Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உண்மை விளக்கம் பகுதி - 7 உண்மை விளக்கம் பகுதி - 9
முதல் பக்கம் » உண்மை விளக்கம்
உண்மை விளக்கம் பகுதி - 8
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2013
03:11

சாதனம்

திருவைந்தெழுத்து
மந்திரங்களுள் தலையாயது

மந்திரம் என்பதற்கு நினைப்பவரைக் காப்பது என்பது பொருள். நினைப்பவரைக் காப்பது இறைவனது திருவருளேயன்றி வேறொன்று அன்று ஆதலால் உண்மையில் மந்திரமாய் இருப்பது திருவருளே. ஆயினும் அது சொற்களையும் சொற்றொடர்களையும் தனக்கு இடமாகக் கொண்டு அவற்றின் வாயிலாகவே புத்தி, முத்தி ஆகிய பயன்களைத் தருதலால், அச்சொற்களும் சொற்றொடர்களும் உபசார முறையில் மந்திரங்கள் எனப்படுகின்றன. மந்திரங்களுள் தலையாயது திருவைந்தெழுத்து ஆகும். அது ஞானத்தைத் தரும் மறைமொழியாகும். வடமொழியில் அது பஞ்சாக்கரம் எனப்படும். முந்திய பகுதியில் திருவைந்தெழுத்து சிவனது உருவமாய் உள்ள நிலையை அறிந்தோம். இப்பகுதியில் திருவைந் தெழுத்தின் பொருள் நிலையையும், அதனை ஓதும் முறையையும் உணர்த்துகிறார் ஆசிரியர்.

திருமுறைகளில்

நகாரம் முதலாக அமைவது தூல பஞ்சாக்கரம் எனப்படும். திருமுறைகளில் நமச்சிவாய என்னும் இத்தூல பஞ்சாக்கரமே மிகுதியாக எடுத்தோதப்பட்டுள்ளது. நமச்சிவாய என்று இடையில் மெய்யெழுத்தை மிகுத்துச் சொன்னாலும் மெய்யெழுத்து எண்ணப்படாமல் எழுத்து ஐந்து என்றே கொள்ளப்படும். இனி, சிகாரம் முதலாக அமைவது சூக்கும பஞ்சாக்கரம் எனப்படும். திருமுறைகளில் சிவாயநம என்னும் இச் சூக்கும பஞ்சாக்கரம் சிறுபான்மையாகச் சில இடங்களில் எடுத்தோதப்பட்டுள்ளது. நாலாந் திருமுறையில் ஈன்றாளுமாய் என்னும் திருப்பதிகத்தில்

சித்தம் ஒருக்கிச் சிவாயநம என்று இருக்கினல்லால்
அத்தன் அருள்பெற லாமோ, அறிவிலாப் பேதை நெஞ்சே

எனவும்,

திருவாய் பொலியச் சிவாயநம என்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே

எனவும், எட்டாம் திருமுறையில் திரு ஏசறவு என்னும் பகுதியில்

நானேயோ தவம் செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன் எனவும் வரும் இடங்களைச் சுட்டலாம்.

திருவைந்தெழுத்தின் பொருள் நிலை

திருவைந்தெழுத்து மந்திரத்தை சிகாரம் முதலாகக் கொண்டு நோக்கினால் அம்மந்திரம் மூன்று கூறாய் நிற்பது புலனாகும்.

சிவா என்பது முதற்கூறு.
ய என்பது இரண்டாம் கூறு
நம என்பது மூன்றாம் கூறு

சிவா என்பது பதியையும், ய என்பது பசுவையும், நம என்பது பாசத்தையும் குறிக்கும். முதற் கூறில் உள்ள சிகாரம் சிவனையும் வா என்பது அவனது அருட்சத்தியையும் குறிக்கும். மூன்றாம் கூறில் உள்ள மகாரம் ஆணவத்தையும், நகாரம் திரோதான சத்தியையும் குறிக்கும். மாயை கன்மங்கள் திரோதான சத்திக்குக் கருவியாய் அதன் வழிபட்டு நிற்றலின் அதனுள் அடங்கும். நடுவில் உள்ள ய ஆகிய உயிர் இருபக்கமும் சென்று பாசத்தோடும் பதியோடும் நிற்கும் தன்மையுடையது. யகாரம் ஆகிய உயிர் பின்னுள்ள மகாரம் ஆகிய ஆணவ மலத்துட்பட்டு அறியாமையில் அழுந்தியும், நகாரம் ஆகிய இறைவனது திரோதான சத்தியால் செலுத்தப்பட்டு மாயை கன்மங்களைப் பொருந்தி உலக நுகர்ச்சியில் அழுந்தியும் வரும். எனவே, நம ஆகிய ஈரெழுத்துக்களும் முறையே சகல நிலையையும் கேவல நிலையையும் குறிக்கின்றன என்பது புலனாகும். உயிர் நம வில் அழுந்தியிருக்கும் நிலையே கட்டு நிலையாகும். ய ஆகிய உயிருக்கு முன்னுள்ள சி, வா என்பவை தந்தையும் தாயுமாய் உள்ள சிவமும், அதனைப் பிரியாத திருவருளும் உயிருணர்வில் உடன் கலந்திருப்பதை உணர்த்தும். உயிர் தனக்கு முன்னாக உள்ள அம்மையப்பரைத் தன் அறிவின்கண் காண முற்படாமல், உலகத்தை மட்டுமே அறிந்து அனுபவித்து வருகிறது. உயிர் நம வை விடுத்து, வா ஆகிய திருவருளைச் சார்ந்து நிற்பதே சுத்த நிலையாகும். திருவருள் உயிரைச் சிவத்திடம் சேர்ப்பிக்கும். உயிர் சிவத்தில் அழுந்தி நிற்பதே இன்புறு நிலையாகும்.

பஞ்சாக்கரத்தின் வகைகள்

தூல பஞ்சாக்கரம், சூக்கும பஞ்சாக்கரம் என்பவற்றின் பெயர்க் காரணத்தைப் பின்வருமாறு சொல்லலாம். திருவைந்தெழுத்தை நகாரம் முதலாகச் சொல்லுங்கால் அது ஒரு தொடர் மொழியாய் நின்று சிவனுக்கு வணக்கம் என்னும் ஒரு பொதுப்பொருளையே தந்து நிற்றலால் தூல பஞ்சாக்கரம் எனப்படுகிறது. சிகாரம் முதலாகச் சொல்லுமிடத்து ஒவ்வொர் எழுத்தும் ஒவ்வொரு நுண் பொருளைக் குறித்து, உயிர் பாசங்களின் நீங்கித் திருவருள் வழியாகச் சிவத்தை அடைதல் வேண்டும் என்னும் சிறப்புப் பொருளைத் தந்து நிற்றலால் அது சூக்கும பஞ்சாக்கரம் எனப்படுகிறது. தூல பஞ்சாக்கரம் சமய தீக்கையிலும், சூக்கும பஞ்சாக்கரம் விசேட தீக்கையிலும் உபதேசிக்கப்படும் விசேட தீக்கை பெறுவோர் உலகியல் பற்று ஓரளவேனும் நீங்கியவராய் இருத்தல் வேண்டும். இதனால் சரியையில் நிற்போர் திருவைந்தெழுத்தை நகாரம் முதலாக உச்சரித்தல் வேண்டும் என்பதும், கிரியையிலும் யோகத்திலும் நிற்போர் சிகாரம் முதலாக உச்சரித்தல் வேண்டும் என்பதும் விளங்கும்.

இனி, உலகப்பற்று அற்று ஞானத்தில் வேட்கை கொண்டு ஞானநெறியிற் செல்லும் பக்குவர்க்கு உரியது முத்தி பஞ்சாக்கரம். நகாரம் மகாரம் ஆகிய பாச எழுத்துக்கள் நீங்க நிற்கும் சிவாய என்னும் மூன்றெழுத்தே முத்தி பஞ்சாக்கரம் எனப்படும். அதிசூக்கும பஞ்சாக்கரம் என்றும் கூறப்படும். ஞானாசிரியர் நிருவாண தீக்கை செய்து ஐந்தெழுத்தை இங்குக் கூறியவாறு மூன்றெழுத்தாக வைத்து உபதேசிப்பார். அவ்வுபதேசத்தைப் பெற்ற பக்குவ ஆன்மா அம்மூன்றெழுத்தை மட்டுமே மந்திரமாகக் கொண்டு, அதன் பொருளில் தன் அறிவை இடைவிடாது நிறுத்தி அப்பொருளை உணர்ந்து உணர்ந்து நிற்கும். அதனால் வினை நீங்கும். வினை நீங்கவே திருவருள் இனிது விளங்கும். திருவைந்தெழுத்தைப் பற்றி இது காறும் கூறிய விளக்கத்தைக் கருத்திற் கொண்டு இனிச் செய்யுட்களை நோக்குவோம்.

அஞ்செழுத்தைப் பற்றிய ஐயம்

39. நாதாந்த நாடகத்தை நன்றா அருள்செய்தீர்
ஓதீர் எழுத்து அஞ்சும் உள்ளபடி  தீதுஅறவே
அஞ்சு எழுத்துஈது ஆகில் அழியும் எழுத்து ஆய்விடுமோ
தஞ்ச அருள்குருவே சாற்று.

பதவுரை

தஞ்ச     அடியேனுக்குப் புகலிடமாக உள்ள
அருட்குருவே     அருள் உருவாகிய குருமுதல்வரே,
நாத அந்த     நாதம் முடிவாக உள்ள முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த
நாடகத்தை     திருக்கூத்தின் இயல்பை
நன்றா     யான் தெளியும் படி
அருள்செய்தீர்     உணர்த்தினீர்.
தீது அறவே     (இனி) மலவாதனை கெடும்படி
எழுத்து அஞ்சும்     திருவைந்தெழுத்தின் பொருள் நிலையை
உள்ளபடி     உள்ளவாறு
ஓதீர்     உணர்த்தியருள வேண்டும்.
ஈது அஞ்செழுத்து ஆகில்  இறைவனது திருப்பெயராகிய இஃது ஐந்து எழுத்து எனப்படுமாயின்
அழியும் எழுத்தாய் விடுமோ  மற்ற எழுத்துக்கள் போல இவையும் அழியும் தன்மை உடையன ஆகுமோ?
சாற்று     கூறியருள்வீராக.

பொழிப்புரை

அடியேனுக்குப் புகலிடமாக உள்ள அருட்குருவே, அம்பலவாணர் ஆடும் திருக்கூத்தின் இயல்பை யான் தெளியும்படி உணர்த்தியருளினீர். இனி, திருவைந்தெழுத்தின் பொருள் நிலையை உள்ளவாறு உணர்த்தியருள வேண்டும். இறைவனது திருப் பெயர் எனப்படும் ஐந்தெழுத்து ஏனைய எழுத்துக்கள் போல அழியும் தன்மை உடையன ஆகுமோ? இவ் ஐயத்தை நீக்கியருள வேண்டும் என்று மாணவர் வேண்டுகிறார்.

அழியா எழுத்து

40. உற்ற குறிஅழியும் ஓதுங்கால் பாடைகளில்
சற்றும் பொருள்தான் சலியாது  மற்றுஅது கேள்
ஈசன்அருள் ஆவி எழில்ஆர் திரோதமலம்
ஆசுஇல் எழுத்து அஞ்சின் அடைவு ஆம்

பதவுரை

ஓதுங்கால்      ஆராய்ந்து சொல்லுமிடத்து
பாடைகளில்     மொழிகளில்
உற்ற     பொருளுக்கு அமைந்த
குறி     பெயராகிய குறி
அழியும்     அழிந்து போகும். பொருள்களும் அங்ஙனமே.

(ஆனால் சிவனது பெயராகிய அஞ்செழுத்து அழியா இயல்பினது. அவ்வாறே)

பொருள்தான்     அஞ்செழுத்தால் உணர்த்தப்படும் பொருளும்
சற்றும்     சிறிதும்
சலியாது     அழிவதில்லை
மற்று அது கேள்     அவ்வஞ்செழுத்தின் பொருள் நிலையைக் கேட்பாயாக.
ஈசன்     சிவனும்
அருள்     திருவருளும்
ஆவி     உயிரும்
எழிலார் திரோதம்  எழுச்சியுள்ள மறைத்தற் சத்தியும்
மலம்     மூல மலமும்
ஆசு இல்     குற்றமில்லாத
எழுத்து அஞ்சின்     திருவைந்தெழுத்தின்
அடைவு ஆம்     பொருள்களாம்.

பொழிப்புரை

பெயர்கள் யாவும் எழுத்துக்களால் ஆனவை. எழுத்துக்கள் தோற்றமும் இறுதியும் உடையன. ஆகவே அனைத்துப் பெயர்களும் தோன்றி அழிவன ஆகின்றன. ஆனால் சிவ நாமமாகிய ஐந்து எழுத்துக்கள் ஏனைய எழுத்துக்கள் போல் ஆவன அல்ல. அவை அழியா இயல்பின. அவற்றால் குறிக்கப்படும் பொருள்கள் சிவனும், திருவருளும், உயிரும், திரோதான சத்தியும், மலமும் ஆகும்.

விளக்கம்

திருவைந்தெழுத்தைச் சிகாரம் முதலாக வைத்து இப்பொருள்களைக் கண்டு கொள்க.

நிற்கும் முறை, ஓதும் முறை

41. சிவனருள் ஆவி திரோதம்மலம் ஐந்தும்
அவன் எழுத்து அஞ்சின் அடைவாம்  இவன்நின்று
நம்முதலா ஓதில் அருள் நாடாது நாடும் அருள்
சிம்முதலா ஓதுநீ சென்று

பதவுரை

சிவன் அருள் ஆவி திரோதம் மலம் ஐந்தும்  மேற்கூறியபடி சிவன், திருவருள், உயிர், மறைத்தற் சத்தி, மூல மலம் ஆகிய ஐந்தும்
அவன் எழுத்து அஞ்சின்                   அச்சிவனது பெருநிலையை நினைப்பிக்கும் ஐந்தெழுத்தின்
அடைவு ஆம்                       பொருளாகும்
இவன்                       சாதகன்
நின்று                       உலகியலில் நின்று
ந முதலா ஓதில்                       நகாரத்தை முதலாக வைத்து ஓதும் முறையை மேற்கொண்டால்
அருள் நாடாது                       அவனது உணர்வில் திருவருள் வெளிப்படாது.
        (ஆதலால்)
நீ                      திருவருளைத் தலைப்பட விரும்புகின்ற நீ
சென்று                     உலகியலின் நீங்கிச் சென்று, வீட்டு நெறியில் உன் உணர்வை முழுதும் ஈடுபடுத்தி நின்று
சி முதலா ஓது                     சிகாரத்தை முதலாக வைத்து ஓதுவாயாக.
அருள் நாடும்                     அப்போது திருவருள் பாசமாம் பற்றை அறுத்து உன் உணர்வில் வெளிப்பட்டுத் தோன்றும்

பொழிப்புரை

மேற்கூறியபடி திருவைந்தெழுத்தில் ஒவ்வோர் எழுத்திற்கு ஒவ்வொரு பொருள் அமையும். திருவருளைப் பெற விரும்புவோன் உலகியலில் நின்று நகாரத்தை முதலில் வைத்து ஓதினால் திருவருள் வெளிப்படாது. உலகியலிலிருந்து நீங்கி, வீட்டு நெறியில் அறிவை நெறிப்படுத்தி நின்று, சிகாரத்தை முதலில் வைத்து ஓதினால் திருவருள் உன் உணர்வில் வெளிப்பட்டுத் தோன்றும். ஆகலின் நீ அவ்வாறு நின்று, அவ்வாறு ஓதுக.

விளக்கம்

நகாரம் முதலாக வைத்து ஓதுவார்க்கு உலகப் பயன் கிடைக்கும். உலகப் பயனில் நாட்டமின்றிப் பிறவி நீக்கத்தை வேண்டுவோர் சிகாரம் முதலாக ஓதுதல் வேண்டும் என்பது இங்கு உணர்த்தப்பட்டது.

பயன்

42. அண்ணல் முதலா அழகுஆர் எழுத்துஐந்தும்
எண்ணில் இராப்பகல் அற்றஇன்பத்தே  நண்ணி
அருளானது சிவத்தே ஆக்கும் அணுவை
இருளானது தீர இன்று

பதவுரை

அழகு ஆர்     மெய்யுணர்ந்தோர் விரும்பும் தன்மை உடைய
எழுந்து ஐந்தும்     திருவெழுத்து ஐந்தையும்
அண்ணல் முதலா  அண்ணலாகிய சிவ பெருமானைக் குறிக்கும் சிகாரம் முதலாக வைத்து
எண்ணில்     எண்ணி வந்தால்
அருளானது     அந்நிலையில் வெளிப்பட்டுத் தோன்றும் திருவருள்
அணுவை     உயிரை
இராப் பகல் அற்ற  கேவலமும் சகலமும் நீங்கிய
இன்பத்தே     இன்ப ஒளி தோன்றும் அருள் நிலையில்
நண்ணி     நண்ணவைத்து,
இன்று     அப்பொழுது
இருளானது     ஆணவ மலத்தின் வாசனை
தீர     பற்றறக் கழிய,
சிவத்தே     முடிநிலையாகிய சிவானந்தத்தை
ஆக்கும்     நுகரச் செய்யும்.

பொழிப்புரை

திருவெழுத்து ஐந்தையும் அண்ணலாகிய சிவனைக் குறிக்கும் சிகாரம் முதலாக வைத்து இடையறாது எண்ணி வந்தால், திருவருள் வெளிப்பட்டு உயிரைக் கேவலமும் சகலமும் நீங்கிய அருள் நிலையில் சேர்க்கும்; எல்லையற்ற சிவானந்தத்தை நுகரச் செய்யும்; அந்நிலையில் இருளான ஆணவ மலம் பற்றறக் கழியும்.

விளக்கம்

இராப்பகல் அற்ற இடம்

அறியாமையைக் கேவலம் என்றும், அறிவுநிலையைச் சகலம் என்றும் நூல்கள் குறிப்பிடும். மேலும், அறியாமையாகிய கேவலத்தை இரவு என்று குறியீட்டினாலும், அறிவு நிலையாகிய சகலத்தைப் பகல் என்ற குறியீட்டினாலும் உணர்த்தும். புறவுலகில் இரவும் பகலும் மாறி மாறி வருவதைப் போல உயிருணர்வில் கேவலமும் சகலமும் ஆகிய  அறியாமையும் அறிவும் ஆகிய இரவும் பகலும் மாறி மாறி வருகின்றன. உயிருக்கு அமைந்த சார்புகள் இரண்டு. ஒன்று, அசத்தாகிய கருவி கரணங்களின் சார்பு. மற்றொன்று, சத்தாகிய திருவருட் சார்பு. அசத்தாகிய ஐம்பொறி முதலிய கருவிகளின் சார்பு இடையில் வந்தது. ஆகவே அஃது உயிருக்குச் செயற்கையான சார்பாகும். திருவருட் சார்பே என்றும் உள்ள இயற்கையான சார்பாகும்.

செயற்கையாகிய கருவிகளின் சார்பு நீங்கினால் அப்பொழுதே உயிர் திருவருட் சார்பைப் பெற்றுவிடும். மனம் முதலிய கருவிகள் நம்மோடு எப்போதும் உடனாகவே நிற்கின்றனவே; அவற்றை விட்டு நீங்குவது எப்படி? என வினவலாம். இங்கே, நீங்குதல் என்றால் அறிவால் நீங்குதல் ஆகும். அஃதாவது, கருவி கரணங்கள் நமக்கு வேறானவை எனத் தெளிய உணர்ந்து, அவற்றினிடத்துப் பற்றுச் செய்யாது, அவற்றின் வசப்படாது நிற்றலாகும். இங்கு ஓர் ஐயம் எழலாம். ஐம்பொறி, மனம் முதலிய கருவிகள் நீங்கினால் உயிர் யாதொன்றையும் அறியமாட்டாது கேவலமாகிய அறியாமையை அல்லவா தலைப்படும்? கருவிகள் நீங்க நீங்க உயிர் உறக்கம் பேருறக்கம் முதலிய நிலைகளை அடைவது இதைத்தானே காட்டுகிறது. அங்ஙனமாக, உயிர் கருவிகளை நீங்கினால் திருவருட் சார்பைப் பெறும் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? என்பதே அவ் ஐயம்.

ஓர் உண்மையைத் தெரிந்து கொண்டால் இவ்ஐயம் நீங்கிவிடும். கருவிகள் சோர்வுற்றுச் செயற்படாமல் மடங்கித் தாமாகவே நீங்கும் பொழுதுதான் உயிருக்கு அறியாமை உண்டாகும். அவ்வாறின்றிக் கருவிகள் நன்கு செயற்படும் பொழுது, அவை நாமல்ல; நமக்கு வேறானவை என்று கண்டு நீங்கினால், அவற்றின் வசப்படாது நின்றால் உயிர் திருவருளைச் சேர்ந்து விடும். இங்ஙனம் கருவிகளையும், அவற்றால் வரும் புலன் உணர்வுகளையும் நீங்கி உயிர் திருவருளைச் சேர்ந்து நிற்றலையே இரவு பகல் அற்ற இடத்தில் இருப்பதாக நூல்கள் கூறும். திருவருட் சார்பு இரவு பகலற்ற இடமாதல் எப்படி என்பதை நோக்குவோம். உயிர் திருவருள் ஒளியில் நிற்கும் பொழுது அறியாமையாகிய கேவலம் எப்படித் தலைகாட்டும்? ஆகவே அஃது இரவு என்பது நீங்கிய இடம் ஆகிறது. அதுகாலை கருவிகள் செயற்பட்டுச் சிற்றறிவைத் தருமாயினும் திருவருளால் வியாபக அறிவு விளங்கிய பிற்பாடு அச்சிற்றறிவு என்ன பயனைச் செய்யும்? எல்லாவற்றையும் விளங்கக் காட்டும் சூரியவொளி வந்த பின்னர் எரிகின்ற விளக்கின் சுடர் போன்றது அச் சிற்றறிவு எனலாம். உயிர் பேரறிவாகிய திருவருள் ஒளியில் நிற்கும் பொழுது சிற்றறிவாகிய சகலம் எப்படித் தலைகாட்டும்? ஆகவே அது பகல் என்பது நீங்கிய இடமாகிறது. இவ்வாறு திருவருள் ஞானத்தால் உயிர்க்கு அறியாமையும், சிற்றறிவும் நீங்கி விடுதலால் திருவருட் சார்பு இரவு பகலற்ற இடம் எனக் கூறப்படுகிறது. இதனையே இச்செய்யுள் இராப் பகலற்ற இன்பத்தே எனக் குறிப்பிடுகிறது.

இருள் நீக்கமும் இன்பத் தோற்றமும்

மேற்கூறியவாறு, உலக வாழ்வில் உள்ள போதே திருவருளில் அழுந்தி நிற்கும் நிலை துரிய அருள்நிலை எனப்படும். இந்நிலை முதல்வனது அருளைச் சேர்ந்த நிலையே தவிர, முதல்வனைச் சேர்ந்த நிலையாகாது. இதற்கு ஓர் உவமை கூறுவோம். கண் விளக்கொளியோடு கூடி அதனால் தன்னிடத்துள்ள இருள் நீங்கப் பெறுகிறது. அந்நிலையில் கண் விளக்கொளியைக் கண்டதேயன்றி விளக்கொளிக்கு முதலாய் உள்ள விளக்கைக் கண்டது ஆகாது. கண் முதலிற் கண்ட விளக்கொளி வழியாகப் பின்னர் விளக்கை நோக்கிக் காணும் போதே அது விளக்கைக் கண்ட காட்சியாகிறது. அதுபோல, உயிர் திருவருளோடு கூடிய நிலையில் அது திருவருளைக் கண்ட காட்சியே தவிரத் திருவருளுக்கு முதலாகிய சிவத்தைக் கண்ட காட்சியாகாது. உயிர் முதலிற் கண்ட திருவருள் வழியாகப் பின்னர் சிவத்தை நோக்கிக் காணும் போதே அது சிவத்தைக் கண்ட காட்சியாகிறது. கண் விளக்கொளியைச் சேர்ந்து அதனால் தன்னிடத்துள்ள இருளை நீக்கிக் கொள்வது போல உயிர் திருவருளைச் சேர்ந்து தன்னிடத்துள்ள ஆணவ மலமாகிய இருள் நீங்கப் பெறுகிறது. இதனையே, இருளானது தீர இன்று என்று குறிப்பிட்டது இவ்வுண்மை விளக்கச் செய்யுள்.

மேற்கூறிய கண் உவமையில், கண் பெறும் ஒளிவிளக்கமும், இருள் நீக்கமும் உடன் நிகழ்ச்சியாய் ஒருங்கு நிகழ்கின்றன. ஆயின் அவற்றோடு விளக்கினது காட்சியும் உடன் நிகழவில்லை என்பது அறியற்பாலது. அதுபோல, உயிரிடத்து அருள் விளக்கமும் ஆணவ மலமாகிய இருள் நீக்கமும் உடன் நிகழுமேயன்றிப் பேரின்பமாகிய ஆனந்த விளக்கம் உண்டாகாது. ஆனந்த விளக்கம் அருளின் வழியே அவ்வருளுக்கு முதலாய் உள்ள சிவத்தை அணைதலினாலேயே உண்டாகும். முன்னர் நிகழும் அருள் விளக்கத்தில் தோன்றுவது சுகப் பிரபை எனப்படும் இன்பத் தோற்றமே யன்றிப் பரம சுகம் எனப்படும் பேரின்பம் அன்று. இச்செய்யுளில், இராப் பகலற்ற இன்பத்தே நண்ணி என்ற வரியில் இன்பம் என்று குறிக்கப் பெறுவது இன்பத் தோற்றத்தை எனவும், அடுத்த அடியில் சிவத்தே ஆக்கும் என்றது பின்னர் விளையும் சிவானந்தமாகிய பேரின்பத்தை எனவும் கொள்ளுதல் வேண்டும். உயிர் திருவருளைச் சேர்தலினால் இருள் நீக்கமும் இன்பத் தோற்றமும் உண்டாகும் என்பதும், முடிவாகச் சிவத்தை அணைதலினால் பேரின்பத்தை நுகரும் என்பதும் இச் செய்யுளில் உணர்த்தப் பெற்றன.

முத்தி பஞ்சாக்கரம்

43. ஆதி மலம் இரண்டும் ஆதியா ஓதினால்
சேதியா மும்மலமும் தீர்வுஆகா  போதம்
மதிப்புஅரிதாம் இன்பத்தே வாழலாம் மாறி
விதிப்படி ஓதுஅஞ்சு எழுத்துமே

பதவுரை

ஆதி     திரோதான சத்தியைக் குறிக்கும் நகாரமும்
மலம்     மலத்தைக் குறிக்கும் மகாரமும் ஆகிய
இரண்டும்     இரண்டு எழுத்துக்களையும்
ஆதியா     முதலில் வைத்து
ஓதினால்     உச்சரித்தால்
சேதியா     எளிதில் அறுந்தெறிய முடியாத
மும்மலமும்     மும்மலங்களும்
தீர்வு ஆகா     அதனால் நீங்க மாட்டா.
    (ஆதலால்)
அஞ்செழுத்துமே     திருவைந்தெழுத்தை
மாறி     சிகாரம் முதலாக மாற்றி
விதிப்படி     பாசத்தை விட்டுப் பதியிலே சேர்தலாகிய அப்பொருளைத் தரும் முறையிலே முத்தி பஞ்சாக்கரமாகக் கொண்டு
ஓது     நீ உச்சரிப்பாயாக.
    (அங்ஙனம் உச்சரித்தால்)
போதம்     சீவ போதம் எனப்படும் சுட்டறிவினால்
மதிப்பரிதாம்     அளந்தறிதற்கு அரியதாகிய
இன்பத்தே     பேரின்ப வீட்டில்
வாழலாம்     நிலைத்து வாழும் பெருவாழ்வைப் பெறலாம்.

பொழிப்புரை

ஆதி எனப்படும் திரோதான சத்தியைக் குறிக்கும் நகாரமும், மலத்தைக் குறிக்கும் மகாரமும் ஆகிய இரண்டு எழுத்துக்களையும் முதலில் வைத்து ஓதினால், மும்மலங்களும் அவற்றால் உண்டாகும் துன்பங்களும் நீங்க மாட்டா; ஆதலால் சிகாரம் முதலாக மாற்றி முத்தி பஞ்சாக்கரமாகக் கொண்டு விதிப்படி உச்சரிப்பாயாக. எண்ணரிய பேரின்ப வீட்டில் நீ வாழலாம்.

விளக்கம்

திருவைந்தெழுத்தில் நகார, மகாரங்கள் ஆகிய பாச எழுத்துக்கள் முன்நிற்க ஓதிவரின் பாச நிலை நீங்காது. முற்பட்டு நிற்பதே தலைமைப் பொருளாகும். அதன்பின் நிற்பது அடிமைப் பொருளாகும். அம்முறையில் பாசங்களே முற்பட்டு நிற்க, உயிர் அவற்றின் பின் நின்றால் உயிர் பாசங்களுக்கு அடிமைப்பட்டதாய் அவற்றினின்றும் மீள இயலாது. ஆதலால் பாசங்களின் வழிப்பட்ட இந்நிலை மாற வேண்டும். அது பற்றியே மாறி விதிப்படி ஓது அஞ்செழுத்துமே என்றார் நம் ஆசிரியர். சிகாரத்தை முதலாகக் கொண்டு ஓதிவரின், சிவமும் அருளும் முன் நிற்க, உயிர் அவற்றின் பின் நிற்பதாய் அமையும். இங்ஙனம் சிவமும் அருளும் தலைமைப் பொருளாய் முன் நிற்க, உயிர் அவற்றிற்கு அடிமைப்பட்டு அவற்றின் வழி நின்று பாசங்கள் நீங்கப் பெறும். இதனையே இச்செய்யுள் வலியுறுத்துகின்றது. உறுதியும் தெளிவும் உண்டாதற் பொருட்டு முன்னே கூறியதை மீண்டும் கூறியுள்ளார். இங்கே ஓதுதலாவது, அறிவால் கணித்தல், அறிவால் கணித்தல் என்றால் என்ன? உச்சரித்தலே இல்லாமல், மந்திரம் கருத்தளவாய் நிற்க, அதனால் நினைப்பிக்கப்படும் பொருளில் தன் அறிவை இடைவிடாது நிறுத்துதலே கணித்தல் எனப்படும்.

திருவைந்தெழுத்தின் சிறப்பு

44. அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும்
அஞ்செழுத்தே ஆதிபுராணம் அனைத்தும்  அஞ்சு எழுத்தே
ஆனந்த தாண்டவமும் ஆறாறுக்கு அப்பாலாம்
மோனந்த மாமுத்தி யும்

பதவுரை

அண்ணல்     (உயிர்கள் உய்தற் பொருட்டு) இறைவன் அருளிச் செய்த
ஆகமமும்     சிறப்பு நூலாகிய சிவாகமங்களும்
அருமறையும்     பொது நூலாகிய வேதங்களும்
அஞ்செழுத்தே     திருவைந்தெழுத்தின் பொருளையே விளக்குவன.
ஆதிபுராணம் அனைத்தும்  தலையாய புராணங்கள் எல்லாமும்
அஞ்செழுத்தே     திருவைந்தெழுத்தின் விளக்கமேயாகும்.
ஆனந்த தாண்டவமும்  (இன்புறுநிலையைத் தலைப்பட்டவர் பொருட்டு) கூத்தப் பெருமான் இயற்றும் ஆனந்த நடனத்தை நினைப்பிப்பதும்
அஞ்செழுத்தே     திருவைந்தெழுத்தேயாகும்.
ஆறாறுக்கு     முப்பத்தாறு தத்துவங்களுக்கும்
அப்பால் ஆம்     அப்பாற்பட்டதாய்
மோனந்த     மோனநிலையைத் தலைப்பட்டு எய்தும்
மாமுத்தியும்     பரமுத்தி நிலையை அடைவிப்பதும்
(அஞ்செழுத்தே)     திருவைந்தெழுத்தேயாகும்.

பொழிப்புரை

சிவபெருமான் அருளிச் செய்த சிறப்பு நூலாகிய ஆகமங்களும், பொது நூலாகிய வேதங்களும் ஆகியவை திருவைந்தெழுத்தின் பொருளை விளக்குவனவேயாகும். தலையாய புராணங்கள் அனைத்தும் திருவைந்தெழுத்தின் விளக்கமேயாகும். கூத்தப் பெருமானின் ஆனந்த நடனமும் திருவைந்தெழுத்தின் உட்பொருளைத் தெரிவிப்பதேயாகும். முப்பத்தாறு தத்துவங்களாகிய படிகளைக் கடந்து எய்தும் பரமுத்தி நிலையை அடைவிப்பதும் திருவைந்தெழுத்தேயாகும்.

 
மேலும் உண்மை விளக்கம் »
முன்னுரைசைவ சித்தாந்தம் என்றும் அழியா உண்மைப் பொருள்களாக மூன்று பொருள்களைக் கொள்ளும். ... மேலும்
 
சுத்த நிலைஇத்தடுமாற்றம் தீர்ந்து ஒரு நிலைப்பட்ட தன்மையை எய்த வேண்டுமாயின், உயிர் திருவருளைச் சேர்தல் ... மேலும்
 
தத்துவங்கள் ஆன்மாவிற்குக் கருவியாய் நின்று உதவுதல்தத்துவம் என்ற சொல்லுக்கு கருவி என்பது பொருள். ... மேலும்
 
இனி, கன்மேந்திரியங்கள்14. கண்ணுதல்நூல் ஓதியிடும் கன்மேந் திரியங்கள்எண்ணும் வச னாதிக்கு இடமாக ... மேலும்
 
பசுநான் யார்?23. ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும்மாறா அருளால் வகுத்துரைத்தீர்  வேறுஆகாஎன்னை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar