Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஒளியின் காட்சி! ஒளிக்கு அப்பால்!
முதல் பக்கம் » ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)
இணைத்து வாழ்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2014
03:05

எங்கும் இறைவன் இருப்பதாகக் கண்டு கடமைகளைச் செய்பவன் பற்றின்றி வேலை செய்கிறான் ( 1-2); அதனால் ஒளிமயமான இறைவனை அடைகிறான் (8). எங்கும் இறைவன் இருப்பதை உணர்வது எப்படி? அதற்கான இரண்டு முக்கிய சாதனை முறைகளைத் தொடரும் 6 மந்திரங்கள் (9-14) தெரிவிக்கின்றன.

செயல்களும் தியானமும்: 9-11

செயல்களின்றி வாழ்க்கை இல்லை. அன்றாடக் கடமைகள், ஜபதவங்கள், சேவை போன்ற எவ்வளவோ செயல்களுடன் நமது வாழ்க்கை பிணைந்துள்ளது. உயர் நோக்கங்களுடன் இணைக்காமல் அவற்றை வெறுமனே செய்துகொண்டே போவதால் இறைநெறியில் முன்னேற முடியாது; இறையுணர்வைப் பெற முடியாது. அதே வேளையில், இறையுணர்வைப் பெற வேண்டும் என்பதற்காக, தகுதி வருமுன்னரே செயல்களை விட்டுவிட்டு தியானத்தில் ஈடுபடுவது ஒரு தவறான, போலித்தனமான முயற்சியாக இருக்கும். எனவே இரண்டும் வாழ்க்கையில் இணைந்து செல்ல வேண்டும். அந்த இணைப்புபற்றி இந்த மந்திரங்கள் கூறுகின்றன.

அந்தம் தம: ப்ரவிசந்தி யேஸவித்யாமுபாஸதே
ததோ பூய இவ தே தமோ ய உ வித்யாயாக்ம் ரதா: (9)

யே- யார்; அவித்யாம்- செயல்களில்; உபாஸதே- ஈடுபடுகிறார்களோ; தே-அவர்கள்; அந்தம் தம:- காரிருளில்; ப்ரவிசந்தி-மூழ்குகின்றனர்; உ- மேலும்; யே- யார்; வித்யாயாம்- தியானத்தில்; ரதா:- ஈடுபடுகிறார்களோ; தே- அவர்கள்; தத:- அதைவிட; பூய:- பெரிய; தம: இவ- இருளைப் போல்.

9. யார் உயர்நோக்கமின்றிச் செயல்களில் ஈடுபடு
கிறார்களோ அவர்கள் காரிருளில் மூழ்குகின்றனர்.
யார் தகுதி பெறுமுன்னர் தியானத்தில் ஈடுபடு
கிறார்களோ அவர்கள் அதைவிடக் கொடிய இருளில்
உழல்வதைப்போல் துன்புறுகின்றனர்.

அன்யதேவாஹுர் வித்யயா அனயதாஹுரவித்யயா
இதி சுச்ரும தீராணாம் யே நஸ்தத் விசசக்ஷிரே (10)

வித்யயா- தியானத்தால்; அன்யத் -வேறு பலன்; அவித்யயா- செயல்களால்; அன்யத்- வேறு பலன்; ஆஹு:- சொல்கிறார்கள்; யே- யார்; ந:- எங்களுக்கு தத்- அதை; விசசக்ஷிரே- விளக்கினார்களோ; இதி- இவ்வாறு; தீராணாம்- மகான்களிடமிருந்து; சுச்ரும-கேட்டிருக்கிறோம்.

10. தியானத்தால் கிடைப்பது ஒரு பலன், செயல்
களால் கிடைப்பது வேறு பலன் என்கிறார்கள்-
எங்களுக்கு அதனை விளக்கிய மகான்கள் இவ்வாறு
கூறினார்கள்.

வித்யாம் சாவித்யாம் ச யஸ்தத் வேதோபயக்ம் ஸஹ
அவித்யயா ம்ருத்யும் தீர்த்வா வித்யயாஸம்ருதமச்ஷதே (11)

வித்யாம்- தியானத்தையும்; அவித்யாம் ச- செயல்களையும்; உபயம் ஸஹ- இரண்டையும் சேர்த்து; தத்- அதை; ய:- யார்; வேத:- அறிகிறானோ; அவித்யயா- செயல்களால்; ம்ருத்யும்- மரணத்தை; தீர்த்வா- கடந்து; வித்யயா- தியானத்தால்; அம்ருதம்- இறவா நிலையை; அச்னுதே- அடைகிறான்.

11. தியானம், செயல்கள் இரண்டையும் சேர்த்து
யார் அறிகிறானோ அவன் செயல்களால் மரணத்தைக்
கடந்து தியானத்தால் இறவாநிலையை அடைகிறான்.

இறைவனை நாடுகின்ற ஒரு செயல் மட்டுமே வித்யை என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. மற்ற அனைத்தும், அது விஞ்ஞானம், கலை என்று எதுவானாலும், ஏன், வேதங்களைப் படித்தல் போன்றவைகூட அவித்யை என்றே கொள்ளப்படுகிறது. ஜபம், தவம் போன்ற சாதனைகள்கூட இறைவனை நாடி செய்யாவிட்டால் அவித்யையே ஆகும். இந்தச் சாதனைகள் வெறும் கிரியை என்ற அளவில் நின்றுவிடாமல் உயர் நோக்கத்துடன், அதாவது, வித்யையுடன் இணைத்து செய்யப்பட வேண்டும் என்பதை இந்த மந்திரங்கள் வலியுறுத்துகின்றன.

தவம், தானம் போன்றவற்றை மூன்றுவிதமாகச் செய்யலாம் என்று கீதை கூறுவதை இங்கே கருத்தில் கொள்ள வேண்டும். தானத்தை எடுத்துக்கொள்வோம். அதனை இறை வழிபாடாகச் செய்யும்போது அக நாட்டத்தையும் மனத் தூய்மையையும் விளைவாகக் கொண்டு வருகிறது. அதே தானத்தைப் பெயர்- புகழுக்காகவும் செய்யலாம். எதிர்பார்த்த பெயர்-புகழ் கிடைக்காத போது அது துன்பம் தருகிறது. பெயர்-புகழ் கிடைக்குமானால் அதனைத் தங்க வைத்துக் கொள்வதற்காக மேலும் முயற்சிகளில் ஈடுபட நேர்கிறது. அதன் விளைவாக வருவது துன்பம். பிறருக்குத் துன்பம் விளைவிப்பதற்காகவே போட்டி மனப்பான்மையுடனோ தானம் செய்யும்போது அதன் விளைவும் பெருந்துன்பமாக உள்ளது.

இவ்வாறு தவம், போன்றவற்றை உயர் நோக்கமின்றிச் செய்யும்போது அவை அவித்யை ஆகின்றன. அவற்றை அவித்யை வசப்பட்டுச் செய்பவன் காரிருளில் மூழ்குகிறான். அதாவது அறியாமை வசப்பட்டு மேலும் மேலும் பிறவிகளுக்கு உள்ளாகிறான்.

தவம், தானம், ஜபம், சேவை போன்ற சாதனைகள் எதுவும் செய்யாமல் வெறுமனே தியானம் செய்ய முயற்சிப்பவன் வெற்றி பெறுவதில்லை. ஏனெனில் தவம், ஜபம், சேவை போன்ற கிரியைகள் மனத்தைத் தூய்மைப்படுத்துகின்றன; ஆற்றலைத் தருகின்றன. தூய்மையின்மூலம் ஆற்றல் பெற்ற மனத்தினால்தான் தியானம் செய்ய முடியும். தவமும் வித்யையுமே ஒரு சாதகனுக்கு முக்கிய சாதனைகள். தவத்தால் மனத்தின் மாசுகள் அகல்கின்றன; வித்யையால் மோட்சம் பெறுகிறான் (1. தபோ வித்யா ச விப்ரஸ்ய நி:ச்ரேயஸகரம் பரம்தபஸா கில்பிஷம் ஹந்தி வித்யயா அம்ருதம் அச்னுதே -மனு, 12.104) என்கிறார் மனு.

மரணத்தைக் கடப்பது என்றால் மரணத்திற்குக் காரணமாக வினைப்பயனிலிருந்து விடுபடுவது.( 2. அவித்யயா வித்யாங்கதயா சோதித கர்மணா ம்ருத்யும் ஜ்ஞானஸங்கோச ரூப ம்ருத்யு ஹேதும் ப்ராக்தன கர்ம- ஸ்ரீவேதாந்த தேசிகர்) எனவே ஜப தவம் போன்ற கிரியைகளை இறைவனை நாடிச் செய்வதால் மனத் தூய்மை பெற்று, தியானத்தால் இறைநிலையை அடைகிறான் என்பது இந்த மந்திரங்களின் கருத்து ஆகும்.

உருவ வழிபாடும் அருவ வழிபாடும்:

இறைவனை உருவம் உடையவராக வழிபடலாம், உருவ மற்றவராகவும் வழிபடலாம். இரண்டையும் இணைத்துச் செய்தால்தான் மிகவுயர்ந்த பலன் கிடைக்கிறது என்ற உண்மையை எடுத்துக்காட்டுகின்றன இந்த மந்திரங்கள்.

அந்தம் தம: ப்ரவிசந்தி யேஸஸம்பூதிமுபாஸதே
ததோ பூய இவ தே தமோ ய உ ஸம்பூத்யாக்ம் ரதா: (12)


யே- யார்; அஸம்பூதிம்- அருவக்கடவுளை; உபாஸதே-வழிபடுகிறார்களோ; தே- அவர்கள்; அந்தம்- தம:- காரிருளில்; ப்ரவிசந்தி- மூழ்குகின்றனர்; உ- மேலும்; யே- யார்; ஸம்பூத்யா- உருவக்கடவுளில்; ரதா: தே- ஈடுபடுபவர்கள்; தத:- அதைவிட; பூய:- பெரிய; தம: இவ- இருளைப்போல்.

12. யார் அருவக்கடவுளை வழிபடுகிறார்களோ
அவர்கள் காரிருளில் மூழ்குகின்றனர். யார் உருவக்
கடவுளில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் அதைவிடக்
கொடிய இருளில் உழல்வதைப்போல் துன்புறு
கின்றனர்.

அன்ய தேவாஹு: ஸம்பவாதன்யதாஹுரஸம்பவாத்
இதி சுச்ரும தீராணாம் யே நஸ்தத் விசசக்ஷிரே (13)

ஸம்பவாத்- உருவ வழிபாட்டால்; அன்யத்- வேறு பலன்; அஸம்பவாத்- அருவ வழிபாட்டால்; அன்யத்- வேறு பலன்; ஆஹு:- சொல்கிறார்கள்; யே- யார்; ந:- எங்களுக்கு; தத்- அதை; விசசக்ஷிரே- விளக்கினார்களோ; இதி- இவ்வாறு; தீராணாம்- மகான்களிடமிருந்து; சுச்ரும- கேட்டிருக்கிறோம்.

13. உருவ வழிபாட்டால் கிடைப்பது ஒரு பலன்,
அருவ வழிபாட்டால் கிடைப்பது வேறு பலன்
என்கிறார்கள்- எங்களுக்கு அதனை விளக்கிய
மகான்கள் இவ்வாறு கூறினார்கள்.

ஸம்பூதிம் ச வினாசம் ச யஸ்தத் வே தோபயக்ம் ஸஹ
வினாசேன ம்ருத்யும் தீர்த்வா ஸம்பூத்யாஸம்ருதமச்னுதே (14)

(அ) ஸம்பூதிம்- அருவ வழிபாட்டையும்; வினாசம் ச- உருவ வழிபாட்டையும்; உபயம் ஸஹ- இரண்டையும் சேர்த்து; தத்- அதை; ய:- யார்; வேத:- அறிகிறானோ; வினாசேன- உருவ வழிபாட்டால்; ம்ருத்யும்- மரணத்தை; தீர்த்வா- கடந்து; அஸம்பூத்யா- அருவ வழிபாட்டால்; அம்ருதம்- இறவா நிலையை; அச்னுதே- அடைகிறான்.

14. அருவ வழிபாடு, உருவ வழிபாடு இரண்டையும்
சேர்த்து யார் அறிகிறானோ அவன் உருவ வழிபாட்டால்
மரணத்தைக் கடந்து அருவ வழிபாட்டால் இறவா
நிலையை அடைகிறான்.

9-11 மந்திரங்கள் செயல்கள் மற்றும் தியானத்தின் இணைப்பை வலியுறுத்தியதுபோல் இந்த மந்திரங்கள் (12-14) இரண்டுவித வழிபாடுகளின் இணைப்பைக் கூறுகின்றன.

ஸம்பூதி என்றால் தோற்றத்திற்கு வந்த நிலை; இறைவன் பல்வேறு வடிவங்களில் தோன்றுகின்ற உருவ நிலை. அஸம்பூதி என்றால் தோற்றத்திற்கு வராத நிலை; எந்த உருவமோ குணமோ அற்ற அறுதி நிலை. இந்த

1. மந்திரத்தில் ஸம்பூதி என்று காணப்பட்டாலும் அந்த இடத்தில் அஸம்பூதி என்று வந்தால்தான் சரியாக இருக்கும். எனவே அதில் அ சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார் ஸ்ரீசங்கரர்: ஸம்பூதிம் ச வினாசம் ச இத்யத்ர அவர்ணலோபேன நிர்தேசோ த்ரஷ்ட்டவ்ய:

இரண்டு நிலைகளிலும் இறைவனை நாம் வழிபடலாம். ஒன்று, உருவ வழிபாடும், உருவம், குணம், போன்ற பல்வேறு தன்மைகள் உடைய ஒரு நபராக அவரைக் காண்பது இது. நமது மனத்தால் அறியத்தக்கவராக, வெளிப்பட்ட நிலையில் இறைவனை நாம் இங்கே வழிபடுகிறோம். சிவன், விஷ்ணு, தேவி என்று உருவ நிலையில் இறைவனை வழிபடுவது உருவ வழிபாடு.

இரண்டாவதாக, அருவ வழிபாடு. உருவம், குணம் போன்ற அனைத்துப் பண்புகளையும் கடந்த அறுதி நிலையில் இறைவனை அணுகுவது இது. உருவமோ குணமோ இல்லாத ஒன்றை மனித மனத்தால் நினைப்பது சாத்தியமல்ல. எனவே இந்த வழிபாடு மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு உரியது என்பது சொல்லாமலே விளங்கும். தகுதியின்றி அந்த வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். அதனால் தான் அவர்கள் காரிருளில் மூழ்குவதாக சொல்லப்பட்டுள்ளது.

உருவ வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் சிவன், விஷ்ணு என்று பல்வேறு வடிவங்களும் ஒரே உண்மைப் பொருளின் பல்வேறு தோற்றங்களே என்ற உண்மையை உணர்ந்திருக்க வேண்டும். மாறாக, என் தெய்வம் உயர்ந்தவர், உன் தெய்வம் தாழ்ந்தவர் என்று கொள்கை வெறிபிடித்து சண்டையிடக் கூடாது. அறியாமை காரணமாக செய்கின்ற இத்தகைய வழிபாட்டினால் எந்தப் பலனும் கிடைப்பதில்லை. வழிபட்டும் பலனின்றிப் போவதால்தான் இத்தகையோர் இன்னும் கொடிய இருளில் உழல்கிறார்கள். என்று கூறப்பட்டது.

எனவே மன இயல்பிற்கு ஏற்ற ஒரு தெய்வத்தை வழிபடுவதில் ஆரம்பிக்க வேண்டும். எத்தனை மதங்களில் எத்தனை தெய்வங்களைக் கும்பிட்டாலும் அவர்கள் அத்தனை பேரும் ஒரே தெய்வத்தின் பல்வேறு தோற்றங்களே என்ற உணர்வு எப்போதும் இருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, உருவ நிலையில் மட்டுமல்ல, கடவுளை அருவ நிலையிலும் வழிபடலாம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இத்தகைய மனநிலையில் தெய்வத்தை வழிபடும்போது நாம் ஆன்மீகத்தில் முன்னேறுகிறோம்; இறையனுபூதி பெறுகிறோம்; மரணத்திற்குக் காரணமான வினைப் பயன்களிலிருந்து விடுபடுகிறோம்.

இந்த இறையனுபூதியின் விளைவு என்ன? அழகாக விளக்குகிறார் துளசிதாசர்: இறைவனை நேருக்கு நேராகக் காண்பதன் ஈடிணையற்ற ஒரே பலன் என்ன தெரியுமா? மனிதன் தனது சொந்த ஆனந்தமயமான ஆன்மநிலையில் நிலைபெறுகிறான்.(1. மமதர்சன ஃபல பரம அனூபா ஜீவ பாவ நிஜ ஸஹஜ ஸரூபா-துளசி ராமாயணம், ஆரண்ய காண்டம், 35.5.)  இதன்பிறகே இறைவனை உருவமற்ற நிலையில் வழிபடுவதற்கான தகுதியை அவரது அருளால் பெறுகிறோம். இந்தத் தகுதியுடன் அந்த உயர்நிலை வழிபாட்டில் ஈடுபட்டு இறவாநிலையை அடைகிறோம்.

 
மேலும் ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்) »
temple news
வேதங்கள்!உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பாரதத் திருநாடு ... மேலும்
 
சற்றே சிந்திக்கத் தெரிந்த யாருக்கும் புலனாகின்ற உண்மை ஒன்று உண்டு; நாம் அறியாமையில் இருக்கிறோம் ... மேலும்
 
உலகை இறைவனுக்கு உரியதாகக் கண்டு, அதற்கேற்ப கடமைகளைச் செய்யும்போது அது ஆன்மீக சாதனை ஆகிறது. உலகில் ... மேலும்
 
ஆன்ம அனுபூதி பெற்றவனின் அனுபவத்தை இந்த மந்திரம் கூறுகிறது.ஸ பர்யகாச்சுக்ரமகாயமவ்ரணம்அஸ்னாவிரக்ம் ... மேலும்
 
ஒளிமயமான இறைவனை அடைவது பற்றி 8-ஆம் மந்திரம் கூறியது. அந்த ஒளிக்கு அப்பால் என்ன உள்ளது என்பதுபற்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar