Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ... ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம்! ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனைவருக்கும் ஈத் முபாரக்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2014
10:07

ஈகைப் பெருநாள் எனும் ரம்ஜான் பண்டிகை, ரம்ஜான் மாதம் முழுக்க நோன்பிருந்து, கடைசி நோன்பின் மறுநாள் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.இறை மறையாம் திருமறை குர்ஆன் இறங்கியதும், இந்த ரம்ஜான் மாதத்தில் தான்.இல்லாதவர்க்கு இயன்றதை செய்வோம் எனும் உன்னத நோக்கத்தை கொண்ட இஸ்லாம், அதை முழுக்க நடைமுறைப்படுத்துவது, இந்த ரம்ஜான் மாதத்தில் தான்.

இந்த நோன்பு காலத்தில் தான், செல்வந்தர்களின் செல்வங்கள் மீது, 2.5 சதவீதம் ஜகாத் வரி கடமையாக்கப்பட்டிருக்கிறது.இஹ்திகாப் எனும் உயர்ந்த வணக்க வழிபாடும், நபி (ஸல்) வழி சுன்னத்தும் நடைமுறைப்படுத்துவது, இந்த ரம்ஜான் மாதத்தில் தான்.ஆயிரம் இரவுகளில் செய்யும் வணக்க வழிபாடுகளை விட சிறந்தது, லைலத்துல் கத்ர் எனும் ஓரிரவில் செய்வது சிறப்பானது. இந்த கண்ணியம்மிக்க இரவு வருவதும் இந்த ரம்ஜான் மாதத்தில் தான்! இறையச்சம் செழித்து வளர்கின்ற வசந்த காலம் தான், ரம்ஜான் மாதம். இறைவன் முழு மனித சமுதாயத்திற்கும், அருளிய வளங்களில் தலையாயது திருக்குர்ஆன் தான். இறைவன் தன் திருமறையில் மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அறிவுரை, உங்களிடம் திண்ணமாக வந்திருக்கிறது. அது இதயங்களில் உள்ள நோய்களை குணப்படுத்த கூடியதாகவும், தன்னை ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், தன்னை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களுக்கு வழிகாட்டக் கூடியதாகவும் ஓர் அருட்கொடையாகவும் திகழ்கிறது என்று கூறுகிறான்... (குர் ஆன் 10:57)நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஆபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றனர்.ரம்ஜான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாயில் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. சைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன...புனித ரம்ஜான் மாதத்தில், முஸ்லிம்கள், சூரியன் உதிப்பதற்கு முன்னர் உணவுண்டு, பகல் முழுவதும் பசித்திருந்து, தாகித்திருந்து, தொழுதபடி, திருக்குர்ஆனை ஓதியபடி, நாவைக் கட்டுப்படுத்தி, வீண்பேச்சு, கேலி, கிண்டல், புறம் பேசுவதை தவிர்த்து, தீய மற்றும் பாவமான செயல்களை விட்டு விலகியிருந்து, மாலையில் சூரியன் மறைந்ததும், நோன்பு திறந்து, இரவு, தராவிஹ எனும் தொழுகையில், குர்ஆனின் வசனங்களை ஓதுவதைக் கேட்டும், இறைவனின் அருளைப் பெறுகின்றனர்.

இவ்வாறு நோன்பு, தொழுகை குர்ஆன் ஓதுதல், இறைவனை நினைவுகூர்தல் ஆகிய வழிபாடுகளில், அதிகமாக ஈடுபடுவதாலும், தீமைகளை விட்டு சுயகட்டுப்பாட்டுடன் விலகி வாழ்வதாலும், அவர்களை வழிகெடுக்க, சைத்தான்களால் முடிவதில்லை. இதுவே சைத்தான்களுக்கு பூட்டு என்பதற்கு அர்த்தமாகும்.நன்மைகளால் சொர்க்கத்திற்கு செல்லும் வாய்ப்பு அதிகமாகும். தீமைகளை விடுத்து விலகுவதால், நரகத்தில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு அதிகமாகும். இதுவே சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுவது மற்றும் நரகத்தின் வாயில்கள் மூடப்படுவதின் கருத்து. நோன்பு, எல்லாப் பாவங்களில் இருந்தும் தப்பிக்க உதவும் கேடயமாகும்.காலையில் இருந்து மாலை வரை பசித்திருப்பது, ஏழையின் பசியை உணர்வதற்காகவே ஆகும். ஏழை எப்போதும், பசியிலேயே இருக்கிறான். அதனுடன் இறைவனுக்காக நோன்பு வைப்பது, அவனுக்கு கூடுதல் ஆன்ம பலம். பணக்காரர்கள், பசித்திருப்பது தான் சிறப்பு. அவர்கள் இந்த நோன்பின் மேன்மையை உணர்ந்து விட்டால், பசி என்ற ஒன்று உலகில் இருக்காது.வயதானவர்கள் ஆகட்டும்; சிறுவர், சிறுமியர் ஆகட்டும். எல்லாரும் ஆர்வத்துடன் நோன்பு வைக்கின்றனர்.அவர்களில் யாராவது வெளியே செல்லும் போது, கடுமையான பசியும், தாகமும் ஏற்படலாம். அவர்கள் நினைத்தால் எதையாவது சாப்பிடலாம் அல்லது கொஞ்சம் தண்ணீராவது குடிக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்வதில்லை. ஏனெனில் இறைவன் தன்னைப் பார்த்து கொண்டிருக்கிறான் என்ற இறையச்சம்.இந்த நம்பிக்கை, எப்போதும் நிலையாக ஏற்பட்டு விட்டால், அவர்கள் நிச்சயமாக மாற்றத்திற்கும், முன்னேற்றத்திற்கும் உரிய சமுதாயமாக மாறிவிடுவர். உலக மக்கள் அனைவருக்கும் முன்மாதிரியான சமுதாயமாக, ஒரு நாள் மாறுவர். இறைவன் நம் அனைவருக்கும் இந்த புனிதப் பொழுதுகளில், அதிகதிகமாக நன்மைகளை செய்யும் பாக்கியத்தை தருவானாக. ஆமின்!இந்தப் ஈகைப் பெருநாளில் இல்லாமை, கல்லாமை, இயலாமைகளை விரட்டுவோம்! ஆமின்!இந்த நன்னாளில் உலகமெங்கும் அன்பும், அமைதியும் பரவட்டும்! ஆமின்!எல்லார் மனதிலும் அன்பு, நன்றி, கருணை, நட்பு சுரக்க செய் இறைவா! ஆமின்!

கொடுத்தால் கிடைக்கும்!

இஸ்லாமிய மார்க்கத்தில், ஐந்து முக்கிய கடமைகள் உண்டு. இறைவன் ஒருவனே என்று, நம்பிக்கை கொண்டு, மனப்பூர்வமாக சொல்லும் கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத் மற்றும் ஹஜ் ஆகியவை அந்த ஐந்து கடமைகள்.இந்த ரம்ஜான் மாதத்தில் நோன்பு வைக்கும் கடமையை, எல்லா முஸ்லிம்களும் நிறைவேற்ற வேண்டும். அதேசமயம் வசதி படைத்த அனைவரும், தங்கள் செல்வங்கள் மீது, ?.? சதவீதம் ஜகாத் எனும் வரியை, இல்லாதவர்களுக்கு தந்து உதவ வேண்டும்.கிடைத்தால் கொடுக்கலாம் என்று, ஒரு சிலர் நினைக்க கூடும். ஆனால், கொடுத்தால் மேலும் கிடைக்கும் என்று நம்புவோர், இறைவழியில் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். புண்ணியங்களை பறித்துக் கொண்டே இருக்கின்றனர். இறைக்க இறைக்க ஊறும் கிணற்றை போல், இவர்களுக்கு கொடுக்க கொடுக்க செல்வம் கொழிப்பதை கண்கூடாக பார்க்கலாம். ஏனென்றால், கேட்பவனுக்கே இல்லை என்று சொல்லாமல், அள்ளி அள்ளி தரும் இறைவனுடைய பொக்கிஷத்திலிருந்து வாங்குபவர்கள், இவர்கள் காரணம் அவன் கடமை என்று சொல்லிவிட்ட, ஒரே காரணத்தினால் அள்ளி அள்ளி தருகின்றனர்.மக்களே இப்படி கொடுத்தால், அவர்களை படைத்தவன் எப்படி தருவான் என்று, நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்; அவன் கொடுப்பது பல படிகள் கூடத்தான் இருக்கும். இவ்வுலகிற்கு வரும் போது, நாம் எதையும் கொண்டு வரவில்லை. இங்கிருந்து திரும்பி செல்லும் போதும், எதையும் கூட கொண்டு போவதில்லை. இங்கு எவ்வளவு செல்வம் சேர்த்தாலும், அதை இங்கேயே விட்டுச் செல்ல வேண்டும். அதை எப்படி விட்டுப் போவது என்பதில்தான், புத்திசாலித்தனம் உள்ளது. நாம் செய்யும் நற்செயல்கள் மட்டுமே, நமக்கு துணையாக இறுதியில் கூட வரும். அதை எப்படி அதிகமாக்கி துணையாக்கிக் கொள்வது என்பதில் தான் சாமர்த்தியம் இருக்கிறது.ஒரு சமயம் இறைநேசர் ஒருவர் மார்க்க பணி விஷயமாக, வேறு ஊருக்கு புறப்பட்டார். அவருடைய சிஷ்யர்கள் விடை கொடுக்க வந்த போது கேட்டனர்.அந்த ஊருக்கு நாம் வந்தால், உங்களை எங்கே சந்திப்பது? அதற்கு இறைநேசர்,நான் பொய்யர்களின் பகுதியில் இருப்பேன் அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. சில நாட்கள் கழித்து, அந்த ஊருக்கு இறைநேசரை தேடி சிஷ்யர்கள் சென்றனர். எதிரில் தென்பட்டவர்களிடம் எல்லாம், அவரைப் பற்றி விசாரித்தனர்.யாருக்கும் தெரியவில்லைபொய்யர்களின் பகுதியா? அப்படி எதுவும் இங்கு இல்லையே?அவர்கள் பொறுமையுடன் தங்கள் ஆசானை தேடினர். அவரை கப்ரஸ்தானில் (இறந்து போன முஸ்லிம்களை அடக்கம் செய்யும் இடம்) பார்த்ததாக ஒருவர் கூறினார். அவர்களும் அங்கே சென்றனர். ஆள் அரவமற்ற நிரந்தர அமைதி சூழ்ந்த இடத்தில் இறைநேசர் மவுனமாக அமர்ந்து இருந்தார்.ஹஸ்ரத்! பொய்யர்களின் பகுதியில் இருப்பதாக சொன்னீர்களே... என்று கேட்டனர்.இறைநேசர் அவர்களை பார்த்து புன்னகைத்தார்.. .இங்கு புதைந்து கிடப்பவர்கள் யார்? அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை... என்னுடைய வீடு என்று பெருமைப்பட்டவர்கள், இன்று இங்கே இருக்கின்றனர்; அவர்களுடைய வீட்டில் வேறு யாரோ இருக்கின்றனர். என்னுடைய வாகனம் என்று கர்வப்பட்டவர்கள், இன்று இங்கே இருக்கின்றனர். அவர்களுடைய வாகனம் வேற்று மனிதர்களை சுமந்து கொண்டு இன்னும் சாலைகளில் செல்கின்றனர் என்னுடைய மனைவி, என்னுடைய பிள்ளைகள் என்று எவர்களுக்காக செல்வம் சேர்த்தனரோ, அவர்கள் அங்கே, இவர்கள் இங்கே, இவர்கள் பொய்யர்கள் தானே என்று, இறைநேசர் கேட்ட போது, அவருடைய மாணவர்கள் தலைகுனிந்தனர். நாம் பொய்யர்களாக இருக்கப் போகிறோமா அல்லது உண்மையானவர்களாக மாறப் போகிறோமா?

கண்ணியம் மிக்க இரவு!

சிறப்புகள் பல நிறைந்த இந்த ரம்ஜான் மாதத்தில் தான், லைலத்துல் கதர் எனும் அருள் வளம் பொருந்திய இரவு வருகிறது. இந்த இரவில், சிறப்பை விளக்கவே இறைவன் குர் ஆனிலே, தனியொரு அத்தியாயத்தை இறக்கியருளினான். அதில் நிச்சயமாக நாம் இந்த புனித குர் ஆனை, கதர் இரவில் இறக்கி வைத்தோம். இந்த இரவு கண்ணியம்மிக்க இரவு, இது ஆயிரம் மாதங்களில் செய்யும் வணக்க வழிபாடுகளை விட சிறந்தது.இந்த ஒரு இரவில் செய்வது, இந்த இரவில் வானவர்கள் பூமிக்கு இறங்கி வருகின்றனர். தங்கள் அதிபதியின் கட்டளைப்படி நன்மையான விஷயங்கள் அனைத்தையும் கொண்டு, இந்த பூமியின் மீது இறங்குகின்றனர். இந்த இரவு முழுவதும் அமைதி நிறைந்ததாக இருக்கிறது. இந்த இரவின் நன்மைகள் அதிகாலை உதயமாகும் வரை நீடிக்கும்.(திருக்குர் ஆன் 91:1-5) என்று கதர் இரவின் சிறப்பை இறைவன் கூறுகின்றான்.

அந்த கண்ணியம்மிக்க இரவு, ரம்ஜான் மாதத்தின் 10 நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் வருகிறதென அண்ணல் நபி (ஸல்)சொல்லியுள்ளார்.அந்த ஓர் இரவு நமக்கு கிடைக்குமா என்கிற ஏக்கத்தில், அனேகமானோர் வாழ்நாள் முழுக்க கடும் தவம் இருக்கின்றனர். ரம்ஜான் மாதத்தில் மட்டுமல்ல, வாழ்நாளில் ஒவ்வொரு நாளின் பகலிலும், இரவிலும் இறைவன் காட்டிய நேர்வழியில், தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர். ஏனென்றால் அந்த வழியில் செல்லும் போது தான், இந்த உலகிலும், மரணத்திற்கு பின் வரக்கூடிய வாழ்விலும் நிரந்தரமான வெற்றி இருக்கிறது.இந்த சத்திய செய்தியைத்தான் ஆதம்நபி துவங்கி முஹம்மத் (ஸல்) வரை 1,24,000 நபிமார்கள் உலக மக்கள் அனைவருக்கும் சொன்னார்கள். அப்படி வந்த ஒரு நபிதான் மூஸா. அவர் வந்த காலகட்டத்தில் பிர்அவன் என்பவன் அரசனாக இருந்தான். அவன் தன்னை கடவுளாக எண்ணி, பூஜிக்கும் படி மக்களை மிரட்டி பணிய வைத்தான். அவன் முன் வந்து மூஸா நபி இறைச்செய்தியை எடுத்து சொன்னார். அது அவனக்கு பிடிக்கவில்லை.மூஸா தனியாக இருந்தார். அவருடன் துணையாக ஒரு அஸா (கைத்தடி)மட்டுமே இருந்தது. இதைக் கொண்டு அவரால் என்ன செய்துவிட முடியும் என்று, பிர் அவன் அவரை பரிகாசம் செய்தான். எந்த ஒரு பொருளுக்கும் சக்தியை கொடுப்பவன் இறைவனே, நாம் கண்ணால் பார்க்கும் யாவும், மாயையே என்பதை உறுதியாக நம்பினார், மூஸாநபி, அதை மெய்ப்பிக்கும் நாளும் வந்தது. மூஸா நபியையும், அவரது ஆதரவாளர்களையும், பிர்அவன் தன் கூட்டத்துடன் துரத்தி வந்தான். எதிரே பெருங்கடல். எங்கே செல்வது என்று, மூஸா நபிக்கு புரியவில்லை. கடலில் மூழ்கி தன் ஆட்களுடன் பலியாகி விடுவது தானா என்று அவர் பயப்படவில்லை. கடல் என்று எதிரில் காணும் காட்சியில் எந்த சக்தியும் இல்லை. இறைவன் நாடும் வரை என்று உறுதியாக நம்பினார்.

அவரிடமிருந்த அஸாவை கடலில் தட்டும்படி இறைவன் கூறுகிறான். அவர் அந்த அஸாவினால் கடலில் தட்டியதும், கடல் இரண்டாக பிளந்து அவருக்கு வழி விடுகிறது மூஸா நபியும், அவருடன் வந்தவர்களும் அந்த வழியாக சென்று விடுகின்றனர்.அவரை பின்தொடர்ந்து துரத்தி வந்த பிர் அவனும், அவனுடைய கூட்டமும், அவர்களை தொடர்ந்து போக, கடல் ஒன்றாகி அவர்களை மூழ்கடிக்கிறது.மூஸாவே என்னைக் காப்பாற்று... என்று கதறுகிறான் பிர்அவன்.பிர் அவனுடைய நம்பிக்கை மூஸா நபி மீது; அவருடைய நம்பிக்கை இறைவன் மீது. ஆனால் நம்முடைய நம்பிக்கையோ, மூஸாநபியின் அஸா மீது, இது அஸாவினால் தான் சாத்தியமானது என்று நினைக்கிறோம். தினசரி ஏதாவது ஒரு அஸாவை கொண்டு வெளியே செல்கிறோம். அதில் தோற்றுப் போனால், அஸாவை மாற்றுகிறோம். ஆனால் நம் நம்பிக்கையை மாற்ற தயாராகயில்லை.இறைவழியில் செல்பவர்களுக்கு எல்லா வழிகளும் சுலபமாகி விடுகிறது என்பதே, இந்த சம்பவம் சொல்லும் செய்தி.நாமும் இறைவனுடைய நேர்வழியை கடைபிடிப்போம். அஸாவிலிருந்து நம்பிக்கையை எடுத்து, இறைவன் மீது நம்பிக்கை வைப்போம்.அதற்காக இந்த கண்ணியம் மிக்க இரவில், இறைவனிடம் பிரார்த்திப்போம்.

பாதை மாறிபோகலாமா?

ரம்ஜான் மாதம் முழுக்க புண்ணியங்களை அள்ளிக் கொள்ள, எத்தனையோ வாய்ப்புகளை இறைவன் வழங்கியிருக்கிறான். அவற்றில், இஹ்திகாப் எனும் நபி வழி சுன்னத் முக்கியமானதாகும். குறிப்பிட்ட காலம் மசூதியில் தங்குவதை இஹ்திகாப் என்கின்றனர். இறைவனுக்காக நபி(ஸல்) முறைப்படி இஹ்திகாப் இருக்கிறேன்... என்று எண்ணி, மசூதியில் தங்க வேண்டும்; தேவையற்ற பேச்சு பேசக் கூடாது, மசூதியை விட்டு அவசிய தேவைக்காக தவிர, வெளியே வரக் கூடாது, தொழுகை, குர்ஆன் படித்தல், ஜிகிர் செய்தல் என, ஒவ்வொரு நிமிடத்தையும் நல்ல வழியில் செலுத்த வேண்டும்.இஹ்திகாப் இருப்பது, உயர்ந்த நற்செயல், அச்சமயத்தில் நாம் இறைவனிடத் தில் கேட்கும் பிரார்த்தனைகள், உடனே நிறைவேறும். இது நிரூபிக்கப்பட்ட உண்மை.ரம்ஜான் மாதத்தில், இருபதாவது நோன்பில், இஹ்திகாப் இருக்க அமர்ந்தால், பெருநாள் பிறை பார்த்த பின் தான், மசூதியை விட்டு வெளியேற வேண்டும்.ஒரு சில நாள் கூட, சிலர் இஹ்திகாப் இருப்பர். அதுவும் சரியே. அவரவர் வசதிக்கேற்ப இருக்கலாம். இருந்தாலும், நோன்பின் கடைசி பத்து நாள், முழுக்க இஹ்திகாப் இருக்கும் நோக்கமே, சிறந்த அந்த லைலத்துல் கதர் எனும் உயர்ந்த இரவை அடைந்து விட வேண்டும் என்பதே.அந்த இரவின் வழிபாடுகள், பிரார்த்தனை கள், நற்செயல்கள் ஆயிரம் இரவுகளுக்கான, வழிபாட்டுகளை விட மேலானது. முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் ஒரு நபராவது, கட்டாயமாக, அந்த பகுதியில் இருக்கும் மசூதியில், இஹ்திகாப் இருக்க வேண்டும். அதிகமானவர்களும் இருக்க லாம். ஆனால், ஒருவர் கூட, இஹ்திகாப் இருக்கவில்லை என்றால், அந்த சுமை அனைவர் மீதும் உண்டு.நபி(ஸல்) தன் வாழ்நாளில், செய்த நற்செயல்களில் சிலவற்றை, நாம் கண்டிப்பாக பின்பற்ற முயற்சிக்கும் சமயம், அவர் செய்த மற்ற நல்ல காரியங்களையும் கவனிக்க வேண்டும். அதிலிருந்து பாடம் பெறவும், இன்றைய சூழலில் அதை நம் வாழ்வில் கடைபிடித்து, மற்றவர்களின் மனதை வெற்றி கொள்ளவும் செய்ய வேண்டும்.

நபி(ஸல்) தன் தோழர்களுடன் செல்லும் போது, ஒரு மூதாட்டி, தன் வீட்டின் மேல் தளத்திலிருந்து, அவர் மீது குப்பையை வீசிய சம்பவத்தை, நாம் அறிவோம். இது ஒரு நாள் அல்ல, பல நாட்கள் நடந்த சம்பவம், அந்த மூதாட்டி எதேச்சையாகவோ அல்லது அறியாமையிலோ இதை செய்யவில்லை. திட்டமிட்டே நபி மீது துவேஷம் கொண்டு, இதை செய்து வந்தார்.இந்த சம்பவத்தை, இன்று கேள்விப்படுபவர்களும், நபி(ஸல்) ஏன் அதே வழியில் செல்ல வேண்டும்? என, கேட்கின்றனர். அன்றும் அதை தோழர்கள் நபியிடம் கேட்டனர். அப்போது, அவர், என் மீதுகுப்பையை வீசும் போது, அந்த மூதாட்டியின் முகத்தில் சந்தோஷம் நிலவுகிறது. அதை பறிக்க நான் விரும்பவில்லை, என்றார். தன்னை தாழ்த்தி, மற்றவர்களை சந்தோஷப்படுத்தும் குணம், சாதாரணமனிதர்களுக்கு சாத்தியமில்லை.ஒரு நாள் நபி(ஸல்) மீது, அந்த மூதாட்டி, குப்பையை வீசவில்லை. அவளை காணவில்லை. நபி(ஸல்) அவளைப் பற்றி விசாரித்தார். அந்த மூதாட்டிக்கு, உடல் நிலை சரியில்லை என, தெரிய வந்தது. அவரை தேடி செல்கிறார். தன்னை பழிதீர்க்கவே அவர் வந்திருப்பார் என, அந்த மூதாட்டி நினைத்தாள். அவரோ, அவரது உடல் நிலை பற்றிவிசாரிக்கிறார். அவள் உடல்நிலை தேற இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்.அந்த மூதாட்டியின் கண்களில் கண்ணீர்; மனதில் நெகிழ்ச்சி! யார் இந்த மாமனிதர்? என்று, அன்று தான் முதன் முதலாய் தெளிவாக நினைத்துப் பார்க்கிறாள். மனம் மாறும் மூதாட்டி இஸ்லாத்தை தழுவுகிறார்.ஊமை சமூகத்திற்கு மொழி கொடுத்தவர் நபி(ஸல்). ஆமைகளுடன் போட்டி போட, அவர் முயல் அல்ல... ஆன்மிக புயல்!இன்றும், நாம் அந்த குப்பை போடும் மூதாட்டியை, வெவ்வேறு ரூபங்களில்சந்திக்கிறோம். ஆனால், நபி(ஸல்) வழியில் செல்லாமல், பாதை மாறிப் போகலாமா என, நாம் சிந்திக்க வேண்டும். பொறுமை, சகிப்புத் தன்மையுடன் கொண்டகொள்கையில் உறுதியாக இருந்தால், இறுதியாக வெற்றி நிச்சயம்! என்பதை உணர்வோம்.

தஸ்பீஹ் பாவா : அதிகாலை வேளை, வழக்கம் போல் கோவிலுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தார், ராமகிருஷ்ணன். அரண்மனை போன்ற தன் வீட்டிற்குள் நுழைந்தார். பேரமைதி அங்கு சூழ்ந்து இருந்தது.மயானத்திற்குள் நுழைந்து விட்டதை போல் உணர்ந்தார். வீட்டிற்குள் நிலவிய மவுனத்தின்இறுக்கத்தில், மூச்சு விட திணறினார்.இது இன்றா நேற்றா நடக்கிறது.... முப்பதுவருஷமா இதே துயரம் தானே! என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொள்ள முற்பட்ட போது, எதிரே தென்பட்டது லக்ஷ?மியின் பெரிய படம். லக்ஷ?மி அவருடைய மகள். அந்த படத்திற்கு மாலை போடப்பட்டிருந்தது.லக்ஷ?மி என்னை மன்னிச்சுடு... என, பேசிக் கொண்டிருந்தபோது, பின்னால், ஆள் அரவம் கேட்டு திரும்பி னார். அங்கு அவர் மனைவி ஜானகி நின்று இருந்தாள். அவள் பார்வை, நெருப்பாய் அவரை சுட்டது.பாவத்திற்கு தண்டனை மன்னிப்பு கேட்பது மட்டுமல்ல... பிராயச்சித்தம் செய்வது தான், ஒரே வழி... என்றாள் ஜானகி.ஜானு... நானும் போகாத கோவில் இல்லை, வேண்டாத தெய்வமில்லை!நீங்க போக வேண்டிய இடம் கோவில் அல்ல... மசூதி! என்று ஜானகி சொல்ல, தலை குனிந்து நின்றார் ராமகிருஷ்ணன். ரம்ஜான் மாதம் நெருங்குவதால், மசூதியில், ஜமாத் கூட்டம் கூடியிருந்தது. மசூதியை நிர்வகிக்கும் முத்தவல்லி, தொழுகை நடத்தும் இமாம், பாங்கு சொல்லும் மோதினார் ஆகியோருடன், ஊரின்முக்கியஸ்தர்கள் சிலரும் இருந்தனர்.

அது ஒரு சிறிய ஊர். அங்கிருக்கும் ஒரே மசூதி, இது தான். ஊரை விட்டு தள்ளி, ஏரிக்கரையின் பக்கம் இருந்தது. ஆரம்பத்தில் ஒரு சிறிய குடிசையில் இயங்கி வந்த மசூதி, இப்போது பெரிய கட்டடமாக மாறி, காண்பவர்கள் மனதை கவரும் விதத்தில்காட்சியளித்தது.எல்லாரும் கூடியிருந்தாலும், மவுனமாக இருந்தனர். அவர்கள் எதிர்பார்த்த, தஸ்பீஹ் பாவாவை எதிர்பார்த்து தான், அந்த நிசப்தம். மசூதிக்கு வெளியே ஏரிக்கரைப் பக்கம் இருக்கும் பெரிய வேப்ப மரத்தின் அடியில் உட்கார்ந்திருப்பார்; அதிகமாக பேசமாட்டார்.எண்பது வயதிருக்கும். இருந்தாலும் அவர் முகத்தில் இருந்த பிரகாசமும், அவரிடமிருந்த சுறுசுறுப்பும் வியக்க வைக்கும். கையில் ஆளுயர ஜெப மாலையான தஸ்பீஹ்!அது அவரே செய்தது. எந்நேரமும் இறைவனை எண்ணி ஓதிக் கொண்டிருப்பார். ஐந்து வேளை தொழவும், இரவில் படுக்கவும் மட்டும் மசூதிக்கு வருவார். மற்ற நேரங்களில் அந்த மரத்தடி தான். அவர் யார் என்று யாருக்கும் தெரியாது. யாரும் அவரிடம் எதுவும் கேட்பதில்லை. அவரும் எதையும் சொல்வதில்லை. பெரும்பாலும் மவுனமாகவே இருக்கும்.அவருக்கு ஒவ்வொரு வேளையும், ஒரு வீட்டிலிருந்து சாப்பாடு வரும். விதவிதமான அறுசுவை உணவு, பசி என்று வந்து நிற்பவர்களுக்கு தந்துவிட்டு, மிச்சமிருந்தால் சாப்பிடுவார். இல்லையென்றால்பட்டினி தான்.அப்படிப்பட்ட தஸ்பீஹ் பாவா உள்ளேநுழைந்ததும் கூட்டம் துவங்கியது.

வாங்க பாவா! ரம்ஜான் மாதம் வருது. மசூதிக்கு சுண்ணாம்பு பெயின்ட் அடிக்கணும். அதுக்கான செலவை நான் ஏத்துக்கிறேன்... என்றார் வாலே அப்துல் வாஹித், பெரிய மளிகைக்கடையை பஜாரில் வைத்திருக்கிறார். ஒயர் எல்லாம் பழசாகி விட்டது. சில இடத்தில், ஷாக் கூட அடிக்குது. அந்த புது ஒயரிங் பணியை நான் ஏத்துக்கிறேன், என்றார் கொர்கண்டி சிகந்தர் பாஷா.ஜமாத் இரண்டையும் ஏற்றுக் கொண்டது.அதுவரை அமைதியாக இருந்த ஜமாத் கூட்டத்தில், திடீர் என சலசலப்பு. பாஷா பாய் ஏதோ பேச முயன்று தடுமாறினார்.சொல்லுங்க, என்றார் தஸ்பீஹ் பாவா!

பாவா... நானும் நினைவு தெரிந்த நாளில் இருந்து பார்க்கிறேன். வருஷா வருஷம், 30நாள் நோன்பிற்கும் நீங்க தான் கஞ்சி செய்றீங்க. உங்க கஞ்சி சமையல் ரொம்ப ஸ்பெஷல், நோன்பு கஞ்சியை இவ்வளவு டேஸ்டா செய்ய சுற்று வட்டாரத்தில் ஆளே கிடையாது. அதில் எல்லாம் எந்த குறையும் இல்லை ஆனா... யாருமில்லாத நீங்க, அந்த நோன்புக் கஞ்சிக்கான செலவையும் ஏத்துகிறீங்களே! அது உங்களால் எப்படி முடியுது?அதுவரை தயங்கிய பாபு பாய் பேசினார். ஆமாம் அந்த பணம் நல்ல வழியில் வந்ததா? இத்தனை ஆண்டா நீங்க செய்றீங்களே... ஏன் இந்த ஆண்டு நாங்க செய்யக் கூடாது? இந்த மசூதி ஒரு குடிசையாக இருந்தது. இது இப்போ இவ்வளவு பெரிய கட்டடமாக மாறியது உங்க சாதனை தான். ஆனா, இது எல்லாம் எப்படி சாத்தியம் ஆச்சு? நீங்க தனி மனுஷன் தானே; இந்த வருஷம் நாங்க நோன்பு கஞ்சி ஊத்துவோம்...அந்த பேச்சுக்கு பாவாவின் முகம், இப்படி கோபமாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

கூடாது. இத்தனை நாள் யாரு ஊத்தினாங்களோ, அவங்க தான் இனியும் கஞ்சி ஊத்துவாங்க. அதை நிறுத்தக்கூடாது. அப்படி நிறுத்தினால் இறைவனோட கோபத்திற்கு ஆளாவீங்க... என்றார் பாவா!அப்படின்னா அது யாரு?இந்த மசூதி கட்ட உங்களுக்கு உதவியது யாரு?வருஷா வருஷம் எல்லாருக்கும் கஞ்சி ஊத்துறது யாரு?அவர் ஏன் மறைந்திருக்கிறார்!அவர் தன் பெயரை மறைத்து இதை செய்யிறதுக்கு காரணம், அவர் ஒரு இந்து, என்றார் பாவா!என்னது! இத்தனை நாள் நமக்கெல்லாம் கஞ்சி ஊத்துவது ஓர் இந்துவா!ஓர் இந்துவா இந்த மசூதியை கட்டினார்!யார் அவர்?அதைச் சொல்லும் உரிமை எனக்கு இல்லை, என்று புறப்பட்டார் பாவா.

பிறை பார்த்து ரம்ஜான் மாதம் முதல் நோன்பு துவங்கியது. எண்பது வயதிலும் ஒரு நோன்பையும் விடாமல் வைப்பார் பாவா. அன்றும் சுறுசுறுப்பாக நோன்பு கஞ்சி செய்ய ஆரம்பித்து விட்டார். சில ஆட்களின் தொண தொணப்பு தொடர்ந்தாலும் அதை அவர் பொருட்படுத்தவில்லை.பச்சரிசி, வெந்தயம், வெள்ளை பூண்டு, இஞ்சி, வெங்காயம், புதினா, ஆட்டுக்கறி கைமா, எலும்பு போட்டு செய்ய ஆரம்பித்தார் பாவா. மாலை நேரம் நெருங்க, நோன்புக் கஞ்சியின் நறுமணம், சுற்றிலும் பரவியது. அவர் செய்யும் கஞ்சியை, பிரியாணியின் ஜூஸ் எனலாம். அவ்வளவு டேஸ்ட்! வீட்டிலிருந்த பெண்கள், மசூதிக்கு கஞ்சி கேட்டு குழந்தைகளை தூக்குடன் அனுப்பியிருந்தனர். சிலரோ, வாளி அனுப்பியிருந்தனர். இந்துக்கள் சிலரும் நோன்பு கஞ்சி வாங்க, சிபாரிசுடன் வந்திருந்தனர். நோன்பு திறக்க மசூதிக்கு வந்திருந்த நோன்பாளிகளுக்கும், கஞ்சிடம்ளரில் வரிசையாக வைக்கப்பட்டது.

மக்ரிப் தொழுகைக்கான அஸான் (பாங்கொலி) சொல்லி, நோன்பு திறந்தனர். பாவா செய்த நோன்பு கஞ்சியை எல்லாரும் ருசித்து சாப்பிட்டனர்.மறுநாள் காலை, அதே வேப்ப மரத்தடியில் கண்ணை மூடியபடி, தன் தஸ்பீஹ் மணியில், ஜிகிர் செய்து கொண்டிருந்தார் பாவா. பெண்கள், சிறுவர், சிறுமியர் என்று வரிசையாக நின்றுக் கொண்டிருந்தனர். அவர் துஆ ஓதிக் கொண்டிருந்தார். வரிசையில் நின்றிருந்த எல்லாரும் சென்று விட, கடைசியில்நின்றிருந்த பெரியவர், அருகே வந்தார்.அவரை பார்த்த பாவா கண்களை மூடிக்கொண்டார். பாவா... எங்க மேலே இரக்கமேயில்லையா? பாவா நானும் பல வருஷமா இங்கே வரேன். என் மனைவி துடிக்கறதை பார்க்க முடியலே... என்றார் ராமகிருஷ்ணன். ஏதோ சொல்வதற்குள் பாஷா பாயும், பாபு பாயும் நிறைய பேரை திரட்டிக் கொண்டு வந்திருந்தனர்.ஓஹோ... நெனச்சோம். இவர்தான் அந்தஇந்துவா?இவர் தான் பல வருஷமா உங்களை பார்க்கவருகிறாரே...அவர், இவர் இல்லை, என்றார் பாவா.

பின்னே?நானே சொல்றேன், என்றார் ராமகிருஷ்ணன். பாவா தடுத்தார்.ஆனால், அவர் கேட்கவில்லை.நாங்க சென்னையை சேர்ந்தவங்க. பெரிய வசதி படைத்தவங்க. என் மகள் ஒரு கோவில் அர்ச்சகர் மீது காதல் வயப்பட்டா. பருவக்கோளாறு. இரண்டு பேரும் வெவ்வேறு ஜாதி, பிரச்னை உண்டாச்சு... அவங்க சென்னையை விட்டு ஓடிப் போனாங்க... அங்கே கனத்த மவுனம் நிலவியதுராமகிருஷ்ணனே தொடர்ந்தார்...அவங்களை தேடி அலைஞ்சோம், எங்குமே கிடைக்கலே...ஓடிப்போன அவங்க இந்த ஏரிக்கரையில் ஒரு குடிசையை போட்டு, வாழ்க்கையை ஆரம்பித்தனர். பக்கத்திலே இன்னொரு குடிசை. அதுதான் இந்த மசூதி. இங்கே மோதினார் இமாம், எல்லாமே இந்த பாவா தான். வெளியூரில் இருந்து வந்த பாவா, இந்த குடிசை மசூதியை கட்டி இங்கேயே தங்கிவிட்டார்.அதற்கு மேல் பேச முடியாமல் ராமகிருஷ்ணனுக்கு, தொண்டை அடைத்தது.

அப்ப நோன்பு காலம் துவங்கியது. என் மகள் நிறைமாத கர்ப்பிணி, பிழைப்பு தேடி வெளியூர் சென்ற என் மருமகனை, ஜாதி வெறியர்கள் கொலை செய்து விட்டனர். அதுவரை அவர் என் பொண்ணுக்கு சோறு போட்டுட்டிருந்தார். இந்த ஊரில், அந்த நிலையிலும், என் மகள் மீது யாரும் இரக்கம் காட்டவில்லை.பாவா மட்டும், தினமும் நோன்பு கஞ்சியை கொடுத்து வந்தார். அந்த ஒரு வேளை உணவு தான் என் மகளையும், அவள் வயிற்றில் இன்னொரு உசிரையும் காப்பாத்திச்சு. சரியாக பெருநாள் பிறை பார்த்த சமயம் தான், என் பேரன் பிறந்தானாம்; கேள்விப்பட்டேன்!மறுநாள் என் மகளையும், பேரனையும் கொன்று விட ஒரு கும்பல் வந்திருக்கிறது. பெருநாள் தொழுகை நேரம். அத்தனை முஸ்லிம்களும் சூழ்ந்து, அவர்களை காப்பாற்றியிருக்காங்க. என் மகளையும், பேரனையும் பத்திரமாக மீட்டு, வேறு ஊருக்கு அனுப்பி வைத்தவர் பாவா! என் பேரன் இப்ப பெரிய தொழில் அதிபர். பிள்ளையை நல்லபடி வளர்த்த என் பொண்ணு, இறந்து போயிட்டா. அவளை கடைசி வரையும் நாங்கள் பார்க்கவில்லை.

தன் தாய் நோன்பு கஞ்சி மட்டும் குடித்து, தன்னை பெற்றதை கேட்டு கேட்டு வளர்ந்தவன், ஊருக்கே கஞ்சி ஊத்தறானே... அது தவறா?தன் பிறப்புக்கு அரணாக திகழ்ந்த குடிசையை, இப்ப பெரிய மசூதியாக கட்டி இருக்கிறானே அது தவறா?கோபத்துடன் வந்த கும்பல் வெட்கி தலை குனிந்தது.எல்லாரும் கேட்டனர்...அவரை பார்க்கணும் போல் இருக்கு...எனக்கும் தான் பாவா... என்றார் ராமகிருஷ்ணன். அவர் மனசுக்குள் பெய்த மழை,கண்களில் கொட்டியது.இன்ஷா அல்லாஹ்! பெருநாள் அன்று தன் பெருநாள் பரிசை (ஈதி) வாங்க அவர் கண்டிப்பாக வருவார்... அன்று அவரைப் பார்க்கலாம்... என்றார் பாவா!அவரை பார்க்க, அவர்களுடன், நானும் காத்திருக்கிறேன்!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இரண்டாம் திருநாள் இரவு ... மேலும்
 
temple news
கோவை; கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்தின் கோவை புதூர் கிளையில் சுவாமிகளின் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோவிலில் இன்று அதிகாலை ராமருக்கு நடைபெற்ற சிறப்பு ஆரத்தியை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் மூங்கில் காட்டில் பக்தர் ... மேலும்
 
temple news
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வெள்ளி புருஷாமிருக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar