Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » மெய்கண்டார்
மெய்கண்டார்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 அக்
2013
12:10

சைவ சமயத்தில் சமயக் குரவர் நான்கு பேர்களும் சந்தான குரவர்கள் நான்கு பேரும் என்று சொல்வார்கள்.  சமயக்குரவர்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் சம்பந்தமின்றித் தனித்தனியாக குருவானவர்கள்.  ஆனால் சந்தான குரவர்களோ ஒருவருக்கொருவர் சீடர்கள்.  சந்தான குரவர்களால் சாத்திரங்கள் சொல்லப்பட்டு, மடங்கள் ஸ்தாபிக்கப்பட்டு மடங்களின் மூலம் பாடங்கள் சொல்லப்பட்டன.  சந்தான குரவர்களின் திருவுருவச் சிலைகள் அந்த அந்த மடங்களிலேயே காணப்படும்.  அங்கேயே அவர்களுக்கு வழிபாடுகள் நடைபெறும். அத்தகைய சந்தான குரவர்கள் நால்வரில் முதலாமவர் மெய்கண்டார், அவரின் சீடர், அருள் நந்தி சிவம், அவரின் சீடர் மறைஞான சம்பந்தர், கடைசியாக உமாபதி சிவம். மெய்கண்டாரின் காலம் கி.பி. 1223

மெய்கண்டார் சந்தான குரவர்கள் நால்வரில் முதலாமவர்.  சைவ சித்தாந்த சாத்திரமரபையும், சைவ சமயத்துக்கான குரு மரபையும் தோற்றுவித்தவர் மெய்கண்டாரே ஆகும்.   இவர் பிறந்தது நடுநாட்டின் பெண்ணாடகம் என்னும் ஊராகும்.  கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்கு அருகே உள்ள பெண்ணாடம் என்னும் ஊரில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் அச்சுதக் களப்பாளர் என்னும் சைவ வேளாளப் பெருநிலக் கிழார் வசித்து வந்தார்.  அவருக்கு நெடுநாட்களாகக் குழந்தைப் பேறே இல்லை.  ஆகவே தம் குலகுருவான சகலாகம பண்டிதர் என்பவரிடம் சென்று தம் குறையைச் சொல்லி பரிகாரம் தேடினார்.  சகலாகம பண்டிதரும் மூவர் தேவாரங்களில் கயிறு சார்த்திப் பார்க்கலாம் எனக் கூறிவிட்டு அவ்வாறே கயிறு சார்த்திப் பார்த்தார்.  கயிறு சார்த்திய இடத்தில் திருஞானசம்பந்தரின் திருவெண்காட்டு தேவாரப் பதிகத்தின் இரண்டாம் பாடல் கிடைத்தது.

பேயடையா பிரிவெய்தும்; பிள்ளையினோடுள்ளம் நினை
வாயினவே வரம்பெறுவர்; ஐயுற வேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே

என்ற பாடல் வந்ததைக் கண்டு சகலாகம பண்டிதர், “பிள்ளையினோடுள்ளம் நினைவாயினவே வரம்பெறுவர்; ஐயுற வேண்டா ஒன்றும்”  என்னும் இந்த வரிகளைச் சுட்டிக் காட்டிப் பிள்ளை பிறக்கும் என்று ஆறுதல் கூறித் “திருவெண்காட்டுத் தலம் சென்று அங்குள்ள மூன்று குளங்களிலும் நீராடி வழிபட்டால் கட்டாயம் பிள்ளை பிறக்கும்; கவலைப்படவேண்டாம்.”  என்று கூறி அனுப்பி வைத்தார்.  உடனே அச்சுத களப்பாளர் தம் மனைவியோடு திருவெண்காடு சென்று மூன்று குளங்களான, சூரிய தீர்த்தம், அக்னி தீர்த்தம், சக்ர தீர்த்தம் போன்றவற்றில் முறையே நீராடி திருவெண்காட்டு ஈசனை வழிபடலானார்.  ஒரு நாள் அவர் கனவில் ஈசன் தோன்றி, “அச்சுத களப்பாளா! இப்பிறவியில் உனக்குப் பிள்ளை வரம் இல்லை;  ஆனால் நீ எம் சீர்காழிப்பிள்ளையின் பதிகத்தில் நம்பிக்கை வைத்து இங்கு வந்து வழிபட்டு விரதம் இருந்ததால் உனக்குத் திருஞான சம்பந்தனைப் போன்றதொரு தெய்வமகன் பிறப்பான்.”  என்று அருளுகிறார்.  அவ்வாறே அச்சுத களப்பாளருக்கு ஒரு பிள்ளைக் குழந்தை பிறக்கிறது.  குழந்தைக்குத் திருவெண்காட்டு ஈசனின் பெயரான சுவேதவனப் பெருமாள் என்ற பெயரே வைக்கப்பட்டது.  குழந்தை பிறந்ததிலிருந்தே சிவபக்திச் செல்வனாய் விளங்கிற்று.  குழந்தைக்கு மூன்று வயதிருக்கையில் ஒரு அதிசயம் நடந்தது.

திருக்கைலையில் உபதேசம் பெற்ற பரஞ்சோதி முனிவர் கயிலையில் இருந்து அகத்தியரைக் காணவேண்டிப் பொதிகைக்கு ஆகாய மார்க்கமாகப் பறந்து கொண்டிருந்தார்.  அப்போது திருவெண்ணெய்நல்லூரில் மாமன் வீட்டில் இருந்த குழந்தை சுவேதவனப் பெருமாள் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தார்.  பரஞ்சோதி முனிவர் அவ்வழியே வானவீதியில் செல்கையில் அவருக்கு மேலே செல்லமுடியாமல் தடங்கல் ஏற்பட்டது.  அதிசயித்த முனிவர் காரணம் அறிய வேண்டிக் கீழே நோக்கினார்.  ஜோதிமயமான தேஜஸுடன் கூடிய குழந்தை ஒன்று கீழே விளையாடுவதைக் கண்டார்.  உடனேயே அவருக்கு ஞானதிருஷ்டியில் அக்குழந்தை பெரிய மஹானாக வரப்போவதும், இந்த மூன்றாம் வயதிலேயே குழந்தை உபதேசம் பெறக்கூடிய பக்குவத்தோடு காததிருப்பதையும் உணர்ந்து கொண்டார். உடனே விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கியவர் குழந்தையைத் தம்கைகளால் எடுத்து அணைத்துக்கொண்டு ஸ்பரிச, நயன தீக்ஷைகள் அளித்தார்.

சிவஞான உபதேசமும் செய்வித்தார்.  பரஞ்சோதி முனிவரின் குருவின் பெயர் சத்தியஞான தரிசினி என்பதாகும்.  அந்தப் பெயரையே தமிழாக்கம் செய்து குழந்தையின் ஞான மார்க்கப் பெயரை மெய்கண்டார் என தீக்ஷõதிருநாமமாக  மாற்றியும் அருளிச் செய்தார். பின்னர் வான்வழியே சென்றுவிட்டார்.  அன்றுமுதல் சுவேதவனப்பெருமாள் மெய்கண்டார் ஆனார்.  சமய குரவர்களில் முதல்வரான சம்பந்தர் தம் மூன்றாம் வயதில் எவ்வாறு இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு அன்னையின் ஞானப்பாலை உண்டு ஞானம் பெற்றாரோ அப்படியே சந்தானகுரவரில் முதல்வரான மெய்கண்டாரும் தம் மூன்றாம் வயதிலேயே குருவால் ஆட்கொள்ளப்பட்டு ஞான உபதேசம் பெற்றார்.  இன்றைய சைவசித்தாந்த சாத்திர மரபைத் துவங்கி வைத்தவர் மெய்கண்டாரே ஆகும். மெய்கண்டாரால் எழுதப் பெற்ற ஒரே சாத்திர நூல் சிவஞானபோதம் ஆகும்.

சகலாகம பண்டிதருக்கு இந்தச் செய்தி தெரிய வந்தது.  அவர் தாம் சொல்லிப் பிறந்த குழந்தை இவ்வளவு புகழோடு குழந்தைப்பருவத்திலேயே சீடர்கள் பலரோடும் திகழ்வது கண்டு ஆணவம் தலைக்கேற  ஒருநாள் அவரைக்காணச் சென்றார்.  அப்போது மெய்கண்டார் ஆணவமலம் குறித்துச் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தார்.  உடனே சகலாகம பண்டிதர் மெய்கண்டாரை ஒரே கேள்வியில் வீழ்த்திவிட நினைத்து “ஆணவ மலத்தின் சொரூபம் யாது?” எனக்கேட்க, மெய்கண்டார் தம் சுட்டுவிரலை நீட்டி அவரையே காட்டினார்.  தம்மையே ஆணவமலத்தின் சொரூபமாகக் குழந்தை குரு காட்டியதும் சகலாகம பண்டிதரின் ஆணவம் அடங்கிப் பக்குவம் வந்தது.  வயதையும் பொருட்படுத்தாமல் விரைந்து சென்று மெய்கண்டாரின் கால்களில் வீழ்ந்து தம்மையும் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அவ்வாறே மெய்கண்டாரும் அவரைத் தம் சீடனாக ஏற்றுக்கொண்டு ஞான உபதேசம் வழங்கி அருள் நந்தி என்ற தீட்சாநாமமும் அளித்தார்.  ஏற்கெனவே மெய்கண்டாருக்கு 48 மாணவர்கள் இருந்தனர்.  அருள் நந்தி 49-ஆம் மாணவராக ஆனார்;  சிலநாட்களில் மெய்கண்டாரை அடுத்து இரண்டாம் சந்தான குரவராக ஆனார்.  மெய்கண்டார் எவ்வளவு  காலம் இவ்வுலகில் வாழ்ந்தார் என்பது குறித்துச் சரியாகத் தெரியவில்லை.  ஆனால் திருவெண்ணெய் நல்லூரிலேயே முக்தி அடைந்ததாய்த் தெரிய வருகிறது.  அவரது சமாதிக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தால் நிர்வகிக்கப்படுவதாயும் தெரியவருகிறது.  திருவாவடுதுறை ஆதீனம் அவர் பிறந்த இடமான பெண்ணாகடத்தில் களப்பாளர்மேடு என்னும் பெயரில் வழங்கிய இடத்தைக் கண்டுபிடித்து அங்கே மெய்கண்டாருக்காக நினைவு நிலையம் கட்டி மெய்கண்டாரின் விக்ரஹமும் நிறுவப் பெற்றதாயும், தெரிந்து கொள்கிறோம்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar