்வாறு கூட்டும் முறைமை சிவபெருமானின் சத்தியாலே நிகழும்.

பேசரிய அராகம்தன் கன்மத்துக்கு ஈடாய்ப்
பெற்றதனில் ஆசைதனையப் பெருகுவிக்கும் நியதி
தேசம்மிகும் அரசர்தரும் ஆணைசெய்தி
செய்தவரைத் துய்ப்பிக்கும் செய்கை போல
நேசம்உறும் தம்கன்மம் நிச்சயித்து நிறுத்தும்
நிகழ்காலம் கழிகாலம் எதிர்காலம் என்றே
ஓசைதரவரும் காலம் எல்லைபலம் புதுமை
உறுவிக்கும் இறைசத்தி உடனாய் நின்றே

சொல்லுவதற்கு அரிதாகிய அராகம் என்னும் தத்துவம் உயிர்கள் வினைக்கு ஈடாகப் பெற்றதிலே நின்றும் பெறாததற்கு ஆசையை உண்டாக்கும். நியதி தத்துவம் என்பது நாட்டை ஆளும் அரசர் தமது ஆணையின் வலிமையினால் நல்லது செய்தார்க்கு நன்மையும். தீயது செய்தார்க்கு ஒறுத்தலும் இயற்றுவது போல உயிர்களின் முன்னை வினை செய்தவர்க்கன்றி மற்றவர்க்குச் சேராவாறு வரையறை செய்யும். நிகழ் காலம், இறந்த காலம், வருங்காலம் என்று மூன்று வகையாகச் சொல்லப்படும் கால தத்துவம் முறையே பலம் எல்லை புதுமை ஆகியவற்றை உண்டாக்கும். இவற்றையெல்லாம் உயிர்க்குக் கூட்டுவது இறைவனுடைய திருவருளாகிய சத்தியே.

அராகம் என்பது விருப்பம். உயிர்களின் விருப்பம் என்பது எல்லையற்று வளர்ந்து கொண்டே போகும். ஆதலால் பேசரிய அராகம் எனப்பட்டது. அராகம் என்ற ஒரு தனித் தத்துவம் தேவையில்லை. நுகர் பொருள்களே ஒருவனுக்கு விருப்பத்தை எழுப்பும் என்று சிலர் வாதிடுதல் கூடும். பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணர்ந்தோர் வேண்டாமையில் தலைப்பட்டு மேன்மேல் எழும் விருப்பத்தைக் கட்டுப்படுத்துவதைக் காண்கிறோம். ஆதலின் அராகம் என்ற தத்துவமே விருப்பத்தை விளைவிப்பது என்பதும், அதனாலே அவா அழுக்காறு முதலியன தோன்றி உயிர்களுக்கு வினைப் பயன்களை விளைவிக்கும் என்பதும் தெளிவாகிறது. அராகம் தம் கன்மத்துக்கு ஈடாய்ப் பெற்றதனில் ஆசைதனைப் பெருகுவிக்கும் என்று ஆசிரியர் கூறுவதை நுணுகிப் பொருள் காண்க.

திருவாசகத்தில் பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்கும் அன்பின் வெற்றடியேனை விடுதி கண்டாய் (நீத்தல் விண்ணப்பம் 23) என்ற மாணிக்கவாசகரின் திருவாக்கால் பெற்றவற்றிலேயே பேராசை மிகும் என்பது விளக்கப்படுகிறது. நீதி நெறி விளக்கத்தில் குமரகுருபர முனிவர் பெற்ற சிறுகப் பெறாத பெரிது உள்ளும் சிற்றுயிர்க்கு ஆக்கம் அரிது அம்மா எனக் கூறுவதிலிருந்து பெற்ற பொருள் இருக்கப் பெறாத பொருளினுக்கும் உயிர் பேராசை கொள்ளும் என்பதை அறியலாம்.

நியதி தத்துவம் என்பது உலகத்து அரசர்கள் தம் ஆணையின் வழி நடந்து கொண்டவர்களுக்குப் பரிசைத் தந்தும், தம் ஆணையின்படி நடவாதவர்களுக்குத் தண்டனை அளித்தும் வருவதைப் போன்று, செய்தவர் செய்த வினையின் பயனை நுகருமாறு கூட்டுவதாகும். அதாவது வரைமுறை செய்து மிகுதியும் குறைவுமில்லாமல் ஒருபடித்தாக வினைப் பயன்களை உயிர்களுக்கு ஊட்டும் தத்துவம் நியதி தத்துவம் ஆகும்.

அதனை அடுத்துக் கூறப்படும் கால தத்துவம் என்பது இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்று வகைப்படும். ஓசை தர வரும் காலம் என்பது இப்பாடலில் சொல்லப்படும் காலம் என்பது என்ற பொருள் குறித்து நின்றது. அதன் முன்னர்க் கூறப்பட்ட முக்காலங்கள் வரிசையாகத் தரப்படாமல், நிகழ்காலம், கழிகாலம், எதிர்காலம் என்றே என்று செய்யுள் ஆகலின் முறை பிறழ வைக்கப்பட்டது. இறந்த காலம் என்பது இன்பத் துன்ப நுகர்ச்சிகளுக்கு எல்லையை வகுத்துத் தருவது. நிகழ்காலம் என்பது வினையினால் விளையும் பயனை உரிய பருவம் வந்தவுடன் உயிர்களிடம் சேர்த்துப் பலனைத் தருவது. எதிர்காலம் என்பது உயிர்களால் அறிய முடியாதபடி மறைக்கப்பட்டு நிற்பதனாலே உயிர்களுக்குப் புதுமையான நுகர்ச்சிகளை விளைவிப்பது.

மெய்கண்டாரின் நேரடி மாணவராகிய திருவதிகை மனவாசகம் கடந்தார் தம்முடைய நூலாகிய உண்மை விளக்கத்தில் கால தத்துவத்தைப்பற்றிக் கூறும்பொழுது எல்லை பலம் புதுமை எப்போதும் நிச்சயித்தல் (உண்மை விளக்கம் 19) என்று கூறி இருப்பது இங்கு நினையத்தக்கது.

இவை யாவற்றையும் சிவபெருமானுடைய திருவருளால் சத்தியே கூடி நின்று செயற்படுத்தும் என்பதையும் ஆசிரியர் விளக்கினார்.

மெய்கண்டாரின் நேரடி மாணவராகிய திருவதிகை மனவாசகம் கடந்தார் தம்முடைய நூலாகிய உண்மை விளக்கத்தில் கால தத்துவத்தைப்பற்றிக் கூறும்பொழுது எல்லை பலம் புதுமை எப்போதும் நிச்சயித்தல்(உண்மை விளக்கம் 19) என்று கூறி இருப்பது இங்கு நினையத்தக்கது.

இவை யாவற்றையும் சிவபெருமானுடைய திருவருளால் சத்தியே கூடி நின்று செயற்படுத்தும் என்பதையும் ஆசிரியர் விளக்கினார்.

ஐவகையால் உறுபயன்கள் நுகரவரும் காலம்
அதுபுருட தத்துவம் என்று அறைந்திடுவர் அறிந்தோர்
மெய்வகைய கலாசுத்திதனில் இதற்கும் சுத்தி
மேவியிடும் வகைதானும் விரும்பிய நூல்விளம்பும்
செய்வகையின் தொடர்ச்சி இங்குத் தோன்றுவிக்கும் குணத்தின
சேர்வுபுரி பிரகிருதி திரிகுணமாம் அவைதாம்
இவ்வகையில் சாத்துவித ராசத தாமதமாய்
இயம்புவார்கள் ஒன்று இரண்டு குணம் ஏற்க உடைத்தே

முன் இரண்டு பாடல்களிலும் கூறப்பட்ட கலை வித்தை அராகம் நியதி காலம் என்னும் ஐந்து தத்துவங்களாலும் வருகின்ற பயன்களை அனுபவிக்கும் பக்குவத்தை அடைந்த உயிரைப் புருட தத்துவம் என்ற பெயரிட்டுக் கூறுவர் உயர்ந்தோர். சிவாகமங்கள், கலா சுத்தி செய்யும் பொழுது இப் புருட தத்துவமும் சுத்தியடையும் என்று கூறும். பிரகிருதி எனப்பட்ட மூலப்பகுதி மூன்று குணங்களாக விரியும். முக்குணத்தைத் தோற்றுவிக்கும் மூலப் பகுதிக்கு அவ்வியத்தம் என்ற பெயரும் உண்டு. குணதத்துவம் முன் செய்த வினையின் வகைக்கு ஏற்ப இன்பத் துன்பப் பயன்களாகிய தொடர்ச்சியைத் தோற்றுவிக்கும். முக்குணங்களும் சாத்துவிகம் இராசதம் தாமதம் என்று பெயர் பெறும். அவை ஒவ்வொன்றும் இரண்டிரண்டு குணங்களை ஏற்று ஒன்பது வகையாக விளங்கும்.

கலை வித்தை அராகம் நியதி காலம் என்ற ஐந்தும் பஞ்ச கஞ்சுகம் எனப்படும். கஞ்சுகம் என்றால் சட்டை அல்லது போர்வை என்று பொருள் தரும். பஞ்ச கஞ்சுகத்துடன் கூடி நுகர்ச்சிக்குத் தகுதி பெற்று நின்றிருந்த ஆன்மா புருட தத்துவம் என்ற பெயரைப் பெறும். இதனை மாதவச் சிவஞான முனிவர் சிவஞான மாபாடியத்தில் இனி இங்ஙனம் கலை முதலிய பஞ்ச கஞ்சுகத்துடன் கூடிப் பொதுமையாற் போத்திருத்துவ மெய்தி நின்ற ஆன்மாப் பிரகிருதியைப் போக நுகர்ச்சியின் உன் முகத்திற்கேதுவாகிய அவிச்சை முதலிய பஞ்சக்கிலேச மென்னும் பும்ஸ்துவ மலமுடையனாய்ப் புருட தத்துவமென நிற்பன் எனக் கூறுகிறார்.

பும்ஸ்துவ மலம் என்பது, பஞ்சகிலேசம் எனக் கூறப்படும் ஐம் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைந்தது. அவை அவிச்சை ஆங்காரம் அவா ஆசை கோபம் என்பன.

கலா சுத்தி என்பது தீக்கையின் போது ஆசிரியர் நிவர்த்தி முதலான ஐந்து கலைகளையும் மாணவனின் உடலிலே ஐந்து வகைப்படுத்திச் செய்ய வேண்டும் ஆகையால் அதனோடு தீக்கையின் போது இவற்றிற்கும் சுத்தி மேவியிடும் என்று சிவாகமங்கள் கூறும் என்று உரைத்தார்.

மூலப்பகுதி என்பது அரும்பில் மணம் போல முக்குணங்களும் விளங்காது அடங்கி நிற்கும் வெளிப்படாத குண வடிவம் ஆகும், வெளிப்பட்டுத் தோன்றுவன முக்குணங்களும் அவற்றின் விரிவுகளும் ஆகும்.

அலகில்குணம் பிரகாசம் லகுதை வியாபிருதி
அடர்ச்சி மிகும் கௌரவம் அநியமம் இவை அடைவே
நிலவியிடும் மும்மூன்றும் உயிர் ஒன்றில் கலந்தே
நிற்கும்இவை நிறைபுலனின் பயன் எவையும் கவரும்
குலவிவரு போகங்கள் இடமாய் மாறாக்
குறைவில் ஒளியாம் அலகில் புலனிடத்தின் ஒருமை
பலவகையும் உடையதாய்ப் பரன் அருளால் புந்தி
பஞ்சாசற் பாகவமும் பண்ணுவிக்கும் தானே.

அளவற்ற குணங்களுள் சாத்துவிகத்தில் பிரகாசமும் இலகுதையும் விளங்கும். இராசதத்துள் வியாபிருதியும் அடர்ச்சியும் விளங்கம், தாமதத்துள் கௌரவமும் அநியமமும் விளங்கும். இவ்வாறு கூறப்பட்ட ஆறும், சாத்துவிகம் இராசதம் தாமதம் ஆகிய மூன்றும் கூடி ஒன்பது குணங்களும் உயிர்தோறும் கலந்தே நிற்கும். முக்குணங்களில் தாமதத்தால் புலன் இன்பத்தை மிக விரும்புகின்ற இயல்பும் மந்தமும் உயிருக்கு உண்டாகும். இராசதத்தால் நுகர்வுகளைத் துய்க்கின்ற வேகம் உயிர்களுக்கு வரும். சாத்துவிகத்தால் ஒருபோதும் மாறாததும் குறைவற்றதும் ஆகிய அறிவு உயிர்களிடத்து விளங்கி நிற்கும், புத்தி தத்துவம் புலன்களோடு பல வாறாகத் தொடர்பு கொண்டு விளங்குவதாகி ஐம்பது வகையான பாவகங்களையும் உண்டாக்கும்.

குணதத்துவம் என்பதும் ஆலமரத்தின் வித்துப்போல முக்குணங்களும் விரவித் தன்னளவில் நிற்கும் நிலையிலிருந்து அவ்வித்தின் முளை தோன்றினாற் போல மூன்று குணங்களும் ஏற்றத் தாழ்வின்றி அலைவற்று நிற்கும் நிலை. முக்குணங்களும் வேறுபட்ட அளவில் மிகுந்தும் குறைந்தும் கூடி வருவது புத்தி தத்துவம் ஒன்பது குணத்துக்கும் ஐம்பது ஐம்பதாக நானூற்று ஐம்பது பாவங்களாகக் காரியப்படும் என்றும் இப்பாடலில் கூறினார். பஞ்சாசத் என்ற வடசொல் ஐம்பது என்ற பொருள் தரும்.

குண தத்துவம் மூலப்பகுதியின் விருத்தியே அல்லாமல் மற்றவற்றைப் போலப் பரிணாமம் அன்று ஆதலின் இரண்டும் ஒன்றாக வைத்தும் எண்ணப்படும்.

சாத்துவிக குணம் மிகுந்தும் இராசதம் தாமதம் குறைந்தும் நிற்கும் போது பிரகாசம், இலகுதை என்று இரண்டு குணங்கள் தோன்றும். பிரகாசம் என்பது ஒளியும் இலகுதை என்பது மனமொழி மெய்களின் மென்மையான செயற்பாடும் ஆகும்.

இராசத குணம் மிகுந்தும் சாத்துவிகமும் தாமதமும் குறைந்தும் நிற்கும்போது வியாபிருதியும் அடர்ச்சியும் தோன்றும். வியாபிருதி என்பது சலனம் அல்லது வேகமான அசைவு என்று பொருள் தரும். அடர்ச்சி என்பது மனம் மொழி மெய்களின் கொடிய செயல்பாடுகளாம்.

தாமத குணம் மிகுந்தும் சாத்துவிகமும் இராசதமும் குறைந்து நிற்கும்போது கவுரவமும் அநியமமும் தோன்றும். கவுரவம் என்பது செருக்கு. அநியமம் என்பது வரைமுறை பிறழ்ந்து காலம் தாழ்த்திச் செயல்படுதல்.

இங்குக் கூறப்பட்ட மும்மூன்றும் ஒவ்வொரு உயிரிலும் கலந்தே நிற்கும் என்று விளக்கிய ஆசிரியர் இக்குணங்களால் வரும் பயன்களை எதிர்நிரல் நிறையாக எடுத்துக் கூறுகிறார். தாமத குணத்தின் மிகுதியால் செருக்கும் அறிவின்மையும் சோம்பலும் முதலியன தோன்றும். இராசத குணத்தின் மிகுதியால் செயல்படும் தன்மையும் இன்பத்தில் ஆர்வமும், கொடுமையும் முதலியன தோன்றும். சாத்துவித குணத்தின் மிகுதியால் ஒளியும் அமைதியும் அடக்கமும் முதலியன தோன்றும். இவற்றின் விரிவுகள் பல்வேறு வகைப்பட்டு பவுட்கர ஆகம விருத்தியுரை, சிவஞான மாபாடியம் முதலிய நூல்களுள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

இவற்றின் விளைவாகப் புத்தி தத்துவம் பல்வேறு வகைப்பட்ட பாவகங்களையும் செய்யும் என்று உரைத்தார். இப்பாவகங்கள் நானூற்று ஐம்பது என்றும் அறுநூற்றுப் பதினான்கு என்றும் பல்வேறு வகையால் ஆசிரியர்களால் எடுத்துக் கூறப்படுகின்றன. பாவகங்கள் எண்ணற்ற வகைப்படுவன என்பதனை மாணிக்கவாசகர்

அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டிங் கறிவின்றி
விளைவொன்றும் அறியாதே வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு
அளவிலா ஆனந்தம் அளித்தென்னை ஆண்டானைக்
களவிலா வானவருந் தொழுந்தில்லை கண்டேனே (திருவாசகம் கண்டபத்து 8)

என்று கூறுகிற திருவாக்கால் அறியலாம்

ஆனதனு அதனில்உறும் அநிலனையும் இயக்கி
ஆங்காரம் நீங்காத அகந்தைக்கு வித்தாய்
யான்அலது பிறர்ஒருவர் எனைஒப்பார் புவியில்
இல்லைஎனும் இயல்பினதாய் இந்திரியம் புலன்கள்
தான்நுகரும் அளவில் அதில் முந்திஉறும் இச்சை
தான்உருவாய்ச் சங்கற்ப சதாகதியும் தந்து
மானதம் ஆனதுநிற்கும் சிந்தைநினைவு ஐயம்
வந்துதரும் மனம்ஒழிய வகுப்பு ஒணாதே

ஆங்காரம் என்னும் தத்துவம் வினைக்கு ஈடான உடம்பிலே பொருந்திய வளிகளை இயங்கச் செய்து யான் என்னும் செருக்குக்கு வித்தாகி, எனக்கு ஒப்பானவர்கள் என்னைத் தவிர இவ்வுலகில் வேறு எவரும் இலர் என்ற அகந்தை உடையது ஆகிப் புலன் நுகர்ச்சிகளிலே முற்பட்டு நிற்கும். மனம் என்னும் தத்துவம் விழைவே உருவாகி சங்கற்பம் நிகழ்வதற்குக் கருவியாய் எந்நேரமும் அசைவு உடையதாய் விளங்கும். சித்தம் என்பது ஒப்பிட்டுக் காணும் நினைவோடு ஐயத்தினைத் தோற்றுவிக்கும். மனத்தின் வேறாகச் சித்தம் என்ற ஒன்று உண்டெனினும் அது மற்றைத் தத்துவங்கள் போலப் பரிணாமம் அல்லாததால், அதனை மனத்தினின்றும் வேறுபட்டது என்று கூற இயலாது.

உடலில் ஐந்து வாயுக்கள் இயங்குகின்றன என்பர். அவை பிராணவாயு, அபானவாயு, வியானவாயு, சமானவாயு, உதானவாயு எனப்படும். இந்த ஐவகை வளிகளும் காற்றே ஆயினும் தொழில் வேறு பாட்டால் ஐந்து வகைப்படும். ஆங்கார தத்துவம் இந்த வளிகளை இயக்கித் தானே இயங்கும். அதுவல்லாது என்னை ஒப்பார் இவ்வுலகில் என்னைத் தவிர வேறு யாரும் இலர் என்னும் நீங்காத அகந்தைக்கு ஆங்காரமே வித்தாகும். அநிலம்-காற்று.உலகப் பொருள்களை உயிர் நுகரும் பொழுது அப்புலன்களிலே முந்திப் பொருந்தும் இயல்பினை உடையது இத்தத்துவம்.

மனம் என்னும் தத்துவம் இச்சையே வடிவமாகி எதிலும் நிலை பெறாமல் ஒன்றுவிட்டு ஒன்று பற்றிச் சங்கற்ப விகற்ப உணர்வுகளுக்குக் கருவியாய் விளங்கும்.

சித்தம் என்பது ஐயத்தைத் தோற்றுவிப்பதாக, மனத்தின் வேறாக வகுத்துச் சொல்ல முடியாது என்று இப்பாடலின் கடைசி வரியில் சொல்லப்பட்டது. எனினும் அந்தக்கரணங்கள் மனம், புத்தி, ஆங்காரம் சித்தம் என நான்காகவே வகுத்து ஓதப்படும். அப்படியாயின் இப்பாடலின் இறுதி வரி முரண்பட்ட கருத்தைக் கூறுவதாகக் கொள்ளலாமோ எனின், அதன் விளக்கம் மாதவச் சிவஞான முனிவரால் சிவஞான மாபாடியத்துள் எடுத்துரைக்கப்பட்டு அமைதி கூறப்படுகிறது.

இதனாலே மனத்தின் விருத்தியாகிய சித்தம் ஒன்று உண்டு என்பது பெற்றாம். அஃது ஏனைத் தத்துவங்கள் போலப் பரிணாமம் அன்மையின், மனத்தின் வேறாக வைக்கற்பாற்று அன்று என்னும் கருத்தால் சிந்தை நினைவு ஐயம் வந்து தரும் மனம் ஒழிய வகுப்பு ஓணாதே என்றார் புடை நூலாசிரியரும் சிந்தை நினைவு ஐயம் வந்து தரும் என்பதனைச் சிந்தை நினைவு வந்து ஐயந்தரும் என மாறுக சிந்தை நினைவுவந்து ஐயந்தரு தலாவது சித்தத்தின் தொழிற்பாடாகிய அங்ஙனத் தூக்கியெண்ணும் நினைவு நிகழ்ந்து வாதனையை வெளிப்படுத்து முகத்தான் ஐய நினைவைத் தோற்றுவித்தல் என்று சிவஞான மாபாடியத்துள் ஆங்கார தத்துவம் பற்றி விளக்குகின்ற பகுதியில் சித்தத்தைப் பற்றிய தெளிவான விளக்கத்தைக் கூறுகிறார் சிவஞான மாமுனிவர்.

சொன்னமுறை செவிதுவக்கு நோக்கு நாக்குத்
துண்டம்இவை ஐந்திற்கும் தொகுவிடயாம் ஆக
மன்னிய சத்தப்பரிச ரூபரச கந்தம்
மருவியிடும் இடை ஆடைவே வாக்குப் பாதம்
பின்னர்வரும் பாணிமிகு பாயுவினோடு ஒலிகொள் வசனம்
உன்னரிய கமனதான விசர்க்க ஆனந்தம்
உற்றதொழில் பெற்றிடுவது உண்மை ஆமே

முன் கூறப்பட்ட முறைமையிலே உட்கரணங்களைத் தவிரவும் புறக் கரணங்கள் ஆகிய செவி, தோல், கண், நாக்கு, மூக்கு ஆகிய இவை ஐந்தும் பற்றுவதற்கு உரியனவாக ஓசை ஊறு ஒளி சுவை நாற்றம் ஆகிய ஐந்தும் பொருந்துவனாகும். செவி முதலிய இவ்வைந்தும் அறிவுப் பொறிகள். அவற்றை அடுத்துத் தொழிற்பொறிகள் ஆகிய வாய், கால், கை, எருவாய், கருவாய் என்ற ஐந்தினுக்கும் முறையே பேசுதல் நடத்தல் கொடுத்தல் கழித்தல் இன்புறுதல் ஆகிய ஐந்து தொழில்களும் பொருந்துவனவாம்.

இப்பாடலில் புறக்கரணங்களான அறிவுப் பொறிகள் ஐந்தும் அவை பற்றுவதற்குப் பொருளாக உள்ள ஓசை முதலிய ஐந்தும் தொழிற் கருவிகளாகிய வாய் முதலிய ஐந்தும் அவற்றின் தொழிலாகிய பேசல் முதலிய ஐந்தும் ஆகிய இருபதும் உயிருக்குத் துணையாகத் தொழிற்படுவதனை எடுத்துரைக்கிறார். அறிவுக் கருவிகள் ஞானேந்திரியங்கள் என்றும் தொழில் கருவிகள் கன்மேந்திரியங்கள் என்றும் கூறப்படும்.

முந்தைய பாடல்களில் அந்தக்கரணங்கள் எனப்படும் நான்கினையும் கூறிய ஆசிரியர் மேலும் பத்துக் கருவிகளைப் பற்றிப் பேசுவது மிகை என்று கூறுவார்க்கு, மாதவச் சிவஞான முனிவர் சிவஞான மாபாடியத்தில் புறக்கரணம் நிகழ்காலப் பொருள் ஒன்றினையே அறியும், அந்தக் கரணம் முக்காலப் பொருளினையும் அறியும் என்று விடையிறுக்கிறார்.

அதன் பின்னரும் அறிவுப் பொறிகள் வேறாகவும் தொழிற் பொறிகள் வேறாகவும் கொள்ளுதல் வேண்டுமோ என்று வினா எழுப்புவோருக்கு மாதவச் சிவஞான முனிவர் இன்னும் அறிந்தன்றிச் செய்தல் கூடாமையின், வாக்கு முதலிய கன்மேந்திரியங்களின் தொழிற்குச் செவி முதலிய ஞானேந்திரியங்களின் அறிவு உபகாரம் ஆதல் பற்றியும் அவை ஒருதலையான வேண்டப்படும் என்பது அறிக என்றும் விடை தருகிறார்.

அறிவுப் பொறிகள் தொழிற் பொறிகளுக்கத் துணையாக நிற்கும். ஆனால் தொழிற் பொறிகள் அறிவுப் பொறிகளுக்குத் துணையாக மாட்டா என்பதனையும் நுணுகி அறியலாகும்.

செவி- காது. துவக்கு-தோல். நோக்கு-கண். நாக்கு- வாய். துண்டம்-மூக்கு. இவை ஐந்தும் முறையே சப்தம்-ஓசை, பரிசம்-ஊறு, ரூபம்-ஒளி. ரசம்-சுவை. கந்தம்-நாற்றம் என்ற ஐந்தினையும் அறிவதற்குத் துணை செய்யும்.

தொழிற் பொறிகள் ஆகிய வாய் கால் கை எருவாய் கருவாய் ஆகிய ஐந்தும் பேசல் நடத்தல் கொடுத்தல் கழித்தல் இன்புறுதல் ஆகிய செயல்களுக்குத் துணை நிற்கும். தொழிற் பொறிகள் ஐந்தும் முறையே வாக்கு பாதம் பாணி பாயு உபத்தம் எனக் கூறப்படும். இவற்றின் தொழில்கள் முறையே வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம் என்று கூறப்படும்.

முந்திய ஐம்பூதங்கள் வான்ஆதி யாக
முயங்கியநற் செவி நாசி கண்ணாம் மெய்ம் முறையால்
இந்தவயின் நின்றுவரும் ஐம்புலனும் உயிர்தாம்
எய்தும்வகை தம்உருவில் இலங்கியிடும் புறத்தும்
வந்துஅடைய இடம்கொடுக்கும் நிரந்தரமாய் வானும்
வாயுமிகச் சலித்து எவையும் திரட்டும் தீவெம்மை
தந்தவைசுட்டு ஒன்றுவிக்கும் நீர்குளிர்ந்து பதமே
தரும்உரத்துத் தரிக்கும்மிகு தரணி தானே.

ஐம்பூதங்கள் ஐந்து பொறிகளின் இடத்தில் பொருந்தி ஐம்புலன்களையும் அறிந்து வரும். ஒவ்வொரு பூதத்திற்கும் உருவம் குறியீடு எழுத்து முதலியன தனித்தனியே ஆகமங்களிலே கூறப்பட்டுள்ளன. ஐம்பூதங்களில் வான் எல்லாப் பொருள்களையும் தன்னிடத்திலே நிற்பதற்கு இடம் கொடுக்கும். காற்று பரந்து சலித்துத் திரட்டும். தீ வெப்பத்தைக் கொண்டு சுட்டு ஒன்றுவிக்கும். நீர் குளிர்ந்து தன்னோடு கூடிய பொருள்களைப் பதம் தந்து நெகிழ்விக்கும். நிலம் கடினமாகி எல்லாவற்றையும் தாங்கும்.

கண்ணுக்குப் புலப்படும் காது மனித உடலின் உறுப்பு. கேட்கும் ஆற்றல் தொழிற்படுவதற்கு உரிய இடம் அது. அதனுள் நின்று அறிவதற்குத் துணை செய்யும் கருவி செவிப்பொறி எனப்படும். செவிப்பொறி ஓசையை அறியும். அவ்வாறு ஓசையை அறிவதற்குப் பற்றுக்கோடாக விளங்குவது வான் என்னும் பூதம். ஒவ்வொரு பொறிக்கும் புலனாகும். பொருள்களை மேற்கூறியவாறே கொள்ளுதல் வேண்டும். இனி முறையே தோல் காற்றினைப் பற்றி நின்று ஊற்றுணர்ச்சியை அறியும். கண் தீயைப் பற்றுக் கோடாகக் கொண்டு உருவத்தைக் காணும். வாய் நீரைப் பற்றி நின்று நாவைப்பொருந்திச் சுவையை அறியும். மூக்கு நிலத்தைப் பற்றிக் கொண்டு நின்று மணத்தை அறியும்.

இவ்விளக்கங்கள் யாவும் ஆசிரியர் மனவாசகம் கடந்தார் அருளிச் செய்த உண்மை விளக்கம் என்ற நூலில் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன.

பொறிகளை இந்திரியம் என்பர். அவற்றை முறையே சுரோத்திரம் (சோத்திரம்(), துவக்கு(தொக்கு), சட்சு, சிங்ஙவை ஆக்கிராணம் என்றும் கூறுவர். இவற்றிற்குச் செவி, தோல், கண், நாக்கு, மூக்கு என்பன பொருள். இவற்றால் அறியப்படும் விடயங்கள் சப்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்று கூறப்படும்.

தம் உருவில் இலங்கியிடும் என்ற பகுதிக்கு ஐம்பூதங்களுக்கும் உருவம் குறியீடு அடையாள எழுத்து ஆகியவை தனித்தனியே உண்டு என்பதைக் குறிப்பால் உணர்த்தியதாகக் கொள்ள வேண்டும்.

இந்நிரையில் ஐந்துசுத்தம் ஏழ்சுத்தா சுத்தம்
எண் மூன்றும் அசுத்தம் எனும் இவை முப்பத்து ஆறாம்
மன்னியதத்து வங்கள்இடை மயங்கிநெடும் துயர்தாம்
மருவும் உருநிலை அழிய வரும்பொழுது வரியார்
பன்னகம் அண்டசம் கனவு படர்வகையே முன்னம்
பகரவரும் கலாதிநிலை பரவியசூக்குமம் ஆம்
தன்உருவில் அணைந்துபயன் அருந்தி அரன் அருளால்
தரையின் இடை வரும்என்று சாற்றும் நூலே

இம் முறையிலே சிவ தத்துவங்கள் ஐந்தும் சுத்த தத்துவங்கள் எனப்படும். வித்தியா தத்துவங்கள் ஏழும் சுத்தாசுத்த தத்துவங்கள் எனப்படும். ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கும் அசுத்த தத்துவங்கள் எனப்படும். இவை மூன்றும் கூடி ஆக மொத்தம் தத்துவங்கள் முப்பத்தாறு. உயிர் இத்தத்துவங்களின் நடுவிலே மயங்கி இன்பத் துன்பங்களிலே பொருந்தி உழன்றுவரும். நுகர்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வினைப் பயன்கள் கழியும் காலத்து உயிர் பாம்பு தோலை உரித்துப் புறம்போவது போலவும்; முட்டையில் பொறித்த குஞ்சுகள் முட்டையின் தோட்டை விட்டு நீங்குவது போலவும், நனவு நிலையிலே இருந்து கனவு நிலையை அடைவது போலவும் தொடர்பு முற்றிலும் அறுந்து பருவுடலை விட்டு மற்றையை உடல்களைப் பொருந்தி துறக்க நிரயங்களிலே இன்பத் துன்பங்களை நுகர்ந்து இறைவனருளாலே மீண்டும் இவ்வுலகில் பிறக்கும் என்று அருள் நூல்கள் கூறும்.

பாடலின் முதல் அடியில் இந்நிரையில் என்பதற்குப்பதிலாக இந் நிரையில் என்பதற்குப் பதிலாக இந்நிலையில் என்றும் பாடம் உண்டு. சிவ தத்துவங்கள் ஐந்தும் தூய்மையானவை என்பது அவை தூமாயையின் தோற்றம் என்பதனால். அடுத்து வரும் வித்தியா தத்துவங்கள் ஏழும் சுத்தாசுத்தம் எனப்பட்டன. ஏனெனில் இவை தூவாமாயையில் தோன்றி சுத்த தத்துவங்களால் தொழிற்படுத்தப்படுவதனால் என்பர். ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கும் மூலப் பகுதியில் தோன்றுவதனால் அவை அசுத்தம் எனப்பட்டன.

இம்மூன்றும் பிரேரக காண்டம். போக காண்டம், போசயத்திரு காண்டம் என்று மூன்று தொகுதிகளாகக் கூறப்படும். சுத்தத் தத்துவங்கள் ஏவுதலாலும் செலுத்துதலாலும் பிரேரக காண்டம் எனப்பட்டது. வித்தியா தத்துவங்கள் நுகர்ச்சிக்கு உரியன ஆதலால் அவை போக காண்டம் என்ற தொகுதியாயிற்று. ஆன்ம தத்துவங்கள் உயிர்களுக்கு நுகர்ச்சியைக் கொடுத்து உடன் நிற்பதால் அவை போசயத்திரு காண்டம் எனப்படும்.

கலை முதலிய தத்துவங்கள் எட்டும் கூடிய பகுதி பரவுடல் எனப்படும் மிக நுண்ணிய உடல் ஆம். பூதங்கள் ஐந்து தன்மாத்திரைகள். ஐந்து அறிவுப் பொறிகள் ஐந்து தொழிற் பொறிகள் ஐந்து அந்தக் கரணம் மூன்று குணம் ஒன்று மூலப்பகுதி ஒன்று கலை முதலியன ஐந்து ஆகிய இவை மொத்தம் முப்பது ஆகின்றன. இந்த எட்டுத் தொகுதியும் சேர்ந்த கொத்திற்குப் புரியட்டகம் என்று பெயர் கூறுவர்.

இந்த உலகில் வாழும் உயிர், வினையின் பயன்களை நுகர்ந்து தத்துவங்களில் பட்டு மயங்கித் துயர் உழன்று பருவுடலை விட்டு நீங்குகிற நேரம் வரும் போது அது எவ்வாறு நீங்கும் என்பதற்கு மூன்று உவமைகளை ஆசிரியர் பயன்படுத்துகிறார். பாம்பு சட்டையை உரித்து விட்டுப் போவது போலவும் முட்டையை உடைத்து விட்டுப் பறவை தனித்துச் செல்வது போலவும் நனவு நிலை நீங்கிக் கனவு நிலை எய்தியது போலவும் என்பன அம் மூன்று உவமைகள். பாம்பு உவமை உயிர்கள் உடல் மாறிப் பிறக்கும் என்பதற்கும், முட்டை உவமை உயிர்கள் இடம் மாறிப் பிறக்கும் அதாவது, துறக்கம் நிரயம் இவற்றில் சென்று மீண்டும் இவ்வுலகில் பிறக்கும் என்பதற்கும், கனவு உவமை அறிவு வேறுபடுவதற்கும் கொள்ளப்படும்.

தோற்றியிடும் அண்டசங்கள் சுவேதசங்கள் பாரில்
துதைந்துவரும் உற்பீசம் சராயுசங்கள் நான்கில்
ஊற்றமிகு தாபரங்கள் பத்தொன்பது என்றும்
ஊர்வ பதினைந்து அமரர் பதினொன்றோடு உலவா
மாற்றருநீர் உறைவனநற் பறவைகள் நாற்காலி
மன்னியிடும் பப்பத்து மானுடர் ஒன்பதின்மர்
ஏற்றிஒரு தொகை அதனில் இயம்புவர்கள் யோனி
எண்பத்து நான்கு நூறாயிரம் என்று எடுத்தே.

உயிர்கள் உடம்பொடு பொருந்தி இவ்வுலகில் தோன்றும் போது அண்டசங்கள் சுவேதசங்கள் உற்பீசங்கள் சராயுசங்கள் என நான்கு வகைத் தோற்றங்கள் உடையன. இவ்வாறு தோன்றுவன ஏழுவகைப்பிறவிகளை உடையன. அவை தாவரங்கள், ஊர்வன, அமரர்கள், நீர் வாழ்வன, பறவைகள், நான்கு கால்களுடைய விலங்குகள், மானிடர்கள் என்று ஏழு வகைப்படும். இவை ஒவ்வொன்றும் கூடி எண்பத்து நான்கு நூறாயிரம் வகைப்பட்ட பிறவிகள் என்று கூறுவர்.

அண்டசம் என்பன முட்டையிற் பிறப்பன. சுவேதசம் என்பன வேர்வையில் பிறப்பன. உற்பீசம் என்பன வித்தில் விளைவன. சராயுசம் என்பன கருப்பையில் தோன்றுவன. பாடலில் கூறப்பட்ட எண்ணோடு நூறாயிரம் என்று கூட்டி உரைத்துக் கொள்க.

ஈரிரண்டு தோற்றத்து எழு பிறப்புள் யோனி யெண்பான்
ஆரவந்த நான்கு நூறாயிரத்துள் (கந்தர் கலிவெண்பா)
என்ற குமரகுருபரர் திருவாக்கும்

உரைசேரும் எண்பத்து நான்கும் நூறாயிரமாம் யோனி பேதம்
என்ற திருஞானசம்பந்தர் திருவாக்கும் இங்கு நினையத்தக்கன.

இனைய பிறவிகளில் இறந்து பிறந்து அருளால்
இருவினைகள் புரிந்து அருந்தும் இதுசகலம் அகலா
முனம்மருவும் இருபயனும் ஒரு காலத்து அருந்த
முந்துநுகர் உந்துபயன் அந்தம்உற வந்த
வினையும் எதிர்வினையும் முடிவினை உதவு பயனால்
நேராகநேர் ஆதல்மேவும் கால்முன்
சினம்மருவு திரோதாயி கருணை ஆகி
திருந்திய சத்திநிபாதம் திகழும் அன்றே.

இவ்வாறு இறைவன் திருவருளால் பல்வேறு பிறவிகளிலே பிறந்தும் இறந்தும் இருவினைகளைப் புரிந்தும் அவ்வினைகளின் பயன்களை அனுபவித்தும் வருவது சகலநிலை என்று கூறப்படும். அச் சகலநிலை அகலுவதற்கு முன் வந்து பொருந்திய இன்பத்துன்பங்களாகிய அவ்விரு வினைப் பயன்கள் இரண்டும் ஒரு காலத்தில் உண்ண நுகரும் பயன் முடிவுறும் பொருட்டு வந்த வினையும் எதிர்வினையும் முடிவடையும் பயனால் வினையிரண்டும் துலை ஒத்து நேராக நேராகும் காலம் வந்தடையும், அதன் முன்னர் வரை சினத்தைப் பொருந்தியிருந்த திரோதாயி கருணையாக மாறித் திருந்திய சத்திநி பாதம் திகழ்ந்து விளங்கும்.

முப்பத்து ஏழாவது பாடல் தொடங்கி இந்தப் பாடலில் இது சகலம் என்பது வரையில் உயிர்கள் சகல நிலையில் நிற்குமாற்றை ஆசிரியர் விளக்கினார். அதன் பின்னர் இப்பாடலில் சகலநிலை நீங்கும் காலத்து உயிர்களுக்குத் திருவருள் காரணமாக நேரிடும் விளைவுகளைக் குறித்தருளுகிறார்.

நால்வகைத் தோற்றத்து ஏழுவகைப் பிறப்புள் எண்பத்து நான்கு நூறாயிரம் விதமான பிறவிகளில் நல்வினை தீவினைகளுக்கு ஈடாகப் பிறந்தும் இறந்தும் வருகின்ற உயிர்கள் தத்தம் வினைக்கு ஏற்ற இன்பத் துன்பங்களை நுகர்ந்து வரும். இரு வினைப் பயன்கள் இரண்டனையும் காலந்தோறும் நுகர்ந்து கழித்து உரிய காலம் வாய்க்கும் போதுஅவை முடியும் தருணம் இறைவன் திருவருளால் வரும். இதனை இருவினை யொப்பு என்பர். மலபரிபாகம் எனப்பட்ட, ஆணவ மலத்தின் வலிகுன்றிய நிலை எய்தும் பொழுது சத்திநிபாதம் என்னும் திருவருள் பதிதல் நிகழும். இருவினை யொப்பு என்பது இன்பத் துன்பங்கள் இரண்டிலும் ஒப்ப உவர்ப்பு உண்டாதல் அதாவது இரண்டிலும் பற்றற்று இருத்தல் என்பர். சிவஞான சித்தியாரில் இது.

இருவினைச் செயல்கள் ஒப்பில் ஈசன்தன் சத்தி தோயக்
குருஅருள் பெற்று ஞான யோகத்தைக் குறுகி முன்னைத்
திரிமலம் அறுத்துப் பண்டைச் சிற்றறிவு ஒழிந்து ஞானம்
பெருகி நாயகன்தன் பாதம் பெறுவது சுத்தம் ஆமே

என்று விளக்கப்படுகிறது.

திரோதான சத்தி என்னும் மறைப்பு ஆற்றல் உயிர்களின் ஆணவ மலத்தின் ஆற்றல் தேயுமாறு ஆன்மாக்களுடன் நின்று உதவிவரும். அவ்வாறு உதவுங்கால் உயிர்களுக்கு இன்பத் துன்ப மயக்கங்கள் உண்டாகும். ஆணவ மலத்தின் வலி குன்றித்தேய்ந்து மல பரிபாகம் நிகழும் போது, திரோதன சத்தியே திருவருள் சத்தியாக மாறி உயிர்கள் பேரின்பத்தை அடைவதற்குத் துணை புரிந்தருளும். இதற்கு மரபு வழியாக ஓர் உவமை சொல்லப்படும். புளிப்புச் சுவையுடைய மாங்காய் பழமாகக் கனியும் காலம் வரும் போது மாம்பழமாகி இனிப்புச் சுவை தருவது போன்றது இந்த மாற்றம் என்று கூறுவர்.

இறைவனது ஆற்றலாகிய திரோதாயி. இயல்பாகச் சினம் உடையதன்று. உயிர்களைப் பக்குவப்படுத்தும் பொருட்டே சினத்தை மருவி உயிர்களைத் துன்பத்தில் செலுத்தி, பக்குவம் வந்துற்ற போது அதுவே கருணையாகி அருள்புரிகிறது என்பதை விளக்க, முற்சினமருவு திரோதாயி கருணை ஆகி என்று கூறினார். போற்றிப் பஃறொடையில் இக்கருத்து,

உய்யும் நெறிசிறிதே உண்டாக்கிப் பையவே
மட்டாய் மலராய் வருநாளில் முன்னை நாள்
மொட்டாய் உருவாம் முறை போலக் கிட்டியது ஓர்
நல்ல பிறப்பில் பிறப்பித்து நாடும்வினை
எல்லை இரண்டும் இடைஒப்பில் பல்பிறவி
அத்தம் அதில் அன்றோ அளவு என்று பார்த்திருந்து
சத்தி பதிக்கும் தரம்போற்றி
என்று ஆசிரியர் உமாபதி சிவத்தால் எடுத்துக் கூறப்படுகிறது.

இப்பாடலை மாதவச் சிவஞான முனிவர் சிவஞான மாபாடியம் எட்டாம் நூற்பாவில் முதல் அதிகரணத்தில் இருவினையொப்பு யாது என்பதனை விளக்குமிடத்து எடுத்துக் கூறப் பொருளை விரித்து உரைக்கிறார். மற்றைய ஆசிரியர்கள் பாடலின் இரண்டாம் அடியை இரு பயனும் ஒரு காலத்து அருந்த முந்து நுகர் உந்து பயன் அந்தமுற வந்த வினையும் என்று பிரித்துப் பொருள் கூறுகிறார்கள். இதற்கு வினைப் பயன்களை ஒரு காலத்தில் அனுபவிப்பதற்கு நுகரும் காலத்தின் கண் உந்துகின்ற பயன் முடிவுற வந்தவினையும் என்று பொருள் கூறுகின்றார்கள். அதாவது நுகர் என்பதனை முதல் நிலைத் தொழிற் பெயர் ஆக்கி ஏழாம் வேற்றுமை உருபினை வருவித்து நுகர்வின் கண் என்று பொருள் கொள்ளுவார்கள். மாதவச் சிவஞான முனிவர், தொல்காப்பியம் சொல் அதிகாரத்தில் இடைச் சொற்கள் பற்றிக் கூறுகின்ற உம் உந்து ஆகும் இடமாருண்டே என்ற நூற்பாவை எடுத்துக் காட்டி நுகருந்து என்பதை நுகரும் என்று பொருள் கொண்டு அதனைப் பெயர் எச்சம் ஆக்குவார். அதனால் பயனும் வந்த வினையும் எதிர் வினையும் என்று எண்ணும்மைகளாகக் கொள்ள வேண்டும் என்பது அவர் கருத்து என்பது புலப்படுகின்றது.

இலக்கணம் சிதம்பரநாத முனிவர் மாதவச் சிவஞான முனிவரின் பன்னிரண்டு மாணவர்களுள் ஒருவர் என்பர். அவர் சிவப்பிரகாசத்திற்கு வகுத்துள்ள உரையில்தான் நுகர் என்ற சொல் முதல் நிலைத் தொழிற் பெயராக கொள்ளப்பட்டு ஏழாம் வேற்றுமை உருபு வருவித்துப் பொருள் உரைக்கப்பட்டது.

இவற்றின் விரிவும் பொருத்தமும் சிவஞான மாபாடியப் பகுதியில் நுணுகிப் படித்து உணரலாம்.

நாடிய சத்திநிபாதம் நாலு பாதம்
நண்ணும்வகை எண்ணரிய ஞானபாதம்
கூடுமவர் தமக்குஉணர்வாய் நின்றஞானக்
கூத்தன் ஒரு மூர்த்திகொடு குறுகி மோக
நீடிய கேவலசகலம் நிகழா வாறு
நிறுத்திமலம் அறுக்கும் அது நிலையார் சுத்தம்
கேடில்புகழ் தரும் சரியை கிரியா யோகக்
கேண்மையரேல் இவைஉணர்த்தக் கிளக்கும் நூலே

முன் பாடலிலே குறிக்கப்பெற்ற சத்திநி பாதம் என்பது நான்கு வகைப்படும். அவை மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என்பன. மிகத் தீவிரமான நான்காம் சத்திநி பாதம் நண்ணியவர்களுக்கு உயிருக்க உயிராய் நின்ற ஞானக்கூத்தப் பெருமான் வடிவம் கொண்டு எழுந்தருளுவான். மறைப்பை உண்டாக்கும் கேவல அவத்தையையும் மாறுபாடுகளை உண்டாக்கும் சகல அவத்தையையும் நிகழாவண்ணம் தன் அருளிலே நிறுத்தி அவர்களின் மலத்தைப் போக்குவான். இது நிலை பெற்ற சுத்த அவத்தை எனப்படும். இந்த நிலை யாருக்கு வாய்க்கும் எனக் கேட்பின் புகழ்மிக்க சரியை. கிரியா யோகங்களை முறையே கடைப்பிடித்தவர்களுக்கு எண்ணுதற்கரிய உணர்த்தப்படும் என்று ஆகமங்கள் கூறும்

சத்திநிபாதம் என்பதை நான்கு வகைப்படுத்திக் கூறுவது மரபு. அவை முறையே வாழைத் தண்டில் தீப்பற்றுவது போன்றும், பச்சை விறகு, உலர்ந்த விறகு. அடுப்புக்கரி இவற்றில் தீப்பற்றுவது போன்றும் என்று கூறுவர். நான்காம் சத்திநி பாதம் எய்தியவர்களுக்கு உணர்வும் உரையும் கடந்து நின்ற இறைவன் அருள் திருமேனி கொண்டு முன்னே தோன்றி மாறாத பேரின்பத்தை வழங்கி அருள் பாலிப்பான்.

அரிவையர்இன் புறும்முத்தி கந்தம் ஐந்தும்
அறும்முத்தி திரிகுணமும் அடங்கும் முத்தி
விரிவுவினை கெடும்முத்தி மலம்போம் முத்தி
விக்கிரக நித்தமுத்தி விவேக முத்தி
பரவும்உயிர் கெடுமுத்தி சித்திமுத்தி
பாடாண முத்திஇவை பழிசேர் முத்தி
திரிமலமும் அகலஉயிர் அருள்சேர் முத்தி
திகழ்முத்தி இதுமுத்தித் திறத்தது ஆமே.

பல்வேறுபட்ட சமயங்களிலே முத்திநிலை என்று கொள்ளப்படுவன பின்வருமாறு அமைகின்றன. மகளிரிடத்து நுகர்கிற இன்பமே முத்தி என்பது உலகாயதர் கொள்கை. உருவம், வேதனை, குறிப்பு, பாவனை, விஞ்ஞானம் என்ற ஐந்து கந்தங்களும் கெடுவதே முத்தி என்பது நான்குவகைப் பவுத்தர்களில் ஒரு சாரர் ஆன சவுத்திராந்திகர் கொள்கை. முக்குணங்களும் கெடுவதே முத்தி என்பது சமணரில் நிகண்ட வாதியும். நிரீசுர சாங்கியமும் கொண்ட கொள்கை. வினைகள் கெடுவதே முத்தி என்பது பிரபாகர சமயத்தின் கொள்கை. ஆணவ மலம் முற்றிலும் அழிந்து போவதே முத்தி என்பது அகச் சமயத்துள் பேத வாதிகள் கூறும் கொள்கை. இவ்வுடல் முத்தி நிலையிலும் அழியாது நிலை பெற்றிருக்கும் என்பது சிவசமவாதிகள் கூறும் கொள்கை. இந்த வுடலில் கட்டுப்பட்டு நிற்கிற ஆன்மா விவேக ஞானம் பெறுவது முத்தி என்பது மாயா வாதிகளின் கொள்கை. ஆன்மா என்ற ஒன்றே அழிந்து போவது முத்தியாகும் என்பது பாற்கரிய வாதிகளின் கொள்கை. உயிர் பசு கரணம் கெட்டுச் சிவகரணம் பெறுவதே முத்தி என்பது அகச் சமயங்களில் ஒன்றான சிவசங்கிராந்தவாதிகளின் கொள்கை. உயிர் ஒன்றையும் அறியாமல் கல்லைப்போல் கிடக்கும் நிலையே முக்தி என்பது பாடாண வாதிகள் கூறும் கொள்கை. இவ்வாறு பத்து வகையாகச் சொல்லப்பட்ட முத்திகளும் குற்றமுடையன. முத்தி நிலையைப்பற்றிய சரியான கொள்கை எதுவெனில் ஆணவம், கன்மம் மாயை ஆகிய மும்மலங்களிலிருந்தும் விடுதலை பெற்று உயிர் அருளோடும் கூடிப் பேரின்பத்தை எய்துவதே முத்தியைப் பற்றிய சிறந்த கொள்கையாகும்.

இது வரையில் காரண அவத்தை என்று சொல்லப்படும் கேவல அவத்தை. சகல அவத்தை, சுத்த அவத்தை ஆகிய மூன்று நிலைகளைப் பற்றியும் விரிவாகக் கூறி வந்த ஆசிரியர் முத்தி நிலை பற்றிப் பொது அதிகாரத்தின் இறுதியிலே எடுத்துரைக்கிறார். பிற சமயங்களிலே கூறப்படுகிற பத்து வகை முத்தி நிலைகள் மட்டும் எடுத்துக் கூறி அவையாவும் பழிசேர் முத்தி என்று எடுத்துக் காட்டுகிறார்.

இவற்றுக்கு மாறாக சைவசித்தாந்தத்தில் கொள்ளப்பட்ட முத்தி நிலை பற்றிய கொள்கையே சரியான கொள்கை என்றும் அதனாலே முத்தி நிலையின் உண்மையான இயல்பு உயிர் மும்மலங்களையும் விட்டு நீங்கித் திருவருளோடும் கூடி மாறாத பேரின்பம் அநுபவிப்பதாகிய சித்தாந்த முத்தியே சிறந்த முத்தி என்றும் நிலை நாட்டுகிறார்.

இவ்வுலகத்தில் வாழ்கின்ற உயிர்கள் துன்பத்திலும் இன்பத்திலும் மாறி மாறி உழன்று வருவதால் இவ்உலக வாழ்வு குறை உடையது என்பது எல்லாச் சமயங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. எனவே கட்டுக்களிலிருந்தும் விடுபெற்று இதனினும் உயர்ந்த நிலையினை உயிர்கள் எய்தல் வேண்டும் என்பதும் எல்லாச் சமயங்களுக்கும் ஏற்புடைய கருத்து. முத்தி என்ற சொல் விடுதலை. கட்டு நீங்கிய நிலை, வீடு பேறு என்ற பொருள்களைத் தரும். ஆனால் இந்த முத்தி நிலை ஆகிய வீடு பேறு எத்தகைய தன்மை உடையது என்று இப்பாடலில் ஆசிரியர் பத்து வேறுபட்ட சமயங்களில் முத்தி நிலை பற்றிய கொள்கைகளைக் கூறி அவற்றை மறுக்கிறார்.

இவற்றின் விரிவுகள் சிவஞான சித்தியார் பரபக்கத்திலும், சங்கற்ப நிராகரணத்திலும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

சைவ சித்தாந்தத்தில் முத்தி நிலை, வீடு பேறு என்னும் சொல்லால் குறிக்கப்பெறும். வீடு என்பது தளைகளிலிருந்து விடுபடுவதாகிய பாசவீடும் பேறு என்பது சிவப்பேறு என்பதும் இதனால் உணர்த்தப்படுகிறது. மலங்களிலிருந்து விடுபட்டு சிவபெருமானின் திருவடிக் கீழ் நண்ணரிய சிவானந்த ஞான வடிவேயாகி நிற்றல் சைவ சித்தாந்தம் கூறும் வீடு பேறு.

உண்மை அதிகாரம்

சிவப்பிரகாச நூலை அருளிச் செய்த ஆசிரியர் உமாபதிசிவம் தாமே அதனை இரண்டு அதிகாரணங்களாகப் பகுத்துள்ளார் என்பது நூலிலிருந்தே புலனாகிறது. நூல் வழியும் நூற்பெயரும் கூறுகின்ற பதினோராம் பாடலில் பொது உண்மை எனக் கருதி யானும் அருத்தி மிக உரைப்பன வளர் விருத்தம் நூறும் ஆசில் சிவப்பிரகாசம் ஆகும் அன்றே. என்று கூறுகிறார். அவ்வாறே ஐம்பத்தொன்றாவது பாடலில் இங்கு இவை பொது இயல்பு என்பார்கள் என்று கூறுகிறார். ஆதலினாலே ஐம்பது பாடல்கள் முடியப் பொது அதிகாரம் என்பதும் அதன் மேல் உள்ள பாடல்கள் உண்மை அதிகாரம் என்பதும் தெளிவுறுத்தினார்.

நூலின் இறுதியில் தொண்ணூற்று ஒன்பதாவது பாடலில் மலைவு அறும் உணர்வால் பெத்த முத்திகள் மதித்தாம் அன்றே என்று கூறுவதன் மூலம் இந்நூல் உயிர்கள் கட்டு நிலையில் நின்ற முறைமையும் வீட்டு நிலையில் நிற்கும் முறைமையும் எடுத்துரைத்தது என்பதனைத் தெளிவு படுத்துகிறார்.

சிவஞான போதம் ஆகிய முதல் நூல் இவ்வாறே பொது அதிகாரம் என்றும் உண்மை அதிகாரம் என்றும் இரண்டாகப் பகுத்து வழங்கப்படுகிறது. மாபாடியம் வகுத்த மாதவச் சிவஞான முனிவரும் இவ்வாறே வகுத்துக் கொண்டு உரை வரைந்துள்ளார். சிவஞான போதத்துள் முதல் ஆறு நூற்பாக்கள் பொது அதிகாரம் என்றும் பின் ஆறு நூற்பாக்கள் உண்மை அதிகாரம் என்றும் கொள்ளப்பட்டுள்ளன. மெய்கண்டதேவ நாயனாரே இவ்வாறு அதிகாரங்களை வகுத்தாரா என்பதை நூலிலிருந்து அறிந்து கொள்ள அகச்சான்று ஏதும் இல்லை.

சிவஞான போதத்தின் வழி நூலாகவும் அதற்குச் செய்யுள் நடையில் அமைந்த முதல் விளக்க நூலாகவும் திகழ்கின்ற சிவஞான சித்தியார் பரபக்கம் சுபக்கம் என்ற இருபெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது ஆசிரியர் அருள் நந்தி சிவம் தாமே பிரிவுகளை வகுத்தார் என்பது அந்நூலிலிருந்தே தெரியக் கிடக்கின்றது. ஆயினும் பரபக்கத்தின் தொடக்கத்தில் பெத்தமோடு முத்தி எல்லாம்........ துகள்தீர இந்நூலில் சொல்லகிற்பாம். என்று கூறிய ஆசிரியர் சுபக்கத்தின்ல தொடக்கத்தில் பொது உண்மை என்ற அதிகார வரம்பைக் கூறவில்லை என்பதும் நினையத் தக்கது.

சிவஞான போதத்திற்குப் பின்னர் எழுந்த நூல்களாகிய சிவஞான சித்தியார். சிவப்பிரகாசம் ஆகிய இரண்டையும் முதல் நூலின் பன்னிரண்டு நூற்பாக்களுக்கு ஏற்ப வகுத்துப் பொருள் கூறுவது மரபு. இவ்வாறு அதிகார அடைவு செய்வது சிவஞான சித்தியார் சுபக்கத்துக்கு மிகவும் பொருந்தி வருகிறது. சிவப்பிரகாசத்திற்குப் பன்னிரு சூத்திர அடைவு அவ்வளவு பொருந்துவது இல்லை என்பதும் கருதத் தக்கது. ஆயினும் பழைய உரை ஆசிரியர்கள் பன்னிரண்டு சூத்திரங்களுக்கு அமையவே சிவப்பிரகாசத்திற்கும் உரை எழுதும் மரபினைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.

ஆசிரியர் உமாபதிசிவம் தன் நூலின் பகுப்பு முறையை உண்மை அதிகாரத்தின் முதற் பாடலில் தாமே வகைப்படுத்திச் சொல்லுகிறார் என்பதும், அது உரை ஆசிரியர்களின் கருத்துக்குச் சற்றே மாறுபட்டது என்பதும் மனத்தில் கொள்ளத்தக்கன.

இங்குஇவை பொதுஇயல்பு என்பர்கள் இதன்மேல் ஆன்மாத்
தங்கிய அஞ்சு அவத்தை தன்உண்மை உணர்த்தும் தன்மை
பொங்கு ஒளி ஞான வாய்மை அதன் பயன் புனிதன் நாமம்
அங்குஅதில் அணைந்தோர் தன்மை அறைகுவன் அருளினாலே

இந்த நூலுள் இதற்கு முந்திய ஐம்பது பாடல்களிலும் கூறப்பட்ட கருத்துகள் இறை உயிர் தளை ஆகிய முப்பொருள்களின் பொது இயல்பினை உணர்த்தும் என்பர். இதற்கு மேற்பட்ட பாடல்களிலே இறைவன் திருவருளின் துணை கொண்டு ஆன்ம இலக்கணமும் ஐந்து அவத்தைகளும் ஆன்ம இயல்பை உணர்த்தும் தன்மையும் ஒளி மிகுந்த ஞான வாய்மையும் அதன் பயனும் திருவைந்தெழுத்தும் அணைந்தோர் தன்மையும் எடுத்துரைக்கப்படும்.

இப்பாடலில் வருகின்ற அதிகாரத்துக்கு ஏழு உட் தலைப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று ஆசிரியர் கூறியுள்ளார். ஆயினும் காவை அம்பலவாணத் தம்பிரான் இந்நூலுக்கு எழுதியுள்ள கொளுச் செய்யுளில் உண்மை நிலையின் ஒன்பது தன்மையும் என்று கூறியுள்ளமை கருதத் தக்கது. ஞான வாய்மையை அடுத்து அதன் பயன் என்று பாடலில் கூறப்பட்ட பயன் மூன்றாக விரியும். அவை ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி ஆன்ம லாபம் என்பன. ஏழு என்று கூறப்பட்ட இயல்புகள் ஒன்பதாக விரியும்.

செறிந்திடும் உடலுள் மன்னிச்சேர்புலன் வாயில்பற்றி
அறிந்துஅதில் அழுந்தும்ஒன்றும் அறிந்திடா அறியும்தன்மை
பிறிந்து அடை அஞ்சு அவத்தை பெருகிய மலத்தால் பேணி
உறும்தனி அதீதம் உண்மை உயிர்க்குஎன உணர்த்தும் அன்றே.

உயிர் என்பது தன் வினைக்கு ஈடாகப் பெற்ற வுடலிலே வாழ்நாள் முழுவதும் நின்று புலன்களைச் சேர்ந்து பொறிகளைப் பற்றி உலகத்துப் பொருள்களை அறிந்தும் அனுபவித்தும் வரும். உயிர் தானே நேராக அறியாமல் இவ்வாறு தத்துவங்களின் வாயிலாக அறிந்து வந்தாலும் அவற்றின் துணையால் அன்றோ அறிகிறோம் என்பதனை உயிர் அறியாது. அத்தத்துவங்களும் அறிவுடையன அல்ல. கருவிகள் கூடிய வழி அறிகின்ற உயிர் அவற்றைப் பிரியும் போது அறியும் இயல்பு குறைந்து கொண்டே வரும். அதனால் நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்னும் ஐந்து நிலைகளையும் பொருந்தியும் நீங்கியும் வரும். இவ்வாறு ஐந்து அவத்தைப் படுவது ஆணவ மலத்தினால் உளதாகும். உயிரின் உண்மை நிலை என்பது கருவிகளோடு சாராது தனித்து இருக்கும் உயிர்ப்படங்கல் நிலை என்று சிவாகமங்கள் கூறுகின்றன.

நனவு முதலிய ஐந்து நிலைகளும் முறையே சாக்கிரம் சொப்பனம், கழுத்தி, துரியம், துரியாதீதம் என்று வழங்கும், இவை காரிய அவத்தைகள் எனப்படும். பதஞ்சலி யோக சூத்திரம் என்ற வடமொழி நூலில் அதன் ஆசிரியர் மூன்று நிலைகளையே கூறி துரியம், துரியாதீதம் என்ற இரண்டனையும் கூறினார் அல்லர். அந்நூலுக்கு உரை எழுதிய வாசஸ்பதி மிசிரர் தமது உரையில் துரியத்தைக் கூறினார். துரியாதீதத்தை கூறினாரல்லர். சிவாகமங்கள் துரியாதீதம் உட்பட்ட ஐந்து நிலைகளையும் கூறுகின்றன.

நனவு நிலையிலே முப்பத்து ஐந்து கருவிகளையும், கனவு நிலையிலே இருபத்து ஐந்து கருவிகளையும், உறக்க நிலையில் மூன்று கருவிகளையும், பேருறக்கத்தில் இரு கருவிகளையும் உயிர்ப்படங்கலில் ஒரு கருவியையும் உயிர் பொருந்தி நீங்கும். அதனால் ஐந்து நிலைகளும் நிகழும் என்று உரைப்பர். இந்தக் கருத்து சிவஞான சித்தியார் கபக்கத்தில்

சாக்கிரம் முப்பத்து ஐந்து நுதலினில் கனவு தன்னில்
ஆக்கிய இருபத்து ஐந்து களத்தினில் சழுனை மூன்று
நீக்கிய இதயம் தன்னில் துரியத்தில் இரண்டு நாபி
நோக்கிய துரியாதீதம் நுவலில் மூலத்தில் ஒன்றே (சிவஞான சித்தியார் 223)

என்று கூறப்பட்டுள்ளது. துரியாதீத நிலையில் கருவிகள் ஒன்றுமில்லை என்றாலும் மூலப்பகுதி என்னும் தத்துவம் உயிருக்கு உடலாகப் பொருந்தி இருப்பதனால் அதுவும் உயிரும் தனித்து இருக்கும் என்று பொருள் கொள்ளுவர்.

இந்நூலின் அறுபதாவது பாடலில் என்ன ஒன்று இலாத தீதம் என்று கூறப்பட்டுள்ளதும், சிவஞான சித்தியார் சுபக்கத்தில் கேவலம் சகலம் சுத்தம் என்று தொடங்கும் பாடலில் கேவலம் தன் உண்மை என்று கூறப்பட்டதும் இக்கருத்தினை வலியுறுத்துவன ஆகும்.

உருஉணர்வு இலாமையாலும் ஓர்ஒரு புலன்கள் ஆக
மருவி நின்று அறித லாலும் மனாதிகள் தம்மில் மன்னித்
தருபயன் நுகர்த லாலும் உயிர்சடம் ஆதலாலும்
அருவினை உடலுள் ஆவி அறிவினால் அறியும் அன்றே

ஆன்மா எனப்படுவது ஒன்று இல்லை என்று கூறுகின்ற புறச்சமயத்தவரின் கருத்துக்களை மறுத்துக் கூறுவது இப்பாடல், உருவுடைய உடம்பு உறக்கத்தின் போதும் உயிர் நீங்கி போதும் அறிவதில்லை. ஐம்புலன்களும் ஒன்று அறிந்ததை மற்றொன்று அறியாது. எனவே அவற்றால் வரும் பயன்கள் அனைத்தையும் அறிகின்ற ஆன்மா அவற்றிலும் வேறாக ஒன்று உண்டு. மனம், புத்தி, ஆங்காரம், சித்தம் ஆகிய நான்கும் ஒன்று அறிந்ததை மற்றொன்று அறியாது. ஆகையினாலும், தம்முள்ளும் ஒன்றை ஒன்று அறியாது ஆகையினாலும் இவற்றால் வரும் பயனை நுகர்வதற்கு இவற்றின் வேறாக ஆன்மா என்ற ஒன்று உண்டு. எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிற உயிர்க் காற்று (பிராண வாயு) அறிவற்ற சடப்பொருள். எனவே அதுவும் ஆன்மா அன்று. ஆன்மா என்பது அறிவுடைப் பொருளாகி இறைவன் திருவருளாலே அறிவிக்க அறிந்து வினைக்கு ஈடாக எடுத்த உடலுள் வாழும்.

உடலே அறிவென்றும், ஐம்பொறிகளே அறிவென்றும், அந்தக் கரணங்களே அறிவென்றும், உயிர்க் காற்றே அறிவென்றும் எனவே ஆன்மா என்று ஒன்று இல்லை என்றும் வாதிடுகிற புறச் சமயத்தாரை நோக்கி அவர்களின் கருத்தை மறுத்தற்கு எழுந்தது இப்பாடல், அவர்கள் கூறும் கருத்துக்கள் காரணம் காட்டி மறுக்கப்பட்டன.

உள்ளம் உயிர் என்ற சொற்கள் ஆன்மாவைக் குறிக்கப் பயன்படுத்தப்படும். எனினும் இப்பாடலில் மூன்றாவது வரியில் வருகின்ற உயிர் என்ற சொல் இந்த இடத்தில் ஆன்மாவைக் குறிக்காமல் பிராணவாயுவைக் குறித்தது. நான்காவது வரியில் வருகிற ஆவி என்ற சொல் ஆன்மாவைக் குறிக்கும். உயிர் சிற்றறிவுடையது. ஆதலால் இறைவன் திருவருளால் உணர்த்தினால் அல்லது உணர இயலாது என்பது தெளிவுறுத்தப்பட்டது.

அறிவுஎனில் வாயில்வேண்டா அன்றுஎனில் அவைதாம் என்னை
அறிவதை உதவும் என்னில் அசேதனம் அவைதாம் எல்லாம்
அறிபவன் அறியும் தன்மை அருளுவன் என்னில் ஆன்மா
அறிவுஇலது ஆகும் ஈசன் அசேதனத்து அளித்தி டானே.

ஆன்மா தானே எவற்றையும் அறியும் அறிவு என்று கொண்டால் அதற்குப் பொறிகளின் உதவி தேவையில்லை. அங்ஙனமாயின் ஆன்மா அறிவுடையதன்று என்று கொள்ளலாமோ எனில் அறிவற்ற ஆன்மாவுக்குக் கருவிகள் எதற்காக? கருவிகளாகிய இந்திரியங்கள் தாம் உயிருக்கு அறிவைத் தருகின்றன என்று கூறின் அக்கருவிகள் அறிவற்ற சடப்பொருள்கள் ஆதலால் அவற்றால் அறிவைத் தர முடியாது. எல்லாம் அறிந்தவன் ஆகிய இறைவன் இக் கருவிகளின் மூலமாக உயிருக்கு அறிவைக் கொடுப்பான் என்று கொண்டால், ஆன்மா என்ற சடப்பொருளுக்கு அறிவு அளிப்பதற்காகக் கருவிகள் என்ற சடப்பொருளின் மூலமாக இறைவன் செயல்படுகிறான் என்று ஆகும். அதைக் கருவிகளின் இடையீடு இல்லாமலே நேரே உயிருக்கு அளித்திட மாட்டானோ என்ற கேள்வி எழும்.

ஆன்மா என்ற பொருள் உண்டு என்று கொண்டு அது அறிவுடைப் பொருளா? அல்லது அறிவற்ற பொருளா? என்பதிலே தமக்குள் பிணங்கிய சமயவாதிகளை மறுத்து சித்தாந்தக் கருத்தை இப்பாடல் விளக்குகிறது.

ஆன்மா அறிவுடையது என்று கொண்டால் தானே அறியும் தன்மையுடைய ஆன்மாவுக்குக் கருவி கரணங்களின் துணை எதற்காக வேண்டப்படுகிறது? காணும் ஆற்றல் உடைய கண் ஆயின் அதற்கு மூக்குக் கண்ணாடியின் துணை எதற்காக? எனவே கண்ணில் குறை இருக்கிறது அந்தக் குறையை நிறைவு செய்யக் கண்ணாடி தேடைப்படுகிறது என்பது புலனாகிறது அன்றோ? திருவருட்பயனில் பொறி இன்றி ஒன்றும் புணராத புந்திக்கு, அறிவு என்ற பேர் நன்று அற (பாடல் 15) என்ற பாடலும் இக்கருத்தை வலியுறுத்துகிறது எனவே ஆன்மா முற்றறிவு உடையதன்று.

அடுத்துப் பொறிகளே ஆன்மாவுக்கு அறிவை உதவும் என்றால் என்ன? அறிவுள்ள பொருள் அறிய உதவும் என்றால் பொருந்தும்; பொறிகள் அறிவற்ற சடப்பொருள்கள் ஆதலால் அவற்றால் ஆன்மாவுக்கு அறிவைத் தர முடியாது என்பது தெளிவு.

எல்லாம் வல்லவனாகிய இறைவன் சடமாகிய கருவி கரங்களின் வழி ஆன்மாவுக்கு அறிவினை உதவுவான் என்றால் அவ்வாறு வழங்கும் இறைவன் அவ்வறிவினை உயிருக்கு நேரே வழங்காது இடையிலே பொறிகளுக்கு வழங்கி அவற்றின்மூலம் ஆன்மாவுக்கு வழங்குவானேன்? நேரடியாக உயிர்க்கு அறிவை வழங்கும் ஆற்றல் இறைவனுக்கு இல்லை எனின் அது அவனது வரம்பில்லா ஆற்றலுடைமைக்கு இழுக்கன்றோ?

எனவே அறிவுடைப் பொருளாகிய உயிர் மலத்தால் பற்றப்பட்டு அறிவு மறைக்கப்பட்டு நிற்கிறது என்றும், இறைவன் திருவருளால் கருவி கரணங்களைக் கூட்டி உயிரின் அறிவை விளங்கச் செய்கிறான் என்பதும்; உணர்த்த உணர்தல் உயிரின் இயல்பு என்பதும் இப் பாடலால் தெளிவுறுத்தப்பட்டது.

 
மேலும் சிவப்பிரகாசம் »
சைவசித்தாந்த மெய்ப்பொருளியலை விளக்குகின்ற அடிப்படை நூல்கள் மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும். ... மேலும்
 
பொது அதிகாரம்- பதி இலக்கணம் பலகலை ஆகமம்வேகம் யாவையினும் கருத்துப்பதிபசுபாசம் தெரித்தல் பதிபரமே ... மேலும்
 
அறிவினால் அறிந்தயாவும் அசத்துஆதல் அறிதிஎன்றும்அறிவினால் அறியொணாதேல் ஆவதொன்று இன்மைதொன்மைஅறிவுதான் ... மேலும்
 
முந்திய ஒருமை யாலே மொழிந்தவை கேட்டல் கேட்டல்சிந்தனை செய்தல் உண்மை தெளிந்திடல் அது தானாகவந்தவாறு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar