Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சங்கற்ப நிராகரணம் பகுதி-1
முதல் பக்கம் » சங்கற்ப நிராகரணம்
சங்கற்ப நிராகரணம் பகுதி-2
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2013
03:11

பேதவாதி சங்கற்ப நிராகரணம்

மறைகள் ஆகமத் துறைகள்மற்று எவையும்
நாசமில் பதிபசு பாசம்என்று உரைத்தல்
அயர்த்துஓர் குளிகைச் சயத்தால் தாமிரக்
காளித நாசம் பாசத்து ஏய்த்தல்
கூடாது அன்றியும் குளிகை சீருணம்

நீடாது அழித்த நிலைஇலை ஆதலின்
பேத வாதம் ஓதுதல் பிழையே
இன்னும் இன்உயிர் ஏமம் குளிகை
தன்னில் அன்னியம் தருவது திடமே
வீடுஇத் திறத்தினில் கூடக் கூடா

மறைகளும் ஆகமங்களும் மற்றும் உள்ள அருள் நூல்களும் பதி பசு பாசம் ஆகிய மூன்றும் என்றும் நிலைத்த பொருள்கள் என்று கூறுகின்றன. அவ்வாறு கூறுவதை மறந்து இரசகுளிகையைக் கொண்டு செம்பில் உண்டாகிய களிம்பு முற்றிலும் அழிதல் போலப் பாசங்கள் முற்றிலும் அழியும் என்று கூறுவது அருள் நூல்களின் கருத்துக்கு நேர் மாறானது. இரசகுளிகை செம்பைப் பொன்னாக மாற்றிற்று என்றால் செம்பு என்கிற பொருள் ஒழிந்து பொன்னாகிய புதிய பொருள் ஒன்று அங்கே தோன்றுகிறது என்றாகும். அவ்வாறு உயிரும் இல்லாமல் போய் அதனின்றும் மாறுபட்ட ஒரு பொருள் தோன்றிற்று என்று ஆகும். இவ்வாறு கூறுவதும் பிழையே ஆகும். மேலும் செம்பு வேறு இரசகுளிகை வேறு என்பதனால் இவை இரண்டும் நமக்குள் அந்நியமானவை என்பதும் தெளிவு. அந்நியப் பொருள் ஒன்று உயிரைச் சார்ந்து அதற்கு முத்தி நிலையைத் தரும் என்று கூறும் பேதவாதம் பிழையுடையதே.

சிவசமவாதி சங்கற்பம்

பாசமும் பசுவும் ஈசனும் என்றுஇம்
மூவகை உணர்வு தாம் முதன்மையவாய்ப்
பாச ஐம்புலன் தேசுற உணர்த்தப்
பசுத்தனி ஞானம் பொசித்திடும் அன்றே
இளைய ஞானி பிரிவுற எரியாச்

செந்தழல் தகுநெறி அந்தம் இல் உயிரும்
அறிவாய் ஒன்றும் அறியாது அன்றே
இவ்வாறு ஒழுகும் ஏனைய உயிர்க்கு
முன்னோன் தனது முதிர்ஒளி ஞானம்
அறியாப் பச்சைச் சிறுபுழுக் கவர்ந்த

வண்டுஎன உயிரைக் கொண்டிடும் உயிர்அது
தன்னை நோக்கித் தான்அது வாகி
ஐவகைத் தொழிலும் மெய்வகை உணர்வும்
பிரியா வாறு பெற்றுத்
திரியாப் பெரியோர் திரட்சிசேர்ந் திடுமே

பதி பசும் பாசம் எனப்படும் முப்பொருள்களுக்கும் அவ்வவற்றுக்குரிய அறிவுகள் தோற்றமில் காலம் தொட்டே உள்ளன. இவை முறையே பதி ஞானம் பாச ஞானம் என்பன. பாச ஞானம் என்பது உலகத்துப் பொருள்களைப் பற்றிய அறிவு அது உயிரினிடத்தே நிகழும். பசு ஞானம் என்பது உயிர் கருவிகளின் வாயிலாகத் தெளிவுற அறிந்த பொருள்களை நுகர்ந்திடும் தனி அறிவாகும். அது சகல நிலையில் நிகழ்வது. கேவல நிலையில் பாச ஞானம் நீங்கப் பசு ஞானம் எரியாத நெருப்புப் போலச் செந்தழலாகக் கிடக்கும். அந்நிலையில் உயிர்கள் எதனையும் அறியாதிருக்கும். கேவலத்திலும் சகலத்திலும் மாறி மாறி உழலும் உயிருக்கு. இறைவன் தன்னுடைய ஞானமாகிய பதி ஞானத்தை வழங்கியருளுவான். ஒன்றுமறியாது கிடக்கும் பச்சை நிறமுடைய சிறு புழுவைக் குளவி ஒன்று எடுத்துச் செல்வது போல இறைவனும் உயிரை எடுத்துக் கொள்வான். அந்தப் புழு அந்தக் குளவியையே நினைத்துக் கொண்டிருந்து சில நாட்களில் குளவியின் வடிவத்தோடே கூட்டை விட்டு வெளியேறுவது போல உயிரும் சிவ பெருமானையே நினைந்திருந்து சிவபெருமான் திருவடிகளைப் பெற்று அவன் ஆற்றும் ஐந்தொழில்களையும் தானும் ஆற்ற வல்லதாகி அவனுடைய மெய்யறிவைத் தானும் கைவரப் பெற்று, இதற்கு முன் இவ்வாறே லீட்டு நிலை எய்திய பெரியோர்களின் கூட்டத்தை விட்டு அகலாதிருக்கும்.

சிவசமவாதி சங்கற்ப நிராகரணம்

சேர்ந்த மும்மை வாய்ந்த ஞானமும்
ஒருகால் அன்றித் திரிவுற நிற்கில்
ஒண் பொருள் காணும் பண்பினுக்கு ஒருகால்
பரிதியும் மதியும் எரிதரு விளக்கும்
வேண்டல் இன்றே காண்தகு காலை

ஒன்றுஒன்று ஆகநின்று அறிவுறும் எனில்
அன்னியம் அறியா மன்உயிர் பொறிபுலன்
தானோ அறியா தலைவர்க்கு உலகினை
ஆனா அறிவால் அறியவேண் டின்றே
கொழும் தழல் தகுமேல் அழுந்திடும் அவத்தையில்

திரியாத் தலைவன் தெரியாத் தன்மைவந்து
எய்தல் ஆகா மெய்யுறு பொருட்கு
முன்னர்க் கீடம் தன்என எடுத்த
வேட்டுவன் இயல்பு கூட்டல் பெறாதே
வண்டுஇறும்பு எடா உட்கொண்டு அது தனக்கு

மந்திர வாதம் தந்ததும் இலதே
எடுத்திடும் அதனால் அடுத்தது என்று அறையில்
கருமயிர்க் குட்டி இருசிறைப் பறவை
ஆயினது எடுத்த தாயர் சாற்றிலரே
பிறவிப் பேதத் துறை இவை கிடக்க

ஏயும் இத்திறன் ஆயும் காலை
யோகத் தகுதி ஆகத் தகுமே
ஞானம் இன்மை என்று ஓதுவது எவன்எனில்
உயிரும் உணர்வும் பயிலுதல் இன்றி
வேட்டுவன் உருவம் மென்புழு உணர்வு

கூட்டுத லால்உருக் கூடுத லானும்
முத்தியில் இறையில் பற்றுதல் இன்றித்
தன்னுரு அணைந்த பின் அதன் நினைவு
மாறுத லானும் ஊறுடைத்து அன்றே
ஈசனது இயல்பு அருள்எய்து உயிர்இயற்றல்

பேசுதல் தவறுஎனப் பெருமறை அறைய
ஐந்தொழில் உயிரும் தந்திடல் தகுமே
ஆவதுஎன் முன்னாள் நாவலர் பெருமான்
பண்டுஒரு முதலை உண்ட மைந்தனை
வரவழைத்தனன் என்றாய் பிழைப்பு இலது அதூஉந்

தந்திட வேண்டும் என்றனர் அன்றே
இன்னவை கிடக்க முன்னவன் தன்மை
எய்தினர் எல்லாச் செய்தியும் செய்வர்
இரும்புஎரி எய்தித் தரும்செயல் தகவுஎனில்
பொருள்நிலை கிடக்க ஒரு திட்டாந்தப்

பேறே ஆயின் சீறாக் கதுவிய
புனல்ஒரு புடைசேர் கனல்தகும் ஆயினும்
வேறுஒரு பொருளை நீறுஆக் கிலதே
நெருப்புஎனும் இதனின் உருத்தனி காட்டுக
அங்கியும் ஒன்றைத் தங்கி நின்று அல்லது

தன்தொழில் நடத்தாது என்றுஅறி இனிநீ
இரும்பு அனல் செய்தி தரும்பரிசு உளதே
அதுஎன் ஓர் அலகை பொதிதரும் காலை
அதன் செயல் அனைத்தும் இவன் செயல் ஆமால்
அவன் இவன் ஆகில் இவன் அவன் செய்திக்கு

என் அவை என்னில் பின்னுரு செயலும்
அதன் செயல் அன்றி இவன்செயல் ஆகில்
இவன் செயல் பேயின்தன் செயல் ஆகி
இருந்த வாஎனத் தெரிந்திட வேண்டும்
தெரியாது ஆயின் புரியில் கடும் கனல்

எரிந்தது என்னும் இதுதகும் அன்றியும்
அவன்இவன் ஆகில் இவன் அவன் செய்தி
என்று செய்வான் ஒன்றிய மதத்தாய்
எல்லாம் அறிதல் செல்லாது உயிர்கள்
சிற்றறிவு எனும் இச் சொல் தவறு ஆகும்

என்பது என் அலகை தன்பதம் அடைந்தோர்
கொண்ட வாறு கண்டனம் என்னில்
மூங்கை அந்தர் உற்றுஓங்கிய குணம்குறி
செய்ததென் இன்னும் பவ்வம் உற்று அழுந்தினும்
நாழி கொள்ளாது ஆழியில் அலைபுனல்
அதனால் கருத்து முதல்உளது ஆக
வேண்டும் அன்றே ஈண்டு இனி அமையும்
எல்லாம் எனும்இச் சொல்லாம் படும்பொருள்
அனைத்தும் தாக்காத் தனிப்பரத்து உற்றவர்க்கு
எவ்வகை உணர்வு செய்வதென செப்புக

ஒன்றின் ஒன்றாம் ஒன்றாது உலகில்
நின்ற போது உயிர் நேராம் அன்றே
முத்தி உற்ற நற்றவர் அவையிடைச்
சேர்வர் என்றனை சார்தரு முத்தி
சாலோக் கியமோ சாயுச்சியம் எனில்

பந்தம் உற்ற கந்துஅல கழித்த
அறிவினோடு அறிவு பிரியாப் பெற்றி
வேண்டும் என்றதற்கு ஈண்டுஇவர் இவ்வாறு
இருப்பர் என்பதற்கு உருத்தான் வேண்டும்
அண்ணலது அருளில் நண்ணினர் இருப்பினும்

சீவன் முத்தர்என்று ஓதினர் அகன்று
நீங்கியும் உருவம் நீங்காது ஆயின்
ஓங்கிய முத்தியாவது என் உரைக்க
செடிஉடல் அணுகாக் குடிலை கொடுக்கும் என்று
ஓதினை நீயே பேதாய் பகட்டுஉரல்

ஒளிர்சினை முச்சித் தளிர்எனும் இதுதகும்
இச்சா ரூபம் நச்சினர் என்னில்
மும்மலத்து ஏதும் இன்மையது அன்றே
இதுவளர் முத்திப் பதமென இயம்புவர்
ஈங்கு இவை நிற்க

பதி பசு பாசம் என்ற மூன்றனுக்கும் மூவகை ஞானங்கள் உள. அவை மூன்றும் ஒருங்கு நின்ற போதே பசுவாகிய உயிர் ஒன்றே அறியும் என்று உரைத்தாய். அதனை நுணுகிப் பார்த்தால், சூரியனும் வெண்ணிலவும் சுடர்விடும் விளக்கும் ஆகிய மூன்றின் துணைகொண்டே கண் ஒரு பொருளைக் காணுதல் கூடும் என்று கூறுவதைப் போன்று உள்ளது உனது வாதம். உண்மையில் இம் மூன்றில் ஏதாவது ஒன்றின் துணையைக் கொண்டே கண்ணால் பொருளைக் காண இயலும் என்பது கண்கூடு. பதி ஞானம், பசு ஞானம், பாச ஞானம் எனும் மூன்றும் தனித்தனியே நின்று பொருள்களை அறிதல்கூடும் என்பதும் பொருந்துமாறு இல்லை. ஏனெனில் அறிவற்ற பொருள்கள் ஆகிய பாசக் கூட்டம் உயிர்களை விட்டு லேறாக நிற்றலின் உயிர்களின் அறிவாகிய பசுஞானம் கருவிகளின் துணைகொண்டல்லது அவற்றை அறியமாட்டா. நிலைபெற்ற உயிரின் துணையின்றி ஐம்பொறிகளும் அவற்றின் வழிவரும் பாச ஞானத்தை விளங்கிக்கொள்ள மாட்டா. ஏனெனில் ஐம்பொறிகள் அறிவற்றவை. முற்றறிவுடைய இறைவனுக்கோ புதிதாக ஒன்றை அறிய வேண்டுவதும் இல்லை. ஒவ்வொள்றாகச் சுட்டியறிய வேண்டுவதும் இல்லை கருவிகள் அனைத்தும் நீங்கிய நிலையில் உயிர் எரியாத தணல் போன்று கிடக்கும் எனக் கூறினாய். தன்னைவிட்டு ஒருபோதும் நீங்காத இறைவனை அந்த நிலையிலும் உயிர் அறிவதில்லையே அதற்குக் காரணம் யாது?

உயிரும் இறைவனும் கூடி இருக்கும் முத்தி நிலைக்கு ஒன்றும் அறியாத புழுவைக் குளவி ஒன்று தூக்கிச் சென்று தன்வடிவாக்கின தன்மையைக் கூறினாய். இந்த உவசை பொருத்தமானது அன்று. இறைவன் உயிருக்கு மந்திர உபதேசம் வழங்குவது போலக் குளவி புழுவுக்கு உபதேசிப்பதில்லை. அறிவற்ற புழுவுக்கு வீடுபேற்றில் வேட்கை கொண்ட உயிரையும் உபதேசம் வழங்கி ஆட்கொள்ளும் இறைவனுக்குக் குளவியையும் எவ்வாறு உவமை கூற முடியும்?

குளவி புழுவைத் தீண்டி எடுத்ததே அதற்கு உபேதசம் ஆயிற்று என்று நீ கூறுவாயாகில், கம்பளிப் பூச்சி தன் வாயினால் நூற்ற நூலால் கூடு கட்டி, அதற்குள் சிலநாள் இருந்து பின்னர், பெரிய இறகுகளோடு கூடிய பறவையாய் மாறியதற்கு அதன் தாயின் உபதேசமே காரணம் என்று கூற வேண்டும். அப்படி யாரும் சொல்லுவதில்லை. இவையெல்லாம் பிறப்பின் வேறுபாடே தவிர வேறு அல்ல. பிறப்பின் வேறுபாடு வினைப்பயனுக்கு ஈடாக வாய்த்ததே அன்றி வீடு பேற்று நிலைக்கு ஒப்புமை ஆகாது. ஏனெனில் புழு குளவியானது போல, உயிர் சிவ வடிவம் பெற்றது என்னில் அது ஒரே வடிவாய சாரூப நிலையைக் குறிக்குமே யன்,றி, சாயுச்சிய நிலையைக் குறிக்காது. யோகத்தின் பயன் சாரூபம் என்றும் ஞானத்தின் பயன் சாயுச்சியம் என்றும் பெரியோரால் கூறப்படுவதால் இது வீடுபேற்று நிலைக்கு ஒப்பாகாது. இந்த உவமை, குளவியின் வடிவைப் புழு அடைகிறது என்பதால் இந்தப் புழு குளவியாகும் வரை அதனை நினைத்திருந்து பின்னர் மறந்து விடுதல் போல வீட்டு நிலையில் உயிர் இறைவனை மறந்திருக்கும் என்றாகித் தவறாய் முடியும். முத்தி நிலையில் சிவ பரம் பொருளோடு கூடி அதனையே நுகர்ந்து இன்புறும் என்பதற்கும் இந்த உவமை பொருந்தாது. புழு தன் உருமாறிக் குளவியானவுடன் அதன் உணர்வும் மாறுதல் அடையும். உயிரின் உணர்வு முத்தி நிலையிலும் மாறுபடாது. ஆகையினாலே இந்த உவமை பொருத்தமற்றது என்பது புலனாகும்.

இறைவனுடைய பேராற்றலை அவனுடைய அருளைப் பெற்ற உயிரும் பெறும் என்று கூறுவது பெருந்தவறு என்று மறைகள் எல்லாம் எடுத்து முழங்கவும் அதனை மறந்து விட்டு முத்தி பெற்ற உயிர் ஐந்தொழிலும் ஆற்றும் வல்லமை பெறுகிறது என்று நீ கூறுவது பெரும் பிழை. முன்னொரு காலத்தில் சுந்தர மூர்த்தி நாயனார் முதலையுண்ட பாலனை மீட்டும் படைத்துத் தரவில்லையா? குளமும் இல்லை. நீரும் இல்லை முதலையும் இல்லை. ஆயினும் குளத்தைத் தோற்றுவித்து நீரால் நிரப்பி முதலையை வரவழைத்து அதனால் விழுங்கப்பட்ட பாலனை உரிய வளர்ச்சியோடு சுந்தர மூர்த்தி நாயனார் மீட்டுத் தந்த வரலாறு அருளாளர்கள் ஐந்தொழிலும் ஆற்றுவார்கள் என்பதற்குச் சான்றாகும் என்று கூறிகிறாய். அந்த வரலாற்றில் பிழை இல்லை. ஆனால் நீ அதனைப் புரிந்து கொண்டது தான் பிழையானது நாவலர் பெருமான் கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே என்று இறைவனை வேண்டினார். அவ்வேண்டுகோளை ஏற்று இறைவன் தான் பிள்ளையை மீட்டு அளித்தனனே தவிர, நம்பி ஆரூரரே அழைத்தார் என்று வரலாறு கூறவில்லை.

முத்தி நிலை எய்தியவர்கள் இறைவனின் தன்மையை எய்தி அவன் செய்யும் ஐந்தொழிலையும் தாமே செய்வர் என்பதற்கு. நெருப்பைச் சேர்ந்த இரும்பும் நெருப்பின் தன்மையை அடைந்து பிற பொருள்களைச் சுடுவது போல என்று உவமை அதன் வெப்பத்தைப் பெற்றுக் கொதிக்கின்ற நீர் வேறு எந்தப் பொருளையும் சுட்டுச் சாம்பல் ஆக்குவதை யாரும் கண்டதில்லையே? நெருப்பைப் பற்றித் தான் பேச்சே தவிர நெருப்போடு சேர்ந்த பொருளைப் பற்றி நான் பேசவில்லை என்று நீ மறுப்பாய் ஆயின், நெருப்பு என்ற ஒரு தனிப் பொருளை எங்கேனும் கண்டதுண்டா? தீ என்பது ஏதாவது ஒரு பொருளை எங்கேனும் கண்டதுண்டா? தீ என்பது ஏதாவது ஒர பொருளைப் பற்றிக் கொண்டு தான் தன் செயலைச் செய்யுமே தவிர அது தனித்து நின்று இயங்கவல்லது அன்று. இந்த உண்மையை உணர்ந்து கொள். இரும்பும் தீயைச் சார்ந்து வெப்பத்தைப் பெறுமே யன்றி மற்றொரு பொருளை எரிப்பதுண்டோ? அங்ஙனம் இருக்க அதனை ஓர் எடுத்துக் காட்டாகக் கொள்வது எப்படி?

பேயால் பிடியுண்டவன் பேய் செய்த செயல்களை எல்லாம் செய்வது போல, அருள் பெற்ற உயிர்கள் இறைவனுடைய செயல்களைச் செய்யும் என்று நீ கூறுகிறாய். இந்த உவமையும் பொருத்தம் அற்றதே. உயிரை இடம் கொண்டு இறைவன் தன் செயல்களை ஆற்றுவதற்கு ஒரு காரணமும் இல்லை. அன்றியும் பேய் பிடித்தவன் அப்பேய் தன்னை விட்டு நீங்கிய பிறகு செய்கிற செயல்கள் எல்லாம் அவன் செயல்களே யன்றிப் பேயின் செயல்கள் ஆகமாட்டா. இதிலிருந்து பேயின் செயல் வேறு பிடியுண்டவன் செயல் வேறு என்பதனைத் தெரிந்து கொள்கிறோம். அது போலவே இறைவன் செயல்கள் வேறு வீடு பேறு பெற்ற உயிர்களின் செயல்கள் வேறு என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வைக்கோற் புல் எரிந்தது என்று நாம் சொல்லும் போது எரிக்கும் தன்மை வைக்கோலுக்கு உண்டு என்று நாம் கொள்வதில்லை. எரிக்கும் தன்மை நெருப்புக்கே உண்டு. அதனால் வைக்கோற் புல் எரிபட்டது என்று நாம் அறிந்து கொள்கிறோம். அவ்வாறே உயிரில் கலந்து நிற்கும் இறைவனின் செயல் இறைவனுக்கே உரிமை உடையது அல்லாமல் உயிர்க்கு உரியது அன்று.

இறைவன் முற்றறிவினன் என்பதும் உயிர்கள் சிற்றிவுடையன என்பதும் அருள் நூல்களுள் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளன. உயிரும் இறைவனைப் போல முற்றறிவு பெறும் எனும் கொள்கை தவறானது.  நீ கூறிய பேயும், பேயால் பிடியுண்டவனும் என்ற உவமை மற்றொரு வகையாலும் மறுக்கப்படும். ஊமையுமாய்க் குருடனுமாய் இருப்பவன் ஒருவனை, அவ்விரு குறைகளுமற்ற பேய் ஒன்று பிடித்துக் கொண்டாலும் அவனால் பேசவும் இயலாது. பார்க்கவும் இயலாது. ஆகவே இறைவனின் செயல் எல்லாம் அவன் அருள் பெற்ற உயிர்க்கும் உண்டு என்று சொல்லுவது பொருந்தாது எல்லையற்ற நீர்ப்பரப்பு உடைய கடலில் நாழியைக் கொண்டு சென்று முகந்தால் அது நாழிதான் கொள்ளுமே யன்றிக் கடல் முழுவதையும் கொள்ளாது. உயிருக்கு உள்ள சிற்றறிவு இறைவன் திருவருளோடு பொருந்தி மேலும் விளக்கம் பெறும் என்பதுதான் பொருந்துமே ஒழிய, உயிரின் சிற்றறிவே முற்றறிவாகி விடும் என்பது பொருந்தாது. எனவே உன் கொள்கையைக் கைவிடுக. எல்லாம் அறியும் என்னும் போது இறைவனை முழுவதுமாக அறியும் தன்மை சிற்றறிவுக்கு இல்லை என்பதனை மறத்தல் கூடாது. முத்தி நிலையில் உயிரும் சிவமும் ஒன்றாகும் எனல் வேண்டா. சீவன் முத்தனாய் இருக்கும் நிலையிலேயே ஒன்றாகும் என்று கூறுவாய் ஆயின், அந்த நிலையிலும் உயிர் இறைவனை ஒத்திருக்கவில்லை. எனவே உயிரும் இறைவனும் என்றைக்கும் ஒரு தன்மையை உடையனவாக இருப்பன வல்ல.

முத்தி பெற்றவர் தம் போல் முத்தி பெற்ற பெருமக்களுடன் கூடி இருப்பர் என்று கூறினாய். அப்படிக் கூடியிருக்கும் நிலை சாலோக நிலை என்று கூறப்படுமே தவிர அதனை சாயுச்சிய நிலை என்று கூற இயலாது. பரமுத்தியாகிய சாயுச்சியத்தில் கட்டுக்களை விட்டு நீங்கி உயிர் இறைவனோடு பிரிப்பின்றி இருக்கும் என்று கூறப்படும் இலக்கணத்திற்கு இது மாறுபடும். வீடு பெற்றோர் அனைவரும் கூடி ஒருங்கே இருப்பர் எனக் கூறினால் அவர்களுக்கு உடல் உண்டு என்று ஆகும். அண்ணலின் அருளால் அவர்கள் உடல்களை நண்ணியிருப்பினும் அவரைச் சீவன் முத்தர் என்றே கூறுதல் வேண்டும். அவ்வுடலோடு கூடிய முத்தியும் உயர்ந்த முத்தி என்று கூறுவதற்கில்லை. அவர்களின் உடல் அசுத்த மாயையினால் ஆனதன்று சுத்த மாயையால் ஆனது என்று நீ கூறினாய். இது எவ்வாறு இருக்கிறது என்னில் வேப்ப மரத்தில் அடி மரம் தான் கசக்கும் உச்சியில் உள்ள தளிர் கைக்காது என்பது போல் உள்ளது. அவ்வீடு பேற்றை அடைந்தவர்கள் தங்கள் விருப்பத்தினால் உடலை விரும்பி ஏற்றுக் கொண்டனர் என்றால் அவர்களுக்கு மும்மலங்களில் ஒன்றேனும் அகன்றதில்லை என்று ஆகும். எனவே நீ கூறும் முத்தி நத முத்தியே அன்றிப் பரமுத்தி ஆகாது.

மும்மை வாய்ந்த ஞானம் பதிஞானம், பசுஞானம், பாசஞானம் என மூன்று திறப்பட்ட ஞானம். ஒருகால் ஒரு நேரத்தில் கீடம்புழு. வேட்டுவன்குளவி. இறும்புகம்பளிப்பூச்சி. கருமயிர்க் குட்டி என்றதும் அது. நாவலர் பெருமான்சுந்தர மூர்த்தி நாயனார். சீறாக்கதுவிபொங்கி எழுகின்ற. அலகை பேய். மூங்கைஊமை. அந்தர்அந்தகர். குருடர். பவ்வம்கடல். செடி உடல்குறை உடைய உடம்பு. குடிலைதூயமாயை, பகட்டுரல்பெரிய உரல் போன்ற அடி மரம். முச்சிஉச்சி.

சங்கிராந்தவாதி சங்கற்பம்

நீங்காது ஒளிர் உயிர்
விளக்கு என நிற்கும் அளப்புறம் அறிவின்று
இறைவற்கு ஏதும் அறிய வேண்டின்றே
மன்னும ஆன்ம சந்நிதி அளவில்
காந்த பசாசத்து ஏய்ப்ப வாய்ந்த
உயிர் உடல் இயக்கும் செயலுறு பூட்டைப்

பலவகை உறுப்பும் இலகிய தொழில் போல்
ஐம்பொறி புலன்கள் இன்புறும் அன்றே
இனைய வாயிலின் நிகழ்தரு பயன் அவை
அந்தக் கரணம் முந்தி உணர்ந்திடும்
இவை அகல்வுழி ஐம்பொறி புலன் நிகழாது

உயிர் நீங்கிடில் உடல் செயல் இலது அன்றே
இவ்வகை வினையின் செவ்விதின் நடத்தும்
பழமலம் நீங்க நிகழும் காலை
ஏற்றோர் முகஒளி தோற்றும் கலன் எனத்
தலைவனது அருள் உயிர் நிலவிடும் நிலவக்

காட்டத்து அங்கி மாட்டத் தங்கிய
தன்மையும் அளத்துப் புல்வையின் நீப்பும்
போன்றது வாகித் தோன்றிடும் அதனால்
பசுக ணங்கள் சிவகர ணங்கள்
ஆக மாறி அறிவும்
ஏகமாம் உயிர் யான்எனது இன்றே

ஒளிமிக்க விளக்கைப் போல் உயிர் நிலை பெறும். அது அறிவுடைப் பொருள் ஆயினும் பொருள்களை அளந்து அறியும் அறிவு அதற்கு இல்லை. எவ்வாறு எனில் விளக்கு ஒளியைத் தருவது எனினும் அதற்குக் காணும் திறன் இல்லை. அது போல என்க. இறைவனோ முற்றறிவுடையவன். எனவே அவனால் அறிய வேண்டுவது ஒன்று இல்லை காந்தத்தின் முன்னாலே இரும்பு அசைவது போல உயிர் நிலை பெற்று நிற்க, அதனோடு பொருந்திய உயிர்வளி (பிராணவாயு) உடலை இயக்கும். நீர் இறைக்கும் ஏற்றத்தின் பல்வேறு அங்கங்களும் ஒன்று கூடித் தொழிற்படுவது போல ஐம்புலன்களும் ஒன்று கூடி உயிர் துய்ப்பதற்கு உதவி புரிகின்றன. இப்புலன்களை ஐம்பொறிகளும் பொருந்தி நடக்கும். இவற்றுக்கு முன்னே உட்கருவிகள் செயல்படுகின்றன. உட்கருவிகவின் உதவியில்லாமல் பொறி புலன்களால் ஆகும் பயன் ஏதுமில்லை. பிராணவாயு நீங்கினால் உடல் செயலற்றுப் போகும். இவ்வாறு உயிரின் முன்னிலையில் உடல் செயல்பட்டு வருகிறது உயிர் உடலினிடத்தே தங்கி வினைப் பயன்களைத் துய்த்து, அதனால் ஆணவ மலம் படிப்படியே தேய இருவினை ஒப்பும் மல பரிபாகமும் சத்தி நிபாதமும் நிகழும் காலத்து இறைவனுடைய திருவருள் உயிரினடத்துத் தோன்றி விளங்கம். இது எத்தகையது எனில் கண்ணாடியின் முன் நின்று ஒருவன் அதனுள் பார்க்க அக் கண்ணாக்குள் அவன் முகம் தோன்றுவது போலாகும். இறைவனது அருள் இவ்வாறு உயிருள் நிலவும் விறகில் தோன்றிய தீ விறகையே அழிப்பது போலவும், உப்பளத்துக்குள்ளே வீசப்பெற்ற புல்லும் வைக்கோலும் தமது இயற்கைத் தன்மையை இழந்து உவராகிப் போவது போன்றும், உயிரின் பசு கரங்கள் தம் இயல்பான தன்மையில் நீங்கிச் சிவகரணங்கள் ஆகும். உயிரின் அறிவும் முதல்வனின் அறிவோடு கூடி ஒன்றாகும். உயிருக்கு யான் எனது என்ற உணர்வுகளும் முற்றாக நீங்கி விடும்.

பசாசம்இரும்பு. பூட்டைஏற்றம் இறைக்கும் கருவி. பழ மலம்ஆணவ மலம். கலன் கண்ணாடி. காட்டம்விறகு. வைவைக்கோல்.

சங்கிராந்த வாதி சங்கற்ப நிராகரணம்

இன்று உனது உரையின் நன்றி உயிர்ஒளித்
தீபம் போலத் தாபம் தரில் இருள்
செறியும் தன்மை என் அறிவிலது ஆகில்
ஒளிஎன உரைத்த தெளிவதற்கு ஏதாம்
சந்நிதி அளவில் மன்னும் செயல் உடல்

காந்தம் போல வாய்ந்தது என்ற
தன்மையும் உணராப் புன்மையை அன்றே
உயிர்உடல் இயக்கில் துயில் பெறும் காலைச்
செய்தது என மனாதி எய்து உயிர் பொறி புலன்
நடத்த ஆவியும் சடத்தன ஆயின்

பூட்டையில் பூணி கூட்டல் பெறாதே
புலன்ஐம் பொறியில் நிலவிடும் என்றனை
அஞ்சும் ஒருகால் துஞ்சாது அறிதற்கு
அழிவுஎன் நற்றரு செழுமலர் இலைபலம்
கனிதருவது போல் இனையவை ஐந்தும்

ஒன்றுஒன்று ஆக நின்று அறிவுறும் எனில்
ஒன்றின் பயன்நனி ஒன்று அறியாதால்
இதுவே அல்லது கதும் என இருசெவி
இருகூற்று ஒருகால் தெரியாத் தன்மை வந்து
எய்தும் மனாதியும் மெய்யில் செயலும்

தனக்கு இலை ஒருவற்கு எனத்தெளி கிலையே
நோக்கும் முகஒளி நீக்காத் தான்எனக்
கவரும் தன்மை முகுரம் போலக்
கொடுத்தது கோடற்கு அடுத்தது உண்டு அன்றே
காட்டத்து அங்கி கூட்டக் கூடும்

இந்தனத்து இயற்கை வெந்தழல் தாங்கா
உப்பளத்து அடுத்த புற்பலா லங்கள்
சடத்த வேனும் கொடுத்தது கொள்ளும்
தன்மை உண்டுஉனக்கு இன்மையது அன்றே
அவம் உறு கருவி சிவமயமாம் எனக்

கூறினை தாகம் வேறுஉருக் கவராது
என்பது என் அவை முன் துன்பம் துடைக்கும்
திருவருள் மருவ உரிய என்னில்
அருள் உரு மாயா இருனின் தாம்கொல்
சத்தப் பரிச ரூப ரச கந்தம் என்று

எத்திறத் தினதுஅருள் இயம்புக அன்றியும்
நிறைந்து நீயாய் நின்றனை யேனும்
மறைந்துஐம் புலனால் வாராய் என்றும்
கரணம் எல்லாம் கடந்தனை என்றும்
மரணம் ஐயைந்தின் அப்புறத்து என்றும்

முன் அருள் தலைவர் பன்னினர் எனவும்
இனையவை ஒழிய அறிகுவது எவ்வாறு
என்ற நிற்கலிக்கு ஒன்றிய இன்பம்
கூறுதல் தகும்மருள் பேறினை அன்றே
ஏகம் உயிர் அறிவு ஆக மொழிந்தனை

இருபொருள் ஒருமை மருவியது இலதே
இவ்வகை கிடக்க மெய்வகை கேண்மதி

வெளிச்சத்தைத் தருகிற விளக்கைப் போல உயிர் விளங்குகிறது என்றாய் அப்படியாயின் அவ்வுயிர்க்கு அறியாமை எப்படி வந்தது? உயிர் விளக்கின் சுடர் போல் இருக்கிறது. சுடர் ஒளி எப்பொருளையும் காணும் தன்மை இல்லாதது. அதுபோலவே உயிரின் அறிவும் என்று நீ கூறினால் அறியாத ஒன்றை அறிவு என்று கொண்டது எவ்வாறு பொருந்தும்? காந்தத்தின் முன்னிலையில் செயல் படுகின்ற இரும்பினைப் போல் உயிர்வளியின் முன்னிலையில் உடல் செயல்படுகிறது என்று நீ உரைத்தாய். அதுவும் பொருளற்ற உவமையே. ஏனெனில் உறங்கும் போதும் பிராண வாயு செயல்படுகின்றது. ஆயினும் உடல் இயக்கம் இழந்து கிடக்கிறதே? அந்நிலையில் உடலைச் செயல்படுத்துகின்ற பிராண வாயு என்ன செய்து கொண்டிருந்தது? பிராண வாயுவே உட்கருவிகளைப் பற்றி ஐம்பொறிகளின் வழியே புலன்களை உணர்ந்து வரும் பிராண வாயு இல்லையெனில் உடல் செயலற்றுப் போகும். உயிர் எச்செயலும் செய்யாது, ஏதும் அறியாது என்று நீ கூறினாய். அவ்வாறு கூறியது உயிரைச் சடப் பொருளாகக் கொண்டதாகும். இதற்கு உவமையாக நீர் இறைக்கும் ஏற்றத்தை எடுத்துரைத்தாய். ஏற்றத்தின் வெவ்வேறு உறுப்புகளாக உட்கரணங்கள் ஐம்பொறிகள் ஆகியவற்றைக் கொண்டால் அவை யாவும் அறிவற்றன. ஏற்றம் இறைப்பதற்கு அதில் எருதுகளைப் பூட்டுவர். அவை அறிவுடையன. அறிவுடைப் பொருள்கள் செயல்படும் திறன் உடையன. எனவே நீ கூறிய உவமை பொருத்தமற்றது என அறிக. அதுமட்டுமல்லாது ஐம்பொறிகளும் ஒரே நேரத்தில் நுகர்வதை நாம் கண்டதில்லை. ஒரு பொறியால் அறியப்பட்டதை மற்றொரு பொறி அறியாமலும் ஒன்று நுகரும்போது மற்றைய நான்கும் நுகராமலும் இருக்கின்ற தன்மைக்கு என்ன காரணம்? இதிலிருந்தே ஐம்பொறிகள் நுகர்வதில்லை என்பது தெளிவாகிறது அன்றோ? மரத்திலிருந்து மலர் இலை காய் கனி என்பன வெவ்வேறு காலத்தில் தோன்றுவது போல ஐம்பொறிகளும் ஒன்று ஒன்றாக அறியும் எனில் மலரே காய் ஆகிக் கனி ஆவது போல ஒரு பொறி நுகர்ந்ததனை மற்றொரு பொறி நுகராது இருப்பது ஏன்? ஒரே நேரத்தில் இரண்டுபேர் பேசினால் அவ்விருவர் பேச்சும் இரண்டு காதுகளாலும் கேட்கப்படுகின்றன. ஆனால் ஒன்றுதான் பதிகிறது. மற்றொன்று பதியாமல் போகிறது. அது எதனால்? இவற்றிலிருந்து பொறிகள் வேறு உயிர் வேறு என்பதும் பொறிகளின் வாயிலாக வருவதை உயிரே அறியும் என்பதும் புலனாகிறது. உட்கரணங்களும் உடலும் உயிராலேயே செயல்படுகின்றன என்பதனைத் தெளிக.

கண்ணாடியில் பார்த்தவர்களின் முகம் தான் எதிரொளிக்கும். ஆனால் உயிருக்கோ திருவருளை முற்றிலும் வாங்கிக் கொள்ளும் ஆற்றல் இல்லை. ஏனெனில் உயிர் தளைப்பட்டிருப்பது அது பக்குவப்படும் அளவும் திருவருளை ஏற்காது. விறகில் பற்றிக்கொண்ட தீ அதனை எரித்து விடுவது போல உயிரைத் திருவருள் அழித்துவிடும் எனில் அது பொருந்துவதில்லை உயிருக்கப் பேரின்பப் பேற்றினை நல்கும் திருவருளுக்கு விறகில் பற்றிய தீ உவமையாகாது உப்பளத்தில் விழுந்த புல்லும் வைக்கோலும் அறிவற்ற பொருள்களே ஆயினும் அவை உப்பளத்தில் உவர்த் தன்மையை அது கொடுத்தது போலவே பெற்றுக் கொள்ளும் அவ்வியல்பு உயிர்களுக்கு இல்லை.

சுத்த மாயையில் தோன்றிப் பசு கரணங்கள் சிவ கரணங்கள் ஆகும் என்று கூறினாய். அவற்றால் அருளுருவை ஏற்றுக் கொள்ள இயலாது. ஏனெனில் இக்கருவிகள் யாவும் இழிவுடையன. இக்கரணங்களும் உயிர்களின் துயரத்தைத் துடைப்பதற்கு இறைவனால் தரப்பட்டவையே. ஆதலால் திருவருளை மருவுவதற்கு உரியனவே என்னில் இறைவனின் அருள் உரு மாயையின் இருளோடு கூடுமோ? கூடாது. ஓசை ஊறு உருவம் சுவை மணம் என்ற இவற்றை நுகர்கின்ற பொறிகள் திருவருளைச் சற்றேனும் எட்ட முடியுமா? கூறுக.

இறைவனது அருள் பெற்ற அருளாளர்கள் அவனை நோக்கிப் பார்க்குமிடம் எல்லாம் நிறைந்து எங்கும் நீயே ஆய் நின்றனை எனினும் ஐம்புலனால் காண்பதற்கு எட்டாதவன் என்றும் கரணங்களை எல்லாம் கடந்து நின்ற கருணைக் கடல் நீயே என்றும் பற்றுக் கோடாக உள்ள தத்துவங்கள் இருபத்து ஐந்துக்கும் அப்பாற்பட்ட இறைவன் என்றும் பலபட இறைவனின் பெருமையை எடுத்துரைத் துள்ளார்கள். இவற்றை உனக்கு எடுத்துக் கூறியும் அதனை நீ புரிந்து கொள்ளுமாறு இல்லை. ஆண் தன்மை இல்லாதோன் இன்பச் சுவையை அறிய இயலாதது போல, மருள் கொண்ட உனக்கு இவை விளங்கா, ஆன்மாவே சிவம் ஆகும் என்று சொன்னாய். வேறுவேறு இயல்புகளை உடைய இரண்டு பொருள்கள் ஒன்றாயின என்று சொல்லுவது பொருந்தாது. இது நிற்க உனக்கு மெய் வகையைக் கூறுவேன். கேட்பாயாக.

இந்தப் பகுதியில் நிறைந்து நீயாய் நின்றனையேனும் மறைந்து ஐம்புலனாய் வாராய் என்பது நக்கீர தேவ நாயனார் அருளிச் செய்த கைலை பாதி காளத்தி பாதி அந்தாதி என்னும் பனுவலிலிருந்து காட்டப்படும் மேற்கோள். இது பதினொன்றாம் திருமுறையில் இடம் பெறுகிறது.

நிறைந் தெங்கும் நீயேயாய் நின்றாலும் ஒன்றின்
மறைந்து ஐம்புலன் காணவாராய் சிறந்த
கணியாருந் தண்சாரற் காளத்தி ஆள்வாய்
பணியாயால் என்னும் பரிசு

அதை அடுத்துக் கரணம் எல்லாம் கடந்தனை என்றும் என ஆசிரியர் கூறுவது மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகத்தில், திருக்கோத்தும்பியில் வருகின்ற பாடலிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோளாகும்.

கரணங்கள் எல்லாங் கடந்து நின்ற கறை மிடற்றன்
சரணங்களே சென்று சார்தலுமே தான் எனக்கு
மரணம் பிறப்பென்று இவை இரண்டின் மயக்கறுத்த
கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ

அதை அடுத்து ஐயைந்தின் அப்புறத்து என்றும் என எடுத்துக் காட்டப்பட்ட பகுதி நான்காம் திருமுறையில் திருவாரூர்த் திருப்பதிகத்தில் திருநாவுக்கரசு நாயனார் பாடிய பதிகத்தில் காணப்படுகின்ற திருப்பாடல் ஆகும்.

பையஞ்சுடர்விடு நாகப் பள்ளி கொள்வான் உள்ளத் தானும்
கையஞ்சு நான்குடையானைக் கால்விரலால் அடர்த்தானும்
பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ் புரிந்தார்க்கு அருள்செய்யும்
ஐயஞ்சினப் புறத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே

இம் மூன்று அருளாளர் திருவாக்குகளையும் சுட்டிக்காட்டி எடுத்துக் கூறி அவை திருமுறைகளிலே இடம் பெற்றுள்ளன என்பதை முன்னருள் தலைவர் பன்னினர் என்ற சொற்களால் ஆசிரியர உணர்த்துகிறார்.

பூட்டைஏற்றம், பூணி கூட்டல்ஏற்றத்தில் எருதினைக் கட்டுதல். முகுரம்கண்ணாடி. இந்தனம்விறகு. பலாலம்வைக்கோல். ஆகம்உடல்

ஈசுவர அவிகாரவாதி சங்கற்பம்

பஃறுளைக் கடத்தின் உள்விளக்கு ஏய்ப்ப
அறிவுள தாகும் உருஉறும் உயிர்கள்
கண்ணால் ஓசையும் கந்தமும் கருத
ஒண்ணாது என்னும் உணர்வு உடைமையினால்
அவ்வப் புலன்கட்கு அவ்வப் பொறிகள்

செவ்விதில் நிறுவிச் சேர்ந்தவை நுகரும்
மூல மலத்தின் பாகம் வந்து உதவுழி
இருள்தரும் இற்புக்கு ஒரு பொருள் கவரத்
தீபம் வேண்டும் ஆனவா போல
மோக மாமலம் போக ஞான

விளக்கு அரன் அருளால் துளக்குஅறப் பொருந்தி
நீர்நிழல் அனைய சீர்பெறு கடவுளைச்
சலம் இலன் ஆகிச் சார்ந்தவர்க்கு என்றும்
நலம்மிக நல்கும் நாதனை அணைந்து
பூழி வெம்மை பொருந்தாது உயர்ந்த

நீழல் வாழும் நினைவினர் போலத்
திருவடி நீழல் சேர்ந்து
கருவுறு துயரம் களைந்து இருந்திடுமே

பல துளைகள் உள்ள ஒரு குடத்துக்குள்ளே ஏற்றி வைக்கப்பட்ட விளக்கினைப் போன்று ஒன்பது வாயில்கள் உடைய உடம்புக்குள் உயிர் விளங்குகிறது. அது அறிவு உடையது. கண்ணினால் காண முடியுமே தவிர ஓசையைக் கேட்கவும் மணத்தை முகரவும் இயலாது என்ற உணர்வு உயிர்க்கு உண்டு. ஆதலினால் ஐந்து பொறிகளின் வழியே ஐம்புலன்களையும் முறையே நுகர்ந்து வரும். கண்ணுக்குச் சொல்லப்பட்ட இயல்பு மற்றப் பொறிகளுக்கும் பொருந்தும். இவ்வாறு உயிர்கள் நுகர்ந்தும் வரும் காலத்து ஆணவ மலம் பக்குவப்படும் காலம் வந்து சேரும். இருண்ட ஒரு வீட்டின் உள்ளே சென்று அங்குள்ள ஒரு பொருளை எடுப்பதற்கு விளக்கின் உதவி தேவைப்படுவது போல, ஆணவமாகிய இருள் மலத்தின் உள்ள உயிர்களுக்கு இறைவனது அருளாகிய ஞான விளக்கு கேடின்றி வந்து பொருந்துகிறது. அப்போது நீர் வேட்கை கொண்டவன் நீர் நிலையினடத்திலே போய் நீரை உண்டு வேட்கை தணிவதைப் போலவும், வெப்ப மிக்க சாலையில் நடந்து களைத்தவன் ஒருவன் மரத்தின் நிழலில் தங்கி வெப்பத்தைத் தணித்துக் கொள்வது போலவும் இறைவனுடைய கருணையின் கீழ் அடைக்கலம் பெறுவான். வேண்டுதல் வேண்டாமை இலாதவனாகியும், தன்னைச் சார்ந்தவர்களுக்கு மிகுந்த நலன்களை வழங்குபவனாகவும் விளங்குகின்ற சிவபெருமான், தன்னுடைய திருவடி நிழற் கீழ் வந்து சேர்ந்த உயிர்களுக்கு, இறந்தும் மீண்டும் கருவினுட்பட்டுப் பிறந்தும் வருகின்ற துன்பங்களை மாற்றி இன்பத்தை வழங்கியருளுவான்.

இப்பகுதியில் சலமிலனாகிச் சார்ந்தவர்க்கு என்றும் நலமிக நல்கும் நாதனை என்ற பகுதி நான்காம் திருமுறையில் நமசிவாயத் திருப்பதிகத்தில் திருநாடுக்கரசு நாயனார் அருளிச் செய்த,

சலம்இலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அல்லால்
நலம்இலன் நாள்தொறும் நல்கு வான்நலன்
குலம்இலர் ஆகிலும் குலத்துக்கு ஏற்பதோர்
நலம்மிகக் கொடுப்பது நமச்சி வாயவே

என்ற தேவாரத் திருப்பாடலை நினைவூட்டுதாகும்.

பஃறுளைக் கடம்பல துளைகள் உள்ள குடம். கந்தம்மணம். துளக்குகேடு, பூழிபுழுதி

ஈசுவர அவிகாரவாதி சங்கற்ப நிராகரணம்
இருந்ததுன் கேள்வி திருந்திடும் உயிர்கள்
அறிவின வாயில் பொறிபுலன் என்னை
மற்றவை பற்றி உற்று அறிந்திடுதலின்
அறிவுஎன வழங்கும் உயிர் என உரைத்தல்
காணும் கண்ணினன் கைகொடு தடவிப்

பூணும் பொருளின் பெயர்பல புகறல்
என்னும் கிளவி தன்னோடு தகுமே
அவ்வவ புலன்கட்கு அவ்வவ பொறிகளைச்
செவ்விதின் நிறுவலின் அறிவுஎனச் செப்பினை
அறிவிலாமை கண்டனம் அணை புலற்குப்

பொறிகள் ஏவலின் அறிவோடு பொருந்தில்
கண்டதோர் பொறியால் கொண்டிட வேண்டும்
உதவியது ஒன்றால் கதும்என இயற்றினார்
உண்டோ என்னில் கண்டன மேல்நாள்
கடவுனில் கடிமலர் முடுகிய மதனன்

அங்கம் அனங்கம் தங்கிடக் கிடந்தது
வையின் திரளில் செய்ய சிறுபொறி
மாட்டி மூட்டியது அன்றே மீட்டும்
தேன்அமர் தவிசில் நான்முகன் உச்சி
அறுத்ததும் கருவி பொறுத்தோ அன்றே

ஈசனது இயல்பு பேசுதல் தவிர்க
காழி மாநகர்க் கவுணியர் கடவுள்
ஞானம் ஆகிய நற்பதி கங்கள்
எழுதுறும் அன்பர்தம் இன்புறு மொழியால்
களிறுஎன அணைந்த கல்மனப் புத்தன்

முருட்டுச் சிரம்ஒன்று உருட்டினர் அன்றி
வாய்ந்த வாள்ஒன்று ஏந்தினர் இலரே
என்றதும் ஈர்வாள் கொன்றது என்பது போல்
தனித்துணை அருளால் துணித்தனர் என்ப
ஆதலின் வாயில் அளவினில் அறிதலின்

ஏதமில் அறிவுஉயிர்க்கு எய்துதல் இலதே
இருட்கு விளக்கு ஒன்று ஏந்தினர் போல
மருட்கு ஞானம் மின்னுதல் உளதே
என்றனை கருவிகள் யாவும் அசேதனம்
துன்றிய உயிரும் துரியத் தனமையன்

ஆதலின் அந்தர் அனைவரும் கூடித்
தீதுஅற அருநெறி தெரியும் என்றற்றே
நீர்நிழல் அனைய சீர்பெறு கடவுளைச்
சேர்ந்தவர்க்கு இன்பம் வாய்ந்திடும் என்றனை
பாதவம் என்றும் சேதனம் இன்மையின்

இளைத்தோர் வம்மின் என்பதும் துன்பம்
விளைத்தோர் தம்வயின் வெறுப்பும் ஒன்று இலதே
பொடித்திடு கொப்புள் வெடித்திடும் பாதம்
வெய்யபூழியின் உள்ளுற அழுங்கி
ஆற்றுதல் இன்றி ஆறுஇயங்கு நர்முன்

தோற்றிடும் என்று சொல்லவும் இலதால்
இவ்வகை கடவுட்கு இயம்புதல் தவறே
பாச அஞ்ஞானப் பழிவழி ஒழிக
ஈசனது அருள்வழி இயம்புவன் கேள்மதி!

உன் கருத்து நன்று, அது நிற்க, திருத்தம் பெற முயலும் உயிர்கள். அறிவாக விளங்கும் என்றாய். அவ்வாறு எனில் அவ்வுயிர் அறிந்திடுவதற்குப் பொறிபுலன்களின் உதவி எதனால் வேண்டப் பட்டது? ஒன்றின் துணையால் மட்டிலுமே அறியக்கூடிய உயிரை அறிவு என்று கூறுவது பொருத்தமற்றது அன்றோ? பார்வை உடைய ஒருவன் பொருள்களை நேராகப் பார்த்து இது இன்னது என்று சொல்லுவானே தவிரக் கைகளாலும் விரல்களாலும் தடவிப் பார்த்து அப்பொருள்களை அறியமாட்டான். நீ உயிர் அறிவுடையது என்று கூறியதும் கையால் தடவிப் பார்த்துப் பொருள்களின் பெயரைச் சொல்பவனைப் பார்வை உடையவன் என்று கூறுவதை ஒத்ததே. அவ்வாறு இல்லை, பொருளின் தன்மைக்கு ஏற்பப் பொறிகள் புலன்கள் ஆகியவற்றின் துணை கொண்டு அறிவது உயிரே ஆதலின் அதனை அறிவு என்று கூறலாம் என்று நீ கூறுவாயானால், அதுவும் தவறுடையதே ஏனெனில் ஒரே பொறியைக் கொண்டு உயிர் பொருளின் தன்மை முழுவதையும் அறிவதில்லை. ஒவ்வொரு பொறியும் ஒரே பொருளின் இயல்பை உணர்த்திட ஐம்பொறிகளாலும் வந்த அறிவினை உயிர் அறிய முடிகிறதே அன்றித் தனித்த ஒரு பொறியால் உயிர் அறிவதில்லை. ஆதலின் உயிர் அறிவுடையது என்பது பொருந்தாது.

இன்ன செயலுக்கு இன்ன கருவிதான் வேண்டும் என்பது நியதி. அதற்கு மாறாக வேறு ஒன்றைக் கொண்டோ அல்லது கருவி என்ற ஒன்று இல்லாமலோ செயலாற்றிட முடியுமோ என நீ கேட்பின், அவ்வாறு நடைபெறுவது உண்டு. அவ்வாறு செய்ய வல்லவர் அறிவே வடிவானவர் என்பதை அறிவாயாக. முன் ஒரு காலத்தில் யோகத்தில் அமர்ந்திருந்த சிவபெருமானின் மீது மண மிக்க மலர்களைத் தொடுத்த மன்மதனது உடல் எரிந்து சாம்பலானது. வைக்கோல் இட்டுத் தீ மூட்டியதனால் அன்று. தன் திருக்கண் நோக்கினாலேயே மன்மதனை இறைவன் நீறாக்கினான். தாமரைமலரில் வீற்றிருந்த பிரமனின் சிரங்களுள் ஒன்றை இறைவன் அறுத்தது வாளினைக் கையில் ஏந்தி அன்று இது ஈசனது இயல்பு எனக் கூறி நீ மறுக்கக் கூடும். சீர்காழிப் பதியில் அவதரித்த திருஞான சம்பந்தப் பெருமானது. திருப்பதிகங்களை ஏட்டில் எழுதி வந்த அடியார் சம்பந்த சரணாலயர். யானை போல் தம்மை எதிர்த்து வந்த புத்தன் ஒருவனுடைய தலையைத் தானாக இற்று விழுமாறு உருட்டினாரோ அன்றிக் கூரிய வாள் கொண்டு அன்று. இவ்வாறு கூறினும் சம்பந்த சரணாலயர் வாளைக் கொண்டு அறுக்க வில்லையே ஆயினும் இறைவன் திருவருளாகிய துணையைக் கொண்டே இந்தச் செயற்கரிய செயலைச் செய்தார் என்று அருளாளர்கள் கூறுவர். ஆதலின் பொறி புலன்களின் வாயிலாகச் சென்று பற்றுவதேயன்றி உயிருக்குக் குற்றமற்ற அறிவு இல்லை என்பது தெளிவு. அறிவிக்க அறியும் தன்மையே உயிரின் அறிவாகும்.

இருளைப் போக்கிக் கொள்ளுவதற்கு மாந்தர் விளக்கு ஏந்திச் செல்லுவர். அதுபோல உயிரும் ஆணவ மலம் பக்குவமடைந்த காலத்து இறைவன் திருவருளால் ஞானத்தைப் பொருந்தும் என்று கூறினாய். கருவி கரணங்கள் யாவும் அறிவற்றன. அவற்றைப் பொருந்தி அறிவதாகிய உயிரும் தளைப்பட்ட நிலையில் துரியம் எனப்படும் பேருறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும். இவ்வாறு இருக்க உயிர் இறைவனின் ஞான விளக்கை ஏந்தி நன்னெறிப்படும் என்று நீ கூறியது குருடர்கள் பலரும் கூடிய வழி நெடுஞ்சாலையைக் கண்டு வழி நடந்தனர் என்பது போலப் பொருந்தாக் கூற்றாகும்.

குளிர்ந்த நீரையும் மரத்தின் தண்ணிய நிழலையும் போல வேண்டுதல் வேண்டாமை இலான் ஆகிய இறைவன் தன்னைச் சார்ந்தவர்களுக்கு அருள் பாலிப்பான் என்று நீ கூறினாய். அந்த உவமையும் பொருந்துவதன்று. மரம் அறிவற்ற பொருள். எனவே வழி நடந்து களைத்தவர்களைத் தன்னிடத்து வாருங்கள் என்று அது அழைப்பதில்லை. அதுபோலவே தன்னை வெட்டியவரிடத்து மரம் வெறுப்புக் கொள்வதும் இல்லை. கொடிய வெயிலில் நடந்து வெப்பமான புழுதியில் படிந்ததால் கால்களில் கொப்புளம் வெடிக்க வருந்தி வழி நடப்பவர்களைக் கண்டு மரம் அவர்களிடம் சென்று அவர்களின் துயரத்தைத் தீர்த்தது என்று இதுவரை கேள்விப்பட்டதும் இல்லை. எனவே நீரையும் நிழலையும் இறைவனுக்கு உவமை கூறுவது தவறாகும். பாச ஞானத்தால் கிட்டும் பழி மிக்க வழியை விடுத்து, இறைவனது அருள்வழி இத்தன்மையது எனக் கூறுவேன் கேட்பாயாக.

வையின் திரள்வைக்கோல் கட்டு. அந்தர்குருடர்கள். பாதவம்மரம். பூழிபுழுதி

நிமித்தகாரண பரிணாமவாதி சங்கற்பம்

புவனம் யாவையும் புனிதனது உருவாம்
சிவமும் சத்தியும் எனத்தெளி அவற்றுள்
அசேதனம் என்றுஒன்று அறைதற்கு இலது அது
சேதனன் நுகர்பொழுது இரண்டும் ஓர்திறத்தே
இதுவெனும் ஒன்றே அதுவாய்ப் படுத்துப்

பொதுமையில் நிற்கும் போதம் என்று அறிக
பொற்பணிப் பேதம் புரைவழி ஒருவழி
நற்பொனில் திகழ்வென் நயப்பதுஒன்று அன்றால்
ஆவதும் ஆகாது ஒழிவதும் எனும் இப்
பாவகம் உண்மை பாரா தோர்க்கே

பாராதோர் எனப் பல்லுயிர் பகர்தலின்
ஆராய்ந்து உரைக்கில் அவைபிற அல்ல
பலபல பேதம் இலஎன் போருள்இல்
கண்ணினது ஒளியைக் கண்ணினது எனில்அது
திண்ணிய இருளில் செறிபொருள் தெரிதலும்

இனிமை மின்மினி எனஇரு கண்மணித்
தன்மை தானும் தாவிலது அதனால்
கண்ணினது உருவும் அதில்கதிர் ஒளியும்
நண்ணரும் சத்தி சத்தர்கள் நடிப்பே
உலகுஏழ் எனத்திசை பத்துஎன ஒருவன்

பலவாய் நின்ற படிஇது என்றும்
ஊனாய் உயிராய் உணர்வாய் என்றும்
மானக் கண்ணே மணியே என்றும்
தாமே தாமாய்ச் செய்தனன் என்றும்
நாமே சிவமாய் நண்ணினம் என்றும்

காயாய்ப் பழமாய்ச் சுவையாய் நுகர்வும்
ஓயாது உண்போன் தானே என்றும்
அறிவோன் தானும் அறிவிப் போனும்
அறிவாய் அறிகின்றோனும் அறிவுறும்
மெய்ப்பொருள் தானும் வியந்துஇது எனப்படும்

அப்பொருள் யாவும் அவனே என்றும்
தாய்தலைப் பட்டுஅங்கு ஒன்றாய்த்து என்றும்
ஏதம் அறநான் கெட்டேன் என்றும்
இன்னும் இன்னும் இறையோன் அளித்தவை
பன்னில் எண்ணரும் பான்மைத்து ஆதலின்

தருபொருள் கொள்பொருள் தருவோன் கொள்வோன்
ஒருபொருள் இவ்வியல் உவப்புஎன உணர்க
நுகர்பொருள் சத்துஇது நுகர்வோன் சத்தன் என்று
இகல்அறும் உணர்வுவந்து எய்துதல் அரிதே
நான்அவன் எனும் இது நவைவழி நல்வழி

தான்அவன் ஆகை இது சாயுச்சியம்
இத்திறன் தெளிய உய்த்திடும் அளவும்
யாதொரு வகையால் நீதியது ஆகத்
தான்அறி வழியே தலைநின்று என்றும்
ஊன்உயிர் சிவத்தில் ஒடுங்கிட நடத்தி

மூடும் முழுமலம் வீடும் காலை
கருவிகள் அளவில் புரிதரும் அறிவு
சாக்கிரம் கனவு நீக்கமில் சுழுனை
துரியம் என்றுஇவை பயில் தரும் அறிவு
துரியா தீதம் திரியாத் தன்மையில்

இறையருள் உதவும் கறைஅற மாறி
அறிவே ஆகும் பிறியாக் கருவிகள்
நிறைமுதல் அவத்தையில் அறிவு இலது ஆகத்
துரியா தீதத் தோற்றம்
திரியா ததுநற் சிவகதித் திறனே

இவ்வுலகம் முழுவதும் புனிதனாகிய சிவபரம்பொருளின் திருவுருவமாகும். அப்பரம் பொருளும் தன்னிலையில் சிவம் என்றும், வெளிப்பட்டு நிற்கும் நிலையில் சத்தி என்றும் இருதிறமாகக் கூறப்படும். இவை இரண்டும் ஒன்றைவிட்டு ஒன்று நீங்குவதில்லை. ஆதலால் உலகத்துப் பொருள் எதனையும் அறிவற்ற சடப் பொருள் என்று கூறுவதற்கு இல்லை. ஏனெனில் அறிவுடைப் பொருளே நுகர்கிறது, அது அவ்வாறு நுகரும்பொழுது அறியும் பொருளும் அறியப்படும் பொருளும் ஒரு தன்மையனவாகவே இருக்கும், எவ்வாறு எனில், அறிவு தான் சுட்டி அறிகின்ற பொருளை தன்மயம் ஆகும்படி செய்து பொதுமையில் நிற்கும் என்று அறிவாயாக.

பொன்னும், அதனால் செய்யப்பட்ட அணிகலன்களும் காட்சியில் வேறுபட்டுத் தன்மையில் ஒன்றாவதுபோல உயிரும் உயிரால் காணப்பட்ட உலகும் என்று உவமை கூறப்படுவதும் உண்டு. பொன்னின் மாற்றே அதனால் செய்யப்பட்ட அணிகலன்களிடத்தும் இருத்தலால் அவ்விரண்டும் ஓர் இயல்பினவாகவே இருப்பினும் அவற்றை உயிருக்கும் உயிரால் உணரப்படும் பொருள்களுக்கும் உவமையாகக் கொள்வது ஏன்? என்ற கேள்வி எழும். உவமை சொல்லி ஒன்றினை விளக்க வேண்டிய தேவை பொருள்களின் தன்மையை உணராதவர் பொருட்டே ஆகும். எனவே இந்த உவமை பொருந்தும் என்றலும். இது பொருந்தாது என்றலும் உண்மையைத் தெளியாதவர்களால் கூறப்படுவனவையே என்று விடை பகர்தல் வேண்டும். உண்மையைத் தெளிந்தவர்கள் அதனைத் தெளியாதவர்கள் என்று வகைப்படுத்திச் சொல்வதனாலே உயிர்கள் பல என்பதனையும், அவை தனிப் பொருள் என்பதனையும் உணர்த்தவில்லையா என்று கேட்பின் ஆராய்ந்து பார்த்தால் உயிர் இறைவனில் இருந்து வேறுபட்டது அன்று என்பதை உணரலாம். வேறுபட்டது என்று கொள்வாரும் இல்லை.

கண்ணுக்கு ஒளி உண்டு. அது கண்ணிலிருந்தே தோன்றுவது என்று கூறினால் அது பொருந்துவதில்லை. ஏனெனில் காணும் தன்மை படைத்த கண்ணும் செறிந்த இருளில், பொருள்களைக் காண்பதில்லை. மின்மினிப் பூச்சி கூட இருளில் தன் ஒளியைக் காட்டும். ஆனால் இரண்டு கண்மணிகளும் சேர்ந்து இருளைக் கடிவதில்லை. அதனால் கண்ணும் கண்ணுக்குத் துணை நிற்கும் ஒளிக்கதிரும் ஒப்பற்ற சக்தி சிவம் ஆகியோரின் நாடகமே என அறிக.

ஏழு உலகாகவும், திசைகள் பத்தாகவும் இறைவன் ஒருவனே பலவாகி நின்றான் என்றும், ஊனாயும், உயிராயும், உணர்வாயும் இறைவனே நின்றான் என்றும், கண்ணே கண்ணின் கருமணியே என்றும், உயிர்கள் தாமே தானாகுமாறு இறைவன் இயற்றினன் என்றும், காயாகியும் பழமாகியும், பழத்தின் சுவையாகியும், சுவையை நுகர்வோனாகியும் இறைவனே நின்றான் என்றும், அறிவோன் ஆகியும், அறிவிப்போன் ஆகியும், அறிகின்ற அறிவேயாகியும் வியந்து கூறுமாறு எல்லாப் பொருள்களும் இறைவனே என்றும், தாயாகித் தலைப்பட்டு அங்கு ஒன்றாகும் என்றும், குற்றம் கெடுமாறு நான் கெட்டேன் என்றும், இவ்வாறு பல இடங்களிலும் அருளாளர் வாக்குகளில் கூறப்பட்டுள்ளவற்றிலிருந்து உயிர்களும் பரம்பொருளும் வேறல்ல என்பதை உணர்க.

எனவே கொடுக்கப்படுகிற பொருள் என ஒன்றும், கொடுப்போன் என ஒருவனும், கொள்வோன் என்று மற்றொருவனும் ஆகிய இவை வேறுபாடு உடையன அல்ல. யாவுமே இறைவன். இவ்வாறு வேறுபடுத்திக் காட்டுவது அவனுக்கு ஒரு மகிழ்ச்சி என்று உணர்வாயாக. நுகரப் படுகிற பொருள்கள் யாவும் சத்தியின் வடிவே. அவற்றை நுகர்வோன் சத்தனாகிய இறைவன் என்னும் தெளிவான உணர்வு வந்து கைகூடுதல் அரிது. நான் வேறு இறைவன் வேறு என்று எண்ணுகிற இருமை உணர்வு குற்றமுடையது. குற்றமற்ற உணர்வு என்பது நான் என்ற உயிர் இல்லை என உணர்ந்து சிவனே ஆதல் என்கிற ஒருமை உணர்வே, பரமுத்தி எனப்படும் சாயுச்சியம் ஆகும். இத்திறன் உறுதியாகும் அளவும், அம் முத்திக்குச் சாதனமாக அமைகிற யாதானும் ஒரு மாதகத்தை மேற்கொண்டு எப்போதும் ஊனும் உயிரும் சிவபெருமானிடம் ஒடுங்கி இருக்குமாறு ஒழுகி வருதல் வேண்டும்.

மேற்கூறியவாறு ஒழுகுவதனால் உயிரை மறைத்திருக்கிற ஆணவம் உயிரைவிட்டு நீங்கும் காலம் குறுகும். அப்போது உயிருடன் கருவிகள் கூடியும் நீங்கியும் வருவதால் நிகழும் நனவு, கனவு, உறக்கம் பேருறக்கம் என்பனவற்றில் சென்று சென்று மீளும் அறிவு உயிர்ப் படங்களில் என்னும் துரியாதீத நிலையை எய்தும், அந்நிலையில் இறைவனின் திருவருள் உயிரைப் பொருந்தும். சகல நிலையில் உயிர்களைப் பொருத்தியிருந்த கறையாகிய ஆணவ மலம் மாறும். உயிரை விட்டு நீங்காத முப்பத்தாறு கருவிகளும் நனவு நிலையில் அருளோடே பொருந்தி துரியாதீதத் தோற்றத்தைக் கண்டு அதனின்றும் திரியாது நிற்கும். அந்த அருள் விளக்கமே நல்ல சிவகதி எனப்படும்.

மேற்கண்ட பகுதியில் நிமித்த காரண பரிணாமவாதியால் மேற்கோளாக எடுத்துக் காட்டப்பட்ட திருமுறை அருட்பாடல்கள் கீழ் வருவன. ஒவ்வொரு பாடலிலும் உள்ள பகுதிகளை நிமித்த காரண பாணாமவாதி தன் கருத்தை வலியுறுத்துவதற்குப் பயன்படுத்துகிறான். ஆயினும் அப்பாடல்களுக்கு அவன் கொண்ட பொருள் பொருந்தாது என்பதும் சைவ சித்தாந்தத்தின் படி அத்திருப் பாடல்களுக்கு உரிய நேர்மையான பொருளும், இப்பகுதியின் நிராகரணத்துள் ஆசிரியரால் எடுத்துக் காட்டப்பெறுகிறது.

நிலம்நீர் நெருப்புஉயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலனாய மைந்தனோடு எண்வகையாய் புணர்ந்து நின்றான்
உலகுஏழ் எனத்திசை பத்தெனத்தான் ஒருத்தனுமே
பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ (திருவாசகம்திருத்தெள்ளேணம்)

ஊனாகி உயிராகி அதனுள் நின்ற
உணர்வாகிப் பிறவனைத்தும் நீயே ஆனாய்
நானேதும் அறியாத என்னுள் வந்து
நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்
தேனாரும் கொன்றையனே நின்றி யூராய்
திருவானைக் காவிலுறை சிவனே ஞானம்
ஆனாய்நின் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய்கேனே (அப்பர்திருத்தாண்டகம்)

திருவேஎன் செல்வமே தேனே வானோர்
செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நிற் சோதிமிக்க
உருவே என் உறவே ஊனே ஊனின்
கருவே என் கற்பகமே கண்ணே கண்ணில்
கருமணியே மணியாடு பாவாய் காவாய்
அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்
ஆவதுதண் துறையுறையும் அமரர் ஏறே  அப்பர்

பத்திப்பேர் வித்திட்டுப் பரந்தஐம் புலன்கள்வாய்
பாலே போகா மேகாவாப் பகையறும் வகைநினையா
முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள் வாய்
மூடா வூடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாய்ச்
சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள் சேர்வார் தாமே தாமாகச் செயுமவன் உறையுமிடம்
கத்திட்டோர் சட்டத்தங் கலந்திலங்கு நற்பொருள்
காலே ஓவா தார்மேவும் கழுமல வளநகரே  திருஞான சம்பந்தர்

அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே
பவமாயம் காத்தென்னை ஆண்டுகொண்ட பரஞசோதி
நவமாய செஞ்சுடர் நல்கும் பண்டை நாம் ஒழிந்து
சிவமாய வாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ திருவாசகம்திருத்தெள்ளேணம்

தீயாகி நீராகித் திண்மையாகித்
திசையாகி அத்திசைக்கோர் தெய்வமாகித்
தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித்
தாரகையும் ஞாயிறும் தண் மதியு மாகிக்
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற
இரதங்கள் நுகர்வானும் தானே யாகி
நீயாகி நானாகி நேர்மை யாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே (அப்பர்திருத்தாண்டகம்)

அறிவானும் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாசம்
அப்பொருளும் தானே அவன் (காரைக்கால் அம்மையார்அற்புதத் திருவந்தாதி)

மோதலைப் பட்ட கடல்வயிறு உதித்த
முழுமணித் திரளமு தாங்கே
தாய்தலைப் பட்டுஅங்கு உருகி ஒன்றாய
தன்மையின் என்னைமுன் ஈன்ற
நீதலைப் பட்டால் யானும்அவ் வகையே
நிசிசரர் இருவரோடு ஒருவர்
காதலிற் பட்ட கருணையாய் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே (கருவூர்த் தேவர்திருவிசைப்பா)

வான்கெட்டு மாருதம் மாய்ந்து அழல்நீர் மண் கெடினும்
தான்கெட்டால் இன்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு
ஊன்கெட்டு உயிர்கெட்டு உணர்வுகெட்டு என் உள்ளமும் போய்
நான்கெட்ட வாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ (திருவாசகம் திருத்தெள்ளேணம்)

நவை வலி குற்றமுள்ள வலி. கழுதை உறக்கம். அசேதனம்அறிவற்றது.

நிமித்த காரண பரிணாமவாதி சங்கற்ப நிராகரணம்

திறம்பெற நீஇங்கு அறைந்தமை கருதில்
புவனம் யாவையும் புனிதனது உருஎனில்
அவன் முதற் காரணம் அன்றாம் என்னில்
நிமித்த காரணம் நிகழ்த்துக எனநீ
அவனே காரணம் அனைத்தும் என்று அறைந்தனை

மண்தனிக் குலாலன் தண்டசக்க ராதி
காரணம் மூன்றும் ஓர்பேர் அணைந்ததுஇத்
தாரணி அதனில் கண்டது சாற்றுக
அத்தன் இயற்றும் இத்தொழில் பிறர்க்கோ
தனக்கோ வீணோ எனக்கு ஈது இயம்புக

வீண்எனில் பித்தர் மாண்பு அறும் தொழில்போல்
தலைமையும் அறிவும் இலதுஎன இகழ்வர்
தனக்குஎனில் அஃதும் இசைப்பது ஒன்று அன்றே
தன்போல் அறிஞரும் தலைவரும் இலரால்
மின்போல் நிலைமையை வேண்டலும் பழுதே

பிறர்க்கு எனில் பிறரும் பிறர்க்கு ஆம் பொருளும்
பொருட்கு அமை கருவியும் அதற்குஉபா தானமும்
செய்கையும் என்று ஓர் ஐவகைத் தானொடு
மாறாச் சைவர் கூறாய் என்றால்
நின்சித் தாந்தம் அவசித் தாந்தம்

என்சித்து ஆன்ற அசித்தை மற்று ஈனாது
அசித்து இலது என்னில் வசித்தது என்உலகில்
உலகா யதனும் பூதக் கூட்டம்
சலம்மேல் கொப்புள் தகும்எனச் சாற்றினன்
தீய கருமச் சீனர் சாவகர் பிறர்

ஞேயம் இல்என நிகழ்த்தினர் இலரே
காண்டல் விரோதம் நிற்பிறர் கணித்தலர்
ஈண்டுஉனது உரைக்கும் மற்று யார்கரி உடலும்
சித்தோ சித்தின் சேர்வால் சித்து எனில்
கடபடாதியும் உடல் கண் சிதைவு என்

தாபர உயிர் போல் தனுஒழிந்து அவற்றுள்
மேவிய உணர்வு விரவிடும் என்னில்
சடத்துஉயிர் போல் எனச் சாற்றினை ஆகலின்
உடற்கு உயிர் இறையை ஒழிந்து உண்டு அன்றே
தருதிட் டார்ந்தமும் தாட்டாந் திகமும்

ஒருபொருள் ஆகில் உவமை பெறாதே
ஒன்றே ஆகில் உடற்கு இறை தாபரத்து
ஒன்றிய நிலையில் விசேடம் என் உரைக்க
பூதச் சேர்வைப் பேதம் என்று அறையில்
சேர்வைப் பேதம் என்கொடு செப்புக

கருமத்து அளவில் வரும் எளில் பித்தர்
உரையில் திகழும் உணர்வுஒழிந் தனையே
கருமம் செய்வோள் கடவுள் அன்று உடலும்
மருவி நின்று இருவினை வாளா நுகரா
கடவுளும் உடலின் கண்படல் துஞ்சல்

இடர்நலம் உறுதல் இறங்குதல் ஏறுதல்
எவ்வகை யேனும் செய்கை இன்று ஆதலும்
பலகலை உலகில் நிலவுத லானும்
எண்ணரும் பொருளும் இரவியும் ஒழியக்
கண்என ஒன்று காண்கையி னாலும்

பாசப் பகுதியும் ஈசனும் ஒழியப்
பசுவும் உண்டு என்று இசைய வேண்டின்றே
இதுஎனும் ஒன்றே அதுவாய்ப் படுத்துப்
பொதுமையில் நிற்கும் மாயையின் பொற்பு எனப்
பொற்பணி யாவும் பொன்னாம் தன்மையின்
 
நிட்கள் சகளத் திருவுரு நிலையும்
ஈசனே எனப் பேசுவர் அன்றி
அருவுருவாகி வரும் உலகு என்னில்
அனைத்தும் மாயை எனத்தெளி கிலையே
ஆவதும் ஆகாது ஒழிவதும் இலது எனும்

பாவகம் உலகாயதனது பான்மை
கள்கொலை வெகுளி காமம் களவுகள்
உட்படும் இவைவிட மொழியாதார் இலர்
சோம பானம் சுராபானங்கள்
ஆம்என மறைகள் ஆர்செவிப் பறைந்தன

மறையோன் புலைச்சியை மருவும் என்பது
முறையோ எனில் அது புனைமொழி என்னில்
சாதி பேத நீதிநீ தவறினும்
மேதியை ஏறு விழையா விரும்பும்
கண்ணினது உருவும் அதில் கதிர் ஒளிவும்
நண்ணரும் சத்தின் நாடகம் எனில் அதற்கு
ஏதுவும் பயனும் ஓத வேண்டும்
நின்மொழி விரோதமும் நீடு உலகு இயற்கையும்
தன்மசாத் திரமும் சகலமும் என் செயும்
உலகுஏழ் எனஇறை பலவாம் தன்மை

கடமொடு சாரவம் கலசம் ஆதிகள்
அடல்உறு குயவன் ஆயினன் என்றால்
தானே ஆகா அவைதான் ஆகான்
ஆயினன் என்பது ஆக்கினன் எனவே
ஆனாய் என்பது அனைத்தும் அவ்வகை

தான் ஆகாமையைச் சாற்றிடும் என்க
தாமே எனும்இத் தனி ஏகாரம்
அழிந்திலர் அதுவே ஆய்த்திலர் அதுவிட்டு
ஒழிந்திலர் பிரிவிலர் எனும்இவை உணர்த்தும்
காயும் பழமும் சுவையும் நுகர்வது

ஆயவன் தானும் அவன் முதற்கு என்னும்
அகிலமும் தெளிய அறிவோன் தானும்
அகிலமும் அறிஞரை அறிவிப்போனும்
அறிஞர்க்கு அறிவாய் அறிகின் றோனும்
அறிவிற்கு அறிபொருள் ஆவோன் தானும்

அகிலமும் மேனி ஆனவன் என்னும்
தருபொருள் கொள் பொருள் தருவோன் கொள்வோன்
ஒருபொருள் ஆயின் உவப்பு உண்டு என்க
நுகர்வோன் தனக்கு நுகர்பொருள் வேண்டிற்று
இகல்அறக் கிடையாது இருந்தது என் நிரயமும்

வேண்டா ராயினும் மெய்யுறு வியாதிகள்
ஈண்டாது ஒழியாது இறைக்கு இவை ஈடுஅல
சத்தியும் சிவமும் தாமே நுகரும் என்று
இத்திறன் உணர்வு வந்து எய்துவது எவர்க்கோ
தமக்கே என்னில் தாம் உணராமையும்

அமைப்பு அறுஉணர்தலும் அவர்க்கு அடைவு அன்றே
நானும் அவனும் நவையும் நலனும்
தான்அவன் ஆகையும் நின் சாதனத்தில்
சகயோ கத்தைச் சாயுச் சியம்எனப்
பகர்வது பதிபசு பாசத் தவர்க்கே

யாதுஒரு வகைஎன ஓதியது இறைநூல்
சொன்னவற்று ஒன்றுஅன்று என்னில் வீடு எளிதே
தான் அறி வழியே தலைப் பொருள் பிடிக்கில்
மேல்நிகழ் பலமும் வீடுஅளித் திடுமே
நிலையாக் கருவியை நிலையாக் கருதிப்

புலையாடுதலும் உலகா யதன்பொருள்
குட்டியம் இன்றிநற் கோலம் எழுதுதல்
இட்டம தாயில் கருவியும் இடங்களும்
கருத்துற உரைக்கத் தெரித்திடும் அதீதத்து
அறிவொன்று இல்லோர்க்கு இறைஅருள் உதவுதல்

பிறிவு அறிவு அரிய செறி இருள் இடத்து ஓர்
அந்தகர் காண வந்தோர் எம்மை
நீவிரும் காண வேண்டும் என்றுஆங்கு
எடுத்து ஓர் தீபம் கொடுத்ததை ஒக்கும்
இச்செயற்கு இறைவன் கொச்சையன் அன்றே

கருவி வசத்தில் தெரிவுறக் காண
வேண்டுநர் இலரால் ஈண்டு அறிவு யாவும்
சிவமே என்று செப்பினை அவம்உறு
பொறிபுலன் அறியா அறிவது பிரமம்
என்றோர்க்கு உன்போல் இடர்ப்படல் இலதே

ஏற்றம் கருவி இருபதோடு இரண்டும்
போற்றும்ஐந்து அவத்தையும் புகல்திரி மலமும்
ஈசனும் உயிரும் பேசினை அஃது ஒழிந்து
ஒன்றே ஆகும் என்றநின் இயல்பு
தாயர் மனைவியர் தாதியர் தவ்வையர்

ஆயவர் எவரையும் ஓர்மையில் காணும்
கோகழி தூர்த்தர் கொடுந்தொழில் தகுமே
ஆக மற்று அதன் அருள்நிலை தன்நிலை
ஏக நாயகன் ஆகிய இறைநிலை
நாசம் இல் பாசம் வீசிய வியன் நிலை

இனையவை ஒன்றும் நினைவினும் இன்றி
உண்டுஎனும் உணர்வில் கண்டது கருதில்
இழுக்கு எனும் புலன்வழி ஒழுக்கமும் அதுவாய்க்
கொண்டு பண்டையில் எண்தரு மடங்கு
வந்தவா செய்யத் தந்ததை அன்றே

புன்மைகள் நீங்க உண்மை கேண்மதி!

திறம்பட நீ கூறியவற்றை ஆராய்ந்து பார்க்கலாம். இவ்வுலகம் முழுவதும் இறைவனது திருவடிவிலிருந்து தோன்றியது என்றாய். அவ்வாறாயின் இறைவனை இவ்வுலகுக்கு முதற் காரணம் என்று கொள்ள வேண்டும். அவன் முதற் காரணம் அல்லன் ஆகின் இறைவனை நிமித்த காரணன் என்று கொள்ள வேண்டும். ஆனாய் நீயோ இறைவனே உலகுக்கு முதற் காரணம் துணைக் காரணம் நிமித்த காரணம் என்று கொள்ளுகின்றாய் ஒரு குடம் வனையப்படுவதற்கு மண் முதற் காரணமாகிறது. தண்டு சக்கரம் ஆகிய கருவிகள் துணைக் காரணங்கள் ஆகின்றன. வனைகின்ற குயவன் நிமித்த காரணன் ஆகிறான். இவ்வாறு மூன்று காரணங்களும் தனித் தனியாகக் காணப்படுவதேயன்றி மூன்றும் ஒன்றாக இருப்பது இவ்வுலகில் காணப்படவில்லை. அவ்வாறு மூன்றும் ஒன்றாக இருப்பதை நீ கண்டாய் எனின் அது எது என்று எடுத்துரைப்பாயாக.

தலைவனாகிய இறைவன் இயற்றுகின்ற ஐந்தொழிலும் பிறர்க்காகவா? தனக்காகவா? அல்லது வீணாகவா? என்பதனை எனக்குக் கூறுவாயாக. ஐந்தொழிலும் வீண் எனில் அவை பித்தர் செய்யும் பெருமையற்ற தொழிலாகும். அதுவும் தவிர வீண் தொழில் இயற்றுபவன் முதன்மையும் முற்றறிவும் இல்லாதவன் எனப்பட்டு இகழப்படுவான். இறைவன் ஐந்தொழிலும் தன் பொருட்டே இயற்றுகின்றான் என்று கொண்டால் அதுவும் முன் கூறியது போலப் பொருந்தாத கூற்று. ஏனெனில் முழு முதன்மையும் முற்றறிவும் உடைய இறைவன் தனக்கென மின்னல் போல் கணப் பொழுதில் தோன்றிக் கணப் பொழுதில் அழியும் இவ்வுலகத்தைப் படைத்துக் காத்து மறைத்து ஒடுக்கி அருளுகிறான் எனப்பட்டு இழுக்காய் முடியும்.

இறைவன் பிறர் பொருட்டே ஐந்தொழில் செய்தான் என்னில் அவன் தவிரப் பிறரும் அவர்களுக்கான பொருளும் அப்பொருளுக்கு ஆவதான கருவியும் முதற் காரணமும் செய்கையும் என்று ஐவகை நிலைகள் வேறு உள என்று கொள்ளப்பட்டு யாவும் சிவமே எனக் கூறும் உன் கொள்கைக்கு மாறுபடும். மேலும் அறிவே வடிவாகிய இறைவனில் இருந்து அறிவற்ற பொருள்கள் தோன்ற மாட்டா. உலகம் அறிவற்ற பொருளே கிடையாதா? உலகம் அறிவற்றது என்று மறைகளும் ஆகமங்களும் கூறுவது என்னாகும்? உலகாயதர் கூட நான்கு பெரும் பூதங்களின் கூட்டத்தினால் உருப்பெற்ற இந்த உலகம் நீர் மேல் குமிழி போல் நிலையற்றது என்பார்கள்.

ஏற்கத்தகாத கொள்கைகளையுடைய பவுத்தர், சமணர் போன்ற புறச் சமயத்தவர்கள் கூடக் காணப்படும் பொருளை இல்லை என்று மறுத்ததில்லை. கண்ணுக்கு நேரே தெரிவதை மறுக்கும் உன் கொள்கை காண்டல் விரோதமாகும். உன் போல் இவ்வாறு கூறியவர் வேறு யாரும் இலர். நீ கூறுகின்ற இந்தக் கருத்துக்குச் சான்றாவது எது?

உடல் அறிவுடையதா? உயிராகிய அறிவோடு சேர்ந்ததனால் அதுவும் அறிவுடையதே என்று நீ விடையிறுப்பாய். அவ்வாறு எனின் இறைவனாகிய முற்றறிவுப் பொருள் எவற்றுள்ளும் எங்கும் கலந்து நிற்கவும் குடம் துணி முதலியனவும் இவ்வுடலைப் போல் அலைந்து திரியாமல் அவை கிடந்த இடத்திலேயே கிடப்பது ஏன்? இக்குடம் துணி ஆகியவற்றில் உள்ள உயிர் மரம செடிகளில் உள்ள உயிர் போன்றது மரம் செடிகள் எவ்வாறு அசைவதில்லையோ அது போன்றே குடம் துணி முதலியவையும் அசையா என்று மறுமொழி தருகிறாய். இவ்வாறு கூறுவதன் மூலம் தாவரங்களில் உயிர் உண்டு என்று எடுத்துக் காட்டினாய். எனவே உடம்பிலும் இறைவனைத் தவிர உயிர் என்ற தனித்த பொருள் உண்டு என்பதை நீயும் உடன்படுகின்றாய்.

அவ்வாறில்லை எடுத்துக் காட்டு என்பது ஒன்றே கொண்டு வாதிடுவது சரியில்லை. முற்றிலும் பொருந்துமானால் மட்டுலுமே இத்தகைய வாதத்தை ஏற்க முடியும் என்று கூறுவாயானால் உவமை என்பதும் உவமையால் விளக்கப்பட்ட பொருளும் ஒரே பொருளாக இருக்க முடியாது. இருப்பின் பொன் போன்ற கொன்றை என்றும், திங்கள் போன்ற முகம் என்றும் உவமை கூறுவார் கூற இயலாது. இறைவனே எங்கும் நிறைந்திருக்கிறான் என்ற நீ கூறிமிடத்து உயிர் என்ற தனித்த பொருள் இல்லை என்று வாதிடுகிறார். அப்படியாயின் உடலில் பொருந்தியிருக்கும் இறைவனுக்கும் மரம் செடி கொடிகளில் பொருந்தியிருக்கும் இறைவனுக்கும் வேறுபாடு காணப்படுவானேன்? அந்த வேறுபாடு ஐம்பூதங்களின் சேர்க்கையில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகளினால் விளைந்தது என்று நீ கூறுவாயானால் அந்த ஏற்றத் தாழ்வு எதனால் வந்தது என்பதற்கு நீ விடை கூற வேண்டும். அது வினையினால் வந்தது என்று நீ கூறினால் அந்த வினையை இயற்றியவர் யார்? இறைவன் வினையின் நீங்கி விளங்குபவன் ஆதலால் சடப் பொருள் ஆதலால் அதனால் வினையை இயற்றலும் வினைப்பயனை நுகர்தலும் இயலா. இவ்வாறு நீ வாதிடுவது பித்தர் கூற்றுப் போன்றது. கடவுளே உடலோடு பொருந்தி நுகர்கிறான் என்று நீ கூறினால் இறைவன் ஐந்தவத்தைப் படுவான். இன்ப துன்பம் உறுவான். கருவிகளோடு கூடியும் நீங்கியும் நிற்பான் எனப்பட்டு இறைவனுடைய முழு முதல் தன்மைக்கு இழுக்கு ஏற்படும், மேலும் இறைவனால் அருளப் பெற்ற அருள் நூல்கள் பல, உலகத்தில் நிலவுவதைக் காண்கிறோம். இறைவன் முற்றறிவினன். பாசங்கள் அறிவற்ற சடப் பொருள். ஆதலால் அருள் நூல்கள் எவர் பொருட்டு அருளிச் செய்யப்பட்டன என்பதை நீ விளக்கியாக வேண்டும், இந்த அருள் நூல்களால் பயன் கொள்வது உயிரே ஆகும். உலகத்தில் எண்ணற்ற பொருள்கள் உள்ளன. ஞாயிறும் உள்ளது. இந்த இரண்டிலும் வேறுபட்டதாகிய கண் என்ற மூன்றாவது பொருள் இல்லையென்றால் காண்டல் தொழில் இல்லையாகும். பாசத் தொகுதியும் பதிப் பொருளும் தவிரப் பசு என்ற ஒன்று உண்டு என்று அறிவாயாக. இது என்னும் சுட்டறிவைத் தன் மயமாகும்படி செய்து பிரிவின்றி நிற்கும் மாயையின் இயல்பினை உள்ளவாறு அறியாக.

பொன்னும் பொன்னால் ஆகிய அணிகலன்களும் பொருள் தன்மையால் ஒன்றேயாவது போல, இறைவனுடைய அருவம் உருவம் அருஉருவமாகிய மூன்று திருஉரு நிலையும் ஈசனே என்ற அருளாளர்கள் சொல்வார்களே யல்லாமல் உலகம் அருவ நிலையில் சிவமாகியும் உருவ நிலையில் சத்தி ஆகியும் திகழும் என்று நீ கொள்வாயானால் அவ்விரண்டு பகுதிகளும் மாயையே என நீ தெளிந்து கொள்ளவில்லை என்பதாகும்.

செய்யத் தக்கது இதுவென்றும், செய்யத் தகாதது இதுவென்றும் பாகுபடுத்தத் தேவையில்லை என்று நீ கொள்வது உலகாயதன் கருத்தோடு ஒத்ததே. கள்ளுண்ணல், கொலை செய்தல், சினம், காமம், களவு போன்றவை தீயன. ஆதலின் அவற்றை விட்டு விடுக என்று கூறாதார் யார் உளர்? சோம பானம் அருந்துதல், சுரா பானம் அருந்துதல் என்பவற்றை எந்த அற நூல் உடன்பட்டது? உயர்ந்த குலத்துப் பிறந்தவன் ஒருவன் தாழ்ந்த குலத்தைச் சார்ந்த ஒருத்தியோடு கூடுவது முறையாகுமா எனக் கேட்பின் அவை எல்லாம் தாமாகப் புனைந்து கொண்ட வரையறைகளே என நீ கூறக்கூடும். சாதிப் பிரிவுகளால் உள்ள முறைமை தவறினால் இயற்கை அரண்களாக வேறுபாடு உள்ளனவே? காளை எருமையை விரும்புவதில்லை. ஆனால் பசுவையே விரும்பும் ஞானிகளுக்கு இத்தகைய வரைமுறைகள் கிடையா என நீ வாதிடல் கூடும். அவர்கள் ஞானியர் எனவே முறை பிறழ மாட்டார் என்பதே கருத்து அல்லாமல் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது கருத்தன்று.

கண்ணின் வடிவமும் அதில் படுகின்ற கதிரவனின் ஒளியும் அணுகுதற்கு அரிய சிவசத்தியினுடைய நாடகம் என்று நீ கூறினாய்.  அந்த நாடகம் நடிப்பதற்கான காரணத்தையும் அதற்கான பயனையும் இன்னது என நீ கூறுதல் வேண்டும். காரணமும் பயனும் இல்லாத விடத்து நீ கூறுவது உலக இயற்கைக்கு மாறுபட்டதே. அதனால் உன் கருத்துப் பிழைபடும்.

உலகு ஏழ் என திசை பத்து எனத் தான் ஒருத்தனே பல ஆகி என்றும், ஊனாகி உயிராகி அதனுள் நின்ற உணர்வாகிப் பிற அனைத்தும் நீயே ஆனாய் என்றும், திருவே என் செல்வமே என்றும் வருகின்ற அருளாளர்கள் வாக்குகளுக்கு முறையான பொருளை நுணுகி உணர்ந்து கொள்ளுதல் வேண்டும் தவறாகப் பொருள் கொள்ளக் கூடாது. குடம், பானை, கலசம் முதலிய பாத்திரங்களாகக் குயவனே மாறினாள் எனில் பொருந்துமா? இறைவனே எல்லாப் பொருளும் ஆயினன் என்று கூறும் போது இறைவனே எல்லாப் பொருளையும் ஆக்கினான் என்பது தான் கருத்து. ஆனாய் என்ற சொல்லே பொருள்கள் வேறு என்பதும் இறைவன் அவற்றோடு கலந்து நின்ற தன்மையையும் குறிக்குமேயன்றிப் பொருட்களே இறைவன் என்று குறிப்பனவல்ல.

தாமே தாமாகச் செய்யுமவன் என்னும் திருஞான சம்பந்தர்திருப்பாடலைப் பிழையற உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். தாமே என்பதிலே உள்ள ஏகாரம் ஆழ்ந்த பொருளுடையது. இந்த ஓர் எழுத்து இறைவனைச் சார்ந்தும் உயிர்கள் அழிந்தில என்பதனையும், சிவபரம் பொருளே ஆகிலர் என்பதனையும், சிவனை விட்டு நீங்கிலர் என்பதனையும் அச்சிவனை விட்டுத் தமக்கெனச் செயல் இலர் என்பதனையும் உணர்த்துவதாகும். இதே கருத்து தாமே சிவமாய் நண்ணினம் என்று இந்நூலிலும் நாம் ஒழிந்து சிவமானவா பாடி என்ற திருவாசகத்துக்கும் பொருந்தும் என்பதை உணரவேண்டும்.

காயகிப் பழமாகி என்ற அப்பர் திருத் தாண்டகத்தில் வருகின்ற பகுதியில் பொருள்கொள்ளப் போதும் இவ்வாறே நுணுகிப் பொருள் கொள்ளவேண்டும் காயும் பழமும் சுவையும் நுகர்வும் நுகர்வானும் சிவபெருமானின் அருளாலேயே உள்ளன என்பது இப்பாடலின் கருத்தாகும். இவ்வாறே அறிவானும் தானே என்னும் பாடல் எல்லா உலகமும் இறைவனின் திருமேனியே என்பதை உணர்த்தும் தாய் தலைப்பட்டு என்ற பாடலுக்கும் ஏதமற நான் கெட்டேன் என்று வரும் பாடலுக்கும் இவ்வாறே அவற்றின் உள்ளுறை அறிந்து பொருள் கொள்ளவேண்டும்.

தருகின்ற பொருளும், தருவோனும், பெறுவோனும் ஆகிய மூன்றும் சிவபெருமானே என்றால் இந்தச் செயல்களினாலே என்ன மகிழ்ச்சி அல்லது பயன் உண்டாகும்? இம் மூன்றும் ஒன்றே என்று பேசுவது இனிமையாக இருக்கலாம். ஆனால் பொருந்துவதன்று. மூன்றும் ஒன்றேயாயின் நுகரும் ஆசை உள்ளவனுக்கு நுகர விரும்பும் பொருள் தடையின்றிக் கிடைத்தல் வேண்டும். அவ்வாறு கிடைப்பதை நாம் உலகத்தில் கண்டதில்லை. சொர்க்க நரகங்கள் என்று பேசப்படுவன பயனற்ற பேச்சாகும். பலரை நோய்கள் வருத்துவதும் காணுகிறோம். இறைவன் நோயால் வருந்துகிறான் என்பது பொருத்தமுடையதாகுமா? எனவே எல்லாம் ஒன்று என்பது பொருந்தாது.

 சத்தியும் சிவமும் தாமே வினைகளைச் செய்து வினையின் பயன்களை நுகரும் என்று நீ கூறும் இந்த உணர்வு யாருக்கு எழுகிறது? சத்திக்கும் சிவத்துக்குமே எழுகிறது என்று கொண்டால் அவை இவற்றை அறியாமலிருந்து அதன் பின்னர் உணர்ந்தன என்ப்பட்டு வழுவாகும். சத்திக்கும் சிவத்துக்கும் இத்தன்மைகள் பொருந்தா.

நானாகிய உயிரும், அவன் எனப்படுகின்ற இறைவனும், என்னைப் பிணித்துள்ள குற்றங்களும் இக் குற்றங்களிலிருந்து நீங்கி அவனை அடைந்து பெறுகின்ற நலமும், உயிர் சிவத்தோடு இரண்டறக் கலத்தலும், நீ கூறும் கொள்கையில் இல்லை. இரண்டறக் கலத்தல் என்னும் பரமுத்தி, பதி பசு பாசம் என்ற முப்பொருள் உண்மை கொண்டவர்களுக்கே பொருந்தும்.

ஒவ்வொருவரும் தாம் விரும்பிய வழியிலே ஒழுகி வீடு பேறு அடையலாம் என்று நீ கூறுகிறாய். இக்கருத்தை எந்த அருள் நூலும் கூறவில்லை. அது மட்டிலுமன்று விதித்தன செய்தும் விலக்கியன ஒழித்தும் ஒழுகாமல் வீடு பேறு கிட்டும் என்பது வீடு பேற்றை அரியது என்று கருதாமல் எளியது என்று தாழ்த்தும். மனம் போன போக்கில் வாழ்வதனால் வீடு பேறு அடையலாம் என்பது. உலகப் பொருள்களை நிலைத்தன என்று கருதிக் கொடுஞ் செயல் புரிந்து வாழுகிற உலகாயதன் செயலும் வீடு பேற்றுக்கு வழி என்று கொள்ளப்படும்.

சுவர் இல்லாமல் சித்திரம் எழுதுதல் இயலாது என்பது யாவரும் அறிந்ததே உடல் கருவி உலகு நுகர்ச்சிப் பொருள் ஆகியவை உயிரின் வினை நீக்கத்துக்காக இறைவனால் அருளப்படுகின்றன என்று எல்லா நூல்களும் முழங்குகின்றன. அப்படியிருந்தும் நீயோ கருவிகள் அற்ற நிலையில் உயிர்களுக்கு இறைவன் அருளை வழங்குவான் என்று கூறுகிறாய். உன் பொருத்தமற்ற வாதம் எத்தகையது எனில், அருள் நிறைந்த அறையிலே குருடன் ஒருவன் இருந்தான். அவனைக் காணச் சென்ற பார்வையுடையவன் ஒருவன் தன் கையிலே ஒரு விளக்கையும் ஏந்திச் சென்றான். எதற்காக இந்த விளக்கு என்று கேட்கப்பட்ட பொழுது நான் உம்மைப் பார்க்கிறேன். விழியற்ற நீர் என்னைப் பார்ப்பதற்காக இவ்விளக்கை எடுத்து வந்தேன் என்று கூறியதற்கு ஒப்பாகும். இறைவன் இத்தகைய செயலைச் செய்வதற்கு அறிவற்றவன் அல்லன்.

அருளாளர்கள் நம் கருவி கரணங்களால் இவ்வுலகத்துப் பொருள்களை நுகர்ந்து கொண்டிருப்பதை விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பரமே பார்த்திருப்பர். பதார்த்தங்கள் பாரார். நீயோ கருவி கரணங்களால் வரும் அறிவெல்லாம் சிவமேயாகும் என்று கூறுகின்றாய். பொறி புலன்கள் எதனையும் அறியா என்றும் அறிவது பிரமம் ஒன்றே என்றும் கூறும் மாயாவாதிக்குக் கூட உன் போல் இடர்ப்பாடு இல்லை.

மாயாவாதிகள் தத்துவங்கள் பதினான்கே உள்ளன என்பர். நீயோ அவரினும் அதிகமான தத்துவங்களை ஏற்றுக் கொண்டு அவை இருபத்து இரண்டு என்பாய். மாயா வாதிகள் அவத்தை நிலைகள் மூன்று என்பர். நீ ஐந்தவத்தை உள என ஏற்றுக் கொள்ளுகிறாய். மும்மலங்களும் இறைவனும் உயிரும் உளவென ஒத்துக் கொள்கிறாய். அவற்றை எல்லாம் மறந்து யாவும் ஒன்றே ஆகும் என்று இப்பொழுது பேசுவது தாயும் மனைவியும் தமக்கையும் ஏவற்பெண்டிரும் மகளிரே ஆதலால் அவர் அனைவரையும் ஒரு தன்மையாகப் பார்க்கும், காமுகம் தன்மையிலும் மிகவும் கொடியது.

நிற்க, ஒப்பற்ற தலைவனாகிய இறைவனது நிலையையும், அவனது திருவருளாகிய சத்தியின் நிலையையும், உயிரின் நிலையையும் உயிரைக் கட்டி இருக்கிற விரிந்த பாசத்தின் நிலையையும் இவை ஒன்றையும் நினையாமல் நீ சொல்லுகிற துரியாதீதத்தில் அடையத் தக்க சிவகதியை ஆராய்ந்தால் புலன் வழி ஒழுகுவோரினும் எட்டு மடங்கு அதிகமாகக் கேடு தரும் வழியே உன் வழி. எனவே உன் குறைபாடுகள் நீங்க உனக்கு உண்மை நெறியைக் கூறுவேன் கேட்பாயாக.

குலாலன் குயவன். அத்தன் தலைவன். இறைவன் அவசித்தாந்தம்பிழைபட்ட கருத்து. சீனர் சாவகர்இந்த இடத்தில் பிற நாட்டினரை உணர்த்தாமல் பிற சமயத்தவரை உணர்த்திற்று. திருட்டாந்தம் எடுத்துக் காட்டு. தாட்டாந்திகம்எடுத்துக்காட்டால் பெறப்படுவது. மேதிஎருமை. சார்வம்யாவும்.குட்டியம்சுவர் கொச்சையன்அறிவற்றவன். தவ்வையர்தமக்கையர்.

சைவவாதி சங்கற்பம்

அறிவாய் அறியும் அறிவுஉயிர் கேவலத்து
அறிவிலன் இருளொடும் பிறிவிலன் அண்ணல்
கலைமுதல் ஆக நிலவிய கருவிகள்
விளக்குஎன உதவும் துளக்குஅறப் பொருந்தி
இருவினை நுகர்வில் வருவினை செய்து

மாறிப் பிறந்து வருநெடும் காலத்து
இருள்மல பாகமும் சத்தி நிபாதமும்
மருவுழி அருள்உரு மன்னவன் அணைந்து
செல்கதி ஆய்ந்து பல்பணிப் படுத்திக்
கருவியும் மலமும் பிரிவுறப் பிரியா
ஞானம் நல்கலும் தான்அது நோக்கித்
தன்னையும் அதனையும் தன்முதற் பொருளையும்
இன்னஎன்று அறியா இருவரும் முயங்கி
ஒன்றாய் உறுபயன் உவப்பும்
இன்றாய் நிற்கும் இதுசிவ கதியே

சகல நிலையில் அறிவோடு கூடிய உயிர் பொருள்களை அறிந்து வரும். அவ்வுயிர் கேவல நிலையில் ஆணவ மலத்தோடும் கூடி அதனை விட்டு நீங்கும் வழியறியாது அறிவின்றிக் கிடக்கும். இறைவன் தன் பெருங் கருணையினால் கலை முதலாகக் கூறப்பட்ட கருவிகளை இருளில் நிற்கும் உயிரின் உதவிக்காகக் கை விளக்கெனத் தந்து அருளுகிறான். உயிரும் அக் கருவிகளோடு கூடி இரு வினை செய்து அதன் பயன்களை நுகரும் போது மேலும் வினைகளை ஈட்டி மாறி மாறிப் பிறந்து வரும். இவ்வாறு பல காலம் கழிந்த பிறகு ஆணவ மலம் பரிபாகப்பட சத்தி நிபாதம் நிகழும் அப்போது அருளே வடிவாகக் கொண்ட ஆசிரியனாக உயிரின் முன் தோன்றி அதனைச் சரியை கிரியை யோகம் ஆகிய தொண்டுகளில் செலுத்திச் சகலத்தில் கூடிய தத்துவங்களும், கேவலத்தில் கூடிய ஆணவ மலமும் நீங்குமாறு தன்னை விட்டு விலகாத சிவஞானத்தை அவ்வுயிர்களுக்கு அருளுவான். அந்நிலையில் தன்னையும் சிவஞானத்தையும் அந்த ஞானத்திற்கு அடிப்படையாக உள்ள சிவபெருமானையும் வேறுபடுத்தி அறிய இயலாத தன்மையும் உயிரும் சிவமும் கூடி ஒரே பொருளாகி முத்திப் பயனின் பேரின்பமும் இல்லாமல் நிற்கின்ற நிலையே சிவகதி எனப்படும்.

துளக்குகுற்றம், மன்னவன்ஞான ஆசிரியன். பல்பணி சரியை முதலிய தொண்டுகள்.

சைவவாதி சங்கற்ப நிராகரணம்

இதுகதி யாக முதல் அறிவு உயிரேல்
பொறிபுலன் நீங்க அறிவுஉயிர் அன்றே
அடைகாய் நூறின் இடைசேர் சிவப்புஎன
இந்தியத் தொகையின் வந்து அறிவு ஒன்றுநின்று
இன்றாம் என்றல் அன்றே எந்தை

அறிவுஇலன் அதீதச் செறிவில்என்று உரைத்த
நின்மொழி விரோதமும் பின்முன் மலைவும்
மன்வயின் நிகழா மலம்இருள் இறைஒளி
ஆன்மா விளக்கில் தகும்மருள் கலாதிகள்
ஈனம்இல் இவன்இடத்து எவ்வாறு இசைந்தன

இசைந்தது ஆயினும் இசையாது ஆயினும்
அசைந்திடும் முத்தி சாதனம் அவமே
சத்தி நிபாதமோ தகுமல பாகமோ
உய்த்த காரண காரியம் ஓதுக
பாகம் காரணம் ஆகில் மற்றஅது

கால அவதியில் காய அவதியில்
மேலாம் என்னும் வினையுறும் அவதியில்
துயர்என உயிர்க்குத் தோன்றிடுப் அவதியில்
நயம்மிகும் இறைவன் நல்கிடும் அவதியில்
ஏதில் கூடும் ஓதுக இருவினை

ஒத்த எல்லையில் வைத்தனர் என்னில்
அருவினை தூக்க உருவினை நில்லாது
ஒருவினை புரிகால் இருவினை ஆகா
ஒப்புறு மாறு செப்புக தேசிகன்
அருள்உரு என்த பொருளினை ஆயின்

மாயா உருவினன் மாயா உருவினை
ஏயான் ஏய்ந்தவர் எம்ம னோரே
பல்பணி ஞான காரணம் என்னில்
தொல்பணி தொறும்பயன் தொடுப்பதனாலும்
ஒருபணி செய்யாச் சிரபுரச் சிறுவரும்

அரசர் ஆகிய தருணத் தலைவரும்
முதிர் பரசமயத்து இதம்உறும் அரசரும்
ஞானம் பெற்ற நன்மையி னாலும்
ஈனம்இல் பணி அருட்கு ஏதுஅன்று என்றால்
ஞானோற் பத்தி நிமித்தம் இத்தொழில்என

ஏனோர்க்கு இறைநூல் இயம்பிற்று என்னாம்
கருவியும் மலமும் பிரிவுற அருள்தரும்
என்றனை கேவலத்து ஏதும் அறிவிலன்
துன்றிய சகலத்து அருள்நிலை தோன்றாது
எவ் அவத்தையில் இறை அருள் பெறுகுவம்

செவ்விய ஞான தெரிசனம் ஆவது
நால்வகை மாயைப் பால்வரு ஞானம்
பண்டை ஞானம் இதுபறி தரவரக்
கண்ட ஞானம் இதுவாக் காணில்
ஈனமில் ஞானிகள் என்போர் யாரும்இல்

ஞான வேற்றுமை நாடலும் அரிதே
தானும் ஞானமும் தலைவனும் என்றனை
அன்பின் இவனும் இவனது ஞானமும்
பாசமும் பாச ஞானமும் என்றுஇவை
பேசுவர் ஒன்றாப் பெற்றிய ஆகலின்

மும்மைப் பொருட்கும் மும்மைத் தன்மை
செம்மைத்து என்னில் செலவுகள் எழுதுக
இருவரும் கூடி ஒருபயன் ஆய்த்து என்று
அருளினை இவ்வாறு அபேதிகள் நிலையே

சிவகதியைப் பற்றி நீ கூறிய கருத்துக்களைப் பின்னர் ஆராய்வோம். உயிர் தொன்று தொட்டு அறிவாக விளங்கும் என்றால் கருவி கரணங்களும் அவற்றினால் நுகரப்படும் பொருள்களும் நீங்கிய காலத்து உயிர் அறிவுடையதாக இல்லையே அது ஏன்? வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் வாயிலிட்டு மென்றால் அவை மூன்றும் கூடிய விடத்துப் புதியதோர் சிவப்பு நிறம் தோன்றுவது போலப் பொறி புலன்கள் உயிரோடு கூடுவதால் அறிவு தோன்றி அவை கூடாவிடத்து மறையும் என்று கூறினாய். இது பவுத்தர்கள் கூறும் கணபங்கம் அதே நேரத்தில் கேவல நிலையில் உயிருக்கு அறிவு இல்லை என்று சொல்லுவது முன்னொடு பின் முரணாகுவது மட்டுமின்றி மலைவும் தரும்.

எனவே பெரியோர் இதனை ஏற்றுக் கொள்வார். ஆணவம் செறிவான இருளாக இருப்பது. இறைவன் பேரொளிப் பிழம்பானவன். உயிர் சற்றே அறிவினைப் பெறுவதற்காக இறைவனால் கூட்டப் பெற்ற கலை முதலிய தத்துவங்கள் மயக்கஞ் செய்வன. கேவல நிலையில் அழுந்திக் கிடந்த உயிரினிடத்துக் கலை முதலியன எவ்வாறு வந்து பொருந்தின?

கருவிகளோடு பொருந்தி அறியினும், கருவிகளின் நீங்கி அறிவற்று இருப்பினும் எவ்வாறாயினும் ஆகுக முத்திக்கு வழி என்று நீ கூறிய சாதனமும் ஆராய்தற்குரியது. முத்திக்குரிய காரணம் என நீ கூறியது சத்திநிபாதமா அல்லது மல பரிபாகமா கூறுக, மல பரிபாகம் காரணம் என்னில் அது கால எல்லையில் நிகழுமா? அன்றி உடம்பின் எல்லையில் நிகழுமா? நீடித்த வினையின் எல்லையில் வருமா? அல்லது மாறி மாறிப் பிறந்து வரும் உயிர் பிறப்புத் துயரத்தை உணர்ந்த எல்லையில் வருமா? அல்லது இறைவன் மனமிரங்கி அருள் பாலிக்கின்ற எல்லையில் வருமா? இவ்வைந்தனுள் எப்போது சத்தி நிபாதம் நிகழும் என்பதைக் கூறுக.

பெரியோர், அந்நிலை இருவினையொப்பு நிகழ்ந்த காலத்தில் கை கூடும் என்று கூறுவர் என நீ விடை தந்தால், இருவினை என்பது அருவம். அவற்றைக் கணக்கிட்டுக் கூறுதல் இயலாது. அல்லாமலும் ஒரு வினையைச் செய்கின்ற போது அவ்வினை இரண்டு பயன்களைத் தருவதில்லை. நல்வினைக்குப் பயன் புண்ணியம் தீவினையின் பயன் பாவம். மாறுபட்ட இந்த இரண்டும் நேர் ஒத்துப் போதல் என்பது எவ்வாறு கூடும்?

மேலும், ஆசிரியர் அருள் வடிவன் என்ற கொள்கையை உடையவனாகிய நீ அவன் வடிவம் கொண்டு தோன்றுவான் என்று கூறினாய். இறைவன் ஆசிரியனாக எழுந்தருளுகின்றபோது அவன் மாயையின் காரியங்களாகிய மேனியைத் தரித்துக் கொள்ளமாட்டான். மாயையால் உண்டான உடலை அவன் தரித்துக் கொண்டான் என்று கூறுவது நம்மில் ஒருவனாக அவனைக் கருதுகின்ற குற்றத்தைத் தரும்.

சரியை, கிரியை, யோகம் என்ற மூன்று நிலைகளிலும் உயிர்கள் பயின்று வந்தமை காரணமாக உயிர் ஞானத்தைப் பெறும் என்றாய். இம் மூன்று வகைத் தொண்டுக்கும் சாலோகம், சாமீபம், சாரூபம் என்ற மூன்று பதமுத்திகள் நூல்களின் சொல்லப்பட்டுள்ளனவே, அதனை நீ விளக்கி ஆதல் வேண்டும்.

திருஞானசம்பந்த நாயனார் கிரியை நெறியில் நின்றவர் என்பர். சுந்தரமூர்த்தி நாயனார் யோக நெறியில் நின்றவர் என்பர். திருநாவுக்கரசு நாயனார் சமண சமயத்தில் குறுகி அதன் பின்னர் சிவபெருமான் திருவருளால் சைவ சமயத்தைச் சார்ந்து சரியைத் தொண்டு ஆற்றினார் என்பர். இம் மூவர் முதலிகளும் ஒரு வகைத் தொண்டே புரிந்து மாயை மற்றைய இரண்டு வகைத் தொண்டும் இயற்றாது இருந்தும், ஞானத்தைப் பெற்றுச் சிவபெருமான் திருவடியை அடைந்தனர். இதனால் உன் கூற்றுப் பொருந்துவதில்லை. எனவே குற்றமற்ற மூன்று வகைத் தொண்டுகளும் ஞானத்தின் தோற்றத்திற்குக் காரணம் என்று கொள்ளாமல் ஞானத்தை நோக்கி இட்டுச் செல்வன என்று கூறுவதே பொருந்தும் என அறிக.

உயிருக்குச் சகல அவத்தையைத் தருகின்ற கலை முதலிய கருவிகளும் உயிருக்குக் கேவல நிலையைத் தருகின்ற ஆணவ மலமும் நீங்குமாறு கருவிகளோடு கூடாமையால் உயிர் அறிவற்று இருக்கும் என்பதும் சகல நிலையில் சிவப் பேரறிவு உண்டாகாது என்பதும் உன் கொள்கைகள். வேறு அவத்தைகளை உன் கொள்கையில் நீ உடன் படுவதில்லை. அப்படியாயின் எந்த அவத்தையில் உயிர்களாகிய யாம் சிவஞானத்தை அடைவோம்?

உன் கொள்கைப்படி தெளிந்த சிவஞானம் என்பது உடல் கருவி உலகு நுகர்ச்சிப் பொருள் ஆகியவற்றின் வழியாக வருகின்ற அறிவாகும். அவ்வாறாயின் அது மாயையின் நால்வகை வாயில்களின் மூலமாக வருகின்ற ஞானமேயன்றி வேறில்லை. இவற்றை விடுத்து மேல் நிலை எய்தியவருக்கே சிவஞானம் கிட்டும் எனக் கூறினால் அத்தகைய ஞானிகள் உலகத்திலே இல்லை.

உன் கொள்கைப் படி உயிரும் சிவஞானமும் சிவமும் என மூன்று பொருள்களை எடுத்துரைத்தாய் உயிரின் ஞானமும் பாசமும் பாச ஞானமும் என்கின்ற இவற்றையும் பெரியோர் கூறுவர். ஆகவே பதி பசு பாசம் என்ற மூன்றனுக்கும் பதிஞானம் பசுஞானம் பாசஞானம் என்ற மூவித அறிவுகள் உளவாதல் வேண்டும். நீ கூறிய முத்திப் பேற்றில் உயிர் சிவஞானத்தோடு இயைந்து சிவமாய்ப் போகும் என்றாய் அந் நிலையல் பசுஞானமும் பாசமும் என்னவாகும் என்பதனைக் கணக்கிட்டுக் கூறுக,. அல்லாமலும் உயிரும் சிவமும் கூடி ஒன்றாய்ப் போயின என்று நீ கூறுவது கட்டு நிலையில் இரண்டாகவும் வீட்டு நிலையில் ஒன்றாகவும் இருப்பன என்ற மாயாவாதியின் கூற்றாக முடியும்.

அடைகாய்வெற்றிலை பாக்கு. நூறின்நொறுங்குமாறு மென்றால். இந்தியத் தொகைஇந்திரியங்களின் தொகை. கலாவதிகலையில் எல்லை. காயாவதிஉடம்பின் எல்லை. அவதிஎல்லை முடிவு. சிரபுரச்சிறுவர்திருஞான சம்பந்த நாயனார். அரசராய தருணத் தலைவர்சுந்தர மூர்த்தி நாயனார். அரசர்திருநாவுக்கரசு நாயனார். செலவுகள் எழுதுககணக்கிட்டுக் கூறுக. அபேதிகள்மாயா வாதிகள். ஏகான்ம வாதம் கூறுவோர்.

சித்தாந்த சைவாசாரியார் அநுக்கிரகம்

பதிபசு பாசம் முதிர் அறிவுகளுடன்
ஆறா முன்னர்க் கூறாப் பின்னர்
இருபொருள் நீத்துமற்று ஒருநால் வகையும்
ஈனம்இல் ஞாதுரு ஞானம் ஞேயம் என்று
இசைய மூன்றாய்ப் பசுபதி என்றவற்று

இரண்டாய் இரண்டும் ஒன்றின் ஒன்று ஆகத்
திரண்டுஆம் பயன்எனும் திருவருள் தெளியில்
சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம்
என்றுஇறை இயற்கை இயம்புதல் தகுமே
ஒன்றாம் என்றல் அன்றியும் உவப்பும்

இன்றாம் என்றால் என்பயன் இயம்புக
என்றனை வினவும் யாவும் விளங்க
வென்றிகொள் கருத்தில் விரும்பினை ஆயின்
நதிக்கரை ஆன்எனக் கொதித்தல் மறந்து
வெண்ணெய் அம்பதி திகழ் மெய்கண்டவன் அருள்

உள்நிலை உடையோன் ஒருவன் உரைத்த
தவப்பிர காசத் தன்மையில் விரித்த
சிவப்பிர காசச் செழுந்தமிழ் உண்மையை
அருளுடன் ஆய்ந்து கொள்ளத்
திருவருள் வினவல் திருந்திடும் அன்றே

முதலில் இறை உயிர் தளை ஆகிய மூன்றனையும் அவற்றுக்கு உரியனவாகிய பதிஞானம் பசுஞானம் பாசஞானம் ஆகிய மூன்றினுடன் கூட்டிப் பொருள்களை ஆறு எனக் கூறினாய். அதன் பின்னர் பாசத்தையும் பாச ஞானத்தையும் விலக்கிவிட்டுப் பொருள்களை நான்கு என்றாய். அதன் பிறகு பசு ஞானத்தையும் விட்டுவிட்டு அறிபவன் அறிவு அறியப்படு பொருள் என்று வகைப்படுத்துவதற்கேற்பப் பொருள்கள் மூன்று எனக் கூறினாய். அதன் பின்னர் சிவஞானத்தையும் அந்த மூன்றிலிருந்து நீக்கி விட்டுப் பதி பசு என்கின்ற பொருட்கள் இரண்டே என்றாய். இந்த இரண்டும் ஒன்றாகக் கூடி அதாவது சிவத்தோடு உயிர் கலந்து சிவம் ஒன்றே மிஞ்சியிருக்கும். இதுவே முத்தி நிலை என்றாய்.

திருவாசகத்தில் சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம் என்ற பாடல் உனக்கு ஆதாரம் என்று நீ தவறாகக் கருதினாய் போலும். அதன் உண்மைப் பொருள் வேறு என்று அறிவாயாக.

முத்தி நிலையில் உயிரும் சிவமும் ஒன்றாகிவிடும் என்றது மட்டுமின்றி அந்நிலையில் உயிருக்கு இன்பமும் இல்லை என்று கூறினாய். அப்படியானால் முத்தி நிலையில் உயிருக்கு விளைகின்ற பயன்தான் என்ன? கட்டு நிலையிலிருந்து விடுபட்ட முத்தி நிலை பயனற்றது என்று கூறுவது எவ்வகையிலும் பொருந்துவது அன்று.

அவ்வாறு எனில் சிவபெருமானின் திருவருள் என்பதும், அதன் தன்மையும் முப்பொருள்களின் இயல்பும், கட்டு நிலை முத்தி நிலை என்பனவும் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்று நீ விரும்பினால் அதற்கு உனக்கு வழி காட்டுவேன். ஆற்றங்கரையிலே சென்று பசிய புல்லை உண்பதற்காகத் தேடுகிற பசு ஒவ்வோர் இடமாகச் சென்று மேய்வதைப் போல நீ அலமருவதை விடுத்து, திருவெண்ணெய் நல்லூரிலே திகழ்ந்து விளங்கிய மெய்கண்டதேவ நாயனாரின் திருவருளினால் உண்மை உணர்ந்த மரபிலே வந்த, தவப் பயன் கைவந்த ஒருவர்(உமாபதிசிவம்) விரித்துரைத்த சிவப்பிரகாசம் என்னும் செழுந் தமிழ் நூலின் உண்மையைத் தக்க ஞானாசிரியரிடம் பயின்று திருவருளைத் தெளிய உணர்வாயாக.

இங்கே கூறப்பட்ட திருவாசகப் பாடல்,

இன்று எனக்கு அருளி இருள் கடிந்து உள்ளத்து
எழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயலால் பிறிது மற்று இன்மை
சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து
ஒன்றாம் திருப்பெருந்துறை உறை சிவனே  
ஒன்றும் நீ அல்லை அன்றி ஒன்றில்லை
யாருன்னை அறியகிற் பாரே

என்பது. இந்தப் பாடலில் இறைவன் எல்லாப் பொருள்களிலும் நிறைந்திருக்கிறான் என்பதும், அப்படி நிறைந்திருப்பினும் அப்பொருள்கள் எல்லாம் அவனாக மாட்டா என்பதும் மாணிக்க வாசகப் பெருமானால் எடுத்துரைக்கப் பட்டது. ஒன்றும் நீ அல்லை; அன்றி ஒன்றும் இல்லை யார் உன்னை அறிதற்கு இயலும் என்று வினவுகிற பாடலின் கடைசி அடி இதன் கருத்தைத் தெளிவுறுத்தும் எனவே மாணிக்க வாசகரின் திரு உள்ளம் இறைவனின் இயல்பினை உணர்த்துவதே அன்றி உள் பொருளாவன யாவை என்ற வினாவிற்கு விடையிறுப்பது அன்று. ஆயினும் ஏகான்ம வாதம் பேசுவோர் சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம் என்ற பாடற் பகுதியைத் தமக்கு ஏற்ப மாற்றிப் பொருள் கொண்டு உள் பொருள் ஒன்றே என்ற பிழைபடப் பொருள் காண்பர். அதுதவறு என்பதற்குச் சங்கற்ப நிராகரணத்தில் இப்பாடல் இறைவனின் இயற்கையை இயம்புகிறது என்ற உண்மையை எடுத்துக் காட்டினார் ஆசிரியர் உமாபதி சிவம்.

இதுவரை அகச் சமயங்களும் மாயாவாதமும் கொள்ளுகின்ற கருத்தினை எடுத்துரைத்து மறுத்து வந்த ஆசிரியர் சைவ சித்தாந்தத் தெளி பொருள் சிவப்பிரகாச நூலில் விளங்க உரைக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டி இந்நூலை நிறைவு செய்கிறார்.

திருச்சிற்றம்பலம்.

நன்றி: சி.சு.மணி

 
மேலும் சங்கற்ப நிராகரணம் »
மெய்கண்ட நூல்கள் பதினான்கினுள் இறுதியில் வைத்து எண்ணப்படுவது சங்கற்ப நிராகரணம். ஆசிரியர் உமாபதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar