Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவஞான சித்தியார் பகுதி-2 சிவஞான சித்தியார் பகுதி-4
முதல் பக்கம் » சிவஞான சித்தியார்
சிவஞான சித்தியார் பகுதி-3
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2013
03:11

சாதாக்கியம்- சதாசிவம்.

87. ஒருவனே, இராவ ண ஆதி பாவகம் உற்றாற் போலத்
தருவன், இவ் உருவம் எல்லாம்; தன்மையும் திரியான் ஆகும்;
வரும்வடிவு எல்லாம், சத்தி சத்திதான் மரமும் காழ்ப்பும்
இருமையும் போல மன்னிச், சிவத்தினோடு இயைந்து நிற்கும்,

நாடகத் தொழில் வல்லவன் ஒருவன் இராவணன் போன்ற பல வேடங்களைத் தாங்கி நாடகங்களில் நடித்தல் கூடும். ஆயினும் அவன் பூண்ட வேடங்கள் யாவும் அவனுடைய இயல்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தா. அதுபோலவே இறைவனும் உயிர்களிடத்துக் கொண்ட பேரருளால் அருவம், உருவம், அருஉருவம் என்னும் வடிவங்களைத் தான் நினைந்தவாறே தரித்துக் கொள்வான். ஆயினும் அவனுடைய தன்மையிலிருந்து சற்றேனும் திரிவான் அலன். இறைவன் கொள்ளுகிற வடிவங்கள் யாவும் சத்தியின் வடிவங்களே. அச்சத்தி, மரமும் அம்மரத்தின் உள்ளே உள்ள வயிரமும் ஒன்றோடு ஒன்று கூடி நீக்கமின்றி நிற்றல் போலச் சிவத்தினோடு இயைந்து நீக்கமின்றி நிற்கும். காழ்ப்பு- மரத்தின் வயிரம். இருமை என்றது இரண்டு என்ற  எண்ணைக் குறித்தது.

88. பொன்மை, நீல ஆதி வன்னம் பொருந்திட, பளிங்கு அவற்றின்
தன்மையாய் நிற்கு மாபோல் சத்திதன் பேதம் எல்லாம்
நின்மலன் தானாத தோன்றி நிலைமைஒன் றாயே நிற்பன்;
முன்அருட் சத்தி தன்பால் முகிழ்க்கும்; தான் முளையான் அன்றே.

பொன்மை, நீலம் முதலிய வண்ணங்களைப் பொருந்திய போது பளிங்கு அந்தந்த நிறங்களின் தன்மையையே  கொண்டு வேற்றுமை இன்றி நிற்பது போல, இறைவனும் தன் சத்தியின் வேறுபாடுகள்யாவும் தானாகவே தோன்றுமாறு வேற்றுமை இன்றி நிற்பன். அவன் தோன்றும் போதும் அருட்சத்தின் இடமாகவே தோன்றுவானே அன்றித் தானாக வேறு தோன்றுவான் அல்லன்.

பொன்மை- நீலம் என்பன இங்கு நம் முன்னோர்கள் அடிப்படை நிறங்களாகக் கொண்ட ஐந்து நிறங்களைக் குறித்து நின்றன. நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் என்று திருவாசகம் சிவபுராணத்தில் அருளியதையும் இங்கு நினைவு கூர்க.

89. சத்தியும் சிவமும் ஆய தன்மை, இவ் உலகம் எல்லாம்
ஒத்துஒவ்வா ஆணும்பெண்ணும் உணர்குண குணியும் ஆகி,
வைத்தனன்; அவளால் வந்த ஆக்கம்,இவ் வாழ்க்கை எல்லாம்;
இத்தையும் அறியார், பீட லிங்கத்தின் இயல்பும் ஓரார்.

இவ்வுலகம் முழுவதும் வாழ்வதற்குக் காரணம் இறைவன் சத்தியும் சிவமுமாக வடிவு கொண்டு அருளியமையே ஆகும். உயிர்த் தொகைகள் யாவும் ஆணும் பெண்ணும் என்று இரு வகைப்பட்டன. இவை தம்முள் ஒரு வகையால் ஒத்தும், ஒருவகையால் ஒவ்வாமலும் விளங்குவன. குணமும் குணத்தை உடைய பொருளுமாக இறைவனே வாழவைத்தவன். உயிர்களுக்கு இத்தகைய ஆக்கம் நிறைந்த வாழ்க்கை சிவத்தோடு இயைந்த சத்தியினால் அருளப்பட்டது ஆகும். இதனை அறியாதவர்கள் பீடமும் லிங்கமுமாக விளங்குகின்ற திருமேனி சத்தியும் சிவமும் ஆகும் என்பதனையும் உணர்ந்திலர்.

90. சிவன்- அரு உருவும் அல்லன்; சித்தினோடு அசித்தும் அல்லன்;
பவமுதல் தொழில்கள் ஒன்றும் பண்ணிடு வானும் அல்லன்;
தவம்முதல் யோக போகம் தரிப்பவன் அல்லன்; தானே
இவைபெற இயைந்தும், ஒன்றும் இயைந்திடா இயல்பி னானே.

சிவபெருமானுடைய தன்னியல்பு இன்னது என்று சொல்ல இயலாதது. சிவபிரான் அருவுமல்லன்; உருவுமல்லன்; அருஉருவுமல்லன். அவன் அறிவுடையதாகிய சித்துப் பொருளும் அல்லன். அறிவற்றதாகிய அசத்தின் வடிவினனும் அல்லன். சிவபிரான் படைப்பு முதலிய ஐந்தொழில்களும் இயற்றவானும் அல்லன். உயிர்களுக்கு அறிவுறுத்துவதற்காக யோக வடிவம், போக வடிவம் ஆகியவற்றைத் தரிப்பவனும் அல்லன். சிவபெருமான் உயிர்களின் பொருட்டுப் பொது இயல்பாகிய இவற்றைப் பொருந்தி  நின்றானாயினும் உண்மையில் அவற்றோடு சிறிதும் பொருந்தாத தன்னியல்பு உடையவனாவான்.

இறைவனுடைய இயல்பு உண்மை இயல்பு, பொது இயல்பு என்று இரண்டு வகையாகக் கூறப் பெறும். அவை முறையே சொரூப இலக்கணம் என்றும், தடத்த இலக்கணம் என்றும் வழங்கும். உயிர்களுக்கு அருள் பாலிக்கும் பொருட்டு இறைவன் தானாக மேற்கொள்ளுகிற வடிவங்களைப் பற்றி மட்டிலுமே இதற்கு முன் ஆசிரியர் கூறினார். அது இறைவனது தடத்த இலக்கணம் எனப்படும். சிவபெருமானது உண்மை இயல்பு என்ற சொரூப இலக்கணம் இந்த நூலின் உண்மை அதிகாரத்தில் ஆசிரியரால் விளக்கப்பெறும்.

இரண்டாம் நூற்பா

91. உலகுஎலாம் ஆகி, வேறுஆய், உடனும்ஆய், ஒளிஆய், ஓங்கி,
அலகுஇலா உயிர்கள் கன்மத்து ஆணையின் அமர்ந்து  செல்லத்
தலைவனாய், இவற்றின் தன்மை தனக்கு எய்தல் இன்றித் தானே
நிலவுசீர் அமலன் ஆகி, நின்றனன், நீங்காது எங்கும்,

சிவபெருமான் கலப்பினால் உலகு உயிர்கள் அனைத்திலும் தானேயாய் நின்றனன். பொருள் தன்மையால் உலகு உயிர்களுக்கு வேறாகி நின்றனன். உயிர்க்கு உயிராக இருந்து அவற்றைச் சிவபெருமானே இயக்குகின்றான். ஆகையால் அவற்றின் உடனாய் நின்றனன். அந்தந்த உயிர்களின் வழி ஓங்கி நிற்பதாகிய ஒளி நிறைந்த சத்தி வடிவமாகவும் நின்றனன். சிவபிரானது ஆணையினால் வரும் இருவினைகளுக்கு ஏற்ப எண்ணற்ற உயிர்கள் ஐந்தொழிலுக்கு உட்பட்டுப் பிறந்தும், வாழ்ந்தும், இறந்தும் வருகின்ற காலத்துத் தானே தலைவனாய் இருந்து செலுத்துவான். இத்தகைய தன்மை உடைய உலகும் உயிர்களும் அவனை விட்டு நீங்காமல் நிற்பினும் அவற்றின் தன்மை தனக்கு எய்முதல் இன்றித் தான் இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கியவனாக நின்றனன். எங்கும் நீங்காது நிறைந்தும் நின்றனன்.

அநாதி முத்த சித்துரு (பாடல் 21) என்று ஆசிரியரால் முன்னர்க் கூறப்பட்ட இறைவன் எதிலும் தோய்வின்றித் தானே ஒளி வடிவாய் நிற்கின்ற தன் உண்மை நிலையில் சிவம் எனப்படுவான். உலகெலாம் ஆகிவேறாய் உடனுமாய் உயிர்களின் வழி நிற்கும் தன்மையில் சத்தி எனப்படுவான். இவ்வாறு ஒருமையில் இருமை தாதான்மியம் என்று பெயர் பெறும். இறைவன் ஐந்தொழில் செய்யும் தன்மையில் பதி எனப் பெயர் பெறுவான். இவ்வியல்பு சிவாகமங்களில் கூறப்பட்டுள்ளது. அதனை உணர்த்துவதற்கே இந்நூலாசிரியர் இவ்வாறு பகுத்து ஓதினார்  என்பது சிவஞான முனிவரின் உரை விளக்கம். சிவஞான போதத்தின் இரண்டாவது நூற்பாவின் கருத்து இந்நூலாசிரியரால் இப்பாடலில் கூறப்பட்டது. அது போலவே இப்பாடலும் நான்கு கூறுகளை உள்ளடக்கியது.

முதல் அதிகரணம்

92. ஒன்று என மறைகள் எல்லாம் உரைத்திட, உயிர்கள் ஒன்றி
நின்றனன் என்று பன்மை நிகழ்த்துவது என்னை? என்னின்,
அன்று; அவை பதிதான் ஒன்றுஎன்று அறையும்; அக்கரங்கள் தோறும்
சென்றிடும் அகரம் போல நின்றனன், சிவனும் சேர்ந்தே.

மறைகள் யாவும் ஆன்மா ஒன்றே என்று கூறுகின்றன. அவ்வாறு இருக்க உயிர்கள் எண்ணிறந்தன என்றும், இறைவன் அவற்றோடு ஒன்றி நிற்பான் என்றும் கூறுவது பன்மைக் கருத்து அன்றோ. இது பொருந்துமோ என்று சிலர் வினவுவர். அவ்வாறு அன்று; மறைகள் எல்லாம் இறைவன் ஒருவனே என்று கூறுகின்றன. உயிர்களை ஒன்று என மறைகள் கூறிற்றல. உயிரும் மெய்யுமாகிய எழுத்துக்கள் யாவற்றுடனும் ஒன்றாகியும். அவற்றிலிருந்து வேறாகியும் அவற்றின் உடன் இருந்து இயக்குவதாயும் விளங்கும் அகர உயிர் போலச் சிவபெருமானும் உலகு உயிர்களோடு சேர்ந்து நின்றனன்.

மறைகள் யாவும் ஆன்மா ஒன்றே எனக் கூறியதற்கு உட்கிடை இறைவன் ஒருவனே என்பதாகும். அகர முதல எழுத்து எல்லாம் எனத் தொடங்கும் திருக்குறளும் அகர உயிர் போல அறிவாகி எனத் தொடங்கும் திருவருட்பயன் பாடலும் இங்கே நினையத்தக்கன.

93. உருவொடு கருவி எல்லாம் உயிர்கொடு நின்று வேறாய்
வருவது போல, ஈசன் உயிர்களின் மருவிட வாழ்வன்;
தரும், உயிர் அவனை ஆகா, உயிரவை தானும் ஆகான்;
வருபவன், இவை, தான் ஆயும் வேறும் ஆய் மன்னி நின்றே.

உயிர் உடம்பையும், ஐம்பொறி முதலிய கருவிகளையும் கொண்டு உடம்பின் உடனாக நிற்பதே எனினும் உடம்பிற்கும் உயிர்க்கும் வேறுபாடு உண்டு. உடம்பைச் செலுத்துவது உயிரே. அதுபோல உயிர்களைச் செலுத்துபவன் இறைவனே. எனினும் உயிர்கள் இறைவனாகா; இறைவனும் உயிர்களாக மாட்டான். இறைவன் அவ்வுயிர்களோடு கலந்து நிற்பான். எனினும் அவற்றிற்கு வேறாகவும் இருப்பான்.

முந்திய பாடலாலும் இப்பாடலாலும் இறைவன் உயிர்களோடு ஒன்றாயும் உடனாயும் வேறாயும் நிற்பான் என்பது ஆசிரியரால் விளக்கப்படுகிறது. மற்றைச் சமயத்தவர் பேதம் (வேறுபாடு) பேதா பேதம் (ஒருவகையால் வேறுபட்டும் ஒரு வகையால் வேறுபடாதும் இருப்பது) அபேதம் (வேறுபாடு அற்றது)  என்ற மூன்றில் ஒன்றையே கொள்வர். சைவ சித்தாந்தம் ஒன்றாய் உடனாய் வேறாய் என்ற மூன்று கொள்கைகளையும் ஒரு சேர ஏற்றுக் கொள்ளும்.

உடம்பும் உயிரும் தமக்குள் வேற்றுமை இன்றி நிற்கின்றன. அவ்வாறே இறைவன் உயிர்களோடு ஒன்றாய் நிற்பான் என்பது விளக்கப்பட்டது.

உடம்பும் உயிரும் ஒற்றித்து நின்றாலும் உடம்பு வேறு உயிர் வேறு என்பது தெளிவாக அறியப்படுகிறது. உடம்பு கண்ணுக்குப் புலனாவது. அதற்கு என அறிவற்றது. அழியும் இயல்பு உடையது. இதற்கு மாறாக உயிர் கண்ணுக்குப் புலனாகாதது. தனக்கென ஓர் அறிவுடையது அழிவற்றது. இவ்வாறு இறைவன் வேறாய் நிற்பது விளக்கப்பட்டது.

உயிர் வேறு உடம்பு வேறு எனினும் உயிரோடு கூடினால் அன்றி உடம்புக்குச் செயற்பாடு இல்லை. அது போல இறைவனும் உயிரோடு உடனாய் நின்று செலுத்தினால் அல்லது உயிருக்கும் செயற்பாடு இல்லை. இவ்வாறு இறைவன் உடனாய் நிற்பது விளக்கப்பட்டது.

இக்கருத்தின் விரிவு இந்நூலின் இனிவரும் பகுதிகளில் விளக்கமாகக் கூறப்படும் என்பது பற்றி ஈண்டு விரித்திலர் என்றார் சிவஞான முனிவர்.

இரண்டாம் அதிகரணம்

94. இருவினை இன்பத் துன்பத்து, இவ்வுயிர், பிறந்து இறந்து
வருவது போவது ஆகும்; மன்னிய வினைப்பலன்கள்
தரும், அரன் தரணியோடு தராபதி போலத் தாமே
மருவிடா, வடிவும் கன்ம பயன்களும்; மறுமைக் கண்ணே.

முற்பிறவிகளில் உயிர்கள் ஈட்டிய இருவினைக்கு ஈடாக இந்தப் பிறவியில் இன்ப துன்பங்களை நுகரும். அவ்வாறு நுகரும் காலத்து மேலும் வினைகளைச் செய்யும். இவ்வாறு மேலும் மேலும் வினையை ஈட்டுகிற உயிர்கள் இவ்வுலகத்தில் பிறந்தும் இறந்தும் துறக்க நிரயங்களில் சென்றும் மீண்டும் வரும். வினையின் பயன்களை உயிர்களுக்கு மருத்துவரைப் போலவும் மன்னனைப் போலவும் சிவபெருமானே தனது ஆணையால் கூட்டுவிப்பான். உடம்பும் வினைப்பயன்களும் அறிவற்றன. ஆதலால் அவை தாமாகவே மறுமையில் உயிரை வந்து பொருந்தா.

தரணம்- கடத்தல், நோயைக் கடப்பிப்பதனால் மருத்துவனைத் தரணி என்றார். இந்நூலின் 125- வது பாடலில் மருத்துவன் நோய் தீர்க்கும் முறைமை விரித்துக் கூறப்படும். தராபதி- அரசன்.

95. இருவினை என்னை; இன்பத் துன்பங்கள் இயல்பது? என்னின்
ஒருதன்மை இயல்புக்கு உள்ளது; ஒருவனுக்கு இரண்டு செய்தி
வருவது என்? மலரும் தீயும் மருவலின், வாசம் வெம்மை
தருவதுஎன், நீர்என் செய்து? தான் இயல்பு ஆகும் அன்றே.

உலகில் ஒருவனுக்கு இன்பமும் துன்பமும் வருவதற்குக் காரணம் இருவினையின் பயனே என்பது எவ்வாறு பொருந்தும். இன்பமும் துன்பமும் இயல்பாக வருவனவே யன்றி அவற்றுக்கு ஒரு காரணம் கூறுவானேன் என்று சிலர் வினவுவர். ஒரு பொருளின் இயல்பு என்பது ஒரு தன்மையாக இருப்பதன்றி இரு வேறுபட்ட தன்மைகள் ஒரு பொருளுக்கு இருத்தல் இயலாது. அவ்வாறு ஒருவனுக்கே இரண்டு வேறுபட்ட நுகர்வுகள் வருவனவாயின் அவை ஓர் காரணம் பற்றியே வரும்.

நீர் இயல்பாக மணமற்றது. குளிர்ந்தது. நீரோடு மலர் சேர்ந்தால் அந்நீர் மணம் உடையதாகிறது. நீரோடு நெருப்புச் சேர்ந்தால் அது வெப்பம் உடையதாகிறது. இதனால் நீரின் வினைக்கு ஏற்ப மணமும் வெப்பமும் வந்தன என்று கூற முடியுமா. இவை இயல்பு ஆவது போல இன்பமும் துன்பமும் உடம்புக்கு இயல்பே ஆம் என்று அவர்கள் கூறுவர். இதனை அடுத்த பாட்டில் மறுக்கின்றார்.

96. தன்இயல்பு ஒழிய, பூவும் தழலும் வந்து அணைய, நீரின்
மன்னியது இரண்டு செய்தி; வரும்இரு வினையி னாலும்
உன்னிய இன்பத் துன்பம் உறும், உயிர்; உணர்வு இல்லாத
துன்னிய அசித்தை இன்பத் துன்பங்கள் சூழ்ந்தி டாவே.

நீருக்கு இயல்பாய் உள்ள குளிர்ச்சி மாறிப் பூவும் நெருப்பும் வந்து பொருந்துவதால் அதற்கு மணமும், வெப்பமும் செயற்கையாக உண்டாயின. இன்ப துன்ப உணர்ச்சிகள் அறிவுடையதாகிய உயிருக்கே உளவாகும். அறிவற்ற உடலை இன்பமும் துன்பமும் பொருந்தும் என்பது கூடாது.

97. இம்மையின், முயற்சி யாலே இருநிதி ஈட்டி, இன்பம்
இம்மையே நுகர்வர்; செய்தி இலாதவர் பொருளும் இன்றி
இம்மையே இடர்உ ழப்பர்; வேறுஇரு வினையது உண்டேல்;
இம்மையின் முயற்சி இன்றி எய்திட வேண்டும், இங்கே.

இப்பிறவியிலேயே நல்ல முயற்சி உடையவர். அதனால் பெரும் பொருள் ஈட்டி அதனைக் கொண்டு இம்மையிலேயே இன்பம் துய்ப்பர். ஆள்வினை இல்லாதவர் முயற்சி இல்லாமையினாலே பொருளும் இன்றி இப்பிறவியிலேயே துன்பத்தில் உழல்வர். இதுதான் நியதி. இருவினை உண்டு. எனில் இம்மையிலே எவ்வித முயற்சியும் இன்றிப் பெரும் பொருள் ஈட்டுதல்  வேண்டும். அவ்வாறு யாரையும் கண்டதில்லை. எனவே செல்வத்துக்கும் இன்பத்துக்கும் முயற்சியே காரணமாகும். இருவினை காரணமாகாது என்று அவர்கள் மீண்டும் கூறுகிறார்கள். இதனை அடுத்த பாட்டில் மறுக்கின்றார் ஆசிரியர்.

செய்தி இல்லாதவர் - செயற்பாடு அற்றவர்கள். அதாவது முயற்சியற்றவர்கள்.

98. இருவினைச் செயல்காண்; இம்மை இரும்பொருள் இன்பம் வேண்டி
வருவினை செய்யுங் காலை, மடிவரும்; மடியும் இன்றித்
தருவினை அதனில், அத்தம் தான் அறும்; துயரும் தங்கும்;
ஒருவினை செய்யா தோரும் உடையர் இவ் வுலகத் துள்ளே.

இப்பிறவியில் மிகுந்த பொருளை ஈட்டி இன்பம் பெறுதல் வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒருவன் செயலாற்றும் போது அவனுக்குச் சோம்பல் வருவதைக் காண்கிறோம். அந்தச் சோம்பலினால் அவனுடைய முயற்சியில் தளர்வு வரும். அதுவும் இன்றி முயற்சி பயன்தராமல் பொருள் இழப்பு நேர்வதையும் காண்கிறோம். அதனால் அவன் துயர்படுவதையும் காண்கிறோம். இதற்கு மாறாக எந்த முயற்சியும் செய்யா தார்க்கும் செல்வம் மிகுவதையும் காண்கிறோம். இவற்றால் பொருள் ஈட்டுவதற்கும், இன்பம் துய்ப்பதற்கும் கண்ணுக்குப் புலப்படாத வேறு ஒரு காரணம் உண்டு என்பதை உய்த்து உணர்கிறோம். அதுவே இருவினைப் பயன் என்று அறிக.

உடையார்- செல்வம் உடையார். மடி- சோம்பல் ஆகூழால் தோன்றும் அசைவின்மை; கைப்பொருள், போகூழால் தோன்றும் மடி (குறள் 371) என்பதனை இங்கு நினைவு கூர்க.

99. பேறுஇழவு இன்ப மோடு, பிணிமூப்புச் சாக்காடு என்னும்
ஆறும்முன் கருவுள் பட்டது; அவ்விதி அனுப வத்தால்
ஏறிடும்; முன்பு செய்த கன்மம் இங்கு இவற்றிற்கு ஏது
தேறுநீ- இனிச்செய் கன்மம் மேல்உடற் சேரும், என்றே.

இந்தப் பிறவியில் நிகழ்கின்ற நற்பேறுகளும், இழப்புகளும், இன்பமும், துயரமும், மூப்பினால் வரும் நரை திரையும், இறப்பும், என்னும் இவை ஆறும் ஒரு உயிர் கருவாய்க் கிடந்த போதே அதற்கு உரியனவாக அமைந்து கிடந்தன. அவையே பின்னர் அவ்வுயிர் வாழும் காலத்து அதனை வந்து பொருந்தும். முற்பிறவிகளில் செய்த வினைகளின் பயனே இங்குக் கூறப்பட்ட ஆறனுக்கும் காரணமாக அமைந்தவை என்பதைத் தேறித் தெளிக. இந்தப் பிறவியில் மீண்டும் ஈட்டப்படும் வினைகள் அவ்வுயிரால் இனிமேல் எடுக்கப்படும் பிறவிகளில் இந்த ஆறுவகை நுகர்வுகளுக்கும் காரணமாக அமையும்.

மாதவச் சிவஞானமுனிவர் சிவஞான சித்தியார் பொழிப்புரையில் மூப்பு என்ற சொல் உயர்வையும், சாக்காடு என்ற சொல் இழிவு என்ற பொருளையும் தருவன என்று உரை வரைந்துள்ளார். அவ்வாறு உரை வரைந்தமைக்கு நான்கு காரணங்கள் காட்டி அமைதியும் கூறினார்.

அவருடைய உரை வருமாறு. ஈண்டு மூப்பு என்றது உயர்ச்சியின் மேற்று. அது விண்ணோர்க்கு எல்லாம் மூப்பாய் என்பதனானும், மூத்த திருப்பதிகம் என்பதனானும் உணர்க.

சாக்காடு போறலின் இழிவைச் சாக்காடு என்று உபசரித்தார். ஏனை மூப்புச் சாக்காடுகள் பேறு இழவு இன்பம் பிணி போலத் தம்முள் மறுதலை ஆகாமையானும் அவற்றின் மறுதலைப் பொருள்களை உடன் கூறாமையானும், இவற்றுள் அடங்குதலின் வேறு கூற வேண்டாமையானும், காலம் பற்றி ஒரு தலையான் வரும் மூப்பின்கண் ஐயம் அறுத்தல் வேண்டாமையானும் அவற்றை உடன் வைத்து எண்ணி உரை செய்தல் பொருந்தாமை அறிக.

100. உடற்செயல் கன்மம்; இந்த உடல்வந்த வாறு ஏது என்னின்
விடப்படும் முன் உடம்பின் வினை இந்த உடல் விளைக்கும்;
தொடர்ச்சியால் ஒன்றுக்கு ஒன்று தொன்று தொட்டு அநாதி- வித்தின்
இடத்தினின் மரம், மரத்தின் வித்தும் வந்து இயையு மாபோல்.

இங்கு ஒரு வினா எழும். கன்மம் எனும் வினையைச் செய்வதற்கு உடல் இன்றியமையாது வேண்டப்படும். எனவே இந்த உடல் எவ்வாறு வந்தது என்பதே வினா. முந்திய பிறப்பில் செய்யப்பட்ட வினைகள் இந்தப் பிறவியில் வருகின்ற உடம்பைத் தோற்றுவிக்கும். அவ்வாறே இந்தப் பிறப்பில்  செய்யப்பட்ட வினைகளுக்கு ஏற்ப அடுத்த பிறவி அமையும். சங்கிலித் தொடர் போல ஒன்றுக்கு ஒன்று தொன்று தொட்டுத் தோற்றமில் காலம் தொடங்கி இவ்வாறு வரும். வித்திலிருந்து மரமும் மரத்திலிருந்து வித்தும் தோன்றுவது போன்றது இத் தொடர்ச்சி.

இவ்வாறு வருவது பிரவாக அநாதி என்று கூறப்படும். அதாவது ஓடுகின்ற வெள்ளநீர் இடம் பெயர்ந்து கொண்டே அந்த இடத்தை மேலும் வரும் நீர் நிரப்பியது போன்ற தொடர்ச்சி. இவ்வாறு விடையிறுப்பதால் வரம்பின்றி ஓடி அநவத்தை என்னும் குற்றம் நிகழும் என்று கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் காணப்படும் பரு உடம்பிற்கு வேறாக நுண் உடம்பு (சூக்கும உடம்பு) ஒன்று உண்டு ஆகையால் என்று சிவஞான முனிவர் விளக்குகிறார்.

101. முன்செயல் விதியை முயற்சியோடு அனுபவித்தால்
இச்செயல் பலிக்குமாறு என்? இதம் அகிதங்கள் முன்னர்
அச்செயலானால்; இங்கும் அவைசெயின் மேலைக்கு ஆகும்;
பின்செயாது அனுபவிப்பது இன்று பின் தொடரும், செய்தி.

முந்திய பிறவிகளில் செய்த வினையின் பயனே இந்தப் பிறவியில் அனுபவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆகவே இந்தப் பிறவியின் நுகர்வுகள் யாவும் முந்திய பிறப்பின் வினையால் தோன்றியவை என்பது பெறப்படும். அவற்றை நுகரும்போது நிகழும் செயல்கள் மீண்டும் வினையாகி அடுத்த பிறவிக்குக் காரணமாகும் என்பது எவ்வாறு என்று சிலர் வினவுவர். நலமும் தீங்கும் இயற்றிய உயிர் அடுத்த பிறவியில் அவற்றின் பயனை நுகரும் என்பதை உடன் பட்டவர்கள். இப்பிறவியில் செய்யும் நலம் தீங்குகளும் அடுத்த பிறவிக்கும் தொடரும். என்பதனை உடன்பட்டே ஆகவேண்டும் . ஏனெனில் நுகர்வுகளும் செயற்பாடே ஆகும். அந்தச் செயற்பாட்டின் பயன்கள் அடுத்த பிறவியிலும் தொடரும்.

வினையின் பயன் இவ்வாறு தொடர்ந்து பிறழாது வரும் என்பதை உணர்த்துவதற்காகவே பிற்செயாது அனுபவித்தல் இன்று என்று எதிர்மறை வகையால் ஆசிரியர் கூறினார்.

102. மேலைக்கு வித்தும் ஆகி விளைந்தவை உணவும் ஆகி
ஞாலத்து வருமாபோல நாம்செயும் வினைகள் எல்லாம்
ஏலத்தான் பலமா- செய்யும் இதம் ஆகி தங்கட்கு எல்லாம்
மூலத்தது ஆகி என்றும் வந்திடும் முறைமை யோடே.

உலகத்திலே விளைந்த நெல்லும், கனியும் போன்றவை நமக்கு உணவாகப் பயன்படுகின்றன. அதனோடு அமையாமல் அவை அடுத்த பருவத்திற்கு வித்தாகவும் பயன்படுகின்றன. அதனைப் போன்றே தான் என்னும் முனைப்போடு செய்யப்படுகின்ற வினைகள் யாவும் எப்பொழுதும் முறையாக அவற்றின் நன்மை தீமைகளுக்கு ஏற்பப் பொருத்தமான நுகர்வுகளைத் தரும். பிற உயிர்களுக்கு இழைக்கப்படுகின்ற நலம் தீங்குகள் புண்ணியமும் பாவமும் என விளையும். அது மறு பிறவியில் இன்ப துன்பமாய் வந்து பொருந்தும். அவற்றை நுகரும் போதே மேலும் வினைகள் விளையும். இந்த முறைமை ஒரு போதும் பிறழாது வரும்.

103. இதம் அகிதங்கள் என்பது- இகல்மனம் வாக்குக் காயத்து
இதம் உயிர்க்கு உறுதி செய்தல்; அகிதம் மற்றது செய்யாமை;
இதம் அகிதங்கள் எல்லாம் இறைவனே ஏற்றுக் கொண்டு இங்கு
இதம் அகிதத்தால் இன்பத் துன்பங்கள் ஈவன் அன்றே.

நலம் தீங்குகள் என்பன மனம் மொழி மெய்களால் உயிர்க்கு உறுதி பயப்பவற்றைச் செய்தலும் செய்யாது விடுதலுமாகும். இறைவனே ஒரு செயலின் நன்மை தீமைகளை மதிப்பிட வல்லவன். ஆகையால் அவற்றை அவனே கைக் கொண்டு அதனைச் செய்த உயிர்களுக்கு இன்பத் தையும் துன்பத்தையும் கூட்டுவான்.

இதம் அகிதம் என்ற வட சொற்களுக்கு முறையே நலம் தீங்கு என்று பொருள். இதம் என்பது உயிர்க்கு உறுதி பயப்பவற்றைச் செய்தல். அகிதம் என்பது செய்யத் தகாதவற்றைச் செய்தல் மட்டும் இன்றி செய்யத் தக்கவற்றைச் செய்யாமையுமாகும்.

104. இறைவன் இங்கு ஏற்பது என்னை இதம் அகி தங்கள்? என்னின்
நிறைபான் உயிர்க்கு வைத்த நேசத்தின் நிலைமை யாகும்;
அறம்மலி இதம் செய்வோருக்கு அநுக்கிரகத்தைச் செய்வன்;
மறம்மலி அகிதம் செய்யின் நிக்கிர கத்தை வைப்பன்.

உயிர்கள் செய்த நலம் தீங்குகள் இரண்டினையும் இறைவனே ஏற்றுக் கொள்வான் என்பது ஏன்? எனில் எவ்விடத்தும் நீக்கம் இன்றி நிறைந்திருக்கும் இறைவன் உயிர்களிடத்து பேரருளினால் அவை வீடு பேறு அடைவதன் பொருட்டேயாகும். அறம் மிகுந்த நன்மைகளைச் செய்வோர்க்கு இறைவன் அருள்புரிவான். மறம் மிகுந்த தீங்கு புரிவோரை அதற்கு ஏற்ப ஒறுப்பான்.

அனுக்கிரகம் - அருள் செய்தல். நிக்கிரகம் - ஒறுத்தல்.

105. நிக்கிரகங்கள் தானும் நேசத்தால் ஈசன் செய்வது;
அக்கிரமத்தால் குற்றம் அடித்துத் தீர்த்து அச்சம் பண்ணி
இக்கிரமத்தினாலே ஈண்டு அறம் இயற்றிடு என்பன்;
எக்கிராமத்தினாலும் இறைசெயல் அருளே என்றும்.

இறைவன் உயிர்களை ஒறுத்தலும் கூட அவன் திருவருட் செயலேயாகும். எவ்வாறு என்னில் முறைமை தப்பிக் குற்றம் இழைத்த உயிரை ஒறுத்து இனித் தீவினை செய்யாத வண்ணம் அச்சுறுத்தி இனியேனும் அறத்தோடு பொருந்திய செயல்களைச் செய்வாயாக என்று உள் நின்று உணர்த்துவான். எம்முறையில் பார்த்தாலும் இறைவனின் செயல் என்றென்றும் அருளே ஆகும்.

106. தந்தையாய் பெற்ற தத்தம் புதல்வர்கள் தம்சொல் ஆற்றின்
வந்திடா விடின் உறுக்கி வளாரினால் அடித்து தீய
பந்தமும் இடுவர்; எல்லாம் பார்த்திடின் பரிவே ஆகும்;
இந்த நீர் முறைமை யன்றே- ஈசனார் முனிவும் என்றும்?

தந்தையும் தாயும் தாம் பெற்றெடுத்த மக்கள் தம் சொல்படி நடக்கவில்லை எனின் அம்மக்களைச் சொல்லால் கடிந்தும், வளாரினால் அடித்தும், அதற்கும் பணியாத போது கட்டி வைத்து அவர்களைத் திருத்த முயல்வார்கள். வெளிப்பார்வைக்குச் சினத்தால் ஒறுப்பது போல் தோன்றினாலும் ஆய்ந்து பார்க்கும் போது தாய்தந்தையர்களின் இச் செயல்கள்யாவும் தம் மக்களிடத்து அவர்கள் கொண்ட அன்பினால் விளைந்தனவே ஆகும். அவ்வாறே இறைவன் உயிர்களை ஒறுப்பது என்றென்றும் அவன் அருளால் விளைந்ததே.

107. செயல்களே பலத்தைச் செய்யும்; தெய்வம் வேண்டா இங்கு என்னின்
முயலும் இச்செயல்கள் இங்கே முழுவதும் அழியும்; எங்கே
பயன் அளிப்பன்? அழிந்தே பலன்களைப் பண்ணும் கெட்டே
வயல் இடும் தழையும் தின்னும் மருந்தும்பின் பலிக்கு மாபோல்.

செய்த வினைகளே தத்தம் பயன்களைச் செய்தவர்க்குக் கூட்டுவிக்கும். இதவை ஊட்டுவிப்பதற்கு ஒரு தெய்வம் வேண்டியதில்லை என்று சிலர் மறுப்பர். செயல்கள் யாவும் செய்த அப்பொழுதே அழிந்து ஒழிகின்றன. ஆதலால் வினைகளே வந்து பயனைத் தரும் என்ற கொள்கை பொருந்தாது. அழிந்த வினைகள் எவ்வாறு பயன் அளித்தல் கூடும் என்று மறுப்பாரை வினவுதல் வேண்டும். அவர்கள் மீட்டும்  உவமை கூறி ஐயம் எழுப்புவர். வயலில் இட்ட தழை உரம் முழுவதும் கெடுகிறது. ஆயினும் அழிந்த தழையே பின்னர் பயிர்கள் செழித்து வளர உரமாகிறது. ஒருவன் நோய் தீர்க்கும் மருந்தை அருந்து வானாயின் அம்மருந்து அவனால் செரிக்கப்பட்டு அழிகிறது. ஆனால் அழிந்த மருந்தே நோயை நீக்குகிறது. இந்த உவமைகள் வினைக்கும் பொருந்துவனவன்றோ. அழிந்த வினையும் பயன் தருமன்றோ என்பன அவர்கள் தொடுக்கும் வினாக்கள்.

108. செய்க்கு இடும் தழையும் தின்னும் திரவியம் அதுவும் போல
உய்த்திடும் செய்தி கெட்டே உறுவிக்கும் பலத்தை என்னின்
வைத்திடும் சோறும் பாக்கும் அருந்தினர் வயிற்றில் மாய்ந்தால்
மெய்த்திடும் பலம் உனக்கு; மலம் அலால் வேறும் உண்டோ?

வயலுக்கு இடும் உரமும் நோய் தீர உண்ட மருந்தும் தாம் அழிந்தே பயனைத் தருகின்றன என்ற உவமை எல்லா இடத்துக்கும் பொருந்தாது. உண்ணும் சோறும் தின்னும் வெற்றிலையும் அருந்தியவர்களின் வயிற்றில் மாய்ந்தது என்றால் அதனால் விளைந்த பயன் மலம் அல்லது வேறு உண்டோ? இல்லை ஆகலின் நீ கூறிய உவமை எல்லா விடத்தும் பொருந்தாது என்பதை நீ உணர்க.

109. திரவியம் உவமை அன்று செய்திக்கண்; திரவியங்கள்
விரவிய இடத்தே வீந்து பலம் தரும்; இம்மை அம்மை
பரவி நீ பார்; நீர் அங்கி பாத்திரத்து இட்ட எல்லாம்
கரவிடும் இங்கே; எங்கே பலன் கொளக் கருதினாயே?

நீ கூறிய உரமும் மருந்தும் கெட்டு அந்த இடத்திலேயே பயன் தருவன என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் வினையின் பயன்கள் செய்த அப்பிறவியிலேயே பயன் தருவன அல்ல. மறுபிறவியிலேயே பயன் தருவன என்பது உனக்கும் உடன்பாடு. ஆகவே இப்பிறவியில் நீரிலும் நெருப்பிலும் சொரிந்தனவும், ஏற்போர் கலத்தில் இட்டனவும் இங்கேயே அழிந்து போகின்றன. இவை நம் கண்ணால் காண்கிறோம். அவ்வாறு இருக்க அச்செயல்களின் பயன்கள் எங்கே வந்து உனக்குப் பொருந்தும் என்று எண்ணிப் பார்ப்பாயாக.

110. செய்தவர் மனத்தே எல்லாச் செய்தியும் கிடந்து பின்னர்
எய்தவே பலன்கள் ஈனும் என்றிடின் இருஞ்சுவர்க்கம்
பொய்யர் வாழ் நரகம் பூமி; புந்தியிற்கிடந்து போந்தது
ஐயனே ! அழகிது  உன் சொல்;- இந்திர சாலம் ஆய்த்தே.

வினை தன்னைச் செய்தவர் மனத்திலே அடங்கிக் கிடக்கிறது. அதன் பின்னர் அடுத்த பிறவியில் வந்து தத்தம் பயனுக்கு ஏற்ப வந்து பொருந்தும் என்பர் சிலர். இனிய துறக்கம், பொய்யர்கள் வாழ்கின்ற நிரயம், அதன் பின்னர் இந்த நில உலகம் ஆகிய பல உலகங்களிலும் உள்ள இன்ப துன்பங்களை புத்தியில் கிடந்த வினை தானே தரும் என்று உன் சொல் அழகிது ! இது கண் கட்டு வித்தை போன்று உளது.

அழகிது என்பது இகழ்ச்சிக் குறிப்பாகக் கூறப்பட்டது. பொருந்துவது அன்று என்பது குறிப்பு. இந்திரசாலம் என்பது கண்கட்டு வித்தை செய்வோர் தொடர்பில்லாத ஒன்றிலிருந்து ஒரு பொருளைத் தோற்றுவிப்பது போல மயக்கம் தருவதாம் என்ற பொருளைத் தந்தது.

111. தானம்செய் பொருள் தரித்தோர் செய்தவர் தக்க செய்தி
ஊனம்பின் உறவே காண்டும்; பலம் உறுவிப்பான் வேண்டும்;
ஈனம் இல் செய்தி ஈசன் இடும்பணி; இவைநாம் செய்தால்
நூனங்கள் அதிகம் நோக்கி நுகர்விப்பன் வினைநோய் தீர.

ஒருவருக்குக் கொடையாக வழங்கப்பட்ட பொருள்களும், அக்கொடையை ஏற்றவரும், அக்கொடையை வழங்கியவரும், வழங்கியதாகிய செயலும் ஆகிய யாவும் நிலைபேறு இன்றி அழிவதை உலகில் காண்கிறோம். இவற்றால் நிகழும் பயன் நிலை பெற்றதாக விளங்கிச் செய்தவரைச் சென்று பொருந்துவதற்கு நிலைத்த தன்மை உடையவனாகிய ஒருவனே கூட்டுதல் வேண்டும். அத்தகைய நிலை பேறு உடையவன் இறைவனே. இறைவன் வினைகளின் பயன்களைக் கூட்டுவதற்கு இயைபு யாது என்னில் அறச் செயல்கள் யாவும் இறைவனின் கட்டளைகளே. ஆதலால் அவன் அருளிய விதிப்படி நடந்தால் அவற்றுள் குறைவு , மிகுதி நோக்கி அவற்றின் பயன்களை வினையாகிய நோய் தீருமாறு உயிர்களை நுகர்விப்பான்.

112. உலகு உடல் கரணம் காலம் உறுபலம் நியதி செய்தி
பலஇவை கொண்டு கன்மம் பண்ணுவது உண்பதனால்
நிலவிடாது இவைதாம் சென்று; நினைந்து உயிர் நிறுத்திக் கொள்ளாது
அலகு இலா அறிவின் ஆணை அணைத்திடும் அருளினாலே.

வினை செய்வதற்கு இன்றியமையாத வினைமுதற் பொருளாகிய உயிரும், உயிர் தங்கி இருப்பதற்கு உரிய உடலும், கருவிகளும், காலமும், காலத்தோடு இயைந்து நிகழ்வதாகிய செயலும், இன்னது செய்தால் இது பயன் என்னும் முறைமையும் ஆகிய இவற்றின் துணையால் உயிர்கள் வினைகள் ஈட்டலும் அவற்றின் பயனை நுகர்தலும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் கருத்து ஆகும். இங்கே கூறப்பட்ட உலகு உடல் முதலியனயாவும் அறிவற்ற பொருள்கள். உயிரோ சிற்றறிவு உடையது. எனவே இவை  யாவும் வினைப்பயனை அறிந்து துய்க்கின்ற ஆற்றல் அற்றவை. ஆதலால் இறைவனே தன்னுடைய ஆணையாகிய திருவருளால் வினையின் பயன்களை அந்தந்த உயிருக்கு ஊட்டுவான் என்பது பெறப்படும்.

உயிர்கள் சிற்றறிவு உடையன. மற்றையன அறிவற்ற பொருள்கள். எனவே இவை வினையின் பயன்களை உயிர்களுக்கு ஊட்டும் என்பதும் பொருந்தாது. எனவே ஒழிபு அளவையின் அடிப்படையில் இறைவன் ஒருவனே வினைப்பயன்களை உயிர்களுக்கு ஊட்டுவான் என்பது ஆசிரியரால் விளக்கப்பட்டது.

113. ஒழுக்கம் அன்பு அருள் ஆசாரம் உபசாரம் உறவு சீலம்
வழுக்கு இலாத்தவம் தானங்கள் வந்தித்தல் வணங்கல் வாய்மை
அழுக்குஇலாத் துறவு அடக்கம் அறிவொடு அர்ச்சித்தல் ஆதி
இழுக்குஇலா அறங்களானால் இரங்குவான் பணி அறங்கள்

உலகத்தோடு ஒட்ட ஒழுகும் நல் ஒழுக்கமும், அன்புடைமையும், தொடர்பு இல்லாதாரிடத்து அருள் உடைமையும், விதித்தன செய்யும் வாழ்க்கை முறையும், தக்கோரிடத்துச் செய்யும் உபசாரமும், எல்லாரிடத்தும் கொள்ளும் நல்உறவும், பண்புடைமையும், ஒரு போதும்  வழுவாத ஐம்பொறி அடக்கல் நோன்பு நோற்றல் ஆகிய தவமும், தகுதி உடையவர்க்கு மகிழ்வோடு அளிக்கும் கொடையும், தன்னிற் பெரியவரிடத்துச் செய்யும் வழிபாடும். வணக்கமும், வாய்மையும், விலக்கியன செய்யாத துறவும், அடக்கம் உடைமையும், அறிவுடைமையும், தன்னிற் பெரியாரைப் போற்றதலும் என்னும் இப்பதினாறு ஒழுகலாறும் ஒருவனுக்கு உளவாயின். இறைவன் அவற்றைத் தன் பணி என ஏற்று அவ்வாறு ஒழுகியவனுக்கு அருள் புரிவான்.

ஆசிரியர் இப்பாடலில் பதினாறு ஒழுக்கங்களை வகுத்துக் கூறினார். எனினும் அவற்றை நிகர்த்த மற்றைய நற்பண்புகளையும் சேர்த்துக் கொள்க. இங்கே துறவு எனப்பட்டது துறவறம் மேற்கொண்டவர்களுக்குச் சிறப்பாக விதிக்கப்பட்ட ஒழுக்கங்களை அன்று என்றும் இல்லறம் துறவறம், ஆகிய இரு நிலைகளையும் உளப்படுத்தியது என்றும் சிவஞான முனிவர் உரை செய்தார்.

இதனை அடுத்த பாடலில் இனமலர் கையில் கொண்டு அங்கு இச்சித்த தெய்வம் போற்றி என்று ஆசிரியரால் மீண்டும் கூறப்படுவதால் வந்தித்தல், வணங்கல், அர்ச்சித்தல் என்று இப்பாடலில் குறிப்பிடப்பட்டவை. தம்மிற் பெரியாரை நோக்கிச் செய்யப்படுவன என்றும் சிவஞான முனிவர் உரை வரைந்தார்.

114. மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல
இனமலர் கையில் கொண்டு அங்கு இச்சித்த தெய்வம் போற்றி
சினமுதல் அகற்றி வாழும் செயல் அறமானால் யார்க்கும்
முனம் ஒரு தெய்வம் எங்கும் செயற்குமுன் நிலையாம் அன்றே.

மேற்கூறிய ஒழுக்கங்களை உடையவனாய் அவற்றுக்கு மறுதலையான தீமைகளை நீக்கி ஒழுகுபவன் தன் விருப்பத்துக்கு ஏற்ற ஒரு கடவுளை மனத்தால் நினைந்து, வாக்கால் வழுத்தி, மந்திரங்கள் சொல்லி, கையால் நல்ல மலர்களைத் தூவி வணங்குகின்ற இயல்பு உடையவனானால் அத்தகைய வனுக்கு எல்லாருக்கும் மேலவனாகிய சிவபெருமானே முன் நின்று அருள் பாலிப்பான்.

அறத்தின் வழி ஒழுகி, சினம் முதலிய தீமைகளை அகற்றி வாழ்கின்ற ஒருவன் எந்தத் தெய்வத்தை வணங்கினாலும் சிவபெருமானே அவனுக்கு அருள் பாலிப்பான் என்றார். சிவஞான முனிவர் சினமுதல் அகற்றி என்பதில் வரும் அகற்றி என்பது பெயர் என்றும், அகற்றிக்கு என்னும் நான்காம் வேற்றுமை உருபு தொக்கது என்றும் உரை கண்டார்.

115. யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகி ஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர் மற்று அத்தெய்வங்கள்
வேதனைப் படும்; இறக்கும்; பிறக்கும் மேல் வினையும் செய்யும்;
ஆதலான் இவை இலாதான் அறிந்து அருள் செய்வான் அன்றே.

எந்த தெய்வத்தை வழிபடு தெய்வமாக வணங்கினாலும் வினை வயப்படாதவனாகிய சிவபெருமானே அம்மை அப்பனாக வந்து அவ்வழி பாட்டை ஏற்று அதற்குரிய பயனை அருளுவான். மற்றைத் தெய்வங்கள் எல்லாம் உயிர் வகையுள் ஒன்றாகுமே தவிர வேறு இல்லை. அத்தகைய பல தெய்வங்களும் பிறக்கும் இன்பத் துன்பங்களுக்கு உட்படும்; இருவினைகளைச் செய்யும்; இறக்கும் என்ற வரலாறு அனைவரும் அறிந்ததே. இவற்றுள் எதுவும் இல்லாதவனாகிய சிவபெருமான் ஒருவனே வினைவயப்படாத முதல்வன். ஆகையால் அவனே உயிர்களுக்கு வினையின் பயனைக் கூட்ட வல்லவன்.

இறைவன் ஒருவனே என்பதும் அவன் இயல்பாகவே பாசங்களில் நீங்கியவன் என்பதும் சைவ சமயத்தின் கொள்கை. மிகப் பழமையான தமிழ் நூல்களும் கூட சிவபெருமானைப் பிறவாயாக்கைப் பெரியோன் என்றே குறிப்பிடுகின்றன. இந்த உண்மையை அறியாதவர் செத்துப் பிறக்கின்ற இயல்புடைய சிறு தெய்வங்களை வழிபடுவராயினார். சென்று நாம்சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம். சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம் என்ற அப்பரடிகள் திருவாக்கை நினைவு கூர்க.

116. இங்கு நாம் சிலர்க்கு பூசை இயற்றினால், இவர்களோ வந்து
அங்குவான் தருவார்? அன்றேல் அத்தெய்வம் அத்தனைக்காண்;
எங்கும் வாழ் தெய்வம் எல்லாம் இறைவன் ஆணையினால் நிற்பது
அங்கு நாம் செய்யும் செய்திக்கு ஆணைவைப்பால் அளிப்பன்.

உலக வாழ்க்கையில் தாய் தந்தை ஆசிரியர் ஆகியோரை நாம் வழிபடுகிறோம். அந்த வழிபாட்டின் பயனை மறுமையிலே நமக்குத் தருவதற்கு அவர்கள் வல்லவர் அல்லர். அது போன்றே உலகத்தார் கொண்ட முப்பத்து முக்கோடி தேவர்க்கும் செய்யப்படும் வழிபாட்டின் பயனை அத்தெய்வங்கள் வழங்க வல்லன அல்ல. சிவபிரான் ஆகிய முதல்வனே தன் ஆணையைத் தனது ஏவல் நிற்கும் அந்தந்த தெய்வத்தின் இடத்து வைத்துப் பயனை வழங்குவான்.

117. காண்பவன் சிவனேயானால் அவன் அடிக்கு அன்பு செய்கை
மாண்புஅறம்; அரன்தன் பாதம் மறந்து செய் அறங்கள் எல்லாம்
வீண்செயல்; இறைவன் சொன்ன விதி அறம்; விருப்பு ஒன்று இல்லான்
பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே.

மேற்கூறியவற்றால் எந்தக் கடவுளை வழிபட்டாலும் அதனை அறிந்து அருள வல்லவன் சிவபிரானே என்பது தெளிவுறும். எனவே சிவபிரானின் திருவடிகளை அன்புடன் வணங்குவதே மாண்புடைய பேரறம் ஆகும். சிவபிரானின் திருவடியை மறந்து செய்கின்ற அறச் செயல்கள் எல்லாம் வீண் செயலாகவே முடியும். ஏனெனில் அறம் என்பது சிவபெருமானால் விதிக்கப்பட்டவற்றைச் செய்தலும் விலக்கப்பட்டவற்றை நீக்குதலும் ஆகும். இவ்வாறு அன்பு செய்யும் மெய்யடியார்க்கு விருப்பு வெறுப்பைக் கடந்தவனாகிய சிவபிரானே  திருவருள் பாலிப்பான். எனவே அத்தகைய வழிபாட்டை மேற் கொள்வாயாக.

118. தாபர சங்கமங்கள் என்று இரண்டு உருவில் நின்று,
மாபரன், பூசை கொண்டு மன்னுயிர்க்கு அருளை வைப்பன்.
நீபரன் தன்னை நெஞ்சில் நினைவையேல், நிறைந்த பூசை;
ஆய் பரம் பொருளை நாளும் அர்ச்சி நீ அன்பு செய்தே

இயங்கியல் வடிவம், நிலைஇயல் வடிவம் என்று இரண்டு வடிவங்களைத் தாங்கி பெருமைக்குரிய சிவபெருமான் உயிர்கள் இயற்றும் வழிபாட்டை ஏற்றுக் கொண்டு அவற்றுக்குத் தன்னுடைய அருளை வழங்குவான். இத்தகைய வழிபாடுகள் புறவழிபாடுகள். இறைவனை உள்ளத்தின் உள்ளே கண்டு அகவழிபாடு செய்வோர்க்கு அப்பெருமானே அருள் பாலிப்பான். எனவே பரம்பொருளாகிய சிவபெருமானை நாள்தோறும் போற்றி அன்போடு வழிபடுவாயாக.

சிவனடியார்கள் வழிபாடு செய்யும் போது அதனை மூன்று வகையாகச் செய்வார்கள் என்று பெரியோர் வகைப்படுத்துவர். அவை குருவழிபாடு, லிங்க வழிபாடு, சங்கம வழிபாடு என்பன. சங்கமம் என்ற சொல் இயக்கும் இயல்பு உடையது என்ற நேரடிப் பொருளைத் தரும், இங்கு அச்சொல் மெய்யடியார்களைக் குறித்தது. திருக் கோவிலில் எழுந்தருளி உள்ள சிவலிங்கத் திருமேனியை வழிபடுவது தாபரம் என்ற வகையில் அடங்கும். ஏனெனில் அத்திருமேனி நிலை இயல் வடிவத்தைக் கொண்டது. குரு சங்கம வழிபாடுகள் இரண்டும் ஒன்றாக சங்கம வழிபாட்டுள் அடங்கும். இவை தவிர அகவழிபாடு ஆற்றுதல் கொள்ளப்படும்.

119. அரன் அடிக்கு அன்பர் செய்யும் பாவமும் அறமது ஆகும்;
பரன் அடிக்கு அன்பு இலாதார் புண்ணியம் பாவம் ஆகும்;
வரம் உடைத் தக்கவ் செய்த மாவேள்வி தீமை ஆகி;
நரரினில் பாலன் செய்த பாதகம் நன்மை ஆய்த்தே,

சிவபெருமானுடைய திருவடிக்கு அன்பு பூண்ட மெய்யடியார்கள் வழிபாடு செய்யும் காலத்தில் அவர்கள் செய்கிற பாவச் செயல்களும் அறமே ஆகும். தலைவனாகிய சிவனது திருவடிகளுக்கு அன்பு இல்லாதவர்கள் செய்யும் புண்ணியங்களும் பாவமே ஆகும். தன்தவ வலிமையால் பல வரங்களைப் பெற்ற தக்கன் இயற்றத் தொடங்கிய சிறந்த வேள்வி பாவச் செயலாக முடிந்தது. சிறிய பெருந்தகையான சண்டீசர் தமது தந்தையின் காலைத் தடிந்த பாதகம் நன்மையாக முடிந்தது.

சிவபெருமானை ஒதுக்கி விட்டுத் தன் முனைப்போடு வேள்வி செய்யத் தொடங்கினான் தக்கன். அந்த வேள்வி அவனுக்கு நன்மையைத் தராமல் தீமையில் முடிந்தது. இந்த வரலாறு கந்த புராணத்தில் இடம் பெறுகிறது

சேய்ஞலூர்ப் பிள்ளையாராகிய சண்டீசர் மணலைச் சிவலிங்கமாகப் பிடித்து வைத்துப் பாலால் திருமஞ்சனம் ஆட்டி வழிபட்டார். அதனைத் தடுக்க முயன்ற தமது தந்தையின் காலை அருகில் கிடந்த சிறு கோலால் எறிந்தார். அதுவே வாளாகித் தந்தையின் கால்கள் இரண்டையும் துணித்து எறிந்தது. இவ்வாறு பெரியபுராணத்தில் கூறப்படுகிறது.

120. மறைகள் ஈசன்சொல்; அச்சொல் வழிவாரா உயிரை வைக்கும்
சிறைகள் மா நிரயம்; இட்ட பணிசெய்வோர் செல்வத்தோடும்
உறையும் மாபதிகள் உம்பர் உலகங்கள்; யோனிக்கு எல்லாம்
இறைவன் ஆணையினால் இன்பத் துன்பங்கள் இயைவதாகும்.

மறைகள் சிவபெருமானால் அருளப்பட்டவை. மறைகளில் விதித்த வழிப்படி நடவாத உயிர்களைச் சிறையிட்டு வைப்பதற்காக அமைக்கப்பட்ட இடமே நிரயம் என்பர். துறக்கம் என்பது மறைநெறி வழுவாது நடந்த உயிர்கள் இன்பத்தோடு வாழ்வதற்கு இறைவனால் அமைக்கப் பட்டதாம். இது போன்றே பிற உலகுகளில் வாழ்கிற உயிர்களுக்கும் இறைவன் தனது ஆணையால் இன்ப துன்பங்களை ஊட்டுவான்.

121. ஆணையால் அவனி மன்னன் அருமறை முறைசெய்யாரை
ஆணையின் தண்டம் செய்தும் அரும்சிறை இட்டும் வைப்பன்;
ஆணையின் வழிசெல்வோருக்கு அரும்பதி செல்வம் நல்கி
ஆணையும் வைப்பன்; எங்கும் ஆணையே ஆணை யேகாண் !

உலகத்தை ஆள்கின்ற வேந்தர்கள் அவர்களுடைய ஆணைகட்கு ஏற்ப நடவாதாரை ஒறுத்தும் சிறையிட்டும் வைப்பார்கள். அதே வேந்தர்கள் தம்முடைய ஆணைக்கு இணங்க நடப்பவர்களைப் பாராட்டி அவர்களுக்கு மாளிகையும் செல்வமும் அளித்து அதிகாரமும் வழங்கி வாழ்விப்பார்கள். இவ்வுலகில் ஒப்பற்ற பெருவேந்தனாகிய இறைவனும் இவ்வாறே தண்டம் செய்தும் தகுதிக்கு ஏற்ப உயர்த்தியும் தன் ஆணையை நடத்தி அருளுவான்.

122. அரசனும் செய்வது அருள்வழி- அரும்பாவங்கள்
தரையுளோர் செய்யில், தீய தண்டலின் வைத்து தண்டத்து
உரைசெய்து தீர்ப்பன்; பின்பு சொல்வழி நடப்பர் தூயோர்;
நிரயமும் சேரார்; அந்த நிரயம் முன் நீர்மை ஈது ஆம்.

உலகத்து அரசர்கள் செய்யும் தண்டத் தொழிலும் அவன் வழங்கும் வரிசைகளும் இறைவனின் அருள்வழியே நடப்பதாகும். நாட்டில் உள்ளோர் பாதகங்கள் செய்தால் அரசன் அவர்களுக்குக் கொடிய தண்டனையை வழங்குவான். அதற்கு மேலும் கொடுமை செய்தால் அதனினும் கடுமையாகத் தண்டிப்பேன் என்று கூறி அச்சுறுத்தி அவர்களைத் திருத்துவான். இறைவனும் பாவம் செய்தவர்களை நரகத்தில் இடுவது அவர்களைத் திருத்துவதன் பொருட்டேயாகும். இவ்வாறு ஒறுக்கப்பட்டவர் இறைவனின் ஆணைப்படி நடப்பார்கள். தாம் நிரயத்தைச் சேராமல் இருக்கும் வண்ணம் ஒழுகுவார்கள்.

பாவம் செய்தால் தண்டனை வழங்குவான் என்று கூறவே புண்ணியம் செய்தால் அதற்குரிய மேம்பாட்டை வழங்குவான் என்பதும் பெறப்படும்.

இந்த மூன்று பாடல்களாலும் முன்னர் 94- வது பாடலில் தராபதி போல (அரசனைப் போல)த் தருவான் என்று கூறிய கருத்து ஆசிரியரால் விரித்துரைக்கப்பட்டது.

123. அருளினால் உரைத்த நூலின் வழிவாராது அதன்மம் செய்யின்
இருள்உலாம் நிரயத் துன்பத்து இட்டு இரும் பாவம் தீர்ப்பன்;
பொருள் உலாம் சுவர்க்கம் ஆதி போகத்தால் புணியம் தீர்ப்பன்;
மருள்உலாம் மலங்கள் தீர்க்கும் மருந்து இவை வயித்திய நாதன்

இறைவன் தன்னுடைய அருளினால் உரைத்த நூல்களின் வழி நில்லாது ஒருவன் பாவம் செய்வானாகில் அவனை இருள் செறிந்த நரகத்தில் இட்டுத் துன்பத்தை நுகர வைத்து அவனுடைய பெரும் பாவத்தினைத் தீர்ப்பான். அந்நூல்களில் உரைக்கப்பட்ட ஒழுக்கத்தின் வழி நின்றவனை இன்ப நுகர்வுக்கு உரிய துறக்கத்தில் இட்டு அவன் செய்த புண்ணியத்தினைத் தீர்ப்பான். பாவம் புண்ணியம் என்ற இரண்டு வினைகளுமே உயிர்கள் கட்டில் அகப்பட்டுப் பிறந்து இறந்து வருவதற்குக் காரணமான நோய்கள். ஆதலால் வைத்தியநாதனாகிய சிவபெருமான் அந்த நோயைத் தக்க மருந்தால் தீர்ந்து அருளுவான்.

வேதாகம நூல்வழி நில்லாமை பாவம். நூல் வழி நின்று அருள் வழி நில்லாமை புண்ணியம். இரண்டும் உயிர்க்கு நோய். ஆகையால் அவற்றால் பந்தம் உறாமைப் பொருட்டு சிவபிரனாகிய வைத்தியன் இன்ப துன்பங்களாகிய மருந்தை நுகர்விப்பான் என்பது மாதவச் சிவஞான முனிவருடைய உரை. தீராத நோயாகிய பிறவிப் பெரும் பிணியைத் தீர்த்தலால் சிவபெருமான் வைத்தியநாதன் எனப்பட்டான்.

124. மருத்துவன் உரைத்த நூலின் வழிவரின் பிணிகள் வாரா;
வருத்திடும் பிணிகள் தப்பின் தப்பிய வழியும் செய்யத்
திருத்தினன் மருந்து செய்யாது உறும்பிணி சென்றும் தீர்ப்பன்;
உரைத்தநூல் சிவனும் இன்னே உறுங்கன்மம் ஊட்டித் தீர்ப்பன்

உடல் கூற்று இயல் உணர்ந்த மருத்துவ நூலில் விதிக்கப்பட்டபடி வாழ்ந்தால் நோய்கள் வரமாட்டா. அந்த நெறி தவறி வாழ்வார்க்கு நோய் தோன்றி உடலை வருத்தும். நோய் தோன்றிய பின்னரும் மருத்துவன் மருந்து கொடுத்து அந்நோயைத் தணிப்பான். சில நேரங்களில் மருந்து இன்றியும் கொடை, வழிபாடு முதலியன செய்வித்தும் நோயைத் தணிப்பான். இது போன்றே சிவபிரானும் உயிர்களைப் பொருந்திய இருவினையாகிய நோயைப் பல திறத்தானும் ஊட்டித் தீர்ப்பான்.

திருப்புள்ளிருக்கு வேளூர்ப் பதிகத்தில் அப்பரடிகள் இறைவனை மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித் தீரா நோய் தீர்த்து அருளவல்லான் என்று போற்றுவதை இங்கு நினைவு கூர்க.

125. மண்ணுளே சிலவியாதி மருத்துவன் அருத்தியோடும்
திண்ணமாய் அறுத்துக் கீறித் தீர்த்திடும் சிலநோயெல்லாம்
கண்ணிய கட்டி பாலும் கலந்துடன் கொடுத்துத் தீர்ப்பன்;
அண்ணலும் இன்பத் துன்பம் அருத்தியே வினை அறுப்பன்.

மருத்துவன் இவ்வுலகில் தோன்றுகின்ற சில நோய்களை அக்கரையோடும் திண்ணமாகவும் கத்தியால் கீறியும் அறுத்தும் தீர்ப்பான். வேறு சில நோய்களுக்கு வெல்லமும், பாலும் கலந்த மருந்துகளைத் தந்து தீர்ப்பான். அது போலவேஇறைவனும் உயிர்களின் இருவினையாகிய நோய்களைத் தீர்க்கும் பொழுது வினைப் பயனுக்கு ஏற்றபடி அவற்றுக்கு இன்பத்தையோ, துன்பத்தையோ கொடுத்து அறுத்து நீக்குவான்.

இறைவன் வேண்டுதல் வேண்டாமை இலான் ஆகையால் அவன் உயிர்களுக்கு அதனதன் வினைப் பயனுக்கு ஏற்பவே இன்பத் துன்பங்களை ஊட்டுவான் என்பது இப்பாடலில் விளக்கப்பட்டது. இம்மூன்று பாடல்களாலும் முன்னர் 94-ம் பாடலில் தரணிபோல (மருத்துவன் போல) இறைவனே வினைப்பயன்களைத் தீர்ப்பான் என்பது விளக்கப்பட்டது.

126. பூதனா சரீரம் போனால் புரி அட்ட ரூபந்தானே
யாதனா சரீரம் ஆகி இன்பத்துன்பங்கள் எல்லாம்
நாதனார் ஆணை உய்க்க நரகொடு சுவர்க்கம் துய்த்துத்
தீது இலா அணுவாய்யோனி சேர்ந்திடும்- சீவன் எல்லாம்.

உலகத்தில் நாம் தாங்கிய உடல்கள் ஐம்பூதக் கூட்டத்தால் ஆயவை. இப்பரு உடம்பை விட்ட நுண்ணுடம்பைப் பற்றிக் கொள்கின்றன. அதன் பிறகு வினைப் பயன்களை அனுபவித்தற்கு உரிய வெவ்வேறு உடல்கள் உள்ளன. ஆதலால் இறைவனின் ஆணைப்படி வினைக்கு ஏற்ற உடம்புகளைப் பெற்றுத் துறக்கத்தில் சென்று இன்பத்தையும், நிரயத்தில் சென்று துன்பத்தையும் நுகர்கின்றன. வினைப்பயனை ஆங்கு நுகர்ந்த பிறகு மீண்டும் நுண்ணுடம் போடு நில உலகத்துக்கு வந்து தன்வினைப் பயனுக்கு ஏற்ற பிறப்பினை எடுக்கும்.

பூதனாசரீரம் ஐம்பெரும் பூதங்களின் கலப்பினால் ஆகிய பருஉடம்பு, இது தூல உடம்பு எனப்படும். புரியட்ட ரூபம் என்பது நுண்ணுடம்பு, இதனைப் புரியட்ட காயம் என்றும் கூறுவர். தன் மாத்திரைகள் ஐந்தும், மனம் புத்தி அகங்காரம் எனும் இம்மூன்றும் ஆக எட்டும் கூடி உளதாவது நுண்ணுடம்பு. இதனைச் சூக்கும உடம்பு என்றும் கூறுவர்.

யாதனா சரீரம் என்பது நிரயத்தில் சென்று துன்பத்தில் அழுந்துவதற்கு உரிய உடம்பு ஆகும். துறக்கத்தில் சென்று இன்பங்களை நுகர்வதற்கு உரிய உடல் பூதசார உடல் எனப்படும். துறக்க நிரயங்களில்  சென்று இன்ப துன்பங்களைத்துய்த்த பிறகு எஞ்சியிருக்கும் வினைப் பயன்களைத் துய்ப்பதற்கு என உயிர்கள் மீண்டும் நில உலகிற்கு நுண்ணுடம்பைப் பற்றிக் கொண்டு வந்து பிறக்கின்றன என்பர்.

துறக்கப்படாத உடலைத் துறந்து வெந்தூதுவரோடு, இறப்பன், இறந்தால் இரு விசும்பு ஏறுவன் ஏறி வந்து, பிறப்பன் பிறந்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன் பேர், மறப்பன் கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே என்ற அப்பர் அடிகளின் தனித் திருவிருத்தம் இங்கு நினையத் தக்கது.

127. உடல்விடா யோனி பற்றி உதிப்பினும் உதிக்கும்; ஒன்றில்
படர்வுறாது உறும்பாவத்தால் பாடாணம் போல் கிடந்து
கடனதாம் காலம் சென்றால் கடுநர கதனில் வீழ்ந்து அங்கு
இடர் உறும்-உருவம் கன்மத்து அளவினில் எடுக்கும் அன்றே.

உயிர்கள் தாம் செய்த வினைகளின் வன்மை மென்மைக்கு ஏற்ப வேறு ஓர் உடம்பை எடுக்கும். அதாவது இப்பரு உடம்பை விட்ட பிறகு யாதனா உடம்பை விட்டு நீங்கிய உயிர் மீண்டும் இவ்வுலகத்தில் பரு உடம்பு கொண்டு தோன்றாமல் மற்றொரு யாதனா உடம்பில் புகுதலும் கூடும். சில வேளைகளில் இவ்வுடம்பினை விட்டு நீங்கிய அளவிலே மற்றொரு கருப்பையில் தங்கி மீண்டும் பிறத்தலும் உண்டு. சில வேளைகளில் வேறு உடம்பில் சேராமல் மிகுந்த பாவம் செய்ததனால் கல்லைப் போலக் கிடத்தலும் உண்டு. அவ்வாறு கல்லைப் போலக் கிடந்த உயிர் உரிய காலம் கழிந்ததன் பின் கொடிய நிரயத்தில் சென்று துயர் உழன்று அதன் பின்னர்ப் பிறத்தலும் உண்டு.

உயிர்கள் உடம்பு விட்டு உடம்பு மாறுவது இவ்வாறு தான் நிகழும் என்று வரையறுத்துக் கூற இயலாது என்ற கருத்து இப்பாடலில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு முந்திய பாடலில் கூறிய முறைமையிலும் அல்லது அதற்கு மாறுபட்டும் தத்தம் வினைக்கு ஏற்ப உயிர்கள் மாறிப் பிறந்து வரும். இவை எல்லாம் இடைவிடாது நிகழ்தலும் உண்டு. இடைவிட்டு நிகழ்தலும் உண்டு என்கிறார் சிவஞான முனிவர்.

பாடாணம்- கல்

128. பன்னகம் அண்டசங்கள் பரகாயந் தன்னில் பாய்வோர்
துன்னுதோல் முட்டை யாக்கை துறந்து செல்வதுவே போல
உன்னிய உயிர்கள் தூல உடல்விட்டு வானினூடு
மன்னிடும் நனவு மாறிக் கனவினை மருவு மாபோல்.

பாம்பு தன்னுடைய தோலை உரித்து விட்டுப் புதிய தோலோடு செல்லுவது போலவும், பறவை முட்டையை உடைத்துக் கொண்டு வெளியேறிப் போவதைப் போலவும், கூடு விட்டுக் கூடு பாயும் ஆற்றல் கைவரப் பெற்றோர் தம் உடலை விட்டு வேறு ஒரு உடம்புக்குச் செல்வது போலவும் நிலைபெற்ற உயிர்கள் தம்முடைய உடம்பை விட்டு மற்றொரு உடம்போடு துறக்கத்தையோ, நிரயத்தையோ சென்று சேரும். அவ்வாறு சேரும் போது நனவு உணர்வு மாறிக் கனவு தோன்றுவது போல அவ்வுயிர்களின் அறிவும் வேறுபட்டு நிற்கும்.

பாம்பு தோலுரித்தல் என்ற உவமை உயிர் ஒரு பரு உடலை விட்டு மற்றொரு பரு உடலைச் சேருவதற்கு எடுத்துக் காட்டாயிற்று. முட்டையில் இருந்த பறவை வேறு இடத்துக்குச் செல்லும் என்ற உவமை இவ்வுடலை விட்ட உயிர் துறக்கத்திற்கோ, நிரயத்திற்கோ இடம் மாறிச் செல்லும் என்பதற்கு எடுத்துக் காட்டாயிற்று. பரகாயப் பிரவேசம் எனப்படும் கூடு விட்டுக் கூடுபாய்வது என்ற உவமை உயிர்கள் அச்சு மாறிப் பிறக்கும் என்பதற்கு எடுத்துக் காட்டப்பட்டது. நனவிலிருந்து கனவுக்குச் செல்லுவது உயிர்களின் அறிவு வேறுபட்டு வருவதற்கு உவமையாயிற்று, பன்னகம்- பாம்பு, அண்டசங்கள்- முட்டைகள்.

129. தன்மமோடு அதன்மம் ஆகி தான் இருபயனும் தந்து
நன்மை தீமையினும் இன்பத் துன்பினும் நாடிக்காண
முன்னமே ஆன்மா வின்தன் மும்மலத்து ஒன்றதாகி
கன்மமும் மூலம் காட்டிக் காமிய மலமாய் - நிற்கும்.

முந்திய பிறவிகளில் ஆன்மாக்கள் ஈட்டிய கன்மம் எனப்படுவது தருமம், அதருமம் என்று இரு வகைப்படும். அவற்றிற்கு ஏற்ப இரண்டு வகைக்கும் உரிய பயன்களைத் தரும். இவ்வாறு பயன் தருவதனால் அதற்கு ஒரு முதற் காரணம் உண்டு என்பது பெறப்படும். மும்மலங்களில் ஒன்றாக இக்கான்மிய மலம் வைத்து எண்ணப்படும் நன்மை, தீமை ஆகிய காரணங்களாலும் இன்பம், துன்பம் ஆகிய காரியங்களாலும் இருவினை அனுமான அளவையினால் அறியப்படும்.

மாதவச் சிவஞான முனிவர் கான்மியம் என்பது காமியம் என மருவிற்று என்று உரை கூறுவார்.

130. இருவினை- அநாதி ஆதி இயற்றலால் நுகர்வால் அந்தம்
வரும்; மலம் சார்ந்து மாயா உருவுகள் மருவி ஆர்த்துத்
தருசெயல் முறைமை யாலே தான்பல பேதம் காட்டி
அருவதாய் நின்று அரன்தன் ஆணையின்- அமர்ந்து செல்லும்

இருவினை எனப்படுவன ஒரு வகையால் காலப் பழமைக்கும் எட்டாத தொன்மை உடையது. அதாவது இடையறாது ஓடும் ஆற்றின் வெள்ளப் பெருக்குப் போலத் தொடர்ந்து வருவது, இரு வினைகளும் தோற்றம் உடையனவும் ஆகும். ஏனெனில் உயிர்கள் மனம், மொழி மெய்களால் ஈட்டுவனவே இருவினைகளாகும். இரு வினைகளுக்கும் முடிவு உண்டு. ஏனெனில் வினைகளின் பயனை இறைவன் உயிருக்கு ஊட்டும் போது அவற்றை நுகர்ந்து அவ்வினைகளை உயிர்கள் தீர்க்கின்றன. ஆணவமலத்தோடு சேர்ந்து மாயையின் காரியங்களாகிய உடங்களைத் தோற்றுவித்து உயிர்களைப் பிணித்துப் பலவேறுபட்ட வேறுபாடுகளைக் காட்டி அவ்வினைகள் அருவாக நின்று இறைவனுடைய ஆணையின் வண்ணம் செயல்படும் இயல்பு உடையன ஆகும்.

இந்த இரண்டு செய்யுள்களாலும் இருவினையின் இயல்பு இத்தகையது என்று ஆசிரியரால் எடுத்துரைக்கப்பட்டது. மேலே 91- வது பாடலில் அலகிலா உயிர்கள் கன்மத்து ஆணையின் அமர்ந்து செல்ல எனக் கூறப்பட்டது இங்கே மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இது முடிந்தது முடித்தல் என்னும் உத்தி என்பார் சிவஞான முனிவர்.

131. சங்கமம் தாபரங்கள் தத்தம் கன் மத்துக்கு ஈடா
அங்கு உருயோனி மாறும் அச்சுமாறாது இங்கு என்னின்
இங்குமானுடர் இயற்றும் புண்ணியத்து இன்ப ஈட்டம்
அங்குவான் சுரர்களாயோ நரர்களாய் அருந்துவாரோ.

மக்கள் விலங்குகள் போன்ற இயங்கியல் பொருள்களும், மரங்கள் கொடிகள் போன்ற நிலையியல் பொருள்களுமாகிய உயிர்கள் தாம் தாம் செய்த வினைக்கு ஈடாக வேறு வேறு பிறவினை எடுக்கும். அவ்வாறு பிறவி எடுக்கும் போது அதனுடைய வடிவமும் மாறும். உயிர்கள் மறுபிறப்பு எடுக்கும் போது அவற்றின் உடல் மாறாது என்று கூறினால், மானிடராய்ப் பிறந்து செய்த புண்ணியத்தின் பயனை வானுலகத்தினில் சென்று தேவர்களாக இருந்து நுகர்வார்களோ அன்றி மானுடர்களாக இருந்தே வானுலக இன்பங்களை நுகர்வார்களோ?

இதனால் சொல்லியது பட்டாசாரியன் தெய்வ யோனி மானுட யோனி ஆகாது என்றும், மானுட யோனி தாவரங்கள் ஆகாது என்றும் அந்தந்த யோனி அந்தந்த யோனியாகவே சனிக்கும். அது ஒழிந்து அச்சு மாறாது என்றும் சொல்ல ! அவனை மறுத்து அச்சுமாறிப் பிறக்கும் என்னும் முறைமையும் அறிவித்தது என்பது நிரம்ப அழகிய தேசிகரின் உரை. இதே கருத்தை சிவஞான சித்தியார் சுபக்கத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பில் திரு ஜே. எம். நல்லசாமி பிள்ளை வலியுறுத்துகிறார்.

132. நரர்களாய்த் துய்ப்பர் என்னின் நரர்பதி சுரர் உலோகம்;
சுரர்களாய்த் துய்ப்பர் என்னின் சொன்ன அச்சு அழியும் ஆகும்
சுரர்களாய்ப் பலன்கள் துய்த்துத் தாம் இங்குத் தோன்றும் போது
நரர்களாய்ப் பிறப்பர் ஞாலத்து அமரராய் நண்ணிடாரே.

வானுலகத்தில் மானுட வடிவம் கொண்டே இவ்வுலகத்தில் செய்த புண்ணியப் பயன்களை நுகர்வார்கள் என்றால் அதனை வானுலகு என்று சொல்வது பொருந்தாது. அதுவும் இம்மண்ணுலகே எனல் வேண்டும். அவ்வாறு அன்று, தேவர்களாகவே இருந்து துய்ப்பார்கள் எனில் அவர்களின் வடிவம் மாறிற்று என்றே கொள்ள வேண்டும். தேவர்களாகிய வானுலகத்தில் சேர்ந்து தாம் செய்த நல்வினைப் பயனை நுகர்ந்து கழித்த பிறகு மீண்டும் அவர்கள் இவ்வுலகில் பிறப்பார் எனின் மானுடராகவே பிறப்பார். வானவர் வடிவம் கொண்டு இவ்வுலகத்தில் பிறந்திடார்.

133. வண்டுகளாகி மாறும் மயிர்க்குட்டி; மற்றோர் செந்துப்
பண்டைய உருவந்தானே வேட்டுவனாய்ப் பிறக்கும்;
கண்டுகொள் யோனி எல்லாம் கன்மத்தான் மாறும் என்றே
கொண்டன சமயம் எல்லாம்; இச்சொல் நீ கொண்டது எங்கே?

கம்பளிப் பூச்சிகள் எனப்படும் மயிர்க்குட்டிப் புழுக்கள் சிலகாலம் சென்ற பின் வண்டுகள் ஆவதைக் காண்கிறோம். இது போன்றே சில புழுவகைகள் குளவி வடிவு கொண்டு மாறுவதையும் பார்க்கிறோம். இதிலிருந்து பிறப்புகள் யாவும் வினைக்கு ஏற்ப மாறுபடும் என்பதனைக் கண்டு கொள்க. இவ்வாறு வினையின் பயனுக்கு ஏற்பப் பிறப்புகள் மாறிவரும் என்றே எல்லாச் சமயங்களும் கொண்டன. இதற்கு மாறான கருத்தை நீ எங்கிருந்து பெற்றாய்?

134. அகலியை கல்லதானாள்; அரிபலபிறவி ஆனான்;
பகலவன் குலத்தில் தோன்றிப் பார் எலாம் முழுதும் ஆண்டு
நிகர்இலா அரசன் ஆகும், சிலந்தி நீடுலகம் போற்றச்
சகமதில் எலிதான் அன்றோ மாவலி ஆய்த்துத் தானே.

கோதம முனிவரின் சாபப்படி அகலிகை கல்லாக மாறினாள். பிறகு முனிவரின் சாபத்தால் திருமால் பல பிறவிகளை எடுத்தார். சிலந்திப் பூச்சி தான் செய்த நற்செயலால் சூரிய குலத்தில் பேரரசனாகப் பிறந்து கோச்செங்கணான் என்ற பெயர் தாங்கி உலகெலாம் ஆண்டான். எலிஒன்று திருமறைக் காட்டில் இறைவன் திருமுன்பு எரிந்த திருவிளக்கைத் தன் மூக்கால் தூண்ட அது அடுத்த பிறவியில் மாவலியாய்த் தோன்றி மூவுலகங்களையும் ஆண்டது.

135. செப்பினாய் மாற வேறு சிலர்விதி யாலே; கன்மால்
வைப்புறும் யோனி எல்லாம் மாறிவந்திடா இங்கு என்னின்
எப்படி யானும் செய்திக்கு இறைகரியாவன் என்றே
முற்பட மொழிந்தேன்; எல்லாம் முதல்வன் தன் விதியே ஆகும்.

அகலிகை, திருமால், கோச்செங்கட்சோழன் மாவலி ஆகியோருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகள் வினையினால் மட்டுமன்றி சாபத்தினாலும் நேர்ந்தவனாகும். அதனால் வினைப்பயன் காரணமாக உயிர்கள் கருப்பை மாறிப் பிறந்திடா என்று நீ  மறுத்தல் கூடும். எவ்வகையாலும் உயிர்களின் வினைகளுக்கு எல்லாம் இறைவனே சான்றாவான் என்று முன்பே கூறப்பட்டது. எனவே சாபத்தின்  பயன் ஆயினும் வினையின் பயனாயினும் இறைவன் ஆணை வழியே உயிர்களை வந்து பற்றும் என்பதே உண்மையாகும்.

மேல் 120-ஆம் பாடலில் இறைவன் ஆணையினால் இன்ப துன்பங்கள் இயைவதாகும் என்று கூறியதனை ஆசிரியர் இங்கு நினைவுறுத்தினார்.

கரி- சான்று, முதல்வன் தன் விதி- இறைவனது ஆணை

136. அவ்வவயோனிதோறும் அவ்வவ உலகந் தோறும்
செவ்விதின் அறிந்து கன்மம் சேர்ந்திடா; சீவன் சேரா;
இவ்வகை தம்மிற் சேர்வும் இறைசெயலானால் செய்த
எவ்வுருவும் தம் கன்மான் மாற்றுவன் இறைவன்தானே.

வினைகள் அறிவற்றவை ஆகையினால் அவை தாமாகவே தமது பயனுக்கு ஏற்ப உடல்களையும் அவ்வுடல்கள் வாழும் உலகங்களையும் சென்று சேரமாட்டா. உயிர்கள் அறிவுடையன ஆயினும் அவற்றின் அறிவு சிற்றறிவு ஆதலாலும் அவை உணர்த்த உணரும் தன்மை உடையன ஆதலாலும் வினைப் பயன்களைத் தாமே அறிந்து எடுத்துக் கொண்டு நுகரமாட்டா. ஆதலால் மாயை வினைகளைச் செயல்படுத்தி அவற்றை உயிர்களுக்கு ஊட்டுதல் இறைவன் திருவருளே என்பது பெறப்பட்டது. இறைவன் தானே உயிர்களுக்குக் கொடுத்த எவ்வகை உடல்களையும் அவற்றின் வினை வழியே மாற்றுவதற்கும் உரியவன் ஆவான்.

மேலே 112-வது பாடலில் ஒழிபு அளவையின் அடிப்படையில் இறைவனே வினைகளின் பயனை உயிர்களுக்கு ஊட்டுவான் என்று ஆசிரியர் எடுத்துரைத்ததை இங்கும் பொருத்திக் காணுதல் வேண்டும்.

137. மாறி இவ்வுருவம் எல்லாம் வருவது எங்கே நின்று? என்னின்
கூறிய சூக்குமத்தாம் உருவெனின் குறி ஒன்று என்னின்
வேறு ஒரு குறி ஆம் ஆரம் வீரசங்கிலியும் ஆகும்;
தேறுநீ ஒருவனால் இச் செயல் எலாம் சிவனால் ஆகும்.

இவ்வாறு உயிர்கள் பிறவி தோறும் உருவம் மாறித் தோன்றும் எனின் அவை எங்கிருந்து தோன்றும் என்ற வினா எழும். தூல உடம்பு முற்கூறிய நுண்ணுடம்பிலிருந்தும் தோன்றுவதாகும். இவ்வாறு விடையிறுத்தால் மற்றொரு வினா எழும் பல்வகைப்பட்ட பருஉடம்புகள் ஒன்றே ஆகிய நுண்ணுடம்பிலிருந்து தோன்றும் என்று கூறுவது உள்ளதே தோன்றும் என்ற சற்காரிய வாதத்துக்கு முரண் பட்டதன்றோ என்பதே அவ்வினா. பொன்னிலிருந்து மாலை வீர சங்கிலி போன்ற அணிகலன்கள் அவற்றைச் செய்வானது ஆற்றலால் வெவ்வேறாகச் சமைக்கப்படுகின்றன. அவ்வாறே ஒப்பற்ற ஆற்றலுடைய சிவபெருமானால் ஒரு நுண்ணுடம்பு பல்வேறுபட்ட பரு உடம்புகளாய்த் தோன்றுதல் கூடும் என்று தெளிவாயாக.

138. சூக்குமம் கெட்டுத் தூலம் தோன்றிடா சூக்குமத்தின்
ஆக்கி ஓர் உடல் கிடப்பது இன்று உடல் ஆக்கும் தன்மைக்கு
ஓக்கிய சத்தி உண்டாய் உடல்தரும் காலம் உற்று
நீக்கிட மரம் பின்வேர் ஓர் நீள்மரம் நிகழ்த்து மாபோல்.

நுண்ணுடம்பிலிருந்து பரு உடம்பு எவ்வாறு தோன்றும் என்பது இதனை அடுத்து எழுகின்ற வினா ஆகும். விதை கெட்டு மரம் ஆவது போல சூக்கும உடல் கெட்டுப் பருஉடல் தோன்றுவது அன்று. திங்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாகக் கலைகள் தோன்றுவதைப் போன்று பரு உடல் தோன்றுவது அன்று. அதற்கு உவமை யாது எனின் பல்லாண்டுகள் வாழ்ந்த ஒரு மரத்தினை வெட்டி நீக்கிய பிறகு அந்த மரத்தின் வேரினின்று மற்றொரு மரம் உண்டாதலே உவமையாகும். நுண்ணுடம்பில் தூல உடம்பிற்குத் தகுதியான ஆற்றல்கள் தங்கியிருந்து தோன்றுவனவாகும்.

இப்பாடலுக்கு உரை எழுதிய சிவஞான முனிவர் இதனை அடுத்து வரும் பாடலின் கருத்தையும் உட்கொண்டு உரை கண்டார். யோக்கியம் என்பது ஓக்கியம் என மருவிற்று எனவும் முனிவர் கூறினார்.

139. விதிப்படி சூக்குமத்தே உருவரும் வினையால் இங்கே
உதித்திடா உருவமாக உருவரும் மரங்கள் வித்தில்
கதித்து எழும் மரமும் வித்தும் கழியும் பின் அழியும் சூக்கம்
மதிக்கு எழு கலைகள் போல வருவது போவதாமே.

உருவமாய் வளர்ந்து ஓங்கி விளங்குகின்ற மரங்கள் வித்திலிருந்து தோன்றிப் பருத்து எழுந்தவை ஆகும். அதுபோலவே உயிர்களின் வினைக்கு ஏற்ப இறைவனது ஆணையால் பரு உடம்புகள் நுண்ணுடம்புகளில் இருந்தும் தோன்றும். இங்கே ஒரு ஐயம் எழுப்பப்படும். மரம் அழியும் போது அதற்கு மூலமாகிய வித்தும் அழிதலைக் காண்கிறோம். அது போலவே பரு உடம்பு அழியும் போது அதற்குக் காரணமான நுண்ணுடம்பும் அழியுமா என்பது ஐயம். அவ்வாறு அன்று வித்திலிருந்து மரம் தோன்றும் என்னும் உவமை நுண்ணுடம்பிலிருந்து பரு உடம்பு தோன்றுவதற்கு ஒரு புடை ஒப்புமையே அன்றி முற்றுவுவமை அன்று. இங்கே பொருந்துகின்ற உவமை எது எனில் திங்களின் பதினாறு கலைகளில் ஒன்று அழியாமல் நிற்கும். அதுவே காரணமாகிய மற்றக் கலைகள் முறையே தோன்றுதலும் ஒடுங்குதலுமாக வளர்வதும் தேய்வதும் நிகழ்கின்றன. அது போல நுண்ணுடம்பு அழியாது நிற்க அதிலிருந்து பரு உடம்பு தோன்றுவதும் ஒடுங்குவதும் நிகழும்.

இவ்வாறு அருந்தா பத்தி அளவையால் பரு உடம்புகள் தமக்கு ஒரு முதல் இல்லாத வழி உருவமாகத் தோன்றிடா என்று ஆசிரியர் வலியுறுத்தினார்.

140. தூலமாம் உருவினுக்குச் சூக்குமம் முதல் அதற்கு
மூலம், மான்; அதற்கு மூலம் மோகினி அதன் முதல்தான்
மேலதாம் விந்து சத்தி சிவம் இவை மிசை யாம் எல்லாம்
சால இன்று ஆகும்- ஆன்மாச் சிவத்தினைச் சார்ந்த போது.

பரு உடம்பிற்கு முதற் காரணமாக அமைந்தது நுண்ணுடம்பு. நுண்ணுடம்பிற்கு முதற் காரணமாக அமைந்தது மூலப்பகுதி. அதற்கு முதற்காரணமாக அமைந்தது மோகினி. மூலப் பகுதிக்குக் காரணமாகிய மோகினியே யாவற்றுக்கும் பரம முதற்காரணம் எனப்படும். இவற்றுக்கு மேலானது குண்டலினி சத்தி. அது தூய்மையே வடிவாய் இவை அனைத்திற்கும் வியாபகமாய் விளங்கும். உயிர் சிவத்தினைப் பொருந்தும் போது இவை யாவும் இலவாய்ப் போகும். உயிர் கட்கு நிலையிலே இருக்கும் வரைக்கும் இவையும் உள்ளனவாம்.

ஒவ்வொன்றுக்கும் முதற்காரணத்தை முறையே சொல்லிக் கொண்டு வருகிறார். பரு உடம்புக்கு நுண்ணுடம்பும், நுண்ணுடம்புக்கு மூலப் பகுதியும், மூலப்பகுதிக்குத் தூவாமாயையும் காரணம் என்கிறார். மான் என்றது மூலப்பகுதியை, மோகினி என்றது தூவாமாயையை. இது அசுத்தமாயை எனவும் படும். மற்ற உரையாசிரியர்கள் எல்லாம் மோகினிக்குக் காரணம் சுத்தமாயை என்னும் விந்து என்றும் பொருள் கண்டனர். சிவஞான முனிவர் இவர்களிலிருந்து மாறுபட்டு உரை காண்கிறார். அவருடைய உரை பின் வருமாறு. அதன் முதற்றானென்பது அம்மூலப் பகுதிக்கு முதலாகிய தானென இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாய் மோகினியின் மேனின்றது. அதன் முதற்றானென்று அனுவதித்து மேலதாம் எனப் பரம முதற்காரணமாதல் கூறப்பட்டது. இவ்வாறன்றி முதல் என்ற தனை எழுவாயாக வைத்து உரைப்பார்க்கு, றகரம் இரட்டித்தல் பொருந்தாமையும் சித்தாந்தத்திற்கு ஏலாமையும் உணர்க.

அது போலவே சால இன்றாகும் என்பதற்கு மற்றைய உரையாசிரியர்கள் ஆன்மா சிவத்திலே சார்ந்த போது இவை முற்றிலும் இல்லாமல் போகும் என்று உரை கண்டனர். சிவஞான முனிவரோ இப்பகுதிக்கு உரை எழுதும் போது ஆன்மா சிவத்தினைச் சார்தற்கு ஏதுவாகிய பக்குவ காலம் அமைதற் பொருட்டு இப்பெத்த காலத்து உளவாவன என்க என்று உரை வரைந்தார்.

141. அரன்விதி அருள தென்றே அறைந்தனன் அதுவும் முன்னே
தரை நரகு அருந்துறக்கம் தனுகரணாதி எல்லாம்
வருவதும் செய்து அநாதி மலங்கள் இம்மருந்தால் தீர்த்து
பரகதியதுவும் தந்து பாத பங் கயமும் சூட்டும்,

சிவபெருமானுடைய செயல்கள் யாவும் அவனுடைய திருவருளே ஆகும் என்று முன்பே கூறப்பட்டது. இந்நில உலகம், நிரயம், துறக்கம் முதலிய உலகங்களில் சென்று ஆங்காங்கு உள்ள வினைப்பயன்களை உயிர்கள் நுகர்வதற்கு உரிய உடல் உறுப்புகள் முதலியவற்றையும் இறைவனே அவற்றுக்குப் படைத்து அளித்தான். தொன்று தொட்டே உயிர்களைப் பற்றிய ஆணவமலம், கன்மமலம் ஆகிய நோய்களை இத்தகைய மருந்துகளினால் தீர்த்து அதன் பின்னர் பரஞானத்தை விளக்கி அதன் பின்னர் தன்னுடைய திருவடி மலர்களையும் இறைவனே அளித்தருளுவான்.

மேலே 105-வது பாடலில் எக்கிரமத்தினாலும் இறை செயல் அருளே என்றும் என ஆசிரியர் கூறியதனை இங்கே மீண்டும் நினைவுறுத்தினார். மலமும் கன்மமும் ஆகிய நோய்களைத் தீர்ப்பதற்காக மாயையின் விளைவான உடல், கருவி, உலகு, நுகர்ச்சிப் பொருள் ஆகியவற்றை இறைவன் அவற்றுக்கு வழங்குகிறான்.

142. எழும் உடல் கரணம் ஆதி இவை மலம் மலம் மலத்தால்
கழுவுவன் என்று சொன்ன காரணம் என்னை? என்னின்
செழுநவை அறுவை சாணி உவர் செறிவித்து அழுக்கை
முழுவதும் கழிப்பன் மாயை கொடு மலம் ஒழிப்பன் முன்னோன்

மாயையிலிருந்து தோன்றுவனவாகிய உடல் கரணம் முதலிய யாவும் மலமேயாம். அவ்வாறு இருந்தும் இறைவன் மாயையாகிய மலத்தைக் கொண்டு ஆணவமலம், கன்மமலம் ஆகியவற்றை நீக்குவான் என்று கூறுவது பொருந்துமோ என்று சிலர் தடை எழுப்புவர். சலவைத் தொழிலாளர்கள் துணியில் உள்ள அழுக்கைச் சாணியையும் உவர் மண்ணையும் பயன்படுத்தியே போக்குவர். அதே போல இறைவனும் மாயையைக் கொண்டு உயிர்களைப் பற்றியுள்ள மலங்களை ஒழிப்பான்.

முள்ளைக் கொண்டே முள்ளை எடுப்பது போல இறைவன் மாயையாகிய மலத்தைக் கொண்டு மலங்களை நீக்குவான் எனக் கொள்க.

143. நித்தமாய் அருவாய் ஏக நிலையதாய் உலகத்திற்கோர்
வித்துமாய் அசித்தாய் எங்கும் வியாபியாய் விமல னுக்கோர்
சத்தியாய் புவன போகம் தனுகரணமும் உயிர்க்காய்
வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யும் அன்றே.

உலகிற்கு முதற்காரணம் எனப்படுகிற மாயை என்பது நித்தப் பொருளாகியும், அருவமாகியும், ஒன்றாகியும், உலகத் தோற்றத்திற்கு வித்தாகியும், அறிவற்ற சடமாகியும், எவ்விடத்தும் நிறைந்தும், இயல்பாகவே மலங்களிலிருந்து நீங்கிய இறைவனுக்கு வைப்பாற்றலாகியும், உயிர்களுக்கு உடல் கருவி உலகு நுகர்ச்சிப் பொருள்களாக விரிவடைகின்ற மலமாகியும், சில நேரங்களில் மயக்கத்தைத் தருவதாயும் விளங்கும்.

நித்தம்- நிலையான பொருள். ஏக நிலையதாய்- ஒன்றேயாகிய பொருள். வியாபியாய்- எங்கும் பரந்திருக்கும் பொருள். விமலனுக்கு ஒரு சத்தி என்பது இறைவனுக்கு வைப்பு ஆற்றலாய் விளங்கும் என்பதைக் குறித்தது. இதனை வடமொழியில் பரிக்கிரக சத்தி என்பர். இச்சத்தி இறைவனோடு எப்போதும் இருப்பினும் அவனால் வேண்டும் போது மட்டும் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

இப்பாடலில் சைவசித்தாந்தத்தின்படி மாயையின் இயல்புகள் யாவும் ஒருங்கே தொகுத்துச் சொல்லப்பட்டுள்ளன.

144. மாயையில் காலமோடு நியதி பின் கலாதி தோன்றும்;
ஆய அக்காலம் மூன்றாய் ஆக்கியும் அளித்தும் போக்கிக்
காயமோடு உலகுக்கு காலசங்கையினைப் பண்ணி
நாயகன் ஆணையாலே நடத்திடும் சகத்தை எல்லாம்

மாயையிலிருந்து காலம், நியதி என்னும் தத்துவங்களும் அதன் பின்னர் கலை முதலிய தத்துவங்களும் தோன்றும். காலதத்துவம் நாயகனாகிய சிவபெருமான் ஆணையினால் இறந்த காலம், நிகழ்காலம், எதிர் காலம் என்று மூன்று வகைப்படும். காலதத்துவம் உலகத்தைப் படைத்து நிலை நிறுத்தியும் ஒடுக்கியும் உடம்பொடு கூடிய உயிர்களுக்குக் காலத்தை வரையறுத்தும் உலகனைத்தையும் நடத்தி வரும்.

காலசங்கை- காலவரையறை. நாயகன் ஆணையாலே என்ற தொடரை தத்துவங்களைப் பற்றி எடுத்துரைக்கின்ற பாடல்கள் அனைத்தோடும் பொருத்திப் பொருள் காண வேண்டும்.

145. நியதிபின் தோன்றி கன்ம நிச்சயம் பண்ணி நிற்கும்;
அயர்வு இலாக் கலை பின்தோன்றி, ஆணவம் ஒதுக்கி சித்தின்
செயல்புரி கிரியாசத்தி தெரிவிக்கும் சிறிதே; வித்தை
உயர்கலை யதனில் தோன்றி அறிவினை உதிக்கப் பண்ணும்,

காலம் தோன்றிய பிறகு மாயையிலிருந்து தோன்றுவது நியதி தத்துவம் எனப்படும். உயிர்கள் ஒவ்வொன்றும் செய்த வினையின் பயனை அதுவதுவே நுகருமாறும் அந்த நுகர்ச்சியில் மிகுதியோ, குறைச்சலோ இல்லாதவாறும் செய்வதனால் அது நியதி தத்துவம் எனப்பட்டது. அதன்பின் மாயையிலிருந்து கலை என்னும் தத்துவம் தோன்றும். கலை ஆணவமலத்தின் மறைப்பைச் சற்றே நீக்கி உயிரின் தொழில் ஆற்றலை விளக்கும். மேலும் வினைக்கு ஈடாக வரும் நுகர்ச்சியில் செலுத்தும். கலை என்பதிலிருந்து வித்தை என்னும் தத்துவம் தோன்றும். இது உயிரின் அறிவாற்றலை விளக்குவதாகும். இதனால் நுகர்வுகளைப் பொருந்திய உயிர்கள் நுகர்வுகளை அறியும் திறனும் பெறும்.

146. விச்சையில் அராகம் தோன்றி வினைவழி போகத் தின்கண்
இச்சையைப் பண்ணி நிற்கும்; தொழில், அறிவு, இச்சை மூன்றும்
வைச்சபோது, இச்சா ஞானக் கிரியைமுன் மருவி, ஆன்மா.
நிச்சயம் புருடன் ஆகி, பொதுமையின், நிற்பன் அன்றே.

வித்தை என்னும் தத்துவத்திலிருந்து நாயகன் ஆணையால் அராகம் என்னும் தத்துவம் தோன்றும். இது உயிரின் விழைவு ஆற்றலை விளக்கி வினைக்கு ஈடாக நுகர்வுகளில் செலுத்தும். கலை உயிரின் தொழிலாற்றலையும், வித்தை அறிவாற்றலையும், அராகம் விழைவு ஆற்றலையும் முறையே விளக்கிய போது புருட தத்துவம் என்னும் பெயர் பெற்றுப் பொதுவான நிலையில் நிற்கும்.

இந்நிலையில் உயிர், காலம், நியதி, கலை, வித்தை, அராகம் ஆகிய ஐந்து சட்டைகளுடன் நிற்கும் என்று கூறப்படும். இவற்றைப் பஞ்சகஞ்சுகம் என்பர். இவ்வாறு நிற்கும் நிலை பொதுமையாகும், சிறப்பு வகையால் புருடதத்துவம் என நிற்றல் மூலப்பகுதியில் தோன்றும் அவிச்சை முதலிய பஞ்சக்கிலேசமும் உடைத்தாய வழி என்பார். ஈண்டு பொதுமையில் நிற்பன் என்றார் என்பது சிவஞான முனிவர் உரை.

147. வரும்குண வடிவாய் மூலப்பிரகிருதி கலையில் தோன்றித்
தரும்குணம் மூன்றாய், ஒன்றில்தான் மூன்றாய் மும்மூன்று ஆகும்
இருங்குண ரூபமாகி இயைந்திடும், எங்கும் ஆன்மா;
பெருங்குண வடிவாய், போக சாதனம் பெந்தமாமே.

கலை என்னும் தத்துவத்திலிருந்து தோன்றுவது மூலப்பகுதி எனப்படும். இது சத்துவம், இராசதம், தாமதம் என்ற மூன்று குணங்களைத் தன்னுள் அடக்கியதாக விளங்குவது. குணங்கள் மூன்றும் வெளிப்பட்டுத் தோன்றும் போது அது குணதத்துவம் என்ற பெயரால் அழைக்கப்படும். மூன்று குணங்களும் ஒவ்வொன்றும் மூன்று வகைப்பட்டு ஒன்பதாகும். நுகர்வுக்குரிய சாதனமாய் அதனிடத்துத் தோன்றும் புத்தி முதலிய தத்துவங்களும் பெரிதாகிய குணவடிவே ஆக உயிர்களைக் கட்டுக்குள் அகப்படுத்தும். அதனால் உயிர் நுகர்கின்ற காலத்தில் அக்குணவடிவாகவே விளங்கும்.

மூலப்பகுதி- மூலப் பிரகிருதி. மூலப்பகுதியில் குணங்கள் வெளிப்பட்டுத் தோன்றாது இருப்பதனால் அதற்கு அவ்வியக்தம் என்றும் பெயர் உண்டு குணங்கள் மூன்றும் சாத்துவிகத்தில் சாத்துவிகம், சாத்துவிகத்தில் இராசதம், சாத்துவிகத்தில் தாமதம் என்று இவ்வாறு மூன்று வகைப்படும். இதனால் ஒன்பது வகை கூறப்பட்டது.

148. சித்தமாம் அவ்வியத்தம் சிந்தனையதுவும் செய்யும்;
புத்தி அவ்வியத்தில் தோன்றிப் புண்ணிய பாவம் சார்ந்து,
வத்துநிச்சயமும் பண்ணி, வரும் சுக துக்க மோகப்
பித்தினின் மயங்கி, ஞானக் கிரியையும் பேணி நிற்கும்,

மூலப்பகுதியிலிருந்தும் சித்தம் தோன்றும். அது உயிர்களுக்கு நுகர்விற்கு உரிய சிந்தனையையும் தோற்றுவிக்கும். மூலப்பகுதியிலிருந்தே புத்தி எனும் தத்துவமும் தோன்றும். உயிர்களின் புண்ணிய பாவங்கட்கு ஏற்ப ஒரு பொருளை இன்னது என நிச்சயிக்கும். அதன் பின்னர் இன்பம், துன்பம், மயக்கம் ஆகிய உணர்வுகளைத் தோற்றுவித்தும் உயிரின் அறிவையும், தொழிலையும் பேணியும் நிற்கும்.

சித்தாமம் அவ்வியத்தம் என்ற தொடருக்கு உரை எழுதும் போது மாதவச் சிவஞான முனிவர் குணதத்துவத்துக்குக் காரணம் என சித்திக்கப்பட்டதாகிய மூலப்பகுதி என்று உரைகண்டார். அவ்வாறு உரை வகுத்ததற்கான காரணத்தையும் தனது உரையின் பிற்பகுதியில் விளக்கினார். இந்தப் பகுதி நயமுடையது. வத்து நிச்சயம்- வஸ்து- நிச்சயம்; பொருளை நிச்சயித்தல்.

149. ஆங்காரம், புத்தியின் கண் உதித்து, அகந்தைக்கு வித்தாய்,
ஈங்கு ஆர்தான் என்னோடு ஒப்பார் என்று, யான் என்னது என்றே
நீங்காதே நிற்கும்; தானும் மூன்றதாய் நிகழும் என்பர்.
பாங்கு ஆர்பூதாதி, வைகாரிகம், தைசதந்தான் என்றே.

புத்தி தத்துவத்திலிருந்து அகங்காரம் தோன்றும். இதுவே அகந்தைக்கு வித்தாகும். இங்கு என்னை ஒப்பவர் யார் என்ற தருக்கும் யான் எனது என்ற, இருவகைப் பற்றுக்களும் உயிரோடு வேற்றுமை இல்லாமல் நிற்பதற்கு அகங்காரமே காரணமாகும். இது மூன்று வகையாகப் பகுக்கப்படும். அவை முறையே பூதாதி அகங்காரம், வைகரி அகங்காரம், தைசத அகங்காரம் என்பனவாம்.

150. மனமது தைசதத்தின் வந்து, ஒரு பொருளை முந்தி
நினைவதும் செய்து அங்கு ஐய நிலைமையின் நிற்கும்; ஆங்கே,
இனம்மலி சோத்திராதி, கன்மஇந்திரியம் எல்லாம்,
முனம் உரை செய்தவைகா ரிகம் தரும் என்பர் முன்னோர்.

தைசத அகங்காரத்தினின்றும் மனம் தோன்றும். மனம் என்பது தனக்கு எதிர்ப்பட்ட ஒரு பொருளை இது யாதோ என்று நினைத்து ஐயம் கொள்ளும். மனத்தின் பின்னர் அறிவுப் பொறிகளும் தைசத அகங்காரத்திலிருந்தே தோன்றும். வைகரி அகங்காரத்திலிருந்து தொழிற் பொறிகள் ஐந்தும் தோன்றும் என்பர் முன்னோர்.

151. நல்செவி, துவக்குக், கண், நா, நாசிஐந்தினையும், நல்லோர்,
புத்திஇந் திரியம் என்று புகன்றனர்; இவை தமக்குச்,
சத்த, நற் பரிச; ரூப, இரத, கந்தங்கள் ஐந்தும்,
வைத்தனர், விடயமாக அடைவினின் மருவும் என்றே.

காது, மெய், கண், நா, மூக்கு, ஆகிய ஐந்தினையும் அறிவுப் பொறி என்று நல்லோர் கூறினர். இவற்றுக்குப் புலப்படுவனவாக ஓசை ஊறு உருவம் சுவை மணம் என்ற ஐந்தினையும் முறையே கூறுவார்கள்.

உடலில் உள்ள அறிவுப் பொறிகள் ஐந்தாகும். அவை மெய், வாய், கண், மூக்கு, செவி எனப்படும். இங்கு அவற்றை மாற்றி அமைத்ததற்குக் காரணம் அவற்றுக்குப் புலனாகின்ற பொருள்களாகக் கூறப்படுகின்ற சத்த பரிச ரூப இரச கந்தம் என்ற வைப்பு முறை பற்றி என்க. வடமொழியில் அறிவுப் பொறிகள் ஞானோந்திரியம் என்று கூறப்பெறும். செவியை சோத்திரம் என்றும், மெய்யைத் துவக்கு என்றும், கண்ணை சட்சு என்றும் நாவை சிங்குவை என்றும், மூக்கை ஆக்கிராணம் என்றும் வடநூலார் வழங்குவர்.

152. வாக்கொடு பாதம் பாணி பாயுவோடு உபத்தம் ஐந்தும்
நீக்கினர் முன்னே கன்மேந்திரியங்கள் என நினைந்தே;
ஆக்கிய வசன, கமன, தானமும் விசர்க்க ஆனந்தம்
ஊக்கமார் ஐந்தும் ஐந்தின் தொழிலென ஓதினாரே.

தொழிற் பொறிகள் என்பன வாக்கு, கால், கை, எருவாய், கருவாய் என்ற ஐந்துமாகும். இவற்றை நல்லோர் மேற் கூறப்பட்ட அறிவுப் பொறிகளில் இருந்து வேறுபட்டன என்று தனித்து வைத்தனர். இங்குக் கூறப்பட்ட தொழிற் பொறிகள் ஐந்தினுக்கும் உரிய தொழில்கள் முறையே சொல்லுதல், நடத்தல், இடுதல், கழித்தல், மகிழ்தல் என்றும் அமைத்தனர்.

வாக்கு- சொல், பாதம்- கால், பாணி- கை, பாயுரு- எருவாய், உபத்தம்- கருவாய், வசனம்- சொல்லுதல், கமனம்- நடத்தல், தானம்- இடுதல், விசர்க்கம்- கழித்தல், ஆனந்தம்- மகிழ்ச்சியைத் தருதல்.

153. வாயாதி சோத்திராதி புறத்து வாழ் கருவி ஆகும்.
ஓயாத மனாதி காயத்து உணரும் உட்கருவி ஆகும்.
ஆய்வார்கட்கு அராகம் ஆதி அவற்றின் உட்கருவி என்பர்.
மாயாள் தன் வயிற்று, இவற்றால் துடக்குண்டு வாழும் ஆன்மா.

சொல் முதலிய தொழிற் பொறிகளும் காது முதலிய அறிவுக் கருவிகளும் உடம்பின் புறத்தே உள்ள கருவிகள் ஆகையால் இவை பத்தும் புறக்கருவிகள் என்று கூறப்படும். எதிலும் நிலைத்து நில்லாத ஓய்வறியாத மனம் முதலியன உடம்பின் உள்ளே நின்றும் செயற்படுகின்ற கருவிகள். ஆகையினால் அவற்றை அகக் கருவிகள் என்று கூறுவார்கள். நுண்மையாக ஆராய்பவர்களுக்கு மனம் முதலிய அகக் கருவிகளுக்கும் அகக் கருவிகளாய் அராகம் முதலியன செயல்படுகின்றன என்பது புலனாகும். இங்குக் கூறப்பட்டயாவும் மாயையின் வயிற்றில் பிறந்து உயிரைத் தளைப்படுத்தி நிற்பனவாகும்.

154. ஓசை நன் பரிச ரூப இரத கந்தங்கள் என்று
பேசுமாத்திரைகள் ஐந்தும் பிறக்கும் பூ தாதி கத்தின்
நேச இந்திரியங்கட்கு நிகழ் அறிவு இதனாற் காண்டும்,
ஆசைசேர் மனாதி தன்மாத்திரை புரி அட்டகந்தான்,

பூதாதி அகங்காரத்திலிருந்து ஓசை, ஊறு, உருவம், சுவை, நாற்றம் என்ற ஐந்து தன் மாத்திரைகளும் தோன்றும். இவை மேலே கூறப்பட்ட பொறிகளைத் தூண்டிப் பொருள்களை அறியும் விருப்பத்தினை அவற்றுக்கு ஊட்டுவனவாகும். விழைவைத் தோற்றுவிக்கின்ற மனம் புத்தி அகங்காரம் ஆகிய மூன்றும், இங்குக் கூறப்பட்ட தன்மாத்திரைகள் ஐந்தும் ஆகிய எட்டும் சேர்ந்த கூட்டமே புரியட்டக உடல் எனப்படும்.

செய்யுளின் மாத்திரை என்று குறிக்கப்பட்டது தன் மாத்திரை என்னும் சொல்லின் தலைக்குறையாகும். முன்னர் 151-வது பாடலில் கூறப்பட்ட ஐந்தும் விடயங்கள் என்று கூறப்படும். அவற்றுக்கும் இங்கே கூறப்பட்ட ஓசை ஊறு உருவம் சுவை மணம் ஆகிய வற்றுக்கும் வேறுபாடு உண்டு. இவ்வைந்தும் மிக நுண்ணியவாய் இருத் தலின் இவற்றைத் தன்மாத்திரை என்றனர் பெரியோர்.

155. சாற்றிய பஞ்ச தன்மாத்திரைகளின் சத்தம் முன்னாத்
தோற்றும், வான், வளி, தீ, நீர், மண்; தொடக்கியே ஒன்றுக்கு ஒன்று அங்கு
ஏற்றமாம் ஓசை ஆதி இருங்குணம் இசைந்து நிற்கும்
ஆற்றவே விடயம், பூதம், அங்காங்கி பாவத்து ஆமே.

ஓசை ஊறு உருவம் சுவை நாற்றம் என்று கூறப்பட்ட தன்மாத்திரைகள் ஐந்திலிருந்தும் முறையே வான் வளி நெருப்பு நீர் மண் என்னும் ஐம்பெரும் பூதங்களும் தோன்றும். அவற்றிலிருந்து தொடங்கி ஒவ்வொன்றாகக் கூடி ஓசை முதலிய ஐந்து குணங்களும் இசைந்து நிற்கும். ஐம்பெரும் பூதங்களும் அவற்றுக்குக் கூறப்பட்ட குணங்களும் உடலும் உயிரும் போலப் பொருந்தி வரும்.

தன் மாத்திரைகளிலிருந்து ஐம்பெரும் பூதங்கள் குணங்களைப் பொருந்தித் தோன்றும் என்பது பாடலில் கூறப்பட்டது. விண் காற்று நெருப்பு நீர் மண் ஆகிய இவற்றின் குணங்கள் ஒன்றற்கு ஒன்று கூடினதாக அமையும் என்றார். விண், ஓசை மட்டுமே உடையது. காற்று, ஓசையும் ஊறும் உடையது. தீ, ஓசை, ஊறு, ஒளி மூன்றையும் உடையது. நீர், ஓசை ஊறு, ஒளி, சுவை நான்கினை உடையது. மண், ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் ஆகிய ஐந்தொடும் கூடியதாகும். இவை யாவும் அகப்பூதம், அகப்புறப்பூதம், புறப்பூதம், என்று மூன்று வகைப்படும். இதனைத் தொடர்ந்து வரும் பாடல்களிலே புறப்பூதங்களுடைய இயல்பு ஆசிரியரால் கூறப்படுகிறது.

156. இரந்தரமாகி வான் தான் இடம் கொடுத்திடும்; சலித்துப்
பரந்தவை திரட்டும், கால் தீ சுட்டு ஒன்று வித்தல் பண்ணும்
நிரந்தரம் குளிர்ந்து நின்று பதஞ்செயும், நீர் மண் தானும்
உரந்தரு கடின மாகித் தரித்திடும் உணர்ந்து கொள்ளே.

இங்கே கூறப்பட்ட ஐம்பெரும் பூதங்களுள் வான் பெருவெளியாகித் தன்னிடத்திலே மற்றைப் பொருள்கள் யாவும் இயங்குவதற்கு இடம் தரும். காற்று சலித்தலும் பரந்தவற்றைத் திரட்டுதலுமாகிய இயல்பும் தொழிலும் உடையது. நெருப்பு சுடுதலும் ஒன்றுவித்தலுமாகிய தன்மைகளை உடையது. நீர் எப்போதும் குளிர்ந்து இருக்கும். அதன் தொழில் பதம் செய்தல் ஆகும். மண் வலிமை உடையதாகிக் கடினமாக விளங்கும். யாவற்றையும் தாங்குவதாகிய தொழிலைச் செய்யும்.

இந்தப் பாடலில் ஐம்பெரும் பூதங்கள் ஒவ்வொன்றின் பண்பும் தொழிலும் கூறப்பட்டன.

157. மண் புனல், அனல், கால், வான்; பால் வடிவு நாற்கோணம், ஆகும்-
தண்பிறை மூன்று கோணம் தகும் அறுகோணம் வட்டம்.
வண்பொன்மை வெண்மை செம்மை கறுப்போடு தூமம் வன்னம்.
எண்தரும் எழுத்துத் தானும் ல, வ, ர, ய அவ்வுமாமே.

ஐம் பெரும் பூதங்கட்கும் தனித்தனி வடிவமும் நிறமும் எழுத்தும் இன்னவென்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன. மண்ணின் வடிவம் நாற்கோணம். அதன் நிறம் பொன்மை. அதற்குரிய எழுத்து லகரம், நீருக்கு உரிய வடிவு தண்ணியபிறை. அதன் நிறம் வெண்மை, எழுத்து லகரம், நீருக்கு உரிய வடிவு தண்ணியபிறை. அதன் நிறம் வெண்மை, எழுத்து லகரம், தீயின் வடிவு முக்கோணம். நிறம் செம்மை. எழுத்து ரகரம். காற்றின் வடிவு அறுகோணம். அதன் நிறம் கருமை. அதற்குரிய எழுத்து யகரம். விண்ணின் வடிவு வட்டம். அதன் நிறம் புகைநிறம். இதற்குரிய எழுத்து அகரம்.

158. குறிகள் வச்சிரத்தினோடு கோகநதம் சுவத்தி
அறுபுள்ளி அமுதவிந்து அதிதெய்வம்- அயன் மால் ஆதி
செறிபுகழ் ஈசனோடு சதாசிவம் பூத தெய்வம்
நெறிதரு கலை ஐந்திற்கும் நிகழ்த்துவர் இந்த நீர்மை.

ஐம் பூதங்கட்கும் உரிய அடையாளமும் அதி தெய்வமும் இப்பாடலில் கூறப்படுகின்றன. மண்ணிற்குரிய அடையாளம் வச்சிராயுதம். அதி தெய்வம் அயன். நீருக்குரிய அடையாளம் தாமரை. அதி தெய்வம் திருமால். நெருப்பிற்கு உரிய அடையாளம் இருதலை மேழி. அதிதெய்வம் உருத்திரன். காற்றுக்கு உரிய அடையாளம் அறு புள்ளி. அதன் அதி தெய்வம் மகேசுவரன். விண்ணிற்கு உரிய அடையாளம் அமுதத்துளி. அதன் அதிதெய்வம் சதாசிவன். நிவிருத்தி முதலிய ஐந்து கலைகளுக்கும் உரிய தெய்வங்களும் இந்த முறையிலேயே அமையும் என்பர்.

ஐந்து கலைகளாவன நிவிருத்தி கலை, பிரதிட்டா கலை, வித்தியா கலை, சாந்தி கலை, சாந்தியதீத கலை என்பனவாகும்.

159. சுத்ததத் துவங்கள் என்று முன்னமே சொன்ன ஐந்தும்
இத்தகைமையின் இயம்பும் இவை முப்பத் தொன்று மாக
தத்துவம் முப்பத்தாறாம் சைதன்னி யங்கள் ஐந்தும்
சித்து அசித்து ஆன்மா ஒன்று முப்பதும் அசித்தே செப்பில்.

முன்பே கூறப்பட்ட சுத்த தத்துவங்கள் ஐந்தும் அதன் பின்னர்க் கூறப்பட்ட அசுத்த தத்துவங்கள் 31-ம் ஆகத் தத்துவங்கள் மொத்தம் 36 ஆகும். இவற்றுள் முதலில் கூறப்பட்ட ஐந்தும் அறிவுடையவை ஆகும். உயிர் என்பது சார்ந்ததன் வண்ணம் ஆவதாலும் உணர்த்த உணர்தலாலும் சித்தசித்து எனப்படும். இவை ஆறும் தவிர்ந்த மற்றைய முப்பதும் அறிவற்றனவேயாகும்.

சுத்ததத்துவங்கள் பற்றி இந்நூலின் பாடல் 86-ல் ஆசிரியர் எடுத்துரைத்தார். அதற்குப் பின்வரும் பாடல்களிலும் அசுத்த தத்துவங்கள் முப்பத்தொன்றையும் விரித்துக் கூறினார். இவற்றுள் சுத்ததத்துவங்கள் ஐந்தும் அறிவற்றனவே ஆயினும் சித்சத்திக்கு உரிய வடிவங்களாக விளங்குவதால் அவை அறிவுடையனவாகவே கொள்ளப்பெறும் ஆன்மா ஒரு வகையால் அறிவுடையதாகியும் மற்றொரு வகையால் அறிவற்றதைச் சார்ந்தும் நிற்பதால் அதனைச் சித்தசித்து என்றனர். மற்றைய முப்பது தத்துவங்களும் அறிவற்றனவே. சித்து- அறிவுடைப் பொருள். அசித்து- அறிவற்ற பொருள். சைதன்யம்- அறிவுடையன.

160. ஐந்துசுத் தத்தின் கீழ் ஏழ்- சுத்தாசுத் தம் அசுத்தம்-
தந்திடும் புமான் கீழ் எண்மூன்றாயதத் துவம்; சீவர்க்கு
வந்திடும் பிரேர காண்டம் ! மருவுபோக சயித்தி ரத்தோடு
அந்தம் இல் அணுக்களுக்குப் போக்கிய காண்டம் ஆமே.

மேலான தத்துவங்கள் ஐந்தும் சுத்த தத்துவங்கள் எனப்பட்டன. இத்தொகுதி பிரேரக காண்டம் என்றும் பெயர் பெறும். சுத்த தத்துவத்தின் கீழ்ப்பட்டனவாகிய ஏழு தத்துவங்களும் ஒரு தொகுதியாகக் கொள்ளப்படும். இதனை மிசிர தத்துவங்கள் என்பர். இத்தொகுதி கீழ்பட்டதாகிய 24 தத்துவங்களும் அசுத்த தத்துவங்களாகும். இத்தொகுதியை போக்கிய காண்டம் என்பர். எண்ணற்ற உயிர்களுக்கு இன்பத் துன்ப நுகர்வுகளைத் தருவன இவையே.

முதலாவதாகக் கூறப்பட்ட சுத்த தத்துவங்களுக்கு சிவதத்துவம் என்னும் பெயர் வழங்கும். இவையே உயிர்களின் நுகர்வுகளைச் செயற்படுத்துவன. எனவே இவற்றுக்குப் பிரேரக காண்டம் என்று பெயர்.

அதனை அடுத்துக் கூறப்பட்ட ஏழு தத்துவங்களும் வித்தியா தத்துவங்கள் என்றும் பெயர் பெறும். இவை உயிர்களின் அறிவையும், தொழிலையும் ஓரளவு விளக்கும் தன்மை உடையன. இத்தொகுதி சுத்தமும், அசுத்தமும் ஆகிய கலப்பு என்பதால் சுத்தா சுத்தம் எனவும் மிச்சிராத்துவா எனவும் கூறப்படும். மிச்சிரம்- கலப்பு. உயிர்களுக்கு இன்பத் துன்ப நுகர்வுகளை ஊட்டுவதற்குக் காரணமாக இருப்பதனாலே இது போசயித்திரு காண்டம் எனப் பெயர் பெறும்.

அதன் பின்னர் வருகின்ற எண்மூன்று (8*3) இருபத்து நான்கு தத்துவங்களும் ஆன்ம தத்துவங்கள் என்று பெயர் பெறும். இவை அனைத்தும் உயிர்களுக்கு நுகர்ச்சியைத் தருதலின் போக்கிய காண்டம் என்று பெயர் பெறும். புமான்- புருடதத்துவம்.

161. தத்துவ ரூபமாகும் தரும் அரு உருவம் எல்லாம்;
தத்துவம் தூல சூக்க பரங்களும் ஆகி நிற்கும்
தத்துவம் தன்னில் சாரும் அணுக்கள் சாதாக்கியத்தில்
தத்துவம் சத்தம் சாரும் சகலமும் தத்துவம் காண்,

உலகத்தில் காணப்படுகின்ற அருவம், உருவம், அரு உருவம் ஆகிய எல்லாப் பொருள்களும் மாயையிலிருந்தும் தோன்றிய இத்தத்துவங்களின் வடிவமேயாகும். இம்முப்பத்தாறு தத்துவங்களும் பருப் பொருளானவை என்றும், நுண்பொருளானவை என்றும், மீநுண்பொருளானவை என்றும் ஒவ்வொன்றும் மூன்று வகைப்பட்டு விளங்குவனவாகும். உயிர்கள் இத்தத்துவங்களைப் பொருந்தியே நிற்கும். அந்தந்தத் தத்துவத்தின் அதி தெய்வங்களுக்கும் அந்தந்தத் தத்துவங்களின் பெயரே பொருந்தும். எனவே, எல்லாப் பொருளும் தத்துவமாகவே காணப்படும்.

162. தத்துவம் எண் மூன்றும் சென்று ஆன்மதத் துவத்து ஒடுங்கும்
வித்தையின் ஒடுங்கும் ஆறும் சிவத்தினில் ஒடுங்கும் மூன்றும்
நித்ததத் துவம் இம்மூன்றும் என்பார்கள் இரண்டும் நின்ற
சத்தமாம் சிவத்து ஒடுங்கும்; தோற்றமும் இதுபோல் ஆகும்.

இப்பாடலில் முப்பத்தாறு தத்துவங்களும் ஒடுங்குங் காலத்து எவ்வாறு ஒடுங்கும் என்பதைத் தொகுத்துக் கூறுகிறார் ஆசிரியர்.

முப்பத்தாறு தத்துவங்களும் ஒடுங்கும் போது நிலம் முதல் மூலப் பகுதி வரையுள்ள இருபத்து நான்கும் சீகண்டருத்திரனில் அடங்கும். அதற்கு மேல் உள்ள ஏழு தத்துவங்களும் வித்தைக்கு உரிய அனந்தரில் ஒடுங்கும். அதற்கு மேல் உள்ள மூன்று தத்துவங்களும் இலய சிவனில் ஒடுங்கும். மற்ற இரண்டாகிய சத்தி தத்துவம், சிவதத்துவம் என்பன சுத்த சிவனில் ஒடுங்கும். மீண்டும் இவை தோற்றுவிக்கப்படும் போது அவையவை அவரவரால் தோற்றுவிக்கப்படும் என்று மேலோர் கூறுவர்.

நான்காம் அதிகரணம்

163. மொய்தரு பூதம் ஆதி மோகினி அந்தம் ஆக
பொய்தரு சமயம் எல்லாம் புக்கு நின்றிடும் புகன்று
மெய்தரு சைவ மாதி இருமூன்றும் வித்தை ஆதி
எய்துதத் துவங்கள் ஏயும் ஒன்றும் இன்று எம் இறைக்கே.

மெய்யை உணராத உலோகாயதம் முதலாகக் கூறப்படுகின்ற புறப்புறச் சமயம், புறச் சமயம், அகப்புறச் சமயம் என்பன யாவும் மேலே கூறப்பட்ட முப்பத்தாறு தத்துவங்களையும் ஏற்றுக் கொள்ளுவதில்லை. ஆகவே அச்சமயத்தவர் நிலம் முதல் தூவாமாயை முடிய உள்ள தத்துவங்களையே கொண்டனர். எனவே அவர்களுக்கு அவரவர் கொண்ட தத்துவங்களின் எல்லை வரை புகுதல் கூடும். இவர்க்கு மேலாக அகச் சமயத்தவர் அறுவகையினரும் இறை, உயிர், தளை என்ற முப்பொருள் உண்மை கொள்பவர் ஆவர். எனவே அவர்கள் எய்துகின்ற தத்துவங்களாவன சுத்தவித்தை முதலிய ஐந்து தத்துவங்களுள் ஒன்றாகவே அமையும். சித்தாந்த சைவத்திற்கு இறைவனாக விளங்குகின்ற சுத்தசிவன் இம்முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நிற்பவன் ஆவான்.  

மேலே 91-வது பாடலிலே நிலவு சீர் அமலன் ஆகி நின்றனன் என்று இறைவனைப் பற்றி ஆசிரியர் கூறியதை இப்பகுதி விளக்குகிறது. எந்தெந்த சமயத்தினர் எந்தெந்தத் தத்துவங்களைக் கொண்டார்களோ அதன் அளவினன்றி அதற்கு மேல் அவர்களுக்குச் செல்லுதல் கூடாது. ஆகையினால் அதுவரையிலே சென்று புகுவர் என்றார். சைவ சித்தாந்தம் தத்துவங்கள் முப்பத்தாறு எனக் கொண்டு இறைவனாகிய சிவபெருமானைத் தத்துவங்களைக் கடந்தவன் என்று கூறுவதையும் இப்பாடலில் ஆசிரியர் விளக்கினார்.

164. சிவம் சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன்
உவந்தருள் உருத்திரன்தான் மால் அயன் ஒன்றின் ஒன்றாய்ப்
பவந்தரும் அருவம் நாலு இங்கு உருவநால் உபயம் ஒன்று ஆய்
நவம் தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர்.

சிவம், சத்தி, நாதம், விந்து சதாசிவம் மகேசுரன், உருத்திரன், திருமால் அயன் ஆகிய இவ்வடிவங்கள் ஒன்பதும் முறையே ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றும். இவை அனைத்தையும் நவந்தரு பேதம் என்பர். சிவம், சத்தி, நாதம், விந்து ஆகிய முதல் நான்கும் அருவத் திருமேனிகள். நடுவிலே உள்ள சதாசிவம் என்பது அருஉருவத் திருமேனி. மகேசுரன், உருத்திரன், திருமால், அயன் ஆகிய நான்கும் உருவத் திருமேனிகள். இவ்ஒன்பது வடிவுகளையும் கொண்டருள்பவன் இறைவன் ஒருவனே என்று மேலோர் கூறுவர்.

165. சத்தியாய் விந்து சத்தி யாய் மனோன் மணி தானாகி
ஒத்துறும் மகேசை ஆகி உமை திரு வாணி ஆகி
வைத்துறும் சிவாதிக்கு இங்ஙன் வரும் சத்தி ஒருத்தி ஆகும்
எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்.

நவம் தரு பேதம் என்று மேலே கூறப்பட்ட ஒன்பது சிவ வடிவங்களுக்கும் ஒத்த சத்தி வடிவங்களும் ஒன்பது ஆகக் கூறப்படும், அவை முறையே சிவம், சத்தி, நாதம் விந்து மனோன்மணி மகேசுவரி உமைதிருமகள், கலைமகள் என்பன. இவை ஒன்பதாகக் கூறப்படினும் அனைத்தும் சிவசத்தியின் வடிவங்களே. சிவபெருமான் ஒன்பது வடிவங்களைக் கொண்டு இவ்வுலகை நடத்தி வருகிறானோ அவன் திறத்துக்கு ஏற்ப அவனுக்குத் துணையாய் நின்று சத்தியும் நடத்தி வருவாள்.

166. சத்திதான் நாதம் ஆதி தான் ஆகும்; சிவமும் அந்தச்
சத்திதான் ஆதி ஆகும்; தரும்வடிவு ஆன எல்லாம்
சத்தியும் சிவமும் ஆகும் சத்திதான் சத்தனுக்கு ஓர்
சத்தியாம் சத்தன் வேண்டிற்று எல்லாம் ஆம் சத்திதானே.

சத்தி, நாதம் முதலிய எல்லாவற்றோடும் கூடி நிற்கும். சிவமும் சத்தி முதலியவற்றை இடங்கொண்டிருக்கும். எனவே சத்தியினால் தரப்படும் எல்லா வடிவங்களும் சத்தி, சிவம் இரண்டிற்கும் பொது வடிவங்களேயாகும். சத்தன் ஆகிய சிவன் வேண்டியவாறு எல்லாம் ஆவது சத்தியே. சத்தியே சிவபெருமானுக்கு ஒப்பற்ற தேவியும் ஆகும்.

167. சிவம் சத்தி தன்னை ஈன்றும் சத்திதான் சிவத்தை ஈன்றும்
உவந்து இரு வரும்புணர்ந்து இங்கு உலகு உயிர் எல்லாம் ஈன்றும்
பவன் பிரமசாரி ஆகும்; பான்மொழி கன்னி ஆகும்;
தவம் தரு ஞானத் தோர்க்குஇத் தன்மைதான் தெரியும் அன்றே.

சிவத்திலிருந்து சத்தி தோன்றும். சத்தியிலிருந்து சிவம் தோன்றும். சத்தியும் சிவமுமாகிய இருவரும் கூடி உயிர்களிடத்துக் கொண்ட பெருங் கருணையினால் அறிவுடையதும், அறிவற்றதுமாகிய உலகு உயிர்களைத் தோற்றுவிப்பர். அவ்வாறு இருந்தும் சிவபெருமான் பிரமசாரியே ஆவன். பாலினும் இனிய மொழியுடைய சத்தி இளங்கன்னியே ஆவாள். தவத்தினால் ஞானம் பெற்றவர்களுக்கு இவ்வுண்மை விளங்கும்.

பரசிவத்திலிருந்து பராசத்தியும் பராசத்தியிலிருந்து ஞானவடிவே யான சிவமும் அதிலிருந்து கிரியா சத்தியாகிய ஆற்றலும் தோன்றும் என்பது முன்னர் 164-வது பாடலில் ஆசிரியரால் விளக்கப்பட்டது.

திருவாசகத்தில், திருபொற்சுண்ணம் பதின்மூன்றாவது பாடலில், என்னுடைய ஆரமுது எங்களப்பன் எம் பெருமான் இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் தமையன் எம் ஐயன் தாள்கள் பாடி என்று மாணிக்கவாசகர் அருளிச் செய்தார். அது போலவே திருக் கோவையாரில், அவள் அத்தனாம் மகனாம் தில்லையாம் (பாடல் 112) என்று அருளினார். இப்பகுதிக்குப் பேராசிரியர் உரை எழுதும் போது சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்திதத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார் என்று விளக்கியுள்ளதும் காண்க.

குமரகுருபரர், சிதம்பரச் செய்யுட் கோவையுள் (பாடல் 33) கனகமார் கவின்செய் மன்றில், அனக நாடகற்கு எம் அன்னை, மனைவி தாய் தங்கை மகள் என்று அருளியதும் இங்கே நினைவு கூர்க.

168. தனு கரண புவன போகம் தற்பரம் பந்தம் வீடு என்று
அணுவினோடு எல்லாம் ஆகி அடைந்திடும் தத்துவங்கள்
இனிது அறிந்து இவை நிவிர்த்தி முதல் கலை இடத்தே நீக்கி,
நனிபரம் உணர்ந்தோன்- அந்தத் தத்துவ ஞானி ஆவன்.

உடல், கருவி, உலகம் நுகர்ச்சிப் பொருள் என்பன உயிர்களைக் கட்டுக்குள் வைத்திருப்பவை ஆகும். அவற்றுக்கு மேலாக விளங்குவனவாகிய சிவதத்துவங்கள் ஐந்தும் உயிர்களை வீட்டு நிலைக்கு இட்டுச் செல்வனவாகும். இவ்வாறு தத்துவங்களினாலேயே உயிர் கட்டுநிலைக்கு உட்பட்டும் வீட்டு நிலையைத் தலைப்பட்டும் வரும். தத்துவங்கள் யாவும் உயிர்களோடு பொருந்துவனவேயன்றி இறைவனோடு பொருந்துவனவாகா. இதனை இனிது அறிந்து நிவிருத்தி கலை முதலாகக் கழியும் முறைமையில் கழித்து தத்துவங்களைக் கடந்த பரம் பொருளை உணர்ந்தவன் எவனோ அவனே தத்துவஞானி ஆவான்.

முந்திய பாடலில் தவம் தருஞானத்தோர்க்கு இத்தன்மைதான் தெரியுமன்றே என்று கூறிய ஆசிரியர் அத்தகைய ஞானம் பெற்றவர்கள் யார் என்பதை இந்தப் பாடலில் விளக்கினார்.

169. எல்லாமாய்த் தத்துவங்கள் இயைந்தது என், அணுவுக்கு ? என்னின்
தொல்லாய கன்மம் எல்லாம் துய்ப்பித்துத் துடைத்தற்கும் பின்
நில்லாமை முற்று வித்து நீக்கவும் கூடி நின்ற
பொல்லாத ஆணவத்தைப் போக்கவும் புகுந்தது அன்றே.

இங்கே கூறப்பட்ட தத்துவங்கள் உயிரோடு எல்லாமாகி இயைந்தது எதன் பொருட்டு எனில் பழமையான இருவினைகளையும் உயிரை நுகர்வித்து நீக்குவதற்காகவும், மேலும் வினைகள் ஏறாமல் தவிர்க்கவும் உயிரோடு தோற்றமில் காலந்தொட்டே கூடிநின்ற பொல்லாத ஆணவமலத்தைப் போக்குவதற்காகவும் என அறிக.

இங்ஙனம் கூறுவதால் நீக்கப்பட வேண்டிய மலகன்மங்கள் உயிருக்கே பொருந்துவனவன்றிச் சிவத்தோடு பொருந்துவனவல்ல என்பதனையும் தெளிவித்தார். அணு- உயிர்.

170. ஒன்றதாய் அநேகசத்தி உடையதாய் உடனாய் ஆதி
அன்றதாய் ஆன்மா வின்தன் அறிவொடு தொழிலை ஆர்த்து
நின்று போத்திருந்து வத்தை நிகழ்த்தி செம்பினில் களிம்பு ஏய்ந்து
என்றும் அஞ்ஞானம் காட்டும் ஆணவம் இயைந்து நின்றே.

ஆணவமலம் என்பது ஒன்றே. ஆனாலும் அது எண்ணற்ற ஆற்றல்களை உடையது. செம்பில் களிம்பு போலத் தோற்றமில் காலந்தொட்டே ஆணவமலம் உயிர்களுடன் இயைந்து நின்றது. கேவல நிலையில் ஆன்மாவின் அறிவையும், செயலையும் ஆணவமலம் முற்றிலும் மறைத்து நிற்கும். உயிர்களின் சகலநிலையில் அவற்றை இன்ப, துன்ப நுகர்ச்சிக்கு வினை முதலாகுமாறு செய்யும். கேவநிலை, சகநிலை என்று கூறப்பட்ட இரண்டு நிலைகளிலும் உயிர்களுக்கு அறியாமையைச் செய்யும் இயல்புடையது ஆணவமலம்.

செம்பில் களிம்பு இடையில் வந்து பொருந்தியதன்று. அது போலவே ஆணவமலம் உயிர்களைத் தோற்றமில் காலந் தொட்டே பற்றியிருக்கிறது. ஆணவமலம் ஒன்றே. ஆயினும் எண்ணற்ற ஆற்றல்களை உடையது. கேவல நிலையில் உயிரின் அறிவையும், தொழிலையும் முற்றிலும் மறைத்து நிற்கும் ஆணவமலத்தின் ஆற்றல் ஆவாரகசத்தி எனப்படும். சகல நிலையில் உயிர்களின் அறியாமைக்குக் காரணமாகும் ஆணவமலத்தின் ஆற்றல் அதோநியாமிகா சத்தி எனப்படும்.

171. மலம் என வேறு ஒன்று இல்லை மாயாகா ரியமது? என்னின்
இலகு உயிர்க்கு இச்சா ஞானக் கிரியைகள் எழுப்பும் மாயை;
விலகிடும் மலம் இவற்றை வேறும் அன்று; அதுவேறாகி
உலகு உடல் கரணம் ஆகி, உதித்திடும், உணர்ந்து கொள்ளே.

ஐக்கியவாத சைவர் போன்றோர் ஆணவ மலம் என ஒன்று இல்லை என்றும், உயிர்களின் அறிவை மறைப்பது மாயையின் காரியங்களே என்றும் வாதிடுவர். விளங்குகின்ற உயிர்களுக்கு விழைவு, அறிவு, செயல் என்ற மூன்று ஆற்றல்களையும் தோன்றச் செய்வது மாயையே ஆகும். இதற்கு மாறாக ஆணவ மலம் இவை மூன்றனையும் மறைத்து நிற்பதாகும். மேலும் ஆணவமலம் தோற்றமில் காலந் தொட்டே உயிரோடு ஒற்றித்து நிற்கும். எனவே ஆணவ மலத்துக்கும், மாயைக்கும் இடையே உள்ள வேற்றுமை மிகப் பெரிது. மாயை உயிர்களுக்கு வேறாக நின்று உடல் கருவி உலகு நுகர்ச்சிப் பொருள் ஆகியவற்றைத் தோற்றுவிக்கும்.

இந்த வேற்றுமையை அடிப்படையாகக் கொண்டே திருஞான சம்பந்தர் திருமுதுகுன்றப் பதிகத்தில், மாயையை ஒண்தளை என்று அருளினார் (1-12-3).

172. மாயையே ஆன்ம ஞானக் கிரியையை மறைத்து நிற்கும்-
தூய அப்பரிதி தன்னைச் சுடர்முகில் மறைத்தாற் போல
போய்முகில் அகலச் சோதி புரிந்திடும் அதுவே போல
காயமும் அகல, ஞானத் தொழில் பிரகாசம் ஆமே.

தூயதாகிய கதிரவனின் ஒளிக்கற்றைகளை மேகம் படர்ந்து மறைத்தாற் போல மாயையே உயிரின் அறிவு., விழைவு ஆற்றல்களை மறைத்து நிற்கும். மேகங்கள் நீங்கிய போது அதுவரை மøறைக்கப்பட்டிருந்த ஞாயிற்றின் பேரொளி விளங்கித் தோன்றும். அது போலவே மாயையின் காரியங்களாகிய உடல், கருவி, உலகு, நுகர்ச்சிப் பொருள் ஆகியவை நீங்கினால் உயிரின் அறிவு முதலிய ஆற்றல்களும் விளங்கித் தோன்றும் என்று சிலர் வாதிடுவர்.

173. பரிதியை முகில்ம றைப்பப் பாய் ஒளி பதுங்கி னாற்போல்
உரு உயிர் மறைக்கின் ஞானக் கிரியைகள் ஒழிக்குமாகும்;
கருதிடும் இச்சா ஞானக் காரியம் காயம் பெற்றால்
மருவிடும் உயிர்க்குக் காயம் வந்திடா விடில், மறைப்பே.

கதிரவனை ÷மேகம் மறைத்தவுடனேயே கதிரவனின் ஒளி பரவாமல் மறைந்து போகும். அது இங்கே உவமை ஆகுமானால் உயிர் உடலைப் பெற்ற உடன் ஆன்மாவின் அறிவும், விழைவும், ஆற்றலும் மறைதல் வேண்டும். அதற்கு மாறாக உயிர் உடம்போடு பொருந்திய போதே உயிருக்கு அறிவு விழைவு ஆற்றல்கள் உளவாகின்றன. உடம்பில்லாத போது உயிரின் ஆற்றல்கள் மறைந்து போகின்றன. எனவே இந்த உவமை இங்கே பொருந்துவதன்று.

174. போத காரியம் மறைத்து நின்றது புகன்மலம்காண்;
ஓதலாம் குணமுமாக உயிரினுள் விரவலாலே
காதலால் அவித்தை சிந்த தரும் கலை ஆதி மாயை
ஆதலால் இரண்டும் சோதி இருள் என வேறாம் அன்றே.

உயிரின் அறிவு இச்சை செயல்களை மறைத்து நிற்பது ஆணவமேயன்றி மாயை ஆகாது. ஆணவமலம் தோற்றமில் காலந் தொட்டே உயிரோடு கலந்து நிற்றலால் அதனை உயிரின் குணமும் ஆகவே கூறத்தகும். ஆனால் மாயை கலை முதலிய தத்துவங்களைத் தோற்றுவித்து உயிரின் அறிவை முற்றிலும் மறைத்து நின்ற ஆணவ மலத்தினால் விளைந்த அறியாமையைப் போக்கி அறிவைத் தோற்றுவிக்கும். ஆதலால் மாயை ஒளி போன்றது. ஆணவம் இருள் போன்றது.

குணமும் என்பதில் உள்ள உம்மை எதிர்மறைக் கண் வந்தது என்று உரை வரைகிறார். சிவஞான முனிவர். இந்த நான்கு பாடல்களாலும் ஆணவமலம் என ஒன்று இல்லை என்று கூறும் ஐக்கியவாத சைவர் பாசுபதர் ஆகியோரின் கொள்கை மறுக்கப்பட்டது. ஆணவமலம் உண்டு என நிறுவப்பட்டது.

175. புருடன்தன் குணம்அ வித்தை எனின், சடம், புருடன் ஆகும்;
குருடன்தன் கண்ணின் குற்றம் கண்ணின்தன் குணமோ? கூறாய் !
மருள் தன்தன் குணம தாகி, மலம்அசித் தாகி நிற்கும்;
தெருள் தன்தன் குணம தாகிச் சித்தென நிற்கும், சீவன்.

உயிரின் இயல்பே அறியாமை என்று கூறினால் உயிர் அறிவற்றது எனப்பட்டு வழுவாகும். குருடனுடைய கண், படலத்தால் மறைக்கப்பட்டிருப்பதால் அவன் பார்வையை அது தடுக்கிறது. படலம் என்னும் குற்றம் அவன் பார்வையை மறைக்கிறது என்று கொள்ள வேண்டுமே தவிர அதுவே கண்ணின் குணம் என்று கூற முடியுமா? உயிரின் அறிவை மறைத்து நிற்கும் ஆணவம் உயிரின் குணம் என்று கொள்ளுதல் தகாது. ஆணவ மலம் அறியாமையைத் தன் குணமாக உடைய குணிப் பொருள். ஆணவமலம் அறிவற்றது. அறிவுடைமையைத் தனது குணமாகக் கொண்டு குணிப் பொருளாக நிற்பது உயிர். உயிர் அறிவுடைப் பொருள் ஆகும்.

பாடாணவாதிகள் அறியாமை உயிரின் குணம் என்று சொல்வார்கள். இப்பாடல் அவர்களை மறுப்பதற்கு எழுந்தது.

176. மும்மலம், நெல்லி னுக்கு முளையொடு தவிடுஉமிப்போல்,
மம்மர்செய்து, அணுவின் உண்மை வடிவினை மறைத்து நின்று,
பொய்மைசெய் போக பந்த போத்திருத் துவங்கள் பண்ணும்,
இம் மலம் மூன்றி னோடும் இருமலம் இசைப்பன், இன்னும்.

மும்மலங்களும் நெல்லிற்கு முளை, தவிடு, உமி போன்றன. கன்மமலம் முளை போன்றது. மாயை தவிடு போன்றது. ஆணவ மலம் உமி போன்றது. இம்மும்மலங்களும் உயிர்களுக்கு மயக்கத்தைத் தருவனவாகும். மேலும் உயிரின் உண்மையான தன்மையாகிய அறிவினை இவை மறைப்பனவாகும். முறையே பொய்மையான நுகர்வுகளையும், கட்டினையும் நுகர்வுக்கு வினை முதலாகும் தன்மையையும் இவை தோற்றுவிக்கும். இங்குக் கூறப்பட்ட மும்மலங்களையும் தவிர மேலும் இரண்டு மலங்கள் உள்ளன என்பர் பெரியோர். அவை அடுத்த பாடலில் கூறப்பட்டுள்ளன.

இங்கே கூறப்பட்ட முளை, தவிடு, உமி என்பன பந்தத்திற்கும், காரணமாதல் மாத்திரைக்கும், உவமையாயின என்பது சிவஞான முனிவரின் உரை.

177. மாயையின் காரி யத்தை மாயேய மலமது என்றும்,
ஏயும்மும் மலங்கள் தத்தம் தொழிலினை இயற்ற ஏவும்
தூயவன் தனது ஓர் சத்தி திரோதான கரியது என்றும்
ஆய்வர்;இம் மலங்கள் ஐந்தும், அணுக்களை அணைந்து நிற்கும்.

மாயையிலிருந்து விளைவனவற்றை மாயேயமலம் என்று கூறுவர். பொருந்திய மும்மலங்களையும் அதனதனுக்கு உரிய தொழிலில் செலுத்தி உயிர்களைப் பக்குவப்படுத்தி வரும் சிவசத்தியை மறைத்தலைச் செய்தலாகிய திரோதாயி என்று ஆராய்ந்து கூறுவர். முந்திய பாட்டில் கூறிய மூன்றும் இங்குக் கூறிய இரண்டும் ஆக மலங்கள் ஐந்து என்பர். இவ்வைந்து மலங்களும் உயிர்களைக் கட்டி நிற்பனவாகும்.

தூயவன்- இயல்பாகவே பாசங்களில் நீங்கிய சிவபெருமான். திரோதானம்- மறைப்பு. கரி- செய்வது. திரோதானத்தைச் செய்வது என்னும் பொருட்டாகிய வடசொல் என்பார் சிவஞான முனிவர்.

178. மலம், மாயை கன்மம், மாயே யம், திரோ தாயி மன்னி,
சலமாரும் பிறப்பு இறப்பில் தங்கிஇத் தரைகீழ் மேலும்,
நிலையாத கொள்ளி வட்டம் கறங்குஎன நிமிடத் தின்கண்
அலமாரும், இறைவன் ஆணை யால், உயிர் நடக்கும் அன்றே.

ஆணவமலம் மாயை கன்மம் மாயேயம் திரோதாயி ஆகிய ஐந்து மலங்களும் பொருந்திய உயிர் வஞ்சனையுடைய பிறப்பு இறப்புகளில் உழன்று, நில உலகம், கீழ் உலகம், மேல் உலகம் ஆகிய மூவுலகங்களுக்கும் சென்று வரும்; நிலையற்ற கொள்ளி வட்டத்தினைப் போலவும் காற்றாடியைப் போலவும் பொடிப் பொழுதில் மேலும் கீழும் சென்று இறைவனின் ஆணையின் வழி உயிர்கள் அலமரும்.

கொள்ளி வட்டம் என்பது ஒரு கயிற்றின் நுனியில், கரிப்பொடி முதலியவற்றைச் சேர்த்து அதில் தீ இட்டுச் சிறுவர்கள் வேகமாகச் சுழற்றும் போது தோன்றுகின்ற வட்டமாகும். கறங்கு என்பது காற்றாடி. அலமரும் என்பது எதுகை நோக்கி அலமாரும் என நீண்டது.

179. அண்டசம், சுவேத சங்கள், உற்பிச்சம், சராயு சத்தோடு
எண்தரு நால், எண் பத்து நான்குநூ றாயி ரத்தாய்
உண்டுபல் யோனி எல்லாம் ஒழித்துமா னுடத்துஉ தித்தல்
கண்டிடில், கடலைக் கையால் நீந்தினன் காரி யம்காண்.

முட்டையில் பிறப்பன, வியர்வையில் பிறப்பன, வித்திலிருந்து மேல் நோக்கி எழுவன, கருப்பையிலிருந்து பிறப்பன என்று இவ்வுலகினில் உயிர்கள் நான்கு வகையாகத் தோன்றும். அவற்றின் பிறப்புக்கள் எண்பத்து நான்கு நூறாயிரம் வகைப்படும் என்றும் பெரியோர் கூறுவர். இவற்றுள் ஒன்றாகப் பிறத்தலிருந்து தப்பி மானுடனாகப் பிறப்பது என்பது, கடலைக் கையால் நீந்திக் கடப்பது போன்ற அருமை உடையதாகும்.

அண்டசம்- முட்டையில் பிறப்பன. சுவேதசம்- வேர்வையில் பிறப்பன. உற்பீசம்- வித்திலிருந்து பிறந்து மேல் நோக்கி வளர்வன. சராயுசம்- கருப்பையில் பிறப்பன.

திருஞான சம்பந்தர் தேவாரத்தில் (1-132-4) உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேத நிரை சேரப் படைத்து என்று அருளியுள்ளமையும் காண்க.

180. நரர்பயில் தேயந் தன்னில், நான்மறை பயிலா நாட்டில்
விரவுதல் ஒழிந்து, தோன்றல் மிக்கபுண் ணியத்தான் ஆகும்;
தரையினில் கீழை விட்டுத் தவம்செய்சா தியினில் வந்து,
பரசம யங்கண் செல்லா; பாக்கியம் பண்ணொ ணாதே.

உலகத்தில் மக்களாய்ப் பிறத்தல் அரிது. அதனினும் அரிது அருள் நூல்கள் வழங்காத நாடுகளில் பிறவாமல், அவை வழங்குகின்ற நாட்டில் பிறப்பது. அவ்வாறு பிறப்பது மிகுந்த புண்ணியப் பயன் உடையோர்க்கே வாய்ப்பதாகும். கீழ்மையோர் இனத்தில் பிறவாமல் தவம் செய்வதற்குரிய இனத்தில் பிறப்பது அதனினும் அரிதாகும். புறச் சமயங்களைச் சாராமல் சித்தாந்த சைவத்தைச் சார்ந்து வாழும் ஒருவனுக்கு வாயத்தல் யாவற்றிலும் மிக்க அரிதாகும்.

181. வாழ்வெனும் மையல் விட்டு, வறுமையாம் சிறுமை தப்பி,
தாழ்வெனும் தன்மையோடும் சைவமாம் சமயம் சாரும்
ஊழ்பெறல், அரிது சால; உயர்சிவ ஞானத் தாலே,
போழ்இள மதியி னானைப் போற்றுவார், அருள்பெற் றாரே.

வளமிக்க வாழ்வு பெற்றதனால் தோன்றுகின்ற செருக்கினை விட்டும், வறுமையினால் தோன்றுகின்ற சிறுமையிலிருந்து நீங்கியும், பணிவு என்னும் நற்பண்பினைக் கடைப்பிடித்தும் சைவ சமயத்தை வந்து எய்துகின்ற புண்ணியத்தைப் பெறுதல் மிக அரிது. அதனினும் சித்தாந்த நெறியை உணர்ந்து சிவஞானம் பெற்று இளம்பிறையைச் சூடிய சிவபெருமானை வழிபடுவோரே சிவனருளால் வீடு பேற்றை எய்துவர்.

வாழ்வு என்ற சொல்லால்  இளமை, கல்வி, செல்வம், அதிகாரம் முதலியன குறிக்கப்பெற்றன. இத்தகைய பேறு வாய்க்கப் பெற்றவர்களுக்கு வருகின்ற செருக்கினின்றும் நீங்க வேண்டும் என்றார். வறுமையின் பிடியில் அகப்பட்டோர் சிறுமைக்கு உட்படுவது உலக இயல்பு. எனவே அதிலிருந்து தப்புதல் வேண்டும் என்றார். தாழ்வு என்ற தன்மை என்றதனால் பெருமை என்றும் பணியும் என்பதனையும், உயிர் என்றும் அடிமையே என்பதனையும் இறைவன் ஒருவனே உடையான் எனப்படுவான் என்பதனையும் உணர்த்தினார் ஆசிரியர். சைவ சமயத்தைச் சார்தல் அரிது. அதனினும் அரிது சைவ சித்தாந்த நெறியினை உணர்ந்து ஒழுகுதல் என்பது இப்பாடலால் விளக்கப்பட்டது.

182. மானுடப் பிறவி தானும் வகுத்தது, மனவாக் காயம்.
ஆனிடத்து ஐந்தும் ஆடும் அரன்பணிக் காக அன்றோ?
வானிடத் தவரும் மண்மேல் வந்து, அரன் தனை அர்ச் சிப்பர்;
ஊன்எடுத்து உழலும் ஊமர் ஒன்றையும் உணரார், அந்தோ !

பெறுதற்கரிய மானுடப் பிறவியை இறைவன் வகுத்துக் தந்ததன் பயனே, ஆனைந்தும் ஆடும் சிவ பெருமானை மனமொழி மெய்களால் வழிபடுவதற்காக அன்றோ? வானுலகத்தில் உள்ள தேவர்களும் தாங்கள் உய்வதற்காக இம்மண்ணுலகத்திற்கு வந்து சிவபெருமானை மலர் தூவிப் போற்றி வழிபடுவார்கள். இவ்வுலகில் ஊன் எடுத்து உழல்கின்ற ஊமர்கள் பலர் இவற்றுள் ஒன்றனையும் உணரார் என்பது இரங்குதற்கு உரியதாகும்.

மனவாக் காயம்- மனம் வாக்கு காயம் என்ற மூன்று சொற்களும் இவ்வாறு திரிந்து நின்றன. ஆனிடத்து ஐந்து- பஞ்சகவ்வியம் எனப்படும் பால், தயிர், நெய், கோமயம், கோசலம் என்பன.

183. கருவினுள் அழிவ தாயும், கழிந்திடாது அழிவ தாயும்
பரிணமித்து அழிவ தாயும், பாலனாய் அழிவ தாயும்,
தருணனாய் அழிவ தாயும், தான்நரைத்து அழிவ தாயும்,
உருவமே அழிவே யானால், உள்ளபோ தேபார், உய்ய.

உடம்பொடுகூடி உருவெடுத்த உயிர் அழிவது திண்ணம். சில உயிர்கள் தாயின் கருப்பையிலேயே அழிவன. சில கருப்பையை விட்டுக் கழியாமலே அழியும். சில பிறந்த உடன் அழியும். சில குழந்தைப் பருவத்தில் அழியும். இன்னும் சில இளமையில் அழியும். மற்றும் சில நரை திரை வந்த பின் மூத்து அழியும். எனவே உருவம் என்பதே அழிவில் முடிவது என்பது தெளிவாகும். ஆதலால் காலம் உள்ள போதே உய்வைத் தேடுதல் நன்று.

184. ஒருபுலன் நுகரும் போது, அங்கு ஒன்று இல்லை; ஒன்றின் பாலும்
வருபயன் மாறி மாறி வந்திடும்; எல்லாம் மாறும்
ஒரு பொழுது; உணரின் உண்டாம் அல்லஇவ் அல்லல் வாழ்க்கை
மருள்கன வதுவும் போல மாயும், பின் மாயும் அன்றே.

இங்கு உடலோடு பொருந்தியுள்ள உயிர் ஒரு புலனால் நுகரும் போது மற்றவற்றை நுகர்வதில்லை. ஒன்றினையே அறியும் போது கூட இடையீடு பட்டு அறியுமே அல்லாது எப்பொழுதும் அறியாது. அவ்வறிவும் உறக்கம் மூர்ச்சை ஆகிய நிலைகளில் முற்றிலும் இல்லையாகும். அதுவுமல்லாமல் துன்ப மிகுந்த இந்த வாழ்க்கை மயக்கம் போல உடனே அழிவதாயும், கனவைப் போலச் சிறிது காலம் நீட்டித்து அழிவதாயும் அமைவதைக் காண்கிறோம்.

185. அரிசனம் பூசி, மாலை அணிந்து, பொன் னாடை சாத்தி,
பரிசனம் பின்பு செல்ல, பாரகர் பரிக்க, கொட்ட,
வரிசின்னம் ஊத தொங்கல் வந்திட உணர்வு மாண்டு
பெரியவர் பேச்சும் இன்றிக் கிடத்தலால் பிணத்தோடு ஒப்பர்.

செல்வ வளம் பெற்றவர்கள் செருக்கோடு வீதியிலே உலாப் போவார்கள். அவ்வாறு போகுங் காலத்துச் சந்தனம் பூசி இருப்பர். மாலை அணிந்திருப்பர். பொன்னாடை அணிந்திருப்பர். அவருடைய பரிவாரங்கள் அவர் சவாரி செய்யும் சிவிகையைப் பின் தொடர்ந்து வருவர். சிவிகை தாங்கிகள் சுமக்கவும், இசைக் கருவிகள் முழங்கவும் சிலர் சின்னங்கள் ஊதவும் வெண் சாமரங்கள் நிழற்றவும், அத்தகைய செல்வர்கள் தமது அதிகாரச் செருக்கால் பேச்சும் இன்றி அச்சகவிகைக்குள் சாய்த்து கிடப்பர். ஆழ்ந்து உணரின் இவருக்கும் பிணத்துக்கும் வேறுபாடு இல்லை என்பது தெரியும். இவ்வாறு அறிய வல்லவர்கள் செல்வத்தால் வந்த செருக்கைக் கை விடுதல் கூடும்.

186. பிணத்தினை ஒத்து வாழ்வோர் பின்நடைப் பிணங்கள் போல
உணக்கியே உழல்வீர் உங்கள் உடல்உயிர் உணர்வும் எல்லாம்
கணத்திடைத் தோன்றி மாயும் காயம் என்று அறிந்து ஒருக்கால்
வணக்குறீர் அரனை; என்றும் வானவர் வணங்க வைப்பன்.

உலகத்திலே மற்றவர்கள், பிணத்தை ஒத்து வாழ்பவர்களாகிய செருக்கு மிகுந்த செல்வர்களின் பின்னே நடைப் பிணங்களைப் போலத் தம் உடல் அறிவு ஆகியவற்றைக் குறுக்கி அலைவார்கள். இந்த உடம்பு ஒரு கணத்திலே தோன்றி அழியும் இயல்புடையது என்பதை அறிந்து சிவபெருமானை ஒரு பொழுதேனும் வணங்கி வழிபடுவீராக. அவ்வாறு வழிபட்டு வரின் அமரரும் வணங்கும் ஒப்பற்ற பேற்றினைச் சிவபெருமான் உங்களுக்கு வழங்குவான்.

மூன்றாவது நூற்பா

187. உயிரெனப் படுவது இந்த உடலின்வேறு; உளதாய் உற்றுச்
செயிர்உறும்; இச்சா ஞானச் செய்திகள் உடைய தாகிப்
பயில்வுறும்; இன்பத் துன்பப் பலங்களும் நுகரும் பார்க்கில்;
துயிலொடும்; அஞ்சு அவத்தைப் படும்; உண்மை துரியா தீதம்.

உயிர் எனப்படுவது உள்ளதாகிய பொருளே. அது உடம்பு அன்று. ஏனெனில் அது உடம்பைப் பொருத்தி யான், எனது என்னும் செருக்கினை உடையது. உயிருக்கு அறிவு விழைவு ஆற்றல் என்னும் மூன்றும் உண்டு. உயிர், கனவில் நிகழ்ந்ததை விழித்த போது அறியும் இயல்புடையது. உயிருக்கு இன்ப துன்பப் பயன் கருவிகள் ஒடுங்கிய போது அல்லாமல் ஒடுங்காது விழித்த நிலையிலே நிகழ்வனவாகும். உயிர் அறியும் போது ஒரு தன்மையாய் அறியாமல் ஐந்து வகைப்பட்ட நிலைவேறுபாடுகளோடு அறிந்து வரும். எல்லாக் காரியங்களும்  நீங்கிய துரியாதீத நிலையிலும் இவ்வுயிர் உளதாகும். ஆகையால் இவ்வுடலில் பொருந்தியுள்ள உயிர் இவை அனைத்துக்கும் வேறாகும்.

இந்தப்பாடலுக்கு உரை வரைந்த சிவஞானமுனிவர் பாடலின் சொற்கள் கிடந்தவாறே உரை எழுதாது முதல் நூலாகிய சிவஞான போதத்தின் மூன்றாவது நூற்பாவின் அமைப்பை ஒட்டியே உரை எழுதினார். இந்த நூற்பாவுள் மெய்கண்ட தேவநாயனார் சூனியான்மவாதி இந்திரியான்மாவதி முதலிய எழுவர் கொள்கைகளை மறுத்துள்ளார். முனிவரின் உரையும் அந்த வைப்பு முறையிலேயே அமைந்துள்ளது.

செயிர்- குற்றம். ஐந்தவத்தை என்பது உயிரின் ஐந்து நிலைவேறு பாடுகளைக் குறித்தது. அவத்தை நிலைவேறுபாடு. இவை- நனவு கனவு உறக்கம் பேருறக்கம் உயிர்ப்பு அடங்கள் என்பனவாகும். துரியாதீதம்- உயிர்ப்படங்கள். இந் நிலையில் உயிர் கருவிகளோடு கூடாமல் ஆணவத்தால் மறைக்கப்பட்டு நிற்கும்.

188. உடலின் வேறு உயிர் ஏன்? இந்த உடல் அன்றோ உணர்வது? என்னின்
உடல்சவ மான போதும் உடலினுக்கு உணர்வுண் டோதான்?
உடலினின் வாயுப் போனால் உணர்ச்சி இன்று உடலுக்கு என்னின்
உடலினின் வாயுப் போகாத உறக்கத்தும் உணர்வது இன்றே.

இந்த உடம்பின் வேறாக உயிர் ஒன்று உண்டு என்று கொள்வானேன். இந்த உடல் அன்றோ அறிவது என்று சிலர் வினவுவர். உயிர் நீங்கிய உடல் உறுப்பால் எவ்விதக் குறைபாடும் இல்லாத போதும் பிணமாக அறிவற்றுக் கிடைப்பதைக் காண்கிறோம். எனவே உயிர் வேறு என்பது புலனாகும்.

மற்றும் சிலர் வேறு வகையாகத் தடை எழுப்புவர். உடலில் இயங்கிக் கொண்டிருக்கின்ற உயிர்க்காற்று உடலை விட்டு நீங்கும் போது உணர்வும் நீங்கி விடுகிறது. எனவே உயிர் எனப்படுவது உயிர்க்காற்றே என்பது அவர்கள் கொள்கை. உறங்குங்காலத்து உயிர்க்காற்று உடலைவிட்டு நீங்குவதில்லை. எனவே அப்போதும் அவ்வுடலுக்கு அறிவு நிகழ்தல் வேண்டும். உயிர்க்காற்று இயங்கினும் உறக்க நிலையில் உடம்பு அறிவதில்லை. ஆதலால் அறிவது உடம்பு அன்று; அதனினும் வேறான உயிரே என்பது தெளிவாகும்.

189. அறிவதுஐம் பொறியே என்னின் உறக்கத்தின் அறியா வாகும்
அறிவதும் ஒன்றுஒன் றாக; ஒன்றுஒன்றாய் அறியும் என்னின்
அறிவுகள் ஒன்றை ஒன்று அங்கு அறிந்திடா; ஐந்தை யுங்கொண்டு
அறிவது ஒன்று உண்டு; அது ஆன்மா; ஐம்பொறி அறிந்தி டாவே.

வேறுசிலர் ஐம்பொறிகளே அறிவனவாகும். எனவே உயிர் என வேறு ஒன்று இல்லை என வாதிடுவர். அவர்கள் ஐம்பொறிகள் நனவின் போது அறியும் என்றும் உறக்கத்தின் போது அறியாமல் ஒடுங்கி நிற்கும் என்றும் கூறுவர். நனவின் போதும் ஐம்பொறிகள் ஒவ்வொரு பொறியாக அறியுமே அன்றி ஐந்தும் ஒரு சேர அறியா. அதுவே அவற்றின் இயல்பு என்று மேலும் கூறுவர். இக்கருத்துக்கள் பொருந்தா. ஐம்பொறிகளில் ஒன்று அறிந்ததை மற்றொன்று அறியாது. எனவே ஐந்து பொறிகளையும் கொண்டு அறிவதாகிய ஆன்மா ஒன்று உண்டு என்பது பெறப்படும். எனவே பொறிகள் அறியா. ஆன்மாவே அறியும்.

190. அறிந்திடும், பிராண வாயு அடங்குதல் விடுதல் செய்தால்;
அறிந்திடாது உடல்உறக்கத்து அறிவின்மை, கரணம் இன்மை;
அறிந்திடும் முதலி ஆகின் அதுநிற்கக் கரணம் போக;
அறிந்திடும் பிராணன் தன்னை அடக்கியும் விட்டும் ஆன்மா

உயிர்க்காற்று உள்ளும் புறமும் சென்று இயங்கும் போதே அறிவு நிகழ்வதைக் காண்கிறோம். எனவே ஐம்பொறிகளையும் கொண்டு அறிவது உயிர்க்காற்றே. ஆன்மா அன்று என்று சிலர் வாதிடுவர். அவ்வாறு எனின் உறங்கும் போதும் உயிர்க்காற்று இயங்குவதனால் அப்போதும் அறிவு நிகழ்தல் வேண்டும். அப்படிக் கண்டதில்லை; ஆதலால் உயிர்க்காற்றே ஆன்மா என்பதும் பொருந்தாது என்று விடையிறுத்தல் வேண்டும். அதற்கு அவர்கள் உறக்கத்தின் போது கருவிகளின் துணையில்லை ஆதலால் அறிவு நிகழவில்லை என்பர். அவ்வாறானால் உயிர்க்காற்றே கருவிகளை இயக்கிடும் முதன்மை உடையதாக இருந்தும் அக்கருவிகள் ஏன் இயங்கவில்லை என்று வினாவுதல் வேண்டும். உயிர்க்காற்றை உள்ளே இழுத்தும் வெளியே விட்டும் இயக்க வல்லதாகிய ஆன்மா உயிர்க்காற்றிலிருந்தும் வேறானது ஆகும்.

நான்காம் நூற்பா

191. உணர்வன கரணம் என்னில் ஒன்றைஒன்று உணரா; வெவ்வேறு
அணைதரும்- செயல்கள் நான்கும் அறிந்து அவை அடக்கி ஆக்கிப்
புணரும்உட் கருவி ஆக்கி புறக்கரு வியினும் போக்கி
இணைதரும் இவற்றின் வேறாய் யான்எனது என்பது ஆன்மா.

மனம், புத்தி அகங்காரம் சித்தம் ஆகிய உட்கரணங்களே அறிவுடையன. ஆதலால் அவையே என்று சிலர் வாதிடுவர். உட்கரணங்களாகிய இவை நான்கும் தம்முள் ஒன்றனை ஒன்று உணரா.

நான்கும் நான்கு வெவ்வேறு தொழில்களைச் செய்து தன்னளவில் நிற்கும். ஆனால் ஆன்மாவோ நான்கு உட்காரணங்களையும் இயக்கி, நான்கினால் வரும் பயனையும் உணர்ந்து யான் எனது என்னும் செருக்கினையும் கொண்டு நிற்பதாகும். ஆணவமலத்துடன் கூடி நிற்பதனாலேயே ஆன்மாவுக்கு யான் எனது என்னும் செருக்கு உளதாகிறது. ஆன்மாவே அந்தக்கரணங்கள் நான்கினையும், அடக்கி உட்கருவிகளாகக் கொண்டு, வேண்டும் போது புறக்கருவிகளை நோக்கிச் செலுத்தியும் ஐந்து நிலைவேறுபாடுகளை அடைந்தும் நிற்பதாகும்.

முதல் அதிகரணம்

192. கருவிஆம் மனமும் புத்தி அகங்காரம் சித்தம் நான்கும்
மருவிஆன் மாவே என்ன வரும்; தீபம் எனத்தெ ரிந்து அங்கு
ஒருவிஆன் மாவின் உண்மை உணர்ந்தவர் தமைஉ ணர்ந்தோர்;
தரும்இது பசுஞா னம்பின் சிவஞானம், தனக்கு மேலாம்.

உட்கரணங்களாகிய மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய நான்கும் ஆன்மாவோடு பொருந்தி அவையே ஆன்மா என்று கருதும் வண்ணம் நிற்கும். இவ்வாறு பிறழ உணராமல், காணும் தன்மை உடைய கண்களுக்கு விளக்கு கருவியானாற் போல, அறியும் இயல்புடைய ஆன்மாவிற்கு உட்கரணங்கள் கருவிகளாம் என அறிதல் வேண்டும். இவ்வுண்மையை அறிந்து உட்கரணங்களிலிருந்து நீங்கி ஆன்மாவின் உண்மையான இயல்பை அறிந்தவர் யாரோ அவரே பசுஞானம் பெற்றவராவர். இவ்வாறு தம்மை உணர்ந்தவர்கள் தமக்கு மேலாகிய சிவஞானத்தைப் பெறும் தகுதி உடையோராவர்.

193. அவ்வுடன் உவ்வும் மவ்வும், மனம், புத்தி, அகங்கா ரங்கள்,
செவ்விய விந்து நாதம், சித்தமோடு உள்ளம் ஆகும்;
ஒவ்வெனும் எழுத்தாம் ஐந்தும் உணர்வுஉதித்து ஒடுங்கு மாறும்
பவ்வமும் திரையுங் போலும்; பார்க்கில், இப் பண்பும் தோன்றும்.

அகரம் அகங்காரத்தைச் செலுத்தும் உகரம் புத்தியைச் செலுத்தும். மகரம் மனத்தையும், வித்து சித்தத்தையும், நாதம் உள்ளத்தையும் செலுத்தும். இந்த ஐந்து எழுத்துக்களாலும் உயிரின் அறிவு தோன்றியும் ஒடுங்கியும் வரும். கடலின் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாக மாறி மாறித் தோன்றியும் ஒடுங்கியும் வருவதைப் போலவே உயிரின் அறிவும் தோன்றியும் ஒடுங்கியும் வரும். ஆய்ந்து பார்த்தால் இத்தன்மைகள் நன்கு விளங்கும்.

அகார உகாரம் அகங்காரம் புத்தி மகாரம் என்று சிவஞான போதம் நான்காவது நூற்பா மூன்றாவது எடுத்துக்காட்டு வெண்பாவில் முதல் நூல் ஆசிரியர் குறிப்பிட்டார். எனவே இங்கே கூறப்பட்டுள்ள முறை எதிர் நிரல் நிறை என்று கொள்க என்று சிவஞான முனிவர் உரை எழுதினர். அகர உகர மகரம் விந்து நாதம் ஆகிய ஐந்தும் கூடிப் பிரணவமாகும். ஆயினும் பாடலில் இம்மந்திரத்தை வெளிப்படையாகக் கூறாமல் ஒவ்வும் என்று குறுக்கிச் சுட்டினார்.

பாடலில் பார்க்கின் என்ற  சொல்லால் நிவிருத்தி முதலிய கலைகளைப் பற்றி ஐந்தாகத் திகழும் வாக்குகள் என்பது உணர்த்தினார். வைகரி அகரவடிவாகவும், மாத்திமை உகர வடிவாகவும், பைசந்தி மகர வடிவாகவும், சூக்குமை விந்து வடிவாகவும் அதிசூக்குமை நாத வடிவாகவும் நிற்கும் என்பர் பெரியோர்.

194. அயன் அரி அரனும் ஈசர் சதாசிவம் அதிதெய்வங்கள்
உயவரும், அவ்வோடு உவ்வும் மவ்விந்து நாதங் கட்கு;
பயன்உறும், அஞ்சில் ஆன்மாப் பரவிடில், அசித்தாம், பார்க்கில்;
சயம் உறு வளிஇ ரண்டும் தவிர்த்துறின், தானும் தோன்றும்.

அகர உகர மகர விந்து நாதங்களுக்கு முறையே அயன் திருமால் உருத்திரன் மகேசுவரன் சதாசிவன் என்பவர் அதி தெய்வங்களாவர், உட்கருவிகள் அவற்றைச் செலுத்தி நிற்கும் ஆற்றல் எழுத்துக்கள், அவற்றின் அதிதெய்வங்கள் என்று இம்மூவகைப்பட்ட ஐந்தோடும் ஆன்மா பொருந்தியபோது ஆன்மாவுக்கு அறிவு உளதாகும். இவற்றோடு பொருந்தாத போது ஆன்மா சடம் போல அறிவு இல்லாததாக நிற்கும். இவ்வியல்பு இரு வகைக் காற்றையும் அடக்கி யோகப் பயிற்சியில் நின்றார்க்கு இனிது விளங்கும்.

195. ஆன்மாவின் வடிவு தானே அநேகார்த்தக் கூட்டம் என்னின்,
பார்ப்பார்கட்கு, ஆன்மா இன்றாய்ப் பலபொருள் உண்மை ஆகும்;
சேர்ப்பாய பலவே உண்மை, என்றிடில்; சென்று இவற்றை
ஓர்ப்பான், வேறு உணர்வோர்க்கு எல்லாம் உணர்பொருள் வேற தாமே.

மேற்கூறிய வண்ணம் ஆன்மா என்பது அகக் கருவிகளும் அகரம் முதலிய ஐந்து எழுத்துக்களும் அவற்றின் அதிதெய்வங்களும் ஆகிய இவற்றின் கூட்டாலேயே அறியும் எனப்பட்டால் அது பல பொருள்களும் சேர்த்து ஒன்றாகிய கூட்டம் ஆகுமே தவிர ஆன்மாவின் தனித்த நிலையைக் குறியாது அன்றே? என்று இங்கு ஒரு தடை நிகழும். கூட்டம் என்பது ஒரு பொருள் அன்று, கூடுகின்ற பல பொருள்களும் தனித்தனியாக அறியப்படும். மேலும் அறியப்படு பொருளும் அறியும் பொருளும் தனித்தனி இருத்தல் கூடுமேயன்றி இரண்டும் ஒன்றாகா. ஆகவே இப் பதினைந்தினையும் இவை தம்முட் கூடி நிற்கும் இயல்பையும் அறிகின்ற ஆன்மா தனித்து உளது என்பது பெறப்படும்.

இரண்டாம் அதிகரணம்

196. அறிவு, இச்சை, செயல்கள் எல்லாம் அடைந்து, அனல் வெம்மையும் போல்
குறிஉற்று அங்கு, ஏக அநேக குணகுணி பாவம் ஆகி,
நெறியுற்று நிற்கும் என்னின், நிகழ்புலன் கரணம் எல்லாம்
செறிவுற்று, அங்கு அறிவு கொள்ள வேண்டுமோ, சீவ னார்க்கே

உயிர்கள் யாவும் பிரமப் பொருளில் இருந்து பரிணமித்து அறிவு விழைவு ஆற்றல் ஆகியவற்றை அடைந்து, தீயும் அதன் வெப்பமும் போலக் குணமும் குணியுமாகி நிற்கும் என்று சிலர் கூறுவர். அவர்கள் கருத்து உண்மையானால் பிரமத்தின் பரிணாமமாகிய உயிர்கள் யாவும் புலன்களும் கருவிகளும் இன்றியே அறிதல் வேண்டும். ஆனால் உயிர் பொறிகளின் துணையோடும் கருவிகளின் துணையோடும் அறிகின்றதே அன்றித் தனித்து நின்று அறியாது. எனவே உயிர் பிரமத்தின் பரிணாமம் என்பது பொருந்தாது.

இந்தப் பாடலில் பரிணாம வாதிகளின் கொள்கை மறுக்கப்படுகிறது. பிரமப் பொருளும் உயிர்களும் ஓர் வகையால் வேறாகியும் மற்றொரு வகையில் வேறு அன்றியும் நிற்பன என்பது அவர்கள் கொள்கை. அதுவே பாடலில் ஏகானேகம், குணகுணி பாவமாகி என்ற சொற்களால் குறிக்கப்பட்டது. அறிவே வடிவாகிய பிரமப் பொருளுக்குப் பொறிகள் கருவிகளின் துணை தேவை இல்லை என்பதை எடுத்துக்காட்டி அவர்களின் கொள்கையை மறுத்தார்.

197. குணங்களை இன்றி ஒன்றாம் குறிஉடைத்து ஆன்மா என்னின்,
இணங்கிடா, இச்சா ஞானக் கிரியைகள் இவை, உடற்கண்;
பிணங்கிடும் சந்தி திக்கண் எனில், பிணத்து உறக்கத்து இன்றாம்;
உணங்கிடும் கரணம் என்னில் சந்நிதி ஒழிந்தது அன்றே.

அறிவு விழைவு ஆற்றல் என்னும் குணங்கள் இல்லாமல் வெறும் அறிவு மாத்திரமாய் நிற்பதே ஆன்மா என்று கொள்ளுவர் சிலர். அவர்கள் கருத்துப்படி ஆன்மா அறிவு வடிவமாய் நிற்கும். அதன் முன்னிலையில் உடம்பில் உள்ள கருவிகள் செயற்படும். அதனால் அறிவு விழைவு ஆற்றல் முதலியன உடம்பிலே நிகழும். அவ்வாறாயின் உடல் பிணமாகக் கிடக்கும் பொழுதும் உறக்கத்தின் போதும் கருவிகள் செயல்படுவதில்லையே அது ஏன்? என்று அவரை வினவினால் அதற்கு அவர்கள் அந்நிலைகளில் கரணங்கள் செயலற்று ஒடுங்கி இருக்கும் என்று விடையிறுப்பர். இவ்வாறு கூறினால் உயிரின் முன்னிலையில் அறிவு இச்சை செயல்கள் உடம்பில் நிகழும் என்று அவர்கள் கூறிய கூற்றுப் பொருந்தாது போகும். இவ்வாறு கூறுவோர் சாங்கியர்.

இணங்கிடா- பொருந்தா, பிணங்கிடும்- பொருந்தும், சந்நிதி- முன்னிலை, உணங்கிடும்- ஒடுங்கும்.

198. சந்நிதி குணம் தாகும் தான் என்போல் என்னின் காந்தம்
முன்இரும்பு என்றாய்; ஈர்க்கும் முறைமைஉண்டு அகற்றல் இன்றாம்;
உன்னுதல் ஒடுங்கல் ஓடல் இருத்தலே கிடத்தல் நிற்றல்
என்னும் இத் தொழில்கள் மற்றும் இயற்றுவது ஆன்மா என்னே?

சன்னதி என்று யாங்கள் கூறுவது வெறும் முன்னிலையன்று. அது உயிரினிடத்து உள்ள ஒரு குணச் சிறப்பு. காந்தத்தின் முன்பு வைக்கப்பட்ட இரும்பை அக்காந்தம் ஈர்ப்பது போன்றது உயிரின் குணச்சிறப்பு. எனவே நீங்கள் எழுப்பிய தடை இங்குப் பொருந்தாது என்று சாங்கியர் மேலும் வாதிடுவர். அப்படியானால் காந்தம் இரும்பைத் தன்னை நோக்கி இழுக்கும் ஆற்றல் மட்டிலுமே உடையதாகும். அகற்றும் ஆற்றல் காந்தத்துக்கு இல்லை. ஆனால் நினைத்தல் மறத்தல், ஓடல், இருத்தல், கிடத்தல், நிற்றல் முதலிய மாறுபட்ட தொழில்களை ஆன்மா எவ்வாறு செய்கிறது என்று வினவுக.

199. உரு உயிர் என்னின் இந்த உடலினுள் காண வேண்டும்;
வருவது பரிணா மத்தாய் அநித்தமாம் பூதம் ஆகும்;
கருவினில் நுழையு மாறும் காட்டிட வேண்டும்; கண்ணில்
மருவிடாது என்னின் உன்தன் வாயினால் உரு அன்று என்னே.

உயிருக்கு உருவம் உண்டு என்று சிலர் கூறுவர். அவ்வாறு உருவம் உடையது என்னில் இந்த உடலுக்குள்ளே அது காணப்படுதல் வேண்டும். அப்படிக் கண்டவர் எவரும் இலர். மேலும் கண்ணுக்குப் புலனகின்ற பொருள் உலகத்தில் காணப்படும் மற்றைய ஐம்பூதக் கூட்டாலாகிய பொருள்களைப் போலவே தோன்றி வளர்ந்து அழிதல் வேண்டும். அன்றியும் உருவம் உடையது என்று உங்களால் சொல்லப்பட்ட உயிர், தாயின் கருப்பைக்குள் எவ்வாறு வந்து புகுந்தது என்று விளக்குதல் வேண்டும். அது உருவப் பொருள்தான் ஆனால் கண்ணுக்குப் புலனாகாது என்று விடை கூறினால் அது அருவப் பொருள் என்று கூறுதலே பொருத்தமானதாகும்.

200. சூக்கும உருவது என்னில் தூலகா ரணம தாகும்;
ஆக்கிய மனாதி தன்மாத்திரை, வடிவு, அசேத னம், பின்
நீக்கிய சூக்கு மத்தே நிற்பதுஓர் உருஉண்டு என்னின்
ஆக்கிடும் உருவம்; எல்லாம் அசித்துமாய் அநித்தம் ஆமே.

உயிரினுடைய உருவம் பருவடிவாயன்றி நுண்ணுடலாய் விளங்குவது. எனவே அது காட்சிக்குப் புலனாவதில்லை என்பர் சிலர். இந்நுண்ணுடம்பின் இயல்பு இதற்கு முன்னரே விளக்கப்பட்டது. மனம் புத்தி, அகங்காரம், ஆகியனவும் தன்மாத்திரைகள் ஐந்தும் கொண்டதே நுண்ணுடல் அல்லது புரியட்டக உடல் என்று கூறப்பட்டது. இவை எட்டும் கூடி உடம்பே அன்றி உயிராகாது. ஏனெனில் நுண்ணுடல் அறிவற்றது. இதனை மறுத்து அந்த நுண்ணுடம்புக்குள்ளேயும் மீநுண்ணுடம்பு என்ற ஒன்று உண்டு. அது உருவமுடையது. அதனையே உயிர் என்கிறோம் என்பர் அவர்கள். அந்த மீநுண்ணுடம்பும் அதிலிருந்து தோன்றும் வடிவங்களும் அறிவற்றவை ஆகவும் அழியும் தன்மை உடையனவாகவும் இருப்பதால் அதனை உயிர் என்று கூறுதல் பொருந்தாது.

201. அருவுரு என்னில், ஆன்மா அருஉரு ஆவது இன்றாம்;
உருஅரு ஆகா தாகும்; ஒருபொருட்கு, இரண்டு தன்மை
வருவதும் இல்லை; காட்ட வன்னிபோல் மருவும் என்னில்,
உருவமும் காண வேண்டும்; உண்மையும் ஒழிந்து போமே.

உயிர் அரு உருவப் பொருள் என்று சிலர் வாதிடுவர். அருவப் பொருளாயின் அதற்கு உருவம் தோன்றாது. உருவப் பொருளாயின் அது அருவமாதல் கூடாது. தம்முள் மாறுபட்ட இரண்டு தன்மைகள் ஒரு பொருளுக்கு உண்டாவதில்øலை. விறகுக்குள்ளே இருந்த தீ அருவமாக இருந்தே பின்னர் எரிகின்ற போது உருவமாகத் தோன்றுவதைப் போன்றது உயிரின் தன்மை என்று இவர்கள் உவமை கூறுவர். விறகுக்குள்ளே இருந்த நெருப்பு பற்றிக் கொண்ட போது வெளிப்பட்டு அதன் பின்னர் இரண்டுமே இல்லாது அழிந்து போகின்றன. எனவே இந்த எடுத்துக்காட்டு இங்கே பொருந்தாது.

202. சந்திரன் வடிவு போல தான்அரு உருவம் என்னின்
வந்துநங் கண்ணில் தோன்றும் வடிவுஉள தாம் உயிர்க்கும்;
இந்தஊன் உருவம் தானாய் எழுவதும் உயிரே என்னின்
பந்தமாய் அசித்தாய் ஆன்மாப் பவுதிகம் ஆகும் அன்றே.

வளர்பிறையின் முதல் நாளில் திங்கள் நம் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. ஆனால் அது முறையாக வளர்ந்து முழு நிலா நாளில் நம் கண்ணுக்குப் புலப்படுகிறது அன்றோ? அது போலவே தாயின் கருப்பையில் கருவாய்க் கிடந்த உயிர் முறையே வளர்ந்து உருவாகி நம் கண்ணுக்குப் புலப்படுகிறது. எனவே உயிர் அரு உருவம் என்பது பொருந்தும் என்று அவர்கள் கூறுவர். இவ்வாறு கொண்டால், உயிரின் இயல்பு அறிவுடையதும் தளையில் கட்டுப்பட்டு விடுபடுவதும் நித்தமாய் இருப்பதும் என்பனவற்றுக்கு மாறாக அறிவற்றதும் ஐம்பூதத்தின் காரியமும் தளைப்படுவதுமாகிய உடம்பே என்று கூற நேரிடும்.

203. அருஅவி காரி ஆன்மா ஆகாயம் போல, என்னின்
உருவினைக் கட்டி ஆட்டி ஓட்டி மீட்டு உலாவப் பண்ணி
மருவிநிற் பித்து இருத்தி கிடத்தி மண் புரட்டி மற்றும்
பெருவிகா ரங்கள் எல்லாம் தருவது என்? பேசி டாயே !

உயிர் என்பது ஐம்பூதங்களுள் ஒன்றாகிய வானைப் போல அருவமாகவும் வேறுபாடுகளுக்கு உட்படாததாகவும் இருக்கும் என்பர் சிலர். உருவமாகிய உடம்பைக் கட்டியும் ஆட்டி வைத்தும் ஓட்டுவித்தும் உலாவச் செய்தும் நிறுத்தியும் இருத்தியும் கிடத்தியும் மண்ணில் புரட்டியும் இவ்வாறு பல வேறுபாடுகளுக்கு உட்படுத்தி வருவதாகிய உயிர் அருவம் ஆதல் எவ்வாறு? என்று வினவி அவர்களை மறுக்க. இக் கொள்கை பாதஞ்சலர் கொள்வதாகும்.

204. அசித்தெனின் உணராது ஆன்மா அசித்துச்சித்து ஆகும் என்னின்
அசித்துச்சித்து ஆகா தாகும்; சித்தசித்து ஆவது இல்லை;
அசித்துஒரு புறமாய் ஒன்றில் சித்துஒரு புறமாய் நில்லாது;
அசித்துஉறாச் சித்தே என்னின் அசித்து அடைந்து அறிவது இன்றாம்.

உயிர் அறிவற்ற பொருள் எனில் அது எதனையும் அறியாது. வைசேடிகர் உயிரை அறிவற்றது என்று கொண்டு,  ஆயினும் உயிர் மனத்தோடு கூடிய போது அது சித்தாக அறியும் என்பர். இக்கொள்கை பொருந்தாது. அது போலவே சைவரில் ஒரு சாரார் ஒரு வகையால் உயிர் அறிவுடையதாகவும், மற்றொரு வகையால் அறிவற்றதாகவும் இருக்கும் என்பர். இதுவும் பொருந்தாத கூற்றே. பட்டாச்சாரியர் உயிர் கருவிகளோடு பொருந்தாமலே அறியும் தன்மை உடையது என்பர். இவர் கொள்கையும் பொருந்தாதாகும். அசித்துப் பொருள் ஒரு போதும் சித்தாகாது என்று வைசேடிகர் கொள்கையை மறுத்தல் வேண்டும். மாறுபட்ட இரண்டு தன்மைகள் ஒரே பொருளுக்கு ஒரே நேரத்தில் இருக்க இயலாது என்று சைவரில் ஒரு சாராரை  மறுத்தல் வேண்டும். கருவிகளின் துணை இன்றி உயிர் எதனையும் அறிவதில்லை என்பது கண்கூடு. எனவே உயிர் தனித்து நின்று அறியும் என்ற கொள்கை அடாது என்று கூறிபட்டாச்சாரியரை மறுத்தல் வேண்டும்.

205. உயிரினை அணுவது என்னின் உடல் பலதுவாரம் ஓடும்;
பயில்வுஉறக் கட்டு ணாது பாரமும் தரித்துச் செல்லாது
அயர்வுறும் அசித்தாய் பூத அணுக்களின் ஒன்றதாகும்;
இயல்புஉறும் அவய வத்தால்- அணுஉரு- இறக்கும் அன்றே.

உயிர் அணு அளவினதாய் உடலில் நிற்கும் என்று கூறுவர் சிலர். உடலிலே பல ஓட்டைகள் உள்ளன. உயிர் அணு அளவினதாயின் அது அந்த ஓட்டைகளின் வழியாக ஓடி விடும். மேலும் அவ்வுயிர் தான் புகுந்த உடலை இயக்கி அதற்குள்ளே கட்டுண்டு நில்லாது. அணுவளவாகிய உயிர் உடம்பு என்ற சுமையைத் தாங்கி நடத்த இயலாது. உயிர் அணுவளவினது என்றால் அது அழியக் கூடியது; அறிவு அற்றது; பூத அணுக்களில் ஒன்று என்றெல்லாம் கொள்ள நேரிடும். அணுக்களுக்கும் உறுப்புக்கள் உண்டு. ஆகையினால் அதற்கும் உருவம் உண்டு. ஆதலால் அதுவும் அழியும் என்று கொள்ளுதல் வேண்டும்.

உயிருக்கு அணுத்தன்மை கொள்பவர்கள் பாஞ்சராத்திரிகள் எனப்படும் வைணவர்கள் ஆவார்கள். அவர்கள் கொள்கையிலே உள்ள பொருந்தாமை ஆசிரியரால் இப்பாடலில் விளக்கப்பட்டது.

206. உடலினில் ஏக தேசி உயிர்எனின் உருவாய் மாயும்;
படர்வுறும் அறிவுஇன்று எங்கும் சுடர்ஒளிப் பண்பது என்னின்  
சுடர்தொடின் சுடுவது எங்கும் தொட்டிடம் அறிவுஉண் டாகும்;
அடர்புல னிடத்தும் ஒக்க அறிவு எழ வேண்டும் அன்றே.

உயிர் என்பது உடம்பில் உள்ள இதயத்தில் இடம் பெற்றுப் புல்லின் நுனியில் உள்ள நீர்த்துளி போல நிற்கும் எனவும் அவ்வாறாயினும் விளக்கு ஒளிபோல  அவ்வுயிரின் அறிவு எங்கும் படர்ந்து செல்லும் என்றும் சிலர் கூறுவர். இக் கொள்கை பொருந்தாது. ஏனெனில் உயிருக்கு உருவம் உண்டு என்று கொண்டோரின் கொள்கையில் உள்ள குற்றங்கள் யாவும் இங்கும் பொருந்துவனவாகும்.

விளக்கின் ஒளி என்பது விளக்கின் நுண்வடிவமே அன்றி அதன் குணம் அன்று. ஆகையால் இவ்வுவமை இங்குப் பொருந்தாது. விளக்கின் சுடர் தொட்டாலன்றிச் சுடாது. உயிரின் அறிவோ தொட்ட இடம் எங்கணும் அறியும் ஆற்றல் உடையது. விளக்கு ஓரிடத்தில் இருந்தவாறே தன்னைச் சூழ இருக்கும் எல்லாப் பொருள்களையும் விளக்கமுறச் செய்யும். இங்குக் கூறிய உவமை பொருந்துமானால் உயிர் ஐம்புலன்களையும் ஒருங்கே அறிதல் வேண்டும். அவ்வாறு நிகழக் கண்டதில்லை. எனவே இக்கொள்கை ஏற்புடையதன்று.

இங்கே கூறி மறுக்கப்பட்டது மிருதி நூலாரின் உயிர் பற்றிய கொள்கையாகும்.

207. உருவினில் நிறைந்து நின்று அங்கு உணர்ந்திடும் உயிரது, என்னின்
மருவிடாது உறக்கம் வாயில் அறிவு ஒக்க வழங்க வேண்டும்;
பெருகிடும் சுருங்கும் போதம் பேர்உடல் சிற்று டற்கண்;
வரும்உடல் குறைக்க ஒக்கக் குறைந்து பின் மாயும் அன்றே.

உயிர் என்பது உடம்பின் அளவுக்கு ஏற்ப அதனுள் நிறைந்து நின்று அறியும் என்று சிலர் கூறுவார்கள். உடல் முழுக்கவும் உயிர் நிறைந்திருக்கும் என்றால் அதற்கு உறக்கம் என்ற ஒரு நிலை பொருந்துதல் கூடாது. அது மட்டுமன்றி உடல் முழுதும் நிறைந்துள்ள உயிர் ஐம்பொறிகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் அறிதல் வேண்டும். அவ்வாறு நிகழ்வதில்லை. மேலும் பெருத்த உடம்பின் உயிர் பெரிது ஆகையால் அது பேரறிவு உடையதாகவும் சிறிய உடம்பின் உயிர் சிறியது ஆகையால் அது சிற்றறிவு உடையதாகவும் இருத்தல் வேண்டும். உடம்பில் ஓர் உறுப்பை வெட்டி எறிந்து விட்டால் உயிரும் அந்த அளவுக்குக் குறையும் என்று கொள்ள வேண்டும். உடம்பு அழியும் காலத்து உடம்பு முழுவதும் நிறைந்திருந்த உயிரும் அழியும் என்று கொள்ள வேண்டும். எனவே இக்கருத்துப் பொருந்தாதது ஆகும்.

உயிரைப் பற்றிய இக்கருத்துக்கள் சமணர்களின் கொள்கைகளாகும். அவர்களது கொள்கையால் நேரிடுகின்ற பிழைகளை எடுத்துக்காட்டி ஆசிரியர் மறுத்தார்.

208. எங்கும்தான் வியாபி யாய் நின்று உணரும் இவ் ஆன்மா என்னின்
தங்கிடும் அவத்தை போக்கு வரவுகள் சாற்றல் வேண்டும்
பங்கம் ஆர் புலன் ஒன்று ஒன்றாய்ப் பார்த்திடல் பகரல் வேண்டும்;
இங்குஎலாம் ஒழிந்தால் நிற்பது எங்ஙனம்? இயம்பல் வேண்டும்.

உயிர் எங்கும் வியாபகமாகி நிறைந்த அறிவாகும் என்று சிலர் கொள்வார்கள். அவ்வாறாயின் உயிர் எவ்வாறு நிலைவேறுபாடுகளை அடைகிறது என்பதை விளக்கியாக வேண்டும். ஏனெனில் உறக்கம் பேருறக்கம் உயிர்ப்பு அடங்கல் ஆகிய மூன்று நிகைளிலும் உயிருக்கு அறிவு நிகழ்தல் வேண்டும். உயிர் தன் வினைக்கு ஏற்பத் துறக்க நிரயங்களுக்குச் சென்று திரும்பும் என்பர். எங்கும் நிறைந்த பொருளாயின் இது எவ்வாறு கூடும் என்று விளக்குதல் வேண்டும். உயிர் எங்கும் நிறைந்த தாயின் ஐம்பொறிகளில் நிறைந்ததாக ஒரே நேரத்தில் பொருந்தி நிற்பதாகும். ஆனால் ஐம்பொறிகளில் இருந்தும் வருகின்ற அறிவை உயிர் ஒவ்வொன்றாய் அறிவதன்றி ஒருங்கே அறிவதில்லை. இது எங்ஙனம் கூடும் என விளக்குதல் வேண்டும். எங்கும் நிறைந்திருக்கின்ற உயிர் தன் வியாபகத்தை ஒழித்து எப்படி ஓர் உடலில் தங்கி நின்றது என்பதையும் இயம்புதல் வேண்டும். இவற்றுக்கெல்லாம் விடை இன்மையின் இக்கொள்கை பொருந்தாது.

209. சுத்தமாம் ஆன்ம சித்தைத் துகள் உடல் மறைத்தது என்னின்
வைத்துறாது உடற்கண் வாயில் கரணங்கள் வழியால் ஞானம்;
ஒத்துறும் மலம்; அற்றாலும் உறும்மலம் வீடும் இன்றாம்;
பெத்தமும் அடையான்; முத்தனாய்ப்பிர காச னாமே.

உயிர் என்பது தோற்றமில் காலந் தொட்டே தூய அறிவு வடிவாக விளங்குவது. இடைப்பட்ட காலத்தில் உயிரை வந்துபொருந்திய மாயையின் காரியமாகிய உடலே உயிரின் தூய அறிவினை மறைத்தது என்பர் சிலர்.  மாயையின் காரியங்களாகிய உடல் கருவி முதலியன அறிவை விளக்குவனவே அன்றித் தடை செய்வன அல்ல. தூய நிலையில் இருந்த உயிரறிவை எந்தக் காரணமும் இல்லாமல் மாயையின் காரியங்கள் வந்து தடை செய்தன என்பதும் பொருத்தமற்றது. ஏனெனில் காரணமில்லாமல் உயிரைப்பற்றிக் கொண்ட மாயை வீடு பேறு அடைந்த போதும் மீண்டும் அதனைக் காரணமின்றியே பற்றுதல் கூடும். எனவே முத்தி என்ற நிலையே இல்லாது போகும். உயிர் வீடு பேறு பெற்ற பிறகு மாயை பற்றாது என்று அவர்கள்  வாதிடின் தோற்றமில் காலத்திலேயே தளைக்குட் படாமல் உயிர் முத்தனாய் விளங்குதல் வேண்டும்.

210. அசித்து அருவியாப கம்போல் வியாபகம் அருவம் இன்றாய்
வசித்திட வரும்வி யாபி எனும் வழக்கு உடையன் ஆகி
நசித்திடா ஞானச் செய்தி அநாதியே மறைத்து நிற்கும்
பசுத்துவம் உடையன் ஆகிப் பசு என நிற்கும் ஆன்மா.

ஆன்மாவுக்கு மாயையினிடத்திலே வியாபகத் தன்மை உண்டு. ஆன்மா அருவமானது. ஆனால் அதனுடைய அருவமும் வியாபகத் தன்மையும் மாயையின் தன்மைகளைப் போன்றது அல்ல. ஆன்மா எப்பொருளைப் பற்றி நின்றதோ அதுவதுவாய் நிறைந்து நிற்கும் இயல்புடையது. ஆன்மாவின் அறிவு என்பது ஒரு போதும் அழிவதில்லை. ஆயினும் ஆணவ மலம் ஆன்மாவின் அறிவு இச்சை செயல்களைத் தோற்றமில் காலந்தொட்டே மறைத்து நிற்பாதம். ஆதலால் ஆன்மா பசுத்தன்மை பெற்று நிற்கும்.

பசுத்துவம்- கட்டுக்குள் அகப்படும் தன்மை. பாசத்தால் கட்டுப்பட்டு நிற்பது எதுவோ அதுவே பசு. இங்கே உயிர் ஆணவமலத்தில் கட்டுண்டு இருப்பதால் பசு எனப் பெற்றது.

211. மாயையின் வயிற்றுள் மன்னி வருஞ்செயல் ஞானம் இச்சை
ஏயும் அக் கலாதி மூன்றால் ஏகதே சத்தில் ஏய்ந்து இங்கு
ஆயும் முக்குணங்கள் அந்தக் கரணங்கள் ஆதி எல்லாம்
காயம் பெத்தங்கள் ஆகி கலந்து உடன் நிற்கும் ஆன்மா.

பசுத்துவம் உடையது என்று கூறப்பட்ட உயிர் தூவா மாயையில் தத்துவங்களைப் பொருத்தி அதில் தோன்றும் கலை வித்தை அராகம் ஆகிய மூன்றோடும் கூடிப் பொதுவாக விளக்கம் பெற்று நிற்கும் அதன் பின்னர் இம்மூன்றினையும் சிறப்பு வகையால் கூடி உட்கரணங்கள் முக்குணங்கள் ஆகியவற்றோடும் பொருந்தி மேலும் விளக்கம் பெற்று நிற்கும்.

கலாதி மூன்றும்- கலை வித்தை அராகம் என்ற மூன்றும்- காயபெத்தம்- உடல் ஆகிய கட்டு.

212. சூக்கும தேகி ஆகித் தூலரூ பத்தின் மன்னி
சாக்கிர முதலா யுள்ள அவத்தையுள் தங்கி எங்கும்
போக் கொடு வரவும் எல்லாம் புரிந்து புண்ணியங்கள் பாவம்
ஆக்கியும் பலன்கள் எல்லாம் அருந்தியும் நிற்கும் ஆன்மா.

உயிர் மேற்கூறியவாறு உட்கருவிகளுடன் கூடி நுண்ணுடம்பைப் பெறும். அதன் பிறகு வினைக்கேற்ற பரு உடம்பில் தங்கும். பருஉடம்போடு பொருந்திய நிலையில் உயிருக்கு ஐந்து வகைப்பட்ட நிலை வேறுபாடுகள் உளவாகும். பரு உடம்போடு எங்கும் சென்றும் வந்தும் செயல் புரிந்தும் செயல்களாகிய புண்ணிய பாவங்களை ஈட்டியும் அவற்றின் விளைவாகிய இன்பத்துன்பங்களை நுகர்ந்தும் வரும்.

213. மருவுஆ னந்தம் விஞ்ஞானம் மனோபிராணன் அன்னமயம்
உருவாம் தன்மை உண்டாய் முன்ஒன்றுக்கு ஒன்று சூக்குமமாய்
வருமாம் அன்னமயம் பற்றி; மாயை முதற்காரணமாகும்,
அருவாய் ஆன்மா ஐங்கோசத்து ஆர்ப்புண்டு அவற்றின் அகம்புறமாம்.

ஆன்மாவுக்கு ஆனந்தமயகோசம், விஞ்ஞான மயகோசம், மனோமயகோசம், பிராணமய கோசம், அன்னமய கோசம் என்று ஐந்து உறைகள் உண்டு என்பர். இவ்ஒவ்வொன்றும் முறையே ஒன்றிலிருந்து ஒன்று உளதாகும். இவற்றுள் முதலில் தோன்றுவது நுட்பமாகவும் அதன் பின்னர்த் தோன்றுவது அதனினும் பருமையாகவும் விளங்கும். இவ்வைந்து உறைகளையும் தனித்தனி உடல்களாகக் கூறுவர். இவை யாவற்றுக்கும் முதற் காரணமாக விளங்குவது தூவாமாயை ஆகும். அருவமான ஆன்மா இவ்வாறு ஐந்து உறைகளால் பிணிக்கப்பட்டு அதுவதுவாய் அவற்றோடு நின்று போக்கும் வரவும் புரியும்.

கோசம்- உறை. இந்த ஐந்து உறைகளுக்கும் காரண உடல், கஞ்சுக உடல், குண உடல், நுண்ணுடல், பருஉடல் என்றும் பெயர்கள் வழங்கும்.

214. தோற்பாவைக் கூத்தும் தொல்லை மரப்பாவை இயக்கமும் சீர்த்
தேர்ப்பாரின் செலவும் வேறாய்ச் செலுத்துவோர் செய்தி தானும்
பார்ப்பாய வேடம் கட்டி ஆடுவோர் பரிசு போலும்
ஆர்ப்பாய காயந் தன்னை ஆன்மா நின்று ஆட்டும் ஆறே.

உயிரினைப் பதிந்து நிற்கும் மேற் கூறப்பட்ட ஐந்து உடல்களையும் வேற்றுமை இன்றி நின்றே உயிர் செலுத்தும் என்பதற்கு ஐந்து உவமைகள்- கூறலாம். அவை முறையே சிறப்பான தேரை நிலத்தின் மீது செலுத்துவோர் தன்மையும், மரப் பாவையினை இயக்குவோர் தன்மையும், தோல் பாவையினை ஆட்டுவோர் தன்மையும், தன்னுடலை விட்டு இன்னொரு உடலில் கூடுவிட்டுக் கூடுபாய்வார் தன்மையும், பற்பல வேடங்களைப் புனைந்து நடிப்போர் தன்மையும் என்ற ஐந்துமாம்.

பாடலில் கூறப்பட்டுள்ள உவமைகளை இடம் மாற்றி உரை எழுதினார் சிவஞானமுனிவர். அவ்வாறு எழுதியதற்கு இவை ஐந்தும் முறையே ஒன்றற்கொன்று அந்தரங்கமாய் அவ்ஐங்கோசங்களிலும் ஆன்மா நின்று செய்யும் ஆற்றிற்கு உவமை ஆமாறு தெரிந்து உணர்ந்து கொள்க. செய்யுளாகலின் முறை பிறழ வைத்தார் என்று காரணமும் காட்டினார். இங்கே சிவஞானமுனிவர் கூறிய வரிசை அன்னமய கோசம் பிராணமய கோசம் மனோமய கோசம் விஞ்ஞான மய கோசம் ஆனந்த மய கோசம் ஆகிய ஐந்திலும் ஆன்மா நின்று செலுத்து முறைமையை உணர்த்திற்று

215. என்உடல் பொறி பிராணன் கரணம் என் உணர்வு என்றக்கால்
தன்னின்வே றாகும் நீ என் தன்மனை என்ற எல்லாம்
நின்னின் வேறாகும்; என்னின் நீங்கிடா இவை இங்கு என்னின்
உன்னின் ஆகும் நீயாம் உகிர்மயிர் உகவும் காண்டி.

என் மனைவி, என் கணவன் என்று உன்னோடு வேற்றுமையற்று நீ கூறி வந்தன யாவும் ஆய்ந்து பார்க்கும் போது அவர்கள் உனக்கு வேறானவர் என்பது புலப்படும். அது போலவே என் உடல் என் பொறிகள். என் மூச்சு எனது கரணங்கள் என்று நீ கூறுபவை யாவும் ஆய்ந்து பார்க்கில் உன்னிலிருந்து வேறாகும். அவ்வாறு அன்று; என் மனைவி என்ற போது அவள் என்னிலும் தனித்தவள். ஆனால் உடம்பும் பொறிகளும் கரணங்களும் என்னை விட்டு நீங்கா என்று நீ கூறுதல் கூடும். அவையும் உனக்கு வேறானவையே. உனது நகமும் உனது தலை மயிரும் உன்னை விட்டு நீங்குவன அன்றோ? எனவே ஆன்மாவாகிய நீ இவற்றிலிருந்தும் வேறானவன் என்பதை அறிக.

216. பொன் அணி ஆடை மாலை போது மேலான போது இங்கு
என் அணி யான் என்று உன்னி இருந்தனை; பிரிந்த போது
நின் அணி நீயும் அல்ல ஆயினை; காயம் நின்னின்
அன்னியம் ஆகும்; உன்னை அறிந்து நீ பிரிந்து பாரே.

பொன்னால் செய்த அணிகலன்கள், உடுத்திய ஆடை, அணிந்த பூமாலை இவற்றை எல்லாம் நீ அணிந்து கொண்ட போது அவை உன்னோடு வேற்றுமையற்றன என்றே கருதியிருந்தாய். உன்னில் ஒரு தொகுதி என்று எண்ணியிருந்தாய். ஆனால் அவற்றை நீ களைந்த போது அவை வேறு நீ வேறு என்பதனை உணர்ந்தாய். அது போலவே உடம்பும் உன்னிலிருந்து வேறானது. இந்த உண்மையை அறிந்து அவற்றை விட்டு நீ நீங்கி நிற்பாயாக.

217. உடல்யான் அல்லேன் ! இந்த உணர்வுயான் அல்ல ஆன
கடன்யாதென்னின் வேறு கண்டு உணர்வு என்னது என்கை
இடர்இலா என்தன் ஆன்மா என்றபோது ஆன்மா வேறோ?
திடனதா உயிரை வேறு கண்டிடார் செப்பலே தாண்.

உடல் யான் அல்லேன் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். அதனாலே என் ஆன்மா என்று கூறும் போது நான் என்பது ஆன்மாவின் வேறோ? என் உணர்வு என்பதும் என்னிலிருந்து வேறானதோ? என்று சிலர் ஐயம் எழுப்புதல் கூடும். இவ்வாறு வழங்குகிற வழக்கு உயிரை மற்றவற்றிலிருந்து பிரித்துக் காணும் தெளிவு இல்லாதவர்களுடைய கூற்றேயாகும்.

இந்த உணர்வு யான் அல்லவான கடன் யாது என்னில் என்ற பகுதிக்கு உரை எழுதிய சிவஞானமுனிவர் விஞ்ஞான மய கோச ஆனந்தமய கோசங்கள் யான் அல்லேன் ஆகிய முறைமை யாது என்னில் என்று எழுதினார். உயிர் ஐந்து உறைகளில் பொருந்தி இருக்கும் என்பது முன்பே கூறப்பட்டது. அந்த ஐந்தனுள்ளும் விஞ்ஞானமய கோசமும் ஆனந்தமய கோசமும்- உயிருக்கு மிக நெருங்கியன. ஆதலால் அவையும் உயிரின் வேறோ என்ற வினாவிற்கு விடை கூறியதாயிற்று. இங்கே விஞ்ஞானமய கோசம் மட்டிலுமே கூறப்பட்டது எனினும் இனம் பற்றி ஆனந்தமயகோசமும் உயிரிலிருந்து வேறானது என்பது பெறப்படும்.

218. புந்தியை மனமது என்றும் மனமது புந்தி என்றும்
சிந்தையைச் சீவன் என்றும் சீவனைச் சிந்தை என்றும்
முந்தனை ஆன்மா என்றும் ஆன்மாவை முந்தன் என்றும்
வந்திடும்; எந்தன் ஆன்மா என்றது மற்று ஒற்றைக்காண்.

புத்தியை மனம் என்று வழங்குவர். மனத்தை புத்தி என்று வழங்குவர். சித்தத்தை உயிர் என்று வழங்குவர். உயிரைச் சித்தம் என்று வழங்குவர். இறைவனை உயிர் என்றும் உயிரை இறைவன் என்றும் வழங்குவர். இது எவ்வாறு எனில் ஒன்றனோடு இயைபு உடைய பிறிது ஒன்றினை ஆகு பெயராகக் கொண்டு உரைப்பதாகும். எனவே எனது ஆன்மா என்று கூறும் பொழுது தன்னோடு இயைபு உடைய பிறிதொன்றுக்கு ஆகு பெயராயிற்று என்று அறிக.

முந்தன்- இறைவன், பரம காரணன் ஆதலால் இப்பெயர் பெற்றான்.

219. அறிவு உடல் சிந்தை ஆன்மா அணைதலால் ஆன்மா என்பர்
எறிசுடர் விளக்கு இருக்கும் இடத்தையும் விளக்கு என்றாற்போல்
பொறிபுலன் கரணம் எல்லாம் புலப்படும் அபேதமாகிப்
பிறிதராது அறிவது ஆன்மா அறிபொருள் பின்னம் ஆமே.

ஆன்மாவின் வேறாகிய அறிவு முதலிய ஐந்து கோசங்களையும் ஆன்மா பொருந்தி நிற்றலால் அவற்றையும் ஆன்மா என்று கூறுவர். இது எவ்வாறு எனில் ஒளியைத் தருகின்ற விளக்கு இருக்கிற தகழியையும் விளக்கு என்றே கூறுவது போன்றது. அவ்வாறே பொறி புலன் கரணம் யாவும் அபேதமாகப் பிரிப்பின்றி அறிவதாகிய ஆன்மாவும் அவற்றிலிருந்து வேறுபட்டதாகும். ஏனெனில் அறிகின்ற ஆன்மா அறியப்படுகின்ற பொருள்களாகிய அப்பொருள்களில் இருந்து வேறுபட்டதாகும்.

உபநிடதங்களில் சில இடங்களில் ஐந்து கோசங்களையும் ஆன்மா என்று கூறப்பட்டதன் உட்கருத்து இது என்று இப்பாடலில் விளக்கினார்.

220. கண்டுஉணர் புருடன் வேறு கனவு கண்டு ஒடுங்கிக் காயம்
உண்டியும் வினையும் இன்றிக் கிடந்து உயிர்த்திட உணர்ந்து
கண்டிடும் கனவும் சொல்லி ஒடுக்கமும் கருதி வேறாய்
உண்டியும் வினையும் உற்று இங்கு உணர்த்திட உணரா நிற்கும்

உயிர் அன்னமய கோசம் முதலிய நான்கினையும் ஒன்றொன்றாக விடுவதன் மூலம் ஐந்து நிலைவேறுபாடுகளுக்கு உட்படும். கனவு நிலையில் நுகர்வும் தொழிலும் இல்லாமல் கிடந்த உயிர் விழித்த பின் தான் கண்ட கனவைச் சொல்லும். உறக்கத்தில் இருந்து எழுந்த பிறகு நன்றாகத் துயின்றேன் என்று கருதி உணரும். பேருறக்கமும் உயிர்ப்பு அடங்கலும் சித்தமும் கூடாத நிலை ஆகையினால்  அவற்றைச் செயலும் தொழிலும் ஆகிய மறுதலையில் வைத்து உயிர் அறியும். இவ்வாறு நனவு நிலையில் மற்றைய நான்கு நிலைகளையும் உயிர் உணர்ந்து வரும். எனவே பொறி புலன் முதலியவற்றின் வேறாய் நின்று அறியும் தன்மை உடையது உயிர் என்று அறிதல் கூடும்.

இங்கு ஒடுக்கம் என்ற சொல் உறக்கத்தைக் குறித்தது. கனவு நிலையைப் போல உறக்கத்தைச் சொல்ல இயலாது. ஆகையால் ஒடுக்கமும் கருதி என்றார். பேருறக்கமும் உயிர்ப்படங்கலும் ஆகிய இரண்டு நிலைகளிலும் சித்தம் செயல்படாமையினால் அவற்றைக் கருதியும் உணர இயலாது. அதன் மறுதலையில் வைத்தே உணர்தல் வேண்டும். எனவே வேறாய் உண்டியும் வினையும் உற்று உணரா நிற்கும் என்றார் ஆசிரியர்.

221. புருடனே அறிவனாகில் பொறிபுலன் ஆதி போதம்
தருவதுஎன்? அறிவு மாயா தனுகர ணாதி பற்றி
வருவது இங்கு; அநாதியாக மலத்தினின் மறைந்து நிற்பன்
அருவனவாய்; இவற்றோடு ஆளும் அமைச்சரும் அரசும் போல்வன்.

இங்கே ஒரு வினா எழும். உயிரே அறிய வல்லது என்று கூறினால் பொறி புலன்கள் முதலியன உயிருக்கு அறிவைத் தருவன என்று ஏன் கொள்ள வேண்டும்? என்பது அந்த வினா. ஆன்மா தோற்றமில் காலந்தொட்டே ஆணவ மலத்தில் மறைந்து அருவமாய் நிற்கும். எனவே ஆன்மாவுக்கு மாயையின் காரியங்களாகிய உடல் கருவிகள் ஆகியவற்றின் துணை வேண்டப்படுகிறது. அமைச்சரின் துணை கொண்டு ஆளுகின்ற அரசனைப் போல் உடல் கருவிகளின் துணை கொண்டு உயிரும் பொருள்களை அறிந்து வரும்.

இறைவன் முற்றறிவினன். அவனுடைய அறிவு வாலறிவு ஆகையினால் அவன் மாயா காரியங்களைப் பற்றி அறிதல் வேண்டா. உயிர் அவ்வாறு அன்றி மாயா காரியங்களைப் பற்றி நின்றே அறியும். ஆதலால் உயிர் அநாதியே ஆணவ மலத்தில் மறைந்து நின்றது என்பது பெறப்படும் என்பது சிவஞான முனிவரின் உரை.

மூன்றாம் அதிகரணம்

222. படைகொடு பவனி போதும் பார்மன்னன் புகும்போது இல்லில்
கடைதொறும் விட்டுவிட்டு காவலும் இட்டுப் பின்னர்
அடைதரும் தனியே அந்தப்புரத்தினில்; அதுபோல் ஆன்மா
உடலினில் அஞ்சு அவத்தை உறும் உயிர் காவலாக.

அரசன் உலா மேற்கொள்ளும் போது அமைச்சர் படைத்தலைவர் முதலிய பரிவாரங்களுடன் செல்லுவான். அவன் மீண்டும் அரண்மனைக்குள் புகும்போது அவர்கள் அனைவரும் அவனுடன் புகமாட்டார்கள். ஒவ்வோரிடத்தினில் ஒவ்வொரு தகுதி உடையவர்களை நிறுத்திப் பிறர் யாரும் புகா வண்ணம் காவலும் இடுவான். இறுதியாக அரசன் தான் மட்டும் அந்தப் புரத்துக்குள் செல்வான். அது போலவே உடல் கருவிகளுடன் கூடிப் பொருள்களை அறிந்து நுகரும் உயிரும், உடலுக் குள்ளே ஒடுங்கும் போது தனக்குத் துணையாக நின்ற கருவிகளை விட்டு நீங்கி உந்தியில் உயிர்க் காற்றைக் காவலாக நிறுத்தி மூலாதாரமாகிய அந்தப்புரத்துக்குள் தான் சென்று  தனியாய் விடும். இவ்வாறு உயிர் ஐந்து நிலைவேறுபாடுகளை எய்தும்.

உயிரின் நிலைவேறுபாடுகள் ஐந்தவத்தை எனப்படும். அவற்றின் இயல்புகளும் இடமும் கூடும் கருவிகளும் ஆகிய விரிவுகள் இனிவரும் பாடல்களில் ஆசிரியரால் விளக்கப்படுகின்றன.

223. சாக்கிரம் முப்பத்தைந்து நுதலினில்; கனவு தன்னில்
ஆக்கிய இருபத்தைந்து களத்தினில்; சுழுனை மூன்று
நீக்கிய இதயம் தன்னில் துரியத்தில் இரண்டு நாபி;
நோக்கிய துரியா தீதம் நுவலின் மூலத்தின் ஒன்றே.

நனவு நிலையில் உயிர் புருவ நடுவை இடமாகக் கொண்டு தங்கி நிற்கும். அந்நிலையில் தொழிற்படும் கருவிகள் முப்பத்தைந்து. கனவு நிலையில் உயிர் கழுத்தை இடமாகக் கொண்டு தங்கி நிற்கும். அந்நிலையில் தொழிற்படும் கருவிகள் இருபத்தைந்து, உறக்க நிலையில் உயிர் இதயத்தை இடமாகக் கொண்டு தங்கி நிற்கும். அந்நிலையில் தொழிற்படும் கருவிகள் மூன்று மட்டிலுமே. பேருறக்க நிலையில் உயிர் உந்தியை இடமாகக் கொண்டு தங்கி நிற்கும். அந்நிலையில் தொழிற்படும் கருவிகள் இரண்டு ஆகும். உயிர்ப்பு அடங்கல் நிலையில் உயிர் மூலாதாரத்தை இடமாகக் கொண்டு தங்கி நிற்கும். அந்நிலையில் உயிர் மட்டிலுமே தொழிற்படும்.

நனவு நிலையில் தொழிற்படும் கருவிகளாவன; அறிவுப் பொறிகள் ஐந்து. செயற் பொறிகள் ஐந்து புலன்கள் ஐந்து. செயற் பொறிகளின் செயல்பாடு ஐந்து, உயிர்க்காற்று முதலிய காற்றுகள் பத்து, உட்கருவிகள் நான்கு, உயிர் ஒன்று. ஆக முப்பத்தைந்து. கனவு நிலையில் அறிவுப் பொறிகள் ஐந்தும் செயற் பொறிகள் ஐந்தும் ஆகிய பத்தும் நீங்கி விடுகின்றன. எனவே கனவு நிலையில் தொழிற்படுவன இருபத்தைந்து கருவிகளாகும். உறக்க நிலையில் செயற்படும் கருவிகள் மூன்றேயாகும். அவை சித்தம், உயிர்க் காற்று, உயிர் என்பன. பேருறக்க நிலையில் சித்தமும் தொழிற்படாது நீங்கிவிட உயிர்க்காற்றும் உயிரும் ஆகிய இரண்டே தொழிற்படும். உயிர்ப்படங்கல் நிலையில் உயிர் ஒன்றே தனித்துச் செயல்படும்.

களம்- கழுத்து. நாபி- உந்திச்சுழி

224. இருவகை சாக்கிராதி அவத்தைகள் இயல்புதானும்
ஒருவகை கீழே நூக்கி உற்பவம் காட்டும்; ஒன்று
பெருகமேல் நோக்கித் தீய பிறப்பு அறுத்திடும் ! யோகில்
தருவதோர் சமாதி தானும் தாழ்ந்து பின் சனனம் சாரும்.

முந்திய பாடலில் கூறிய நனவு முதலிய ஐந்து நிலைவேறுபாடுகளும் இரண்டு வகையாகக் கூறப்படும். அவற்றுள் முதல்வகை கீழ் நோக்கிச் சென்று ஒடுங்கும் முறைமையும், மற்றொரு வகைமேல் நோக்கித் தோன்றும் முறைமையும், உணர்த்தும் என்றார். இவற்றுள் கீழ்நோக்கி ஒடுங்குகின்ற முறை பிறவிக்கு வித்தாகும். மற்றொன்று பெருக மேல் நோக்கிச்  செல்லுவதனால் தீய பிறப்பினை அறுத்திடும். யோக நிலையும் கூட அதுபோல ஒடுங்கியும் தோன்றியும் அவ்வாறே பயனைத் தரும்.

சிவஞான முனிவர் இச்செய்யுளில் கூறிய மூன்று பேதமும் முறையே சகலத்தில் கேவலம், சகலத்தில் சகலம், சகலத்தில் சுத்தம் எனப்படும் என்க என்று சிறப்புரை வரைந்தார்.

225. அறிதரு முதல் அவத்தை அடை தரும் இடத்தே ஐந்தும்
செறிதரும் கரணம் தன்னில் செயல்தொறும் கண்டு. கொள் நீ
பிறிவிலா ஞானத் தோரும் பிறப்புஅற அருளால் ஆங்கே
குறியொடும் அஞ்சு அவத்தை கூடுவர், வீடு கூட

மேற்கூறிய ஐந்து நிலைவேறுபாடுகளில் எல்லாக் கருவிகளோடும் கூடி உயிர் அறியும் என்று கூறப்பட்ட நிலை நனவு ஆகும். அதுவே முதல் அவத்தை என்றும்  கூறப்பெறும். அது நிகழ்வது புருவநடுவில் என்றும் கூறப்பட்டது. அங்கேயும் மேற்கூறிய நனவு முதலிய ஐந்து நிலைவேறுபாடுகளும் நிகழும். இவ்வாறு நிகழ்கிறது என்பதைக் கருவிகளின் துணையோடு பொருள்களை அறியும் ஒவ்வொரு செயலிலும் நுணுக்கமாக உற்றுக் கவனித்தால் நீயே உணர்ந்து கொள்ளுதல் கூடும். இத்தகைய அவத்தைகளைத் தவிர கேவலம் சகலம் இரண்டும் நீங்கிய மெய்ஞ்ஞானத்தை அறிந்தோரும் வீடு பெறற் பொருட்டு இவ்வாறு ஐந்து நிலை வேறுபாடுகளைக் கொள்ளுவர்.

சிவஞான முனிவர் கேவல சகலங்கள் நீங்கிய சுத்தத்தில் உளதாகிய ஐந்து அவத்தைகள் உண்மை அதிகாரத்துள் உணர்த்த நின்றன என்று குறிப்பிட்டுச் சொல்லுகிறார்.

226. ஐந்துசாக்கிரத்தின் நான்கு கனவினில், சுழுனை மூன்று
வந்திடும் துரியம் தன்னில் இரண்டு ஒன்று துரியா தீதம்,
தந்திடும் சாக்கிராதி அவத்தைகள் தானம் தோறும்
உந்திடும், கரணம் தன்னில் செயல்தொறும்; உணர்ந்து கொள்ளே.

நனவு நிலையில் சிவதத்துவம் முதல் சுத்தவித்தை ஈறாக ஐந்து தத்துவங்களும் கலை முதலியவற்றைச் செலுத்தும். கனவில் சிவதத்துவம் தொடங்கி மகேசுவரன் ஈறான நான்கும், உறக்க நிலையில் சதாசிவம் ஈறான மூன்றும் பேருறக்க நிலையில் சிவமும் சத்தியும் என இரண்டும் உயிர்ப்படங்கலில் சிவதத்துவம் ஒன்றே தனித்தும் செயற்படுத்தி வரும் என்பதை ஒவ்வொரு செயலிலும் நுண்ணுணர்வால் உணர்ந்து கொள்க.

இச் செய்யுள் பிறிதோர் அவத்தைக்கு ஓதியது போலும் என மலையாமைப் பொருட்டுக் கரணந் தன்னின் செயல்தோறும் கண்டு கொள்ளென மேற் கூறியதனை ஈண்டு மறித்துணர்வு நிகழக் கூறினார் என்பது சிவஞான முனிவர் தரும் உரைக் குறிப்பு.

227. கேவல சகல சுத்தம் என்று மூன்று அவத்தை ஆன்மா
மேவுவன் கேவலம்தன் உண்மை மெய் பொறிகள் எல்லாம்
காவலன் கொடுத்த போது சகலனாம்; மலங்கள் எல்லாம்
ஓவினபோது, சுத்தம் உடையன், உற்பவம் துடைத்தே,

உயிர் மேற் கூறிய ஐந்து நிலை வேறுபாடுகள் எய்துவதற்குக் காரணமாக அமைந்தவை மூன்று என்று கூறப்படும். அவை கேவலம் சகலம் சுத்தம் என்று பெயர் பெறும். கேவலம் என்பது உயிர் எந்தக் கருவிகளோடும் பொருந்தாமல் தனித்து நின்று ஆணவ மலத்தால் பிணிக்கப்பட்டு இருக்கின்ற நிலையாகும். அதன் பின்னர் உயிரின் வினைக்கு ஏற்ற உடல் கருவிகளை இறைவன் கூட்டுவிக்க நிகழும் நிலை சகலம் எனப்படும். அதன் பிறகு உயிர் ஐந்து மலங்களையும் விட்டு நீங்கிப் பிறவியையும் ஒழித்து இறைவனோடு கூடி விளங்கும் நிலை சுத்தம் எனப்படும்.

இதற்கு முன் கூறிய பாடல்களில் உயிர் அடையும் நிலை வேறுபாடுகள் நனவு முதலிய ஐந்து. அவை காரிய அவத்தைகள் எனப்படும். அவத்தை- அவஸ்தை- நிலை, இவற்றுக்குக் காரணமாக விளங்குபவை ஆகையினால் கேவலம் சகலம் சுத்தம் என்ற மூன்றும் காரண அவத்தைகள் என்று பெயர் பெறும். கேவலம் என்ற சொல் தனிமை என்ற பொருளைத்தரும். தோற்றமில் காலத்தில் உயிர் உடல் முதலிய கருவிகள் இல்லாமல் முற்றிலும் ஆணவ மலத்தால் மறைக்கப்பட்டு இருக்கின்ற நிலையைக் கேவலம் என்பர். இது தமிழின் தன் உண்மை என்று ஆசிரியரால் மொழி பெயர்க்கப்பட்டது. இதனை அடுத்த நிலை சகலம் எனப்படும். இந்நிலையில் உயிரின் வினைக்கு ஏற்ற உடல் கருவிகளை இறைவன் அதற்குக் கூட்ட, அதன் அறிவு விழைவு ஆற்றல்கள் ஓரளவு விளங்கும். அதன் பின்னர் உயிர் பக்குவம் பெற்று ஐந்து மலங்களிலிருந்தும் நீங்கிப் பிறவியை அழித்துத் தூய்மை எய்திய நிலை சுத்தம் எனப்படும்.

காவலன்- இறவைன். ஓவினபோது- ஒழிந்த போது. உற்பவம்- பிறப்பு.

228. அறிவு இலன்; அமூர்த்தன், நித்தன், அராகாதி குணங்களோடும்
செறிவு இலன், கலாதியோடும் சேர்வு  இலன் செயல்கள் இல்லான்
குறிஇலன், கருத்தா அல்லன், போகத்தில் கொள்கை இல்லான்
பிறிவு இலன், மலத்தினோடும் வியாபிகே வலத்தில் ஆன்மா.

தன்னுண்மை எனப்பட்ட கேவல நிலையில் உயிர் ஆணவ மலத்தால் முற்றிலும் மறைக்கப்பட்டிருப்பதால் அறிவற்று இருக்கும். அந்நிலையில் அதற்கு வடிவம் கிடையாது. ஆயினும் உயிர் நித்தப் பொருளே. இந்நிலையில் உயிருக்குக் கலை முதலிய அறிவுகள் சேர்தல் இல்லை. புத்தி குணங்கள் எட்டினோடும் உயிர் செறிவதில்லை. உயிருக்குச் செயலும் இல்லை, விழைவு இல்லை. நுகர்ச்சியில் நோக்கம் இல்லை. ஆணவ மலத்தோடு முற்றிலும் உயிர் கூடி நிற்கும்.

காரண அவத்தை எனப்பட்ட மூன்று நிலைகளிலும் நிற்கும் உயிரின் இயல்பை ஆசிரியர் கூறத் தொடங்கினார். இந்தப் பாடலில் உயிரின் தன்னுண்மை எனப்படும் கேவல நிலையைப் பற்றித் தொகுத்துரைத்தார்.

229. உருவினைக் கொண்டு போக, போக்கியத்து உன்னல், செப்பல்
வருசெயல் மருவி, சத்தம் ஆதியாம் விடயம் தன்னில்
புரிவதும் செய்து, இங்கு எல்லா யோனியும் புக்கு உழன்று
திரிதரும் சகலமான அவத்தையில் சீவன் சென்றே.

கட்டுநிலை எனப்படும் சகலநிலையில் உயிர் உடம்போடு சேர்ந்து அதனைப் பற்றி நிற்கும். எனவே அதற்குக் கருவிகளும் உளவாகும். நுகர்வதற்குரிய பொருள்களை மனம் மொழி மெய்களால் நினைந்தும் பேசியும் இயற்றியும் வரும். ஓசை முதலிய பொருள்களை ஐம்பொறிகளாலும் நுகரும். எண்பத்து நான்கு நூறாயிரம் வகையான பிறவி வகைகளைத் தன் வினைக்கு ஏற்ப மாறி மாறிப் பிறப்புட்படும்.

சகல அவத்தையில் உயிரின் இயல்பு இப்பாடலில் கூறப்பட்டது.

230. இருவினைச் செயல்கள் ஒப்பில் ஈசன் தன் சத்தி தோய
குரு அருள் பெற்று, ஞான யோகத்தைக் குறுகி, முன்னைத்
திரிமலம் அறுத்துப் பண்டைச் சிற்றறிவு ஒழிந்து, ஞானம்
பெருகி, நாயகன் தன் பாதம் பெறுவது சுத்தமாமே.

உயிர் இருவினை ஒப்பு அடைந்த போது அதனிடத்து அருட் சத்தி பதியும். அதனால் அருட் குருவின் திருநோக்கம் பெற்று யோகம் ஞானங்களை அடைந்து தொன்மையாக உள்ள மும்மலங்களிலிருந்தும் நீங்கும். அதனால் தன்னுடைய சிற்றறிவினை ஒழித்து மெய்ஞ்ஞானம் பெறுவதற்குரிய வாய்ப்பினை உயிர் பெறும். பெருகிய ஞானத்தால் சிவ பெருமான் திருவடியைப் பெறுவது உயிரின் சுத்த நிலை ஆகும்.

ஐந்தாவது நூற்பா

231. பொறி, புலன் கரணம் எல்லாம் புருடனால், அறிந்தான் மாவை
அறிதரா அவையே போல, ஆன்மாக்கள் அனைத்தும் எங்கும்
செறிதரும் சிவன்தனாலே அறிந்திடும்; சிவனைக்காணா
அறிதரும் சிவனே எல்லாம் அறிந்து அறிவித்தும் நிற்பன்.

ஐம்பொறிகளும் ஐம்புலன்களும் உட்கருவிகளும் உயிரின் துணை கொண்டே தாம் தாம் அறிவனவற்றை இது இன்னது என்று அளவிட்டு அறிந்து வரும். ஆயினும் அவை யாவும் தம்மைச் செலுத்துகின்ற உயிரை அறியமாட்டா. அவற்றைப் போலவே உயிரும் உலகத்துப் பொருள்களை அறிந்தும் நுகர்ந்தும் வருகின்ற போதும், எல்லாவிடத்திலும் செறிந்து நிற்கின்ற சிவபிரானுடைய திருவருளினாலே அறிந்து வருகின்றது. ஆயினும் அது தன்னைச் செலுத்தி நிற்கும் இறைவனை அறியாது. மெய்யறிவைத் தரவல்ல சிவபிரானே முழுவதையும் அறிந்தும் உயிர்களுக்கு அறிவித்தும் உடன் நிற்பான்.

இரண்டாம் அதிகரணம்

232. இறைவனே அறிவிப்பானேல், ஈண்டு அறிவு எவர்க்கும் ஒக்கும்,
குறைவு அதிகங்கள் தத்தம் கன்மமேல் கோமான் வேண்டா;
முறைதரு செயற்குப் பாரும் முளரிகட்கு இரவியும் போல்
அறைதரு தத்தம் கன்மத்து அளவனுக்கு அளிப்பன் ஆதி.

இறைவனே உயிர்களுக்கு அறிவிப்பான் என்று கொண்டால் உயிர்களின் அறிவுத்திறன் கூடியும் குறைந்தும் இருத்தல் கூடாது. எல்லார்க்கும் ஒத்த அறிவே நிகழ்தல் வேண்டும் என்று சிலர் தடை எழுப்புவர். அவ்வாறு அறிவில் ஏற்றத் தாழ்வுகள் அமைவதற்குக் காரணம் உயிர்களின் வினைப்பயன்களே என்று விடை கூறினால், அவ்வாறாயின் வினையே போதுமானது. இறைவன் ஒருவன் வேண்டும் என்று கொள்ளுதல் மிகையன்றோ? என்று மேலும் தடை எழுப்புவர். தாமரை மொட்டு மலர்வதற்குக் கதிரவனின் ஒளி தேவைப்படுவது போலவும், பயிரை விளைவிப்பதற்கு உழுதல், உரமிடல், விதைத்தல் நீர் பாய்ச்சுதல், களை கட்டுதல் ஆகிய செயல்களின் பயனைத் தருவதற்கு அச்செயல்களே அன்றி விளை நிலமும் காரணமாவதுபோலவும் வினைப் பயன்களை உயிர்களுக்கு ஊட்டுவதற்கு இறைவன் ஒருவன் வேண்டும். அவனே வினைப் பயன்களை அளவறிந்து உயிர்களுக்குத் தருவான்.

233. அறிந்திடும் ஆன்மா- ஒன்றை ஒன்றினால் அறிதலானும்,
அறிந்தவை மறத்தலானும் அறிவிக்க அறிதலானும்
அறிந்திடும் தன்னையும்தான் அறியாமையானும் தானே
அறிந்திடும் அறிவன் அன்றாம்; அறிவிக்க அறிவன் அன்றே.

அறியும் இயல்புடைய இவ்வுயிர் ஒவ்வொரு பொறியின் துணையுடனேயே ஒவ்வொரு பொருளை அறியும். அறிந்த பொருளை மறந்தும் போகும். உயிர் தானாக அறியாது. அறிவித்த போதே அறியும் இயல்புடையது. அறிகின்ற உயிர் தன்னைத் தானே அறியாது. எனவே தானே அறியும் இயல்புடைய முதல்வன் அறிவிக்கவே உயிர்கள் அறிந்து வருகின்றன.

இந்தப் பாடலில் ஆசிரியர்சாங்கியர்களின் கொள்கையை மறுத்துக் கூறினார்.

234. கருவியால், பொருளால், காட்டால், காலத்தால், கருமம் தன்னால்,
உருவினால், அளவால், நூலால், ஒருவரால் உணர்த்தலானும்
அருவனாய், உண்மை தன்னில் அறியாது நிற்ற லானும்
ஒருவனே, எல்லாம் தானும் உணர்த்துவன், அருளினாலே,

கட்டுநிலையில் உள்ள உயிர்களுக்கு அறிவு நிகழும்  முறைமை எவ்வாறு என்பது இப்பாடலில் விளக்கப்பட்டுள்ளது.

உயிர்கள் ஐம்பொறி முதலிய கருவிகளாலும், புலன்களாலும், தமக்குக் காட்டாக விளங்குகின்ற கலை முதலியவற்றினாலும், கால தத்துவத்தினாலும், வினைப்பயனை வரையறுத்துத் தருகின்ற நியதி தத்துவத்தாலும், உருவத்தினாலும், அளவைகளினாலும், நூல்களுக்கு அடிப்படையாக விளங்குகின்ற நால்வகை வாக்குகளாலும், ஒருவரால் உணர்த்தப்படுவதாலும் அறிவு விளக்கம் பெறுகின்றன. இங்கே கூறப்பட்ட இந்த எட்டுத் துணைகளும், உணர்த்தும் அறிவுடைப் பொருளும் இல்லை எனில் தன் உண்மை என்னும் கேவல நிலையில் உயிர் அருவமாய் அறியாது நிற்கும். எனவே யாவற்றையும் ஒருங்கே அறிய வல்ல இறைவனே இவை அனைத்தையும் தன் பேரருளாலே உயிருடன் கூட்டி உயிருக்கு அறிவிப்பான்.

காட்டால் என்ற சொல்லுக்குக் காண்பதற்குத் துணை செய்கின்ற கதிரவன், திங்கள் போன்ற பொருள்கள் என்று உரை கண்டனர் சில ஆசிரியர்கள். அவ்வாறே நூல் என்பதற்கு சாத்திரங்களால் என்றும் பொருள் கொண்டனர். இங்கே இவ்விரு சொற்க்களுக்கும் சிவஞான முனிவரை அடியொற்றிப் பொருள் கொள்ளப்பட்டது.

235. கருவியும், பொருளும், காட்டும், காலமும், கருமம் தானும்,
உருவமும், அளவும் நூலும் ஒருவரும் உணர்த்தல் இன்றி
அருவனாய் உலகம் எல்லாம் அறிந்து அவை ஆக்கி வேறாய்,
ஒருவனே உயிர்கட்கு எல்லாம் உயிருமாய், உணர்த்தி நிற்பன்,

இறைவன் ஒருவனே முற்கூறப்பட்ட கருவி முதலியவற்றோடு கூடாமலும், மற்றொருவர் உணர்த்தல் இன்றித் தானே யாவற்றையும் அறிந்தும், உயிர்கள் கேவல நிலையில் நிற்கும் போதும் நுண்ணிய ஐந்தொழில் இயற்றியும், பின்னர் படைத்தல் முதலிய தூல ஐந்தொழில் செய்தும், உயிர்க்கு உயிராக நின்று உயிர்களுக்கு அறிவிக்கும் பொழுது மிக நுண்ணிய ஐந்தொழில் இயற்றியும் உயிர்களோடு ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நிற்பான்.

இறைவன் இயற்றும் ஐந்தொழில்களும் மூன்று வகைப்படுத்திக் கூறப்படும். அவை மிக நுண்ணிய ஐந்தொழில் (அதிசூக்கும ஐந்தொழில்) நுண்ணிய ஐந்தொழில் (சூக்கும ஐந்தொழில்) தூல ஐந்தொழில் என்பன ஆகும். இவற்றின் விரிவு எல்லாம் சிவஞான மாபாடியத்தில் இரண்டாம் நூற்பாவுக்கு மாதவச் சிவஞான முனிவர் வகுத்த பேருரையிலே காணலாம்.

236. இறைவன் தன் சந்தி திக்கண் உலகின் தன் சேட்டை என்னும்
மறைகளும் மறந்தாய்; மாயை மருவிடான், சிவன் அவன் கண்
உறைதராது அசேதனத்தால்; உருவுடை உயிர் கட்கு எல்லாம்
நிறைபரன் சந்நிதிக்கண் நீடு உணர்வு, உதிக்கும் அன்றே,

இறைவன் முன்னிலையிலே உலகம் செயற்படும் என்று மறைகள்- எல்லாம்முழங்கவும் அதனை நீ மறந்தாய். சிவபெருமான் எல்லா இடங்களிலும் நிறைந்து உறைகின்றவன். ஆதலால் அவன் மாயையைப் பொருந்துவதில்லை. அறிவற்றதாகிய மாயை பேரறிவாளனாகிய இறைவனைப் பொருந்துவதில்லை. மாயையின் காரியங்களாகிய உடல் கருவிகளைப் பொருந்திய உயிர்களுக்கு எங்கும் நிறைந்த சிவபெருமானின் திருமுன்பு தத்தம் வினைக்கேற்ற அறிவு விளையும். வினை நீங்கிய காலத்து மெய்யுணர்வும் உதிக்கும்.

சேட்டை- செயற்பாடு. சிவஞான போதம் ஐந்தாம் நூற்பாவில் இரண்டாவது எடுத்துக்காட்டு வெண்பாவில் மன்னு சிவன் சன்னிதியில் மற்று உலகம் சேட்டித்தது. என்னும் மறையின் இயல் மறந்தாய் என்று கூறியது இங்கு நினைவு கூரத்தக்கது.

237. உலகமே உருவமாக யோனிகள் உறுப்பதாக,
இலகுபேர் இச்சா ஞானக் கிரியை உட்கரணமாக,
அலகுஇலா உயிர்ப் புலன்கட்கு அறிவினை ஆக்கி ஐந்து
நலம் மிகுதொழில்களோடும் நாடகம் நடிப்பன் நாதன்.

இப்பேருலகில் இருநூற்று இருபத்து நான்கு புவனங்கள் உள்ளன. இறைவன் அவற்றை திருமேனியாகவும், அவற்றில் உள்ள எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்களை உறுப்புகளாகவும், விளங்குகின்ற அறிவு விழைவு ஆற்றல்களை உட்கரணமாகவும் கொண்டு எண்ணற்ற உயிர்களிடத்தில் அவற்றின் அறிவுக்கு அறிவாய் நின்று உணர்த்துவதாகிய அதி நுண்ணிய ஐந்தொழில்களையும் இயற்றி உலக நாடகத்தை நடத்தி அருளுவான்.

இறைவன் ஐந்தொழில்களை உயிர்கள் போலக் கரணத்தால் அன்றித் திருஉள்ளக் குறிப்பினாலே செய்தருளுவான் என்பதை நாடகம் நடிப்பான் நாதன் என்ற சொற்களால் உணர்த்தினார்.

238. தெரிந்து கொண்டு ஒரோஒன்றாகச் சென்று ஐந்து புலனும் பற்றிப்
புரிந்திடும் உணர்வினோடும் போகமும் கொடுத்து யோனி
திரிந்திடும் மதுவும் செய்து செய்தி கண்டு உயிர்கட்கு எல்லாம்
விரிந்திடும் அறிவும் காட்டி வீட்டையும் அளிப்பன்- மேலோன்

அத்தகைய இறைவன் உயிர்களுக்கு ஐம்பொறிகளின் வழியாக ஒவ்வொரு புலனினும் பற்றுகிற அறிவினைச் சேர்த்து அருளுவான். இதனால் உயிர் வரையறைக்கு உட்பட்ட அறிவோடு உலகியல் இன்பங்களில் ஈடுபடும். பின்னர் இறைவன் உயிர்களின் வினைகளுக்கு ஏற்பப் பல்வேறு பிறவிகளில் செலுத்துவான். இதனாலே உயிர்களின் அறிவு முதிர்ந்து பக்குவம் பெறும். அந்நிலையில் இறைவன் உயிருக்கு வியாபாக அறிவை நிகழ்வித்து வீடு பேற்றையும் தந்தருளுவான்.

மேலோன்- இறைவன்.

239. அருளது, சத்தி ஆகும், அரன்தனக்கு; அருளை இன்றித்
தெருள்சிவம் இல்லை; அந்தச் சிவம் இன்றிச் சத்தி இல்லை;
மருளினை அருளினால் வாட்டி மன் உயிர்க்கு அளிப்பன்- கண்கட்கு
இருளினை ஒளியால் ஓட்டும் இரவியைப் போல - ஈசன்

சென்ற பாடலில் கூறியவாறு போகமும் கொடுத்து விரிந்திடும் அறிவும் காட்டி உயிர்களுக்கு வீட்டின்பம் அளிப்பதாகிய அருள் இறைவனின் சத்தியாகும். அது அவனது இயற்கைக் குணம் எனப்படும். இறைவன் குணி எனப்படுவான். அருள் இல்லாமல் சிவம் இல்லை . சிவம் இல்லாமல் அருட்சத்தி பிரிந்து நிற்பதும் இல்லை. உலகத்து இருளைத் தனது கதிர்க் கைகளால் ஓட்டிக் கண்களுக்கு ஒளி தருகின்ற கதிரவனைப் போல நிலை பெற்ற உயிர்களுக்கு இறைவவன் வீடு பேற்றை வழங்கி அருளுவான்.

புற இருளைக் கதிரவனது கதிர்கள் நீக்குகின்றன. உயிர்களின் அறிவை மறைத்து நின்ற மல இருளை இறைவனது திருவருளாகிய ஒளியே நீக்கி அருளும்.

ஆறாம் நூற்பா

240. அறிவுறும் பொருளோ, ஈசன் அறிவுஉறா தவனோ? என்னின்
அறிபொருள் அசித்து அசத்தாம் அறியாதது இன்றாம்; எங்கும்
செறிசிவம் இரண்டும் இன்றிச் சித்தொடு சத்தாய் நிற்கும்;
நெறிதரு சத்தின் முன்னர் அசத்தெலாம் நின்றிடாவே.

சிவபெருமான் உயிர்களால் அறியப்படுகின்ற இயல்புடையவனோ அன்றி ஒரு வகையாலும் அறியப்படாதவனோ என்று வினாக்கள் எழும். உயிர்களின் அறிவால் அறியப்படுகின்ற பொருள்கள் யாவும் அறிவற்றனவாயும். அழிந்து போகும் இயல்பு உடையனவாயும் உள்ளனவே ஆகும். ஒரு வகையாலும் அறியப்படாத பொருள் என்பது இல் பொருளாகும். எங்கும் செறிந்து நிற்கும் சிவபெருமான் இவ்விரண்டு தன்மையும் இலாதவன் ஆவான். அவன் முற்றறிவினனாயும் அழிவற்றவனாயும், அவன் அருளாலேயே அறியப்படும் தன்மை உடையவனாயும் விளங்குகிறான். அவன் திருமுன்பு அழியும் தன்மை உடைய பாசஞானம் சிறிதும் நில்லாது.

முதலதிகரணம்

241. ஆவதாய் அழிவது ஆகி வருதலால்- அறிவு தானும்-
தாவலால் உலகு போகம் தனுகர ணாதி ஆகி
மேவலால் மலங்கள் ஆகி விரவலால் வேறும் ஆகி
ஓவலால் அசத்தாம்- சுட்டி உணர்பொருள் ஆன எல்லாம்,

உயிர்களின் சுட்டறிவு தோன்றியும் அழிந்தும் வருவதாகும். ஒன்றைப் பற்றி அதன் பின்னர் அதனை விட்டு மற்றொன்றைப் பற்றுகின்ற இயல்புடையது. உடல் கருவி உலகு நுகர்ச்சிப் பொருள் என இவ்வாறு பல்வேறு வகைப்படுவது அவ்வறிவு. மலத்தோடு விரவி வருவது. வேறுபட்டு அழிகின்ற இயல்பு உடையது. எனவே இந்த அறிவினால் சுட்டி அறியப்பட்ட பொருள் யாவையும் அழியும் இயல்பு உடையன ஆகும்.

242. மண்தனில் வாழ்வும் வானத்து அரசு அயன் மாலார் வாழ்வும்
எண்தரு பூத பேத யோனிகள் யாவும் எல்லாம்
கண்ட இந் திரமா சாலம் கனாக் கழு திரதம் காட்டி
உண்டு போல் இன்றாம் பண்பில் உலகினை அசத்தும் என்பர்

இவ்வுலகத்தில் வாய்க்கப் பெற்ற பெரு வாழ்வும், விண்ணுலகத்து அரசனாகிய இந்திரன் பிரமன் திருமால் முதலிய பதங்களைப் பொருந்திய வாழ்வும். எண்பத்து நான்கு நூறாயிரம் பிறப்பு வகைகள் யாவும் கண் முன்னே நிகழ்கின்ற இந்திரசாலம் போலவும் கானல் நீர் போலவும் மறைந்து ஒழிவன. ஆதலால் உள்ளது போலக் காட்டி இல்லாது போகும் பண்பினை உடைய இவ்வுலகினை அசத்தும் ஆகும் என்று கூறுவர் மேலோர்

இந்திரசாலம் தோன்றும் பொழுதே இல்லாது போவதற்கும், கனவு முடிவுறுதல் இன்றி இடையே இல்லாது போவதற்கும், கானல் நீர் சூரியனை மேகம்மறைக்கும் போது இல்லாது போவதால் காரணம் காட்டி அழிவனவற்றுக்கும் உவமைகள் ஆயின.

சிவஞானபோதம் ஆறாம் நூற்பாவில் முதல் எடுத்துக்காட்டு வெண்பாவில் நீரில் எழுத்தும் நிகழ் கனவும் பேய்த் தேரும் என்று முதல் நூல் ஆசிரியர் காட்டிய உவமைகளும் அதற்கான பேருரையும் இங்கே ஒப்பு நோக்கத் தக்கன.

கழுது-பேய், இரதம்-தேர், பேய்த் தேராகிய கானல் நீர்

அசத்தும் என்பர் என்ற சொல்லில் உள்ள உம்மை பொருள் தன்மையால் சத்து என்பதுபட நின்ற எதிர்மறை என்று சிவஞானமுனிவர் உரைத்தார். சற்காரியவாதத்தை உடன்படுகின்ற சைவசித்தாந்தத்தில் அசத்து என ஒன்று இன்மையால் அறிவினால் அறிந்த பொருள் அசத்து ஆவது எவ்வாறு என்பதை விளக்க உவமை கூறி அசத்தும் ஆம் என்றார்.

இரண்டாம் அதிகரணம்

243. உணராத பொருள் சத்து என்னின் ஒரு பயன் இல்லை; தானும்
புணராது நாமும் சென்று பொருந்துவது இன்றாம் என்றும்
தணவாத கருமம் ஒன்றும் தருவதும் இல்லை. வானத்து
இணர் ஆர்பூந் தொடையும் ஆமைக்கு எழுமயிர்க் கயிறும் போலும்  

அறியப்பட்ட பொருள்கள் எல்லாம் அசத்துமாம் எனப்பட்டன. எனவே இறைவன் எனும் உள் பொருள் ஒரு வகையாலும் அறியப்படாத பொருளே என்று சிலர் கொள்ளுவர். அவ்வாறு கொள்ளுவதனால் அத்தகைய பொருளால் வருகின்ற ஒரு பயனும் இல்லை. உணரப்படாத பொருள் நம்மை வந்து பொருந்துதலும் இல்லை. நாமும் அதனைச் சென்று பொருந்துவதில்லை. அத்தகைய பொருளால் எந்தச் செயலும் நிகழ்வதில்லை. எனவே ஒரு வகையாலும் அறியப்படாத பொருள் என்பது ஆகாயப் பூமாலை போலவும் ஆமை மயிர்க் கயிறு போலவும் இல் பொருளேயாகும்.

வானத்து இணர் ஆர் பூந்தொடை-ஆகாயப் பூவினால் தொடுக்கப்பட்ட மாலை. யாமை-ஆமை. தணவாத-நீங்காத

மூன்றாம் அதிகரணம்

244. தத்துவம் சத்துஅ சத்துச் சதசத்தும் அன்று என்றால் என்?
உய்த்து உணர்ந்து உண்டோ இன்றோ? என்றவர்க்கு உண்டு என்று ஓதில்
வைத்திடும் சத்தே ஆகும். மனத்தொடு வாக்கு இறந்த
சித்திரு அது அசித்தாம் மனத்தினால் தேர்வது எல்லாம்  

பரம்பொருள் என்பது உள் பொருளும் அன்று; இல்பொருளும் அன்று. இந்த இரண்டும் ஆவதும் அன்று. எனவே அதனைச் சொல்லொணாதது என்று கூறினால் என்ன என்று சிலர் வினா எழுப்புவர். அத்தகைய சொல்லொணாப் பொருள் உண்டோ இல்லையோ என்று வினவியவர்களுக்கு இல்லை என்று விடையிறுத்தால், உணராத பொருளுக்குக் கூறப்பட்ட குற்றம் நேரும் என்று கருதி உண்டு என்றே விடை இருத்தல் வேண்டும். அவ்வாறு விடையிறுப்பது பரம்பொருளை உள்பொருள் எனக் குறிக்குமே தவிர சொல்லொணாதது என்று குறியாது. உள் பொருளாயின் அறியப்படுதல் வேண்டும். அறியப்படுவதாயின் சுட்டுணர்வினால் அறிந்த எல்லாம் சடமுமாய் அழிவெய்தும் ஆதலால் அப்பரம் பொருளை உயிரின் சுட்டுணர்வைக் கடந்து நின்ற அறிவுடைப் பொருளே என்று கூறுதல் வேண்டும்.

 
மேலும் சிவஞான சித்தியார் »
காப்பு - கணபதி வணக்கம்1. ஒரு கோட்டன் இரு செவியன் மும்மதத்தன்நால்வாய் ஐங்கரத்தன் ஆறுதரு கோட்டம் ... மேலும்
 
சுபக்கம் - காப்புஒரு கோட்டன், இருசெவியன், மும்மதத்தன்நால்வாய், ஐங்கரத்தன், ஆறுதருகோட்டுஅம் பிறைஇதழித் ... மேலும்
 
245. அறிபொருள் அசித்தாய் வேறாம்; அறிவுறாப் பொருள் சத்து என்னின்அறிபவன் அறியானாகில் அது இன்று பயனும் ... மேலும்
 
ஒன்பதாவது நூற்பா292. பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும்பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத் தாலேநேசமொடும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar