Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
போற்றிப் பஃறொடை பகுதி -2
முதல் பக்கம் » போற்றிப் பஃறொடை
போற்றிப் பஃறொடை பகுதி -1
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2013
03:11

ஆசிரியர் உமாபதி சிவம் அருளிய சித்தாந்த நூல்கள் எட்டு என்பர். அவை சித்தாந்த அட்டகம் எனப்படும். அவற்றுள் ஒன்று போற்றிப் பஃறொடை என்னும் இந்நூல். வெண்பா யாப்பில் பல அடிகளால் எழுதப்படும் நூல் பஃறொடை வெண்பா என்று பெயர் பெறும் ஆசிரியர் தமது குருவாகவிளங்கிய மறைஞான சம்பந்தரைக் சிவபரம் பொருளாகவே எண்ணிப் பாராட்டிப் போற்றுவதனால் இந்த நூல், போற்றிப் பஃறொடை என்னும் பெயர் பெற்றது.

இந்த நூல் சிவபெருமானின் பெருங்கருணை, பதினான்கு முறை போற்றி வணங்கப்படுகிறது ஆராத நன்றி உணர்வினால் நூலின் இறுதி வரியில் என்கொண்டு போற்றி செய்கேன் யான் என்று கூறி நூலை நிறைவு செய்கிறார் ஆசிரியர்.

பூமன்னும் நான்முகத்தோன் புத்தேளிர் ஆங்கவர்கோன்
மாமன்னு சோதி மணிமார்பன் நாமன்னும்
வேதம்வே தாந்தம் விளக்கம் செய் விந்துவுடன்
நாதம்நா தாந்தம் நடுவேதம் போதத்தால்
ஆம் அளவும் தேட அளவிறந்த அப்பாலைச்
சேமஒளி எவருந் தேறும் வகை மாமணிசூழ்
மன்றுள் நிறைந்து பிறவி வழக்கறுக்க
நின்ற நிருத்த நிலை போற்றி

தாமரை மலரிலே நான்கு முகங்களுடன் அமர்ந்திருக்கின்ற பிரமனும்,தேவர்களும், தேவர்களின் தலைவனை இந்திரனும், திருமகள் இடம் பெற்ற மார்பில் ஒளி மிக்க கௌத்துவ மணியை அணிந்துள்ள திருமாலும், நாவினால் ஓதப்படுகின்ற வேதங்களும், வேதங்களின் முடிவாகிய உபநிடதங்களும், அறிவுக்கு விளக்கத்தைத் தரும் விந்துவும், அதற்கு ஆதாரமாய் விளங்கும் நாதமும், அதன் முடிவாகத் திகழும் சிவ தத்துவமும் விளங்கும் நாதமும் அதன் முடிவாகத் திகழும் சிவ தத்துவமும் தம் அறிவால் இயன்ற மட்டும் தேட அவற்றிற் கெல்லாம் அப்பாற்பட்டதாய்  உயிர்களுக்குப் பாதுகாப்பாக விளங்கும் சிவபரம் பொருள் உயிர்களை உய்விக்க வேண்டும் என்ற கருணையினால், தன்னை வணங்குபவர் யாவருக்கும் பேரின்பத்தை வழங்குவதற்காக மணிகளால் இழைக்கப்பெற்ற திருச்சிற்றம்பலத்துள் நின்று உயிர்களின பிறவிப் பிணி அறுமாறு எல்லையற்ற திருக்கூத்து இயற்றும் நிலையை வணங்குகிறேன்.

வேதம் எழுதப்படாமல் நாவால் உரைக்கப்பட்டே பயின்று வருவதால் நாமன்னு வேதம் என்றார். வேதாந்தம் ஏகான்மவாதநூலைக் குறிக்காமல் மறை முடிபாகிய உபநிடதங்களைக் குறித்தது. விந்து, தூமாயை, செயலாற்றலை எழுப்புவது. நாதம் அறிவாற்றலைத் தூண்டும் பேரறிவு. நாதாந்தம் சிவ தத்துவம். இவை யாவும் இறைவனின் கூறுகளாதலின் அவனை முழுவதும் அறிய இயலாவாயின.

சிவபெருமானின் திருக்கூத்து அவன் இயற்றும் ஐந்தொழிலையும் குறித்தது. உயிர்களின் பொருட்டே இறைவன் ஐந்தொழில் செய்கிறான் ஆதலால் அவை ஐந்தும் உயிர்களின் பிறவிப் பிணிக்கு மருந்தாகின்றன.
                                                           -குன்றாத
பல்லுயிர் வெவ்வேறு படைத்தும் அவைகாத்தும்
எல்லை இளைப்பொழிய விட்டுவைத்தும் -தொல்லையுறும்
அந்தம் அடிநடுஎன்று எண்ண அளவிறந்து
வந்த பெரிய வழி போற்றி.

எண்ணற்ற உயிர்களை அவற்றின் வினைக்கு ஏற்ப வெவ்வாறு வகையான பிறவிகளாகப் படைத்தும், அவற்றைக் காத்தும் பிறவியுட் பட்டு இளைத்துப் போன உயிர்களை ஒரு கால எல்லையில் இளைப்பாறுமாறு ஒடுக்கியும் தான் மட்டும் கால எல்லைக்கு அப்பாற்பட்டு நிற்பதனால் முதல் நடு இறுதி என்று காண்பதற்கு அரியதாய் அவற்றின் அளவைக் கடந்து நிற்கும் பரம்பொருளின் பெருமைக்குரிய ஆற்றலை வணங்குகிறேன்.

உயிர்கள் எண்ணிறந்தன. எனவே பல உயிர்கள் பிறந்தும் இறந்தும் முத்தி பெற்றும் அதன் பிறகும் எண்ணற்ற உயிர்கள் உள்ளன. ஆதலால் குன்றாத பல்லுயிர் என்றார். திருவருட்பயனில்  பிறந்த நாள் மேலும் பிறக்கும் நாள் போலும், துறந்தோர் துறப்போர் தொகை  என்று கூறியதும் இதனை விளக்கும் நால்வகைத் தோற்றத்து எழுவகைப் பிறப்புக்கள் எண்பத்து நான்கு நூறாயிரம் பிறவி வகைகள் என்பதனைக் குறிக்க வெவ்வேறு படைத்தும் என்றார். இங்கு உயிர்களைப் படைத்தால் என்பது அவற்றுக்கு உடல் கருவி உலகு நுகர்ச்சிப் பொருள் ஆகியவற்றைக் கொடுத்து வினைப்பயனை நுகரச் செய்வது ஆகும். வினைப் பயனை நுகரும் காலம் வரை உயிர்களை நிலை நிறுத்துதல் காத்தலாகும். இவ்வாறு பிறந்தும் வினையை நுகர்ந்தும் இறந்தும் உயிர்கள் மாறி மாறிச் செல்வதால் அவற்றிற்கு இளைப்பு ஏற்படும். இளைப்பை ஆற்றுவதற்காக சர்வ சங்கார காலத்தில் இறைவன் அவற்றை ஒடுங்கின்றன. இளைப்பாறிய பின்பு மீண்டும் தோற்றுவிக்கிறான். எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்  என்ற திருவாசகம் உயிர்கள் இளைப்புறுவதைக் காட்டும் கால எல்லையைக்கடந்து நிற்பதே நித்தப் பொருள். ஆதலால் தோற்றமும் நடுவும் இறுதியும் அற்றவன் இறைவன் என்று குறித்தார். ஆதியும் அந்தமு மில்லா அரும்பெருஞ் சோதி என்பது இதனைக் குறித்தது. தொல்லையுறும் என்பது தொன்மையாகவே உறுகின்ற என்று பொருள் தந்தது. தோற்றமில் காலம் தொட்டு உள்ள பொருள் என்பது ஆயிற்று.

                                                            - முந்துற்ற
நெல்லுக்கு உமிதவிடு நீடுசெம்பில் காளிதமும்
தொல்லைக் கடல் தோன்றத் தோன்று உவரும் எல்லாம்
ஒரு புடை யொப்பாய்த்தான் உள்ளவாறு உண்டாய்
அருவமாய் எவ்வுயிரும் ஆர்த்தே உருவுடைய
மாமணியை உள்ளடக்கும் மாநாகம் வன்னிதனைத்
தான் அடக்கும் காட்டத் தகுதியும் போல் ஞானத்தின்           
கண்ணை மறைத்த கடிய தொழில் ஆணவத்தால்
எண்ணும் செயல்மாண்ட எவ்வுயிர்க்கும் உள்நாடிக்
கட்புலனால் காணார்தம் கைக்கொடுத்த கோலே போல்
பொற்புடைய மாயைப் புணர்ப்பின்கண் முற்பால்
தனுகரணமும் புவனமும் தந்து அவற்றால்
மனமுதலா வந்த விகாரத்தால் வினையிரண்டும்
காட்டி அதனாற் பிறப்பாக்கிக் கைக்கொண்டு
மீட்டறிவு காட்டும் வினைபோற்றி.        

முன்பிருந்தே நெல்லுக்கு உமியும் தவிடும் செம்பில் களிம்பும் கடல் நீரில் உப்பும் உடனாய் இருப்பது போல உயிரோடு கலந்திருப்ப தாய் இங்குக் கூறப்பட்ட உவமைகள் எல்லாம் தனக்கு ஒருபுடை ஒப்புமையாய் மட்டிலுமே நிற்கத் தான் என்றும் நிலைபேறு உடைய தாகவும் வடிவற்றதாகவும், எல்லா உயிர்களையும் தனக்குள் அடக்கும் தன்மை உடையதாகவும் உள்ளது ஆணவ மலம். ஒளி மிக்க நாகமணியைத் தன்னுள் அடக்கி இருக்கும் பாம்பினைப் போலவும், நெருப்பைத் தன்னுள் அடக்கி இருக்கும் விறகினைப் போலவும் உயிர்களின் அறிவினை முற்றிலும் மறைத்து அவற்றிற்கு அறியாமையைத் தருகின்ற இத்தகைய ஆணவ மலத்தால் எல்லா உயிர்களும் கட்டப்பட்டுச் செயல் இழந்து கிடக்கும். கண்ணற்ற குருடர்களுக்கு அவர்களின் தேவை அறிந்து உதவுவதற்காகக் கொடுத்த ஊன்றுகோலைப் போல், பொற்புடைய மாயையைச் செயலிழந்து கிடக்கும் உயிர்களோடு கூட்டுவித்து முதலில் உடல் கருவி உலகு நுகர்ச்சிப் பொருள் ஆகியவற்றைத் தந்து,மனம் முதலியவற்றால் வந்த வேறுபாடுகளால் தோன்றுகின்ற நல்வினை தீவினைப் பயன்களையும் பொருந்துவித்து, வினைப்பயனை நுகர்வதற்காகப் பல்வேறுபட்ட பிறப்புக்களையும் தந்து அதனால் மலநீக்கம் பெற்ற பக்குவமுடைய

உயிர்களுக்கு மீட்சியை வழங்கி எல்லையற்ற அறிவாகிய தனது பேரின்பத்தைத் தந்தருளும் இறைவனின் கருணைச் செயலை வணங்குகிறேன்.

கேவலநிலையில் உயிர் ஆணவத்தோடு கலந்து அறியாமையே வடிவாக நிற்கின்ற நிலையை மாற்றி. உடல் கருவி ஆகியவற்றைத் தந்து சகல நிலையில் சேர்த்து, உரிய பக்குவம் வருங்கால் சுத்த நிலையை வழங்கும் அருட்செயலை ஆசிரியர் போற்றுகிறார்.

ஆணவ மலம் உயிரைத் தோற்றமில் காலந்தொட்டே முற்றிலும் பிணிந்து நிற்கிறது. நெல்லின் உமியும் தவிடும் இடையில் வந்து தோன்றாமல் நெல்லுள்ள போதே அவையும் உள்ளன. அது போலவே ஆணவ மலமும் உயிர் என்று உண்டோ அன்றிலிருந்து அதனைப் பற்றியிருக்கும் செம்பில் களிம்பும் அத்தகையதே. செம்பில் களிம்பு தோன்றினால் செம்பு மறைந்து முற்றிலும் களிம்பே தோன்றுவது போல ஆணவ மலம் உயிரை உவர்ப்பாக்கிக் கடல் வெளியைப்பற்ற இயலாதது போல ஆணவ மலம் உயிரை மட்டிலும் பற்றி இறைவனைப் பற்றுவதற்குரிய ஆற்றலற்று இருக்கும்.

இம்மூன்று உவமைகளும் ஓரளவே பொருந்துவன. ஏனெனில் நெல்லின் உமியையும் தவிட்டையும் நீக்கிவிட்டால் பின்னர் அவை நெல்லை வந்து கூடுவதில்லை. ஆணவ மலமோ உயிரை விட்டு ஒரு காலத்தும் பிரிவதில்லை. செம்பில் களிம்பு காலப்போக்கில் தோன்றுவ தாகும். ஆணவ மலமோ உயிர் என்று உண்டோ அன்றே உளதாகும். நீரின் உவர்ப்பு கடல் வெளியில் முழுவதும் பற்றாது எனினும் ஓரளவு கடல் வெளியில் உவர்ப்புத் தன்மை இருக்கும் ஆனால் உயிரைப் பற்றிய ஆணவமோ இறைவனை ஒரு சிறிதும் பற்றாது.

ஒளிமிக்க மாணிக்கத்தை நாகம் மறைத்திருப்பது அறிவுள்ள உயிரைக் கொடியதாகிய ஆணவம் மறைத்து நிற்பதற்கு உவமை யாயிற்று நெருப்பை விறகு மறைத்திருப்பது. ஆன்மாவை ஆணவம் மறைத்திருப்பதற்கு உவமையாயிற்று.

அறிவுடைப் பொருளாகிய உயிர் ஆணவமலத்தின் தொடக்கால் அறிவும், செயலும் இழந்து அறிவற்ற பொருள் போலக் கிடப்பதனால் ஆணவத்தின் செயல் கடிய தொழில் எனப்பட்டது.

விழியிழந்தவர்களுக்குக் கொடுக்கக் கூடிய கோல் அவர்களுக்கு வழி நடப்பதற்கு ஓரளவு துணை செய்யும் எனினும் பார்வை தராது. அதுபோலவே பொற்புடைய மாயை உயிரின் அறிவை ஓரளவு விளக்குமாயினும் இறைவனை அறிகிற நல்லறிவை அதனால் தர இயலாது. மாயை விடிவாம் அளவும் விளக்கு அனையது என்பது திருவருட் பயனில் கூறப்பட்டுள்ளது. திருஞான சம்பந்தரும் மாயையை ஒண்தளை என்று அருளினார்.

காளிதம்-களிம்பு, வன்னி- நெருப்பு, காட்டம் விறகு, விகாரம் வேறுபாடு, மீட்டறிவு காட்டும் வினை என்பது உயிர்களை மீட்டு அவற்றிற்கு அறிவு விளக்கம் தந்து மீண்டும் பிறவாத நெறி காட்டும் இறைவனின்  செயலைக் குறித்தது.  மீட்டிங்கு வந்து வினைப் பிறவி சாராமே என்பது மாணிக்கவாசகர் திருவாக்கு.

                                                       - நாட்டுகின்ற
எப்பிறப்பும் முற்செய் இருவினையால் நிச்சயித்துப்
பொற்புடைய தந்தைதாய் போகத்துட் கர்ப்பமாய்ப்
புல்லிற்பனிபோல் புகுந்திவலைக்கு உட்படுங்கால்
எல்லைப் படாஉதரத்து ஈண்டியதீப் பல்வகையால்
அங்கே கிடந்த அநாதி உயிர் தம்பசியால்
எங்கேனு மாக எடுக்குமென வெங்கும்பிக்
காயக்கருக்குழியில் காத்திருந்தும் காமியத்துக்கு
ஏயக்கை கால் முதலாய் எவ்வுறுப்பும் ஆசறவே
செய்து திருத்திப்பின்பு யோகிருத்தி முன்புக்க
ஐயவழியே கொண்டு அணைகின்ற பொய்யாத
வல்லபமே போற்றி.

எல்லாப் வகைப் பிறப்புகளிலும் முன் செய்த வினைக்கு ஈடாகப் பிறப்பித்து, அதன் பின்னர் அவற்றுள் உயர்ந்ததாகிய மானிடப் பிறப்பில் தந்தையும் தாயும் நுகரும் இன்பச் சேர்க்கையில் புல் நுனியில் பனித்திவலை போல் தந்தையின் விந்து தாயின் கருப்பையில் சேர அதற்குள் உயிரைப் புகுத்தி, அன்னையின் வயிற்றில் உள்ள கிருமிகள் அதனை உண்டு விடாமலும் காத்துக் கரு வளரும் காலத்து முந்திய வினைக்கு  ஏற்பக் கைகால் முதலிய எல்லா உறுப்புக்களையும் முறையே வளர்த்துக் கருப்பையில் அச்சிறிய உடல் பொருந்துமாறு செய்து பின்னர் உரிய பொழுதிலே இரு கைகளும் குவிந்து, தலை கீழாய்ப் பிறக்குமாறு முன்பு புகுந்த சிறிய வழியைப் பெரிய வழியாக்கி இவ்உலகில் பிறக்கும் வண்ணம்அதனை அணைத்துச் சென்று வெளிக்

கொணரும் பொய்யாத வல்லமையை வணங்குகிறேன்.

மானிட வாழ்க்கையில் பிறப்புத்தான் மிகுந்த ஆபத்தான அனுபவம் என்பர். தந்தையின் விந்துவில் கணக்கற்ற உயிர்க் கிருமிகள் இருப்பினும் ஒன்றே ஒன்று அன்னையின் கரு முட்டையைக் கிழித்துக் கொண்டு உள்ளே புகுந்து படிப்படியாகப் பத்துத் திங்கள் வளர்ந்து முழுக்குழந்தையாகப் பேறு காலத்தில் சிக்கலின்றிப் பிறப்பது என்பது இறைவனின் திருவருள் ஆற்றலால் நடைபெறுகிறதேயன்றி இவ்வளர்ச்சிக்குத் துணையாவார் வேறு யாரும் இலர். இதற்கு இறைவன் ஒருவனே அருகிருபந்து காக்கின்ற பொருங் கருணைச் செய்கிறான் என்பதனை இப் பகுதியில் ஆரிசியர் விளக்குகிறார்.

ஒருமடமாதும் ஒருவனுமாகி இன்பசுகம் தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகியவிந்து ஊறுசுரோணித மீது கலந்து
பனியில் ஒர் பாதி சிறு மாது பண்டியில்வந்து புகுந்து திரண்டு
பதும அரும்பு கமடம் இதென்று பார்வை மெய்வாய் செவி கால் கைகள் என்ற
உருவமும் ஆகி உயிர்வளர் பாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை
உதரமகன்று புவியில் விழுந்து
எனப் பட்டினத்தார் உடற் கூற்று வண்ணத்தில் கூறுவது இங்கே கருதத்தக்கது.

நாட்டுகின்ற எப்பிறப்பும் என்பது நால் வகைத் தோற்றத்து ஏழு வகைப் பிறப்பில் எண்பத்து நான்கு நூறாயிரம்  பிறவி வகை என்று ஆகமங்களில் கூறப்படுவனவற்றைக் குறிக்கின்றது.

தாயின் கருப்பையில் அளவற்ற வெப்பமும் உயிரணுவை உண்ணும் திறம் படைத்த கணக்கற்ற கிருமிகளும் உள்ளன என்பதனால் அது வெங்கும்பி எனப்பட்டது. கும்பி வெப்பம் மிகுந்த தூய்மையற்ற நரகங்களுள் ஒன்று.

கருமுதிர்ந்த பருவத்துக் கை கால்களை மடக்கிக் கொண்டு குழவி தலைகீழாகக் கிடக்கும் ஆதலால் அத்தோற்றத்தை யோகு இருத்தி என்று குறித்தார் முன் புக்க ஐய வழி என்பது உயிர் தாயின் வயிற்றில் முன்னர்ப்  புகுந்த சிறிய வழி என்று பொருள்படும் தரும்

தாயின் வயிற்றில் குழவி பத்துத் திங்களாக வளரும் பருவத்தில் அது தாண்டி வர வேண்டிய தடைகளைப்
பற்றித் திருவாசகம் போற்றத்திரு அகவலில் வாசகப் பெருமான் பின் வருமாறு

 மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒருமித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம்பிழைத்தும்
ஈரிரு திங்களில் பேரிருள் பிழைத்தும்

அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்
ஏழு திங்களில்  தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான் படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்

பிறக்கிற குழந்தை எதிர்படுகிற இடுக்கண்களை எல்லாம் இறைவனே உடன் இருந்து அகற்றுகின்றான் என்பதை இப்பகுதியில் விளக்கினார்.

அம்மாயக்கால் தான் மறைப்ப
நல்ல அறிவொழிந்து நன்குதீ தொல்லையுறா
அக்காலந் தன்னிற் பசியை அறிவித்து அழுவித்து
உக்காவி சோரத்தாய் உள்நடுங்கி மிக்கு ஓங்கும்
சிந்தை உருக முலையுருகுந் தீஞ்சுவைப்பால்
வந்து மடுப் பக்கண்டு வாழ்ந்திருப்பப் பந்தித்த
பாசப் பெருங் கயிற்றாற் பல்லுயிரும் பாலிக்க
நேசத்தை வைத்த நெறி போற்றி

தாயின் கருவிலிருந்து உலகத்தில் பிறந்தவுடன் இந்த உடலுக்குக் காரணமான மாயை சூறாவளி போல அனைத்து மயக்கும். கருவிலிருந்த போது உலகில் பிறவாதிருக்க வேண்டும் என்று நினைத்திருந்த குழவி அந்நினைவை மறக்கும் நல்லதும் தீயதுமாகிய வினைத் தொடர்பால் அக்குழந்தைக்கு மயக்கம் ஏற்படும். இறைவன் அதற்குப் பசி தோன்றிற்று என்பதனை அறிவிப்பான். அப்பசியைப் பிறர் உணரும் வண்ணம் குழந்தையை அழச் செய்வான். குழந்தை அழுவதைக் கண்ட தாய் மனம் நடுங்கி அன்பினால் உருகித் தன் மார்பின் வழி ஒழுகும் இனிய சுவைப் பாலைஅக்குழந்தையின் பசி தீருமாறு அதற்கு ஊட்டுவாள்.  பசி தீர்த்த குழந்தை மகிழக் கண்டு தானும் மகிழ்வாள். இவ்வாறு தாயும் குழந்தையும் என வைத்த பாசப் பெருங் கயிற்றினால் பல்லுயிர்களையும் கட்டி அவரவரிடையே பற்று வளருமாறு செய்தருளும் அறநெறியை வணங்குகின்றேன்.

பிறந்த குழந்தைக்கும் தாய்க்கும் அன்புப் பிணைப்பை இறைவனே ஏற்படுத்துகிறான். அந்த பிணைப்பே நாளாவட்டத்தில் உற்றார், உறவினர் உலகியல் பொருள்கள் மீதும் உண்டாகும் பற்றாக வளர்கிறது என்பதனை இப்பகுதியில் கூறினார்.

மாயக்கால் - மாயை என்னும் பெருங்காற்று. பிறந்த குழந்தையைச் சடம் என்னும் காற்று வந்து தாக்கும் எனவும், அந்தத் தாக்குதலைப் பொறாமல் அக்குழந்தை அழத் தொடங்குகிறது எனவும் கூறுவர். உயிருக்கு வாய்த்த உடம்பு மாயையின் காரியம். பிறப்பதற்கு முன்பு வரை கருவினுள் இருக்கும் குழவி பிறவாமையை வேண்டியே தவம் கிடக்கும் எனவும், பிறந்த வினாடியில் அந்த நினைவு முற்றாக மறைந்து உலகியலில் பற்றுக் கொள்ளும் எனவும் கூறுவர். இதனைக் குறிக்க நல்ல அறிவு ஒழிந்து என்று குறிப்பிட்டார்.

குழந்தை பிறந்தவுடன் நல்வினை தீவினை என்பனவற்றின் பயன்கள் அதனை அலைக்கழிக்கத் தொடங்குகின்றன. அதனால் விளையும் தொல்லைகளும் அக்குழந்தையைப் பற்றுகின்றன.

பத்து மாதம் தாயின் கருவிலிருந்த குழந்தை பசிப்பதுமில்லை. அதனைத் தெரிவிக்க அழுவதுமில்லை. இறைவன் திருவருளால் குழந்தைக்கு வேண்டிய உணவு அக்காலத்தில்  தாயிடமிருந்தே கிடைத்து விடுகிறது. தாய் வேறு குழந்தை வேறு ஆனவுடன் இறைவன் அறிவிக்க குழந்தைக்குப் பசி உணர்வு தோன்றுகிறது. அப் பசியை வெளிப்படுத்த அது அழுவதும் இறைவன் அறிவிக்க நிகழ்வது தான் உயிர் அறிவிக்க அறிவது என்பதனை வலியுறுத்தும் பொருட்டு, பசியை அறிவித்து அழுவித்து எனக் கூறினார்.

குழந்தை அழுவதைக் கண்ட தாய் உள் நடுங்கி மனம் சோர்ந்து அன்பு மீதூர்ந்து தன் மார்பில் சுரக்கின்ற இனிய பாலைக் குழந்தைக்கு ஊட்டுகிறான். குழந்தையின் மகிழ்ச்சியைக் கண்டு தாயும் மகிழ்கிறாள். இவ்வாறு தாய் சேய் என்னும் பாசப் பிணைப்பு உண்டாகிறது இந்த அன்பினையும் இறைவனே தந்தருளுகிறான்;
                                                                                                                                             - ஆசு அற்ற

பாளைப் பசும்பதத்தும் பாலனாம் அப்பதத்தும்
நாளுக்கு நாள்சகல ஞானத்து மூள்வித்துக்
கொண்டாள ஆளக் கருவிக்கொடுத்து ஒக்கிநின்ணு
பண்டாரி யானபடிபோற்றி

குற்றமற்ற குழவிப் பருவத்திலும், அதன் பின்னர் இளஞ்சிறுவனாய் வளர்கின்ற பருவத்திலும் பின்னர் வாலிபனாகும் போதும் படிப்படியாய் அறிவை வளர்வித்து வளரும் அறிவுக்கேற்ற கருவி வளர்ச்சியையும் கொடுத்து உடன் நின்று உதவி புரியும் அருட் செல்வனை வணங்குகின்றேன்.

வளர்ச்சியின் ஒவ்வொரு படி நிலையிலும் உடலும் அறிவும் படிப் படியே வளர்வதற்குத் தோன்றாத் துணையாய் உடனிருந்து அருள் பாலிக்கிறான் இறைவன் என்பதனை இப்பகுதி விளக்குகின்றது.பண்டாரம் - செல்வம் . அதனை உடையவனாகி இறைவன் பண்டாரி எனப்பட்டான். செல்வம் என்பது இங்கே அருட்செல்வத்தைக் குறித்தது,

தண்டாத
புன்புலால் போர்த்த புழுக்குரம்பை மாமனையில்
அன்புசேர் கின்ற கட்டு ஐந்தாக்கி  முன்புள்ள
உண்மை நிலைமை ஒரு கால் அகலாது
திண்மை மலத்தால் சிறையாக்கிக் கண்மறைத்து
மூல அருங்கட்டில் உயிர்மூட மாய் உள்கிடப்பக்
காலம் நியதி அது காட்டி மேல் ஓங்கும்
முந்திவியன் கட்டில் உயிர் சேர்த்துக் கலைவித்தை
அந்த அராகம் அவை முன்பு தந்த
 தெழில்  அறிவு இச்சை துணையாக மானின்
எழிலுடைய முக்குணமும் எய்தி மருளோடு
மன்னும் இதயத்தில் சித்தாத்தால் கண்டபொருள்
இன்னபொருள் என்று இயம்பவொண்ணா அந்நிலை போய்க்
கண்டவியன் கட்டில் கருவிகள் ஈர் ஐந்தொழியக்
கொண்டு நியமித்து  அற்றை நாள் கொடுப்பப் பண்டை
இருவினையால் முன்புள்ள இன்பத்துன் பங்கள்
மருவும்  வகை அங்கே மருவி உருவுடன் நின்று
ஓங்கு நுதலாய ஓலக்க மண்டபத்தில்
போங்கருவி யெல்லாம் புகுந்து ஈண்டி நீங்காத
முன்னைமலத்து இருள் உள்மூடா வகையகத்துள்
 துன்னும் இருள்  நீக்கும் சுடரே போல் அந்நிலையே
சூக்கம் சுடர் உருவிற் பெய்து தொழிற்கு உரியர்
ஆக்கிப்பணித்த அறம் போற்றி

நீக்க இயலாத தசைப் போர்வையால் போர்த்தப்பட்ட புழுக் கூடு போன்ற உடம்பில் நனவு கனவு உறக்கம் பேருறக்கம் உயிர்ப்பு அடங்கல் என்னும் ஐந்து வகைக்கட்டுக்களால் பிணிக்கிறான். தோற்றமில் காலந்தொட்டு ஆணவ மலத்தின் மறைப்பினால் கட்டப்பட்டுக் கண்கள் மறைக்கப்பட்டு மூலாதாரமாகிய வீட்டில் உயிர் அறிவற்றுக் கிடக்கிறது. அவ்வாறு  அறிவற்றுக் கிடக்கும் காலத்தை நியதியினால் வரையறை செய்து உயிரினை உந்திச் சுழி வரை மேல் ஒங்குவிக்கிறான். அவ்விடத்தில் உயிர் வளியை ஆன்மாவுடன் கூடுமாறு செய்து கலை வித்தை அராகம் ஆகிய மூன்றினாலும் ஆன்மாவின்  செயல் அறிவு விழைவு என மூன்றையும் தோற்றுவிக்கிறான். அதற்குத் துணையாகப் பிரகிருதி மாயையில் உண்டான சாத்துவிகம் இராசதம் தாமதம் என்ற மூன்று குணங்களையும் சேர்க்கிறான். அதற்குமேல் இதயத் தானத்தில் சித்தமென்னும் கருவியுடன் கூட்டிச் சித்தத்தால் கண்ட பொருள் யாதென்று அறியாமல் ஆன்மாவை மயங்குவிக்கிறான். அதன் பின்னர் ஆன்மாவைக் கழுத்தில் கொண்டு சேர்த்துச் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐந்தையும், வாக்கு கால் கை எருவாய் கருவாய் ஆகிய தொழிற் கருவிகள் ஐந்தையும், மனம் புத்தி அகங்காரம் சித்தம் ஆகிய அசக் கருவிகள் நான்கையும் பிராணன் முதலிய காற்றுக்கள் பத்தையும், புருடனையும் கூட்டி நியமித்து, அற்றை நாள் தொடுத்து வருகின்ற நல்வினை தீவினைப் பயனாகிய இன்பச் துன்பங்களை நனவிலும் கனவிலும் பொருந்தும் வகை செய்து, நுதலாகிய திரு ஒலக்க மண்டபத்தில் எல்லாக் கருவிகளுடனும் பொருந்தி வீற்றிருக்குமாறு செய்தான். நீங்காத ஆணவ மலத்தின் இருள் மீண்டும் மூடாதபடி சூக்குமை பைசந்தி மத்திமை வைகரி ஆகிய நான்கு வாக்குக்களையும் பொருந்தி ஒளியூட்டி வினைக்கு ஈடாகப் புலன்களின் வழியாக உலகியல் பொருள்களை நுகரச் செய்து. இவ்வாறு உயிர்களைச் செலுத்திப் பணிக்கின்ற அறத்தினுக்கு என் வணக்கம் உரித்தாகுக.

 
மேலும் போற்றிப் பஃறொடை »
மூல அருங் கட்டில் மூடமாய் உட்கிடந்த உயிர் மேல் நோக்கிச் சென்று ஐந்தவத்தைப் பட்டு வருவதை இப்பகுதியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar