Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்) ஒளியின் காட்சி!
முதல் பக்கம் » ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)
நாம் யார்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2014
03:05

உலகை இறைவனுக்கு உரியதாகக் கண்டு, அதற்கேற்ப கடமைகளைச் செய்யும்போது அது ஆன்மீக சாதனை ஆகிறது. உலகில் இறைவனைக் காண்பது எப்படி? அதற்கு முதற்படி நம்மில் இறைவனைக் காண்பதுதான்.

நாம் யார்?

உடம்பு, மனம், பிராணன், புத்தி, ஆன்மா என்ற ஐந்தின் தொகுதியே நாம். மனம், பிராணன் மற்றும் புத்தியின் தொகுதி ஜீவன் அல்லது உயிர் எனப்படுகிறது. எங்கும் நிறைந்தவரான இறைவன் நம்மில் ஆன்மாவாக உள்ளார். நம்மில் உள்ள அந்த இறையம்சமே ஆன்மா. அதுவே நமது உண்மை இயல்பு. அந்த ஆன்மாவே நாம் என்பதை உணர்வதுதான் உலகில் இறைவனைக் காண்பதற்கான முதற்படி.

நமது உண்மை இயல்பை அறிய வேண்டுவதன் அவசியம்:

அஸுர்யா நாம தே லோகா அந்தேன தமஸாவ்ருதா:
தாக்ம் ஸ்தே ப்ரேத்யாபிகச்சந்தி யே கே சாத்மஹனோ ஜனா: (3)

அஸுர்யா: அசுரர்களின்; தே- அந்த; லோகா:- உலகங்கள்; அந்தேன தமஸா- காரிருளினால்; ஆவ்ருதா: நாம- மூடப்பட்டுள்ளன; யே கே ச- எந்த; ஜனா:- மனிதர்கள்; ஆத்ம ஹன:- ஆன்மாவை அழிப்பவர்கள்; தே- அவர்கள்; ப்ரேத்ய- மரணத்திற்குப் பிறகு; தான் - அந்த உலகங்களை; அபிகச்சந்தி- அடைகிறார்கள்.

3. அசுரர்களின் உலகங்கள் காரிருளினால் மூடப்பட்டுள்ளன. ஆன்மாவை அழிப்பவர்கள் மரணத்திற்குப் பிறகு அந்த உலகங்களை அடைகிறார்கள்.

ஆசை வசப்பட்டு, உடம்புடனும் மனத்துடனும் நம்மைப் பிணைத்துக்கொண்டு, உலகின் சுகபோகங்களை நாடி புற வளர்ச்சியில் கவனம் செலுத்துந்தோறும் நாம் மேன்மேலும் பிறவிகளுக்கு உள்ளாகிறோம். மாறாக, ஆன்மாவுடன் நம்மை ஒன்றுபடுத்திக்கொண்டு அக வளர்ச்சியில் நாட்டம் செலுத்துந்தோறும் இறைநிலையை அடைந்து மரணத்தை வெல்கிறோம். அதாவது பிறவியற்றவர்கள் ஆகிறோம்.

இவ்வாறின்றி ஆன்மாவை நினைக்காமல் உடம்பே எல்லாம் என்று வாழ்பவர்களை இது மந்திரம் ஆன்மாவை அழிப்பவர்கள் என்று குறிப்பிடுகிறது. ஆன்மாவை அழிக்க முடியாது; அழிப்பதற்கு நிகரான குற்றத்தைச் செய்பவர்கள் என்பது பொருள். அத்தகையவர்கள் மரணத்திற்குப் பிறகு இருண்ட உலகங்களை அடைகிறார்கள். அதாவது தொடர்ந்து பிறவிக்கு உள்ளாகி, துன்பத்தில் உழல்கிறார்கள். இந்தத் துன்பத்திலிருந்து விடுபட வேண்டுமானால் அக வளர்ச்சியை நாட வேண்டும், ஆன்மாவைத் தேட வேண்டும்.

ஆன்மாவின் இயல்பு: 4-5

ஆன்மாவுடன் ஒன்றுபடுத்திக்கொண்டு வாழும்போது இறைநிலையை அடைகிறோம். அந்த ஆன்மாவின் இயல்பு என்ன?

அனேஜ தேகம் மனஸோ ஜவீயோ
நைனத்தேவா ஆப்னுவன் பூர்வமர்ஷத்
தத்தாவதோஸன்யானத்யேதி திஷ்ட்டத்
தஸ்மின்னபோ மாதரிச்வா ததாதி (4)

அனேஜத்- அசைவற்றது; ஏகம்- ஒன்றேயானது; மனஸ:- மனத்தைவிட; ஜவீய:- விரைவானது; தேவா:- புலன்கள்; ஏனத்- அதனை; ந ஆப்னுவன்- அடைய இயலாது; பூர்வம் அர்ஷத்- முன்னால் செல்வது; தத்- அது; திஷ்ட்டத்- நிலையாக நிற்கிறது; தாவத:- ஓடுகின்ற; அன்யான்- மற்றவற்றை; அத்யேதி- முந்துகிறது; தஸ்மின்- அது இருப்பதால்; மாதரிச்வா- பிராணன்; அப: ததாதி- அனைத்தையும் இயக்குகிறது.

4. ஆன்மா அசைவற்றது, ஒன்றேயானது, மனத்தை
விட விரைவானது. புலன்கள் அதனை அடைய
இயலாது. அது நிலையாக நின்றபடியே அனைத்
திற்கும் முன்னால் செல்கிறது; ஓடுகின்ற அனைத்தை
யும் முந்துகிறது. அது நிலையாக இருப்பதால்
பிராணன் அனைத்தையும் இயக்குகிறது.

ஒரு பொருள் அசையவோ இயங்கவோ வேண்டுமானால் அந்த இயக்கத்திற்கு ஓர் இடம் வேண்டும். எங்கும் நிறைந்த ஒன்று எங்கே அசையும்? எனவேதான் ஆன்மா அசைவற்றது.

மனம் புறத்திலுள்ள ஒரு பொருளை நினைவுக்கும் போது, அது வெளியில் சென்று அந்தப் பொருளின் வடிவை எடுப்பதாக நமது தத்துவ நூல்கள் கூறுகின்றன. இதுவரை விஞ்ஞானம் கண்டறிந்துள்ள ஒலியின் வேகத்தைவிட, ஒளியின் வேகத்தைவிட மிகமிக வேகமாக மனம் சென்று அந்தப் பொருளின் வடிவை எடுக்கிறது. அவ்வளவு வேகமாக மனம் சென்றாலும், மனம் செல்வதற்கு முன்பே அங்கே ஆன்மா அதாவது இறைவன் உள்ளார். எனவே தான் மனத்தைவிட விரைவானது, நிலையாக நின்றபடியே அனைத்திற்கும் முன்னால் செல்கிறது, ஓடுகின்ற அனைத்தையும் முந்துகிறது என்றெல்லாம் கூறப்பட்டது.

புலன்களால் ஆன்மாவை அறிய இயலாது. ஒவ்வொரு கருவியும் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்ய வல்லது. தொலைநோக்கிக் கருவியால் தூரத்திலுள்ள பொருளை மட்டுமே பார்க்க முடியும்; அருகில் உள்ளவற்றைப் பார்க்க இயலாது. நுண்ணோக்கியால் மிகச் சிறியனவற்றைக் காண முடியும். அதுபோல் புலன்கள் புற உலகை அனுபவிப்பதற்காகப் படைக்கப்பட்டவை. அகவுலக உண்மைகளையோ ஆன்மாவையோ காண அவற்றால் இயலாது. இதையே பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கீதையில், உனது இந்தக் கண்ணினால் என்னைப் பார்க்க இயலாது. எனவே உனக்கு தெய்வீகக் கண்ணைத் தருகிறேன் என்று அர்ஜுனனிடம் கூறுகிறார்.

எந்த ஓர் இயக்கமும் நடைபெற வேண்டுமானால் இயங்காத ஒன்று அதற்கு ஆதாரமாக வேண்டும். ரயில் ஓட வேண்டுமானால் அசையாத தண்டவாளம் வேண்டும். திரைப்படம் இயங்க வேண்டுமானால் அசைவற்ற திரை ஆதாரமாக வேண்டும். அவ்வாறே, இந்த உலகின் இயக்கங்கள் அனைத்திற்கும் காரணமாகவே உள்ளது பிராணன். அசைகின்ற பிராணன் இயங்குவதற்கு அசைவற்ற ஆதாரமாக உள்ளது ஆன்மா.

ததேஜதி தன்னைஜதி தத்தூரே தத்வந்திகே
தத்ந்தரஸ்ய ஸர்வஸ்ய தது ஸர்வஸ்யாஸ்ய பாஹ்யத: (5)

தத்- அது; ஏஜதி- அசைகிறது; தத்- அது; ந ஏஜதி- அசைவதில்லை; தத்- அது; தூரே - தூரத்தில் உள்ளது; தத்- அது; அந்திகே உ- மிக அருகில் உள்ளது; தத்- அது; அஸ்ய ஸர்வஸ்ய- இந்த அனைத்தின்; அந்த:- உள்ளே உள்ளது; தத்- அது; ஸர்வஸ்ய- இந்த அனைத்தின்; பாஹ்யத: உ- வெளியிலும் உள்ளது.

5. அது அசைகிறது,  அது அசைவதில்லை. அது தூரத்தில் உள்ளது, மிக அருகில் உள்ளது. அது அனைத்தின் உள்ளே உள்ளது, அனைத்தின் வெளியிலும் உள்ளது.

ஆன்மா, கடவுள் போன்ற உண்மைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை. இவற்றை அறிவினால் புரிந்துகொள்ள முடியாது என்றே வேதங்கள், உபநிஷதங்கள் முதலான அனைத்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவ்வாறு புலன்களும் எட்டாத ஒன்றைப் புலன்களால் விளக்க முற்படுகின்ற மந்திரம் இது. ஆன்மா எங்கும் நிறைந்ததாக இருப்பதால் இந்த முரண்பட்ட கருத்துக்கள் அனைத்தும் சாத்தியமாகின்றன.

பிரபஞ்சத்தின் இயக்கங்கள் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது ஆன்மா (4) எனவே ஆன்மா அசைகிறது. ஆன்மா என்ற நிலையில், அதாவது எங்கும் நிறைந்த நிலையில் அதற்கு அசைவில்லை.

நம் ஒவ்வொருவரின் உள்ளேயும் ஆன்மா உள்ளது. எனவே அது மிக அருகில் உள்ளது. ஆனால் நாம் அதை உணராத நிலையில் அது மிகவும் தூரத்தில் உள்ளது.

அதுபோலவே இறைவன் என்ற நிலையில் அது எங்கும் நிறைந்ததாக இருப்பதால் அனைத்தின் உள்ளேயும் உள்ளது, வெளியேயும் உள்ளது.

ஆன்ம அனுபூதியும் அதன் பலனும்: 6-7

ஆன்மாவாகத் தன்னை உணர்ந்தவன்,அதாவது ஆன்ம அனுபூதி பெற்றவன் பெறும் பலன் என்ன? அவன் உலகின் துன்பங்களிலிருந்து விடுபடுகிறான்.

யஸ்து ஸர்வாணி பூதான்யாத்மன்யேவானுபச்யதி
ஸர்வபூதேஷு சாத்மானம் ததோ ந விஜுகுப்ஸதே (6)

ய: து- யார்; ஸர்வாணி- எல்லா; பூதானி- உயிரினங்களையும்; ஆத்மனி ஏவ- ஆன்மாவிலேயே; ஆத்மானம்- ஆன்மாவை; ஸர்வ பூதேஷுச- எல்லா உயிரினங்களிலும்; அனுபச்யதி- காண்கிறானோ; தத:- அதனால்; ந விஜுகுப்ஸதே- வெறுப்பதில்லை.

6. யார் எல்லா உயிரினங்களையும் ஆன்மாவிலும்,
ஆன்மாவை எல்லா உயிரினங்களிலும் காண்கிறானோ
அவன் யாரையும் வெறுப்பதில்லை.

யஸ்மின் ஸர்வாணி பூதான்யாத்மைவாபூத் விஜானத:
தத்ர கோ மோஹ: க: சோக ஏகத்வமனுபச்யத: (7)

யஸ்மின்- எப்போது; விஜானத:- அறிபவனுக்கு; ஆத்மா ஏவ- ஆன்மாவே; ஸர்வாணி- எல்லா; பூதானி- உயிரினங்களாக; அபூத்- ஆகிவிட்டதோ; தத்ர- அப்போது; ஏகத்வம்- ஒருமையை; அனுபச்யத:- காண்பவனுக்கு; க:- என்ன; மோஷ:- மனமயக்கம்; க:- என்ன; சோக:- கவலை.

7. ஆன்மாவே எல்லா உயிரினங்களாகவும் ஆகியிருக்கின்ற ஒருமையுணர்வைப் பெறுகின்ற ஒருவனுக்கு என்ன மனமயக்கம்? என்ன கவலை?

பிடிக்காத ஒன்றை வெறுக்கிறோம். ஒன்றை மற்றொன்றாகக் காண்பதால் மனமயக்கம் உண்டாகிறது. விரும்பிய ஒன்று கிடைக்காதபோது கவலை ஏற்படுகிறது. ஆன்ம அனுபூதி பெற்றவனுக்கு இந்த மூன்றும் இல்லை என்று 6-7 மந்திரங்கள் கூறுகின்றன.

ஆன்ம அனுபூதி, இறைக் காட்சி என்றெல்லாம் கூறப்படுவது ஓர் அக அனுபவம், உணர்வில் ஒரு மாற்றம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். குழந்தையும், வாலிபனும், வயோதிகனும் ஒரே உலகில்தான் வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் காண்கின்ற உலகம் ஒன்றல்ல. அவர்களின் காட்சி வெவ்வேறாக அமைவதற்குப் புறவுலகம் காரணம் அல்ல; அவர்களது உணர்வின் விரிவே, உணர்வின் மாற்றமே காரணம். வீட்டினரை மட்டுமே நேசிக்கின்ற நாம் நமது உணர்வு விரியவிரிய படிப்படியாக சுற்றத்தினரை, நண்பர்களை, பிறரை, நாட்டை, உலகை நேசிக்கிறோம். சுற்றியிருப்பவர்களிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை; மாற்றம் நம்மிடமே நிகழ்ந்தது- நமது உணர்வு விரிந்தது.

ஆன்ம அனுபூதியில் உணர்வு விரிந்து அதன் எல்லைகளைத் தொட்டுவிடுகிறது. இனி எந்த மாற்றமும் ஏற்பட முடியாத அறுதி மாற்றம் அது. இனி விரிய முடியாத அளவுக்கு விரிந்துவிட்ட நிலை அது. பிரபஞ்சமே அவர்களுடையதாகி விடுகிறது; அவர்கள் எங்கும் தன்னையே, தனது உணர்வையே காண்கிறார்கள். ஆனால் அவர்களிடம் பற்று இல்லாததால் உலகின் இன்ப துன்பங்கள் எதுவும் அவர்களைப் பாதிப்பதில்லை. எனது செல்வத்திற்கு எல்லையே இல்லை. ஆனால் உண்மையில் எனது என்று எதுவும் இல்லை. எனவே, மிதிலை நகரமே பற்றியெரிந்தால்கூட நான் எøதாயும் இழப்பதில்லை (1. அனந்தம் பத மே வித்தம் யஸ்ய மே நாஸ்தி கிஞ்சனமதிலாயாம் ப்ரதீப்தாயாம் ந மே கிஞ்சித் ப்ரதஹ்யதே    -மகாபாரதம், சாந்தி பர்வம், 17.18.)என்று மிதிலை மன்னர் ஜனகர் கூறுவதாக மகாபாரதம் தெரிவிக்கிறது. ஆன்ம அனுபூதி பெற்றவர்கள், இவ்வாறு சுகம்- துக்கம், வெற்றி- தோல்வி, நன்மை-தீமை போன்ற இருமைகளைக் கடந்துவிடுகிறார்கள்; வெறுப்போ, மனமயக்கமோ, கவலையோ இல்லாதவர்களாகி விடுகிறார்கள்.

 
மேலும் ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்) »
temple news
வேதங்கள்!உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பாரதத் திருநாடு ... மேலும்
 
சற்றே சிந்திக்கத் தெரிந்த யாருக்கும் புலனாகின்ற உண்மை ஒன்று உண்டு; நாம் அறியாமையில் இருக்கிறோம் ... மேலும்
 
ஆன்ம அனுபூதி பெற்றவனின் அனுபவத்தை இந்த மந்திரம் கூறுகிறது.ஸ பர்யகாச்சுக்ரமகாயமவ்ரணம்அஸ்னாவிரக்ம் ... மேலும்
 
எங்கும் இறைவன் இருப்பதாகக் கண்டு கடமைகளைச் செய்பவன் பற்றின்றி வேலை செய்கிறான் ( 1-2); அதனால் ஒளிமயமான ... மேலும்
 
ஒளிமயமான இறைவனை அடைவது பற்றி 8-ஆம் மந்திரம் கூறியது. அந்த ஒளிக்கு அப்பால் என்ன உள்ளது என்பதுபற்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar