Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவப்பிரகாசம் பகுதி -4
முதல் பக்கம் » சிவப்பிரகாசம்
சிவப்பிரகாசம் பகுதி -5
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2013
12:06

முந்திய ஒருமை யாலே மொழிந்தவை கேட்டல் கேட்டல்
சிந்தனை செய்தல் உண்மை தெளிந்திடல் அது தானாக
வந்தவாறு எய்தல் நிட்டை மருவுதல் என்று நான்காம்
இந்தவாறு அடைந்தோர் முத்தி எய்திய இயல்பினோரே

முன் பிறவிகள் பலவற்றிலும் ஈட்டப் பெற்று வந்த நல்வினையின் பயனாக ஒருவனது மனம் ஒருமையிலே நிற்கின்ற பக்குவத்தைப் பெறும். அப்போது ஞான ஆசிரியன் தோன்றி முப்பொருள் இயல்பும் உண்மையும் உணர்த்துவான். அவ்வாறு ஆசிரியன் மொழிகின்ற மெய்ப்பொருளைக் கேட்டல் ஒன்று, கேட்டவற்றைச் சிந்தித்தல் ஒன்று, சிந்தித்தவற்றின் உண்மையைத் தெளிதல் ஒன்று, பரம்பொருளோடு ஒத்து நிற்கும் நிட்டை கூடுதல் ஒன்று ஆக நான்காகும், முத்திப் பேறு அடையும் வழிகள். இவற்றைப் பொருந்தினோர் முத்தியினைப் பெறுவார்.

தவம் என்பது பல்வேறு மதங்களில் பல்வேறு வகையாகக் கூறப்படும். தன்னை ஒறுத்தல், பட்டினி கிடந்து உடலை வாட்டுதல் சுடுபாறையில் கிடத்தல், குளிர்நாளில் நீர் நிலையில் நிற்றல் போன்றவையெல்லாம் தவமாகா என்பது சைவசித்தாந்தம் கூறும் உண்மை. படி நிலைக்கு ஏற்றவாறு சைவசித்தாந்தம் கூறும் நால்வகை நெறிகள் சீலம், நோன்பு, செறிவு, அறிவு எனப்படும் சரியை கிரியை யோகம் ஞானம் என்பனவாம். இந்த உண்மை நிலைகளை முந்திய பிறவிகளில் செய்து பக்குவம் அடையப் பெற்ற உயிர்களுக்கு இறைவன் குருவடிவாக எழுந்தருளி வந்து தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூவிடத்தும் நின்று உபதேசம் செய்வான்.

குருவின் அருளிச் செயல்களை ஒருமனதோடு கேட்டல், கேட்டவற்றைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தல், சிந்தித்தவற்றை முன் பின் மலைவு அற்றுப் போகுமாறு தெளிதல், தெளிந்த பின் ஞான வடிவினனாகிய இறைவனின் பேரருளில் திளைத்து நிட்டை கூடுதல் ஆகிய நான்கும் முத்தி நிலை அடைவதற்குரிய வழிகளாகும்.

சிவஞான சித்தியாரில், கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை கிளத்தல் என ஈரிரண்டாம் கிளக்கில் ஞானம் என்று கூறப்படுவதும் இம்முறைமை பற்றியே. முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள். பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள். அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத் தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே. என்ற அப்பர் பெருமான் திருவாக்கும், கேட்டல் சிந்தித்தல் தெளிதல் நிட்டை கூடுதல் என்ற நான்கு நெறிகளை உள்ளுறையாக உணர்த்துவது ஆகும்.

முதல் வரியின் இறுதியில் கேட்டல் கேட்டல் என்ற பாடத்தைவிட கேட்டல், கேட்ட சிந்தனை செய்தல் என்ற பாடம் பொருத்தமாக உள்ளது.

பாசமா ஞானத் தாலும் படர்பசு ஞானத் தாலும்
ஈசனை உணர ஒண்ணாது இறை அருள் ஞானம் நண்ணித்
தேசுறும் அதனால் முன்னைச் சிற்றறிவு ஒழிந்து சேர்ந்து
நேசமோடு உயர் பரத்து நிற்ப துஞான நிட்டை

சொல்லுலகும் பொருள் உலகும் ஆகிய இவற்றை அறிவதால் ஏற்படும் சிற்றறிவினாலும் அந்த அறிவின் அடிப்படையில் அகம்பிரமம் என்று கருதுகின்ற உயிர் அறிவாலும் தம்மை ஆளுடைய பெருமானை அறிய ஒண்ணாது. இறைவனுடைய திருவடியைச் சேர்ந்து அவ்வாறு சேர்ந்ததனால் சிற்றறிவு ஒழிந்து அவன் திருவடியில் உறைத்த அன்போடும் நிற்பது ஞான நிட்டை எனப்படும்.

சிவஞான சித்தியாருள் பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத்தாலே நேசமொடு உள்ளத்தே நாடிப்பாத நீழல் கீழ் நிற்றல் என்பதில் இறைவனை இவ்விரண்டு ஞானங்களாலும் நண்ண ஒண்ணாது என்பது விளக்கப்பட்டது. உலகியல் அறிவு உயர்வுகள் தரினும் அவை உய்யும் நெறி காட்ட மாட்டா. எனவே பாசஞானம் பொய்ம்மை ஞானம்.

பசு ஞானம் பாச ஞானத்திலும் பார்க்க ஒருபடி உயர்ந்ததே எனினும் அதுவும் உயிரை மெய்ந் நெறியில் செலுத்தாது. ஆதலால் பயனற்றதே. அதுவும் சிவஞான சித்தியாருள் காதலினால் நான் பிரமம் என்னும் ஞானம் கருது பசு ஞானம் என்று கழிக்கப்பட்டது. இவ் ஆசிரியர் தாம் இயற்றிய நெஞ்சு விடு தூது என்னும் நூலில் பலகாலம் தாம் பிரமம் கண்டவர் போல் தம்மைக் கண்டு ஆங்கு அதுவே, நான் பிரமம் என்பவர்பால் நண்ணாதே என்று அறிவுறுத்தியதும் இப்பொருட்டே.

பதி ஞானம் எனப்படுவது திருவருளால் அல்லாமல் நிகழ்வதில்லை என்பதை இந்தப் பாடலின் பின் இரண்டு அடிகள் உணர்த்துகின்றன. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, என்று மாணிக்கவாசகப் பெருமானும், அவன் அருளே கண்ணாகக் காணில் அல்லால்... காட்டொணாதே என்று அப்பர் பெருமானும் கூறியவை இக் கருத்தை வலியுறுத்தும்.

நிட்டை என்ற வடசொல் உறுதியாக நிற்றல் என்ற பொருளைத் தருகிறது. ஞான நிட்டை துரியாதீத நிலை.

விளம்பிய வகையில் நிட்டை மேவிடல் அரிதேல் முன்னம்
அளந்து அறிவு அளித்து அவற்றின் அளவும் மற்று அவற்றினாலே
உளம்கொளும் தனையும் உள்ள படியும் உற்று உணர்ந்து செவ்வே
தளர்ந்திடாது உவப்ப மற்றுஅத் தன்மையது ஆகும் தானே.

இதுவரை கூறி வந்த வகையில் நிட்டை கூடுதல் தான் ஞான நிட்டை ஆகும். அத்தகைய நிட்டை கூடுதல் அரிது என்னின் அந்த நிட்டையை எய்துவதற்கு உரிய உபாயம் இப்பாடலில் கூறப்படுகிறது. உலகத்துப் பொருள்களை அளந்தும் அறிந்தும் வருவதற்கு ஆன்மாவாகிய தனக்கு உதவிய தத்துவங்களைத் தெளிய உணர்தல் வேண்டும். அவற்றின் எல்லையை அறிந்து அவற்றை விட்டு நீங்கல் வேண்டும். அவற்றால் பயன் பெறும் தன்னையும் உணர்ந்து அதனையும் நீங்கல் வேண்டும். இறைவனின் உண்மைத் தன்மையை அறிந்து அவனன்றி ஏதும் ஆதாரமில்லை என்பதை உய்த்துணர வேண்டும். முதல்வனின் பேருதவி இத்தகையது என்று செவ்விதின் உணர்ந்து அவனிடத்து அன்பு பூண்டு அந்த அன்பில் தளராது நின்று அவன் திருவடியைப் பற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஒழுகுவார்க்கு ஞான நிட்டை கைகூடும்.

முன்னம் ஈட்டிய தவத்தால் குருவருள் தோன்றி உணர்த்த ஞான நிட்டை கைகூடுவது என்பது எளிதன்று. மிகவும் அரியதே. குருவருள் வாய்க்கப் பெற்றிலதேல் அதற்கென வாளா விருத்தல் வேண்டா. அதனைப் பெறுவதற்கு உரிய வழியினை எதிர்மறை முகத்தாலும் உடன் பாட்டு முகத்தாலும் ஆசிரியர் இப்பாடலில் அறிவுறுத்துகிறார்.

தத்துவங்கள் எனப்பட்டவை எல்லாம் ஆன்மாவின் அறிவு விளக்கத்திற்கு இறைவன் வழங்கிய கொடை. ஆயினும் பாச ஞானத்தைத் தரும் அவை வரையறைக்குட்பட்ட அறிவையே ஆன்மாவிற்குத் தரும். அதனை அறிந்து அவற்றை விட்டு நீங்குதல் வேண்டும். ஏனெனில் கருவி கரணங்களால் வந்த அறிவு சடத்தைப் பற்றுக் கோடாகக் கொண்டு தோன்றியவை. எனவே ஆன்மாவிலிருந்து அவை வேறுபட்டவை. அதுவும் இறைவன் திருவருளால் கைவரப் பெற்றவை. இதனை உணர்ந்தால் பாச ஞானத்தின் இயல்பு அறிந்து அதிலிருந்து நீங்கதல் கூடும்.

சடமாகிய தத்துவங்களால் உளம் கொள்ளும் தன்னை உணர்தல் இதற்கு அடுத்த நிலை. தான் சடம் அன்று என்றும் உணர்த்த உணரும் இயல்பும் சார்ந்ததன் வண்ணமாம் தன்மையும் தனக்கு உண்டு என்றும் அறிவதும், தனது வியாபக நிலையை உணர்ந்து, தன்னையே பரம்பொருளாக மயங்கி உணர்வதும் பசு ஞானம். இதுவும் முத்திப் பயனைத் தராது என்றுணர்ந்து இதனை விட்டும் நீங்கல் வேண்டும்.

அதனினும் மேம்பட்ட நிலை உள்ள படியே உற்றுணர்தல் என்பது இப்பாடலில் கூறப்படுகிறது. இறைவனின் பெருங்கருணையை நினைந்து நெஞ்சுருதி அவனன்றித் தனக்குஓர் ஆற்றல் இல்லை எனத் தெளிவது அது. எப்பொருளும் ஆக்குவான் ஈசனே என்னும் உணர்வும் அப்பொருள் தான் ஆளுடையான் அடியார்கள் என்னும் அறிவும், இப்படியால் இதுவன்றித் தம் இசைவு கொண்டு இயலும், துப்புரவு இல்லாதார் துணிவு துகளாகச் சூழ்ந்து எழுந்தார் என்று திருஞானசம்பந்த நாயனார் வரலாற்றில் சேக்கிழார்பெருமான் இதனைத் தெளிய உரைத்து அருளினார்.

இவ்வாறு வெவ்வேறு அறிந்து உணர்ந்து தளர்ந்திடாது ஒழுகுபவர்க்கு ஞான நிட்டை எளிதில் கைகூடும்.

பாவிக்கில் மனாதி வேண்டும் பயன்இலை கரணம் நீத்துப்
பாவிப்பான் என்னில் என்ன பழுதுஉலா பாவகத்தால்
பாவிக்க ஒண்ணான் என்று பாவிப்பன் என்னில் நீஎன்
பாவிக்க வேண்டா ஆண்ட பரன்அருள் பற்றி னோர்க்கே

பாவனையால் சிவஞானம் தோன்றாதோ என்ற கேள்விக்கு ஆசிரியர் இப்பாடலில் விடையிறுக்கிறார். பாவனை என்பது மனத்தின் செயல், மனம் அந்தக் கரணங்களுள்ஒன்று. கரணங்கள் ஒன்றின் துணையாலே பாவிக்கப்படும் பொருள் சத்துப் பொருளாக இருக்க முடியாது. அவ்வாறு அன்று கரணத்தின் துணையன்றிப் பாவிப்பேன் என்னின், கரணங்கள் அற்ற ஆன்மா கேவலத்துள் அழுந்தும், ஆகையால் அது பழுதாகும். அதுவுமன்று இறைவன் பாவனைக்கு எட்டாத பொருள் என்று பாவிப்பேன் என்னில், அதனை நான் பாவிக்கிறேன் என்ற உணர்வு உன்னிலிருந்து நீங்காதிருக்கிறது. அப்போது தன் முனைப்புக் கெடாது. குருவின் உபதேசத்தால் திருவருளைப் பற்றினோர்க்கு இம் மூன்று வகையான பாவனைகளும் வேண்டா.

இறைவன் கரணங்கள் எல்லாம் கடந்து நின்ற கறை மிடற்றன் (திருவாசகம்-திருக்கோத்தும்பி-9) என்கிறார் மாணிக்கவாசகப் பெருமான். அவனை மனம் என்னும் அந்தக்கரணத்தின் துணையால் பாவிப்பேன் என்பது பிழையானது.

இதற்கு அடுத்த உபாயம் கரணத்தின் துணை இன்றியே பாவிக்க இயலாதோ என்ற கேள்வி. கேவல நிலையில் அறியாமையே வடிவாய்க் கிடந்த உயிர்க்கு இறைவன் உடல் கரணங்களைப் பொருத்திய போதே அதற்குச் சிற்றறிவு புலப்படுகிறது. ஆதலால் கரணம் கழன்ற நிலை கேவல நிலை. அது பழுதுடைய நிலை.

மூன்றாவது நிலை இறைவன் பாவிக்க ஒண்ணாதவன் என்று பாலிப்பேன் என்பது. பாவனைக்கு எட்டாத ஒன்றை நான் பாவிக்கிறேன் என்று கூறுவது, நான் என்னும் தன் முனைப்பு என்பது மட்டுமின்றி அது போலியுமாகும்.

பரம்பொருளின் திருவடியைப் பற்றினவர்களுக்கு குருவின் அருளுபதேசத்தால் பாவிக்க வேண்டிய தேவை இல்லை.

பாரதியார் காவித்துணி வேண்டா கற்றைச் சடை வேண்டா பாவித்தல் போதும் பரம நிலை எய்துதற்கே என்று கூறுகிறார். அந்தப் பாவனை வகை அனைத்தும் பயன்தரா என்பதனை இப் பாடல் தெளிவுறு விளக்கிற்று.

சிவஞான போதத்துள் பாவக மேல் தான்அசத்தாம் என்று தொடங்கும் ஆறாம் நூற்பாவில் இரண்டாம் அதிகரணத்தின் மூன்றாவது எடுத்துக்காட்டுச் செய்யுளையும் அதற்கு மாதவச் சிவஞான முனிவர் வரைந்த பேருரையையும், சிவஞான சித்தியாரில் சுபக்கத்தில் பாவிப்பது என்னில் பாவம் என்று தொடங்கும்(245) பாடலையும் இதனுடன் ஒப்பிட்டுக் கற்பது பயன்தரும்.

ஒன்று இரண்டு ஆகி ஒன்றின் ஒருமையாம் இருமை ஆகி
ஒன்றில் ஒன்று அழியும் ஒன்றாது என்னில் ஒன்று ஆகா தீயில்
ஒன்று இரும்பு உறழின் அன்றாம் உயிரின் ஐந் தொழிலும் வேண்டும்
ஒன்றி நின்று உணரும் உண்மைக்கு உவமை ஆணவத் தோடு ஒன்றே.

இப்பாடலில் ஆசிரியர் ஆன்மாவும் பரம்பொருளும் ஒன்றா வேறா என்ற வினாவிற்கு விடையிறுக்கிறார், சுருங்கிய சொல்லால் விரிவான கொள்கைகளை விளக்கிக் காட்டுகிறார். ஒரே பொருள் இரண்டாக மாறி அதன் பின்னர் இரண்டும் ஒன்றாகும் என்றால் அது ஒரு தன்மை உடையதாக இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாததால் இக் கொள்கை பொருந்தாது. இது ஒன்று இரண்டாகி ஒன்றின் ஒருமையாம் என்ற சொற்றொடரால் கூறப்பட்டது. ஆன்மாவும் இறைவனும் தோற்றமில் காலம் தொட்டேஇரண்டு வேறுபட்ட பொருள்களாய் நின்று முத்தி நிலையில் ஒன்றாகி விடும் என்று கொண்டால் ஆன்மா முத்தி நிலையில் அழிந்து போகும் என்று ஆகும். எனவே இக் கொள்கையும் பொருத்தமற்றது. இது பாடலில் இருமை ஆகி ஒன்றில் ஒன்று அழியும் என்ற சொற்களால் குறிக்கப்பட்டது முத்தி நிலையிலும் ஆன்மா சிவத்தோடு கூடாது. அவை இரண்டும் இருவேறு பொருள்களாகவே நிற்கும் என்றால் முத்தி நிலை பயன் தரு நிலை ஆகாமல் பேறு என்பதே இல்லாமல் போகும். எனவே இதுவும் பொருத்தமான கொள்கையாகாது. இக்கருத்து பாடலில் ஒன்றாது என்னில் ஒன்று ஆகா என்ற சொற்களால் குறிப்பிடப்பட்டது. தீயிலே இட்டுக் காய்ச்சப்பட்ட இரும்புத் துண்டு பழுக்கக் காய்ந்த நிலையில் தீயே ஆனாற் போல ஆன்மா சிவத்தோடு கூடி சிவமே ஆகும் என்று கொண்டால் தீயன் ஆற்றல் பழுக்கக் காய்ந்த இரும்பிற்கும் உளதாதல் இல்லை. அது போலவே இறைவன் இயற்றுகின்ற ஐந்தொழிலையும் முத்தி நிலையிலும் ஆன்மாவால் இயற்ற இயலாது. எனவே இந்தக் கொள்கையும் பொருத்தமற்றதே. இது பாடலில் தீயின் ஒன்று இரும்பு உறழின் ஆன்றாம், உயிரின் ஐந்தொழிலும் வேண்டும். என்ற சொற்களால் கூறப்பட்டது. பின் உயிரும் சிவமும் ஒன்றி நிற்கும் முறைமைக்கும் எதனைத்தான் உவமை கூறுவது? எனக் கேட்பின் தோற்றமில் காலந் தொட்டே உயிர் ஆணவ மலத்தோடு கூடி ஒன்றுபட்டு அழியாமலும் வேறுபட்டு நீங்காமலும் இருந்த கேவல நிலையே இதற்கு ஏற்ற உவமை ஆகும். இது பாடலில் ஒன்றி நின்று உணரும் உண்மைக்கு உவமை. ஆணவத்தோடு ஒன்றே என்ற சொற்களால் குறிக்கப் பெற்றது.

செறிவு மிக்க இந்தப்பாடலில் நான்கு வேறு பட்ட கொள்கைகளைக் கூறி அவை யாவும் பிழையுடையன என்பதையும் நிறுவிய ஆசிரியர் அவற்றை அடுத்து சைவ சித்தாந்தத்தில் கூறப்படும் கருத்துக்கு ஏற்ற உவமையைக் காட்டிப் பிறர் கோள் மறுத்துத் தம் கோள் நிறுவுகிறார்.

முதலாவது கருத்து; ஒரே பரம்பொருள் தானே பரமான்மா என்றும் சீவான்மா என்றும் இரண்டாகப் பிரிந்து தோன்றும். சீவான்மா என்பது பிறப்பு இறப்புக்களிலே உழன்று துயரம் அனுபவித்து நல் ஆசிரியர்களை அடுத்து, அவர்கள் உபதேசத்தால் தானும் பரம்பொருளும் ஒன்று என்பதை அறிந்து மீளவும் பரமான்மாவோடு கூடி ஒன்றுபட்டுப் போகும்.

இக்கொள்கை பொருந்தாது என்பதை உணர வைக்கிறார் ஆசிரியர். ஒரே பொருள் இரண்டாயிற்று எனில் இரண்டிற்கும் குணம் ஒரே தன்மையாய் இருத்தல் வேண்டும். பரமான்மாவின் குணம் சீவான்மாவில் காணப்படுவது இல்லை. ஆதலால் இது பொருந்தாது. அல்லாமலும் முத்தி நிலை அடைந்த பின்பும் சீவான்மா மீளப் பிறத்தலும் கூடும் என்ற குறைபாடும் இக் கொள்கையில் உள்ளது. இந்தக் கருத்து ஏகான்ம வாதம் என வழங்கும். இது பொருத்தமற்றது என்பதை ஆசிரியர் உணர வைக்கிறார்.

இரண்டாவது கருத்து; ஆன்மா வேறு சிவம் வேறு. அவை இரண்டும் தோற்றமில் காலம் தொட்டே வேறுபாடு உடையன. ஆனால் முத்தி நிலை அடைந்த ஆன்மா சிவத்தோடு ஒன்றாகிவிடும்.

முத்தி நிலையில் இக் கொள்கையின்படி ஆன்மா அழிந்து போகும். எனவே பெறுவான் ஒருவன் இல்லை. ஆகவே பேறும் இல்லை. ஈவான் இல்லை ஏற்பானும் இல்லை. ஆகவே முத்தி நிலை என்பது பயனற்ற நிலை என்றாகும். இது ஐக்கியவாத சைவர் கருத்தாகும்.

மூன்றாவது கருத்து: பரமான்மாவோடு சீவான்மா ஒன்றுபட்டு முத்தி நிலையில் இல்லாமல் போகும் என்று கொள்ள வேண்டாம் எப்போதும் இரண்டு பொருள்களாகவே நிலைபெறும் என்றால் என்ன? அவ்வாறு கூறப்படுகிற நிலைமை ஒரு பொருட்டாகாது. கட்டு நிலையிலும் இரண்டு பொருள்கள் உள்ளன. முத்தி நிலையிலும் அதே இரண்டு பொருள்களும் தனித்தனியாக முன் இருந்தபடியே உள்ளன என்ற போது வீடு பேறு என்ற சொல்லுக்கே பொருளில்லாமல் போகும். ஆன்மா பரம்பொருளோடு பொருந்தி இடையறா இன்பத்தில் திளைப்பது தான் வீடுபேறு என்று சொல்லத்தகும் நிலை. அல்லாத போது முத்தி நிலை பயனும் பேறும் அற்ற நிலை. இந்த மூன்றாவது கருத்து சிவ சமவாதிகள் கொள்கை.

நான்காவது கருத்து: உலையில் இட்டுக் காய்ச்சப் பட்ட இரும்பு தீயின் செம்மை நிறத்தையும் வெப்பத்தையும் பெற்றுத் தீக்கங்கு போலவே ஆகி விடுகிறது. ஆன்மாவும் சிவத்தோடு கூடிய நிலையில் சிவமாகவே மாறிவிடும். தீயின் தன்மையை இரும்பு எய்துகிறது. அந்த நிலையில் தீயும் உண்டு இரும்பும் உண்டு.

இதுவும் பொருந்துவதன்று தீயினால் பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பு தீ செய்யும் தொழிலைச் செய்வதில்லை. தீ வெப்பத்தைக் கொடுக்கும் இரும்பு அதனை ஏற்கும். இரும்பே வெப்பம் தருகிற தொழிலைச் செய்யாது. அது போலவே முதல்வன் உயிர்களின் பொருட்டு ஐந்தொழிலும் செய்வான். உயிர்களுக்கு ஐந்தொழில் நடத்தும் வல்லமை ஒரு போதும் வருவதில்லை. உயிர்க்கு அந்த வல்லமை உண்டு என்று கொண்டால் சிவத்துக்குரிய முதன்மை கெடும். இறைவன் ஒருவனே உளன் அவனுக்கு ஈடும் இல்லை எடுப்பும் இல்லை என்கிற கொள்கை மறுக்கப்படும். எனவே இக்கொள்கையும் பொருத்தமற்ற கொள்கையே. இங்கு மறுக்கப்பட்ட கொள்கை சிவசங்கிராந்த வாதம்.

இவ்வாறு நான்கு கொள்கைகள் மறுக்கப்பட்ட பின்னர் ஆசிரியர் ஓர் உவமையின் மூலம் சித்தாந்தக் கொள்கையை விளக்குகிறார். கேவல நிலையில் உயிர் ஆணவ மலத்தோடு ஒன்றுபட்டிருந்தும் தான் அழியாமலும் ஆணவ மலத்தை விட்டு இரண்டுபட்டு நீங்காமலும் இருக்கிறது. உயிருக்கும் ஆணவத்துக்கும் வேறுபாடு தெரியாத அளவிற்கு உயிரே ஆணவமாகியும் ஆணவமே உயிராகியும் தோற்றமறித்தாலும் இரண்டின் தன்மையும் கெடாமல் உள்ளது. கேவல நிலையில் ஆணவத்தோடு ஒன்றுபட்டிருந்த நிலை இழிவானது. முத்தி நிலையில் ஆன்மா சிவத்தோடு ஒன்றுபட்டு இருக்கும் நிலை மிக உயர்வானது. இது ஒன்று தவிர, கேவல நிலையில் உயிர்க்கும் ஆணவத்துக்கும் உள்ள தொடர்பே முத்தி நிலையில் உயிருக்கும் சிவத்திற்கும் உள்ள தொடர்பு என உவமை காட்டின் அதுவே பொருத்தமான கருத்து.

தாயுமான அடிகள் தாம் இயற்றிய எந்நாட் கண்ணியில்

ஆணவத்தோடு அத்துவிதம் ஆனபடி மெய்ஞ்ஞானத்
தாணுவினோடு அத்துவிதம் சாரும் நாள் எந்நாளோ

என்று கூறியுள்ளது இங்கு நினையத் தக்கது.

அழிந்திடும் பாசம் என்னில் நித்தம் என்று உரைத்தல் வேண்டா
அழிந்திடாது என்னில் ஞானம் அடைவது கருதல் வேண்டா
அழிந்திடும் சித்தி நித்தம் அழிந்திடா ஒளியின் முன்னர்
அழிந்திடும் இருளும் நாசம் அடைந்திடா மிடைந்திடாவே

ஆன்மா சிவத்தோடு கூடிய நிலையில் ஆணவ மலம் அழியுமோ அழியாதோ என்ற கேள்விக்கு இப்பாடலில் ஆசிரியர் விளக்கம் தருகிறார். ஆணவம் அழிந்து போகும் என்று கொண்டால் சைவ சித்தாந்தக் கொள்கையான பதியினைப் போல் பசு பாசம் அனாதி என்ற கருத்து மறுக்கப்படும் . ஆணவ மலம் ஒருபோதும் அழியாது என்றால் ஆன்மாவுக்கு சிவனருளாகிய திருவடி ஞானம் வாய்க்கும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. பின் எது தான் அழிவது? உயிரின் அறிவாற்றலை மறைக்கின்ற ஆணவ மலத்தின் காரியமாகிய ஆற்றல் அழியும். ஆணவ மலத்தின் இருப்பு அழியாது. கதிரவன் ஒளியின் முன்னால் நிற்க முடியாத இருள் அழிவதும் இல்லை. ஒளியின் முன் அடர்ந்து நிற்பதும் இல்லை. அது போலவே சிவப் பேரொளியின் முன் ஆணவ மலமும் நிற்பதில்லை.

சைவ சித்தாந்தம் பதி பசு பாசம் என்னும் முப்பொருள்களும் என்றும் உள்ளவை என்று கூறுகிறது. என்றும் உள்ள பாசம் என்றும் உள்ள உயிரை அனாதியே பற்றி நிற்கிறது எனவும் கூறுகிறது. அப்படியானால் பாசம் அழிந்து போகும் என்று சொல்லுவது சைவ சித்தாந்தக் கொள்கைக்கே முரண்பட்டது. பாசம் அழியாது என்று கொண்டால் அறியாமையாகிய ஆணவ மலத்தில் அழுந்தி இருக்கிற உயிருக்கு ஞானம் வரும் என்று எண்ணிக்கூடப் பார்க்க முடியாது. இந்த முரண்பாட்டை எப்படித் தான் நீக்குவது என்பது கேள்வி.

அதற்கு விடை: ஆணவம் என்ற பொருள் அழியாது என்பது சரி. அந்தந்த ஆன்மாவைப் பற்றி நிற்கிற ஆணவ மலத்தின் வலிமை அழிந்து போகும். அதாவது காரணமாகிய ஆணவ மலம் இருப்பினும் அதன் காரியங்கள் தடைபட்டுப் போகும். எனவே அதன் நித்தியத் தன்மை கெடுவதில்லை. காரியம் கெடுகிறது எனவே இக் கூற்றில் முரண்பாடு ஏதும் இல்லை.

இதனை விளக்குவதற்கு ஆசிரியர் ஒரு நல்ல உவமையைக் கையாளுகிறார். எல்லா இடத்திலும் இருள் இருக்கிறது. சைவ சித்தாந்தக் கொள்கைப்படி இருள் ஒரு பொருள். ஒளியினது இன்மை(அபாவம்) இருள் என்று சைவ சித்தாந்தம் கூறுவதில்லை. இது பற்றிய விளக்கம் சிவஞான மாபாடியத்தில் மாதவச் சிவஞான முனிவரால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. நட்ட நடுப்பகல் சூரிய ஒளியில் நாம் நடக்கிற போது கூட நமக்க நிழல் என்ற பெயரில் இருள் கண்ணுக்குப் புலப்படுவதை நாம் பார்க்கிறோம். ஆகவே ஒளியின் முன்னர் இருள் அடர்த்துத் தோன்றாமல் தன் வலிமையை இழந்து போகிறதே தவிர இருள் என்ற பொருள் அழிந்து போவதில்லை. அது போலவே ஞானப் பேரொளி உயிரின் மீது படியும் போது ஆணவ மலம் தன் ஆற்றலை இழக்கிறது ஆனால் அழிவுறுவதில்லை.

இந்நூலின் ஆசிரியர் தாம் இயற்றிய கொடிக்கவி என்னும் நூலில் முதல் பாடலில் ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம்; ஒன்று மேலிடில் ஒன்று ஒளிக்கும் எனினும் இருள் அடராது என்று குறிப்பிட்டுள்ளதும் இதனை வலியுறுத்தும்.

எல்லைஇல் பிறவி நல்கும் இருவினை எரிசேர் வித்தின்
ஒல்லையில் அகலும் ஏன்ற உடல்பழ வினையது ஊட்டும்
தொல்லையில் வருதல் போலத் தோன்றுஇரு வினையது உண்டேல்
அல்ஒளி புரையும் ஞானத் தழலுற அழிந்து போமே.

எல்லையற்ற பிறவிகளைத் தரும் இருவினைகளின் தொகுதியாகிய சஞ்சித கன்மம் என்பது தீயிலே இடப்பட்ட வித்துப் போல் ஞான ஆசிரியரின் அத்துவ சுத்தியினால் அழியும். இப் பிறவியில் அனுபவிப்பதற்கு ஏன்று கொண்ட பிராரத்த கன்மம் உடல் ஊழாய்க் கழியும். நுகரும் போது ஈட்டுவதாகிய ஆகாமிய கன்மம் என்பது ஒளி முன்பு இருள் நீங்குவது போல ஞான ஆசிரியரின் ஞானத் தீ பொருந்துதலால் அழிந்து போகும்.

மூன்று வகையாகக் கூறப்பட்ட கன்மமலம் ஞானத் தழல் வந்து உறும் போது எவ்வாறு அறவே நீங்கும் என்பதை இந்தப் பாடலில் ஆசிரியர் விளக்குகின்றார். இதற்கு முந்திய பாடலில் ஆணவமலம் அழியும் என்று உரைத்த பின்னர் இப் பாடல் அதனோடு இயைபு உள்ள கன்ம மலத்தைப் பற்றிக் கூறுவது கருதத் தக்கது.

எரிசேர் வித்து என்பது வறுக்கப்பட்ட விதை என்று பொருள் கொள்ளப்படும் வறுத்தெடுத்த வித்து வித்தாகவே இருந்தாலும், அதன் தோற்றமும் உள்ளீடும் மாறாதிருந்தாலும், முளைக்கும் தன்மை கெட்டுப் போகும் என்பதற்கு இந்த உவமையைப் பயன்படுத்தினார்.

பந்தம் ஆனவை அறுத்துப் பவுதிகம் உழலும் எல்லைச்
சந்தியாது ஒழியாது இங்குத் தன்மைபோல் வினையும் சாரும்
அந்தம் ஆதிகள் இலாத அஞ்சு எழுத்து அருளினாலே
வந்தவாறு உரைசெய்வாரை வாதியா பேதியாவே.

மும்மலங்களை ஞான ஆசிரியர் தீர்த்து வைத்த பிறகு ஆன்மா ஐம்பூதங்களால் ஆகிய உøல் கருவி முதலியவற்றோடு இவ்வுலகில் வாழும் அளவும் அம்மலங்களின் முன்னைத் தொடர்பால் பெருங்காயம் வைத்த செப்பில் அதை எடுத்த பிறகும் அந்த மணம் நீங்காதது போல வினை சாருவதுண்டு. அந்தச் சார்பின் விளைவுகள் ஆன்மாவைத் தாக்காது இருக்கும் பொருட்டுத் தோற்றமும் முடிவும் அற்ற திருவைந்தெழுத்தை ஆசிரியர் அருளியவாறே கணித்து வருபவர்க்கு மலங்களால் வரும்வாதனை தாக்காது. ஞான நிட்டையில் நின்று மாறுபடுவதும் இல்லை.

திருவைந்தெழுத்தின் பெருமை திருமுறைகளிலும் அருள் நூல்களிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. உடலோடு வாழ்வார்க்கு ஞான நிட்டை கூடிய போதும் யாக்கையுடன் உள்ள தொடர்பும் உலகத்துடன் உள்ள தொடர்பும் முற்றிலும் அற்றுப்போவதில்லை. பெருங்காயம் வைத்திருந்த பாண்டத்தில் வைத்த எடை குறையாது எடுத்துவிட்ட பின்னரும் அதன் மணம் நீங்குவதில்லை. அது போன்றதே உலகியல் தொடர்பும். இங்கு என்பது பெருங்காயத்தைக் குறிக்கும்.

மந்திரங்கள் தம்மை உச்சரிப்பாரைக் காப்பன. எல்லா மந்திரங்களுக்கும் மேலான திருவைந்தெழுத்து, கணிப்பாரைக் காத்து உய்விப்பது எனவே தான் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் நமசிவாயப் பதிகம் ஒன்றும் பஞ்சாக்கரப் பதிகம் ஒன்றும் இயற்றி அருளினார். திருநாவுக்கரசு நாயனாரும். சுந்தரமூர்த்தி நாயனாரும், நமச்சிவாயத் திருப்பதிகங்கள் அருளினார்கள். வந்தவாறு உரை செய் என்ற பகுதியால், ஆசிரியர் உபதேசித்த முறையிலே திருவைந்தெழுத்தைக் கணிக்க வேண்டும் என்பதைக் கூறினார்.

திருவெழுத்து ஐந்தில் ஆன்மா திரோதம் மாசு அருள் சிவம்சூழ்
தரநடு நின்றது ஒன்றாம் தன்மையும் தொன்மை ஆகி
வரும்மந மிகுதி யாலே வாசியில் ஆசை இன்றிக்
கருவழிச் சுழலும் மாறும் காதலர்க்கு ஓதலாமே

ஐந்து திரு எழுத்துக்களிலும் ஆன்மாவைக் குறிக்கும் யகரம் நடுவிலே நிற்கும். திரோத மலத்தைக் குறிக்கும் நகரமும் மலத்தை குறிக்கும் மகரமும் முதலிலே நிற்கும். சிவத்தைக் குறிக்கும் சிகரமும் அருளைக் குறிக்கும் வகரமும் அவற்றின் பின்னர் நிற்கும். இதனை சிவ என்பதனை முன்னாக வைத்து யகரத்தை நடுவிலே வைத்து நம என்பதைப் பின்னாக வைத்து ஓதுவர். இது தொன்மையே வரும் வழக்கு. மந இவற்றை மிகுதிபட ஓதுகையில் வசி இரண்டிலும் உயிருக்கு ஆசை குன்றி இறப்பு பிறப்புக்களிலே பட்டுச் சுழலும். மலத்தின் பிடி நீங்கிப் பிறவியில் உவர்ப்பு வந்து சிவத்தின் மீது ஆசை மிகுதிப்பட்டோர்க்கு ஞான ஆசிரியன் திருவைந்தெழுத்தை ஓதும் முறைமையை உபதேசிக்கலாம்.

அந்தியும் நண்பகலும் அஞ்சு பதம் சொல்லி என்பது சுந்தர மூர்த்தி நாயனாரின் திருவாக்கு. ஐந்து எழுத்துக்களும் ஐந்து பொருள்களைக் குறிப்பன. எனவே சிவாய நம என்பது முறையே சிவம், திருவருள், ஆன்மா, திரோதமலம், மலம் ஆகியவற்றைக் குறித்தன. உலகியல் பற்று மிகுதியுடையவர்கள் மலத்தோடு சார்ந்து மலமாகவும், சிவனடிக்குப் பேரன்பு பூண்டவர்கள் சிவத்தோடு சார்ந்து சிவமாகவும் நிற்றலை இத்திருவைந்தெழுந்து நினைப்பிக்கும். எனவே சிவம் முதலே ஆகுமாறு பக்குவம் வாய்ந்த உயிர்களுக்கு ஞான ஆசிரியன் அவரவர் தகுதிக்கு ஏற்ப இத்திருவைந்தெழுத்தை உபதேசிப்பான். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க ஓதுவார்க்கு இம்மந்திரத்தை உபதேசிப்பதே முறைமை.

ஏதும் ஒன்றும் அறிந்திலராயினும்
ஓதி அஞ்செழுத்து உள்உணர்வார்கட்கு
பேதமின்றி அவரவர் உள்ளத்தே
மாதும் தாமும் மகிழ்வர் மாற்போரே
என்ற அப்பர் பெருமானின் திருக்குறுந்தொகைப் பாடலை இங்கே நினைக.

ஆசுறு திரோதம் மேவாது அகலுமா சிவ முன்னாக
ஓசைகொள் அதனில் நம்மேல் ஒழித்துஅருள் ஓங்கும் மீள
வாசியை அருளும் மாயா மற்றுஅது பற்றா உற்று அங்கு
ஈசனில் ஏகம் ஆகும் இதுதிரு எழுத்தின் ஈடே

ஆணவமும் அதனால் உயிரைச் சார்ந்த திரோதமும் அகலுமாறு சிகரமும் வகரமும் முதலில் நிற்குமாறு திருவைந்தெழுத்தை ஓதி வருக. அவ்வாறு செய்யின் நகரமாகிய திரோதம் மேவிய மகரம் ஆகிய மலம் ஒழிக்கப்படும். வகரமாகிய அருளைப் பற்றின் அது சிகரமாகிய சிவத்தை அருளும். அதனையே பற்றாகக் கொண்டால் அந்நிலையில் இறைவனோடு அத்துவித நிலையை எய்துவிக்கும். இது திருவைந்தெழுத்தின் பெருமையாகும்.

ஐந்தெழுத்தின் பெருமையைக் கூறி வருகிற ஆசிரியர் அதனை இடைவிடாது ஓதுவார் அடையும் பெறும் பயனை இந்தப் பாடலுள் தெளிய எடுத்துரைக்கிறார். மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை எனவும் மருந்தவை மந்திரம் மறுமை நன்னெறி அவை மற்றும் எல்லாம் அருந்துயர் கெடும் அவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே என்றும் ஆலைப் படுகரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத்தான் என்றும் இன்னும் பலவாறும் ஐந்தெழுத்தின் பெருமை திருமுறைகளில் உயர்த்திக் கூறப்படும்.

அவ்வவர் பக்குவத்திற்கு ஏற்ப ஞான ஆசிரியர் ஐந்தெழுத்தின் பருமை, நுண்மைகளைக் கூறி உபதேசித்த பின்னர் நிற்கும் முறைமையும் ஓதும் முறைமையும் மாறுபடாது திருவைந்தெழுத்தை ஓதிவரின் அது மலத்தைக் கெடுத்துச் சிவத்தைக் கொடுக்கும். கொடிக் கவியில்,

அஞ்சு எழுத்தும் எட்டு எழுத்தும் ஆறு எழுத்தும் நால் எழுத்தும்
பிஞ்சு எழுத்தும் மேலைப்பெரு எழுத்தும் நெஞ்சு அழுத்திப்
பேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையும்
கூசாமல் காட்டக் கொடி

என்ற பாடலின் பொருள் இங்கு ஒப்பிட்டுக் காணத் தகுந்தது.

தீங்குறு மாயை சேரா வகைவினை திரிவிதத்தால்
நீங்கிட நீங்கா மூல நிறை இருள் இரிய நேயத்து
ஓங்கு உணர்வு அகத்து அடக்கி உளத்துள் இன்பு ஒடுங்க நேரே
தூங்குவர் தாங்கி ஏகத் தொன்மையில் துகள் இலோரே

தீங்கினைத் தருகின்ற மாயப் பிறவி மீளவும் சேராதபடி மூன்று விதங்களால் நீங்கிட, என்றும் உயிரை விட்டு நீங்காத நிறைந்த இருளாகிய ஆணவம் கெடுமாறு அன்பினால் உள்ளத்து ஒளிர்கின்ற சிவப்பேரறிவுக்குள்ளே அடங்கித் தன்முனைப்பற்றுச் சிவபோதம் தழைத்து விளையத் தம் செயலற்று இருப்பார்கள். இவர்களே குற்றமற்ற தன்மை கொண்ட சிவஞானிகள் எனப்படுவர்.

இப்பாடல் அணைந்தோர் தன்மையைக் குறிக்கிறது அணைந்தோர் எனப்பட்டவர்கள் இவ்வுலகத்தில் வாழ்கின்ற போதே இறைவனது திருவடிஞானம் வாய்க்கப் பெற்று சிவப் பேரின்பத்தை இடையறாது துய்க்கும் தகுதி பெற்ற சீவன் முத்தர் எனப்படுவர். முத்திநிலை என்பது உயிர் இவ்வுடலை விட்டு நீங்கிய பிறகே எய்தக் கூடியது என்னும் கருத்து சைவசித்தாந்தத்திற்கு ஏற்புடையதன்று. உயிர் நீங்கிய பின்னரே முத்தியடைதல் கூடும் என்ற கருத்து வைணவத்தில் வலியுறுத்தப்படுகிறது. அது விதேகமுத்தி எனப்படும். இங்கே கூறப்படுவது சீவன்முத்தியே.

வினை முற்றிலும் நீங்கிய பிறகே பிறவி அறும். தொல்வினை நுகர் வினை ஏறுவினை (சஞ்சிதம். பிராரத்தம், ஆகாமியம்) என்ற மூன்றும் சிவஞானம் கைவரப்பெற்றவர்களுக்கு எவ்வாறு நீங்கும் என்பதை இதற்கு முன் உள்ள பாடல்களால் எடுத்துரைத்த ஆசிரியர் இப்பாடலில் அவற்றைத் தொகுத்து வினை திரிவிதத்தால் நீங்கிட என்று குறிப்பிடுகிறார்.

திரிவிதத்தால் என்பதற்கு மதுரைச் சிவப்பிரகாசர் மூன்று வகையாவது தன்னை, வினையை, தலைவனை அறிகிற ஞானம் என அறிக என்று உரை எழுதுகிறார்.

இலக்கணம் சிதம்பரநாத முனிவர் கேட்டல் முதலிய மூவிதத்தாலும் நீங்கா நிற்ப, என்று பொருள் காண்கிறார். அதற்கு, கேட்டல் சிந்தித்தல், தெளிதல் என்று மூன்று வகையாலே வினை நீங்கிட நான்காம் நிலையாகிய ஞானத்தினைப் பெறுவார்கள் என்று பொருள் கொள்ளுதல் வேண்டும்.

இவ்வாறு வினை நீங்கிய பின்னர் நிறைந்த இருளாகிய மூலமலமும் இரிந்து ஓடுமாறு உள்ளத்தின் உள்ளே எழுகின்ற சிவப்பேற்று உணர்வின் ஊறுகின்ற இன்பத்தைத் தன் முனைப்பற்று நிற்பவர்களே அணைந்தோர் என்ற பெருமைக்குரிய சீவன்முத்தர்கள் ஆவார்கள். தொன்மையாக வந்த துகளினை அறுத்தவர்கள் இவர்கள். அன்பினால் இவர்கள் சிவத்தோடு அத்துவித நிலையில் திளைத்திருப்பர். ஆசிரியர் உமாபதி சிவம் அருளிய மற்றொரு நூலாகிய திருவருட்பயனில் இப்பாடலின் சொல்லும் பொருளும் எடுத்தாண்டு ஓங்கு உணர்வின் உள்அடங்கி உள்ளத்துள் இன்பு ஒடுங்கத் தூங்குவர் மற்று ஏது உண்டு சொல் என்று கூறியுள்ளதையும் இங்கு ஒப்பிட்டுக் காணல் பொருந்தும்.

குறிப்பிடம் காலம் திக்கு ஆசனம் கொள்கை குலம் குணம்சீர்
சிறப்புறு விரதம் சீலம் தபம்செபம் தியானம் எல்லாம்
மறத்துஅற ஒழிதல் செய்தல் மருவிடா மன்னு செய்தி
உறக்கு உறுபவர் போல் வாய்மை ஒழிந்தவை ஒழிந்து போமே.

குறிப்பிட்ட இடம், காலம், திக்கு, ஆசனம், கொள்கை, குலம், சீர், நோன்பு, சீலம், தவம், செபம், தியானம் ஆகிய பதின்மூன்று வகைப்பட்ட ஒழுகலாறுகளை அணைந்தோர் ஆகிய பெரியோர் மறுத்து ஒழித்தலுமில்லை. விரும்பிச் செய்வதுமில்லை. உறங்குகிறவர்களின் கையிலே பிடித்திருக்கிற பொருள் தானாக நழுவிப் போவது போல உலகத் தார்க்கு விதிக்கப்பட்டன யாவும் சீவன் முத்தர்களிடத்திலிருந்து தாமாக நழுவிப் போகும். மெய்ஞ்ஞானம் ஒன்றே அவர்களை விட்டு நீங்காது.

குறிப்பிடம் என்பது ஒன்றாகக் கொள்ளாமல் குறிப்பும் இடமும் என்று இரண்டாகப் பொருள் கொள்ளப்படுவதும் உண்டு. இப்படிக் கொண்டால் மொத்தம் பதின்மூன்று என்பதற்குப் பதிலாக விதிக்கப்பட்ட ஒழுக்க முறைமைகள் பதினான்கு ஆகும்.

மேலே கூறப்பட்ட பதின்மூன்று வரையறைகளும் உலகியல் வாசனை அறாதவர்களுக்கு விதிக்கப்பட்டவை. சீவன் முத்தர்கள் இவற்றினை விழைந்து செய்வதுமில்லை. வெறுத்து ஒதுக்குவதுமில்லை. உறங்குகிறவர்கள் கையிலே இறுகப் பற்றிக் கொண்டிருக்கிற ஒரு பொருள் தானாக நழுவிப் போவது போல இவ்வுலக ஒழுக்கமும் அவர்களை விட்டு நழுவும்.

உறக்கு உறுபவர் போல் என்பதற்கு உறங்குபவர் கைப்பொருள் போல் என்று சொல் வருவித்துப் பொருள் கொள்ளுக. இக்கருத்தினை ஆசிரியர் உமாபதிசிவம் திருவருட்பயனில்,

ஒண்பொருட்கண் உற்றார்க்கு உறுபயனே அல்லாது
கண்படுப்போர் கைப்பொருள் போல் காண்(78)

என்று கூறியுள்ளதும் ஒப்பிட்டுக் காண்க.

அகம்புறம் என்றுஇரண்டால் அர்ச்சனை புரியும் இந்தச்
சகம்தனில் இரண்டும் இன்றித் தமோமயம் ஆகி எல்லாம்
நிகழ்ந்திட மகிழ்ந்து வாழும் நிர்மையார் போல ஞானம்
திகழ்ந்து அகம்புறம் எனாத செம்மையார் நன்மை யாரே.

இந்த உலகத்தில் இறைவனை வழிபடுகிறவர்கள் புறப் பூசையாலும் வழிபடுவார்கள். அகப் பூசையாலும் வழிபடுவார்கள். இவர்கள் இறைவனை நினைந்து அவனை அடைதற்கு முயல்பவர்கள். இன்னொரு சாரார் இறைவனை வணங்குவதை எண்ணிக் கூடப் பார்ப்பதில்லை. வினைக்கீடாகப் பெற்ற உலகத்துப் பொருள்களிலே மகிழ்ந்து அறியாமையே வடிவாய் உலகியலில் அழுந்தி இறைவனைப் பற்றி சிந்தனையே இல்லாமல் அலைவர். உண்மை ஞானம் கைவரப் பெற்றவர்கள். செம்மை நிலை வாய்க்கப் பெற்றவர்கள் மேற்கூறிய உலகியலாளரைப் போல ஒரு வகையில் ஒத்தவர்களாய் அக வழிபாடு புற வழிபாடு இரண்டையும் நிகழ்த்தாமல் உள்ளும் புறமும் ஒரு தன்மையராய்ச் சிவமேயாகி நிற்பார்கள்.

உலகத்து மக்களை மூன்று வகையாகப் பகுப்பது ஒரு மரபு. அவர்கள் பிராகிருதர் என்றும், வைநயிகர் என்றும், சாமுசித்தர் என்றும் கூறப்படுவர்.

பிராகிருதர் என்போர் உண்பதும் உடுப்பதும் உறங்குவதுமன்றி வேறு எதையும் பற்றிக் கருதாதவர்கள். அவர்களுக்கு மனச்சஞ்சலம் ஏதுமில்லை. ஏனெனில் தாம் அறியாமையில் வாடுகிறோம் என்பதனையே அவர்கள் அறியாதிருக்கிறார்கள்.

வைநயிகர் என்போர் விநயம் உடையவர்கள். அவர்களுக்கு உலகியல் வாழ்க்கை நிறைவு தருவதில்லை. எனவே அவர்கள் மெய்ப் பொருளைத் தேடும் வேட்கையுடவர்களாகி ஞான நூல்களைக் கேட்கவும் சிந்திக்கவும் தெளியவும் நிட்டை கூறவும் ஆவலுறுகிறார்கள். இவர்கள் பொருட்டே மெய்ந்நூல்கள் அருளப்பெற்றன. இவர்கட்கே மெய்ந்நூல்களைக் கற்பிக்க வேண்டும். இவர்களே விதித்தன செய்து விலக்கியன ஒழியும் இயல்புடையவர்கள். இவர்கள் அகம் புறம் என்ற இருவகை வழிபாடுகளுள் ஒன்றைப் பின்பற்றுவர்.

மூன்றாவது நிலையினரான சாமு சித்தர்கள் முற்பிறவிகளில் ஈட்டப்பட்ட தவத்தின் பயனால் இறைவன் திருவருளுக்கு உடனே இலக்காகும் மேலாம் தரம் பெற்றவர்கள். இவர்களுக்கு நூல்களின் துணை தேவையில்லை.

இப்பாடலில் முதலில் கூறப்பட்ட பிராகிருதர்கள் எனப்படும் உலகியல் வாழ்க்கை உடையவர்களுக்கும், உண்மை ஞானம் வாய்க்கப் பெற்ற ஞானியார்க்கும் உள்ள ஒரு புடை ஒற்றுமை ஆசிரியரால் எடுத்துக் காட்டப்பெறுகிறது. இரண்டு பேர் சித்தத்தினும் சஞ்சலமுமில்லை. தேட்டமுமில்லை. ஆனால் பிராகிருதர் அறியாமையே வடிவாய் இருப்பார்கள். மெய்ஞ்ஞானிகள் சிவத்தோடு சேர்ந்து ஞான வடிவாகவே நிற்பார்கள். இவர்களே செம்மை நலம் அறிந்தவர்கள்.

அகவழிபாடு அந்தரியாகம் எனவும் புற வழிபாடு பகிர்யாகம் எனவும் கூறப்படும்,

அண்டம் மேவிட அனைத்தும் அண்டம் மேவிக்
கொண்டல் போல் எவையும் ஞானம் குறைவுஇலா நிறைதலாலே
கண்டதோர் பொருளை அந்தக் கருத்தினால் காணில் தானே
அண்ட நாயகனார் மேனி ஆனதேல் ஐயம் இன்றே

ஐம்பூதங்களுள் ஒன்றாகிய வான் மற்றைய நான்கு பூதங்களையும் தனக்குளக அடக்கிக் கொண்டு நிற்கின்ற கொள்கை போல், அதே நேரம் தான் யாவற்றுள்ளும் கலந்து நிற்கின்ற தன்மை போல், மெய்ஞ்ஞானியர் சிவஞானத்தால் நிறைந்தும் அந்நிறைவுக்குள் திளைத்தும் இருப்பர். அந்நிலையில் அவர்களது செயல்கள் புறத்தே செல்ல நேரிடினும் குருவருளால் கைவந்த சாதனையினால் சிவபெருமானைத் தமக்கு உயிராயும் தம்மை அவனது திருமேனியாயும் உணர்ந்து நிலைப்படும் அத்தவிதப் பேற்றினை அடைவர் என்பதில் ஐயமில்லை.

சிவஞானசித்தியாரில் இக்கருத்து
பரஞானத்தால் பரத்தைத் தரிசித்தோர் பரமே
பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார் பார்க்க
வருஞானம் பலஞானம் அஞ்ஞான விகற்பம்
வாச்சிய வாசகஞானம் வியந்தவத்தின் கலக்கம்
தருஞானம் போக ஞாதிருஞான ஞேயம்
தங்கியஞானம் சங்கற்பனை ஞானம் ஆகும்
திருஞானம் இவை எல்லாம் கடந்த சிவஞானம்
ஆதலால் சீவன்முத்தர் சிவமே கண்டு இருப்பர்

என்று எடுத்து உணர்த்தப்படுகிறது.

கொண்டல்- கொள்ளப்படுதல். அண்டம்- வானம். இது ஞான யோகம் எனப்படும்.

மண்முதல் கரணம் எல்லாம் மறுஅசத்து ஆக்கிஞானக்
கண்ணினில் ஊன்றி அந்தக் கருத்தினால் எவையும் நோக்கி
எண்ணி அஞ்சி எழுத்தும் மாறி இறைநிறைவு உணர்ந்து போற்றல்
புண்ணியன் தனக்கு ஞான பூசையாய்ப் புகலும் அன்றே

மண் முதலிய தத்துவங்கள் எல்லாம் ஆன்மாவாகிய தன்னின் வேறானவை என்று கண்டு, தானும் தனக்கு இறைவனால் அளிக்கப்பட்ட தத்துவங்களும் இறைவனாலன்றிச் செயல்படா என்பதையும், அவனே யாவற்றுக்கும் ஆதாரமாய் நிற்பவன் என்பதையும் தெளிந்து உணர்ந்து அக்கருத்தோடு யாவற்றையும் கண்டு திருவைந்தெழுத்தை சிகர முதலாகக் கொண்டு இடைவிடாது நினைத்து இறைவனின் எங்கும் நிறைந்த தன்மையை உணர்ந்து போற்றுதலே புண்ணியன் ஆகிய சிவபெருமானுக்கச் செய்யப்படும் ஐவகைச் சுத்திகளோடும் கூடிய ஞான பூசை என்று ஆகமங்கள் கூறும்.

சிவபூசை செய்யும் காலத்து பஞ்சசுத்தி என்ற ஐவகைத் தெளிவு மேற்கொள்ளப்படும். அந்த ஐவகைச் சுத்திகளையும் மனம் இறந்து இயற்றும் ஞானப் பூசையாக இப்பாடலில் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். மண் முதல் கரணம் எல்லாம் மறுவசத்தாக்கல் என்பது பூதசுத்தி. ஞானக் கண்ணினில் ஊன்றல் என்பது ஸ்தானசுத்தி. அந்தக் கருத்தினால் எவையும் நோக்கல் என்பது திரவியசுத்தி. அஞ்செழுத்தும் மாறி எண்ணல் என்பது மந்திரசுத்தி. இறை நிறைவு உணர்ந்து போற்றுதல் என்பது லிங்கசுத்தி. இவ்வாறு பஞ்சசுத்திகளும் குறிக்கப்பட்டன. மதுரைச் சிவப்பிரகாசர் தமது உரையிலே ஸ்தானசுத்தியைக் குறியாமல் அதனை ஆன்மசுத்தி என்று கொள்கிறார்.

மறு அசத்தாக்கி என்று பிரித்துப் பாடம் கொண்டுகுற்றமுடைய சடம் என்று அறிந்து எனச் சிலர் பொருள் காண்பர். சில ஆசிரியர்கள் மறுவசத்து ஆக்கி எனப் பிரித்துப் பொருள் கொண்டு தத்துவங்கள் எல்லாம் தானாக மாட்டா என்று அவற்றை தன் வசம் அல்ல பரவசம் என்று பொருள் கொள்ளுவர். இப்பாடல் ஞானக்கிரியை உணர்த்தும் என்பர்.

தொண்டர்கள் இடத்தும் வானோர் தொழும்திரு மேனி தானும்
அண்டரும் கண்டிலாத அண்ணலே என வணங்கி
வெண்தர ளங்கள் சிந்த விழிமொழி குழற மெய்யே
கண்டு கொண்டு இருப்பர் ஞானக் கடல் அமுது அருந்தினோரே

சிவனடியார்களிடத்தும், வானவரும் தொழுகின்ற பெருமையினை உடைய சிவலிங்கத் திருமேனியிலும் எழுந்தருளி அருள் பாலிப்பது எல்லையற்ற பரிபூரணன் ஆகிய சிவபெருமானே என்பதை அறிந்து வணங்கிக் கண்களிலிருந்து வெண்முத்துக்கள் போலக் கண்ணீர் பொழியக் கசிந்துருகி மேலிட்ட அன்பினால் மொழி குழற மெய்ப் பொருளையே கண்டு ஞானக் கடலின் அமுதத்தை அருந்திய சிவஞானிகள் சிவபெருமானை இடைவிடாது வழிபட்டுக் கொண்டிருப்பார்கள்.

மால் அறநேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே என்ற சிவஞான போதத்தின் பன்னிரண்டாம் நூற்பாவின் பகுதியை இப்பாடல் விளக்குகிறது. வழிபாடு குரு லிங்க சங்கமம் என்று மூன்று வகையாகக் கூறப்படும். இங்கே சங்கமர்கள் ஆகிய தொண்டர்களையும் லிங்கத் திருமேனியையும் மட்டிலுமே குறித்தார். ஏனெனில் சிவஞான சித்தியாரில் இம்மூன்றையும் இரண்டனுள் அடக்கி, தாபர சங்கமங்கள் என்று இரண்டு உருவில் நின்று மாபரன் பூசை கொண்டு மன் உயிர்கள் அருளை  வைப்பன்.

என்று வழிநூல் உணர்த்தியமுறை மையிலே இவரும் உணர்த்தலுற்றார். அடியார் திருவேடப் பொலிவு சிவபெருமானையே நினைப்பிக்கும் என்பது கழிறிற்று அறிவார் நாயனார் புராணத்தில் உவர் நீரால் மேனி வெளுத்த வண்ணாரை வணங்கி, அடியேன் அடிச் சேரன், திருநீற்றின் வார வேடம் நினைப்பித்தீர். வருந்தாது ஏகும். என்று சேரமான் பெருமாள் உரைத்த மொழியை இங்கு நினைவு கூர்க. அவ்வாறே திருஞானசம்பந்த நாயனார் திருநாவுக்கரசரைக் கண்டவுடன் அவர்பால் தோன்றிய மன எழுச்சியும் சேக்கிழார் பெருமான் திருவாக்கில்,
சிந்தை இடையறா அன்பும் திருமேனி தன்னில் அசைவும்
கந்தை மிகையாங் கருத்தும் கைஉழ வாரப் படையும்
வந்திழி கண்ணீர் மழையும் வடிவில் பொலிதிரு நீறும்
அந்தமி லாத்திரு வேடத் தரசும் எதிர்வந் தணைய (பெரிய புராணம் 270)

கண்ட கவுணியங் கன்றும் கருத்தில் பரவு மெய்க்காதல்
தொண்டர் திருவேடம் நேரே தோன்றியது என்று தொழுதே(271)

என்று உயர்த்திக் கூறப்படுவதும் மனம் கொளத் தக்கது.

திருக்கோவில் உள்ளிருக்கும் திருமேனியைச் சிவன் எனவே கண்டவர்க்குச் சிவன் உறைவன் அங்கே என்பது சிவஞான சித்தியார் (325) காட்டும் உண்மை. அத்திருமேனி வானவர்க்கும் அறிய ஒண்ணாதது என்பது திருவாசகம் திருச்சதக்கத்தில், வான நாடரும் அறிய ஒணாத நீ மறையில் ஈறுமுன் தொடர் ஒணாத நீ என்று மாணிக்க வாசகர் கூறியருளியதால் உணரப்படும் இறைவன் அமுதத் தெண்கடல் என்பது திருவாசகம் கோயில் திருப்பதிகத்தில் திரை பொரா மன்னும் அமுதத் தெண் கடலே(3) என்னும் அருள் வாக்கால் அறியலாம்.

இவ்வாறு தம்மை மறந்து தலைவன் தாள் தொழுது கல் மனம் கனியக் கண்ணீர் வார மொழி தடுமாற நிற்றல் ஞானத்தை மாந்திய பெரியோர் இயல்பு என்பது இப்பாடலில் விளக்கப்பட்டது. இது ஞானச் சரியை என்பர். இக் கருத்து சிவஞான சித்தியாரில்

செங்கமலத் தாள் இணைகள் சேரல் ஒட்டாத்
திரிமலங்கள் அறுத்து ஈசன் நேசரொடும் செறிந்திட்டு
அங்கு அவர்தம் திருவேடம் ஆலயங்கள் எல்லாம்
அரன் எனவே தொழுது இறைஞ்சி ஆடிப்பாடி
எங்கும்யாம் ஒருவர்க்கும் எளியோம் அல்லோம்
யாவர்க்கும் மேலானோம் என்று இறுமாப்பு எய்தித்
திங்கள்முடியார் அடியார் அடியோம் என்று
திரிந்திடுவர் சிவஞானச் செய்தி உடையோரே

என்று எடுத்துரைக்கப்பட்டது ஒப்பு நோக்கத்தக்கது.
 
நிலவு உலகாயத ஆதி நிகழ் சிவாத்துவித அந்தத்துக்
குலவினர் அளவு அளாவாக் கொள்கையது ஆகிவேதத்
தலைதருபொருளாய் இன்பாய்த் தாவில் சற்காரியத்தாய்
மலைவுஅறும் உணர்வால் பெத்த முத்திகள் மதித்தாம் அன்றே.

உலகத்தில் நிலவும் உலகாயதம் முதல் சிவாத்துவிதம் ஈறாக உள்ள சமயங்களிலே ஒழுகுபவர்கள் கொண்ட கொள்கைகளுக்கு மேலாய் வேதத்தின் முடிந்த முடிபை உணர்த்துவதாகவும் பேரின்பத்தைத் தருவதாகவும் குறைவற்ற சற்காரிய நெறியிலே நிற்பதாகவும் முன்னோடு பின் மலைவு நேராது தீர்த்தருளும் சிவபெருமானின் திருவருளினால் உயிர்களின் கட்டு நிலையும் வீடுபேற்று நிலையும் இந்நூலில் கூறப்பட்டன.

இந்நூல் புறச்சமயத்தவர்க்கு இருளாய் அகச்சயத்து ஒளியாய் எனத் தொடங்கும் ஏழாவது பாடலில் கூறப்பட்ட புறப்புறம், புறம், அகப்புறம், அகம் என்னும் பல்வேறு சமயங்களிலே கூறப்பட்ட கருத்துக்கள் யாவும் தன்னுள் அடங்கத் தனக்கு ஒப்பற்று நிற்பது சைவ சித்தாந்தம் என்பதை நூற்கருத்தைக் கூறும் இப்பாடலில் ஆசிரியர் வலியுறுத்திக் கூறுகிறார். சேக்கிழார் பெருமான் சண்டேசுவர நாயார் புராணத்தில் வேதப்பயனாம் சைவம் என்றும் (9) திருஞானசம்பந்தர் புராணத்தில் வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க (1) எனவும் குறித்தமை இங்கே நினைவு கூரற்பாலது. வேதக்கனியைப் பிழிந்த சாறு சைவசித்தாந்தம் எனவும் அதில் தள்ளப்பட்ட கருத்துக்கள் கோது என்றும் உணர்த்தினார். சைவ நெறி ஒரும் வேதாந்தத்து உச்சியில் பழுத்த ஆராஇன்ப அருங்கனி பிழிந்து சாரம் கொண்ட சைவ சித்தாந்தம் என்று குமரகுருபர முனிவரால் பாராட்டபெற்றது. குற்றமற்ற சற்காரிய வாதத்தை அடிப்படையாகக் கொண்டது. திருவருளால் மலைவு தீர உணரப்படுவது. இதில் உயிர்கள் கட்டு நிலையில் நிற்கும் நிலையும் வீட்டு நிலையில் பெறும் பேறும் எடுத்துரைக்கப்பட்டன.

திருவருள் கொடுத்து மற்றுஇச் சிவப்பிரகாச நன்னூல்
விழிவது தெளியும் ஆற்றால் விளம்பிய ஏது நோக்கிப்
பெருகிய உவமை நான்கின் பெற்றியில் நிறுவிப் பின்முன்
தரும்மலைவு ஒழியக் கொள்வோன் தன்மையில் சாற்றல் ஆமே.

முறையே சரியை கிரியை யோகம் என்ற மூன்று நெறிகளிலும் பயின்று இரு வினை ஒப்பும் மல பரிபாகமும் சத்திநி பாதமும் எய்தப் பெற்றவர்க்கு சிவப்பிரகாசம் என்னும் இந்த நன்னூலை விரிவாகவும் தெளிவுறும் வகையிலும் மூவகை எதுக்களினாலும் நான்கு வகை உவமைகளாலும் கொள்கைகளை நிறுவிக் காட்டி முன்னொடு பின் மலைவு இல்லாமல் கேட்கின்ற மாணவர்களுக்குக் கற்பிக்கலாகும்.

இந்நூலினைக் கற்கும் தகுதி உடையார் இவர் என்பதனை இப்பாடல் கூறுவதால் இதனை உபதேச முறைமை என்பர். மலைவு அறக் கற்கிற மாணவர்களுக்கு மூன்று ஏதுக்களாலும் நால்வகை உவமைகளாலும் இந்நூலினை விரிவாகவும் தெளிவாகவும் சாற்றலாம் என்று ஆசிரியர் ஆணை தருகிறார். ஏது என்பன மூன்று. அவை இயல்பு, காரியம், அநுபலத்தி என்பன. இவற்றின் விரிவு சிவஞானசித்தியார் சுபக்கத்தில் பதினாறாம் பாடலில் அளவை இயல் என்னும் தலைப்பின் கீழ் விரிவாகக் கூறப்பட்டன. உவமை நான்கு என்பது தொல்காப்பியத்துள் வினை பயன் மெய் உரு என்ற நான்கே. வகைபெற வந்த உவமத் தோற்றம் என்ற நூற்பாவில் கூறப்பட்டது.

நன்றி:  சி.சு.மணி

 
மேலும் சிவப்பிரகாசம் »
சைவசித்தாந்த மெய்ப்பொருளியலை விளக்குகின்ற அடிப்படை நூல்கள் மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும். ... மேலும்
 
பொது அதிகாரம்- பதி இலக்கணம் பலகலை ஆகமம்வேகம் யாவையினும் கருத்துப்பதிபசுபாசம் தெரித்தல் பதிபரமே ... மேலும்
 
அன்னியம்ஆனவை உணர்த்தி அனன்டயமாய் நிறைந்தஅறிவு அறியாமையினாலும் அருள்நிலவும் காலம்தன்னில் அவனே ... மேலும்
 
அறிவினால் அறிந்தயாவும் அசத்துஆதல் அறிதிஎன்றும்அறிவினால் அறியொணாதேல் ஆவதொன்று இன்மைதொன்மைஅறிவுதான் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar