பதிவு செய்த நாள்
22
ஆக
2014
12:08
மைசூரு : தசரா விழாவிற்காக, ’மல்டி டெஸ்டினேசன் டூரிசம் பாஸ்போர்ட்’ திட்டம், அறிமுகப்படுத்தப்படுகிறது. நடப்பாண்டு தசரா விழாவில், ஒவ்வொரு சுற்றுலா தலங்களிலும் வரிசையில் நின்று, அனுமதி சீட்டு வாங்க அவசியமில்லாமல், ஒரே டிக்கெட்டில் அனைத்து இடங்களையும் பார்வையிடும் வசதியாக, ’மல்டி டெஸ்டினேசன் டூரிசம் பாஸ்போர்ட்’ திட்டம், அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு, சித்தராமையா தலைமையிலான, ’தசரா உயர் அதிகார கமிட்டி’ ஆலோசனையின் படி, மைசூரு மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பாஸ்போர்ட்கள், மூன்று நிறங்களில் கிடைக்கும். நீல நிற பாஸ்போர்ட் மூலம் மைசூரு மிருகக்காட்சி சாலை, காரன்ஜி ஏரி, மைசூரு அரண்மனை, சாமுண்டி மலை, கிருஷ்ணராஜ சாகர், ரங்கனதிட்டு ஆகிய இடங்களுக்கு செல்லலாம். இதற்கான கட்டணம், பெரியவர்களுக்கு 160 ரூபாய்; சிறுவர்களுக்கு, 100 ரூபாய். பச்சை நிற பாஸ்போர்ட்டில், மைசூரு மிருகக்காட்சி சாலை, காரன்ஜி ஏரி, மைசூரு அரண்மனை, சாமுண்டி மலை ஆகிய இடங்களுக்கு செல்லலாம். இதன் கட்டணம், பெரியவர்களுக்கு, 120 ரூபாய்; சிறுவர்களுக்கு, 75 ரூபாய்.
ஆரஞ்சு நிற பாஸ்போர்ட்டில், மைசூரு மிருகக்காட்சி சாலை, மைசூரு அரண்மனை ஆகிய இடங்களை மட்டுமே பார்க்கலாம். இதற்கான கட்டணம், பெரியவர்களுக்கு, 80 ரூபாய்; சிறுவர்களுக்கு, 40 ரூபாய். நீல நிற பாஸ்போர்ட், மூன்று நாட்களுக்கும்; பச்சை நிற பாஸ்போர்ட், இரண்டு நாட்களுக்கும்; ஆரஞ்சு நிற பாஸ்போர்ட், ஒரு நாளைக்கும் பயன்படுத்த முடியும். இந்த பாஸ்போர்ட்கள், அனைத்து சுற்றுலா மையங்கள், முக்கிய ஓட்டல்கள், கர்நாடக சுற்றுலா துறைகளில் கிடைக்கும். செப்., 15 முதல், அக்., 15 வரை, பாஸ்போர்ட்கள் வழங்கப்படும். மைசூரு வரும் வெளிமாநில வாகனங்களுக்கு, செப்., 15 முதல், நவ., 15ம் தேதி வரை, நுழைவு வரி வசூலிக்கப்படமாட்டாது. மேலும், பாஸ்போர்ட் பெறாமல், மைசூரு மிருகக்காட்சி சாலை, மைசூரு அரண்மனையை பார்க்க விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு, 20 சதவீதம் சலுகையும் வழங்கப்படும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு, நீல நிற பாஸ்போர்ட், பெரியவர்களுக்கு, 510 ரூபாய், சிறுவர்களுக்கு, 170 ரூபாய்; பச்சை நிற பாஸ்போர்ட், பெரியவர்களுக்கு, 260 ரூபாய், சிறுவர்களுக்கு, 150 ரூபாய்; ஆரஞ்சு நிற பாஸ்போர்ட், பெரியவர்களுக்கு, 220 ரூபாய், சிறுவர்களுக்கு, 110 ரூபாய் என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தசரா விழா தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள, அதிகாரபூர்வமான இணையதளத்தை, வருவாய் துறை அமைச்சர் சீனிவாஸ் பிரசாத், இன்று துவக்கி வைக்கிறார்.