Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவஞானபோதம் பகுதி-1 சிவஞானபோதம் பகுதி-3
முதல் பக்கம் » சிவஞானபோதம்
சிவஞானபோதம் பகுதி-2
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2013
02:11

இருவகை இயல்புகள்

சைவ சித்தாந்தத்தில் பொருளுக்கு இரு வகையான இயல்புகள் சொல்லப்பெறும். அவை உண்மையியல்பு, பொதுவியல்பு என்பன. உண்மையியல்பு, சொரூப லக்கணம் எனப்படும். பொதுவியல்பு தடத்த லக்கணம் எனப்படும்.

ஒரு பொருளுக்கு இயற்கையில் உள்ள தன்மையே உண்மையியல்பு அல்லது சொரூப லக்கணம். ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளின் சேர்க்கையால் உண்டாகும் தன்மை பொதுவியல்பு அல்லது தடத்த லக்கணம்.

நீர் குளிர்தல் இயல்பாய் உள்ளது. ஆதலால் குளிர்ச்சி நீருக்கு உண்மையியல்பு ஆகும். நீர் சுடுதல், தீயாகிய பிறிதொரு பொருளின் சேர்க்கையால் நிகழ்வது. ஆதலால் சூடு நீருக்குப் பொதுவியல்பு ஆகும்.

உண்மையியல்பு இயற்கையாதலின் அது பொருளை விட்டு எக்காலத்தும் நீங்குவதில்லை. பொதுவியல்பு ஒரு காரணம் பற்றி இடையில் வந்தது. ஆதலின் அக்காரணம் நீங்கியபோது அதுவும் நீங்குவதாகும்.

இவ்விரு வகை இயல்பும் முப்பொருள்களுக்கும் தனித்தனியே சொல்லப்பெறும்.

சிவஞான போதத்தில் பதியின் பொதுவியல்பை இரண்டாம் நூற்பாவும் ஐந்தாம் நூற்பாவும் கூறும்; அதன் உண்மையியல்பை ஆறாம் நூற்பா உணர்த்தும். பசுவாகிய உயிரின் பொதுவியல்பு நான்காம் நூற்பாவிலும், உண்மையியல்பு ஏழாம் நூற்பாவிலும் கூறப்படும். பாசமாகிய ஆணவம், மாயை, கன்மம் என்பவற்றின் இயல்புகளை நான்காம் நூற்பாவில் காணலாம்.

பொருள்களின் இயல்பை உணர்ந்தாலே அவற்றுள் நமக்கு உறவாவது எப்பொருள், பகையாய் இருப்பது  எப்பொருள் என்பதைத் தெரிந்து கொள்ள இயலும்; பகையைப் பகையென்று தெரிந்து நீங்கி அதனால் வரும் துன்பத்தினின்றும் விடுபட்டு, உறவோடு கூடி இன்புறும் நிலை உண்டாகும்.

பெத்தம், முத்தி:

உயிருக்கு இறை உறவுப் பொருள்; தளை பகைப்பொருள். இறை இன்பப்பொருள்; தளை துன்பப் பொருள். தளையோடு கூடியிருப்பதே உயிருக்குக் கட்டுநிலை. இது பெத்த நிலை எனவும் வழங்கும். (கட்டு எனப் பொருள்படும் பந்தம் என்ற சொல்லே பெந்தம் என்றாகிப் பின் பெத்தம் எனத் திரிந்தது.) தளையினின்றும் விடுபட்டு இனிய உறவாகிய இறைவனைச் சார்ந்து இன்புறுதலே முத்தி நிலையாகும்.

சித்தாந்தப் பொருள்களைப் பெத்தம், முத்தி என்னும் இரு நிலைகளில் வைத்து விளங்க உணர்த்தும் விழுமிய நூல் சிவஞான போதம்.

இவ்வடிப்படைகளைக் கருத்திற் கொண்டு இனி நூலுள் புகுவோம்.

சிறப்புப் பாயிரம்

மலர்தலை உலகின் மாயிருள் துமியப்
பலர்புகழ் ஞாயிறு படரின் அல்லதைக்
காண்டல் செல்லாக் கண்போல், ஈண்டிய
பெரும் பெயர்க் கடவுளின் கண்டு கண் ணிருள்தீர்ந்து
அருந்துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி
மயர்வு அற நந்தி முனிகணத்து அளித்த
உயர்சிவ ஞானபோதம் உரைத்தோன்
பெண்ணைப் புனல்சூழ் வெண்ணைச் சுவேதவனன்
பொய்கண்டு அகன்ற மெய்கண்ட தேவன்
பவநனி வன்பகை கடந்த
தவர் அடி புனைந்த தலைமை யோனே.

இதன் பொருள்:

விரிந்த இடமாகிய உலகில் வந்து கவியும் பெரிய இருள் கெடும்படி காலையில் சூரியன் தோன்றுகிறது. அது தோன்றாவிடில் கண்ணொளி காணும் ஆற்றலைப் பெறமாட்டாது. அந்தச் சூரியனைப் போன்றது இந்தச் சிவஞான போத நூல்.

சூரியன் உதவியால் கண் உருவத்தை முதலில் பொதுவாகவும் பின் சிறப்பாகவும் காணுதல் போல, இந்நூலின் உதவியால் கடவுள் உயிர் முதலிய பொருள்களின் இயல்புகளை முன்னர் பொதுவாகவும் பின்னர் சிறப்பாகவும் உணர்தல் உண்டாகும்.

முன்னே திருக்கயிலையில் நந்தி பெருமான் சிவஞான போத நூலை முனிவர்களுக்கு உபதேசித்தருளினார். சீவான்மா, பரமான்மா ஆகிய இரண்டின் இயல்பையும் முதலில் பொதுவாக உணர்ந்து அதனால் அகவிருளாகிய ஆணவ மலம் தீர்ந்து, பின்னர் கடவுளது திருவருளால் அவ்விரண்டின் இயல்பையும் சிறப்பாக உணர்ந்து அதனால் மலவாசனை நீங்கிச் சிவானுபவம் பெறுதற் பொருட்டாக அவர்களுக்கு அந்நூலை நந்தி அளித்தருளினார்.

ஏனைய நூல்களுக்கெல்லாம் மேற்பட்டு விளங்குவதாகிய சிவஞான போதம் என்னும் அவ்வடமொழி நூலைத் தமிழில் உரைத்தவர் திருவெண்ணெய் நல்லூரில் எழுந்தருளியிருந்த அருட்குரவர்; சுவேதவனப் பெருமாள் என்னும் இயற்பெயரை உடையவர்; பொய்ப் பொருளை யெல்லாம் கண்டு கழித்து மெய்ப் பொருளைத் தெளிந்த காரணத்தால் மெய்கண்டார் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றவர். பிறவியாகிய பகையினை வென்ற அரிய தவத்தோர்களும் தன்னை வந்து வணங்கும் படியான தலைமையினை உடையவர்.

பதவுரை

மலர்தலை உலகின் - விரிந்த இடத்தையுடைய உலகத்தில் பரந்துள்ள
மாயிருள் - பெரிய இருள்
துமிய - கெடும்படியாக
பலர் புகழ் ஞாயிறு - பல சமயத்தவராலும் புகழப்படுகின்ற சூரியன்
படரின் அல்லது - தோன்றினாலன்றி
காண்டல் செல்லாக் கண் போல் - உருத்தைக் காணமாட்டாத கண் போல

(இவ்வாறு, சூரியன் வந்தாலன்றிக் காணமாட்டாத கண்போல எனக் கண்ணை உவமையாக வைத்துக் கூறியிருந்தாலும், கண் உருவத்தைக் காணும்படி தோன்றிய சூரியனைப் போல எனச் சூரியனையே இங்கு உவமையாக வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.)

அருந்துயர்க் குரம்பையின் - பொறுத்தற்கரிய துன்பத்தைச் செய்யும், குடில் போன்றதாகிய உடம்பு முதலியவற்றை ஏதுவாகக் கொண்டு ஆன்மா நாடி - சீவான்மா ஆகிய உயிர், பரமான்மா ஆகிய கடவுள் என்னும் இரண்டன் இயல்பையும் அனுமான அளவையால் ஆராய்ந்து பொதுவாக உணர்ந்து (அவ்வாறு இரு ஆன்மாக்களின் பொதுவியல்பை உணர்ந்ததன் பயனாக) கண் இருள் தீர்ந்து - கருதி உணரத்தக்கதாக உள்ள, அகவிருளாகிய ஆணவ மலத்தினின்றும் நீங்கி  (பின்னர்) ஈண்டிய பெரும்பெயர்க் கடவுளின் - எல்லா நூற்பொருள்களையும் தம்மிடத்து அடக்கிக் கொண்டுள்ள, பெரும் பெயர் எனப்படும் மகா வாக்கியங்களால் உணர்த்தப்படும் கடவுளின் திருவருளால் கண்டு - மேற்கூறிய  சீவான்மா, பரமான்மாக்களின் சிறப்பியல்பை அனுபவமாகக் கண்டுணர்ந்து மயர்வு அற - (ஆணவ மலம் முன்னரே நீங்கிய போதிலும் அதன் வாசனை நீங்காமையால் அம் மலவாசனை செய்கின்ற) மயக்கமானது நீங்கிச் சிவானுபவம் பெறுதற் பொருட்டு நந்தி முனிகணத்து அளித்த - திருநந்தி தேவர் சனற்குமாரர் முதலிய முனிவர் கூட்டத்திற்குச் சிவஞானபோத நூலை அளித்தருளினார். அங்ஙனம் அளித்தருளிய உயர்சிவஞான போதம் - ஏனைய நூல்களுக்கெல்லாம் மேற்பட்டு விளங்குவதாகிய அவ் வடமொழிச் சிவஞான போத நூலை
உரைத்தோன் - தமிழில் மொழிபெயர்த்துக் கூறி வார்த்திகம் என்னும் பொழிப்புரை செய்தவர்
பெண்ணைப் புனல்சூழ் - பெண்ணையாற்று நீரால் சூழப் பெற்ற வெண்ணை - திருவெண்ணெய் நல்லூரில் எழுந்தருளியிருந்தவரும் சுவேதவனன் - சுவேதவனப் பெருமாள் என்னும் இயற்பெயரை உடையவரும் பொய்கண்டு அகன்ற மெய்கண்ட தேவன் - பொய்ப் பொருளையெல்லாம் கண்டு கழித்து மெய்ப்பொருளைத் தெளிந்த காரணத்தால் பெற்ற மெய்கண்ட தேவன் என்னும் சிறப்புப் பெயரை உடையவரும் பவம் - பிறவியாகிய
நனிவன் பகை - மிக வலிய பகையினை
கடந்த - வென்ற
தவர் - அரிய தவத்தோர்களும்
அடி புனைந்த - தனது திருவடிகளைத் தங்கள் தலைமேற் புனைந்து கொள்ளும்படியான
தலைமையோன் - தலைமைத் தன்மை உடையவரும் ஆகிய அருட்குரவர் ஆவார்.

விளக்கம்:

இச் சிறப்புப் பாயிரச் செய்யுள், நூலுக்கு முன்னுரையாக அமைந்துள்ளது, நூலைப் பற்றியும் நூலாசிரியரைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகளைத் தருகிறது.

இப்பாயிரத்தைச் செய்தவர் இன்னார் என்பது தெரியவில்லை. இது பிற்காலத்துப் பெரியார் ஒருவர் செய்ததாக இருத்தல் வேண்டும்.

நூலுக்கு ஞாயிறு உவமை:

பரந்த புற இருளைக் காலை வானில் எழுகின்ற ஞாயிறு போக்குகிறது. அதுபோல் ஞானநூல் தன்னைக் கற்றுணரும் மாணாக்கரது பெரிய அகவிருளைப் போக்க வல்லதாகும். அது பற்றியே ஞான நூலை ஞாயிற்றோடு ஒப்பிட்டுக் கூறுவாராயினர் பெரியோர். சேக்கிழார் தமது நூலைப் பற்றிக் குறிப்பிடும்போது அது கதிரவனைப் போல அகவிருளைப் போக்குவது என்று கூறியுள்ளார். அவ்வாறே இச்சிறப்புப் பாயிரச் செய்யுள் சிவஞான போத நூலை ஞாயிற்றோடு ஒப்பிட்டுக் கூறுகிறது. இவ்வொப்புமையில் உள்ள பொருத்தத்தைக் காண்போம்.

உலகத்து இருள் விளக்கு முதலிய பிற ஒளிகளால் முற்றிலும் நீங்காது; ஞாயிற்றினாலேயே முற்ற நீங்கும். அதுபோல அகவிருகளாகிய அஞ்ஞானம் பிற சமய நூல்களால் முற்றிலும் நீங்காது; சிவஞான போதம்  ஆகிய இந்நூலினாலேயே முற்ற நீங்குவதாகும்.            

சூரியர் பன்னிருவர் என்பது புராண மரபு. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு சூரியனாகப் பன்னிரண்டு மாதங்களிலும் தோன்றுகின்ற சூரியர் பன்னிருவர் என்று புராணம் கூறும். அதன்படி, ஞாயிறு ஒன்றாயினும் அதனைப் பன்னிரண்டாக வைத்துக் கூறுதல் போல, சிவஞானபோத நூலும் ஒன்றாயினும் அதன் உட்பிரிவாகிய நூற்பாக்கள் பன்னிரண்டாயின.

இருவகைப் பயன்:

மேலும் ஒரு பொருத்தத்தைச் சுட்டலாம். ஞாயிற்றின் வரவினால் கண்ணிற்கு  இரண்டு வகையான பயன்கள் கிடைக்கின்றன. ஒன்று கண்க்ணிடத்தில் உள்ள இருள் நீங்குவது. மற்றொன்று கண் பொருள்களைக் காண முடிவது. அதுபோலச் சிவஞானபோத நூலினாலே ஆன்மா இரண்டு பயன்களைப் பெறுகிறது. முதலாவதாக, இந்நூலைக் கேட்பதனால் ஆன்மாவிடத்தில் உள்ள அகவிருளாகிய ஆணவ மலம் நீங்குகிறது. இரண்டாவதாக, இறைவன் உயிர் உலகம் ஆகிய முப்பொருள்களின் இயல்பையும் ஆன்மா உணர்ந்து கொள்ள முடிகிறது.

இருவகைக் காட்சி:

ஞாயிற்றின் தோற்றத்தால் கண் பொருள்களைக் காணவல்லதாகிறது என்று கூறினோம். கண் பொருளைக் காண்பதாகிய காட்சியில் இரு வகை உண்டு. அவை பொதுக்காட்சி, சிறப்புக் காட்சி என்பன. சூரியவொளியின் உதவியால் கண்பொருளைக் காணும்போது முதலில் இஃது ஓர் உருவம் என்பது மட்டுமே தெரியும். இவ்வாறு பொதுவாக உணர்தல் பொதுக்காட்சி எனப்படும். இங்ஙனம் முதலில் பொதுவாகக் கண்ட பொருளைப் பின்னர் மனம், புத்தி முதலிய உட்கருவிகள் ஆராய்ந்து இஃது இன்னது என்று சிறப்பாக அறுதியிட்டு உணரும். சிறப்பாக  உணரும்போதுதான் பொருளின் பெயர், தொழில் முதலிய வேறுபாடுகள் தெரிய வரும். முன்னர்க் கூறிய பொதுக் காட்சியில் இவ்வேறுபாடுகள் தெரிதல் இல்லை. இவ்வேறுபாடுகள் தெரியும்படியாகப் பொருளைச் சிறப்பாகக் காணும் காட்சி சிறப்புக் காட்சி எனப்படும். இவ்விருவகைக் காட்சிக்கும் ஏதுவாக இருப்பது ஞாயிறு என்பதை மறத்தலாகாது.

இருவகை உணர்வு:

இனி, சிவஞான போத நூலைக் கேட்பதனால் ஆன்மா ஆணவ மலமாகிய அகவிருள் நீங்கி முப்பொருள் உணர்ந்து கொள்ள இய<லும் என முன்னே கூறினோம். பொருளியல்பை உள்ளவாறு உணர்ந்து கொள்ளுதலே ஞானம் எனப்படும். அந்த ஞானத்தில் இரு நிலைகள் உண்டு. முதலில் பொருள்களது இயல்பை ஆராய்ச்சி அளவிலே பொதுவாக உணர்தல் உண்டாகும்.  பின்னர் அதனை அனுபவத்தில் உண்மையாக உணர்தல் வேண்டும். எனவே இந்த நூலைக் கேட்கும்பொழுது முதலில் ஆராய்ச்சியுணர்வும், அதன்பின் அனுபவ உணர்வும் தோன்றும் என்பது விளங்கும்.

ஞாயிற்றின் உதவியால் கண்ணுக்கு முதலில் பொதுக்காட்சியும் பின்னர் சிறப்புக் காட்சியும் நிகழ்தல் போல, இந்நூலைக் கேட்பதனால் முதலில் பொதுவாக உணர்தலாகிய ஆராய்ச்சியும் பின்னர் சிறப்பாக உணர்தலாகிய அனுபவமும் நிகழும் என இம்முறையில் ஞாயிற்றிற்கும் சிவஞான போத நூலுக்கும் உள்ள பொருத்தத்தை உணர்ந்து கொள்ளலாம்..

உயர் சிவஞான போதம்:

ஞானநூல்களைப் பயில்வதற்குப் பலர் முன்வருவதில்லை. அவர்கள் உலகியலிலே தோய்ந்திருப்பதுதான் அதற்குக் காரணம். உலகியல் நாட்டம் உள்ள வரையில் ஞானப் பொருளை அறிந்து கொள்வதில் விருப்பம் தோன்றாது. உலகியலில் அடிபட்டு வரவர அதன்மீது சிறிது சிறிதாக உவர்ப்புத் தோன்றும். பொருள், பொருள் என்று அலைந்து வாழ்நாளைப் போக்கிவிட்டோமே என்ற வருத்தம் ஏற்படும். சமய வாழ்வில் தானாக ஈடுபாடு உண்டாகும். அந்நிலையில் உள்ளோர் தீக்கை பெற்றுச் சமய நூல்களை முறையாக ஓதி வருவர்; கோயில் வழிபாட்டினை மேற்கொள்வர்; அடியவர்களுக்குப் பணி செய்வதில் ஆர்வம் காட்டுவர். இப்படி நிலையைக் கடந்தவர் ஆன்மார்த்த பூசையில் உண்மையான அன்போடு மெய்ம் மறந்து ஈடுபடுவர்; தியானத்தில் ஒன்றி நிற்பர். அந்நிலையில் அவர்கள் மனத்தில் மண்டிக் கிடந்த ஆசை, சினம், பொறாமை முதலிய மாசுகள் அகலும்; மனம் தூய்மை பெறும்.

இவ்வாறு சமய வொழுக்கத்தில் நின்று மனப் பக்குவம் எய்திய தகுதியாளரே சிவஞானபோதநூலைக் கேட்டற்கு உரியர். அவர்களுக்கே சிவஞானபோத நூற்பொருள் உள்ளவாறு விளங்கும். ஏனையோர் அதனைப் பயிலுதல் கூடாது என்பது கருத்தன்று. அவர்கள் பயின்றாலும் அவர்களுக்குச் சொற்பொருள் விளங்குமேயன்றி அனுபவப் பொருள் சிறிதும் கைவராது. உயர்ந்த பக்குவம் உடையவர்க்கே இந்நூல் உணர்த்தத் தக்கது என்பது கருதியே உயர் சிவஞான போதம் என இந்நூல் உயர் என்ற அடைமொழி கொடுத்துச் சிறப்பிக்கப்பட்டது.

நூலாசிரியர் பெருமை: வெண்காடு என்ற தலம் வடமொழியில் சுவேத வனம் எனப்படும். அத்தலத்தில் உள்ள இறைவனுக்குச் சுவேத வனப் பெருமாள் என்பது பெயர்.

மெய்கண்டாரது பெற்றோர் திருவெண்காட்டிற்குச் சென்று பெருமானை முறையாக வழிபட்டு அதன் பயனாக அவரை மகவாகப் பெற்று மகிழ்ந்தனர். அந்த அருந்தவ மகவுக்கு வெண்காட்டுப் பெருமானது திருப்பெயரையே சூட்டி சுவேத வனப் பெருமாள் என்று அழைத்தனர்.

அரும் பெறல் மைந்தராய்த் தோன்றிய சுவேத வனப் பெருமாளை அவரது அம்மான் தமது ஊராகிய திருவெண்ணெய் நல்லூருக்குத் தாயுடன் அழைத்துச் சென்று வளர்த்து வந்தார். பிறந்தது பெண்ணாகடம் என்றாலும், திருவெண்ணெய் நல்லூரே அவர் வாழ் இடம் ஆயிற்று. அது பற்றியே அவரை வெண்ணைச் சுவேதவனன் என்று இப்பாயிரம் குறிப்பிடுகிறது.

அவர் பொய்ச் சமயங்களின் பொருளையெல்லாம் கண்டு கழித்து, மெய்ச் சமயப் பொருளைத் தெளிந்து இறையனுபவம் கைகூடி நின்றவர் என்பதை, மெய்கண்ட தேவர் என்னும் சிறப்புப் பெயர் உணர்த்துகிறது.

தவமுதிர்ச்சியுடையோர் அவரது திருவடிகள் தங்கள் தலைமேற் பொருந்தும்படி இறைஞ்சும் தலைமைப்பாடு உடையவர் என்பதை இறுதியடி உணர்த்தி நிற்கிறது.  

மங்கல வாழ்த்து

ஆசிரியர் மெய்கண்டார் தமது வழிபடு கடவுளாகிய விநாயகப் பெருமானை- பொல்லாப் பிள்ளையார் என்னும் திருப்பெயரோடு திருவெண்ணெய்நல்லூரில் உள்ளவரை- வணங்கி நூலைத் தொடங்குகிறார்.

இடையூறு நீக்கித் தம் அடியவர் கருத்தினை இனிது முற்றுவிக்கும் விநாயகக் கடவுளை முதற்கண் வணங்கியே நூலைத் தொடங்குதலாகிய மரபினைப் போற்றி ஆசிரியர் செய்த மங்கல வாழ்த்து இது.

கல்லால் நிழல் மலை
வில்லால் அருளிய
பொல்லார் இணைமலர்
நல்லார் புனைவரே.

இதன் பொருள்:

கல்லால மரத்தின் நிழலில் யோக வடிவம் கொண்டு எழுந்தருளியிருந்து, ஞான நூற் பொருளில் ஏற்பட்ட ஐயம் திரிபுகளைப் போக்கித் தெளிவித்தவர் சிவபெருமான். அவர் மேலும் மேலும் அருள் புரிதற் பொருட்டுப் பொல்லாய் பிள்ளையாரது திருவடிகள் ஆகிய தாமரை மலர்களை நல்லார் தம் தலைமேல் சூடிக்கொள்வர்.

பதவுரை:

கல் ஆல் நிழல் - கல்லால மரத்தின் நிழலில் எழுந்தருளியிருந்து.
மலைவு இல்லார் - முன்பொரு சமயத்தில் சைவாகமங்களின் பொருள் குறித்து ஐயுற்று வினாவிய நந்தி பெருமானுக்கும் மற்றொரு சமயத்தில் மெய்ப்பொருள் குறித்து வினாவிய முனிவர் நால்வருக்கும் ஐயந் திரிபுகள் இல்லையாகும் படி செய்து தெளிவினைத் தந்தவர் சிவபெருமான்.
அருளிய - அம்முதல் ஆசிரியராகிய இறைவர் தமக்கு அருள் புரிதற் பொருட்டு
நல்லார்- மெய்யன்பர்கள்
பொல்லார்இணைமலர் - பொல்லாப் பிள்ளையாரது திருவடிகளாகிய இரு மலர்களை
புனைவர் - தங்கள் தலைமேல் சூடிக் கொள்வர்.

விளக்கம்:

கல்லால் நிழற் கடவுள்:

யோக வடிவம் கொண்ட இறைவர் தட்சிணாமூர்த்தி எனப்படுவார். தமிழில் அவரைத் தொன்முகக் கடவுள் என்பர். தெற்கு நோக்கியிருத்தல் பற்றி இப்பெயர்கள் அமைந்தன. இறைவர் அவ்வடிவங் கொள்ளுதல், பக்குவம் உடையவர்களுக்கு மெய்யுணர்வினை அளித்து வீடு அருளுதற் பொருட்டாகும்.

இறைவர் கல்லாலின் நிழலில் அமர்ந்து முனிவர் நால்வருக்கு ஏற்பட்ட மலைவுகளைப் போக்கி உண்மைப் பொருளை உணர்த்தியருளினார் என்று திருவிளையாடற்புராணம் முதலிய நூல்கள் கூறும். சிவாகமப் பொருள் பற்றி ஐயமுற்று வினவிய நந்தி பெருமானுக்கு அவ்வையத்தை நீக்கி உண்மையை அறிவுறுத்தினார் என்று சைவாகமங்கள் கூறும்.

சிவபெருமான் யோகியாய் இருந்து, வீடு காதலிப்போர்க்கு அதனை அருளும் திறம் உடையவர் என்று கூறிய இதனால், இந்நூல் வீட்டு நெறியை உணர்த்துவது என்பதைப் பெற வைத்தார் ஆசிரியர்.

மலை வில்லார்:

மலைவில்லார் என்பதை மலைவு இல்லார் எனப்பிரித்தல்  வேண்டும். ஐயம் திரிபுகளாகிய மலைவுகளை இல்லையாகச் செய்பவர் என்பது பொருள்.

அத்தொடரை அவ்வாறு பிரிக்காமல் மலை வில்லார் என்றே கொண்டு, மேரு மலையை வில்லாக வளைத்து அசுரரை அழித்து உலகினர்க்கு வாழ்வளித்தவர் என்றும் பொருள் கொள்ளலாம். அவ்வாறு பொருள் கொண்டால், கல்லால் நிழலில் வீற்றிருந்து வீட்டின்பத்தையும். மலையை வில்லாக வளைத்துப் பகையை வென்று உலக இன்பத்தையும் அளிப்பவராகிய அவரே முழுதற்கடவுள் என்பது அமைகின்றது.

அருளிய - இருபொருள்:  

அருளிய என்பது இருபொருள் படும்படி நிற்கின்றது. ஒரு பொருள் அருள வேண்டி என்பது. அப்பொருள் கொண்டால் கல்லால் நிழலில் அமர்ந்த இறைவர் தமக்கு அருள வேண்டி நல்லார் பிள்ளையாரை வழிபடுவர் என்னும் பொருள் கிடைக்கும். மற்றொரு பொருள் தந்தருளிய என்பது. அதன்படி கல்லால் நிழலில் அமர்ந்த இறைவர் தந்தருளிய பிள்ளையாரை வழிபடுவர் என்னும் பொருள் அமைவதாகும். பிள்ளையாரை இறைவர் அளித்தருளினார் என்பதனை தனதடி வழிபடும் அவர் இடர் கடி கணபதி வர அருளினன் என ஞானசம்பந்தர் குறித்தருளினார் இவ்விரு பொருள்களும் பொருத்தம் உடையனவே யாம்.

பொல்லார்:

திருவெண்ணெய்நல்லூரில் கோயில் கொண்டுள்ள விநாயகக் கடவுளுக்குப் பொல்லாப் பிள்ளையார் என்பது திருப்பெயர். உளி  கொண்டு கல்லிற் செதுக்குதல் பொள்ளுதல் எனப்படும். பொளிதல் என்றும் வரும். அவ்வாறு உளியாற் பொளிந்து செய்யப்படாது தாமே உருக்கொண்டு தோன்றியவர் ஆதலின் அப்பெருமான் பொள்ளார் எனப்பட்டார். அப்பெயரே பின்னாளில் பொல்லார் என மருவியது. ஆசிரியர் மெய்கண்டார் அவரை வழிபட்டு மெய்யுணர்வில் முழுமை நிலையை எய்தினார் என்பர்.

நல்லார்:

கல்லால் நிழற் கடவுளது அருளை வேண்டி, அவர் தந்தருளிய பிள்ளையாரை வழிபடுவோரை நல்லார் என்று குறிப்பிட்டார் ஆசிரியர். நல்லவராவார், ஞானாசிரியர் உணர்த்திய உபதேசப் பொருளைக் கேட்டுப் பின் சிந்தித்துத் தெளிவு பெற்றவர். பக்குவ முதிர்ச்சியுடையவர். அத்தகையவரே வீடு பேறாகிய பயனை விரும்பி அதற்காக இறைவரது அருளை வேண்டி நிற்போராவார்.

திருவடிகளைச் சூடுதல் என்பதன் பொருள்:

கடவுளது திருவடிகளைத் தலைமேற் சூடுதல் என்பதன் பொருளைப் பார்ப்போம்.

இறைவன் யாவற்றையும் ஒருங்கே இடைவிடாது அறிந்து நிற்கும் பேரறிவு உடையவன். அவனது அறிவாற்றல் ஞானசத்தி எனப்படும். அவன் தன் நினைப்பு அளவில் எல்லாம் செய்யவல்ல பேராற்றல் உடையவன். அவனது செயலாற்றல் கிரியாசத்தி எனப்படும்.

இறைவனைப் போல உயிர்களும் அறிவும் செயலும் உடையன. ஆயின் அவை சிற்றறிவாயும் சிறு தொழிலாயும் உள்ளன. மேலும் உயிர்களின் அறிவாகிய ஞானசத்தியும், செயலாகிய கிரியாசத்தியும் தாமே செயற்படுவன அல்ல. இறைவனது ஞானசத்தி உணர்த்தவே, உயிர்களது ஞானசத்தி அறியும்; இறைவனது கிரியாசத்தி செலுத்தவே உயிர்களது கிரியாசத்தி செயற்படும்.

இதனால் உயிர்களது ஞானசத்தியும் கிரியாசத்தியும், இறைவனது ஞானசத்தி கிரியாசத்திகளின் வழிப்பட்டே நிற்றற்கு உரியன என்பது விளங்கும். சுருங்கக் கூறின், இறைவன் இன்றி உயிர்கள் அமையா என்பதே உண்மை.

இவ்வுண்மையை அறியாமையினால் உலக மக்கள் தாமே அறிந்தும் செய்தும் வருவதாக எண்ணித் திரிவர். ஆயின் உண்மையை உணர்ந்த பெரியோர் இறைவனையே தமது வாழ் முதலாகக் கருதுவர். தம் வழியில் நில்லாது அவனது அருள் வழியில் நிற்பர்.

இறைவனுக்கு இரண்டு திருவடிகளாகச் சொல்லப் பெறுவன அவனது ஞானசத்தியும் கிரியா சத்தியுமேயாகும். அத்திருவடிகளைச் சூடிக்கொள்ளுதல்- தலைமேற் பொருந்த வைத்தல் என்பது, அந்த ஞானசத்தி, கிரியாசத்திகளில் தனது ஞானசத்தியையும் கிரியா சத்தியையும் அடங்கச் செய்தலாகும். அஃதாவது, தன் முனைப்பெற்று, தன் செயலாற்று அருள் வழியே அடங்கி நிற்றலாகும். மேலே கூறிய நல்லார்க்கு அன்றி ஏனையோர்க்கு இந்நிலை கைகூடாது என்பதைச் சொல்ல வேண்டா.

நல்லார் பிள்ளையாரை வழிபடுவர் என்றதனால் யாமும் அவ்வாறே வழிபடுவோம் என்பது கருத்தாயிற்று.

ஞானசம்பந்தர் வழியில்:

கல்லால் நிழலில் அமர்ந்த கடவுளையன்றிப் பிறிதொரு தெய்வத்தை நல்லார் வழிபடார் என்னும் பொருள்பட,

கல்லால் நீழல்
அல்லாத் தேவை
நல்லார் பேணார்

என்றருளினார் ஞானசம்பந்தப் பிள்ளையார். அவர் எதிர்மறை வகையால் உணர்த்திய அக் கருத்தையே நம் ஆசிரியர் இங்கு உடன்பாட்டு வகையில் வைத்து, கல்லால் நிழற் கடவுளின் அருளை நாடி நல்லார் வழிபடுவர் என்றார். இக்கடவுள் வாழ்த்தின் சொல்லும் பொருளும் ஞானசம்பந்தர் வாக்கினை அடியொற்றி அமைந்தன எனலாம்.

அவையடக்கம்

மங்கல வாழ்த்தினையடுத்து அவையடக்கம் கூறுகின்றார் ஆசிரியர். அச்செய்யுள் வருமாறு:

வெண்பா:

தம்மை உணர்ந்து தமைஉடைய தன் உணர்வார்
எம்மை உடைமை எமை இகழார்;- தம்மை
உணரார் உணரார்: உடங்குஇயைந்து தம்மிற்
புணராமை கேளாம் புறன்.

இதன் பொருள்:

முதலில் தமது இயல்பினை உணர்ந்து, பின் தம்மை உடையனவாகிய தலைவனது- இறைவனது இயல்பைத் தெளிய உணர்ந்தவர் உயர்ந்தோர். அவர் எம்மை ஆளாக உடையவர். ஆதலால் அவர் எமது குறையை நோக்கி இகழாது இந்நூலினை ஏற்றுக் கொள்வர்.

இனி, தம் இயல்பையே உணரமாட்டாதவர் தலைவனையும் உணரமாட்டாதவரேயாவர். அவர்கள் தம்முள் ஒன்றுபடுதலின்றி ஒருவரோடொருவர் மாறுபட்டு மறுத்துப் போவர். அவர்கள் எம்மையும் எமது நூலையும் இகழ்தல் இயல்பே. ஆதலால் அவர்கள் கூறும் இகழ் உரையை யாம் ஒரு பொருளாக மதியோம்.

பதவுரை;

தம்மை உணர்ந்து - முதலில் ஆன்மாவாகிய தமது இயல்பை உணர்ந்து
தமை உடைய தன் உணர்வார் - பின், தம்மை அடிமையாக உடைய இறைவனது இயல்பை உள்ளவாறு உணர்ந்த சித்தாந்த சைவர்களாகிய பெருமக்கள்
எம்மைஉடைமை - எம்மைத் தமக்கு அடிமையாக உடையவர்கள் ஆகையால்
எமை இகழார் - எமது குறை நோக்கி எம்மை இகழ்தல் செய்யார். (எம்மால் செய்யப்பட்ட இந்நூலையும் இகழாது ஏற்றுக் கொள்வர். )
தம்மை உணரார் - இனி, தமது இயல்பையே உணர மாட்டாதவர் ஏனைச் சமய நூலார்.
உணரார் - அவர்கள் தலைவனாகிய இறைவனையும் உணர மாட்டாதவரே யாவர்.
உடங்கு இயைந்து தம்மின் புணராமை - அவர்கள் ஓரிடத்தில் கூட்டமாகக் கூடித் தம் முள் ஒற்றுமையின்றி ஒருவரையொருவர் மறுத்து ஆரவாரம் செய்வர். (ஆதலால் அவர்கள் எம்மையும் எமது நூலையும் இகழ்தல் இயல்பு.)
புறன் கேளாம் - அவர்கள் எம்மை இகழ்ந்து கூறும் மொழிகளை யாம் ஒரு பொருளாகக் கொள்வோர்.

விளக்கம்:

தாம் என்னும் சொல் உயிர்களையும், தான் என்னும் சொல் இறைவனையும் குறிப்பன. அவை முதலடியில் தம் எனவும், தன் எனவும் நின்றன.

பதியாகிய இறைவன் யாவற்றையும் உடையவன் ஆவான். அறிவற்ற பாசங்கள் அவனுக்கு உடைமையாய் உள்ளன. அறிவுள்ள பசுக்கள்- உயிர்கள் அவனுக்கு அடிமையாய் உள்ளன. பாசம் மூன்றனுள் மாயையும் கன்மமுமே இறைவனுக்கு உடைமை எனப்படும். இருள் போன்றதாகிய ஆணவமலம் இறைவனுக்கு மறுதலைப் பொருள் - பகைப் பொருள் ஆதலால் அதனை உடைமை என்று கூறுதல் இல்லை; அதனோடு இறைவனுக்கு இயைபு உண்டு என்றும் கொள்ளுதல் இல்லை.

தன்னை உணர்தல்: 

ஞான நெறியில் உயிர் தன்னை உணர்தல் என்பது அடிப்படையானது.

1. தான் ஒரு பொருள் உண்டு என உணர்தல்

2. தான் அறிவுடைய குணிப்பொருள் என்று உணர்தல்

3. தான் அறிவிக்க அறியும் அறிவாய் இருத்தலை <உணர்தல்

4. அறிவிக்கும் இறைவனையின்றித் தனக்கு அறிவும் செயலும் இல்லை என்று உணர்தல்.

5. தான் அவனது வழி நிற்றற்கு உரியவன் என்பதை உணர்தல் ஆகிய இவையெல்லாம் தன்னை உணர்தலாகும்.

தலைவனை உணர்தல்:

இனி, தனக்கு மேலாகத் தன்னை உடையவனாகிய தலைவன் ஒருவன் உளன் எனவும், அவன் பசு பாசங்களுக்கு அப்பாற்பட்டவன் எனவும், சிறிதும் திரிபு எய்தாதவன் எனவும், அவன் எல்லா அறிவும் எல்லா வல்லமையும் உடையவன் எனவும், பாசக் கடற்குள்ளே வீழ்ந்த உயிர்களைக் கைகொடுத்து ஏற்றுகின்ற கரையிலாத மாக்கருணை உடையன் எனவும், பந்தம் அறுத்து ஆளாக்கிப் பணி கொள்ள வல்லவன் எனவும் உணர்தலே தலைவனை உணர்தலாகும்.

நல்லாசிரியரை அடைந்து அவர் சொல்லும் அருளுரையைக் கேட்டல் வாயிலாகவே தன்னையும் தலைவனையும் உணரும் நிலை வாய்ப்பதாகும்.

பெருமக்கள் நிலை:

தன்னையும், தலைவனையும் உள்ளவாறு உணர்தலே மெய்யுணர்வு என்றும், ஞானம் என்றும் கூறப்படும். இம் மெய்யுணர்வு முதலில் பொதுவாகவும், பின்னர் ஐயமாகவும், முடிவில் தெளிவாகவும் நிகழும். தெளிவுணர்வே அனுபவம் என்பது. தெளிவுணர்வு பெற்றவர் இறைவனை அனுபவித்து உணர்ந்தவர். அவர் தம்வசம் இழந்து இறைவன் வசமாய் நிற்பர். அவரை இறைவன் தானாகச் செய்வான். ஆதலால் அவர் சிவமே யாவர். அத்தகைய பெருமக்களையே தம்மையுணர்நது தமையுடைய தன் உணர்வார் எனக் குறித்தருளினார் ஆசிரியர்.

பணிமொழி:

அப்பெருமக்கள் சிவனுக்கு அடிமை; யாம் அவர்க்கு அடிமை என்று கூறினார் ஆசிரியர். அடியேம் ஆகிய எம்மிடத்தில் அப்பெரியோர் அருள் உடையராதல் இயல்பே யாதலால் அவ்வருள் காரணமாக இகழ்தலைச் செய்யார் என்றார். எனவே எம்மிடத்துள்ள குற்றங்களை நோக்காது, குணங்களையே நோக்கி எமது நூலைத் திருத்தி ஏற்றுக் கொள்வர் என்பது கருத்து. இவ்வாறு ஆசிரியர் கூறுதலின் அவையடக்கம் ஆயிற்று.

நம் மெய்கண்டதேவர் மேற்குறித்த பெருமக்களின் நிலையை எய்தியவரேயாவர். ஆயினும், தன்முனைப்பற்ற தன்மையோடு விளங்கினாராதலின், தாழ்வெனும் தன்மையோடு இவ்வாறு பணிமொழி கூறுகின்றார்.

பிற சமயத்தார் நிலை:


முன்னிரண்டடிகளில் சித்தாந்த சைவத்தில் நின்ற தலைமக்களின் உயர்வைப் புலப்படுத்திய ஆசிரியர் பின்னிரண்டடிகளில் ஏனைச் சமய வாதிகளின் நிலையை வெளிப்படுத்துகின்றார். தம்மை உணரார் என அவர்களைச் சுட்டுகின்றார். தம்மியல்பை முற்ற உணராமல் ஒரு பகுதியே உணர்ந்தவர் என்பது பொருளாகும். முதலடியில் தம்மை உணர்ந்து என்றதனால் சித்தாந்த சைவரே தம்மியல்பை முற்ற உணர்ந்தவர் என்பதைப் பெற வைத்தார். அவரல்லாத பிற சமயத்தாரையெல்லாம் தம்மை உணரார் என்ற சிறிய தொடரில் அடக்கி வைத்தார்.

கேளாம் புறன்:

ஆன்மாவாகிய தம்முடைய இயல்பைத் தெளிய உணராமையே உலகில் பல்வேறு சமயங்கள் தோன்றுவதற்குக் காரணமாகும். பிற சமயத்தார் முற்ற உணராமல் ஒரு பகுதியே உணர்ந்து அதனையே முழுவுண்மையாகக் கருதித் தம்முள் ஒருவரையொருவர் மறுத்தப் பூசலிடுவர்.

அவர்கள் நிலை, யானை கண்ட குருடர் நிலை போன்றதாகும். கண்ணுடையவன் ஒருவன் குருடர் நிலை கண்டு இரங்கி அவரிடம் சென்று உண்மையை எடுத்துக் கூறித் தெளிவிக்க முயன்றால் அவர்கள் அதனை ஏற்காமல் இகழவே செய்வர். அதுபோல யாம் பிற சமயத்தார்க்கு இந்நூலால்  உண்மை இது என்று உணர்த்தினால் அவர்கள் அதனைக் கொள்ளாமல் இகழ்ந்து போவர். அதனை யாமும் பொருளாகக் கொள்ளோம் என்பாராய், கேளாம் புறன் என்றார் ஆசிரியர்.

ஞானசம்பந்தர் வழியில்:

இக்கூற்று, ஞானசம்பந்தர் வாக்கினைப் பின்பற்றி அமைந்தது எனலாம். சம்பந்தர் பிற சமயத்தாரைக் குறிப்பிட்டு, அவர்தம் புறனுரை யாதொன்றும் கொள்ளேன் என்றாற் போலப் பலவிடத்தும் கூறிச் செல்லுதல் காணத்தக்கது.

 
மேலும் சிவஞானபோதம் »
temple news
நூல்முகம்: இவ்வுலகம், முதலில் சில பக்கங்களும் முடிவில் சில பக்கங்களும் இல்லாத நிலையில் கிடைத்த ஒரு ... மேலும்
 
முதல் நூற்பாமுதற் கடவுள் ஒருவர் உண்டு என்பதை நிறுவுவது முதல் நூற்பாவின் குறிக்கோள். காணப்பட்ட உலகைக் ... மேலும்
 
அம் முதல்வன் அழித்தற்  கடவுளே:இனி அம் முதல்வன் யாவன்? என்ற வினா இயல்பாக எழுகிறது. அதற்கு ... மேலும்
 
இரண்டாம் நூற்பாமுதல் நூற்பாவோடு இந்நூற்பா தொடர்புற்று நிற்கிறது. எவ்வாறெனில், முதல் நூற்பாவில் உலகம் ... மேலும்
 
எடுத்துக்காட்டு -2வெண்பா7. ஒன்று என்றது ஒன்றேகாண்; ஒன்றே பதி; பசுவாம்ஒன்று என்ற நீ பாசத்தோடு உளைகாண்;- ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar