Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவருட்பயன் பகுதி-2
முதல் பக்கம் » திருவருட்பயன்
திருவருட்பயன் பகுதி-1
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2013
03:11

7. திருவருட்பயன் - முன்னுரை

ஆசிரியர் உமாபதி சிவம்
பொருள், தெளிவுரை : ஆ. ஆனந்தராசன்

சைவ சித்தாந்தத்தின் அருமை பெருமைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வளர்ந்து வருகின்ற காலம் இது. அதற்கு உதவுகின்ற வகையில் நமது சைவத் திருமடங்களும், ஆங்காங்குள்ள சைவ அமைப்புக்கள் பலவும் சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்புகளை ஆண்டுதோறும் சிறந்த முறையில் திட்டமிட்டு நடத்தி வருகிறது. அப்பயிற்சி வகுப்புகளில் நடத்தப்பெறும் பாட நூல்களில் இன்றியமையாத இடத்தைப் பெறுவது திருவருட்பயன் ஆகும். சாத்திர நூல்கள் பதினான்கனுள், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை முதலிலிருந்து முடிவு வரையில் முழுமையாகவும், அதே சமயத்தில் எளியைமாகவும், மாணவர் நிலைக்கு ஏற்பப்பொருள்களைப் பாகுபடுத்தி முறையாகவும் விளக்கிச் செல்லுகிற - சொல்லுகிற ஒரு நூல் உண்டு என்றால் அது திருவருட் பயனே யாகும்.

இந்நூல் இரண்டு வரிகளையுடைய சிறிய குறட்பாக்களால் ஆனது என்றாலும் திருக்குறளைப் போல மிகவும் அரிய பெரிய கருத்துக்களைத் தன்பாற் கொண்டதாகும். ஆகவே இதனை உரையின் துணையின்றிக் கற்பது எளிதன்று. திருவருட் பயனுக்குப் பழைய உரைகளோடு இக்காலத்தில் எழுந்த உரைகளும் பலவாக உள்ளன. அந்த உரைகளினின்றும் இந்த விளக்கவுரை சில வகையில் வேறுபட்டு நிற்கிறது. இவ்வுரை நூலைப் படிக்கும்போது ஆசிரியரே வகுப்பறையில் நேர் நின்று பேசுவது போன்ற உணர்ச்சி பிறக்கும் வகையில் எழுதப் பெற்றிருப்பது இந்நூலின் தனித்தன்மை என்று கூறலாம். இந்நூலைப் பெற்றுப் பயின்ற பலரும் தெரிவித்த கருத்து இது. இந்நூலில் முன்னுள்ள பகுதிகளை மாணாக்கர் ஓரளவு எளிதாகப் புரிந்து கொள்ள இயலும். ஆயின் பின்னுள்ள பகுதிகள் அனுபவத்தில் வைத்து உணர்ந்து கொள்ளுதற்குரிய அரிய பொருள்களைத் தன்பால் அடங்கக் கொண்டுள்ளன. உலகியலில் அழுந்தி நிற்கும் நம்மனோர்க்கு அவற்றை உள்ளவாறு விளங்கிக்கொள்ளுதல் இயலாத ஒன்று. நம்மவர் நிலையே இதுவென்றால் மாணாக்கர் நிலையைச் சொல்லவும் வேண்டுமோ?

அவர்களும் திருவருட்பயனிலுள்ள அனுபவப் பொருள்களை ஓரளவாவது பற்றிக் கொள்ளுமாறு செய்தல் வேண்டும். அதற்கு என்ன செய்வது? அருளியல் வாழ்வில் நின்று வாழ்ந்து காட்டியவர்களாகிய, செயற்கரியவற்றைச் செய்த பெரியோர்களாகிய நமது நாயன்மார்களின் செயல்கள் யாவும் திருவருள் அனுபவ நிலைகளை நாம் உணர்ந்து கொள்ளுதற்கு உதவும் சீரிய எடுத்துக்காட்டுகள் அன்றோ? ஆதலால் பெரிய புராண அடியார்களாகிய அவர்களின் அருளியல் வாழ்வில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகளை மாணாக்கரின் உளங்கொள்ளும்படியாக ஆங்காங்கே எடுத்துக் காட்டி அனுபவ வுண்மைகளை விளக்கியுள்ளமை இந்நூலின் மற்றொரு தனித்தன்மையாகும்.

பேரருளாளராகிய உமாபதி சிவனார் திருவருட் பயனைத் திருமுறைகளின் பிழிவாகவே தந்துள்ளார் என்பதை அதில் ஆழ்ந்து தோய்ந்த அன்பர்கள் உணர்வார்கள். அந்த முறையில், திருமுறைகளிலிருந்து எத்தனையோ ஒப்புமைப் பகுதிகளை இங்கே எடுத்துக்காட்ட முடியும். அவ்வாறு அமைந்த மேற்கோள் செய்யுட்களை இவ்வுரையில் மிகுதியாகக் காட்டிச் சென்றால் அதனால் பெரும் பயன் விளையாது என்று கருதி, ஏற்ற இடங்களில் சாத்திர, தோத்திரக் கருத்துக்களைச் செய்யுள் வடிவில் அப்படியே தராமல், எவை எந்நூல்களிலிருந்து பெறப்பட்டன என்ற சுவடு கூடத்தெரியாதபடி மாற்றித் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு செய்யுளின் கீழேயும் சொற்பொருள் என்ற தலைப்பில் பதவுரை புதிதாக எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளது. தனித்துவம் வாய்ந்த உமாபதி சிவனாரின் சொல்லாட்சியையும், கொண்டு கூட்டிப் பொருள் காணும் படியாக அவர் பாக்களை யாத்துள்ள பான்மையையும் தெளிவாக அறிந்துகொள்ள இப்பதவுரை உதவும். இவ்வுரை நூல் மாணவர் <உலகுக்கும், சைவ சித்தாந்தம் பற்றி அறிய விரும்பும் மற்றையோருக்கும் பெரும் பயன் தரும்.

நூல்முகம்

ஒரு நூல் பழைமையானது என்பதை வைத்தே அது சிறந்ததாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்தல் கூடாது. அவ்வாறே, இன்று தோன்றிய நூல்தானே என்று கருதி ஒன்றைக் குறைவாக மதிப்பிடுதலும் கூடாது. இத்திறனாய்வுக் கருத்தினை வெளியிட்டிருப்பவர் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்தவராகிய ஒரு சைவப் பெரியார் என்று கூறினால் பலரும் வியப்படைதல் கூடும். ஆம், அவர்தான் உமாபதி சிவம். மெய்கண்டாரோடு தொடங்கிய சைவ சித்தாந்த ஆசாரிய பரம்பரையில் நான் காம் ஆசிரியராக வந்தவர் அவர். மெய்கண்டார் செய்தருளிய சிவஞான போத நூலுக்குச் சார்பாகச் சிவப்பிரகாசம் என்ற நூலைச் செய்தவர். அந்நூலில்தான் அவர் மேற்குறித்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

சிவப்பிரகாசமும் திருவருட் பயனும்

உமாபதி சிவம் செறிவும் திட்ப நுட்பமும் அமையத் தாம் செய்த சிவப்பிரகாச நூலைச் சைவ வுலகம் விளங்கிக் கொள்ளுதற்குத் துணையாகும்படி மற்றொரு சிறந்த நூலையும் ஆக்கி அளித்தார். அதுவே இந்தத் திருவருட்பயன் எனும் நூல். சிவப்பிரகாசம் சிவாகமம் ஆகிய கடலைக் கடத்தற்கு உதவும் மரக்கலம் போன்றது. திருவருட்பயன் அம் மரக்கலத்தைச் செலுத்தும் மாலுமி போன்றது என்பர். மாலுமி இல்லாத மரக்கலம் திசைகெட்டுத் தடுமாறும். அதுபோல முன்னே திருவருட் பயனைப் பயிலாமல் அதன் உதவியின்றிச் சிவப்பிரகாசத்தைக் கற்கப் புகுந்தால் அக்கல்வி தெளிவைத் தராது; முழுமை பெறாது. சிவப்பிரகாசமும் திருவருட் பயனும் இணைந்து செல்பவை. பெயரிலும் அவை ஒற்றுமை உடையவை. சிவப்பிரகாசம் என்பது சிவனது ஒளி எனப் பொருள்பட்டுத் திருவருளையே குறிப்பதாகும்.

திருவருட்பயன் - பெயர் விளக்கம்

திருவருட் பயன் என இந்நூலுக்குப் பெயர் வைத்த காரணத்தை அறிவதற்கு நாம் சிவப்பிரகாச நூலை நோக்க வேண்டியுள்ளது. சிவப்பிரகாசம் இரண்டு பகுதிகளை உடையது. பின் பகுதியை ஏழு தலைப்புக்களாக வகுத்துக் கொண்டு விளக்கிச் செல்லு<கிறார் ஆசிரியர். அத்தலைப்புக்களுள் இரண்டினை இங்கே குறிப்பிடுதல் வேண்டும். அவை பொங்கொளி ஞான வாய்மை, அதன் பயன் என்பவை. பரம்பொருளின் குணமாகவும் பிழம்பாகவும் உள்ள அறிவொளியே திருவருள் என்பது. அதனையே பொங்கொளி ஞான வாய்மை எனக் குறித்தார் ஆசிரியர். திருவருளால் உயிர்க்கு உண்டாகும் ஆன்ம தரிசனம், ஆன்மசுத்தி, ஆன்ம லாபம் என்ற மூன்றையுமே அதன் பயன் எனக் குறித்தார். சிவப்பிரகாசத்தில் உள்ள இவ்விரு தலைப்புக்களையும் இணைத்தால் கிடைப்பது திருவருட் பயன் என்ற பெயர். அதனையே இந்நூலுக்குப் பெயராகச் சூட்டினார் ஆசிரியர்.

சிவப்பிரகாசத்தில் ஞானவாய்மையும், அதன் பயனும் ஆகிய இரண்டையும் சுருக்கமாகவும் செறிவாகவும் கூறிச் சென்ற ஆசிரியர் திருவருட்பயனில் அவற்றிற்கென ஐந்து அதிகாரங்களை நூலில் சரி பாதியை பகிர்ந்தளித்து விரிவாக விளக்கியுள்ளார். அருளது நிலை, அருளுருநிலை, அறியும் நெறி, உயிர் விளக்கம், இன்புறு நிலை என்ற அந்த அதிகாரங்களில் திருவருளின் இயல்பையும், திருவருளால் உயிர் அடையும் பயனையும் படிப்படியாக இனிமையான முறையில், மாணவர்களுக்கு ஏற்ற முறையில் விளக்கிச் சென்றுள்ள பான்மை வியக்கத்தக்கதாய் உள்ளது.

சிவநெறித் திருக்குறள்

உமாபதிசிவம் திருக்குறளை அடியொற்றியே தமது திருவருட்பயனை அமைத்துக்கொண்டார். அதற்குக் காரணம், அறநெறி, அருள்நெறி என்ற இருவகை நெறிகளுள் அறநெறியை உணர்த்துவதாகிய திருக்குறளுக்குப் பின் அருள்நெறியை உணர்த்தும் திருக்குறளாய் அமையுமாறு இதனைச் செய்தல் வேண்டும் என்று அவர் கருதியமையேயாகும். அக்கருத்துப் பற்றியே திருவருட் பயனை அகர உயிர்போல் என்று தொடங்கித் திருக்குறளை நினைப்பிக்கின்றார். நூல் முழுவதையும் குறள் வெண்பா யாப்பினாலே அமைத்துள்ளார். அதிகாரத்திற்குப் பத்துக் குறள்களாகப் பத்து அதிகாரங்களை ஆக்கியுள்ளார். சிவநெறித் திருக்குறள் என்று சொல்லுமாறு இந்நூலைச் செய்துள்ளார்.

தெள்ளுசீர்ப்புலமை வள்ளுவன் தனக்கோர்
நற்றுணை உடைத்தெனக் கற்றவர் களிப்ப
அருட்பயன் என்னா அதற்கொரு நாமம்
தெருட்படப் புனைந்து செந்தமிழ் யாப்பிற்
குறளடி வெள்ளை ஒரு நூறு இயம்பினன்

எனவரும் சிறப்புப் பாயிரப் பகுதியில் தெய்வப் புலமைத் திருவள்ளுவருக்கு ஒரு நல்ல துணை வாய்த்தது என்று அறிஞர்களிப்புறும் வண்ணம் திருவருட் பயனை உமாபதிசிவம் இயற்றினார் என்று பாயிர ஆசிரியர் கூறியுள்ளமையும் இக்கருத்தை வலியுறுத்தும்.

சிறந்த நூல்

குறள் வெண்பாவில் நூலியற்றப் பலரும் முன் வருவதில்லை. அதற்குத் தகுந்த காரணம் உண்டு. நினைத்த கருத்தையெல்லாம் குறள் வெண்பாவில் அத்துணை எளிதாக அமைக்க இயலாது. அமைக்க முடிந்தாலும் அக்கருத்தைச் சுவைபடச் சொல்ல முடியாது. சொற் சுவையும் பொருட்சுவையும் பொலியக் குறள் வெண்பாவினைக் கையாண்டு வெற்றி கண்டவர்கள் ஒரு சிலரே. உமாபதிசிவம் அவர்களில் ஒருவராகத் திகழ்கிறார். சொல்லுகிற பொருளுக்குச் சுவை யூட்டுவன உவமை, உருவகம் முதலிய அணிகளாகும். திருவருட் பயனில் இத்தகைய அணி நலன்களை நிரம்பக் காணலாம். கூகையினுடைய கண் இயல்பு அனைவருக்கும் தெரிந்தது. அதற்குப் பகலிலும் கண் தெரியாது. திருவள்ளுவர் கூகையை உவமையாக எடுத்தாண்டுள்ளார். பகல் வெல்லும் கூகையைக் காக்கை என்று கூறிக்காலம் அறிதலை வலியுறுத்தினார். உமாபதிசிவம் வேறொரு வகையில் இப்பறவையை உவமையாகப் பயன்படுத்துகிறார். திருவருள் ஒளியில் இருந்தும் அதனைத் தெரிந்துகொள்ள மாட்டாமல் ஆணவ இருளில் அழுந்தியிருக்கும் ஆன்மாவின் நிலை கூகையின் கண் போன்றது என்கிறார். ஐந்து உறுப்புக்களையும் ஓட்டினுள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல ஞானிகள் இருப்பர் என்று அவர் கூறியிருப்பது, திருக்குறளை நினைப்பிக்கும் மற்றோருவமையாகும்.

திருக்குறளைப் போலத் திருவாசகத்திலும் நம் ஆசிரியர்க்கு ஈடுபாடு மிகுதி. வெள்ளத்துள் நாவற்றுதல், எரியுறு நீர் என்பன திருவாசகத்திலிருந்து அவர் பெற்ற உவமைகளாகும். பிறிது மொழிதல் அணியைத் திருவள்ளுவரைப் போல இவரும் பற்பல இடங்களில் அமைத்துள்ளார். ஆற்றாமை, இரக்கம், சினம், நகை முதலிய உணர்ச்சிகள் தோன்றக் கூறிச் செல்லும் இடங்கள் திருவருட்பயனில் உண்டு. உயிர்கள் படுந் துன்பத்தைக் கண்டு, அந்தோ! அருள் தெரிவது என்று? என இரங்கிக் கூறுவார். திருவருளைப் பற்றிக் கவலை கொள்ளாமல், உலகியலில் களிக்கின்ற உயிரின் போக்கைக் கண்டு சினந்து, இந்த உயிர்க்கு வீடு என்ன வேண்டிக்கிடக்கிறது? என்பார் போல, வெற்றுயிர்க்கு வீடு மிகை என்பார். இந்த உயிரைப் போய் சித்து என்று அழைக்கிறார்களே. இது நல்ல வேடிக்கை! என்று நகைத்துக் கூறுவார். இந்த உயிர் பேராற்றல் உடையதுதான் என்று புகழ்வது போலப் பழிப்பார். இப்படி உணர்ச்சி ததும்பக் கூறும் மொழி நடை உமாபதி சிவத்திற்குக் கை வந்தது; திருவள்ளுவரின் நடையை நினைவூட்டுவது.

சைவ சித்தாந்தப் பொருள் அனைத்தையும் நூறு குறட்பாக்களில் தொகுத்துக் கூறுகிற சிறந்த நூல் இது. சாத்திர நூல்களுள் பெரிதும் பயிற்சியில் உள்ள நூலும் இதுவேயாம். இந்நூலின் சிறப்புக் கருதி அறிஞர் பலர் இதற்கு உரை கண்டுள்ளனர். இந்நூலை முறையாகப் பயில்கின்றவர் சித்தாந்தப் பொருளை ஒருவாறு முற்ற உணர்ந்தவராவர்.

திருவருட் பயன்

சிறப்புப் பாயிரம்

திருமகள் பிறந்த விரிதிரைப் பாற்கடல்
சூறையங் கடுங்கால் சுழற்றுபு எடுப்ப,
அலைவது அறஎழுந்து அண்டம் மீப் படர்ந்து
நிலைபெற நின்ற நெடுந்திரள் அன்ன
இன்னல் தீர்இன்ப நன்னலம் சுரத்தலின்
விளங்கெழில் தருமம் திரண்டு வீற்றிருந்த
வண்ணமும் போலும் அண்ணல் தன் கயிலை
காவலிற் புரக்கும் கண்ணுதற் கடவுள்
நந்திதாள் சுமந்து வந்த வழித் தோன்றல்
பெண்ணையாறு உடுத்த வெண்ணை நின்று உருத்த
தொண்டர்கள் இதய முண்டகம் மலர்த்தும்
விஞ்சை வாள் இரவி மெய்கண்ட தேவன்
மறையகத்து அடக்கிய ஒரு தனிக் குடிலையின்
அருள்நூல் நிறைந்த பொருள் முழுதுணர்த்தும்
ஆடிபோலக் கூடிய காட்சியின்
புகல் சிவஞான போத நூல் தொகுத்த
அகல் பொருள் தேர்தற்கு அருமையும், ஆங்கவன்
சம்பிரதாயத்து அந்தமில் வான்பொருள்
உலவாப் பெருங்களி உள்ளம் படைத்த
பண்பின் மேதகைய சண்பையர் கோமான்
தற்பலன் தேராப் பற்பல சமயிகள்
மலைத்தலைக் கொண்மூ மாருதம் அறைந்தெனத்
தலைத்தலை இரியத் தான்இனிது உரைத்த
புகழ் சிவ ஞான போத உள்ளுறையாம்
திகழ் சிவஞான சித்தியின் விரிவும்,
என்போல் மருண்ட புன்புல மாக்கள்
தீரா இடும்பையும் திருவுளங் கொண்டுதன்
ஆராக் காதலின் ஆக்கியோனாகப்
பாஇடம் கொண்ட தன் நாஇடம் கொண்டு
பவப் பிரகாசப் படரிருள் விழுங்கும்
சிவப் பிரகாசத் திருப்பெயர் மேவித்
தரைமகள் மருங்கில் பரிவுடன் வளைத்த
நரலையின் தொகைக்கு நான் மடங்கு உடைய
சைவநூற் சலதி நொய்தினிற் கடத்தும்
மரக்கலம் அதற்கு மாலுமிஒப்ப
எழில் ஈரைந்தும் வழுவறப் புணர்த்துத்
தெள்ளு சீர்ப் புலமை வள்ளுவன் தனக்கோர்
நற்றுணை உடைத்தெனக் கற்றவர் களிப்ப
அருட்பயன் என்னா அதற்கொரு நாமம்
தெருட்படப் புனைந்து செந்தமிழ் யாப்பில்
குறளடி வெள்ளை ஒரு நூறு இயம்பினன்;
மற்றவன் புலியூர் வளநகர்க் கீழ்பால்
கொற்றவன் குடியிற் குடிகொண்டு உறைந்த
பூசுரன், உறைந்த புதுமதி வேணியும்
காசுறும் கண்டமும் கரந்த
தேசிகன் உமாபதி சிவன் என்பவனே.

பொருள் : வெண்ணிறம் கொண்டு திகழும் கயிலை மலைக்கு இரண்டு உவமைகள் சொல்லலாம். சூறாவளி பாற்கடலைச் சுழற்றியெடுத்து மேலே வீச, அண்டத்தின் மேல் எல்லையில் அப்பாற்கடல் திரண்டு சென்று நின்றால் எப்படியிருக்கும்? அப்படி இருக்கிறதாம் அக்கயிலை மலை. மேலும், சிவபுண்ணியமெல்லாம் ஒருங்கே திரண்டு நின்றாற் போலவும் இருக்கிறதாம். சிவபிரானுக்குரிய அம்மலையில் காவற்பணி பூண்டவர் திருநந்திதேவர். அவரது உபதேச பரம்பரையில் வந்தவர் மெய்கண்ட தேவர். அவர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்தவர். தம்மைக் கண்டஅடியவரின் உள்ளக் கமலங்களை மலரச் செய்யும் அருட்கதிரவன் அவர். அவ்வருளாசிரியர் செய்த சிவஞான போதம் வேதம் முழுதையும் தன்னகத்தே அடக்கி நிற்கும் பிரணவத்தைப் போன்றது; ஆகமப் பொருள் முழுதையும் அடக்கிக் காட்டும் ஆடி போன்றது. அந்நூலைக் கற்றுத் தேர்வது என்பது மிகவும் அருமையாகும். அம்மெய்கண்ட தேவரது வழியில் வந்த முடிந்த முடிபாகிய பொருளைப் பெற்று, அதனால் உள்ளே பெருகியெழும் பேரின்பமாகிய பயனையும் பெற்ற அருட்பண்பினர் சண்பையர்கோன் எனப் பெறும் அருணந்தி தேவர். அவர் சிவஞான போத நூலின் உள்ளுறையை வெளிப்படுத்த வேண்டிச் சிவஞான சித்தி என்னும் விரிந்த நூலை அருளிச் செய்தார். மலையுச்சியில் திரண்டு நின்ற மேகக் கூட்டங்களைப் பெருங்காற்றுச் சிதற அடிப்பது போலப் பற்பல சமயத்தார் கூறும் பொருந்தாக் கொள்கைகளை அந்நூலில் மறுத்துள்ளார். சிவஞான போதத்தின் சுருக்கமும், சிவஞான சித்தியின் விரிவும் என்போலும் குறையறிவு உடையார் அந்நூல்களை அணுக வொட்டாதபடி செய்கின்றன. சுருக்கமும் கற்போர்க்கு இடர்ப்பாட்டைத் தருகிறது. பெருக்கமும் ஒருவகையில் நூலைக் கற்பதற்குத் தடையாய் அமைகிறது.

இவ்வாறு கற்போர்க்கு உண்டாகும் இன்னலைக் கருத்திற் கொண்ட ஒரு பெரியார், அவர்கள் மேற்கொண்ட அன்பினால் சுருங்கியும் போகாமல், விரிந்தும் செல்லாமல் ஒரு நூலை ஆக்கியருளினார். பிறவியாகிய நோயைத் தோற்றுவிக்கும் பெரிய மலமாகிய இருளை முற்றிலும் நீக்கவல்ல சிவப் பிரகாசம் (சிவஒளி) என்னும் பெயரைத் தன் நூலுக்குக் கொடுத்தார். நிலத்தைச் சூழ்ந்துள்ள கடல் ஏழு எனப்படும். அவ்வெண்ணிக்கையைப் போல நான்கு மடங்கு எண்ணிக்கை உடையது சிவாகமம் ஆகிய கடல். சிவாகமங்களாகிய அக்கடலைக் கடத்தற்கு உதவும் மரக்கலமாகத் திகழ்வது சிவப்பிரகாசம் ஆகிய அந்நூலாகும். மரக்கலம் என்றால் அதனை வழி நடத்துகின்ற மாலுமி ஒருவன் வேண்டுமே. சிவப்பிரகாசமாகிய மரக்கலம் அதற்கு மாலுமி ஒப்பாக மற்றொரு நூலைச் செய்தருளி அதற்குத் திருவருட் பயன் என்னும் பெயரைச் சூட்டினார். பத்து வகையான அழகுகள் இதனுள் பொருந்தியுள்ளன. மெய்ந் நெறியை உணர்த்தும் திருக்குறள் இது என்று சொல்லும்படியாகக் குறள் வெண்பா நூறு கொண்டதாக இந்நூலை ஆக்கினார். தெய்வப் புலமைத் திருவள்ளுவர்க்கு ஒரு நல்ல துணை கிடைத்தது என்று கற்றவர் மெச்சுவாராயினர். இந்நூலை இயற்றிய அப் பெரியார் தில்லை வாழ் அந்தனர்; தில்லையின் கிழக்கேயுள்ள கொற்றவன்குடி என்னும் ஊரில் தங்கியிருந்தவர். சிவபெருமான் நிலவு அணிந்த சடையையும், கரிய கண்டத்தையும் மறைத்து ஞானாசிரியராகிய இவராக வந்தருளினார் என்னும் படியாக விளங்கி, உமாபதி சிவம் என்னும் திருப்பெயரை உடையவராயினர்.

விளக்கம் : திருவருட்பயனுக்கு முன்னுரையாக அமைந்த இப்பாயிரச் செய்யுளைப் பாடியவர் நிரம்ப அழகிய தேசிகர் என்னும் பழைய உரையாசிரியர். அவர் திருவருட் பயனுக்குத் தெளிந்த உரை வகுத்தவர். அவ்வுரையின் தொடக்கத்தில் இப்பாயிரச் செய்யுளைப் பாடிச் சேர்த்துள்ளார். சிவபிரானுக்கு உரிய கயிலை மலையை முதலில் வருணிக்கிறார். நெடுந்திரள் அன்ன கயிலை எனவும், தருமம் திரண்டு வீற்றிருந்த வண்ணமும் போலும் கயிலை எனவும் தனித்தனியே கூட்டிக் கொள்ளுதல் வேண்டும். கயிலையைக் காக்கும் திருநந்திதேவர் சிவபிரானுக்குரிய திருவுருவைத் தாமும் பெற்றவர். அவரை அபர சம்பு என்பர். அதுபற்றியே கண்ணுதற் கடவுள் நந்தி என இங்குக் குறிக்கப் பெற்றார். அவரது திருவடியை உள்ளத்திலும் சென்னியிலும் கொண்டு போற்றும் திருக்கயிலாய பரம்பரையில் உபதேசம் பெற்றவர் ஆதலின் மெய்கண்ட தேவர் நந்தி தாள் சுமந்து வந்த வழித் தோன்றல் எனச் சிறப்பிக்கப் பெற்றார். அவர் ஞான ஒளி வீசும் கதிரவனாய்த் தோன்றினராதலின் விஞ்சைவாள் இரவி எனப்பட்டார். விஞ்சை-வித்தை, அறிவு; இங்கு மெய்யறிவாகிய ஞானத்தைக் குறித்தது. வாள்-ஒளி. ஓம் என்னும் பிரணவத்தை ஒரு தனிக் குடிலை என்றார். ஊமை மறையாகிய அது வேதங்களைத் தன்னகத்து அடக்கி நிற்பது போல, அளவாற் சிறிய சிவஞான போதம் அறிவுநூற் பொருள் முழுவதையும் தன்னுள்ளே அடங்கக் கொண்டு நிற்கிறது என்பது கருத்து.

சிவஞானபோதம் என்னும் முதல் நூலு<ம், சிவஞான சித்தியார் என்னும் வழி நூலு<ம் இருக்கும் போது சிவப்பிரகாசம் என்னும் நூலை ஏன் செய்ய வேண்டும்? என்னும் வினாவை எழுப்பிக் கொண்டு அதற்கு விடை கூறுகிறார். செறிவும் திட்ப நுட்பமும் வாய்ந்த சிவஞான போத நூலின் சுருக்கம் அதனை அறியப் புகுவோர்க்கு இடர்ப்பாட்டினைத் தருவதாய் உள்ளது. அவ்வாறே, பற்பல சமயப் பொருள் நிலைகளைச் சாடி மறுத்துத் திருவருளால் தெளிவதற்குரிய சித்தாந்த உண்மைகளைத் தருக்க முறையில் நிலைநாட்டுவதாகிய சிவஞான சித்தியாரின் விரிவும் அதனைக் கற்கப் புகுவோர்க்கு மலைப்பினை உண்டு பண்ணுவதாய் உள்ளது. எனவே போதம் போல் சுருங்காமலும், சித்தி போல் விரியாமலும், அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாய் யாவரும் அச்சமின்றி அணுகுவதற்கு ஏற்றதாய் அமைந்த ஒரு நூலைச் செய்து தருதல் வேண்டும் என்னும் கருணையினால் செய்ததே சிவப்பிரகாசம் என்னும் நூலாகும். பவப் பிரகாசப் படரிருள் விழுங்கும் சிவப்பிரகாசம் எனக் குறிப்பிடுகின்றார். பிரகாசம் என்பது இருமுறை வந்துள்ளது. ஆயின் வெவ்வேறு பொருளில் வந்துள்ளது. முதலில் உள்ள காசம் நோய் எனப் பொருள்படும். பிரகாசம் என்றால் மிகுந்த நோய் என்பது பொருள். அடுத்துள்ள காசம் ஒளி எனப் பொருள்படும். பிரகாசம் என்பதற்கு மிகுந்த ஒளி என்பது பொருள். எனவே பிறவியாகிய நோயைத் தோற்றுவிக்கின்ற பரந்த ஆணவ இருள் முழுவதையும் ஓட்டுகின்ற சிவஞானமாகிய ஒளி என்பது அத்தொடரின் பொருளாய் அமைகின்றது. நிலத்தை வளைத்துச் சூழ்ந்திருக்கும் கடலை, நிலமகள் தன் இடையில் உடுத்தியிருக்கும் ஆடை என வருணிக்கிறார். நரலை என்பது கடல்.

இந்நிலத்தைச் சூழ்ந்த கடல் ஏழாகும். இத் தொகைக்கு நாலு<மடங்கு ஆகிய, அஃதாவது இருபத்தெட்டு என்னும் எண்ணிக்கையுள்ள, கடல்கள் வேறு உள்ளன. அவை சிவாகமங்கள் என்னும் கடல்களாகும். அவற்றைக் கடத்தற்கு உதவும் மரக்கலம் ஒன்று உண்டு. அதுவே சிவப்பிரகாசம் ஆகிய நூலாகும். அதனை சைவநூற் சலதி நொய்தினிற் கடத்தும் மரக்கலம் என்கிறார். இந்நூல் ஒன்றைக் கற்றுத் தேர்ந்தால், சிவாகமங்களின் பொருள் அனைத்தையும் தேர்ந்து தெளிந்ததாய் முடியும் என்பது கருத்து. சிவப்பிரகாச நூலுக்கு உதவியாகத் திருவருட் பயனைச் செய்தருளினார் உமாபதி சிவம். திருவருட் பயனை முதலில் தெரிந்து கொண்டு அது காட்டும் வழியிலேயே சிவப்பிரகாசத்தைப் பயின்றால் சித்தாந்தப் பொருளை முட்டின்றி இனிது விளங்கிக் கொள்ள முடியும். எனவே, சிவப்பிரகாசம் சிவாகமக் கடலைக் கடத்தும் மரக்கலம் என்றால், திருவருட்பயனை அதனை நடத்தும் மாலுமி என்னலாம். இவ்வாறு கூறி, அவ்விரு நூல்களைப் பற்றிய சரியான மதிப்பீட்டினை அளித்துள்ளார் பாயிர ஆசிரியர்.

திருவருட்பயன் இரண்டே அடிகளை உடையகுறள் வெண்பாவால் ஆனது. சித்தாந்தப் பொருள்களைப் பத்து அதிகாரங்களாக வகுத்துக் கொண்டு, ஒவ்வொரு அதிகாரத்திற்கும் பத்துக் குறள்களை அமைத்து, உவமை, ஒட்டு முதலிய அணி நலம் சிறக்க, ஆற்றாமை இரக்கம் சினம் முதலிய உணர்ச்சிகள் ஆங்காங்கே வெளிப்பட, ஆசிரியர் நூலைக் கொண்டு செல்லும் போக்கு திருவள்ளுவரின் போக்கினை அடியொற்றியதாக உள்ளது. மேலும், திருவள்ளுவர் வீட்டியல் பற்றிக் குறிப்பாகவே சொல்லிச் சென்றார். அதனைத் தெளிவாக எடுத்தோதி அவரது உள்ளக் கிடக்கை இதுஎனப் புலப்படுத்தியவர் உமாபதி சிவம். இதனால் தெள்ளுசீர்ப் புலமை வள்ளுவன் தனக்கோர் நற்றுணை உடைத்து எனக் கற்றவர் களிப்புறுகின்றனராம். ஞானாசிரியர் சிவமே என்பது சைவ நூற் கொள்கை. அம்முறையில், சிவ பெருமானே உமாபதி சிவனாராக இருந்து திருவருட்பயனை உலகிக்கு வழங்கினார் எனக் கூறி முடிக்கின்றார்.

காப்புச் செய்யுள்

நஞ்குஞ்சரக் கன்று நண்ணின் கலை ஞானம்
கற்குஞ் சரக்கன்று காண்.

பொருள் : அருள் வடிவான யானைக் கன்றாகிய விநாயகப் பெருமானைப் புகலாக அடைந்தால், மெய்ந்நூலறிவு வருந்திக் கற்க வேண்டிய பொருள் ஆகாது. அஃது எளிதில் வரும்.

சொற்பொருள் :

நல்    - அருள் வடிவான
குஞ்சரக்கன்று    - யானைக் கன்று ஆகிய விநாயக மூர்த்தியை
நண்ணின்    - புகலிடமாக அடைந்தால்
கலைஞானம்    - மெய்ந்நூல் அறிவு
கற்கும்    - வருந்திக் கற்றுப் பெறும்
சரக்கு    - பொருள்
அன்று    - ஆகாது. (அஃது எளிதில் வரும்)
காண்    - மனமே, இதனை நீ உணர்வாயாக.

விளக்கம் : குஞ்சரக்கன்று

குஞ்சரம் என்பதற்கு யானை என்பது பொருள். யானை முகத்தினை உடைய பிள்ளையாரை யானைக் கன்று என்று குறிப்பிட்டார் ஆசிரியர். இளமை மாறி முதுமையடைதலும், நலிவுறுதலும் நம்மவர் நிலை. ஆயின் பெருமானுக்கு அந்நிலை இல்லை. அவர் என்றும் ஒரு தன்மையராய் இருப்பவர்; என்றும் இளமையானவர். அது பற்றியே அவர் கன்று எனப்பட்டார். உலகத்தில் உள்ள யானைக் கன்று களினின்றும் வேறுபடுத்திக் காட்டுதற்கு அருள் வடிவம் கொண்ட யானைக் கன்று என்றார் ஆசிரியர். நல்குஞ்சரம் என்பதில் உள்ள நன்மை, இந்த இடத்தில், அருள்வடிவம் எனப் பொருள் தந்து நின்றது.

நண்ணுதல்:

நண்ணுதல் என்பதற்குச் சேர்தல் என்பது பொருள். நற்குஞ்சரக் கன்றைச் சேர்தலாவது, அப் பெருமானை இடைவிடாது நினைத்தலே யாம். நம் எண்ணத்தில் இப்பொழுது உலகியல் பொருள்களே இடம் பெற்றுள்ளன. வீடு, நிலம், மனைவி, மக்கள், பதவி, செல்வம் முதலியவை பற்றிய எண்ணங்களே நம் நெஞ்சில் நிரம்பியுள்ளன. இஃது எதைக் காட்டுகிறது? நிலையற்ற உலகியல் பொருள்களுக்கு நாம் எவ்வளவு முதன்மை கொடுத்து வருகிறோம் என்பதையே இது காட்டுகிறது. இந்நிலை மாறி உலகியல் மீது வைத்துள்ள பற்று படிப்படியே ஒழிய வேண்டும். இறைவன் ஒருவனே நம் வாழ்வுக்கு முதலாக இருப்பவன்; அவனே எல்லாவுயிர்களுக்கும் புகலாக உள்ளவன். அவனையே நாம் பற்றாகப் பற்ற வேண்டும்; அவனையே இடைவிடாது எண்ண வேண்டும். மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல இனமலர் கையிற் கொண்டு அப்பெருமானை வழிபடல் வேண்டும். இவ்வாறு மனம் மொழி மெய்களால் அவனை வழிபடுதலையே நண்ணுதல் என இங்குக் குறிப்பிட்டார் ஆசிரியர்.

கலைஞானம் (மெய்ந்நூலறிவு): நூல்கள் இரு வகைப்படும். அவை உலக நூல்கள், மெய்ந்நூல்கள் என்பன. உலகியல் பற்றி எழுந்தவை உலக நூல்கள். வீட்டு நெறியை உணர்த்துவன மெய்ந்நூல்கள். உ<லக நூல்களை யாரும் கற்கலாம். பல துறைகளைச் சார்ந்த உலக நூல்களை அவ்வத் துறையில் வல்ல ஆசிரியரை அடுத்துக் கேட்டு விளங்கிக் கொள்ளலாம். ஆனால், மெய்ந்நூல்கள் அத்தகையன அல்ல. அவற்றைக் கற்பதற்குப் பக்குவம் வேண்டும். பக்குவமில்லார் அவற்றைக் கற்க விழையார்; கற்க முன்வரார். ஒருவேளை முன்வந்த போதிலும் அவற்றின் பொருளை உள்ளவாறு விளங்கிக் கொள்ளார். ஏனெனில் ஆசை, வெகுளி முதலிய மாசுகள் மனத்தில் இருக்கின்ற வரையில் அம் மனத்தில் ஞானநூற் பொருள்கள் சென்று பதியா. முன்கூறியபடி மனம் மொழி மெய்களினால் இறைவனை உண்மையாக வழிபட்டு வருவோர்க்கு மனமாசுகள் அகலும்; உள்ளத்தூய்மை உண்டாகும். அவரே பக்குவம் உடையவர். அவரே மெய்ந்நூலறிவைப் பெறுதற்கு உரியவர்.

கற்கும் சரக்கு அன்று: பொருளியல்பை உள்ளவாறு உணர்தலே ஞானமாகும். அஃதாவது, தனக்குப் புகலாகிய இறைவனது இயல்பையும், அவன் வழியில் நிற்றற்குரிய தனது இயல்பையும், அவ்வாறு நிற்கவொட்டாது தன்னைத் தடுத்து நிற்கும் தளையினது நிலையையும் உள்ளவாறு உணர்தலே ஞானமாகும். இந்த ஞானத்தைத் தரும் மெய்ந் நூல்களை ஒருவர் தாமே முயன்று கற்று ஞானத்தைப் பெறுதல் என்பது இயலாது. ஏனைய ஆசிரியன்மார்களை அடைந்து வருந்திக் கற்று ஞானத்தைப் பெறலாம் என்பதும் இயலாது. ஏனெனில் நம்மினும் சிறிது அதிகம் கற்ற அவ்வாசிரியர்கள் உலகநூற் பொருளை உணர்த்த வல்லவரேயன்றி ஞானநூற் பொருளை உணர்த்தும் தகுதியுடைய வரல்லர். அவ்வாறாயின் ஞானத்தைப் பெறுதல்தான் எவ்வாறு? என்ற வினாஎழும். மூத்த பிள்ளையாரது திருவடிகளை இடையறாது பற்றி நின்று வழிபட்டுவரின், அவர் உள்நின்று உணர்த்த மெய்ந்நூலறிவு எளிதில் வந்தடையும் என்பதே அதற்கான விடையாகும். வழிபாட்டின் மூலம் பக்குவம் எய்திய உயிருக்கு இறைவன் தானே ஞானத்தை உணர்த்துவன் என்பது கருத்து.

காண் :

செய்யுளின் இறுதியில் காண் என்ற முன்னிலைச் சொல் உள்ளது. அறிவாயாக என்பது அதற்குப் பொருள். அவ்வாறாயின், ஆசிரியர் யாரை முன்னிலைப் படுத்தி இக்கருத்தைக் கூறுகிறார்? ஆசிரியர் தம் நெஞ்சை முன்னிலைப்படுத்தி, நெஞ்சமே! நாமும் அப்பெருமானை நண்ணி அவனருளால் இந்நூலை எளிதில் முற்றுவிப்போம் என்று கூறியதாகக் கொள்ளலாம். அல்லது, மாணவனை முன்னிலைப்படுத்தி மாணவனே! நீ அப் பெருமானை உள்ளம் உருகி வழிபட்டு இந்நூலைக் கேட்பாயாயின் அவனருளால் மெய்யறிவாகிய ஞானம் உனக்கு எளிதிற் கைகூடும் என்று கூறியதாகவும் கொள்ளலாம்.

முதல் அதிகாரம்

பதி முது நிலை

பதி என்பதற்குக் காப்பவன் என்பது பொருள். அனைத்து உயிர்களையும், அனைத்து உலகங்களையும் காத்து ஆளும் தலைவன் என்ற கருத்தில் இறைவன் பதி எனப்படுகிறான். இறை, உயிர், தளை என்ற முப்பொருள்களில் பதியாகிய இறைவனே ஏனை எல்லாவற்றிலும் மேலானவன். ஆசிரியர் உமாபதி சிவம் தனது மற்றொரு நூலான சிவப்பிரகாசத்தில் இறையிலக் கணத்தைக் கூறப் புகும்போது பதி பரமே என்று சொல்லித் தொடங்குதலைக் காணலாம். பதியே பேராற்றல் வாய்ந்தவன்; தன்வயம் (சுதந்திரம்) என்னும் தன்மை உடையவன். உயிரும், தளையும் ஆகிய பிற பொருள்கள் தமக்கெனச் சுதந்திரம் இன்றிப் பதியின் விருப்பப்படியே செயற்பட்டுச் செல்வனவாகும். இறைவனுக்கு இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று, இறைவன் யாதொன்றையும் நோக்காது தன்னிலையில் தான் நிற்றலாகும். இந்நிலையில் அவன் வடிவு, பெயர் முதலியன ஒன்றும் இன்றி, எல்லையற்ற ஒரு பொருளாய் நிற்பான்; தொழில் செய்தல் இன்றிவாளா இருப்பான். இதுவே அவனது உண்மை நிலையாகும். இது சிவமாய் நிற்கும் நிலை எனப்படும்.

மற்றொன்று, உயிர்களின் மீது எழும் கருணை மேலீட்டால் இறைவன் ஐந்தொழில் செய்யும் நிலையாகும். உலகத்தைத் தொழிற்படுத்தும் இந்நிலையில் அவன் அளவற்ற வடிவும், பெயரும் உடையவனாய் நிற்பான். இது பதியாய் நிற்கும் நிலை எனப்படும். பதியாய் நிற்கும் நிலையில் அவனிடத்துக் காணப்படும் இயல்புகளை எடுத்துக் கூறுதலின் இவ்வதிகாரம் பதி முது நிலை எனப் பெயர் பெற்றது. இறைவனது இயல்பை முது நிலை எனக் குறிக்கின்றார் ஆசிரியர். மேலான இயல்பு என்று அதற்குப் பொருள் கூறலாம். இவ்வதிகாரத்தில் கூறப்பெறும் கருத்துக்களைப் பின்வருமாறு அமைத்துக் காட்டலாம். உலகம் அறிவற்ற சடப்பொருள். அது தானாக இயங்காது. உயிர்கள் அறியும் தன்மை உடையவை. ஆனால், தாமாக அறிய மாட்டா. உயிர்களை அறிவித்தற்கும், உலகத்தை இயக்குதற்கும் பேரறிவும் பேராற்றலும் உடைய ஒரு முதல்வன் உளன். அவன் உலகு <உயிர்களோடு கலந்து பிரிப்பின்றி நிற்கின்றான். உயிர்களுக்குத் தோற்றமில்லை; அழிவில்லை. அவை என்றும் உள்ளவை. ஆயின் அவை தம்மிடமுள்ள குறைபாடு காரணமாக உடம்போடு கூடி உலகிடை வருகின்றன. பின் உடம்பினின்றும் நீங்கி நிலை பெயர்ந்து செல்கின்றன. இவ்வாறு மாறிமாறிப் பிறந்தும் இறந்தும் உழல்கின்றன. உயிர்களிடமுள்ள குறைபாட்டினை நீக்கி அவை தன்னையடைந்து இன்புறும்படியாகச் செய்கிறான் இறைவன். இங்ஙனம் செய்யும் அவனது வல்லமையே சத்தி எனப்படும். சத்தி என்பது அவனுக்குக் குணம். சூரியனை விட்டுப் பிரியாத ஒளி போலவும், நெருப்பை விட்டு நீங்காத சூடு போலவும் இறைவனது குணமாகிய சத்தி அவனோடு பிரிப்பின்றி நிற்கும். இறைவன் தானும் தன் சத்தியும் என இருதிறப்பட்டு நின்று உலகை நடத்துகிறான்.

அவன் எல்லாப் பொருள்களையும் தன்னுள்ளே அடக்கி நிற்கின்ற பெரிய பொருள்; எல்லாவற்றுள்ளும் ஊடுருவிக் கலந்து நிற்கின்ற நுண்ணிய பொருளும் அவனே. அவன் உயிர்களின் அறிவிற்கு எட்டாதவன்; உயிர்களிடத்தில் பெருங் கருணையுடையவன். அவன் ஆக்குதல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களைச் செய்கிறான்; உயிர்களின் மாசினை நீக்கித் தூய்மை செய்து ஆட்கொள்ளும் பொருட்டே இத் தொழில்களை அவன் மேற்கொள்கிறான். அவனுக்கு ஓர் உருவமில்லை; பெயரில்லை; அசைவில்லை; இதுவே அவனது உண்மை நிலை. காலம் இடம் முதலிய எல்லைகளையெல்லாம் கடந்து விரிந்து நிற்கும் அவனது பெருநிலையை ஞானிகளே உணர்தல் கூடும். ஏனையோரும் தன்னை ஒருவாறு உணர்ந்து உய்யும் பொருட்டு அவன் வரம்புபட்ட பல வடிவங்களைத் தாங்கி நின்று அருள் புரிகிறான்.

உயிர்கள் இறைவனாகிய தலைவனை உடையவை. அதுபோல இறைவனுக்கும் ஒரு தலைவன் உண்டா என்று கேட்கலாம். இறைவனே யாவருக்கும் மேலானவன். ஆகவே அவனுக்கு மேலே ஒரு தலைவன் இல்லை. இறைவன் எப்பொருளிலும் கலந்து நின்றாலும் அவற்றின் சார்பினால் அவன் தன் தன்மை மாறுபடான். தேவரும் காணுதற்கு அரிய பரம் பொருள் அவன். ஆயினும் அடியவர்க்கு எளியவனாய் அவருள்ளத்தில் அகலாது நிற்பான். உலகப் பற்றை நீக்கித் தன்னையே சார்ந்து நிற்கும் உயிர்களுக்குப் பிறவித் துன்பத்தை நீக்கிச் சுகத்தைத் தருவான். பிறவிப் பிணிக்கு அவனே உற்ற மருந்து. அவனை நினைந்து வழிபடுதலே உயிர்கள் செய்யத் தக்கது. இனி இக் கருத்துக்களை விரிவாகக் காண்போம்.

1. எங்கும் நிறைந்து நின்று இயக்குபவன்

அகர உயிர்போல் அறிவாகி எங்கும்
நிகரில் இறை நிற்கும் நிறைந்து.

பொருள் : பதிப்பொருள் தனக்கு ஒப்பாக வேறு ஒரு பொருளும் இல்லாதது. அது பேரறிவாய் எங்கும் நீக்கமின்றி நிறைந்து நிற்கும். அகரமாகிய உயிரெழுத்து மற்றைய எல்லா எழுத்துக்களிலும் இயைந்து நின்று அவற்றை இயக்குவது போலப் பதிப்பொருள் பிற எல்லாப் பொருளிலும் வேற்றுமையின்றிக் கலந்து நின்று அவற்றை இயக்கும். எனவே பதியாகிய இறையே உலகிற்கு முதல் என்பது விளங்கும்.

சொற்பொருள் :

அகர உயிர்போல் - அகரமாகிய உயிரெழுத்து பிற எல்லா எழுத்துக்களிலும் இயைந்து நின்று அவற்றை இயக்குவது போல
நிகர்இல் இறை - தன்னோடு ஒப்பதாக ஒரு பொருளும் இல்லாத பதியாகிய இறை.
அறிவாகி - பேரறிவு உடையதாய்
எங்கும் - பிற எல்லாப் பொருள்களிடத்தும்
நிறைந்து நிற்கும் - வேற்றுமையின்றிக் கலந்து நின்று அவற்றை இயக்கும்.

விளக்கம்

நிகரில் இறை : பதியாகிய இறைவன் எல்லா முதன்மையும் உடையவன். எல்லா முதன்மையும் உடையவனாக ஒருவன் தான் இருக்க முடியும். எனவே இறைவன் ஒருவனே என்பதும், அவன் தன் நிகர் இல்லாதவன் என்பதும் விளங்கும். இறைவன் ஒருவனே யாயின் நூல்களில் பல கடவுளர் பேசப்படுகின்றனரே என ஐயுறலாம். அக் கடவுளர் பலரும் இறைவனது அருளால் அந்நிலையை அடைந்தவர்கள். அவர்களெல்லாம் உயிர்களாகிய பசுக்களே யாவர். அவர்களுக்கும் பிறப்புண்டு; ஆயுட்காலம் வரையில் வாழ்வுண்டு; பின் இறப்பு உண்டு. அவர்களுக்கு அளவுபட்ட ஒவ்வொரு செயலில் மட்டும் முதன்மையுண்டு. அம் முதன்மைகள் அவர்கள் செய்த புண்ணியத்திற்கு ஏற்ப இறைவன் கொடுத்தனவாகும். அவர்களை அதிகார மூர்த்திகள் என்பர். அரசனது செயல்களை அவனது ஆணையைப் பெற்று நடத்தும் அதிகாரிகளைப் போன்றவர்கள் என அவர்களைக் குறிப்பிடலாம். அவர்கள் ஒவ்வொன்றில் முதன்மையுடையவராய் இருக்க, சிவபெருமானாகிய பதியே எல்லா முதன்மையும் உடையவனாயிருத்தலால் அவனே முழுமுதற் கடவுள் என்பதும், நிகரில் இறை என்பதும் ஐயமற விளங்கும்.

இறைவனுக்கு உவமை :

தனக்கு உவமையில்லாத இறைவனுக்கு உவமை கூறுகிறார் ஆசிரியர்; அகர உயிர்போல் எங்கும் நிறைந்து நிற்கும் என்கிறார். வள்ளுவரது முதற் குறளில் இவ்வுவமை இடம் பெற்றுள்ளது என்பதை அறிவோம். ஞான சம்பந்தர் முதலிய திருமுறையாசிரியர்களின் வாக்கில் இடம்பெற்ற பெருமையும் இவ்வுவமைக்கு உண்டு. இவ்வுவமை இறைவனுக்கு எவ்வகையில் பொருந்துகிறது என்பதை நோக்குவோம். ஒலிக்கும் முயற்சிகளுள் முதல் முயற்சி வாயைத் திறத்தல். அந்த முதல் முயற்சியிலேயே வாயைத் திறந்த அளவிலேயே - உண்டாவது அ என்னும் ஒலி. மற்றைய ஒலிகள் வாயைத் திறப்பதோடு வேறு பிற முயற்சிகளும் செய்யப் பிறப்பனவாகும். வாயைத் திறத்தலாகிய அம் முதல் முயற்சியின்றிப் பிற முயற்சிகள் நிகழா என்பது தெளிவு. அம் முதல் முயற்சியோடு கூடியே பிற முயற்சிகள் நிகழ்கின்றன. எனவே முதல் முயற்சியில் பிறப்பதாகிய அகர ஒலியோடு கூடியே பிற முயற்சியில் பிறப்பனவாகிய மற்றைய ஒலிகள் எழுகின்றன என்பதும் அகரவொலி யின்றிப் பிற எழுத்தொலிகள் இல்லை என்பதும் புலனாகும். எனவே, எழுத்துக்களுக்கெல்லாம் அடிநிலையாய் இருப்பது அகர வுயிரே யாகும். அகர வுயிரே பிற எல்லா எழுத்துக்களிலும் கலந்து நின்று அவற்றின் இயக்கத்திற்கு அடி நிலையாய் நிற்கிறது. அகர வுயிர் பிற எழுத்துக்களுக்கு முதலாதல் போல இறைவன் உலகிற்கு முதலாய் நிற்கிறான்.

எழுத்துக்கள் உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் என இருவகைப்படும். அவ்விருவகை எழுத்துக்களிலும் அகரவுயிர் கலந்திருக்கிறது. உலகம் சித்தும், சடமும் என இரு வகைப்படும். சித்து என்பது அறிவுடைய உயிர்களின் தொகுதியைக் குறிக்கும். இவ்விரண்டும் சேர்ந்ததே உலகம். சித்தும் சடமுமாகிய இவ்விரண்டிலும் இறைவன் வேறறக் கலந்து நிற்கிறான். எழுத்துக்களின் இயக்கத்திற்கு அகரவுயிர் இன்றியமையாதது. அது போலச் சித்தும் சடமும் ஆகிய உலகத்தின் இயக்கத்திற்கு இறைவன் இன்றியமையாதவன். இவ்வாறு உவமைக்கும் பொருளுக்கும் உள்ள பொருத்தங்களைச் சுட்டலாம்.

உவமை                பொருள்
1. உயிரெழுத்துக்கள்            சித்தாகிய உயிர்கள்
2. மெய் எழுத்துக்கள்            சடமாகிய பொருள்கள்
3. உயிரும் மெய்யுமாகிய எழுத்துக்களை இயக்கும் அகரம்    சித்தும் சடமும் ஆகிய உலகை இயக்கும் இறைவன்

சித்தும் சடமுமாகிய அனைத்துப் பொருள்களையும் இறைவன் இயக்குகிறான் எனின், அவன் ஒரு காலத்தில் தானே அனைத்துப் பொருளையும் அறிந்து நிற்கிறான் என்பதும் பெறப்படும். அவ்வாறு முழுவதையும் ஒருங்கே அறிந்து நிற்கும் அவனது அறிவு முற்றறிவு எனப்படும். இத்தகைய பேரறிவுடையவன் ஆதலைக் குறிக்கவே அறிவாகி என்றார். இறைவனே உலகிற்குத் தலைவன் என்பதும், அவனே அனைத்து இயக்கத்திற்கும் முதல் என்பதும் இச்செய்யுளில் உணர்த்தப்பட்டன.

2. சத்தியோடு கூடியவன்

தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தரும் சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்.

பொருள் : ஒருவனாகிய எம் இறைவன் பிறப்பு இறப்பிற் படாமல் என்றும் ஒரு தன்மையனாய் உள்ளவன். அந்த நிலைமையைப் பலவாகிய உயிர்களும் பெறும்படியாகச் செய்யும் தனது சத்தியோடு அவன் வேறின்றி நிற்கிறான்.

சொற்பொருள் :

எங்கள் பிரான்    - எம் இறைவன்
தன் நிலைமை    - பிறப்பு இறப்புக்கள் இன்றி, என்றும் ஒரு தன்மையனாய் இருக்கின்ற தனக்குள்ள அந்த நிலைமையை
மன் உயிர்கள்    - தன்னைப்போல நிலை பெற்றவனாகிய எல்லாவுயிர்களும்
சார    - அடையும்படியாக
தரும்    - உதவி செய்கின்ற
சத்தி    - தனது சத்தியோடு
பின்னம் இலான்    - வேற்றுமையின்றி நிற்கின்றான்.

விளக்கம்

தன்னிலைமை : அறியாமையைச் செய்யும் ஆணவ மலமும், பிறவித் துன்பத்தைத் தரும் கன்ம மலமும், அசுத்தமாகிய மாயா மலமும் ஆகிய மும் மலங்களின் தொடர்பை உடையன உயிர்கள். இம்மலத் தொடர்பினாலேயே அவை பிறப்புட் படுகின்றன. இறைவன் மலத்தோடு சிறிதும் தொடர்பில்லாதவன். அதுபற்றியே நின்மலன் எனப்படுகின்றான். மல சம்பந்தம் இன்மையால் அவனுக்குப் பிறப்பில்லை என்பது அறியப்படும்.

மாற்றம் என்பது பிற பொருளின் வயப்படுவதால் வருவது. இறைவன் மலங்களின் வயப்படாமல் தன் வயத்தனாய் நிற்பவன். ஆகவே அவன் மாற்றமடையாமல் என்றும் ஒரு தன்மையனாய் நிற்பான் என்பது அறியப்படும். இவ்வாறு பிறப்பிற் படாது என்றும் யாதொரு மாற்றமும் இன்றி நிற்பதே இறைவனின் நிலைமையாகும். <உயிர்கள் மலங்களின் வசப்பட்டு, நிலையில்லாத உலகச் சார்பை எய்தி, மாறி வரும் பிறவிச் சுழற்சியிற் பட்டுத் திரிகின்றன. இச் சுழற்சியிலிருந்து விடுபட்டு <உயிரானது ஒரு நிலைப்பட்ட தன்மையை எய்த வேண்டுமாயின் என்றும் ஒரு தன்மையனாய் உள்ள இறைவனைச் சார்தல் வேண்டும். மலச் சார்பை விட்டு இறைவனைச் சார்ந்தால் அவ்விறைவனது தன்மையை உயிர்களும் பெறலாம். அவ்வாறு தன்னிலைமையை மன்னுயிர்கள் அடையும்படி செய்வது இறைவனது சத்தியே யாகும். சத்தி என்பது யாது, அதன் செயற்பாடுகள் யாவை என்பதை இங்குச் சுருக்கமாகக் காண்போம்.

சிவமும் சத்தியும் :

ஒருவனாகிய இறைவன் தானும் தன் சத்தியும் என இரு தன்மைப்பட்டு நிற்பன். இதனை எளிதில் விளங்கிக் கொள்வதற்கு இரண்டு எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. ஒன்று சூரியனும் அதன் ஒளியும். மற்றொன்று நெருப்பும் அதன் சூடும். சூரியன் பொருள். ஒளி அதன் குணம். நெருப்பு பொருள். சூடு அதன் குணம். இவ்வாறு பொருளும் குணமும் என இரண்டாய்ச் சொல்லும்படி நின்றாலும் உண்மையில் அவை யிரண்டும் ஒன்றேயாம். பொருளை யின்றிக் குணம் இல்லை. குணம் இன்றிப் பொருள் இல்லை. அதுபோலச் சிவம் என்பது பொருள். சத்தி அதன் குணம். சிவமும் சத்தியும் என இரண்டாய்ச் சொல்லு<ம்படி நின்றாலும் அவை வேறு பொருள்கள் அல்ல. உண்மையில் அவை யிரண்டும் ஒன்றேயாம். தானும் சத்தியும் ஒரு பொருளே என்பதை உணர்த்தவே சிவபெருமான் ஓருடம்பிலே ஆண் பெண் என இரு திறத்தனாய்க் காட்சியளிக்கிறான். சத்தி எனினும் ஆற்றல் எனினும் ஒன்றே. இறைவனது சத்தியாய் - ஆற்றலாய் நிற்பது அவனது பேரறிவேயாகும். சத்தி தன் வடிவேது என்னில் தடையிலா ஞானமாகும் என்பர். சிவத்தினது சத்தி பிறிதொன்றால் தடுக்கப்படுதல் இல்லாத பேரறிவே எனக் கூறியிருத்தலைக் காணலாம்.

சூரியன் தானும் தன் ஒளிக் கதிரும் என இயைந்து நிற்கும். சேய்மையில் உள்ள தன்னிலையில் அது சூரியன் எனப்படும். அதன் ஒளிக்கதிர் உலகத்தில் பரவி உலகப் பொருள்களோடு தொடர்பு கொண்ட நிலையில் அது ஒளி எனப்படும். அதுபோல இறைவன் எவற்றுக்கும் மேலாம் நிலையில் தன்னளவில் நிற்கையில் சிவம் எனப்படுவான். அவனது நுண்ணிய பேரறிவாகிய சத்தி எல்லாப் பொருள்களிலும் அவற்றின் உள்ளும் புறம்புமாய் நீக்கமற நிறைந்து நிற்க, இவ்வாறு அவன் உலகு <உயிர்களோடு தொடர்பு கொண்ட நிலையில் சத்தி எனப்படுவான். ஒருவனாகிய இறைவன் எல்லாப் பொருள்களிலும் இவ்வாறு இரண்டறக் கலந்து நிற்றல் அவனது சத்தியினாலே என்பது இதனால் விளங்கும். இக்கருத்தே முதற்செய்யுளில் அகர வுயிராகிய உவமையில் வைத்து உணர்த்தப்பட்டது. இறைவன் உலகுயிர்களோடு கலந்து நின்று இயக்குகிறான் என்றும் கூறலாம்; அவனது சத்தி அவ்வாறு கலந்து நின்று இயக்குகிறது என்றும் கூறலாம். இரண்டிற்கும் கருத்து ஒன்றுதான். ஓர் ஓவியர் இந்த ஓவியத்தை எழுதினார் என்று கூறுவதற்குப் பதிலாக அவரது கை இந்த ஓவியத்தை உருவாக்கியது என்று கூறலாம் தானே. ஓவியரும் அவரது கையும்போல இறைவனும் அவனது சத்தியும் என்று ஒருவகையில் கொள்ளலாம்.

நங்கையினால் நாம் அனைத்தையும் செய்கிறோம்!
அதுபோல நங்கையினால் இறைவன் அனைத்தையும் செய்கிறான்.

முதலில் உள்ள நங்கை நம் கை எனப்பிரிந்து பொருள் தரும். அடுத்து வரும் நங்கை பெண் எனப் பொருள் பட்டு இறைவனது சத்தியைக் குறிக்கும். சிவனே செயலைச் செய்பவனாக, சத்தி அவனுக்குத் துணையாதல் பற்றிச் சத்தியை அவனுக்குத் துணைவியாக வைத்துப் போற்றும் நிலை உண்டாயிற்று. சிவனே தலைமைப் பொருள் என்பதும், சத்திஅவன் வழிப்பட்டு நிற்பது என்பதும் இதனால் அறியப்படும் எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள். இறைவன் சிவமும் சத்தியுமாய் நிற்றலை விளக்குவதற்கு நெருப்பும் அதன் சூடும் என்ற மற்றொரு உவமையை முன்னே குறிப்பிட்டோம். உணவுப் பொருள்களைச் சுவையாக உண்பதற்கு ஏற்ற வகையில் பக்குவப்படுத்துதலைப் பாகம் செய்தல் என்பர். பாகத் தொழிலில் வறுத்தல், பொரித்தல், அவித்தல் முதலிய பலவகைச் செயல்கள் உண்டு. பல வகைப்பட்ட இச் செயல்களையெல்லாம் நெருப்பினது சூடு ஒன்றே செய்கிறது. அதுபோல இறைவனது சத்தி ஒன்றே படைத்தல், காத்தல், அழித்தல் முதலிய பல செயல்களைச் செய்கிறது.

இறைவனது சத்தி ஒன்றே யாயினும் அதனால் நிகழ்த்தப்படும் செயல்கள் பலவாதல் பற்றிப் பல சத்திகளாகச் சொல்லப்படும். <உயிர்களின் அறிவை மும் மலங்களின் செலுத்தி, அவ்வுயிர்கள் இறைவனை நோக்காது உலகத்தையே நோக்கி நிற்கும்படி செய்யும் சத்தி திரோதான சத்தி எனப்படும். இப் பெயர் அது செய்யும் மறைத்தல் தொழில் பற்றி வந்ததாகும். திரோதானம்-மறைத்தல். இத் தொழிலால் பக்குவம் பெற்ற உயிர்களுக்கு ஞானத்தைக் கொடுத்து இறைவனைக் காட்டி இன்புறும்படி செய்யும் சத்தி அருட்சத்தி எனப்படும். இவ்வாறு இறைவனது சத்தி கட்டு நிலையில் உயிர்க்குயிராய் உடன் நின்று உயிர்கள் பக்குவம் பெறும்படி உதவும்; முத்தி நிலையில் அவ்வாறு உடன் நின்று தன்னிலைமையை மன்னுயிர்கள் பெறும்படி உதவும். அச் சத்தியோடு பிரிப்பின்றி நிற்கின்றான் எங்கள் பெருமான் என்பது இச் செய்யுளில் உணர்த்தப்பட்டது.

3. ஒப்பு இல்லாதவன்

பெருமைக்கும் நுண்மைக்கும் பேரருட்கும் பேற்றின்
அருமைக்கும் ஒப்பின்மை யான்.

பொருள் : எல்லாவற்றிலும் பெரிய பொருளாய் நிற்கும் தன்மையில் அவனை ஒப்பார் இல்லை. எல்லாப் பொருளிலும் உட்கலந்து நிறைந்து நிற்கும் நுண்மையில் அவனை ஒப்பார் இல்லை. எல்லாவுயிர்களிடத்திலும் கொண்டிருக்கும் மாறாத பெருங்கருணைத் திறத்தில் அவனை ஒப்பார் யாருளர்? பிறர் தன்னைப் பெறுவதற்கு அரியனாய் நிற்கும் நிலைமையிலும் அவன் ஒப்பார் இல்லாதவனே. இவ்வாறு பெருமை, நுண்மை, பேரருள், பெறுதற்கு அருமை ஆகிய இந்நான்கு திறத்திலும் தனக்கு ஒப்பாக வேறொன்று இல்லாத சிறப்பினை உடையவன் எம் இறைவன்.

சொற்பொருள் :

பெருமைக்கும் - எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு, அவை எல்லாவற்றினும் தானே பெரிய பொருளாய் நிற்கும் தன்மையிலும்
நுண்மைக்கும் - எல்லாப் பொருள்களின் ஊடும் உட்கலந்து நிறைந்து நிற்கும் நுண்மையிலும்
பேரருட்கும் - எல்லாவுயிர்களிடத்திலும் வைத்திருக்கும் மாறாத பெருங்கருணையிலும்
பேற்றின் அருமைக்கும் - பிறர்தன்னைப் பெறுதற்கு மிகவும் அரியனாய் நிற்கும் நிலைமையிலும்
ஒப்புஇன்மையான் - தனக்கு ஒப்பாக வேறொன்று இல்லாத சிறப்பினை உடையவன் எம் இறைவன்.

விளக்கம்

பெருமை : கடவுட் பொருள் தன்னை அடக்கி நிற்பதொரு பொருள் இன்றித் தானே எல்லாப் பொருளையும் தன்னுள் அடக்கி நிற்கும் பெரும் பொருள் ஆகும். வடமொழியில் கடவுளைப் பிரம்மம் என்பர். பிரம்மம் என்பதற்குப் பெரியது என்பதே பொருள். கடல்வெளி விரிந்த நீர்ப் பரப்பு முழுவதையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு நிற்கிறது. அதுபோலப் பதிப் பொருளாகிய இறைவன் சித்தாகிய உயிர்களையும் சடமாகிய உலகங்களையும் தன் கண் அடங்கக் கொண்டு நிற்கிறான். பிறவற்றைத் தன்னுள் அடக்கி நிற்கும் பெருநிலை வியாபகம் எனப்படும். அதனுள் அடங்கி நிற்கும் நிலை வியாப்பியம் எனப்படும். அம் முறையில் கடவுள் வியாபகம். ஏனைய உயிர்களும் உலகங்களும் கடவுளிடத்தில் வியாப்பியம். கடவுள் வியாபகமாய் நிற்றலின் அதற்குக் காலம், இடம் என்ற எல்லை யாதும் இல்லை. மேல், கீழ், புடை ஆகிய எல்லா இடங்களிலும் இங்ஙனம் எல்லையின்றிப் பரந்து நிற்றலை அகண்டாகாரம் என்பர். காலை வேளையில் பலகணி வழியாக நுழையும் சூரிய வொளிக் கற்றையில் மிதக்கும் நுண்ணிய துகள்கள் தாம் எத்துணைச் சிறியவை! எங்கும் விரிந்து கிடக்கும் அண்ட கோடிகள் எல்லாம் அத்துணைச் சிறியவாகத் தோன்றும்படியாக நிற்கும் பெரிய பொருள் இறைவன்.

நுண்மை :

இறைவன் எல்லாவற்றிலும் நுண்ணியன். ஆதலால் அவன் எல்லாப் பொருள்களிடத்தும் உள்ளீடாய்க் கலந்து நிற்பான். அங்ஙனம் எல்லாவற்றிலும் உள்ளுறைந்து நிற்றலை விளங்கிக் கொள்வதற்கு எள்ளில் நிறைந்திருக்கும் எண்ணெய்யை அவனுக்கு எடுத்துக்காட்டாகக் கூறுவர். முன்னே கூறிய பெருமை என்பது அவன் எல்லாப் பொருளையும் கடந்து நிற்கும் பெரு நிலையாகும். இங்குக் கூறிய நுண்மை என்பது அவன் எல்லாப் பொருளிலும் கலந்து நிற்கும் கலப்பு நிலையாகும். கடந்த நிலையைக் குறிக்கும் பெயர் கடவுள் என்பது. கலந்த நிலையைக் குறிக்கும் பெயர் இறைவன் என்பது. இறுத்தல் என்ற சொல்லிலிருந்து இறைவன் என்ற சொல் வந்தது. இறுத்தல் என்பதற்குத் தங்குதல் என்பது பொருள். எனவே எங்கும் தங்கி இருப்பவன் என்ற கருத்தில் இறைவன் எனப்பட்டான். எப்பொருளிலும் எவ்விடத்திலும் இவ்வாறு தங்கி நின்று இயக்குபவன் சிவபெருமான் ஒருவனே. அவ்வகையில் இறைவன் என்னும் பெயர் சிவபெருமானுக்கே உரியதாகும். அப்பெயர் அவனுக்கே வழங்கப்பட்டிருத்தலைப் பழைய நூல்களிற் காணலாம். இறைவன் நுண்ணியன் ஆதலால் பருப்பொருள்களாகிய மலங்களால் பற்றப்படாமல் என்றும் தூயவனாய் நிற்பான் என்பதும் விளங்கும். அவனது பெருமையின் முன் அண்டமும் ஓர் அணுவாய்த் தோன்றும்! அவனது நுண்மையின் முன் அணுவும் ஓர் அண்டமாய்த் தோன்றும்!

பேரருள் :

இறைவன் அளவில்லாத அருளுடையவனாதல் பற்றி அவனைக் கருணைக் கடல் என்று போற்றுவர். அவன் எண்ணில்லாத உயிர்கள் மேல் இரக்கம் கொண்டு, கைம்மாறு சிறிதும் கருதாது அவைகள் நலமடைதற் பொருட்டே அளவற்ற செயல்களை எப்பொழுதும் மேற்கொண்டு செய்து வருகிறான். உயர்ந்த மக்கட் பிறவியைப் பெற்ற நாம் தலைவனாகிய அவனை மறந்து நம்மையே தலைவராகக் கருதுகிறோம். நமது மனத்தை அவனிடத்திலே செலுத்தாமல் உலகியலிலே செலுத்தி வருகிறோம்; அவன் விதித்த விதிகளைப் பின்பற்றாமல் நடக்கிறோம். ஆயினும் அவன் நம்மை ஒருபோதும் வெறுத்து விலக்கியதில்லை. அவனுடைய அருளுக்கு அளவில்லை. அன்பிலே தாயன்பு சிறந்தது. ஈடு இணையற்றது என்பர். அவளது அன்பின் நிலையும் ஒரொரு சமயம் மாறி விடுவதைப் பார்க்கிறோம். ஆயின் இறைவனது கருணையோ என்றும் ஒருபடித்தாய் நிற்பது. அது பற்றியே இறைவனைத் தாயினும் இனியன் என்று பெரியோர்கள் கூறுகின்றனர். அவனுக்கு ஆட்பட்டவர்கள் அவனது பேரருளை நினைந்து எப்படியெல்லாம் உருகுகின்றனர்!

தந்தையே, அடியேனை அன்பினாலே உனக்குத் தொண்டனாகச் செய்தாய்; உனது திருவருள் நோக்கினாலே என்னைத் தூய்மை செய்தருளினாய்; மிகவும் அரியவனாகிய நீ எனக்கு மிகவும் எளியவனாகி இரங்கி ஆண்டு கொண்டாய். நான் ஒரு பேதை; நாயினும் கடைப்பட்டவன். நான் செய்த குற்றங்கள் அத்தனையும் நீ பொறுத்துக் கொண்டாய். இத்தனையும் என் போன்றவர் அளவிற்கு உரியனவோ? அல்ல. எம் பெருமான் தனது பேரருளை என் மீது வைத்த தன்மையை என்னென்பேன்! இரும்பு போன்ற வலிய மனமுடைய என்னை மெல்ல மெல்ல ஈர்த்து உன் இணையடிகளிற் சேர்த்துக் கரும்பு தருசுவையை எனக்குக் காட்டினாய். துன்பத்தைத் தரும் பிறப்பு இறப்புக்களில் அழுந்திக் கிடந்த ஆதரவற்ற அடியேற்கு உனது பாதமலர் காட்டியது உன் பேரருளே யன்றோ? நாய்க்குப் பொன் தவிசு இடுவது போல அடியேற்கு உன் பொன்னருள் கிடைத்தது. அடியேனை அஞ்சேல் என்று ஆண்டாய். நின்னருளால் நான் உய்ந்தேன். உனது பரங் கருணைத் தடங்கடலில் நான் படியுமாறு எனக்கு அருள் புரிவாயாக. இவ்வாறு இறைவனது பெருங் கருணைத் திறத்தினை வியந்துருகிப் பாடியுள்ள பான்மையை நமது தேவார திருவாசகங்களிற் காணலாம்.

பேற்றின் அருமை :

இறைவன் பெறுதற்கு அரியவன். அவனை அடைய வேண்டின் முதலில் உலக நெறியில் உவர்ப்பு ஏற்பட வேண்டும்; சிவத் தொண்டு, சிவ பூசை முதலியவற்றை இடைவிடாது உள்ளன் போடு செய்துவரல் வேண்டும். அதன் பயனாக இரு வினையொப்பு என்னும் பக்குவ நிலை வரல் வேண்டும். ஞானாசிரியர் வாய்க்க வேண்டும். அவர் காட்டும் நெறியிலே வழுவாது நின்று உண்மை ஞானத்தைப் பெற வேண்டும். இங்குக் கூறிய இத்தனை சாதனைகளில் நின்று ஞானத்தைப் பெறுதல் என்பது அத்துணை எளிதோ? இதனைக் கருதியே,

பல்லூழிக் காலம் பயின்று அரனை அர்ச்சிக்கில்
நல்லறிவு சற்றே நகும்

என்றனர் பெரியோர். உயிர்களாகிய நாம் இப்படிப்பட்ட மெய்ந் நெறியிற் செல்லாமல் உலகியலிலேயே உழன்று கொண்டிருக்கிறோம். இதற்குக் காரணம் நம்மிடத்திலுள்ள பாசத் தடையே யாகும். இத்தடை என்று நீங்குமோ? அதற்கு இன்னும் எத்தனை பிறவிகள் வேண்டுமோ? பெறுதற்கு அரியவன் பெருமான் என்று உமாபதி சிவனார் சொல்வது எவ்வளவு உண்மை! இதனைக் கற்போர்க்கு அப்படியானால் இறைவனைப் பெறவே முடியாதா? என்று ஐயமும் திகைப்பும் ஏற்படலாம் அல்லவா? அதனை உணர்ந்தே, அவன் பேரருளாளன் என்ற கருத்தையும் உடன் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

அன்று தொட்டே உயிர்களோடு உடனாய் நிலைபெற்றுள்ள இறைவன் அவ்வுயிர்களைத் தானாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பெருங்கருணை உடையவன். அதற்குத் தடையாக இருப்பது ஆணவ மலம். உயிர்களைப் பற்றியுள்ள அம்மல சத்தியைத் தன் திருவருட் சத்தியினால் சிறிது சிறிதாக நீக்கி வருகிறான். இவ்வாறு செய்வதில் அவனுக்கு ஒருபோதும் சலிப்பு உண்டாதல் இல்லை. அவனது பேரருளே எல்லாவுயிர்களுக்கும் உய்தியைத் தரவல்லது. அவனது அருளையே பற்றாகப் பற்றினால் பாசப் பற்று நீங்கி வாழலாம்; இறைவனைப் பெறலாம். எனவே, இறைவன் பெறுதற்கு அரியவனாகவும் இருக்கிறான். திருவருள் உதவியினால் பெறுதற்கு உரியவனாகவும் இருக்கிறான். இவ்வாறு பேற்றின் அருமை என்பதோடு முன்னே உள்ள பேரருள் என்பதையும் இணைத்து நோக்கிப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.

சிவப்பிரகாசக் கருத்து :

ஆசிரியர் உமாபதிசிவம் தமது சிவப்பிரகாசம் என்ற நூலில் பதியாகிய பரம்பொருளின் இயல்பைச் சொல்லும் போது,

செலஅரிதாய் செல்கதியாய் சிறிதாகிப் பெரிதாய்  (செ.13)

என்கிறார். அத்தொடரின் மறுவடிவமாகவே திருவருட் பயனில் இச்செய்யுள் அமைந்துள்ளது என்பது நோக்குதற்குரியது. செலஅரிதாய் என்பதற்கு ஏற்ப இங்கே பேற்றின் அருமை என்பது உள்ளது. செல்கதியாய் என்பதன் பொருளை இங்கே பேரருள் என்பது விளக்கி நிற்கிறது. சிறிதாகி என்பதை இங்கே நுண்மை என்று குறிப்பிடுகிறார். பெரிதாய் என்பதை அப்படியே பெருமை என்று இங்கே அமைத்துக் கொள்கிறார். பெரிதாய் என்பதைப் பெருமை என அமைத்துக் கொண்டாற் போலச் சிறிதாகி என்பதையும் சிறுமை என அமைத்துக் கொள்ளலாமே. அப்படிச் செய்யாமல், சிறுமை என்பதற்குப் பதிலாக நுண்மை என்ற சொல்லை இங்கே ஆளக் காரணம் என்ன? என்று கேட்கலாம். சிறுமை என்ற சொல் நுண்மையைக் குறிக்கும். சான்றாக சிற்றம்பலம் என்பது சிறுமை+அம்பலம் எனப் பிரிந்து, நுண்ணிய அருள்வெளி எனப் பொருள்படும். இதில் சிறுமை என்பது நுண்மையைக் குறித்து நிற்றலைக் காணலாம்.

மேற்காட்டிய சிவப்பிரகாசத் தொடரிலும் நம் ஆசிரியர் இறைவனது நுண்மையைக் குறிப்பதற்குச் சிறிதாகி என்ற சொல்லையே ஆண்டிருத்தல் கண்கூடு. அப்படியானால், திருவருட்பயனில் சிறுமை என்ற சொல்லை அவர் ஏன் பயன்படுத்தவில்லை? நுண்மை என்ற சொல்லை ஏன் பயன்படுத்த வேண்டும்? எனில், வெண்பாவாகிய யாப்பே அதற்குக் காரணம் எனலாம். பெருமைக்கும் சிறுமைக்கும் என்று பாடினால் யாப்புக் கெடும். பெருமைக்கும் நுண்மைக்கும் என்று அமைத்தால் யாப்புக் கெடாது. அது கருதியே நுண்மை என்ற சொல்லைப் பயன்படுத்தினார் ஆசிரியர். வேறு நயம் கருதி அதனை இங்கே பயன்படுத்தினார் என்று கருத வேண்டியதில்லை. இனி, சிவப்பிரகாசத் தொடரிலுள்ள நான்கு கருத்துக்களையும் திருவருட் பயனில் அதே வரிசையில் நிறுத்தவில்லை; மாற்றி எதிர் நிரலாக அமைத்துள்ளார் என்பதையும் காணலாம். எனவே சிவப் பிரகாசத் தொடரைப் பின்னிருந்து நோக்கினால் பெருமை, நுண்மை, பேரருள், பேற்றின் அருமை என்ற வரிசை முறை கிடைத்துவிடும்.

4. முத்தொழில் செய்பவன்

ஆக்கிஎவையும் அளித்து ஆசுடன் அடங்கப்
போக்கும் அவன்போகாப் புகல்.

பொருள் : இறைவன் உயிர்களிடம் உள்ள ஆணவ மலமாகிய அழுக்கினை நீக்க வேண்டியே அவ்வுயிர்களுக்கு உடம்பும், ஐம்பொறி முதலிய கருவிகளும், உலகும், உலகிலுள்ள நுகர்ச்சிப் பொருள்களும் ஆகிய எல்லாவற்றையும் படைத்துக் கொடுக்கின்றான்; உயிர்கள் குறித்த காலம் வரை அவற்றோடு பொருந்தி வாழும்படியாக அவற்றை நிலை நிறுத்தி காக்கின்றான்; பின், ஆணவ மலம் நீங்கும் நிலையை அடையும் காலத்தில் அம் மலத்தோடு சேர்த்து, தான் படைத்துக் காத்த உடம்பு முதலிய பொருள்களையும் ஒரு சேரப் போக்கி உயிரைத் தூய தாக்குகின்றான். இப்பேருதவியைச் செய்யும் இறைவனே உயிர்களுக்கு நீங்காத புகலிடம் ஆவான்.

சொற்பொருள் :

எவையும்    - தனு, கரணம், புவனம், போகம் ஆகிய எல்லாப் பொருள்களையும்
ஆக்கி    - மாயையிலிருந்து படைத்துக் கொடுத்து
அளித்து    - குறித்த காலம் வரை அவை நிலைபெறும்படி காத்து (ஆணவ மலம் ஆகிய மாசு தேய்ந்து மெலிவுற்ற காலத்தில்)
ஆசுடன்    - அம்மலத்தோடு
அடங்க    - (தான் படைத்துக் கொடுத்த உடம்பு முதலிய பொருள்களையும்) ஒருசேர
போக்கும்    - உயிர்களிடமிருந்து நீக்கி அவை தன்னை அடையும்படி செய்கின்ற
அவன்    - அவ்விறைவனே
போகாப் புகல்    - உயிர்களுக்கு நீங்காத புகலிடம் ஆவான்.

விளக்கம் :

ஆசு : ஆசு என்பதற்குக் குற்றம் என்பது பொருள். உயிரிடத்தில் இயற்கையாகவே ஆணவ மலம் என்ற குற்றம் உள்ளது. உயிர் என்று உண்டோ அன்றே அதனிடத்தில் இந்தக் குற்றமும் உடனாகச் சேர்ந்து இருத்தலினால் சகச மலம் என்று சொல்லப்படும். சகச மலம் - இயற்கையாய் உள்ள அழுக்கு. ஆடையில் உள்ள அழுக்கு அதன் வெண்மையை மறைப்பது போல உயிரிலுள்ள ஆணவ மலமாகிய அழுக்கு அதன் அறிவை மறைத்து நிற்கிறது. அம் மறைப்பினால் உயிருக்கு அறியாமை உண்டாகிறது. அறியாமையினால் வருவது துன்பமே. எனவே முடிவாகப் பார்த்தால் எல்லாத் துன்பங்களுக்கும் மூல காரணம் ஆணவ மலமே என்பது விளங்கும். இது பற்றியே ஆணவ மலம் மூல மலம் என்றும் சொல்லப்படும். இதன் இயல்பையெல்லாம் இருள் மல நிலை என்ற மூன்றாம் அதிகாரத்தில் விரிவாகக் காணவிருக்கிறோம்.

உலக வாழ்க்கை :

மூல மலமாகிய ஆணவத்தை நீக்கும் பொருட்டே உயிரோடு உடம்பு முதலியவற்றைக் கூட்டுவிக்கிறான் இறைவன். உடம்புதனு எனப்படும். மனம் முதலிய கருவிகள் கரணம் எனப்படும். இந்த உலகு புவனம் என்று குறிக்கப்படும். உலகிலுள்ள நுகர்ச்சிப் பொருள்கள் போகம் எனப்படும். உயிர்கள் இறையருளால் தனு கரணம் புவனம் போகம் ஆகிய இந்நான்கினோடும் பொருந்தி வாழ்வதே உலக வாழ்க்கை. உயிர்கள் தனுவாகிய உடம்பினுள் நின்று, கரணங்களின் உதவியால் அறிந்து புவனத்திடையே போக்குவரவு செய்து, போகங்களை நுகர்ந்து கொண்டு வாழ்கின்றன.

ஐந்தொழில்கள் :

உயிர்கள் என்றும் உள்ளவை யாதலின் அவற்றை இறைவன் படைத்தான் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆயின், இறைவனின் தொழில்களுள் ஒன்றாகப் படைத்தல் என்பது கூறப்படுகிறது. அதன் கருத்து, உயிர்களுக்கு வேண்டிய உடம்பு, கருவிகள், நிலம், நுகர்பொருள் ஆகிய நான்கையும் படைத்துக் கொடுக்கிறான் என்பதாகும். உடம்பு முதலிய நான்கும் அறிவற்ற சடப் பொருள்கள். இவற்றை மாயை என்ற சடப் பொருளிலிருந்து இறைவன் தோற்றுவிக்கிறான். குடம் வனைபவன் குடமாகிய காரியத்தைக் களிமண் என்ற காரணப் பொருளிலிருந்து உண்டாக்குகிறான். குடத்திற்குக் களிமண் மூலப் பொருள். அதுபோல, உடம்பு முதலிய நான்கினுக்கும் மாயை மூலப் பொருளாகிறது. இறைவன் செய்வோனாய் நின்று, மாயையிலிருந்து உடம்பு முதலியவற்றை ஆக்குகிறான். இதுவே படைத்தல். இவ்வாறு ஆக்கிக் கொடுத்த உடம்பு முதலியவற்றை அந்தந்த உயிர்களின் வினைக்கேற்றவாறு எத்துணைக் காலம் நிறுத்த வேண்டுமோ அத்துணைக் காலம் நிறுத்தி வைக்கிறான். இதுவே காத்தல். இனி, வினைப் போகமே ஒரு தேகங் கண்டாய், வினைதான் ஒழிந்தால் தினைப் போதளவும் நில்லாது என்றபடி முன் நிறுத்திய உடம்பு முதலியவற்றை உயிர்களிடமிருந்து நீக்குதலே அழித்தல் எனப்படுகிறது.

இதனால், படைத்தலும் காத்தலும் அழித்தலும் ஆகிய இத்தொழில்களை இறைவன் உடம்பு முதலிய சடப்பொருள்களிடத்தில் நிகழ்த்துகிறான் என்பது விளங்கும். இம் முத்தொழில்கள் போக, வேறு இரண்டு தொழில்களையும் இறைவன் செய்கின்றான் என்று சைவ சித்தாந்தம் கூறும். அவை மறைத்தல், அருளல் என்பன. அவற்றைப் பின்வருமாறு விளக்கலாம். பெறுதற்கரிய உடம்பினையும், அறிதற்குரிய ஐம்பொறி முதலிய கருவிகளையும் பெற்ற உயிர்கள் அவற்றைக் கொண்டு உலகை அறிந்து உலக வாழ்வில் மயங்கிக் களிக்கின்றன. உலகில் இன்பம் சிறிதாக, துன்பமே பெரிதாயிருக்கின்றது. துன்பத்தைத் தரும் பல பிணிகளைக் கொண்ட <உடம்பிலே அப்பிணிகளுக்கு இடையில் உயிர் கட்டுண்டிருக்கின்றது. ஆயின் உயிர் தன் நிலையை உணராமல், உலகில் சிறிதாயுள்ள இன்பத்தை நுகர விரும்புகின்றது. இஃது எது போன்றது எனில், பாம்பின் வாயில் அகப்பட்டுள்ள தவளையின் வாயில் பிடிபட்டிருக்கும் வண்டு அந்த நிலையிலும் தன் முன் உள்ள ஒரு பூவில் மறைந்து கிடக்கும் சிறிய அளவினதாகிய தேனை உறிஞ்சி யெடுத்து உண்ண விரும்புதலைப் போன்றது எனலாம்.

இவ்வாறு உயிர்கள் உலக இன்பத்திலேயே விடுதல் அறியா விருப்பம் கொண்டு வாழ்கின்றன. உள் நின்று தம்மைச் செலு<த்தி வருகின்ற இறைவனை அறிய மாட்டாது உலகத்தையே அறிந்து நிற்கின்றன. உலக ஆசை இருக்கின்ற வரையில் உயிர்க்குப் பிறப்பும் உண்டு; இறப்பும் உண்டு. இவ்வாறு இறைவன் உயிர்களுக்குத் தன்னைக் காட்டாமல் மறைந்திருந்து அவற்றைத் துன்பமே மிகுந்த உலக வாழ்வில் இச்சை கொள்ளுமாறு செலுத்தி வரும் செயல் மறைத்தல் எனப்படும். உலக வாழ்வில் பல்காலும் உழன்று வினைத் துன்பத்தை உயிர் நுகர நுகர, அதனைப் பற்றியிருந்த ஆணவ மலம் தேயும்; நல்லுணர்வு சிறிது உண்டாகும். உலகியலில் உவர்ப்புத் தோன்றும். அந்நிலையில் அவ்வுயிர் உலகை நோக்காது இறைவனை நோக்கும். இறைவன் அப்படிப்பட்ட உயிர்களுக்கு ஞானத்தை நல்கி அவை தன்னையடைந்து இன்புறுமாறு செய்வான். இச் செயல் அருளல் எனப்படும். இறைவன் படைத்தல் முதலிய மூன்று தொழில்களையும் சடமாகிய உடம்பும் உலகும் ஆகியவற்றின் மேல் நிகழ்த்துவான் என முன்னே குறிப்பிட்டோம். மறைத்தலும் அருளலு<ம் ஆகிய இவ்விரு தொழில்களையும் இறைவன் சித்தாகிய உயிர்களின் மேல் நிகழ்த்துகின்றான் என்பதை நினைவிற் கொள்ளுதல் வேண்டும். இதுகாறும் கூறியவற்றால் இறைவன் செய்யும் தொழில்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தாகும் என்பது விளங்கும்.

முத்தொழிலாய் அடங்குதல் :

இறைவன் தொழில்கள் இங்ஙனம் ஐந்தாக, இச் செய்யுளில் ஆக்கி எனவும், அளித்து எனவும், போக்கும் எனவும் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றுதானே இறைவன் தொழிலாகக் கூறப்பட்டுள்ளது என எண்ணலாம். இது பற்றிச் சிறிது விளக்குதல் வேண்டும். இறைவன் தொழில்களை ஐந்தாக விரித்து நோக்காமல் படைத்தல், காத்தல், அழித்தல் என மூன்றாகத் தொகுத்துக் கூறுதலும் உண்டு. எங்ஙனம் எனில், உடம்பு முதலியவற்றை நிலை நிறுத்தலாகிய காத்தல் தொழில் நிகழ்வதனால் அன்றோ, உயிர்கள் இறைவனை நோக்காது உலகையே நோக்கி நின்று உலக வாழ்வில் மயங்கி நிற்கும் படியான மறைத்தல் தொழில் நிகழ்வதாகிறது. காத்தல் இல்லையேல் மறைத்தல் நிகழ வழியில்லை. எனவே, மறைத்தலைக் காத்தல் தொழிலில் அடக்கிவிடலாம். இனி, ஆணவ மலம் நீங்குதற்குரிய காலத்தில் அதனோடு சேர்த்துத் தான் படைத்துக் காத்த உடம்பு முதலியவற்றையும் ஒரு சேரப் போக்குதலே அழித்தல் தொழில் என்பாராய், ஆசுடன் அடங்கப் போக்கும் என்றார் ஆசிரியர். இதுவே உயிர் மாசு நீங்கிய நிலையாகும். இவ்வாறு உயிரின் மாசினை நீக்குகிற அழித்தல் தொழிலை இறைவன் செய்கிறான் என்பதைச் சொல்லவே, மாசு நீங்கிய உயிரை அவன் ஆட்கொண்டு அருள்புரிகிறான் என்பதும் சொல்லாமலே விளங்கும். எனவே அருளலை அழித்தல் தொழிலில் அடக்கிவிடலாம். இங்ஙனம், மறைத்தல் காத்தலில் அடங்க, அருளல் அழித்தலில் அடங்க, இம்முறையில் ஐந்தொழிலும் முத்தொழிலாய் அடங்கி நிற்றல் காணலாம். இத் தொகுத்தல் முறை பற்றியே ஆசிரியர் இறைவன் தொழிலை மூன்றாகக் கூறினார் என அறியலாம். இச்செய்யுள், இறைவன் செய்யும் முத்தொழில்களை வெளிப்படையாகவும் அவன் உயிர்களிடத்துச் செய்யும் மறைத்தல், அருளல் என்னும் இரண்டு செயல்களைக் குறிப்பாகவும் உணர்த்துகிறது.

கட்டுநிலையும் முத்தி நிலையும் :

ஆசுடன் கூடி நின்ற நிலை உயிர்க்குக் கட்டு நிலை என்று சொல்லப்படும். கட்டு நிலையைக் குறிக்கப் பந்தம், பெத்தம் என்ற வேறு சொற்களும் நூல்களில் வழங்கும். கட்டு நீங்கி இறைவனை அடையும் நிலை முத்தி நிலை என்று சொல்லப்படும். கட்டு நிலை என்றும் துன்பமே யாதலின் அதனின் நீங்கி இறைவனையடையும் முத்தி நிலையே இன்புறு நிலையாகும்.

போகாப் புகல் :

போக்கும் அவன் போகாப் புகல் என்று முரண் சுவை அமைத்துக் கூறுகிறார் ஆசிரியர். உயிரிடத்துள்ள ஆசினை அவனே நீக்குகிறான். ஆயின் அவனோ உயிரிடத்தில் இமைப் பொழுதும் நீங்காதவனாய் இருக்கிறான். உயிர்களுக்கு இரண்டு நிலைகள் தாம் உண்டு. ஒன்று, கட்டு நிலையில் இருக்கும். அதிலிருந்து விடுபட்டால் முத்தி நிலையில் இருக்கும். இவ்விரண்டு நிலைகளிலு<ம் உயிர்களுக்குப் புகலிடமாய் உள்ளவன் இறைவனே. நாம் என்றும் இறைவனிடம் அடங்கியிருக்கிறோம் என்பதையும், அவனே நமக்கு என்றும் துணையாக உள்ளவன் என்பதையும் கட்டுண்ட உயிர்கள் உணர்வதில்லை. மனைவி மக்கள், உற்றார் உறவினர் முதலியோரையே உற்ற துணை என்று எண்ணுகின்றனர். இவர்களெல்லாம் இடையிலே வந்து சேர்ந்தவர்கள்; இடையிலே நீங்கக் கூடியவர்கள். இவர்கள் எப்படிக் கடைசி வரை துணையாக இருக்க முடியும்? இறைவன் ஒருவனே நமக்குப் போகாப் புகல் என்ற உண்மையைத் தெளிந்து அவனையே புகலாக அடைதல் வேண்டும்.

5. மூவகைத் திருமேனி கொள்பவன்

அருவும் உருவும் அறிஞர்க்கு அறிவாம்
உருவும் உடையான் உளன்.

பொருள் : இறைவன் ஞானியர்க்கு அறிவே வடிவாய் விளங்குகின்றான். ஏனையோர்க்கு அருவம், உருவம், அரு வுருவம் என்னும் மூன்று திருமேனிகளை உடையவனாய் இருக்கின்றான்.

சொற்பொருள் :

உடையான்    - எல்லாப் பொருள்களையும் தனது உடைமையாகக் கொண்டவனாகிய இறைவன்
அறிஞர்க்கு    - மெய்யுணர்வு பெற்ற ஞானியர்க்கு
அறிவாம் உருவும் - அறிவே வடிவான திருமேனியையும்
அருவும் உருவும் - (ஏனையோர்க்கு) அருவத் திருமேனியையும், உருவத் திருமேனியையும்
உளன்    - உடையனாய் இருப்பான்.

விளக்கம் :

உண்மை நிலையும் பொது நிலையும் :

இறைவனுக்கு இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று உண்மை நிலை. மற்றொன்று பொதுநிலை. இறைவன் இயல்பிலே தனக்கென உருவம், பெயர், தொழில் ஒன்றும் இல்லாதவன். இதுவே அவனது உண்மை நிலை. இதனை வடமொழியில் சொரூபம் என்பர். இத்தன்மையனாகிய இறைவன் உயிர்களின் பொருட்டு உருவம் முதலியவற்றை மேற்கொள்வன். இஃது அவன் அடையும் பொது நிலையாகும். இதனைத் தடத்தம் என்பர். இறைவனது உண்மை நிலையை ஞானியரே அறிதல் கூடும். அவர்க்கு அவன் அறிவே வடிவாய் விளங்குவான். அதனை அறிந்த அப்பெரியோர் ஆராத இன்பத்தையே நுகர்ந்து நிற்பர். இறைவனது உண்மை நிலையை உணர மாட்டாதவரே ஏனையோர். அவர்களும் தன்னை மனம் மொழி மெய்களால் உணர்ந்து வழிபட்டு உய்தல் வேண்டி அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூவகைத் திருமேனிகளைக் கொள்வன்.

நானாவித உருவாய் நமை யாள்வான்  (1 : 9 : 5)

என்று ஞானசம்பந்தர் அருளியுள்ளமை காணலாம். ஆசிரியர் உமாபதி சிவம் தமது மற்றொரு நூலான சிவப்பிரகாசத்தில் இறைவனது இயல்பைச் சொல்லும் போது நிலவும் அரு வுரு இன்றி (செ.13) என்றார். அவ்வாறு அங்கே சொன்னவர் இங்கே அருவும் உருவும் உளன் என்கிறார். சிவப்பிரகாசத்தில் சொன்னது இறைவனது உண்மை நிலையை நோக்கி எனவும், இங்கே சொன்னது அவனது பொது நிலையை நோக்கி எனவும் உணர்தல் வேண்டும். இனி, அருவம் முதலிய மூவகைத் திருமேனிகளின் தன்மையை விளக்குவோம்.

அருவம் :

இறைவன் உயிர்களிடத்து நுண்ணிய மொழி வடிவாய் நின்று அவற்றிற்கு உணர்தல் தன்மையை உண்டாக்குகிறான். இக்கருத்தமைந்த,

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா

என்னும் திருவாசகத் தொடர் ஆழ்ந்து உணர்தற்குரியது. இஃது இறைவனது அருவ நிலையாகும். அருவத் திருமேனி என்று சொல்லப்பெறும் இது கட்புலனாகாது கருத்தினாலேயே உணரப் படுவதாகும்.

உருவம் :

அருவத் திருமேனி போலன்றிக் கட்புலனாகக் கூடியது உருவத் திருமேனியாகும். இது முகம் கை கால் முதலிய உறுப்புக்களுடன் கூடிய வடிவமாகும். ஆயினும் இவ் வுருவம் பக்குவமில்லாத நம்மவர் கண்ணிற்குப் புலப்படாது; தவத்தோர் கண்ணிற்கே புலப்படுவதாகும். அடியார் பலர்க்கும் பல சமயங்களில் தோன்றி அருள்புரிந்த திருமேனிகள் எல்லாம் உருவத் திருமேனிகளே. உருவத் திருமேனியைப் போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் என மூன்றாகச் சொல்வர். உலக இன்பத்தைத் தருதற் பொருட்டு மணக் கோலம் கொள்ளுதல், அம்மையும் அப்பனுமாய் இருத்தல் போன்றவை போக வடிவம் எனப்படும். ஞானத்தைத் தருதற் பொருட்டுத் தட்சிணாமூர்த்தியாய் எழுந்தருளியிருத்தல் போன்றவை யோக வடிவம் எனப்படும். தேவர்க்கும் ஏனை உலகத்தார்க்கும் உண்டாகும் துன்பத்தைப் போக்குதற்குப் போர்க் கோலம் கொள்ளுதல் (திரிபுரம் எரித்தல், காலனை உதைத்தல்) போன்றவை வேக வடிவம் எனப்படும். இறைவன் செய்யும் ஐந்தொழில்களை முந்திய செய்யுளில் அறிந்தோம். அவற்றுள் அருளல் தவிர மற்றைய நான்கு தொழில்களையும் செய்யும் நிலையில் உருவத் திருமேனி அவனால் கொள்ளப்படும்.

அருவுருவம் :

இனி, அருவம் உருவம் என்னும் இவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாக அருவுருவம் என்பது உண்டு. செய்யுளில் அருவும் உருவும் என இரண்டே கூறப்பட்டுள்ளன. ஆயினும் இடைக் கண்ணதாகிய அருவுருவம் என்பதையும் நாம் கொள்ளல் வேண்டும். அருவுருவம் என்பது முகம் முதலிய உறுப்புக்கள் இல்லாது பிழம்பு மாத்திரமாகக் காணப்படுகிறது. ஒளி வடிவமே இது. முகம் முதலிய உறுப்புக்கள் இல்லாமையால் அருவம் எனவும், கட்புலனுக்குத் தோன்றுவதால் உருவம் எனவும், சொல்லும்படியாக நிற்றலால் இது அருவுருவம் ஆயிற்று. தோன்றி மறைகின்ற ஒளிச்சுடர் போல அருவுருவத் திருமேனியும் ஓரொரு சமயமே தோன்றிப் பின் தோன்றாது நிற்கும். இதுவே ஐந்தொழில்களுள் அருளலைச் செய்வதாகும். அது பற்றியே திருக்கோயில்களில் மூலத் தானத்தில் மூல மூர்த்தியாய் வைத்து வழிபடப் பெறுகிறது. இது சிவலிங்கத் திருமேனி எனவும், சதாசிவ மூர்த்தி எனவும் பெயர் பெறும்.

அருள் திருமேனி :

இதுகாறும் கூறியவற்றால் இறைவன் கொள்ளும் மூவகைத் திருமேனிகளின் இயல்பு ஒருவாறு விளங்கும். முடிவாக ஒன்றைச் சொல்ல வேண்டும். நம்முடைய உடம்பெல்லாம் மாயையினால் ஆகிய சரீரம். இறைவன் கொள்ளும் திருமேனியோ மாயையினால் ஆனதன்று. அஃது அருளால் ஆனது. ஆகவே அருள்திருமேனி எனப்படும். அவ்வருள் திருமேனிகள் பிறரால் படைத்துத் தரப்படுவன அல்ல. அவன் தானே தனது இச்சையாற் கொள்வன என்பதை உளங்கொள்ளுதல் வேண்டும்.

6. அவனுக்கு மேலானதொரு பொருளில்லை

பல்லாருயிர் உணரும் பான்மையென மேல் ஒருவன்
இல்லாதான் எங்கள் இறை

பொருள் : <உயிர்கள் எண்ணற்றவை; அறியும் தன்மை உடையவை. ஆனால், அவை தாமே அறியமாட்டா; வேறொரு துணை அறிவிக்கவே அறிவன. அவ்வுயிர்களைப் போன்றவனல்லன் எம் இறைவன். அவன்தானே எல்லாவற்றையும் அறிபவன். தன்னை அறிவித்தற்குத் தனக்கு மேலாக ஒருவனை உடையவன் அல்லன்.

சொற்பொருள் :

பல் ஆர் உயிர்    - எண்ணற்றனவாய் நிறைந்த உயிர்கள்
உணரும் பான்மையென - தாமே அறியமாட்டாமல், தமக்கு மேலோன் ஒருவன் அறிவிக்கவே அறிந்து வருதல் போல
எங்கள் இறை    - எம் இறைவன்
மேல் ஒருவன் இல்லாதான் - தன்னை அறிவித்தற்குத் தனக்கு மேலானவனாக ஒருவனை உடையவனல்லன். (அவன்தானே எல்லாவற்றையும் அறிபவன்.)

விளக்கம் :

உயிர்கள் உணரும் பான்மை :

உயிர்கள் தாமே தனித்து நின்று பொருள்களை அறிவதில்லை. உடம்பின் புறத்திலும் அகத்திலும் அமைந்திருக்கும் கருவிகளைத் துணையாகக் கொண்டே அறிகின்றன. கண், செவி முதலிய ஐம்பொறிகள் புறத்தில் உள்ள கருவிகள். மனம் முதலியவை அகத்தில் உள்ள கருவிகள். இக்கருவிகள் இல்லையென்றால் உயிருக்கு அறிவு நிகழாது என்பதை அனுபவத்திற் காணலாம். உறங்குங் காலத்தில் இக் கருவிகள் செயற்படாமையால் உயிர் அறிவின்றிக் கிடக்கிறது. விழிப்புக் காலத்தில் இக் கருவிகள் செயற்படுவதனால் அவற்றின் துணைக் கொண்டு உயிர் அறிவு பெறுவதாகின்றது. இவ்வனுபவம் எதைக் காட்டுகிறது? <உயிர் கருவிகளின் துணையைப் பெறும் போதுதான் அறியும் நிலையை எய்தும் என்பதைத்தானே காட்டுகிறது. மேற்கூறிய மனம் முதலிய கருவிகள் உலகப் பொருள்களை அறிவதற்கு மட்டுமே துணையாகும். உயிர் தன்னியல்பை உணர்ந்து கொள்வதற்கு அவை துணை செய்யா; மெய்ப் பொருளாகிய இறைவனை உணர்தற்கும் அவைதுணை செய்யா. அதற்கு ஞானாசிரியரது அருள் உபதேசமே இன்றியமையாத துணையாகும். இப்படி எப்பொருளை அறிவதற்கும் வேறொரு துணை உயிருக்கு வேண்டியிருக்கிறது. உடம்பும் கருவிகளும் ஆகிய துணைகளையும், மற்றும் காலம், வினை போன்ற துணைகளையும் உயிர்களுக்குக் கூட்டி அறிவிக்கின்றவன் இறைவனே. அவன் உயிர்களுக்குக் கட்டு நிலையில் இக் கருவிகளின் வழியாக அறிவிக்கிறான். முத்தி நிலையில் நேரே அறிவிக்கின்றான். எனவே எந்நிலையிலும் அவன் அறிவிக்கவே உயிர்கள் அறிகின்றன. முடிவாகப் பார்த்தால் அவன் ஒருவனே உயிர்களின் அறிவுக்கு முழுமையான துணை என்பது விளங்கும். இம்முறையில் எல்லா உயிர்களும் தம்மை அறிவித்தற்கு மேலோன் ஒருவனை உடையனவாய் இருக்கின்றன.

மேலொருவன் இல்லாதான் :

இனி, இறைவனது அறிவு எத்தகையது பார்ப்போம். இறைவனது அறிவு தானே விளங்குவது; அஃதாவது, அறிவிக்கின்ற துணை ஒன்றை வேண்டாது தானே அறிவது. தானே விளங்கி நிற்கின்ற அறிவு ஆதலின் அது சுயம்பிரகாசம் எனப்படும். அவன் தானே அறிபவன் எனவே அவனுக்கு அறிவிக்க மேலோன் ஒருவன் இல்லை என்பது சொல்லாமலே விளங்கும். அவனே மேலோனாய் இருந்து எல்லாவற்றையும் ஒருங்கே யறிந்து எல்லாவுயிர்களுக்கும் அறிவித்து வருகின்றான். இச் செய்யுளில், இறைவனே சுதந்திர அறிவுடையவன் என்பதையும், உயிர்களது அறிவு சுதந்திரம் இல்லாதது என்பதையும் வெளிப்படையாகக் கூறி, உயிர்கள் யாவும் அவனுக்கு ஆட்பட்டு ஒழுகுதற்கு உரியன என்பதையும் குறிப்பாக உணர்த்தியுள்ளார் ஆசிரியர்.

7. அடியவர் உள்ளத்தில் விளங்கி நிற்பவன்

ஆனாஅறிவாய் அகலான் அடியவர்க்கு
வானாடர் காணாத மன்.

பொருள் : தேவர்களாலும் அறியப்படாத தலைவனாகிய சிவபெருமான் தன்னையே நினைந்துருகும் அடியவரின் அறிவில் நீங்காத பேரறிவாய் நிறைந்து, அவரை விட்டு அகலாது இருப்பான்.

சொற்பொருள் :

வான்நாடர் காணாத - தேவர்களால் அறியப்படாத
மன்    - தலைவனாகிய இறைவன்
அடியவர்க்கு    - தனக்குத் தொண்டு பூண்டு நிற்கும் அடியவரிடத்தில்
ஆனா அறிவாய்    - (அவர்கள் அறிவினின்றும்) நீங்காத அறிவாய்
அகலான்    - அவருடனே இருப்பான்.

விளக்கம் :

வானாடர் :

இறைவன் வானோர்க்கு அரியனாய் விளங்கும் அருமையினையும், தன்னடியார்களுக்கு எளிவந்தருளும் அழகினையும் ஞானசம்பந்தர் முதலிய அருளாசிரியர்கள் விரித்துக் கூறியுள்ளனர். ஞானசம்பந்தர் ஒவ்வொரு பதிகத்திலும் அயனும் மாலும் ஆகிய தேவர்கள் இறைவனது முடியும் அடியும் காண முயன்ற செய்தியைத் தவறாது குறிப்பிடுகிறார். அவ்விருவரும் இறைவனைத் தொழுது நலம்பெற முயலாமல் தாமே தலைவர் என்ற தன் முனைப்புடன் இறைவனைத் தேடப் புகுந்து காணமாட்டாது அயர்ந்து விழுந்தனர். பின் தெளிவு பெற்றுத் திருவைந்தெழுத்தினை ஓதி இறையருள் பெற்று உய்ந்தனர். இந்நிகழ்ச்சி ஞானசம்பந்தர் அருளிய பதிகந்தோறும் ஒன்பதாம் திருப்பாடலில் அமைந்திருத்தலைக் காணலாம். தேவர்கள் செய்யும் வழிபாடு எப்படிப்பட்டது என்பதைக் காட்டுகிறார் மணிவாசகர். அவர்கள் தம் வாழ்க்கையின்பம் மிகுதற் பொருட்டே இறைவனை வாழ்த்துவார்களாம். எல்லாவுயிர்களும் தம்மைப் பணிய, அதனால் தாம் உயர்வு அடைய வேண்டும். இப்பயன் கருதியே அவர்கள் இறைவனைப் பணிவார்களாம். போகத்தில் மயங்கி மேன்மேலும் அவ்வின்பத்தையே விழையும் அவர்கள் செய்யும் வழிபாடு எப்படி அன்பு கலந்த வழிபாடாக இருக்க முடியும்? பற்று நீங்காத அவர்களை விட்டு இறைவன் அகன்று நிற்பான்.

அடியவர் :

எல்லாப் பற்றுக்களையும் விட்டொழித்து இறைவனது அடி ஒன்றையே பற்றாகப் பற்றி நிற்பவர்கள் அடியவர்கள். இறைவனே தமது வாழ்வுக்கு முதல் என்று மதிப்பவர்கள்; உலகியலை மதியாதவர்கள். உலகியலை மதியாத அவர்களைப் பார்த்து உலகவர் சிரிப்பர். அனுபவமிக்க வேண்டிய உலக போகத்தை வெறுத்து இப்படி இறைப் பித்துப் பிடித்துத் திரிகின்றனரே என்று எண்ணிச் சிரிப்பர். அடியவரோ உலகவரைப் பார்த்துச் சிரிப்பர். நிலைபேறு உடைய திருவருளின்பம் எங்கும் நிறைந்து நிற்கவும் அதனை உணராது, அழிந்து போகும் சிற்றின்பத்தை நாடித் திரிகின்றனரே என்று எண்ணிச் சிரிப்பர். அடியவர்கள் அனைத்தையும் திருவருட் செயலாக உணர்வர். எச் செயலு<ம் என்னதன்று, நின் செயலே எனவும், உனக்கு எப்படிக் கருத்தோ அப்படியே செய்தருள்வாய் எனவும் அருள் வழியில் நிற்பர். நண்ப! என்னுயிர் நாத! என் அன்பே! என்று அன்பால் அழுதரற்றி அறிவழிந்து நிற்பர். இப்படி அன்பால் அகங்குழைந்து தன் வசமிழந்து நிற்கும் அடியவரை இறைவன் தன்னுள் அடங்கியிருக்கச் செய்வான். அவரை விட்டு என்றும் அகலாதிருப்பான்.

விளங்கி நிற்றலும் மறைந்து நிற்றலும் :

இறைவன் எல்லாவிடத்திலும் நீங்காது இருப்பவன் ஆயிற்றே, அவன் எப்படிச் சிலரை விட்டு அகன்று நிற்க முடியும்? என்று கேட்கலாம். அகன்று நிற்பான் என்பதற்கு இடம் பெயர்ந்து நீங்குவான் என்பது கருத்தன்று. அவ்விடத்தில் இருந்தும் புலப்படாமல் இருப்பான் என்பதே கருத்தாகும். அவ்வாறே, இறைவன் சேய்மையில் இருக்கிறான் என்பதற்குக் கருத்து அவன் புலப்படாமல் மறைந்திருக்கிறான் என்பதேயாகும். இறைவன் அருகில் இருக்கிறான் என்பதற்குக் கருத்து அவன் வெளிப்பட்டு நிற்கிறான் என்பதேயாகும். சேயாய் நணியானே என்பது திருவாசகம். இறைவன் அடியவரிடத்தில் தயிரில் நெய் போல விளங்கி நிற்பான். பாசப் பற்றுடைய வானவர் முதலியோரிடத்தில் அவ்வாறு விளங்குதல் இன்றிப் பாலில் நெய் போல மறைந்து நிற்பான். இக் கருத்தைத் திருமுறை யாசிரியர்கள் யாண்டும் எடுத்தோதியுள்ளனர். அவற்றின் பிழிவாகவே இச் செய்யுளைச் செய்துள்ளார் ஆசிரியர் உமாபதி சிவம் என்று கூறலாம்.

8. கலந்து நிற்பினும் வேறாய் நிற்பவன்

எங்கும் எவையும் எரியுறுநீர் போல்ஏகம்
தங்குமவன் தானே தனி.

பொருள் : காய்ச்சிய நீரில் கலந்து நிற்கும் வெப்பம் போல இறைவன் எல்லா வுலகங்களிலும் எல்லா வுயிர்களிலும் ஒன்றாய்க் கலந்து நிற்கிறான். அதே நேரத்தில் அவன் அவற்றிற்கு வேறாய்த் தனித்தும் நிற்கிறான்.

சொற்பொருள் :

அவன்    - அவ்விறைவன்
எங்கும்    - எல்லா இடங்களிலும்
எவையும்    - அவ்விடங்களில் உள்ள சித்தும் சடமும் ஆகிய எல்லாப் பொருள்களிலும்
நீர் உறு எரிபோல் - காய்ச்சிய நீரில் பொருந்திய வெப்பம் போல்
ஏகம் தங்கும்    - ஒன்றாய்க் கலந்து நிற்பான்
தான்தனி    - ஆயினும் அவன் பொருள் தன்மையால் வேறாகியே நிற்பான்.

விளக்கம் :

எரியுறு நீர் :

நீர் வேறு, வெப்பம் வேறு. வேறாகிய இவ்விரண்டும் சேர்ந்து நிற்கின்றன. வெப்பமானது நீரில் பொருந்தி அதனோடு ஒன்றாய்க் கலந்து நிற்கிறது. பார்ப்பதற்கு நீர் ஒன்றே உள்ளது என்று சொல்<லும்படியான நிலையே அங்கே உள்ளது. ஆனால், நீரைத் தொட்டால் அது சுடுகிறது. ஆதலால் வெப்பம் நீருக்கு வேறாய் அங்கே அறியப்படுகிறது. எனவே வெப்பம் நீரோடு ஒன்றாய் நின்றாலும் அதன் சுடும் தன்மை தனியே புலப்படுவதால் அது நீருக்கு வேறாகியே நிற்கிறது என்பது தெளிவாகும். இனி, இவ்வுவமையைப் பொருளோடு பொருத்திக் காண்போம். இறைவன் உலகும் உயிரும் ஆகிய எல்லாவற்றோடும் ஒன்றாய்க் கலந்து நிற்கிறான். <உலகப் பொருள்களைப் பார்க்கும் பொழுது அதனோடு கலந்திருக்கும் இறைவனது இருப்புச் சிறிதும் புலப்படுவதில்லை. அவ்வாறே <உயிர்களாகிய நம்மிடத்தில் இறைவன் பொருந்தியிருக்கிறான் என்பதும் நமக்குச் சிறிதும் புலப்படுவதில்லை. இங்ஙனம் தனது இருப்பைச் சிறிதும் காட்டாமல் உலகமே உள்ளது என்று சொல்லும் படியாகவும், உயிர் ஒன்றே உள்ளது என்று சொல்லும்படியாகவும் உலகோடும் உயிரோடும் ஒற்றுமைப்பட்டு நிற்கிறான் இறைவன். அப்படி ஒன்றுபட்டு நின்றாலும் இறைவன் தனது தன்மையால் அவற்றிற்கு வேறாகியே நிற்பான். காய்ச்சிய நீரில் வெப்பம் ஒன்றாயும் வேறாயும் நிற்றலைப் போன்றது இது.

தானே தனி :

இறைவன் சடமும் சித்தும் ஆகிய உலகு உயிர்களோடு கலந்து ஒன்றாய் நிற்பான் எனில், அவ்வுலகுயிர்கள் எய்தும் மாற்றங்களை அவனும் அடைவானோ? என்ற வினா எழுகிறது. அவன் உலகோடும் உயிர்களோடும் ஒன்றாய் நின்றாலும், நீரில் கலந்து நிற்கின்ற வெப்பம் போலப் பொருள் தன்மையால் அவற்றின் வேறாயும் நிற்பான் ஆதலாலே அவற்றினது மாற்றங்கள் அவனைப் பற்றுவதில்லை என்பதே அதற்கு விடையாகும். வெந்நீரில் உண்கலம் முதலியவற்றைக் கழுவுவர். கழுவப்படுகிற பொருளின் மாசுகள் அந்த நீரைப் பற்றுமே தவிர அந்த நீரில் உள்ள வெப்பத்தைப் பற்றுவதில்லை. அந்த நீர்தான் மாசு அடையுமே தவிர அதிலுள்ள வெப்பம் மாசு அடைவதில்லை. அந்த வெப்பம் தன் தன்மையில் மாறாமல் இருக்கிறது. அதைப்போல இறைவன் உலகோடு பொருந்தி நின்றாலும் உலகக் குற்றங்களால் பற்றப்படாது, தன் இயல்பில் திரியாது, என்றும் ஒரு தன்மையனாய் நிற்கின்றான். இதுபற்றியே அவன் செம்பொருள் எனப்படுகின்றான்.

இறைவன் இயல்பாகவே பாசத்திற்படாத தூய தன்மையன் என்பதையும், உலகப் பொருளில் தோய்வின்றி நிற்பவன் என்பதையும் வலியுறுத்தவே தானேதனி என்றார் ஆசிரியர். இக்கருத்தமைந்த திருவாசகத் தொடர் ஒன்றை இங்கே மேற்கோள் காட்டி விளக்குவது பொருத்தமாயிருக்கும். திருவம்மானையில் சேர்ந்தறியாக் கையானை என்று வருகிறது. சிவபெருமான் வேறொருவரைத் தொழுதறியாத கைகளை உடையவன் என்று அதற்குப் பொருள் உரைப்பர் சிலர். அவ்வுரை பொருந்தாது. அது சிறந்த பொருளும் ஆகாது. சேர்ந்தறியாக் கையானை என்பதன் பின் எங்கும் செறிந்தானை என்பது உள்ளது. இவ்விரு தொடர்களையும் இணைத்து நோக்கிப் பின் வருமாறு பொருள் காணுதல் வேண்டும். இறைவன் எல்லாப் பொருளிலும் கலந்து எங்கும் செறிந்திருக்கிறான். ஆயினும் அப் பொருள்களின் தன்மையை அவன் சாரமாட்டான். எதிலும் தோய்வின்றி நிற்பான் அவன். அதுபற்றியே, பிற பொருள்களின் தன்மை சேர்ந்தறியாத கையான் என்றார் மணிவாசகர். கை என்பதற்கு ஒழுக்கம் என்பது பொருள். இப்படி நுட்பமாய்ப் பொருள் கண்டு கூறுவார்மகாவித்துவான் அருணை வடிவேலு முதலியார் அவர்கள்.

9. சார்ந்தவர்க்கு இன்பம் தருபவன்

நலமிலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன்
சலமிலன் பேர் சங்கரன்.

பொருள் : இறைவன் தன்னை அடைந்தவர்க்கு இன்பத்தைத் தருபவன்; தன்னை அடையாதவர்க்கு இன்பத்தைத் தராதவன். இவ்வாறு ஒரு சாரார்க்கு மட்டும் நன்மை செய்வதனால் அவன் ஓர வஞ்சனை உடையவன் போ<லும் என்று எண்ணவேண்டா. அவன் என்றும் ஒருபால் கோடாதவன்; நடுவு நிலைமையன். எல்லாவுயிர்களுக்கும் தனது பேரின்பத்தை வழங்க வேண்டும் என்பதே அவனது திருக்குறிப்பாகும். அதுபற்றியே அவனுக்குச் சங்கரன் என்ற பெயர் வழங்குகிறது. சங்கரன் என்பதற்கு, எல்லா வுயிர்களுக்கும் இன்பத்தைச் செய்பவன் என்பது பொருள். சம்-இன்பம்; கரன்-செய்பவன்.

சொற்பொருள் :

நண்ணார்க்கு    - தன்னைச் சாராதவர்க்கு
நலம் இலன்    - இன்பம் செய்யான்.
நண்ணினர்க்கு    - தன்னைச் சார்ந்தவர்க்கு
நல்லன்    - இன்பத்தைச் செய்வான் (இவ்வாறு ஒரு சாரார்க்கு மட்டும் நன்மை செய்பவன் நடுவு நிலைமையன் ஆவனோ? எனின், அவ்வாறு எண்ண வேண்டா.)
சலம் இலன்    - அவன் ஓர வஞ்சனை இல்லாதவன்.
பேர் சங்கரன்    - எல்லாவுயிர்களுக்கும் தனது பேரின்பத்தை வழங்குபவன் என்ற பொருளில் உண்மை நூல்கள் அவனைச் சங்கரன் என்று குறிப்பிடுகின்றன.

விளக்கம் :

அவரவர் படுகின்ற துன்பங்களுக்குக் காரணம் அவரவர் செய்து கொண்ட வினைகளே யாகும். ஆயின் அதை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை. அடுத்தடுத்துத் துன்பம் வருகிறபோது அவர்கள் ஆண்டவனைப் பழிக்கிறார்கள். இறைவன் நான் படும் துன்பத்தைக் கண்டும் வாளா இருக்கிறானே. அவனுக்கு இரக்கமில்லையா? என்கிறார்கள். இவர்களே நல்வினைப் பயனால் தமக்கு இன்பம் வரும்போது அவற்றை நல்லன என்று இயைந்து அனுபவிக்கிறார்கள். அப்போது அவர்கள் இறைவனை நினைப்பதில்லை; இறைவனுக்கு நன்றி சொல்வதில்லை. ஆனால் தீவினைப் பயனால் துன்பம் வரும் போது மட்டும் அவர்கள் இறைவனை நினைக்கிறார்கள். துன்பத்தை நீக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது என்ன முறைமை? நல்வினையும் தீவினையும் ஆகிய இரண்டும் அவர்கள் முன் செய்து கொண்டவை தாமே. அவற்றுள் ஒன்றை மட்டும் விரும்பி ஏற்பதும், மற்றொன்றுக்கு வருந்துவதும் பேதைமையன்றோ?

மருத்துவ நூல்கள் உடல்நலம் பேணும் வழிகளைக் கூறுகின்றன. இன்ன காரணங்களால் இன்ன நோய்கள் வரலாம்; அக்காரணங்களைத் தவிர்த்தால் அந்நோய்கள் இன்றி இனிது வாழலாம் என்று அறிவுறுத்துகின்றன. ஆனால், பலர் அம் மருத்துவக் குறிப்புகளைப் பின்பற்றுவதில்லை. அவற்றுக்கு மாறான வழியில் நடக்கிறார்கள். அதனால் நோய்களை வரவழைத்துக் கொள்கிறார்கள். இளமை மிடுக்கில் அந்த நோய்கள் மடங்கியிருக்கும். அப்பொழுது அந்நோய்கள் பெரிதாகத் தோன்றுவதில்லை. உடம்பில் வலிமை குறைகிற முதுமையில் அந்நோய்கள் பல்கிப் பெருகி வந்து தாக்கி வருத்தும். அப்பொழுது அவர்கள் வேறு யாரையேனும் நொந்து கொள்ள முடியுமா? நோய்க்கு யார் காரணம்? அவர்கள் தானே காரணம். மருத்துவ நூல்கள் சொன்ன நல்வழியில் நில்லாது மாறி நடந்ததனால் தமக்குத் தாமே நோயைத் தேடிக் கொண்டார்கள். அஃது அவர்களுடைய குற்றம்தானே.

அதுபோல மெய்ந் நூல்கள் வினையிலிருந்து விடுபடும் வழிகளைக் கூறுகின்றன. யான் எனது என்னும் பற்றுக்களே வினைக்குக் காரணம். அப்பற்றுக்களை நீக்கினால் வினைகள் இல்லையாகும் என்று கூறுகின்றன. அப்பற்றுக்களை எப்படி நீக்கிக் கொள்வது? இறைவனிடத்து வைக்கும் பற்றினாலேயே அப்பற்றுக்களை நீக்க முடியும் என்று மெய்ந்நூல்கள் கூறுகின்றன. இறையன்பு உடையவர்க்கு அது வளர வளர, யான் எனது என்னும் பற்று மெல்ல மெல்ல நீங்கும். அவர்கள் அப்பற்றுக்களை முற்றிலும் விடுத்து எல்லாம் அவன் செயல் என இறைவன் வழியில்நிற்பர். அவர்களே பற்றின்றி இருப்பதனால் இறைவனைப் போல அவர்களும் வினையின் நீங்கியவரேயாவர். இறைவனை மனம் மொழி மெய் என்னும் மூன்றினாலும் பற்றினால் தீவினை பற்றாது ஒழியும் என்பதை,

முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே

என்றாற் போல வரும் தேவாரத் திருமொழிகள் வலியுறுத்துகின்றன. இவ்வாறு உண்மை நூல்கள் வினை நீங்கும் வழியை உரைக்கின்றன. ஆயினும் மக்கள் அவ்வழியில் நடப்பதில்லை. உலகப் பற்றாகிய சேற்றில் அழுந்திக் கிடக்கின்றனர். பற்றுக்களை விடாதபோது வினைகள் வந்து வருத்தத் தான் செய்யும். அவ்வருத்தம் அவர்கள் தேடிக்கொண்டதுதானே. அதற்கு இறைவனை நோவது ஏன்? குளிர் காலத்தையும் வாடையும் பனியும் உடலை வாட்டுகிறது. அருகிலேயே குளிர் காய்வதற்கேற்ற தீ கொழுந்து விட்டு எரிகிறது. அத்தீயை அணுகி அமர்ந்தால் பனியும் நடுக்கமும் பறந்தோடுமே. இன்பக் களிப்பை எய்தலாமே. அவ்வாறு செய்யாமல் தீயை விட்டு விலகி நின்றால் வாடையும் பனியும் வருத்தத்தானே செய்யும். அவ்வருத்தத்திற்கு எது காரணம்? தீ காரணமா? தான் அத்தீயை விட்டு விலகி நின்றது காரணமா? தீயின் மேல் யாரும் குற்றம் சொல்லார். அது தன்னை யார் அணுகினாலும் அவரது குளிர் நடுக்கத்தைப் போக்கி அவர்க்கு நலம் செய்வது. அதனை அணுகி நில்லாமல் விலகி நின்றதன் செயலேதான் படும் துன்பத்திற்குக் காரணமாகிறது.

வாடையும் பனியும் போல் உள்ளவை உலகப் பற்றுக்கள். குளிர் காயும் நெருப்புப் போல் இருப்பவன் இறைவன். பற்றுக்களாகிய பனியிலும் குளிரிலும் அகப்பட்டுத் துன்புறுகின்றன உயிர்கள். அவை படும் துன்பத்திற்கு இறைவன் மேல் குற்றம் சொல்லாமா? குளிர் காயும் நெருப்பைப் போலத் தன்னை யார் அணுகினாலும் அவரது பிறவித் துன்பத்தைப் போக்கிப் பேரின்பத்தைத் தர அவன் காத்திருக்கிறான். அவனை அணுகி நில்லாமல் உயிர்கள் விலகி நிற்பதே அவைபடும் துன்பத்திற்குக் காரணம் ஆகும்.

இறைவன் உலகப் பற்றை நீக்கித் தன்னையே புகலாக அடைந்த அன்பர்களை ஏற்று கொண்டு அவர்க்கு வரும் வினைத் துன்பத்தைப் போக்கிப் பேரின்பத்தை வழங்குவான். பற்றுநீங்காத ஏனையோரை வினை வழியே செலுத்திப் பிறவித் துன்பத்திற் படுமாறு செய்வான். அவரை வினை வழியே செலுத்துவதும் அவரைப் பக்குவப்படுத்தி ஆட்கொள்ளும் பொருட்டேயாகும். இக் கருத்துப் படவே நண்ணினர்க்கு நல்லன் நண்ணார்க்கு நலமிலன் என்றார் ஆசிரியர். இவ்வாறு தன்னைச் சார்ந்தார், சாராதார் ஆகிய இருவரிடத்தும் இறைவன் செய்யும் செயல்கள் வெவ்வேறாய் அமைந்தாலும் அவை யாவும் கருணைச் செயல்கள் என்றே கூறப்பெறும். அன்பரிடத்துச் செய்வது அறக்கருணை எனப்படும். அல்லாதாரிடத்துச் செய்வது மறக்கருணை எனப்படும். அவன் எல்லாவுயிர்களிடத்திலும் உடனாக இருந்து அவ்வவ்வுயிர்களின் நிலைகளுக்கு ஏற்ப அவற்றை நடத்துகிறான். அவனது செயல் யாவும் அருட்செயலே. இதனை உணர்ந்தால், அவன் சலம் (வஞ்சனை) இலன் என்பதும், நடுவு நிலைமையன் என்பதும், சங்கரன் என்ற பெயர் அவனுக்கு சாலப் பொருந்தும் என்பதும் நன்கு விளங்கும்.

10. பிறவிக்கு மருந்து ஆவான்

உன்னும் உளது ஐயம் இலது உணர்வாய் ஓவாது
மன்னு பவம் தீர்க்கும் மருந்து.

பொருள் : இடைவிடாது தொடர்ந்து பற்றி வருகின்ற பிறவியாகிய நோயைத் தீர்க்கும் மருந்து ஒன்று உள்ளது. அஃது உங்களிடமே உள்ளது. <உங்கள் அறிவினுள்ளே உள்ளது. அம் மருந்துதான் இறைவன். அவன் உளனா, இலனா என்று ஐயுற வேண்டுவதில்லை. அவனைப் புறத்தே தேடாமல், உமது அகத்தே நோக்கி உணர முற்படுங்கள்.

சொற்பொருள் :

ஓவாது    - ஒழியாமல்
மன்னுபவம்    - நிலைபெற்று நிற்கின்ற பிறவியாகிய நோயை
தீர்க்கும் மருந்து    - தீர்க்கின்ற மருந்து ஒன்று
உணர்வாய்    - உங்களது அறிவிற்கு அறிவாய்
உளது    - உங்களுடன் இருக்கின்றது.
ஐயம் இலது    - அதன் இருப்பில் நீங்கள் ஐயம் கொள்ள வேண்டா
உன்னும்    - அதனை உள்முகமாக நோக்கி உணரமுற்படுங்கள்.

விளக்கம் :

பிறவியாகிய நோய் : செய்யுளில் பவம் என்ற சொல் பிறவியைக் குறிக்கும். ஆசிரியர் பிறவியை நோய் என்று வெளிப்படையாகக் கூறவில்லை. ஆயினும் இறைவனை மருந்து என்று வெளிப்படக் கூறியிருப்பதனால் பிறவியை நோயாகக் கூறுவதே ஆசிரியருக்குக் கருத்து என்பது புலனாகும். உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, <உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது.

துன்பத்தையே விளைவித்தல் :

நோய் துன்பத்தையே விளைவிப்பது. ஆனால் பிறவி இடையிடையே இன்பத்தையும் விளைவிக்கிறதே. அப்படியிருக்க, அதனை நோய் என்று சொல்வது எப்படிப் பொருந்தும் என்று கேட்கலாம். பிறவியில் இடையிடையே இன்பம் உளது போலத் தோன்றினாலும் உண்மையில் விளைவது பெருந்துன்பமே யாகும். இவ்வுண்மையை ஓர் அரிய உவமையால் விளக்கியருளினார் திருநாவுக்கரசர். ஆமையைக் கொன்று உண்பவர் நெருப்பு மூட்டி அடுப்பில் உலைநீரை ஏற்றி அதில் ஆமையை இடுகின்றனர். நீர் சிறிது சிறிதாகச் சூடேறுகிறது. அந்த ஆமை தனக்கு வரப்போகும் அழிவை அறியாது தனக்கு நல்ல நீர் கிடைத்தது என்று எண்ணிக் களித்து அதில் மூழ்கித் திளைக்கிறதாம்! அந்த இன்பம் அதற்குத் துன்பமாய் முடியப் போகிறதே. உலகில் ஐம்புல நுகர்ச்சியால் வரும் இன்பம் இத்தகையதே யாகும். எனவே உலகில் சிறிது இன்பம் உளதாயினும் அது துன்பமாகவே முடிதல் கண்கூடு. இதனால் பிறவி துன்பத்தையே விளைவிக்கும் என்பதும், அது பற்றியே அது நோய் எனப்பட்டது என்பதும் தெளிவாகும்.

நன்மருந்து :

பிறவி நோய் என்பது அறிவிலார்க்குச் சிறிதும் புலனாகாது. ஆனால் அறிவுடையார்க்கு அது நன்கு விளங்கித் தோன்றும். ஆதலால் அவர் அந்நோயைத் தீர்க்கும் மருந்தை நாடி நிற்பர். பிறவி நோய்க்கு நன்மருந்தாக இருப்பவன் இறைவன். மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீரா நோய் தீர்த்தருள வல்லான் என்றருளினார் திருநாவுக்கரசர். உலகத்து மருந்துகள் வேறு வேறு இடங்களிற் கிடைப்பன. ஆகவே அவற்றைப் பெறுதற்கு அலைதல் வேண்டும். சில சமயங்களில் அவை கிடைக்காமலும் போகலாம். ஆனால், இறைவனாகிய மருந்து அத்தகையதன்று. அது நோயுடையார்க்கு வேறாய் இல்லாது அவரோடு ஒன்றாய் இருப்பது என்பார் உணர்வாய் உளது என்றார். மேலும் உலகத்து மருந்துகள் உட<லுக்கு <<உரியவை. ஆதலால் அவை உண்ணுதற்கு உரியவாகின்றன. இறைவனாகிய மருந்தோ உயிருக்கு உரியது. ஆதலால் அஃது எண்ணுதற்கு உரியதாகின்றது. அதுபற்றியே உன்னும் (நினையுங்கள்) என்று அறிவுறுத்தினார் ஆசிரியர்.

ஐயம் இலது :

இறைவன் நம் அறிவில் உள்ளவனாயினும் அறிவிலே உள்ள மயக்கம் காரணமாக நாம் அவனை உணராமல் இருக்கிறோம். அவனது இருப்பைக் குறித்தே ஐயப்படுகிறோம். திருமூலர் பின்வருமாறு சொல்லுகிறார். சிவபெருமான் எல்லாம் வல்லவன்; கடல் நீரைக் கரையின்றியே அடங்கி நிற்கும்படி செய்தவன். இவ்வுலகை இயக்கி வரும் அவனை இல்லை எனக் கூறிப் பிணங்குதல் வேண்டா. அவன் ஏனைய கடவுளர்க்கெல்லாம் முதல்வனாய் நின்று எப்பொழுதும் உயிர்கட்கு நலம் புரிந்து வருகின்றான் என்கிறார்.

இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின்றானே

என்பது திருமூலர் திருமொழி. இம்முறையிலேயே ஆசிரியர் உமாபதி சிவமும் கூறுகிறார். இறைவனது இருப்பில் நீங்கள் ஐயங் கொள்ள வேண்டா. அவன் பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்தாக விளங்குகிறான். உங்கள் அறிவிலுள்ள மயக்கத்தை விடுத்து அவனை உணர முயலுங்கள் என்று அறிவுறுத்துகிறார்.

இரண்டாம் அதிகாரம்

உயிரவை நிலை

உயிரவை என்பது ஞானசம்பந்தர் பாசுரத்தில் இடம் பெற்ற சொல். தேவர் முதலாகச் சொல்லப்பட்ட உயிர்களின் தொகுதியைத் திவ மலி தரு சுரர் முதலியர் திகழ் தரு முயிரவை (1:21:1) என அவர் குறித்தருள்கின்றார். அச் சொல்லையே உமாபதி சிவம் மேற்கொண்டு உயிரவை நிலை என இவ்வதிகாரத்திற்குத் தலைப்பினைத் தந்தார் என்று கருதலாம். ஒரே இறைவன் என்பது போன்று ஒரே உயிர் என்று சைவ சித்தாந்தம் கூறுவதில்லை. ஒவ்வோர் உடம்பிலும் நின்று இன்ப துன்ப அனுபவங்களை அடையும் உயிர் வேறு வேறே யாகும். ஆதலால் உயிர் ஒன்றல்ல, பல என அறியலாம். உயிர்கள் பல என்பதற்கு, அவை எண்ணற்றவை என்பதே பொருளாகும். உயிர்களின் தொகையைக் கருதும்போது, பிறப்பெடுத்து உழல்கின்ற உயிர்களை மட்டுமல்லாது முன்பே முத்தி பெற்று விட்ட உயிர்களையும் கருத்திற் கொள்ள வேண்டும். முத்தி பெற்றுவிட்டாலும் அவ்வுயிர்கள் இல்லாமற் போய்விடவில்லை. அவை முத்தியின்பத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றன. எல்லா வுயிர்களும் என்றும் உள்ளவையே. சிவப்பிரகாசத்தில் உயிரிலக்கணத்தைக் கூற வந்த இவ்வாசிரியர் எண்ணரிதாய் என்று கூறியதோடு அமையாமல், அடுத்து நித்தமாய் என்றும் கூறியிருப்பதைக் காணலாம்.

எல்லா வுயிர்களையும் சேர்த்து எண்ணி அவற்றின் தொகையைக் கணக்கெடுத்துக் கூற முடியாது. உலகில் வந்து சென்ற நாட்களும் இனிமேல் வரப்போகும் நாட்களும் ஆகியவற்றின் தொகைபோல உயிர்களின் தொகையும் எண்ணிலடங்கா. எல்லாவுயிர்களும் ஆணவம் என்னும் மலம் (மாசு) உடையவை. அம் மலம் உயிர்களிடத்தில் வன்மை, இடைமை, மென்மை என்ற வகையில் பொருந்தியிருக்கும். இது பற்றி உயிர்கள் மூவகைப்படுவனவாகும். ஆணவம் வன்மையாய்ப் பற்றிய உயிர்களே மாயை (பிரகிருதி)யின் தொடர்பைப் பெறும். மாயை உடம்பாகவும் உலகமாகவும் பரிணமித்து அவ்வுயிர்களைப் பெரிதும் மயக்கும். அவ்வுயிர்கள் தமக்குத் துணையாக உள்ள இறைவனை அறியாது உலக வாழ்வில் மயங்கி நிற்கும். அவ்வுயிர்களே நாம். உயிர்களுக்கென்று எச்சுதந்திரமும் இல்லை. இறைவனது ஆணை செலுத்திய வழியே அவை செல்வனவாகும். அவைகள் தம் வயம் உடையன வல்ல என்பதற்குச் சான்று தேடி அலைய வேண்டா. அன்றாடம் காணும் கனவே அதற்குச் சான்று. ஏழை ஒருவன் கனவில் தன்னைப் பெருஞ் செல்வனாகக் கண்டு மகிழ்கிறான். செல்வன் ஒருவன் கனவில் தான் எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவில் நிற்பதாகக் கண்டு பதறிப் போய் கண் விழிக்கிறான். இப்படிக் கனவில் அறிவு மயங்கி நிற்கிற உயிர்களுக்குத் தன்வயம் என்பது ஏது?

கனவு நிலையிலேதான் இப்படி என்றில்லை. நனவு நிலையிலேயும் உயிருக்குத் தன்வயம் இல்லை. விழிப்பு நிலையில் ஐம்பொறிகளின் வயப்பட்டு நிற்கின்றது. ஐம்பொறிகள் அறிவிக்கவே அறிகின்றது. அவற்றின் வழியிலே செல்லுகிற உயிரறிவு எப்படிச் சுதந்திர அறிவாகும்? சுதந்திர அறிவுடையது தானே சித்து என்ற பெயர் பெறுதற்குரியது. அத்தகைய அறிவில்லாத உயிரைப் போய் சித்து என்று அழைப்பது நல்ல வேடிக்கை! தன்வயமில்லாத உயிர் எந்தப் பொருளைச் சேர்ந்தாலும் அந்தப் பொருளின் தன்மையைப் பெறும். இஃது உயிர்க்குரிய முதன்மையான இயல்பாகும். இங்ஙனம் சார்ந்தவற்றின் தன்மையை அடைகிற பொருள்கள் உலகில் பல உண்டு. கண், படிகம், ஆகாயம் முதலியவை இப்படிப்பட்டவை. அவை இருளில் இருளாயும், ஒளி வந்த காலத்தில் ஒளி பெற்றும் விளங்குவதைக் காணலாம். அது போல உயிரும் இருளாகிய ஆணவத்தைச் சார்ந்து அறியாமையே வடிவாய் நிற்கும். ஒளியாகிய திருவருளைச் சாருங் காலத்தில் அதன் அறிவு முழுதும் விளங்கி நிற்கும்.

உயிருக்குச் சதசத்து என்ற பெயர் உண்டு. சத்து என்பது என்றும் மாறுதல் அடையாத பொருள். அசத்து என்பது தோன்றுதல், அழிதல் முதலிய மாறுதல்களுக்கு உட்படுவது. இறைவன் ஒருவனே சத்துப் பொருள். உலகம் அசத்துப் பொருள். உயிர் இவ்விரண்டையும் சார்ந்து நிற்கும் பொருள். கூகையின் கண்ணிற்குப் பகலிலும் சூரிய வொளி புலப்படாது. அதுபோல, அநாதியில் உயிர்கள் இறைவனது ஞானமாகிய திருவருள் ஒளியில் இருந்தும் அத்திருவருளை உணர மாட்டாமல் ஆணவமாகிய இருளில் அழுந்தி நின்றன. அன்று தொட்டு இன்று வரையில் அகலாத ஆணவ இருளே உயிர்கள் படுந்துன்பங்களுக் கெல்லாம் மூல காரணம். திருவருள் ஒளியைப் பெற்று மல இருளிலிருந்து நீங்கும் போதுதான் உயிர்கள் பிறவித் துன்பம் நீங்கிப் பேரின்பத்தை அடையும். இனி, இக் கருத்துக்களை விளக்கமாகக் காண்போம்.

11. உயிர்களின் தொகை

பிறந்தநாள் மேலும் பிறக்கும்நாள் போலும்
துறந்தோர் துறப்போர் தொகை.

பொருள் : இதுவரையில் பற்று நீங்கி முத்தி பெற்றவர்கள் எத்தனை பேர் என்பதை எண்ணிச் சொல்லுதல் முடியாது. இது, உலகம் தோன்றிய காலந்தொட்டு இது வரையில் வந்துபோன நாட்களை எண்ணிச் சொல்வது போல முடியாத செயல். அவ்வாறே, இனிமேல் பற்று நீங்கி முத்தி பெற இருப்பவர்களின் எண்ணிக்கையையும் சொல்லுதல் முடியாது. இதுவும், உலகம் முடியும் வரை இனி மேல் வர இருக்கின்ற நாட்களை எண்ணி அறிய முயல்வது போல முடியாத செயலேயாகும்.

சொற்பொருள் :

துறந்தார் தொகை    - பற்றினை நீக்கி வீடு பெற்றவர்களது எண்ணிக்கை
பிறந்த நாள் போலும்    - அவர்கள் அதற்கு முன்னே பிறந்து, பிறந்து உலக வாழ்வில் உழன்ற நாட்களின் எண்ணிக்கை போன்றதாகும்.
துறப்போர் தொகை    - இனிமேல் வீடு பெற இருப்பவர்களது எண்ணிக்கையும்
மேலும் பிறக்கும் நாள் போலும்    - அவர் வீடு பெறுங்காறும் மேலும் மேலும் பிறந்து உழல வேண்டிய நாட்களின் எண்ணிக்கை போன்றதாகும். (அஃதாவது, எண்ணிக்கை சொல்ல இயலாது என்பது கருத்து.)

விளக்கம் :

உலகில் எண்ணற்ற உடம்புகள் காணப்படுகின்றன. புல் பூண்டுகள் பயிர்கள், மரம் செடி கொடிகள் ஆகிய உடம்புகளில் உள்ள உயிர்கள்தாம் எத்தனை! இவை தவிர நிலத்தில் ஊரும் உடம்புகள், நீரில் இயங்கும் உடம்புகள், பறவை விலங்கு மக்கள் உடம்புகள் எனப் பல்வேறு வகையாகக் காணப்படும் உடம்புகளில் வாழும் உயிர்கள் தாம் எத்தனை எத்தனை! அவற்றைக் கணக்கிட முடியாது என்பதனாலே உயிர்கள் எண்ணிறந்தன என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது.

முடியாமைக்கு உவமை :

ஆசிரியர் உமாபதிசிவம் இச்செய்யுளில் உயிர்கள் எண்ணிலடங்கா என்பதைச் சொல்ல வருகிறார். அதனை ஒரு புதிய முறையில் சொல்கிறார். நம் மனத்தில் நன்கு பதியும்படி சொல்கிறார். முத்தி பெற்றவர் எண்ணிக்கையும், இனிப் பெற இருப்பவர் எண்ணிக்கையும் கணக்கிட்டுச் சொல்லு<தல் முடியாது. அம்முடியாமைக்கு உவமை சொல்லு<கிறார். இதுவரை உலகில் வந்து சென்ற நாட்களையும், இனிமேல் வரப் போகின்ற நாட்களையும் யாரேனும் கணக்கிட்டுச் சொல்ல முடியுமா? இம் முடியாமை போன்றது அம் முடியாமை என்கிறார்.

மக்கள் மேல் வைத்துக் கூறுதல் :

இங்கே ஒன்றை அறிதல் வேண்டும். ஆசிரியர் மக்களாகிய உயிர்களை மட்டுமே எடுத்துக் கொண்டு துறந்தோர் துறப்போர் தொகை என்று கூறுகிறார். வீடு பேற்றிற்கு வழியாய் இருப்பது பெரும்பாலும் மக்கட் பிறப்பே யாதலின் இங்கு மக்கள் மேல் வைத்துக் கூறினார் எனலாம். ஆயினும் அனைத்து உயிர்களையும் ஒரு சேரத் தொகுத்து அவை எண்ணில என்று ஓதுதலே அவர்க்குக் கருத்தாகும். இறுதியில் நின்ற தொகை என்ற சொல்லை நான்கு இடங்களிற் கூட்டி, துறந்தோர் தொகை பிறந்த நாள் தொகை போலு<ம்; துறப்போர் தொகை மேலு<ம் பிறக்கு நாள் தொகை போலும் என அமைத்துக் கொள்ள வேண்டும்.

துறப்போர் என்று கூறிய காரணம் :

மக்களை இரு திறத்தினராகப் பாகுபாடு செய்கிறார் ஆசிரியர். ஒரு வகையினர் முன்னரே முத்தி பெற்று விட்டவர்கள். இன்னொரு வகையினர் முத்தி பெறாமல் எஞ்சியுள்ளவர்கள். முத்தி பெற்றவரைத் துறந்தோர் எனக் குறிப்பிட்டது போல் முத்தி பெறாமல் இருப்பவரைத் துறவாதோர் என்றுதானே குறிப்பிட வேண்டும். ஆயின் ஆசிரியர் அவ்வாறு குறிப்பிடவில்லை. எஞ்சியிருப்பவரைத் துறப்போர் என்கிறார். இவரெல்லாம் இனிமேல் முத்தி பெறுதற்கு உரியவர்கள் என்ற கருத்தில் அப்படிக் குறிப்பிடுகிறார். துறவாதோர் என்ற சொல்லைப் பயன்படுத்தினால், அவர்கள் முத்தி பெறுவார்களோ, மாட்டார்களோ என்ற ஐயம் எழுவதற்கு இடம் ஏற்படும் அல்லவா? சில உயிர்களுக்கு முத்தி என்பதே கிடையாது என்றும், மீளா இருளுலகிலேயே அவை கிடக்கும் என்றும் கூறுகிற சமயங்கள் உண்டு. சைவ சித்தாந்தம் அவ்வாறு கூறுவதில்லை. எல்லா வுயிர்களுக்கும் முத்தி உண்டு. இன்று இல்லையேனும் வருங் காலத்தில் என்றேனும் எஞ்சியுள்ள எல்லா வுயிர்களும் வீடு பெற்றே தீரும் என்று உறுதியாகக் கூறுகிறது சைவ சித்தாந்தம். அந்த உறுதி பற்றியே உமாபதிசிவம் எஞ்சியுள்ளவர்களும் இனிமேல் முத்தி பெறுவார்கள் என்ற நம்பிக்கையோடு அவர்களைத் துறப்போர் என்று குறிப்பிடுகிறார் என்று கொள்ளலாம்.

12. <உயிர்கள் மூவகையினர்

திரிமலத்தார்ஒன்று அதனில் சென்றார்கள் அன்றி
ஒரு மலத்தா ராயும் உளர்.

பொருள் : எல்லாவுயிர்களும் மூவகையுள் அடங்கி நிற்பர். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலமும் உடையவர் எனவும், அவற்றுள் மாயை நீங்கிய இரு மலம் உடையவர் எனவும், மாயையோடு கன்மமும் இன்றி ஒரு மலமே உடையவர் எனவும் இங்ஙனம் மூவகையினராவர்.

சொற்பொருள் :

திரிமலத்தார்    - மும்மலமும் உடையவர் எனவும்
அதனில் ஒன்று சென்றார்கள் - அம் மும்மலங்களுள் ஒன்று நீங்கி இரு மலம் உடையவர் எனவும்
அன்றி    - அவரேயன்றி
ஒரு மலத்தாராயும் எனவும் - ஒரு மலமே உடையவர் எனவும்
உளர்    - இங்ஙனம் அனைத்துயிரும் மூன்று வகையினராய் உள்ளனர்.

விளக்கம் : மும்மலமும் உடையவர் சகலர் எனவும், இருமலம் உடையவர் பிரளயாகலர் எனவும், ஒரு மலமே உடையவர் விஞ்ஞானகலர் எனவும் பெயர் பெறுவர். இம் மூவகை உயிர்களிடத்திலும் ஆணவ மலம் என்ற ஒன்று மட்டும் பொதுவாக உள்ளது என்பது விளங்கும்.

ஆணவப் பிணிப்பில் வேறுபாடு :

ஆணவ மலம் இயல்பிலே எல்லா வுயிர்களையும் பிணித்து நிற்பதாகும். ஆயினும் அப் பிணிப்பு ஒரே வகையாய் இல்லாது, உயிர்தோறும் வேறுவேறு வகையாகவே இருக்கும். அப்பிணிப்பு உயிர்களின் நிலைக்கேற்ப வன்மை, இடைமை, மென்மை என மூவகையாய் நிற்கும்.

சகலர் :

ஆணவ மலம் வன்மையாய்ப் பற்றிய உயிர்களுக்கு அம்மலத்திற்கு மாற்றுப் பொருளாக மாயை, கன்மம் என்னும் இரு மலங்களை இறைவன் சேர்ப்பிக்கின்றான். மாயை என்பது இங்கே அசுத்தமே வடிவாகிய பிரகிருதி மாயையைக் குறிக்கும். பிரகிருதி தனது முக்குணங்களால் உயிர்களுக்குப் பெருமயக்கத்தை விளைவிப்பதாகும். அது தனு, கரண, புவன, போகங்களாய் அமைந்து உயிர்களை மயக்குகிறது. உயிர்கள் உலக வாழ்வில் மயங்கி, ஆணவ மலத்தின் தூண்டுதலால் யான் எனது என்று பற்றுக் கொண்டு கன்மங்களைச் செய்கின்றன. இவ்வாறு ஆணவ பந்தம் வன்மையாய் உள்ள உயிர்களை ஏனைய மாயை, கன்மம் என்னும் இரு மலங்களும் வந்து பற்றும். மும்மலமும் உடைய இவர்கள் சகலர் எனப்படுகின்றனர். சகலர் என்ற சொல்லு<க்குக் கலையோடு கூடியவர் என்பது பொருள். கலை என்பது பிரகிருதி மாயையைக் குறிக்கும். எனவே, கலையாகிய பிரகிருதி மாயையோடு கூடியவர் சகலர் எனப் பெயர் பெற்றனர்.

பிரளயாகலர் :

இனி, ஆணவ மலம் வன்மையாய் நில்லாது இடைமையாய் நிற்கும் உயிர்களுக்கு மேற்கூறிய பிரகருதி மாயையின் தொடர்பு நீங்கும். ஆயின், கன்மம் எனப்படும் வினை உண்டு. அதனால் அவர்கள் ஆணவம், கன்மம் என்னும் இருமலம் உடையவராயினர். ஏதோ ஒரு பிரளயத்தில் (ஊழிக் காலத்தில்) இவர்கள் கலையாகிய பிரகிருதியினின்றும் நீங்கினர் ஆதலால் பிரளயாகலர் எனப்பட்டனர். அகலர் - கலையில்லாதவர்.

விஞ்ஞானகலர் :

இனி, ஆணவ பந்தம் மென்மையாய் உள்ள உயிர்களுக்குப் பிரகிருதியோடு கன்மமும் இல்லையாகும். அவர்கள் விஞ்ஞானகலர் எனப்படுவர். விஞ்ஞானமாவது சிறந்த ஞானம். அது சிவனால் உணர்த்தப்படுவது. எனவே அவர்கள் ஒரு காலத்தில் இறைவனால் உணர்த்தப்படும் சிறந்த ஞானத்தைப் பெற்றுப் பிரகிருதியோடு கன்மமும் நீங்கப் பெற்றமையால் இப்பெயர் பெற்றனர். இதுகாறும் கூறியவற்றால், பிரகிருதியோடு கூடியிருப்பவர் சகலர் என்பதும், பிரகிருதியினின்றும் நீங்கியவர் அகலர் என்பதும் விளங்கும்.

உயிர்கள், சகலர், அகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர்

மூன்று மாயைகள் :

சகலர் பிரகிருதி மாயையோடு தொடர்புடையவர்கள் ஆதலால் அவர்கள் வாழும் உலகங்கள் பிரகிருதி மாயையில் உள்ளன என்பது விளங்கும். அவர்களுக்கு அமைந்த உடம்புகளும், நுகர்ச்சிப் பொருள்களும் பிரகிருதியின் காரியங்களே யாகும். இனிப் பிரளயாகலரும் விஞ்ஞான கலரும் பிரகிருதியினின்றும் நீங்கியவராயிற்றே. அவர்கள் வாழ்வது எங்கே? அவர்களுக்கு உடம்பு முதலியவை எவ்வாறு அமையும்? என வினவலாம். உயிர்களுக்கு இடம் மாயை ஆகும். உயிர்கள் மூவகையினராய் அமைதல் போல மாயையும் மூன்றாக அமையும். அவை சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை இடமாக அமையும் என அறிந்தோம். பிரளயாகலருக்கு அசுத்த மாயை இடமாகும். எனவே அவர்கள் வாழும் உலகங்கள் அசுத்த மாயையில் உள்ளன என்பது விளங்கும். விஞ்ஞான கலருக்குச் சுத்த மாயை இடமாகும். எனவே அவர்கள் வாழும் உலகங்கள் சுத்த மாயையில் உள்ளனவாகும். பிரளயாகலர், விஞ்ஞானகலர் ஆகியோர்க்கு உடம்பும் நுகர்ச்சிப் பொருள்களும் ஆகியவை அவ்வம்மாயைகளால் ஆனவை என்பதும் அறியத்தகும்.

13. மாயையுள் அகப்பட்டு மயங்குவோர்

மூன்று திறத்து உள்ளாரும் மூலமலத்து உள்ளார்கள்
தோன்றலர் தொத்து உள்ளார் துணை.

பொருள் : மேற்கூறிய மூவகைப்பட்ட உயிர்களும் மூலமலமாகிய ஆணவத்தில் அகப்பட்டுள்ளார்கள். அவர்களுள் மாயைப் பிணிப்புள்ள சகலரே தமக்குத் துணையாய் உள்ள இறைவனை உணரப் பெறாது மயங்கி நிற்பர்.

சொற்பொருள் :

மூன்று திறத்து உள்ளாரும்    - மும்மலம் உடையவர், இருமலம் உடையவர், ஒரு மலம் உடையவர் என மேற்கூறிய மூன்று வகையாரும்
மூலமலத்து உள்ளார்கள்         - மூலமலம் எனப்படும் ஆணவமலப் பிணிப்பில் அகப்பட்டுள்ளார்கள். (அவருள்)
தொத்து உள்ளார்                  - மாயைப் பிணிப்பில் அகப்பட்டுள்ள சகலரே
துணை                    - தமக்குத் தோன்றாத் துணையாய் உள்ள இறைவனது இருப்பு
தோன்றலர்        - தோன்றப் பெறாது மயங்கி நிற்பர்.

விளக்கம் :

தொத்து என்பதற்குக் கொத்து என்பது பொருள். அஃதாவது தொகுதி. இங்கு எண்ணற்ற, பல்வேறு வகைப்பட்ட ஆற்றல்களின் தொகுதியாகிய மாயையைக் குறித்தது. ஆறு கோடி மாயா சத்திகள் என்பது திருவாசகம். தொத்து உள்ளார் துணை தோன்றலர் என அமைத்துக் கொள்ள வேண்டும்.

தொத்து <உள்ளார் :

பெரு மயக்கத்தைச் செய்வதாகிய பிரகிருதி மாயையே உலகமாய்ப் பரிணமித்துச் சகலராகிய உயிர்களோடு தொடர்பு கொண்டுள்ளது. உடம்பும், உடம்பிலுள்ள ஐம்பொறிகள் மனம் முதலிய கருவிகளும், உடம்போடு கூடிய உயிர்கள் போக்குவரவு புரிதற்குரிய நிலமும், நிலத்திற் காணப்படும் சிறியனவும் பெரியனவும் ஆகிய நுகர்ச்சிப் பொருள்களும் ஆகிய எல்லாம் அம் மாயையின் காரியங்களேயாகும். தனு, கரணம், புவனம், போகம் எனப்படும் இந்த ஆக்கப் பொருள்கள் யாவும் நிலையற்றவை; இடையில் நீங்கக் கூடியவை; உயிருக்கு வேறானவை. ஆனால் உயிர் அவற்றை அப்படி நினைக்கிறதா? அவை வேறு தான் வேறு என்று கருதாமல் அவற்றோடு உயிர் ஒற்றுமைப்பட்டிருக்கிறது. உடம்பும், ஐம்பொறிகளும், உலகியற் பொருள்களும் ஆகிய அவை அந்த அளவுக்கு உயிரை வசப்படுத்தியிருக்கின்றன.

ஐந்து இந்திரியங்களுக்கும் கட்டுப்பட்டே சகலராகிய உயிர்கள் வாழ்கின்றனர். எந்த அளவுக்கு அவை ஆட்டி வைக்கின்றனவோ அந்த அளவுக்கு அவர்கள் ஆடுகின்றனர். இந்த உலகத்தில் பிறந்து இந்த உடம்பையும் உடம்பில் ஐந்து இந்திரியங்களையும் பெற்றிருப்பது இந்த உலகிலுள்ள பொருள்களை ஆன மட்டும் அனுபவிப்பதற்கே என்று நினைக்கின்றனர். விட்டிற் பூச்சி எரிந்து கொண்டிருக்கிற விளக்கொளியைக் கண்ணால் பார்க்கிறது. கட் பொறிக்கு அடிமைப்பட்ட அது அதனைப் பழம் என்று நினைத்துக் கொண்டு அதிற் போய் விழுகிறது. அதன் வெப்பத்தால் தாக்கப்பட்டுப் பன்முறையும் மீள்கிறது. பின்னரும் விடாது சென்று முடிவில் அதிலேயே வீழ்ந்து இறக்கிறது. அதுபோல ஐம்பொறிகளுக்கு அடிமைப்பட்ட சகலர் உலக சுகத்தையே பெரிதாக எண்ணி மயங்கி அதனையே நாடுவர். அதனால் நோயும் துன்பமும் வந்து தாக்கினும் அதனை விடமாட்டாது அதிலேயே அழுந்திக் கிடப்பர். உடம்பும் ஐம்பொறிகளும் உயிரை வசப்படுத்தியிருப்பதைப் போல உலகப் பொருள்களும் உயிரறிவைப் பிணித்துள்ளன என்பதைச் சொல்ல வேண்டா. இருக்க ஓர் உறைவிடம் இருந்தால் போதும் என்று யாரும் நினைப்பதில்லை. எத்தனை இடங்கள் உண்டோ அத்தனையும் நமக்கே சொந்தமாக வேண்டும் என்றே எண்ணுகிறார்கள். வாழ்வதற்கு உரிய அளவுக்குச் செல்வம் இருந்தால் போதும் என்ற மனம் வருவதில்லை. உலகத்துச் செல்வமனைத்தும் தமக்கே உரிமையாக வேண்டும் என்றே ஆசைப்படுகிறார்கள். மண், பொன் முதலிய நிலையற்ற உலகப் பொருள்கள் உயிரறிவை அந்த அளவுக்கு மயக்கித் தம்மையே விடாது பற்றும் படியாகச் செய்கின்றன. இவ்வாறு மாயாகாரியங்களால் பிணிப்புண்டு மயங்கி நிற்கும் சகலரையே தொத்து உள்ளார் என்று குறிப்பிட்டார் ஆசிரியர்.

துணை தோன்றலர்

சகலரே மேற்கூறியவாறு உலக மயக்கத்தில் ஆழ்ந்து, யான் எனது என்று செருக்குவர்; தமக்கு மேல் ஒரு முதற்பொருள் உண்டு என்பதை அறியாது மயங்குவர். தேவர்கள், அசுரர்கள், மக்கள், அடிமுடி தேடிய பிரமன் மாயோன் ஆகிய இவர்கள் யாவரும் சகலர் என்ற பிரிவைச் சேர்ந்தவரே என்பது அறிதற்குரியது.

14. உயிருக்குத் தன்வயமான செயலில்லை

கண்டவற்றை நாளும் கனவில் கலங்கியிடும்
திண்திறலுக்கு என்னோசெயல்.

பொருள் : நாள்தோறும் நனவில் தெளிவாகக் கண்டு பழகிய பொருள்களைக் கனவில் மாறுபடக் கண்டு மயங்குகிற, இந்த அற்பமான உயிருக்கு என்ன சுதந்திரமான செயல் இருக்கிறது?

சொற்பொருள் :

நாளும் கண்டவற்றை    - பல நாளும் பார்த்துப் பழகித் தெளிவாக உணர்ந்த பொருள்களை
கனவில்        - கனவு காணும்போது அக்கனவில்
கலங்கியிடும்        - மாறுபடக் கண்டு மயங்குகின்ற
திண் திறலுக்கு        - பெருவலிமை உடையதாகிய உயிருக்கு
செயல் என்னோ        - சுதந்திரமான செயல் என்ன இருக்கிறது?

விளக்கம் :

உயிருக்குத் தன்வயம் எனப்படும் சுதந்திரம் இல்லை என்பதைக் கனவு நிகழ்ச்சியில் வைத்துக் காட்டுகிறார் ஆசிரியர். நனவில் தாம் தெளியக் கண்டறிந்த உண்மைகளுக்கு மாறானவற்றைக் கனவுலகில் காணும் போது சிலர் திடுக்கிட்டுக் கண் விழிப்பார்கள். சிலர் அச்சத்தினால் வாய் வெருவுவார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சியைக் கூறலாம். ஒருவர் பட்டப்பகலில் ஒரு குட்டித் தூக்கம் போடுகிறார். தூக்கத்தில் ஒரு துன்பக் கனவு காணுகிறார். தமது உயிர் நண்பரே கத்தியை ஏந்திக் கொண்டு தம்மைக் கொல்ல வருவது போலக் கனாக்கண்டு துணுக்குற்றுக் கண் விழிக்கிறார். அந்த நேரத்தில் அறைக் கதவைத் தட்டும் ஓசை கேட்கிறது. அவர் எழுந்து போய் திறக்கிறார். வாசலிலே கனவில் தம்மைக் கொல்ல வந்த அந்த நண்பரே கண்ணெதிரில் நிற்கிறார்! என்ன பகலிலேயே உறக்கமா? கனவு கண்டீரா? என்று கேட்கிறார். கண்ட கனவை எப்படிச் சொல்வார் அவரிடம்?

இந்தக் கனவு அவர் விருப்பப்படியா வந்தது? இல்லையே. இப்படிக் கனவில் நடக்கும் என்று அவர் சிறிதேனும் எதிர்பார்த்தாரா? இல்லையே. இஃது எதைக் காட்டுகிறது? கனவு என்பது அவர் வசத்தில் இல்லை. கனவு காண்பதற்குக் காரணமாகிய மனம் முதலிய கருவிகளும் அவர் வசத்தில் இல்லை என்பதைத்தானே காட்டுகிறது. முத்தொள்ளாயிரம் என்ற பழைய இலக்கியத்தில் ஒரு சுவையான நிகழ்ச்சி வருகிறது. மன்னன் வீதி வழியாகத் தேரில் சென்றான். வீரமும் அழகும் நிறைந்த அவனது தோற்றம் ஒரு நங்கையைக் கவர்ந்தது. அவளையறியாமலே அவளது உள்ளம் அவனிடத்தில் சென்றது. எப்பொழுதும் அவனைப் பற்றியே நினைவு. நிறைவேறக் கூடிய காதலா இது? வெளியே சொல்லக் கூடிய செய்தியா இது? ஒருநாள் இரவில் அவள் ஓர் இன்பக் கனவு கண்டாள். மன்னனாகிய காதலன் தன்னிடம் நெருங்கி வருவது போலவும் கொஞ்சிப் பேசுவது போலவும் கனவிற் கண்டாள். அந்த நிலையில் விழிப்பு வந்துவிட்டது. அந்தக் கனவை உண்மையென்றே நம்பிவிட்டாள் அந்தப் பேதை! அன்பிற்குரியவன் தன் அருகில் இருப்பதாக எண்ணிக் காந்தள் மலர் போன்ற கைகளால் படுக்கையைத் தடவிப் பார்க்கிறாளாம்!

இது போன்ற, நடப்பியல் உண்மைக்கு மாறான இன்பக் கனவுகளைக் கண்டு கொண்டிருக்கும் போது சிலர் இடையே விழித்துக் கொள்வர். இந்த விழிப்பு வந்து கெடுத்து விட்டதே என்று நொந்து கொள்வர். அந்தக் கனவு மேலும் தொடராதா என்ற ஆசையில் மீண்டும் உறங்க முயல்வர்! ஆனால், உறக்கமும் வராது. போன கனவு வராது. தாம் விரும்பியபோது விரும்பிய வண்ணமே கனவு காணும் திறன் உயிர்களுக்கு ஏது? உயிர் நனவிலே கண்டபடி கனவிலே காண இயலாது. வினை வசத்தால் வருந்த வேண்டியதாயின், உயிரோடிருப்பவரை இறந்தவர்போலக் கனவிற் காணும்; மகிழ வேண்டியதாயின், இறந்தவரை உயிரோடு இருப்பவர் போலக் கனவிற் காணும். இது போலப் பல வகையில் கனவில் மாறுபடக் கண்டு மயங்குவதால் உயிர் சுதந்திரமற்றது என்பது விளங்கும்.

திண் திறல் :

உயிர்கள் யாவும் இறைவனது ஆணைக்கு உட்பட்டு வினை வழியே செல்லுகின்றவை. ஆனால், இதை உணராமல் என் செயல், என் செயல் என்று எண்ணிச் செருக்குகின்றன. உயிருக்கென்று என்ன செயலிருக்கிறது? என்ன வலிமை இருக்கிறது? சிற்றறிவும் சிறு தொழிலும் உடைய இந்த அற்பமான உயிர் தன்னைப் பேராற்றல் உடையதாகக் கருதிக் கொள்கிறது.  நனவில் கண்ட பொருள்களைக் கனவில் மாறிக் காணுகிற இந்த உயிர் அடடா! திண்ணிய வலிமை உடையது தான்! என்று கேலி செய்வார் போலத் திண் திறல் என்று உயிரைக் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

15. உயிருக்குச் சித்து என்ற பெயர் பொருந்துமோ?

பொறியின்றி ஒன்றும் புணராத புந்திக்கு
அறிவுஎன்ற பேர்நன்று அற.

பொருள் : ஐம்பொறிகளின் துணையின்றி ஒன்றையும் அறியமாட்டாத உயிருக்குப் போய் சித்து என்று பெயர் வைத்திருக்கிறார்களே. அந்தப் பெயர் மிக நன்றாய் இருக்கிறது! என்று இகழ்ச்சிக் குறிப்போடு கூறுகிறார் ஆசிரியர்.

சொற்பொருள் :

பொறிஇன்றி - ஐம்பொறிகளின் உதவியில்லாமல்
ஒன்றும் புணராத - ஒன்றையும் அறியமாட்டாத
புந்திக்கு - உயிருக்கு
அறிவு என்ற பேர் - சித்து (அறிவுடையது) என்று ஆன்றோர் கூறி வைத்த பெயர்
அறநன்று - மிகமிக நன்றாய் இருக்கிறது!

விளக்கம் :

உலகை அறிந்து வரும் உயிரைச் சித்து என்ற சொல்லால் குறிப்பிடுவர். சித்து என்பதற்கு அறிவுடையது என்பது பொருள். ஆனால், சைவ சித்தாந்தம் சில தடைகளை எழுப்பும். உயிர் சித்துப் பொருளாயின் அதற்கு அறியாமை என்பது இருத்தல் கூடாது. ஆனால், உயிர் அறியாமையால் கவரப்பட்டு அறிவையிழந்து நிற்கிறதே. அதனைச் சித்து என்று எவ்வாறு கூறுவது? மேலும், உயிர் சித்துப் பொருள் எனின், தானே அறிதல் வேண்டும்; கருவி கரணங்களைத் துணைக் கொள்ளாமலே அறிதல் வேண்டும். கண்கள் இன்றியே காணுதல் வேண்டும். செவிகள் இன்றியே கேட்டல் வேண்டும். இவ்வாறு உயிர்தானே தனித்து நின்று அறிதல் வேண்டும். இங்ஙனம் தானே விளங்குகிற அறிவு சுயம்பிரகாசம் எனப்படும். இத்தகைய இயற்கையறிவு உயிருக்கு இல்லையே. ஐம்பொறிகள், மனம் முதலிய அகக் கருவிகள், நூல்கள், தாய் தந்தையர், ஆசிரியர் முதலியோரால் அல்லவா உயிருக்கு அறிவு நிகழ்கின்றது. அதனைச் சித்து என்று எவ்வாறு கூறுவது?

இன்னும், உயிர்சித்துப் பொருளாயின் அதன் அறிவு என்றும் ஒரு தன்மையாய் இருத்தல் வேண்டும். ஒரு நிலைப்பட்டதாய் இருத்தல் வேண்டும். ஆனால் உயிருக்கு உணர்வு மாறிமாறியல்லவா நிகழ்கிறது. ஐம்பொறிகள் செயற்படும் போது உணர்வு நிகழ்தலையும், பொறிகள் அடங்கியபோது உணர்வு ஒழிதலையும் அனுபவமாகக் காணலாம். ஒரு நிலைப்படாமல் அலையும் ஐம்பொறிகளின் வயப்பட்டதாகிய உணர்வு எவ்வாறு ஒரு நிலைப்பட்டு நிற்கும்? ஐம்புலன்களாலும் தம் உணர்வு அலைக்கப்படுவதற்கு உவமையாக யானைப் போரிடை அகப்பட்ட சிறிய செடியைக் கூறினார் மாணிக்க வாசகர். மதம் பிடித்த யானைகள் ஒன்றோடொன்று தாக்குங் காலை அவற்றின் காலடியிற்பட்ட சிறு செடி மிதிபட்டுச் சிதைந்து அலைதல் போலப் புலன்களின் தாக்குதலால் அறிவு கலங்கி நிலைபேறின்றித் தவிக்கிறேன் என்கிறார். இங்ஙனம் ஒரு நிலைப்படாத உணர்வுடைய உயிரைச் சித்து என்று எவ்வாறு கூறுவது?

இக்கருத்துக்களையெல்லாம் உள்ளடக்கியே ஆசிரியர் இச்செய்யுளைச் செய்துள்ளார். தானே அறிய மாட்டாமல் ஐம்பொறிகளின் துணைக்கொண்டே அறிவதாய், அங்ஙனம் அறியும் போதும் ஒரு நிலைப்பட அறியாமல் மாறி வரும் உணர்வுடையதாய் உள்ள உயிருக்குச் சித்து என்ற பெயர் பொருந்தாது என்பது கருத்தாகும். உயிருக்குச் சித்து என்ற பெயர் பொருந்தாது எனில், அதனை அசித்து அல்லது சடம் என்று அழைக்கலாமா? என்ற வினா எழும். அதற்குரிய விடையை அடுத்த செய்யுளிற் காணலாம். முந்திய செய்யுளில் உயிர் கனவிலே திரிவு பட உணரும் என்பது கூறப்பட்டது. இச்செய்யுளில் நனவிலேயும் அது மற்றொரு பொருள் உணர்த்தவே உணரும் என்பது கூறப்பட்டது. இதனால் உயிருக்குத் தன்வயம் என்பது கனவு நிலையிலும் இல்லை, நனவு நிலையிலும் இல்லை என்பது வலியுறுத்தப்பட்டது.

16. உயிர் அறியுந்தன்மை உடையதே

ஒளியும்இருளும் உலகும் அலர்கண்
தெளிவு இல்லெனில் என் செய.

பொருள் : விழித்திருக்கின்ற கண்ணிடத்தில் காணும் தன்மை இல்லையாயின், ஒளியும், இருளும் உலகும் ஆகிய மூன்றும் இருந்தும் அக்கண்ணிற்கு என்ன பயன்? அவை யாதொரு பயனையும் செய்யா.

சொற்பொருள் :

அலர்கண் - விழித்திருக்கின்ற கண்ணிடத்தில்
தெளிவு - காணும் தன்மை
இல்எனில் - இல்லையென்றால்
ஒளியும் இருளும் உலகும் - ஒளியும், இருளும், உலகும் ஆகிய மூன்றும்
என் செய? - என்ன பயனைச் செய்ய இருக்கின்றன? (யாதொரு பயனையும் செய்யா.)

விளக்கம் :

கண்ணுக்குக் காணும் தன்மை இருப்பதனாலேயே இருள் அதனைத் தடைசெய்து மறைக்கிறது. விளக்கொளி அவ்விருளை நீக்கிக் காணும் தன்மையை விளங்கச் செய்கிறது. அவ்வாறு விளங்கிய கண்ணுக்கு உலகம் புலப்பட்டு நுகர்ச்சிப் பொருளாகிறது. கண்ணுக்குக் காணுந் தன்மை இல்லையெனில், இருள் அதனை மறைப்பதால் ஆவதென்ன? ஒளி அதற்குக் காட்டினாலு<ம் என்ன பயன் விளையப் போகிறது? உலகினா<லும் அதற்கு ஒரு பயனும் இல்லை. இதனால், கண்காணுந் தன்மை உடையது என்பது விளங்கும். இதுவரை கூறி வந்தது உவமையே. இவ்வுவமை மட்டுமே செய்யுளிற் கூறப்பட்டுள்ளது. இவ்வுவமையால் ஆசிரியர் உணர்த்த வரும் கருத்தை நாம் வருவித்துக் கொள்ள வேண்டும். அக்கருத்து வருமாறு: கண்போல இருப்பது உயிர். கண்ணுக்குக் காணுந் தன்மை உண்டு. அதுபோல உயிருக்கு அறியும் தன்மை உண்டு.

உயிர் அறிவுப் பொருளாக இருப்பதனாலேயே அதன் அறிவை ஆணவமாகிய அகவிருள் மறைத்து நிற்கிறது. ஐம்பொறிகள் அம்மறைப்பை நீக்கி அதன் அறிவை விளங்கச் செய்கின்றன. அவ்வாறு விளங்குகிற உயிரறிவுக்கு உலகம் நுகர்ச்சிப் பொருளாகின்றது. உயிருக்கு அறிவு இல்லையாயின், உயிர் சடமாயின், ஆணவ மலமறைப்பினால் அதற்கு ஆவதொன்று இல்லை. சடமாகிய அதற்கு ஐம்பொறிகள் உணர்த்தினாலும் அறிவு உண்டாகாது. ஆதலால் ஐம்பொறிகளாலும் அதற்கு ஆவதொன்றில்லை. உயிர் சடமாயின் உலகினாலும் அதற்கு ஒரு பயனும் இல்லை. அறிவுடைய பொருளே நன்மை தீமைகளை அடைய முடியும். உயிரானது ஆணவம், ஐம்பொறிகள், உலகு ஆகிய இவற்றால் நலம் தீங்குகளை அடைந்து வருதல் கண்கூடு. ஆதலால் உயிர் அறிவுடையதே என்பது விளங்கும். முந்திய செய்யுளில் உயிர்சித்து அன்று எனக் கூறினார். அப்படியென்றால் அதனை அசித்து (சடம்) எனக் கூறலாமா? என்பதற்கு விடையாக, இச்செய்யுளில் உயிர் அசித்தும் அன்று என வலியுறுத்தினார். எனவே, உயிர் சித்தா? அசித்தா? என வினவுவார்க்கு, இரண்டும் அல்ல என்பதே விடையாகின்றது.

சைவ சித்தாந்த மரபின்படி, குறைபாடு என்பதே இல்லாத அறிவை சித்து எனப்படும். அம் முறையில் இறைவன் ஒருவனே குறைபாடு ஒன்றும் இல்லாத பேரறிவினை உடையவன். ஆதலால் அவனே சித்து எனப்படுகிறான். ஒன்று ஒன்றாய் அறிதல், அவ்வாறு அறியும் போதும் தொடர்ச்சியாய் அறியாது விட்டுவிட்டு அறிதல், அறிந்ததனை மறத்தல், தானே அறியாது அறிவிக்க அறிதல் என்பன போன்ற குறைபாடுகளெல்லாம் உயிரறிவிற்கு உண்டு. அதுபற்றி உயிரைச் சித்து எனக் கூறுதல் பொருத்தமில்லை. இனி உயிரை அசித்து (சடம்) என்றலும் பொருந்தாது. அசித்தாயின் அதற்கு எக்காலத்திலும் அறிவுண்டாகாது. ஆனால், உயிர் ஐம்பொறி முதலிய கருவிகளோடு கூடி அறிவு விளங்கியும், உலகை நுகர்ந்தும் வருகிறது. ஆதலால் உயிர் அசித்துப் பொருளும் அன்று. <உயிர் சித்தும் அன்று, அசித்தும் அன்று எனில் அதனை வேறு எவ்வாறு கொள்வது எனில், அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாய் சிதசித்து என நிற்கும் எனக் கொள்ளல் வேண்டும். உயிர் சிதசித்து என்பதற்கு, சித்தும் அன்றாய் அசித்தும் அன்றாய், சித்தோடு கூடிச் சித்தாயும் அசித்தோடு கூடி அசித்தாயும் நிற்பது என்பது பொருளாகும். கட்டு நிலையில் உயிர் அசித்தாகிய ஆணவம் முதலிய பாசங்களோடு கூடி அறியாமையுடையதாய் அசித்தாய் நிற்கிறது. முத்தி நிலையில் அவ்வறியாமையின் நீங்கிச் சித்தாகிய சிவத்தோடு கூடி ஒரு நிலைப்பட்ட அறிவுடையதாய் சித்தாயே நிற்கும். மேற்கூறிய விளக்கத்தால், இறைவன் சித்து; பாசம் அசித்து, உயிர் அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட சிதசித்து என்பது தெளிவாகும்.

17. உயிர் சதசத்தாய் நிற்பது

சத்து அசத்தைச் சாராது; அசத்து அறியாது; அங்கண்இவை
உய்த்தல் சதசத்தாம் உயிர்.

பொருள் : சத்தாகிய முதற்பொருள் அசத்தாகிய உலகத்தை அறிந்து அனுபவியாது. அசத்தாகிய உலகம் அறிவற்ற சடம் ஆதலின் அது சத்தாகிய முதற்பொருளை அறியாது. இந்நிலைமையில் இவ்விரண்டினிடத்தும் தனது அறிவைச் செலுத்தி அனுபவிப்பது உயிரேயாகும். அவ்வுயிர் சத்தும் ஆகாமல் அசத்தும் ஆகாமல் சதசத்தாய் நிற்கும் இயல்பினது.

சொற்பொருள் :

சத்து - சத்தாகிய முதற்பொருள்
அசத்தை - அசத்தாகிய உலகத்தை
சாராது - அறிந்து அதனிடத்தில் அழுந்தாது
அசத்து - அசத்தாகிய உலகம்
அறியாது - அறிவற்றது ஆகலின் அது சத்தாகிய முதற்பொருளை அறிந்து அனுபவியாது
அங்கண் - அந்நிலைமையில்
இவை - சத்து, அசத்து ஆகிய இவ்விரண்டினிடத்தும்
உய்த்தல் - தனது அறிவைச் செலுத்தி நிற்றலால்
உயிர் சதசத்தாம் - உயிர் சத்தும் ஆகாமல், அசத்தும் ஆகாமல் இவ்விரு தன்மையும் உடையதாகிய சதசத்தாய் நிற்கும்.

விளக்கம் :

சத்து, அசத்து :

எவ்வித மாற்றமும் எய்தாமல் என்றும் ஒருதன்மையதாய் நிற்கும் பொருளே சத்து எனப்படும். தமிழ் நூலார் அதனை மெய்ப் பொருள் என்றும், செம்பொருள் என்றும் வழங்குவர். அவ்வாறு நிற்பது சிவமாகிய முதற்பொருள் ஒன்றேயாகும். அதுவே சத்து எனப்படுகிறது. இனி, தோற்றக் கேடுகளை உடையதாய், மாறுதல் அடைவாய் உள்ள பொருள் அசத்து எனப்படும். அதனை நிலையாப் பொருள் என்று குறிப்பிடலாம். உலகம் அத்தகைய அசத்துப் பொருளாய் இருப்பது கண்கூடு. சத்தாகிய சிவம் ஆனந்தப் பொருளாய் விளங்குவது. எனவே அது நுகர்ச்சிக்குரிய பொருள் என்பது விளங்கும். அசத்தாகிய உலகம் அறிவற்ற சடமாய்த் துன்பத்திடையே சிறிது இன்பமும் தருவது. அதுவும் நுகர்ச்சிப் பொருள் என்பது வெளிப்படை.

சத்து அசத்தைச் சாராது :

அசத்தாகிய உலகம் நுகர்ச்சிப் பொருள் எனில், அதனை அறிவதும் நுகர்வதும் எது? சத்தாகிய சிவமே அதனை அறியும் என்று கொள்ளலாமா? அவ்வாறு கொள்வது பொருந்தாது. ஏனெனில், அசத்துப் பொருளை அறிதல் என்றால், இது இன்னது என்று சுட்டியறிந்து, அறியப்பட்ட அப்பொருளிடத்தில் அவ்வறிவு அழுந்தி விடுதலாகும். அழுந்தி விடுதலாவது, அறிவு அப்பொருளின் வசப்பட்டு விடுதல்; அப்பொருளோடு ஒன்றிப் போதல். இவ்வாறு ஒன்றொன்றாகச் சுட்டியறிந்து அதில் அழுந்தி விடும் இயல்பு சத்தாகிய சிவத்திற்கு இல்லை. அஃது எல்லாவற்றையும் ஒரு காலத்தில் ஒருங்கே அறிந்து நிற்பது. ஆதலால் ஒவ்வொன்றாகச் சுட்டியறிதல் என்னும் குறைபாடு அதனிடத்து இல்லை. மேலும் அழுந்தி விடுதல் என்பதும் ஒருகுறைபாடே. அழுந்தி விடுதல் என்றால் அறியப்படும் பொருளின் வசப்பட்டு விடுதல் என்று மேலே குறிப்பிட்டோம். தன்வயம் உடைய முதற் பொருளாகிய சிவம் இவ்வாறு இன்னொன்றன் வயப்படுதல் இல்லை. அஃது எல்லாப் பொருள்களையும் அறிந்து நிற்பினும் எப்பொருளிலும், அது தோய்வின்றி நிற்கும். தோய்வு இன்றி நிற்பதனால் அதற்கு நுகர்ச்சி என்பது இல்லை. இதனால், சத்தாகிய சிவம் அசத்தைச் சுட்டியறியாது என்பதும், அசத்தின் வசப்படாது என்பதும் அசத்தை அனுபவியாது என்பதும் விளங்கும்.

அசத்து அறியாது :

அசத்தாகிய உலகத்தைச் சத்தாகிய சிவம் அறிந்து சாராது என்பது சரிதான். இனி, சத்தாகிய சிவமும் நுகர்ச்சிப் பொருள்தானே. அதனை அறிவதும் நுகர்வதும் எது? அசத்தாகிய உலகம் அதனை அறியும் என்று கொள்ளலாமா? எனில், அதுவும் பொருந்தாது. ஏனெனில், அசத்தாகிய உலகம் அறிவற்ற சடம் ஆதலின் அது யாதொன்றையும் அறியமாட்டாது என்பது சொல்லாமலே விளங்கும்.

இரண்டையும் அறிவது உயிர் :

இதுகாறும் கூறியவற்றால் சத்தும் அசத்தும் ஆகிய இரண்டும் நுகர்ச்சிப் பொருள்களாக இருப்பினும், மறு தலைப் பொருள்களாகிய அவை தம்முள் ஒன்றையொன்று அறிந்து நுகரா என்பது தெளிவாகிறது. அவ்வாறாகவே, அவ்விரண்டையும் அறிந்து நுகரக்கூடிய மூன்றாவது பொருள் உள்ளது என்பது புலனாகும். அதுவே உயிர். ஓர் எடுத்துக்காட்டை நோக்குவோம். ஒளி, இருள் என்ற இரண்டு பொருள்கள் உள்ளன. அவை மறுதலைப் பொருள்கள். ஒளி இருளைச் சாராது. இருள் ஒளியைச் சாராது. தம்முள் ஒன்றையொன்று சாராத ஒளியையும் இருளையும் பொருந்தி நிற்பதாகிய மூன்றாவது பொருள் உண்டு. அதுவே கண். இந்தக் கண் போன்றது உயிர். சத்தையும் அசத்தையும் அறிந்து பயன் கொள்வது உயிரே எனில், அந்த உயிரைச் சத்து, அசத்து என்ற இவ்விரண்டில் எந்த வகையிலே சேர்ப்பது? உயிரைச் சத்து என்பதா? அசத்து என்பதா? என வினவலாம். இரண்டும் அல்ல என்பதே அதற்கு விடையாகும்.

உயிர்சத்து ஆகாமை :

மேலே சத்து, அசத்து ஆகிய இரண்டன் இயல்புகளை அறிந்தோம். சத்து அசத்தைச் சுட்டியறியாது என்றும், அனுபவியாது என்றும் கூறினோம். உயிர்சத்தாக இருக்குமானால், இவ்விலக் கணப்படி, அசத்தை அறியாது இருத்தல் வேண்டும்; அனுபவியாமல் இருத்தல் வேண்டும். ஆனால், நடைமுறையில் உயிர் உலகமாகிய அசத்தைச் சுட்டி அறிகிறதே; அசத்தில் அழுந்தி இன்ப துன்ப நுகர்ச்சியைப் பெறுகிறதே. இதனால் உயிர் சத்து அன்று என்ற உண்மை விளங்குகிறது.

உயிர்அசத்து ஆகாமை :

இனி அசத்து அறிவிலது ஆகலின் அதுசத்தை எக்காலத்திலும் அறிய மாட்டாது என்று கூறினோம். உயிர் அசத்தாக இருக்குமானால், இவ்விலக்கணப்படி, சத்தை அறியாதும் அனுபவியாதும் இருத்தல் வேண்டும். ஆனால், உயிர் படிப்படியாகப் பக்குவம் பெற்றுச் சத்தாகிய சிவத்தை அறிந்து அனுபவிப்பதை உயர்ந்தோர் வாழ்க்கையில் காண முடிகிறதே. இதனால் உயிர் அசத்து அன்று என்ற உண்மை விளங்குகிறது.

சத சத்து :

உயிர் சத்தும் அன்று, அசத்தும் அன்று எனில், அதனை எவ்வாறு அழைப்பது; உயிர் மேலான பொருளாகிய சத்தும் அன்று; கீழான பொருளாகிய அசத்தும் அன்று; இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட பொருளாய் நிற்பது; இவ்விரண்டினிடத்தும் தனது அறிவைச் செலுத்துவது. அது பற்றி உயிர் சதசத்து எனப்படும். உயிர் சதசத்து என்பதற்கு, சத்தும் அன்றாய் அசத்தும் அன்றாய், சத்தோடு கூடிச் சத்தாயும் அசத்தோடு கூடி அசத்தாயும் நிற்பது என்பது பொருளாகும்.

அசத்தாய் நிற்றல் :

உயிர் அசத்தோடு கூடி நிற்கும்போது அசத்தின் தன்மையைப் பெற்று விளங்கும். எவ்வாறு எனில், உயிருக்குத் தோற்றம் அழிவு என்பன உண்மையில் இல்லை. ஆனால், உடம்பாகிய அசத்திற்குத் தோற்றமுண்டு, அழிவுண்டு. உயிர், தான் தோன்றி நின்று அழிவதில்லையாயினும் அசத்தாகிய உடம்போடு கூடி நின்று உடம்பிற்குரிய தோற்ற அழிவுகளைத் தன்னுடையனவாகக் கொண்டு நிற்கிறது. உடம்பிற்கு வரும் மெலிவு, நலிவு, பசி, தாகம் முதலிய தன்மைகளைத் தன்னுடையனவாகக் கொண்டு உடம்பாகவே நிற்கிறது. இதுவே அசத்தோடு கூடி அசத்தாய் நிற்றல்; அசத்தின் தன்மையைப் பெறுதல்.

சத்தாய் நிற்றல் :

இனி அசத்தினை விட்டுச் சத்தாகிய சிவத்தோடு கூடிநிற்கும்போது சத்தாகிய சிவத்தின் தன்மையைப் பெற்று விளங்கும். அஃதாவது, அசத்தின் சார்பினால் வந்த பிறப்பு, இறப்பு முதலிய தன்மைகள் நீங்கிச் சிவத்தைப் போல என்றும் ஒரு தன்மைத்தாய் விளங்கி, நிலைத்த இன்ப வாழ்வைப் பெறும். இருளில் நின்ற கண் விளக்கொளியோடு கலந்து இருளை நீக்கிக் கொள்வது போல, உயிரும் சத்துடன் நின்று அசத்தின் தன்மையை நீக்கிக் கொள்ளும். இதுவே சத்தோடு கூடிச் சத்தாய் நிற்றல்; சத்தின் தன்மையைப் பெறுதல். இவ்வாறு தான் சார்ந்த பொருளின் தன்மையையே தன் தன்மையாகக் கொள்ளும் இவ்வியல்பு சார்ந்ததன் வண்ணம் ஆதல் எனப்படும். இது உயிருக்குரிய முதன்மையான சிறப்பியல்பாக உள்ளது. மேற்கூறிய விளக்கத்தால், இறைவன் சத்து; பாசம் அசத்து; உயிர் அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட சதசத்து என்பது தெளிவாகும்.

18. சார்ந்ததன் வண்ணமாதல்

இருளில் இருளாகி எல்இடத்தில் எல்ஆம்
பொருள்கள் இலதோ புவி.

பொருள் : இருள் உள்ளபோது இருளேயாகியும், ஒளி வந்தபோது ஒளியேயாகியும் இவ்வாறு சார்ந்ததன் வண்ணம் ஆகின்ற பொருள்கள் இவ்வுலகில் இல்லையோ?

சொற்பொருள் :

இருளில்    - இருள் உள்ள காலத்தில்
இருளாகி    - இருளே யாகியும்
எல் இடத்தில்    - ஒளிவந்த பொழுதில்
எல் ஆம்    - ஒளியே யாகியும்
பொருள்கள்    - இங்ஙனம் சார்ந்ததன் வண்ணம் ஆகின்ற பொருள்களை
புவி    - இவ்வுலகம்
இலதோ    - உடையதாய் இல்லையோ?

விளக்கம் :

உயிர் எதனை எதனைச் சார்கிறதோ அதன் அதன் தன்மையைத் தன் தன்மையாகக் கொள்ளும். உயிர் சார்தற்குரிய பொருள்கள் இரண்டே. அவை சத்து, அசத்து என்பன. சத்து என்பது சிவம். அசத்து என்பது பாசம். உயிர் சத்தாகிய சிவத்தைச் சார்கிறபோது சிவத்தின் தன்மையைப் பெற்றுச் சிவமாகவே நிற்கும். நாம் ஒழிந்து சிவமானவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ என்னும் அனுபவ மொழி இதனை உணர்த்தும். சத்தைச் சார்தலின்றி அசத்தாகிய பாசத்தைச் சார்கிறபோது பாசத்தின் தன்மையைப் பெற்றுப் பாசமாகவே இருக்கும். இவ்வாறு உயிர் இரு தன்மையும் உடையதாய் நிற்கும் என்று முந்திய செய்யுளில் உணர்த்தினார் ஆசிரியர்.

அதனை ஏற்காது மறுப்போர் பின்வருமாறு கூறுவர். சத்து, அசத்து என்னும் இருவகைப் பகுப்பே உள்ளன. பொருள்கள் யாவும் இப்பாகுபாட்டில் அடங்கி நிற்பன. அம்முறையில் உயிரைச் சத்து என்று சொல்ல வேண்டும். அல்லது, அசத்து என்று சொல்ல வேண்டும். இவ்விரண்டினுள் ஒன்றாய் நில்லாமல், உயிர் அவ்விரண்டன் தன்மையும் உடையதாய் நிற்கும் என்றல் பொருந்தாது என அவர்கள் கூறுவர். அவர்களுக்கு விடையாக இச் செய்யுளைக் கூறுகின்றார் ஆசிரியர். இருவகைப்பட்ட தன்மைகளை அடைகிற பொருள்கள் உலகில் பல உண்டு. எடுத்துக்காட்டாகக் கண், பளிங்கு, வானம் ஆகிய பொருள்களைக் குறிப்பிடலாம். கண் இரவு நேரத்தில் இருளைச் சார்ந்து இருளாய் நிற்கும். ஒளி வந்த காலத்தில் அவ்வொளியைப் பெற்று ஒளியாய் நிற்கும். அவ்வாறே பளிங்கு இரவில் இருளைக் கவர்ந்து இருள் வடிவாகவே இருக்கும். பகலில் சூரியவொளியைக் கவர்ந்து ஒளிவடிவாய்த் திகழும். அதுபோல வானம் இரவு நேரத்தில் கரிய இருள் சூழ்ந்து இருளாய் விளங்கும். பகலில் சூரியனின் பொன்னொளியைப் பெற்று ஒளிமயமாய் விளங்கும். இப்படிக் கண் முதலிய பல பொருள்கள் இருளில் இருளாகியும் ஒளியில் ஒளியாகியும் இரு மாறுபட்ட தன்மைகளை உடையனவாய் நிற்பதை அனுபவமாகக் பார்க்கிறோம். அவற்றைப் போல உயிரும் தம்முள் மாறுபட்ட சத்தையும் அசத்தையும் சார்ந்து அவ்விரண்டன் தன்மைகளையும் அடையக் கூடியதாய் உள்ளது.

சத்து என்பது உயர்ந்தது. அசத்து என்பது இழிந்தது. உயிர் அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட பொதுமைப் பொருளாகும். இடைப்பட்டதாய் நிற்பதால் அவ்விரண்டையும் சார்தற்கு உரியதாகின்றது. அவ்விரண்டன் தன்மையையும் பெறுவதாகின்றது. சார்ந்த தன் வண்ணமாய் நிற்பதாகின்றது. இங்ஙனம் இச் செய்யுளில், சார்ந்ததன் வண்ணமாகின்ற பொருள்கள் இவ்வுலகில் இல்லையோ எனக் கேட்டு, அவை உண்டு என்பதை வலியுறுத்தி, அங்ஙனமே உயிரும் ஆணவ இருளோடு கூடி அறியாமையுற்றும் திருவருள் ஒளியோடு கூடி நல்லுணர்வு விளங்கியும் சார்ந்ததன் வண்ணமாய் நிற்பது என உணர்த்தினார் ஆசிரியர்.

19. ஆன்ம அறிவுக்குக் கூகையின் கண் உவமை

ஊமன்கண் போல ஒளியும் மிகஇருளே
யாம்மன்கண் காணாதவை.

பொருள் : கூகையின் கண் பகலில் சூரியவொளியில் கலந்து நின்றாலும் அவ்வொளியை அறியாது இருள் வயப்பட்டிருக்கும். அதுபோல, அநாதியில் உயிர்கள் பேரறிவாகிய திருவருள் ஒளியோடு கூடியிருந்தும் அவ்வொளியை அறியாதனவாய் ஆணவ இருளின் வயப்பட்டு இருளாய் நிற்கும்.

சொற்பொருள் :

மன்    - இறைவனது
கண்    - பேரறிவாகிய திருவருளை
காணாதவை    - (அதனோடு அநாதியே கூடியிருந்தும்) அறியாது நிற்கும் உயிர்கள்
ஊமன் கண்போல - கூகையினது கண் சூரியனது ஒளியிற் கலந்து நின்றாலும் அதனை அறியாது நிற்பது போல
ஒளியும்    - ஒளியிடத்தும்
இருளே மிக ஆம் - அறியாமையிருளில் மூழ்கி இருளாயிருக்கும் தன்மையையே மிகப் பெற்றிருக்கும்.

விளக்கம் :
திருவருளை உணராமை :

உயிர்கள் முதலிலேயே திருவருளோடுதான் கூடியுள்ளன. ஆயினும் அத்திருவருளை உணர மாட்டாமல் உள்ளன. அதற்கு என்ன காரணம்? இறைவனை நோக்க உயிர் பருப்பொருளாகும். உயிரினது அறிவு பரு அறிவாய் நிற்றலின் நுண்ணிய அறிவாகிய திருவருளை அது முதலிலேயே பற்றமாட்டாததாயிற்று. உயிர் யாதொரு பொருளையும் யாரொருவர் உணர்த்தினாலும் அதனைச் சிறிது சிறிதாக அறியுமே யன்றி ஒருங்கே முழுதுமாக அறிய மாட்டாது. படிமுறையில் பல காலும் மெல்ல மெல்ல அறிந்தே முடிவில் நுண் பொருளை அறிய வல்லதாகும். இத்தன்மையுடையதாகிய உயிரறிவு நுண்ணியதாகிய திருவருளை முதலிலேயே பற்ற மாட்டாதிருப்பதிலே என்ன வியப்பு? இப்படிப்பட்ட சிற்றறிவுடைய உயிரை ஆணவமலம் மறைத்துக் கொள்ளுதல் அன்றே ஏற்பட்டது. எனவே உயிர்களுக்கு இயல்பிலே உள்ள அறிவுக் குறைபாடும் அதனால் வந்த மல மறைப்புமே அவை திருவருளை உணராமைக்குக் காரணம் எனலாம். அறிவுக் குறைபாடே பக்குவமின்மை எனப்படும். இயல்பிலேயே பக்குவமின்றி நிற்பனவாகிய உயிர்கள் அது காரணமாக அநாதியே சத்தோடு (திருவருளோடு) கூடி நின்றும் சத்தில் அழுந்திச் சத்தாய் நில்லாது, அசத்தாகிய ஆணவத்தைச் சார்ந்து அதன் வண்ணமாய் அசத்தாய் நின்றன என அறியலாம்.

ஊமன் கண் :

அநாதியே திருவருள் உடனிருந்தும் அதனைச் சார்தலின்றி இருளில் அழுந்திய உயிரின் அறிவிற்குக் கூகையின் கண்ணை உவமை கூறினார் ஆசிரியர். ஊமன் என்பது கூகையைக் குறிக்கும் ஓர் அரிய சொல். அரை யிரவில் ஊமன் பாராட்ட உறங்கிற்றே என்னும் முத்தொள்ளாயிரச் செய்யுள் அடியில் (செ:66) இச்சொல்லாட்சியைக் காணலாம்.

மன் கண்:

கண்-அறிவு. மன் என்பதற்குத் தலைவன் என்பது பொருள். வானாடர் காணாத மன் என இச்சொல்லை இப்பொருளில் ஆசிரியர் ஆண்டுள்ளார். தலைவனாகிய இறைவனது அறிவு மன் கண் எனப்பட்டது. இனி, மன் கண் என்பதற்கு நிலைபெற்ற பேரறிவு என்றும் பொருள் கூறலாம். ஊமன் கண்ணிற்குப் போல, மன் கண் காணாத வற்றுக்கு ஒளியும் மிக இருளே யாம் என அமைத்துக் கொள்ள வேண்டும்.

இச் செய்யுளை இங்கு வைத்த முறைமை :

உயிர்கள் திருவருளை உணரா என்ற இக்கருத்தை இனிவரும் அதிகாரமாகிய அருளது நிலையில் பல செய்யுட்களில் கூறியுள்ளார். உணர்வை உணரா உயிர், புரையை உணரா புவி என அங்கே ஆசிரியர் கூறியுள்ளமை காணலாம். அக்கருத்தே பட, மன் கண் காணாதவை எனவும், ஒளியும் மிக இருளே யாம் எனவும் கூறுவதாகிய இச் செய்யுளையும் அவ்வதிகாரத்தில் வைப்பது தானே முறை? அவ்வாறு செய்யாமல் இச்செய்யுளை இவ்வதிகாரத்தில் வைத்தது என்ன காரணம் பற்றி? என்னும் வினா சிந்திப்போர் உள்ளத்தில் எழாமற் போகாது. உயிர்கள் உடம்போடு கூடாமல், பிறவிக்கு வராமல், இருந்த அம் முதல் நிலை அநாதி நிலை எனப்படும். தத்தமக்கு ஏற்ற உடம்பினைப் பெற்றுப் பிறவி யெடுத்த நிலை சகல நிலை எனப்படும். அநாதி நிலையில் ஆணவமாகிய இருள் உயிர்களை மறைத்து முழு அறியாமையை உண்டு பண்ணும். சகல நிலையில் அவ்விருள் உயிர்களுக்கு விபரீத உணர்வாகிய மயக்க உணர்வை உண்டு பண்ணும்.

இவ்விரு நிலைகளுள் சகல நிலை பற்றி வரும் மயக்க வுணர்வையே அருளது நிலை என்ற அதிகாரத்தில் எடுத்துக் காட்டுகிறார் ஆசிரியர். மயக்க உணர்வால் திருவருளை மறந்த சிறுமையையே உணர்வை உணரா உயிர், புரையை உணரா புவி, என அங்கே விளக்கிச் செல்லுகிறார். அநாதியில் உயிர்கள் ஆணவ இருளில் அழுந்தி அறியாமையாய் நின்று திருவருள் ஒளியை உணராத சிறுமையையே ஊமன் கண்ணை உவமை காட்டி இச்செய்யுளில் விளக்க முற்படுகிறார் ஆசிரியர். கூகையினது கண் இயல்பான அதன் அமைப்பினால் பகலில் சூரியவொளியைக் காண மாட்டாமல் இருளில் நிற்கிறது. அதுபோல உயிர்களும் அவற்றினது அறிவு நிலையில் இயல்பாக உள்ள குறைபாட்டினால் நுண்ணிய திருவருள் ஒளியைப் பற்றமாட்டாமல் இருளில் அழுந்தி நிற்பன ஆகின்றன. இதனால், உயிர்களின் அறிவு நிலை பற்றியும், அது காரணமாக அநாதியே இருளில் அழுந்தித் திருவருளை உணரமாட்டாது நிற்கும் சிறுமை பற்றியும் கூறுவதாகிய இச் செய்யுளை உயிர்களின் இயல்பு பற்றியதாகிய இவ்வதிகாரத்தில் வைத்தது பொருத்தமே என்பது விளங்கும்.

எனவே, பொதுவாக நோக்கும்போது இச்செய்யுளின் கருத்தும், அருளது நிலையில் உள்ள செய்யுட்களின் கருத்தும் ஒன்றுபோலத் தோன்றினாலும் இச்செய்யுளின் உட்கிடை வேறு; அவற்றின் உட்கிடை வேறு. அருளதுநிலை என்ற அதிகாரத்தில், சகல நிலையில் உயிர்கள் மயக்கவுணர்வில் அழுந்தியதால் திருவருளை உணராமை கூறப்பட்டது. இச் செய்யுளில், அநாதி நிலையில் உயிர்கள் அறியாமையில் அழுந்தியதால் திருவருளை உணராமை கூறப்பட்டது. இவ்வாறு வேறுபடுத்தி உணர்ந்து கொள்ள வேண்டும். இதுகாறும் கூறியவற்றால், ஊமன் கண் என்னும் இச் செய்யுளை அருளது நிலை என்ற அதிகாரத்தில் வைக்காமல் இங்கு வைத்த ஆசிரியரின் கருத்தும், முறைமையும் இனிது விளங்குவதாகும்.

20. இவ்வுயிர் திருவருளை உணர்வது எந்நாளோ?

அன்று அளவும் ஆற்றும் உயிர் அந்தோ அருள்தெரிவது
என்று அளவொன் றில்லா இடர்.

பொருள் : அநாதியாகிய அன்று தொட்டு இன்று வரையிலும் அளவற்ற துன்பங்களைத் தாங்கி நுகர்ந்து வருவனவாகிய உயிர்கள் மிகவும் இரங்கத் தக்கவை. அவை இறைவனது ஞானமாகிய திருவருள் ஒளியைப் பெற்றுத் துன்பம் நீங்கப் பெறுவது எந்நாளோ?

சொற்பொருள் :

அன்று    - ஆணவ மலமாகிய இருளில் அழுந்திய அன்று தொட்டே
அளவும்    - (அது காரணமாக வந்து) பொருந்துகின்ற
அளவு ஒன்று இல்லாஇடர் - அளவற்ற பெருந்துன்பத்தை
ஆற்றும் உயிர்    - தாங்கி நுகர்வனவாகிய உயிர்கள்
அந்தோ    - ஐயோ!
அருள் தெரிவது    - இறைவனது ஞானமாகிய திருவருள் ஒளியைப் பெற்று இடர் நீங்குவது
என்று    - எந்நாளோ?

விளக்கம் :
அளவொன்றில்லா இடர் :

அருளுள்ளம் கொண்ட நம் ஆசிரியர் உயிர்கள் படுந்துன்பம் கண்டு ஆற்றாமல் இவ்வாறு இரங்கிக் கூறுகின்றார். உயிர்களுக்கு உண்டாகும் கேட்டிற்கெல்லாம் ஆணவமாகிய இருளே மூலகாரணமாகும். அது அநாதி நிலையில் உயிரினது அறிவை முழுதுமாக மறைத்து நிற்கும். அதனால், உயிர் அறிவென்பது சிறிதும் இன்றிச் சடப்பொருள் போலவே கிடக்கும்; தான் ஒரு பொருள் உண்டு என்பதும் தோன்றாமல் உயிர் ஆணவத்தில் அழுந்திக் கிடக்கும். இதனினும் கொடிதான துன்ப நிலை வேறு என்ன இருக்கிறது? இத்துன்ப நிலை கண்டு இரங்கிய இறைவன் அவ்விருள் நிலையிலிருந்து உயிரை எடுத்து அதன் அறிவை விளங்கச் செய்வதற்கு உடம்பு முதலியவற்றைக் கொடுத்துப் பிறவியிற் செ<லுத்துகிறான். பிறப்பு நிலையில் ஆணவத்தின் ஆற்றல் சிறிது அடங்கப் பெறுகிறது. உயிரறிவு சிறிது விளங்குகிறது. இந்நிலையில் ஆணவம் வேறொரு செயலைச் செய்கிறது; ஓரளவு விளங்கிய உயிரறிவை அது திரிவுபடுத்துகிறது; நிலையாத பொருளை நிலைத்த பொருளாகக் கருதும்படி செய்கிறது. அற்பமான பொருளை உயர்ந்த பொருளாக மதிக்கும்படி செய்கிறது. இவ்வாறு ஆணவம் உயிருக்கு விபரீத அறிவை உண்டாக்குகிறது. உயிருணர்வை மயக்கி உலகியல் பொருள்கள் மீது அளவு கடந்த ஆசையைப் பெருக்கி அவற்றை என்னுடையவை என்று, விடாது பற்றும் படியாகத் தூண்டுகிறது.

ஒரு பொருளை என்னுடையது என்று நினைக்கும் போதுதான் துன்பம் உண்டாகிறது. எடுத்துக்காட்டுக்கு ஒரு நிகழ்ச்சியைக் கூறலாம். வீதியில் பிள்ளைகள் விளையாடுகிறார்கள். ஒருவன் அடித்த பந்து பாய்ந்து வந்து நமது வீட்டுக் கண்ணாடி உடைந்து போகிறது. அப்பொழுது நமக்கு எவ்வளவு வருத்தம் உண்டாகிறது! வீடு என்னுடையது என்ற பற்றே இத்துன்பத்தை விளைவிக்கிறது. இப்படி நடப்பதற்குப் பதிலாக, எதிர்த்த வீட்டுக் கதவின் கண்ணாடி உடைந்தால் நமக்குத் துன்பம் உண்டாவதில்லை. நமது வீட்டையே விற்று விட்டுச் செல்வதாக வைத்துக்கொள்வோம். ஒரு சமயம் அந்த வழியாகச் செல்ல நேர்கிறது. முன்பு நடந்தது போலவே ஒருவன் அடித்த பந்து பட்டு நமது பழைய வீட்டின் கண்ணாடிக் கதவு உடைகிறது. ஆனால், அதைக் கண்டு நமக்குத் துன்பம் ஏற்படுவதில்லை. அதற்குக் காரணம் அந்த வீடு என்னுடையது என்ற பற்று இப்பொழுது இல்லை. உலகப் பொருள்களின் தன்மை என்ன என்பதை நாம் தெரிந்து கொண்டால் துன்பமில்லை. நாம் ஒரு நண்பரது வீட்டிற்குப் போகிறோம். அவர் அவ்வளவு வசதி உடையவரல்லர். வீடு தேடி வருபவர்கள் அமர்வதற்கு அங்கே நல்ல இருக்கைகள் இல்லை. ஒரு மூலையில் உடைந்த நாற்காலி ஒன்று கிடக்கிறது. அதிலேதான் நாம் உட்கார வேண்டும். அதற்கு ஒரு கால் இல்லை. மற்றக் கால்களும் ஆடிக் கொண்டிருக்கின்றன. அந்த நாற்காலியின் தன்மையை நாம் நன்கு தெரிந்துகொண்டபடியால் மிகுந்த கவனத்தோடு அதிலே அமர்வோம்; கீழே விழுந்து துன்பப்பட மாட்டோம். அதுபோல, உலகில் நாம் காணும் எல்லாப் பொருள்களின் தன்மையையும் தெரிந்துகொள்ள வேண்டும். அவை யாவும் நிலையற்றவை என்பதைத் தெரிந்து கொண்டால் அவற்றால் வருத்தப்படமாட்டோம்.

உலகின் உண்மை நிலையைத் தெரியவொட்டாதபடி ஆணவம் நமது அறிவை மறைக்கிறது. வேறுபடுத்துகிறது. அதனாலேயே நமக்கு இத்தனை பற்றுக்கள்! இத்தனை துன்பங்கள்! பற்றினால் விளைவதே வினையாகும். நமக்குப் பிடித்தமான பொருள்களை, அவற்றின் மீது கொண்ட பற்றினால், எப்பாடு பட்டாகிலும் அடைவதற்கு முயல்கிறோம். நமக்குப் பிடித்தவை நம்மை விட்டுச் செல்லும் என்று தெரிந்தால் எப்பாடு பட்டாகிலும் அவை நம்மை விட்டு நீங்காமல் நிறுத்திக் கொள்ள முயல்கிறோம். அம்முயற்சிகள் யாவும் நல்லனவும் தீயனவுமாக அமைகின்றன. அவையே நல்வினை தீவினைகள் ஆகின்றன. அவ்வினைகள் பிறப்பிற்குக் காரணமாகின்றன. உயிர்களுக்குப் பிறத்தலும் இறத்தலும் பெருந்துன்பங்கள். மற்றை எல்லாத் துன்பங்களும் அவற்றுக்கு இடையே விளைவன. பிறப்புப் பெருந்துன்பமாதலைக் கருதியே திருவள்ளுவர் பிறவிப் பெருங்கடல் என்றார். அதனையொட்டி ஆசிரியர் உமாபதி சிவமும் சிவப்பிரகாச நூலில் இடர்க் கடல் (செ. 18) என்று குறிப்பிட்டார். அதனையே விரித்து அளவொன்றில்லா இடர் என இங்கே கூறியுள்ளார் எனலாம்.

அருள் தெரிவது என்று? :

உயிரை அறியாமையுட் படுத்தித் துன்பத்தை விளைவித்து வந்த ஆணவமலத்தின் சத்தி படிப்படியே மெலிவடைந்து பின் நீங்கும் நிலையை ஒரு காலத்தில் எய்தும். அந்நிலை மல பரிபாகம் எனப்படும். மல பரிபாகம் வருமானால் அவ்வுயிர் பற்றிலிருந்து விடுபடும். திருவருளையே பற்றாகப் பற்றும்; திருவருட் சார்பினால் இருள் மலச் சார்பை நீக்கிக் கொள்ளும்; இருளால் வந்த துன்பம் நீங்கப் பெற்று அருளால் வரும் பேரின்பத்தை நுகரும். இதனை,

புணரும் இருள் மலபாகம் பொருந்தியக்கால்
அருளால்
உள் நிலவும் ஒளியதனால் இருளகற்றிப் பாதம்
உற்றிடும் நற் பசு வருக்கம் (செ.19)

என்னும் சிவப்பிரகாசச் செய்யுளால் அறியலாம். உயிரவை நிலையில் இறுதியாக நிற்கும் இக்குறளில் உயிர்கள் அருளைத் தெரிந்து இடர் நீங்குவது என்று? என வினவுகிறார். சிவப்பிரகாசத்தில் உயிரிலக்கணம் கூறும் செய்யுளில் அதனை அமைத்திருக்கிறார். மலபரிபாகம் வரும் காலத்தில் உயிர் குருவருளால் தன்னுள்ளே விளங்கும் திருவருள் ஒளியைப் பெற்று மல இருளைப் போக்கித் துன்பத்திலிருந்து விடுபடும் என்பதே அவ்விடையாகும்.

மூன்றாம் அதிகாரம்

இருள் மல நிலை

அனைத்தையும் இயக்குகின்ற முதற்பொருளாகிய பதியின் இயல்பை முதல் அதிகாரத்தில் கூறினார். அம் முதற்பொருளைச் சார்ந்து வாழ்வதற்குரிய உயிர்களின் இயல்பை இரண்டாம் அதிகாரத்தில் கூறினார். இனி, அவ்வுயிர்கள் முதற் பொருளாகிய இறைவனைச் சாரவொட்டாமல் தடுத்து அறியாமையை விளைத்து நிற்கும் இருளாகிய ஆணவமலத்தின் இயல்பை இம் மூன்றாம் அதிகாரத்தில் கூறலுறுகிறார். இவ்வதிகாரத்தின் பொருளைப் பின்வருமாறு சுருக்கித் தரலாம். பிறப்பால் வருவது துன்பம் என்பதை அனுபவமாகக் கண்டு பெரியோர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். பிறவித் தளையிலிருந்து நீங்கி எய்தக் கூடிய பேரின்ப நிலையைப் பற்றியும் அவர்கள் கூறியுள்ளனர். திருமுறை யாசிரியர்களும் பிறரும் இவ்வாறு அருளியிருப்பதைப் பல கால் படித்திருந்தும் மக்கள் இவ்வுண்மைகளை உள்ளவாறு உணரவில்லை. பிறவியிலிருந்தும் விடுபடுதல் வேண்டும். பேரின்ப வாழ்வைப் பெறுதல் வேண்டும் என்பதில் உண்மையான நாட்டம் கொள்ளவில்லை. அவ்வுண்மைகளைச் சிந்திக்க வொட்டாதபடி அவர்களது அறிவைத் தடுத்து நிற்கின்ற தடை ஒன்று உள்ளது. அதுவே ஆணவ மலம் என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. ஆணவ மலம் அறிவை மறைப்பது. அறியாமையை உண்டாக்குவது. இவ்வியல்பைத் தெரித்துக் காட்டும் வகையில் ஆணவ மலத்திற்கு இருள் என்ற பெயரையே இட்டு வழங்குகிறார் ஆசிரியர் உமாபதி சிவம்.

இரவு நேரத்தில் வந்து கவியும் புற இருளுக்கும் இந்த அக இருளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பின்வருமாறு சுட்டலாம். மறைத்தல் வலிமை என்பது இந்த இரண்டு இருளுக்கும் பொதுவாய் உரியது. புறவிருள் சடமாகிய கண்ணை மறைக்கும். அகவிருள் சித்தாகிய ஆன்மாவை மறைக்கும். புறவிருள் கண்ணை மறைக்கிறது என்பதை ஆன்மா உணர முடியும். ஆனால், அகவிருள் தன்னை மறைக்கிறது என்பதை ஆன்மா சிறிதும் அறிய முடிவதில்லை. வேறொரு வகையிற் சொன்னால், புறவிருள் தன்னைக் காட்டி நிற்கும். அகவிருள் தன்னைச் சிறிதும் காட்டிக் கொள்ளாது. இஃது இந்த இரண்டு இருளுக்கும் உள்ள வேற்றுமை. அகவிருளாகிய ஆணவம் உயிர்களை எப்போது வந்து பற்றியது? எப்படிப் பற்றியது? என்றெல்லாம் கேட்கலாம். ஆணவம் ஏதோ ஒரு காலத்திலே வந்து உயிர்களைப் பற்றியிருந்தால் அல்லவா இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்ல முடியும்! ஆணவம் உயிர்களை இடையிலே வந்து பற்றவில்லை. உயிர் உள்ள அன்றே அதனிடத்தில் ஆணவமும் உடனாக உள்ளது என்றே சைவ சித்தாந்தம் கூறுகிறது. அது பற்றியே ஆணவத்திற்குச் சகச மலம் என்ற பெயர் ஏற்பட்டது. சகசம் என்றால் உடன் தோன்றியது என்பது பொருள்.

இவ்வாறு உயிர்களிடத்தில் தொன்றுதொட்டே உள்ள ஆணவ இருள் உயிர்க்கு உயிராக உள்ள திருவருள் ஒளியை அவ்வுயிர்கள் உணராதபடி தடை செய்து வருகிறது. அவ்விருள் உயிரைப்பற்றி நின்று மறைக்குமே யன்றி உயிர்க்குயிராக விளங்கும் திருவருள் ஒளியைப் பற்ற மாட்டாது என்பதை உணர்தல் வேண்டும். உயிர்கள் எண்ணில. ஆனால் ஆணவ இருள் ஒன்றுதான். ஒன்றாகிய அவ்விருள் பலவாகிய உயிர்கள் அனைத்தையும் பொருந்தி நின்று மயக்கும் ஆற்றல் வாய்ந்தது. உயிரைக் கணவன் என்றும், அதனைக் கூடி நின்று மயக்கும் ஆணவ இருளை இல்லாள் என்றும் கூறலாம். இந்த இல்லாளுக்கு ஒழுக்கம் என்பது துளியும் இல்லை! இவள் பிற ஆன்மாக்கள் ஆகிய ஆடவர் பலரோடும் கூடியிருப்பவள் ஆயிற்றே. ஆனாலும், அவள் தன் கணவனாகிய ஆன்மாவுக்குத் தன் உண்மையியல்பைக் காட்டாமல் மறைத்துக் கற்புடையவள் போலத் தன்னைக் காட்டிக் கொள்கிறாள்! இந்த உருவகத்தின் கருத்து, ஆணவ இருள் உயிரை மறைத்து அறியாமையை உண்டாக்கி அந்த அறியாமையையே அறிவு போலக் காட்டி நின்று மயக்கும் என்பதாகும்.

உயிர்கள் படுந் துன்பங்களுக்கெல்லாம் மூல காரணம் இந்த ஆணவ மலமேயாகும். இஃது உயிரோடு இயற்கையாக ஒட்டியிருப்பதனால் இதனை உயிரின் குணம் என்று கூறலாமோ? எனில், அங்ஙனம் கூறுதல் கூடாது. ஆணவம் உயிரோடு இயற்கையாக இருப்பினும் அதனைக் குற்றம் என்றே கொள்ளுதல் வேண்டும். செம்பில் உள்ள களிம்பு போலவும், நெல்லில் உள்ள உமி போலவும் ஆணவம் உயிருக்கு இயற்கைக் குற்றம் ஆகும். இத்தகைய ஆணவம் இப்பொழுது உயிர்களிடத்தில் மிகுந்து நின்று உயிர்களை மயக்கி, உயர்ந்ததாகிய திருவருளை நோக்க விடாமல் தடுத்து இழிந்தனவாகிய உலக போகங்களையே நாடும்படி செய்கிறது. ஆயினும் இந்த நிலையே என்றும் நீடிக்காது. உயிர் பக்குவம் பெறுகின்ற காலம் வரும். அப்பொழுது திருவருள் ஒளியை உயிர் உணர்ந்து பற்றும். அந்நிலையில் ஆணவ இருள்வலி மடங்கி அகலும். உயிர்கள் திருவருளை உணரும் பக்குவ காலம் வரும் வரையில், அவை ஆணவ இருளிலிருந்து சிறிது விடுபட்டு ஓரளவு அறிவு விளக்கம் பெறுவதற்காக உடம்பையும், உடம்பிலுள்ள அறிகருவிகளையும், இந்த உலகையும் இறைவன் மாயையிலிருந்து படைத்துக் கொடுத்திருக்கிறான். இருளில் இடர்ப்படுபவனுக்குச் சிறிய விளக்கொளி போல மாயாகாரியமாகிய உடம்பு முதலியவை உயிர்களுக்குச் சிறிது அறிவைத் தருகின்றன. மாயை செய்யும் இவ்வுதவியைக் கருதியே விடிவாம் அளவும் விளக்கு அனைய மாயை என்றார் ஆசிரியர் உமாபதி சிவம். இனி இக் கருத்துக்களை விரிவாகக் காண்போம்.

21. ஆணவ மலம் என்பது உண்டு

துன்றும் பவத்துயரும் இன்பும் துணைப் பொருளும்
இன்று என்பது எவ்வாறும் இல்.

பொருள் : இடையறாது தொடர்ந்து வருகின்ற பிறவித் துன்பமும், அது நீங்கிப் பெறுகின்ற பேரின்பமும், உயிர்கள் அதனைப் பெறுதற்குத் துணையாய் நிற்கும் இறைவனாகிய முதற் பொருளும் ஆகியவை இல்லாத பொருள்கள் என்று சொல்<லுவது எவ்வகையிலும் பொருந்தாது. அவ்வாறாகவும், மாந்தர் அவற்றை இல்லையெனக் கருதி வருவதற்குக் காரணம் இருத்தல் வேண்டும். அதுவே ஆணவ மலம்.

சொற்பொருள் :

துன்றும்    - இடைவிடாது தொடர்ந்து வரும்
பவத் துயரும்    - பிறவித் துன்பமும்
இன்பும்    - அத்துன்பம் நீங்கி அடைவதாகிய முத்தியின்பமும்
துணைப் பொருளும் - அவ்விரண்டையும் உயிர்கள் பெறுவதற்குத் துணையாய் நிற்கும் இறைவனும்
இன்று என்பது    - இல்லை என்று சொல்வது
எவ்வாறும் இல்    - எவ்வகையிலும் பொருத்தம் இல்லாதது. (ஆயினும், உயிர்கள் அவையில்லை என்று கருதி நிற்பதற்குக் காரணம் வேண்டும். அதுவே இருளாகிய ஆணவமலம்.)

விளக்கம் :

பிறவித் துன்பம் :

துன்பத்தைத் தரும் பல பிணிகளை உடைய உடம்பிலே உயிர் கட்டுண்டிருக்கிறது. இந்த உடம்பு ஊனும் எலும்பும் தோலும் குருதியும் கொண்டு அமைக்கப் பெற்றது. ஊன் முதலியவற்றைத் தனித்தனியே கண்டால் அவை எவ்வளவு அருவருப்பைத் தருகின்றன! ஊனாகிய இறைச்சியைத் தனியே காணும்போது கண்ணை மூடிக் கொள்ளத் தோன்றுகிறது. கை, கால் எலும்புகளையும் தலையோட்டினையும் காணும்போது அச்சம் மேலிடுகிறது. குருதி சிந்திக்கிடப்பதைக் காணும்போது மயக்கமே வருகிறது. இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க பொருள்களைக் கொண்டு ஆக்கிய இந்த உடம்பு எவ்வளவு கவர்ச்சியை ஊட்டுகிறது! வெறும் குறுதியும் நரம்பும் என்பும் கூடிய கூட்டந்தானே இந்த உடம்பு என்று யாராவது நினைக்கிறார்களா? இவ்வுடம்பினைப் பெற்ற மாந்தர் அதனிடத்தில் தனிமோகம் கொள்கிறார்கள். அழகு படுத்திப் பார்க்கிறார்கள்; ஆசையோடு பேணுகிறார்கள். இந்த மயக்கத்தை என்னென்பது! இவ்வுடம்பு உயிருக்கு ஒதுக்கிடமேயன்றி நிலையாக வாழும் இடமன்று. எத்தனையோ பேர் நாம் கண்ணாரக் காணும்படி நடந்தார்; <உடுத்தார்; நரைத்தார்; இறந்தார். இறந்தவரைப் பற்றிச் சில காலம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். பிறகு அவரைப் பற்றி நினைப்பதும் இல்லை. அவரைப் பற்றிப் பேசுவதும் இல்லை. புதிதாக இறந்தவரைப் பற்றிப் பேசத் தொடங்கி விடுகிறோம்! உலகிலேயே மிகவும் வியப்பைத் தருவது எது தெரியுமா? <உலகில் அன்றாடம் மக்கள் இறந்து கொண்டேயிருக்கிறார்கள். அதைக் கண்டும், நான் நெடிது இருப்பேன் என்று ஒவ்வொரு வரும் நினைக்கிறார்கள். அதுதான் மிக வியப்பைத் தருவது.

நிலையற்ற உடற் பிறவியில் மாந்தர் படுந்துன்பங்கள் மூன்று வகைப்படும். அவை ஆதி பவுதிகம், ஆதி தைவிகம், ஆதி யான்மிகம் என்பவை. மழை, காற்று, வெப்பம், கால மாறுபாடு முதலிய பொது நிகழ்ச்சிகளால் வரும் துன்பங்கள் ஆதி பவுதிகம் எனப்படும். பிறப்பு இறப்புத் துன்பங்கள், எதிர்பாராத வகையில் தீப்பிடித்து மடிதல், வெள்ளத்திற்கு ஒரு சேரப் பலியாதல், கொடுமையான முறையில் சாலை விபத்து ஏற்படுதல் முதலியன ஆதி தைவிகம் எனப்படும். உடம்பிலும் மனத்திலும் வரும் பலவகை நோய்கள், மக்களாலும் பிற உயிர்களாலும் வரும் துன்பங்கள் முதலியன ஆதி யான்மிகம் என்னும் வகையில் அடங்கும். இவையே பிறவித் துன்பங்கள் எனப்படுகின்றன. அறிவுடையான் ஒருவன் தன் உடம்பின் தன்மையையும் உலகின் துன்ப நிலையையும் கருதுவானாயின் அவன் பிறவாமையைத்தான் விரும்புவான். ஆனால், நம்மில் எத்தனை பேர் பிறவாமையை நாடுகின்றனர். பெரும்பாலானவர் மேலும் அனுபவிக்க வேண்டும் என்றுதானே ஆசைப்படுகின்றனர். இஃது எதைக் காட்டுகிறது? எண்ணற்ற அருளாளர்கள் பிறவித் துன்பம் பற்றி எடுத்துக் கூறியும் அவர்கள் அதனை உணரவில்லை என்பதையே இது காட்டுகிறது.

திருக்குறள் முதலிய அற நூல்களையும், திருமுறைகள் முதலிய அருள்நூல்களையும் பயின்று தேர்ந்தவர் பலர் இருக்கிறார்கள். அவர்களும் பிறவித் துன்பத்தை உணராதவரோ என வினவலாம். ஆம் அவர்களும் உணராதவரேயாவர். உணர்தல் என்பது அனுபவமாக அறிதலைக் குறிக்கும். நெருப்புச் சுடும் என்பதை நாம் அனுபவமாக அறிந்துள்ளோம். அதனாலேயே அதற்கு அஞ்சுகிறோம். அதனை விட்டு விலகியே நிற்கிறோம். அதுபோலப் பிறவித் துன்பத்தை ஒருவர் உள்ளவாறு உணர்ந்திருந்தால் அவர் அதற்கு அஞ்ச வேண்டும். அதிலிருந்து விடுபடுவதற்கு வழி என்ன என்று தேட வேண்டும். நம்மில் பலர் நூல்கள் வழியாகப் பிறவித் துன்பத்தைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். வெறும் சொல்லளவில் அறிந்திருக்கிறார்களேயன்றி உள்ளவாறு அறியவில்லை. அவர்கள் உலக வாழ்க்கையிலே விள்ளமுடியாத விருப்பம் கொண்டிருப்பது ஒன்றே அவர்கள் பிறவித் துன்பத்தை உள்ளவாறு உணரவில்லை என்பதற்குப் போதிய சான்று ஆகும். பிறவித் துன்பத்தை அறியாமைக்குக் காரணம் என்ன? உயிரறிவில் உள்ள மறைப்பே அதன் அறியாமைக்குக் காரணமாகும். உயிர் என்ற ஒரு பொருளே இல்லை எனவும், பிறவி என்பதும் வினைத்துன்பம் என்பதும் ஆகிய எல்லாம் மக்களை ஏமாற்றுவதற்குப் புனைந்த கட்டுக் கதைகள் எனவும் சிலர் கூறுவர். அவர்களது அறிவில் உள்ள மறைப்பே உயிர், வினைத்துன்பம், மறுபிறப்பு ஆகிய இவற்றை உணரவிடாதபடி செய்து அவை இல்லை எனவும் சாதிக்கத் தூண்டுகிறது. அம் மறைப்பே ஆணவ மலம் எனப்படுகிறது.

பேரின்பம் :

உலகில் இன்பம் சிறிதாய் உள்ளது; நிலையற்றதாய் உள்ளது; துன்பம் கலந்ததாய் உள்ளது. ஆனால் இறையின்பமோ அழியாததாய், துன்பக் கலப்பே இல்லாததாய், மேலும் மேலும் வளர்வதாய் இருப்பது. அது பற்றியே அது பேரின்பம் எனப்படுகிறது. இளவேனிற் காலம். இனிய மாலைப் பொழுது. வானத்தில் முழு மதிநிலவைப் பொழிகிறது. அந்த இடம் பூக்கள் நிறைந்த பொய்கைக் கரை. அங்கே மெல்லிய பூங்காற்றுத் தவழ்ந்து வருகிறது. நல்ல வீணையின் இசை மிதந்து வருகிறது. அங்கிருந்து இவற்றையெல்லாம் ஒருங்கே நுகரும் இன்பம் எப்படிப்பட்டதோ அப்படிப்பட்ட சிறப்புடையது இறையின்பம் என்பர். கனியும் கரும்பும் இனிய பொருள்கள். அவற்றினும் மங்கை நல்லார் தரும் காதலின்பம் மிக இனியது. அவற்றையெல்லாம் விடச் சிறந்தது உலக முழுதையும் தன் அடிப்படுத்து ஆளும் அரச போகம். இப்படி அமைந்த பொருளும் பதவியும் ஆகிய இவற்றையெல்லாம் துச்சமெனக் கருதி ஒதுக்கும்படியாக எல்லையற்று விளைவதே இறையின்பம் என்பர். இப்படிப்பட்ட இறையின்பம் வெறுங் கற்பனை யன்று; ஏட்டளவில் உள்ளதும் அன்று. இப்பிறவிக்கு அப்பாற்பட்டதும் அன்று. அதனை அருளாளர்கள் அனுபவித்துப் பாடியிருக்கிறார்கள். அப் பேரின்பத்தை அனுபவித்த பிற்பாடு ஐம்பொறிகளினாலே வருகின்ற உலக இன்பம் யாவும் சுவையில்லாமற் போய்விடும். கரும்பும் துவர்த்துப் போய்விடும். செந்தேனும் கைத்துப் போய்விடும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆயினும் உலக இன்பங்களை விட்டு விட நமக்கு மனம் வரவில்லை. வேறு இன்பம் இருப்பதாகச் சொல்லியும் நாம் அதை நம்பவில்லை. பேரின்பம் என்பது உள்ளது என்று நாம் உறுதியாக நம்பியிருந்தால் அதை அடைவதற்கு என்ன வழி என்று ஆராய்ந்து அவ்வழியிலே சென்றிருப்போம். அவ்வாறு நாம் செல்லவில்லை. பேரின்பத்தில் நமக்கு உண்மையான, உறுதியான நம்பிக்கை இல்லை என்பதையே இது காட்டுகிறது. அதனாலேயே உலக இன்பங்களை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறோம். நமது அறிவில் உள்ள மறைப்பே பேரின்பத்தை நோக்க விடாமல் சிற்றின்பத்தையே நாடும்படி செய்கிறது. சிலர் பின்வருமாறு சொல்லுகிறார்கள். இப்பொழுதே பெற்று நுகர்தற்குரிய ஐம்புல இன்பம் இங்கிருக்க, இதை விட்டுப் போய் இதனினும் சிறந்த இன்பம் உண்டு என்று நம்பி அதைப் பெறுவதற்காகத் தம்மை வருத்திக் கொள்கிறார்களே, அவர்களைப் போன்ற மூடர் வேறு யாருண்டு? தாகமாக இருக்கும் போது தண்ணீர் கிடைக்கிறது. கிடைத்த நீரைப் பருகித் தாகத்தைத் தணித்துக் கொள்ளாமல் அதை வேண்டா என விலக்கி விட்டு வேறு எங்கோ ஓரிடத்தில் தண்ணீர் இருப்பதாகக் கேள்விப்பட்டு அதைத் தேடி அலைந்து துன்புறுகிற கதையைப் போன்றதே பேரின்பத்தை விரும்பிச் செல்வது என்று அவர்கள் சொல்லுகிறார்கள். அவர்களது அறிவிலுள்ள மறைப்பே இப்படியெல்லாம் அவர்களைப் பேச வைக்கிறது. அம் மறைப்பே ஆணவ மலம் எனப்படுகிறது.

துணைப்பொருள் :

நாம் பிறருக்கு உதவியாக இருக்கும் வரையில் உலகம் நம்மை மதிக்கிறது. இவரால் இனி நமக்கு உதவியில்லை என்று தெரிய வரும் போது உலகம் நம்மைப் புறக்கணிக்கிறது. எனவே உலகத்தார் உற்ற சார்பு ஆகார் என்பது விளங்கும். இது கருதியே இறைவனது திருவடி ஒன்றே உயிர்களுக்குப் பற்றுக்கோடு என்றும், பிறவித் துயரத்தைப் போக்கும் மருந்து என்றும் பெரியோர்கள் கூறியுள்ளார்கள். தாள் அலால் துணையும் இல்லை என்பது அப்பர் பெருமான் அருளிய வாக்கு. தாய்தான் மகனிடம் கடைசி வரை அன்பாக இருப்பாள். துணையாக இருப்பாள் என்பார்கள். ஆனால், அவளும் இப்பிறவியில் மட்டுந்தானே இப்படியிருக்க முடியும். இப்பொழுது தாயாக இருப்பவள் மறுபிறவியில் யார் வயிற்றிலோ பிறந்து அவளைத் தாய் தாய் என்று சொல்லுவாள். அப்பொழுது இந்த மகனை நினைக்கவா போகிறாள்.

எனக்குத் தாயாகியாள் என்னைஈங்கு இட்டுத்
தனக்குத் தாய் நாடியே சென்றாள்

என்று நாலடி கூறுகிறது. இப்படி உறவு நீங்காமல் என்றும் எல்லாவுயிர்களுக்கும் எவ்விடத்தும் தாய்போல் இருந்து அருள் புரிகின்றவன் இறைவன் ஒருவனே. தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்னடியோங்களுக்கே எனவும், புந்தி வட்டத்திடைப்புக்கு நின்றானையும் பொய்யென்பனோ எனவும் அப்பர் அருளிய மெய்ம் மொழிகள் கடவுள் உண்மையையும், உயிர்களுக்கு அவன் துணைப் பொருளாய் நிற்றலையும் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.

ஆயினும் சிலர் கடவுள் உண்மையை மறுத்துப் பின்வருமாறு கூறுவர். வண்ண மயில் கண்ணைக் கவரும் அழகினை உடையதாய் விளங்குகிறது. அதற்கு யாரும் அந்த அழகைத் தரவில்லை. சின்னக் குயில் இனிமையாகக் கூவுகிறது. அதற்கு யாரும் அந்தக் குரலினிமையைத் தரவில்லை. அவ்வாறே இவ்வுலகின் அமைப்பிற்கும் யாரும் காரணம் இல்லை. ஆனால், சமயவாதிகள் கடவுளே அனைத்திற்கும் காரணம் என்று கூறி உலகத்தாரை மயக்குகின்றனர். அவர்கள் கூற்று நகைப்பிற்குரியது. மலடிக்கு மகன் ஒருவன் இருந்தானாம்! அவன் முயற் கொம்பின் மீது ஏறினானாம்! வானத்தில் பூத்தமலரைப் பறித்தானாம்! இப்படிக் கூறினால் நகைப்புத்தானே உண்டாகும். அப்படியிருக்கிறது அவர்கள் பேச்சு. ஆதலால் இறைவன் ஒருவன் உண்டு என்பது பொய். இந்த முறையில் கடவுள் மறுப்பாளர் கூறிப் போவார். அவர்களது அறிவில் உள்ள மறைப்பே இப்படிப் பேச வைக்கிறது எனலாம். அம் மறைப்பே ஆணவ மலம் எனப்படுகிறது.

மூன்று வழிகள் :

ஒரு பொருளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு மூன்று வழி முறைகள் உள்ளன. சுருதி, யுக்தி, அனுபவம் என்பன அவை. சுருதி என்பது உயர்ந்தோர் சொன்ன நூல்கள். யுக்தி என்பது நம் பகுத்தறிவினால் ஆராய்ந்து அறிவது. அனுபவம் என்பது நம் வாழ்க்கையில் நாமே தெரிந்து கொள்வது. பவத்துயர் முதலியன உண்டு என்பதை இம் மூன்று வழிகளில் நாம் உணர்ந்து கொள்ள இயலும். அவ்வாறாகவும், மாந்தர் அவற்றை அறியாதவராய் அவை இல்லை எனவும் சாதிப்பர். ஆதலால் அதற்குக் காரணமாய் அவர்களின் அறிவை மறைத்திருக்கின்ற பொருள் ஒன்று உண்டு என்பது துணியப்படும் என்று இச் செய்யுளில் கூறுகிறார் ஆசிரியர்.

22. அக இருளாய் நிற்பது

இருளான தன்றி இலது எவையும் ஏகப்
பொருளாகி நிற்கும் பொருள்.

பொருள் : உலகத்திலுள்ள பல வகைப்பட்ட பொருள்களையும் அவைகளுடைய தன்மை தோன்றாதபடியும், அவை யாவும் தானேயாய்த் தோன்றும்படியும், மறைத்து நிற்கும் பொருள் இருளையன்றி வேறில்லை. இந்தப் புற இருளைப் போலப் பதி, பசு, பாசம் ஆகிய அறியத்தக்க பலவகைப் பொருள்களையும் அவைகளுடைய தன்மை தோன்றாதபடி மறைத்து நிற்பது ஆணவ மலம் ஆகிய அகவிருளாகும்.

சொற்பொருள் :

எவையும்    - காணத்தக்க <உலகப் பொருள் யாவும்
ஏகப் பொருளாகி    - தானேயாய்த் தோன்றி (அஃதாவது, அப்பொருள்களின் தன்மை தோன்றாதபடியும், அவை யாவும் இருளாகிய தானேயாய்த் தோன்றும்படியும் செய்து)
நிற்கும் பொருள்    - அவற்றுள் ஒன்றையும் காணவொட்டாது கண்ணை மறைத்து நிற்கும் பொருள்
இருளானது அன்றி இலது - இருள் எனப்படுகிற அவ்வொன்றை யன்றிப் பிறிதில்லை. (இஃது உவமை. இந்தப் புற இருளைப் போல, மேலே சொன்ன துன்றும் பவத்துயர் முதலிய அறியத்தக்க பொருள்களுள் ஒன்றையும் அறியவொட்டாது உயிரறிவை மறைத்து நிற்பது ஆணவ மலமாகிய அக இருளாகும் என்னும் கருத்தை இங்கு வருவித்துக் கொள்ளுதல் வேண்டும்.)

விளக்கம் :

இரவு நேரத்தில் படித்துக் கொண்டிருக்கிறோம். திடீரென்று விளக்குகள் அணைகின்றன. எங்கும் ஒரேயிருள். பக்கத்தில் உள்ள பொருள்கூடத் தெரியவில்லை. மெழுகுவர்த்தியைத் தேடலாம் என்று எழுகிறோம். சில அடி தூரம் நடந்திருப்போம். அங்குள்ள சுவரில் தெரியாமல் முட்டிக் கொள்கிறோம். வழியில் ஒரு நாற்காலி கிடக்கிறது. அது நமக்குத் தெரியவில்லை. அது நம் காலை இடறிக் காயப்படுத்துகிறது. அதையும் தாண்டிச் செல்லும்போது கீழே கிடந்த கயிற்றின் மீது காலை வைக்கிறோம். என்னவோ, ஏதோ என்ற பதைப்புடன் தாவிக் குதிக்கிறோம். நல்ல வேளையாக அப்பொழுது விளக்குகள் எரியத் தொடங்குகின்றன. அந்த விளக்கொளியில் கீழே கிடந்தது கயிறுதான் என்பதைத் தெரிந்து கொண்டு ஆறுதல் அடைகிறோம். இந்த நிகழ்ச்சியில், சுவர் சுவராகத் தோன்றவில்லை. நாற்காலி நாற்காலியாகத் தோன்றவில்லை. கயிறு கயிறாகத் தோன்றவில்லை. எல்லாம் இருளாகத் தோன்றுகின்றன. இருள் அவற்றின் தன்மையை மறைத்து, எவையும் தானேயாய்த் தோன்றும்படி நிற்கிறது. இந்தப் புற இருளைப் போல இறை, உயிர், உலகம் ஆகியவற்றின் தன்மையைத் தெரியவொட்டாதபடி உயிரறிவை மறைத்து நிற்கின்ற அகவிருள் உண்டு. அதுவே ஆணவம் எனப்படுகிறது. அது பிறவித் துன்பத்தை மறைத்து அதை இன்பமாகக் காட்டி அதன் மீது ஆசை கொள்ளும்படி செய்யும். அழியாத வீட்டின்பத்தை மறைத்து அதைப் பெறுதற்குரிய வழியிற் செல்லவிடாது தடுக்கும். இறைவனைப் பற்றிய எண்ணம் எழாதபடி மறைத்து அகந்தையை உண்டாக்கி மயக்கும்.

இந்த ஆணவத்தின் செயற்பாட்டினைச் சூரபன்மனின் நடத்தையில் நன்கு காணலாம். போர்க்களத்தில் சூரபன்மன் முருகப் பெருமானது பேருருவக் காட்சியினைக் கண்டு நல்லுணர்வு பெற்றான். இவர்தான் யாவர்க்கும் தலைவர் என்று தெளிந்தான். இவரை வலம் வர வேண்டும்; கை குவித்து வணங்க வேண்டும்; இவருக்கு அடிமையாய் வாழவேண்டும் என்றெல்லாம் எண்ணினான். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. மாண் பிறந்த மானம் அவனைத் தடுத்துவிட்டது. அதுவும் ஆணவத்தின் வெளிப்பாடுதான். அகந்தை பழையபடி தலையெடுத்தது. என்னைப் போன்ற வீரன் யார் இருக்கமுடியும்? முருகப் பெருமானுக்கு நேர் நின்று போர் செய்தேன் என்ற புகழ் எனக்கு எப்போதும் இருக்கும். இந்த உடம்பு நில்லாது. இது போனால் போகட்டும் என்று சொல்லிப் போர் செய்யப் புறப்பட்டான். நன்மை தராது எனத் தெரிந்த பின்பும், முன் தொடங்கிய செயலை விடாமல் செய்து முடிக்கப் புறப்பட்ட சூரபன்மன் ஆணவத்திற்கு நல்ல எடுத்துக்காட்டு. முந்திய செய்யுளில் ஆணவம் என்றொரு பொருள் உண்டு என்று கூறி அதன் உண்மையைச் சுட்டினார் ஆசிரியர். இச்செய்யுளில் அஃது இருள் போன்றது என்று கூறி அதன் இயல்பைச் சுட்டினார்.

23. அக இருள் புற இருளினும் கொடியது

ஒரு பொருளும் காட்டாது இருள் உருவம் காட்டும்
இரு பொருளும் காட்டாது இது.

பொருள் : புற இருள் ஒரு பொருளையும் காண ஒட்டாதபடி நமது கண்ணை மறைத்து விடும். ஆயினும் தன்னைக் காட்டி நிற்கும். அஃதாவது, தான் ஒரு பொருள் உண்டு என்பதை நாம் உணர நிற்கும். அக இருளாகிய இந்த ஆணவ மலம் இறைவன். உயிர் முதலிய பிற பொருள்களையும் அறிய வொட்டாது. தன்னையும் காட்டிக் கொள்ளாது. இவ்வாறு பிற பொருள், தான் என்ற இரண்டையும் நாம் அறிய முடியாத வகையில் நமது அறிவை மறைத்து நிற்கும்.

சொற்பொருள் :

இருள் - புற இருள்
ஒரு பொருளும் காட்டாது - உலகப் பொருள்களுள் ஒன்றையும் காண ஒட்டாது கண்ணை மறைத்து நிற்கும். (ஆயினும்)
உருவம் காட்டும் - தனது இருப்பை நாம் உணர நிற்கும். (ஆனால்)
இது - அக இருளாகிய இந்த ஆணவ மலமோ
இரு பொருளும் காட்டாது - பிற பொருள், தான் என்னும் இரு பொருள்களையும் நாம் அறிய முடியாத வகையில் நமது அறிவை மறைத்து நிற்கும்.

விளக்கம் :

கண் வேறாகவும், உயிராகிய நாம் வேறாகவும் இருக்கிறோம். புற இருள் வந்து கண்ணை மறைக்கும்போது பொருள்களைக் காணும் காட்சி தடைப்படுகிறது. கண் வழியாகப் பார்த்தறிகின்ற நாம் கண்ணுக்கு வேறாக இருப்பதனாலே கண் செயற்படாதபோது அதை வைத்துக் கண்ணை மறைக்கின்ற இருள் வந்துற்றது என்பதை அறிந்து கொள்கிறோம். அவ்விருளுக்கு மாற்றுப் பொருள்களாகிய விளக்கு முதலியவற்றின் உதவியை நாடி அவ்விருளை அகற்ற முயல்கிறோம். புற விருளை உணர முடிவதனாலேயே அதனை நீக்குகிற முயற்சியும் எழுகிறது. இது பற்றியே இருள் உருவம் காட்டும் என்றார் ஆசிரியர். உருவம் என்பதற்கு இருப்பு என்பது பொருள். புறவிருள் உயிருக்கு வேறாகிய கண்ணைத்தான் மறைக்கிறது. அக இருளாகிய ஆணவமோ உயிரறிவை மறைத்து அதற்கு அறியாமையை உண்டாக்குகிறது. <உயிர் தனது அறிவிலுள்ள மறைப்பினைச் சிறிதும் உணர முடிவதில்லை. அம் மறைப்பினால் உண்டாகும் அறியாமையையும் தெரிந்து கொள்வதில்லை. மாறாக, அவ் வறியாமையையே அறிவு என்று நம்பி விடுகிறது! தேர்வறையில் எழுதும் மாணவர்கள் இதற்குத் தக்க எடுத்துக்காட்டு ஆவர். அவர்கள் சில கேள்விகளுக்குத் தவறாகவே விடையெழுதிக் கொண்டிருப்பார்கள். ஆனால், அது அவர்களுக்குத் தெரிவதில்லை. தாம் எழுதுவது சரியான விடையே என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் அறியாமையில் இருந்த போதிலும் அதுவே அவர்களுக்கு அறிவாகத் தோன்றுகிறது! அதனாலேயே அப்படி நினைக்கிறார்கள். நம்மிடத்தில் அறியாமை இருப்பது தெரிந்தால் அல்லவா அதற்கான காரணம் யாது என ஆராய்ந்து அதனை நீக்கிக் கொள்ள முயல்வோம்? அறியாமையே அறிவு போலத் தோன்றும் போது அறியாமை பற்றிய ஆராய்ச்சி எப்படி உண்டாகும்? அதனை நீக்குகிற முயற்சியும் எப்படி உண்டாகும்? இவ்வாறு உயிர் தன்னறிவை ஒன்று மறைத்து நிற்கிறது என்பதை எவ்வகையிலும் உணர முடியாமற் போகிறது.

உயிரறிவை மறைத்து ஆணவம் செய்கின்ற காரியங்கள்தாம் எத்தனை! எத்தனை! சிலவற்றை இங்கே காட்டுவோம். சிலர் யார் என்ன அறிவுரை கூறினாலும் தான் பிடித்த தவறான போக்கை விடுவதில்லை. இன்னும் சிலர் மற்றவரின் கருத்து என்னவென்று தெரிந்து கொள்ளத் துளியும் விரும்ப மாட்டார்கள்; தங்கள் கருத்தை அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பாகுபடுவார்கள். ஒப்புக் கொள்ளாதவரை விடமாட்டார்கள்! சிலர் எதிரில் இருப்பவரின் கருத்துத் தவறு என்று காட்டுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அவரை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும். அவமானப்படுத்த வேண்டும் என்பதிலேயே குறியாக இருப்பார்கள். மற்றும் சிலர் பிறரிடம் தகுதியிருந்தாலும் அதை மதிக்க மாட்டார்கள். தம்மிடம் தகுதியில்லாத போதிலும் தம்மையே பெரிதாக மதித்து மகிழ்வார்கள். இவர்கள் இப்படி நடந்து கொள்ளும் போது இவ்வியல்பு தம்மிடம் இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. இப்படி நடந்து கொள்ளும் போக்கிற்குக் காரணமாயிருப்பது தம்மிடமுள்ள ஆணவ மலம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள். ஆணவ மலம் தன்னைக் காட்டாமல் எண்ணிறந்த வகைகளிற் செயற்படும் என்பதை, மாந்தர் இப்படியெல்லாம் நடந்து கொள்ளும் விதங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

ஆணவ மலத்தின் இயல்பை உமாபதி சிவம் போல எடுத்துக் காட்டியவர்கள் வேறு யாறுமில்லை. உலகில் இருளை விட இருண்ட பொருள் உண்டா? உண்டு. உயிர்களிடத்தில் அஞ்ஞானமாகிய மயக்கத்தைச் செய்கின்ற ஆணவமலம் அப்படிப்பட்ட பொருள். அதன் முன்னால் உலகத்து இருளும் ஒளி என்று சொல்லும்படி ஆகிவிடும் என்றால் அந்த ஆணவ மலம் எவ்வளவு இருண்டதாக இருக்க வேண்டும்! இக் கருத்துப்பட இருள் ஒளிர இருண்ட மோகமாய், அறிவு முழுதினையும் மறைக்கும் என்று சிவப்பிரகாசத்தில் (செ.20) கூறினார் ஆசிரியர். மேலும் ஆணவமலம் தானொரு பொருள் இல்லை என்னும்படி உயிரில் பொருந்தியிருக்கும் எனவும், ஆணவம் உளது என்பதைத் திருவருள் துணையால் அறியலாமே யன்றி வேறு எவ்வகையாலும் அறிதல் இயலாது எனவும் அந்நூலிற் கூறியுள்ளமை (செ.36) அறியற்பாலது. இப்படி ஆணவம் தன்னைக் காட்டாததோடு, துன்றும் பவத்துயறும் இன்பும் துணைப் பொருளும் ஆகிய பிற பொருள்களையும் உணர விடாமற் செய்யும். இதுபற்றியே இரு பொருளும் காட்டாது இது என்றார் ஆசிரியர். முந்திய செய்யுளில் ஆணவம் இருள் போன்றது என்று குறிப்பிட்டார். இச் செய்யுளில் அஃது இருளினும் வலியது என்று கூறி அதன் கொடுமை மிகுதியை உணர்த்தினார்.

24. இன்று வரையிலும் நீங்காது உள்ளது

அன்று அளவி உள்ளொளியோடு ஆவியிடைஅடங்கி
இன்று அளவும் நின்றது இருள்.

பொருள் : உயிரிடத்தில் இரண்டறக் கலந்து நிற்கின்ற உள்ளொளியாகிய இறைவனோடு ஆணவமாகிய இருளும் அன்றே உடன் கலந்திருக்கிறது. அந்த இருள் இறைவனுக்குக் கீழ்ப்பட்டதாய் அடங்கி உயிரை மட்டுமே பற்றி நிற்கிறது. அன்று தொட்டு இன்று வரையிலும் உயிரை விட்டு நீங்காமலே உள்ளது.

சொற்பொருள் :

இருள்    - அக இருளாகிய ஆணவ மலம்
ஆவியிடை    - உயிரிடத்தில்
உள்ளொளியோடு - அக ஒளியாகிய இறைவனோடு
அன்று அளவி    - (தானும்) அநாதியே இரண்டறக்கலந்து
அடங்கி    - இறைவனுக்குக் கீழ்ப்பட்டதாய் அடங்கி
இன்றளவும்    - இன்று வரையிலும்
நின்றது    - நீங்காமல் உள்ளது.

விளக்கம் :

ஒளி, இருள் :

உயிரோடு இறைவன் இரண்டறக் கலந்திருக்கின்ற போது அவனுக்கு எதிராகிய ஆணவ மலமும் உயிரில் உடன் கலந்துள்ளது என்பது எங்ஙனம் கூடும் என வினவலாம். ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் என்பதை அறிந்தால் இந்த வினா எழாது. பகலில் ஒளியும் இருளும் ஓரிடத்தில் தான் உள்ளன. ஒளி மேலிட்டபோது இருள் அந்த இடத்தை விட்டு ஓடிவிடவில்லை. அதே இடத்திலேயே மடங்கிப் போய் சிறிதும் புலனாகாமல் உள்ளது. ஆனால், உலக வழக்கில் இருள் நீங்கியதாகச் சொல்லுகிறோம். அதன் பொருள், இருள் ஒளி முன்னர் தன் சத்தி கெட்டு மடங்கிக் கிடக்கிறது என்பதேயாகும். விளக்கு மெலிகின்றபோது அதுகாறும் அவ்விடத்தில் மடங்கி நின்ற இருள் மேலிடும். இதனை விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல் என்று திருக்குறள் கூறும். உயிரிடத்தில் ஒளியாகிய இறைவனும் இருக்கிறான். இருளாகிய ஆணவ மலமும் இருக்கிறது. இரண்டிற்கும் இடம் உயிர்தான். ஆயின் அகவொளியாகிய இறைவன் முன் அக விருளாகிய ஆணவம் என்றும் கீழ்ப்பட்டதாய் அடங்கியே நிற்கும் என அறியலாம்.

கடல், நீர், உப்பு :

பதியாகிய இறைவன், பசுவாகிய உயிர், பாசமாகிய ஆணவம் ஆகிய இம்முப்பொருள்களும் ஒன்றாய்க் கலந்தே உள்ளன. அவை கலந்து நிற்கும் முறையை ஓர் எடுத்துக் காட்டினால் விளங்கிக் கொள்ளலாம். கடல்வெளி என்பது விரிந்தது. அதில் நீர் நிறைந்திருக்கிறது. அந்நீரில் உப்புக் கலந்திருக்கிறது. கடலும் நீரும் உப்பும் ஆகிய மூன்றும் ஒன்றாய்க் கலந்தே உள்ளன. விரிந்த அக்கடல் வெளியைப் போன்றவன் இறைவன். அதில் அடங்கியிருக்கும் நீர் போன்றது உயிர். அந்நீரில் கலந்திருக்கும் உப்புப் போன்றது ஆணவ மலம். இறைவன், உயிர், ஆணவம் ஆகிய மூன்றும் ஒன்றாய்க் கலந்தே நிற்பினும் அவை தம்முள் சமம் ஆகா என்பதை இவ்வுவமையால் அறியலாம். இறைவனில் உயிரும், உயிரில் ஆணவமும் அடங்கி நிற்பனவாகும். கடல்வெளி நீருக்கும் நீரிலுள்ள உப்புக்கும் ஆதாரமாக இருப்பது போல, இறைவனே ஏனைய பசு, பாசங்களையெல்லாம் தன்னில் அடக்கிக் கொண்டு அவற்றிற்குத் தானே ஆதாரமாய் நிற்கின்றான். தன்னுள் பிறவற்றை அடக்கி நிற்கின்ற பெருநிறைவை வியாபகம் என்பர். அதனுள் அடங்கி நிற்பதை வியாப்பியம் என்பர். எனவே இறைவன் வியாபகம், ஏனையவை அவனில் வியாப்பியம். உப்பு பருப்பொருள் ஆதலின் அது நுண்ணியதாகிய கடலைப் பற்றுவதில்லை; பருப்பொருளாகிய நீரையே பற்றி நிற்பதாகும். கடலும், நீரும் ஆகிய இரண்டும் ஒருங்கு இருக்கவும் எப்படி உப்பு கடலைப் பற்றுவதில்லையோ அப்படியே இறைவனும் உயிரும் ஆகிய இரண்டும் ஒருங்கு இருக்கவும் ஆணவம் நுண் பொருளாகிய இறைவனைப் பற்றுவதில்லை; பருப்பொருளாகிய உயிரையே பற்றி நிற்பதாகும்.

25. இருட்பாவை

பலரைப் புணர்ந்தும் இருட் பாவைக்கு உண்டுஎன்றும்
கணவர்க்கும் தோன்றாத கற்பு.

பொருள் : அக இருளாகிய பெண் ஆன்மாக்களாகிய ஆடவர் பலரோடு சேர்ந்திருப்பவள். ஆயினும், அந்த அந்த ஆன்மாவாகிய கணவர்க்குத் தன் உண்மை யியல்பை அவள் என்றுமே காட்டிக் கொள்ளமாட்டாள்; தன்னைச் சிறந்தவளாகவே காட்டி நிற்பாள்.

சொற்பொருள் :

இருட்பாவைக்கு        - ஆணவம் என்னும் பெண்ணுக்கு
பலரைப் புணர்ந்தும்     - அவள் ஆன்மாக்களாகிய ஆடவர் பலரோடு தொடர்பு கொண்டிருந்தும்
என்றும் கணவர்க்கும் தோன்றாத    - அந்த அந்த ஆன்மாவாகிய கணவர்க்குத் தனது உண்மையியல்பை என்றுமே காட்டிக் கொள்ளாத
கற்பு உண்டு        - கற்பு நிலை உள்ளது.

விளக்கம் :

உமாபதி சிவம் அறியாமையை ஒரு பெண்ணாக உருவகம் செய்து இருட்பாவை என்று குறிப்பிடுகிறார். அப்பெண் ஒழுக்கமில்லாதவள்; ஆடவர் பலரின் பின் திரிபவள். ஆனாலும் அவள் தனது கணவன் எதிரில் கற்பிற் சிறந்த பெண்ணாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறாள். அவனும் அவளை நம்பி விடுகிறான். இத்தகைய பத்தினைப் பெண் தனக்கு மனைவியாக வாய்த்ததை எண்ணிப் பெருமைப்படுகிறான். அவள் தனது உண்மை யியல்பை மறைத்துச் சிறந்தவளாகத் தன்னைக் காட்டுவது போல, அறியாமையும் தன்னை மறைத்து அறிவு போலக் காட்டி நிற்கிறதாம்! நாம் ஒரு காரியத்தில் ஈடுபடுகின்றோம். அச் செயலில் இடையிடையே சில தவறுகளையும் செய்கின்றோம். அத்தவறுகளைச் செய்கின்றபோது நாம் தவறாகச் செல்லுகின்றோம் என்பது நமக்குத் தெரிவதில்லை. அறியாமை காரணமாகவே அத் தவறுகளைச் செய்கின்றோம் என்பதும் தெரிவதில்லை. நாம் சரியாகச் செயல்படுவதாகவே நினைத்துக் கொள்கிறோம். நம்மிடத்திலுள்ள அறியாமை அறிவு போலவே தன்னைக் காட்டி நின்று மயக்குவதால் தவறான செயலும் சரியான செயலாகவே நமக்குப்படுகிறது. ஒருவர் மேற்கொள்ளுகிற ஒழுக்கம் தீயதாயினும் அதனைத் தனக்கு நன்மை பயப்பதாகவே அவர் எண்ணுகிறார். அவ்வாறு எண்ணும் படியாகச் செய்கிறது அவரிடமுள்ள அறியாமை. குடிப்பழக்கம், போதைப்பழக்கம் முதலியன உடையவர்கள் அவ்வழக்கம் உடலுக்குத் தீங்கு பயப்பதாயினும் அதனை விடாமையோடு, அது தமது உடலுக்கு <உறுதியளிக்கிறது என்றும் வாதிடுவார்கள்! அறியாமை அறிவு போலக் காட்டி நிற்கும் இடங்களில் இதுவும் ஒன்று.

அறியாமை செய்யும் இவ்வஞ்சனையைக் கருதியே அதனை, கணவனிடம் தன்னைச் சிறந்தவளாகக் காட்டிக் கொள்ளும் நல்லொழுக்கம் இல்லாத பெண்ணாக உருவகப்படுத்தினார் ஆசிரியர் என்பது அறிதற்குரியது. ஒருவர் அறியாமையில் இருக்கின்ற வரையில் தாம் அறியாமைப் பட்டிருப்பதை அவர் உணர்வதில்லை. பித்துப் பிடித்த ஒருவன் தனக்குப் பித்துப் பிடித்திருக்கிறது என்பதை அறிய மாட்டாதது போன்றது இந்நிலை. எப்பொழுது தன் அறியாமையை உணரலாம் என்றால், அறியாமை நீங்கி உண்மையறிவு வந்தபோதே நாம் இதுகாறும் அறியாமையில் இருந்தோம் என்பதை அறியமுடியும். நாடாளுவோர் தேர்தல் காலத்தில் ஊர் ஊராகச் சூறாவளிப் பயணத்தை மேற்கொள்வார்கள். தமது பேச்சைக் கேட்க வரும் கூட்டத்தைப் பார்த்து மக்கள் என் பக்கம் என்று தவறாக எண்ணிக் கொள்வார்கள். செய்தித் தாள்கள் வேறு விதமாக எழுதினால் அதனை நம்ப மாட்டார்கள். அவர்கள் அறியாமையில் இருக்கின்ற வரையில் தமது அறியாமையை எப்படி உணர முடியும்? தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் வெளிவரும்போது தான் அடடா! நாம் தவறாக அல்லவா மதிப்பீடு செய்து விட்டோம் என்று தமது அறியாமையை உணர்வார்கள். பின்னால் உண்மை யறிவு வரும்போது தான் முன்னே இருந்த அறியாமை புலப்படும் என்பதற்கு இது ஒரு சான்று. இதனையே அறிதோறறியாமை கண்டற்றால் என்று குறிப்பிட்டார் வள்ளுவப் பெருந்தகையார்.

26. அறியாமையை விளைவிப்பது ஆணவ மலமே

பன்மொழிகள்என்? உணரும் பான்மை தெரியாத
தன்மை இருளார் தந்தது.

பொருள் : பல சொற்கள் எதற்கு? முடிவாகச் சொன்னால் உயிரினது அறியுந்தன்மையை விளங்க வொட்டாதபடி தடுப்பது இருளாகிய ஆணவ மலத்தின் செயலாகும்.

சொற்பொருள் :

பன்மொழிகள் என்?    - ஆணவ மலம் பற்றிப் பலவாறு சொல்லுதல் எதற்கு?
உணரும் பான்மை    - உணரும் தன்மை உடையதாகிய உயிருக்கு அத்தன்மை
தெரியாத தன்மை    - தோன்றாத நிலை
இருளார்தந்தது        - ஆணவ மலமாகிய இருளால் வந்ததாகும்.

விளக்கம் :

உயிர் அறிவுடைய பொருள். ஆனால், அதனிடத்தில் அறியாமையும் காணப்படுகிறது. பல சமயங்களில் அதன் அறிவு விளங்காமற் போகிறது. அந்த அறியாமைக்கு - அறிவு விளங்காமைக்குக் காரணம் எதுவாக இருக்கும்? இந்த வினாவை எழுப்பிக் கொண்டு சமயவாதிகள் அதற்குப் பலவிதமான விடைகளைக் கூறியுள்ளனர்.

உயிரிடத்தில் அறியாமை யிருப்பது இயற்கை. அதற்குப் போய்க் காரணம் தேடுவது ஏன்? என்று ஒரு சாரார் கூறுவர். இஃது ஏற்கக் கூடியதன்று. ஒரு பொருளிடத்தில் இரண்டு மாறுபட்ட தன்மைகள் இயற்கையாக இருக்க முடியாது. அப்படி மாறுபட்ட தன்மைகள் காணப்பட்டால் அவற்றுள் ஒன்றை அதன் இயற்கை என்றும், மற்றொன்றைச் செயற்கை என்றும் கொள்ள வேண்டும். காட்டாக, நீரிடத்தில் குளிர்ச்சியும், மற்றொரு சமயத்தில் அதற்கு மாறாகிய வெப்பமும் காணப்பட்டால் வெப்பத்தைத் தீயின் சேர்க்கையால் வந்த செயற்கை எனவும், குளிர்ச்சியே நீருக்கு இயற்கை எனவும் கூறுகிறோம். அம்முறையில், உயிரிடத்தில் அறிவும் அதற்கு மாறாகிய அறியாமையும் காணப்படுவதனால் அவற்றுள் ஒன்றுதான் உயிருக்கு இயற்கையாகும். மற்றொன்று பிறிதொரு காரணத்தால் வந்த செயற்கையாகத்தான் இருக்க முடியும். அப்படிப் பார்த்தால் அறிவுப் பொருளாகிய உயிருக்கு அறிவுதான் இயற்கை என்பது சொல்லாமலே விளங்கும். அறியாமை என்பது அதற்கு வேறொரு காரணத்தால் வந்த செயற்கை என்று கூறிவிடலாம். இதனால், செயற்கையாய் வந்த அறியாமையை உயிரின் இயற்கை என்றல் பொருந்தாது என்பது விளங்கும்.

இனி, பிறப்பு நிலையில் உயிர் உடம்பின் சேர்க்கையைப் பெற்று நிற்கிறது. அறிவில்லாத உடம்பின் சேர்க்கையினாலே தான் உயிருக்கு அறியாமை உண்டாகிறது என்று கூறுகின்ற மதங்கள் உண்டு. இஃது அனுபவத்திற்கு ஒவ்வாத கருத்தாகும். உடம்பு ஊக்கமோடு செயற்படுகின்ற காலத்தில் உயிருக்கு அறிவு நன்கு விளங்குகிறது. உடம்பு செயலற்றுக் கிடக்கின்ற உறக்க நிலையிலும் மூர்ச்சை நிலையிலும் அறிவு சிறிதும் நிகழவில்லை என்பது அனுபவமாக அறிந்தது. இதனால், உடம்பின் சேர்க்கையால்- செயற்பாட்டினால் உயிருக்கு அறிவு விளங்குமே யன்றி மறைவதில்லை என்பது தெளிவாகும். இதுபற்றியே, உடம்பினால் உயிருக்கு அறியாமை உண்டாகவில்லை என்றும், அறிவை மறைத்து அறியாமையை உண்டாக்குகின்ற வேறொரு பொருள் இருத்தல் வேண்டும் என்றும் சைவ சித்தாந்தம் கொள்கிறது.

இனி, கன்மம் என ஒன்று உள்ளது என்பதையும், அதுவே உயிர்களின் இன்ப துன்பங்களுக்குக் காரணம் என்பதையும் பலரும் ஒப்புக் கொள்வர். அந்தக் கன்மமே உயிர்களின் அறிவைத் தடுத்து அறியாமையை உண்டாக்கும் என்று சில சமயவாதிகள் கூறுகின்றனர். கன்மம் செயற்படும் முறையை அறிந்தோமானால் இக்கருத்துப் பொருந்தாது என்பது புலனாகும். கன்மம் ஒருவருக்குத் தீமை தரவேண்டும் என்று இருந்தால் அந்த நேரத்தில் அக் கன்மம் அவருடைய அறிவைத் தூண்டித் தீமை வரும் வகையில் செலுத்தும். காட்டாக, ஒருவர் இரு சக்கர வண்டியில் சென்று கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். எப்பொழுதும் மெதுவாக வண்டியை ஓட்டுவதே அவர்க்கு இயல்பு. ஆனால், இந்த நேரத்தில் அவர் படுகாயம் அடைந்து துன்பப்பட வேண்டும் என்று இருக்கிறது. ஆனால், அது அவருக்கு எப்படித் தெரியும்? அதற்கு ஏற்ப அவருடைய கன்மம் அவரது அறிவைச் செ<லுத்துகிறது. அதிவேகமாக வண்டியை ஓட்டும்படி அவரது அறிவைத் தூண்டுகிறது. அந்த விதி வழியே அவரது மதி செல்கிறது. விதி செலுத்த அவரும் விரைந்து வண்டியை ஓட்டுகிறார். அந்த விரைவு விபத்திலே முடிகிறது.

இவ்வாறே கன்மம் ஒருவருக்கு நன்மைதர வேண்டும் என்று இருந்தால் அந்த நேரத்தில் அக்கன்மம் அவருடைய அறிவை நல்ல முறையில் தூண்டி நன்மை வரும் வகையில் செலு<த்தும். மந்த அறிவுடைய ஒருவரையும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் சிறப்பாகச் செயல்படும்படி தூண்டி அவரது கன்மம் அவருக்கு வெற்றியையோ, எதிர்பாராத பெரும் பயனையோ தேடித்தந்து விடும். இந்த நிகழ்ச்சியிலிருந்து ஓர் உண்மை தெரிய வரும். கன்மம் தன்னைச் செய்தவருக்கு நன்மை விளையும் முறையிலோ, தீமை விளையும் முறையிலோ அவரது அறிவைத் தூண்டி விடுமே யன்றி, அவரது அறிவைத் தடுத்து அறியாமையை உண்டாக்காது என்பது அந்த உண்மையாகும். அறிவைத் தடுத்து அறியாமையை உண்டாக்குவது கன்மமே என்றால் அதனால் உயிருக்குத் துன்பம் மட்டுமே வரவேண்டும். ஆனால், முன்னே கூறியபடி கன்மம் அறிவில்லாதவரையும் அறிவுத் திறனுடன் செயல்படும்படி வைத்து அவருக்கு இன்பம் பயப்பதையும் உலகியலில் காண்கிறோம். ஆதலால் கன்மத்திற்கு வேறாய், உயிரின் அறிவைத் தடை செய்யும் பொருள் ஒன்று இருத்தல் வேண்டும் என்று தெரிகிறது. அந்தப் பொருளையே ஆணவ மலம் என்று சைவ சித்தாந்தம் குறிப்பிடுகிறது. இதுகாறும் கூறியவற்றால் உயிரின் அறியாமைக்கு உடம்பின் சேர்க்கையே காரணம்; கன்மமே காரணம் என்பார் கூற்றுக்கள் பொருந்தா என்பது புலனாகும். ஆசிரியர் உமாபதிசிவம் பன்மொழிகள் என்? என்ற தொடரில், இன்ன பல கொள்கைகளையெல்லாம் குறிப்பாய் மறுத்துள்ளார் என்று கொள்ளலாம்.

27. ஆணவம் உயிரின் குணம் அன்று

இருள்இன்றேல் துன்புஎன்? <உயிர் இயல்பேல் போக்கும்
பொருள் உண்டேல் ஒன்றாகிப் போம்.

பொருள் : ஆணவம் என்ற அக இருள் இல்லையாயின் உயிர்களுக்குத் துன்பம் உண்டாவதற்குக் காரணம் யாது? இந்த ஆணவம் உயிரின் குணம் என்றால், அதனைப் போக்கும் பொருளாகிய திருவருளால் அது கெடும் பொழுது, குணமாகிய அது கெடவே உயிரும் அதனோடு இல்லையாய் ஒழியும். ஆனால், முத்தி நிலையில் ஆணவம் மட்டுமே கெட, உயிர் அழியாதிருத்தலால் ஆணவம் உயிரின் குணமன்று. அஃது உயிருக்கு அநாதியே உள்ள குற்றம் என்பது புலனாகும்.

சொற்பொருள் :

இருள்இன்றேல்    - ஆணவ மலமாகிய அகவிருள் இல்லையென்று சொன்னால்
துன்புஎன்    - ஆன்மாக்களுக்குத் துன்பம் உண்டாவதற்கு வேறு என்ன காரணம்?
உயிர் இயல்பேல்- இந்த ஆணவம் ஆன்மாவின் குணமே யன்றி, அதனின் வேறாகிய ஒரு தனிப்பொருள் அன்று என்று சொன்னால்
போக்கும் பொருள் உண்டேல் - அதனைப் போக்கும் பொருளாகிய திருவருளால் அது கெடுமாயின்
ஒன்றாகிப் போம் - குணமாகிய அது கெடவே, ஆன்மாவும் அதனோடு இல்லாதொழியும்.

விளக்கம் :

இருளும் துன்பமும் :

இரவு நேரத்தில் இருள் நமக்கு இடர்ப்பாட்டினை உண்டாக்குகிறது. அன்று இரவுக்குள் செய்து முடித்தாக வேண்டும் என்ற நிலையில் நாம் ஒரு வேலையில் ஈடுபட்டிருப்போம். அந்த நேரம் பார்த்து மின் தடை ஏற்பட்டு விளக்கு எரியாது போகும். அந்த இருட்டில் என்ன செய்ய முடியும்? எதைப் பார்க்க முடியும்? மின்வரவை எதிர்பார்த்துக் கொண்டு இருளில் செய்வதறியாது விழித்து நிற்போம்! மிகுந்த நேரம் ஆகியும் மின்சாரம் வராது. இது என்ன சோதனை! நமது பாடு எப்படியிருக்கும்? இருள் தருகிற துன்பம் இது. இந்த இருள் வேறொரு வகையிலும் துன்பம் தருவதுண்டு. இரவு நேரத்தில் விளக்கைப் பிடித்துக் கொண்டு நடந்து செல்கிறோம். பாதை ஒழுங்காக இல்லை. மேடும் பள்ளமுமாக உள்ளது. விளக்கொளியைத் துணையாகக் கொண்டு நடந்தும் ஓரிடத்தில் குழியில் தடுமாறி விழுகிறோம். காலை ஒடித்துக் கொள்கிறோம். இந்தத் துன்பத்திற்கு எது காரணம்? இருள்தான் காரணம். மங்கலான விளக்கொளியில் இருள்தான் குழியை வழி போலத் தவறாக உணரும்படி செய்து அதில் கால் வைக்கும் படியும் செய்தது. அதனால் வந்த துன்பம் இது. முதல் நிகழ்ச்சியில் இருள், பார்வையை முற்றிலும் மறைத்து ஒன்றையும் அறியவொட்டாதபடி செய்து அதனால் துன்பத்தை விளைவித்தது. அடுத்த நிகழ்ச்சியில் இருள், பார்வையை மயக்கித் தவறாக உணரும்படி செய்து துன்பத்தைத் தந்தது. இவ்வாறு இருள் இரு விதங்களில் செயற்பட்டுத் துன்பந்தரும் என்பதை அறியலாம்.

இந்தப் புற இருளைப் போன்றது அக இருளாகிய ஆணவம். புற இருளைப் போல ஆணவமும் இரு நிலைகளிற் செயற்பட்டு உயிர்களின் துன்பத்திற்குக் காரணமாகும். அநாதி நிலையில் ஆணவ இருள் உயிர்களை முழுவதும் மறைத்து முழு மூடமாக்கித் துன்பத்தில் மூழ்கச் செய்யும். இது, இரவு நேரத்தில் இருள் கண்ணை முழுதும் மறைத்து ஒன்றையும் அறிய விடாமற் செய்த நிலையைப் போன்றது. பின்னர் ஆணவ இருள், உயிர்கள் பிறப்பிற்கு வந்த சகல நிலையில், சிறிது விளங்கிய உயிர்களின் அறிவைத் திரிவு படுத்தி மயக்கிப் பொருள்களைத் தவறாக உணரும்படி செய்து பெருந்துன்பத்தில் ஆழ்த்தும். இது, சிறிது வெளிச்சமுள்ள நேரத்தில் இருள் பார்வையை வேறுபடுத்திக் குழியை வழி என்று தவறாகக் கருதும்படி செய்த நிலையைப் போன்றது. ஆணவத்தின் செயற்பாடும் அதனால் உண்டாகும் துன்பமும் பற்றி முன்னே 20 ஆம் செய்யுளின் உரையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, எல்லா வகையான துன்பத்திற்கும் அடிப்படைக் காரணம் ஆணவ இருளே யாகும். இது கருதியே, இருள் இன்றேல் துன்பு என் என வினவுகிறார் உமாபதி சிவம்.

ஆணவம் உயிரின் குணமன்று :

ஆணவம் உயிரிடத்தில் தொன்று தொட்டு உடனாக உள்ளதே. அதனை உயிரின் குணம் என்று கொண்டால் என்ன? என்று கேட்கலாம். ஒரு பொருளிடத்தில் உடன் தோன்றுவதெல்லாம் அதன் குணம் என்று சொல்வதற்கில்லை. எடுத்துக் காட்டாகச் செம்பினிடத்தில் களிம்பு உடன் தோன்றுகிறது. அதனைச் செம்பினது குணம் என்று கூறுவார் இல்லை. களிம்பு செம்பிற்குக் குற்றமே யன்றிக் குணமாகாது. அரிசி தோன்றிய அன்றே அதனிடத்தில் உமியும் அமைகின்றது. உமி அதற்குக் குற்றமே யன்றிக் குணமாகாது. ஒரு பொருளுக்குக் குணம், குற்றம் என்ற இரண்டு உண்டு. இரண்டும் பொருளிடத்தில் முதலிலேயே உள்ளவை யாயினும் குணம் என்பது பொருளை விட்டுக் கடைசி வரையில் நீங்காமல் இருக்கும். குற்றம் என்பது முதலில் பொருளோடு தோன்றியதாயினும் பின்பு அதனை விட்டு நீங்கிவிடும். முற்கூறிய எடுத்துக்காட்டுகளில் இவ்வுண்மை விளங்கும். இரச வாதம் செய்வோர் செம்பை உருக்கிப் பதமறிந்து இரச குளிகையைச் சேர்க்கும் பொழுது செம்பி<லுள்ள களிம்பு முழுதும் நீங்கப் பெறுகிறது. நெல்லைக் குற்றும் பொழுது உமி அரிசியை விட்டு நீங்கி விடுகிறது. இதனால், களிம்பும் உமியும் குற்றங்களே யாதல் புலனாகும். உயிர் என்று உண்டோ அன்றே அதனிடத்தில் ஆணவமும் உடன் இருப்பது பற்றி அதனைக் குணம் என்று கூறிவிடக் கூடாது. ஆணவம் குணம் என்றால் அஃது உயிரைவிட்டு என்றும் நீங்காமல் இருக்க வேண்டும். ஆனால், முத்திக் காலத்தில் உயிரைப் பற்றியிருந்த ஆணவம் முழுதும் நீங்கி விடுவதை அருளாளர் வாக்குகள் தெளிவுபடுத்துகின்றன. தாயுமானவர் கூறுவதை இங்கே குறிப்பிடலாம்.

களிம்பு தோய்ந்த செம்பு போல நான் ஆணவ மலத்தோடு கூடியிருந்தேன். செம்பைப் புடம் இட்டுப் பதம் அறிந்து இரச குளிகையைச் சேர்த்துக் களிம்பைப் போக்குவது போல, இறைவன் என்னை ஞானமாகிய நெருப்பிலே கனிவு பெற உருக்கிப் பருவம் அறிந்து தனது திருவருளாகிய குளிகையைக் கொண்டு என்னைப் பற்றியிருந்த மலமாகிய களிம்பினைப் போக்கி என்னைத் தூயபொன் ஆக்கித் தனது திருவடியிற் சேர்த்தான் என்று கூறுகிறார் (சின்மயானந்த குரு.7) இதனால் முத்தி நிலையில் மலம் <உயிரை விட்டு நீங்குதல் தெளிவு. இவ்வாறு பின்னால் நீங்குவதால் அஃது உயிரின் குணமன்று என்பது விளங்கும். மேலும், குணம் அழியுமானால் குணத்தை உடைய பொருளும் அழியும். குணம் கெடப் பொருள் மட்டும் நிற்கும் என்பது என்றும் நிகழாத ஒன்று. ஆனால், முத்தியில் மலம் கெட உயிர் நின்று இறையின்பத்தைத் துய்க்கும் என்று சொல்லப்படுகிறது. மலம் உயிரின் குணமாயின், மலம் கெட உயிரும் அல்லவா கெட வேண்டும்? அவ்வாறு நிகழாமையால் மலம் உயிரின் குணம் ஆகாமை விளங்கும்.

28. ஆணவம் இடையில் வந்தது அன்று

ஆசு ஆதியேல் அணைவ காரணம் என்? முத்தி நிலை
பேசாது அகவும் பிணி.

பொருள் : ஆணவ மலம் ஆகிய குற்றம் உயிரிடத்தில் முதலில் இல்லாமல் இடையிலே ஒரு காலத்தில் வந்து பற்றியது எனில், அவ்வாறு வந்து பற்றுவதற்குக் காரணம் யாது? (காரணம் இன்றியே வந்து பற்றியது என்று சொன்னால்) உயிர் முத்தி பெற்ற நிலையிலும் அவ் வாணவம் காரணமின்றி வந்து பற்றும் என்றாகும். காரணம் வேண்டாதபோது எந்த நிலையிலும் எந்த நேரத்திலும் அது சொல்லாமலே வந்து பற்றும் என்றாகி, முத்தி என்பதே இல்லையாகி விடும். ஆதலால் ஆணவ மலம் இடையிலே வந்ததன்று. அஃது உயிர்களிடத்தில் தொன்று தொட்டே உள்ளது.

சொற்பொருள் :

ஆசு    - ஆணவ மலம் ஆகிய குற்றம்
ஆதியேல்    - உயிர்களிடத்தில் முதலில் இல்லாமல், இடையே ஒரு காலத்தில் வந்து பற்றியது எனில்
அணைவ காரணம் என் - அவ்வாறு இடையிலே வந்து பற்றுதற்குக் காரணம் யாது? (காரணம் இன்றியே வந்து பற்றியது என்று கூறினால்)
முத்தி நிலை     - உயிர்முத்தி பெற்ற நிலையிலும்
பிணி    - அவ்வாணவமாகிய தடை
பேசாது    - காரணம் சொல்ல வேண்டாமலே
அகவும்    - வந்து அகப்படுத்துவதாகும்.

விளக்கம் :

இச் செய்யுளை வினாவும் விடையுமாகச் சுருங்கிய சொற்களைக் கொண்டு அமைத்துள்ளார் ஆசிரியர். அதன் பொருள் நிலை இனிது புலப்படுமாறு பின்வரும் முறையில் ஆசிரியர் - மாணவர் உரையாடலாக அமைத்துக் காட்டலாம்.

மாணவர் : ஆவண மலம் எப்பொழுது உயிரைப் பற்றியது?

ஆசிரியர் : உயிர் முதலில் ஆணவ மலத்தின் தொடர்பின்றி இருந்தது என்று கருதித்தானே இவ்வினாவைக் கேட்கிறாய்.

மாணவர் : ஆம், ஆம்.

ஆசிரியர் : ஆணவமாகிய மாசு முதலில் இல்லையென்றால் உயிர் தூயதாக விளங்கியது என்றுதானே பொருள்.

மாணவர் : அப்படித்தான் கொள்ள வேண்டும்.

ஆசிரியர் : முதலில் தூய்மையாக இருந்த உயிரிடம் பின்னர் ஆணவ மலம் சேர்ந்தது என்றால் அதற்குக் காரணம் வேண்டும் அல்லவா?

மாணவர் : காரணம் வேண்டும் என்று நீங்கள் கூறுவது எதனால்? சற்று விளக்கிக் கூற வேண்டுகிறேன்.

ஆசிரியர் : எந்த ஒன்றும் இடையில் வந்து சேருமானால், அதற்கு ஒரு காரணம் இருத்தல் வேண்டும். இதை விளக்குவதற்கு ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன். ஒருவர் திருமணமே வேண்டா என்று வைராக்கியத்தோடு இருந்து விட்டார். வயது நாற்பதுக்கு மேல் ஆகிவிட்டது. தனியாகவே காலம் தள்ளி வந்தார். ஒருநாள் ஓர் அதிசயம் நடந்தது. அவர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தத் தொடங்கி விட்டார்! அந்தப் பெண்ணைத் திருமணம் முடித்ததற்கு எது காரணமாக இருக்கும் என்பது பலரும் ஆர்வமாய் கேட்கும் கேள்வியாக அமைந்து விட்டது. அவர் முதலில் இருந்தபடி பின்னும் இருந்தால் அதற்குக் காரணம் தேட வேண்டியதில்லை. அப்படியின்றி இடையில் அந்தப் பெண் வந்து சேர்ந்தாள் என்றால் அம் மாறுதலுக்குக் காரணம் இருக்கத்தானே வேண்டும். இப்படி இடையில் வந்து சேர்கின்ற எந்நிகழ்வையும் ஆராய்ந்தால் அதற்குத் தக்க காரணம் இருத்தல் புலனாகும். அம்முறையில், முதலில் தூயதாய் இருந்த உயிரிடத்தில் பின்னே ஆணவமலம் சேர்ந்தது என்றால் அதற்கு ஒரு காரணம் வேண்டும். அதற்கு நீ என்ன காரணம் சொல்வாய்?

மாணவர் : தூயதாகிய உயிர் தனக்குக் கேடு விளைவிப்பதாகிய ஆணவத்தைத்தானே சென்று பற்றியிராது. ஆணவம் அறிவற்ற சடம் ஆதலால் அதுவும் உயிரை அறிந்து சென்று பற்றியிராது. இனி, மூன்றாவது பொருளாகிய இறைவன் பேரருள் உடையவன் ஆதலால் உயிருக்குத் துன்பத்தைத் தருவதாகிய ஆணவத்தை அதனோடு சேர்த்திருக்க மாட்டான். ஆகவே, எந்த விதத்திலும் காரணம் சொல்ல வழியில்லை. மற்று, இப்படிக் கொண்டால் என்ன?

ஆசிரியர் : எப்படிக் கொள்ளலாம் என்று சொல்லுகிறாய்?

மாணவர் : காரணம் இல்லாமலே எப்படியோ வந்து பற்றியது என்று கொண்டால் என்ன?

ஆசிரியர் : அப்படிக் கொண்டால் முத்தி என்பதே இல்லையாகி விடும்.

மாணவர் : நீங்கள் சொல்வது விளங்கவில்லை. முத்தி என்பது எப்படி இல்லாமற் போகும்?

ஆசிரியர் : முத்தி என்பது என்ன?

மாணவர் : உயிர் மலமாகிய மாசு நீங்கித் தூய்மையாய் விளங்கும் நிலை.

ஆசிரியர் : முதலில் தூய்மையாய் இருந்த உயிரைப் பின்னே மலம் வந்து பற்றும் என்று நீ சொன்னாய்.

மாணவர் : ஆம்.

ஆசிரியர் : அவ்வாறு பற்றுவதற்குக் காரணம் வேண்டுவதில்லை. காரணம் இன்றியே வந்து பற்றும் என்பதாகவும் சொன்னாய்.

மாணவர் : ஆமாம்.

ஆசிரியர் : அப்படியானால் மலம் நீங்கி முத்தி பெற்ற உயிரையும் பின்னர் அந்த மலம் வந்து பற்றக் கூடும் அல்லவா? அது பற்றுவதற்குக் காரணம் வேண்டா என்று நீயே சொல்லி விட்டாயே. காரணம் வேண்டாத போது அஃது எப்பொழுது வேண்டுமானாலு<ம் வந்து பற்றலாம்தானே. முதலில் தூய்மையாய் இருந்த உயிரை எப்படிக் காரணமின்றியே வந்து பற்றியதோ அப்படியே முத்தி பெற்றுத் தூய்மையாய் விளங்கும் உயிரையும் அது காரணமின்றியே பற்றும் என்று ஆகிறதே. அங்ஙனம் மறுபடியும் மலம் வந்து பற்றுமானால் அந்நிலை கட்டுநிலையே யன்றி எப்படி முத்தி நிலையாகும்? ஆதலால் காரணமின்றியே மலம் வந்து பற்றும் என்று சொன்னால் முத்தி என்பதே இல்லையாகி விடும் என்பதை உணர்வாயாக.

மாணவர் : இப்பொழுது நன்றாக விளங்கி விட்டது. ஆணவமலம் இடையிலே வந்து பற்றவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். அங்ஙனமாயின் உயிருக்கு ஆணவ மலத்தின் தொடர்பு எப்படி ஏற்பட்டது.

ஆசிரியர் : உயிர் ஒரு காலத்தில் ஆணவ மலத்தின் தொடர்பு இன்றி இருந்தது என்று சொன்னால் அல்லவா அதன் தொடர்பு எப்படி ஏற்பட்டது என்ற கேள்வியே எழும். சைவ சித்தாந்தம் அப்படிச் சொல்லவில்லை. உயிர் என்று உண்டோ அன்றே அதனிடத்தில் ஆணவ மலம் உண்டு. ஆகவே உயிர்தொன்று தொட்டு ஆணவ மலத்தோடு கூடியே உள்ளது என்பதை அறிவாயாக.

குறிப்பு :

ஆணவ மலத்தை ஆசு என்ற சொல்லால் குறிப்பிடும் வழக்கமுடையவர் நம் ஆசிரியர். ஆசு - குற்றம். சிவப் பிரகாசத்தில் இச்சொல்லாட்சியைப் பல இடங்களிற் காணலாம். இந்நூலிலும் முன்னர் ஆசுடன் அடங்கப் போக்குமவன் என வந்துள்ளமை நாம் அறிந்தது.

ஆதி - தொடக்கம் உள்ளது; ஒரு காலத்து வந்தது.
அகவும் - அகப்படுத்திக் கொள்ளும்.

29. உயிரின் பக்குவ காலத்தில் ஆணவம் நீங்குவதாகும்

ஒன்று மிகினும் ஒளிகவரா தேல் உள்ளம்
என்றும் அகலாது இருள்.

பொருள் : உயிரிடத்தில் ஆணவ இருள் இப்பொழுது மிகுந்திருந்தாலும் உயிர் திருவருள் ஒளியைச் சிறிது சிறிதாகப் பெற்று அந்த ஆணவ இருளைப் படிப்படியாக நீக்கிக் கொள்ளும். அங்ஙனம் இறைவனது திருவருள் ஒளியை உயிர் உணரவில்லை என்றால் ஆணவ இருளினின்றும் அஃது என்றுமே விடுபடாது போகும்.

சொற்பொருள் :

ஒன்று - ஆணவ மலமாகிய இருள்
மிகினும் - உயிரிடத்தில் மிகுந்திருந்தாலும் (உயிர் திருவருள் ஒளியைச் சிறிது சிறிதாகப் பெற்று அந்த ஆணவ இருளைப் படிப்படியாக நீக்கிக் கொள்ளும்)
உள்ளம் - உயிர்
ஒளிகவராதேல் - அவ்வாறு திருவருள் ஒளியைச் சிறிது சிறிதாக உணரவில்லையாயின்
இருள் என்றும் அகலாது - ஆணவ இருள் அவ்வுயிரை விட்டு என்றுமே நீங்காது.

விளக்கம் :

உயிரிடத்தில் இருளும் உண்டு. ஒளியும் உண்டு. இருள் என்பது ஆணவ மலம், ஒளி என்பது திருவருட் சத்தி. உயிர் தனது பக்குவமின்மை காரணமாக நுண்ணிய திருவருள் ஒளியைப் பற்ற மாட்டாமல் பருப் பொருளாகிய ஆணவ இருளில் அகப்பட்டு அதில் அழுந்தி நிற்கிறது. இச் செய்தி நாம் முன்னே அறிந்ததுதான். இருளில் நிற்போர் என்றுமே இருளில் இருந்து விடுவதில்லை. இருளில் இருக்க விரும்புவதும் இல்லை. அவ்விருளை நீக்கிக் கொள்ளவே யாவரும் முயல்கின்றனர்; வழி தேடுகின்றனர். அதுபோல ஆணவமாகிய இருளிடை அகப்பட்டவரும் அதனை நீக்கிக் கொள்ளும் முயற்சியை இன்று மேற்கொள்ளவில்லை யென்றாலும் இனி வருங்காலத்திலேனும் மேற்கொள்வர் என்பது உறுதி. உலகில் அறியாமையில் நின்றோர் பின்னர் அதிலிருந்து நீங்கி அறிவு பெறுவதைக் காண்கின்றோம். இஃது எதைக் காட்டுகிறது? ஆணவத்தில் பிணிப்புற்றவர் சிறிது சிறிதாக அதிலிருந்து நீங்கி வருகின்றனர் என்பதையே இது காட்டுகிறது. மாந்தர் பக்குவ நிலையில் உயர்ந்து உயர்ந்து, இறைவனைப் படிப்படியாக உணர்ந்து உணர்ந்து முடிவில் ஆணவத்தினின்றும் முற்றாக விடுபட்டு இறைவனை அடைவர். ஆசிரியர் உமாபதிசிவம் சிவப்பிரகாச நூலில் உயிர்களைக் குறிக்க வரும்போது ஓங்கி வரும் பல வுயிர்கள் (செ.33) என்கிறார். அறியாமையிற் கிடக்கின்ற உயிர்கள் ஆணவ இருளின் வலி முழுதையும் கெடுக்கும் பேரொளியாகிய திருவருளைப் படிப்படியாகப் பற்றிக் கொண்டு மேனிலை அடைதற்குரியவை என்பது கருதியே ஓங்கி வரும் என்ற அடைமொழி கொடுத்துக் கூறினார் எனலாம்.

30. மாயை யாகிய விளக்கு

விடிவாம் அளவும் விளக்கனைய மாயை
வடிவாதி கன்மத்து வந்து.

பொருள் : மாயையினின்றும் உடம்பு முதலியவை தோன்றி உயிர்களைப் பொருந்துகின்றன. அவ்வாறு அவை வந்து பொருந்துவது அந்த அந்த உயிர்களின் வினைக்கு ஏற்பவேயாகும். ஆணவமாகிய இருள் நீங்கி விடிவு வரும் வரையிலும் மாயையின் காரியமாகிய இந்த உடம்பு முதலியவை உயிருக்கு விளக்குப் போல நின்று உதவுகின்றன.

சொற்பொருள் :

மாயை வடிவு ஆதி - மாயையினின்றும் தோன்றிய உடம்பு முதலியவை
கன்மத்து வந்து - உயிர்களை, அவைகளின் வினைக்கு ஏற்ப வந்து பொருந்தி
விடிவாம் அளவும் - ஆணவமாகிய இருள் நீங்கி விடியும் வரையில்
விளக்கு அனைய - விளக்குப் போல நின்று உயிர்களுக்கு நன்மை செய்வனவாம்.

விளக்கம் :

விடியும் வரையில் விளக்கு :

இதுவரை இருள் மலமாகிய ஆணவத்தின் இயல்பையே பேசி வந்த ஆசிரியர் இந்த இறுதிச் செய்யுளில் அதற்கு மாற்றுப் பொருளாகிய மாயையின் தன்மையினைக் கூறலு<றுகிறார். ஆணவம் அறிவை மறைக்கின்ற இருள் என்றால், மாயை அறிவை விளக்குகின்ற ஒளிப் பொருள் எனலாம். சூழ்ந்துள்ள இருளைச் சிறிதளவு நீக்கிக் கண்ணுக்குக் காட்டுகின்ற விளக்குப் போல மாயை உயிரைப் பற்றியுள்ள ஆணவ இருளை ஓரளவு நீக்கி அதன் அறிவை விளங்க வைக்கின்றது. விளக்கொளியினால் இருள் முற்றிலும் நீங்கி விடுவதில்லை. விளக்கொளி சிற்றொளியாக இருப்பதனால் அது சிறிதளவே இருளை நீக்குவதாக உள்ளது. ஒன்றுமே தெரியாத இருட்டில் விளக்கினை ஏற்றினால் அந்த விளக்கொளி இருளைச் சிறிதே விலக்கிப் பொருளை ஒருவாறு காணும்படி செய்கிறது. அந்தச் சிறிய விளக்கொளியும் இல்லையென்றால் நம்மால் யாதொன்றையும் காண முடியாத நிலையே உளதாகும்.

நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள உடம்பு மாயையினால் ஆனது. மாயையை விளக்கு எனக் குறிப்பிட்டோம். எனவே இந்த உடம்பும் விளக்குப் போன்றதேயாகும். உடம்பும் உடம்பிலுள்ள ஐம்பொறி முதலிய கருவிகளும் செயற்படுகிற போது நமக்குப் புற வுலகைப் பற்றிய அறிவு உண்டாகிறது. அவை செயலற்றுக் கிடக்கின்ற உறக்க நிலையில் நாம் யாதொன்றையும் அறிய மாட்டாமல் அறியாமையே வடிவாய் இருக்கின்றோம். இதனால் உடம்பினாலேயே நமக்கு அறிவு விளங்குகிறது என்பது புலனாகும். இது பற்றியே உடம்பினை விளக்கு என்றனர். விளக்கு என்பது ஓர் இடைக்கால ஏற்பாடே. அதுவே இருளை முற்றிலும் நீக்கி விடாது. இருள் முழுதும் நீங்க வேண்டுமாயின் பேரொளியாகிய சூரியவொளி வரவேண்டும். விளக்கொளியால் நீங்கியும் நீங்காமலும் இருந்த இருள் சூரியவொளி வரும் போதே அறவே அகலு<ம். அவ்விடியல் வரும் வரையில் இருளை நீக்கிக் கொள்வதற்கு ஓர் இடைக்காலத் துணையாக விளக்கினைக் கொள்கின்றோம். இறைவன் நமக்கு உடம்பினைக் கொடுத்ததும் இம்முறையிலேதான். நாம் உடம்போடு கூடியிருக்கின்ற நிலையும் ஓர் இடைக்கால ஏற்பாடுதான். ஆணவமாகிய இருளினின்றும் சிறிது விடுபடுவதற்கு இந்த உடம்பாகிய விளக்கு உதவுகிறது. ஆனால், அதுவே ஆணவ இருளை முற்றிலும் நீக்கிவிடாது. இருள் மலம் முழுதும் நீங்க வேண்டுமாயின் திருவருளாகிய சூரியவொளி வரவேண்டும். மாயா காரியமாகிய விளக்கொளியால் சிறிது விலகிய ஆணவ இருள் திருவருள் ஒளி வரும்போதே அறவே அகன்றொழியும். அந்த நிலையே சுத்தநிலை எனப்படும். அதுவே ஆன்மாவுக்கு விடிவு காலம். அவ்விடியல் வரும் வரையில் அகவிருளை ஓரளவு நீக்கிக் கொள்வதற்குத் தனு, கரணம் முதலிய மாயா கருவிகள் இடைக்காலத் துணையாக அமைகின்றன. இதுபற்றியே விடிவாம் அளவும் விளக்கு அனைய மாயை என்றார் ஆசிரியர்.

உடம்பு முதலியவை வினைக்கு ஏற்ப அமைதல் :

வடிவாதி என்பதற்கு வடிவு முதலிய காரியங்கள் என்பது பொருள். வடிவு என்பது உடம்பு. தனு, கரணம், புவனம், போகம் என்னும் நான்கையுமே வடிவாதி என்று குறிப்பிட்டார். உடம்பு முதலியவை எல்லார்க்கும் ஒரே வகையாக அமையவில்லை என்பது கண்கூடு. சிலருக்கு வலிமையான உடம்பு. சிலருக்கு நொய்ம்மையான உடம்பு. வலிமையான உடம்பாயிருந்தும் ஆயுள் குறைவான உடம்பாகச் சிலருக்கு அமைந்து விடுகிறது. நொய்ம்மையான உடம்பாயிருந்தும் நீண்ட ஆயுள் உடையதாகச் சிலர் உடம்பு அமைந்து விடுகிறது. இவ்வாறு அவரவர் உடம்பில் அமைந்திருக்கும் கருவிகளும் வெவ்வேறு இயல்பினவாகவே உள்ளன. சிலருக்குக் கண்பொறி, செவிப்பொறி முதலியவை கூரியனவாக அமைந்து நலம் செய்கின்றன. வேறு சிலருக்கு அவை குறைபாடுடையனவாக அமைந்து விடுகின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்? அவரவரும் முன்னே செய்து கொண்ட வினையே இவ்வேறுபாடுகளுக்குக் காரணம் ஆகும். அந்த முன்வினை பிராரத்த வினை எனப் பெயர் பெறும். பிராரத்த வினையை ஒட்டியே இப்பிறவி அமைகிறது. அவரவரும் இப்பிறப்பில் தத்தமக்குரிய தனு, கரண, புவன, போகங்களைப் பிராரத்த வினைக்கு ஈடாகவே பெற்றுள்ளனர். இப்பிறப்பில் ஒருவர் துன்பத்தையே மிகுதியாக அனுபவிக்க வேண்டும் என்ற பிராரத்தம் இருந்தால் அதற்கேற்ப அவருக்கு நோயுள்ள உடம்பு (தனு) அமையும். நன்கு செயற்படாத கருவிகள் (கரணம்) அமையும். தீய சுற்றுச் சூழல் (புவனம்) அமையும். நுகர் பொருள் (போகம்) நிரம்பாத நிலை அமையும். இதுபோலவே ஒருவர் வாழ்வில் உயர்நிலையை அடைய வேண்டும் என்ற பிராரத்தம் இருந்தால் அதற்கேற்ப அவருக்கு முயற்சியுள்ள உடம்பு அமையும். ஊக்கமுடன் செயற்படும் கருவிகள் அமையும். வாய்ப்பான சூழலும் சார்பும் அமையும். இப்படி உடல், கருவி, இடம், நுகர் பொருள் ஆகிய நான்கும் அவரவர் கன்மத்திற்கு ஏற்பவே வந்து அமைவதனால் வடிவாதி கன்மத்து வந்து என்று குறிப்பிட்டார் ஆசிரியர்.

 
மேலும் திருவருட்பயன் »
நான்காம் அதிகாரம் - அருளது நிலைஉயிரினது அறிவை மறைத்து அறியாமையை விளைவிக்கின்ற அக இருளாகிய ஆணவ ... மேலும்
 
பாற்கலன்மேல் பூனை :இயல்பிலே இன்ப நாட்டம் உடைய உயிர், உயர்வற உயர்ந்த இன்பப் பொருளாகிய இறைப் பொருளை ... மேலும்
 
68. பின் நிற்றல்உற்கை தரும் பொற்கை உடையவர்போல் உண்மைப்பின்நிற்கை அருளார் நிலை.பொருள் : இருளில் நடப்போர் ... மேலும்
 
81. அனைத்து நூற்பொருளும் ஐந்தெழுத்தின் பொருளேயாம்அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் ஐந்தின்பொருள் நூல் ... மேலும்
 
92. வேறொன்றையும் விரும்பாமைஐந்தொழிலும் காரணர்கள் ஆம் தொழிலும் போகம் நுகர்வெந்தொழிலும் மேவார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar