Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » வினா வெண்பா
வினா வெண்பா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2013
12:06

சைவ சந்தான குரவர்களுள் நான்காமவராகிய உமாபதி சிவம் அருளிச் செய்த நூல்களுள் ஒன்று வினா வெண்பா என்னும் இந்த நூல். உந்தி களிறு உயர்போதம் என்று தொடங்கும் வெண்பா பதினான்கு மெய்கண்ட சாத்திரங்களையும் குறிப்பிடுகிறது. ஆசிரியர் உமாபதி சிவத்தின் சிவப்பிரகாசம், திருவருட்பயன் ஆகிய நூல்களின் பெயர்களை அடுத்து வினா வெண்பா அதனுள் குறிப்பிடப்படுகிறது. எனவே மெய்கண்ட நூல்களுள் இந்நூல் ஒன்பதாவது இடத்தைப் பெறுகிறது எனலாம்.

இந்நூல் மொத்தம் பதின்மூன்று வெண்பாக்களால் அமைந்துள்ளது. இவற்றுள் முதல் பன்னிரண்டு வெண்பாக்களும் உமாபதி சிவனார் தமது ஆசிரியராகிய மறைஞான சம்பந்தரிடம் கேட்கும் வினாக்களாக அமைந்துள்ளன. பதின்மூன்றாவது வெண்பா நூற்பயனைக் கூறுவதாக அமைந்துள்ளது.

இந்நூலில் கேட்கப்படும் வினாக்கள் யாவும் சைவ சித்தாந்த மெய்ப்பொருள் இயலில் எழுகின்ற நுட்பமான ஐயங்களைத் தெரிவிப்பதாக உள்ளன. எழுப்பப்பட்ட வினாக்களுக்கு விடைகள் தரப்படவில்லை. சைவ சித்தாந்தப் பயிற்சி உடையோர் இவ்வினாக்களுக்கு விடைகளை நுணுகி ஆராய்ந்து அறிந்து கொள்ள இயலும்.அவ்வாறு அறிவார்க்குச் சித்தாந்த சாத்திரங்களில் தெளிவு உண்டாகும் எனக் கருதி ஆசிரியர் வினாக்களைத் தொடுப்பதோடு அமைந்தார் எனக் கொள்ளலாம்.

மறைஞானசம்பந்தர் ஒன்பது பாடல்களில் மருதூரோடு தொடர்புபடுத்தியும் மூன்று பாடல்களில் கடந்தையோடு தொடர்பு படுத்தியும் கூறப்படுகிறார். கடந்தை என்பது திருப்பெண்ணுகடம். மறைஞான சம்பந்தர் திருப்பெண்ணுகடத்தில் தோன்றி மருதூரில் சில காலம் வாழ்ந்து அதன் பின்னர்த் தில்லையை அடுத்த திருக்களாஞ்சேரி என்னுமிடத்தில் வாழ்ந்திருந்தார் என்பது அவருடைய வரலாற்றால் தெரியவருகின்றது. மறைஞான சம்பந்தர் திருக்களாஞ்சேரியில் வாழ்ந்த காலத்தில் ஆசிரியர் உமாபதி சிவம் அவருக்கு மாணவராயினார் என்பர்.

நீடும் ஒளியும் நிறைஇருளும் ஓர் இடத்துக்
கூடல் அரிது கொடுவினையேன் பாடு இதன்முன்
ஒன்றவார் சோலை உயர் மருதச் சம்பந்தா!
நின்றவாறு எவ்வாறு நீ.

பரந்த பேரொளியும் நிறைந்த இருளும் ஒரே இடத்தில் கூட இயலாது. கொடுவினையேன் உன்னை அறிந்து கொள்வதற்கு முன்பு சோலைகள் சூழ்ந்த மருத நகர் வாழ் சம்பந்த மாமுனிவனே தாங்கள் அடியேனிடத்துப் பொருந்த நின்றீர் என்பது எவ்வாறு?

இருள் உள்ள இடத்திலே ஒளி இருக்காது. ஒளி உள்ள இடத்திலே இருள் இருக்காது. கொடிய வினைகளைச் செய்து அதன் பயனாகப் பிறப்பு இறப்புக்களில் பட்டு உழவும் என்னிடத்தில் இருள் மலமாகிய ஆணவ மலம் சகசமாய்த் தோற்றமில் காலம் தொட்டு, என் அறிவினை மறைத்து நிற்கிறது என்பது உண்மையானால் நீயும் உயிருக்கு உயிராக என்னோடு ஒரு பொழுதும் நீங்காது பொருந்தியிருக்கிறாய் என்று கூறுவது எப்படி உண்மையாய் இருக்க முடியும் இது எவ்வாறு பொருந்தும் என்பது வினா.

புரை விழுந்து ஒளி  மழுங்கிய கண்ணும் , அது இன்றி ஒளி விளங்கிய கண்ணும் கதிரவன் ஒளியிலே இருக்கும் போது ஒருபடித்தாய்க் காணும் ஆற்றல் பெறுவதில்லை. படலத்தால் மறைக்கப்பட்ட கண்காணும் ஆற்றல் அற்றது ஒளி விளங்கும் கண்ணோ காணும் ஆற்றல் உடையது. அவ்வாறே இறைவன் கட்டு நிலையிலும் வீட்டு நிலையிலும் உள்ளவரிடத்து அத்துவிதமாய்க் கலந்து ஒரு தன்மையனாய் நிற்பினும் கட்டு நிலையில் உள்ளார்க்குப் பாசஞானம் ஆகியும் விட்டு நிலையில் உள்ள வர்க்குத் திருவருளாகவும் தோன்றுவன்.

சிவதருமோத்தரத்துள், மற்றொரு உவமையின் மூலம் இந்த வினா விற்கு விடை கூறப்படுகிறது . பசிய மரத்தில் நீர்ப்பசை உள்ளது எனவே தட்பமும் உள்ளது. பசு மரம் காய்ந்து நீர்ப்பசை அற்றுப்  போன போதோ அல்லது காடே பற்றி எரியும் போது பசு மரத்திலும் தீப்பற்றிக் கொண்டாலோ அதே மரத்தில் இருந்து வெப்பமும் புறப்படுவதைக் காண்கிறோம். பசுமரமாக இருக்கும் போதே வெப்பமும் அதனிடத்து முன்பே இருந்தது என்பது புலப்படுகிறது எனவே உயிர் ஆணவ மலத்தோடு பொருந்தியிருக்கும் போதே பரம்பொருளும்  அதனோடு ஒன்றியிருக்கத் தடையில்லை,

2 இருளில் ஒளி புரையும் எய்தும் கலாதி
மருளின் நிலை அருளும் மானும் கருவி இவை
நீங்கில் இருளாம் நிறைமருதச் சம்பந்தா!
ஈங்கு உன் அருளால் என்பெற,

என்னிடத்தில் ஆணவம் மேலிட்டு நிற்கும் போது ஞான ஒளி எனக்குக் கிட்டுவதில்லை. ஆன்மாவாகிய நான் கலை முதலியவற்றைப் பொருந்துகிற காலத்து என் அறிவு உலகியல் பொருளின் மீதே படித்து மயங்குகிறது. இந்த மயக்கத்தைத் தவிர்ப்பதற்குக் கருவி கரணங்களை விட்டு நீங்கலாம் என்றால்  மீண்டும் நான் இருள் நிறைந்த கேவல நிலையைச் சென்றடைவேன் இப்படிப்பட்ட நிலையில் வளம் நிறைந்த  மருதூரில் வாழ்கின்ற சம்பந்த மாமுனிவரே உமது திருவருளால் நான் பெறத்தக்கது யாது?

உயிர் கேவலம் சகலம் சுத்தம் என்று மூன்று நிலைகளில் விளங்கும். கேவல நிலை என்பது தோற்றமில் காலம் தொட்டு ஆணவமலத்தோடும் தொடர்புற்று இருந்தமையால் உயிர் அறியாமையாகவே நிற்கின்ற நிலை. இதிலிருந்து உயிரை உய்விப்பதற்காகவும் அதன்  அறிவை விளக்கு வதற்காகவும் இறைவன் உயிருடன் கருவி கரணங்களைக் கூட்டுகிறான் . அப்போது உயிரின் அறிவு சிறிதே விளக்கம் பெறுகின்றது. இந்த நிலை சகல நிலை எனப்படும். இதிலும் கூட உயிர் உலகியல் வயப்பட்டு மயங்குகிறதே தவிரச் சிவஞானத்தைப் பெறுவ தில்லை கருவிகள் தாமே மயக்கத்தைத் தருகின்றன என்று கருதிக் கருவிகளை விட்டு நீங்க முயன்றாலோ மீண்டும் கேவல நிலையே வந்து சேரும். பின் எப்படித்தான் உன் திருவருளே நான் பெறுவது? இது வினா

இதற்கான விடை இறைவன் திருவருள் கேவல நிலையிலும் உயிர்க்குப் பயன்படுவதில்லை  சகல நிலையிலும் உயிருக்குப் பயன் தருவ தில்லை முன்னைப் பிறவிகளிலே உயிர் ஈட்டிய தவத்தினாலே இறைவன் குரு வடிவாக எழுந்தருளி வந்து தன் திருவடியை உயிர்க்கு  வழங்கும் போது இறைவனின் திருவருளால் உயிர் பயன் பெறும் என்பதாகும் இக்கருத்து சிவப்பிரகாசத்தில் கீழ்காணும் பாடலில் விளக்கப்பட்டுள்ளது.

காட்டிடும் கரணம் ஒன்றும் இல்லையேல் காண் ஒணாதாம்
நாட்டிய இவற்றால் ஞானம் நணுகவும் ஒண்ணா முன்னம்
ஈட்டிய  தவத்தினாலே இறை அருள் உருவாய் வந்து
கூட்டிடும் இவற்றை நீக்கிக்குரை கழல் குறுகும் ஆறே

கேவல  நிலையிலும் சகல நிலையிலும் உயிருக்குப் புலப்படாமல் மறைந்து நின்று அருளுகின்ற சிவபெருமான்  சுத்த நிலையில் உயிருக்கு வெளிப்பட்டு நின்று அருள்பாலிப்பான்.

3 புல் அறிவு நல்உணர்வது ஆகா பொதுஞானம்
அல்லது இலது உள்ளது எனில் அன்னியமாம்  தொல்லை இருள்
 ஊனம் மலையதவாறு உயர் மருதச் சம்பந்தா!
ஞானமலை ஆவாய்! நவில்.

ஒப்பற்ற மருத நகர்ச் சம்பந்தரே ஞான மலையாய் விளங்கு பவரே, என்னைத் தொன்மையான ஆணவ மலம் துன்புறுத்தாத வண்ணம் எனக்கு உணர்த்துவீராக. ஆன்மாவாகிய என்னிடத்திலே உள்ள அறிவு சிற்றறிவு  அது பேரறிவு ஆகாது. நான் கருவிகளின் வழியாகப் பெறுகின்ற அறிவும் வரையறைக்கு உட்பட்ட ஏகதேச அறிவு என்றே கூறப்படும். எனவே அதுவும் இறைவன் அருட் கொடையாக வழங்குகின்ற பேரறிவு ஆக இயலாது எனின் கட்டு நிலையிலிருந்த நான் விடுபட்டு வீட்டு நிலையில் திருவருளின் பேரறிவைப்பெறுவேன் என்பது என்பது எங்ஙனம்? உள்ளதே தோன்றும் இல்லது வாராது எனக் கூறும் சற்காரிய வாதத்துக்கு என்னிடத்தில் முன்பில்லாத பேரறிவு வந்து தோன்றும் எனக் கூறுவது முரண்பட்ட கருத்தன்றோ?

சற்காரிய வாதம் சைவசித்தாந்தத்திற்கு ஆணிவேர் போன்ற கொள்கையாகும். சுருக்கமாகக் கூறுவதானால் உள்ள பொருளிலிருந்தே உள்பொருள் தோன்றும். இல்பொருளிலிருந்து உள்பொருள் தோன்றாது என்பதே சற்காரியவாதம்.

சிற்றறிவிலிருந்து சிற்றறிவு தோன்றலாமே தவிரப் பேரறிவு எவ்வாறு தோன்றும் என்பது வினா.

ஞானத்தை மூவகைப்படுத்திப் பசுஞானம் பாசஞானம் பதி ஞானம் என்று வழங்குவர். பசு பாசஞானங்களிலிருந்து பதிஞானம் ஆகிய சிவஞானம் எவ்வாறு தோன்றும் ? அப்படித் தோன்றுமானால் அது சற்காரிய வாதத்திற்கு இழுக்கன்றோ என்பதற்கு விடை: பதி ஞானம் ஆன்மாவினிடத்து முன்பே இருந்தது எனினும் ஆன்மா தனது அறியாமையால் அதனை அறிய இயலவில்லை ஆசான் வந்து அருளால் தோன்ற அடி ஞானம் ஆன்மாவில் தோன்றும் என்பது சிவஞான சித்தியார் (280) சிவப்பிரகாசத்தில் ,

தத்துவம் ஆனவற்றின் தன்மைகள் உணரும் காலை
உய்த்து உணர்த்திட உதிப்பது ஒளிவளர் ஞானம் ஆகும்
அத்தன்மை அறியும் ஆறும் அகன்றிட அதுவாய் ஆன்மா
சுத்தமாம் சுத்தஞானத்து ஒரு முதல் தோன்றும் அன்றே
 என்று இக்கருத்து எடுத்து விளக்கப்பட்டமை காண்க.

4 கனவு கனவு என்று காண்பு அரிதாம் காணில்
நனவில் அவை சிறிதும் நண்ணா முனைவன் அருள்
தான் அவற்றில் ஒன்றா, தடமருதச் சம்பந்தா!
யான் அவத்தை காணுமாறு என்.

கனவு காணும் போது நாம் கனவு காண்கிறோம் என்று உணர்வதில்லை. கனவிலிருந்து விழித்த பிறகு கனவில் கண்டதை நனவில் உணரலாம் என்றால் காணும் கருவிகள் கனவில் வேறு. நனவில் உணரும் கருவிகள் வேறு. ஆகையால் கனவில் கண்டதை நனவில் அப்படியே அறிய இயலாது. கனவையும் நனவையும் இறைவன் திருவருளால் அறியக் கூடுமெனின் இரண்டு நிலைகளிலும் திருவருள் பொருந்துவதில்லை. அப்படியாயின் அவத்தை வேறுபாடுகளை நான் அறிவது எவ்வாறு? சம்பந்த மாமுனியே அருள்வாயாக.

இவ்வுலகில் வாழும் உயிர்கள் ஐந்து அவத்தைகளை உறுகின்றன. அவை முறையே நனவு கனவு உறக்கம் பேருறக்கம் உயிர்ப்பு அடங்கல் என்பன. இவை காரிய அவத்தைகள் எனப்படும். இந்த நிலைகளில்  முறையே முப்பத்து ஐந்து கருவிகளும் இருபத்து ஐந்து கருவிகளும் மூன்று கருவிகளும் இரண்டு கருவிகளும் ஐந்தாம் நிலையில் தனித்தும் உயிர் நிற்கும். இவ்அவத்தைகளை இறைவன் உயிர்களின் மல நீக்கத்திற்காகவே கூட்டிப் பிரிக்கிறான் ஒவ்வொரு நிலையிலிருந்து நீங்கிய பிறகே உயிர் அதனை அறிய முடிகிறது. இவ்வாறு இருக்கும் போது அவற்றை நான் எவ்வாறு தெளிவுற அறிந்து கொள்ள முடியும் என்பது கேள்வி.

சுத்த தத்துவங்கள் ஐந்தினாலும் உயிர்களுக்கு ஞானம் உண்டாகும். சிவசத்திகள் சுத்த தத்துவங்களைக் காரியப்படுத்த அவை தூவாமாயை எனப்படும் அசுத்த மாயையில் கலை முதலியவற்றைத் தொழிற்படுத்தும். அவைகளாலே ஆன்மாக்களுக்கு அறிவு உண்டாகும். அதன் மூலமே உயிர்கள் அவத்தை வேறுபாடுகளை அறிந்து கொள்ள முடியும் என்பது அதற்குரிய விடை.

சிவப்பிரகாசத்தில் இத்தகைய இறை அருளால் உயிர் அறியும் (38) என்று தொடங்கும் செய்யுளில் உயிரின் அறிவு தொழிற்படுவதற்கு இறைவனின் அருள் இன்றியமையாது வேண்டப்படும் என்பது தெளிவுறுத்தப்பட்டது.

5 அறிவு அறிந்து எல்லாம் அசத்து ஆகும் ஆயின்
குறி இறந்த நின் உணர்வில் கூடா பொறிபுலன்கள்
தாமாய் அறியா தடமருதச் சம்பந்தா!
யாம் ஆர் அறிவார் இனி.

குளங்கள் நிறைந்த மருத நகரில் வாழும் சம்பந்த மாமுனிவரே உயிரின் அறிவினால் அறியப்பட்டன வெல்லாம் அசத்தாகும் எனவே அழிந்து போகும் என்பர். சொல்லுக்கும் மனத்திற்கும் எட்டாமல் அவற்றைக் கடந்து நிற்கிற உனது தன்மையினை வரையறைக்கு உட்பட்ட உயிரின் அறிவு அறிந்து கொள்ளப் போல தில்லை. பொறி புலன்கள் எனப்படும் தத்துவங்களும் சடங்கள் ஆகையால் அவையும் தாமாக அறிய மாட்டா இவ்வாறு ஆயின் உயிர்களாகிய நாங்கள் எதனால் எதனை அறிய முடியும்?

 அறிவினால் அறிந்த யாவும் அசத்தாதல் அறிதி என்பது சிவப்பிரகாசம் (55) உயிரின் வரையறைக்கு உட்பட்ட சிற்றறிவு எனவே சுட்டியறியப்படுவனவாகிய பொருள்களையே அதனால் அறிய முடியும். சுட்டியறியப்படுவன எல்லாம் தோற்றம் இருப்பு ஒடுக்கம் என்ற மூன்றுக்கும் உட்படுவன எனவே அவ்வாறு அறியப்பட்ட பொருள்கள் எல்லாம் நிலையற்ற பொருள்களே.

இறைவன் சொல்லுக்கும் மனதுக்கும் எட்டாத வரம்பற்ற பரம் பொருள். அப்பரம் பொருளைச் சுட்டறிவு பொருந்தி அறியாது பொறி புலன்களாகிய தத்துவங்களும் தமக்கென அறிவில்லாதன. எனவே அவையும் இறைவனை அறியமாட்டா அப்படியாயின் இறைவனை அறிவது தான் எவ்வாறு என்பது வினா.

இதற்கு விடை: பாசங்களோடு கூடிப் பாசமாய் நின்று அதனால் கட்டுப்பட்டு நிற்கும் உயிர் திருவருளோடு கூடிக் கட்டினைத் தகர்த்து இறை அருளாலே இறைவனை அறியும் அறிவினைப் பெறும்.

இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா  என்ற சிவஞான போத ஏழாம் நூற்பாப் பகுதி இங்கே நினையத் தக்கது. உயிர் என்பது இருளோடு சேர்ந்து இருளாகவும் ஒளியோடு சேர்ந்து ஒளியாகவும் நிற்கும் கண்ணைப் போன்று, அசத்தைச் சார்ந்து அசத்தாகவும் சத்தைச் சார்ந்து சத்தாகவும் விளங்கும் இயல்புடையது. இத்தன்மை சிவப் பிரகாசத்தில்,

 சத்துஇது என்று அசத்துத் தான் அறியாது அசத்தைச்
சத்து அறிந்து அகல வேண்டா அசத்து இது சத்து இது என்றுஓர்
சத்து இருள் ஒளி அலாக் கண் தன்மையை நாம் அசத்தைச்
சத்துடன் நின்று நீக்கும் தன்மையால் சதசத்து ஆமே
என்று கூறப்பட்டது.

6 சிற்றறிவு முன்சிதையில் சேர்வார்இன்றாம் சிறிது
மற்று அதனில் நிற்கில் அருள் மன்னாவாம் துற்றமுகில்
மின்கொண்ட சோலை, வியன்மருதச் சம்பந்தா!
என்கொண்டு காண்பேன் யான்.

மேகங்கள் தங்கும் விண்ணளாவிய சோலைகள் பொருந்திய மருத நகர்ச் சம்பந்தப் பெருமானே, உயிரின் சிற்றறிவு கெட்ட பின்பே இறைவனின் அருளால் பேரறிவாகிய மெய்ஞ்ஞானம் அதற்கு விளங்கும் எனில் உள்ள சிற்றறிவும் கெட்ட பின்பு பேரறிவைப் பெறுவதற்கு அங்கு யாரும் இலர். அவ்வாறன்று உயிரின்ஒரு பகுதியில் பேரறிவு பொருந்துவதற்கு வழியேயில்லை, பின் எதனைக் கொண்டு நான் மெய்யைக் காண்பேன்?

உயிரின் சிற்றறிவு முற்றிலும் அழிந்தால் இறைவனது பேரறிவு உயிரில் பதியுமா? அல்லது உயிரின் சிற்றறிவின் ஒரு பகுதி கெட்டு ஒரு பகுதி நிற்கும் போது இறைவனின் பேரறிவு வந்து பொருந்துமா? என்பன இங்கே எழுகின்ற வினாக்கள்.

உயிர் கருவி கரணங்களின் துணைக் கொண்டு உலகியல் பொருள்களை அறிகிறது. கருவி கரணங்கள் யாவும் வரையறைக்குட் பட்டவை. எனவே அவை வாயிலாக உயிர் பெறுகின்ற அறிவும் ஏகதேச அறிவும் எனப்படும் வரையறைக்குட்பட்ட அறிவுதான். அதுமட்டிலுமல்லாமல் மலத்தின் பிடிப்பால் உயிரின் அறிவு சிற்றறிவு எனப்படும். திருவருள் துணைக்கொண்டு தன் முனைப்பற்று உயிர் அறிகின்ற போது உயிர் வியாபக அறிவு எனப்படும் பேரறிவைப் பெறுகின்ற தகுதியை அடைகின்றது, இதனால் சிற்றறிவு கெடும் என்பதற்கோ அல்லது முன் போலவே இருக்கும் என்பதற்கோ இடமில்லை. பாசத்தின் கட்டுகளை அறுத்து இறைவன் திருவடி ஞானத்திலே உயிர் தோய்ந்து இன்புறும் என்பது இதற்கான விடை,

இந்த விடை ஓர் உவமையின் மூலம் சிவஞான சித்தியாரில் விளக்கப்படுகிறது. இரச குளிகையினால் செம்பு பொன்னாகும். அப்போது செம்பின் களங்கம் ரசகுளிகையினால் அறவே ஒழிக்கப்படும். அக்குளிகையே பொன்னாவதில்லை. என்பது தெளிவு. சிவஞான சித்தியாரின் பாடல் பின்வருமாறு:

செம்பு இரத குளிகையினால் களிம்பு அற்றுப் பொன்னாய்ச்
  செம்பொன் உடன் சேரும் மலம் சிதைந்தால் சீவன்
 நம்பன் உடன் கூடும் எனில் எனில் பொன்போல் அல்லன்
  நற்குளிகை போல அரன் நணுகுமலம் போக்கி
 அம்பொன் அடிக் கீழ்வைப்பன் அரும்களங்கம் அறுக்கும்
 அக்குளிகை தானும் பொன் ஆகாது ஆகும்
 உம்பர் பிரான் உற்பத்தி ஆதிகளுக்கு உரியன்
 உயிர்தானும் சிவானுபவம் ஒன்றினுக்கும் உரித்தே    (319)

7 உன்னரிய நின் உணர்வு அது ஓங்கியக் கால் ஒண் கருவி
 தன்அளவும் நண்ணரிது தான் ஆகும் என் அறிவு
 தான் அறிய வாரா தடமருதச் சம்பந்தா!
 யான் அறிவது எவ்வாறு இனி.

நீர்வளமிக்க மருதநகரில் வாழும் சம்பந்தப் பெருமானே, நினைத்தற்கரிய உம்முடைய பெருமை பொருந்திய  திருவருள் மிகவும் மேம்பட்டது ஆகையினாலே ஒள்ளிய கருவி கரணங்கள் முப்பத்தாறு தத்துவங்களையும் பொருந்தி உமது பெருமையை அறிவது என்பது இயலாது தத்துவங்கள் சடம் ஆகையினாலே அவற்றால் அறிய முடியாது. ஆயினும் என்னுடைய சிற்றறிவினாலே உமது பெருமையை அறியலாகுமோ எனின் அந்தச்  சிற்றறிவுக்கும் அறியும் வல்லமை இல்லை. அப்படியாயின் எவ்வாறு தான் உம்மை அறிவது என்பது கேள்வி.

உயிரின் அறிவாலும் கருவி கரணங்களின் துணைக் கொண்டும் இறைவனை அறிதல் கூடாது எனின், உணரப்பட முடியாத ஒரு பொருள் இல்பொருளாகவே முடியும். எவ்வாறு தான் உன்னை அறிவது என்ற வினா இங்கே எழுப்பப்படுகிறது.

சிவஞான போதத்தில்,  உணருரு அசத்தெனின் உணராதின் மையின் என்று ஆசிரியர் மெய்க்கண்டார் கூறி அருளியதை இங்கு நினைவுகூர்தல் தரும். உயிரின் சிற்றறிவும் அதனுடைய கருவி கரணங்களும் திருவருளிலே தோய்ந்து அதன் வயமாய் நின்றால் அப்பொழுதே மெய்ப்பொருளை அறியும் வல்லமையை உயிர் பெறுகிறது என்பது இதற்கான விடை. இருளோடு சார்ந்து இருளாய் நிற்கும் ஆன்மா அருளோடு சார்ந்து ஒளியாய் நிற்கும். இது சிவப்பிரகாசத்தில்,

மாயைமா மாயை மாயா வரும்இரு வினையின் வாய்மை
ஆய ஆர் உயிரில் மேவும் மருள் எனில் இருளாய் நிற்கும்
மாயைமா மாயை மாயா வரும்இரு வினையின் வாய்மை
ஆய ஆர் உயிரில் மேவும் அருளஎனில் ஒளியாய் நிற்கும்
என்ற பாடலில் ஆசிரியர் உமாபதி சிவத்தால் விளக்கப்பட்டது.

உயிரின் அறிவைக் கைவிளக்குப் போல சற்றே விளக்கும் மாயையைத் திருஞானசம்பந்தப் பெருமான் ஒண்தளை என்று குறித்தது போல, இப்பாடலில் உயிருக்கு ஓரளவு அறிவு விளக்கம் தருவதற்கு உதவுகின்ற கருவிகளை ஆசிரியர் ஒண் கருவி என்று கூறுகிறார்.

8 அருவேல் உரு அன்று உருவேல் அருஅன்று
    இருவேறும் ஒன்றிற்கு இசையா  உருஓரில்
   காணில் உயர்கடந்தைச் சம்பந்தா! கண்டஉடல்
    பூணும் இறைக்கு என்னாம் புகல்.

உயர் கடந்தைச் சம்பந்த மாமுனிவரே, இறைவனின் திருமேனி அருவம் எனின் உருவம் ஆகாது. அவ்வாறு இல்லை உருவந்தான் என்றால் அருவமாக மாட்டாது. அருவும் உருவும் எனக் கொள்ள வேண்டும் என்றால் ஒரு பொருளுக்கு இரண்டு தன்மைகள் கூறுதல் பொருந்தாது. இறைவன் விரும்பும் திருமேனியைக் கொண்டு அடியார்களுக்கு அருள் பாலிப்பான் எனப்படுதலின் அவனது  திருமேனி எதனால் ஆகியது என்பதை எனக்கு விளக்கியருள வேண்டும்.

இறைவன் திருமேனி உருவமா, அருவமா, அரு உருவமா? உருவமானால் அருவம் ஆவதில்லை அருவம் ஆனால் உருவமாவதில்லை. அருவும் ஆகும் உருவும் ஆகும் என்றால் ஒரு பொருளுக்கு இரு தன்மை கூறுவதாய் இழுக்காகும். எனவே அவன் திருமேனி கொள்ளும் முறை தான் எவ்வாறு என்பது வினா.

இறைவனுக்கு அவனது திருவருளே திருமேனியாகும். அவனது திருவருள் அவனது சத்தி என்று சொல்லப்படும்  அருளது சத்தியாகும் அரன் தனக்கு  என்பதும் சத்தி தன் வடிவே தென்னில் தடையிலா ஞானமாகும்என்பதும் சிவஞான சித்தியாரில் அருள்நந்தி சிவாச்சாரியார் மொழிகின்ற உண்மை. அனைத்தையும் கடந்த அருளாக நிற்கும் இறைவன் உயிர்களுக்கு அருள் பாலிக்கும் பொருட்டுத் திருமேனி கொள்ளுகிறான். சிவலிங்க வடிவம் எனப்படும் அருஉருவத் திருமேனியாக அவன் காட்சி தருவது உயிர்கள் வழிபட்டு உய்வதற்காகவே.

சிவஞான சித்தியாரில் இதுபற்றி விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. எனினும் கீழே குறிக்கப்பட்டுள்ள பாடல் நினைவில் கொள்ளத்தக்கது ஆகும்.

குறித்தது ஒன்று ஆக மாட்டாக குறைவிலன் ஆதலானும்
நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமை யானும்
வெறுப்பொடு விருப்புத் தன்பால் மேவுதல் இலாமை யானும்
நிறுத்திடும் நினைந்த மேனி நின்மலன் அருளினாலே, (65)

சிவஞான மாபாடியம் இரண்டாம் நூற்பாவில் இரண்டாம் அதிகரணத்தில் மாதவச் சிவஞான முனிவர், அருவமும் உருவமும் தம்முள் மாறுகோள் அன்மையால்,  என்று அருவம் என்ற சொல்லுக்கு விளக்கம் அளித்தது இங்கே நினைவு கூரத் தக்கது.

9 இரு மலத்தார்க்கு இல்லை உடல் வினை என் செய்யும்
ஒரு மலத்தார்க்கு ஆராய் உரைப்பேன் திரிமலத்தார்
ஒன்றாக உள்ளார், உயர்மருதச் சம்பந்தா!
அன்றாகில் ஆமாறு அருள்.

உயர்மருத நகரில் வாழும் சம்பந்தப் பெருமானே,இருமல முடையார் ஆகிய பிரளயாகலருக்கு மாயை இல்லை எனவே உடம்பும் இல்லை. அவர்கள் வினையின் பயன்களை எவ்வாறு நுகர்வார்கள்? ஒரு மலமுடைய விஞ்ஞான கலர் கன்ம மலரும் மாயா மலமும் நீங்கப் பெற்றவர்கள். எனவே அவர்கள் எத்தன்மையர்கள் என்று எவ்வாறு கூறுவேன்? மூன்று மலங்களுடைய சகலர் அம்மலங்களோடும் கூடி வேற்றுமையின்றி நிற்பதால் அவர்களுக்குத் திருவருள் எவ்வாறு கூடும்? விடையருளுவாயாக

உயிர்களைச் சகலர் பிரளயாகலர் விஞ்ஞானகலர் என்று மூன்று வகையாகப் பிரிப்பர். சகலர் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று மலங்களும் உடையவர்கள். பிரளயாகலர் ஆணவம் கன்மம் என்ற இரு மலமுடையவர்கள். விஞ்ஞானகலர் ஆணவமலம் ஒன்றே உடையவர்கள். இம்மூவகை உயிர்களுக்கும் இறைவன் எவ்வாறு அருள் பாலிப்பான் என்பது இங்கே எழுப்பப்படுகின்ற கேள்வி.

உயிர்கள் இவ்வாறு பகுக்கப்படும் என்பதனைத் திரிமலத்தார் ஒன்று அதனிற் சென்றார்கள் அன்றி, ஒரு மலத்தாராயும் உளர் (12) என்ற திருவருட்பயன் தெரிவிக்கிறது.

இறைவன் இவர்களுக்குத் தன்மை, முன்னிலை படர்க்கை என்ற மூவிடங்களிலே நின்று அருள் பாலிப்பான் என்பர் பெரியோர். விஞ்ஞானகலர்க்கு உள்நின்று உணர்த்தியும் பிரளாகலருக்கு நான்கு தோள்களும் முக்கண்ணும் மானும் மழுவும் ஏந்திய திருக்கரங்களும் கொண்டவனாய்த் தோன்றி முன்னிலையில் நின்றும் அருள் புரிவான்  சகலர்க்குக் குருவடிவாகத் தோன்றி அருள் பாலிப்பான்.

பிரளயாகலருக்கும் விஞ்ஞானகலருக்கும் நம் போன்று அசுத்த மாயை எனப்படும் தூவா மாயையிலிருந்து காரியப்பட்டுத் தோன்றிய உடம்புகள் இல்லை. அவர்களுடைய உடல்கள் சுத்தமாயையிலிருந்து அதாவது தூய மாயையிலிருந்து இறைவனால் தோற்றுவிக்கப்பட்டன என்பர் பெரியோர். இக்கருத்துச்  சிவஞான சித்தியாரில்,

வித்தைகள் வித்தை ஈசர் சதாசிவர் என்று இவர்க்கு
வைத்துறும் பதங்கள் வன்னம் புவனங்கள் மந்திரங்கள்
தத்துவம் சரீரம் போகம் கரணங்கள் தாம் எலாமும்
உய்த்திடும் வைந்தவம் தான் உபாதானம் ஆகி நின்றே 
என்று கூறப்பட்டதை இங்கு நினைவு கூர்க.

சிவஞான மாபாடியத்தில் மாதவச் சிவஞான முனிவர் இரண்டாம் நூற்பாவில் இரண்டாம் அதிகரணத்தில் சுத்த மாயை பற்றிப் பேருரை கூறுமிடத்து, இன்னும் அனந்த தேவர் சீகண்ட ருத்திரர் முதலியோர் விஞ்ஞானகலர் பிரளயாகலரில் பக்குவமுடைய வராய்ச்  சகச மலத்தின் நீங்கி முதல்வன் அருளான் முழுதுணர்ந்து படைப்பு முதலியவற்றைக் காரியப்படுத்துவோராகலின் அவர்க்குத் தநுகரணாதியுண்மையின் அவற்றிக்குக் காரணமாதல் பற்றியுஞ் சுத்த மாயை யுண்மை துணியப்படும். அனந்த தேவர் முதலியோர் தநுகரணாதிக்கும் அசுத்த மாயையே காரணமெனக் கோடுமெனின் அசுத்த மாயை மயக்குவதாகலின், அவர்க்கும் மயக்கமுண்டாதல் வேண்டும் ; அஃதின்மையானும், அசுத்தத்திற் சுத்தந் தோன்றாமை
யானும் அசுத்த மாயை கன்மமார்ந்த அணுக்களுக்கே ஆவாரகமாகலின் விஞ்ஞானகலர்க்குக் கன்மமின் மையானும், விஞ்ஞானகலருண்மைக்குப் பிரமாணம் முன்னர்க் காட்டுதுமாகலானும் அவர் ததுகரணாதிக்கு அசுத்த மாயை காரணமாகாதென்று ஒழிக என்றார்.

இதனுள் முன்னர்க் காட்டுதும் என்று முனிவர் கூறியது எட்டாம் நூற்பா அதிகரணம் இரண்டிற்கு வகுத்த பேருரைப் பகுதியைக் குறித்து நின்றது.

10 ஒன்று இரண்டாய் நின்று ஒன்றில் ஓர்மையதாம் ஒன்றாக
நின்று இரண்டாம் என்னில் உயிர் நேராகும் துன்று இருந்தார்
தாங்கிய வாழ் தண்கடந்தைச் சம்பந்தா ! யானாகி
ஓங்கியவாறு எவ்வாறு உரை.

நெருக்கமாகக் கட்டப் பெற்ற பெரிய மாலையைத் திருத்தோள்களிலே தாங்கித் தண் கடந்தை நகரில் எழுந்தருளியுள்ள சம்பந்தப் பெருமானே ஒரு பொருளாய் இருந்த பரம்பொருளே உலகியல் தோற்றத்தில் இரண்டாக நின்று அதன் பின்னர் வீட்டு நிலையில் ஒன்றாகச் சேரும் என்றால் ஒன்று மற்றொன்றோடு சேர்ந்தது என்நு கூறுவதற்கு இடமில்லை. உள்ள பொருள் ஒன்றேதான் என்று ஆகும். அவ்வாறு அன்று உள் பொருள் இரண்டு என்று கொண்டால், பரமான்மா ஆகிய சிவ பரம்பொருளும் சிவான்மா எனப்படும் உயிரும் தம்முள் ஒத்தன எனக் கருதப் பெற்று இழுக்காகும். உயிராகிய யான் எவ்வாறு சிவமாய் விளங்கும் தன்மையைப் பெறுவேன். விடை கூறியருள வேண்டும்.

உள்ளது ஒரு பொருளே, அதுவே பரம்பொருள். அப்பொருள் உலகியல் நிலையில் இரண்டாகத் தோன்றிப் பின்னர் ஒன்றாகும் என்பர் சிலர். இவர்கள் ஏகான்மவாதிகள் எனப்படுவர். இவர்கள் கருத்துப்படி ஒன்று ஒன்றோடு கூடுமென்பது பொருந்தாது. பொருள் ஒன்றே என்பது தான் பொருந்தும் மற்றொரு சாரார் உள்ள பொருள்கள் இரண்டும். அவையே முத்தி நிலையில் ஒன்றாகும் எனக் கூறுவர். இவ்வாறு கூறும் போது சிற்றறிவுடைய உயிரும் பேரறிவே வடிவான சிவமும் தம்முள் ஒத்தன என்று கொள்ளப்பட்டு இழுக்குடைய கருத்து ஆகும் இவ்விரு நிலைமையும் அற்று உயிராகிய நான் முத்தி நிலையில் எவ்வாறு சிவமாம் தன்மை பெறுவேன் என்பது இங்கே எழுப்பப்படும் கேள்வி.

அத்துவிதம் என்னும் சொல்லுக்குப் பொருள் காண முயன்றார்கள் தமக்கு ஏற்றவாறே கொண்டு மாறுபட உரைத்தனர். அவர்களுள் பொருள் ஒன்றே என்று கொண்டவர்கள் ஏகான்மவாதியர். பொருள்கள் இரண்டு என்று கொண்டவர்கள் துவிதவாதிகள் அல்லது போதவாதிகள் எனப்படுவர் சொல்லும் பொருளும் போல இறைவனும் உயிரும் என்று கொண்டவர்கள் விசிட்டாத்துவிதிகள்.

சைவசித்தாந்தம் கூறுவது சுத்தாத்துவிதம் எனப்படும். ஒன்றாய் வேறாய் உடனாய் நிற்கும் நிலை. இச்சிறப்பை உணர்ந்தே தாயுமான அடிகள் பொய்கண்டார் காணாப் புனிதம் எனும் அத்துவித மெய்கண்ட நாதன்  என்று போற்றினார்.

உயிர் எனும் தனிப் பொருள், கேவல நிலையில் ஆணவத்தோடு அத்துவிதமாய் நின்ற முறையில் சுத்த நிலையில் சிவபரம் பொருளோடு அத்துவிதமாய் நிற்கும் என்பது இங்கே எழுப்பப்பட்ட வினாவிற்கு விடை. இது சிவப்பிரகாசத்தில்,

ஒன்று இரண்டு ஆகி ஒன்றின் ஒருமையாம் இருமை ஆகி
 ஒன்றில் ஒன்று அழியும் ஒன்றாது என்னில் ஒன்று ஆகா தீயில்
ஒன்று இரும்பு உறழின் அன்றாம் உயிரின் ஐந்தொழிலும் வேண்டும்
ஒன்றிநின்று உணரும் உண்மைக்கு உவமை ஆணவத்தோடு ஒன்றே(87)

என எடுத்துரைத்து விளக்கப்பட்டது, ஓர்மையதாம்  ஒரு தன்மைய தாம்.

11 காண்பானும் காட்டுவதும் காண்பதுவும் நீத்து உண்மை
காண்பார்கள் நன்முத்தி காணார்கள் காண்பானும்
காட்டுவதும் காண்பதுவும் தண்கடந்தைச் சம்பந்தன்
வாட்டும் நெறிவாராத வா.

காண்பான், காட்சி காணப்படும் பொருள் என மூன்று பொருள்கள் கொள்ளப்படும். முத்தி நிலையில் இந்த மூன்றும் இல்லை என்று கொள்பவர்களும் மெய்யான முத்தி இயல்பை உணராதவர்களே முத்தியில் அவை மூன்றும் உள்ளனவே என்று கொள்பவர்களும் முத்தி நிலையை உணராதவர்கள் ஆவர். இவ்இருவரும் தண் கடந்தை நகர்ச் சம்பந்தனது திருவருளால் மலத்தை வாட்டிப் பேரின்ப நெறியில் செலுத்துவதைத் தலைப்படாதவரே ஆவார்.

முதல் இரண்டு வரிகளில் ஏகான்ம வாதிகளின் கொள்கை மறுக்கப்பட்டது. பின் இரண்டு அடிகளில் அகச் சமயத்தார் கொள்கை மறுக்கப்பட்டது.

ஞாதிரு( அறிபவன் ), ஞானம் (அறிவு), ஞேயம்(அறியப்படும் பொருள்) என்னும் இம் மூன்றினுள் ஞேயம் ஒன்றே மெய். ஏனைய இரண்டும் பொய்த் தோற்றமே என்பது ஏகான்மவாதிகளின் கொள்கை.

ஆதலால் முத்தி நிலையில் பொருள்கள் மூன்றாகிய நிலை இல்லை என்றும் மெய்ப்பொருள் ஒன்றே உள்ளது என்றும் அந்த மெய்ப்பொருளும் மற்றொன்றினால் அறியப்படும் பொருளாய் இல்லாமையால் அதனை ஞேயம் என்று சொல்லுவது பொருந்தாது என்பதும் ஏகான்மவாதிகளின் கொள்கை.

காண்பவனாகிய ஆன்மாவும் காட்சியாகிய அறிவும் முத்திநிலையில் இல்லாது ஒழியும் என்று கொண்டால் முத்தி என்பதே பயனற்றது ஆகிவிடும். எனவே ஏகான்மவாதிகளின் கொள்கை பொருந்தாது.

அகச்சமயவாதிகள் முத்திநிலையில் அம்மூன்றும் உள்ளன என்றும் ஆன்மா அவற்றை அறியும் என்றும் கூறுவர். இவ்வாறு கொண்டால் ஆன்மா தன்னையும் தனது அறிவையும் அறியும் பொழுது சிவபரம்பொருளை அறியாது மறக்கும் என்று ஆகிவிடும். அதனால் சிவத்தில் அழுந்தும் நிலை இன்றிப் பேரின்பம் விளைவதும் இல்லாமல் போகும். ஆதலால் முத்தியில் மூன்று பொருள்களும் தனித்தனியே உள்ளன என்பதும் பொருந்தாது.

சைவசித்தாந்தத்தில் முத்தி நிலை பற்றிய கொள்கையில் மூன்று பொருள்களும் உள்ளனவாயினும் ஆன்மா சிவம் ஒன்றையே அறிந்து நிற்கும். ஏனைய இரண்டையும் அறியாது என்றே கொள்ளப்படும். இதனையே வலியுறுத்தி இப்பாடலில் ஆசிரியர் கூறினார்.

12 ஒன்றி நுகர்வது இவன் ஊணும் உறுதொழிலும்
 என்றும் இடையில் இடம் இல்லை ஒன்றித்
 தெரியா அருள் மருதச் சம்பந்தா ! சேர்ந்து
பிரியாவாறு எவ்வாறு பேசு.

என்னோடு ஒன்றி நின்றும் என்னால் தெரிய இயலாத் திருவருளுடைய மருதநகர்ச் சம்பந்த முனிவரே, வினையின் பயனை நுகரும் போதும் வினைகளை ஈட்டும் போதும் என்னோடு இறைவன் திருவருள் ஒன்றியே நிற்கிறது. ஆயினும் அதனை நான் அறிவதில்லை. வினைகளை ஈட்டுவதும் அவற்றின் பயனை நுகர்வதுமாக இடையீடின்றித் துயரில் உழல்கிறேன். அவற்றிலிருந்து விடுபட்டு உன் திருவடியைச் சேர்ந்து பேரின்பத்திலிருந்து பிரியாதிருப்பது எவ்வாறு? உரைத்தருள்வாயாக.

பாடலில் வினா வெளிப்படையாகவே கேட்கப்படுகிறது. வினைகளுக்கேற்ற பயன்களை உயிர்களுக்குக் கொடுப்பதன் மூலம் இறைவன் உயிர்களைப் படிப்படியே வினையிலிருந்து விடுவிக்கிறான். அவ்வாறு முற்றிலும் விடுவித்த பிறகு, அவன் அருளாலே உயிர் சிவானந்தப் பெருவாழ்வைப் பெறும் என்பது வினாவிற்குரிய விடையாகும்.

திருவருட்பயனில் அவனை அகன்று எங்கு இன்றும் ஆங்கு அவனாம் எங்கும், இவனை ஒழிந்து உண்டாதல், இல்(95) என்று இதற்கான விடை
எடுத்துரைக்கப்படுகிறது.

உண்மை நெறி விளக்கத்தில் இக்கருத்து

பாதங்கள் செய்திடினும் கொலை களவு கள்ளுப்
பயின்றிடினும் நெறியல்லா நெறி பயிற்று வரினும்
சாதிநெறி தப்பிடினும் தவறுகள் வந்திடினும்
தனக்கு என ஓர்செயல் அற்றுத் தான் அதுவாய் நிற்கில்
நாதன்அவன் உடல்உயிராய் உண்டுஉறங்கி நடந்து
நானா போகங்களையும் தான்ஆகச் செய்து
பேதம்அற நின்று இவனைத் தானாக்கி விடுவன்
பெருகுசிவ போகம்எனப் பேசுநெறி  இதுவே
என்று எடுத்துரைக்கப்படுகிறது.

 அருளால் உணர்வார்க்கு அகலாத செம்மைப்
பொருளாகி நிற்கும் பொருந்தித் தெருளா
வினாவெண்பா உண்மை வினாவாரேல் ஊமன்
கனாவின்பால் எய்துவிக்கும் காண்.

இப்பாடல் நூற்பயன் கூறுகிறது. ஆசிரியரின் திருவருளால் உணர்வார்க்கு இவ் வினா வெண்பாவாகிய நூல் செம்மைப் பொருளாக மலைவின்றிப் பொருந்தி நிற்கும். இதன் உண்மையைத் தேடி அறியாத வாக்கு ஊமை கண்ட கனாப் போல இதன் பயனாகிய செம்பொருள் கைகூடாது.

அறிதல் என்பது புறப்பொருள் பற்றியும், உணர்தல் என்பது அகப்பொருள் பற்றியும் ஆளப்படும் சொற்களாகும். இங்கு உணர்வார் என்றது உள்ளத்தின் உள்ளே பொருந்தி உணர்வதைக் குறித்தது.

நன்றி: சி.சு.மணி

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar