Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
போற்றிப் பஃறொடை பகுதி -1
முதல் பக்கம் » போற்றிப் பஃறொடை
போற்றிப் பஃறொடை பகுதி -2
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2013
03:11

மூல அருங் கட்டில் மூடமாய் உட்கிடந்த உயிர் மேல் நோக்கிச் சென்று ஐந்தவத்தைப் பட்டு வருவதை இப்பகுதியில் விரிவாக ஆசிரியர் தெரிவிக்கிறார் நனவு நிலையின்கண் தத்தவ தாத்துவிகங்களுடன் கூடி யான் என்னும் செருக்கோடு வினைப் பயனை நுகர்ந்து வருவதை ஓர் அரசன் திருவோலக்க மண்டபத்துள் பரிவாரங்களுடன் வீற்றிருப் பதற்கு உவமித்தார்.

கேவல நிலையில் உயிர் ஆணவத்தால்  முற்றிலும் மறைக்கப்பட்டு அறியாமையில் கிடைந்தது அதனுடன் இறைவன் கருவிகளைப் பொருத்திய பிறகு உயிரின் அறிவு சற்றே விளக்கித் தோன்றலாயிற்று இதன் பிறகு உயிர் மீண்டும் கேவலத்தை அடையாத சுத்த நிலை நோக்கி முன்னேறுவதற்காக இறைவன் செய்கின்ற அருட் செயல்கள் இங்கே விளக்கப்பட்டன. கண்ட வியன் கட்டில்கழுத்தாகிய கழுத்தாகி அகன்ற இடத்தில்ல, சூக்கம் - சூக்குமம் நுண்மை.

வேட்கைமிகும்
உண்டிப் பொருட்டால் ஒரு கால் ஆவியாது
மண்டிஎரியும் பெருந்தீ மாற்றுதற்குத் திண்திறல் சேர்
வல்லவர்கள் வல்லவகையால் தொழில் புரிதல்
எல்லாம்  உடனே ஒருங்கிசைந்து  செல் காலை,
முட்டாமற் செய்வினைக்கும் முன் செய்வினைக்கும் செலவு
பட்டோலை தீட்டும் படி போற்றி

தணியாத வேட்கையால் மண்டி எரியும் பசியாகிய பெரும் தீயைத் தணிப்பதற்கு உயிர்கள் யாவும் தம்மால் இசைந்த வகை முயலுமாறு பணித்தாள் இவ்வாறு முயல்கின்ற உயிர்களுக்குத் காலம் தவறாது முற்பிறப்பில் செய்த வினை , நுகரும் வினை , ஏறு வினை ஆகிய மூன்றுக்கும் தவறாது கணக்கு எழுதி அவ் வினைப் பயனை உரியார்க்குச் சேர்க்கும் இறைவனின் அருள் முறைமையை வணங்குகிறேன்.

உலகத்து நுகர்ச்சியும் முயற்சியும் உணவினால் உண்டாகின்றன. கொழுந்து விட்டு எரியும் எந்தத் தீயினையும் நீர் சொரிந்து முற்றிலும் அவித்து விட முடியும். பசித்தீ மட்டிலும் உண்ட பொழுது அவிந்து அதன் பின்னர் மேல் எழும். பசித்துண்டு பின்னும் பசிப்பான் மனிதன் ஆகையினால் பசியாகிய வயிற்றுத் தீத் தணிவதில்லை அத்தகைய கொடிய தீயை அணைப்பதற்கு உயிர்களெல்லாம் பலவாறு முயல்கின்றன. சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல் கடந்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் உயிர்கள் பல்வேறு வகையால் பாடுபடுவ தெல்லாம் நாழி அரிசி உணவிற்காகவே என்பார், வல்லார்கள் வல்ல வகையால் தொழில் புரிதல் என்று குறிப்பிட்டார்.

சஞ்சிதம் பிராரத்தம் ஆகாமியம் ஆகிய மூன்று வினைகளையும் தப்பாமல் கணக்கு எழுதி அவரவர் வினைப்பயன் அவரவர்க்கே சென்று பொருந்தும்படி பேராமல் ஊட்டுகின்ற பிரான் என்பதனை உணர்த்தப் பட்டோலை தீட்டும் படி என்று கூறினார்.

அப்பர் பெருமான் திருஇன்னம்பர்ப் பதிகத்தில்,
தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று
அழுது காமுற்று அரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே
என்று அருளிய திருவாக்கை இங்கு நினைவுகூர்க.
                                                              -நட்டு ஓங்கும்
இந்நிலைமை மானுடருக்கே யன்றி எண்ணிலா
மன்னுயிர்க்கும் இந்த வழக்கேயாய் முன்னுடைய
நாள் நாள் வரையில் உடல் பிரித்து நல் வினைக்கண்
வாழ்நாளின் மாலாய் அயனாகி நீள் நாகர்
வானாடர் கோமுதலாய் வந்த பெரும் பதத்து
நானா விதத்தால் நலம் பெறுநாள் தான் மாள
வெற்றிக் கடுந்தூதர் வேகத்துடன் வந்து
பற்றித்தம் வெங்குருவின் பால்காட்ட இற்றைக்கும்
இல்லையோ பாவி நிறவாமை என்றெடுத்து
நல்லதோர் இன்சொல் நடுவாகச் சொல்லி இவர்

செய்திக்குத்தக்க செயலுறுத்துவீர் என்று
வெய்துற்று உரைக்க விடைகொண்டு மையல் தரும்
செக்கினிடைத் திரித்தும் தீவாயில் இட்டெரித்தும்
தக்க நெருப்புத்தூண் தழுவுவித்தும் மிக்கு ஒங்கும்
நாராசம் காயச்சிச்  செயிமடுத்தும் நா அரிந்தும்
ஈரா உன் ஊனைத் தின் என்றடித்தும் பேராமல்
அங்கு ஆழ் நரகத்து அழுத்து வித்தும் பின்னும் தம்
வெங்கோபம் மாறாத வேட்கையராய்  இங்கொருநாள்
எண்ணி முதற் காணாத இன்னல் கடுநரகம்
பன்னெடுநாள் செல்லும் பணி கொண்டு- முன் நாடிக்
கண்டு கடன் கழித்தல் காரியமாம் என்று எண்ணிக்
கொண்டு வரு நோயின் குறிப்பறிவார் மண்டு எரியில்
காய்ச்சிச் சுட அறுக்க கண் உரிக்க நல் நிதியம்
ஈத்துத்தாய் தந்தை தமர் இன்புறுதல் வாய்த்த நெறி
ஒடிய தேரின் கீழ் உயிர் போன கன்றாலே
நீடு பெரும் பாவம் இன்றே நீங்கும் என நாடித் தன்
மைந்தனையும் ஊர்ந்தோன் வழக்கே வழக்காக
நஞ்சு அனைய சிந்தை நமன் தூதர் வெஞ்சினத்தால்
அல்லல் உறுத்தும் அருநரகம் கண்டு நிற்க
வல்ல கருனை மறம் போற்றி

நிலைபெற்று ஓங்கும் இந்த நிலைமை மனிதர்களுக்கே அன்றி எண்ணிலாத பல உயிர்களுக்கும் முறைமையாகும். குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு உயிர் உடலில் இருந்து பிரியும். நல்வினை செய்த உயிர்கள் திருமால் அயன் இந்திரன் முதலிய பதங்களைப் பெற்று பல்வேறு விதமான இன்பங்களையும் துய்த்து வரும் மாளுங் காலத்து எமனின் கொடுமை மிக்க தூதர் வேகத்தடன் வந்து அவ்வுயிர்களைப் பற்றித் தம் தலைவனாகிய இயமன்  முன் நிறுத்துவர் அவனும் தன் நடுவு நிலைமையால் மனமிரங்கி பாவிகளே! இன்று வரைக்கும் உமக்குப் பிறவாமை வாய்க்க வில்லையோ ? என்று கூறித் தன் ஏவலர்களை நோக்கி இவ்வுயிர்கள் செய்திருக்கும்  வினைக்கு ஏற்ப தண்டனை வழங்குக என்று ஆணையிடுவான் . இயமனின் ஏவலர்கள் அந்தந்த உயிர் செய்த தீவினைக்கும் ஏற்பச் செக்கிலிட்டு ஆட்டியும், கொழுந்து விடும் தீயிலிட்டு எரித்தும் நெருப்புத் தூணைத் தழுவச் செய்தும், இரும்பு ஊசியியைக் காய்ச்சிக் காதின் வழிச் செலுத்தியும் நாவினை அரித்தும், அவரவர் தசையை அரித்து அவரவரையே தின்னுமாறு அடித்துத் துன்புறுத்தியும் தப்ப முடியாத கொடிய நரகங்களில் அழுந்துமாறு செய்தும் தொடக்கமும் முடிவும் காணாத கடு நரகத்தில்  ஆழ்த்துவர் இத்தகைய தண்டனைகள் யாவும் உயிர்களைத் துன்புறுத்தும் நோக்கத்தோடு செய்யப் படுவதில்லை உலகத்துத் தாய் தந்தையர் தம் மக்களுக்கு நோய் வரும் காலத்து மருத்துவர்களை அழைத்துப் பண்டுவம் செய்யுமாறு வேண்டுவர். மருத்துவர்களும் நோய் நாடி. அந் நோயைத் தீர்க்கும் வழி நாடிக் காய்ச்சிய இரும்புக்கோல் கொண்டு சுட்டும். கத்தியால் அறுத்தும், கண் படலத்தை உரித்தும் மருத்துவம் செய்வர். இம்மருத்துவம் துன்பம் தருவன ஆயினும் அவற்றால் நோய் நீங்கும். ஆதலினால் பெற்றோர் மருத்துவருக்கு நன்றி பாராட்டிப் பொருள் வழங்குவார்கள். அது போலவே நரகத் துயர் தீவினைகளைத் தீர்ப்பன. மனுநீதிச் சோழன் தன் மகன் ஒட்டி வந்த தேரின் கீழே அகப்பட்டு உயிரிழந்த பசுங்கன்றின் கொலைப் பாவம் அவனைப் பற்றாத வண்ணம் அன்றைக்கே நீங்கும்படித் தன் மைந்தனைத் தேர்க் காலில் இட்டு அன்றே கொன்றது போன்ற இயல்புடையது நரகத் தண்டனை. நஞ்சு போன்ற சிந்தனையுடைய இயம தூதர் அல்லற் படுத்துவதும் அரு நரகம் செலுத்துவதும் இறைவன் மறக்கருணையினால், ஆகவே அந்த மறக்கருணையை வணங்குகிறேன்.

இந்தப் பகுதியில் உயிர்களின் தீவினைகளுக்கு ஏற்ப இறைவன் அவற்றை நரகத்தில் அழுத்தி மறக்கருணை காட்டுவான் என்பது விளக்கப்படுகிறது.

பல்லுயிர்க்கும்
இன்ன வகையால் இருவினைக்கண் நின்றருத்தி
முன்னை முதல் என்ன முதலில்லோன் நல்வினைக்கண்
எல்லா உலகும் எடுப்புண்டு எடுப்புண்டு
செல்காலம் பின் நரகம் சேராமே நல்ல நெறி
எய்துவதோர் காலம் தன் அன்பரைக் கண்டு இன்புறுதல்
உய்யும் நெறி சிறிதே உண்டாக்கிப் பையவே
மட்டாய் மலராய் வருநாளில் முன்னை நாள்
மொட்டாய் உருவாம் முறை போலக் கிட்டியதோர்
நல்ல பிறப்பில் பிறப்பித்து நாடும் வினை
எல்லையிரண்டும் இடையொப்பில் பல்பிறவி
அத்தமதில் அவ்றோ அளவென்று பார்த்திருந்து
சத்தி பதிக்கும் தரம் போற்றி

இதுவரை கூறப்பட்ட வகையிலே இறைவன் உயிர்களைக் காத்தருளி அவற்றின் கட்டு நீங்கும் வரையும் இருவினைப் பயன்களையும் அவற்றைத் துய்க்குமாறு செய்வான். தனக்கு மேல் ஒரு முதல் இல்லாத ஒப்பற்றவனாகிய சிவபெருமான் உயிர்களை நல்வினையில் செலுத்தி எல்லா உலகுகளிலும் மாறி மாறிப் பிறக்கச் செய்து, அதன் பின்னர் உயிர்கள் நரகத்தைச் சேராது நன்னெறி சேரும் நிலைக்கு உயர்த்துவான். அப்போது சிவனடியார்களைக் கண்ட உடனே சிவனையே கண்டது போன்று அவ்வுயிர்கள் இன்புறும் அடியார் ஏவிய பணிகளை மகிழ்ச்சியோடு நிறைவேற்றும் அளவுக்கு அவற்றுக்கு நல்லறிவ உண்டாகும். தேன் நிறைந்த மலர் மொட்டாகி அரும்பாகிப் போதாகி அதன் பின்னரே மலர்வதைப் போல இவ்வுயிர்களையும் இறைவன் படிப்படியாக முன்னேற்றுவான் பக்குவம் வாய்ந்த உயிர்களை நல்ல பிறவியில் பிறக்குமாறு செய்து நல்வினை தீவிø இரண்டிலும் உவர்ப்புத் தோன்றி, அதனால் இருவினை ஒப்பும் மலபரிபாகமும் எய்திய உயிரிடத்திலே பிறவியின் முடிவிலன்றோ வீடு பேறு என்று காலம் பார்த்திருந்து அவ்வுயிர்களிடத்துத் தன் திருவருட் சத்தியைப் பதிக்கின்ற கருணையை வணங்குகிறேன்.

உயிர்களை உய்விப்பதற்காக அவற்றை மாறி மாறிப் பிறப்பித்துப் படிமுறையால் வளர்த்து இறைவன் செய்யும் பெரும் கருணை இந்நூலின் இதற்கு முந்திய பகுதியில் விளக்கப்பட்டது. இறைவனை ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்பதனால் முன்னைய முதல் என்ன முதல் இல்லோன் என்று கூறினார். நல்வினைக்கண் என்றது இறைவன் உயிர்களிடத்துக் கொண்ட கருணையினால் மேற்கொண்ட ஐந்தொழில்களையும் குறித்தது. தாபர சங்கமங்கள் என்று இரண்டு உருவில் நின்று, மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க்கு அருளை வைப்பன் என்பதனால் சிவனடியாரைக் கண்டு இன்புறுதல் உய்யும் நெறி எனப்பட்டது. பூ மலர்வதற்கு முன்பு மொட்டாகி அரும்பாகிப் போதாகி அதன் பின், மலர்வதைப் போல இறைவன் திருவடியை அடைவதற்கு முன்பு உயிர்கள் நல்ல குலத்தில் பிறந்து நல்லாரோடு இணங்கி நல் ஒழுக்கத்தில் பயிலுதல் இன்றியமையாததாயிற்று

இருவினை ஒப்பு என்பது இன்பத்திலும் துன்பத்திலும் ஒப்ப உவர்ப்பு நேர்தல். இது தன் முனைப் பற்றுத் திருவருளையே பற்றி ஒழுகுங்கால் அன்றி எய்தவராது. இருவினை ஒப்பும் மலபரிபாகமும் எய்திய உயிர்களிடம் இறைவனின் திருவருட்சத்தி பதியும். இது சத்தி நிபாதம்  எனப்படும். அற்றம்-முடிவு. இங்கு எதுகையின் பொருட்டு அற்றம் அத்தம் ஆயிற்று

முத்திதரு
நன்னெறி விஞ்ஞானகலர் நாடுமலம் ஒன்றினையும்
அந்நிலையே உள்நின்று அறுத்தருளிப் பின் அன்பு
மேவா விளங்கும் பிரளயா கலருக்குத்
தேவாய் மலகன்மம் தீர்த்தருளிய பூவலயம்
தன்னின்று நீங்காச் சகலர்க்கு அவர்போல
முன்நின்று மும்மலம் தீர்த்து ஆட்கொள்கை அன்னவனுக்கு
ஆதி குணமாதலினால் ஆடுந் திருத் தொழிலும்

சோதி மணிமிடற்றுச் சுந்தரமும் பாதியாம்
பச்சையிடமும் பவளத் திருச்சடைமேல்
வைச்ச நதியும் மதிக்கொழுந்தும்-அச்சம் அற
ஆடும் அரவும் அழகார் திருநுதல் மேல்
நீடுருவ வன்னி நெடுங்கண்ணும் கேடில்லயம்
கூட்டும் தருமருகமும் புலியதளும்-வீட்டின்ப
வெள்ளத்தழுத்தி விடுந்தாளி னும்அடியார்
உள்ளத்தினும் பிரியா ஒண்சிலம்பும் கள்ளவினை
வென்று பிறப்பறுக்கச் சாத்திய வீரக் கழலும்
ஒன்றும் உருத் தோன்றாமல் உள்ளடக்கி என்றும்
இறவாத இன்பத்து எமைஇருத்த வேண்டிப்
பிறவா முதல்வன் பிறந்து நறவாருந்
தாருலா வும்புயத்துச் சம்பந்த நாதன்என்று
பேரிலா நாதன்ஒரு பேர்புனைந்து பாரோர்தம்
உண்டி உறக்கம் பயம் இன்பம் ஒத்தொழுகிக்
கொண்டு மகிழ்ந்த குணம் போற்றி

மேற்கூறியவாறு சந்நிதிபாதம் அடைந்த உயிர்களுக்கு முத்திப் பேறு வழங்கும்போது, இறைவன் அவ்வவ் வுயிரின் தகுதிக்கு ஏற்பவே அருள்பாலிக்கிறான். விஞ்ஞானகலர்களாகிய ஒரு மலம் உடையார்க்கு உள் நின்று ஆணவ மலத்தை அறுத்து அருளுகிறான். அன்பு பொருந்திய பிரளயகலர் ஆகிய இரு மலம் உடையார்க்கு மானும் மழுவும் தாங்கிய தெய்வத் திருவடிவோடு முன் தோன்றி அவர்களுடைய ஆணவ மலம் கன்ம மலம் ஆகியவற்றைத் திர்த்தருளுவான். உலகியலில் உழன்று கொண்டிருக்கின்ற சகலராகிய மும்மலம் உடையார்க்கு அவர்களைப் போலவே மானுடச் சட்டை சாத்தி குருவடிவாக எழுந்தருளி ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்களையும் தீர்த்து ஆட்கொள்வான். இவ்வாறு ஆட்கொள்ளுவது இறைவனுக்கு என்றும் உள்ள இயல்பு ஆதலின் அவன் அழகிய சிற்றம்பலத்தில் நின்று ஆடுகின்ற திருக்கூத்தையும், ஒளி பொருந்திய நீலமணி மிடற்றையும், தனது வடிவில் ஒரு பாதியைக் கொண்ட அன்னை சிவகாமியைத் தாங்கிய இடப் பாகத்தையும், பவளம் போன்ற மேனியையும், திருச்சடைமேல் தாங்கிய கங்கையையும், பிள்ளைப் பிறையையும், திரு மேனி மீது அச்சமின்றி ஆடுகின்ற பாம்பினையும், அழகிய நெற்றியின் மீது நீண்டு இலங்கும் நெருப்பு விழியும், தாளம் தவறாத தமருகம் என்னும் உடுக்கையும், கையில் ஏந்திய தழலும் இடையில் கட்டிய புலித் தோலும், அதன் மேல் பூண்ட பாம்புக் கச்சும் வீட்டின்ப வெள்ளத்து அழுத்தும் திருத்தாளையும் அடியார் உள்ளத்திலும் நீங்காத ஒளி மிக்க சிலம்புகளும் உயிர்களைப் பிறப்புக்கு உட்படுத்தும் வினை களைவென்று அவற்றை உய்விக்கச் சூளுரைத்துச் சாத்திய வீரக் கழலும் ஆகிய ஒப்பற்ற அடையாளங்கள் வெளிப்பட்டுத் தோன்றாமல் உள்ளே அடக்கி, ஒருபோதும் நீங்காத பேரின்பத்தில் எம்மை இருத்துவதற்காகப் பிறவாத பெரியோன் இன்று எம்பொருட்டுப் பிறந்து வந்தான் என்று கூறும் படிதேன் பிலிற்றும் மாலை தாங்கி ஒருநாமம் இல்லாதான் மறை ஞான சம்பந்தன் என்று ஒரு திருநாமம் புனைந்து, மன்னுலக மக்களைப் போல் உணவு உறக்கம் அச்சம் இன்பம் ஆகியவை கொண்டு ஒத்து ஒழுகி எம்மை ஆட்கொள்ள வந்த உயர்ந்த பண்பினை வணங்குகிறேன்.

ஒரு மல முடையார் விஞ்ஞானகலர் எனப்படுவர். இவர்களுக்கு ஆணவ மலம் மட்டிலுமே உண்டு. இவர்களுக்கு அருள்பாலிக்கும் போது இறைவன் உயிர்க்குயிராய் உள் நின்று உணர்த்துவான். இது தன்மையில் உணர்த்துவது இருமலமுடையார் பிரளயாகலர் எனப்படுவர். இவர்களுக்கு அருள் புரியும் போது இறைவன் முக்கண்ணும் மணிமிடறும் மான் மழுவும் கூடிய தன் திருவடிவோடும் முன்னிலையில் நின்று அருளுவான் மும்மலமுடைய சகலருக்கு மானுட வடிவம் தாங்கி, குருவாக எழுந்தருளி வந்து அருளுவான்.

ஆசிரியர் உமாபதி சிவத்துக்கு ஞான குருவாக விளங்கியவர் மறை ஞான சம்பந்தர். இறைவனே அவ்வாறு குரு வடிவு கொண்டு எழுந்தருளி வந்து அருள் பாலித்தான் எனக் கூற வருகிற ஆசிரியர் இந்த இடத்தில் இறைவனின் திருவடிவத்தை மிக விரிவாக வருணித்து அத்தகையவனே தமக்கு ஞான ஆசிரியராக மறை ஞான சம்பந்தர் என்னும் திருப்பெயர் கொண்டு எழுந்தருளினான் என்று கூறுகின்றார்.

இடப்பால் பச்சை நிறம் உடையது என்பதனால் உமையொருபாகத் திருமேனி குறிக்கப்பட்டது. வைத்த என்பது எதுகை நோக்கி வைச்ச என்று திரிந்தது. கேடில் லயம் என்றது குற்றமற்ற தாள முறையினை, எல்லை யற்ற தாளம் என்பதும் பொருந்தும், இறைவனது தூக்கிய திருவடியே பிறவியை வேரறுக்குமாதலால் வீட்டின்ப வெள்ளத்து அழுத்திவிடும் தாள் என்று கூறினார். ஒன்றியிருந்து வழிபடும் அடியார் உள்ளத்தில் இறைவனின் திருச்சிலம்போசை ஒலிக்கும் என்பர். இறைவனது தாளினும் அடியார் உள்ளத்தினும் பிரியாத ஒண்சிலம்பு என்றது சிற்றம்பலத்தும் என் சிந்தையின் உள்ளும் என்ற திருக்கோவையாரை நினைவூட்டுவது.

பிறவா முதல்வன் பிறந்து என்றது குருவியின் பெருமையை உணர்த்துவதற்காகவே யன்றி, சிவபெருமான் மானிடனாகப் பிறந்தான் என்ற கருத்தைத் தராது. குருவாக வந்து அருளும் போது இறைவன் அதிட்டித்து நின்றும் ஆவேசித்து நின்றும் அருள்பாலிப்பனே அல்லாது அவன் கரு மேனி தரிப்பவன் பொருந்தாது. ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லான் ஆகிய இறைவன் தம் பொருட்டு எளியனாகி சம்பந்தநாதன் என்னும் பெயர் புனைந்து வந்தான் என்று ஆசிரியர் நன்றி உணர்வோடு குறிப்பிடுகிறார்.

மிண்டாய
ஆறு சமயப் பொருளும் அறிவித்து அவற்றில்
பேறு இன்மை எங்களுக்கே பேறாக்கித் தேறாத
சித்தம் தெளியத் திருமேனி கொண்டுவரும்
அத்கைமை தானே அமையாமல் வித்தகமாம்
சைவ நெறியிற் சமய முதலாக
எய்தும் அபிடேகம் எய்துவித்துச் செய்யதிருக்
கண்ணருளால் நோக்கிக் கடியபிறப் பாற்பட்ட
புண்ணும் இருவினையும் போய்அகல வண்ணமலர்க்
கைத்தலத்தை வைத்தருளிக் கல்லாய நெஞ்சுருக்கி
மெய்த் தகைமை யெல்லாம் விரித்தோதி ஒத்தொழுகும்
சேண்ஆர் இருள்வடிவம் செங்கதிரோன் பால்நிற்பக்
காணா தொழியும் கணக்கேபோல் ஆணவத்தின்
ஆதி குறையாமல் என்பால் அணுகாமல்
நீதி நிறுத்தும் நிலை போற்றி

தருக்குடைய புறச் சமயங்கள் ஆறும் கூறுகின்ற பொருளை எனக்கு அறிவித்து அவற்றால் பயனில்லை என்ற உண்மையையும் தெரிவித்து. சித்தத்திலே தெளிவு உண்டாகுமாறு திருமேனி கொண்டு தோன்றி அதனோடு அமையாமல், மேன்மை மிக்க சைவத் திரு நெறியில் சார்வித்து சமயம் முதலாகிய நால்வகைத் தீக்கைகளையும் செய்வித்து, செம்மையான திருக்கண் நோக்கத்தைப் பதிவித்துக் கொடிய பிறப்பினால் ஏற்பட்ட துயரம் இரு வினையும் போய் அகலுமாறு அழகிய தாமரை மலர் போன்ற திருக்கையைத் தலை மீது வைத்து அருள்பாலித்து கல் போன்ற மனத்தை உருகுமாறு செய்து முப்பொருளின் இயல்பெல்லாம் விரித்தோதிப் பரந்து கிடக்கும் இருள் கதிரவன் தோன்றிய உடனேயே அப்பேர் ஒளியால் அடங்கி ஒளியும் தன்மை போல் என்னைப் பற்றி நிற்கும் ஆணவத்தை நிலை பேறு அழியாமலும் அதே நேரத்தில் அது என்னைப் பற்றாமலும் செய்கின்ற நீதியை நிலை நிறுத்துகிற பெருந்தகைமையை வணங்குகிறேன்.

புறச் சமயங்கள் ஆறு என்றாரேனும் முக்கூற்றுப் புறச் சமயங்கள் ஆறு என்று பொருள் கொள்க. மிண்டாய ஆறு சமயம் என்பது அவை வீடு பேற்றிற்கு வழி காட்டாமல் தருக்கித் திரியவே வழி காட்டுதலின் என்க. கற்க இடர்ப்பட்டு மிகக் கற்ற எல்லாமும் கற்றவர் பால் தருக்கமிட்டு வாதிடுவதற்கு அன்று என்று விளக்கினார். புறச் சமயங்களின் பேறு இன்மையை மாற்றிச் சித்தாந்த சைவத்தின் பேற்றினை வழங்கினார் ஆசிரியர் என்கிறார்.

உலகத்துப் பொருள்களில் மயங்கி ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றி அலைகின்ற சித்தம் தெளியுமாறு திருமேனி கொண்டு என் முன் எழுந்தருளிச் சைவ நெறியில் செலுத்தினார்.

வித்தகமாம் சைவ நெறி என்பது பிற சமயங்களுக்கு இல்லாத உயர்வு சைவத்திற்கு உண்டு என்பதைக் குறிப்பிட்டதாகும். வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறன் என்று சிவப் பிரகாசத்துள் கூறியது காண்க.

தீக்கை என்பது மலத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுப்பது என்று பொருள் படும். இது பல வகைப்படும். ஆயினும் சமய தீக்கை விசேட தீக்கை, நிர்வாண தீக்கை, ஆச்சாரிய அபிடேகம் ஆகிய நான்குமே சிறப்பாகக் கூறப்படும். எனவே சமயம் முதலாக எய்தும் அபிடேகம் எய்துவித்து என்றார்.

நயன தீக்கை, பரிச தீக்கை என்பவற்றைக் குறிப்பிட திருக்கண் அருளால் நோக்கி.... கைத்தலத்தை வைத்தருளி என்றும் கூறினார். கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன் கருணை வெள்ளத்து அழுத்துகின்ற திருவருளை கல்லாய நெஞ்சு உருக்கி என்றார். முப்பொருளையும் பொது உண்மை என்று இரண்டு இயல்பாய் உணர்த்திய ஆசிரியரின் பெருமையை மெய்த்தகைமை எல்லாம் விரித்தோதி என்றார்.

ஆணவ மலம் முத்தி நிலையிலும் தன் வலிமை கெட்டு நிற்பதன்றி, முற்றிலும் அழிவதில்லை. ஆதலினால் ஆணவத்தின் ஆதி குறையாத என்றார். கதிரவன் ஒளியின் முன் இருள் அடர்த்து நிற்பதில்லை. ஆயினும் அழிந்து போவது மில்லை. அது போன்றதே ஆணவம் என்பதற்காகக் கதிரவன் முன்னிலையில் இருள் என்பதனை இங்கே உவமையாக எடுத்துக் கூறினார்.

மேதக்கோர்
செய்யும் சரியை திகழ்கிரியா யோகத்தால்
எய்துஞ்சீர் முத்தி பதம் எய்துவித்து மெய்யன்பால்
காணத் தகுவார்கள் கண்டால் தமைப் பின்பு
நாணத் தகும்ஞான நன்னெறியை வீணே
எனக்குத் தரவேண்டி எல்லாப் பொருட்கும்
மனக்கும் மலரயன் மால் வானோர் நினைப்பினுக்கும்

தூரம் போலே அணிய சுந்தரத்தான் என் தலை மேல்
ஆரும்படி தந்து அருள் செய்த பேராளன்
தந்த பொருள் ஏதென்னில் தான் வேறு நான் வேறாய்
வந்து புணரா வழக்காக்கி முந்தி என் தன்
உள்ளம் என்றும் நீங்காது ஒளித்திருந்து தோன்றி நிற்கும்
கள்ளம் இன்று காட்டும் கழல் போற்றி

மேன்மையுடையோர் இயற்றும் சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று நிலைகளிலும் ஒழுகி அவற்றுக்குரிய பத முத்திகளை அடைந்தோர்க்கு, அதனினும் உயரியதாகிய ஞான நன்னெறியை இறைவன் காட்டுகின்றான். இஞ்ஞான நன்னெறியைக் கண்டவர்கள் அதற்கு முன்பு தாம் இருந்த நிலையை எண்ணி நாணும் அளவுக்கு, உயரிய நெறி, அத்தகைய நெறியை ஒன்றுக்கும் பற்றாத எனக்கும் தர எண்ணி எல்லாப் பெருள்களுக்கும் மனத்துக்கும் அயனுக்கும் திருமாலுக்கும் உயர்க்கு உயிராகக் கலந்து நிற்கும் அவனுடைய அழகிய திருத்தாளை என் தலை மீது சூட்டியருளிய பேரருளாளன். அவன் எனக்குத் தந்த கொடை என்னவெனில் தான் வேறு நான் வேறாய் இருந்து இப்போது பொருந்தியதில்லை என்ற உண்மையை எனக்கு உணர்த்தியதுவே. என்றென்றும் என்னுடைய உள்ளத்தில் ஒளிந்திருந்தும் என்னால் காண இயலாமல் இருந்தும் இன்று வெளிப்பட்டு அருளிய கள்ளத் தன்மையைக் காட்டிய திருவடிகளுக்கு என் வணக்கம் உரியது.

சைவ சமயம் நால்வகை நெறிகளை வலியுறுத்துகிறது அவை சரியை கிரியை யோகம் ஞானம் என்பன. இவற்றுள் முந்தைய மூன்றும் பத முத்திகளையும் நான்காவதாகிய ஞானம் பர முத்தியையும் தரும் என்பர். ஞான நெறியை எய்தியவர்கள் அதற்கு முன்பு தாமிருந்த நிலைக்கு நாணுவார்கள் ஆகையினால் கண்டால் தமைப் பின்பு நாணத் தகும் ஞான நன்னெறி என்று கூறுவர். யாவற்றிற்கும் எட்டாதிருப்பது போலவே காட்டி அவற்றுள் எல்லாம் உடனாய் நின்று அருளுவதால் தூரம் போலே அணிய சுந்தரத் தாள் என்று கூறினார். தன்முனைப்போடு கூடிய நிலையிலே புலப்படாமல் இருந்து திருவருள் வழிப்பட்ட நிலையிலே விளங்கித் தோன்றுவது இறைவனின் தன்மை ஆதலால் ஒளிந்திருந்து தோன்றி நிற்கும் கள்ளம் என்றார்.

வள்ளன்மையால்
தன்னைத் தெரிவித்துத் தன்தாளின் உட்கிடந்த
என்னைத் தெரிவித்த எல்லையின் கண் மின் ஆரும்
வண்ணம் உருவம் மருவும் குணமயக்கம்
எண்ணும் கலைகாலம் எப்பொருளும் முன்னம் எனக்கு
இல்லாமை காட்டிப் பின்பு எய்தியவா காட்டி இனிச்
செல்லாமை காட்டும் செயல் போற்றி

தனது பெருங் கருணையினால் தன்னை எனக்கு உணர்த்தி நான் தனது அடியவன் என்பதையும் உணர்த்திய போது, மின்னல் போல் தோன்றி அழிகின்ற யாக்கையும் அதனோடு கூடிய மயக்கங்களும் என் அறிவுக்குத் துணையாய் நின்ற கலை காலம் முதலிய தத்துவங்களும் பொருந்தாத தன்மையான கேவல நிலையையும், பின் அவை வந்து பொருந்திய சகல நிலையையும் உணர்த்தி இனி மேல் அவை என்னை வந்து பொருந்தாத வண்ணம் சுத்த நிலை எய்திய தன்மையையும் உணர்த்தியருளிய பேராற்றலை வணங்குகிறேன்.

தோற்றமில் காலமாய் ஆணவத்தால் கட்டுண்டு அறியாமையே வடிவாகக் கிடந்த உயிருக்கு இறைவன் பொற்புடைய மாயையைப் புணர்ப்பித்து சகல நிலையில் செலுத்தி அதன் பின் படிமுறையே வளர்த்து சுத்த நிலையை அருளுகிறான். இவ்வாறு அருளுக்கு உரியதான உயிர் மீளவும் பிறவித் துன்பத்துக்கு ஆட்படுவதில்லை. அந்தப் பெருங் கருணையை நினைவு கூர்ந்து வணங்குகிறாய் ஆசிரியர்.

எல்லாம் போய்த
தம்மைத் தெளிந்தாராய்த் தாமே பொருள் ஆகி
எம்மைப் புறம் கூறி இன்புற்றுச் செம்மை
அவிகாரம் பேசும் அகம் பிரமக் காரர்
வெளியாம் இருளில் விடாதே ஒளியாய்நீ
நின்ற நிலையே நிகழ்த்தி ஒரு பொருள் வேறு
இன்றியமையாமை எடுத்து ஓதி ஒன்றாகச்
சாதித்துத் தம்மைச் சிவமாக்கி இப்பிறவிப்
பேதம் தனில் இன்பப் பேதம் உறாப் பாதகரோடு
ஏகமாய்ப் போகாமல் எவ்விடத்தும் காட்சி தந்து
போகமாம் பொன் தாளின் உன் புணர்த்தி ஆதியுடன்
நிற்க அழியா நிலை இதுவே என்றருளி
ஒக்க வியாபகம் தன் உள் காட்டி மிக்கோங்கும்
ஆனந்த மாக் கடலில் ஆரா அமுது அளித்துத்
தான் வந்து செய்யும் தகுதியினால் ஊன் உயிர் தான்
முன் கண்ட காலத்தும் நீங்காத முன்னோனை
என் கொண்டு போற்றிசைப்பேன் யான்

எல்லாப் பொருள்களும் பொய் என்று கூறியும், யாம் அவற்றை விட்டு நீங்கினோம் என்றும், எமக்கு மேம்பட்ட பொருள் வேறு ஒன்று இல்லை என்றும், சைவ சித்தாந்தச் செந்நெறியைப் புறங் கூறித் திரிவாராயும், அதிலேயே, மகிழ்ச்சி காண்பவர்களாகவும் பிரமப்பொருளைப் போன்றே தமக்கும் விகாரம் இல்லை என்று கூறித்  தாமே பிரமம் என்று கூறி வருபவர்களின் செறிந்த இருளுக்குள் என்னைச் செல்ல விடாது தடுத்து இறைவனாகிய நீயே அறிவொளியாய்த் திகழ்கின்ற தன்மையினை உணர்த்தி எனக்கு வழி காட்டினாய், அது மட்டும் அல்லாமல் ஒப்பற்ற பொருளாகத் தாம் விளங்குவதாகக் கூறியும், யாம் இறைவனோடு ஒன்றாவோம். யாமே சிவம் என்றும் இப்பிறவியிலேயே பேரின்ப வாழ்வைப் பெறத்தவறிய சிவசமவாதிகளாகிய பாதகரோடு நான் சேர்ந்து விடாதவாறு என்னைத் தடுத்தாட் கொண்டாய். எங்கும் நீக்கமற நிற்கும் உன்னுடைய பெரு நிலையைக் காட்டி அழிவில்லாத பேரின்ப வீட்டினை வழங்கும் உன் திருவடி மலர்களில் என்னை ஆட்படுத்தி அழியாத வீட்டு நிலை இதுவே என்று உணர்த்தி, உனது பேரறிவுள் என் சிற்றறிவு அடங்கி நிற்குமாறு அருள் பாலித்து நாளுக்கு நாள் வளர்ந்தோங்கும் ஆனந்தப் பெருங் கடலில் விளைகின்ற அமுதத்தை எனக்கு வழங்கிக் காத்தருளி, நான் தளைப்பட்டுக் கிடந்த காலத்தும் என்னை விட்டு நீங்காது என்னைக் காத்தருளிய இறைவனை நான் எவ்வாறு புகழ்ந்து போற்றுவேன்?

அகம் பிரமக்காரர் என்று குறித்தது ஏகான்ம வாதிகளை அவர்களோடு சேர்ந்து பழி நெறியில் படராமல் காத்தது இறைவன் திருவருளே என்று ஆசிரியர் போற்றுகிறார். முத்தி நிலையில் உயிர் சிவமாகும் என்று கூறும் சிவசமவாதிகளோடு கூடாமல் தன்னைக் காத்ததும் இறைவனின் திருவருளே என்று நன்றி பாராட்டுகிறார். சைவ சித்தாந்தம் கூறும் முத்திப் பேறு என்பது உயிர் இறைவனின் திருவடி நிழலில் இருந்து, என்றென்றும் மாறாத பேரின்பத்தை நுகர்வதே என்பதை உணர்த்தி யருளிய குரு வடிவில் எழுந்தருளி வந்த இறைவனை எவ்வளவு போற்றினாலும் தகும் ஆகையினால் என் கொண்டு போற்றிசைப்பேன் யான் என்று உருகி வணங்குகிறார் ஆசிரியர்.

போற்றி திருத்தில்லை போற்றி சிவபோகம்
போற்றி அவன் மெய்ஞ்ஞானப் புண்ணிய நூல் போற்றி எங்கள்
வெம்பந்த வாழ்க்கை விட வேறாய் வந்து உள் நின்ற
சம்பந்த மாமுனி பொன் தான்

திருத்தில்லை நகருக்குப் போற்றி! தில்லையில் கோயில் கொண்ட இறைவன் தந்தருளிய சிவ போகத்தைப் போற்றுகிறேன். இறைவனின் மெய்ஞ்ஞான விளக்கங்களை எடுத்து உரைக்கும் அருள் நூல்களுக்குப் போற்றி! வெப்பமுடைய பிறவியை வேரறுக்க என்னுள் ஒன்றாய் உடனாய் வேறாய் நின்று என்னை ஆண்டு கொண்ட மறைஞான சம்பந்தப் பெருமுனிவரின் திருவடிகளுக்குப் போற்றி!

நன்றி: சி.சு.மணி

 
மேலும் போற்றிப் பஃறொடை »
ஆசிரியர் உமாபதி சிவம் அருளிய சித்தாந்த நூல்கள் எட்டு என்பர். அவை சித்தாந்த அட்டகம் எனப்படும். அவற்றுள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar