Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » உண்மை நெறி விளக்கம்
உண்மை நெறி விளக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2013
03:11

உண்மை நெறி விளக்கம் என்னும் இந்நூல் மெய் கண்ட சாத்திரங்கள் பதினான்கினுள் பதின்மூன்றாவதாக வைத்து எண்ணப்படுகிறது.

மெய்கண்ட சாத்திரங்களுள் சில நூல்கள் அளவால் மிகக் குறுகியவை. கொடிக்கவி, உண்மை நெறி விளக்கம், வினா வெண்பா ஆகிய மூன்றும் அத்தகையன.

மற்றைய மெய்கண்ட நூல்களைப்பற்றியும், அவற்றின் ஆசிரியர்களைப் பற்றியும் தெளிவான செய்திகள் நமக்குக் கிடைத்துள்ளன. உண்மை நெறி விளக்கத்தின் ஆசிரியரைப் பற்றி இரு வகைப்பட்ட கருத்துக்கள் கூறப்படுகின்றன. ஒரு கருத்து, உண்மை நெறி விளக்கத்தை அருளியவர் சந்தான குரவர்களில் நாம்காமவராகிய ஆசிரியர் உமாபதி சிவம் என்பது. இக் கருத்துடையோர்கள் சிவப்பிரகாசம் திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக் கவி, நெஞ்சு விடு தூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் ஆகிய எட்டு நூல்களையும் உமாபதி சிவம் அருளிச் செய்தார் என்று கொண்டு, இவை எட்டும் சேர்ந்து சித்தாந்த அட்டகம் என்று பெயர் பெறும் எனக் கூறுவர். இதே தலைப்பில் இவ் வெட்டு நூல்களும் ஒரு சேரப் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

எண்ணும் அருள் நூல் எளிதின் அறிவாருக்கு
உண்மை நெறி விளக்கம் ஓதினான் வண்ணமிலாத்
தண்காழித் தத்துவனார் தாளே புனைந்தருளும்
நண்பாய தத்துவ நாதன்

என்னும் பாடல் இந்நூலின் சிந்தனை உரையில் பாயிரமாக அமைந்திருப்பதையும் அவ்வுரையின் இறுதியில் சீர்காழிச் சிற்றம்பல நாடிகள் அருளிய துகளறு போதம் என்ற நூலில் விளக்கப் பெற்றுள்ள முப்பது அவதரமும்(நிலைகளும்) உண்மை நெறி விளக்கத்தின் ஆறு பாடல்களில் தசகாரியம் என அடக்கிக் கூறப்பட்டுள்ளது என்ற விளக்கத்தை மேற்கோளாகக் காட்டுகின்றனர். இக் கொள்கை யுடையவர்கள் இருபா இருபஃது நூலுக்குக் கிடைத்துள்ள பழமையான உரை ஒன்றின் இறுதியில் உள்ள ஒரு வெண்பாவை எடுத்துக்காட்டி மேலே குறிப்பிட்ட பாடலில் பின் இரண்டு அடிகளில் கூறப்படுபவர் பண்புடைய சிற்றம்பல நாடி தாள் பணியும், சண்பை நகர் தத்துவ நாதன் என்று ஆதாரம் காட்டுகின்றனர். அவ்வாறே அறிஞர் சிலருக்குக் கிடைத்துள்ள உமாபதி சிவத்தின் நூல்கள் அடங்கிய ஓலைச் சுவடிகளில் உண்மை நெறி விளக்கம் காணப்படவில்லை என்று ஆதாரம் காட்டுவர்.

மரபுவழி கொள்ளப்படும் கருத்து உண்மை நெறி விளக்கம் ஆசிரியர் உமாபதி சிவத்தால் அருளப்பட்டது என்பதே ஆகும்.

மேலே கூறப்பட்ட பாயிரம் தவிர்த்து இந்நூல் ஆறு விருத்தப்பாக்களை உடையது. பாயிரம் சிந்தனை உரையின் இறுதியிலே காணப்படுகிறது.

மண் முதல் சிவம் அது ஈறாம் வடிவு காண் பதுவே ரூபம்
மண் முதல் சிவம் அது ஈறாம் மலம்சடம் என்றல் காட்சி
மண் முதல் சிவம் அது ஈறாம் வகைதனில் தான்நிலாது
கண் நுதல் அருளால் நீங்கல் சுத்தியாய்க் கருதலாமே

மண் முதலாகச் சிவம் ஈறாக அருள் நூல்கள் முப்பத்தாறு தத்துவங்களைக் கூறுகின்றன. அத்தகைய தத்துவங்கள் யாவற்றையும் அருள் நூல்கள் கூறகிற முறையில் முறைமை தவறாமல் கண்டு உணர்வதே தத்துவ ரூபம் எனப்படும். இத்தகைய முப்பத்தாறு தத்துவங்களும் சடம் ஆதலால் அவை தாமாகவே எதனையும் அறியமாட்டா. உயிர்தான் அவற்றுள் ஒன்றி நின்று அறியும் என்று உணர்வது தத்துவ தரிசனம் ஆகும். இவ்வாறு கண்ட உயிர் திருவருளின் துணையினாலே முப்பத்தாறு தத்துவங்களின் இயல்பையும் விளைவையும் நன்கு தெளிந்து இவற்றோடு பொருந்தி நில்லாது விலகி நிற்றல் தத்துவ சுத்தி ஆகும்.

சைவ சித்தாந்த மெய்ப்பொருள் இயல் தத்துவங்கள் முப்பத்தாறு என்றும் தாத்துவிகங்கள் அறுபது என்றும் எடுத்துரைக்கின்றன. இவை இரண்டுமாகத் தொண்ணூற்று ஆறு ஆகும். இவற்றின் விளக்கங்களும் வகைகளும் உண்மை விளக்கம் சிவஞான சித்தியார் போன்ற நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

தத்துவம் என்றால் உண்மை என்ற பொருள் தரும். உடல் கருவி உலகு நுகர்ச்சிப் பொருள் ஆகிய இவற்றைப் பகுத்தும் உயிர் இவற்றோடு பொருந்தி நிற்கும் முறைமையைக் கொண்டும் தத்துவங்கள் முப்பத்தாறு என்று கணக்கிடப்படுகின்றன. இத் தத்துவங்களை அறிதல் தத்துவ ரூபம் அல்லது தத்துவ வடிவு என வழங்கப்படும். இவற்றைத் தான் என மயங்காது இவை வேறு தான் வேறு எனவும், தத்துவங்கள் யாவும் அறிவற்ற சடப் பொருள் எனவும் ஞான ஆசிரியனால் உணர்த்தப்பட்டு உணர்வது தத்துவ தரிசனம் அல்லது தத்துவக் காட்சி என வழங்கப்படும். இறைவன் திருவருளால் இத்தத்துவங்களின் இயல்பை நன்கு அறிந்து அவற்றோடு கூடாமல் நீங்குவதே தத்துவ சுத்தி என்ற தத்துவத் தூய்மை ஆகும்.

இறைவன் உயிர் தளை ஆகிய முப்பொருள்களும் என்றும் உள்ளவை. இறைவன் முழு முதன்மையும் எண் குணங்களும் உடையவன். எண் குணங்களில் ஒன்று இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், நீங்குதல் என்பது இவ்விடத்தில் சேர்ந்திருப்பது பின் நீங்குவது என்ற பொருளைத் தராமல் பாசங்களால் பற்றப்படாத இயல்பு என்ற பொருளைத் தருகிறது. எனவே பாசங்கள் உயிரைப் பற்றுகின்றன. ஆணவ மலம் உயிரைத் தோற்றமில் காலம் தொட்டே பிணித்து அறியாமையே வடிவாக ஆக்கி விடுகிறது.

உயிரின் அறியாமையைப் போக்குவதற்காக இறைவன் மாயையிலிருந்து தத்துவக் கூட்டங்களை உயிருக்குத் தருகிறான். அவற்றின் வழியாகவும் துணையோடும் உயிரின் அறிவு படிப்படியே வளர்ந்து உரிய பக்குவம் வந்த போது முத்தி நிலையை இறைவனருளால் எட்டுகிறது.

தொடக்க நிலையில் உயிர் தான் வேறு தத்துவங்கள் வேறு என்று அறிவதில்லை. தத்துவங்களையே தானாகக் கருதிக் கொள்கிறது. இதனை விட்டு நீங்க வேண்டுமானால் இவற்றின் தன்மையை அறிந்து முதலில் தன்னை வேறாகக் காணல் வேண்டும் அவ்வாறு காண்பதுவே தத்துவ ரூபம் எனப்படும். அதை அடுத்துத் தத்துவங்களின் தன்மையை, இலக்கணத்தை, அவை அறிவற்றன என்பதை உணர்வதாகும். மூன்றாவது படிநிலையாக இத்தத்துவங்களை விட்டு நீங்கினால் அல்லது சிவப் பெறு கைவராது என்பதை அறிதல் வேண்டும் அதுவே தத்துவ சுத்தி எனப்படும். இம் மூன்று படிநிலைகளையும் முதற்பாடலில் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

பாயிருள் நீங்கி ஞானம் தனைக் காண்டல் ஆன்ம ரூபம்
நீயும்நின் செயல் ஒன்று இன்றி நிற்றலே தரிசனம் தான்
போய் இவன் தன்மை கெட்டுப் பொருளிற் போய் அங்குத் தோன்றாது
ஆய்விடில் ஆன்ம சுத்தி அருள் நூலின் விதித்தவாறே.

பரந்த இருளாக எல்லா உயிர்களையும் பற்றிக் கொண்டிருக்கிற ஆணவ மலத்தின் பிடியிலிருந்து விலகித் தன்னுடைய சிற்றிவுக்கு அறிவுக்கு அறிவாக நின்று உதவுவது இறைவனுடைய பேரறிவே என்பதை உணர்வது ஆன்ம ரூபம் எனும் உயிரின் வடிவு. இறைவனின் பேரறிவு புலப்பட்டுத் தன் சிறுமையையும் உணர்ந்த உயிர் அவனுடைய பேரறிவுச் சத்தியின்றித் தனக்கென ஒரு ஆற்றல் இல்லை செயல் இல்லை என்பதை உணர்வது இதற்கு அடுத்த படிமுறையாகும். இது ஆன்ம தரிசனம் எனும் உயிர்க் காட்சி. இது முற்கூறியதற்கு அடுத்த படிநிலை. எல்லாம் சிவன் செயல் என்றுணர்ந்த உயிர் செயலின்றி நின்ற தன்மையோடு அமையாது நான் இதனை அறிகின்றேன் நான் இதனைச் செய்கின்றேன் எனத் தன்முனைப்போடு சுட்டியறிவும் அறிவும் நீங்கப் பெற்று இறைவன் திருவருளிலே ஒன்றித் தன்முனைப்பும் அற்று ஆணையாம் சிவத்தை சார்ந்து அதிலேயே ஒடுங்கி அவனே தானே ஆகிய அந்நெறியில் நிற்பது ஆன்ம சுத்தி எனப்படும் உயிரின் தூய்மை ஆகும். இவை மூன்றும் இறைவன் அருளிய ஆகமங்களில் கூறப்பட்ட முறைமை.

ஞானம் என்பது திருவடி உணர்வாகிய சிவஞானம். இரவில் காண இயலாதிருந்த கண் காலையில் கதிரவன் தோன்றியதும் அதனைக் காண்கிறது. இதுவே ஆணவ மல மறைப்பில் இறைவனை அறிய ஒண்ணாது இருந்த உயிர் சிவானந்தத்தைக் காண்பதற்கு உவமையாயிற்று. இதுவே ஆன்ம ரூபம் எனப்படும்.

உயிர் தனித்து நின்று காணும் வல்லமையற்றது. ஏதாவது ஒரு பொருளைச் சார்ந்து நின்று தன்னைக் காணும் இயல்புடையது. இது வரை தத்துவங்களைச் சார்ந்து தத்துவம் வேறு தான் வேறு என உணராது இருந்த உயிர் இப்போது தன்னை இயக்குவிக்கும் திருவருள் ஆற்றலை யின்றித் தனக்கு ஒரு ஆற்றல் இல்லை என்பதை உணரும். இதுவே ஆன்ம தரிசனம் எனப்படும் உயிர்க் காட்சி.

திருவடிப் பேற்றினுள் இறைவன் திருவருளால் அடங்கி அதன்பின் சிவத்தைச் சார்ந்து பின் அதனை விட்டு அகலாது குறைவற்ற அன்பினால் அப் பேரின்பத்தைத் தன்னை மறந்து துய்த்துக் கொண்டிருக்கும் நிலை ஆன்ம சுத்தி எனப்படும் உயிர்த் தூய்மை.

இது வரை சொல்லப்பட்டவை முறையே தத்துவ ரூபம். தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்ம ரூபம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி என்ற ஆறுமாகும். தத்துவங்களும் உயிரும் குற்றமுடையன ஆகையால் அவற்றின் வடிவு காண்டலும் இயல்பு காண்டலும் ஆகிய இரண்டு நிலைகளுக்குப் பின்னர் அவற்றின் தூய்மை நிலை பற்றிக் கூறப்பட்டது. இதை அடுத்த பகுதியில் பரம்பொருளாகிய சிவத்தைப் பற்றிக் கூறத் தொடங்குகிறார் ஆசிரியர். அது நான்கு வகையாகக் கூறப்படும். அவை முறையே சிவ ரூபம், சிவ தரிசனம், சிவ யோகம், சிவ போகம் என்பன. தூய்மையே வடிவான இறைவனுக்குத் தூய்மை கூற வேண்டுவதில்லை என்பது ஒன்று. உயிரின் குறிக்கோள் சிவத்தோடு ஒன்றுதலும் சிவப் பேரின்பத்தை நுகர்தலும் ஆகிய இரண்டுமே என்பது மற்றொன்று.

எவ்வடிவுகளும் தானாம் எழிற்பரை வடிவதாகிக்
கல்வியமலத்து ஆன்மாவைக் கருதியே ஒடுக்கி ஆக்கிப்
பவ்வமீண்டு அகலப் பண்ணிப் பாரிப்பான் ஒருவன் என்றே
செவ்வையே உயிருட் காண்டல் சிவரூபமாகும் அன்றே.

உலகத்தில் காணப்படுகிற அறிவுஇல் பொருளும் அறிவுடைப் பொருளுமாகிய எல்லா வடிவங்களும் தானே ஆகி அவற்றொடு இரண்டறக் கலந்து நின்று எழில்மிக்க பராசத்தியையே தனக்கு வடிவமாகக் கொண்டு, மலத்தால் விழுங்கப்பட்டுக் கிடக்கும் ஆன்மாக்கள் மீது கொண்ட கருணையின் காரணமாக அவற்றுக்கு உடல் கருவி உலகு நுகர்ச்சிப் பொருள் ஆகியவற்றைத் தந்து அவற்றின் இளைப்பாறுதலுக்காக ஒடுக்கிப் பின்னர் உளவாக்கி, பக்குவப்பட்ட உயிர்களுக்குப் பிறவிக் கடலில் இருந்து மீள்வதற்கு வழிகாட்டி அவற்றுக்கு வீடுபேறு வழங்குபவன் சிவபெருமான் ஒருவனே என்று செம்மையாக உயிர் உணர்வதே சிவரூபம் ஆகும்.

எவ்வடிவுகளும் தானாம் என்ற பகுதிக்கு சிவம் சத்தி நாதம் விந்து சதாசிவம் மகேசுவரன் உருத்திரன் மால் அயன் என்ற நவம்தரு பேதம் ஏகநாதனே நடிப்பன் என்பர்(சித்தியார் 164) என்ற சிவஞான சித்தியார்த் திருவிருத்தத்தின் அடிப்படையிலும் பொருள் கொள்ளுவர்.

எழிற்பரை என்பது கருணை நிறைந்த பராசக்தியைக் குறித்து நின்றது உயிர்களை உய்விப்பதற்காக அவற்றைப் பிறப்பு இறப்புட் செலுத்தி வினையைக் கழிப்பது இறைவனின் திருவருள் ஆதலால் அருளது சத்தியாகும் அரன் தனக்கு (சித்தியார் 239) எனப் பெரியோர் உரைப்பர்.

தோற்றமில் காலம் தொட்டே உயிர்களைப் பற்றிக் கொண்டிருக்கும் ஆணவ மலம் நீங்குதற் பொருட்டே இறைவன் ஐந்தொழில் இயற்றுகிறான். ஆதலால் கவ்விய மலத்து ஆன்மாவைக் கருதியே ஒடுக்கி ஆக்கி பவ்வம் மீண்டு அகலப்பண்ணி என்று உரைத்தார் ஆசிரியர்.

ஐந்தொழிலும் இயற்றுவானும் உயிர்களுக்கு வீடுபேறு தருவானும் சிவபெருமான் ஒருவனே என்ற தெளிவும் அப்பெருமானின் வடிவம் தடையிலா ஞானமாகிய திருவருள் ஆற்றல் என்று ஐயமும் திரிபும் இன்றிக் காண்டல் சிவரூபம் எனப்படும் சிவவடிவமாகும்.

பரைஉயிரில் யான் எனது ஒன்று அறநின்றது அடியாம்
பார்ப்பிடம் எங்கும் சிவமாய்த் தோன்றல் அதுமுகமாம்
உரை இறந்த சுகம் அதுவே முடியாகும் என்று இவ்
உண்மையினை மிகத் தெளிந்து பொருள்வேறு ஒன்று இன்றித்
தரைமுதலில் போகாது நிலையினில் நில்லாது
தற்பரையில் நின்று அழுந்தாது அற்புதத்தின் ஆகும்
தெரிவு அரிய பரமானந்தத்தில் சேர்தல்
சிவன் உண்மைத் தரிசனமாய்ச் செப்பும் நூலே

யான் எனது என்னும் அகப்பற்றும், புறப்பற்றும் அறவே நீங்குமாறு உயிரில் திருவருள் பதிதல் சிவபெருமானது திருவடி ஆகும். பார்க்கும் இடம் எங்கும் அசைவனவும் நின்றனவுமாகிய பொருள்கள் எல்லாம் சிவபெருமானாகவே தோன்றுதல் அவனது திருமுகம் ஆகும். இதன் விளைவாகச் சொல்லுக்கு அடங்காமல் தோன்றும் பேரின்பமே அப்பெருமானது திருமுடியாகும். இவ்வாறு அறிந்து உண்மை தெளிந்து இறைவனைத் தவிர வேறு பொருள் இல்லை என்பதை உணர்ந்து மண் முதலாகிய தத்துவங்களைச் சேர்ந்து பிறவியுட்படாமலும் தன் முனைப்பாகிய செருக்கினில் அழுந்தாமலும் இவ்வாறு அறிதற்குத் துணையாக நின்ற திருவருளை உணர்ந்து அதனோடு அமையாது அதற்கு அப்பாலும் சென்று அதனால் விளைகின்ற தெரிதற்கரிய பேரின்பத்தில் திளைத்திருத்தல் சிவதரிசனம் ஆகும் என்று சிவாகமங்கள் கூறும்.

என்று கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபர முனிவர் அருளியுள்ளது இங்கு நினைவு கூருதற்குரியது. பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே என்ற தாயுமானவர் வாக்கும் இதனை உணர்த்தும்.

சிவப் பேரின்பம் இத்தகையது என்று சொல்லால் உணர்த்த இயலாது என்பதனைத் திருஉந்தியார்.

இங்ஙன் இருந்ததென்று எவ்வண்ணம் சொல்லுகேன்
அங்ஙன் இருந்தது என்று உந்தீபற
அறியும் அறிவு அது அன்று உந்தீபற
என்று அருளிச் செய்கிறது.

தரை முதலில் போகாது என்பது தத்துவ உயப்படாது என்று பொருள் தரும். முதற்பாடலில் மண் முதல் என்று சொல்லப்பட்ட கருத்து இங்குத் தரை முதல் என்று சொல்லப்பட்டது.

திருவருள் வழியே சென்று சிவத்தினை அடைதல் வேண்டும் என்பதை வலியுறுத்துவற்காக தற்பரையில் நின்று அழுந்தாது அற்புதத்தின் ஆகும் தெரிவு அரிய பரமானந்தத்தில் சேர்தல் என்று விதந்து கூறினார்.

எப்பொருள் வந்து உற்றிடினும் அப்பொருளைப் பார்த்து அங்கு
எய்தும் உயிர்தனைக் கண்டு இங்கு அவ்வுயிர்க்கு மேலாம்
ஒப்பில் அருள் கண்டு சிவந்து உண்மை கண்டு இங்கு
உற்றது எல்லாம் அதனாலே பற்றி நோக்கித்
தப்பினைச் செய்வதும் அதுவே நினைப்பும் அதுதாவே
தரும் உணர்வும் பொசிப்பும் அதுதானே ஆகும்
எப்பொருளும் அசைவு இல்லை என அந்தப் பொருளோடு
இசைவதுவே சிவயோகம் எனும் இறைவன் மொழியே.

உலகியல் பொருள்கள் எதனோடு பொருந்த நேரிடினும் அப்பொருள் அறிவற்றதாயும் சடமாயும் அழிந்து போகிற தன்மையுடைய தளை என்றும் அறிந்து அதன் உண்மையை உணர்ந்து உயிரின் உண்மையான நிலைமை தனக்கென ஒன்று இன்றித் தன்னிலும் மேலான திருவருளின் துணை கொண்டு செயல்படுவதே என்பதை அறிந்து, அவ்அருளின் வழியாக சிவ பரம்பொருளின் உண்மையை உணர்ந்து அதனுள் அடங்கி, மறப்பும் நினைப்பும் அறிவிக்க அறியும் ஆன்மாவும் வினை நுகர்வும் சிவமே யாகும் என்பதையும் உணர்ந்து அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதையும் தெளிந்து சிவத்தோடு பொருந்துவதே சிவயோகம் என்று இறைவன் மொழியாகிய ஆகமங்கள் கூறுகின்றன.

தப்பு என்பது அதன் பின்னர்க் கூறப்படுகின்ற நினைப்பு என்ற சொல்லுக்கு மறுதலைப் பொருளை உணர்த்துதால் இங்கு அது மறப்பு என்று பொருள் கொள்ளப்பட்டது. பொசிப்பு என்பது நுகர்வு என்ற பொருளைத் தரும்.

பாதகங்கள் செய்திடினும் கொலை களவு கள்ளுப்
பயின்றிடினும் நெறியல்லா நெறி பயிற்றிவரினும்
சாதிநெறி தப்பிடினும் தவறுகள் வந்திடினும்
தனக்கு என ஓர் செயல் அற்றுத் தான் அதுவாய் நிற்கில்
நாதன் அவன் உடல்உயிராய் உண்டு உறங்கி நடந்து
நானா போகங்களையும் தான் ஆகச் செய்து
பேதம் அற நின்று இவனைத் தானாக்கி விடுவன்
பெருகுசிவ போகம் எனப் பேசும் நெறிஇதுவே.

சிவ யோகத்தில் பொருந்தியவர்கள் இவ்வுலகில் வாழும் காலத்துத் தவறுகள் செய்திடினும் கொலை களவு கள்ளுண்ணல் போன்றவற்றைச் செய்யினும் அறநெறி சாராத நெறியில் ஒழுகினும், குலத்துக்கு ஒவ்வாத குற்றங்கள் செய்யினும் அல்லது குற்றம் இழைக்காமலே பழிவந்து சேர்ந்தாலும், அவர்கள் ஏகனாகி இறை பணி நிற்பவர்கள் ஆகையால் இறைவன் அவர்கள் செயலை எல்லாம் தானே ஏற்றுக் கொண்டு அவர்களையும் தானாகச் செய்வன். இதுவே சிவபோகம் என்று கூறப்படும்.

பாதகம் செய்திடலுக்குச் சண்டேச நாயனாரையும் கொலைக்குக் கோட்புலி நாயனார் வரலாற்றையும், நெறியல்லா நெறி என்பதற்கு மூர்க்க நாயனாரையும் இவ்வாறே பொருந்தும் அடியார் வரலாறுகளைப் பொருத்திக் காண்க.

சிவஞான, சித்தியாரில்

இவன் உலகில் இதம் அகிதம் செய்த எல்லாம்
இதம்அகிதம் இவனுக்குச் செய்தார் பால் இயையும்
அவன் இவனாய் நின்றமுறை ஏகன் ஆகி
அரன்பணியில் நின்றிடவும் அகலும் குற்றம்
சிவனும்இவன் செய்திஎலாம் என்செய்தி என்றும்
செய்தது எனக்கு இவனுக்குச் செய்தது என்றும்
பவம்அகல உடனாகி நின்றுகொள்வன் பரிவால்
பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே

எனக் கூறப்பட்ட திருப்பாடல் இருக்கருத்தை வலியுறுத்தும்.

நன்றி: சி.சு.மணி

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar