Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவஞானபோதம் பகுதி-2 சிவஞானபோதம் பகுதி-4
முதல் பக்கம் » சிவஞானபோதம்
சிவஞானபோதம் பகுதி-3
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2013
02:11

முதல் நூற்பா

முதற் கடவுள் ஒருவர் உண்டு என்பதை நிறுவுவது முதல் நூற்பாவின் குறிக்கோள். காணப்பட்ட உலகைக் கொண்டு காணப்படாத கடவுளின் இருப்பை உணர்த்துகிறார் ஆசிரியர்.

நூற்பாவின் முற்பகுதி, இவ்வுலகைத் தோற்றுவித்து நடத்தும் முதற் கடவுள் உண்டு என்பதைப் பொது வகையால் நிறுவும். பிற்பகுதி, அம்முதற் கடவுள் முற்றழிப்பைச் செய்பவனாய் உள்ள சிவபெருமானேயன்றிப் பிறர் அல்லர் எனச் சிறப்பு வகையால் நிலை நாட்டும்.

இனி, நூற்பாவை நோக்குவோம்.

நூற்பா

அவன் அவள் அதுஎனும் அவைமூ வினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்.

இந்த நூற்பா எதனைக் கூற எழுந்தது என்பதனைக் கருத்துரையுட் கூறுகின்றார் ஆசிரியர்.

ஆசிரியர் கூறும் கருத்துரை

என்பது சூத்திரம். என் நூதலிற்றோ எனின், சங்கார காரணனாய் உள்ள முதலையே முதலாக உடைத்து இவ்வுலகம் என்பது உணர்த்துதல் நூதலிற்று.

கருத்துரையின் பொருள்

பிரமன், மால், உருத்திரன் ஆகிய மூவரையும் மும்மூர்த்திகள் என்பர். அவர்கள் சிவபெருமானது ஆணை வழி நின்று, முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களை ஓர் எல்லையளவில் செய்வர்.

அவர்களுள் உருத்திரன் தான் செய்த புண்ணிய மிகுதியால் சிவனுக்குரிய உருவத்தையும், தொழிலையும், உருத்திரன் என்னும் பெயரையும் பெற்று, அவனது சங்காரத் தொழிலை ஒரு பகுதியளவில் மட்டும் செய்வான். அவன் செய்வது ஏகதேச சங்காரம் எனப்படும். (ஏகதேசம்- பகுதி)

அம்மூவரும் ஒவ்வொரு தொழிலுக்கே உரியவராக, சிவபெருமான் ஒருவனே முத்தொழிலுக்கும் முதல்வனாய் நின்று இறுதிக் காலத்தில் எல்லாவற்றையும் எஞ்சாமல் ஒடுக்குகின்ற முற்றழிப்பைச் செய்வான். முற்றழிப்பு மகாசங்காரம் எனப்படும். அதனைச் செய்பவன் மகா சங்கார காரணன் எனப்படுகின்றான்.

மகாசங்காரம் ஆகிய முற்றழிப்பைச் செய்யும் முதல்வனையே முதற் கடவுளாக உடையது இவ்வுலகம் என்பது மேலே உள்ள கருத்துரையின் பொருளாகும்.

நூற்பாவின் பொருள்:

இவ்வுலகம் ஒரு தொகுதிப் பொருள். ஒருவன், ஒருத்தி, ஒன்று என்பவற்றின் கூட்டமே உலகம். எனவே, அது பல பகுதிகள் கூடி அமைந்தது என்பது விளங்கும். மேலும், நம் அறிவினால் சுட்டி அறியப்படுவதாகவும் உள்ளது.

இவ்வாறு பகதிகளை உடையதாயும், சுட்டியறியப்படுவதாயும் இருத்தலால், இவ்வுலகம் தோன்றுதல், நிற்றல், அழிதல் ஆகிய முத் தொழில்களை உடையது என்பது விளங்கும்.

அறிவற்றதாகிய உலகம் தானே தோன்றி நின்று அழியும் என்றல் பொருந்தாது. அதனை தோற்றுவித்து நடத்துவதற்கு ஒரு பேரறிவாளன் இருத்தல் வேண்டும்.

இவ்வுலகம் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்பு ஒடுங்கியிருந்தது. முன்பு அதனை அவ்வாறு ஒடுங்குமாறு செய்தவனே மீள அதனைத் தோற்றுவிப்பவனும் ஆவான்.

எனவே ஒடுக்கத்தைச் செய்பவனாகிய அழித்தற் கடவுளே உலகிற் முதற் கடவுள் ஆவான் என்றும், ஏனையோர் முதல்வர் அல்லர் என்றும் ஆராய்ச்சியில் வல்லோர் கூறுவர்.

பதவுரை:

அவன் அவள் அது எனும் அவை - அவன், அவள் என்று சுட்டிக் குறிப்பிடும் உயர்திணைப் பொருள்களையும், அது என்று சுட்டிக் குறிப்பிடும் அஃறிணைப் பொருள்களையும் தனது பகுதிகளாக உடைய இவ்வுலகமாகிய தொகுதி
மூவினைமையின் - தேதான்றி, நின்று, அழியும் தன்மை உடையதாய் இருத்தலின்
தோற்றிய திதியே - அஃது உள்பொருளேயாகும்; மேலும் ஒருவன் தோற்றுவித்ததாகும்.
ஒடுங்கிய உளதாம் - இவ் வுலகம், தான் தோன்றுவதற்கு முன்பு அவனிடத்தில் ஒடுங்கி நின்றது. ஒடுங்குதற்கு இடமாய் நின்ற அவனிடத்தினின்றும் அது மீளத் தோன்றுவதாகும்.
மலத்தால் - தன்னிடம் ஒடுங்கி நின்ற இவ்வுலகத்தை அவன் தோற்றுவிப்பது எதன் பொருட்டு எனில், உயிர்களைப் பற்றியுள்ள ஆணவ மலமாகிய மாசினை நீக்குதற் பொருட்டேயாகும்.
அந்தம் ஆதி - முற்றழிப்புக் காலத்தில் இவ்வுலகத்தையெல்லாம் தன்னிடம் ஒடுக்கி முடிவை உண்டாக்குகின்ற அழித்தற் கடவுளே முதல்வன்; ஏனையோர் முதல்வர் அல்லர்.
என்மனார் புலவர் - இவ்வாறு கூறுவர் அளவை நூல் உணர்ந்த அறிஞர்.

சிறப்புரை:

அவை என்பதற்குத் தொகுதி என்பது பொருள். மக்கள் பலர் திரண்டு கூடியுள்ள இடத்தை அவை என்றும், அவைக்களம் என்றும் குறிப்பிடும் வழக்கினை இங்கு நினைவு கூரலாம்.

தோற்றிய என்பதற்குத் தோற்றுவித்த என்பது பொருளாகும். தோன்றிய எனத் தன்வினையாகக் கூறாமல், தோற்றிய எனப் பிற வினையாகக் கூறியதனால், இவ்வுலகம் தானே தோன்றாது என்பதும், தன்னைச் செயற்படுத்தும் முதல்வன் ஒருவனை உடையது என்பதும் உணர்த்தப்பட்டது.

திதி என்னும் வடசொல்லுக்கு நேரான பொருள் நிலை என்பது. இவ்விடத்தில் அச்சொல் அப்பொருளைத் தராமல், உள்ளது என்னும் பொருளைத் தந்தது.

ஒடுங்கி என்பது பெயர். ஒடுங்குதற்கு இடமாய் உள்ளவன் என்று அது பொருள்படும்.

ஒடுங்கி உளதாம் என்ற தொடரை ஒடுங்கியினின்று உளதாம் என அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்.

மலத்து என்பதனை மலத்தால் என வைத்துக் கொள்ள வேண்டும்.

நோயால் மருத்துவரை அணுகினான் என்றால், நோய் நீங்குதல் காரணமாக  மருத்துவரை அணுகினான் என்று பொருள் கொள்கிறோம். வறுமையால் வள்ளலை நாடினான் என்றால், வறுமை நீங்குதல் காரணமாக வள்ளலை நாடினான் எனப் பொருள் கொள்கிறோம். அவ்வாறே இங்கும் மலத்தால் உளதாம் என்பதற்கு மலம் நீங்குதல் காரணாக உலகம் உளதாயிற்று எனப் பொருள் கொள்ள வேண்டும்.

அந்தம் என்றால் முடிவு; ஆதி  என்றால் முதல் என நாம் அறிவோம். ஆனால் அச்சொற்கள் இங்குக் குறிக்கும் பொருள் அவையல்ல. அந்தத்தைச் செய்பவனை அழித்தற் கடவுளை அந்தம் என்றார் ஆசிரியர்; முதலாய் நிற்பவனை- முதற் கடவுளை ஆதி என்றார். எனவே அந்தம் ஆதி என்ற தொடரால், முற்றழிப்பைச் செய்பவனே முதற் கடவுள் என்றாராயிற்று.

அந்தமே ஆதி என ஏகாரம் சேர்த்துக் கூறுதல் ஆசிரியர் கருத்து. ஆயினும், அந்த ஏகாரத்தைத் தொகுத்து அந்தம் ஆதி என்றார்.

கூறுகள்:

இந்நூற்பாவின் பொருளை மூன்று கூறுகளாக வகுத்துக் கொண்டு விளக்குகிறார் ஆசிரியர். அக் கூறுகளும் அவற்றில் அமைந்த பொருள்களும் வருமாறு:

கூறு        பொருள்        
                       
முதற்கூறு        1. உலகம் முத்தொழில் உடையது
இரண்டாம் கூறு         2. உலகம் உள் பொருள்
                                 3. உலகம் செய்வோனை உடையது
                                 4. அச் செய்வோன் அழித்தற்கடவுளே
மூன்றாம் கூறு          5. அழித்தற் கடவுளே உலகிற் முதல்
இனி, இவற்றைத் தனித்தனியாய் எடுத்து விளக்குவோம்.

முதற் கூறு

உலகம் முத்தொழிலை உடையது

உலகம் நிற்றலை உடையது என்பது மட்டுமே நமக்குத் தெரிகிறது. அதற்குத் தோற்றமும் அழிவும் உண்டு என்பதை எவ்வாறு துணிவது? உலகின் தோற்றமும் இறுதியும் நம் காட்சிக்குப் புலனாவதில்லை என்பதனாலயே அவையில்லை எனலாமா?  நில்லா வுலகம் எனவும், மன்னாவுலகம் எனவும் அதன் நிலையாமையை உயர்ந்தோர் உணர்த்தியுள்ளனர்.

அனுமானம்:

காட்சிக்கு வராதவற்றை உண்டு எனத் துணிவதற்கு ஒரு வழியுண்டு. அதுவே கருதி உணர்தல் என்னும் வழி. வடமொழியில் அதனை அனுமானம் என்பர்.

கருதலாவது, நேரே காணப்படாமல் மறைந்திருக்கின்ற பொருளை அதனை விட்டு நீங்காத மற்றொரு பொருளை ஏதுவாகக் கொண்டு துணிவதாகும். நெடுந்தொலைவில் உள்ள மலை மேல் புகை தோன்றுதலைக் கொண்டு அங்கே நெருப்பு உண்டு என்று துணிகிறோம் . நெருப்பை நேரே காணவில்லையாயினும் அதனை விட்டு நீங்காத புகையை ஏதுவாகக் கொண்டு அங்கே நெருப்பு இருப்பதை உய்த்து அறிகிறோம்.

இவ்வாறு கருதி உணர்வதாகிய அனுமானத்தைப் பயன்படுத்தி உலகிற்குத் தோற்றமும் அழிவும் உண்டு என்பதை நிறுவலாம், மெய்கண்டார் அம்முறையைத் தான் மேற்கொள்கிறார்.

அவயவப் பகுப்பு உடையதாதல்:

குடம், ஆடை முதலிய பொருள்கள் தோன்றுவதையும் அழிவதையும் கண்கூடாகப் பார்க்கின்றோம். அப்பொருள்களின் தன்மையை உற்றுநோக்கினால் சில உண்மைகள் புலனாகும்.

முதலாவது உண்மை, அவை பல பகுதிகளால் ஆணவை என்பது. பகுதிகளை ஒன்று சேர்க்கும் பொழுதுபொருள் தோன்றுகிறது. அவை பிரிக்கப்படும்பொழுது பொருள் அழிவுறுகிறது. குடத்தைச் சிறுசிறு துண்டுகளாக உடைத்து விடலாம். ஆடையைப் பல பகுதிகளாகக் கிழிக்கலாம்; நூல்களாகப் பிரிக்கலாம். எனவே பகுதிகளின் சேர்க்கைதான் பொருளின் தோற்றம் என்பதும், பகுதிகளின் நீக்கம்தான் பொருளின் அழிவு என்பதும் விளங்கும்.

பகுதிகளை இணைத்து உண்டாக்குகின்ற பொருள்கள் யாவும் செயப்படு பொருள்கள் ஆகின்றன. அவற்றைக் காரியப் பொருள்கள் என்பர். எனவே செயப்படு பொருளாகிய காரியம் எல்லாம் அவயவப் பகுப்பு உடையன என்பதும், அவயவப் பகுப்பு உடையன எல்லாம் தோன்றி நின்று  அழியும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

சுட்டியறியப்படுதல்:

மற்றோர் உண்மையைப் பார்ப்போம். மேற்கூறிய, குடம், ஆடை முதலிய காரியப் பொருள்களெல்லாம் நம்மால் சுட்டியறியப்படுவனவாகவும் உள்ளன.

சுட்டியறிதல் என்பது, எல்லையுடைய, வரையறைக்கு உட்பட்ட பொருள்களை இஃது இன்னது என அளவிட்டு அறிவது.

நாம் காணும் பொருள்கள் யாவும் இடம், காலம் என்னும் எல்லையுடையனவாய், இன்னது என வரையறுத்துச் சுட்டி உணரப்படுவனவாய் உள்ளன. இவ்வாறு நம்மறிவால் சுட்டியறியப்படும் பொருள்கள் எல்லாம் தோன்றி நின்று அழியும் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இவ்வுண்மைகளைக் கொண்டு நாம் பின்வரும் முடிவுக்கு வருகிறோம். அவயவப் பகுப்பு உடையதாதல், சுட்டியறியப்படுதல் ஆகிய தன்மைகள் தோன்றி நின்று அழிவனவாகிய பொருள்களை விட்டு என்றும் நீங்காதவை என்பதுதான் அம்முடிவு.

நீங்காத அத்தன்மைகளை ஏதுவாகக் கொண்டு, அத்தன்மைகளையுடைய பொருள் எதுவாயினும் அது தோற்ற அழிவுகளுக்கு உரியது என்று முடிவு செய்யலாம். நீங்காத புகையை ஏதுவாகக் கொண்டு நெருப்பு இருப்பதைத் துணிதல் போன்றதே இது.

அனுமானம் ஆகிய இம்முறையில், துணிப்படும் பொருள் மேற்கோள் எனப்படும். அதனைத் துணிதற்கு உதவியாக அதனை விட்டு நீங்காதிருக்கும் பொருள் ஏது எனப்படும்.

மேற்கொள் : குடம், ஆடை முதலியன தோன்றி நின்று அழியும்.
ஏது : அவயவப் பகுப்பும், சுட்டியறியப்படுதலும் உடைமையால்.

உலகம் தோன்றி அழியும் என்பதை அனுமானத்தால் நிறுவுதல்:

இனி, இவ்வனுமானத்தை இப்பெரிய பரந்துபட்ட உலகத்தொடு பொருத்திப் பார்ப்போம்.

இவ்வுலகத்தின் தோற்றமும் அழிவும் நமக்குப் புலனாகவில்லை. ஆயின், தோன்றியழியும் பொருள்களைவிட்டு நீங்காத தன்மைகள் இவ்வுலகத்தினிடத்திலும் நீங்காமல் பொருந்தியிருக்கின்றன என்பது உறுதியாகப் புலனாகிறது. அஃதாவது, அவயவப் பகுப்பு உடைமை, சுட்டியறியப்படுதல் ஆகிய தன்மைகள் இவ்வுலகத்தினிடமும் காணப்படுகின்றன.

இவ்வுலகம் ஒரு தனி நிலைப்பொருள் அன்று; பல பொருள்களின் கூட்டமாய் உள்ள ஒரு தொகுதிப் பொருளேயாகும். உலகமாகிய தொகுதியைப் பல பகுதிகளாகப் பிரித்து விடலாம். அவன், அவள் என்பவனாகிய உயர்திணைப் பொருள்களும், அது என்பதாகிய அஃறிணைப் பொருள்களும் எனப் பகுத்து விடலாம். எனவே உலகம் என்பதும் குடம் ஆடை முதலியன போல அவயவப் பகுப்பு உடையதே என்பது விளங்கும்.

இனி இவ்வுலகம் குடம் ஆடை முதலியன போல இடம், காலம் என்னும் வரையறைக்கு உட்பட்டதாய், நம் அறிவினால் இன்னது எனச் சுட்டியறியப்படுவதாய் இருப்பது தெளிவு.

இத்தன்மைகளை உடைமையால் இவ்வுலகமும் தோன்றி நின்று அழியக் கூடியதே என்பதை எளிதில் உய்த்தறியலாம். இதனைப் பின்வருமாறு அமைத்துக் காட்டலாம்.

மேற்கோள் : உலகம் தோன்றல், நிற்றல், அழிதல் என்னும் முத்தொழில்களை உடையது.

ஏது : அவயவப் பகுப்பும் சுட்டியறியப்படுதலும் உடைமையால்

எடுத்துக்காட்டு : எது எது அவயவப் பகுப்பும் சுட்டியறியப்படுதலும் உடையதோ அது அது தோன்றுதல், நிற்றல், அழிதல் ஆகிய மூவினைகளை உடையது.

குடம் ஆடை முதலியன போல,

இவ்வாறு அனுமானம் ஆகிய வழியை மேற்கொண்டு, உலகம் முத்தொழிலுக்கு உட்பட்டது என்பதை நிறுவுகிறார் ஆசிரியர். ஆயின் அவர் அனுமானத்தை நூற்பாவில் வெளிப்படையாக அமைக்கவில்லை.

குறிப்பு ஏதுக்கள்

அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின்  என்னும் முதலடிக்கு, அவன் அவள் அது என இவ்வாறு அமைந்த உலகம் முத்தொழிலை உடையது என்பது பொருள். இங்கு மேற்கோள், அஃதாவது உலகம் முத்தொழில் உடையது என்பது வெளிப்படையாகச் சொல்லப்பட்டுள்ளது. அதனைத் துணிதற்கு இன்றியமையாத ஏதுக்கள் அவயவப் பகுப்பும் சுட்டியறியப்படுதலும் ஆகியவை. அவை வெளிப்படச் சொல்லப் பொறாமை காணலாம். அவ்வேதுக்களைத் தனித்தனியாக எடுத்துச் சொல்லவில்லையாயினும், உலகத்திற்கு அடைமொழியாக அமைத்த அவன் அவள் அது எனும் என்ற தொடரில் அவ்வேதுக்களைக் குறிப்பாக அமைத்துள்ள நுட்பம் நோக்குதற்குரியது.

உலகம் என வாளா கூறாது அவன் அவள் அது எனும் அவை என அடைகொடுத்துக் கூறினமையால், அவன் அவள் அது என்பனவாகிய பகுதிகளை உடையதாய்- அவயவப் பகுப்பு உடையதாய் உலகம் உள்ளது என்பதைக் குறிப்பால் உணர்த்தினார். மேலும் அவன் முதலிய சுட்டுப்பெயரால் கூறினமையால் உலகம் சுட்டியறியப் படுவதாய் உள்ளது என்பனதயும் குறிப்பால் பெற வைத்தார்.

இவ்வாறு குறிப்பு ஏதுக்களால் உலகம் முத்தொழில் உடையது என்பதை நிறுவினார் ஆசிரியர்.

இப்பொருளின் ஐயம் ஏற்படா வகையில் தெளிவுறுத்தற்கு ஆசிரியர் வரைந்த பொழிப்புரையை இனிப் பார்ப்போம். அப்பொழிப்புரை மேற்கோளும் ஏதுவுமாய் அமைந்துள்ளது.

மேற்கோள்

ஈண்டு உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று
சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசம்
உடைத்து - என்றது

ஏது

தோற்றமும் ஈறும் உள்ளதன் பாலே கிடத்தலின்

மேற்கோள் விளக்கம்

நூற்பாவில் உலகத்திற்கு அடைமொழி கொடுத்துக் கூறியது போலவே இம்மேற்கோளிலும் பிரபஞ்சம் என வாளா கூறாது, ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் என அடைமொழி சேர்த்துக் கூறி ஏதுக்களைக் குறிப்பால் பெற வைக்கிறார்.

ஒருவன் ஒருத்தி ஒன்று எனப்பட்ட பிரபஞ்சம் என்றதனால் உலகம் பலவாகப் பிரிக்கப்படும் தன்மையை  உடையது என்பதையும், சுட்டப்பட்ட பிரபஞ்சம் என்றதனால் சுட்டியறியப்படும் தன்மை உடையது என்பதையும் குறிப்பாய் உணர்த்தி, உலகம் முத்தொழில் உடையது என்பதை இங்கும் உணர வைக்கிறார்.

ஏது விளக்கம்

வெளிப்படை ஏது:

மேற்கோளைத் துணிவதற்குக் குறிப்பு ஏதுக்களே போதியனவாக இருக்க, அவற்றால் தெளிவ பெறமாட்டாத மாணவரின் அறிவு நிலையைக் கருத்திற் கொண்டு இங்கு வெளிப்டை ஏது ஒன்றையும் தருகின்றார். தோற்றமும் ஈறும் உள்ளதன்பாலே கிடத்தலின், என்பதுஅவ் வெளிப்படை ஏது. அதன்பொருள், தோன்றுதலும் அழிதலும் நிற்றல் தொழிலின் பக்கத்திலேயே கண்கூடாய் அறியக் கிடத்தலின் என்பது.

குடம், ஆடை முதலிய பொருள்கள் இப்பொழுது நிற்பனவாய்க் காணப்படுகின்றன. இவை முன்னே தோன்றுதல் தொழிலையும் பின்னே அழிதல் தொழிலையும் உடையன என்பதை அறியாதார் யார்? நம்  உடம்பையே எடுத்துக் கொள்வோம். இவ்வுடம்பு இப்பொழுது நிற்கிறது. இது முன்னே தோன்றியது என்பதையும் அறிவோம்; பின்னே ஒரு நாளில் அழியும் என்பதையும் உறுதியாக அறிவோம்.

எனவே, உள்ளது என உணரப்படுவன எல்லாம் முன்னே தோற்றத்தையும் பின்னே அழிவையும் உடையன என்பதில் ஐயமில்லை. ஆதலின், இப்பொழுது நிற்பதாக- உள்ளதாக உணரப்படும் இப்பெரியவுலகமும் தோற்ற அழிவுகளை உடையது என்பதில் என்ன ஐயம்?

இவ்வாறு வெளிப்படை ஏதுவை அமைத்த ஆசிரியர் அதனை மேலும் விளக்குதற்கு எடுத்துக் காட்டுக் கூறுகின்றார்.

எடுத்துக்காட்டு

வெண்பா

1. பூதாதி ஈறும் முதலும் துணையாகப்
பேதாய், திதி ஆகும்; பெற்றிமையின் -ஓதாரோ
ஒன்று ஒன்றில் தோன்றி உளதாய் இறக் கண்டும்
அன்று என்றும் உண்டு என்ன ஆய்ந்து.

இதன் பொருள்:

உலகம் இன்றுபோல என்றும் இருக்கும் எனக்கொண்டு மயங்கி நிற்கின்ற பேதைமை உடைய மாணவனே, பொருள்களெல்லாம் முன்னே தோற்றத்தையும் பின்னே அழிவையும் உடன்கொண்டு இடையே சிறிது காலம் நிற்பன என்னும் உண்மையைக் காட்சியினாலேயே நீ கண்டு கொள்ளலாமே என்று ஆசிரியர் உணர்த்துகிறார்.

அதனைக்கேட்ட மாணவனுக்கு ஓர் ஐயம் எழுகிறது, உலகத்தில் ஒன்று அழியுங்கால் மற்றொன்று தோன்றுவதைப் பார்க்கிறோம். நாள்தோறும், ஏன், கணந்தோறும் கணக்கில்லாத உடல்கள் மடிய, அதே நேரத்தில் கணக்கில்லாத உடல்கள் பிறந்து விடுவதையும் அறிகின்றோம். அவ்வாறிருக்க, உலகத் தொகுதி முழுவதும் ஒரு காலத்தே ஒருங்கே தோன்றும் என்பதையும், ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு சேர  அழிந்து போகும் என்பதையும் எப்படி நம்புவது? என்பதே அவ்ஐயம். அதனைத் தெளிவிக்கும் முறையில் பின்வருமாறு கூறுகிறார் ஆசிரியர்.

பலவாகிய ஓரினப் பொருள்கள் ஒவ்வொரு காலத்தில் ஒருங்கே தோன்றி, ஒருங்கே நின்று, ஒருங்கே அழிதலைக் காட்சியிற் காணலாம். புல், பூண்டு முதலியவை ஒரு காலத்தில் ஒருங்கே தோன்றிச் செழித்து வளருகின்றன; மற்றொரு காலத்தில் வேரோடு அழிந்தொழிகின்றன. ஓர் இனத்தைச் சேர்ந்த வித்துக்கள் மழைக்காலத்தில் ஒருங்கே முளையைத் தோற்றுவிக்க, அவை ஒருங்கே வளர்ந்து பயிராகிப் பயன் தந்து, பின் தம் கால எல்லையில் ஒருங்கே அழிதலையும்  காண்கிறோம். அது போல இப்பொழுது நிற்பதாகிய இவ்வுலகமும் அதற்குரிய காலம் வரும்போது முழுவதுமாய் அழியும் என்பதை அறிவாயாக.   

பதவுரை:

பேதாய் - உலகம் தோற்றமும் அழிவும் இன்றி என்றும் இருப்பது என்று கூறும் உலகாயதரது கொள்கையை உண்மையென நம்பி, மயங்குகின்ற பேதைமையை உடைய மாணவனே,

பூதாதி - பூதங்களை முதற்காரணமாக உடைய, அவற்றால் ஆக்கப் பெற்ற உலகப் பொருள்கள் யாவும்.

முதலும் ஈறும் துணையாகத் திதி ஆகும் - முன்னே தோற்றமும் பின்னே அழிவும் நிகழ, இடையில்  சில காலம் நிலைத்து நிற்பன ஆகின்றன.

உலகப் பொருள்களுக்கு உள்ள இந் நிலைமையே உலகுக்கும் உரியதாகும். ஏனென்றால் உலகமும் பூதங்களால் ஆனதுதானே. உலகம் தோன்றி இடையில் நின்று, பின் அழியக்கூடியது என்பது இதனால் விளங்கும்.

உலகப் பொருள்கள் சில தோன்றச் சில நிற்கின்றன; வேறு சில அழிகின்றனவேயன்றி எல்லாம ஒருங்கே தோன்றுதலும், ஒருங்கே அழிதலும் இல்லையே. அதுபோல, இப்பெரியவுலகமும் ஒரு பகுதி தோன்றும்; ஒரு பகுதி நிற்கும்; ஒரு பகுதி அழியும் என்று கொண்டால் என்ன? உலகம் முழுதும் ஒரு காலத்தே தோன்றும்; ஒரு காலத்தே ஒருங்கே அழியும் என்று கூறுவது எங்ஙனம் பொருந்தும்? என்ற ஐயத்திற்கு இனி விடை கூறுகிறார் ஆசிரியர்.

ஒன்று ஒன்றில் - ஒவ்வொரு காலத்தில்

பெற்றிமையின் - (எண்ணற்ற பொருள்கள்) இனம் என்ற தன்மையினால்

தோன்றி உளதாய் இறக் கண்டும் - ஒருங்கே தோன்றி, ஒருங்கே நின்று, ஒருங்கே அழிவதைக் காண்கின்றோம். (புல், பூண்டு, பயிர்கள் முதலியவற்றை இதற்கு உதாரணமாகக் காட்டலாம்) இதனை அறிந்திருந்தும்,

என்றும் - என்றாயினும்

அன்று உண்டு என்ன - உலகத்திற்கும் ஒருங்கே அழியும் காலம் வரும்; பின் ஒருங்கே தோன்றும் காலம் வரும் என்று

ஆய்ந்து ஓதாரோ - ஆராய்ந்து கூற மாட்டார்களோ அறிவுடையோர்?

சிறப்புரை:

பூதாதி என்பது பூத ஆதி எனப் பிரிந்து, பூதங்களை ஆதியாக - முதற்காரணமாக உடைய உலகப் பொருள்களை உணர்த்தி நின்றது.

திதி என்பது நிலைத்தொழில்.

பெற்றிமை - தன்மை; இங்கு, இனத்தைக் குறித்தது.

ஒன்று ஒன்றில் என அடுக்கிக் குறிப்பிட்டது காலத்தையாகும்.

தோன்றி உளதாய் இற என்பதில் ஒவ்வொன்றோடும் ஒருங்கே என்பதைச் சேர்த்து ஒருங்கே தோன்றி ஒருங்கே உளதாய் ஒருங்கே இற என வைத்துப் பொருள் கொள்ள வேண்டும்.

இவ்வாறு குறிப்பாகவும் வெளிப்படையாகவும் அமைத்த ஏதுக்களாலும், எடுத்துக்காட்டினாலும் உலகம் தோன்றல், நிற்றல், அழிதல் என்னும் மூவினையுடையது என்பதை நிறுவினார் ஆசிரியர்.

இரண்டாம் கூறு

தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம் என்ற இரண்டாம் அடியின் விளக்கமாக இவ்விரண்டாம் கூறு அமைகிறது.

இதன் கருத்து உணர்த்துவாராய் ஆசிரியர் செய்த பொழிப்புரை வருமாறு:

இனி இல்லதற்குத் தோற்றம் இன்மையின், உள்ளதற்குச்
செய்வோர் இன்றிச் செய்வினை இன்மையின், ஒடுங்கின
சங்காரத்தின் அல்லது உற்பத்தியில்லை- என்றது.

இரண்டு ஏதுக்களும் ஒரு மேற்கோளும்:

இஃது இரண்டு ஏதுக்களும் ஒரு மேற்கோளுமாக அமைந்துள்ளது. இல்லதற்குத் தோற்றம் இன்மையின் என்பது ஓர் ஏது. உள்ளதற்குச் செய்வோர் இன்றிச் செய்வினை இன்மையின் என்பது மற்றோர் ஏது. ஒடுங்கின சங்காரத்தின் அல்லது உற்பத்தியில்லை என்பது இவ்விரு ஏதுக்களின் வழியாக நிறுவப் பெறுகின்ற மேற்கோள்.

முதல் ஏதுவினால் உலகம் உள்பொருள் என்ற கருத்துப் பெறப்படும். இரண்டாம் ஏதுவினால் உலகம் செய்வோனை உடையது என்ற கருத்துப் பெறப்படும். இவ்விரு கருத்துக்களின் வழியாக உலகத்தை ஒடுக்குதலும் மீளத் தோற்றுவித்தலும் ஆகிய  செயலைச் செய்வோன் அழித்தற் கடவுளே என்பதாகிய மேற்கோளை நிறுவுவார் ஆசிரியர். இனி, விளக்கமாகக் காண்போம்.

விளக்கம்

உலகம் உள்பொருள்:

உலகம் இல்பொருள் எனவும், சூனியம் எனவும் சொல்லுகிற கொள்கைகள் உண்டு. சைவ சித்தாந்தம் அவற்றை ஏற்பதில்லை. உலகம் இல்லாத பொருளன்று. உண்மையில் உள்ளதே என்றும், அஃது அனுபவமாக உணரப்படுவதே என்றும் அது கூறும்.

மெய்கண்டார் உலகம் உள்ளது என்பதனை நூற்பாவில் திதியே என்பதனால் குறிப்பிட்டார். இங்கு இல்லதற்குத் தோற்றம் இன்மையின் என்னும் ஏதுவினாலும் நிறுவுகிறார். இல்லாதது எக்காலத்தும் இல்லாததேயாம். அஃது ஒரு காலத்தும் தோன்ற மாட்டாது. முயலின் தலையில் கொம்பு இல்லாதது ஆதலில் அஃது என்றும் தோன்றாது. ஆயின் உலகம் தோன்றுதல் உடையது என்பதை முற்பகுதியில் பார்த்தோம். ஆகவே தோன்றுதல் உடைய உலகத்தை இல்பொருள் என்றல் பொருந்தாது. அஃது உள்ளதேயாம்.

சற்காரிய வாதம்:

இங்கே ஓர் வினா எழுதல் கூடும். உலகம் உள்ளதாயின் தோன்ற வேண்டுவது எதற்கு? அதுதான் உள்ளதாயிற்றே என்பதே அல்வினா. சைவ சித்தாந்தத்திற்கு அடிப்படையாக உள்ள ஒன்றை விளங்கிக் கொண்டால் அவ்வினா பொருளற்றது என்பது புலனாகும். அவ்வடிப்படையே சற்காரிய வாதம் என்பது.

உள்ளது தோன்றும் என்பது சற்காரிய வாதம் ஆகும். அஃதாவது, முன்னேயே உள்ளது பின்னே செயப்படு பொருளாய்த் தோன்றும் என்பதாம். சத் - உள்ளது; காரியம் - செயப்படு பொருளாய்த் தோன்றுதல்.

எனவே தோன்றுகின்ற காரியப்பொருள் யாவும் தோன்றுவதற்கு முன்னேயும் உள்ளது என்து கொள்ளப்படும். அதன்படி, குடமாகிய காரியம் தோன்றுவதற்கு முன்னேயே மண்ணில் இருந்தது. பிற காரியப் பொருள்களும் இவ்வாறேயாம் எனக் கூறுதலே சற்காரிய வாதம்.

குடம் முன்பு இல்லாதிருந்து பின்பு தோன்றிற்று எனக் கொண்டால் என்னை என்று வினவலாம். அவ்வாறு கொண்டால், இல்லாதது தோன்றும் என்று ஆகிக் குடம் மண்ணிலிருந்துதான் தோன்ற வேண்டும் என்ற வரன் முறையின்றி, எதுவும் எதிலிருந்தும் தோன்றலாம் என்று ஆகி விடும், அவ்வாறு இன்றி, இது இதிலிருந்து தான் தோன்றும். வேறொன்றிலிருந்து தோன்றாது என்னும் வரையறையே எங்கும் இருக்கிறது. ஆகவே இல்லது தோன்றும் என்றல் பொருந்தாது.

பொருளுக்கு இரு நிலைகள்:

தோன்றுதல் உடைய பொருள்களுக்கு இரு நிலைமைகள் உண்டு. ஒன்று, புலனாகாது நுட்பமாய் நிற்கும் நிலை. அது காரண நிலை எனப்படும். மற்றொன்று, புலப்படுவதாய்ப் பருமையாய் நிற்கும் நிலை. இது காரிய நிலை எனப்படும். இவ்விரண்டு நிலைகளிலும் பொருள் உள்ளதேயாம்.

புலனாகாத நிலையில் உள்ளது புலப்படும் நிலைக்கு வரும்பொழுது பொருள் தோன்றிற்று என்கிறோம். மண்ணாகிய காரணத்தில் புலனாகா நிலையிலிருந்த குடம் வனைவோன் செயலால் புலப்படும் நிலையை அடைந்தபோது குடம் தோன்றிற்று என்று சொல்கிறோம்.

இந்த முறையிலேயே, உள்ளதாகிய உலகம் தோன்றும் என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது. அதன்பொருள் புலனாகாத நிலையில் இருந்த உலகம் புலப்படும் நிலையை அடையும் என்பதேயாம்.  ஆகவே உலகம் உள்ளதாயின் தோன்ற வேண்டுவது எதற்கு? அதுதான் உள்ளதாயிற்றே என்ற வினா பொருளற்றதாகும்.

தோற்றம் என்பது புலனாகாது உள்ள பொருள் புலப்படும் நிலையை அடைதலேயாகும் எனக் கண்டோம். அவ்வாறே அழிவு என்பதும் புலனாகி நின்ற பொருள் புலனாகாத நிலையை அடைவதேயன்றி அடியோடு இல்லாமற் போதல் அன்று. உள்ளது போகாது இல்லது வாராது என்பது சற்காரிய வாதத்தில் கூறப்படும் உறுதியான முடிவு.

உலகம் செய்வோனை உடையது:

இல்லதற்குத் தோற்றம் இன்மையின் என்னும் ஏதுவினால் சற்காரிய வாதத்தை நினைவுறுத்தி உலகம் உள்பொருள் என்பதை நிறுவிய ஆசிரியர், உள்ளதற்குச் செய்வோரின்றிச் செய்வினையின்மையின், என்னும் ஏதுவினால் உலகம் செய்வோனை உடையது என்பதை நிறுவ முற்படுகிறார்.

இவ்வேதுவின் கருத்து, உள்ளதாய்ச் செயற்படும் பொருள்யாவும் செய்வோரை உடையன. ஆதலால், அத்தன்மை வாய்ந்த உலகமும் செய்வோனை உடையதே என்பதாம். இக்கருத்துப் பற்றியே நூற்பாவில் தோன்றிய எனத் தன்வினையாகக் கூறாமல் தோற்றிய  எனப் பிறவினையாகக் குறிப்பிட்டார் ஆசிரியர். உலகம் ஒருவனால் தோற்றுவிக்கப்பட்டது என்பது கருத்து.

மண்ணில் உள்ளதாகிய குடம் சடம் (அறிவற்றது) ஆதலின் அது தானே செயற்பட முடியாது. அதனைத் தோற்றுவிப்பதற்கு அறிவுடைய வனைவோன் ஒருவன் வேண்டும். அவ்வாறே அறிவற்றதாகிய உலகம் மூவினை உடையதாயினும் அது தானே தோன்றித் தானே அழியும் என்றல் கூடாது, உள்பொருளாகிய அதனைத் தோற்றுவித்து அழித்தற்கு ஒருவன் வேண்டும்.

இவ்வாறு உலகிற்குச் செய்வோனாகிய முதல்வன் ஒருவன் உண்டு என்பதை நிறுவுகிறார் ஆசிரியர்.

 
மேலும் சிவஞானபோதம் »
temple news
நூல்முகம்: இவ்வுலகம், முதலில் சில பக்கங்களும் முடிவில் சில பக்கங்களும் இல்லாத நிலையில் கிடைத்த ஒரு ... மேலும்
 
இருவகை இயல்புகள்சைவ சித்தாந்தத்தில் பொருளுக்கு இரு வகையான இயல்புகள் சொல்லப்பெறும். அவை உண்மையியல்பு, ... மேலும்
 
அம் முதல்வன் அழித்தற்  கடவுளே:இனி அம் முதல்வன் யாவன்? என்ற வினா இயல்பாக எழுகிறது. அதற்கு ... மேலும்
 
இரண்டாம் நூற்பாமுதல் நூற்பாவோடு இந்நூற்பா தொடர்புற்று நிற்கிறது. எவ்வாறெனில், முதல் நூற்பாவில் உலகம் ... மேலும்
 
எடுத்துக்காட்டு -2வெண்பா7. ஒன்று என்றது ஒன்றேகாண்; ஒன்றே பதி; பசுவாம்ஒன்று என்ற நீ பாசத்தோடு உளைகாண்;- ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar