Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » துளசிதாசர்
துளசி ராமாயணம் தந்த துளசிதாசர்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஏப்
2011
02:04

தென்னிந்தியாவில் வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம் பிரசித்தி பெற்றது போலவே, வட இந்தியாவில், குறிப்பாக கங்கை நதி பாயும் பிரதேசங்களில், ராமசரித் மானஸ் (துளசி ராமாயணம்) பிரசித்தி பெற்றது. இதை எழுதியவர் சந்த துளசி தாசர். இவர் உத்திரப் பிரதேசத்தில் அலஹாபாத்துக்குக் கிழக்கே 200 மைல் தொலைவில் உள்ள ராஜ்பூர் என்ற ஊரில் 1532-ஆம் ஆண்டு ஆத்மாராம் தாபே, ஹுலசீபாய் என்கிற பிராமணத் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் - ராம்போலோ.  இவர் மூல நட்சத்திரத்தில் (அபுக்த மூலம்) பிறந்ததால், தாய் தந்தைக்கு மரணம் நிச்சயம் என்று அந்த நாளில் நம்பப்பட்டது. பிறக்கும்போதே குழந்தை ராம்போலாவுக்குப் பற்கள் வேறு முளைத்திருந்தன ! இதற்குப் பரிகாரமாக, குழந்தையைக் கைவிட்டுவிட வேண்டும்; குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகளாவது குழந்தையின் முகத்தைப் பார்க்கக் கூடாது என்றது சாஸ்திரம். பரம ஏழையான ஆத்மாராமும் நாமகரணம் போன்ற சடங்குகள் செய்து மகிழும் நிலையில் இருக்கவுமில்லை. குழந்தை பிறந்த சில நாட்களிலேயே ஹுலசீபாய் மரணமடைந்தாள். அதன்பிறகு குழந்தை ராம்போலாவுக்குச் செவிலித்தாயாக இருந்து வளர்த்தவரும் சிறுவனுக்கு ஐந்து வயது முடியும் முன்பே காலமானாள். இதன்பின், ராம்போலா ஒரு கவளம் சோற்றுக்காகத் தெருவில் அலைந்தான். உள்ளூர் அனுமார் கோயில் அவனுக்கு அடைக்கலம் தந்தது. இந்த ராம்போலாவே பிற்காலத்தில் துளசிதாசர் என்று புகழ்பெற்றார். ராமானுஜரின் சிஷ்ய பரம்பரையில் ஐந்தாவது தலைமுறையினரான ஸ்வாமி ராமானந்தரின் வழித்தோன்றலான நரஹரி தாசர் கனவில் ஓர் அநாதைச் சிறுவன் வந்தான். அவனைக் கண்டுபிடித்து, அமரகாவியமான ராமாயணத்தை அவனுக்குக் கற்பிக்கும்படி உத்தரவாயிற்று.

அவர் ராம்போலாவை அயோத்திக்கு அழைத்துப் போய் உபநயனம் செய்வித்தார். வடு வான ராம்போலா, ஸ்ரீராமனை நமஸ்கரித்தபோது, துளசிச் செடியிலிருந்த ஓர் இலை அவன் தலைமேல் விழுந்தது! அன்றுமுதல் ராம்போலா துளசிதாசர் ஆனார். சரயூ மற்றும் காக்ரா நதிகளின் சங்கமத்தில் உள்ள கிராமமாகிய சுகர் ÷க்ஷத்திரத்தில் துளசிதாசர் தங்கிய காலகட்டத்தில் ஸேஷநாதர் என்னும் சாது, துளசிதாசரை காசிக்கு அழைத்து வந்தார். அவருடைய குருகுலத்தில் 15 வருடம் தங்கி, சமஸ்கிருதம், வேத வேதாங்கம் மற்றும் ஏனைய பாடங்களைக் கற்றார் துளசிதாசர். இதன்பின்னர், தான் பிறந்த ஊரான ராஜ்பூருக்கே திரும்பினார். பிரபல ஜோதிடர் தீனபந்து பாடகரின் மகளான ரத்னாவளி இவர் மனைவியானாள். இளம் தம்பதியர், கிராமத்தில் எளிய வாழ்க்கை நடத்தினர். ரத்னாவளி படிப்பு, அறிவு, பண்பு இவற்றுடன் நல்ல அழகியும்கூட ! தன் மனைவியை அளவுக்கதிகமாக நேசித்தார் துளசிதாசர். இதனால், சுமார் 12 ஆண்டுகளுக்குத் தன் பிறந்த வீட்டுக்கே போகவில்லை ரத்னாவளி. அவர்களுக்குப் பிறந்த தாரகன் என்ற ஆண்குழந்தை, குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டது. ஒருமுறை தன் தந்தை இறந்ததற்காக ரத்னாவளி, துளசிதாசர் வெளியூர் போயிருந்த சமயம் பிறந்த வீட்டுக்குப் போனாள். அந்த நேரம் பார்த்து ஊர் திரும்பிய துளசிதாசர், மனைவியை உடனே காண விழைந்தார். வெள்ளம் கரைபுரண்டோடிக் கொண்டிருந்த யமுனையாற்றைக் கடந்து, மாமனார் வீட்டை அடைந்தார். நள்ளிரவில் தன் கணவரைக் கண்ட ரத்னாவளிக்கோ ஆச்சரியம், பயம், வெட்கம் எல்லாம் ஒருங்கே தாக்கின. அவள் துளசிதாசரிடம், எலும்பு, மாமிசம், மஜ்ஜைகளாலான மனிதப் பிறவி நான். என்மேல் தாங்கள் வைத்துள்ள ப்ரேமையை பகவான் ஸ்ரீராமன்பால் செலுத்தினால், அவர் உங்களைப் பிறவிக்கடலிலிருந்து கரை சேர்ப்பார் என்றாள். இந்தச் சின்ன சம்பவம், துளசிதாசரின் அகக்கண்ணைத் திறந்தது. அவர் மனதில் ஆன்மிக விளக்கு சுடர்விட்டு எரியலாயிற்று. அதன் பின் வீடு வாசல்களைத் துறந்து, ப்ரயாகைக்கு வந்து சந்நியாசி ஆனார் துளசிதாசர். ராமாயண உபன்யாசம் செய்தார். துளசிதாசர் தினமும் கங்கையில் காலைக்கடன்களை முடித்துத் திரும்பும்போது, சொம்பில் இருந்த நீரை வழியில் இருந்த ஆலமரத்துக்கு ஊற்றிவிட்டு வருவாராம். இவ்விதம் பல காலம் புனித கங்கையினால் ஜல தர்ப்பணம் பெற்று, அந்த மரத்தில் வசித்துவந்த பிரம்மராக்ஷஸன் முக்தியடைந்தான்.

தன் நன்றியைத் தெரிவிக்க, துளசிதாசரின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக வாக்களித்தான். துளசிதாசர், ஸ்ரீராமனின் தரிசனம் செய்து வைக்கும்படி கோரினார். அது தன்னால் ஆகாத காரியம் என்று சொன்ன பிரம்மராக்ஷஸன் ஆஞ்சனேயரை அணுகும்படி சொன்னான். ஹனுமான் ராம கதை கேட்க வருவார் என்றும், அவரை அடையாளம் காண்பது எப்படி என்பதையும் விளக்கினான். அவ்வாறே மாருதியை அணுகி, ராம தரிசனம் வேண்டினார். ஹனுமார் சொல்படி, சித்ரகூடத்துக்குப் போய் அங்கு ராம்காட்டில் வசிக்கலானார். வரும் பக்தர்களுக்கு சந்தனம் அரைத்துக் கொடுக்கும் பணியைச் செய்து வந்தார். ஒருமுறை மௌனீ அமாவாசையன்று ராமன் சிறுவனாக வந்து, துளசிதாசரிடம் சந்தனம் கேட்டாராம் ! ராம தரிசனத்தால் மெய்மறந்துபோன துளசிதாசர் சமாதி நிலையில் இருந்ததால், ஸ்ரீராமனே அவர் நெற்றியில் திலகமிட்டுவிட்டு மறைந்து போனார் ! ஸ்ரீராம தரிசனத்தினால் புனிதரான துளசிதாசர் அம்மையப்பரான சிவ பார்வதியரின் ஆணையை ஏற்று, அயோத்திக்கு வந்து கி.பி. 1575-ஆம் ஆண்டு ராமநவமியன்று, ராம சரித மானஸம் எழுதத் தொடங்கினார். ஹிந்தியின் கிளையான அவதி மொழியில் எழுதப்பட்ட இந்தக் காவியம் இரண்டு வருஷம், ஏழு மாதம், இருபத்தாறு நாட்களில் ஸீதா ஸ்வயம்வரத்தின் ஆண்டுவிழா நாளன்று முடிவடைந்தது ! துளசி ராமாயணம் என்று அழைக்கப்படும் ராமசரித மானஸம், ஆத்யாத்ம ராமாயணத்தின் மாதிரியில் அமைந்துள்ளது. மற்ற ராமாயணங்கள் போலவே காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராமனுடைய மானுட லீலைகளைச் சொல்லவும், தன் ஆத்ம சந்தோஷத்துக்காகாவுமே இதை எழுதினார் துளசிதாசர். இதில் ராமன், பரதன், அகல்யை, சபரி போன்றவர்கள் ஆதர்ஸத்தின் சிகரம் என்றால், ஹனுமான் பக்தியின் ஹிமாலயம். இதனாலேயே இந்த க்ரந்தம் எல்லா மனிதர்களையும் கவர்ந்திழுக்கிறது. முக்குணங்களையும் கடந்து நில்லும் ப்ரம்ம தத்துவத்தை, பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் இயற்றப்பட்டுள்ள ராமசரித மானஸம் ஒரு ஞானப் பொக்கிஷம். கிரியர்சன் என்ற ஆங்கிலேயக் கலைஞர், இங்கிலாந்தில் பைபிள்கூட மக்களிடையே இத்தனை அங்கீகாரம் பெறவில்லை என்று வியக்கிறார். 16-ஆம் நூற்றாண்டில் நம் நாடு முகம்மதியர்கள் ஆட்சியில் இருந்தது. அப்போது ஹிந்துக்களுக்கு சனாதன தர்மம், சடங்குகளில் சிரத்தை குறையத் தொடங்கி இருந்த வேளையில் ராமசரித மானஸம், அவர்களை ஒன்றுகூட்டி சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது ! தனது 91-வது வயதில் கி.பி.1623-ல் பூதவுடலைத் துறந்தார் துளசிதாசர்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar